என்னடா திடீர்னு இவன் இந்த கேள்வியை கேட்கிறானேன்னு நீங்க யோசிக்கலாம்! ஆனா உண்மையா தான் கேட்கிறேன், உங்கள்ல எத்தனைப்பேரு இந்த மரணம் பற்றி யோசிச்சதுண்டு! எல்லாருமே ஒரு நாள் சாவப்போறவங்க தான், ஆனா அதை சந்திக்கும் துணிச்சல் எத்தனைப்பேருக்கு உண்டு! எப்பவேனும்னாலும் நிகழலாம்! ஏன் இன்னைக்கு நல்லா இருக்கிற மனுஷன் நாளைக்கு திடீர்ன்னு தலையை சாச்சா, ம்.. உலகத்திலே எதுவும் நிரந்திரமானதில்லை! அதுவும் இந்த சாவின் புரிதல் பற்றி தெரிஞ்சிருக்கணும்னா, அது நீங்க வெறுமெனே நினைச்சா வர்றப்போறதில்லை! அதுக்குன்னு சில சந்தர்ப்பங்கள் வந்தா தான் அதைப் பத்தி உங்களுக்கு என்னான்னு தெரிய வாய்ப்பிருக்கு! அதுவும் ஏதாவது விபத்திலே சிக்கி மரணத்தின் பிடியிலே சிக்கி மீண்டு வர்றவங்களுக்கு இது நல்லாவே தெரியும்!
சும்மா தமாஷுக்குக்கூட சொல்லிட்டு திரியாதிங்க 'இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால்ன்னு', ஏதோ ஒரு படத்திலே விவேக் இது மாதிரி சொல்லிக்கிட்டு திரிவார்ன்னு கேள்வி பட்டேன். அது மாதிரி உண்மையிலே உங்களுக்கு நெருங்கியவங்களை பாடையிலே எடுத்துட்டுப்போயி இடுகாட்டிலே விராட்டி வச்சி அடுக்கி சிதை மூட்டி கொளுத்திட்டு, அடுத்த நாளு இதே பாலு ஊத்த போய் பாருங்க, அப்ப தெரியும் அது என்னா வலின்னு!அதுவும் வேண்டப்பட்டவங்களை உயிரோட பார்த்து ரொம்ப நாள் கழிச்சு திடீர்னு போய் தூங்கிக்கிட்டு இருக்கிறமாதிரி படுத்தருக்கும் சடலத்தை பார்த்தா, என்னவாகும், தாரை தாரையா கண்ணீர் வடிச்சாலும் அந்த உயிர் போகும் நேரத்திலே பக்கத்திலே கூட இல்லையேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கும்! அதுக்காக துக்கத்தை கண்ணிலே வச்சிக்கிட்டு எப்பவுமே அழுது புலம்பி 24 மணி நேரமும் ஒப்பாரி வக்க முடியுமா? கொஞ்சம் அழுது முடிச்சி அப்படியே சோகத்தை கப்பிக்கிட்டு வாய் பொத்தி யாரோடயும் பேசமா மணிக்கணக்கிலே மூளையிலே வேணா உட்கார்ந்து கிடக்கிலாம். அதுவும் எத்தனை நாளைக்கு பொணத்தை நடுவூட்டுல போட்டு வச்சிக்கிட்டு இருக்க முடியும்? இல்லை பொம்பளைங்க மாதிரி கூடி கூடி எத்தனை வாட்டி அழுதுக்கிட்டிருக்கத்தான் முடியும், ஆகற வேலையை பார்க்கணும்னு போகத்தான் தோணும்!
எல்லாமே உயிரோட இருக்கும் வரை தான்! உசுரு போன அடுத்த நிமிஷம் மண்ணோட மக்கி போர உடம்பு, இல்லை தீஞ்சு சாம்பலாயி, அதுக்கும் மேலே மிஞ்சி நிக்கிர ஒன்னு ரெண்டு எழும்பையும் மொத்தமா அடுக்கி வச்சி, பொட்டு வச்சி படையல் போட்டு அப்புறம் பாலை ஊத்திட்டு, சட்டியிலே எடுத்துட்டு போயி புண்ணியமா போகட்டும்னு பக்கத்திலே இருக்கிற ஆத்துல கரைச்ச பின்னாலே அது போற திசைத் தான் தெரியுமா? அப்புட்டுத்தான் மனுசன் வாழ்க்கை. அப்பறம் அவன் ஆசைப்பட்டதை துக்கம் கொணடாட நிதம் வாங்கி படைச்சு மத்தவங்க உண்டு கழிச்சு கருமாதி செஞ்சு முடிக்கும் வரை நெருங்கினவங்க சோகத்தை சுமப்பாங்க, அதுவும் கொஞ்சம் நாள்பட்டுச்சுன்னா 'எதோ வாழ்ந்தாரு, செத்தார்ன்னுட்டு, வருசம் ஒரு தடவை நினைச்சுப்பார்த்து, வேணும்னா தெவசம் கொடுத்து ஒரு இரண்டு தலைமுறை வரைக்கும் நெனச்சு பார்ப்பாங்க, அடுத்தாப்பல முப்பாட்டனாகின பின்ன, கொள்ளு பேரனுக்கு தாத்த அப்பன் பேரு ஞாபகம் வராது, பின்டம் புடிக்க பேரு கேட்டா தெரியாதுன்னு, எதோ காத்துல பேரை சொல்லி தர்பணம் பண்ணிட்டு போயிடுவாங்க, அதுக்குப்பறம் உன்னை நெனைக்க யாருமில்லை!
ஆனா அதுக்குள்ள நம்ம ஆடுர ஆட்டம் தான் என்ன, சொல்லி மாளாது! அதுக்கு தான் நான் கேட்ட முதல் கேள்வி, 'மரணம் பற்றி யோசிச்சதுண்டான்னு' அது பத்தி என்னான்னு கொஞ்சங்கூட யோசிக்காம, கடைசியிலே இதை பத்தி யோசிக்க நீங்க இருக்கப்போறதில்லை உயிரோட, அதானாலே சொல்றேன், கொஞ்சமாவது இடையிலே இதை நினச்சா, நம்ம நாமே தெரிஞ்சிக்கிட்டு, நம்ம பண்ற தப்பை மாத்திக்கிட்டு நமக்கு நாமே நேர்மையா இருந்துட்டு மண்ணுக்கு போகலாங்கிறது தான் நான் சொல்ல வர்றது!
எதுக்கு இந்த பதிவுன்னா என் தகப்பனார் இறந்து போய் காரியம் பண்ணிட்டு வந்து இன்னையோட பத்து நாள் ஆகுது! கொஞ்சம் சாவை பத்தி யோசிச்சாலே போதும், நம்மலை நாமே தடம் பிறழாம பாத்துக்குலாம். இருக்கிறவரை நமக்கு புண்ணியம் தேடுறோமோ இல்லையோ, நம்ம கூட இருக்கிறவங்க, அது யாரா இருந்தாலும் சரி, பொண்டாட்டியானுலும் சரி, புள்ளையானுலும் சரி, சுத்து பத்து சொந்தமானாலும் சரி, அறிஞ்சவன் தெரிஞ்சவனாலும் சரி, எல்லாரும் நம்மலால அவங்களுக்கு கெடுதல் வராம இருந்து செத்தாலே மோட்ச பிரயாணம் தான்! இதை பத்தி மதுரகவியாழ்வார் எழுதின வைகுந்தம் போக வைக்கும் பாசுரங்களை எழுதலாமுன்னு தோணுச்சு, அதான் கீழே எழுதியிருக்கேன் பாருங்க!
அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே
Monday, October 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
உதயகுமார்,
அப்பா இறந்துட்டாரா? அடடா....எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மரணத்தைப் பத்தி நிறைய தடவை யோசிச்சாச்சு. செத்தவுடன் இவர் ரொம்ப 'panic'கா இருப்பாருன்னு நினைச்சுக்கிட்டு, ஆக வேண்டிய வேலைகளைப் பார்க்க உதவியா என்னென்ன செய்யணுமுன்னுகூட எழுதி வச்சுருக்கேன்.
கடைசியா சவப்பெட்டிலே என் மேல் பொர்த்த ஒரு இந்தியக்கொடி கூட வாங்கிவந்தாச்சு.
செக் லிஸ்ட் ரெடி.
உதயகுமார்,
என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
உங்கள் தந்தை மறைவுக்கு என் அனுதாபங்கள்.
என் உயிலும் ரெடி: organ donate பண்ணணும், மிச்சத்தை எரிக்கணும், சாம்பல் முடிஞ்சா கங்கை/காவிரி கரையிலே கரைக்கணும்.
மனசும் ரெடி: முருகன் பெயரை சொல்லிட்டே போகணும்.
பாக்கலாம் (னு கூட சொல்ல முடியாதுல்ல!)
கெ.பி.
உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாததே. எனது அனுதாபங்கள்.
நாதர், அப்பிடியா, ஆழ்ந்த அனுதாபங்கள்.
சிந்திக்க தூண்டும் பதிவு !
மரணத்தை பற்றி ஒருமுறை எழுதியது உண்டு !
நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_03.html
உங்கள் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
பட்டனத்தார் பாடல்களைப் படித்து உணர்ந்தவர்களுக்கு மரண பயம் ஏற்படாது
ரொம்ப யொசிஷி என்ன கிழிஷிட்டோம் .வாழ வழி சொல்லலாம் இல்லை. னி சொன்னாஅலும் சொல்லாடியும் சாவு வருவது உருதி. மனுஷ பய பொரப்பு ரொம்ப உசத்ததி.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
வீடு வரை உறவு,
வீதிவரை மனைவி,
காடுவரை பிள்ளை,
கடைசிவரை யாரோ
என்ற பட்டினத்தார்/ கண்ணதாசன் பாடலை நினைவுறுத்தும் பதிவு.
சார்,
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருத்தமான செய்தி.
நாதர் அவர்களே, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மயான விரக்தியிலிருந்துதான் பல புரியாத வாழ்வியல் தெளிவுகள் பிறக்கின்றன.
வெளிகண்டநாதர்,
மிகவும் கசப்பான விஷயத்தைப் பற்றி அருமையாக எழுதி இருக்கிறீகள்.
கடவுள் நினைப்புக் கடைசி வரை இருக்கணும்.யாருக்கும் நம்மால் உபத்திரவம் கூடாது.
திங்கு நினைக்காத மனம்,பிறரைப் பழிக்காத நாவு,அன்னம் கொடுத்தகை இவை வருந்தாமல் போகும் என்று கேள்வி. நானும் எங்கள் அம்மா,அப்பா இவர்கள் புறப்படும் போது கம்பமாகத்தான்
இருந்தேன். காலம் உங்களுக்கு ஆறுதல் கொடுக்கட்டும்.
வெளிகண்டநாதர் ஐயா. உங்கள் தந்தையாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நீங்கள் சொன்னது போல் மரணத்தைப் பற்றி அவ்வளவு எளிதாகச் சிந்திக்க முடிவதில்லை. மரணத்தைப் பற்றிச் சிந்தித்த உடனேயே இறைவனைப் பற்றியும் சிந்திப்பது இயற்கையான நிகழ்வாக இருக்கிறது. அப்போது அது அஞ்ஞானம் என்று தோன்றுவதில்லை.
ஆழ்ந்த அனுதாபங்கள் உதயகுமார்.. உங்கப் பதிவைக் கூட என்னால் முழுக்க படிக்க முடியலை..
//உண்மையிலே உங்களுக்கு நெருங்கியவங்களை பாடையிலே எடுத்துட்டுப்போயி இடுகாட்டிலே விராட்டி வச்சி அடுக்கி சிதை மூட்டி கொளுத்திட்டு, அடுத்த நாளு இதே பாலு ஊத்த போய் பாருங்க, அப்ப தெரியும் அது என்னா வலின்னு//
உண்மைதாங்க.. இதை நினைத்துப் பார்க்கும் போதே வலிக்கிறது..
உங்கள் தந்தையாரின் பிரிவு வலியிலிருந்து சீக்கிரம் மீண்டுவர, இறைவனை வேண்டிக்கொள்வதைத் தவிர என்ன சொல்வதென்று தெரியவில்லை..
விரைவில் இதிலிருந்து விடுபடுவீர்கள் வெளிகண்டநாதர்.
மறதி என்னும் வரப்பிரசாதம் இல்லையென்றால் நம்மால் வாழ இயலாது.
இரு உயிர்களை இழந்த தவிப்பிலிருந்து வெளிவந்த நிலையில் அனுபவப் பாடமாக இதைச் சொல்கிறேன்.
Post a Comment