Monday, November 27, 2006

கனவுத் தொழிற்சாலை-கசங்கும் கன்னிகள்!

என்ன சுஜாதா மாதிரி வில்லங்கமான ஒரு தலைப்பு வச்சுட்டு ஏதும் கிசுகிசுப் பதிவு எழுதியிருக்கேன் நினைச்சிட்டீங்களா? சமீபத்திலே 'தெட்ஸ் தமிழ்'ங்கிற இணைய 'போர்ட்டல்', அதாவது செய்தி தொகுப்பு பக்கத்திலே, தமிழ் சினிமோவோட 'Tamil Cinema Gossip Detail'ங்கிற பகுதியிலே வந்த ஒரு முக்கியமான செய்தி என்னான்னா, "இயக்குநரை 'குமுறிய'ஷ்ரேயா"ன்னு, 'திமிறு' படத்திலே நடிச்ச நடிகையை பத்தி வந்தது தான்! அப்புறம் BBC எடுத்த ஒரு ஆவணப் படத்தையும் பார்க்க நேர்ந்தது! அது என்னான்னா, எப்படி திரை உலகில் நுழையும் பெண்கள், அதாவது கன்னிகள் எப்படி கசக்கப்படுகிறார்கள் என்பதே அது! அதாவது "Bollywood:The Casting Couch" என்ற அந்த ஆவணப்படம். கீழே, நான் பார்த்து பிரமித்ததை உங்களுக்கு தொகுத்து வழங்கி இருக்கிறேன், அதை பார்த்து மகிழவும், அதுக்கு முன்னாடி சில விஷயங்களை கீழே படிச்சிட்டு வாங்க!

இந்த சினிமாவிலே சான்ஸ் கேட்டு அலையறதுங்கிறது நம்மிடையே உள்ள பெரும்பாலான இளைஞர், இளைஞிகளுக்கு ரொம்ப சர்வ சாதார்ணமான விஷயம்! அதுவும் சினிமாங்கிற கனவுத் தெழிற்சாலையிலே சாதிக்கணுங்கிற வெறியோட இன்னைக்கு முகம் தெரியாத எத்தனையோ பேருங்க அலைஞ்சிக்கிட்டிருக்காங்க! அதிலே வெற்றிகண்ட நிறைய பேரோட கதையை எல்லாம் படிச்சிருக்கோம், அவங்க எப்படி எல்லாம் கஷ்டபட்டு முன்னுக்கு வந்தாங்கன்னு! இதிலே ஆண்கள் நிலைமை வேறு, அதை பத்தி என்னோட சொந்த அனுபவத்தை எழுதுறேன்! அது மாதிரி நம்ம சகபதிவர், இளவஞ்சி மாதிரி ஆளுங்க எழுதின இடுகைகளையும் படிச்சிருப்பீங்க! ஆனா கன்னிப்பெண்களுக்கு திரை மறைவில் நடந்த பல சம்பவங்கள் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, அப்படியே தொடர்ந்து பதிவா வந்த "சுக்குகாப்பி சூடானதும் சுவையானதும்" பதிவுகளை ரொமப பேரு தொடர்ந்து ரசிச்சு படிச்சிருப்பீங்க! ஆனா உண்மையிலே இந்த ஆவணப்படத்திலே அதை கிழி கிழின்னு கிழிச்சு போட்டுட்டாங்க!

அதாவது கொஞ்ச நாளைக்கு முன்னே 'தெஹல்கா.காம்'ன்னு ஒரு பத்திரிக்கை இந்த 'under cover'ல போயி பிஜேபி தலைவரு ஒருத்தரு, அதான் பங்காரு லஷ்மண் ஒருத்தரு கத்தை கத்தையா நோட்டுகளை லஞ்சம் வாங்கினதை எப்படி படம் புடிச்சிங்காங்களோ அப்படி ஹிந்தி நடிகர் சக்திகபூர் ஒரு பெண்ணை சினிமா சான்ஸ் வாங்கி தரேன்னு படுக்கைக்கு அழைத்ததை இப்படி 'under cover'ல படம் புடிச்சி கொஞ்ச நாள் முன்னே டிவியிலே போட்டு நாறடிச்சதை நம்ம தமிழ்ஜனங்க எத்தனை பேரு பார்த்தீங்களோ எனக்குத் தெரியாது, அதை வச்சி BBC நிறுவனம் நம்ம நாட்டு மானத்தை வாங்கற மாதிரி ஒரு ஆவணப் படம் எடுத்து விட்டு, இங்கே பெண்கள் நடிக்கணும்னா செக்ஸை டிரேட் பண்ணனும்னு காட்டி கிழி கிழின்னு கிழிச்சாட்டாங்க, அது கொஞ்சம் சுவாரசியமா இருக்குமேன்னு தான் இந்த பதிவு! (மத்தபடி ஊர்ல தண்ணி இல்லை, சுடுகாடனதுக்கு காரணம் என்னான்னு எழுதுனா படிக்கவா போறீங்க!)

சினிமாவிற்கு நடிக்க வரும் பெண்கள் எப்படி பட்ட சூழ்நிலையை சந்திச்சு பெரிய ஆளா வருவாங்கங்கிறது பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னு தான், அதிலே சில நல்ல நடிகைகள், நான் சொல்ல வர்றது நடிப்பிலே கோலோச்சிய நடிகைகள் இந்த சூழ்நிலையிலே இருந்த வந்தவங்கன்னு அரசல் புரசலா நமக்கு தெரியும்! ஏன், அந்த காலத்திலே நல்லா நடிச்ச ஷோபா, படாபட் ஜெயலஷ்மி மாதிரி நடிகைங்க இந்த தொழிற்சாலையின் ஏமாற்றத்தை தாங்காம இறந்து போனது தெரிஞ்ச ஒன்னு தான், அதே மாதிரி பெரும்பாலான வளர்ந்த நடிகைகளும் ஒரு காலகட்டத்துக்கப்பறம் இந்த சூழ்நிலைகளை பொறுக்க முடியாம தற்கொலை செஞ்சு செத்து போனது உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச ஒன்னு தான், முக்கியமா சொல்லணும்னா 'சில்க் ஸ்மிதா'வை சொல்லியே ஆகனும்! இந்த ஆவணப்படத்திலே அதை ஒரு நடிகையே சொல்லி இருக்காங்க! நடிக்க சான்ஸ் கேட்டு ரோல் கிடைச்சு நடிச்சு முடிச்ச பிறகுக் கூட அவங்க அணைப்பிலேயே இருந்தாகணும், ஏன்னா கிடைப்பதற்கரிய ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் வாழ்விலே ஏற்படுத்தி கொடுத்தாலாலே அவங்க பிடியில்ல கொஞ்ச நாள் இருந்திட்டு அப்பறம் அதுவே ரொட்டீனாயி, சில நடிகை அதை சரின்னு ஏத்துக்கிட்டு அப்படி இப்படி இருந்துட்டு கடைசியிலே சினிஃபீல்டை விட்டு போயிடுவாங்க, சில பேரு தாங்காமா உயிரை மாச்சுக்குவாங்க!

ஆனா இப்ப இவங்க சொல்றது என்னான்னு, இது ஒண்ணும் இந்த சினிமா தொழில்ல நடக்காத ஒண்ணு இல்லை, இது பாலிவோட்ன்னு இல்லை, ஹாலிவோட், ஏன் நம்ம தென்னிந்திய சினிமாவிலே இதை விட அதிகம் நடக்குது, இதுக்குப்போய் பெரிசா பேச வந்துட்டேங்கிறாங்க! இப்ப சான்ஸ் தேடி வரும் பெண்கள் "என்னவேணும்னாலும்" செய்யத் தயார்ங்கிற முடிவிலே வர்றாங்கணு! அதாவது அவங்க இண்டெஸ்ட்ரீயிலே இதுக்குப்பேரு "கோஆப்ரேட்" பண்றதாம், அதாவது உங்களுக்கு நான் எல்லாவிதத்திலேயும் "ஒத்துழைப்பு" தருகிறேன் என்பது!(இந்த தெட்ஸ் தமிழ் 'போர்ட்டல்' படிச்சிங்கன்னா, இந்த மாதிரி நக்கலா எழுதி தள்ளுவாங்க, எல்லா நடிகை கதையையும் இப்படி தான்! முதல்ல நான் கூட படிக்க சுவாரசியமா இருக்கேன்னு நினைப்பேன், அவங்க எழுதறது வாஸ்த்தவம் தான்னு இப்பல்ல தெரியுது!) அதாவது இன்னுன்னும் சொல்றாங்கப்ப, இந்த மாதிரி சும்மா வந்து விழுந்திட்டீங்கன்னா, அப்பறம் நீங்க ரொம்ப சீப்பா போய்டுவீங்க, அப்பறம் படத்திலே நடிக்க வைக்க புரடியூசர்ஸ், டைரக்டர்ஸ் தயங்குவாங்க, அந்த பெண்ணேட தரம் அவ்வளவில்லை, அதையெல்லாம் எப்படி போட்டு படம் எடுக்கறதுன்னு, ஒதுக்கி தள்ளிடுவாங்களாம், ஆனா "கோஆப்ரேட்" பண்ணலேன்னா ரோல் கிடைக்காதாம்! என்னப்பா இது புதுக் கதையா இருக்கு!

அது மாதிரி நடிக்க வந்த சில பெண்களையும் சந்திச்சு பேட்டி எடுத்து இந்த ஆவணப் படத்திலே ஒட்டி இருக்காங்க! அதிலே ஒரு நடிகை சொல்லுவது என்னான்னா, ஒரு டைரக்டர் சொன்னாராம் உன்னை போட்டு படம் எடுக்கறப்ப, நம்ம உடலும் மனமும் (Body&Soul) ஒத்து நடிச்சாதான் கேரக்டர் தெம்பா எழுந்து நிக்கும்னாராம்! அதாவாது லாங்சஷாட்ல உன்னோட உடைகளை களைஞ்சு எடுக்கறப்ப உன்னோட நடிப்புத்திறமை வெளிப்படமா போயிடும், அதனால இப்ப கழட்டி பார்த்தாதான் அதை எப்படி கேமிராவிலே கொண்டுவரமுடியும்னு தெரியும்னாராம், அந்த நடிகை வேற யாரமில்லை, நம்ம கேப்டன், அர்ஜீன் கூட நடிச்ச 'சாக்ஷி சிவானந்தா'ங்கிற நடிகை தான்! அப்பறம் இன்னொரு பொண்ணு, 'ப்ரீத்தி ஜெயின்' இந்த பொண்ணு கொஞ்ச நாளைக்கு முன்னே ஒரு ஹிந்தி டைரக்டரை பத்தி என்னை படம் எடுக்கிறேன்னு உப்யோகிச்சுட்டு அம்போன்னு விட்டுட்டான்னு ப்ராது கொடுத்த பொண்ணு! அந்த மாதிரி போனதை நான் ரேப்புன்னு சொல்லமாட்டேன், ஆனா நான் கொடுத்த சம்மதத்தை தவறா பயன்படுத்தி என்னை உபயோகிச்சிட்டு எனக்கு சான்ஸ் கொடுக்கலைன்னு ரொம்ப வருத்தப்பட்டுக்குது! ம்.. கதை எப்படி இருக்கு பாருங்க!

மொத்தத்திலே, 'இதெல்லாம் சினிமாவிலே சகஜமப்பான்னு' கவுண்டமணி மாதிரி எல்லாரும் ஒத்துக்கிறாங்க! நம்ம என்னடான்னா பெண்ணியம், கற்பு, கத்திரிக்கா, புடலங்கான்னு ஏகப்பட்ட சவுண்டு விட்டுக்கிட்டு அதையும் வீணா இந்த இணையத்திலே சென்ஷேஸ்னலா எழுதி தள்ளிக்கிட்டிருக்கோம்! கொஞ்ச நாள் முன்னே நடந்த குஷ்பு, சுஹாசினி விவகாரத்திலே எழுதின ஆதரவு, எதிர்ப்பு பதிவுகளை தான் சொல்றேன்!அது மட்டுமில்லாமே, நடிகருக்கு கட்டவுட் வச்சது போக, இப்ப பொம்பளை புள்ளைங்களே திரிஷா, நமீதா வுக்கு கட்டவுட்டு, பாலாபிஷேகம் எல்லாம் செஞ்சு, கூத்தடிக்கிறாங்க! அதுல உள்ள கவர்ச்சி இன்னும் எத்தனையோ பேரை வீணாக்கிப் போடுது!அப்பறம் இந்த மீடியா இண்டெஸ்ட்ரிங்கிறது இப்படிதான் சனியன்னு எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் போய் விழ எவ்வளோப் பேரு தயாரா இருக்காங்க!

இருப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னே, என் கண்ணு முன்னாடி படிச்ச இஞ்சினியருக்கு நடந்த அவமானத்தை நேரிலே பார்த்து அதை விட்டு எட்டு காத தூரம் ஓடி வந்தவன் நான்! நானும் பாரதிராஜாகிட்ட சான்ஸ் தேடி அபீஸு, ஸ்டியோன்னு ஏறி அலைஞ்சவன் தான், அங்க பார்த்த இந்த சம்பவம் தான், ஒரு இளம் சிவில் இஞ்சினியர், தம் போட்டாவை கையிலே வச்சிக்கிட்டு , சான்ஸ்க்கு அலைஞ்சப்ப, எவ்வளவு கிழ்த்தரமா நடத்தமுடியுமோ, அவ்வளவு கீழ்த்தரமா, அசிங்கமா நடத்தி வெளியே துரத்தினது இன்னைக்கும் என் கண்முன்னாடி ஆடுது! ஆனா, இப்ப இதெல்லாம் சகஜம், ஒரு தடவை படுத்து எந்திரிச்சா உண்டு ஹீரோயினி சான்ஸ், அதுல ஒரு தப்புமில்லை, இந்தோ, நான் இணைச்ச வீடியோ கிளிப்பிலே, வர்ற இந்திப் படத்திலே, சினிமாவிலே பாட்டு பாட சான்ஸ் தேடி போகும் பொண்னுக்கிட்டே அந்த ம்யூசிக் டைரக்டர் சொல்ற மாதிரி, 'ஒன்னை அடையனும்னா, இன்னொன்னை துறந்து தான் ஆகணும்'ங்கிறது எழுதப்படாத விதி! இது ரொம்பகாலமா இந்த சினிமா துறையில இருந்தாலும், இதை இப்ப வெகுவா ஒத்துக் கொண்டு உள்ளே நுழையும் பெண்கள் படிக்காத, விஷயம் தெரியாத பெண்கள் இல்லை, எம்பிஏ வரை படிச்ச பெண்கள் இதில் அடக்கம்னு தெரியறப்ப நம்ம எங்க போறோம்னு தெரியலை!

அதுக்காக இந்த எண்டர்டெயின்மெண்ட் இண்டஸ்ட்ரீங்கிற இந்த தொழில் துறையை விட்டுட முடியாது, ஏன்னா எந்த ஒரு கேளிக்கையும், பாமரன்லருந்து, செழிப்பா வசதி வாய்ப்புகளோட இருக்கிற நம்ம அத்தனை பேருக்கும் இந்த சினிமா கேளிக்கைப் போல ஈடு செய்ய முடியாத ஒன்னு! இதெக்கெல்லாம் காரணம் இந்த கனவுத்தொழிற்சாலை, இதோ இந்த ஹோலிவோட்ல நடக்கிற ஒழுங்குப் படுத்தப்பட்ட தொழிலா நம்ம நாட்ல நடக்கலை! அதாவது மத்த தொழில் மாதிரி, இதுல இருக்கிற அத்தனை துறைகளும், முறையான தொழிலா கருதப்பட்டு, ஒழுங்குபடுத்தி நடக்காத வரை, நடிகையாக படுக்கை விரிச்சாகணும், கல்யாணமான தொழிலை விட்டுடணும், சமூகத்துரோகிங்க கூட நட்பு வச்சக்கணும், பெரிய படத்தயாரிப்பாளரானுலும் கந்து வட்டியிலேயிருந்து விடு பட தூக்கு மாட்டிக்கிணும்! மத்த விஞ்ஞானத் துறையிலே இருக்கிற மாதிரி இதுக்கும் நிறைய கிரியேட்டிவிட்டி, அறிவாளித்தனம் எல்லாம் வேணும், ஆனா அதுக்கு உண்டான உண்மையான அங்கீகாரம் இருக்கான்னா, இப்போதைக்கை இல்லை நம்ம நாட்ல, அதான் நிதர்ஷண உண்மை!

இதோ நான் கண்டு களிச்ச வீடியோ கிளிப்பு உங்களுக்கு! இதுல சில ஹிந்தி பட கிளிப் வரும், ஒன்னு நடிக்க சான்ஸ் கேட்டு போற ஒரு பொண்ணுக்கிட்டே ஒரு டைரக்டர் எப்படி பிகேவ் பண்ணுரான்னு, அடுத்தது ஒரு ம்யூசிக் டைரக்டர் எப்படி சான்ஸ் கேட்டு வர்ற பொண்ணுக்கிட்ட நடந்துக்கிறாருன்னு வரும்! மொழித்தெரியனாலும் நான் சொல்ல வந்த கதைப்புரியும், அப்புறம் சொல்ல வந்த கதைக்கு கொஞ்சம் கிளுகிளுப்பு வேணும்னு திமிறு படத்தோட ஒரு முக்கியமான 'Footage'!

Thursday, November 23, 2006

தண்ணீர்... தண்ணீர்....!

என்ன திடீர்னு பாலசந்தர், 1980ல எடுத்த படத்தோட டைட்டிலை போட்டு சினிமா கதை சொல்லப்போறேன்னு நினனக்கிறீங்களா! ஆமா உலகம் எதிர் நோக்கி நிக்கும் தண்ணிப் பஞ்சத்தை பத்திதான் சொல்லபோறேன்! அந்த படத்திலே அத்திப்பட்டு கிராமத்திலே தண்ணி இல்லாம வறண்ட கதையை அழகா அப்ப நாடகம் போட்டு கோமல் சுவாமி நாதன் சொன்னதை, கவர்ச்சியா, சொன்னபடி ஆடி பாடி, தரையிலே உருண்டு புரண்டு நடிப்பாற்றலை வெளிப்படுத்திய சரிதாவை வச்சு 'மரோச்சரித்திரா' தெலுங்குப்படம் எடுத்து முடிச்சு அது அசத்தலா ஓடி ஆடி ஓஞ்சப்பின்னே, இந்தப்படத்தை அழகா எடுத்து வறண்ட பூமி கதை சொன்ன இந்த படத்தை நீங்க எத்தனைப் பேரு பார்த்தீங்களோ எனக்குத் தெரியாது! ஆனா இப்ப நான் சொல்லப்போற இந்த தண்ணிப்பிரச்சனை, வளர்ந்த நாடுகளை விட நம்மைப் போல வளரும் நாடுகளுக்கு எப்படி சாவு மணி அடிக்கப்போகுதுன்னு உங்களுக்கு அதிகம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை!

அப்படியே தெரிஞ்சாருந்தாலும், கொஞ்ச நாளைக்கு முன்னே நடந்த தண்ணிபிரச்சனையை விட, பாரதிராஜா தலமையிலே நெய்வேலிக்கு போன நடிகர் நடிகையர் கூட்டம் அதிகமா, இல்லை ரஜினிகாந்த் தலமையிலே சென்னையிலே பீச்சிலே உண்ணாவிரதம் பண்ண வந்த நடிகர் நடிகையர் கூட்டம் அதிகமான்னு கணக்கு ஆராஞ்சு போட்டு அதை அப்படியே விட்டுட்டு வேறே கதை பார்க்கப் போய்ட்டீங்கன்னா நான் என்னத்தை சொல்றது. இல்லை, நம் நாட்டு நதிகளை இணைக்க 'தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு', நான் ஒரு கோடி தரேன்ன்னு ரஜினி அறிக்கை விட்டதை படிச்சிட்டு, அடடா நம்ம தலைவருக்கு எப்படி ஒரு முற்போக்கு எண்ணம், நம்மை காப்பாத்த என்னன்ன வழிமுறைகளை நாட்டுக்கு எடுத்து சொல்றாருன்னு சிலாகிச்சு அப்படியே கதையை அம்போன்னு விட்டிருந்தீங்கன்னா, ஐயா, கொஞ்சம் எந்திருச்சி வாங்க, நான் மேற்கொண்டு சொல்லப்போற விஷயத்தைப் படிக்க, அதுவும் எப்படிப் பட்ட பூதகரப் பிரச்சனையிலே நாம் இருக்கோங்கிறதை பார்க்க வாங்க! (சிவாஜி படத்திலே திரும்பவும் இந்த நதி இணைப்பு திட்டம் பத்தி தலைவரு ஏதோ சொல்லப்போறாராம், பொறுத்திருந்து பார்ப்போம், ஆனா ஒன்னு சொல்றேன், இந்த நதி இணைப்பு சாத்தியக்கூறுகளைப் பத்தி நம்ம தொழில்நுட்ப வல்லுநர்கள், அதான் ஹைட்ராலஜிஸ்ட்டுங்க, வேறே கதை சொல்றாங்க, அது தெரியுமா, உங்களுக்கு, என்ன பண்றது, கலை உலகமே கதின்னும், அவங்கே சொல்றது தான் வேதமுன்னு கிடந்தா எங்கிட்டுப்போய் சொல்ல! ம்.. அது எதுக்கு இப்ப வாங்க கீழே போய் பார்போம் மேற்கொண்டு!)

ஒரு ஆறு மாசத்துக்கு முன்னே தான் 'ச்சோ'ன்னு சென்னையிலே மழை பேஞ்சு, எல்லாரும் வருண பகவானைத்திட்டி தீர்த்து, வெள்ளக்காடாகி, இப்ப தண்ணிப்பிரச்சனை ஏதுமில்லாம இருக்கிற
நேரத்திலே இது என்ன புதுக்கதையா ஒரு பதிவுன்னு நீங்க கேட்கிறதுப் புரியது, ஆனா தண்ணி இல்லாம இருந்த கஷ்ட காலத்தை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க கொஞ்சம்! அதுவும் தண்ணி வண்டி எப்பவரும்னு காத்துக் கிடந்து குடத்திலே குடிக்க தண்ணிப்புடிச்ச கதையை மறந்துடாதீங்க! இது சென்னையின்னு இல்லை, இந்தியாவில இருக்கிற பெரும்பாலான மாநகரங்கள், நகரங்களுக்கே உண்டானக் கதை! நான் டில்லியிலே இருந்த காலத்திலே இந்த தண்ணி கஷ்டத்தை ரொம்பவே அனுபவிச்சவன், அதை விட மோசமா வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் சேரி பகுதி மக்களை நேரிலே பார்த்துருக்கேன், அதுவும் காலையிலே நாலு மணிக்கே எழுந்து கைக்குடத்தோட தண்ணி லாரிக்கு காத்து நிற்கும் கூட்டத்தை பார்த்தவன், அதுவும் நல்ல காலங்கள்ல! கெட்ட காலங்கள்ல, தண்ணி லாரி வந்தா உண்டு, இல்லைன்னா, அவ்வளவு தான், அதுவும் பாலுக்கு குடுக்கிற காசைவிட அதிகமா காசுக்கொடுத்து தண்ணி வாங்கி குடிச்ச கதை இருக்கு! சில சேரி வாழ்மக்கள், பக்கத்திலே, தேங்கி நிக்கும் கழிவு நீர் குளத்திலேயே குண்டி கழுவி, குளிச்சு, துணி துவைச்சு, 'அந்த தண்ணியை குடிச்சா அடுத்த நிமிஷம் உயர் வாழ்றது சத்தியமில்லைன்னு', தெரிஞ்சும் அதை புழங்கும் கூட்டத்தை பார்த்ததுண்டு!

சரி தண்ணி ஒரு நாளைக்கு எவ்வளவு ஒரு மனுசனுக்குத் தேவை? அதுக்கு ஏதும் வரை முறை இருக்கா? இதை பத்தி நீர்வள மேம்பாட்டு வல்லுநர்கள் என்ன சொல்றாங்க, ஒரு 50 லிட்டர் தேவை இருக்குமா ஒரு நாளைக்கு, அரசாங்கம் என்ன சொல்லுதுன்னா நம்ம இந்திய தரப்படி 40லிட்டர் ஒரு மனுஷனுக்கு தேவை ஒரு நாளைக்குன்னு சொல்லுது! இரண்டு மூணு லிட்டர் குடிக்க, மிச்சம் சமைக்க, குளிக்க, குண்டி கழுவ! ஆனா இதையே ஒரு அமெரிக்க குடிமகன் எவ்வளவு செலவு பண்றான் தெரியுமா, குறைஞ்சது 400 லிட்டர்லருந்து 600 லிட்டர் வரை, ஐரோப்பிய நாடுகள்ல இதுல பாதி! ஆனா நான் மேலே சொன்ன சராசரி சேரி ஜனங்க உபயோகிக்கிறது இரண்டு இல்லை மூணு வாளி தண்ணியா இருந்தா எதேஷ்டம்! அதுவும் 7 பேரு கொண்ட ஒரு பெரிய குடும்பத்துக்கு, அதுவும் டில்லியிலே 45 டிகிரி கொளுத்திற மத்தியான வெய்யிலுல, கொட்டாங்குச்சி தண்ணியை மட்டும் குடிச்சு, அதுக்காக, பாதி சம்பாதிக்கிற வருமானத்தை போக்கி வாழும் மக்கள் கூட்டம் தான் நம்ம நாட்ல பாதிக்கு மேலே!

தண்ணீர்ங்கிறது வாழ்வோட அடிப்படை அம்சமில்லையா? அதுதான் வேணுங்கிற அளவுக்கு இருக்கே உலகத்தில, இப்ப என்னா அதுக்குங்கிறீங்க! அதுவும் ஓவ்வொரு லிட்டர் தண்ணின்னு, எங்கெல்லாம் 'நீர் நிலைகள்', 'ஆறுகள்', 'குளங்கள்', 'ஏரிகள்' ன்னு கண்ணுக்கு தெண்படுதோ, அதுபோல இன்னும் அம்பது பங்கு தண்ணி நிலத்தடிக்கு கீழே பூமிமாதாக் கிட்ட இருக்கு, அப்படி இருக்க, இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு அளட்டிக்கனும்னு நீங்க கேட்கிறீங்க! ஆனா ஒன்னு சொல்லிப்புடறேன், இந்த தண்ணிக்குன்னு நம்ம மட்டும் கர்நாடகாக்காரக்கிட்டேன் சண்டை போடல, ஆதியிலேயிருந்து இந்த தண்ணிக்காக சண்டைப் போட்ட கதைகள் நிறைய இருக்கு! அதுவும் மிகப்பழமையானயான சுமேரிய நாகரீகம் தோன்றின மெசபடோமியாவியிலேயும் சரி, பழங்காலபைபிள்ல வந்த செங்கடலைப்பிரிக்கும் கதையும் சரி, எல்லாமே இந்த தண்ணிச் சண்டைக்காகத்தான்!

இன்னும் ஒரு 50 வருஷம் கழிச்சு, அதாவது 2050ம் ஆண்டுல இருக்கப்போற 900 கோடி ஜனங்க எல்லாத்தும் தண்ணி கிடைக்கணும்! அதுவும் இதில பாதிக்கு மேலே நம்மைப்போல வளரும் நாடுகளோட ஜனங்கள், இவர்கள் எல்லாத்துக்கும் தண்ணிக் கிடைக்கணும்! உலகத்திலே இருக்கிற அத்தனை நீர் வளமும் சமமா பிரிஞ்சிருந்தா, இல்லை மழை வேனுங்கிறப்ப, வேணுங்கிற இடத்திலே பேஞ்சு போனா எல்லாருக்கும் தண்ணிக் கிடைக்கும், அதுல ஒரு சந்தேகமும் இல்லை, ஆனா வருணபகவான் அவ்வளவு தயாநிதி இல்லை! அங்க தான் கதை கந்தலாகப்போகுது! டெல்லி மாதிரி ஊர்ல வருஷத்துக்கு 40 நாளு, அதுவும் நாலு மாசத்துக்குள்ள பேஞ்சு முடிஞ்சா நீங்களும் நானும் செஞ்ச அதிர்ஷ்டம், இன்னும் சில ஊர்கள்ல இது ரொம்ப மோசம்! உலக ஜனத்தொகையிலே 20 சதவீதம் நம்மோடது,ஆனா நம்மக்கிட்ட இருக்கிற நீர் வளம் வெறும் நாலு சதம்! அது மாதிரி சைனா கனடா நாட்டை விட நீர் வளம் ரொம்ப கம்மி, ஆனா அங்கே ஜனத்தொகை கனடா நாட்டைவிட நாப்பது பங்கு அதிகம், அதனாலே நிலத்தடி நீர்தான் பஞ்சம் தீக்கனும், ஆனா நிலத்தடி நீரை அதுவா மழை பேஞ்சு புதுபிச்சக்கிறதுக்குள்ளே நாம உறிஞ்சு தீர்த்துப்புட்டதாலே கிணத்தை 200 அடிக்கு மேலே தோண்டுனாலும் தண்ணிக் கிடைக்கிறதில்லை! இது தான் பிரச்சனைக்கு ஆரம்பம், இப்ப புரிஞ்சுதா!

உலகத்திலே இருக்கிற அத்தனை நாகரீகங்களும் தோன்றியது எல்லாம் நதிகளை சார்ந்த பகுதிகள்ல தான், அதுவும் சிந்து சமவெளி நாகரீகத்திலே இருந்து! அதுனாலதான் நாம நதிகளை எல்லாம் கன்னியா வச்சிருந்து பெருமை பேசி வந்தோம்! நதிகள் தான் ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு முதக்காரணமா இருந்தது, அதுவும் 2000 வருஷத்துக்கு முன்னே நிர்மானிச்ச ரோம் நகரமா இருந்தாலும் சரி, இல்லை நியுயார்க், லண்டன் போன்ற பெரும் நகரங்களானாலும் சரி, அது ஏன் நம்ம நாட்டு எல்லா பெரு நகரங்களும், நதிகளை ஒட்டிப்பிறந்தது தான்! தேம்ஸ், ஹட்சன் நதிகளும், அதுவும் அதில் ஏற்படுத்திய நீர் நிலை தேக்கங்களால் தான் மனித குல வளர்ச்சி உண்டானது! மதுரையைப் பத்தி பெருமை பேச வைகை இல்லாட்டி அவ்வளவு தான், அது மாதிரி திருச்சி, தஞ்சைக்கு காவரி இல்லேன்னா மதிப்பில்லை! டில்லியிலே ஷாஜஹான் ஆட்சி புரிஞ்சி சரித்திரம் பேச யமுனை இல்லையின்னா ஒன்னுமில்லை (என்னா ஒன்னு எழவு, சென்னை ஒன்னு தான் கொஞ்ச நஞ்சம் ஏரியை வச்சி வசிச்ச அந்த காலப்பகுதி,ஆங்கிலேயன் வந்து சும்மா ஒண்டிக்க தோதுவா இருக்கட்டுமுன்னு கடலோரப் பகுதியிலே, அடிச்சி விரட்டினா ஓடிட தோதுவா இருக்குமுன்னு நிர்மானிச்ச நகரம், இப்ப அது வளர்ந்து தலைநகராகி, நம்ம எல்லாரும் அந்த ஊரை பாக்க போயி செம்பரைபாக்கம் தண்ணி குடிச்சு வளர வேண்டியதா போச்சு, தாமிரபரணி, சிறுவானி தண்ணிக்குடிச்சு வளர்ந்த கதையை பெருமை பேசினாலும் கடைசியிலே எழவு கூவத்திலே குப்பைக் கொட்ட வேண்டியதா இருக்கு! ஆக சிங்காரச் சென்னை வளர்ந்த நாகரீக கதை இந்த கோணாலா இருக்கு, அதனால தான் இந்த தண்ணி கஷ்டத்திலே முதலிடம் வகிக்குது!)

ஆனா இந்த 21ம் நூற்றாண்டிலே எந்த ஒரு நதி மட்டும் இது போன்ற பெரும் நகர தண்ணீர் பிரச்சனையை தீர்க்கப்போறதில்லை! ஒன்னரை கோடி மக்கள் கொண்ட டில்லிக்கு தேவை 350 கோடி லிட்டர் தண்ணிர், ஆனா அதில டில்லி ஜல்போர்ட் சப்ளே பண்றது வெறும் 250 கோடி லிட்டர் தண்ணி தான், அதிலே மூணுல ஒரு பங்கு வர்ற வழியிலேயே கசிஞ்சி காணம போயிடும், அங்கங்க பொத்துக்கிட்டிருக்க பைப்பில்லேயும், சரியா மெயிண்டனென்ஸ் இல்லாம இருக்கும் பம்பிங் ஸ்டேஷன்ல பீச்சிக்கிட்டிருக்கிற தண்ணியிலே போய் சேர்ந்திடும், அப்பறம் மிச்ச சொச்சம் வர்ற தண்ணியை உறிஞ்சி கொள்ளை அடிக்கிற கும்பலு, அதை எடுத்து வித்து காசாக்கும், அதுவும் பைப்பு போடாத சேரியிலே இருக்கிற மக்களுக்கு வித்து, கடைசியிலே அதைத்தான் இந்த சேரி ஜனங்க வாங்கி குடிக்கணும்! (இந்த சேரிங்கிறது, அனுமதி பெறாத வரிகட்டாத குடியிருப்பு, அதனால பைப்புல தண்ணி அவங்களுக்கு போகாது, லாரியில தான் போகும்!) இந்த கணக்கு வெறும் டில்லிக்கு மட்டுமில்லை, அநேகமா எல்லா பெரிய இந்திய நகரங்களுக்கும் தான்!

சரி வேண்டிய தண்ணி நதிகள்ல இருந்து வர்றலேன்னு நிலத்தில தோண்டத்தான் வேணும்! அப்படி தோண்டி தோண்டி இப்ப கதை கந்தலாகிற நிலமைக்கு வந்திடுச்சி! அதுவும் விவசாயத்துக்குன்னு நாம தோண்டி தோண்டி பண்ணிய பசுமை புரட்சி நிலமை இப்ப எப்படி இருக்குன்னா, எலி வருத்து திங்க வேண்டிய நிலமையிலேயும், பசி பட்டினியால விவசாய குடும்பங்கள் சாகவும் காரணமா இருக்கு, ஏன்னா தண்ணி இல்லை! 20 லட்ச கிணறுங்க இந்தியாவிலே ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னே இருந்தது, அதுவே இப்ப 23 கோடிக்கிணறுகள் இருக்கிறதா ஒரு கணக்கு சொல்லுது! இப்படியே வளரும் ஜனத்தொகைக்கு, தோண்ட தோண்ட கடைசியிலே உப்புத் தண்ணியும், கல்லுக்கிடையிலே இருக்கிற விஷத்தண்ணியும் வந்து ரொம்ப நாளாகுது! கடைசியிலே அந்த எல்லாகிணறும் உபயோகமில்லாம போயி குட்டிச்சுவராயி, விவாசியிங்க, 'எங்கிணத்து தண்ணியை நீ எடுத்தே உங்கிணத்து தண்ணியை நான் எடுத்தேனு' சண்டைப்போட்டு, கடைசியிலே வரப்புக்கு வரப்பு ஆரம்பிச்ச சண்டை, கிராமத்துக்கு கிராமமாகி, ஊருக்கு ஊருக்காகி, இப்ப மாநிலத்துக்கு மாநிலம் தண்ணிக்கு சண்டைப்போட்டு, நம்ம பத்திரிக்கைங்க அதை சென்ஷேசனலாக்கி கதை பண்ணி விவசாயி பட்டினிச்சாவு தான் பெரிசா வந்துக்கிட்டிருக்கு!

சரி இந்த கதை நமக்கெதுக்குன்னு இருக்க முடியுமா! அதான் நாமதான் நம்ம ஐடியிலேயும் மத்த தொழில் புரட்சியிலேயும் பெருமை பேசி, நாடு வளரும் கதை சொல்லிக்கிட்டிருக்குமே, இதிலே இந்த கதை என்னத்துக்கு, எப்ப நம்ம சந்திரமண்டலத்துக்கு போப்போறமுன்னு சொல்லு கேட்கிறோம் அதை விட்டுட்டு தண்ணிக்கதை பேச வந்திட்டன்னு நீங்க கோபப்படரது தெரியுது, இந்த அசுர வளர்ச்சி தான்யா இந்த கிளி கொடுக்குது! ஏன்ன, இந்த விஞ்ஞான வளர்ச்சிக்கொண்ட இந்த 21ம் நூற்றாண்டிலே, எந்த விஞ்ஞானமும் மனித குல மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் தூய்மையான தண்ணீர் கிடைக்க வழிபண்ணிக்கொடுக்கிலேங்கிறது தான் இங்கே நிதர்ஷன உண்மை! வளர்ந்த நாடுகள்ல, இந்த தண்ணியிலே வர்ற வியாதியான காலரா, டைஃபாய்ட், மலேரியாங்கிற வார்த்தையே கிடையாது! எல்லாம் மறைஞ்சு ரொம்ப நாளாச்சு! ஏன்னா ஒழுங்கா அமைக்கப்பட்ட சாக்கடை, கழிவு சுத்தப்படுத்தும் வசதிகளும், சுத்தமான தண்ணீர் கிடைக்க பெற்று வாழும் மக்களின் நிலை செஞ்சுகாட்டாத ஒன்னை எந்த மருத்தவ முன்னேற்றமும் கண்டுபிடிக்கலங்கிறது தான் உண்மை! அது நமக்கு வர இன்னும் எத்தனை காலம் காத்து இருக்க போகிறோங்கிறது தான் இப்ப கேள்வி!

ஆக சுத்தமான தண்ணீர் மனித குல வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கம்! இந்த அசுர விஞ்ஞான வளர்ச்சியால உண்டான நீர்பாசன வளர்ச்சி, மற்றும் நீர் தேக்கங்கள், நீர்பங்கீட்டு விநியோகத்தாலே விவசாய வளர்ச்சியும் பசுமை புரட்சியும் அடைஞ்சு அதனால வளர்ந்த பயிர்கள் இன்னனக்கு பூமியிலே இருக்கிற மொத்த மனித ஜாதிக்கும் சோறு போடுது! ஆனா இவ்வளவு இருந்தும், சுத்தமான தண்ணீர் மற்றும் சாக்கடை, கழிவு அகற்றி சுத்தமான சுகாதார முறையிலே இரண்டாயிர வருஷத்துக்கு முன்னே வாழ்ந்த மனிதகுலத்துக்கு கிடைச்ச வசதி, நாகரீக வாழ்க்கை, பஞ்சம், நோய் நொடி இல்லாம வாழ்ந்த வாழ்க்கை, இப்ப நமக்கு கிடைக்கிலேங்கிறது தான் மறுக்க முடியாத உண்மை, நூறு கோடிக்கும் மேலே சுத்தமான குடி தண்ணீருக்கு வழி இல்லை! இன்னைக்கு பாதிக்கு மேலே ஆஸ்பத்திரி படுக்கையிலே படுத்து கிடப்பது இந்த அசுத்த தண்ணீர் வழி வரும் வியாதியால! கடந்த பத்து வருஷமா வயித்து கடுப்பால செத்து போன குழந்தைங்க, இரண்டாம் உலகப்போரினால் அழிந்தவர்களை விட அதிகம் தெரியுமா! சுத்தமான தண்ணீர் கிடைக்க பெறுவதால் இன்னனக்கு 20 லட்சம் பேரை சாவின்பிடியிலருந்து மீட்கலாம் அது தெரியுமா உங்களுக்கு? யமுனையிலே கலக்கும் கழிவாலே உண்டாகும் பாக்டீரியாவின் அளவு ஆயிரமடங்காயிருக்கு இந்த பத்து வருஷத்திலே, அது தெரியுமா உங்களுக்கு, அது மாதிரி பங்களாதேஷ் நாட்ல, ஒரு பள்ளிகூடத்திலே பிரத்தியோகம ஒரு டாயலட் கட்டி போட்டா, அதுக்காக வந்து சேரும் பெண்பிள்ளைகளின் பதிவு பதினைஞ்சு சதவீதமா உயர்ந்த கதைத் தெரியுமா உங்களுக்கு! இந்த சுத்தமான தண்ணீர், சுகாதரா சூழ்நிலை உருவாக்கி மக்கள் நல்லா வாழணும்னு ஐக்கிய நாடுகள் கொண்டு வந்த திட்டம் தான் "Water for Life", ஆக இன்னைக்கு உலகத்தை ஆட்டுவிக்கும் முக்கியப்பிரச்சனை இந்த தண்ணீர் தான், அதுக்கு தான் இத்தனை கதையும் இப்ப புரிஞ்சுதா, நான் ஏன் இந்த கதை பேச வந்தேன்னு!

இதுக்கு எல்லாம் காரணம் நாம தண்ணியை "taken for granted"ன்னு எடுத்துக்கிட்டது தான், அது விலை மதிக்க முடியாத பொருள்னு நமக்கு தெரியாதாலே! எப்படின்னு கேளுங்க! பூமியிலே இருக்கும் நீர்நிலையிலே 97 சதவீதம் நமக்கு பிரயோசனமில்லை! எப்படின்னு கேளுங்க! எல்லாம் உப்புத்தண்ணீர்! குடிக்கக்கூடிய சுத்தமான தண்ணீர் 3 சதவீதம், அதுவும் பனிமலைகள்ல 2 சதவீதம் போக மீதம் தான் நமக்கு! இதை இப்படி கற்பனை பண்ணி பாருங்க, ஒரு பக்கெட்டு தண்ணி கடல் தண்ணின்னா, ஒரு காப்பி கப்பு அளவிலே தான் நல்லத்தண்ணி, அதுவும் நான் சொன்ன பனி மலைகள்ல தான் அதுவும் இருக்கு! நமக்கு குடிக்க, உபயோகிக்கன்னு இருக்கிறது ஒரு ட்யூஸ்பூன் தண்ணி தான், அதனால தான் தண்ணிர்ங்கிறது விலைமதிக்க முடியாத ஒன்னு! ஆனா நமக்கு தெரிஞ்சதெல்லாம் வேறகதை!

சரி பல நூறு கோடி வருஷத்துக்கு முன்னே டைனோஷர்கள் எல்லாம் குடிச்சி வாழ்ந்த தண்ணியைத்தானே நாம குடிக்கிறோம், இது என்னா அழியப்போறா ஒன்னான்னு நீங்க கேட்பீங்க. சரி தான், பூமிக்கு அடியிலே கிடைக்கிற கருப்பு தங்கம் மாதிரியா இது எடுத்து உபயோகிச்சு முடிஞ்சு போறதுக்கு! ஆக இந்த பிரச்சனை நாமலே உருவாகிக்கிட்டது தான்! ஏன்னா தண்ணியை தண்ணியா செலவளிச்சதாலே, அதுக்கு மதிப்பு கொடுக்காததாலே! நான் எதுக்கு தண்ணிக்கு வரி கட்டனும், இல்ல நிலத்தடி நீரை இறைக்க தேவையான மின்சாரத்துக்கு பணம் கட்டனும்னு யோசிச்சதாலதான்! மேற்கொண்டு தண்ணியை வீனா செலவு பண்றதாலே, அது தெரியுமா! இன்னைக்கு சைனாக்காரன் நாப்பாதாயிரம் கிலே அரிசி தானியம் விளையவைக்கும் நிலத்திலே எடுத்துக்கிற தண்ணிக்கு, நாம அதே அளவு நிலத்திலே விளையவைக்கும் தானியம் வெறும் பதினாராயிரம் கிலே தான், ஆனா அதுக்கு பாச்சும் தண்ணீர் இரண்டு பங்கு! மேற்கொண்டு நம்மளோட விவசாய கொள்கையும் அதிகம் தண்ணி குடிக்கும் தானியங்களை விளைவிக்க துரிதபடுத்துவதாலே, ஏன்னா அதுக்கு கொள்விலை அதிகம்ங்கிறதாலே அதிலே போய் எல்லா விவசாயிகளும் விழுறாங்க, இது மாதிரி நாம் சொல்லிக்கிட்டே போகலாம்! எல்லாத்துக்குமே காரணம் நாம தான்!

அதுவுமில்லாம தண்ணீர் செலவளிவது அதிகம் விவசாயத்துக்கு தான்! ஆனா அதுக்கு உண்டான வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்குதான்னு அதான் இல்லை நீங்க நினைக்கிற மாதிரி தொழில் துறை நிறுவனங்கள் அதிகம் செலவளிப்பதில்லை! ஆனா ஒழுங்கா வரி வட்டி வாங்க அங்க தான் போவாங்க நம்ம அரசாங்கம், ஏன்னா தண்ணியும் மின்சாரமும் இலவசமா கொடுத்தாகனும்னு ஒரு எழுதப்படா சட்டமிருக்கு! அதுக்கு காசு வாங்க ஆசைப்பட்டா அடுத்த ஆட்சி உங்களுதில்லை! இதனாலே எந்த வருமானமில்லை அரசாங்கத்து, கடைசியிலே கஷ்டபடறது ஏழை தான்!

நீங்க எத்தனை பேரு இந்தியிலே வந்த 'சுவதேஷ்'ங்கிற படம் பாத்தீங்கன்னு எனக்கு தெரியாது! அதிலே ஷாருக்கான், நாஸாவிலே செஞ்ச வேலையை விட்டுட்டு இந்தியாவிலே டில்லிக்கு பக்கத்திலே இருக்கிற கிராமத்துக்கு போய் அந்த கிராம மக்களோட சேர்ந்து பம்பு செட்டு போட்டு தண்ணீர் கொண்டு வந்து சுபிட்சமாக்குவாரு! அதிலே சில கிராமாத்தாங்க கேள்வி கேட்பாங்க, அமெரிக்கா எப்படி இப்படி பணக்கார நாடா இருக்குன்னு, அதுக்கு அந்த நாட்டின் வளங்கள் பத்தி சொல்லுவாரு, ஆனா அதுமட்டுமில்லை, இங்கே இருக்கும் மற்ற தொழில் முன்னேற்றங்கள், விஞ்ஞான வசதிகள், டிரிப் இரிகேஷன்னுட்டு அவங்க திராட்சை தோட்டத்துல விளச்சல் அமோகம் மூணுபங்காகி இருக்கு, அவங்க பண்ணுன நாப்பது வருஷ விவசாயத்துக்கு முன்னே, அதுக்கு செலவளிக்கும் தண்ணீர் நாப்பது வருஷத்துக்கு முன்னே செலவளிச்ச பங்குல ஒரு கால் பகுதி தான், தண்ணியை விரயம் பண்ணாம, அழகா சாகுபடி செஞ்சு அவங்க அடைஞ்ச முன்னேற்றம் தான்! இந்த ஊர்ல இருக்கும் அத்தனை வளங்களும் நம்மக்கிட்டையும் இருக்கு, ஆனா அதை நாம முறைப்படி ஒழுங்கா உபயோகிச்சு அபிவிருத்தி வழிகள்ல ஈடுபடுகிறோமான்னா, அதான் இல்லை!

நம்ம நாட்ல நல்ல பல திட்டங்கள் போடுறோம், அதை எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதை பொறுத்து இருக்கு! சுனிதா நாரயன்னு ஒரு அம்மனி, உங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியுமோ! 'Center for Sceince and Environment'ங்கிற நிறுவனத்தின் இயக்குநர், அவங்க இந்த நீர் சேகரிப்பு திட்டங்களை சரியாக செயல் படுத்தி வருவதற்காக போன வருஷம் சுவீடன் நாட்ல 'water Prize' வாங்கினவங்க! அவங்க சொல்றாங்க, நாம கொஞ்சம் கொஞ்சமா அமெரிக்கா மாதிரி ஆயிக்கிட்டிருக்கோம்,ஃபாஸ்ட் புட்ன்னு அது இதுன்னு போயிக்கிட்டிருக்கோம், வழி வழியா நம் உண்டு களித்த தானிய வகை உணவுகளை விட்டுட்டு பர்கர், பிஸான்னு இறங்கி இறச்சி சாப்பிட ஆரம்பிச்சிட்டோம். ஏற்கனவே மனுஷங்களுக்கு உணவாகும் தானிய வகைகளை விளைவிக்க தண்ணீர் விரயம் செஞ்சுக்கிட்டிருக்கோம், இப்ப இந்த அமெரிக்கா மாதிரி உணவு வகைகளை சாப்பிட தொடங்கி, அதுக்கு தேவையான ஆடு மாடுகளுக்கு தேவையான தானியங்களுக்கும் தண்ணி இரச்சு ஊத்தி விரயம் பண்ணி தண்ணி பஞ்சத்தை இன்னும் அதிகம் தான் ஆக்க போகிறோமுன்னு!

அது மாதிரி அலுவாலியான்னு நம்ம பிளானிங் கமிஷன் சேர்மென், அவருக்கு இருக்கு ஆதங்கம் தண்ணிக்கு விலை கொடுக்காத வரை, இந்த கஷ்டம் தீர போறதில்லைன்னு! ஆனா இதுக்கு மணி அடிக்க எந்த அரசியல் வதியும் வரப்போறதில்லை, ஆனா தண்ணிக்கு விலை கொடுக்காம விரயமா விவசாயிகள் விவசாயம் செய்யும் வரை ஒன்னும் பண்ண முடியாது!

அடுத்த நீர்பாசனத்திட்டம், நீர் தேக்க திட்டங்கள், இது எல்லாம் அரசியல் புகுந்து விளையாடி குட்டிச்சுவராக்கிக்கிட்டு இருக்கு! பெரிய பெரிய அணைத் திட்டங்கள் அம்பேல்! அதுனால வரக்கூடிய விளைவுகள் ஒருபக்கம் இருந்தாலும், அதுக்கு இடம் பெயரும் ஏழைபாளைகள் அநீதின்னு இன்னொரு பக்கமிருந்தாலும் (எல்லாமே அரசியல், ஏமாற்று வேலை தான்!), இந்த அணைத்திட்டங்கள், நீர் விநியோகம் மனித வளர்ச்சிக்கு ரொம்பவும் முக்கியமானது,ஆனா எல்லாத்திலேயும் அரசியல், போராட்டம், இதுக்கு விளம்பரம் தேடும் கூட்டமுன்னு இருக்கிற வரை அடிப்படை ஏழைகள் தண்ணீரால கஷ்டப்பட வேண்டியதுதான்!

விவசாய திட்டங்கள், பாலிஸி எல்லாம் புது கண்ணோட்டத்திலே நாம அனுகி வளர்ந்தா உண்டு, இல்லை இந்த தண்ணிப்பிரச்சனை ஒரு பூதகரமான ஒன்னா வரப்போறதில்லை எந்த சந்தேகமும் இல்லை. அடுத்து நமக்கு நாமே தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை உண்டாக்கி, அதற்கான முயற்சியிலே ஈடுபடணும்! கொஞ்ச நாள் முன்னே சென்னையிலே கட்டிட பில்டிங் எல்லாம், நீர் சேகரிப்பு ('Water Harvesting facility') வசதி இல்லாம கட்டிட அனுமதி இல்லேன்னு வந்த சட்ட திட்டம் நல்லது தான்! இல்லேன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன், பக்கத்திலே இருக்கிற காஞ்சிபுரத்திலேருந்து சுத்துப்பட்டு ஊர்ங்க பக்கத்திலே இருக்கிற விவசாயிங்க விவசாயத்தை விட்டுட்டு, விவசாயத்திலே காசு சம்பாரிச்சதை விட தங்களோட கிணத்திலே தண்ணீயை இறைச்சு லாரியிலே அனுப்பி சென்னையிலே விநியோகம் பண்ணி காச சம்பாரிச்சதுதான் அதிகம்! அப்புறம் அவங்க கிணறு வறண்டு எலியை புடிச்சு தான் திங்க வேண்டியிருக்கும்!

எதுக்கு இவ்வளவு பெரிய பதிவுன்னு கேட்கிறீங்களா, போன தடவை ஊருக்கு போயிருந்தப்ப லாரியிலே, ஆட்டோவிலே பின்னாடி எழுதி இருந்த வாசகம் என்னை ரொம்ப கவர்ந்தது, அதான் 'மழை நீர் சேகரிப்போம்'ன்னு, சரி இந்த தண்ணீர் பிரச்சனை என்னதான்னு ஆராயப்போக, கடைசியிலே இதுல இவ்வளவு வில்லங்கம் இருக்கிறது தெரிஞ்சது, சரி இனிமே தண்ணியை தண்ணியா செலவு பண்ணாதீங்க, வர்றட்டா...!

Sunday, November 19, 2006

ராஜாவின் ராஜாங்கம்!

நேத்து இளையராஜா பாட்டுக்கச்சேரி கேசட் ஒன்னு கிடைச்சது, போட்டு வீடியோ பார்த்தப்ப, ஒரே மலைப்பு! அவரு ஆரம்பத்திலே வந்தப்ப, போட்ட பாடல்கள்ல இருந்த குதுகூலம் மாதிரி, இன்னைக்கும் மேடையிலே ஏறி ஒரே பாடலுக்கு பல ராகங்களை பாடி காட்டறப்ப அதே குதுகூலம் அவரிடம் தென்பட்டது. நம்முடைய இளவயது ஞாபகங்கள், நிகழ்ச்சிகள் எப்படி மனசிலே மறக்க முடியாம இருக்கோ, அதே மாதிரி இந்த ராஜாவோட அந்த காலப் பாடல்கள் கேட்ட மாத்திரத்திலே அதோட ஒட்டி நிகழ்ந்த நிகழ்வுகளை மனக்கண் முன்னே அப்படியே சட்டுன்னு கொண்டு வந்து நிறுத்தும்! அவருடய பாடல்கள்ல அப்படி ஒரு தாக்கம் இருந்தது.

அதாவது 74 இல்லை 75ன்னு நினைக்கிறேன், இளையராஜா அறிமுகமாகி, முதப்படமான அன்னக்கிளி பாட்டுகள் வந்து பட்டையை கிளப்பிக்கிட்டிருந்த நேரம் அது! அதுவரை ஒரு மூணு, நாளு வருஷம் இந்தி பாடல்கள் தமிழ் நாடு முழுக்க சக்கை போடு போட்டுக்கிட்டிருந்த நேரம், எம் எஸ்வி அண்ணே, மெல்லிசையை கொஞ்ச மறந்துருந்த நேரம், அதே ஸ்டைலுல, ஒரே மாதிரி ஸ்டிரியோ டைப்பிலே பாட்டு போட்டுக்கிட்டு, பின்னாடி டாங்கோ பீட்டுலயே எல்லா தமிழ் பாட்டுகளும் வந்து போரடிச்சிக்கிட்டிருந்த நேரம்(அப்புறம் இளையராஜா பாட்டை கேட்டு கொஞ்சம் துள்ளலோட நிறைய ம்யூசிக் போட்டாரு எம் எஸ் வி அண்ணே, பிறகு வந்த நினைத்தாலே இனிக்கும், சிம்லா ஸ்பெஷல் மாதிரி சில படங்களுக்கு, சும்மா நச்சின்னு அடிச்சி பட்டையை கிளப்புனாறு, அது வேறே விஷயம், சம்போ.. சிவசம்போ!), கொஞ்சம் இனிமையா ஹிந்தி பாடல்கள், பாபி, கபி கபி, ரோட்டி கபடா ஒவுர் மக்கான், ஷோலே, டான், அமர் அக்பர் ஆண்டோனி, அப்படின்னு ஆக்ஷன் பட்ங்களும் காதல் படங்களுமா வந்து படங்களும் தாக்கத்தை உண்டு பண்ணுச்சி, பாடல்களும் தான். அதுக்கு முன்னே, ஒரு பத்து வருஷ முன்னே தான் ஹிந்தியே இந்த பக்கம் மூச்சுக் காட்டக் கூடாதுன்னு ரொம்ப ஆக்ரோஷமா தினா, முனா, கானா ஆளுங்க போட்ட சத்தம் கொஞ்சம் ஓஞ்ச நேரத்திலே, சத்தம் போடமா இப்படி ஹிந்திப் பாடல்கள் தமிழ் நாட்டு மக்கள்கள் கிட்டே வந்து சந்து பாடிகிட்டு இருந்த நேரம்! அப்படியே உட்டுருந்த, இப்பவும் தமிழ்நாட்ல பாதி தியேட்டருக்கு மேலே ஹிந்தி படம் தான் ஓடிக்கிட்டிருக்கும், பெங்களூர், ஹைதராபாத் மாதிரி, ஆனா, அதை அப்படி வராம தடுத்து தனிமனுஷனா தன்னுடய இசையாலே எல்லாத்தையும் வடக்கு பக்கம் ஓட வச்சது அப்ப நம்ம ராஜா தான்!

நான் ஏற்கனவே எனை ஆண்ட அரிதாரம்-ஆறாம் பகுதியிலே எழுதின மாதிரி, அந்த காலகட்டங்கள், அதாவது, அந்த காலக்கட்டங்கள்னு நான் சொல்றது 1978, 79 கள், அப்பதான் ரஜினிங்கிற காந்தம் கொஞ்ச கொஞ்சமா புயலாயிகிட்டு இருந்த நேரம். வில்லன்லருந்து புரமோஷன் ஆயி பைரவியில ஹீரோவாயிருந்த நேரம். பாரதிராஜா, எங்க கிராமத்து படம் தான் இவனுக்கு எடுக்கத்தெரியும்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயந்து சிகப்பு ரோஜக்களை எடுத்து விட்டருந்த நேரம். பிறகு அதிலேயும் கிராம உபக்கதையை தான் நல்லா காட்டிருந்தாரு, அதுலாதான் அவரு டச் இருக்கு, மத்ததெல்லாம் இங்கிலீஷ் பட காப்பி அப்படின்னு சரியா ஒத்துக்காததால திரும்ப கிராமம் போயி புதிய வார்ப்புகள் எடுத்திருந்த நேரம். பாலசந்தர் பெண்களை மையமா வச்சி வரிசையா அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல் நிஜமாகிறதுன்னு அரங்கேற்ற தொடக்கத்தை தொடர்ந்த நேரம் அப்பறம் எல்லாரும் வெளி நாடு போய் படம் பிடிக்க போட்டி போட்டு, நினைத்தாலே இனிக்கும், ப்ரியான்னு வந்திருந்த நேரம். ஸ்ரீதர் மாதிரி ஆளுங்க புதுசா ஆடிக்கிட்டு இருந்த ரஜினி கமல் ஆடுபுலி ஆட்டத்தை பார்த்துட்டு இளமை சொட்ட இளமை உஞ்சலாடுகிறதுன்னு எடுத்திட்டு, பிறகு அவர் பானியிலே அழகை ஆராதிக்க போயிருந்த நேரம். இளையராஜா தான் அந்த காலக்கட்டத்தில வந்த படங்கள் அத்தனைக்கும் ம்யூசிக் போட்டு அசத்திக்கிட்டு இருந்தப்ப, சிவாஜி படங்களூம் அவரு ம்யூசிக்ல பழைய டிஎம்ஸ்ச பாடவச்சி அற்புதம்மா நான் வாழவப்பேன், தீபம், தியாகம், கவரிமான், பூந்தளிர்ன்னு பாட்டுகள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த நேரம் அது!

இந்த காலகட்டங்கள்ல அவரு அமைச்ச ராகங்கள் தாளங்கள் அப்படியே ஒரு சுகம் கேட்கறதுக்கு, அதிலேயும் சில ம்யீசிக்கல் இன்ஸ்ட்ருமெண்டு இந்த மாதிரி காட்சிகளுக்குத்தான்னு சட்டமா இருந்த நேரம் அப்ப, ஆனா ராஜாதான் அதை வேறே மாதிரி கையாண்டு அதிலே ராகம் காட்டி கிராமங்கள்ன்னா, நகர வாழ்க்கை வாழ்ந்தவங்களுக்கு, அந்த பேக்ரவுண்டு ம்யூசிக்ல பச்சை வரப்பு, புல்வெளி, நீர் நிலை, ஓடைகளை பார்த்தா தான் கிராமமா தோணும், அதாவது அந்த இசை சப்தம் ஆட்டோமேட்டிக்கா காதிலே ரீங்காரமிடும்!

முக்கியமா நான் சொல்ல வேண்டிய இன்ஸ்ட்ரூமெண்ட், ஷெனாய், இது வடக்கத்திய வாத்தியம், ஆனா தமிழ் பாடல்கள்ல ஒரு புது வடிவம் கொடுத்து, அதை திரையிலே வரவைக்கும் பொழுது ஸ்லோமேஷன்ல காமிச்சு, நம்மலை கிளு கிளுப்பாக்கி விட்டதுல பெரும் பங்கு இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும் உண்டு. அதே மாதிரி காதலை எப்படி இந்த வாத்தியத்தாலே இசைமைச்சு சொன்னாரோ, அப்படி காமிடி பண்ணவும், கிண்டல் பண்ணவும் இந்த வாத்தியத்தை அதிகம் உபயோகிச்சிருப்பாரு, நம்ம ராஜா! மத்த எல்லா இசையமைப்பாளர்களும் சோகத்துக்குன்னு அங்கொன்னு, இங்கொன்னுன்னு உபயோகிப்பாங்க, ஆனா அந்த சோகத்தையும் அழகா சொல்ல இந்த ஷெனாய் தான் உபயோகிச்சாரு நம்ம ராஜா எல்லா படங்கள்லயும்! கொஞ்சம் உத்து கவனிச்சி பார்த்தீங்கன்னா தெரியும், அதுவும் 16 வயதினிலே, ரோசாப்பூ ரவிக்கைக்காரி மாதிரி படங்களை கொஞ்சம் மனசை செலுத்தி பாருங்கப் புரியும், இந்த ஷெனாயோட மகிமை!

அடுத்து, புல்லாங்குழல், இதை வச்சி அவரு பண்ணாத அட்டகாசமே இல்லை,அத்தனை ராகத்தையும் கொண்டு வந்தாரு! கிராமத்து சப்த சங்கதி இப்படிதான்னு சொன்னது புல்லாங்குழல் தான்! ஆக புது புது மெலேடி பாட்டுகளுக்கு அவருடைய தனி முத்திரையை குத்தினாரு. கண்ட கருமாந்திரங்க நடிச்சிருந்தாலும், இவரு பாட்டுக்குன்னே அதிக நாட்கள் ஓடிய படங்கள் எத்தனையோ! ஏன் நம்ம ராமராஜன் ஒரு வெற்றி ஹீரோவா வலம் வந்ததுக்கு முக்காவாசி காரணம் இளையராஜா தான், அதே மாதிரி என்ன மந்திரம் பண்ணுவாரோ தெரியாது, ராஜ்கிரண் படத்துக்குன்னு தனி அம்சமா இவரு ம்யூசிக்கு வரும்!

அது மட்டுமில்லை அத்தனை ராகங்களும் அவருடய பாட்டிலே பேஸ் பண்ணி இருக்கும், இது பத்தி நிறைய இசை விற்பண்ணர்கள் நிறைய எழுதி இருக்காங்க, வேணும்னா இணயத்திலே தேடி படிச்சி பாருங்க! ஏன் சிந்து பைரவி படத்திலே 'மரி மரி நின்னே' பாட்டை 'பாடறியேன் படிப்பறியேனா'க்கி எப்படி கர்நாடகத்தையும் நம்ம தெம்மாங்கோட கலந்தடிச்சாரு! அப்புறம் அவருக்கே உண்டானக் குரல், ஆரமபத்திலே வெறும் டைட்டில் சாங்ன்னு ஆரம்பச்சி(இவரு டைட்டில் சாங் பாடுனா, படம் நூறு நாள்ங்கிற ஹோஸ்யம் சினிமாக்காரங்க மத்தியிலே உண்டு, அதை அருமையா பாடி காட்டியிருப்பாரு ஆண்பாவம் படத்திலே!), பின்னே சோகம் மட்டும் பாடி, அப்பறம் காதல், ஜனனின்னு பக்தி பரவசப்படுத்தி, மற்றும் வாடி எங்கப்பங்கிழங்கேன்னு ரவுசு பண்ணி, நிலாவை கையிலே புடிச்சியும் ஓடத்து மேலே பாத்தும், இருக்கிற அனைத்து காட்சிக்கும் பாடி, இன்னைக்கு அவருடய தனிப்பாடல்களை கேட்டுக்கிட்டே இருக்கலாம், அத்தனையும் தேன்!

இப்படி தனி மனிதனா ஒன்மேன் ஷோ நடத்தின இந்த கச்சேரியை கேசட்ல பார்க்க நேர்ந்து, அதிலே எப்படி எல்லாம் ட்யூன் போடுவாருன்னு விவரமா சொல்லி, அதுவும் அவசரம் அவசரமா அப்ப அவரு போட்ட ட்யூன்ங்கள் எல்லாம் அந்த காலத்திலே சூப்பர் டூப்பர் ஹிட், அந்த வீடியோ கிளிப்பை பாருங்க, உங்களுக்கே தெரியும்!



அபஸ்வரம் ராம்ஜி கேட்ட கேள்விக்கு, 'எப்படி வேறு மாதிரி ஒரே பாட்டுக்கு ட்யூன் போடுவீங்கன்னு' கேட்டப்ப, அதை வேற வேற ட்யூன்ல அசத்திக்காட்டி, கடைசியிலே இந்த காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி அவரு புள்ள யுவன் ஷங்கர் ராஜா அவரு இசை அமைச்ச ஒரு பழைய பாடலுக்கு இப்ப ட்யூன் போட்டா எப்படின்னு பாடிக்காட்டி, ஒரே வேடிக்கை தான் போங்க! என்ன இருந்தாலும் ராஜாவின் ராஜாங்கம் இன்னைக்கும் நடந்துக்கிட்டு இருக்கு, வெறும் சினிமான்னு இல்லாம தேவாரம், திருவாசகம்னு நிறைய தமிழை பாட்டாலே தமிழர்களுக்கு சொல்லி காமிக்கிறாரு! அவரு ராஜாப் பாட்டை தான் போங்க, இருந்தாலும் இப்ப என்னமோ பெரியர் படத்துக்கு ம்யூசிக் போட மறுத்துட்டாருன்னு ஒரே அரசியல் சாக்கடையா இருந்துக்கிட்டிருக்கு! நம்ம நல்ல இசைகளை ரசிக்கிறதோட சரி, போட்டா கேட்கிறதோட சரி, இந்த படத்துக்கு ஏன் போடலை, அந்த படத்துக்கு ம்யூசிக் ஏன் போடலைங்கிற விஷயங்கள்ல அவ்வளவு ஆர்வமில்லை, இதோ நான் ரசிச்ச அந்த விடியோ கிளிப்புகளை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

Friday, November 03, 2006

ரா..ரா...சரசுக்கு ரா..ரா- தமிழ் பாடும் சந்திரமுகி??

'ரா..ரா.. சரசுக்கு..ரா..ரா..' அப்படின்னு கண்ணு மையை மேலே கீழே அப்பிக்கிட்டு, சலங்கையை கட்டிக்கிட்டு தையதக்கான்னு பரதம் ஆடி முண்டைகண்ணி முழியை உருட்டி ஆடிஅமர்க்களப்படுத்தி, அப்பறம் நம்ம தலைவரு வேறே 'லக்க..லக்க..லக்க..லக்க..லக்க'ன்னு ஒரே சவுண்டு விட்டுக்கிட்டு, இது பத்தாதுன்னு 'என்ன கொடுமை இது சரவணன்' அப்படின்னு நம்ம இளையத்திலகம் லந்து பண்ணிக்கிட்டு, அதுக்கும் மேலே ஒரு படி போய், நம்ம ஊரு ஜனங்க இந்த படத்தை ஒரு ஐந்நூறு நாளைக்கு மேலே ஓட்டி, ஒரே கொடுமைப்போங்க! (இதுக்கு மேலே ஏதாவது
சொன்னா ரஜினி ரசிகர் கும்பலு அடிக்க வந்துடுவாங்க! ஏன்ன அவங்க பூஜிக்கிறதே இந்த படத்தை தான், இதோ சுட்டி, போய் பாருங்க! ஏன்னா 'சிவாஜி' வர இன்னும் எத்தனை நாளு ஆகுமோ, அது வரை வண்டியியை ஓட்டனுமே!) சரி வந்த விஷயத்துக்கு வருவோம்! இந்த 'Split personality', 'Multiple Personality' பத்தி எதாவது எழுதலாமுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப தான் இரண்டு சம்பவம் நடந்துச்சு, ஒன்னு நம்ம கான பிரபா எழுதுன ஒரு பதிவு படிக்க நேர்ந்தது, இன்னொன்னு ஒரு மலையாளப்படம் பார்க்க நேர்ந்தது, என்னான்னு கதையை பார்ப்போம் வாங்க!

கான பிரபா எழுதுனாலும் எழுதுனார், ஒரு மலையாளப்படம் விமர்சனம் பத்தி, 'வடக்கும் நாதன்' என்ற படத்தை படத்தை பத்தி, அதுக்கு பின்னோட்டம் போட்ட மக்கள் இந்த மனபிராந்தியை, அதான் மனவியாதியை, உலகத்திலே உள்ள ஒட்டு மொத்த மனவியாதியையும் ஒரு லிஸ்ட் போட்டு, கேட்டா, Bipolar Disorder, ன்னும், இல்லை லிம்ஃபோசர்கோமா (lymphosarcoma) ன்னும் விவரிச்சு சொன்னோன்ன, அடடா, நம்ம சந்திரமுகியையும், அந்நியன் அம்பியையும் சொல்ல மறந்துட்டாங்களேன்னு நினைச்சப்ப, இந்த பதிவு உதயமாச்சு! இன்னொன்னு போனவாரம் ஃபாசில் டைரக்ட் பண்ண 'மணிசித்திரதாழ்'ன்னு ஒரு மலையாளப்படம், மோகன்லால், ஷோபனா நடிச்சப்படம் ஒன்னு பார்தேன், நம்ம தமிழ் சந்திரமுகியின் மூலம்! இங்கே நம்ம தெலுங்குக்காரி சந்திரமுகின்னா, அங்கே தமிழச்சி நாகவல்லி! கதையை உல்ட்டா பண்ண நம்ம வாசு மாதிரி ஆளுங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்! இந்த படத்தோட 'Core Theme' என்னான்னா 'Split Personality Syndrome'! சரி அதை விவரமா என்னான்னு பார்க்கலாமுன்னு தான் இந்த பதிவு!

சரி இந்த 'Split personality' இல்லை 'Multiple Personality' பத்தி என்னான்னு விளக்கம் கொடுக்கிறாங்கத் தெரியுமா? மொத்தித்திலே இது ஒரு மனவியாதி, அதாவது இதை 'Dissociative Identity Disorder'(DID) ன்னு சொல்லி, அதாவது மனசு தன் கட்டுபாட்டில் இல்லாமல், தான் யார் என்று தெரியாமல், தன்னையே மறந்து வேறு ஒரு நிலைக்குச்சென்று, தன்னுடய உணர்ச்சிகள், மனநினைவுகள், மற்றும் மனவெழுச்சி, உணர்ச்சி உத்வேகத்தால், தன்னுடய நிலை இழந்து, மற்றொரு தனிதன்மையை வந்தடையும் நிலை வருவது போன்ற ஒரு நோய்! (“A relatively rare dissociative disorder in which the usual integrity of the personality breaks down and two or more independent personalities emerge”.) சரி இது ஒரு விளக்கமுன்னா, இந்த மறை கழண்டு போய், குணசீலம், ஏர்வாடியிலே கொண்டி விடுவாங்களே, குணமாகட்டுமுன்னு, அதான் 'சேது' படக்கதையிலே வர்ற மாதிரியான நோயயை, என்னான்னு கூப்பிடறது! அதுக்கு ஆங்கிலத்திலே 'schizophrenia'ன்னுப் பேரு! அதாவது அதுவும் ஒரு வகையான 'Split personality' வகையை சேர்ந்த நோய் தான்! அதாவது 'Split personality', 'Multiple Personality' வந்த நோய்வாளர்களை விட இவங்க நிலமை மோசம், தன்னைத் தானே கட்டு கோப்பான மனநிலையில் வைத்துக்கொள்ள முடியாதவர்கள்! (Schizophrenic individuals, far from having split or multiple personalities, actually have a great struggle maintaining the coherence and integrity of even a single self.)

ஆக இந்த மாதிரி இந்த இரண்டு வகை நோய்யும் ஓன்னுக்கொன்னு சம்பந்தபட்டதுன்னு சொல்றாங்க, ஆனா சில பேர், இதுக்கும் அதுக்கும் ஒன்னும் சம்பந்தமில்லைன்னு சொல்லி, நிறைய எடுத்துக்காட்டுகளை சொல்றாங்க! அப்பறம் சில பேர் சொல்றாங்க, ஏன் நம்ம எல்லாருக்குமே இந்த ஒரு வியாதி உண்டு, அப்ப அப்ப நமக்குள்ள எட்டி பார்ப்பதுண்டுன்னு சொல்லி சில விளக்கம் கொடுக்கிறாங்க! இதை பத்தி சுஜாதாக்கூட அந்நியன் படம் வந்த புதுசுல எழுதி இருந்தாரு, அதாவது சாமி வந்து ஆடுறவங்க, குடிச்சிட்டு உலருறவன், எல்லாம் இந்த மாதிரி நோயின் வகையிலே உட்படுத்தபட்டவங்கதான்னு! இதை பத்தி என்னான்னு பீராயப்போயி நிறைய விளக்கங்கள் கிடைத்தது! (சும்மா, இந்த மாதிரி சினிமாவை பொழுது போக்கா பார்த்துட்டு போவேண்டியதுதானே, இதை பத்தி வேலை இல்லாம என்ன ஆராய்ச்சின்னு கேட்கிறவங்க, கீழே போய் வீடியோ கிளிப்ல தமிழ் சந்திரமுகி, தெலுங்கு சந்திரமுகி ஆட்டம் பார்த்துட்டு போயிடுங்க!)

நான் சின்னவயசிலே இந்த 'schizophrenia'ஆளை எங்க சொந்தத்தில்லேயே பார்த்திருக்கேன். எங்க பெரியம்மா வீட்ல இருந்த ஒரு அக்காவுக்கு இந்த மாதிரி ஏதோ செய்வினை செஞ்சு வச்சுட்டாங்கன்னு சொல்லி ஒரு ரூம்ல வச்சு, எப்பவுமே பூட்டி வச்சிருப்பாங்க, அதுவும் ரொம்ப 'wild'ஆ behave பண்ணும். எங்களை கண்டா எதையாவது தூக்கி அடிக்கும், எங்க அம்மா, இல்ல யாராவது புதுசா வந்தா கண்டபடி திட்டும், கேட்டா புத்தி சுவாதீனம் இல்லாம இருக்கு, அது அப்படிதாம்பாங்க! அப்ப ஒன்னும் புரியலை, இப்ப இந்த சப்ஜெக்ட்டை விளக்காமா பார்க்கும்போது பல உண்மைகள் புரிபடுது!(அப்புறம் அந்த அக்கா குணமாகி கல்யாணம் எல்லாம் ஆகி நல்லா இருக்காங்க அது வேறே விஷயம்!)

இந்த புத்த சுவாதீனத்தை இரண்டு வகையா பிரிக்கிறாங்க, ஒன்னு தீவிரமா இருக்கிற கேஸீ இன்னொன்னு சாத்வீகமான கேஸீ, அதாவது தீவிரமான்னா, 'Postive/Active Symptom' த்தோட புத்தி பேதழிச்சு போய் இருக்கிறவங்க. இவங்ககுள்ள பேய்யோ, பிசாசோ பூந்து செயல் படுதுன்னும், மத்தவங்களால உணரமுடியாத, கண்ணுக்கு புலப்படாத ஒன்னு அவங்களை ஆட்டுவிப்பதாவும், அவர்கள் செய்யும் செய்கைகளுக்கு விளக்கும், வியாக்கானம் அவங்களுக்கு யாரோ ஓதிக்கிட்டு இருக்கிறமாதிரியும், அவங்க கட்டுப்பாட்டு, சரியான முறையில் தன்னை இயக்க முடியாமல் தன்னை சீர்குழைக்கும் தன்மையுடன் செயல்படுவர்கள், உதாரணத்துக்கு சட்டை வேட்டியை கிழிச்சிக்கிட்டு, இல்லை போட்டுக்கிட்டு இருக்கிற உடுப்புகளை தாறுமாற அணிந்து, இல்லை பொது இடங்கள்ல கத்தி ரகளை பண்ணி, அதாவது இதெல்லாம் நாகரீகமில்லைன்னு அவங்களுக்கு புத்தி உறைக்காம போயி தாறுமாறா, நான் மேலே சொன்ன அந்த அக்கா மாதிரி!

இன்னொரு கேஸீ சாத்வீகம்னு சொன்னது, 'negative/passive Symptom' த்தோட உடையவங்க, அதாவது தன்னை சுத்தி என்னா நடக்குதுன்னு தெரியாம, உணர்ச்சிகளை இழந்து, சுத்தமா தங்களையே மறந்து, அதிகம் பேசாம, இல்லை பேசினா, சொன்னதையே திருப்பி சொல்லி, உலறிகொட்டிக்கிட்டு, முக உணர்ச்சியோ, இல்லை பாடி லாங்வேஜோ இல்லாம, செவ்வனேன்னு உட்கார்ந்து கிடக்கிறவங்க! ஆக இவெங்களுக்கு எல்லாம் வந்தது 'Split Personality Syndrome' கொண்ட நோயான்னா, அது தான் இல்லைன்னு சொல்றாங்க! சரி அப்படின்னா இந்த 'Split Personality' நோய் தான் என்னா?? ஒரு விதமான மனக்கோளாறு, இதுக்கு காரணம் அவர்களுக்கு சின்ன வயசிலே ஏற்பட்ட ஒரு வித மான விநோத அனுபவங்களால, பின்னாடி இப்படி ஆகி போறாங்கன்னு சொல்றாங்க. முக்காவாசி, சந்திரமுகி, அந்நியன் படங்கள்ல கூறப்பட்ட காரணம் போல!

ஆரம்பத்திலே இருந்த இந்த புத்தி சுவாதீனம் இல்லாத நோய்யைத்தான் பிற்பாடு புதுசா வேற மாதிரி கூப்பிட ஆரம்பிச்சு, இந்த 'Split personality', 'Multiple Personality' யா ஆன கதையாச்சுன்னு சொல்றாங்க! உண்மையிலே அப்படி ஒரு நோய் ஒன்னு இருக்கிறதா இல்லன்னு ஒரு சந்தேகத்தை கிளப்பிவிட்டுட்டாங்க, அதுவும் இப்ப லேட்டஸ்ட் சைக்கியாட்ரிஸ்ட் சிகிச்சையிலே, அதுமாதிரி ஒரு வியாதியே இல்லன்னு சொல்லி கண்டுபிடிச்சிருக்காங்கலாம். நம்ம சினிமாக்காரங்கதான் இந்த மாதிரி கதை பண்ணி, அதுவும் அமெரிக்காவிலேருந்து நம்ம சரவணன் டாக்டர் வந்து சந்திரமுகியை காப்பாத்துன்னும்னு சொல்லி படமெடுக்கிறாங்க! (நம்ம சினிமான்னு இல்லை, இங்கே ஹோலிவோட்லயும் இதே கூத்து தான், இதைவிட இன்னும் நிறைய, இது சம்பந்த பட்ட படங்கள், அதுவும் பாதிரியார், வந்து ஓதி பேய் விரட்டி, என்னவெல்லாம் கதை பண்ணுவாங்க, இப்ப சமீபத்திலே ஒரு படம், 'The Exorcism of Emily Rose' வந்தது, நீங்க எத்தனை பேரு பார்த்தீங்களோ, அதிலேயும் இந்த கூத்து தான்!)

சில இடங்கள்ல இந்த 'Split personality'வச்சி சுவாரசியமா கதை பண்ணி திரியறாங்கலாம், இந்த வெளியூர் போறப்ப, நம்ம மெளனக்கீதங்கள் பாக்கியராஜ் மாதிரி தப்பு பண்ணிட்டு வர்ற ஆம்பளைங்க, கேட்டா எனக்கு 'Split personality' வியாதி இருக்குன்னு சொல்லி தப்பிச்சிக்கிறாங்களாம், அதாவது வீட்ல இருக்கிறவரைக்கும் நல்ல புள்ளையா இருப்பாங்க, ஆனா வெளியீருன்னு போனா, அங்க வேற ஒரு ஆளா மாறி, 'புதுசா பொண்ணுங்களை அனுபவிப்போம், அது எங்களை அறியாம செஞ்சுது, உண்மையிலே பொண்டாட்டிக்கு துரோகம் செய்னுங்கிறது எங்க எண்ணமில்லை, ஏன்னா எனக்கு 'Split personality' வியாதி வந்துடுது, என்ன பண்ணறது'ன்னு கேட்கிறாங்களாம், இந்த கதை எங்க போய் சொல்றது? (விவரமா அந்தக் கதை படிக்க இதோ சுட்டி) கடைசியிலே இது சுஜாதா சொன்ன சாமி ஆடுற விளக்கத்தை மாதிரி இருக்கு, இதை எங்க போய் சொல்றது?

சரி, கடைசியா நான் சொல்ல வந்தது இந்த தெலுங்கு, தமிழ் சந்திரமுகிகளை பத்தி! மூலம் கொஞ்சம் டல்லு தான், என்னதான் இருந்தாலும் ரஜினி ரஜினிதான், அவரு தான் அந்த கடைசி காட்சியை தூக்கி நிறுத்திறாரு. என்னா ஸ்டைல், வேகம் (என்ன தான் ஹீரோத்தனமா நடிச்சாலும், அவரு ஆரம்பத்திலே நடிச்ச வில்லத்தனம் தான் இன்னைக்கும், இத்தனை வயசுக்கப்பறமும் அப்படியே இருக்கு, அதான் அவரோட கவர்ச்சியின் ரகசியம்!), அதனாலேயே தமிழ் சந்திரமுகி, சாரி தெலுங்கச்சி சந்திரமுகி வந்து போற சீனு அமர்க்கள படுது, நம்ம ஜோவும் நல்லாவே நடிச்சிருக்குமா, அந்த ஷோபனா நடிச்சதை விட! சரி வீடியோ கிளிப்பை பாருங்க, நான் சொல்றது உங்களுக்குப் புரியும்!

வீடியோ கிளிப்பின் முதல் பகுதி



வீடியோ கிளிப்பின் இரண்டாம் பகுதி