Tuesday, December 19, 2006

ஹலோ, மைடியர் ராங் நம்பர்!

என்ன மன்மதலீலை படத்திலே வர்ற இந்த டைட்டில்ல போட்டிருக்கிற பாட்டை உங்களுக்குத் தெரியுமா? தெரியலைன்னா கவலைப்படாதீங்க! உங்களுக்கு ஒரு விஷேஷ வீடியோ கிளிப் கீழே காத்துக்கிட்டுருக்கு, அப்பறமா பார்த்துக்கலாம்! சரி இப்ப இது எதுக்கு இந்த பாட்டு கச்சேரி எல்லாம்னு கேட்கிறீங்களா! காரணம் இருக்கு. நேத்து மன்மதலீலை படம் பார்த்தேன், இந்த படம் வந்து சரியா முப்பது வருஷமாச்சின்னு நினைக்கிறேன். ஆனா இந்த மாதிரி பழையப்படங்களை பார்க்கிறப்ப சில காட்சிகள், வசனங்கள், பாட்டுகள் எல்லாம் அந்தந்த காலத்துக்குத்தான் பொருந்தி வரும் அதாவது, அந்த படங்கள் வந்த காலகட்டத்துக்கு தான் பொருந்தி வரும்! இரண்டு நாளைக்கு முன்னே பாமா விஜயம்னு ஒரு படம் பார்த்தேன்(சரி, இந்த படத்தை பத்தி சில முக்கிய விஷயங்கள் இருக்கு, அப்பறமா ஒரு பதிவு எழுதுறேன்) அதிலேயும் சில வசனங்கள் இருந்தது, ஆனா அது இந்த காலத்துக்கு பொருந்தி வராது, அது மாதிரி இந்த ராங் நம்பர் கதையை பத்தி சொல்லியாகணும், அதாவது இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, இந்த முப்பது ஆண்டுகள்ல நம்மலை எங்க கொண்டி விட்டிருக்குங்கிறதை கொஞ்சம் பார்க்கலாமா?

இந்த மன்மதலீலை படம் வந்தப்ப, இந்த ராங் நம்பரை வச்சு பாட்டு கதை வந்தது எல்லாம் நடைமுறையில இருந்ததை வச்சு தான், அதாவது முப்பது வருஷத்துக்கு முன்னே டெலிபோன் பத்து வாட்டி ஒரு நாளைக்கு பேசினீங்கன்னா, அதிலே அஞ்சு வாட்டி ராங் நம்பர் விழுக சான்ஸ் இருக்கு, ஏன்னா அப்ப நமக்கு கிடைச்ச டெலிபோன் சேவை அப்படி! முதல்ல இந்த டெலிபோன்ங்கிறது பெரிய விஷயம் அப்ப! முதல்ல இந்த வசதி எல்லார்கிட்டேயும் கிடையாது. இன்னைக்கு நம்ம சொல்றோமே மத்திய வர்க்கம்னு, அவங்ககிட்ட எல்லாம் இப்ப இது 'take it for granted'. அதுவும் சும்மா இப்ப இந்த தெரு முகனையிலே பழம் வெத்திலை பாக்கு வாங்க போய்ட்டு, அங்கிருந்துக்கிட்டு ரஸ்தாலி வாங்கறதா, இல்லா பூவம்பழம் வாங்கிறதான்னு ஆயிரத்துட்டு தடவை செல்லை அமுக்கி வீட்டுக்கு பேசிக்கிட்டு வெட்டியா இருக்கிற மாதிரி இல்லை அப்ப, ஏன்னா இந்த டெலிபோன் வச்சுக்கிறதுங்கிறது நினைச்சுக்கூட பார்க்க முடியாத ஒன்னு, அப்படி இருந்தாலும், அது வேலை செய்யாது, அப்படி செஞ்சாலும் அது ராங் நம்பரை கூப்பிடத்தான் உபயோகப்படும். ஆக இந்த பாட்டு எழுதி இப்படி ராங் நம்பரை கணக்குப்போடும் கதை அப்ப இந்த மன்மதலீலை படத்திலே வந்தது ஒன்னு ஆச்சிரியமில்லை!

ஏன் இதை சொல்ல வர்றேன்னா இந்த 'telecom sector' வளர்ச்சி பத்தி சும்மா ஒரு செய்தி ஒன்னை இப்ப சமீபத்திலே படிச்சப்ப, இந்த படத்திலே வந்த பாட்டை பார்த்துட்டு நினைச்சு பார்த்தப்ப பெரிய மலைப்பா இருந்திச்சு! இன்னைக்கு நீங்க நான் எல்லாம் இப்படி இணையத்திலே வெட்டி கதை அடிச்சி, பிளாக் எழுதி தள்ளிக்கிட்டிருக்கும்ல, இதுக்கு அடிப்படை தொழில் வளர்ச்சி எதுன்னா, இந்த தொடர்பு சாதனம்னு சொல்லுவேன், ஆமா இந்த ராங் நம்பர் நமக்கு ரைட் நம்பர் ஆனதாலே தான். இதன் வளர்ச்சி வரலாற்று பின்னனி பத்தி உங்களுக்கு தெரியலைன்னா, நான் போடற சினிமா கிளிப்பு மட்டும் பார்க்காதீங்க, இதையும் கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுக்கங்க! ஏன்னா இந்த ராங் நம்பர் விளையாட்டு நானும் சின்னபிள்ளையிலே நிறைய ஆடியிருக்கிறேன்! அதாவது என் ஃபிரண்டு ஒருத்தன் அப்ப எஸ் எஸ் எல் சி முடிச்சிட்டு ஒரு லாரி புக்கிங் ஆபிஸிலே வேலைசெஞ்சப்ப, இந்த சாய்ந்திர நேரத்திலே பொழுது போவலைன்னு அந்த புக்கிங் ஆபிஸிலே உட்கார்ந்து டெலிபோன் சுத்தி ராங் நம்பர்ல மாட்ற மாமிங்ககிட்ட கடலை போட்டுக்கிட்டு பொழுது போக்குவோம், இப்ப முன்னபின்ன தெரியாத மாமிங்ககிட்ட 'ச்சேட்டிங்' நீங்க பண்ணி காலம் கழிக்கிறீங்கள்ள, அதை நாங்க ஒரு முப்பது வருஷ த்துக்கு முன்னேயே பண்ணிருக்கோம் இந்த ராங் நம்பர் ரூட்ல! சரி இப்ப எதுக்கு அந்த கதை, நான் சொல்ல வந்த விஷயத்தை கீழே படிக்கலாம் வாங்க!

இந்த தொலை தொடர்பு சாதனம் நமக்கு 1850ம் ஆண்டே, பிரிட்டிஸ்காரான் அப்பவே பாம்பேயிலிருந்து மெட்ராஸுக்கு, ஊட்டியிலிருந்து பெங்களூருக்குன்னு லைன் போட்டு ஆரம்பிச்சி வச்சிட்டு போய்ட்டான். அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பெருகி இன்னைக்கு 17 கோடி தொலைபேசியாடுச்சி, அதாவது அதிலே 12 கோடி மொபைல் ஃபோன்னுங்க, மிச்சம் 5 கோடி தரை வழி தொடர்பு கொண்ட தொலைபேசிங்க. அதாவாது இந்த மொபைல் தொலைபேசி பெருக்கத்திலே நம்ம நாடு, சைனா(40 கோடி), அமெரிக்கா(17 கோடி), ரஷ்யா(13 கோடி)போன்ற நாடுகளுக்கு இணையாக இந்த தொலைப்பேசி பெருக்கத்திலே வளர்ந்துக்கிட்டு இருக்கோம்! இன்னும் இதோட அசுர வளர்ச்சி தொடர்ந்துக்கிட்டிருக்கு, ஆனா சராசரியா இந்த வசதி அநேக மக்களுக்கும் சென்றடஞ்சதான்னா அதான் இல்லை. அதாவது நம்ம இந்த தொலைப்பேசி பெருக்கத்திலே உலகத்திலேயே ஏழாவது இடத்திலே இருக்கோம், ஆனா மக்கள் தொகையிலே சராசரியா பார்த்தா, ஒரு நூறு பேருக்கு இது நாலு பேருக்கிட்ட தான் இன்னைக்கு இருக்கு! அதுவே அமெரிக்காவை எடுத்துக்கிட்டா நூத்துக்கு 68 பேருக்கிட்ட டெலிபோன் வசதி இருக்கு! சைனாவிலே நூரு பேருக்கு 15 பேருக்கிட்ட டெலிபோன் வசதி இருக்கு, ஆக நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு! அது மாதிரி இன்னும் 20 ஆண்டுகள்ல இன்னைக்கு அமெரிக்காவிலே இருக்கும் அளவுக்கு தொலை தொடர்பு (network size) வளரனும்னா அது 23 சதவீத மடங்கு இன்னைக்கு நம் நாட்டில் இருக்கும் அளவைப் போன்று அதிகரித்தால் தான் உண்டு, அது மாதிரி இன்னைக்கு ஜப்பானில் இருக்கும் அளவைப் போல எட்டிப் பிடிக்கணும்னா, நாம் இன்னும் 17 சதவீத வளர்ச்சி அடைஞ்சாதான் உண்டு! இந்த கணக்கு நம் நாட்டின் இருக்கும் ஜனத்தொகை 20 வருஷம் கழிச்சி இன்னைக்கு இருக்கும் 100 கோடி அளவிலே இருந்தால் தான் நான் மேலே சொன்ன வளர்ச்சி சதவீதமா இருக்கும், இல்லைன்னா அதுவும் எகிறுடும்!

ஆனா இந்த 30 வருஷத்திலே பார்த்தீங்கன்னா, இந்த தொலை தொடர்பு தொழில் நுட்பம் வளர்ச்சி பிரமிக்க வைக்க கூடியது தான். நான் சொல்லும் அந்த ராங் நம்பர் காலத்திலே, அதாவது 30 இல்லை 40 வருஷத்துக்கு முன்னே, முக்கியமான பெரிய நகரங்கள்ல தான், அதுவும் சென்னை போன்ற பெரும் நகரங்கள்ல தான் தானியங்கி தொலை தொடர்பு நிலையம் உண்டு, அதாவது ஆட்டோமேட்டிக் எக்ஸேஞ்சின்னு! இந்த டெலிபோன் எக்ஸேஞ்சு மற்ற சிறு ஊர்கள்ல மேனுவல்(Manual) எக்ஸேஞ்சு, அதாவது கனெக்ஷ்ன் கொடுக்க ஆளு இருப்பாங்க இந்த தொலை தொடர்பு நிலையத்திலே! நீங்க எந்த நம்பருக்கு போன் பேசனுமோ, அதை சொன்னா, எக்ஸேஞ்சில இருக்கிற அம்மா டெலிபோன் ஜாக்குல மாத்தி உங்க நம்பருக்கும் அந்த நம்பருக்கும் தொடர்பு கொடுப்பாங்க, அப்பறம் நீங்க பேசலாம். ஆனா ஆட்டோமேட்டிக் எக்ஸேஞ்சிலே நீங்க நம்பரை சுலட்டி அதுவா தொடர்பாகி நீங்க பேசலாம்! அது மாதிரி அந்த காலத்தில தொலைதூர தொடர்புக்கு நீங்க 'ட்ரெங்கால்'(Trunk call) புக் பண்ணனும், அப்பறம் டெலிபோன் எக்ஸேஞ்சிலே அவங்க உங்களை கூப்பிட்டு கனெக்ஷன் கொடுத்தா நீங்க பேசலாம்! இது நான் சொல்றது திருச்சியிலிருந்து சென்னைக்கு தொலைபேசி பேச! அதுவும் நீங்க இன்னைக்கு சாய்ந்திரம் புக் பண்ணினிங்கனா நாளைக்கு காலையிலே உங்களுக்கு லைன்னு கிடைக்கும்.ஆக அப்ப இது தொலைபேசி இல்லை, தொல்லைபேசி!

இந்த தொலைதொடர்பு தொழில்நுட்பம்னு பார்த்தீங்கன்னா, இந்த எக்ஸேன்சு எல்லாம் அந்த காலத்திலே இயங்கினது க்ராஸ்பார் எக்சேஞ்சுன்னு (Crossbar exchange), அதாவது இதெல்லாம் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் எக்ஸேஞ்சுங்க! இது அப்பறம் எலக்ட்ரானிக் எக்ஸேஞ்சா மாறுச்சு! அப்பறம் வந்தது தான் டிஜிட்டல் எக்ஸேஞ்சு! இந்த தொழில்நுட்பத்தை மிகவும் விலை கொடுத்து அயல்நாட்டிலருந்து இறக்குமதி பண்ணுனா தான் உண்டு! அவ்வளவு வசதி நம்ம நாடல இல்லை, மேற்கொண்டு இந்த டெலிபோன் துறை அரசாங்கத்திடம் தான் இருந்தது! அப்ப தான் அமெரிக்கவிலே படிச்சி நிறைய தொழில்நுட்ப ஆராய்ச்சி எல்லாம் தன் பேரில் வச்சிருந்த 'சாம் பிட்ரோடா'(Sam Pitroda)என்பவரை ராஜீவ் காந்தி நம்ம நாட்டுக்கு கூட்டிட்டு வந்து இந்த தொழில்நுட்பத்தை நம்ம நாட்டுக்கு தேவைக்கு ஏற்ப வடிவமைச்சி மலிவான முறையிலே இந்த டெலிபோன் எக்ஸேஞ்சு உருவாக்க 'C-DOT' ங்கிற ஒரு நிறுவனத்தை உருவாக்கினாங்க! அவங்க கண்டுபிடிச்ச தொழில்நுட்பம் தான் இன்னைக்கு பட்டித்தொட்டி எல்லாம் 'PCO'ன்னு பார்க்கிறீங்களே அந்த பொது தொலைபேசி பூத் வர காரணமாச்சு, சாதாரண மனிதனுக்கும் மலிவா தொலை தொடர்பு சாதனம் கிடைக்க வழி செஞ்ச்சு! இவங்க கண்டுபிடிச்ச அந்த டிஜிட்டல் எக்ஸேஞ்சு தொழில்நுட்பம் தான் இன்னைக்கு பறந்து கிடக்கும் இந்த தொலை தொடர்பு வளர்ச்சிக்கு முக்கிய காரணம்! இந்த 'C-DOT' நிறுவனத்துக்கு எக்கசக்கமான தானியங்கும் அதிகாரம் கொடுத்திருந்தாங்க! இது ஒரு அரசு நிறுவனமா இருந்தாலும் எல்லா முடிவுகளையும் அவங்களே எடுக்கும் அதிக அதிகாரத்துடன் செயல்பட்டு, அந்த காலகட்டத்திலே, அதாவது 80களின் ஆரம்பத்திலே, இந்த நிறுவனம் ஆராய்ந்து வடிவைத்த தொலை தொடர்பு தொழில்நுட்பம் தான் இன்னக்கு வளர்ந்து நிற்கும் இந்த தொலை தொடர்புக்கு முன்னோடி! அந்த காலகட்டத்திலே பொறியியல் படித்து முடித்து வெளிவந்த என்னைப் போன்றோர் ராப்பகலா உழைச்சி உருவாக்கின தொழில்நுட்பம்னு சொல்றதிலே ரொம்ப பெருமைபடுகிறேன்! ஆனா அதுக்கப்பறம் அந்த நிறுவனம் மேற்கொண்டு வளரமா சில அரசியல் சாக்கடைங்க தடுத்திடுச்சி!

பிறகு 90களின் பிற்பகுதியில் வந்த மொபைல் ஃபோன் வளர்ச்சி, ஃபைபர் ஆப்டிக் என்ற ஒளி கடத்துவான் மூலம் தொலை தொடர்பு வளர்ச்சி, கணனி மற்றும் இணைய தொழில்நுட்ப வளர்ச்சி அப்படின்னு இன்னைக்கு தொலை தொடர்பு வசதிகளின் பயனை நம்ம எல்லாம் அனுபவச்சிக்கிட்டிருக்கோம்! ஆனாலும் இந்த வளர்ச்சி, நான் மேலே சொன்ன மாதிரி அடி மட்ட மக்கள் எல்லார்கிட்டையும் சென்றடய வில்லை, இந்த 'டிஜிட்டல் டிவைட்'ன்னு சொல்றாங்கள்ள, அது இன்னும் இருக்கு! ஆனாலும் அரசாங்கத்தின் இந்த தொலை தொடர்பு கொள்கை, மற்றும் சட்ட திட்டங்கள், அப்பறம் இந்த தொழில் துறை முன்னேற்றம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் மலிவான சேவையில் மக்களை சென்றடய நிறைய செய்றதா சொல்றாங்க! இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, சமமான போட்டிகளுடன் கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவையுடன் இது மேலும் வளர்ந்து, இந்த செய்தி தொடர்பு பயன் அடிமட்ட மக்களை சென்றடயவும் பாகுபாடற்ற வணிகநிலை உருவாகவும் ஒரு தனிமக்குழு (TRAI) கண்காணிப்பில் செயல்பட்டு வருவதும், அதன் மூலமாய் இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை இருப்பதால் இந்த டிஜிட்டல் ஏற்றதாழ்வு மறைய வாய்ப்பு உள்ளது.

அப்பாடி, மன்மதலீலை படம் பார்த்துட்டு வெறுமன வீடியோ கிளிப்பு போடக்கூடாதா, அதுக்கு இவ்வளவு பெரிய பதிவான்னு நீங்க அரட்றது கேட்குது! சரி நம்ம சினிமாவுக்கு போவோம், இந்த மன்மதலீலை ஒரு குஜாலானப்படம், படத்துக்குன்னு ஒரு தனிப்பதிவு கட்டாயம் உண்டு! அதுவும் இந்த படம் எடுத்ததே நான் கமலை பார்த்து தான்னு பாலசந்தர் அப்ப சொல்லி அது பெரிய சர்ச்சை ஆனது பத்தி எல்லாம் அப்புறம் எழுதுறேன்! இந்த கிளிப்பிலே வரும் ஒய் விஜயாவோட அப்ப ஏகப்பட்ட புது பொண்ணுங்களை வச்சி எடுத்து வந்த படம் இது! அதுக்குள்ள இந்த படம் வீடியோ கிடைச்சா போட்டு பார்த்துடுங்க, அப்பதான் அடுத்த பதிவுல நான் சொல்றது சுவாரசியமா இருக்கும், இப்ப இந்த துண்டைப் பாருங்க!

Thursday, December 14, 2006

ஸ்ரீவித்யா, ரஜினி, கமல்-அபூர்வ ராகங்கள்!

என்ன இவெங்களை எல்லாம் அபூர்வராகங்கள்னு சொன்னா சரியா இருக்குமில்லை! ஆமா, இந்த டைட்டிலோட எடுத்தப் படம் 76ல வந்த அபூர்வ ராகங்கள்! நான் அப்ப விடலைப் பருவத்தின் மத்திமத்திலே இருந்த நேரம்! என்னமோ தெரியிலே, அந்த காலக் கட்டங்கள்ல இருந்த மத்த விடலைங்க மாதிரி இல்லாம, கொஞ்சம் கொஞ்சமா எம்ஜிஆர், சிவாஜி மோகம் எல்லாத்தையும் விட்டுட்டு அப்ப பாலசந்தர் படங்கள் மேலே அதிகமான ஈடுபாட்டோட காலம் கழிச்ச தினங்கள் அதெல்லாம்! இப்ப சமீபத்திலே ஸ்ரீவித்யா மறைந்த செய்தியை கேட்டு, அப்பறம் அதை நெட்டுல பார்த்தோன, எனக்கே தெரியாத ஒரு சோகம்! ஒரு நல்ல நடிகை! அதுவும் அந்த காலகட்டத்திலே என்னமோ மத்த நடிகைகள் கிட்ட இல்லாத ஒரு தெய்வீக அழகு இந்தம்மாக்கிட்ட இருந்ததாலேயோ என்னமோ, எனக்கு ரொம்ப புடிச்ச நடிகை அப்ப! அதுவும் இந்த படம் என்னை ரொம்பவும் மயக்கின ஒன்னு! என்னமோ சிக்கலா உறவுமுறைகள்ல வரும் பினக்கத்தை பத்தி சொன்ன கதை! இந்த மாதிரி இப்ப வேணும்னா சகஜமா கதை பண்ணி படம் பண்ணுனா எல்லாரும் ஒத்துக்கிட்டு, ட்டீகேன்னு போய்டுவாங்க! கொஞ்சம் 30 வருஷத்துக்கு முன்னே நினைச்சிப் பாருங்க, சான்ஸே இல்லை, அது மாதிரி கதை களம் எடுத்துக்கிட்டு, அதை ரசிக்கிறப்படி சொல்ல பாலசந்தராலே மட்டும் அப்ப முடிஞ்சது! அதுக்கப்பறம் வயசானவனை காதலிச்சு கதை சொல்லி மயக்க பாரதிராஜா வந்தது வேறே கதை!

இந்தப்படம் பலருக்கு வாழ்க்கை கொடுத்த ஒன்னு! வெறும் சின்னப்பையனா, மீசை அரும்பி, அதிகமா சொல்லிக்கிற மாதிரி எதுவும் படங்கள் வராம இருந்த நேரத்திலே, இந்தப்படம் கமலுக்கு, ஒரு அல்வா மாதிரி! அப்ப கமலும் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி எதுவும் நடிக்கலை! (கமலுக்கு நடிக்கவே தெரியாது அப்ப, அவரு அழுதா மூஞ்சியை பொத்திக்கிட்டு எம்ஜிஆர் ஸ்டல்ல அழுது நடிச்சி ஒப்பேத்தினார், இப்பவும் அவரை மகா நடிகர், அப்படி இப்படின்னு சொல்லி ஆடறவங்களுக்கு, ஒரு தனி பதிவு அப்புறமா போடறேன், கமல் எப்படி தன்னுடய குறைகளை சாமார்த்தியமா மறைச்சு நடிச்சாருன்னு!) சரி நீயும் கொஞ்சம் நடின்னு பார்த்து பாலசந்தர், வன்முறை தான் எல்லாத்துக்கும்னு நம்பிக்கிட்டிருக்கிற ஒரு இளைஞனை எப்படி ஒரு மத்திம வயசுக்காரி மாத்தி நல்ல கொண்டு வர்றான்னும், அப்பறம், அதுவே அவமேலே எப்படி காதல் கொள்ள தூண்டுதுங்கிறதை சொல்லியிருப்பார். ஆனா வழக்கம் போல அவரு ஸ்டைல்ல, முடிச்சுகளான பந்தகளிடையே ஏற்படும் சிக்கலான உறவை கதை சொல்லி மக்களை ஆச்சிரிய படுத்தின அந்த டெக்னிக்கை மக்கள் அப்ப நல்லாவே ரசிச்சாங்க!

இது மாதிரி ஸ்ரீவித்யா மகள் ஜெயசுதா கமலோட அப்பாவான மேஜர் சுந்தர்ராஜன் மேலே மையல் கொண்டு கல்யாணம் பண்ணிக்க ஆசைபட, அவரோ தனக்கு மக மாதிரி வச்சுக்க ஆசைப்பட இன்னொரு சிக்கலான உறவு முறை கோணங்கள் பார்க்க சுவராசியமா இருக்கும், அதுவும் "என்னோடய அப்பா யாருக்கு மாமனாரோ.." அப்படின்னு ஆரம்பிக்கிர புதிருக்கு விடை என்னான்னு சொல்லி முடிச்சி அவிழ்த்திருப்பாரு பாலசந்தர்! இந்த பாலசந்தர் படங்கள்ல வர்ற குறும்பு பொண்ணுங்க எல்லாம் பண்ற ஷேஷ்டைகள் இதிலேயும் உண்டு, அதை ரசிக்கலாம், அதாவது ஜெயசுதா நாக்கை சுழட்டறது ஒரு மேனரிசம்! இது மாதிரி மேனரிசத்தை அவரோட பல படங்கள்ல நீங்க பார்க்கலாம், உதாரணத்துக்கு, மன்மதலீலையிலே கமலோட செக்ரெக்ட்ரிக்கு அடிக்கடி கண்ணடிக்கிற வீக்னஸ், அவள் ஒரு தொடர்கதையிலே ஜெயலட்சுமி சொல்ற அந்த "ஃபடாபட்", அப்பறம் அரங்கேற்றத்திலே வர்ற "அச்சச்சோ", இதெல்லாம் அப்பறம் அந்த மாதிரி பேசி நடிச்ச நடிகைகளுக்கு அடைமொழியானது எல்லாருக்கும் தெரிஞ்சது!

அப்புறம் பைரவி ராகத்திலேயே வந்த "அதிசய ராகம்" பாட்டு, பாட்டாலே தன் காதலை சொல்லி, ஸ்ரீவித்யாக்கிட்ட அரை வாங்கிக்கட்டிக்கிட்டு,அப்பறம் அதுலேயே போகும் மெலோடிராமா, பார்க்க சுவராசியமா இருக்கும்! பாலசந்தர் அதிகமா கலை நயம் வேணும்னு பொம்மைகள், சிலைகள் எல்லாத்தையும் ஃபோக்கஸ் பண்ணி கதை சொல்ல ஆரம்பிச்சது இந்த படத்திலேருந்து தான், கையொடிஞ்ச மேலாக்கு போடாத பொம்பளை சிலையை வச்சு அழகா கமலோட காதல் மனம் எப்படி மாறுதுன்னு சொல்லுவாரு, டைரக்டோரியல் சிம்பாலிஸம்! இதெல்லாம் தமிழ் படங்கள்ல அப்ப புதுசு, அதுவும் வெறும் கேரக்டர்களையே சுத்தி சுத்தி ஓடர கேமராக்கள், இது மாதிரி நடிகர் நடிகை இல்லாம காட்சியின் வீரியத்தை இந்த மாதிரி சில ஆப்ஜக்ட்ஸ், மற்றும் வேற மாதிரி காட்சிகளை காமிக்க ஆரம்பிச்சது இந்த கால கட்டத்திலே தான், அதுக்கு முன்னே கற்பழிப்பு சீனை காமிக்க புலி மானை துரத்திற போஸ்டரை ஃபோக்ஸ் செய்றதோட முடிஞ்சது! (இந்த மாதிரி காட்சி அமைப்புகளை பத்தி தனியாவே ஒரு பதிவு அப்பறம் போடறேன்!)

அப்புறம் இன்னொன்னு தெரியுமா பாலசந்தர், மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் வசனங்களை விட காட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்கன்னு நான் சொல்லி இருக்கேன், வித்தியாசமான கதைகளின் ஆக்கம் கொண்டதா இருந்தது இவங்க படங்கள்! ஆனா இவெங்க எல்லாத்துக்கும் சினிமாவிலே முதன் முதலா அடி எடுத்து வச்சது எம்ஜிஆர் படத்துக்கு வேலை செய்யன்னா நீங்க எல்லாரும் ஆச்சிரியப்படுவீங்க! அவரு படத்துக்கு கதை வசனம் எழுத வந்தவுங்க இவங்கே, ஆமா "அன்பே வா" படத்துக்கு வசனமமெழுதுனது பாலசந்தர்!

அடுத்தது நம்ம தலைவர் ரஜினி பத்தி சொல்லனும்! இந்த படத்திலே அறிமுகமானவர்னு உங்களுக்கெல்லாம் தெரியும்! ஆன நடிக்க வந்த கதையை பத்தி தெரிஞ்சிக்கணும்னா சரித்திரம் படிக்க இங்கே போங்க! இந்த படம் வெளியானப்ப ரஜினிக்கு ஒரு அடையாளம் எதுவும் கிடைக்கவில்லை! அந்த அடையாளத்தை கொடுத்தது மூன்று முடிச்சு! ஆனா இந்த படத்திலே அவரு எந்த வேகத்தையும் காட்டல, அமைதியா நடிச்சு, ஆனா அசத்தியிருந்தார். அவ்ருக்கு தெரிஞ்சோ தெரியாமலேயோ முதகாட்சியே பெரிய கதவை திறந்துக்கிட்டு வர்ற மாதிரி, அந்த ஆரம்பமே ஒரு நல்ல ஆரம்ப காட்சி, இது போல பெரிய ஆளான எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு காட்சின்னு நான் சொல்லுவேன்! ஆனா நான் என் ஃபிரண்ட்ஸ் பார்த்திட்டு இந்த புதுசா நடிச்சவருக்கு என்னமோ காந்த சக்தி இருக்குன்னு அந்த படத்திலேருந்தே நாங்க அவரோட ரசிகரானது என்னவோ உண்மை, அதுக்கு சாட்சி வாரி வழிச்சி சிவகுமார் மாதிரி பஃப் வச்சி சீவிக்கிட்டிருந்த நான் முடியை முன்னால அவரு ஸ்டைல்ல வச்சிக்க ஆரம்பிச்சேன், இதை பத்தி நான் எனை ஆண்ட அரிதாரத்திலேயே சொல்லி இருந்தேன்!

அவரு சரித்திரதை இங்கே படிச்சிருந்தீங்கன்னா, ஒன்னு தெரியும், நீ தமிழ் கத்துக்கிட்டு வா, உன்னை எங்கெயோ கொண்டி விடுறேன் பாலசந்தர் சொன்ன சொல்படி எங்கயோ போனது உண்மை தான்! அப்ப வந்த எந்த ஆர்டிஸ்டும் தமிழ் ஒழுங்கா கத்து பேச தெரிஞ்சா தான் வெற்றி நிச்சயம்! அது பாடுனாலும் சரி, ஆடுனாலும் சரி, அதுக்கு எவ்வளவோ பேர் உதாரணம், சாவித்திரி, சரோஜாதேவி, பி சுசீலா, எஸ் பி பாலசுப்ரமணியம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம், இவங்க எல்லாம் தாய்மொழி வேறயா இருந்தாலும் உண்மையிலே ரொம்ப ஆர்வமா சிரமம் எடுத்து கத்து ஜெயிச்சாங்க, இப்ப வர்ற ஆளுங்க மாதிரி இல்லாம! இந்த தொழில்நுட்பம், மல்டிபிள் டிராக ரெக்கார்டிங், டப்பிங்னு வந்ததிலேருந்து மொழி தெரியலேன்னாலும் பெரியாளாயிடுறாங்க! இது அதிகமா வந்தது 80துக்கப்பறம் தான், அதுவும் பாரதிராஜா கோஷ்டி ஆரம்பிச்ச வச்ச ஒன்னு! ஒரு வார்த்தை சுட்டு போட்டாலும் வர்றாத பஞ்சாபி குலாபி, ரத்தியை வச்சி படமெடுத்து வெற்றி படமாக்கி, அப்பறம் தமிழ்ன்னு ஒன்னு தேவையில்லை தமிழ் படங்கள்ல நடிக்கன்னு ஆரம்பிச்சு வச்சது இந்த கும்பலுதான், அப்படி டப்பிங் பேசி ரஜினி ஆட்டம் போட்டிருந்தா இன்னைக்கு மோகன் மாதிரி பெங்களூருக்கே போயிருப்பாரு! இதை பத்தி எஸ்பிபி ஒரு பேட்டியிலே சொல்ல கேள்வி, அதுவும் உதித் நாரயண் மாதிரி ஆளுங்க கடிச்சி துப்பி 'ப்ர்வாயில்லை'ன்னு பாட்டு படிக்க, அதையும் நம்ம ரசிச்சு, தேவுடா, அதான் இன்னைக்கு இந்த நமீதா வரை ஓடிக்கிட்டு இருக்கு! இது பத்தாதுன்னு டிவியிலே கேம்பயிரிங் பண்ற ஆளுங்க தமிழை போட்டு கொல்றது இன்னும் உச்சம்! (இதை பத்தி தனியா இன்னொரு பதிவு உண்டு!)

ஆக இந்த படம் அபூர்வமா இருந்தது என்னமோ உண்மை! ஒரு மீடியமான வெற்றி, வழக்கம் போல பி,சி செண்டர்ங்கள்ல அதிகம் ஓடலை,ஆனா எல்லோருக்கும் பேரு வாங்கி கொடுத்த ஒன்னு! அந்த படக்காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு, அப்பறம் 'A Tribute to Srividya'!

Friday, December 08, 2006

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ!

சிற்றின்ப சந்தோஷம் என்பது விளக்குகள் அனைந்தப் பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கும் மறைவினிலேயா வாழ்ந்துக் கொண்டிருக்கிறது? இல்லை! இல்லை! அதனை நுண்ணர்வுகளுடன் கலந்து வெளிக் கொணற ஆயிரம் வழிகள் உள்ளன!

காலையில் படுக்கையை விட்டு எழுந்து, சற்றே நீண்ட மூச்சை உள்ளிழுத்து திரைச்சீலை விலக்கி, ஜன்னலின் வழியே, ஆகாயத்தைப் பார்க்கும் பொழுது, தெரியும் நீலவானம், அழகிய ஓசை எழுப்பி சிறகை விரித்து பறந்து செல்லும் ஆயிரம் பறவைகளை பார்க்கும் பொழுது உள்ளம் சிலிர்க்கும் அந்த சிற்றின்பத்தை கண்டுணர்ந்ததுண்டா பெண்ணே! அதுவும் காலை வேளையிலே தட்டு தழுவிச்செல்லும், சருமைத்தை வருடிச் செல்லும் தென்றல் தரும் சுகம் நேற்றிரவு நீ கண்ட சுகத்தை விடப் பெரிதா அது?

இளங்காலையின் இன்பச்சுகமறியா உன் கணவன், மூக்குத் துவாரமின்றி உணவுக்குழல் மூலம் மூச்சு காற்றை உள்வாங்கி வெளியிடுவதால் எழுப்பும் குறட்டைச் சத்தத்தையும், அவன் சரும உராய்வில் அந்த மூச்சுக் காற்றின் இளஞ்சூட்டு வெப்பத்தினையும், அவன் தேகம் தரும் கஸ்தூரி மணத்தை முகர்ந்து பார்ப்பதையும் கொண்டாடி மகிழ்ந்துணரும் உணர்வுகள் தான் நீ விரும்பும் சிற்றின்பமா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

அன்றாட பணிகளை செய்து முடித்திட உனது பாதி மன வலிமையும் உடல் வலிமையும் செலுத்துவதில் முனைப்பாய்கிறாய்! உனக்கான கடமைகளும், அதனை தொடர்ந்து வாழ பயணிக்கும் மணித்துளிகளும், எங்கே உன்னுள் கொண்டிருக்கும் நுண்ணர்வுகளால் உந்தப்படும் சிற்றின்பத்தை முழுமையாக அநுபவிக்க வழி வகுக்கிறது? உனக்கான சிற்றின்ப சந்தோஷங்களை எப்படி பேணி வளர்த்து அபிவிருத்தி செய்ய நீ முற்பட வேண்டும் என நான் எடுத்துரைத்தால் முட்டாளாகிவிடுவேன்! ஆனால், இந்த பாழய்போகும் அன்றாட வாழ்க்கைப் பளுவின் ஆளுமையிலே எங்கே நீ சிற்றின்பம் காண்பது!

நான் ஒரு உண்மையைச் சொன்னால் நீ ஆச்சிரியப் படுவாய்! சிற்றின்பம் காண வழி சொல்ல மூயலும் இந்த ஜென்மம் என்ன ஜென்மமிது என எனை பார்த்து கேலிப் பேசுவது தெரிகிறது! ஆனால் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதிலும் துணி மணிகளை மடித்து வைப்பதிலும், கணவனுக்கு பொங்கிப் போடுவதிலும், குழந்தை பராமரிப்பதிலும், அலுவகத்தில் கொடுத்த பணிகளை திறம்படச் செய்வதிலும் மட்டுமே நீ உன் சிற்றின்பத்தை பெறுவாய் என நான் கூறினால் அதைவிட நகைப்புக்குறியது வேறொன்றுமில்லை!

சிற்றன்பமென்றால் என்ன என்பதற்கு விளக்கம் அளிக்க முற்படும்பொழுது இவ்வாறு ஒரு விடைத் தெரிகிறது! நம் ஐம்புலன்களால் என்ன என்ன உணர்கின்றோமோ, அவை அனைத்தும் சிற்றின்பமே! ஆனால் பெரும்பாலோரால் வகுக்கப்பட்ட பொருள்விளக்கம் என்னவென்றால், இச்சிற்றின்பம் இப்பூவுலகிலிருந்து விலகியது அல்ல என்பதே! எனக்கு இதில் சிறுதும் உடன்பாடில்லை! அதாவது இது மனம் சம்பந்தப்பட்டது அல்ல எனக்கூறுவது முற்றிலும் தவறு! வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு புலன்களால் அறியப்படுவது அல்ல இந்த சிற்றின்பம் என்பது. ஏனென்றால் இது பொதுவான வாழ்க்கை அம்சத்திலிருந்து மாறுபட்ட கண்ணோட்டத்தின் கருத்து! ஆனால் அதுவே உண்மை! பொதுவாக உடலின் எந்தப் பகுதி பாழ்படுகிறதோ அந்தப் பகுதிக்கு மட்டும் மருத்துவம் பார்த்து உறுப்புகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றெண்ணி, பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்யும் லாவகம் போல் வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் அதற்குண்டான எல்லைகுள்ளாகவே அதை அனுசரித்து ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வாழுவதால் உணரப்போவதில்லை இந்த சிற்றின்பத்தினை! ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு, ஆக எல்லாவற்றிற்குமே தொடர்புண்டு! அப்படி ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வகுக்கப்படும் கண்ணேட்டங்கள் சமநிலைப்பாடற்ற கருத்தாகவே ஏற்று கொள்ளவேண்டும்!

ஆற்றுபடுகையிலே இரைந்துக் கிடக்கும் கூழாங்கற்களை பார்த்தால் என்ன தோன்றுகிறது, நீரோடு உருண்டோடி வரும் பாறைகளின் வடிவத்தை பார்க்கும் பொழுது என்னத்தோன்றுகிறது! வாதமின்றி பிரதிவாதமில்லை, காரணமின்றி காரியமில்லை, அசைவின்றி விளைவில்லை! ஆக நான் மேலே கூறிய பொருள் விளக்கம் எதை தெளிவுபடுத்துகிறது என்றால் சிற்றின்பத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமுண்டு என்பதைத்தான்!

எல்லை வகுக்கப்பட்ட, தொடர்பின்றி நிர்ணயிக்கும் எண்ணங்களே நம்முள் உண்டாகும் துன்பங்களுக்கும் தீங்குகளுக்கும் மூலக்கராணம், அதுவே தொடர்பற்ற அர்த்தம் காணுவதில் உண்டாகும் கஷ்டங்களை பிரதிபலிக்கும் சமூகம் உருவாகவும் காரணமாகிறது! புரியவில்லையா? இதோ ஒவ்வொரு சிற்றின்ப மனிதனையும் வெளிகொணர்ந்து அதனைச் சுற்றிய மற்ற அம்சங்களும் எப்படி ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடயது என்பதை விளக்குகிறேன்!

நம் உணர்வுகளே கொழுந்து விட்டு எரியும் உணர்ச்சிகளை தூண்ட காரணம்! திறந்த புல்வெளியில் பாதம் பதித்து நடக்கும் போது, இந்த வாழும் வாழ்க்கையின் உயிர் துடிப்பும், அந்த புல்பரப்பில் நடந்து வரும் மென்மையை கண்டு பெருமிதம் அடையக்கூடும்! ஒன்று தெரிய வருகிறதா இந்த புல்வெளி சமபரப்பினை கொண்ட இந்த உலகம் எவ்வளவு அற்பதமானது, அதனுடன் கொண்டிருக்கும் நம் தொடர்பு எத்தனை சுகமானது! இன்னும் சொல்லப்போனால், பனித்துளி கொண்டிருக்கும் அந்த ஈரமான புல்வெளி சமபரப்பு நம்முடன் உறவாடும் உணர்ச்சிகள் எத்தனை ஏகாந்தமானவை! இது போன்ற உணர்வுகளின் மேல் கொண்ட அபரிதமான தொடர்பு அதிகமாக விரிவுபடுத்தி உன்னை நீயே ஏன் நேசிக்கக் கூடாது! இது போன்ற சிற்றினபங்களை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீ ஏன் கண்டுணரக்கூடாது! அப்படி கண்டுணர்ந்து நீ கொள்ளும் சமநிலைப்பாட்டுடன் வாழும் வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது! அப்படி கொண்டுணரும் இன்பத்தினால் அடையும் சிறு சந்தோசங்களும், அழகை ஆராதிக்கும் உன்னத நிலையையும் நீ இந்த பரபரப்பான வாழ்க்கை தொடரிலே எங்கணம் இழக்கிறாய் என்பதை நீ அறிவாயா?

உனது சிறிய பிஞ்சுகுழந்தையின் மிருதுவான கேசத்தை உனது அன்போடு வருடும் சுகத்தில் அடையும் இன்பம், மகிழ்ச்சி மட்டற்றதாயிற்றே! அந்த மட்டற்ற மகிழ்ச்சியானது, சூரிய ஒளியினால் அடையும் இளஞ்சூட்டு வெப்பத்தினை உணரும் உன் தோட்டத்து மல்லிகை கொண்ட உணர்வினை போன்று உனது பிஞ்சு உள்ளத்தின் சந்தோஷ சங்கேதத்தை கண்ட மகிழ்ச்சியினை நீ அனுபவித்துப்பார் அது என்ன இன்பமென்று! சற்றே நேரமெடுத்து அழ்கடலிலோ, இல்லை ஆற்று முகத்துவாரத்திலோ மூழ்கி கொண்டாடி பூமித்தாயின் நீர்பிள்ளைகளோட விளையாடுவதில் இன்பம் கண்டுணர்ந்து கொள், அப்பொழுது தெரியும் அவ்வின்பம் எத்தகையது என்பது! அதிரும் வாழ்க்கையின் விசைகளோடு ஆடிப்பாடி அது அனைக்க ஆர்ப்பரிக்கும் துடிப்புகளை கண்டுணர்ந்து இன்பம் கொள்! அடைப்பட்டுக் கொண்டிருக்கும் உன்னை நீயே வெளியேற்று, உனது உணர்வுகள் உன் உணர்ச்சியினை எழுப்பட்டும்! அந்த உணர்வின் உணர்ச்சிகள் முழு வாழ்க்கையின் அனைத்து இன்பத்தையும் ஆட்பரிக்க துணைக் கொள்ளட்டும்!

Wednesday, December 06, 2006

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜோடி!

நம்ம டோண்டு தமிழ் சினிமாவிலே தவிர்க்க முடியாத ஜோடிகள்னு ஒரு பதிவு போட்டார், அதிலே பியூ சின்னப்பா, தியகராஜ பாகவதர் ஜோடி, அப்பறம் சிவாஜி கணேசன் எம்ஜிஆர் ஜோடி, கடைசியிலே கமல் ரஜினி ஜோடின்னு எல்லா கதாநாயகர்கள் எதிர்மறை ஜோடிகளை பத்தி எழுதி யாருக்கு நடிப்பு, அப்பறம் யாருக்கு கரிஷ்மான்னு எழுதி போட்டதை எல்லாரும் படிச்சிருப்பீங்க! ஆனா நான் இங்கே எழுதப் போற தவிர்க்கமுடியாத ஜோடி யாருன்னா 80க்கு அப்பறம் காமிடி பண்ணிக்கிட்டு இருந்த கவுண்டமணி, செந்திலைப்பத்தி தான்!

இவங்கதான் அந்த 80, 90களில் காமிடி கலக்கல் பண்ணிக்கிட்டு திரிஞ்சவங்க!அதுவும் ஆரம்பகாலத்திலே கவுண்டமணி தனிஆவர்த்தனமா நுழைஞ்சது பாரதிராஜாவோட முதப்படமான 16 வயதினிலே தான்! அதிலே ரஜினிக் கூட வர்ற வெட்டி கிராமத்தான் கேரக்டர்! ரஜினிக்கு "இது எப்படி இருக்கு" டைலாக் அவரு பேசினதை எவ்வளவு ரசிச்சு பேமஸா மக்கள் பேசி காட்டினங்களே, அதே மாதிரி கவுண்டமணி பேசின "பத்த வச்சிட்டியே பரட்டை" டைலாக்கும் அப்ப ரொம்ப பேமஸா பேசி மக்கள் ரசிச்ச ஒன்னு! அப்பறம் அந்த டாக்டர் கிராமத்திலே பேசிறப்ப கவுண்டமணி இங்கிலீஷ்ல பேசினதை ரஜினிக்கு தமிழ்ல மொழி பெயர்த்து சொல்லும் அந்த அழகு டைலாக்கு, 'இப்ப என்ன சொல்றாருன்னு' ரஜினி கேட்க 'ம்..உச்சி வெயில் மண்டையை பொளக்குது'ன்னு சொல்ற காமடி கலக்கலா இருக்கும்! அதே மாதிரி 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்புரோஜாக்கள்'னு தொடர்ந்து அவரு காமடி பண்ணி நடிச்சது ரொம்ப பாப்புலர் அப்ப! அதிகமா நான் அதை மிமிக்கிரி பண்ணி நடிச்சு காலேஜ் காட்டினப்ப ஏகத்தும் கைத்தட்டல் வாங்கினேன், அதை நான் என்னோட எனை ஆண்ட அரிதாரத் தொடர்ல சொல்லி இருக்கேன்!

அது மாதிரி செந்தில் முதல்ல நடிக்க ஆரம்பிச்சப் படம் பாக்யராஜோட 'தூறல் நின்னுப் போச்சு'ன்னு நினைக்கிறேன்! அதிலே சும்மா சோப்பளாங்கியா நம்பியார் குஸ்தி போடற பள்ளிக்கூடத்திலே வந்து பண்ண காமிடி கலக்கலா இருக்கும். அப்பறம் கவுண்டமணி, செந்தில் ஜோடி மெள்ள மெள்ள வந்து, அப்புறம் அவங்களுக்கு காமடி டிராக்கு எழுத தனியாவே ஒரு ஆளு இருந்தாரு, அவரு பேரு வீரப்பன்! அப்படி அவங்க பண்ணுன காமடி ரொம்ப தூக்கலா இருக்கும்! சமயத்திலே அவங்க பண்ற காமிடி காம நெடியாவும் இருக்கும்! கவுண்டமணி ஸ்பெஷலா செந்திலை கூப்பிடற பாஷையே தனி, 'ஆப்பத்தலையா', 'சட்டித்தலையா', 'கடல்பன்னி'ன்னு ஆரம்பிச்சு அவரு கூப்பிடாத வசுவு வார்த்தையே இல்லைங்களாம்! அத்தனையையும் ஜனங்க ரசிச்சாங்க! அதே மாதிரி அவரோட இன்னொரு ஸ்டைல் என்னான்னா, தகப்பன், மகன், அம்மா, மகள், அண்ணன், தம்பி, அரசியல்வாதின்னு யாரா இருந்தாலும் போடா, வாடான்னுட்டு ஏதாவது ஒரு ஸ்பெஷல் வார்த்தையிலே திட்டி பண்ற காமடி அசத்தலா இருக்கும், அதை தமிழ்நாட்டு ஜனமே சிரிச்சு ரசிச்சு!

அதிலேயும் இந்த கவுண்டமணி, செந்தில் ஜோடியின் மிகச்சிறப்பான காமடி காட்சிகள் வந்தப்படம் 'வைதேகி காத்திருந்தாள்', பிறகு 'கரகாட்டக்காரன்' அதுவும் அந்த வாழப்பழம் ஜோக்கு, அப்புறம் அப்பாவியா அவரை கேள்விக்கேட்டு கொள்றது, அதுவும் அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டு லாந்தரு புசுக்குன்னு புடிச்சி, 'இது என்னாண்ணே'ன்னு க் கேட்டு நசுக்கி போடும் காட்சிகள், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்! எப்படி இளையராஜா பாட்டுக்காக படங்கள் ஓடிச்சோ, அது மாதிரி இவங்க காமடிக்காவே ஓடுன படங்கள் நிறைய! அதுவும் பெரிய சிட்டியிலேன்னு இல்லாம, பட்டி தொட்டிகள்ளே எல்லாம் பட்டையை கிளிப்பிக்கிட்டு ஓடுனிச்சு!

டோண்டு பதிவு பார்த்தோன இந்த தவிர்க்க முடியாத ஜோடியை பத்தி எழுதனும்னு தோணுச்சு, அதான்! அதோட கரகாட்டக்காரன் படத்திலேருந்து கவுண்டமணி, செந்தில் நடிச்ச காட்சிகளை இங்கே நீங்கள் கண்டு களிக்கனும்னு போட்டு இருக்கேன், பாருங்களேன், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமிடி ஜோடிகளை!

Monday, December 04, 2006

"உதிரிப்பூக்கள்" பதிவுப் பற்றி ஓர் அறிவிப்பு!

இன்று காலையில் தான் உதிரிப்பூக்கள்-மகேந்திரனின் மகுடம்! என்ற பதிவை வலை ஏற்றினேன்! உங்களின் ஏகோபித்த ஆதரவால் அது பெருவாரியாக அனைத்து தமிழ்மண மக்களிடமும் சென்றடைந்தது! அந்த வீடியோ கிளிப்பினை பெருவாரியான மக்கள் கண்டு ரசித்தனர்! இருந்தும் இன்று மதியம் 3:30 மணி PST க்கு மேல் அந்த வீடியோ சேவை உங்களை வந்தடையவில்லை! காரணம் அதை கண்டு மகிழ அனைவரும் விருப்ப பட்டதால், ஹிட் அதிகம் காரணமாகவோ ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் அதை தொடர்ந்து ஒளிபரப்ப முடியததால், மாற்று வழியாக இந்த பதிவினில் அது "Youtube" சேவையில் உங்களை வந்தடைகிறது! எனினும் முதல் டைட்டில் சாங்கும், அழகிய கண்ணே பாடலும் மட்டும் இங்கு இரண்டு கிளிப்புகாளாக வழங்கப்படுகிறது! கடைசி காட்சியை, இன்னும் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த காட்சியை ஒளிபரப்ப சற்று நேரம் எடுத்துக் கொண்டு விரைவில் உங்களை வந்தடையும்! தடங்கலுக்கு வருந்துகிறேன்!

இது போன்ற காலாத்தால் அழியாத திரை ஓவியங்களுக்கு என்றுமே வரவேற்பு உண்டு என்பது இப்பொழுது கண்கூடாகத் தெரிகிறது, வீடியோ காட்சிகளை கண்டு மகிழுங்கள்!

என்றும் உங்கள் வெளிகண்ட நாதர்!

முதல் வீடியோ கிளிப்


இரண்டாம் வீடியோ கிளிப் :


நன்றி: பிரகாஷ் பதிவு

உதிரிப்பூக்கள்-மகேந்திரனின் மகுடம்!

இந்தப்படத்தை பத்தி ஏற்கனவே நம்ம பிரகாஷ் அவரோட ஒரு பதிவிலே எழுதி இருந்தார்! அதை எத்தனைப் பேரு படிச்சிங்கிளோ எனக்குத் தெரியாது! அதை கொஞ்சம் கடன் வாங்கி இப்ப நான் எழுதப்போற இந்த பதிவிலே உபயோகப் படுத்த போகிறேன். அதாவது எண்பதுகளின் துவக்கம், எங்கள் இளமை எல்லாம் நல்ல சினிமாக்களில் கழிந்த காலக்கட்டம்! அதுவும் மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜான்னு, நடிகர்கள் கோலச்சிய காலகட்டத்திலேருந்து, இயக்குநர்களை பத்தி சிலாகிச்சி ரசிகர் கூட்டங்கள் பெரிசா பேசிக்கிட்டிருந்த நேரம்! இந்தப் படம் வந்தப்ப நான் இஞ்சினியரிங் முதலாம் ஆண்டின் முடிவை முடிச்சிருந்த நேரம்! அப்படியே இந்தப் படத்தை ஒரு பத்து தடவைக்கு மேலே கோயம்புத்தூரு, திருச்சி, தஞ்சாவூருன்னு எங்கெல்லாம் அப்ப போனேன்னோ அங்கெல்லாம் தியேட்டரில்ல பார்த்துருக்கேன்! அப்படி என்னை கட்டிப் போட்ட படம், நேத்து திரும்ப பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிது! அதை பார்த்திலிருந்து அப்படியே நான் என்னமோ ஒரு இருபத்தஞ்சு வருஷம் பின்னாடி போய்ட்டது என்னவோ உண்மை தான்! அதான் உங்களுக்கு சொன்னப் புரியாதுன்னு அதிலேருந்து கொஞ்சம் வீடியோ கிளிப்போட இந்த படம் இன்னைக்கானப் பதிவு!

அதுக்கு முன்னே கொஞ்சம் பிரகாஷ் எழுதினதை அப்படியே ஒட்டி இருக்கேன் இங்கே! அந்த பக்கத்துக்கு லிங்க்கு கொடுத்திருக்கலாம், ஆனா டெம்போ போயிடுமே, அதான், கீழே படிச்சிட்டு படத்தைப் பாருங்க!

மீண்டும் மீண்டும் பார்க்க சலிக்காத படங்களின் பட்டியலில் உதிரிப்பூக்களுக்கு இடம் உண்டு. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், போன்ற நடிகர்கள் ஒளிவட்டத்தில் இருந்து விலகத் துவங்கிய எழுபதுகளின் இறுதியிலிருந்து, எண்பதுகளின் துவக்கம் வரையிலான காலகட்டத்தை, தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம். கதாநாயகனை மையப்படுத்தி, அதீதமான உணர்ச்சிக் குவியலாக இருந்த திரைப்படங்களை, மீட்டுக் கொண்டு வந்த படைப்பாளிகள் அனைவரும், அந்த காலகட்டத்தில் அறிமுகமானவர்கள் தான். பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மகேந்திரனின் உதிரிப்பூக்கள், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஆகிய மூன்று முக்கியமான படைப்புக்கள் அப்போதுதான் வெளிவந்து, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைக்க முற்பட்டன. ஆனால், அந்த முயற்சி முழுதாக வெற்றி பெறவில்லை!

இயல்பான கிராமம் அது. ஊர்ப் பெரிய மனிதர் சுந்தரவடிவேலு ( விஜயன் ) அத்தனை நல்லவரில்லை. அவரது தம்பியே ( பூபதி ) அண்ணனுக்கு எதிரானவன். சுந்தரவடிவேலுவின் மனைவி, அஸ்வினி, அமைதியே உருவானவர், கணவன் செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கத் திராணியில்லாதவர். அவருடைய உலகம், தன் குழந்தைகள் ( அஞ்சு, ஹாஜா ஷெரீ·ப் ) தங்கை செம்பகம், அப்பா ( சாருஹாசன்) ஆகியோருடம் முடிந்து விடுகின்றது. அஸ்வினி நோய்வாய்ப்பட்டு இறந்து விட, மைத்துனியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் சுந்தரவடிவேலு. மாமனார் மறுத்துவிட, வேறொருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கிடையில் சுந்தரவடிவேலு நடத்தி வரும் பள்ளியின் ஆசிரியர் செம்பகம் மீது காதல் வசப்பட, சாருஹாசன், மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். திருமணத்துக்குப் பின்பு, அக்காவின் குழந்தைகளை தன்னுடனே வைத்துக் கொள்ள அனுமதி வேண்டி, திருமணத்துக்கு முந்தைய தினம், சுந்தர வடிவேலுவைப் பார்க்க வரும் போது, சுந்தரவடிவேலு, அவளை மானபங்கப்படுத்தி விடுகிறார். பொறுத்த வரை போதும், கொதித்து எழுந்த ஊர்மக்கள், துரத்தி வந்து, தற்கொலை செய்து கொள்ள வைத்து விடுகின்றனர.

வசனங்களுக்குப் பெயர் போன மகேந்திரன் ( ரிஷிமூலம், தங்கப்பதக்கம், வாழ்ந்து காட்டுகிறேன்.....) தன்னுடைய இரண்டாவது படத்திலே, வசனங்களுக்குப் பதில் காட்சியமைப்புக்களை நம்பியது முதல் ஆச்சர்யம். படத்தின் மொத்த வசனங்களையும் , இரண்டு A 4 காகிதத்தில் எழுதி விடலாம். அந்த ஊரில் டாக்டராக வரும் சரத்பாபுக்கும் அஸ்வினிக்கும் முன்பே பழக்கம் உண்டு என்று தெரிந்து கொண்ட சுந்தரவடிவேலு, டாக்டர் மீது காட்டும் வெறுப்பும், அதன் தொடர்ச்சியாக வரும் கைகலப்புக் காட்சியும், முதல் தரமானவை. சுந்தர.வடிவேலு மாதிரியான கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட அஸ்வினிக்கு, குழந்தைகள் தான் எல்லாம் என்பதை, ஒரே பாடலின் மூலமாக சொல்ல முடிகிற மகேந்திரனின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜாவின் இசையும், அஷோக்குமாரின் ஒளிப்பதிவும், மகேந்திரனின் கற்பனையும் ஒன்றாக சேர்ந்த அபூர்வமான கலவை அது.

பொதுவாக, திரைப்படங்களில் வில்லன்கள் திருந்தும் காட்சிகளை, எத்தனைக்கு எத்தனை சீரியஸாக எடுத்தாலும் சிரிப்பைத்தான் வரவழைக்கும். இதிலும் சுந்தரவடிவேலு, இறுதிக் காட்சியில் திருந்துகிறார். ஊர்மக்கள் அனைவரும், அவரை, கடற்கரைக்குக் தள்ளிக் கொண்டு வந்து, " குதித்து செத்துப் போ " என்று மிரட்டும் போது, அவரது முகபாவமே, அவரது மனமாற்றத்தைச் சொல்கிறது. ஊர் மக்கள் அனைவரையும், அமைதியாகத் திரும்பிப்பார்க்கிறார். அவர் ஏதோ நீளமான வசனம் பேசப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் " நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க... உங்க எல்லாரையும் நான் என்னைப் போல மாத்திட்டேன்..நான் செஞ்சதுலேயே பெரிய தப்பு அது தான் " என்று சொல்லும் காட்சி, மகேந்திரனின் கூர்மைக்கு உதாரணம்.

சாகும் தருவாயில், அங்கே வரும் தன் குழந்தைகளை, அணைத்து முத்தமிட்டு, " ஒழுங்கா படிக்கணும் , நல்ல பிள்ளைங்களா இருக்கணும், அப்பா குளிக்கப் போறேன் " என்று சொல்லி விட்டு கடலில் இறங்கிறார். ஆனால், அவர் கடலில் மூழ்குவதை காமிரா காண்பிப்பதில்லை, மாறாக, அங்கே கூடியிருக்கும் மக்களைத்தான், அவர்களது முகபாவங்களைத்தான் பார்க்கிறோம். குழந்தைகள் இருவரும், கடலில் குளிக்கப் போன அப்பா வருவாரா என்று காத்துக் கொண்டிருக்கும் போது படம் நிறைவடைகிறது.

அதிரடியான இசை இல்லாமல், ஆர்பாட்டமான காட்சிகள் இல்லாமல், இயல்பான ஒளியில், யதார்த்தமான நடிப்பில், மகேந்திரன் உருவாக்கிய இப்படம், பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் பற்றி பேசுவதைக் காட்டிலும், விவரித்து எழுதுவதைக் காட்டிலும், படத்தை நேரடியாகப் பார்ப்பதுதான் முழுமையான அனுபவத்தைத் தரும்!

முழுப்படமில்லைனாலும், ஆரம்ப டைட்டில் சாங், எனக்கு பிடிச்ச ஒன்னு, அப்பறம் அழகிய கண்ணே பாட்டும், அந்த வில்லன் திருந்தும் கடைசி காட்சியும் பருங்களேன்!


நன்றி: "Icarus Prakash"

கூகுளாண்டவர் சேவை கிடைக்கவில்லை என்பதால், வீடியோ கிளிப்பை கண்டு மகிழ இந்த,"உதிரிப்பூக்கள்" பதிவுப் பற்றி ஓர் அறிவிப்பு!" பதிவுக்கு செல்லுங்கள்

Friday, December 01, 2006

Lady Boy God Father-வரலாறு காண்போமா??

"ஆடத் தெரியலைன்னா ஆடிக்காட்டலாம், பாடத் தெரியலைன்னா பாடிக்காட்டலாம் ஒரு வேலையை செய்யத் தெரியலைன்னா செஞ்சு காட்டலாம். ஆனா, ஆம்பிளையான்னு கேட்டா? அதான்..." என்று கனிகாவை கற்பழித்துவிட்டு திரும்பும்போது, அந்த வார்த்தையை முடிக்காமல் அங்க அசைவுகளால் நடந்த காரியத்தை விளக்கும்போது பாரபட்சம் பாரமல் ரசிகர்களிடமிருந்து பறக்கிறது 'பிளையிங் கிஸ்.' இடதும் வலதுமாக விழிகளை அசைத்து அபிநயம் பிடிப்பது, கைதேர்ந்த பரத நாட்டிய கலைஞர் போல் நடந்துவரும் தோரணை, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி 'வணக்கம்' சொல்லும் பாவனை என அஜித்தின் புதிய பரிமாணம் புல்லரிக்க வைக்கிறது. இப்படி இந்த வரலாறு திரைப்படத்துக்கு எங்கேயோ எழுதின விமர்சனத்தை படிச்சிட்டு, சரி அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கிறதுக்கு நேத்து கேசட்டை வாங்கிப் போட்டு இந்த படத்தை பார்த்தேன்! மேற்கொண்டு ரஜினியும், இந்த மாதிரி படத்தை லேட்டாக்காம சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க, ரொம்ப அருமையா இருக்கு அப்படின்னு நடிச்ச அஜீத்துக்கு, அப்பறம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு பாராட்டு தெரிவிச்சாருன்னும் எங்கேயோ படிச்சதிலிருந்து சரி இந்த படத்திலே என்னதான் இருக்குன்னு பார்க்க சரியான ஆவலை தூண்டினது என்னமோ வாஸ்த்தவம் தான்! ஆனா, பார்த்த பின்னாடில்ல தெரிஞ்சது கதை எப்படி கந்தல்ன்னு!

அதான், இந்தப்படத்தோட முக்கியாம்சமாக இருக்கக்கூடிய தீம் ஒன்னை எப்படி சராசரி சினிமா லாஜிக்கோட எடுத்து ஒரு தப்பான மெஸேஜை மக்களுக்கு சொல்லுதுங்கிறதை பத்தி கொஞ்சம் விரிவா பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு! அதாவது, சின்ன வயசிலேருந்து பெண்ணின் இயல்புடன் வளர்க்கப்பட்ட இளைஞனின் செக்ஸ்வல் கண்ணோட்டம், திடீர்ன்னு நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியாலே மாறி எப்படி ஒரு சராசரி ஆண்மகனின் மனக்குமறலாக மாறி எந்த பெண்ணால பாதிக்கப்பட்டானோ அதே பெண்ணை கற்பழிச்சு பழி தீத்துக்கிட்டது சரின்னு சினிமாத்தனமான லாஜிக்கை மக்களுக்கு கொடுத்து எப்படி கெடுத்துருக்காங்கன்னு பார்க்கலாம் வாங்க! அதுவும், சமீபத்திலே தமிழ் மணத்திலே அதிகமா பேசப்பட்டுக்கிட்டு இருக்கிற பெண்ணடிமை பற்றியும், பெண்களை ஏன் இப்படி பாவிக்குது நம்ம சமூகம் அப்படின்னு காட்டஞ்சாட்டமா, "பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்த மானம் மரியாதை மற்றும் இன்னபிற குல சொத்துக்களெல்லாம் பெண்ணின் தொடையிடுக்கில் பொத்தி பொத்தி காப்பாற்றி வருவதாக இச்சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது"ன்னு, மறுமொழி, பின்னோட்டம், பதிவுகள்னு பட்டையை கிளப்பிக்கிட்டிருக்கும் தமிழ்ஜனங்களே இந்த மாதிரி படங்கள் எப்படி சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்குதுங்கிற உண்மையை கொஞ்சம் ஆராஞ்சு இல்லை யோசிச்சி, அதை பத்தி என்னான்னு பார்ப்போம், வாங்க!

சர்வ ஜாக்கிரதையா இந்த மூன்றாம் இனத்தவரோட எதிர்ப்பு வரக்கூடும்னு, அவங்களை காமிக்காமா, ஆனா அதன் பிரதிபலிப்பா, நாட்டியகாரி மகனை நாட்டியம் கத்துக் கொடுத்ததாலே, அப்படி இப்படி பெண்மை கலந்த ஆண்மகனா ஆயிட்டாங்கிற லாஜிக்கு சினிமாவுக்கு வேணா ஒத்து போகலாம், ஆனா உண்மையிலே இந்த மாதிரி மூன்றாம் இனத்தவர் எப்படி உருவாகிறார்கள் என்பதை பத்தி நீங்க தெரிஞ்சிக்குனும்னா, இணையத்திலே இந்த "TransGender" பத்தி நிறைய விஷயங்கள் இருக்கு! அதுவும் நம்மூர்ல கூப்பிடுகிற அரவாணிகள், திருநங்கைகள், மற்றும் வடக்கே கூப்பிடும் "hijra", "kothi" பற்றிய கதைகள் மிகவும் சுவராசியமானவை! பத்திரிக்கைகளில் நீங்க படிச்ச கூவகத் திருவிழா போன்று! அதே சமயத்தில் மிகவும் பரிதாபமானது அவர்களது வாழ்க்கை! (வேணும்னா, இந்த வீடியோ கிளிப்பை, Harsh Beauty, கொஞ்சம் பாருங்க!) சமூகத்திலே இன்றைக்கு அவங்களுக்குன்னு சரியான அந்தஸ்த்தோ இல்லை மனிதநேயமோ இன்னும் சரியா கிடைக்கில்லை! ஆரம்பத்திலேருந்து அவங்களை கீழ்தரமா தான் நடத்தி வந்திருக்காங்க! ஆனா கொஞ்சம் அந்த இனத்தின் சரித்திரம் படிச்சீங்கன்னா, பெரிய பெரிய ரோம சாம்ராஜயத்தையே முக்காவாசி கவிழ்த்து ஆளுமை செய்யக்கூடிய வித்தை கற்றவர்களாகவும், ஏன் முகலாய சாம்ராஜ்யத்திலே அவங்களுக்குன்னு ஒரு தனி இடம் இருந்திருக்கு!

அப்பறம் நம்ம புராண இதிகாசங்கள்ளேயும் அவங்களுக்கு தனி இடம் பெற்றவர்களாகவும் இருந்திருக்காஙக! ஆனா அவங்களை எந்த பக்கம் சேர்க்கிறதுன்னு, அதாவது ஆண்பாலிலா, இல்லை பெண்பாலிலாங்கிறது அந்த ராமர் காலத்திலேருந்து(ராமர் காட்டுக்கு போகும் போது ஆண்கள், பெண்கள் வீட்டுக்கு போங்கண்ணு சொன்னப்ப, இவங்க எதிலே சேத்தின்னு தெரியாமா, நின்ன இடத்திலே பதினாலு வருஷம் அப்படியே நின்னு கழிச்சாங்களாம்) இருந்து வந்த ஒன்னு! அப்படி பட்ட போராட்டத்திலே இன்னைக்கும் நின்னு ஜெயிச்சிக்கிட்டிருக்கிற கம்லா ஜான், சபனம் மெளஸி பத்தி தமிழ் நாட்டு ஜனங்களான உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கிற வாய்ப்பில்லை! இவெங்கெல்லாம் வட இந்திய மாநிலங்கள்ல எம்பி ஆகவும், மேயராகவும் இருக்காங்க! அதே மாதிரி, வடக்கே இவங்கே கிட்ட ஒரு அதீத சக்தி இருக்குன்னு நல்ல காரியங்கள், இல்லை நல்ல நிகழ்ச்சிகள், அதாவது குழந்தை பிறக்கும் போது இல்லை கல்யாணம் காட்சின்னு நடக்கிறப்ப, அவங்களுக்கு தர்மம் பண்ணுவதை உத்தமமா நினைப்பார்கள்!

சரி நான் சொல்ல வந்த சங்கதி என்னான்னா, இது போன்ற திரைப்படங்களின் ஆளுமை எப்படி நம் இளஞர் கூட்டத்தை தடுமாற செய்து, நம் கொண்டுள்ள பிற்போக்கான சமுதாய எண்ணங்களை மாற்ற வழி செய்ய முடியாமல் போகிறது என்பதை பற்றிய ஒரு ஆராய்ச்சி தான்! சமூகத்துக்கு பெண்களின் மீது எப்படிப்பட்ட கண்ணோட்டம் இருக்கிறதுங்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னு தான்! ஆனா, சிறு வயசிலேருந்தே ஆண்மகன் எப்படி வளர்க்கபட்டு வருகிறான் என்றும், அவர்களுக்கு இந்த பாலியல் சம்பந்தமான மனப்போக்கு மற்றும் பிறப்புச்சுகாதாரத்தின் மீதான மாறுபட்ட கண்ணேட்டமும், வேறு மாதிரியான நடைமுறை ஒழுக்கங்களும் (The Formation of Sexual and Reproductive Health Behaviour Among young Men) எப்படி அவர்களை சீரழிக்கிறதுன்னு, இந்த "HIV/AIDS" தடுப்புன்னு பேசிக்கிட்டு "World AIDS Day" கொண்டாடிக் கிட்டிருக்கிற இவ்வேளையிலே அதைப் பத்தி என்னா பார்ப்போம் வாங்க!

பொதுவா வாலிப வயது இல்லை பதின்ம வயதுன்னு சொல்ற அந்த பருவத்திலே, ஒவ்வொரு ஆண்மகனின் பாலியல் மற்றும் பிறப்புச்சுகாதாரத்தின் மீது கொண்டிருக்கும் கண்ணோட்டங்கள், மனநிலை, அதன் ஈடுபாடு, இது எல்லாத்துக்கும் காரணமாக அமைவது என்னான்னு பார்த்தீங்கன்னா, சக்தியுள்ள வலிமையான, போட்டியினை சந்தித்து வெற்றி கொள்ளும் ஆண்பிள்ளைத்தனமா இருக்குணும்ங்கிர தாக்கம், அதாவது 'ஆம்பளையா ஜெயிச்சுக்காட்டுன்னு', சொல்லுகிற இந்த சமூக உருவாக்கமும் அதன் தாக்கங்களும் தான்!(Socialisation Process and Societal Pressure) அதன் விளைவாய் 'கல்லைத் திண்ண்ணாலும் கரையிற வயசுன்னு', 'இந்த வயசிலே நமக்கு எந்த நோயும் பாதிக்காது'ன்னு, ஒரு குருட்டு தைரியத்திலே அவர்கள் தேடிப்போகும் தவறானப் பாதை, சீக்கிரமே ஆம்பள்ளைன்னு நிரூபிச்சிக் காட்டணும்ங்கிற ஒரு வெறி! அது எங்க கொண்டி விடுதுனா, ஆபத்தான பாலியல் நடத்தை(Risky Sexual Behaviour), பருவ வயது வருமுன்னே அடையத்துடிக்கும் பாலியல் இன்பம், பலருடன் உறவு வைத்து கொள்ளும் கோட்பாடு, இது எல்லாமே! இதனால் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை பாழ்படுவது வெகு சுலபம்! நாளைக்கு இந்த உலகை ஆளப்போகிற பாதி இளைஞர் கூட்டம் நம் நாட்ல தான் இருக்காங்க,'Vibrant Young Generation'! அவங்களை இந்த மாதிரி சூழ்நிலைகளிலே அவர்களை மாற்றி நல்வழி கொண்டுவரணும் பாடுபடும் பல AIDS/HIV கட்டுப்பாடு இயக்கங்கள், எப்படி இந்த இளைஞர் கூட்டத்துக்கு சரியான பாலியல் பாடம், பாதுகாப்பான உடலறவு, சரியான பாலியல் பற்றிய மனநிலை, கண்ணேட்டங்களை கற்பித்தல், இளம் வயதிலே பாலியல் உறவு வைத்துக் கொள்வதை தாமதமாக்குதல், பல பேருடன் உறவு வைத்து கொள்வதை எப்படி குறைத்து கொள்வது, பாலியல் தாக்கங்களை மாற்றுவழியில் போக்கி கொள்வது, ஆணுறை உபயோகிப்பது, முக்கியமாக பெண்களின் நுண்ணிய உணர்வுகளை மதித்து, அவர்களுக்குரிய மரியதையை எப்படி செலுத்த வேண்டுமென்பது வரை அவர்களை தயார்படுத்தி நல்வழியில் எடுத்து சென்று இந்த பாலியல் மற்றும் பிறப்புச்சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு முறைகளை சரியாக வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கொள்ள வேண்டுமென்பது வரை முயன்று கொண்டிருக்கின்றன. ஆனா, நான் மேலே சொன்ன "ஆம்பளைன்னு காட்ட...." டயலாக் பேசி, அதுக்கு 'பிளையிங் கிஸ்' கொடுத்து ரசிக்க வைக்கும் தப்பான கூட்டம் வளர்க்கத் துடிக்கும் இந்த மாதிரி சினிமாக்களை எடுக்கும் மகாபாவிகளை என்ன செய்யனும் சொல்லுங்க!

ஆம்பள்ளையா இருக்குனும்னா இந்த இந்த மாதிரி இருக்கணும்னு ஒரு இலக்கணம் தெரிய அதிகம் வயசு எடுத்துக்கிறதில்லை நாமே! அஞ்சு வயசுக்கப்பறம் உடை, நடை, பேச்சு, ஆடை இது எல்லாத்திலேயும் வித்தியாசம் காண ஆரம்பிச்சுடுவோம்! அஞ்சு வயசுக்கு முன்னே பொம்பளைபுள்ளைங்க போடர ஃபிராக்கு போட்டு, மையி, பொட்டு வச்சு ஆண் பெண் பேதமில்லாம பார்க்கும் அழகு பொசுக்குன்னு மாறி போயிடும்! நீ ஆம்பளைச் சிங்கம்டா ன்னு சொல்லி சொல்லியே சின்ன வயசிலேருந்து துடிப்பா, உறுதியா, எதையும் ஆக்கிரமிக்கும் தன்மையோட வலிமையா வரணும்னு சொல்லி இலக்கணம் வகுத்துடுவாங்க! பொண்ணுன்னா, கீழ்படிஞ்சு, வீட்டோட, பணிவோட, தங்குதக்காணு குதிக்காம, வாழ்க்கையிலே முதலில் தென்படுகிற ஆண்மக்களான தந்தை அண்ணன் மற்றும் கணவணுக்கு அடங்கி போகும் தன்மைகளோட அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னு சொல்லி இலக்கணம் வகுத்து விட்டு விடும் நம்ம சமூகம். இந்த இலக்கணத்திலே எது மாறுனாலும், நீ உன்னோட ஆசைகள் அதிதமா இருந்து ஒத்து போகலைன்னா நீ தேடி போக வேண்டியது மூணாவது இனத்தை நோக்கி!

அது மாதிரி 12 வயசுக்கு மேலே போனா உனது பாலியல் பங்கு என்னான்னு தெரிய ஆரம்பிக்கும்! அதுவும் யாரும் பக்கத்திலே வந்து சொல்லி கொடுக்கிறதில்லை, எட்டி நின்னு சுத்தி நடக்கிரதை வேடிக்கை பார்த்து! அப்ப தான் சமூகம் வடித்த கட்டுப்பாடு,அமைப்பு, இது இப்படித்தான்னு சொல்லி சொல்லி மனசுலே ஆழமா பதிஞ்சு போயி, அப்புறம் பெரியாரு வந்து சொல்லியும் ஒன்னும் சுகப்படமா போயிடும்! அப்புறம் பொண்களை தெய்வமாவும் மதிக்க சொல்லும், அதே சமயத்திலே கொலையும் செய்வாள் பத்தினின்னும் சொல்லும்! அது மாதிரி ஆண்பிள்ளையை கட்டிப்போடும் வசியம் அவங்கக்கிட்ட இருக்கிறதாலே, அதை அடக்கி கட்டுப்பாட்டுக்குள்ள வச்சி ஆளணும்னு சொல்லும்! ஆக அவங்களை பத்தி தெளிவான கருத்துகளை உருவாக்காம மாறு பட்ட கண்ணோட்டத்தை(Conflict attitude)உருவாக்கி கொடுத்திடும்! அப்பறம் ஆண்பிள்ளை என்ன செய்வான்! இதில்லாம நீ ஜெயிச்சுக்காட்ட்ணும்னு சொன்ன ஆம்பள்ளைத்தனம் தலை எடுத்தோன, எதிர்பால் கூட்டதை எப்படி அடக்கி ஆளணம்னு யோசிக்க ஆரம்பிச்சு பெண்பிள்ளை சிநேகம் கடைசியிலே கருமமே கண்ணாயினார்ங்கிற ரேஞ்சுக்குத்தான் வளர்க்க பார்க்கும்! பெரும்பாலும் உண்மையான சிநேகம் வர சான்ஸ் ரொம்ப கம்மி! அப்பறம் பாலியல் வித்தையை நண்பர்கள் கிட்டதான் பேசிக் கத்துக்கணும், இல்லை சரோஜாதேவி புத்தகமே துணை! அதிகம் போன உன்னதை விட என்னுது பெரிசுன்னு போட்டி போட்டு, அப்பறம் நடை, உடை, பாவனை, பாடி-பில்டிங், பேச்சுத்திறமை, அப்படின்னு ஆரம்பிச்சு, கடைசியிலே பாலியல் கலையின் உச்சம்னா "Penetrative power" தான் தோண வைக்கும்!

இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம் எப்படி நம்ம இளைஞர் கூட்டம் சீரழிஞ்சு போகுதுன்னு, அதெல்லம் மாத்தி, நான் மேலே சொன்ன மாதிரி பாடுபட்டுக் கொண்டிருக்கும் பல இயக்கங்கள் இளைஞர்களை நல் வழியில் கொண்டு வந்து அவர்களின் பாலியல் மனநிலை, கட்டுப்பாடு ஒழுக்க நிலைகளை மாற்றி நோய்யில்லா வாழ்க்கையோட இந்த வளரும் நம் இளைஞர் சக்தியை கொண்டு வரணும்னு நினைக்கிற வேளையிலே இந்த மாதிரி ஒரு திரைப்படம் தமிழ் சமுதாயத்துக்கு தேவையான்னு யோசிச்சுப் பாருங்க, இது வெறும் 'பிளையிங் கிஸ்', விசில்களோடு தியோட்டரில் முடிந்து விடுவதில்லை, அதையும் மீறி சில தவறுகள் நிகழ்த்தவும் வழி வகுக்கும்! அதுக்குத்தான் இந்த பதிவு!

(மேலே சொன்ன அத்தனை தாக்கங்களோடு தான் நானும் என் இளமைப்பருவத்தை கழித்தேன், அதில் நல்ல வேளையாக தவறான வழிக்கு போகவில்லை, இருந்தாலும் என்னுடய சில மனநிலைப்பாடுகள் சில சமயங்களில் பெண்ணினத்தினை சரியான முறைகளில் அணுகாமல் போனாலும் வயது முதிர்ச்சி அந்த பக்குவத்தை எனக்கு கொடுத்தது!)

இதை எழுத தூண்டிய பதிவு "பெண் ஏன் அடிமையானாள்?"