Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, February 20, 2007

மனைவியினால் பெற்ற பயன்!

இந்த வாரம் ஆனந்த விகடன்ல சுஜாதா எழுதிய 'கற்றதும் பெற்றதும்' தொடர்ல படிச்ச ஒன்னு நமக்கு ரொம்ப ஒத்துப்போன ஒன்னு! அதாவது, மனைவி வந்தபின் அடையும் முக்கிய பயன் என்னான்னு! முதல்ல அதில வந்ததை கீழே படிங்க!


சில வாரங்களுக்கு முன், ஒரு புது மணத் தம்பதியரைப் பற்றி எழுதியிருந்தது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அவர்களை மறுபடி ஒரு ‘கெட் டு கெத’ரில் சந்தித்தேன். நண்பர் ஒருவரின் குட்டிக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா.

‘‘உங்ககிட்டருந்து எப்ப நற்செய்தி?’’ என்றேன்.

‘‘என்ன சார்... கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆச்சு!’’ என்றான்.

‘‘இன்னும் மூணு வருஷத்துக்கு இல்லை சார்!’’ என்றாள் அவன் மனைவி.

‘‘சரி, எப்படிப் போயிட்டிருக்கு லைஃப்?’’

‘‘ஃபர்ஸ்ட் க்ளாஸ்! கல்யாணம் ஆனதிலிருந்து, என் முதுகில இருந்த அரிப்பெல்லாம் போயிடுச்சு சுஜாதா சார்!’’ என்றான்.

நான் அவன் மனைவியை வியப்பாகப் பார்க்க, ‘‘தினம் ராத்திரியானா இவருக்கு முதுகு சொரிஞ்சு விடணும்’’ என்றாள்.

‘‘என்ன சார் பண்றது... முதுகில் ஒரு ஏரியா இருக்கு. இன்னொருத்தர் உதவி யில்லாம தொடவே முடியாது! விசிறிக் கட்டை, பால்பாயின்ட் பேனான்னு என்ன என்னவோ வச்சு ட்ரை பண்ணாலும் அணுகவே முடியாது. மனைவிதான் சரி!’’ என்றான்

நான் யோசித்துப் பார்த்ததில், அவன் சொல்வதில் உண்மை இருப்பது புரிந்தது.

‘‘சுவத்தில் வச்சுத் தேச்சுக்கலாமே?’’

‘‘ம்ஹ¨ம்! அதுல ஒரு ‘கான்கே விட்டி’ இருக்கு. சில பேர் இதுக் குன்னே கல்யாணம் பண்ணிக்கிறாங்க தெரியுமா?’’

‘‘சேச்சே! டூ மச்!’’

‘‘ஆமா சார்! இவர் இதுக்காகத்தான் முக்கியமா என்னைக் கல்யாணம் செய்துட்டிருக்கார். அதுக்கும்...’’ என்று அவள் அவனைப் பார்க்க,

‘‘வெந்தயக் குழம்புக்கும்’’ என்றான் அவசரமாக. ‘‘அதுக்கு நன்றிக் கடனா என்னவெல்லாம் செய்யறேன்... சொல்லும்மா சார்ட்ட...’’

‘‘ஒண்ணும் பண்றதில்லை. 24 மணி நேரமும் கிரிக்கெட் பார்த்துண்டிருக்கார். எல்லாம் பழைய மேட்ச்!’’

‘‘ஏய்... உள்பாவாடையை ஒட்டப் பிழியணும்னா என்னைத்தான் கூப்பிடுவா!’’

‘‘வாஷிங்மெஷின்ல ஸ்பின் டிரை யர் வேலை செய்யலை. அதனால..!’’

‘‘அப்புறம், சாக்கடை குத்த?’’

‘‘சாக்கடை அடைச்சுண்டா முனிசி பாலிட்டியையா கூப்பிடறது?’’

‘‘ஒரு முதுகு சொரிய எத்தனைப் பாடு பார்த்தீங்களா? ஆனா சார்... இட்ஸ் ஆல் வொர்த் இட்! நடு முதுகுல சொரியறது இருக்கு பாருங்கோ... சொர்க்கம்! பாதாம் பர்பி, மதுரை மணியுடைய ரஞ்சனிக்கப்புறம் இதுலதான்...’’

அதிர்ஷ்டக்காரர்கள்!


மத்தவங்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது, நமக்கு இது முற்றிலும் ஒத்து போன ஒன்னு! உங்க அனுபவம் எப்படி??

Friday, February 02, 2007

மரத்துக்கு தாலி கட்டிய ஐஸ்வர்யா!

அந்த பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கு, எப்படி கட்றது? அந்த பையனுக்கு மூலம், அது தெரியாம கண்ணாலம் கட்டி இப்ப அப்பனை தூக்கிடுச்சு! இப்படி புலம்பும் மக்களை நிறைய பார்த்திருப்பீங்க! அது மாதிரி ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வா தோஷம் இருக்குன்னு மரத்து தாலி கட்டின கதை தெரியுமா உங்களுக்கு! அப்படி மரத்துக்கு தாலி கட்டினதை எதிர்த்து அவரு மேலே கேஸு போட்டு கோர்ட்டுக்கு இழுத்தடிக்கும் காம்டி காட்சி இப்ப நடந்தேறியிருக்கு!

நம்ம கனவு கன்னி ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே இரண்டு பேரை காதலிச்சு, அம்போன்னு வுட்டுட்டு மூணாவதா அமிதா பச்சன் மகன் அபிஷேக் பச்சனை அமுக்கி இப்ப கல்யாணம் வரை வந்தாச்சு, ஆனாலும் ஒரு சிக்கல் என்னான்னா, அம்மாவுக்கு செவ்வா தோஷமா, அதை போக்கணும்னா, அவங்க முதல்ல வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் அபிஷேக்கை கல்யாணம் பண்ணின அந்த தோஷம் போயிடுமா, அதனாலே தான் சமீபத்திலே, வாராணாசியிலே போய் அரச மரத்துக்கு தாலி கட்டி தோஷம் கழிச்சிட்டு அப்பறமா பெங்களூர் வந்து வாழை மரத்து தாலி கட்டி தோஷம் கழிச்சாங்களாம்!

பீகார் மாநிலத்திலே இருக்கும் 'ஸ்ருதி சிங்'னு ஒரு அம்மணி ஐஸ் மேலேயும் அமிதாப் மேலேயும் ஒரு பொது வழக்கு ஒன்னு போட்டு வச்சிருக்காம், அதாவது ஐஸ்வர்யாக்கு எல்லா ஐஸ்வர்யமும் இருந்தும் செவ்வா கிரகத்து அனுகூலம் ஜாஸ்தி இருக்கிறதாலே அது அவங்களை கட்டிக்கப் போற புருஷனுக்கு ஆகாதுன்னும், இது மாதிரி தோஷம் நீங்கணும்னா, மரத்தையோ இல்லை சாமி சிலையையோ, இல்லை எதாவது ஒரு மிருகத்தையோ முதல்ல கல்யாணம் பண்ணி, அப்பறமா தான் கட்ட போற ஆடவன் கைபிடிச்சா அந்த தோஷம் எல்லாம் நீங்குங்கிற ஐதீகம் வடக்குல அதுவும் இந்த பீகார், உபி மாகாணத்திலே ரொம்பவே பார்த்து செய்வாங்களாம்! ஏன் நம்ம ஊர்லேயும் இது உண்டு என்னா, எனக்கு தெரிஞ்சு 48 வெள்ளிக்கிழமை செவ்வா புள்ளையாரு கோவிலுக்கு விளக்கு போடு , எல்லாம் சரியாயிடுங்கிற கதை வரைக்கும் தான் கேட்டிருக்கேன், இந்த அரசமரம், வாழை மர சங்கதி பாரதிராஜா பட ஐதீக சங்கதி மாதிரி இருக்கு!

இதுக்கு தான் அமிதாப் குடும்பம் சகிதமா காசி போயி இருந்திருக்காங்க, மொத்திலே தோஷம் கழிக்க! அந்த கேஸ் போட்ட அம்முணி என்னா சொல்லிருக்குன்னா, இது தீண்டாமையை உருவாக்குது! அப்பறம் மக்களிடையே இந்த மூட நம்பிக்கை மேற்கொண்டு வழுப்பெற, இந்த மாதிரி புகழ் பெற்ற நட்சத்திரங்களே முன்மாதிரியா இருக்கக்கூடாதுன்னு சொல்லியும், அப்பறம் பீகார்ல பாட்னாவிலே இருக்கக்கூடிய ஷிட்லா கோயில், ஃபாட்வாங்கிற ஊர்ல இருக்கிற பைகதிபூர் கோவில் பிறகு தியோகர்ங்கிற ஊர்ல இருக்கிற சிவா கோவில், இங்கெல்லாம் இந்த செவ்வா தோஷ கல்யாணம் நடத்துறதை தடை செய்யனும்னு இந்த அம்முணி கேஸ் போட்டிருக்கு!

அது சரி இப்ப நம்ம ஊர்ங்கள்ல இந்த செவ்வா தோஷக் கதை எப்படி இருக்கு? நான் ஊரை விட்டு வந்து ஒரு முப்பது வருஷமாச்சு, இது மாதிரி செவ்வா தோஷத்தாலே கன்னி கழியாம பொண்ணுங்க இன்னும் அவஸ்தை படறாங்களான்னு கொஞ்சம் நம்ம ஊர்ல இருக்கவங்க சொல்லுங்க! அதுவும் இந்த கம்ப்யூட்டர் யுகத்திலே இது எல்லாம் தேவையான்னு தோணுது, இருந்தாலும் ஜோதிடத்திலே நம்பிக்கை வைக்கும் வலைப்பதிவர்கள் நம்ம கிட்ட அதிகம், ஏற்கனவே எனக்கு புது கிரகம் புடிச்சப்பவே வந்து கலாச்சுட்டு போனவங்க இருக்காங்க, இந்த விஷயத்தையும் கொஞ்சம் பீராஞ்சி தான் சொல்லுங்களேன் எப்படின்னு!

Friday, December 08, 2006

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ!

சிற்றின்ப சந்தோஷம் என்பது விளக்குகள் அனைந்தப் பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கும் மறைவினிலேயா வாழ்ந்துக் கொண்டிருக்கிறது? இல்லை! இல்லை! அதனை நுண்ணர்வுகளுடன் கலந்து வெளிக் கொணற ஆயிரம் வழிகள் உள்ளன!

காலையில் படுக்கையை விட்டு எழுந்து, சற்றே நீண்ட மூச்சை உள்ளிழுத்து திரைச்சீலை விலக்கி, ஜன்னலின் வழியே, ஆகாயத்தைப் பார்க்கும் பொழுது, தெரியும் நீலவானம், அழகிய ஓசை எழுப்பி சிறகை விரித்து பறந்து செல்லும் ஆயிரம் பறவைகளை பார்க்கும் பொழுது உள்ளம் சிலிர்க்கும் அந்த சிற்றின்பத்தை கண்டுணர்ந்ததுண்டா பெண்ணே! அதுவும் காலை வேளையிலே தட்டு தழுவிச்செல்லும், சருமைத்தை வருடிச் செல்லும் தென்றல் தரும் சுகம் நேற்றிரவு நீ கண்ட சுகத்தை விடப் பெரிதா அது?

இளங்காலையின் இன்பச்சுகமறியா உன் கணவன், மூக்குத் துவாரமின்றி உணவுக்குழல் மூலம் மூச்சு காற்றை உள்வாங்கி வெளியிடுவதால் எழுப்பும் குறட்டைச் சத்தத்தையும், அவன் சரும உராய்வில் அந்த மூச்சுக் காற்றின் இளஞ்சூட்டு வெப்பத்தினையும், அவன் தேகம் தரும் கஸ்தூரி மணத்தை முகர்ந்து பார்ப்பதையும் கொண்டாடி மகிழ்ந்துணரும் உணர்வுகள் தான் நீ விரும்பும் சிற்றின்பமா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

அன்றாட பணிகளை செய்து முடித்திட உனது பாதி மன வலிமையும் உடல் வலிமையும் செலுத்துவதில் முனைப்பாய்கிறாய்! உனக்கான கடமைகளும், அதனை தொடர்ந்து வாழ பயணிக்கும் மணித்துளிகளும், எங்கே உன்னுள் கொண்டிருக்கும் நுண்ணர்வுகளால் உந்தப்படும் சிற்றின்பத்தை முழுமையாக அநுபவிக்க வழி வகுக்கிறது? உனக்கான சிற்றின்ப சந்தோஷங்களை எப்படி பேணி வளர்த்து அபிவிருத்தி செய்ய நீ முற்பட வேண்டும் என நான் எடுத்துரைத்தால் முட்டாளாகிவிடுவேன்! ஆனால், இந்த பாழய்போகும் அன்றாட வாழ்க்கைப் பளுவின் ஆளுமையிலே எங்கே நீ சிற்றின்பம் காண்பது!

நான் ஒரு உண்மையைச் சொன்னால் நீ ஆச்சிரியப் படுவாய்! சிற்றின்பம் காண வழி சொல்ல மூயலும் இந்த ஜென்மம் என்ன ஜென்மமிது என எனை பார்த்து கேலிப் பேசுவது தெரிகிறது! ஆனால் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதிலும் துணி மணிகளை மடித்து வைப்பதிலும், கணவனுக்கு பொங்கிப் போடுவதிலும், குழந்தை பராமரிப்பதிலும், அலுவகத்தில் கொடுத்த பணிகளை திறம்படச் செய்வதிலும் மட்டுமே நீ உன் சிற்றின்பத்தை பெறுவாய் என நான் கூறினால் அதைவிட நகைப்புக்குறியது வேறொன்றுமில்லை!

சிற்றன்பமென்றால் என்ன என்பதற்கு விளக்கம் அளிக்க முற்படும்பொழுது இவ்வாறு ஒரு விடைத் தெரிகிறது! நம் ஐம்புலன்களால் என்ன என்ன உணர்கின்றோமோ, அவை அனைத்தும் சிற்றின்பமே! ஆனால் பெரும்பாலோரால் வகுக்கப்பட்ட பொருள்விளக்கம் என்னவென்றால், இச்சிற்றின்பம் இப்பூவுலகிலிருந்து விலகியது அல்ல என்பதே! எனக்கு இதில் சிறுதும் உடன்பாடில்லை! அதாவது இது மனம் சம்பந்தப்பட்டது அல்ல எனக்கூறுவது முற்றிலும் தவறு! வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு புலன்களால் அறியப்படுவது அல்ல இந்த சிற்றின்பம் என்பது. ஏனென்றால் இது பொதுவான வாழ்க்கை அம்சத்திலிருந்து மாறுபட்ட கண்ணோட்டத்தின் கருத்து! ஆனால் அதுவே உண்மை! பொதுவாக உடலின் எந்தப் பகுதி பாழ்படுகிறதோ அந்தப் பகுதிக்கு மட்டும் மருத்துவம் பார்த்து உறுப்புகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றெண்ணி, பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்யும் லாவகம் போல் வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் அதற்குண்டான எல்லைகுள்ளாகவே அதை அனுசரித்து ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வாழுவதால் உணரப்போவதில்லை இந்த சிற்றின்பத்தினை! ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு, ஆக எல்லாவற்றிற்குமே தொடர்புண்டு! அப்படி ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வகுக்கப்படும் கண்ணேட்டங்கள் சமநிலைப்பாடற்ற கருத்தாகவே ஏற்று கொள்ளவேண்டும்!

ஆற்றுபடுகையிலே இரைந்துக் கிடக்கும் கூழாங்கற்களை பார்த்தால் என்ன தோன்றுகிறது, நீரோடு உருண்டோடி வரும் பாறைகளின் வடிவத்தை பார்க்கும் பொழுது என்னத்தோன்றுகிறது! வாதமின்றி பிரதிவாதமில்லை, காரணமின்றி காரியமில்லை, அசைவின்றி விளைவில்லை! ஆக நான் மேலே கூறிய பொருள் விளக்கம் எதை தெளிவுபடுத்துகிறது என்றால் சிற்றின்பத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமுண்டு என்பதைத்தான்!

எல்லை வகுக்கப்பட்ட, தொடர்பின்றி நிர்ணயிக்கும் எண்ணங்களே நம்முள் உண்டாகும் துன்பங்களுக்கும் தீங்குகளுக்கும் மூலக்கராணம், அதுவே தொடர்பற்ற அர்த்தம் காணுவதில் உண்டாகும் கஷ்டங்களை பிரதிபலிக்கும் சமூகம் உருவாகவும் காரணமாகிறது! புரியவில்லையா? இதோ ஒவ்வொரு சிற்றின்ப மனிதனையும் வெளிகொணர்ந்து அதனைச் சுற்றிய மற்ற அம்சங்களும் எப்படி ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடயது என்பதை விளக்குகிறேன்!

நம் உணர்வுகளே கொழுந்து விட்டு எரியும் உணர்ச்சிகளை தூண்ட காரணம்! திறந்த புல்வெளியில் பாதம் பதித்து நடக்கும் போது, இந்த வாழும் வாழ்க்கையின் உயிர் துடிப்பும், அந்த புல்பரப்பில் நடந்து வரும் மென்மையை கண்டு பெருமிதம் அடையக்கூடும்! ஒன்று தெரிய வருகிறதா இந்த புல்வெளி சமபரப்பினை கொண்ட இந்த உலகம் எவ்வளவு அற்பதமானது, அதனுடன் கொண்டிருக்கும் நம் தொடர்பு எத்தனை சுகமானது! இன்னும் சொல்லப்போனால், பனித்துளி கொண்டிருக்கும் அந்த ஈரமான புல்வெளி சமபரப்பு நம்முடன் உறவாடும் உணர்ச்சிகள் எத்தனை ஏகாந்தமானவை! இது போன்ற உணர்வுகளின் மேல் கொண்ட அபரிதமான தொடர்பு அதிகமாக விரிவுபடுத்தி உன்னை நீயே ஏன் நேசிக்கக் கூடாது! இது போன்ற சிற்றினபங்களை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீ ஏன் கண்டுணரக்கூடாது! அப்படி கண்டுணர்ந்து நீ கொள்ளும் சமநிலைப்பாட்டுடன் வாழும் வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது! அப்படி கொண்டுணரும் இன்பத்தினால் அடையும் சிறு சந்தோசங்களும், அழகை ஆராதிக்கும் உன்னத நிலையையும் நீ இந்த பரபரப்பான வாழ்க்கை தொடரிலே எங்கணம் இழக்கிறாய் என்பதை நீ அறிவாயா?

உனது சிறிய பிஞ்சுகுழந்தையின் மிருதுவான கேசத்தை உனது அன்போடு வருடும் சுகத்தில் அடையும் இன்பம், மகிழ்ச்சி மட்டற்றதாயிற்றே! அந்த மட்டற்ற மகிழ்ச்சியானது, சூரிய ஒளியினால் அடையும் இளஞ்சூட்டு வெப்பத்தினை உணரும் உன் தோட்டத்து மல்லிகை கொண்ட உணர்வினை போன்று உனது பிஞ்சு உள்ளத்தின் சந்தோஷ சங்கேதத்தை கண்ட மகிழ்ச்சியினை நீ அனுபவித்துப்பார் அது என்ன இன்பமென்று! சற்றே நேரமெடுத்து அழ்கடலிலோ, இல்லை ஆற்று முகத்துவாரத்திலோ மூழ்கி கொண்டாடி பூமித்தாயின் நீர்பிள்ளைகளோட விளையாடுவதில் இன்பம் கண்டுணர்ந்து கொள், அப்பொழுது தெரியும் அவ்வின்பம் எத்தகையது என்பது! அதிரும் வாழ்க்கையின் விசைகளோடு ஆடிப்பாடி அது அனைக்க ஆர்ப்பரிக்கும் துடிப்புகளை கண்டுணர்ந்து இன்பம் கொள்! அடைப்பட்டுக் கொண்டிருக்கும் உன்னை நீயே வெளியேற்று, உனது உணர்வுகள் உன் உணர்ச்சியினை எழுப்பட்டும்! அந்த உணர்வின் உணர்ச்சிகள் முழு வாழ்க்கையின் அனைத்து இன்பத்தையும் ஆட்பரிக்க துணைக் கொள்ளட்டும்!

Thursday, November 23, 2006

தண்ணீர்... தண்ணீர்....!

என்ன திடீர்னு பாலசந்தர், 1980ல எடுத்த படத்தோட டைட்டிலை போட்டு சினிமா கதை சொல்லப்போறேன்னு நினனக்கிறீங்களா! ஆமா உலகம் எதிர் நோக்கி நிக்கும் தண்ணிப் பஞ்சத்தை பத்திதான் சொல்லபோறேன்! அந்த படத்திலே அத்திப்பட்டு கிராமத்திலே தண்ணி இல்லாம வறண்ட கதையை அழகா அப்ப நாடகம் போட்டு கோமல் சுவாமி நாதன் சொன்னதை, கவர்ச்சியா, சொன்னபடி ஆடி பாடி, தரையிலே உருண்டு புரண்டு நடிப்பாற்றலை வெளிப்படுத்திய சரிதாவை வச்சு 'மரோச்சரித்திரா' தெலுங்குப்படம் எடுத்து முடிச்சு அது அசத்தலா ஓடி ஆடி ஓஞ்சப்பின்னே, இந்தப்படத்தை அழகா எடுத்து வறண்ட பூமி கதை சொன்ன இந்த படத்தை நீங்க எத்தனைப் பேரு பார்த்தீங்களோ எனக்குத் தெரியாது! ஆனா இப்ப நான் சொல்லப்போற இந்த தண்ணிப்பிரச்சனை, வளர்ந்த நாடுகளை விட நம்மைப் போல வளரும் நாடுகளுக்கு எப்படி சாவு மணி அடிக்கப்போகுதுன்னு உங்களுக்கு அதிகம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை!

அப்படியே தெரிஞ்சாருந்தாலும், கொஞ்ச நாளைக்கு முன்னே நடந்த தண்ணிபிரச்சனையை விட, பாரதிராஜா தலமையிலே நெய்வேலிக்கு போன நடிகர் நடிகையர் கூட்டம் அதிகமா, இல்லை ரஜினிகாந்த் தலமையிலே சென்னையிலே பீச்சிலே உண்ணாவிரதம் பண்ண வந்த நடிகர் நடிகையர் கூட்டம் அதிகமான்னு கணக்கு ஆராஞ்சு போட்டு அதை அப்படியே விட்டுட்டு வேறே கதை பார்க்கப் போய்ட்டீங்கன்னா நான் என்னத்தை சொல்றது. இல்லை, நம் நாட்டு நதிகளை இணைக்க 'தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு', நான் ஒரு கோடி தரேன்ன்னு ரஜினி அறிக்கை விட்டதை படிச்சிட்டு, அடடா நம்ம தலைவருக்கு எப்படி ஒரு முற்போக்கு எண்ணம், நம்மை காப்பாத்த என்னன்ன வழிமுறைகளை நாட்டுக்கு எடுத்து சொல்றாருன்னு சிலாகிச்சு அப்படியே கதையை அம்போன்னு விட்டிருந்தீங்கன்னா, ஐயா, கொஞ்சம் எந்திருச்சி வாங்க, நான் மேற்கொண்டு சொல்லப்போற விஷயத்தைப் படிக்க, அதுவும் எப்படிப் பட்ட பூதகரப் பிரச்சனையிலே நாம் இருக்கோங்கிறதை பார்க்க வாங்க! (சிவாஜி படத்திலே திரும்பவும் இந்த நதி இணைப்பு திட்டம் பத்தி தலைவரு ஏதோ சொல்லப்போறாராம், பொறுத்திருந்து பார்ப்போம், ஆனா ஒன்னு சொல்றேன், இந்த நதி இணைப்பு சாத்தியக்கூறுகளைப் பத்தி நம்ம தொழில்நுட்ப வல்லுநர்கள், அதான் ஹைட்ராலஜிஸ்ட்டுங்க, வேறே கதை சொல்றாங்க, அது தெரியுமா, உங்களுக்கு, என்ன பண்றது, கலை உலகமே கதின்னும், அவங்கே சொல்றது தான் வேதமுன்னு கிடந்தா எங்கிட்டுப்போய் சொல்ல! ம்.. அது எதுக்கு இப்ப வாங்க கீழே போய் பார்போம் மேற்கொண்டு!)

ஒரு ஆறு மாசத்துக்கு முன்னே தான் 'ச்சோ'ன்னு சென்னையிலே மழை பேஞ்சு, எல்லாரும் வருண பகவானைத்திட்டி தீர்த்து, வெள்ளக்காடாகி, இப்ப தண்ணிப்பிரச்சனை ஏதுமில்லாம இருக்கிற
நேரத்திலே இது என்ன புதுக்கதையா ஒரு பதிவுன்னு நீங்க கேட்கிறதுப் புரியது, ஆனா தண்ணி இல்லாம இருந்த கஷ்ட காலத்தை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க கொஞ்சம்! அதுவும் தண்ணி வண்டி எப்பவரும்னு காத்துக் கிடந்து குடத்திலே குடிக்க தண்ணிப்புடிச்ச கதையை மறந்துடாதீங்க! இது சென்னையின்னு இல்லை, இந்தியாவில இருக்கிற பெரும்பாலான மாநகரங்கள், நகரங்களுக்கே உண்டானக் கதை! நான் டில்லியிலே இருந்த காலத்திலே இந்த தண்ணி கஷ்டத்தை ரொம்பவே அனுபவிச்சவன், அதை விட மோசமா வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் சேரி பகுதி மக்களை நேரிலே பார்த்துருக்கேன், அதுவும் காலையிலே நாலு மணிக்கே எழுந்து கைக்குடத்தோட தண்ணி லாரிக்கு காத்து நிற்கும் கூட்டத்தை பார்த்தவன், அதுவும் நல்ல காலங்கள்ல! கெட்ட காலங்கள்ல, தண்ணி லாரி வந்தா உண்டு, இல்லைன்னா, அவ்வளவு தான், அதுவும் பாலுக்கு குடுக்கிற காசைவிட அதிகமா காசுக்கொடுத்து தண்ணி வாங்கி குடிச்ச கதை இருக்கு! சில சேரி வாழ்மக்கள், பக்கத்திலே, தேங்கி நிக்கும் கழிவு நீர் குளத்திலேயே குண்டி கழுவி, குளிச்சு, துணி துவைச்சு, 'அந்த தண்ணியை குடிச்சா அடுத்த நிமிஷம் உயர் வாழ்றது சத்தியமில்லைன்னு', தெரிஞ்சும் அதை புழங்கும் கூட்டத்தை பார்த்ததுண்டு!

சரி தண்ணி ஒரு நாளைக்கு எவ்வளவு ஒரு மனுசனுக்குத் தேவை? அதுக்கு ஏதும் வரை முறை இருக்கா? இதை பத்தி நீர்வள மேம்பாட்டு வல்லுநர்கள் என்ன சொல்றாங்க, ஒரு 50 லிட்டர் தேவை இருக்குமா ஒரு நாளைக்கு, அரசாங்கம் என்ன சொல்லுதுன்னா நம்ம இந்திய தரப்படி 40லிட்டர் ஒரு மனுஷனுக்கு தேவை ஒரு நாளைக்குன்னு சொல்லுது! இரண்டு மூணு லிட்டர் குடிக்க, மிச்சம் சமைக்க, குளிக்க, குண்டி கழுவ! ஆனா இதையே ஒரு அமெரிக்க குடிமகன் எவ்வளவு செலவு பண்றான் தெரியுமா, குறைஞ்சது 400 லிட்டர்லருந்து 600 லிட்டர் வரை, ஐரோப்பிய நாடுகள்ல இதுல பாதி! ஆனா நான் மேலே சொன்ன சராசரி சேரி ஜனங்க உபயோகிக்கிறது இரண்டு இல்லை மூணு வாளி தண்ணியா இருந்தா எதேஷ்டம்! அதுவும் 7 பேரு கொண்ட ஒரு பெரிய குடும்பத்துக்கு, அதுவும் டில்லியிலே 45 டிகிரி கொளுத்திற மத்தியான வெய்யிலுல, கொட்டாங்குச்சி தண்ணியை மட்டும் குடிச்சு, அதுக்காக, பாதி சம்பாதிக்கிற வருமானத்தை போக்கி வாழும் மக்கள் கூட்டம் தான் நம்ம நாட்ல பாதிக்கு மேலே!

தண்ணீர்ங்கிறது வாழ்வோட அடிப்படை அம்சமில்லையா? அதுதான் வேணுங்கிற அளவுக்கு இருக்கே உலகத்தில, இப்ப என்னா அதுக்குங்கிறீங்க! அதுவும் ஓவ்வொரு லிட்டர் தண்ணின்னு, எங்கெல்லாம் 'நீர் நிலைகள்', 'ஆறுகள்', 'குளங்கள்', 'ஏரிகள்' ன்னு கண்ணுக்கு தெண்படுதோ, அதுபோல இன்னும் அம்பது பங்கு தண்ணி நிலத்தடிக்கு கீழே பூமிமாதாக் கிட்ட இருக்கு, அப்படி இருக்க, இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு அளட்டிக்கனும்னு நீங்க கேட்கிறீங்க! ஆனா ஒன்னு சொல்லிப்புடறேன், இந்த தண்ணிக்குன்னு நம்ம மட்டும் கர்நாடகாக்காரக்கிட்டேன் சண்டை போடல, ஆதியிலேயிருந்து இந்த தண்ணிக்காக சண்டைப் போட்ட கதைகள் நிறைய இருக்கு! அதுவும் மிகப்பழமையானயான சுமேரிய நாகரீகம் தோன்றின மெசபடோமியாவியிலேயும் சரி, பழங்காலபைபிள்ல வந்த செங்கடலைப்பிரிக்கும் கதையும் சரி, எல்லாமே இந்த தண்ணிச் சண்டைக்காகத்தான்!

இன்னும் ஒரு 50 வருஷம் கழிச்சு, அதாவது 2050ம் ஆண்டுல இருக்கப்போற 900 கோடி ஜனங்க எல்லாத்தும் தண்ணி கிடைக்கணும்! அதுவும் இதில பாதிக்கு மேலே நம்மைப்போல வளரும் நாடுகளோட ஜனங்கள், இவர்கள் எல்லாத்துக்கும் தண்ணிக் கிடைக்கணும்! உலகத்திலே இருக்கிற அத்தனை நீர் வளமும் சமமா பிரிஞ்சிருந்தா, இல்லை மழை வேனுங்கிறப்ப, வேணுங்கிற இடத்திலே பேஞ்சு போனா எல்லாருக்கும் தண்ணிக் கிடைக்கும், அதுல ஒரு சந்தேகமும் இல்லை, ஆனா வருணபகவான் அவ்வளவு தயாநிதி இல்லை! அங்க தான் கதை கந்தலாகப்போகுது! டெல்லி மாதிரி ஊர்ல வருஷத்துக்கு 40 நாளு, அதுவும் நாலு மாசத்துக்குள்ள பேஞ்சு முடிஞ்சா நீங்களும் நானும் செஞ்ச அதிர்ஷ்டம், இன்னும் சில ஊர்கள்ல இது ரொம்ப மோசம்! உலக ஜனத்தொகையிலே 20 சதவீதம் நம்மோடது,ஆனா நம்மக்கிட்ட இருக்கிற நீர் வளம் வெறும் நாலு சதம்! அது மாதிரி சைனா கனடா நாட்டை விட நீர் வளம் ரொம்ப கம்மி, ஆனா அங்கே ஜனத்தொகை கனடா நாட்டைவிட நாப்பது பங்கு அதிகம், அதனாலே நிலத்தடி நீர்தான் பஞ்சம் தீக்கனும், ஆனா நிலத்தடி நீரை அதுவா மழை பேஞ்சு புதுபிச்சக்கிறதுக்குள்ளே நாம உறிஞ்சு தீர்த்துப்புட்டதாலே கிணத்தை 200 அடிக்கு மேலே தோண்டுனாலும் தண்ணிக் கிடைக்கிறதில்லை! இது தான் பிரச்சனைக்கு ஆரம்பம், இப்ப புரிஞ்சுதா!

உலகத்திலே இருக்கிற அத்தனை நாகரீகங்களும் தோன்றியது எல்லாம் நதிகளை சார்ந்த பகுதிகள்ல தான், அதுவும் சிந்து சமவெளி நாகரீகத்திலே இருந்து! அதுனாலதான் நாம நதிகளை எல்லாம் கன்னியா வச்சிருந்து பெருமை பேசி வந்தோம்! நதிகள் தான் ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு முதக்காரணமா இருந்தது, அதுவும் 2000 வருஷத்துக்கு முன்னே நிர்மானிச்ச ரோம் நகரமா இருந்தாலும் சரி, இல்லை நியுயார்க், லண்டன் போன்ற பெரும் நகரங்களானாலும் சரி, அது ஏன் நம்ம நாட்டு எல்லா பெரு நகரங்களும், நதிகளை ஒட்டிப்பிறந்தது தான்! தேம்ஸ், ஹட்சன் நதிகளும், அதுவும் அதில் ஏற்படுத்திய நீர் நிலை தேக்கங்களால் தான் மனித குல வளர்ச்சி உண்டானது! மதுரையைப் பத்தி பெருமை பேச வைகை இல்லாட்டி அவ்வளவு தான், அது மாதிரி திருச்சி, தஞ்சைக்கு காவரி இல்லேன்னா மதிப்பில்லை! டில்லியிலே ஷாஜஹான் ஆட்சி புரிஞ்சி சரித்திரம் பேச யமுனை இல்லையின்னா ஒன்னுமில்லை (என்னா ஒன்னு எழவு, சென்னை ஒன்னு தான் கொஞ்ச நஞ்சம் ஏரியை வச்சி வசிச்ச அந்த காலப்பகுதி,ஆங்கிலேயன் வந்து சும்மா ஒண்டிக்க தோதுவா இருக்கட்டுமுன்னு கடலோரப் பகுதியிலே, அடிச்சி விரட்டினா ஓடிட தோதுவா இருக்குமுன்னு நிர்மானிச்ச நகரம், இப்ப அது வளர்ந்து தலைநகராகி, நம்ம எல்லாரும் அந்த ஊரை பாக்க போயி செம்பரைபாக்கம் தண்ணி குடிச்சு வளர வேண்டியதா போச்சு, தாமிரபரணி, சிறுவானி தண்ணிக்குடிச்சு வளர்ந்த கதையை பெருமை பேசினாலும் கடைசியிலே எழவு கூவத்திலே குப்பைக் கொட்ட வேண்டியதா இருக்கு! ஆக சிங்காரச் சென்னை வளர்ந்த நாகரீக கதை இந்த கோணாலா இருக்கு, அதனால தான் இந்த தண்ணி கஷ்டத்திலே முதலிடம் வகிக்குது!)

ஆனா இந்த 21ம் நூற்றாண்டிலே எந்த ஒரு நதி மட்டும் இது போன்ற பெரும் நகர தண்ணீர் பிரச்சனையை தீர்க்கப்போறதில்லை! ஒன்னரை கோடி மக்கள் கொண்ட டில்லிக்கு தேவை 350 கோடி லிட்டர் தண்ணிர், ஆனா அதில டில்லி ஜல்போர்ட் சப்ளே பண்றது வெறும் 250 கோடி லிட்டர் தண்ணி தான், அதிலே மூணுல ஒரு பங்கு வர்ற வழியிலேயே கசிஞ்சி காணம போயிடும், அங்கங்க பொத்துக்கிட்டிருக்க பைப்பில்லேயும், சரியா மெயிண்டனென்ஸ் இல்லாம இருக்கும் பம்பிங் ஸ்டேஷன்ல பீச்சிக்கிட்டிருக்கிற தண்ணியிலே போய் சேர்ந்திடும், அப்பறம் மிச்ச சொச்சம் வர்ற தண்ணியை உறிஞ்சி கொள்ளை அடிக்கிற கும்பலு, அதை எடுத்து வித்து காசாக்கும், அதுவும் பைப்பு போடாத சேரியிலே இருக்கிற மக்களுக்கு வித்து, கடைசியிலே அதைத்தான் இந்த சேரி ஜனங்க வாங்கி குடிக்கணும்! (இந்த சேரிங்கிறது, அனுமதி பெறாத வரிகட்டாத குடியிருப்பு, அதனால பைப்புல தண்ணி அவங்களுக்கு போகாது, லாரியில தான் போகும்!) இந்த கணக்கு வெறும் டில்லிக்கு மட்டுமில்லை, அநேகமா எல்லா பெரிய இந்திய நகரங்களுக்கும் தான்!

சரி வேண்டிய தண்ணி நதிகள்ல இருந்து வர்றலேன்னு நிலத்தில தோண்டத்தான் வேணும்! அப்படி தோண்டி தோண்டி இப்ப கதை கந்தலாகிற நிலமைக்கு வந்திடுச்சி! அதுவும் விவசாயத்துக்குன்னு நாம தோண்டி தோண்டி பண்ணிய பசுமை புரட்சி நிலமை இப்ப எப்படி இருக்குன்னா, எலி வருத்து திங்க வேண்டிய நிலமையிலேயும், பசி பட்டினியால விவசாய குடும்பங்கள் சாகவும் காரணமா இருக்கு, ஏன்னா தண்ணி இல்லை! 20 லட்ச கிணறுங்க இந்தியாவிலே ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னே இருந்தது, அதுவே இப்ப 23 கோடிக்கிணறுகள் இருக்கிறதா ஒரு கணக்கு சொல்லுது! இப்படியே வளரும் ஜனத்தொகைக்கு, தோண்ட தோண்ட கடைசியிலே உப்புத் தண்ணியும், கல்லுக்கிடையிலே இருக்கிற விஷத்தண்ணியும் வந்து ரொம்ப நாளாகுது! கடைசியிலே அந்த எல்லாகிணறும் உபயோகமில்லாம போயி குட்டிச்சுவராயி, விவாசியிங்க, 'எங்கிணத்து தண்ணியை நீ எடுத்தே உங்கிணத்து தண்ணியை நான் எடுத்தேனு' சண்டைப்போட்டு, கடைசியிலே வரப்புக்கு வரப்பு ஆரம்பிச்ச சண்டை, கிராமத்துக்கு கிராமமாகி, ஊருக்கு ஊருக்காகி, இப்ப மாநிலத்துக்கு மாநிலம் தண்ணிக்கு சண்டைப்போட்டு, நம்ம பத்திரிக்கைங்க அதை சென்ஷேசனலாக்கி கதை பண்ணி விவசாயி பட்டினிச்சாவு தான் பெரிசா வந்துக்கிட்டிருக்கு!

சரி இந்த கதை நமக்கெதுக்குன்னு இருக்க முடியுமா! அதான் நாமதான் நம்ம ஐடியிலேயும் மத்த தொழில் புரட்சியிலேயும் பெருமை பேசி, நாடு வளரும் கதை சொல்லிக்கிட்டிருக்குமே, இதிலே இந்த கதை என்னத்துக்கு, எப்ப நம்ம சந்திரமண்டலத்துக்கு போப்போறமுன்னு சொல்லு கேட்கிறோம் அதை விட்டுட்டு தண்ணிக்கதை பேச வந்திட்டன்னு நீங்க கோபப்படரது தெரியுது, இந்த அசுர வளர்ச்சி தான்யா இந்த கிளி கொடுக்குது! ஏன்ன, இந்த விஞ்ஞான வளர்ச்சிக்கொண்ட இந்த 21ம் நூற்றாண்டிலே, எந்த விஞ்ஞானமும் மனித குல மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் தூய்மையான தண்ணீர் கிடைக்க வழிபண்ணிக்கொடுக்கிலேங்கிறது தான் இங்கே நிதர்ஷன உண்மை! வளர்ந்த நாடுகள்ல, இந்த தண்ணியிலே வர்ற வியாதியான காலரா, டைஃபாய்ட், மலேரியாங்கிற வார்த்தையே கிடையாது! எல்லாம் மறைஞ்சு ரொம்ப நாளாச்சு! ஏன்னா ஒழுங்கா அமைக்கப்பட்ட சாக்கடை, கழிவு சுத்தப்படுத்தும் வசதிகளும், சுத்தமான தண்ணீர் கிடைக்க பெற்று வாழும் மக்களின் நிலை செஞ்சுகாட்டாத ஒன்னை எந்த மருத்தவ முன்னேற்றமும் கண்டுபிடிக்கலங்கிறது தான் உண்மை! அது நமக்கு வர இன்னும் எத்தனை காலம் காத்து இருக்க போகிறோங்கிறது தான் இப்ப கேள்வி!

ஆக சுத்தமான தண்ணீர் மனித குல வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கம்! இந்த அசுர விஞ்ஞான வளர்ச்சியால உண்டான நீர்பாசன வளர்ச்சி, மற்றும் நீர் தேக்கங்கள், நீர்பங்கீட்டு விநியோகத்தாலே விவசாய வளர்ச்சியும் பசுமை புரட்சியும் அடைஞ்சு அதனால வளர்ந்த பயிர்கள் இன்னனக்கு பூமியிலே இருக்கிற மொத்த மனித ஜாதிக்கும் சோறு போடுது! ஆனா இவ்வளவு இருந்தும், சுத்தமான தண்ணீர் மற்றும் சாக்கடை, கழிவு அகற்றி சுத்தமான சுகாதார முறையிலே இரண்டாயிர வருஷத்துக்கு முன்னே வாழ்ந்த மனிதகுலத்துக்கு கிடைச்ச வசதி, நாகரீக வாழ்க்கை, பஞ்சம், நோய் நொடி இல்லாம வாழ்ந்த வாழ்க்கை, இப்ப நமக்கு கிடைக்கிலேங்கிறது தான் மறுக்க முடியாத உண்மை, நூறு கோடிக்கும் மேலே சுத்தமான குடி தண்ணீருக்கு வழி இல்லை! இன்னைக்கு பாதிக்கு மேலே ஆஸ்பத்திரி படுக்கையிலே படுத்து கிடப்பது இந்த அசுத்த தண்ணீர் வழி வரும் வியாதியால! கடந்த பத்து வருஷமா வயித்து கடுப்பால செத்து போன குழந்தைங்க, இரண்டாம் உலகப்போரினால் அழிந்தவர்களை விட அதிகம் தெரியுமா! சுத்தமான தண்ணீர் கிடைக்க பெறுவதால் இன்னனக்கு 20 லட்சம் பேரை சாவின்பிடியிலருந்து மீட்கலாம் அது தெரியுமா உங்களுக்கு? யமுனையிலே கலக்கும் கழிவாலே உண்டாகும் பாக்டீரியாவின் அளவு ஆயிரமடங்காயிருக்கு இந்த பத்து வருஷத்திலே, அது தெரியுமா உங்களுக்கு, அது மாதிரி பங்களாதேஷ் நாட்ல, ஒரு பள்ளிகூடத்திலே பிரத்தியோகம ஒரு டாயலட் கட்டி போட்டா, அதுக்காக வந்து சேரும் பெண்பிள்ளைகளின் பதிவு பதினைஞ்சு சதவீதமா உயர்ந்த கதைத் தெரியுமா உங்களுக்கு! இந்த சுத்தமான தண்ணீர், சுகாதரா சூழ்நிலை உருவாக்கி மக்கள் நல்லா வாழணும்னு ஐக்கிய நாடுகள் கொண்டு வந்த திட்டம் தான் "Water for Life", ஆக இன்னைக்கு உலகத்தை ஆட்டுவிக்கும் முக்கியப்பிரச்சனை இந்த தண்ணீர் தான், அதுக்கு தான் இத்தனை கதையும் இப்ப புரிஞ்சுதா, நான் ஏன் இந்த கதை பேச வந்தேன்னு!

இதுக்கு எல்லாம் காரணம் நாம தண்ணியை "taken for granted"ன்னு எடுத்துக்கிட்டது தான், அது விலை மதிக்க முடியாத பொருள்னு நமக்கு தெரியாதாலே! எப்படின்னு கேளுங்க! பூமியிலே இருக்கும் நீர்நிலையிலே 97 சதவீதம் நமக்கு பிரயோசனமில்லை! எப்படின்னு கேளுங்க! எல்லாம் உப்புத்தண்ணீர்! குடிக்கக்கூடிய சுத்தமான தண்ணீர் 3 சதவீதம், அதுவும் பனிமலைகள்ல 2 சதவீதம் போக மீதம் தான் நமக்கு! இதை இப்படி கற்பனை பண்ணி பாருங்க, ஒரு பக்கெட்டு தண்ணி கடல் தண்ணின்னா, ஒரு காப்பி கப்பு அளவிலே தான் நல்லத்தண்ணி, அதுவும் நான் சொன்ன பனி மலைகள்ல தான் அதுவும் இருக்கு! நமக்கு குடிக்க, உபயோகிக்கன்னு இருக்கிறது ஒரு ட்யூஸ்பூன் தண்ணி தான், அதனால தான் தண்ணிர்ங்கிறது விலைமதிக்க முடியாத ஒன்னு! ஆனா நமக்கு தெரிஞ்சதெல்லாம் வேறகதை!

சரி பல நூறு கோடி வருஷத்துக்கு முன்னே டைனோஷர்கள் எல்லாம் குடிச்சி வாழ்ந்த தண்ணியைத்தானே நாம குடிக்கிறோம், இது என்னா அழியப்போறா ஒன்னான்னு நீங்க கேட்பீங்க. சரி தான், பூமிக்கு அடியிலே கிடைக்கிற கருப்பு தங்கம் மாதிரியா இது எடுத்து உபயோகிச்சு முடிஞ்சு போறதுக்கு! ஆக இந்த பிரச்சனை நாமலே உருவாகிக்கிட்டது தான்! ஏன்னா தண்ணியை தண்ணியா செலவளிச்சதாலே, அதுக்கு மதிப்பு கொடுக்காததாலே! நான் எதுக்கு தண்ணிக்கு வரி கட்டனும், இல்ல நிலத்தடி நீரை இறைக்க தேவையான மின்சாரத்துக்கு பணம் கட்டனும்னு யோசிச்சதாலதான்! மேற்கொண்டு தண்ணியை வீனா செலவு பண்றதாலே, அது தெரியுமா! இன்னைக்கு சைனாக்காரன் நாப்பாதாயிரம் கிலே அரிசி தானியம் விளையவைக்கும் நிலத்திலே எடுத்துக்கிற தண்ணிக்கு, நாம அதே அளவு நிலத்திலே விளையவைக்கும் தானியம் வெறும் பதினாராயிரம் கிலே தான், ஆனா அதுக்கு பாச்சும் தண்ணீர் இரண்டு பங்கு! மேற்கொண்டு நம்மளோட விவசாய கொள்கையும் அதிகம் தண்ணி குடிக்கும் தானியங்களை விளைவிக்க துரிதபடுத்துவதாலே, ஏன்னா அதுக்கு கொள்விலை அதிகம்ங்கிறதாலே அதிலே போய் எல்லா விவசாயிகளும் விழுறாங்க, இது மாதிரி நாம் சொல்லிக்கிட்டே போகலாம்! எல்லாத்துக்குமே காரணம் நாம தான்!

அதுவுமில்லாம தண்ணீர் செலவளிவது அதிகம் விவசாயத்துக்கு தான்! ஆனா அதுக்கு உண்டான வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்குதான்னு அதான் இல்லை நீங்க நினைக்கிற மாதிரி தொழில் துறை நிறுவனங்கள் அதிகம் செலவளிப்பதில்லை! ஆனா ஒழுங்கா வரி வட்டி வாங்க அங்க தான் போவாங்க நம்ம அரசாங்கம், ஏன்னா தண்ணியும் மின்சாரமும் இலவசமா கொடுத்தாகனும்னு ஒரு எழுதப்படா சட்டமிருக்கு! அதுக்கு காசு வாங்க ஆசைப்பட்டா அடுத்த ஆட்சி உங்களுதில்லை! இதனாலே எந்த வருமானமில்லை அரசாங்கத்து, கடைசியிலே கஷ்டபடறது ஏழை தான்!

நீங்க எத்தனை பேரு இந்தியிலே வந்த 'சுவதேஷ்'ங்கிற படம் பாத்தீங்கன்னு எனக்கு தெரியாது! அதிலே ஷாருக்கான், நாஸாவிலே செஞ்ச வேலையை விட்டுட்டு இந்தியாவிலே டில்லிக்கு பக்கத்திலே இருக்கிற கிராமத்துக்கு போய் அந்த கிராம மக்களோட சேர்ந்து பம்பு செட்டு போட்டு தண்ணீர் கொண்டு வந்து சுபிட்சமாக்குவாரு! அதிலே சில கிராமாத்தாங்க கேள்வி கேட்பாங்க, அமெரிக்கா எப்படி இப்படி பணக்கார நாடா இருக்குன்னு, அதுக்கு அந்த நாட்டின் வளங்கள் பத்தி சொல்லுவாரு, ஆனா அதுமட்டுமில்லை, இங்கே இருக்கும் மற்ற தொழில் முன்னேற்றங்கள், விஞ்ஞான வசதிகள், டிரிப் இரிகேஷன்னுட்டு அவங்க திராட்சை தோட்டத்துல விளச்சல் அமோகம் மூணுபங்காகி இருக்கு, அவங்க பண்ணுன நாப்பது வருஷ விவசாயத்துக்கு முன்னே, அதுக்கு செலவளிக்கும் தண்ணீர் நாப்பது வருஷத்துக்கு முன்னே செலவளிச்ச பங்குல ஒரு கால் பகுதி தான், தண்ணியை விரயம் பண்ணாம, அழகா சாகுபடி செஞ்சு அவங்க அடைஞ்ச முன்னேற்றம் தான்! இந்த ஊர்ல இருக்கும் அத்தனை வளங்களும் நம்மக்கிட்டையும் இருக்கு, ஆனா அதை நாம முறைப்படி ஒழுங்கா உபயோகிச்சு அபிவிருத்தி வழிகள்ல ஈடுபடுகிறோமான்னா, அதான் இல்லை!

நம்ம நாட்ல நல்ல பல திட்டங்கள் போடுறோம், அதை எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதை பொறுத்து இருக்கு! சுனிதா நாரயன்னு ஒரு அம்மனி, உங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியுமோ! 'Center for Sceince and Environment'ங்கிற நிறுவனத்தின் இயக்குநர், அவங்க இந்த நீர் சேகரிப்பு திட்டங்களை சரியாக செயல் படுத்தி வருவதற்காக போன வருஷம் சுவீடன் நாட்ல 'water Prize' வாங்கினவங்க! அவங்க சொல்றாங்க, நாம கொஞ்சம் கொஞ்சமா அமெரிக்கா மாதிரி ஆயிக்கிட்டிருக்கோம்,ஃபாஸ்ட் புட்ன்னு அது இதுன்னு போயிக்கிட்டிருக்கோம், வழி வழியா நம் உண்டு களித்த தானிய வகை உணவுகளை விட்டுட்டு பர்கர், பிஸான்னு இறங்கி இறச்சி சாப்பிட ஆரம்பிச்சிட்டோம். ஏற்கனவே மனுஷங்களுக்கு உணவாகும் தானிய வகைகளை விளைவிக்க தண்ணீர் விரயம் செஞ்சுக்கிட்டிருக்கோம், இப்ப இந்த அமெரிக்கா மாதிரி உணவு வகைகளை சாப்பிட தொடங்கி, அதுக்கு தேவையான ஆடு மாடுகளுக்கு தேவையான தானியங்களுக்கும் தண்ணி இரச்சு ஊத்தி விரயம் பண்ணி தண்ணி பஞ்சத்தை இன்னும் அதிகம் தான் ஆக்க போகிறோமுன்னு!

அது மாதிரி அலுவாலியான்னு நம்ம பிளானிங் கமிஷன் சேர்மென், அவருக்கு இருக்கு ஆதங்கம் தண்ணிக்கு விலை கொடுக்காத வரை, இந்த கஷ்டம் தீர போறதில்லைன்னு! ஆனா இதுக்கு மணி அடிக்க எந்த அரசியல் வதியும் வரப்போறதில்லை, ஆனா தண்ணிக்கு விலை கொடுக்காம விரயமா விவசாயிகள் விவசாயம் செய்யும் வரை ஒன்னும் பண்ண முடியாது!

அடுத்த நீர்பாசனத்திட்டம், நீர் தேக்க திட்டங்கள், இது எல்லாம் அரசியல் புகுந்து விளையாடி குட்டிச்சுவராக்கிக்கிட்டு இருக்கு! பெரிய பெரிய அணைத் திட்டங்கள் அம்பேல்! அதுனால வரக்கூடிய விளைவுகள் ஒருபக்கம் இருந்தாலும், அதுக்கு இடம் பெயரும் ஏழைபாளைகள் அநீதின்னு இன்னொரு பக்கமிருந்தாலும் (எல்லாமே அரசியல், ஏமாற்று வேலை தான்!), இந்த அணைத்திட்டங்கள், நீர் விநியோகம் மனித வளர்ச்சிக்கு ரொம்பவும் முக்கியமானது,ஆனா எல்லாத்திலேயும் அரசியல், போராட்டம், இதுக்கு விளம்பரம் தேடும் கூட்டமுன்னு இருக்கிற வரை அடிப்படை ஏழைகள் தண்ணீரால கஷ்டப்பட வேண்டியதுதான்!

விவசாய திட்டங்கள், பாலிஸி எல்லாம் புது கண்ணோட்டத்திலே நாம அனுகி வளர்ந்தா உண்டு, இல்லை இந்த தண்ணிப்பிரச்சனை ஒரு பூதகரமான ஒன்னா வரப்போறதில்லை எந்த சந்தேகமும் இல்லை. அடுத்து நமக்கு நாமே தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை உண்டாக்கி, அதற்கான முயற்சியிலே ஈடுபடணும்! கொஞ்ச நாள் முன்னே சென்னையிலே கட்டிட பில்டிங் எல்லாம், நீர் சேகரிப்பு ('Water Harvesting facility') வசதி இல்லாம கட்டிட அனுமதி இல்லேன்னு வந்த சட்ட திட்டம் நல்லது தான்! இல்லேன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன், பக்கத்திலே இருக்கிற காஞ்சிபுரத்திலேருந்து சுத்துப்பட்டு ஊர்ங்க பக்கத்திலே இருக்கிற விவசாயிங்க விவசாயத்தை விட்டுட்டு, விவசாயத்திலே காசு சம்பாரிச்சதை விட தங்களோட கிணத்திலே தண்ணீயை இறைச்சு லாரியிலே அனுப்பி சென்னையிலே விநியோகம் பண்ணி காச சம்பாரிச்சதுதான் அதிகம்! அப்புறம் அவங்க கிணறு வறண்டு எலியை புடிச்சு தான் திங்க வேண்டியிருக்கும்!

எதுக்கு இவ்வளவு பெரிய பதிவுன்னு கேட்கிறீங்களா, போன தடவை ஊருக்கு போயிருந்தப்ப லாரியிலே, ஆட்டோவிலே பின்னாடி எழுதி இருந்த வாசகம் என்னை ரொம்ப கவர்ந்தது, அதான் 'மழை நீர் சேகரிப்போம்'ன்னு, சரி இந்த தண்ணீர் பிரச்சனை என்னதான்னு ஆராயப்போக, கடைசியிலே இதுல இவ்வளவு வில்லங்கம் இருக்கிறது தெரிஞ்சது, சரி இனிமே தண்ணியை தண்ணியா செலவு பண்ணாதீங்க, வர்றட்டா...!

Monday, October 23, 2006

மரணம் பற்றி சற்று யோசித்ததுண்டா??

என்னடா திடீர்னு இவன் இந்த கேள்வியை கேட்கிறானேன்னு நீங்க யோசிக்கலாம்! ஆனா உண்மையா தான் கேட்கிறேன், உங்கள்ல எத்தனைப்பேரு இந்த மரணம் பற்றி யோசிச்சதுண்டு! எல்லாருமே ஒரு நாள் சாவப்போறவங்க தான், ஆனா அதை சந்திக்கும் துணிச்சல் எத்தனைப்பேருக்கு உண்டு! எப்பவேனும்னாலும் நிகழலாம்! ஏன் இன்னைக்கு நல்லா இருக்கிற மனுஷன் நாளைக்கு திடீர்ன்னு தலையை சாச்சா, ம்.. உலகத்திலே எதுவும் நிரந்திரமானதில்லை! அதுவும் இந்த சாவின் புரிதல் பற்றி தெரிஞ்சிருக்கணும்னா, அது நீங்க வெறுமெனே நினைச்சா வர்றப்போறதில்லை! அதுக்குன்னு சில சந்தர்ப்பங்கள் வந்தா தான் அதைப் பத்தி உங்களுக்கு என்னான்னு தெரிய வாய்ப்பிருக்கு! அதுவும் ஏதாவது விபத்திலே சிக்கி மரணத்தின் பிடியிலே சிக்கி மீண்டு வர்றவங்களுக்கு இது நல்லாவே தெரியும்!

சும்மா தமாஷுக்குக்கூட சொல்லிட்டு திரியாதிங்க 'இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால்ன்னு', ஏதோ ஒரு படத்திலே விவேக் இது மாதிரி சொல்லிக்கிட்டு திரிவார்ன்னு கேள்வி பட்டேன். அது மாதிரி உண்மையிலே உங்களுக்கு நெருங்கியவங்களை பாடையிலே எடுத்துட்டுப்போயி இடுகாட்டிலே விராட்டி வச்சி அடுக்கி சிதை மூட்டி கொளுத்திட்டு, அடுத்த நாளு இதே பாலு ஊத்த போய் பாருங்க, அப்ப தெரியும் அது என்னா வலின்னு!அதுவும் வேண்டப்பட்டவங்களை உயிரோட பார்த்து ரொம்ப நாள் கழிச்சு திடீர்னு போய் தூங்கிக்கிட்டு இருக்கிறமாதிரி படுத்தருக்கும் சடலத்தை பார்த்தா, என்னவாகும், தாரை தாரையா கண்ணீர் வடிச்சாலும் அந்த உயிர் போகும் நேரத்திலே பக்கத்திலே கூட இல்லையேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும்! அதுக்காக துக்கத்தை கண்ணிலே வச்சிக்கிட்டு எப்பவுமே அழுது புலம்பி 24 மணி நேரமும் ஒப்பாரி வக்க முடியுமா? கொஞ்சம் அழுது முடிச்சி அப்படியே சோகத்தை கப்பிக்கிட்டு வாய் பொத்தி யாரோடயும் பேசமா மணிக்கணக்கிலே மூளையிலே வேணா உட்கார்ந்து கிடக்கிலாம். அதுவும் எத்தனை நாளைக்கு பொணத்தை நடுவூட்டுல போட்டு வச்சிக்கிட்டு இருக்க முடியும்? இல்லை பொம்பளைங்க மாதிரி கூடி கூடி எத்தனை வாட்டி அழுதுக்கிட்டிருக்கத்தான் முடியும், ஆகற வேலையை பார்க்கணும்னு போகத்தான் தோணும்!

எல்லாமே உயிரோட இருக்கும் வரை தான்! உசுரு போன அடுத்த நிமிஷம் மண்ணோட மக்கி போர உடம்பு, இல்லை தீஞ்சு சாம்பலாயி, அதுக்கும் மேலே மிஞ்சி நிக்கிர ஒன்னு ரெண்டு எழும்பையும் மொத்தமா அடுக்கி வச்சி, பொட்டு வச்சி படையல் போட்டு அப்புறம் பாலை ஊத்திட்டு, சட்டியிலே எடுத்துட்டு போயி புண்ணியமா போகட்டும்னு பக்கத்திலே இருக்கிற ஆத்துல கரைச்ச பின்னாலே அது போற திசைத் தான் தெரியுமா? அப்புட்டுத்தான் மனுசன் வாழ்க்கை. அப்பறம் அவன் ஆசைப்பட்டதை துக்கம் கொணடாட நிதம் வாங்கி படைச்சு மத்தவங்க உண்டு கழிச்சு கருமாதி செஞ்சு முடிக்கும் வரை நெருங்கினவங்க சோகத்தை சுமப்பாங்க, அதுவும் கொஞ்சம் நாள்பட்டுச்சுன்னா 'எதோ வாழ்ந்தாரு, செத்தார்ன்னுட்டு, வருசம் ஒரு தடவை நினைச்சுப்பார்த்து, வேணும்னா தெவசம் கொடுத்து ஒரு இரண்டு தலைமுறை வரைக்கும் நெனச்சு பார்ப்பாங்க, அடுத்தாப்பல முப்பாட்டனாகின பின்ன, கொள்ளு பேரனுக்கு தாத்த அப்பன் பேரு ஞாபகம் வராது, பின்டம் புடிக்க பேரு கேட்டா தெரியாதுன்னு, எதோ காத்துல பேரை சொல்லி தர்பணம் பண்ணிட்டு போயிடுவாங்க, அதுக்குப்பறம் உன்னை நெனைக்க யாருமில்லை!

ஆனா அதுக்குள்ள நம்ம ஆடுர ஆட்டம் தான் என்ன, சொல்லி மாளாது! அதுக்கு தான் நான் கேட்ட முதல் கேள்வி, 'மரணம் பற்றி யோசிச்சதுண்டான்னு' அது பத்தி என்னான்னு கொஞ்சங்கூட யோசிக்காம, கடைசியிலே இதை பத்தி யோசிக்க நீங்க இருக்கப்போறதில்லை உயிரோட, அதானாலே சொல்றேன், கொஞ்சமாவது இடையிலே இதை நினச்சா, நம்ம நாமே தெரிஞ்சிக்கிட்டு, நம்ம பண்ற தப்பை மாத்திக்கிட்டு நமக்கு நாமே நேர்மையா இருந்துட்டு மண்ணுக்கு போகலாங்கிறது தான் நான் சொல்ல வர்றது!

எதுக்கு இந்த பதிவுன்னா என் தகப்பனார் இறந்து போய் காரியம் பண்ணிட்டு வந்து இன்னையோட பத்து நாள் ஆகுது! கொஞ்சம் சாவை பத்தி யோசிச்சாலே போதும், நம்மலை நாமே தடம் பிறழாம பாத்துக்குலாம். இருக்கிறவரை நமக்கு புண்ணியம் தேடுறோமோ இல்லையோ, நம்ம கூட இருக்கிறவங்க, அது யாரா இருந்தாலும் சரி, பொண்டாட்டியானுலும் சரி, புள்ளையானுலும் சரி, சுத்து பத்து சொந்தமானாலும் சரி, அறிஞ்சவன் தெரிஞ்சவனாலும் சரி, எல்லாரும் நம்மலால அவங்களுக்கு கெடுதல் வராம இருந்து செத்தாலே மோட்ச பிரயாணம் தான்! இதை பத்தி மதுரகவியாழ்வார் எழுதின வைகுந்தம் போக வைக்கும் பாசுரங்களை எழுதலாமுன்னு தோணுச்சு, அதான் கீழே எழுதியிருக்கேன் பாருங்க!

அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே

Monday, August 21, 2006

இந்திய நாடு என் நாடு அதில் இந்தியன் என்பது என் மக்கள்!

அப்பாடா ஒரு வழியா இந்திய பயணம் முடிச்சு திரும்ப வந்தாச்சு! நடுவிலே இந்த ப்ளாக் அது இது எதுவும் மூச்சு விடாம இருந்தாச்சு! யாருக்கிட்டேயும் சொல்லிக்கிட்டு கிளம்பல! இதிலெ போற இடமெல்லாம் ப்ளாக்கர் மாநாடு போட்டு துளசி அக்கா மாதிரி நம்மலால வலம் வரமுடியல்ல. மதுரை போனப்ப, தருமி சாரை பார்க்கலாமுன்னு போயி அதுவும் சொதப்பி போச்சு, பார்க்க முடியுமா, அப்படி பார்க்கலாம்னு போயி முடியாம போன சோகத்தை தருமி ஐயா எனக்கு மடல் போட்டப்ப தான், என்ன எப்படி சொதப்பலாச்சுன்னு தெரிய வந்ததை கீழே படிங்க!

"ஒரு புத்திசாலி காலயில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஃபோன் ஒண்ணு வந்திச்சாம். வெளிநாட்டு நண்பர் ஒருவர் முகவரி சொல்ல, அவரைப் பார்க்க சொன்ன அந்த சாலைக்கு சரியாக சொன்ன நேரத்தில் போய்ச்சேர்ந்தானாம். அங்கே போனால் சொன்ன முகவரியில் குழம்பிப்போய் அந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடியலையாம்.

சரி..என்னன்னு விசாரிக்கிறது? நண்பரோ அங்கே அறிமுகமில்லாதவர். அவரைப்பற்றிச் சொன்னால் அண்டை அயலில் யாருக்குத் தெரியும். அவர் மாமனார் பெயரோ, at least அவரது ஃபோன் எண்ணோ தெரிந்திருக்க வேண்டாமா? காலையில் போன் செய்தவரிடம் எண்ணை வாங்கி வைத்திருக்கக்கூடாதா? போனை கட் செய்ததும் அது நினைவுக்கு வந்தது, நண்பர் ஒருவேளை caller id உள்ள போனாகத்தான் இருக்கும் - அமெரிக்க வழக்கப்படி? - என்று நினைத்திருக்கலாம்,
இருப்பினும் ஒருவேளை ஆளைக்காணோமே என்று மறுபடி வீட்டிற்கு போன் வரலாம் என்ற நினைவில் வீட்டுக்குப் போன் செய்து, போன் வந்தால் கைத்தொலைபேசி எண் கொடுக்கச் சொல்லிவிட்டு, அதற்காக அந்த ஏரியாவிற்குப் பக்கத்தில் இருக்கும் கல்லூரியிலேயே கிடையாய் 12.45 வரை இருந்துவிட்டு திரும்பியாகிவிட்டது. 11\லிருந்து 11.30 வரை இடம் தேடல் .

அங்கிருந்த வாய்ற்காப்போர்கள் இருவர் பேசிக்கொண்டது:
என்ன ஆளு இவரு. ஆளு பேரு, போன் நம்பர், வீட்டு முழு முகவரி எதுவும் இல்லாமல் ஆளத் தேடி வந்திட்டாராம். ம்ம்ம்ம்

--
அன்புடன்..........தருமி "

அதுக்கு நானும் மன்னிப்பு கோறி மறு மடல் போட்டு சங்கதி ஏக சொதப்பலாகி போச்சு போங்க, இப்படி கதை கந்தலாயி வந்தது இதில மட்டுமில்லை, மற்ற ஏகப்பட்ட சங்கதிலேயும்னு வச்சுக்கங்களேன்!

முதமுதல்ல போய் சேர்ந்து டில்லியிலே இறங்குனோன்ன இந்த 'Pre-paid Taxi'ன்னு ஒன்னு இருக்கு பாருங்க, அங்க ஆரம்பிச்ச சோகம், கடைசியிலே திரும்ப வர, விமானம் ஏறி உட்காரும் வர நம்மல துரத்தி துரத்தி அடிச்சது! நானூறு ரூவா கொடுத்து 'Pre-paid Taxi'பில்லு கிழிச்சு, கீழே இறங்குனா முதல்ல அகப்பட்ட டாக்ஸி மாருதி 800ல வந்த கருப்பு மஞ்சள் காரு, நாங்க மூணு பேரு, நாலு சாமான்கள், அதை வக்கலாமுன்னு டிக்கியை திறந்தா அங்கே பெரிய CNG சிலிண்டர், அதுக்கு தான் டிக்கிலே இடம் இருக்கே ஒழிய நம்ம சாமானுக்கு எங்க இடம், சரி இந்த காரு வேணாமுன்னு வேற காரை கொடுக்க சொல்லி டிக்கெட்டு கிழிச்சவருக்கிட்டே போனா, அதுல கேரியரு இருக்குமே, மேலே தூக்கி வச்சிக்கிட்டு போக வேண்டியது தானேன்னு புலம்பிக்கிட்டே மாருதி வேன்னா பார்த்து ஒன்னு எழுதி கொடுத்தாரு, அதிலேயிம் பாதி டிக்கி ஸ்டெப்பினி டயருங்க இரண்டு CNG சிலெண்டர்னு, ஏதோ நம்ம கொண்டு போன லக்கேஜை எங்கெங்கெங்கோ வச்சுட்டு, புறப்படலாமுன்னு ,சுத்தி நிக்குது காலி வண்டிங்க, சவாரி ஏத்த, வழி விட்டால நம்ம போறதுக்கு, பெல்ட்டுல சாமான் வந்து வெளியிலே எடுத்து வர இரண்டு மணி நேரமுன்னா, சுத்தி நின்ன டாக்ஸிங்களை ஒதுக்கி ஏர்போர்ட்டடி விட்டு வெளி வர ஒரு அரை மணி நேரம்!( இந்த ஊர்ல வந்தமா, வரிசையா நிக்கும் கேபை புடிச்சமா, போயிகிட்டே இருந்த மாங்கிற கதை இல்லை அங்கே, எல்லாரும் பாசப்பிணைப்போட அப்படியே கட்டி போட்டுட்டாங்க போங்க!)

அப்படி வெளியிலே வந்தா நம்ம டாக்ஸி டிரைவர் வண்டி ஓட்டினாரா, இல்லை ரோலர் கோஸ்டர் சுத்த வச்சாரான்னு தெரியாத அளவுக்கு அடி வயிரு கலங்க ஓட்டி வந்தாரு! அதுமட்டுமில்லை இந்த லேன் டிரைவிங்னு போட்ட கோடுங்க எதுக்குன்னு தெரியலை, சரியா வண்டி நடுவிலே அந்த கோடு வர்றமாதி பார்த்துக்கிட்டு பாதி இந்த லேன்லயும் பாதி அந்த லேன்லயும் ஓட்டி கலாச்சிட்டாரு. இப்பதான் கஷ்டப்பட்டு இங்கே லைசென்ஸு வாங்கன என் பொண்ணு, என்ன வண்டி இப்படி ஒட்டறாங்க இங்கேன்னா! அதுவுமில்லாம, ஒரு சிக்னல் இல்ல சந்திப்புல திரும்பறப்ப, ஒரு டாட்டா சுமோ அப்படியே முத்தங்கொடுக்கிறமாதிரி வந்துட்டு நின்னு எங்க காருலே இருக்கிறவங்களை நோட்டம் வுட்டுட்டு, அப்படி விருட்டுன்னு எடுத்துட்டு போனாரு! என் பொண்ணு அதுக்கு கேட்டா, ஏம்பா இங்க இந்த சிக்னல் இல்லாத இந்த கார்னர், கர்டஸி கார்னர் மாதிரி, யாரு முதல்ல வந்தாங்களோ அவங்களுக்கு வழி விட்டு போக சொல்லிட்டு மோதாம போமாட்டாங்களான்னு கேட்டா, அதுவும் அந்த ஸ்டாப் ஸைன் எதுவும் நாலு பக்கமும் இல்லையே, அது ஏன்னு கேட்டா! நான் என்னத்த சொல்றது! இந்த ஊர்ல பந்திக்கு முந்துரவன் மாதிரி எங்க கேப்பு கிடைக்குதோ அங்கு பூந்து ஓட்டினாதான் உண்டு, இல்லேன்னா நீ அடிபட்டு நொந்து போவேன்னே! பிற்பாடு நினைச்சுக்கிட்டேன், 20 வருஷம் இந்தியாவுல காரு ஓட்டிட்டு வந்தாலும் நம்ம ஆளுங்களை ஏன் இந்த அமெரிக்காகாரன் ஒரு அட்டம்பட்ல பாஸ் பண்ண வைக்க மாட்டேங்கிறான்னு!

அடுத்து நம்ம ஊரு பேங்க் இருக்குங்களே, அங்க உண்டாகிற அனுபவமே தனி! என் பொண்ணு பேர்ல எடுத்த சேவிங்ஸ் அக்கவுண்ட்டை குளோஸ் பண்ணலாமுன்னு என் பொண்ணையும் கூட்டிட்டு போனேன்! அங்க தான் புடிச்சது சனியன். உங்க பொண்ணோட பர்த் சர்டிபிகேட் கொண்டு வந்தா தான் குளோஸ் பண்ணுவேன்னு அந்த பேங்க் அக்கவுண்டெண்ட் சொல்லிட்டாரு. நான் சொன்னேன், என் பொண்ணுக்கு பதினெட்டு வயசாயுடுச்சு, நான் கார்டியனா இருந்தாலும், இதோ அவங்களையும் கை எழுத்து போட சொல்றேன் குளோஸ் பண்றதுக்கு, ஆக லீகலா நீங்க குளோஸ் பண்ணலாமேன்னேன். அதுக்கு ஏகப்பட்ட வாக்கு வாதம் பண்ணி கடைசியிலே பண்ண ஒத்துக்கிட்டாரு! இருக்கிற மீதி பணத்தை கொடுக்க சொல்லி ஒரு வித்ட்ராயல் சிலிப்பு எழுதி கொடுத்தா, அதை வாங்கின ஒரு பேங்க் அம்மனி, எண்ட்ரி போடறத்துக்கு, அதுக்கு ஓகே சொல்ல ஒரு கை எழுத்து அந்த அக்க்வுண்டண்ட்கிட்ட வாங்கினாங்க, அப்பறம் எனக்கு டோக்கன் கொடுத்து, அந்த வித்ட்ராயல் சிலிப்பை திருப்பி கைஎழுத்து போட்டு பணம் தர்ற கவுண்டருல் உள்ளவருக்கிட்ட போய் சேர ஒரு மணி நேரம், அவரும் டோக்கன் நம்பரை வரிசையா கூப்பிடறேன் ஆசாமின்னு மேலே கீழே வச்சு, டோக்கன் நம்பரு 30 வந்தா, அப்பறம் டோக்கன் நம்பரு 10 வந்து, கடைசியிலே நம்ம நம்பரு வந்து மீதி பணத்தை வாங்கறத்துக்குள்ளே ஒரே புழுக்கம் போங்க! இந்த ஊர்ல பேங்க்ல போயி டீல் பண்ணிட்டு வர்றதுக்கும் அங்கே நடந்துக்கிறதுக்குதுக்கும், ம்.. இன்னும் எத்தனை நூறு ஆண்டாகுமோ இந்த மாதிரி வசதிவர! நம்ம பொது மக்களும் வீணா இது மாதிரி காலவிரயம் செலவு பண்ணமா இருக்க!

அது மட்டுமில்ல, இன்னொரு விநோதமான அனுபவும் ஏற்பட்டுச்சு, அதுவும் நம் அழகு சென்னையிலே! நான் நம்ம படிச்ச படிப்பை ட்ரான்ஸ்கிரிப்ட் வாங்கலாமுன்னு மெட்ராஸ் யுனிவர்சிட்டி போனப்ப, அவங்க டிடி எடுத்துட்டு வாங்க, உங்களுக்கு கொடுக்குறோமுன்னாங்க. அந்த பல்கலைகழக வளாகத்திலே இருந்த் ஸ்டேட் பேங்க் ரொம்ப கும்பலா இருந்ததாலே, பக்கத்திலே இருந்த எழிலகத்தில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரான்சுல போயி எடுக்கலாமுன்னு போனா, பேங்கு வாசல்லயே மிராசு மாதிரி ஒருத்த்ரு உட்கார்ந்துக்கிட்டு, யுனிவர்சிட்டிக்கு டிடி எல்லாம் தரமாட்டோமுன்னு அடாவடி பண்ணிக்கிட்டிருந்தாரு! அப்பறம் நான் சொன்னேன், பேங்க்ன்னு இருந்த இந்த பிஸினஸுக்கு தான் டிடி தருவோங்கிற கட்டுபாடு எல்லாம் இருந்ததா நான் கேள்விபடலேயே, அதெப்படி, அதான் டிடி எடுக்க கமிஷனா பணம் வாங்கிக்கிரீங்கள்ள, அதுக்கு சேவை செய்ய வேணாமான்னு கேட்டோன்ன, அவரு சொல்றாரு, சார் இன்னைக்கு ஸ்டாப்பு கம்மி, அதுவும் டிடி போடறது ஒரு அம்மாதான், இப்ப லஞ்சு டைம், இரண்டரை மணிக்கு மேலே வாங்க, முடிஞ்சா பார்க்கிறோம்முன்னாரு! ஏங்க நாலு மணி வரை உங்க பிஸினஸ் அவர் ஆச்சுங்கெளேன். சாப்பாட்டு சமயத்திலேயும் வேற யாராவது பணம் வாங்க கொடுக்க, டிடி பண்ண டெல்லர் இருக்கனுமேன்னேன். நீங்க என்னா இவ்வளவு சட்டம் பேசிருங்கன்னாரு! நான் சொன்னேன், நான் ஒரு காரியமா வந்திருக்கேம், யுனிவர்சிட்டியிலே மூணு மணிக்கு டிடி கவுண்டரை மூடிடுவேங்கிறாங்க, அதுக்கு முன்னே டிடி எடுத்து கொடுக்கணும் சொல்லி, அவருக்கிட்ட டிடி சிலிப்பை வாங்கி பில்லப் பண்ணி வரிசையிலெ நின்னா, சரியா நம்ம நேரம் வர்றப்ப, உள்ள உட்கார்ந்த டெல்லர் அம்மனி, இது சாப்பாட்டு நேரமுங்க, இரண்டரை மணிக்கு மேலே தான் உங்க டிடி பண்ண முடியுமுன்னு போயிட்டாங்க! எவ்வளவு எடுத்து சொல்லியும், ஒரு பிர்யோசனமில்லை! கடைசியிலே அந்த அம்மா சீட்டுக்கு இரண்டே முக்காலுக்கு வந்து என் டிடியை பண்ணி கொடுத்து, அரக்க பரக்க ஒடி அதை யுனிவர்சிட்டியிலே ஜமா பண்ணி, கடைசியிலே அட்டஸ்டேஷன் வாங்கிட்டு வந்தேன்! எவ்வளவு ஸ்டெரஸ் பார்த்தீங்களா, அந்த நாலு மணி நேரமும் மன அழுத்தத்தோட எல்லா வேலையும் செய்ய முடிஞ்சுச்சு, அதையே இந்த ஊர்ல எப்படி நினைச்சு பார்த்தேன், இந்த மாதிரி ஆளா பறக்க வேணாம், எல்லாம் சொகுசா முடிஞ்சிடும், போயி கஸ்டம்ர் சர்வீஸ் கவுண்டரு முன்னாடி நின்னா நொடிப்பொழுதிலே எல்லா வேலையும் முடிஞ்சுடும்!

ஆக யுனிவர்சிட்டி டிடி பண்ணமாட்டேன்னு அடாவடி பண்ற மிராசுங்களை நம்ம ஊரு பேங்குங்கள்ள தான் பார்க்க முடியும் அதுவும் பொது மக்கள் சேவைக்காக உண்டாக்க பட்ட இந்த வங்கிகள் பொது மக்கள் சேவையை பெரிதுன்னு நினைச்சு செய்றாங்களாங்கிறது சந்தேகம் தான். ஒரு சில சேவையை செய்ய மாட்டேன் போன்னு சொல்றதாலே பேங்குக்கு நஷ்டம் இல்லையா, பாவம், கஷ்டபட்டது நம் மாணவர் செல்வ்ங்கதான். பரீட்சைக்கு பணம் கட்ட டிடி எடுக்க வந்தா இந்த விரட்டு, பணம் எடுக்க வரும் கடைநிலை தொழிலாளிகளை என்னமோ, இவங்க பாக்கெட்ல இருந்து தர்றமாதிரி விரட்டி விரட்டி பணம் தர்றதை எல்லாம் பார்க்கும் போது, படிக்காத பாமற மக்களை எப்படி கஷ்டபடுத்திறாங்கன்னு தெரியுது.

இது பேங்க்ன்னு மட்டுமில்லை, அரசாங்க பொது சேவைகள் எதுவானாலும் அல்லல் படும் நம் இந்திய மக்களுக்கு எப்பொழுது தான் விமோசனம் வர்றப்போகுதோ. இந்த ஊர்ல எல்லாருக்கும் ஆயுசு நீண்டகாலம் ஏன்னு நினைச்சு பார்த்தா, இந்த ஸ்டெரெஸ், மனப்புழுக்கம் இல்லாத நிம்மதியான வாழ்க்கை தான்! அந்த நிம்மதி குலைவதால, மருத்துவ வசதிகள் எவ்வளவு இருந்தும் நம்முடைய ஆவரேஜ் ஆயுசுக்காலம் என்னவோ கம்மி தான் போங்க! இது தான் இந்த தடவை ஊருக்கு போயிருந்தப்ப நான் கண்ட நிதர்சன உண்மை! என்னதான் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றமுன்னு கொக்கரிச்சாலும் நம்முடய அடிப்படை வச்திகள், சேவைகள் என்னவோ இன்னும் அப்படியே தான் இருக்கு! என்ன பண்றது, 'இந்திய நாடு என் நாடு, இந்திய மக்கள் என் மக்கள்!' நம்மவர் விமோச்சனம் வர்ற இன்னும் எவ்வளவு காலம் புடிக்குமோ?

Friday, June 09, 2006

கணக்கு பார்த்து வருவதா காதல்?

ரொம்ப நாளா இந்த ஊர்லயும், ஏன் நம்ம ஊர்லயும் அதிகமா பேசப்படும் ஒன்னு இந்த டேட்டிங்! அதென்னா டேட்டிங் அப்படின்னு கொஞ்சம் ஆராயத்தோணுச்சு. நமக்கு பருவம் வந்த காலகட்டத்திலே, ஏன் ஆதி தொட்டு சொல்வது, 'கண்டதும் காதல்'ங்கிற கதை தான்! அதுவும் சினிமால கொஞ்சம் மேலே போய் காணமல் காணுவதும் காதல்னு புது புது கான்செப்ட்ல காதல் பத்தி சொல்லி கொடுத்துருக்காங்க. அப்படி இருக்கிறப்ப இப்ப என்னாது இது 'டேட்டிங்'ன்னு ஒன்னு புதுசா இந்த மேலை நாட்டு மக்கள் கத்து கொடுத்த, இல்ல ஜஸ்ட் போட்டு கொடுத்த கான்சப்ட் வச்சக்கிட்டு நம்ம ஊரு சின்னசிறுசுங்க அலையது, அது என்னா உண்மையிலே, அதென்ன வெறும் சின்ன சிறுசுங்களுக்கு மட்டுமா, இல்ல முத்திப்போன பெருசுகளுக்கும் உண்டா, எல்லாத்துக்கும் மேலே நம்ம கலாச்சர பாணிக்கு ஒத்து வரக்கூடிய ஒன்னான்னு யாருக்கும் தெரியுமா? மொத்தத்திலே என்னா இதுன்னு பீராஞ்சப்ப சில உண்மைகள் விளங்கிச்சு! ஆக நாம் கொண்டாடும் காதலுக்கு இது முற்றிலும் எதிரான ஒரு கான்செப்ட், நம்ம ஊரு கலாச்சார கண்ணோட்டத்தோட பார்த்தா, ஆனா சில நல்ல உண்மைகளும் தெளிவாகும், இதோட முழு அர்த்தம் புரிஞ்சு, ஐடியலா அதன் சாராம்சம் படி நடந்தா, வெற்றிகரமான வாழ்க்கை அமைத்துக் கொள்ளவும் வழிவகுக்கும்! ஆக அதப்பத்தி கொஞ்சம் பார்ப்போமேன்னு தான் இந்த பதிவு!

(ஒன்னு சொல்லிக்கிறேன், ஏற்கனெவே, நான் ஒரு பதிவில பதில் சொன்ன மாதிரி, திருடுனாதான் திருட்ட பத்தி பேசமுடியும்னு அரத்துறவங்களுக்கு, இது எதுவும் என் அனுபவ முறையில் வந்த கண்ணேட்டமில்லை, படிச்சு, அறிஞ்சு, சில உண்மை மூளைக்கு என்னா எப்படின்னு பட்டதாலே வந்த கண்ணோட்டங்கள் தான்! நமக்கும் இந்த டேட்டிங் எல்லாம் எட்டு காத தூரம்..ஹி,ஹி.., அப்பறம் வீட்ல யாரு அடி வாங்கிறது, அதுனாலே இந்த டிஸ்கிலெய்மர்!)

மொத்தத்திலே இந்த டேட்டிங்க்கு என்னா விளக்கம் கொடுக்கிறாங்கன்னா, இந்த ஆங்கிலத்திலே சொல்லுவாங்களே 'Courtship'ன்னு அதோட அங்கம்கிறாங்க, அதாவது இதை தமிழில், இந்த 'Courtship'ஐ சொல்லனுமுன்னா, 'திருமணத்தை முன்னிட்டு காதலாடுதல்'னு சொல்லலாம். அதாவது திருமணம் செய்ய போற ஒரு ஆணும் பெண்ணும், அதற்கு முன் சந்தித்து கொள்வது, அது நேருக்கு நேராக முக்காவாசி நேரம் அமையும், இல்ல, நம்ம சினிமாவிலே வர கதைகள் படி, இன்டெர்நெட்டில் சந்தித்து காதலாடுவது, இதை நம் கதிர் படம் எடுத்தாரு 'காதலர் தினம்'ன்னு, அப்படி காதலாடுவதுக்கு வர்ச்சுவல் டேட்டிங் ('virtual dating')ன்னு பேராம்! அப்புறம் போனிலே கடலை போட்டு காதலாடுவது, இதைக்கூட வச்சு முரளி நடிச்ச படம் ஓன்னு வந்திச்சே, தெரிஞ்சவங்க ஞாபகமிருந்தா சொல்லுங்க!, அப்புறம் கடுதாசி போட்டே காதாலாடுவது, அகத்தியன் செஞ்ச 'காதல்கோட்டை' சினிமா மாதிரி, அப்புறம் கவிதை, பாட்டு எழுதி காதாலாடுவது, இது மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு! அப்புறம் வெறும் பரிசுப்பொருட்களா கொடுத்து மனதை கவ்ர்ந்து காதலாடுவது, ஆக இதெல்லாம் வேறு வேறு வழி முறைகள்!

அப்படி பார்க்கிறப்ப, இந்த டேட்டிங் என்பது, இந்த மேற்கத்திய கலாச்சாரத்திலே, தனக்கு பொருந்தி வரக்கூடிய பார்ட்னர்களை நேரில் சந்திச்சு, பேசி, பழகி, பல விஷயங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுக்கிறதுங்கிறாங்க! இந்த டேட்டிங்கோட நோக்கம் என்னான்னா, சந்திக்கிற ஆண் பெண் இருவரும் பரஸ்பரம் அறிந்து கொண்டு மேற்கொண்டு உறவுகளை துவக்கலாமா அப்படின்னு யோசிச்சு முடி வெடுக்க தான். ஆனா இதோட மொத்த அர்த்தமும், ஆளை தேத்தி செக்ஸ் வச்சக்கத்தான்னு ஒரு தப்பான அபிப்பராயம் எல்லா மக்கள் கிட்டயும் இருக்கு! குறிப்பா நம்மூரு மக்கள்கிட்ட, சின்னசிறுசங்கள் அந்த நோக்கம் தான் மேலிட்டிருக்கு. மேற்கொண்டு பெரியவர்களும், சின்னசிருசுங்க டேட்டிங்னு போன இந்த மாதிரி போயி வாயிவயிறுமா வந்து தொலைஞ்சிடதான்னு ஒரு தப்பு அபிப்ராயம் வச்சி இருக்காங்க. ஆனா இதன் முக்கிய அம்சம் என்னான்னா, அதுவும் இந்த டேட்டிங் மீட்டிங்ல அவங்க பேச தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்குன்னு சொல்றாங்க!

அதாவது, இரண்டு பேரும் பேசி பழகி தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் என்னானா: ஒருத்தர் ஒருத்தர் குணாதிசியங்கள், நேர்மை, நாணயம் (Character and integrity) போன்றவை, மற்றும் விருப்பு, வெறுப்புகள்(Interests) , பழக்க வழக்கங்கள்(Habits) ! எல்லா விஷயங்களிலும், அது சினிமாவிலிருந்து, கடவுள், ஆன்மீகம், சொந்தம், பந்தம், படிப்பு, அப்படின்னு எல்லாத்திலேயும் தம் தம் மனப்போக்கு (Attitudes), அப்புறம் எது எதுல்ல அவங்க முக்கியத்துவம் (Priority) கொடுக்க ஆசைப்படுவாங்கன்னு! அதுவுமில்லாம அனைத்து கொள்கை மற்றும் செயல்பாடுகளில் தாங்கள் கொண்ட மனமுதிர்ச்சி (Maturity), பிறகு எதில் எல்லாம்,அதுவும் சிலபல வாய்ப்புகள் வரும் பட்சத்தில் எதில் முன்னுரிமை (Preferences) கொடுப்போம் என்பதிலிருந்து, சாமி பூதம் பத்தியும், அரசியல் கண்ணோட்டம், எதிர்பார்ப்புகள், லட்சியங்கள், கடமைகள், குடும்ப சுமை, தாம் வழி வந்த பாரம்பரியம், வழிமுறைகள், தம் தம் வயசுக்குண்டான இடைவெளி, அதனால் ஒருவருக்கொருவர் முதிர்ச்சியின் பலனாய் பரஸ்பரம் விட்டு கொடுக்கக்கூடிய தன்மைகளை அறிந்து கொள்வது, அப்புறம் எப்படி முன்னேற வழி அமைத்துக்கொள்வது, மென்மேலும் வளர்ச்சி அடையும் வழிகளில் ஈடுபட உண்டாகும் திட்டங்களை பேசி ஒத்துக்கொள்வது, ஏன் நிதிநிலை சீர்படுத்திக்கொள்வது, ஒருத்தொருகொருத்தர் எப்படி கருத்து வெளிப்படுத்துகொள்ள முற்படவேண்டும் எல்லாம் தெரிந்து கொள்வது. கடைசியா எப்படி செக்ஸ் வச்சிக்கலாம், என்னென்ன ஆசை, காமக்கலை அறுபத்து நாலுல என்ன தெரியும் தெரியாதுன்னு பேசி தெரிஞ்சுக்கிட்டு, கல்யாணம், கச்சேரின்னு கொண்டாடிட்டு, ஏன் எப்ப புள்ள பெத்துக்கலாம்னு திட்டம் போடற வரைக்கும் பேசி தெரிந்து கொள்ள தான் இந்த டேட்டிங். ஆனா, நான் கடைசியா சொன்ன காமக்கலை அதிகம் பேசி, கணக்கு பண்ணி காரியம் முடிக்க தான் டேட்டிங்னு ரொம்ப பேரு நினைச்சிக்கிட்டிருக்காங்க!

ஆக நான் மேலே சொன்ன அத்த்னை விஷயத்தையும் ஆராஞ்சு, ஒத்து வந்தா மேற்கொண்டு உறவுக்கு வழி கொடுப்பது இல்லையேல் 'low compatibility'ன்னு சொல்லி ஒருத்தொருக்கொருத்தர் டாட்டா காட்டிட்டு பிரிஞ்சு போயிடுறது. நம்ம மெளலி ஒரு படம் எடுத்தாரே, சுத்தரவரைக்கும் இரண்டு பேரும் சுத்திட்டு,ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு, அப்புறம் ஒருத்தொருக்கொருத்தர் கர்சீப் மாத்திக்கிட்டு பிரிஞ்சு போவாங்கல்ல, அந்த மாதிரி கதையாயிடுமாம்! அதுவே ஒத்து வந்தா கல்யாணம் குழந்தைன்னு ஆனப்புறமும், டேட்டிங் போய், ஒருத்தொருக்கொருத்தர் அந்நியோயமா இருக்கிறது இன்னும் நல்லதுன்னு சொல்றாங்க! (ஹலோ, நான் சொல்றது கல்யாணம் கட்டிக்கிட்ட புருஷன் பொண்டாட்டிங்க இரண்டு பேரும் கல்யாணத்துக்கப்பறமும் டேட்டிங் போறதை, தேத்தின பார்ட்டிங்களோட இல்லை-:))ஆக டேட்டிங்கிறது சின்னசிறுசுங்களுக்கு மட்டுமில்ல, பெருசுங்களுக்கும் உண்டுன்னு இப்ப புரிஞ்சுதா! ஆக, இந்த டேட்டிங்கிற பதம் எதை குறிக்கிதுன்னா, இரண்டு பேருக்கான உறவுமுறைகள் ஒருத்தொருக்கொருத்தர் ஒரு தேதியில் சந்திப்பதே! அதுவும் 'ஒருவனுக்கு ஒருத்தி'ங்கிற நம்மூரு கான்செப்டை வழுவாக்கிற மாதிரி ஒரு நிகழ்ச்சி, ஆனா நம்மலை மாதிரி ஆணித்தரமா சொல்லி அடிக்காம! ஆங்கில விளக்கம் அப்படிதான் இருக்கு,'These terms can imply different degrees of commitment and monogamy, but with some ambiguity'

ஆனா இது நம்ம ஊருக்கு ஒத்து வராத ஒரு பணால் விஷயம்! நம்ம கலாச்சாரத்துக்கு, இந்த கல்யாணத்துக்கு முன்னே சுத்திர இந்த 'Courtship'ங்கிற விஷயம் எல்லாம் நடக்காத காரியம் (இப்ப அது கொஞ்சம் மாறிக்கிட்டு வந்தாலும்), ஏன்னா, அப்பன் ஆத்தா பாத்து வைக்கிற பையன் புள்ளையை கட்டிக்கிட்டு, arranged marriages ங்கிற கான்செப்ட்ல வர்ற உறவுமுறைகளை ஏற்படுத்திக்கிட்டு, நான் முன்னே சொன்ன அத்தனை விஷயங்களையும் கல்யாணத்துக்கப்பறம் 'explore' செஞ்சு பாத்து, அதில சில சமயம் ஒத்து போய், பெரும்பாலும் ஒத்து போகம, காம்பரமைஸ் பண்ணி வாழ்ந்துக்கிட்டோ, இல்லே, உனக்கு வேணா, எனக்கு வேணான்னு, அறுத்து விட்டுக்கிட்டு போற கதை தான் ஜாஸ்தி. சில சமயம் விளைஞ்சதுங்க, காதல்ங்கிற வலையிலே விழுந்து நான் சொன்ன அத்தனை 'compatibility'கள் எதையும் காதலிக்கறப்ப 'explore'பண்ணாம , 'உணர்ச்சி குளிகைகளின் உச்சம்', 'கணக்கு பார்த்து வருவதா காதல்'னு சொல்லி திரிஞ்சுக்கிட்டு கடைசியிலே கல்யாணம் பண்ணி, மறுபடியும் காம்பரமைஸ் இல்லை, வெட்டிக்கிட்டு போற ஒன்னு தான் ஜாஸ்தி நடக்கிறது!

ஆனா அதுவே இந்த டேடிங்கிற கான்செப்ட், இப்ப நம்ம ஊர்ல கொஞ்சம் கொஞ்சமா வேறே நோக்கத்திலே போறதும் சரியில்லை! சரி இதெல்லாம் சரி, இவ்வளவு பார்த்து பேசி அடுக்கி, எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணிக்கிற மேலை நாட்டு கலாச்சாரத்திலே, அப்ப ஏன் பெரும்பாலும் கல்யாணங்கள் வெற்றியாவதில்லை, அங்கேயும் இந்த டைவர்ஸ் ரேட், நம்மலை விட அதிகமா இருக்கே,ஏன், அப்படின்னு நீங்க கேட்கிறது புரியது. என்ன தான் 'compatibility match'ன்னு பார்த்து தெரிஞ்சு, அறிஞ்சாலும், கடைசியிலே அது 'workout' ஆகிறதில்லை! பிறகு நம்ம பண்ணிக்கிற காம்பரமைஸ் அவங்க பண்ணிக்கிறதில்லை, அது தான் காரணம்! மேற்கொண்டு ஒருத்தொருக்கொருத்தர் சாகும் வரை துணையா இருப்போம், நமக்கு நாமேன்னு இருந்துக்கிறதில்லை, இன்னிக்கு நீ, நாளைக்கு யாரோன்னு தான்! நான் எல்லாரையும் சொல்லல, பெரும்பாலும் அந்த மனோபாவத்தோட நடக்கிறதாலே, அதை இந்த சமூகம் ஒத்துக்கிறதாலே, அடுத்தடுத்து துணை தேட போய்டுறாங்க! திருப்பி டேட்டிங், துணை தேடுவது தேர்ந்தெடுப்பதுன்னு போறதாலே கமர்சியலா டேட்டிங் சர்வீஸஸ் எக்கச்சக்கமா இங்கே தோன்றி, காசு சம்பாரிக்கிறதுல்ல குறியா இருக்காங்க, அதை பார்க்கம் பொழுது இந்த டேட்டிங்கின் அடிப்படை நோக்கம் எதுக்குன்னு இருந்ததோ, அது மாறி வேற விளக்கத்து போயிடுது! ஆனா, இது நமக்கு இது முற்றிலும் ஒத்து வராத ஒன்னு!

ஆனாலும், நாம் கொள்ளும் காதல், இது போன்று கணக்கு வழக்குகளை முன்னின்று அமையாமல், 'வாழ்வோ, சாவோ, ஒருத்தொருக்கொருத்தர் துணையாக இருப்போம், எவ்வளவு கஷ்டம் வந்தாலும்'னு, சொல்லிக் கொண்டு வாழும் காதல்களே கடைசியில் ஜெயிக்கின்றன! ஆக கணக்கு பார்த்து வருவதில்லை காதல், நீங்க என்னா சொல்றீங்க?

Wednesday, June 07, 2006

சம்பல் ராணியின் காதலர் தின படுகொலை!

என்ன ராஜா ராணி கதை சொல்லப்போறேன்னு நினக்கிறீங்களா? ஒருவிதத்திலே அவங்க ராஜா ராணி தான்! அதாவது ஆங்கிலத்திலே சட்டத்திக்கு புறம்பா செயல் படுபவர்களை 'outlaw persons'ன்னு சொல்வாங்க, இன்னும் ரொம்ப கலோக்கியலா போயி 'Bandit'ம்பாங்க! அப்படி பட்ட 'Bandit Queen', 'Bandit King' தான் இவங்க! ராஜாவானவரு நம்ம தெக்காலே சத்தியமங்கலம் காட்டிலே ஆட்சி புரிஞ்சவரு, ராணியம்மா வடக்காலே, சம்பல் நதிக்கு பக்கத்திலே மத்திய பிரதேசத்துக்கும் உத்திரப்பிரதேசத்துக்கும் இடையே உள்ள பகுதிகளில் வாழ்ந்து ஆட்சி புரிஞ்சி, கடைசியிலே டெல்லி போய் பார்லிமெண்ட்லேயும் எம்பியா ஆனவங்க. யாரை சொல்றேன்னு இன்னும் தெரியல்லையா, அதான் நம்ம சந்தனகடத்தல் வீரப்பனையும், சம்பல் கொள்ளைக்காரி பூலான் தேவியும் தான் அவங்க!. இவெங்க ரெண்டு பேருமே, நம்ம எல்லாம் உதாரணம் காட்டி பேசுவோமே, ராபின் ஹுட், அவரு ஸ்டைல்ல கொள்ளை அடிச்சிட்டு, அதான் பணக்காரன்கிட்ட கொள்ளை அடிச்சி ஏழைக்கு தர்மம் பண்ணவங்க!

இவெங்க ரெண்டு பேரும் பிரசித்தம் எல்லாருக்கும் தெரியும், அதிலேயும் சினிமா புடிச்சு காமிச்சாங்க வீரப்பன் கதையை 'கேப்டன் பிரபாகரன்'னு தமிழ்ல. அப்படியே சுயசரிதையா வரல்லேனாலும் கொஞ்சம் தழுவி வந்தது. அதே மாதிரி வடக்கிலே, ஹிந்தியில்லே வந்த படம் தான் 'Bandit Queen', அதாவது 'பேண்டிட் குவின்'. பொதுவா வீரப்பன் கதை நல்லா தெரிஞ்ச அளவுக்கு, பூலான் தேவி கதை உங்க எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்குமான்னு எனக்கு தெரியலை. ஆனா இந்த படம் பார்த்தவங்களுக்கு கதை நல்லா தெரிஞ்சிருக்கும், மத்தவங்களுக்கு, பூலாந்தேவி கொடுமையான கொள்ளக்காரிங்கிற அளவோட தான் தெரிஞ்சிருக்கும்!

இதிலே விஷேஷம் என்னான்னா, இரண்டுபேருமே யாருமில்லாத காட்டு பகுதிகளில் இருந்து ராஜ்யம் செஞ்சவங்க, அதிலேயும் வீரப்பன் இருந்தது நம்ம சத்தியமங்கலத்துக்கு பக்கத்திலே இருந்த அடர்த்தியான காட்டுப்பகுதி, ஆனா பூலான் தேவி அப்படி இல்லே, சுத்துப்பட்ட இடம் காடுகளான பள்ளத்தாக்கா இருந்தாலும் அடர்த்தியான காடுகள் நிறைந்த இடமில்லை. ஆனா எல்லாமே கிரமங்கள் அதிகம் அடங்கிய ரொம்ப ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒதுக்குப்புறங்கள். இரண்டு பேருமே காளியை தெய்வமா கொண்டாடினவங்க, அதே மாதிரி, பேரை கேட்ட மாத்திரத்திலே அழுதபுள்ளை வாயமூடும்ங்கிற இமேஜை கொண்டவங்க, அவ்வளவு பயங்கரமானவங்க. அப்பறம் அடிக்கிற கொள்ளையிலே ஏழைபாளைங்களுக்கு உதவி செஞ்சு அவங்க மதிப்பும், அன்பும் ஆசியம் பெற்றிருந்தாலும், இவங்க பொது சட்ட விரோதிகளா இருந்து, சமூக இறப்புன்னு ('Civil death') சொல்லக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவங்க! இருந்தாலும் சட்டத்தின் பிடியில் அவ்வளவு சுலபமா சிக்கல, ஏன்னா, அவங்களை காப்பத்தினது சுத்துப்பட்ட கிராம மக்கள்!
ஆனா வாழ்க்கையிலே நிறைய துன்பத்தை அனுபவச்சவங்க, அதிலேயும் பூலான் தேவி கதை ரொம்பவும் வருத்தப்பட வைக்கக்கூடியது! அவங்க செஞ்ச படுகொலையும் பேசபட்ட ஒன்னு, என்னான்னு பார்ப்போமா!

இந்த பூலான் தேவி பொறந்தது 'கெளவ்ரா கா புருவா'ங்கிற ஒரு கிராமம், யமுனை நதிக்கரையிலே மீன்பிடிக்கும் கீழ்சாதியான மல்லாங்கிற சமூகத்தை சேர்ந்த ஒரு மீனவ குடும்பத்தில்! அந்தம்மா சந்தித்தது எல்லாம் ஏழ்மை, அடி, திட்டு, கற்பழிப்பு, பெண்ணியத்துக்கே இல்லாத களங்கம் இது தான்! பூர்வீகம்னு பார்த்தா அவெங்க ஏழைப்பட்ட ஜென்மம் இல்லெ, பதினெஞ்சு ஏக்கர் நிலம் இருந்தாலும் அத்தனையும் புடுங்கிட்டு அம்போன்னு நடுத்தெருவிலே விட்டது அந்தம்மா பெரியப்பா பிகாரி! அந்தம்மா அப்பாரு ஒரு வாயில்லா பூச்சி! அம்மாகாரி தையிரிமா பொம்பளை புள்ளங்களை ஆம்பிளை மாதிரி வளர்த்தாங்க! அதனால சின்ன வயசிலே சாதி கொடுமை, அநியாயம் எதா இருந்தாலும் துடுக்கா பேசி, சாதுர்யமா வளர்ந்து திரிஞ்ச பொண்ணு! அதுவும் பத்து வயசிலே துணிமணி ஏதுமில்லாம தைரியமா, யாருக்கும் கவலைப்படமா, பெண்பிள்ளைங்கிர கூச்சிமில்லாம, திறந்தமேனியா குளிச்சப் பொண்ணு!

அப்படி துடுக்கா இருந்த வேளையிலே, ஒரு நாள், அவங்க பெரியப்பா செத்து போய், அவரு பெரிய மகன், மாயாதின் திடீர்னு அவங்க வீட்டு பக்கத்திலே இருந்த வேப்ப மரத்தை வெட்டி சாட்சி எடுத்துட்டு போனதை எதிர்த்து, அவரு அந்த மரங்கொண்டு போன வண்டியிலே பூட்டின மாட்டு மூக்கனாங்கயிரை மடக்கி புடிச்சி, கேள்விகேட்டு சண்டை போட்டு கேவலபடுத்தினதை மனசில வச்சி, பூலான் தேவியை பதினோரு வயசிலேயே கட்டி கொடுத்துட்டாரு, ஒரு தூரத்து கிரமாத்து வயோதிகனுக்கு! அந்த சின்ன வயசிலே குடும்பம் என்னா பண்ணனும்னு தெரியாமா! அப்ப ஆரம்பிச்சித்து பலாத்காரம் பிறகு வந்த நாட்களுக்கு ஆரம்பமா! 'அந்தாளுகிட்ட இருந்த பாம்பை பார்த்து பயந்தவ'ன்னு தன் கணவர் குறியை பத்தி சொன்னதா சுயசரிதையிலே ஒரு குறிப்பு வரும்! அப்ப துரத்திவிட்டோ, இல்லை தானா ஒடி வந்தோ தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தப்ப, வாங்கிய திட்டு, அவமானத்துக்கு எந்த அர்த்தமும் புரியலை அந்த சின்னப்பொண்ணுக்கு அப்ப!

அப்பறம் துடுக்கா பேசி, அடங்காபிடாரி பேரு எடுத்தாச்சு. எல்லாமே இந்த சாதி கொடுமைகளால வந்தது. அந்த கிராமங்கள் இருந்த உயர்ந்த ஜாதி தாக்கூர் என்கிற இனத்தாலே இழைக்கப்பட்ட கொடுமைகளை துடுக்கா தட்டி கேட்டதாலே இந்த பட்டமும் வேதையனையும். ஒன்னுக்கு பத்தா தண்டனை வழங்கிட்டாங்க அப்ப அந்த உயர்சாதி தாக்கூர் ஆளுங்களும் ஊரு பெருசுங்களும் சேர்ந்து! அப்படி இருந்தப்பதான், அந்த கிராமபஞ்சாயத்து தலைவர் பையனால, ஒரு நாள் தன் தாய் தகப்பன் முன்னிலையில் கற்பழிக்கபட்டார்! அதை எதிர்த்து பக்கத்து கிராம தலைவரை கூப்பிட்டுட்டு போய் அந்த பஞ்சயாத்து தலைவர் வீட்ல போட்ட ரகளையாள, பிறகு பஞ்சாயத்துக்கூடி திரும்பவும் பூலான் தேவியை ஒரு கிழவனுக்கு கண்ணாலம் கட்டி கொடுக்க தீர்மானிச்சாங்க! இனி என் வாழ்க்கையை தீர்மானிச்சிக்க எனக்கு தெரியும்னு அவங்க பஞ்சாயத்தை போங்கடா நீங்களும் ஒங்க பஞ்சாயத்துன்னும் வந்ததாலே, ஊரு பெருசுங்கெல்லாம் ஒன்னாக்கூடி திருட்டுப்பட்டம் கட்டி போலீஸ்ல புடிச்சி கொடுத்துட்டாங்க, அங்கேயும் அடி மிரட்டல், கற்பழிப்பு! சரியான ஆதாரமில்லாம வெளியிலே விட்டுட்டாங்க போலீஸ்!

போலீஸ்ல புடிச்சிட்டு போய் ஜெயிலுக்குப்பெயிட்டு வந்தா என்ன இருக்கும் ஊர்ல மரியாதை, அதுவும் பொட்டப்புள்ளயாயிட்டா கேட்கவேணாம். நாயவிட கேவலமா நடத்தினாங்க! ஊர்ல இருக்கிற கிணத்து தண்ணியை குடிக்கக்கூட காசு கொடுக்க வேண்டிய நிலமை, ஏன்னா, அவங்க மொண்டு குடிச்சா கிணத்து தண்ணி அசுத்தமாயிடும்னு ஊர் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிச்சு! அப்படி போய்கிட்டிருந்தப்ப தான் ஒரு திருப்பு முனை வந்திச்சு! அதாவது காளியின் அவதாரம் எடுத்தது! அதை இப்படி அந்தம்மா சொல்லுது தன் சுய சரிதையிலே!

என் தந்தையோட வேலை செஞ்சப்ப, செஞ்ச வேலைக்கு சரியா கூலி கொடுக்கல்ல ஒரு ஆளு, அதுவும் பெரியப்ப மகன் மாயாதீன் சொல்லி, அப்பதான் நான் சுத்தியளை தூக்கி, ஆக்ரோஷமா 'தேவடியா பய நாயே, காசு கொடுக்கல, உன்னை கண்டதுண்டமா வெட்டி பொலி போட்டுடுவேன்'னு கத்தி என காளி ரூபத்தை காமிச்சோன காசு கொடுத்தான் அந்தாளு! அடுத்த நாளு, பெரியப்பா மகன் வீட்ல போயி, என்கிட்ட துப்பாக்கி இருக்கு சுட்டு தள்ளிடுவேன்னு ஆம்பிளையா வீரமா போய் பேசின அந்த நொடியிலேருந்து 'நான் நிம்மதியா மூச்சிவிட ஆரம்பிச்சேன், தலையை நிமிர்த்தி கிராமத்திலே நடைப்போட்டு வந்தேன். எப்பெல்லாம் எனக்கு தோணுதோ, அப்பெல்லாம் பயமில்லாம ஆத்துக்கு குளிக்கப்போவேன்! அப்பதான் என்னோட பெற்றோர்கள் கிட்ட சொன்னேன், என்னையை இன்னையோட தலை முழுகிடுங்கன்னு!

திரும்பவும் கற்பழிக்க வந்த உயர்ஜாதி தாக்கூர் ஒருத்தனை எதிர்த்து மரக்கட்டையாலே அடிச்சு துரத்தினோன எனக்கு ஒரு புது சக்தி வந்துச்சு, எல்லா கொடுமைகளுக்கும் எதிர்த்து குரல் கொடுக்க! ஊரிலே இருக்கிற அத்தனை பேரையும் உங்களுக்கு இந்த மாதிரி அக்கா தங்கச்சி, அம்மாக்களை எனக்கு ஆளான கொடுமைகளை ஆளாக்க விடுவீங்களான்னு கேட்டு போராடினப்ப வந்தது எல்லா தைரியமும்! இதெல்லாம் பார்த்துட்டு எனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சுன்னு என் வீட்ல எல்லாரும் நம்ப ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா நான் எனக்குள்ளேயே ஒரு காளி ரூபம் எடுத்துக்கொண்டிருந்தேன்'

அப்ப தான் ஒரு நாள் நிஜமா ஒரு கொள்ளைக்கூட்டம் கிராமத்திலே வந்து கொள்ளை அடிச்சிட்டு பூலான் தேவியையும் சிறைபிடித்து சென்றது! அந்த கொள்ளைக்கூட்ட தலைவன் பாபு கஜ்ஜர்சிங் என்பவன் உயர்ஜாதியை சேர்ந்த தாக்கூர் இனத்தை சேர்ந்தவன், அவனுக்கு டெபுடியா இருந்த விக்ரம் என்பவன் பூலான் தேவியின் இனத்தை சேர்ந்தவன். அந்த கொள்ளைக்கூட்ட தலைவன் தொடர்ந்து தன் இச்சையை பூலான் தேவியிடம் தனித்துக்கொண்டான், ஆனால் விக்ரமோ அவனிடம் சண்டையிட்டான், உனக்கு அவளை மிகவும் பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள் என்று! உனக்கு என்ன அவள் மேல் அப்படி அக்கறை என்ற கேட்ட கஜ்ஜருக்கு, அவள் என் இனத்தை சேர்ந்தவள் என்பதால் என்றுகூறி, ஒரு நாள் அவனை சுட்டு கொன்று விடுகிறான். அவனை சுட்டு கொன்றதும் கொள்ளைகூட்டத்தினருக்கு பிடித்திருந்தது, ஏனென்றால் கஜ்ஜரால் கிராமத்து மக்களிடமிருந்து எந்த உதவியும் இல்லாததால், அவனின் செய்கைகள் அனைத்தும் பிடிக்காததால், விக்ரமை தன் தலைவனாக்கி கொண்டார்கள்!

அதறகு பின்னர், பூலான் தேவிக்கு துணையாக,ஆறுதலாக இருந்தவன் விக்ரம். பிறகு அவளின் காதலனாக மாறினான். பிறகு விக்ரமே பூலானை திருமணம் செய்து கொண்டான். அப்பொழுது தான் பூலான் தேவி முழுமையாக ஒரு ஆடவனின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கப் பெற்றாள்! அவளுக்கு துப்பாக்கி பிடித்து சுடுவதிலிருந்து, அனைத்து கொள்ளைக் கலைகளையும், கொள்ளை கூட்டத்தை வழிநடத்தும் தலைமை பொறுப்புகளயும் கற்று கொடுத்தான்.

எப்பொழுதுமே கொள்ளையர்களிடம் உள்ள கொள்கை என்னவென்றல் கொள்ளை அடிக்கும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கினை கடவுள், கோவில் மற்றும் சாதுகளுக்கு கொடுத்து விடுவதுண்டு. அவர்களுக்கு எப்பொழுதுமே கடவுள் மேல் அவ்வளவு நம்பிக்கை! அப்படி ஒரு விபூதி சாமியாரை பார்த்த பொழுது தான், அவர் கூறினார், உனக்கு காளியே துணையாக வந்துள்ளாள், அவளை காப்பது உன் கடமை என்று! அன்றிலிருந்து பூலானுக்கு கொள்ளைக்கூட்டத்தின் தலைவிக்கான அந்தஸ்த்து கிடைத்தது!

பிறகு ஒருமுறை தன்னை சிறுவயதில் திருமணம் செய்து, மானபங்கபடுத்தி, மாட்டுச்சாண அறையில் அடைத்தவனை அவர்கள் பிடித்து மரத்தில் கட்டி அடித்து சித்ரவதை செய்தனர். அவனை நிர்வாணமாக கிராமத்துக்குள் நடக்கவிட்டு, சாவின் விளிம்புக்கு அழைத்து சென்றனர். இது தான் இனி வயதான கபோதிகள் இளம் பெண்களை மணந்து கொடுமை செய்பவர்களுக்கு கொடுக்க போகும் தண்டணை, இல்லை என்றால் என் போன்ற பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாம் கிடைக்காது என்று கூறி, இது போன்று அநியாமாக பெண்களுக்கு கொடுமை இழைப்பவர்களை கொள்ளைக்காரி என்கிற போர்வையில் அடித்து கொன்று தன் நீதியை நிலை நாட்டினாள்!

இப்படி சென்ற பொழுது வழிப்பறி கொள்ளையை கற்று கொடுத்த தனது குருவான உயர்ஜாதி தாக்கூர் இனத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவனை போலீஸிலிருந்து விடுவித்தான் விக்ரம், பிறகு அவனையே தலைவனாக கொண்டான். ஆனால் அவனுக்கு பூலான் மீது சிறுது கண்! ஆதாலாலே இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு அவன் கீழ்ஜாதியான மல்லா இனத்தினரை கொடுமைபடுத்தியதால், கொள்ளைக்கூட்டத்தில் இருந்த அந்த மல்லா இனத்தினர், விக்கரமை விட பூலான் பின் அணி வகுத்தனர்! இதனாலேயே கொள்ளைக்கூட்டம் இரண்டு பிரிவாகப்பிரிந்தது! இப்படி சென்ற பொழுது ஒரு நாள் விக்ரமை ஸ்ரீராம் பின்னாலிருந்து சுட்டுவிட பூலானும் விக்ரமும் நேபாளாம் ஓடி விடுகின்றனர். விக்கிரம் சிகிச்சை பெற்று திரும்பியபின், ஒருமுறை சண்டையின் போது பூலான் அவனை ஸ்ரீராமை தூங்கும் பொழுது கொல்லும் படி சொல்கிறாள். ஆனால் பின்னாலிருந்தோ, தூங்கும்போதோ கொல்வது கோழை என மறுத்து விடுகிறான் விக்ரம். ஆனால் விக்ரமை அதே போல் பின்னால் இருந்து சுட்டு கொன்று விடுகின்றனர் ஸ்ரீராம் தாக்கூர் ஆட்கள். பிறகு பூலானை சிறைப்பிடித்து அவளை கிராமத்துக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு தான் நடக்கிறது கொடுமையிலும் கொடுமை!

பூலானை நிர்வாணமாக படகிலே ஏற்றி கரையினிலே இறக்கிவிட்டு கிராமத்தின் மத்திய பகுதிக்கு அழைத்து வருகின்றனர். எல்லார் முன்னிலையிலும் ஸ்ரீராம், இவளின் காதலன் விக்ரமை கொன்றுவிட்டேன் எனக்கூக்குரலிடுகிறான்! பிறகு இவளுக்கும் தண்டனை தரவேண்டுமா என்று கேட்டு, அவனை போன்ற அவன் தாக்கூர் இன ஆண்களை ஒவ்வொருவராக சென்று அவளை மானபங்க படுத்த சொல்கிறான். அதில் முதல் கற்பழிப்பு அவனுடயது! பிறகு அவளை அடித்து கொடுமைபடுத்தி, நிர்வாணமாக அனைவர் முன்னிலையிலும் ஊர்வலம் நடத்துகிறான். இந்த கொடுமை மூன்று வாரங்களாக தொடர்ந்து நடை பெறுகிறது! கடைசியில் நாயை விடக்கேவலமாக அவளை இழுத்து வீதியில் இட்டு தனக்கு கிணற்றிலிருந்து நீரை இரைத்து வரும்படி கூறுகிறான் அந்த ஸ்ரீராம்! அதற்கு மறுத்த பூலானை, உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு போர்வையையும் உருவி உதைத்து நிர்வாணமாக வீதி வலம் வரவைக்கிறான்! இது தான் அந்த கொடுமையிலும் கொடுமை! அந்த வேளையிலும் அவள் வேண்டியது துர்க்கையையும் காளியையும் தான் தனக்கு தன்னம்பிக்கையை தர! இவ்வளவும் நடந்த இடம் தான் பிகாமி என்ற அந்த கிராமம்!

பிறகு ஒரு வயோதிக பிரமணரால் காப்பற்றப்பட்டு, பிகாமியை விட்டு வெளியேறி காடுகளில் சுற்றி கடைசியில் ஆடுமேய்க்கும் பெண்ணால் சிகிச்சை அளிக்கப்படுகிறாள். அனைத்து ரணமும் ஆறிவிடும், ஆனால் ஸ்ரீராம் தாக்கூர் இழைத்த அந்த கொடுமையின் ரணம், பழிதீர்க்கும் வரை மாறாது என்ற வீராப்புடன் இன்னொரு கொள்ளையர் கூட்டத்தில் சேர்கிறாள் பூலான் தேவி! அப்பொழுது வந்து சேர்ந்த கூட்டாளி தான் மான்சிங்! அவனே அவளுக்கு லெப்டினட் போல துணையாக வைத்து அனைத்து கொள்ளைகளையும் புரிகிறாள். அவன் கொடுத்த சிவப்பு துணியைத்தான் நெற்றியில் எப்பொழுதும் கட்டிக் கொண்டிருந்தாள் பூலான் தேவி! அந்த சிவப்பு நிறத்தை தான் பழிக்கு பழி வாங்கும் சின்னமாக கருதினாள் பூலான் தேவி!

எங்கு பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ, பெண் உரிமைகள் நசுக்கப்படுகிறதோ, கற்பழிப்பு நடக்கிறதோ, வற்புறுத்தி கருக்கலைக்கப்படுகிறதோ, இல்லை பெண்களை தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்களோ, அங்கெல்லாம் முடிசூடா ராணியாக அவதாரம் எடுத்து கொடுமைகளை தட்டி கேட்டு, முக்கியமாக கொடுமை செய்யும் தாக்கூர் இன மக்களை தேடி பிடித்து காளிக்கு ரத்த பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவ்வாறு செய்வதை பெண்களுக்கும் தனக்கும் இழைத்த அநீதிக்கு உண்டான தர்மம் என்க் கருதினாள் பூலான் தேவி!

இப்படி கிராமம் கிராமமாக பூலான் தேவி என்றாலே பயத்திலே அலறி கொண்டிருந்த பொழுது தான், அவளுக்கு கொடுமை இழைத்த ஸ்ரீராமும் அவனது சகோதரன் லாலா ராமும் பிகாமி கிராமத்தில் ஒளிந்திருப்பதை கேள்விபட்டு தேடி வந்தாள், 1981, பிப்ரவரி 14, காதலர் தினப்படுகொலைக்கு! அவளின் ஆட்கள் மொத்த கிராமத்தையும் அடித்து நொறுக்கிய பொழுது எந்த கிணத்திற்கருகில் நிர்வாணமாக தான் கற்பழிக்கப்பட்டு சின்னா பின்னாமாக்க பட்டு தண்ணீர் எடுக்க சென்றாளோ அங்கே நின்று கொண்டிருக்கிறாள்! எங்கு தேடியும் ஸ்ரீராமும் லாலா ராமும் கிடைக்காததால் இளவயது தாக்கூர் ஆண்கள் முப்பது பேரை வரிசையாக நிறுத்தி துப்பாக்கி முனையிலே மிரட்டியும் அவர்கள் ஸ்ரீராம் லாலா ராம் மறைந்திருந்த இடத்தை சொல்ல மறைத்ததால், அவர்களும் தங்கள் அறியாமை தெரிவித்து அழுதபோதும், கடைசியில், வெடி குண்டுகள் முழங்க, முப்பது இளைஞர்களில் 22 பேரின் உடல் மண்ணில் சரிகிறது! இதுவே அந்த வரலாறு புகழ் பெற்ற பிகாமி படுகொலை!

இந்த வரலாற்று படுகொலையால் நாடே கொந்தளித்து! கீழினப்பெண்ணால் மேலின ஆணகள் கொல்லப்பட்டது யாரும் நினைத்து பார்க்காத ஒன்று! பிறகு தான் பூலான் தேவி, நாடு தேடும் முதல் குற்றவாளியாக கருதப்பட்டாள்!

காடுகளில் ஓடி மறைந்து, பிறகு மத்தியபிரதேச அரசுடன் சமாதான பேச்சு நடத்தி குற்றங்களை மன்னித்து விடுதலை செய்ய போராடி, கடைசியில் சரணைடந்து, பதினோரு வருடம் சிறை இருந்து, அரசியலில் புகுந்து எம்பியாகி, கடைசியில் 2001ல் ஜுலை 25ல் பழிக்கு பழி என சரியாக பொட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிழந்தார்!

கடைசியில் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்து ஸ்ரீராமை பழி தீர்க்கமுடியாமல் போய், ஒரு மாபெரும் படுகொலையை செய்து சரணடையும் நேரத்தில், அவளுக்கு லாலா ராமிடருந்து கடைசியாக வந்த செய்தின் படி, லாலாராம் ஸ்ரீராமை கொன்றுவிட்டதாக, அதுவும் ஒரு பெண்ணுக்காக, என்பதை நினக்கும் போது மனிதனுக்கு மனிதன் இழைக்கும் மிகப் பெரியக் கொடுமை, வஞ்சம் தீர்க்கும் நெஞ்சம் கொள்வது என்பதே!

Sunday, May 28, 2006

ஏசு (வெளிகண்ட இல்லை) நாதரின் பேத்தியும், மோனோலிஸாவும்!

திடீர்னு கொஞ்ச நாளைக்கு முன்னே, எல்லாரும் பரபரப்பா ஒரு நாவலை இந்த பக்கம் வாங்கி படிச்சிக்கிட்டிருந்தாங்க, பேரு 'டாவின்ஸி கோடு'. சரி நம்முலும் வாங்கி என்னதான்னு படிப்போமேன்னு வாங்கினேன். அப்புறம் சரியா நேரம் கிடைக்காதாலே முழுசா படிக்க முடியல்லை. அப்பதான் இந்த நாவல் படமா வந்து ஒரே களேபரத்தோட ஓடிக்கிட்டிருக்கேன்னு இந்த வாரம் போய் பார்த்தா, அது ஏசுநாதர் பேத்தி பத்தின கதை! அதுக்கென்ன ஒரே களேபரம் அப்படின்னு ஆராஞ்சப்பதான் சொன்னாங்க, ஏசுநாதர் பிரம்மச்சாரின்னுதான் எல்லாருக்கும் தெரியும் ஆனா அவரு அப்படி இல்ல, 'ஓடிப்போயி கண்ணாலந்தான் கட்டிக்கிடலாமா, இல்லே கண்ணாலந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா'ங்கிற கதை பண்ணி இப்ப அவருக்குன்னு வாரிசுங்க இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க! அப்படி கண்ணாலம் பண்ணதை பரம ரகசியமா வச்சிருந்து, கடைசியிலே அவரு பேத்தி ஒன்னு இப்ப இருக்கறதாகவும், அந்தம்மாவுக்குத்தான் ஆபத்துன்னு சொல்லி வந்த கதை தான் இந்த நாவல், படம் எல்லாம்!

என்னது ஏகப்பட்ட எதிர்பார்ப்போட எல்லாரும் பேசி, இந்த படத்துக்கு கும்பலா போய்கிட்டிருக்காங்கண்ணு நம்மலும் போய் பார்த்தப்ப, பல விஷயம் தெரியக்கிடைச்சிச்சு! நிறையப்பேரு இந்த படக்கதை பத்தி விமர்சனம் எழுதிட்டாங்க, வேணும்னா நம்ம முகமூடி எழுதின விமரிசனத்தை, டாவின்சி கோட் - புதிரா புனிதமா?, படிச்சுப் பாருங்க!

படம் ஆரம்பித்திலேயே படத்தோட கதாநாயகன், ஒரு லெக்சர் குடுப்பாரு, இந்த 'Religious symbology' பத்தி, அதாவது மதகுறியீடுகள், அந்த குறியீடுகள் பத்தி ஆராஞ்சு, அதனுடய அர்த்தம், விளக்கங்கள் எல்லாம் தெரிஞ்சு வச்சிக்கிட்டிருக்கிற ஒரு புரபசர் அவரு! அதிலே காமிக்கிற திரிசூலத்துக்கு என்னமோ விளக்கம் கொடுப்பாரு!
இந்த குறியீடுகள் பத்தி சொன்னோன்ன, நம்மூர் பக்கம் அதிகமா பொழங்கற இந்த கலசம், சக்கரம், வேல், சுவஸ்திக், சக்கரா, அப்புறம் 'ஓம்' இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. ஒவ்வொன்னுக்கும் ஒரு பொருள் இருக்குது! அதுவும் இந்த அதிகமா பொழங்கிற யந்திரம் போன்றதெல்லாம் நம்ம சாமி வகைகளைக்குறிக்கும் குறியீடுகள்! ஆக இதை வச்சு ஏதாவது கோடு துப்பறியும் கதை நாளைக்கு நம்ம ஷங்கர் மாதிரி கோஷ்டிங்க எடுத்தாலும் எடுப்பாங்க சொல்ல முடியாது!

அப்படி டாவின்ஸியின் குறிகளின் குறிப்பு என்னாங்கிறதை கண்டுபிடிக்க இந்த புரபசரை கூப்பிட்டுட்டு வருவாங்க! அதிலெயும் இந்த 'Hexagram (Seal of Solomon)' பத்தி கண்டுபிடிக்க கூப்பிட்டுட்டு வருவாங்க! அதாவது கதைப்படி இறந்து கிடக்கிறவரு உடம்பிலே இந்த மாதிரி குறியீடுகள் எல்லாம் எதைக் குறிக்குதுங்கிறதை கண்டுபிடிக்க! அம்மணமா கொலை செய்யப்பட்ட ஆளோட உடம்பிலே வரைஞ்ச குறிகளை கண்டுபிடிக்க! அதுக்கு உங்களுக்கு கொஞ்சம் அந்த டாவின்ஸியின் குறிகளும் தெரிஞ்சிருக்கனும்!!இந்த 'Hexagram (Seal of Solomon)' ங்கிறது தெய்வீக சங்கமத்தை குறிக்கும் குறியீடு! அதாவது ஆண் பெண், நீரின் முக்கோணம், நெருப்பின் முக்கோணம் அனைத்தும் இணையும் சங்கமம்! அதாவது இயற்கையின் மூலமான நீர், ந்ருப்பு, நிலம், காத்துக்களை குறிக்கும் முக்கோணங்களின் சங்கமம் தான் இந்த 'Hexagram (Seal of Solomon)' என்பது! இந்தக்குறி டாவின்ஸி குறியீடுகளில் வந்தாலும் இது ஒரு பொதுவான குறி! எல்லா மதத்தினராலும் கொண்டாடப்படுவது! நமது இந்து மதத்திலும் இதை சத்கோணம் என்றழைக்கப்படுவது! அதாவது சிவக்கோணமும்( சிவ பெருமான், நெருப்பு ரூபம்) சக்திகோணமும் (சக்தி, நீரின் ரூபம்), அதாவது ஆண் பெண்ணின் சங்கமம் என்பது! இதுவே யூதர்களுக்கு 'Star of David (Magen David, Shield of David' என்றழைக்கப்படுவது!

இப்படி குறி கண்டுபிடிக்க வந்த புரபொசர், அந்த கொலை நடந்த மியூசியத்திலே இருந்த மோனாலிஸா உருவபடத்திலே பதிந்து கிடக்கும் சில ரகசிய குறியீடுகள் ('Cryptography') ஏதேச்சையா பார்த்து, அங்கன ஆரம்பிக்குது திரில்லர் சேஸிங், அதாவது ஏசு பிரம்மச்சாரி இல்லேங்கிற உண்மை, அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டது கூட இருந்த சீடரான மேரி மெகதலின்னு சொல்ல ஆரம்பிச்சு, அந்த கடைசி விருந்து போட்டாவை அக்கு வேறே ஆணி வேறே கழட்டி போட்டு, அதாவது மேரியம்மாவை அங்கிருந்து இங்கே இடம் மாத்தி ஏசு நாதர் தோள் சாஞ்சு இருந்தெல்லாம் விளக்கி, அவரு கண்ணாலம் கட்டிக்கிட்டவரு தான்னு சொல்ல ஏகப்பிரயத்தனம் பண்ணறாங்க!

இப்படி குறி எழுதி கொலை செஞ்சிட்டு போற ஆளு சரியான நம்மூரு அலகு குத்திக்கிற கோஷ்டி! என்னதான் இந்த மேற்கு பக்கம் எல்லாம் முன்னேறி வளர்ந்தவங்கண்ணு நாம சொல்லிக்கிட்டிருந்தாலும், இந்த ஊர்லயும் தன்னை தானே வருத்திக்கிட்டு சாமி கும்படுற ஆளுங்களை இன்னும் பார்க்கலாம் போல! இந்த கொலைகாரன், ஏசு எப்படி சிலுவையில அறையப்பட்டாரோ, கை, கால்கள்ல முட்களால சுத்தியும், முள்கிரீடத்தை தலையில் சுமந்து இந்த மக்களுக்காக உயிர் விட்டாரோ, அதே வேதனைகளை அனுபவிக்கிற ஆளு தான் இந்த கொலைகாரன். தனக்குத்தானே கசையடி கொடுத்துக்கிட்டு, முட்களான சங்கிலியில கால்ல கையிலே இரத்தக் களரி ஆக்கிக்கிட்டு 'ஏசு கிறித்துவே எனக்கு வலிமைக் கொடு'ன்னு வேண்டிக்கிட்டிருக்கிற ஆளு! அதாவாது மதத்துக்காக என்னவேணாம்னாலும் செய்ற ஆளு!. பார்த்தீங்களா கொடுமையை, தீ மிதிக்கிறது, அலகு குத்திக்கிறது, மண்ணு சோறு சாப்பிடறது, வேப்பிலை அடிக்கிறதுன்னு மூடநம்பிக்கைன்னு சொல்லி காட்டுமிராண்டிங்கன்னு பெரிசா சொல்லி எள்ளி நகையாடும் இந்த சமூகமும் லேசுபட்டதில்லை. கடைசியிலே இராம் நாரயணன் படங்கணக்கா இருந்துச்சு போங்க!

இந்த ஆளு ஏன் கொலை செய்றான்னா, கதை வந்து நம்ம மடாதிபதிங்ககுள்ள இருக்கிற ரகசியம் மாதிரி, அதான் மதுரை ஆதினம், காஞ்சி மடம் அப்படின்னு நம்மூரு கதைகள் இருக்கிற மாதிரி, இங்கேயும் ரகசியங்கள் மிகுந்த இந்த மதம் கிறித்துவமதன்னு சொல்லி கதை வளர்க்கிறாங்க! மொத்ததிலே ஏசு நாதர் கல்யாணம் கட்டி, புள்ளைங்க யெல்லாம் உண்டுன்னு சொல்லிக்கிட்டு , அந்த வம்சத்தை காக்கிறதுக்காக போராடுற குரூப்பு ஒன்னு. இன்னொன்னு, இந்த உண்மைகள் எல்லாம் வெளிய தெரிஞ்சா கிறித்துவ மதத்தோட புனிதம் போயிடும்னு அதை எப்பாடு பட்டும் மறைக்கவோ, இல்லை அந்த மாதிரி சொல்லிக்கிட்டு திரியற கும்பலுங்களை வெட்டி சாய்க்கவோ அலையும் இன்னொரு கும்பலு! இதில பழைய சரித்திரங்களை வேறே சொல்றாங்க. நம்ம புராணக் கதையிலே, கம்சன் எங்கே கிருஷ்ணராலே தனக்கு ஆபத்து வந்துடுமோன்னு ஊருல இருக்கிற குழந்தைங்களை எல்லாம் வெட்டி சாய்க்கிறமாதிரி, இங்கேயும் ஏசுகிறித்துவின் வாரிசா வந்த பெண் இருக்கிறாள் எனக்கருதி ஊர்ல இருக்கிற எல்லா பெண்களையும் வெட்டி சாய்க்கிர கதை உண்டு! மதம், கடவுள், புராணம்னு வந்துட்டா, எல்லா இடத்திலேயும் ஒன்னு தான், இதிலே பெரிசா ஒன்னும் வேறு பாடே இல்ல போலிருக்கு!

இந்த படத்தோட நாயகி தான் ஏசுவோட கடைசிவழி வந்த பேத்தியாம், அப்படி கதை பண்ணியிருக்காங்க!. ஒரு ஆக்ஸிடண்டிலே தன் குடும்பமே செத்தோன, இவரை தன்னோட தாத்தா தான் வளர்க்கிறாருன்னு நினைச்சிக்கிட்டிருக்கிற பொண்ணுக்கு, கடைசியிலே அவர் உண்மையிலே தாத்தா இல்லே, இந்த பேத்தியை காப்பாத்துற அந்த இன்னொரு கும்பலை சேர்ந்தவர்னு கதாநாயகனோட சேர்ந்து அப்புறமா கண்டுபிடிச்சி தெரிஞ்சுக்குது! இதிலே காப்பத்துற குரூப்ல புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எல்லாம் இருக்கிறாராம்!

படம் பார்த்துட்டு வந்து நேத்து டிவியிலே இன்னொரு புரோகிராமும் பார்த்தேன், இந்த 'Illumanati'ங்கிற ரகசிய விஞ்ஞான கும்பலு அந்தக் கால மதகட்டுபாடுகளை தகர்தெரிந்து எப்படி விஞ்ஞான உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்த கஷ்டப்பட்டாங்கன்னு சொல்லி வந்த நிகழ்ச்சி! மேற்கோண்டு இன்னொரு நிழலுக ரகசிய அரசியல் கும்பலு (அதாவது புதுமை விரும்பிகள்!) வட்டிகனுக்கு வெடி வச்சு, எப்படி போப் எல்லாம் கொண்ணாங்கன்னு, அதுவும் இந்த டாவின்சி கோடு கதை எழுதின அதே ஆசாமி எழுதின இன்னொரு நாவலான 'Angels & Demons'ங்கிறதிலருந்து ஆராய்ச்சி பண்ணி ஆதாரங்களோட சொல்லிக்கிட்டிருந்தாங்க! கடைசியிலே
ஒன்னு நல்லா தெரியுது இந்த முன்னேறிய மேற்கு பக்கம்னு நாம் சொல்லிக்கிட்டிருந்தவங்களோட மதவெறி கொஞ்சம் நஞ்சம் இருந்ததில்லை! உலக அரசியல் அரங்குல கவுக்கிறதும், ஏத்துறதும்னு ஏகப்பட்டது செஞ்சிருக்காங்க! நம்மூரு பக்கமும் இந்த அரசர்களுக்கு பெரிய வழிகாமிக்கும் மதகுருக்கள் செய்யாத அரசியல் இல்லை தான்! ஆனா இங்கே பார்க்கும் போது நம்மதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு போயிடுச்சு போங்க!

மொத்த களேபரமும் ஏசுக்கு கல்யாணம் பண்ணி வச்சதாலே தான்! நம்மூர்ல பராவாயில்லை நம்ம சாமிக்கெல்லாம் இரண்டு இரண்டு பொண்டாட்டி கட்டி வச்சிட்டோம் ஜாலியா!

Sunday, May 21, 2006

சிருங்காரம் - தேவதாசிகளும் பரதநாட்டியமும்!

"என்னுடய பாட்டி ஒரு தேவதாசி, பல தலைமுறைக்கு முன்னே, என்னுடய தேவதாசி முன்னோர்கள், அதை விடுத்து, திருமணம் செய்து கொண்டு, ஒரு சராசரி வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டதால், அவர்கள் வழி நடத்திய இந்த தேவதாசி அற்பணம் இன்று இல்லாமல் போய் விட்டது. ஆதலால், இன்று நான் அந்த தேவதாசி முறையை கடைபிடித்து, என்னுடய பொருளாதர மற்றும் பாலிய சுதந்திரத்துடன், என் தேவதாசி இனக்குலத்தலைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்", இப்படின்னு க்கூக்குரல் கொடுத்து கொண்டு தேவதாசி வாழ்க்கை வாழும் பெண்ணின் கதை தெரியணும்னா, அதான் அந்த 'Kama of Kingston'ங்கிற பெண்ணின் கதையை கொஞ்சம் படிச்சிட்டு வாங்க, நான் மேற்கொண்டு சம்சாரிக்க போற விஷயத்தை படிக்கிறதுக்கு முன்னே!(முக்கியமா, இந்தம்மா ஈகோங்கிற மேகஸின்னுக்கு குடுத்த பேட்டியை படிச்சிட்டு வாங்க!)

இந்த தேவதாசி முறை இப்ப அதிகமா இல்லாம போனாலும், அதிகமா 1920கள்ல நடைமுறையில இருந்த விஷயம். ஆங்கிலேயர்கள்ல ஆட்சியின் போது இது களையப்பட்டதுன்னு படிச்சிருப்போம்! ஆனா இன்னும் அந்த முறை இருக்கிறதா சொல்லிக்கிட்டு வந்த சினிமாக்கள் நிறைய! அது தமிழ்நாடுல எந்த அளவுக்கு இன்னும் இருக்குன்னு எனக்கு தெரியாது, ஆனா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிஸ்ஸா, மகராஷ்டிரான்னு இந்த எல்லா மாநிலத்திலேயும் இன்னும் இருந்துக்கிட்டிருக்குன்னு சொல்றாங்க.(அப்படி தேவதாசி இனத்திலருந்து வந்த நடிகை தான் இந்தியாவின் கிளாஸிக்கல் பியூட்டின்னு வர்ணிக்கப்பட்ட 'ஜெயப்ரதா'ன்னு சொல்ல கேள்வி!) இதில அதிகமா ஈடுபடுபவது தலித் இனத்தை சேர்ந்த பெண்கள் தான், இது ஒரு சமயசடங்குடன் கூடிய ஒரு விபச்சாரம்னு சொல்லி இந்த 'மனித குல கட்டுபாடு கழகம்' இதை, அடிமைத்தொழிலாளர்கள் எப்படி பாகுபடுத்தப்பட்டு, சுரண்டி வாழப்படுகிறார்கள்னு சொல்லி இருக்கு தன்னோட அறிக்கையிலே! மேற்கொண்டு தெஹல்கா டாட் காம்ங்கிற ஒரு துப்பறியும் பத்திரிக்கை இப்பொழுதும் நடைமுறையில் இருக்கும் இந்த தேவதாசி இனமக்களின் வாழ்க்கை கதையை எழுதி இருக்கிறாங்க! வேணும்னா இதோ சுட்டி, போய் படிங்க!

இப்படி தேவதாசிகள்னா, பருவ வயதடைவதற்கு முன் கடவுளுக்கு தன்னை அற்பணித்து கொண்டு கடவுளுக்கு வாழுபவர்கள் என்றிருந்தது.அதாவது , அந்த காலத்திலே எல்லா கோயில்களையும் இது போன்ற தேவதாசிகள் வாழ்ந்து கொண்டு இருந்ததாகவும், அதிகமா எந்த கோயில்ல தேவதாசிகள் இருக்கிறாங்களோ அது ரொம்பவும் பிரசித்து பெற்றதுன்னு சொல்லக் கேள்வி!அப்படி வாழ்ந்து வந்தவர்கள் ஆண்டவனை ஆடிப்பாடி மகிழ வைப்பதற்காக கற்றுக்கொண்ட கலை தான் இந்த பரதநாட்டியம்னு சொல்லக்கேள்வி. அப்படி கோயில்களில் வாழ்ந்த கலை, அதுவும் கீழின ஜாதியினரால் போற்றி வளர்க்கப்பட்ட கலை இன்னைக்கு அரங்குகளில் மேல் ஜாதியினத்தாரல் அதிகம் விரும்ப பட்டு போற்றி, அந்த கலையின் வடிவம் பெரிதும் பாராட்டபட்டு வர்துன்னா அதுக்கு முக்கிய காரணம் ருக்மணி தேவி அருண்டேல் ('Rukmini Devi Arundale')ங்கிற அம்மையாரால் தான். எப்படின்னு பார்ப்போம் வாங்க!

பல நூற்றாண்டுகளாக, இந்த கலையை தொன்று தொட்டு வளர்த்தது தஞ்சாவூரில் இருக்கும் சில குடும்பங்கள், அதாவது 'நட்டுவனர்' என்கிற அந்த குடிகள் தான் வளர்த்தது இந்த கலையை. பெரும்பாலும் இது கோயில்களில் ஆண்டவனுக்கு பூஜை பண்ணும் நேரங்களிலும், பிறகு விழாக்காலங்களிலும் கோயிலில் உள்ள கொலுமண்டபத்தில் ஆடினக்கலை, கொஞ்சம் கொஞ்சமா அரச சபைகளில் ஆடப்பெற்று, ராஜாக்களையும், இளங்குமரர்களையும் மகிழ்விச்சு, அந்த காலத்தில் பொழுது போக்கும் கலையாக மாற்றப்பட்டது. கொலுமண்டபத்தில் ஆடின ஆட்டம் அரண்மணையில் ஆடப்பெற்று, பிறகு ஆட்டத்தில் மயங்கி, அப்பெண்களிடம் மயங்கி, அப்புறம் அந்த மாதிரி போனக்கதை தான் இது! இதை ரொம்ப நல்லா சொல்லி இருந்த படம் நம்ம சிவாஜி நடிச்ச 'தில்லானா மோகனாம்பாள்' இந்த கதை நம்ம ஊர்ல மட்டுமில்லை, பக்கத்திலே இருக்கிற கேரளாவில ஆடுற அந்த மோகினி ஆட்டமும், தேவதாசிகள் ஆடுன ஒன்னு தான்!

ஆனா இந்த பரத நாட்டியக்கலை ஒன்னும் சும்மா கையை காலை அப்படி இப்படி ஆட்டிகிட்டு போற 'floor dance' இல்லை! இதற்கென உண்டான சட்டதிட்டங்களுடன், பரிபாஷைகளும், வழிமுறைகளும் கொண்ட ஒரு தனி விஞ்ஞானம்! 'பரதமுனி' ங்கிற முனிவர் தோற்றுவித்த கலை, கட்டுபாடுகளுடன்கூடிய ஒரு ஆட்டத்தொகுப்பு! அதாவது பரதத்தின் முக்கிய அங்கம் எனக்கருதப்படும் பாவம், ராகம், தாளம் தான் முக்கியம். இதன் செயல்முறை தத்துவம் 64 அடிப்படை கோட்பாடுகளை கொண்டு, கை, கால், முகம், உடம்பினை ஒருங்கினைத்து பாவங்களை ராகத்திற்கேற்பவும் தாள சுதி நயத்துடன் ஆட்ட அசைவுகளை வெளிபடுத்துவதே! இன்னைக்கு ஆடிக்கிட்டிருக்கிற கலைக்கு வடிவம் கொடுத்தவங்க 18ம் நூற்றண்டில் பாண்டநல்லூர்ல வாழ்ந்த நட்டுவனர், பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம்னு, அதற்கப்பறம் பாண்டநல்லூர் மீனாட்சி சுந்த்ரம் பிள்ளை இவங்க வழி வந்த பரத நாட்டிய வித்துவான்!

இப்படி வாழ்ந்த இந்த கலைக்கு மறுயுயிர் கொடுத்து, இன்னைக்கு எல்லாரும் இதை பழகி அரேங்கற்றம் செய்வைதை பெருமையா நினைக்கிறாங்கன்னா, அதுக்கு காரணம் நான் சொன்ன அந்த ருக்மணி தேவி அம்மையார், அவங்க ஆரம்பிச்ச அந்த 'கலாசேத்திரா', பழைய குருகுலக் கல்வி போல இதை கற்று தந்தது தான் காரனம். ஏன் இதெல்லாம் சொல்றேன்னா, இப்ப இங்க ஒரு பிலிம் பெஸ்டிவல்ல வந்த ஒரு படம் 'சிருங்காரம்', அதை டைரக்ட் பண்ணது, 'சாரதா ராமநாதன்'ங்கிற அம்மணி! இந்த படம் அந்த தேவதாசி முறையில் வந்த பரதக்கலை, பெண்ணியம், சமூக நிலைப்பாடுகள், எல்லாம் கலந்த கலவையாக வந்தது, ரசிச்சு பார்க்கக்கூடிய ஒரு படம்! சினிமான்னா என்னான்னு தெரியாத ஒரு பெண்மணி அழகா எடுத்து வந்த படம்! இந்த படத்திலே பணியாற்றியவர்கள் எல்லாருமே ஜாம்பாவான்கள், விவரம் வேணும்னா இந்த சுட்டி போய் பாருங்க!

இந்த படம் நான் சொன்ன அந்த தேவதாசிகளின் கலை நயத்தையும், அவர்களின் மீது கொண்ட தவறான அப்பிப்ராயத்தை மாற்றவும் அவர்களான சரியான இடமும், அவர்கள் போற்றிய இந்தக்கலையின் மேன்மையை தெரிவிக்க வந்த ஒரு படம். இந்த படத்தோட கதாநாயகி ஒரு தேர்ந்த பரதநாட்டிய கலைஞர், அந்த காலத்தில் கோயில்களில் ஆடிக்கொண்டு கலைக்காக உயிரையே விடக்கூடிய அம்மணி. அப்பொழுது உள்ள வழக்கப்படி, கதாநாயகி ஒரு பெரிய நிலச்சுவாந்தாருக்கு ஆசை நாயகியாவும் இருப்பாங்க. அப்ப, அந்த நிலச்சுவாந்தார் தன்னுடய அரசியல் லாபத்துக்காக, ஒரு விருந்துக்கு வந்த பிரிட்டீஷ் கலெக்டரை குஷிபடுத்த அவங்க முன்னாடி பரதம் ஆடுன்னு சொல்றப்ப, மறுத்து, செல்வசெழிப்பான வாழ்க்கைகையை துறந்து, அவளின் தாய் கூறியும் மறுத்து, கலைக்காகவும், பெண்ணிய கண்ணியத்தை காக்கவும் எல்லாத்தையும் இழந்த வாழும் வாழ்க்கை மேற்கொள்வதாக முடியும் படம்! இதிலே விஷேஷம் என்னான்னா, ஒரு சாதாரண பெண்மணி, நம்மல மாதிரி சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்தி வந்த ஒரு பெண்மணி துணிந்து இந்த பரதக்கலை மேம்பாட்டையும், அதன் மூல வழிதாரர்களான தேவதாசிகளின் உண்மை நிலை, கலைக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட அர்பணத்தை மேம்பாட்டை எப்படி சமூகம் அவர்களை சூரையாடி தவறான கண்ணேட்டம் ஏற்படுத்திச்சுன்னு காண்பிக்க ஒரு சினிமா படம் எடுத்து எல்லாருக்கும் காண்பிச்சது ஒரு பெரிய மகத்தான செயல்!

இதிலே ஒரு 'Irony' பார்த்தீங்களா, கீழ்மட்ட நிலையினர் கற்று வளர்த்த இந்த கலை, அதை கொண்டாடி வளர்த்தவர்களை கீழ்நிலையாக பார்த்த அன்றைய சமூகம், ஆனால், இன்று அந்த கலையின் பெருமைகளை உணர்ந்து, சமூக மேல்மட்டத்தோர் போற்றி பண்பாடும் கலையாக திகழ்வதை!இது தான் காலத்தின் கோலம் என்பதோ!

Friday, May 12, 2006

ஆங்கிலேயர் அமைத்த சாதியம்-வரலாறு தொடர்கிறது!!

போன பகுதியில் இந்த சாதிய அமைப்பு முறை ஆங்கிலேயர் ஆட்சியின் காரணமாய் எப்படி நம்மிடையே சாதிய பாகுபாட்டிற்கு வழி வகுத்ததுன்னு பார்த்தோம். அதனுடய தொடர் பாகமா சொல்லவிட்டதை, இனி தொடர்ந்து பார்க்கலாம்!

19ம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் தோன்றிய சமூக அமைப்புகளில் ஒன்றிபோக, ஆங்கில சமூகம் தடுமாறிக் கொண்டிருந்த நேரம். அதாவது அப்பொழுது சமூக மட்டத்தில இருக்கக்கூடிய வித்தியாசங்களை வரையறுக்க சில சொற்றடர் பிரயோகங்களால் சமூகத்தில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக்காட்டினர். 'உத்தமர்களின் பணக்காரதன்மையும் அவர்தம் சொத்துக்களும் போல', 'கடைநிலை ஊழியர்கள் முதற்கொண்டு அவர்களின் நினப்பும் போல' எனக்கூறி சமுதாய பாகுபாட்டினை விவரித்தனர்! ஆனால் சமூகத்தில் இருக்கும் அந்தஸ்த்து முறைகள் சரியான முறையிலே விவரிக்கபடாமல் இருந்தனவேயொழிய, அதைப் பற்றிய ஏற்ற இறக்கங்களை அவர்கள் அறிந்திருந்தினர். மேற்கூறிய இரு சொற்றொடர் பிரயோகம் இருந்த போதிலும், பொதுவாக சமூக வகுப்புகளை மூன்று பிரிவுகளாக, சமூக நிலைப்பாட்டின் மூலம், பொருளாதார வசதிகளின் மூலம், அறிவுதிறன் மூலம், பிரித்து பார்க்க முற்பட்டனர். இப்பிரிவு அப்பொழுது ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாய் அமைந்த சமூக அந்தஸ்த்து உயர்வுகளை காட்டும் வழியாகவே, அதாவது பிரபுத்துவமில்லாத, வந்தேறிய சமூகமில்லாத, சமூக உயர்வடைந்த ஜார்ஜியன் சமூகத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்பை இப்பிரிவுகளுக்குட்படுத்தி அமைத்த பிரிவினையாகவே தெரிந்தது! இந்த சமூக வரிசைப்பாடு, மேற்கூறிய இரண்டு சொற்பதங்களுக்குள் அடங்காமல், சமூக நிலை(Social Status) மற்றும் அறிவுதிறன் (mental ability) அடிப்படையில் உண்டாக்கப்பட்டது! நான் முன்னமே கூறிய இந்த மண்டை ஒடு உருவமைப்பு (Phrenology) அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் குணாதிசியங்கள் மற்றும் திறமை, அவர்களின் தேசீயம் கண்ட முறைகளுடன் பிறகு வந்த புள்ளியியல் கணக்கீட்டு முறைகளுடன் கூடிய கண்டறிந்த மனித நடைத்தை, ஒழுங்கு போன்றவை அறியும் தன்மைகள் சமூக விதிகளின் கீழ் கட்டுபடுத்தபட்டமையால் மனித வளர்ச்சிக்கு எந்த உறுதுணையும் அளித்தாக தெரியவில்லை! இதன் காரணமாக,ஆங்கிலேயர் இந்திய சமூக வளர்ச்சியில் அதிகம் ஈடுபடுத்திகொண்ட போது, மேற்கூறிய மூன்று பிரிவிகளினிடையே இருக்கும் நெருங்கிய தொடர்பின் கீழ் இந்திய சமூகத்தை அராய்ந்து பிரிக்கும் பொருள் விளக்கும் கண்டு, அதன் படி சமூக வரிசையை அமைக்க முற்பட்டனர். இப்படியாக, நமது பாகுபட்ட இந்திய சமூகத்தை உருவாக்க, அவர்கள் சமூகத்தில் கண்டறிந்த சமூகப்பிரிவுகளின் அளவு கோல்படி, நம் இந்திய சமுதாயத்தை அப்பொழுது அறியபட்ட சாதியம் மற்றும் இன அமைப்பு கொண்டு, பாகுபாட்டினையும் இன சாதி வரிசை முறைகளை அமைக்க முற்பட்டனர் என்பதே உண்மை! அதற்காக, இந்த புள்ளிவிபர இயலை அவர்கள் உபயோகித்து சாதிய உருவாக்கத்தை மேற்கொண்டனர் என்பதே இங்கு வைக்கப்படும் முதன்மையான கருத்து!

இந்த புள்ளியியல் முதலில் ஐரோப்பிய சமூகத்தை அறிந்து கொள்ளும் கருவியாகவே உபயோகப்பட்டது. ஏனென்றால், அதை கொண்டு அனைத்து செலவங்களையும், வசதிகளையும், நெருக்கடி காலங்களில் மிதமாக உபயோகபடுத்த ஒரு ஏதுவாக இருந்ததால்! மேற்கொண்டு சமுதாய அமைதியின்மையற்ற, குழப்பமான சூழ்நிலை 19ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் நிலவியதால் ஆங்கிலேய அரசு அதை தவிர்க்க உதவும் கருவியாக இதை உபயோகப்படுத்தியது. அரசியல் மற்றும் சட்ட நிபுணர்கள் தங்கள் நிர்வாக முறையில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை கோட்பாடுகளை நிலைநிறுத்த, சமூக பார்வையில் கண்டறிந்த கட்டுபாடுகளுடய விஞ்ஞான உண்மைகளை கொண்டிருக்கும் புள்ளியியல் கணக்கீட்டினை பெரிதும் உதவியாக கொண்டிருந்தனர்! இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்த புள்ளியியல் கணக்கீடு, கண்டங்களுக்கிடையான சண்டைகள் நெப்போலியன் ஆட்சியை எதிர்த்து நடக்கும் போருக்கு தேவையான ஆட்களை இராணுவத்திற்கு சேர்த்து கொள்வதற்காகவும், பிறகு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், கொந்தளிப்பும், குழப்பமுமாயிருந்த ஐரோப்பிய வலிமையான நாடுகளின் பகுதிகளை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரவும் உபயோக படுத்தினர். ஆனால் அவ்வாறு புள்ளியியல் நிபுணர்கள் அதற்காக சேகரித்த பக்குவப்படாத தகவல்கள் பின்பு சமூகப் பிரிவுகள் தத்துவத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்றாலும் மிகையாகாது! ஆனால் இந்த புள்ளியியல் கணக்கீடு கொண்டு வரைபடயிறுக்கும் புதிய விஞ்ஞானத்திற்கு முழு முயற்சி எடுக்க புள்ளியியல் நிபுணர்கள் பாடுபட்டனர், இதன் மூலம் மனித மனத்தில் குடிகொண்டுள்ள சமுதாய விதிமுறைகளை கண்டறிய முற்பட்டனர். அதிலும் மனிதகுலம் மேற்கொள்ளும் நடத்தைகள் இந்த மாறுபடா சமூக விதிகளினால் உண்டாக்கபடுவது என்றும், தனிமனித குணாதிசயங்களாக கருதாமல், பொதுவான தேசத்தின் குணாதிசியங்களாக கண்டறிய இப்புள்ளியியல் கணக்கீடு உதவும் என அவர்களால் பெரிதும் கருதப்பட்டது! அதிலும் மனித வர்க்க முறை என்பது வெறும் சந்தர்ப்பவசங்களாலோ, இல்லை இயற்கை நியதிகளை மீறியோ உண்டாக்கபடும் வளர்ச்சியாக வரத்தேவையில்லை என்பது அப்பொழுது வரையறுக்கப்பட்ட புள்ளியியல் தத்துவத்தின் வாதம்! ஆக இந்த புள்ளியியல் தததுவுமே வர்க்க சரித்திரங்களுக்குண்டான பொது விதியாக கருதப்பட்டது.ஆனால் அதற்கு இடையூறாக அமைந்த மதம் மற்றும் அரசியல் நிறுவனங்கள் இந்த முறையான புள்ளியியல் முறையில் உருவாகும் வர்க்க வளர்ச்சிக்கு தடைகல்லாகவே இருந்தன! சுயமாக சிந்தித்து வளரும் மனித குலவளர்ச்சியை தடுத்து தங்களுடய சொந்த விறுப்பு வெறுப்புகளுக்காக சமூக பிரிவு வழிநடைத்தும் முறைகளை இவைகள் கடைபிடித்தன. அதன் வடிவமாக அப்பொழுது ஸ்பெயினை ஆண்ட மூன்றாம் சார்லஸ் கொண்டுவந்த சில மக்கள்குல வளர்ச்சி திட்டங்களின் வடிவம், இந்த மதவாதிகளின் ஆளுமையில் கட்டுண்ட மக்களால் இனம் காணமுடியாமல் போனது! ஆக ஒட்டு மொத்தமாக எந்த ஒரு அரசியல் முன்னேற்றங்களும், சமூக சீர்த்திருத்தங்களும் சட்ட முறையலோ இல்லை செயலாற்றங்களாலோ மக்கள் குல வளர்ச்சிக்கு உதவின என்பதை சொல்லிவிட முடியாது, அது போல் சட்டம் இயற்றுபவர் எப்பொழுதும் வளர்ச்சிக்கு துணையாகயிருப்பதைவிட அதன் குறுக்கே நின்றது தான் அதிகம்! ஆக இதை எல்லாம் கண்ட இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், மனித வளர்ச்சிக்கென்று இந்த புள்ளியியல் தததுவத்தை பயன்படுத்தாவிடுனும் சமூக அடக்குமுறைக்கு சரியாக பயன் படுத்தி கொள்ளும் கருவியாகவே இது பயன்பட இருப்பதை கண்டனர். ஏன்னெனில், இவ்வளவு பெரிய மக்கட் தொகைக் கொண்ட நாட்டினை அடக்கி ஆள வெறும் படைபலம் மட்டும் போது, மற்றும் அது மிகவும் அதிகமான செலவீனம் கொண்டதால், ஆட்சி பரிபாலனத்திற்கு இந்த சாதிய பிரிவினைகள், தங்கள் கட்டுபாட்டின் கீழ் மக்களை அதிகாரம் செலுத்த சரியான வழி என எண்ணினர்!

ஆகையால் அப்பொழுது பரவலாக இருந்த சாதி பிரிவினைகள், ஆங்கிலேயரின் அனுபவத்திற்க்கு அப்பாற்பட்டது, ஆதலால், இந்த சாதியெணும் சாவியினை சரியாக உபயோகபடுத்த அதன் அம்சங்களை தெரிந்து கொள்வது முக்கியம் என கருதினர். ஆக அப்பொழுது தங்கள் கையில் இருந்த சமூக வளர்ச்சி விஞ்ஞான கருவி, அவர்கள் தம் வழியில் கண்டறிந்த அனுபவத்தால் வந்த முறை, இந்த புள்ளியியல் கணக்கீடு ஒன்றே! அப்பொழுது பெரிதாக கருதப்பட்ட சமூக விஞ்ஞானங்கள் (social scinces), மனித மண்டை ஓட்டு வர்க்க தத்துவ இயல்(phrenology), உடல் ரீதியான மனித இனஇயல் தத்துவம்(Physical Anthropology), சமூக தத்வ இயல்(Sociology), மனித பரம்பரை வர்க்கவியல்(eugenics) என்பன. இதன் அடிப்படையில் அவர்களால் நிர்மானிக்கப்பட்ட காலனிகளில் உருவாக்கப்பட்ட ஆட்சிமுறைகள் மக்கள் கூட்டத்தினை அடக்கி ஆள பெரிதும் பயன்பட்டன. ஆனால் கடைசியாக வளர்ச்சி அடைந்த சமூக தத்வ இயல்(Sociology), மனித பரம்பரை வர்க்கவியல்(eugenics) விஞ்ஞான வழியன்றி முதல் இரண்டு தத்துவ முறையில் பிரிவுபடுத்தபட்ட முறைகளை சற்று பார்க்கலாமா?

எப்படி வானவியல் சாஸ்திரத்தோடு ஜோதிடம் ஒப்பிடப்படுகிறதோ, அதைப்போல, மனித மண்டை ஓட்டு வர்க்க தத்துவ இயலும், உடல் ரீதியான மனித இனஇயல் தத்துவம் ஒப்பிட பட்டது! அதாவது மனித மண்டை ஓட்டினையும் உடல்கூறு நிலைபாட்டினையும் இந்த இரண்டுத்துறையை சேர்ந்த தத்துஞானிகளால் இனம் காணப்பட்டது. 1840ம் வருடத்திற்கு பிறகு மண்டை ஓட்டு வர்க்க தத்துவ இயல் மறைய தொடங்கிய போது, அதில் கண்டறிந்த உண்மைகள் உடல் ரீதியான மனித இனஇயல் தத்துவம் ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டன! இந்த மனித மண்டை ஓட்டு வர்க்க தத்துவ இயல் நிபுணர்கள் ஐரோப்பிய நாடுகளை விட அதிகமாக இங்கிலாந்து, அயர்லாஅந்து நாடுகளில் காணப்பட்டனர். இந்த இயல்பியல் அதிகமாக தனிமனித குணாதிசயங்களையும், தேசத்தன்மைகளயும் கண்டறிய பயன்படுத்தப்பட்டன. அதாவது மண்டை ஓட்டின் வெளிதோற்றம் கொண்டு மனித மனம் மற்றும் அவர்களின் இயல்பான மனப்பாங்குகளை இனம் கண்டு கொள்ளப்பட்டது. மேற்கொண்டு மண்டை ஓட்டின் தோற்றம் கொண்டு ஒரு நாட்டின் மற்றும் குலத்தின் தனிதன்மைகளை அறிந்து கொள்ள முடியும் என நம்பப்பட்டது! அதாவது ஒவ்வொரு மூளையின் பகுதியும் மனிதனின் அந்தந்த தன்மைகளையும், அறிவுத்திறன்களளயும் கட்டுபடுத்தவாதகவே நம்பபட்டது. ஆக இப்படியாக மனித மண்டை ஓட்டின் வெளித்தோற்றத்தின ஆராய்ந்தாலே, ஓவ்வொரு மனித குலத்தன்மையும், குணாதிசியங்கள் மற்றும் அறிவுத்திறன்களை கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது!

இந்த மண்டை ஓட்டு தத்துவமே, ஆங்கிலேயர் ஆட்சி அமைத்த இந்திய மக்களின் இன குல பாகுபாடினை அறிந்த கொள்ள ஒரு அடிகலனாக வழிவகுக்கும் சாதிபிரிவினைகள் முக்கியமாக கருதபட காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகது! ஆக இந்த மண்டை ஓட்டு த்ததுவம் எவ்வளவு தவறானதோ, மனித குல வளர்ச்சியை அறிந்து கொள்ள, அதுவும் மண்டை ஓட்டின் வெளித்தோற்றம் கொண்டு மனித தன்மை, அறிவு, குணாதிசியங்கள் போன்றவற்றை இனம் காண, அவ்வளவு தவறானது ஆங்கிலேயர் வழி நடத்திய சமூக சாதிபிரிவினைகள் கொண்டு இந்திய மக்களின் இனம் காண!

இந்த மனித மண்டை ஓட்டு வர்க்க தத்துவ இயல் மறைந்து, உடல் ரீதியான மனித இனஇயல் தத்துவம் வளர்ந்த போதும், அத்தத்துவத்தில் கண்டறிந்த சில நம்பிக்கைகளை உண்மை எனக்கருதி அதை மேலும் சமூக வர்க்கபிரிவினைக்கு வழிவகுத்தனர். அப்படி வழிவந்து ஆராயப்பட்ட தத்துவத்தால் ஆப்பிரிக்க கறுப்பர் இனமான நீக்ரோ இனத்தினை வெள்ளையர் இனத்தை விட தாழ்ந்தது என அளவிட்டு அதனை இழிவுடன் நடத்திய சரித்தரம் நம் அனைவரும் தெரிந்ததே!

இப்படி பெரிதும் நின்று தீர்மானமாக்கப்பட்ட மரணதன்மைக்கூடிய இத்தத்துவமே, 1871ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு இந்திய சட்டத்திற்கு அடிகோலாகும். அதாவது குற்றவாளிகள் கொண்ட பழங்குடி இனத்தவர் சட்டம் (Criminal Tribes Act of 1871) என்பது, அதன் சாராம்சம், குற்றம் புரிவதையே தொழிலாக கொண்ட இனத்தில் பிறந்தவர் குற்றம் இழைப்பவராகவே கருதப்படுவது, குற்ற்ம் புரியும் குலத்தை சார்ந்ததால், சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள், அப்படி குற்றம் புரிபவராகவே வாழ்க்கை முழுதும் கருதப்படுவர், இல்லையெனில் எப்பொழுது அந்த முழு இனமும் அழிகிறதோ இல்லை அக்குலத்தை வேறுவகையில் எப்பொழுது மன்னித்து மறந்து மாற்றப்படுகிறதோ அதுவரை அவர்கள் குற்றவாளிகளே! பார்த்தீர்களா, இந்த விநோத சட்டத்தை, ஒருவன் எந்த குற்றம் செய்யாமலும், பிறப்பால் குற்றவாளியாகிறான், சரித்திர காரணங்களால் முன்னோர் செய்த குற்றங்கள் கொண்டு ஒரு வகை மக்களை அடையாளம் கொண்டு அந்த குலம் குற்றக்குலம் என சமூகத்தில் நிலை நிறுத்தப்படுவதால், மேலும் அவனுக்கு விமோச்சனமே இல்லை. அவன் எப்பொழுதும் குற்றம் இழைப்பவனாகவே கருதப்படுகிறான். ஆக இப்படியாக வளர்ச்சி அடையா சமூகத்திற்கு(static Indian society) வித்திட்டவர்கள் இந்த ஆங்கிலேயர்கள் இம்மாதிரி சட்டங்களை இயற்றி! இது போன்ற சட்ட திட்டங்களை கொண்டு வந்ததால், சாதியமே, வகுப்பு பிரிவனைகளை இந்திய மக்களின் இனவரிசைக்கான அடையாளமாக ஆங்கிலேயர் கண்டனர். ஆகவே அவர்கள் ஆரம்பித்த அந்த புள்ளியியல் கணக்கீட்டில் சாதி, இனம் காணல் முக்கிய பங்களிப்பாக கருதப்பட்டது. அதுவே பின் வந்த சமுதாய சீர்கேட்டிற்கு முக்கிய காரணம். ஆக இதுவே இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் சாதிய அரசியல், மற்றும் விறுப்பு வெறுப்புகள் கொண்ட சமுதாயத்தினை உருவாக்க அமைந்த முக்கிய காரணம்... (இன்னும் வரும்!)

Friday, May 05, 2006

Mukhtaran Bibi (مختاران بی‌بی) முக்தரன் பீபி- ஜிந்தாபாத்!

பெண்ணியம் பத்தி நிறைய பேசினாலும், இன்னைக்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நம்மை போல வளரும் நாடுகள்ல எப்பவும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. அப்படி கொடுமைகளை சந்திக்கிற பெண்களின் கடைசி ஆயுதம் தன்னை தானே அழித்துக்கொள்வது! ஆனா அதையும் மீறி வெற்றி நடை போட்டு சமுதாயத்துக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டா இருக்கக் கூடியவர்கள் ரொம்ப கம்மி. அதுவும் பழமையிலும் மதக்கட்டுபாட்டிலும் பெண்களை அடக்கிவச்சிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்திலே இருந்த வந்த ஒரு பெண்ணை பத்தி நம்ம மக்களுக்கு சொல்லலாமேன்னு தான் இந்த பதிவு. அதுவும் மதங்களிடையே உண்டாக்கும் விறுப்பு வெறுப்புகளை மற்றும் பதிவா போட்டு அதில குளிர் காய்ந்துக்கொண்டு மனித நேயத்தை மறந்த இருக்கும் நம் ஜனங்களே, கொஞ்சம் நேரம் இந்த பதிவை பார்க்க நேரம் ஒதுக்குங்க!

இந்த ஆண்டின் மிகச்சிறந்த செல்வாக்குடய நூறு மனிதர்களை பத்தி டைம்ஸ் பத்திரிக்கையின் இவ்வார பதிவில் வந்த அனத்து சிறப்பு மிக்க மனிதர்களில் என்னை ரொம்ப கவர்ந்த பெண்மணி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முக்தரன் பீபி(مختاران بی‌بی) என்பவர். இவர் யாருன்னா பாகிஸ்தான் நாட்டின் தலை நகரான இஸ்லாமாபாத்லிருந்து 12 மணி நேரம் தென்கிழக்கா பயணிச்சா வரும் மீர்வாலாங்கிற சிறு கிராமத்தை சேர்ந்த பெண்மணி. இந்த பெண்ணுக்கு நடந்த துயரம் வாழ்க்கையில எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது! ஆனா ஒரு துயரத்தையே சவாலா எடுத்துக்கிட்டு வாழ்ந்துகாட்டி இன்னைக்கு உலகம் முழுக்க அதிகமா பேசபடும் பெண்மணிகளில் ஒருவரா திகழ்கிறார். அப்படி என்ன துயரம், சோகம் இவர் வாழ்க்கையிலேங்கிறீங்களா, அதான் பழிக்குப்பழி, கல்வியின் வீச்சம் இல்லாத சமூகத்தில் வாழும் பெண்களுக்கே உண்டான கேடு, இந்த பொண்ணுக்கு நிகழ்ந்தது! அதுதான் கற்பழிப்பு, அதுவும் ஆண் மிருகங்கள் கூட்டாய் பலவந்தப்படுத்தி பழி தீர்த்துக்கிட்டது!

நடந்தது வேறே ஒன்னுமில்லை, கடந்த வருடம் 2002, ஜீன் 22ம் தேதி, முக்தரனின் தம்பி 12 வயது தம்பி ஷக்கூர், 26 வயசு சல்மா என்கிற மஸ்தோய் (Mastoi)என்கிற உயர்ந்த பழங்குடி பெண்ணிடம் கள்ள தொடர்பு வச்சிருந்தாகவும், அந்த பெண்ணை கெடுத்துவிட்டதாகவும் கருதி அந்த மஸ்தோய் பழங்குடியினர், தங்கள் கீழினமாக கருதிய முக்தரன் தம்பி ஷக்கூரை கடத்தி சென்று மஸ்தோய் இன ஆண்களால் ஓரினசேர்க்கைக்கு உட்படுத்தபட்டிருக்கிறார். அதை கேட்டு தம்பியை காப்பாற்ற சென்ற முக்தரனை, அந்த சல்மா குடும்பத்தை சேர்ந்தோர் கூட்டாக சேர்ந்து கற்பழித்து முக்தரனை வீதியில் விட்டனர். அதற்கு பிறகு அந்த கிராமாத்தில் உள்ள இமாம் கட்டபஞ்சாய்த்து செய்து முக்தரனை போலீஸ்க்கும் எல்லாம் செல்ல வேண்டாம் என கூறிவிட்டார். ஆனால் அதையும் மீறி முக்தரன் கோர்ட்டுக்கு சென்று வாதாடி, லாகூர் வழக்குமன்றத்தில் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கி இருக்கிறார். இது தான் நடந்தது. இதில இன்னொரு சோகம் என்னான்னா, முக்தரன் குடும்பம் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க தயாரா இருந்தாங்க, அந்தஅவதூறு நிரூபிக்கப்பட்டால்! அதுவும் ஷக்கூரையே அந்த பெண் மணமுடிக்கட்டுமென்றும், முக்தரை அந்த மஸ்தோய் இனத்தை சார்ந்த ஒரு ஆண்மகனுக்கே திருமணம் செய்யவும் சம்மதித்தனர். மேற்கொண்டு தங்களிடம் இருக்கும் நிலம்புலங்களையும் அவர்களுக்கு தருவதாக கூறினார்கள், அந்த குற்றம் நிரூபிக்க படும் பொழுது! ஆனால் அதையும் மீறி முக்தரன் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி, அப்படி வந்த பெண்ணை கூட்டாய் நாசமாக்கினர்!

இது என்ன நம்ப ஊர்கள்ல நடக்காத ஒன்னா, அப்படின்னு கேட்கிறீங்க. ஆனா இது கொஞ்சம் வித்தியாசமானது. முகமதிய பெண்கள் ஆண் கட்டுபாட்டை உடைத்துக்கொண்டு இது போல் நியாம் கேட்பது இந்தியாவில் கூட சாத்தியமான ஒன்று (இங்கும் பலத்த எதிர்ப்பு உண்டு). ஆனால் மத மூடநம்பிக்கையில் திளைத்து பெண்களை அடக்கி ஆளும் இஸ்லாமிய சமுதாயங் கொண்ட இந்த பாகிஸ்தானில் இது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல! அதையும் மீறி தனக்கு நியாம் தேடி சென்று வாதிட்ட இந்த பெண்மணி உண்மையிலே புரட்சி பெண்மணியே. அதுவும் ஒட்டு மொத்தமாக அனத்து ஊடகங்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்த பொழுதும் அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்து பாஸ்போர்ட் போன்றவற்றை முடக்கி வைத்த பாகிஸ்தான் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது. ஆனால் அவர் அதையும் மீறி அனத்துலக ஆதரவில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்த சொல்ல, இது போன்ற கொடுமைகள் இனி பெண்ணினத்திற்கே வரக்கூடாது என முழங்க இவர் சந்தித்த முட்டுகட்டைகள் அதிகம்! கடைசியில் உலக முழுவதமிலிருந்த வந்தன கண்டனக்குரலுக்கு அடிசாய்ந்து இவருக்கு ஊக்க தொகை கொடுத்தார் பாகிஸ்தான் அதிபர் முஸ்ரஃப்! அந்த உதவி தொகை அனைத்தும் தன்னை போன்ற நலிந்த பெண்களுக்கும், சிறுவர்களின் முன்னேற்றத்திற்காகவும் சிறு பள்ளிகளை அந்த கிராமத்தில் உருவாக்கி கல்விகண்களை திறந்து வைத்தார்.

இப்படி அக்கிராம மக்களுக்கென தொண்டு செய்து கொண்டிருக்கும் இப்பெண்மணிக்கு பலத்த எதிர்ப்பும், மரண அச்சுறத்தலும் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறது! ஏனென்றால், இவள் நம் நாட்டின் கலங்கம், சமூக சீர்குலைவுக்கு காரணமாகிறாள் எனக்கருதி பழமையிலும் மூடநம்பிக்கைகளிலும் ஊறி திளைத்த மதவாதிகளால் இப்பெண்மணிக்கு எப்பொழுதும் எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் தான் அதிகம் படிக்கவில்லையென்றாலும் இவை அனைத்தையும் மீறி சமூக முன்னேற்ற பொறுப்பெடுத்து பணி புரியும் இப்பெண்ணே புரட்சிக்குரியவர்! இழிந்த உலோகங்களை பொன்னாக்கும் புராதன இரசவாதம் போன்று புறைபட்ட சமுதாயத்தை முன்னேற்ற பாடுபடும் இப்பெண்மணி, தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துயர் துடைக்கும் மருந்தென இப்பொது சேவை தொடரும் இவர் உண்மையிலேயே புரட்சி பெண்மணி, வாழ்க! முக்தரன் ஜிந்தாபாத்!