Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Monday, June 05, 2006

சினிமெட்டோகிராபியும் நம் ஒளிப்பதிவாளர்களும்!

நான் போன வாரம் ஃபனா(Fanna) என்ற ஒரு ஹிந்திப்படம் பார்த்தேன். அதன் ஒளிப்பதிவை பார்த்து அதிசியத்துப்போனேன், கடந்த சில நாட்களுக்கு முன் நான் பார்த்த கிங்காங் என்ற ஆங்கிலப்படத்துக்கான ஒளிப்பதிவும், இந்த படத்திறகான ஒளிப்பதிவும் என் கண்முன்னே மாறி மாறி வந்து செல்வது போன்ற ஒரு கற்பனை. உண்மையில் பார்த்தால் நம்மவர்களின் கைவண்ணம், தொழில்நுட்பத்தை கையாளும் விதம் பிரமிக்க வைக்கிறது! இந்த ஹிந்தித் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நம்ம ஊர் கே ரவிசந்திரன் தான்! இவரை பற்றி தெரியாதவர்களுக்கு, இவரின் சமீபத்திய ஹிந்திப்படங்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை! இவர் ஒளிப்பதிவு செய்து வந்த ஹிந்திப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். அமிதாப் பச்சனும், கண் தெரியாமல் நடித்த ராணி முகர்ஜியும் நடித்து வந்த பிளாக் (Black) எத்தனைப்பேர் பார்த்தீர்களோ எனக்குத் தெரியாது, அதே போல் அவர் ராணி முகர்ஜியை மிகவும் அழகாக எடுத்த 'பெஹெலி' என்ற படமும், அப்படியே கண்ணில் ஒத்திக் கொள்ளலாம்!

இவர் நம்மூரில் வந்த நம் மணியின் 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து' மற்றும் ஷங்கரின் பாய்ஸ் படத்திற்கும் ஒளிப்பதிவாளாராக பணியாற்றி உள்ளார். இன்றைக்கு மிகபிரபலபாமாக இருக்கும் அனைத்தும் முன்னனி நடிகைகளும், முக்கியமாக ராணி முகர்ஜியும், ப்ரீத்தி ஜிந்தாவும் இவர் தன்னை படம்பிடித்தால் தான் தாங்கள் திரையில் அழகாக இருக்கிறோம் எனக் கூறுகின்றனர்! அப்படி என்ன படம் பிடித்துவிட்டார் என கேட்பவர்களுக்கு, நாம் இத்தனை சினிமா பார்க்கிறோம், ஆனால் அத்தனை படங்களுக் கண்ணுக்கு குளிமையாக இதமாகவும், காதல் காட்சிகளை இரசம் சொட்ட படம் பிடித்து காண்பிக்கும் இந்த கலையானது ஆங்கிலத்தில் சினிமெட்டோகிராபி என்றழைக்கப்படும் இத்தொழில் நுட்பம் பற்றி எத்தனைப் பேருக்கு தெரியும்? அதைத் தான் என்னெவென்று கொஞ்சம் உள்ளே போய் பார்ப்போமா?

இந்த சினிமெட்டோகிராபி என்னும் ஒளிப்பதிவு செய்யும் தொழில் நுட்பம் நமக்கு என்னவென்று அரசல் புரசலாக புரிய வைத்தது பாலு மகேந்திராவும், அசோக்குமாரும் தான்! அதற்கு முன் நிறைய கேமிரா மேதைகள் தமிழ் சினிமாவில் இருந்துள்ளனர். ஏன், நம் கேமிரா மேதை கர்ணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த காலத்தில் நான் சின்னப்பிள்ளையாக இருந்த பொழுது வந்த சில ஜேம்ஸ்பாண்டு படங்களை இயக்கி ஒளிப்பதிவு செய்தவர் தான் இவர். அந்த காலத்தில வந்த, கங்கா, கெளபாய் குள்ளன், நான்கு சுவர்கள் போன்ற படங்கள் புகழ் பெற்றவை. இவரது கேமிரா கோணங்களும், அதிரடி சண்டைக்காட்சிகளும், குதிரை விரட்டு, துப்பாக்கி சண்டை போன்ற காட்சிகளின் கோணங்கள், அந்த கால ஹாலிவுட் படங்களுக்கு இணையாகப் பேசப்படுவதுண்டு! அப்படியே கொஞ்சம் செக்ஸ் காட்சிகளும் தூக்கலாக இருக்கும். அப்படி வந்த படம் ஒன்று 'எங்கப்பாட்டன் சொத்து' அதில் நடித்த நடிகை ராஜ்மல்லிகா, இப்பொழுது நடிக்கும் நடிகை மீனாவின் தாயார்! ஆற்றில் குளித்த காட்சிகள் மிகப்பிரபலம், அதற்காகவே இப்படங்கள் எல்லாம் நூறு நாட்கள் ஓடியவை!

ஆனால், கேமிரா, படப்பிடிப்பு என்பதை மூக்கில் கைவைத்துக்கொண்டு பார்க்க துவங்கியது, பாலுமகேந்திராவின் படங்கள் வந்தப்பிறகு தான்! அவர் அதிகமாக எடுத்து காண்பித்த ஊட்டியை நீங்கள் நேரில் போய் பார்த்தாலும் அவ்வளவு அழகாக இருக்காது! அந்தக் கால அழியாதக் கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, முள்ளும் மலரும் மற்றும் அசோக்குமாரின் உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக்கிள்ளாதே போன்ற படங்களில் வந்த ஊட்டியை தேடிபிடிக்க நான் பல நாள் ஊட்டி சென்றதுண்டு. அதுவும் கருத்த மேகங்களும், மலைச்சாரல்களும், வானவில் பிம்பங்களும், நீர் நிலை ஏரி, தோப்பு துரவுகள் என கண்ணைப்பறிக்கும் காட்சிகளை ரசித்ததுண்டு. ஆனால் இந்த அத்தனையும் தொழில்நுட்பமும், ஒளிப்பதிவாளரின் உழைப்பும் எவ்வளவு என்பதை என்றாவது அறிய முற்பட்டிருக்கீற்களா?

இந்த சினிமெட்டோகிராபி என்பது கேமிராவினுள் சினிமாவிற்காக பிம்பத்தை சரியான ஒளிக் கலவையில் பதிவு செய்யும் தொழில்நுட்பம்! அது நிழல் படங்களாக இருந்தாலும் சரி இல்லை ஓடும் படங்களாக இருந்தாலும் சரி! அதை சரியாக சொல்ல வேண்டுமென்றால், படைப்பாளிகள் தங்களின் கலை நுணுக்கத்தையும், தொடரும் நிகழ்ச்சிகளையும் அழகுப்பட பதிவு செய்வதே சினிமெட்டோகிராபி ஆகும்! இதன் ஆரம்பம் ஃபிலிம் என்ற படச்சுருள் தான், சரியான படச்சுருளை தேர்வு செய்வதிலிருந்து ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரின் வேலை ஆரம்பமாகிறது. இந்த படச்சுருள்களின் அளவு 8மிமீ, 16மிமீ, 35மிமீ, 65மிமீ என பல உண்டு. அதில் பெரும்பாலும் உபயோகப்படுவது 35மிமீ படச்சுருள்கள் தான்! பிறகு ஒளியின் வேகம் இரண்டாவது அளவு, அதாவது ஒளி எந்த வேகத்திலே அந்த படச்சுருளில் இரசாயாண மாற்றத்தை உண்டு பண்ணுகிறதோ அதை கொண்டு படப்பதிவு செய்வதே! அதன் அளவு ISO 50(மிக கம்மியான ஒளியின் வேகம்) லிருந்து 800(மிக அதிவேக ஒளிப்பதிவு) வரை உண்டு! அடுத்து வண்ணக்கலவையின் வெளிப்பாடு, நிறங்களின் பதிமம்! இது குறைந்த அளவிலும், அதிக அளவிலும் (Low Staturation, High Staturation), மற்றும் வண்ண ஏற்ற இறக்க வேறுபாடு (Contrast)களின் செயல்பாடு! இது படச்சுருளை ஒளியின் அளவை புகுத்தி பதிவாக்குது, அதாவது எக்ஸ்போஸர் என்றழைப்பது, அதிகம் திறந்தால் வெள்ளை, இழுத்து மூடி, ஒளி இல்லையேல் கறுப்பு, இது தான் இதன் சூட்சமம்! முதலில் இந்த ஃபிலிம் ரோல் ஸ்டாக் என்பதை தேர்வு செய்வதே மிக முக்கியமான வேலை. ஆனால் நான் கூறிய அனைத்தும், இந்த டிஜிட்டல் சினிமாவில் கேமிராவின் கைவண்ணம் தான், வேறொன்றுமில்லை, ஆனால் படச்சுருள் கொண்டு செய்யப்படும் ஒளிப்பதிவில், இவை அத்தனையும் ரசயானமாற்றத்தில் ஒளி ஊடுறுகையால் சரியாக நிகழவேண்டும், அதற்கு முக்கியமாக அதை கையாண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர் சினிமெட்டோகிராபர் என்கிற ஒளிப்பதிவாளரே!

இதற்கடுத்தது, இதை லேபில் செய்யப்படும் ஃபிலிம் ப்ராஸசிங் என்ற வேலை, சரியான மிதமான தட்பவெப்ப நிலையிலே, பதிவு செய்யப்பட்ட படச்சுருளை இரசாயணத் திரவங்களில் முக்கி அதன் இரசயாண மாற்றங்களை கவனமாக கண்காணித்து நெகட்டிவ் என்ற பதிவான பிம்பச் சுருளை டெவெலெப் செய்து உருவாக்குவதே, இதிலும் சினிமெட்டோகிராபரின் கைவண்னம் நிறைய உண்டு!

அடுத்து ஃபில்ட்டர்கள் என்றழைக்கப்படும் வண்ணத்தடுப்புகளை அளவாக உபயோகித்து எடுக்கப்படும் காட்சிகள். இது போன்ற காட்சிகள் பல அந்த காலத்தில் பார்த்து 'பில்டர் போட்டு எடுத்துருக்காண்டா' என்று சிலாகித்த நேரங்கள் நிறைய உண்டு! பாலுமகேந்திராவின் அக்காலப்படங்களை இது போன்ற வண்ண தனிமங்கள் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் நிறைய பார்த்திருப்போம். விடியங்காலையில் நடக்கும் நிகழ்சிகளையோ, இருண்ட மேகத்துடன் பனி விழும் மழை காட்சிகள் என இப்படி நிறைய. சில நல்ல வெயில் நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தில் ஒரு விதமான மூடு வர வேண்டுமென இது போன்ற பில்டர்கள் போட்டு எடுப்பதுண்டு. சில ராத்திரி நேரக்காட்சிகள், 'நிலாக்காயுது, நேரம் நல்ல நேரம்' போன்ற கயித்து கட்டில் காட்சிகள் எடுக்க இந்த ஃபில்டர்களின் உத்தி ரொம்ப பிரசித்தம்!

அடுத்து லென்ஸ் எனப்படுபவை ஒளிப்பதிவாளருக்கு முக்கியம். எப்படி பட்ட தூரக்காட்சிகளோ, இல்லை அருகில் நடக்கும் காட்சிகளை பிடிக்க சரியான் லென்ஸ்களை உப்யோகிப்பது! இந்த கேமிரா என்பது நம் கண் என்ன செய்யுமோ அதை செய்யும்! தூரத்தில் உள்ள பொருட்களையும் அருகில் உள்ள பொருட்களையும் எவ்வாறு அளவாக பார்க்கமுடிகிறதோ அதை இந்த கேமிராக்களும் செய்து படப்பதிவு செய்யும். ஆனால் இந்த தன்மையை நமது ஒளிப்பதிவாளர்கள் மாற்றலாம். அதற்காக அவர்கள் உபயோகப்படுத்தும் லென்ஸ்கள், டெலிபோட்டோ லென்ஸ், நார்மல் லென்ஸ், மற்றும் வைட் ஆங்கிள் லென்ஸ், Zoom லென்ஸ் என பல வகைகள் உள்ளன! இவை அனைத்தும் ஒளிக்கதிர்களை குவியவைக்கும் அளவை மாற்றக்கூடியவை. இந்த ஒளிகுவியும் தூரத்தை ஆங்கிலத்தில் 'focula length' என்பார்கள். நார்மல் லென்ஸ் என்பது உதாரணமாக கேமிராவுக்குள் எடுக்கப்படும் பிம்பத்தின் அளவு என்ன தெரிகிறதோ, அதே தான் படமாக வெளிவரும், ஆனால் டெலிபோட்டோ லென்ஸ் என்பது அந்த குவியும் தூரத்தை ('focula length') அதிகபடுத்தவது, அதனால் மிக தூரத்தில் உள்ள பொருட்களும் சிறப்பாக பதிவாகும், ஆனால் வைட் ஆங்கிள் லென்ஸில் இந்த குவியும் தூரம் மிகக்குறைவாக இருக்கும். ஆக இதை கொண்டு படம் எடுக்கும் அளவு, காட்சி அமைப்பு போன்றவற்றிற்கு தகுந்தால் போல் மாற்றி எடுக்க ஏதுவாக இருக்கும்! சிலசமயம் கதாநாயகி கீழிருந்து மேலே காண்பிக்கவும், கன்ஃபைட் காஞ்சனா போல காலை தூக்கி சண்டை போடும் காட்சிகளையும் இந்த வைட் ஆங்கிள் கேமிராவில் எடுத்து ரசிகர்களை உச்சத்துக்கும் கொண்டு செல்வார்கள்!

சில சமயம் தூரத்தில் உள்ளவர்களை பளிச்சென்றும், அருகில் உள்ளவர்களை மங்கியும், அதே போல் அருகில் உள்ளவர்களை பளிச்சென்றும் தூரத்தில் உள்ளவர்களை மங்கியும் உணர்ச்சியுடன் கூடிய வசனங்களை ஒளிப்பதிவு செய்த காட்சிகளை நீங்கள் நிறைய சினிமாவில் பார்த்திருக்கலாம். இந்த வித்தையை ஆங்கிலத்தில் 'Depth of field and focus' என்பார்கள். இதன் மூலம் background, mid-ground and foreground என்பது எவ்வளவு அளவாக போக்கஸ் செய்யவேண்டும் என்கிற வித்தை தான்! அதாவது கேமிராவின் கண்திறப்பை (iris aperture) குறுக்கி அதிக தூரத்தில் உள்ளப் பொருளை போக்கஸ் செய்வது 'டீப் போக்கஸ்'(Deep focus)என்பது, அதையே கேமிராவின் கண்ணை பெரிதாக திறந்து அருகில் உள்ள பொரூளை போக்கஸ் செய்வது 'ஷேலோ போக்கஸ்'(Shallow focus) இந்த வித்தை வைத்து அமைக்கப்பட்ட காட்சிகள் பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களில் நீங்கள் அதிகம் பார்க்கலாம். இப்பொழுது எடுக்கப்படும் இந்த 'ஷேலோ போக்கஸ்' பட்ங்களுக்கு ஆரம்பமே அந்த கால நிவாஸ் எடுத்த காட்சிகள் தான்! ( இந்த பொம்மை போட்டாவை பாருங்கள், மேலே உள்ளது 'Shallow focus', கீழே உள்ளது 'Deep focus')

அடுத்து முக்கியமான ஒன்னு ஆஸ்பெக்ட் ரேஸ்யு ('Aspect Ratio') என்பது. இதை வச்சுதான் சினிமாஸ்கோப்பு, 70MM எல்லாம் வருவது. பொதுவாக ஒரு படம் என்றால் அதன் அகல உயரத்திற்குண்டான அளவு தான் ஆஸ்பெக்ட் ரேஸ்யு என்பது. டெலிவிஷனில் தெரிவது 1.33:1, அதுவே இப்பொழுது வரும் சினிமாவிற்கான அளவு 1.85:1, ஆனால் பழைய 35MM படங்களுக்கு உண்டான அளவு 1.37:1 தான்! பிறகு வந்த ராஜாராஜ சோழன் படம் சினிமாஸ்கோப்பு படம், அதன் அளவு 2.66:1, அதாவது முதலில் வந்த அகலத்தை இரண்டுமடங்காக்கி காண்பிப்பது. ஆனால் தொழில்நுட்பம் வளர வளர, இந்த அகல உயர விகிதாச்சாரம் மாறி இப்பொழுது 1.85:1ல் வந்து நிற்கிறது இதெற்கென தனியாக உள்ள 'anamorphic lens' களை உபயோகித்து வைட் ஸ்கிரீன் படங்களின் உயரத்தை அதிகபடுத்தி காட்டலாம்

அடுத்து லைட்டிங் என்பது, இதை சரியான முறையிலே அமைத்து காட்சிகளை எடுப்பது மிகவும் முக்கியம். இந்த லைட்டிங் சரியாக செட் ஆகாமல் மூட் அவ்ட் ஆகி படம் பிடிக்காமல் பேக்கப் என்ற அதிக தடவை பாலு மகேந்திரா கூறியதாக நிறைய கதைகள் படித்ததுண்டு. ஆனால் அது உண்மையே! மிகவும் விஷவாலாக காட்சிகளை சொல்ல, வசனங்களின்றி, இந்த லைட்டிங் முக்கியம். நமது மகேந்திரனின் படங்களுக்கு மிகவும் கைகொடுத்தவர் அசோக் குமார். அதே போல பாராதிராஜாவுக்கு, நிவாஸ்ஸும், கண்ணனும் நல்ல ஒளிப்பதிவை செய்து அருமையான விஷவல்களை அவர்கள் படங்களில் அள்ளிக் கொடுத்தனர்! மேற்கொண்டு மணிரத்தினத்தின் இருட்டு படங்களை சில சமயம் பார்க்கும் போது நம்மை ஏதோ செய்ய வைத்ததும் உண்மை, ஆக ஒரு படத்தின் ஒளிப்பதிவின் வெற்றி லைட்டிங், பேக்ரவுண்டு போன்றவற்றின் தன்மைகளே!

அடுத்தது கேமிரா மூவ்மெண்ட் என்பது, அதாவது படம் பார்க்கும் நாம் எந்த வகையிலிருந்து காட்சிகளை பார்க்க வேண்டும் என்பதை நகர்த்தி படம் பிடிப்பதே! நீங்களும் நிறையப்பேர் டிராலி ஷாட், கிரேன் ஷாட் என்றெல்லாம் கேள்விபட்டிருப்பீர்கள், அனைத்தும் இந்த கேமிரா நகர்வுகளே! பெரும்பாலான இயக்குனர்கள், கதை சொல்லுபவர்கள், கேமிரா வழியே கதை சொல்வதையும் பார்த்திருப்பீர்கள் சில சமயம் படங்களில், கற்பனைக்கு
"சார் காலையில பீச்சிலே ஓடி வரா சார் கதாநாயகி, அலை கரையில புரண்டு வர்றதை ஒரு லாங்ஷாட்ல எடுக்கிறோம், பிறகு கீழ்வானத்திலே இருந்து வர சூரியனை ஒரு குளோஸ் போக்கஸ் சார் அப்புறம் கதாநாயகி அப்படி தலையை சிலுப்பி ஓட ஆரம்பிக்கிறதை ஒரு கிரேன் ஷாட்ல காமிச்சு, குளோஸப்பல சூம் பண்ணி, இதான் சார் ஓப்பினிங்"

இந்த மாதிரி காட்சிகளை கேமிரா மூவ்மெண்ட்ல எந்தெந்த வகையிலே எடுக்க முடியுமோ அப்படியெல்லாம் நகர்த்தி எடுப்பது! எல்லாமே கொஞ்சம் உத்து கவனிச்சீங்கன்னா, நம்ம தலையை திருப்பி பார்த்தா எப்படி உருவங்கள் நகருமோ, அதே மாதிரி நகர்வுகள், மேலே இருந்து, கீழே ரயிலிங்ல அப்படி சுத்தி வந்து பிடிக்கிறது, இப்படி எத்தனையோ அசைவுகள் மூலமா படம் பிடிக்கிறது!

அதே மாதிரி கேமராவை கையிலே தூக்கிக்கிட்டு, தோள்ல கட்டிக்கிட்டு, சைக்கிள்ல வச்சிக்கிட்டு ஓடிவரும் காட்சிகள் அப்படின்னு ஒளிப்பதிவாளர் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை! அப்படி படம் எடுக்கிற சிறந்த ஒளிப்பதிவாளர்கள் எல்லாம் நம்ம தமிழ் படவுலகிலருந்து போய் ஹிந்தி பட உலகிலே பேரு வாங்கினவங்க, திரு, ராஜிவ் மேனேன், பிசி ஸ்ரீராம், கேவி ஆனந்த், சந்தோஷ் சிவம் அப்படின்னு நிறைய பேரை சொல்லிக்கிட்டே போகலாம்!

இதென்னிலே ஸ்பெஷல் எபெக்ட்ஸ்ன்னுட்டு கேமிராவிலேயே பண்றது அது தனி, அதை 'In-camera effect'ன்னு சொல்வாங்க! அப்புறம் வெளிச்சத்திலே வித்தை, பிறகு இருக்கவே இருக்கு கிராபிக்ஸ், டிஜிட்டல் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் இது எல்லாம்! இதை பத்தி சொல்லுனும்னா நான் ஒரு தனி பதிவு போட்டாகணும்!

ஆக இதையெல்லாம் இயக்கி, படங்களின் பிம்பத்தின் அத்தனை தன்மைகளை, லைட்டிங், லென்ஸ், வண்ணக்கலவை, எக்ஸ்போஸர், பில்டர், பிலிம் செலக்ஷன் என்று அனத்தையும் கையாண்டு அழகான படங்களை உருவாக்கி கொடுக்கிறவங்க தான் இந்த ஒளிப்பதிவாளர்கள். அவர்கள் கையாளும் இந்த தொழில்நுட்பமே இந்த சினிமெட்டோகிராபி. அதில் நம்மவர்களின் வல்லமை இந்த வளர்ந்த நாடுகளின் தயாரிக்கும் படங்களுக்கு சமமாக இருப்பதில் மகிழ்ச்சியே. ஆனால், நமக்கு பின்னால் தொழில் கற்ற இந்த ஹாங்காங்கிலிருந்து வரும் ஜாக்கி சான் போன்றோர்கள் இப்பொழுது இந்த ஹாலிவுட்டை ஆளும் பொழுது, நம்மவரின் திறமை எப்பொழுது இங்கே ஆளுமை செய்யபோகிறது?

Monday, February 20, 2006

தேடினேன் வந்தது-கூகுளின் அசூர வளர்ச்சி!

கணனியை பயன்படுத்துறவங்க எல்லாரும் கூகுளை பயன் படுத்தாம இருக்கமாட்டங்க. எதை நீங்க இணயத்தில தேடனும்னு உட்கார்ந்தாலும், எல்லாரும் முதல்ல போற இடம் கூகுள் தான். அந்த கம்பனி எங்க ஆரம்பிச்சது தெரியுமா? காரு கேரேஜ்லதான். அதை ஆரம்பிச்சது இரண்டு இளைஞர்கள், 'லேரி பேஜ்' மற்றும் 'செர்கி பிரின்'. அவங்க பிஎச்டி படிக்கிறப்ப, அவங்க ஆராஞ்சு கண்டுபிடிச்ச 'தேடுபொறி' தான் இந்த கூகுளுக்கே மூலதனம். அவங்க படிச்சது கலிபோர்னியால இருக்கிற ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம். அதுக்கப்பறம் வாய்மூலமா சொல்லப்பட்ட இந்த கூகுள் எல்லாரும் விரும்பி எந்த விஷயத்தையும் இணையத்தில தேட இலகுவா உண்டாக்கப்பட்ட கருவி.


இந்த கம்பனியோட சாராம்சம், விளம்பரங்கள் இருந்து வர வருமானம் தான். இன்னைக்கு அசூரத்தனமா வளர்ந்து 100 பில்லியன் டாலர்களை தொட்டு விட்டது. அதனுடய பங்கு இன்னைக்கு $475 வரைக்கும் உச்சாணியிலே போயுடுச்சி. வெறும் சாதாரணமா அதன் பங்கு, $85 ஆரம்பிச்சது IPO மூலியமா!இவ்வளவு அசுரத்தனமா வளர்ச்சி அடைஞ்ச இந்த கம்பனி, இது கொடுக்கிற அத்தனை வசதிகளும் நம் போன்ற சாதரண மக்களுக்கு இலவசமா கொடுக்குது. அதாவது சொற்பதங்களை வச்சு, எந்த ஒரு விஷயத்தை தேடிறதுல இருந்து, ஜிமெயில், மேப், அப்புறம் எங்க ப்ளாக் சைட் Analytics, ஒலியும் ஒளியும் பிம்பங்கள் சேகரிப்புன்னு எத்தனையோ! இதனுடய பரம தொழில் முறை எதிரிங்க 'yahoo' மற்றும் 'Microsoft' எப்பவேனாலும் இவங்களால ஆபத்து வர வாய்ப்பு உண்டு. ஆனா எதையும் பத்தி கவலைப்படாமா தொழில்நுட்ப முன்னேற்றத்தில கவனம் செலுத்தி புது புது வசதிகளை நம் போன்று இணையத்தை உபயோகபடுத்திறவங்களுக்கு செய்து கொடுத்துக்கிட்டே இருக்கு. இன்னும் நிறைய இலவசமா வசதிகளை செய்ய முனைப்புடன் இருக்காங்க, அது மாதிரி ஒரு 100 வசதிகள் அவங்க லிஸ்ட்ல இருக்கு, அதில ஒன்னு 'space Elevator', அதாவது பூமியிலருந்து நிலவுக்கு சாமான்களை எடுத்த செல்லும் வாகனம்!

இவ்வளவு பெரிய வளர்ச்சியை ஏழாண்டுகளுக்குள்ள அடைஞ்சிருக்கு. இதனுடய இந்த அசூரத்தனமான வளர்ச்சியை எந்த மீடியா கம்பனிங்களும் இது வரை காணல. எல்லாம் அந்த 30 வயசு தாண்டின இந்த இரு இளைஞர்களால. இருந்தும் கம்பனிக்கு பெரிசு ஒன்னு வேணும்னு, ஏன்னா என்னதான் புத்திசாலித்தனம் இருந்தாலும், அனுபவரீதியா வழி நடத்த ஒருத்தர் வேணும்னு, 'எரிக் ஸ்க்மிட்'னு 51 வயசுகாரர், 'Sun Micro System'த்தில வேலை செஞ்சவரு இந்த கம்பனி CEO வாக்கி ஆளுமை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதில விஷேஷம் என்னான்னா, இந்த இரு இளைஞர்களும் எந்த பெரிய 'Business School' போயி படிக்கல்ல, ஆனா அவங்க படிச்ச பள்ளி படிப்பு, வியாபர உத்திகளை சின்ன புள்ளையிலருந்தே அவங்க கிட்ட வளர்ந்த 'Entrepreneurship' திறன் தான் இந்த இமாலய வளர்ச்சிக்கு பெரும் உதவினது.

இந்த குழந்தைத்தனமான ஆர்வம் தான், இவங்களோட இந்த வளர்ச்சிக்கு காரணம், இந்த பேஜ், மிச்சிகன் மாகாணத்தில் பிறந்தவர் இவரது தந்தை கணனி பேராசிரியர், தாயும் ஒரு கணனி ஆசிரியர். சிறு வயசிலே சிறு ரேடியா மற்றும் எலக்ட்ரானிக் உபகரண்களை கொண்டு விளையாட்டு களில் நாட்டம் செலுத்தியவர். இசையிலும் மிகுந்த ஆர்வமுடையவர், அஞ்சலி, அஞ்சலி பாட்டுக்குள் வரும் செக்ஸாபோன் தான் இவர் விரும்பி வாசிக்கும் இசைக்கருவி. ஆனால் பிரின், பிறப்பால் ஒரு ரஷ்யர், 1970களில் அமெரிக்காவிற்கு அவரது பெற்றோர்கள் குடி புகுந்தனர். சிறுவயதில் சர்க்கஸ் பள்ளியில் பயின்றவர். அதாவது சர்க்கஸ் தொடங்கும் போதோ முடியும் போதோ கடசியில நெட்கட்டி, பார் விளையாடுவாங்களே , அந்த விளையட்டு. அதை கற்றுக்கொண்டவர். பாருங்க சின்ன வயசில எப்படி விநோதமான பொழுது போக்குகள்ல எல்லாம் ஈடுபடறாங்கன்னு. நமக்கு சர்வமும் சினிமான்னு தான் பொழுது போகும்!

ஆக இந்த கூகுளின் அசகாய வளர்ச்சிக்கு பெரும் பங்கு இந்த இரட்டையர்கள் தான். இந்த கூகுள்ங்கிற பேர் வந்த மூலக்காரணம் தெரியுமா. அதாவது அவங்க கண்டு பிடிச்ச அந்த 'தேடுதல்' திறனுக்கு பேர் சூட்டினது முதல்ல 'Googol'. அதாவது, இந்த ஆங்கில பதம் குறிப்பது கணிதத்தில் வர நம்பர், அதாவது ஒன்றுக்கு பிறகு நூறு பூஜ்யங்களை கொண்ட நம்பர், ஆனால், அது சற்றே திரிந்து 'Google' ஆயுடுச்சி! இன்னொன்னு, இவங்க வியாபார உத்தியே தனி, அதாவது விளம்பரதாரர்கள்கிட்ட இருந்து தான் வருமானமே. ஆனா ஜாஸ்தி காசு கொடுத்தா, நம்ம விளம்பரம் அந்த 'தேடுதல்' பக்கத்தில முன்ன வரணும்ன்கிற கட்டாயம் கிடையாது. ஜனங்க எவ்வளவுக்கெவ்வளவு அதிகமா, உங்க விளம்பரங்களின் சுட்டியை தொட்டு, உங்க பக்கத்துக்கு வாரோங்களோ அதுக்கு தகுந்த மாதிரி காசு கொடுக்கணும், அதாவது நம் போன்ற மக்கள் எவ்வளவு விரும்பி அந்த விளம்பரத்துக்கு போறோம்ங்கிறதுதான் இங்கே முக்கியம். இதனால் விளம்பரதாரருக்கும் மகிழ்ச்சி, நம்மை போன்ற உபயோகாதாரருக்கும் மகிழ்ச்சி, கூகுளுக்கும் அதிக வருமானம். இது போன்ற புத்திசாலித்தனமான உத்திகள் நிறைய பின்பற்றரதுனால தான், இந்த அசகாய வளர்ச்சி! இவங்களோட இந்த புத்திசாலித்தனமான உத்திகள்ல சில சர்ச்சைக்குறியதுக்கூட, அதில முக்கியமா ஜிமெயில் வரும் மடல்களை ஸ்கேன் செஞ்சு, அதில வர பதங்களுக்கு ஏத்த மாதிரி விளம்பர சுட்டிகளை இணக்கிறது. இது ஒரு நல்ல வியாபார உத்திதான், ஆனா, ப்ரைவசிக்கு வேட்டு வைக்கறதால இதற்கு நிறைய எதிர்ப்பு!

இப்ப ஆங்கில மொழிய விட்டு உலகத்தில இருக்கிற அத்தனை மொழி தேடல் பொறிகளை ஆக்கிரமிக்க மும்மரமா இருக்காங்க இந்த கூகுள் நிறுவனத்தினர். அதானால, சீனா, இந்திய மொழிகள்லயும் மெதுவா நுழைஞ்சு ஆதிக்கம் படைக்க தயாராகிட்டாங்க! ஆக எதை தேடினாலும் இனி வந்து விடும். அதானல தான் இந்த பதிவே 'தேடினேன் வந்தது'

எனக்கு என்னமோ இந்த கூகுள் வளர்ச்சியை பத்தி எழுதனும்னு தோணுச்சி, ஏன்னா நம்மவங்கிட்ட இருக்கும் அசாத்திய திறமையில நம்மலால மென்பொருள் எழுத்தாளாரா உலகம் வியக்க நிக்க முடிஞ்சதே தவிர, இது போன்ற ஒரு தனித்துவமா பெரிய கம்பனி உருவாக்கி சாதனை படைக்க முடியல நம் ஊர் இளைஞர்களாலே! கொஞ்சமா கொஞ்சமா சராசரி வேலைகளை நம்மல மாதிரி நாட்டுக்கு அனுப்பி, நம்மக்கிட்ட இருக்குக்கூடிய இந்த மக்கள் கூட்டம்ங்கிற விலை மதிக்க முடியாத சொத்துக்களை கம்மியான விலையிலே உபயோகம் பண்ண சரியா தெரிஞ்சு வச்சிருக்காங்க இந்த அமெரிக்காவினர். அதனால தான் இங்கிருக்கிற அமெரிக்கர்கள், INNOVATION பத்தி எப்பவும் சிந்தனையோட இருக்கிறதால, அவங்காளால உலகை ஜெயிக்க முடியுது. இதை பத்தி அநேகமா நேரம் கிடைக்கிறப்ப பிறகு நிறைய எழுதலாமுன்னு இருக்கேன்.