
நீங்க வெறும் சாஃப்ட்வேர் எழுதியோ, இல்லா கூலிக்கு மாரடிச்சு மாசம் ஒன்னாம் தேதி ஆனா சம்பளம் வாங்கி பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்திர ஆசாமியா இருந்தீங்கன்ன்னா ஒரு மண்ணும் புரியாது. கொஞ்சம் வியாபரம், பங்கு சந்தைன்னு அலைஞ்சு திரிஞ்சிருந்தாலோ, இல்லை கடை கண்ணின்னு வியாபரம் செய்ற குடும்ப சூழ்நிலையிலே இருந்து வந்திருந்தாலோ, இல்லை உண்மையிலே திராவிடம், இந்து, பிராமணன், அப்படின்னு வெட்டி சண்டை தமிழ்மணத்திலே போடாமா, அப்புறம் ஆரஞ்சு ஜீஸ் எப்படி குடிக்கலாமுன்னு நகைச்சுவைப் பண்ணிக்கிட்டு திரியாம இப்படி சீரியஸா இந்த பிஸினஸ் விஷயங்கள்ல ஆர்வம் இருந்து தெரிஞ்சுக்கிறவங்களா இருந்தா இந்த Mergers and Acquisitions (M&A) பத்தி தெரிஞ்சிருக்கிற வாய்ப்புண்டு!
இந்த 'M&A' ங்கிறது நம்ம வெத்திலை பாக்கு கடை நடத்தி வர்றவங்களுக்குக்கூட தெரிஞ்ச ஒன்னு தான், அதாவது, 'அந்த மூணாவது கடை ஒன்னு வருது அதை எப்படியாவது வாங்கி போட்டுட்டா இன்னும் கொஞ்சம் பெரிசா வியாபரம் பண்ணலாமுன்னு' நம்மூர் சின்ன வியாபாரிங்கள்ல இருந்து பெரிய பெரிய கார்ப்ரேட் வரை சிந்திக்கிற மற்றும் செய்யக்கூடிய விஷயம் தான்! என்ன நம்மூரு வெத்திலைப்பாக்கு கடைவியாபரி மொத்தமா காசை சேர்த்து, இல்லை அங்கே இங்கே கடனை வாங்கி அந்த வர்ற கடையை வாங்கிப் போட்டுடுவாரு, ஆனா கார்ப்ரேட் உலகத்தில அதுவே 'Share Purchase'ன்ன்னு ஒன்னு போகும் இல்லை 'Asset Purchase'ன்னு போகும்! இங்கேயும் கம்பெனிங்க சொந்த காசு போட்டும் வாங்கும், இல்லை இதுக்குன்னு கடன் கொடுக்கிற பேங்க்குங்க உண்டு, அங்கிருந்தும் வாங்கும். சிலசமயம் அந்த பேங்குங்களே எல்லா வேலையும் செஞ்சு கொடுத்து இந்த தன்மயமாக்குதலை நடத்தி வைக்கும், அவங்க தான் இடை தரகர் வேலை பார்ப்பாங்க, அதனாலே அவங்களை 'intermediaries', 'business brokers', இல்லை 'investment bankers' ன்னு அழைப்பாங்க! இந்த M&A யோட நோக்கம் என்னான்னா, முதல்ல 'Economies of scale', அதாவது இணைக்கப்பட்ட கம்பெனிகள் பிரம்மாண்டமா செயல்படும் போது அவசியமில்லா, இல்லை டூப்ளிகேட்டா இருக்கக்கூடிய சில துறைகளை வெட்டி, கம்பெனி உற்பத்தி செலவுகளை குறைச்சி அதிகம் லாபம் ஈட்டுவது, சந்தையிலே தன்னுடய பொருட்களின் விற்பனை சதவீதத்தை பெருக்க, வரி வட்டிகளை குறைக்க, புதுசான இடங்கள்ல பொருளை வித்து அங்க தன்னுடய சந்தையை பிடிக்க, தன்னிடம் இல்லாத வாங்கப்படும் கம்பெனிகளின் வேறு திறன்களால் அதிகம் லாபம் ஈட்ட, அப்பறம் 'Vertical Integration' ன்னு சொல்லிட்டு இந்த கருப்பொருள்ல இருந்து உற்பத்தி, விற்பனை, சந்தைக்கு எடுத்து செல்லல் என்று அனைத்து துறைகளையும் உள்ளடக்குவது, மொத்தத்திலே 'Supply Chain Management'ன்னு சொல்லக்கூடிய அத்தனை துறைகளிலும், வாங்கும் கம்பெனியால் உள்ளடக்கி தனிபெரும் நிறுவனமாக திகழ்ந்து பெரும் லாபம் ஈட்டுவது தான்!

சரி இதிலே என்ன விஷேஷமுன்னு கேட்கிறீங்களா, இந்த மாதிரி கம்பனிங்களை வாங்கி தன்னுடமையாக்கி ஒரு பெரிய நிறுவனமாகிறது எல்லாம் கொஞ்ச காலத்துக்கு முன்னால நம்ம நாட்ல நினைச்சுப் பார்க்க முடியாது ஒன்னு. ரொம்ப காலமா வழி வழியா பெரிய வியாபர கம்பெனிகள் தலைமுறை தலைமுறையா குடும்பங்கம்பெனிகளா தான் இருந்து வந்தது, அதுவும் நமக்கு ஆரம்பத்திலே இருந்து தெரிஞ்ச டாட்டா, பிர்லா குடும்பங்கள் கட்டி காத்த பெரும் நிறுவனங்கள் தான்! அப்புறம் சாதரண மக்களுக்கும் பங்கு சந்தைன்னா என்னான்னு வழி காமிச்சு பெரி முதலாளியா உருவான திருபாய் அம்பானி ஆரம்பிச்ச அந்த மிகப்பெரிய ரிலெயன்ஸ் நிறுவனம் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா நம்ம ஊர்ல இந்த மாதிரி பெரிசா வாங்கி ராஜ்யம் அமைக்கிறதுங்கிறது அவ்வளவா நடக்காத ஒன்னு, எல்லாமே இந்த ஊரு பக்கம் தான், அதாவது, இந்த பெரிய பெரிய M&A எல்லாம் அமெரிக்கா, ஐரோப்பிய நடுகள்ல இருக்கிற கம்பெனிகள்குள்ள நடக்கிற விஷயம் மட்டுமா இருந்த ஒன்னு! எப்பவாச்சும், நம்ம நாட்டுக்குள்ளேயே கம்பெனிகளை வாங்கி பெரிய வியாபர சாம்ராஜ்யம் அமையணும்னு, அங்கொன்னும் இங்கொன்னுமா நடந்துக்கிட்டிருந்துச்சு, ஆனா இப்ப நம்ம நாட்டை விட்டுட்டு உலகத்திலே இருக்கிற பெரிய பெரிய கம்பெனியை வளைச்சிபோட்டு நம்மலும் இன்னைக்கு பெரிய ஆளா வந்துக்கிட்டிருக்கோங்கறதுதான் அங்க விஷேஷமே!

இந்த Multi-National கம்பனிங்கங்கிறது உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒன்னு, இதுவரைக்கும் நம்ம ஆளுங்க போய் அங்க உட்கார்ந்துக்கிட்டு நமக்கு படிஅளந்தா போதும்னுட்டு இருந்தோம், ஆனா இப்ப நம்ம அவங்க ஆளுங்களுக்கு படி அளக்கப்போறோம்! எப்படின்னு கேளுங்க! இந்த அயல் நாட்டு கம்பெனியை வாங்குறதுங்கிறது அவ்வளவு சுலபமான காரியம் இல்ல முன்னே எல்லாம், அதுவும் 1990க்கு முன்னே, ஏன்னா அந்நிய நாட்டு செலவானி அதுக்கு நமக்குத் தேவை. அது நம்மகிட்ட இல்ல, நம்ம கஜானா காலியாயிடுச்சின்னு, 90ல சந்திரசேகரு பிரதமாரா இருந்தப்ப நம்ம நாட்டு தங்கத்தை கொண்டி அடகு வச்ச கதை உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது, ஆனா அதுக்கப்பறம் நரசிம்மராவு ஆட்சிக்கு வந்து நம்மலோட இப்பைய பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப போட்டு வச்ச பாதை தான், இப்ப நம்ம நாட்ல அன்னிய செலவானி பொங்கி வழியுது! இப்ப கம்ப்யூட்டர் யுகம் வந்துட்டோன, சின்ன பசங்க நீங்க எல்லாம், இங்க வந்து போற நீங்க, சுலுவா நம்ம ஊர்ல எங்க வேணும்னாலும் மாத்தி, பச்சை டாலர் நோட்டை பச்சக்குன்னு பாக்கெட்ல சொருவிட்டு சும்மா ஜாலியா ஃபைளைட் புடிச்சு, இங்க வந்து கொண்டு வந்த காசை டேபிள் டான்ஸ், லேப் டான்ஸுன்னு வேட்டு விட்டுக்கிட்டு இருக்கீங்க! ஆனா அந்த 90ல பறந்து வந்த எங்களை கேளுங்க, இதை கொண்டு வர்றதுக்குள்ள நாங்க பட்ட சிரமம் என்னான்னு எங்களுக்குத் தெரியும்! அதுக்கு முன்னே அமெரிக்கா படிக்க வந்த நம்ம அண்ணமாருங்க வெறும் பத்து டாலர் எடுத்து வர்ற பட்ட பாடு இருக்கே, அப்படி கையிலே எந்த காசும் இல்லாம இங்க வந்து முன்னேறினவங்க கதை கேட்டுப்பாருங்க தெரியும்!
எதுக்கு சொல்றேன்னா, அப்ப இந்த கம்பெனிங்களும் அன்னியசெலவானியை தண்ணி மாதிரி இஷ்டம் போல போட்டு கரைச்சிட முடியாது அதுக்கு அப்ப இருந்த Foreign Exchange Regulation Act (FERA)சட்டம் அப்படி, நம்ம நாடல இருந்து அவ்வளவு சீக்கிரம் இந்த அன்னியச்செலவானியை(Foreign Exchange), அதான் நம்ம ரூவாயை டாலரை மாத்தி எதுவும் வாங்கிட முடியாது! 90ல ஆரம்பிச்ச இந்த மாற்றம், நம்ம சிதம்பரம், மன்மோகன், மிஸ்ரா மாதிரி ஆளுங்களால கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தோம், அந்நியச்செலவானியும் பெருகுச்சு ( இந்த அந்நியச்செலவானி பெருகிறது எப்படின்னு தெரிஞ்சுக்குனும்னா, கொஞ்சம் ஏற்றுமதி, இறக்குமதி சாமாச்சாரங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கினும், அதை பத்தி பதிவுகளை பொங்குதமிழில் படிக்குனும்னா நம்ம தமிழ் சசி எழுதுறதை அப்ப அப்ப பாருங்க) , இந்த சட்டத்தை ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னே Foreign Exchange Management Act (FEMA)வா மாத்தி இன்னும் சுலுவாக்கிட்டாங்க இப்ப, அதான் காசு இருந்த நம்ம கம்பெனிங்க எல்லாம் உலக கம்பெனிங்களை வாங்கி போட்டுடலாம்!

இப்ப அப்படி தான் சுமார் இந்த வருஷத்திலே இது வரைக்கும் 115 Acquisitions நடந்திருக்கு அதுவும் மொத்தம் 18 பில்லியன் டாலர்கள் மதிப்புல, அதே மாதிரி 8 பில்லியன் டாலர்கள் நம்ம நாட்க்கு முதலீடு செய்ய வந்திருக்கு! இந்த தன்னுடமையாக்கல்(Acquisition)இந்த வருஷம் 130க்கு மேலே போகும்னு சொல்றாங்க, அது என்னான்னு தெரிஞ்சுக்கும்னா இதோ சுட்டி. ஆக இனி வரும் நாட்கள்ல இது மாதிரி பெரிய பெரிய கம்பெனிகளை வளைச்சிப்போட்டு எல்லாம் நம்ம கையிலே வர வாய்ப்பிருக்கு! அதுக்கு இங்கே அமெரிக்கா, இங்கிலாந்தில் எதிர்ப்புகள் இருந்தாலும், காலத்தின் கட்டாயம்னு விட்டுத்தான் போகுனும்னும், அதுனால எல்லா நாடுகளுமே வளர்ச்சி அடையும்னு இங்க இருக்கிற பெரிய பெரிய பொருளாதார நிபுணர்கள் எல்லாம் சொல்றாங்க. முதல்ல கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பனிகள் தான் வாங்கி போட்டுக்கிட்டிருந்தாங்க, அதுன்னு இல்லாம இப்ப மத்த துறைகளில் உள்ள தொழில் நிறுவனங்களும் இந்த Acquisitionsல இறங்கிடுச்சிங்க.

அதுவும் இந்தியாவும் சைனாவும் இது மாதிரி போட்டி போட்டு கம்பெனிகளை வாங்கி தள்ள ஆரம்பிச்சிட்டாங்க! கொஞ்ச நாளைக்கு முன்னே சைனா நாட்டுக்காரன், அமெரிக்க எண்ணை கம்பனியான 'Unocal' என்கிற கம்பெனியை வாங்க வந்து, அது அரசியல் காரணங்களால முறியடிக்கப்பட்டது! இருந்தாலும் இது எத்தனை நாளைக்கு தடுக்க முடியும்னு தெரியாது! இதுக்கு என்ன காரணம்னா, இது போன்ற பெரிய கம்பெனிகள் அதாவது சக்தி (Energy), இரும்பு(Steel) போன்ற துறைகளில் கை ஒங்கி இருந்தா அது தன் வல்லரசு தன்மையை நிலை நிறுத்த வழின்னு உலக அரசியல் முட்டுகட்டைகள் நிறைய இருக்கு! ( இரும்பு உற்பத்தின்னு பார்த்த்கீங்கன்னா, உலக உற்பத்தியிலே 30% நம்ம கையிலே இருக்குத் தெரியுமா, நம்ம மித்தல் ஸ்டீல், டாட்டா ஸ்டீல் இரண்டும் சேர்ந்தே இது, ஆக எப்ப வேணும்னாலும் உலகத்தை மிரட்ட இது போதாதான்னு ஒரு கேள்வி எழத்தான் செய்யுது) ஆனா பொருளாதார வல்லமை முன்பு இது எல்லாம் எடுபடாது! அதுவும் இந்த அசுரத்தனமான இந்த பொருளாதார வளர்ச்சி முன்னே ஒன்னும் நிக்காது!
ஆனா வாங்கி போடறது பெருசில்ல, அதை சரியா ஆளுமை செஞ்சு இன்னும் பெரிய நிலைமைக்கு வரணும்ங்கிறது பெரிய குதிரைக்கொம்பு தான்! அதுவும் பல நாடுகளில் வியாபிச்சிருக்கிற இந்த ராஜாங்கத்துக்கு, அந்த அந்த நாட்டு கலாச்சாரம், அரசியில் ஆளுமை, அந்த நாடுகளில் வியாபாரம் செய்யும் திறமை எல்லாம் நம்ம நிறைய வளர்த்துக்கணும், அதே மாதிரி நம்ம அரசியல் வாதிங்களும் முழு கண்ணையும் திறக்கணும், நம்ம எப்படி உலகை ஆளா நாலா பக்கமும் படை எடுக்க துடிக்கிறமோ, அதே மாதிரி வெளி நாட்டு முதலீடுகளையும் வரவேற்கணும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியாவை வாங்கி பெரிசா ஆக்க முட்டு கட்டை போடக்கூடாது, அதே மாதிரி வால்-மார்ட் மாதிரி பெரிய ராட்சத தொழில் நிறுவனங்கள் இந்தியாவில தொழில் செய்ய அனுமதிக்கணும், அப்ப தான் நம்ம நாலா பக்கமும் போயி உலகை ஆளமுடியும்! சும்மா பம்மாத்து அரசியல் செஞ்சுக்கிட்டு முட்டுக்கட்டை போடாம இருந்தா போதும், நான் சும்மானாலும் விளையாட்டுக்கு சொல்லிக்கிட்டிருக்கிற மாதிரி ''Microsoft', 'General Motors', 'GE' எல்லாத்தையும் வளைச்சு போட்டுடுவோம், என்ன நான் சொல்லுறது?'ங்கிர பேச்சு உண்மையாகி 'நாளைய உலகம் நமது கையில்'ன்னு ஆகப்போகும் நாட்கள் அதிக தூரமில்லை!