Thursday, November 23, 2006

தண்ணீர்... தண்ணீர்....!

என்ன திடீர்னு பாலசந்தர், 1980ல எடுத்த படத்தோட டைட்டிலை போட்டு சினிமா கதை சொல்லப்போறேன்னு நினனக்கிறீங்களா! ஆமா உலகம் எதிர் நோக்கி நிக்கும் தண்ணிப் பஞ்சத்தை பத்திதான் சொல்லபோறேன்! அந்த படத்திலே அத்திப்பட்டு கிராமத்திலே தண்ணி இல்லாம வறண்ட கதையை அழகா அப்ப நாடகம் போட்டு கோமல் சுவாமி நாதன் சொன்னதை, கவர்ச்சியா, சொன்னபடி ஆடி பாடி, தரையிலே உருண்டு புரண்டு நடிப்பாற்றலை வெளிப்படுத்திய சரிதாவை வச்சு 'மரோச்சரித்திரா' தெலுங்குப்படம் எடுத்து முடிச்சு அது அசத்தலா ஓடி ஆடி ஓஞ்சப்பின்னே, இந்தப்படத்தை அழகா எடுத்து வறண்ட பூமி கதை சொன்ன இந்த படத்தை நீங்க எத்தனைப் பேரு பார்த்தீங்களோ எனக்குத் தெரியாது! ஆனா இப்ப நான் சொல்லப்போற இந்த தண்ணிப்பிரச்சனை, வளர்ந்த நாடுகளை விட நம்மைப் போல வளரும் நாடுகளுக்கு எப்படி சாவு மணி அடிக்கப்போகுதுன்னு உங்களுக்கு அதிகம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை!

அப்படியே தெரிஞ்சாருந்தாலும், கொஞ்ச நாளைக்கு முன்னே நடந்த தண்ணிபிரச்சனையை விட, பாரதிராஜா தலமையிலே நெய்வேலிக்கு போன நடிகர் நடிகையர் கூட்டம் அதிகமா, இல்லை ரஜினிகாந்த் தலமையிலே சென்னையிலே பீச்சிலே உண்ணாவிரதம் பண்ண வந்த நடிகர் நடிகையர் கூட்டம் அதிகமான்னு கணக்கு ஆராஞ்சு போட்டு அதை அப்படியே விட்டுட்டு வேறே கதை பார்க்கப் போய்ட்டீங்கன்னா நான் என்னத்தை சொல்றது. இல்லை, நம் நாட்டு நதிகளை இணைக்க 'தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு', நான் ஒரு கோடி தரேன்ன்னு ரஜினி அறிக்கை விட்டதை படிச்சிட்டு, அடடா நம்ம தலைவருக்கு எப்படி ஒரு முற்போக்கு எண்ணம், நம்மை காப்பாத்த என்னன்ன வழிமுறைகளை நாட்டுக்கு எடுத்து சொல்றாருன்னு சிலாகிச்சு அப்படியே கதையை அம்போன்னு விட்டிருந்தீங்கன்னா, ஐயா, கொஞ்சம் எந்திருச்சி வாங்க, நான் மேற்கொண்டு சொல்லப்போற விஷயத்தைப் படிக்க, அதுவும் எப்படிப் பட்ட பூதகரப் பிரச்சனையிலே நாம் இருக்கோங்கிறதை பார்க்க வாங்க! (சிவாஜி படத்திலே திரும்பவும் இந்த நதி இணைப்பு திட்டம் பத்தி தலைவரு ஏதோ சொல்லப்போறாராம், பொறுத்திருந்து பார்ப்போம், ஆனா ஒன்னு சொல்றேன், இந்த நதி இணைப்பு சாத்தியக்கூறுகளைப் பத்தி நம்ம தொழில்நுட்ப வல்லுநர்கள், அதான் ஹைட்ராலஜிஸ்ட்டுங்க, வேறே கதை சொல்றாங்க, அது தெரியுமா, உங்களுக்கு, என்ன பண்றது, கலை உலகமே கதின்னும், அவங்கே சொல்றது தான் வேதமுன்னு கிடந்தா எங்கிட்டுப்போய் சொல்ல! ம்.. அது எதுக்கு இப்ப வாங்க கீழே போய் பார்போம் மேற்கொண்டு!)

ஒரு ஆறு மாசத்துக்கு முன்னே தான் 'ச்சோ'ன்னு சென்னையிலே மழை பேஞ்சு, எல்லாரும் வருண பகவானைத்திட்டி தீர்த்து, வெள்ளக்காடாகி, இப்ப தண்ணிப்பிரச்சனை ஏதுமில்லாம இருக்கிற
நேரத்திலே இது என்ன புதுக்கதையா ஒரு பதிவுன்னு நீங்க கேட்கிறதுப் புரியது, ஆனா தண்ணி இல்லாம இருந்த கஷ்ட காலத்தை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க கொஞ்சம்! அதுவும் தண்ணி வண்டி எப்பவரும்னு காத்துக் கிடந்து குடத்திலே குடிக்க தண்ணிப்புடிச்ச கதையை மறந்துடாதீங்க! இது சென்னையின்னு இல்லை, இந்தியாவில இருக்கிற பெரும்பாலான மாநகரங்கள், நகரங்களுக்கே உண்டானக் கதை! நான் டில்லியிலே இருந்த காலத்திலே இந்த தண்ணி கஷ்டத்தை ரொம்பவே அனுபவிச்சவன், அதை விட மோசமா வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் சேரி பகுதி மக்களை நேரிலே பார்த்துருக்கேன், அதுவும் காலையிலே நாலு மணிக்கே எழுந்து கைக்குடத்தோட தண்ணி லாரிக்கு காத்து நிற்கும் கூட்டத்தை பார்த்தவன், அதுவும் நல்ல காலங்கள்ல! கெட்ட காலங்கள்ல, தண்ணி லாரி வந்தா உண்டு, இல்லைன்னா, அவ்வளவு தான், அதுவும் பாலுக்கு குடுக்கிற காசைவிட அதிகமா காசுக்கொடுத்து தண்ணி வாங்கி குடிச்ச கதை இருக்கு! சில சேரி வாழ்மக்கள், பக்கத்திலே, தேங்கி நிக்கும் கழிவு நீர் குளத்திலேயே குண்டி கழுவி, குளிச்சு, துணி துவைச்சு, 'அந்த தண்ணியை குடிச்சா அடுத்த நிமிஷம் உயர் வாழ்றது சத்தியமில்லைன்னு', தெரிஞ்சும் அதை புழங்கும் கூட்டத்தை பார்த்ததுண்டு!

சரி தண்ணி ஒரு நாளைக்கு எவ்வளவு ஒரு மனுசனுக்குத் தேவை? அதுக்கு ஏதும் வரை முறை இருக்கா? இதை பத்தி நீர்வள மேம்பாட்டு வல்லுநர்கள் என்ன சொல்றாங்க, ஒரு 50 லிட்டர் தேவை இருக்குமா ஒரு நாளைக்கு, அரசாங்கம் என்ன சொல்லுதுன்னா நம்ம இந்திய தரப்படி 40லிட்டர் ஒரு மனுஷனுக்கு தேவை ஒரு நாளைக்குன்னு சொல்லுது! இரண்டு மூணு லிட்டர் குடிக்க, மிச்சம் சமைக்க, குளிக்க, குண்டி கழுவ! ஆனா இதையே ஒரு அமெரிக்க குடிமகன் எவ்வளவு செலவு பண்றான் தெரியுமா, குறைஞ்சது 400 லிட்டர்லருந்து 600 லிட்டர் வரை, ஐரோப்பிய நாடுகள்ல இதுல பாதி! ஆனா நான் மேலே சொன்ன சராசரி சேரி ஜனங்க உபயோகிக்கிறது இரண்டு இல்லை மூணு வாளி தண்ணியா இருந்தா எதேஷ்டம்! அதுவும் 7 பேரு கொண்ட ஒரு பெரிய குடும்பத்துக்கு, அதுவும் டில்லியிலே 45 டிகிரி கொளுத்திற மத்தியான வெய்யிலுல, கொட்டாங்குச்சி தண்ணியை மட்டும் குடிச்சு, அதுக்காக, பாதி சம்பாதிக்கிற வருமானத்தை போக்கி வாழும் மக்கள் கூட்டம் தான் நம்ம நாட்ல பாதிக்கு மேலே!

தண்ணீர்ங்கிறது வாழ்வோட அடிப்படை அம்சமில்லையா? அதுதான் வேணுங்கிற அளவுக்கு இருக்கே உலகத்தில, இப்ப என்னா அதுக்குங்கிறீங்க! அதுவும் ஓவ்வொரு லிட்டர் தண்ணின்னு, எங்கெல்லாம் 'நீர் நிலைகள்', 'ஆறுகள்', 'குளங்கள்', 'ஏரிகள்' ன்னு கண்ணுக்கு தெண்படுதோ, அதுபோல இன்னும் அம்பது பங்கு தண்ணி நிலத்தடிக்கு கீழே பூமிமாதாக் கிட்ட இருக்கு, அப்படி இருக்க, இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு அளட்டிக்கனும்னு நீங்க கேட்கிறீங்க! ஆனா ஒன்னு சொல்லிப்புடறேன், இந்த தண்ணிக்குன்னு நம்ம மட்டும் கர்நாடகாக்காரக்கிட்டேன் சண்டை போடல, ஆதியிலேயிருந்து இந்த தண்ணிக்காக சண்டைப் போட்ட கதைகள் நிறைய இருக்கு! அதுவும் மிகப்பழமையானயான சுமேரிய நாகரீகம் தோன்றின மெசபடோமியாவியிலேயும் சரி, பழங்காலபைபிள்ல வந்த செங்கடலைப்பிரிக்கும் கதையும் சரி, எல்லாமே இந்த தண்ணிச் சண்டைக்காகத்தான்!

இன்னும் ஒரு 50 வருஷம் கழிச்சு, அதாவது 2050ம் ஆண்டுல இருக்கப்போற 900 கோடி ஜனங்க எல்லாத்தும் தண்ணி கிடைக்கணும்! அதுவும் இதில பாதிக்கு மேலே நம்மைப்போல வளரும் நாடுகளோட ஜனங்கள், இவர்கள் எல்லாத்துக்கும் தண்ணிக் கிடைக்கணும்! உலகத்திலே இருக்கிற அத்தனை நீர் வளமும் சமமா பிரிஞ்சிருந்தா, இல்லை மழை வேனுங்கிறப்ப, வேணுங்கிற இடத்திலே பேஞ்சு போனா எல்லாருக்கும் தண்ணிக் கிடைக்கும், அதுல ஒரு சந்தேகமும் இல்லை, ஆனா வருணபகவான் அவ்வளவு தயாநிதி இல்லை! அங்க தான் கதை கந்தலாகப்போகுது! டெல்லி மாதிரி ஊர்ல வருஷத்துக்கு 40 நாளு, அதுவும் நாலு மாசத்துக்குள்ள பேஞ்சு முடிஞ்சா நீங்களும் நானும் செஞ்ச அதிர்ஷ்டம், இன்னும் சில ஊர்கள்ல இது ரொம்ப மோசம்! உலக ஜனத்தொகையிலே 20 சதவீதம் நம்மோடது,ஆனா நம்மக்கிட்ட இருக்கிற நீர் வளம் வெறும் நாலு சதம்! அது மாதிரி சைனா கனடா நாட்டை விட நீர் வளம் ரொம்ப கம்மி, ஆனா அங்கே ஜனத்தொகை கனடா நாட்டைவிட நாப்பது பங்கு அதிகம், அதனாலே நிலத்தடி நீர்தான் பஞ்சம் தீக்கனும், ஆனா நிலத்தடி நீரை அதுவா மழை பேஞ்சு புதுபிச்சக்கிறதுக்குள்ளே நாம உறிஞ்சு தீர்த்துப்புட்டதாலே கிணத்தை 200 அடிக்கு மேலே தோண்டுனாலும் தண்ணிக் கிடைக்கிறதில்லை! இது தான் பிரச்சனைக்கு ஆரம்பம், இப்ப புரிஞ்சுதா!

உலகத்திலே இருக்கிற அத்தனை நாகரீகங்களும் தோன்றியது எல்லாம் நதிகளை சார்ந்த பகுதிகள்ல தான், அதுவும் சிந்து சமவெளி நாகரீகத்திலே இருந்து! அதுனாலதான் நாம நதிகளை எல்லாம் கன்னியா வச்சிருந்து பெருமை பேசி வந்தோம்! நதிகள் தான் ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு முதக்காரணமா இருந்தது, அதுவும் 2000 வருஷத்துக்கு முன்னே நிர்மானிச்ச ரோம் நகரமா இருந்தாலும் சரி, இல்லை நியுயார்க், லண்டன் போன்ற பெரும் நகரங்களானாலும் சரி, அது ஏன் நம்ம நாட்டு எல்லா பெரு நகரங்களும், நதிகளை ஒட்டிப்பிறந்தது தான்! தேம்ஸ், ஹட்சன் நதிகளும், அதுவும் அதில் ஏற்படுத்திய நீர் நிலை தேக்கங்களால் தான் மனித குல வளர்ச்சி உண்டானது! மதுரையைப் பத்தி பெருமை பேச வைகை இல்லாட்டி அவ்வளவு தான், அது மாதிரி திருச்சி, தஞ்சைக்கு காவரி இல்லேன்னா மதிப்பில்லை! டில்லியிலே ஷாஜஹான் ஆட்சி புரிஞ்சி சரித்திரம் பேச யமுனை இல்லையின்னா ஒன்னுமில்லை (என்னா ஒன்னு எழவு, சென்னை ஒன்னு தான் கொஞ்ச நஞ்சம் ஏரியை வச்சி வசிச்ச அந்த காலப்பகுதி,ஆங்கிலேயன் வந்து சும்மா ஒண்டிக்க தோதுவா இருக்கட்டுமுன்னு கடலோரப் பகுதியிலே, அடிச்சி விரட்டினா ஓடிட தோதுவா இருக்குமுன்னு நிர்மானிச்ச நகரம், இப்ப அது வளர்ந்து தலைநகராகி, நம்ம எல்லாரும் அந்த ஊரை பாக்க போயி செம்பரைபாக்கம் தண்ணி குடிச்சு வளர வேண்டியதா போச்சு, தாமிரபரணி, சிறுவானி தண்ணிக்குடிச்சு வளர்ந்த கதையை பெருமை பேசினாலும் கடைசியிலே எழவு கூவத்திலே குப்பைக் கொட்ட வேண்டியதா இருக்கு! ஆக சிங்காரச் சென்னை வளர்ந்த நாகரீக கதை இந்த கோணாலா இருக்கு, அதனால தான் இந்த தண்ணி கஷ்டத்திலே முதலிடம் வகிக்குது!)

ஆனா இந்த 21ம் நூற்றாண்டிலே எந்த ஒரு நதி மட்டும் இது போன்ற பெரும் நகர தண்ணீர் பிரச்சனையை தீர்க்கப்போறதில்லை! ஒன்னரை கோடி மக்கள் கொண்ட டில்லிக்கு தேவை 350 கோடி லிட்டர் தண்ணிர், ஆனா அதில டில்லி ஜல்போர்ட் சப்ளே பண்றது வெறும் 250 கோடி லிட்டர் தண்ணி தான், அதிலே மூணுல ஒரு பங்கு வர்ற வழியிலேயே கசிஞ்சி காணம போயிடும், அங்கங்க பொத்துக்கிட்டிருக்க பைப்பில்லேயும், சரியா மெயிண்டனென்ஸ் இல்லாம இருக்கும் பம்பிங் ஸ்டேஷன்ல பீச்சிக்கிட்டிருக்கிற தண்ணியிலே போய் சேர்ந்திடும், அப்பறம் மிச்ச சொச்சம் வர்ற தண்ணியை உறிஞ்சி கொள்ளை அடிக்கிற கும்பலு, அதை எடுத்து வித்து காசாக்கும், அதுவும் பைப்பு போடாத சேரியிலே இருக்கிற மக்களுக்கு வித்து, கடைசியிலே அதைத்தான் இந்த சேரி ஜனங்க வாங்கி குடிக்கணும்! (இந்த சேரிங்கிறது, அனுமதி பெறாத வரிகட்டாத குடியிருப்பு, அதனால பைப்புல தண்ணி அவங்களுக்கு போகாது, லாரியில தான் போகும்!) இந்த கணக்கு வெறும் டில்லிக்கு மட்டுமில்லை, அநேகமா எல்லா பெரிய இந்திய நகரங்களுக்கும் தான்!

சரி வேண்டிய தண்ணி நதிகள்ல இருந்து வர்றலேன்னு நிலத்தில தோண்டத்தான் வேணும்! அப்படி தோண்டி தோண்டி இப்ப கதை கந்தலாகிற நிலமைக்கு வந்திடுச்சி! அதுவும் விவசாயத்துக்குன்னு நாம தோண்டி தோண்டி பண்ணிய பசுமை புரட்சி நிலமை இப்ப எப்படி இருக்குன்னா, எலி வருத்து திங்க வேண்டிய நிலமையிலேயும், பசி பட்டினியால விவசாய குடும்பங்கள் சாகவும் காரணமா இருக்கு, ஏன்னா தண்ணி இல்லை! 20 லட்ச கிணறுங்க இந்தியாவிலே ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னே இருந்தது, அதுவே இப்ப 23 கோடிக்கிணறுகள் இருக்கிறதா ஒரு கணக்கு சொல்லுது! இப்படியே வளரும் ஜனத்தொகைக்கு, தோண்ட தோண்ட கடைசியிலே உப்புத் தண்ணியும், கல்லுக்கிடையிலே இருக்கிற விஷத்தண்ணியும் வந்து ரொம்ப நாளாகுது! கடைசியிலே அந்த எல்லாகிணறும் உபயோகமில்லாம போயி குட்டிச்சுவராயி, விவாசியிங்க, 'எங்கிணத்து தண்ணியை நீ எடுத்தே உங்கிணத்து தண்ணியை நான் எடுத்தேனு' சண்டைப்போட்டு, கடைசியிலே வரப்புக்கு வரப்பு ஆரம்பிச்ச சண்டை, கிராமத்துக்கு கிராமமாகி, ஊருக்கு ஊருக்காகி, இப்ப மாநிலத்துக்கு மாநிலம் தண்ணிக்கு சண்டைப்போட்டு, நம்ம பத்திரிக்கைங்க அதை சென்ஷேசனலாக்கி கதை பண்ணி விவசாயி பட்டினிச்சாவு தான் பெரிசா வந்துக்கிட்டிருக்கு!

சரி இந்த கதை நமக்கெதுக்குன்னு இருக்க முடியுமா! அதான் நாமதான் நம்ம ஐடியிலேயும் மத்த தொழில் புரட்சியிலேயும் பெருமை பேசி, நாடு வளரும் கதை சொல்லிக்கிட்டிருக்குமே, இதிலே இந்த கதை என்னத்துக்கு, எப்ப நம்ம சந்திரமண்டலத்துக்கு போப்போறமுன்னு சொல்லு கேட்கிறோம் அதை விட்டுட்டு தண்ணிக்கதை பேச வந்திட்டன்னு நீங்க கோபப்படரது தெரியுது, இந்த அசுர வளர்ச்சி தான்யா இந்த கிளி கொடுக்குது! ஏன்ன, இந்த விஞ்ஞான வளர்ச்சிக்கொண்ட இந்த 21ம் நூற்றாண்டிலே, எந்த விஞ்ஞானமும் மனித குல மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் தூய்மையான தண்ணீர் கிடைக்க வழிபண்ணிக்கொடுக்கிலேங்கிறது தான் இங்கே நிதர்ஷன உண்மை! வளர்ந்த நாடுகள்ல, இந்த தண்ணியிலே வர்ற வியாதியான காலரா, டைஃபாய்ட், மலேரியாங்கிற வார்த்தையே கிடையாது! எல்லாம் மறைஞ்சு ரொம்ப நாளாச்சு! ஏன்னா ஒழுங்கா அமைக்கப்பட்ட சாக்கடை, கழிவு சுத்தப்படுத்தும் வசதிகளும், சுத்தமான தண்ணீர் கிடைக்க பெற்று வாழும் மக்களின் நிலை செஞ்சுகாட்டாத ஒன்னை எந்த மருத்தவ முன்னேற்றமும் கண்டுபிடிக்கலங்கிறது தான் உண்மை! அது நமக்கு வர இன்னும் எத்தனை காலம் காத்து இருக்க போகிறோங்கிறது தான் இப்ப கேள்வி!

ஆக சுத்தமான தண்ணீர் மனித குல வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கம்! இந்த அசுர விஞ்ஞான வளர்ச்சியால உண்டான நீர்பாசன வளர்ச்சி, மற்றும் நீர் தேக்கங்கள், நீர்பங்கீட்டு விநியோகத்தாலே விவசாய வளர்ச்சியும் பசுமை புரட்சியும் அடைஞ்சு அதனால வளர்ந்த பயிர்கள் இன்னனக்கு பூமியிலே இருக்கிற மொத்த மனித ஜாதிக்கும் சோறு போடுது! ஆனா இவ்வளவு இருந்தும், சுத்தமான தண்ணீர் மற்றும் சாக்கடை, கழிவு அகற்றி சுத்தமான சுகாதார முறையிலே இரண்டாயிர வருஷத்துக்கு முன்னே வாழ்ந்த மனிதகுலத்துக்கு கிடைச்ச வசதி, நாகரீக வாழ்க்கை, பஞ்சம், நோய் நொடி இல்லாம வாழ்ந்த வாழ்க்கை, இப்ப நமக்கு கிடைக்கிலேங்கிறது தான் மறுக்க முடியாத உண்மை, நூறு கோடிக்கும் மேலே சுத்தமான குடி தண்ணீருக்கு வழி இல்லை! இன்னைக்கு பாதிக்கு மேலே ஆஸ்பத்திரி படுக்கையிலே படுத்து கிடப்பது இந்த அசுத்த தண்ணீர் வழி வரும் வியாதியால! கடந்த பத்து வருஷமா வயித்து கடுப்பால செத்து போன குழந்தைங்க, இரண்டாம் உலகப்போரினால் அழிந்தவர்களை விட அதிகம் தெரியுமா! சுத்தமான தண்ணீர் கிடைக்க பெறுவதால் இன்னனக்கு 20 லட்சம் பேரை சாவின்பிடியிலருந்து மீட்கலாம் அது தெரியுமா உங்களுக்கு? யமுனையிலே கலக்கும் கழிவாலே உண்டாகும் பாக்டீரியாவின் அளவு ஆயிரமடங்காயிருக்கு இந்த பத்து வருஷத்திலே, அது தெரியுமா உங்களுக்கு, அது மாதிரி பங்களாதேஷ் நாட்ல, ஒரு பள்ளிகூடத்திலே பிரத்தியோகம ஒரு டாயலட் கட்டி போட்டா, அதுக்காக வந்து சேரும் பெண்பிள்ளைகளின் பதிவு பதினைஞ்சு சதவீதமா உயர்ந்த கதைத் தெரியுமா உங்களுக்கு! இந்த சுத்தமான தண்ணீர், சுகாதரா சூழ்நிலை உருவாக்கி மக்கள் நல்லா வாழணும்னு ஐக்கிய நாடுகள் கொண்டு வந்த திட்டம் தான் "Water for Life", ஆக இன்னைக்கு உலகத்தை ஆட்டுவிக்கும் முக்கியப்பிரச்சனை இந்த தண்ணீர் தான், அதுக்கு தான் இத்தனை கதையும் இப்ப புரிஞ்சுதா, நான் ஏன் இந்த கதை பேச வந்தேன்னு!

இதுக்கு எல்லாம் காரணம் நாம தண்ணியை "taken for granted"ன்னு எடுத்துக்கிட்டது தான், அது விலை மதிக்க முடியாத பொருள்னு நமக்கு தெரியாதாலே! எப்படின்னு கேளுங்க! பூமியிலே இருக்கும் நீர்நிலையிலே 97 சதவீதம் நமக்கு பிரயோசனமில்லை! எப்படின்னு கேளுங்க! எல்லாம் உப்புத்தண்ணீர்! குடிக்கக்கூடிய சுத்தமான தண்ணீர் 3 சதவீதம், அதுவும் பனிமலைகள்ல 2 சதவீதம் போக மீதம் தான் நமக்கு! இதை இப்படி கற்பனை பண்ணி பாருங்க, ஒரு பக்கெட்டு தண்ணி கடல் தண்ணின்னா, ஒரு காப்பி கப்பு அளவிலே தான் நல்லத்தண்ணி, அதுவும் நான் சொன்ன பனி மலைகள்ல தான் அதுவும் இருக்கு! நமக்கு குடிக்க, உபயோகிக்கன்னு இருக்கிறது ஒரு ட்யூஸ்பூன் தண்ணி தான், அதனால தான் தண்ணிர்ங்கிறது விலைமதிக்க முடியாத ஒன்னு! ஆனா நமக்கு தெரிஞ்சதெல்லாம் வேறகதை!

சரி பல நூறு கோடி வருஷத்துக்கு முன்னே டைனோஷர்கள் எல்லாம் குடிச்சி வாழ்ந்த தண்ணியைத்தானே நாம குடிக்கிறோம், இது என்னா அழியப்போறா ஒன்னான்னு நீங்க கேட்பீங்க. சரி தான், பூமிக்கு அடியிலே கிடைக்கிற கருப்பு தங்கம் மாதிரியா இது எடுத்து உபயோகிச்சு முடிஞ்சு போறதுக்கு! ஆக இந்த பிரச்சனை நாமலே உருவாகிக்கிட்டது தான்! ஏன்னா தண்ணியை தண்ணியா செலவளிச்சதாலே, அதுக்கு மதிப்பு கொடுக்காததாலே! நான் எதுக்கு தண்ணிக்கு வரி கட்டனும், இல்ல நிலத்தடி நீரை இறைக்க தேவையான மின்சாரத்துக்கு பணம் கட்டனும்னு யோசிச்சதாலதான்! மேற்கொண்டு தண்ணியை வீனா செலவு பண்றதாலே, அது தெரியுமா! இன்னைக்கு சைனாக்காரன் நாப்பாதாயிரம் கிலே அரிசி தானியம் விளையவைக்கும் நிலத்திலே எடுத்துக்கிற தண்ணிக்கு, நாம அதே அளவு நிலத்திலே விளையவைக்கும் தானியம் வெறும் பதினாராயிரம் கிலே தான், ஆனா அதுக்கு பாச்சும் தண்ணீர் இரண்டு பங்கு! மேற்கொண்டு நம்மளோட விவசாய கொள்கையும் அதிகம் தண்ணி குடிக்கும் தானியங்களை விளைவிக்க துரிதபடுத்துவதாலே, ஏன்னா அதுக்கு கொள்விலை அதிகம்ங்கிறதாலே அதிலே போய் எல்லா விவசாயிகளும் விழுறாங்க, இது மாதிரி நாம் சொல்லிக்கிட்டே போகலாம்! எல்லாத்துக்குமே காரணம் நாம தான்!

அதுவுமில்லாம தண்ணீர் செலவளிவது அதிகம் விவசாயத்துக்கு தான்! ஆனா அதுக்கு உண்டான வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்குதான்னு அதான் இல்லை நீங்க நினைக்கிற மாதிரி தொழில் துறை நிறுவனங்கள் அதிகம் செலவளிப்பதில்லை! ஆனா ஒழுங்கா வரி வட்டி வாங்க அங்க தான் போவாங்க நம்ம அரசாங்கம், ஏன்னா தண்ணியும் மின்சாரமும் இலவசமா கொடுத்தாகனும்னு ஒரு எழுதப்படா சட்டமிருக்கு! அதுக்கு காசு வாங்க ஆசைப்பட்டா அடுத்த ஆட்சி உங்களுதில்லை! இதனாலே எந்த வருமானமில்லை அரசாங்கத்து, கடைசியிலே கஷ்டபடறது ஏழை தான்!

நீங்க எத்தனை பேரு இந்தியிலே வந்த 'சுவதேஷ்'ங்கிற படம் பாத்தீங்கன்னு எனக்கு தெரியாது! அதிலே ஷாருக்கான், நாஸாவிலே செஞ்ச வேலையை விட்டுட்டு இந்தியாவிலே டில்லிக்கு பக்கத்திலே இருக்கிற கிராமத்துக்கு போய் அந்த கிராம மக்களோட சேர்ந்து பம்பு செட்டு போட்டு தண்ணீர் கொண்டு வந்து சுபிட்சமாக்குவாரு! அதிலே சில கிராமாத்தாங்க கேள்வி கேட்பாங்க, அமெரிக்கா எப்படி இப்படி பணக்கார நாடா இருக்குன்னு, அதுக்கு அந்த நாட்டின் வளங்கள் பத்தி சொல்லுவாரு, ஆனா அதுமட்டுமில்லை, இங்கே இருக்கும் மற்ற தொழில் முன்னேற்றங்கள், விஞ்ஞான வசதிகள், டிரிப் இரிகேஷன்னுட்டு அவங்க திராட்சை தோட்டத்துல விளச்சல் அமோகம் மூணுபங்காகி இருக்கு, அவங்க பண்ணுன நாப்பது வருஷ விவசாயத்துக்கு முன்னே, அதுக்கு செலவளிக்கும் தண்ணீர் நாப்பது வருஷத்துக்கு முன்னே செலவளிச்ச பங்குல ஒரு கால் பகுதி தான், தண்ணியை விரயம் பண்ணாம, அழகா சாகுபடி செஞ்சு அவங்க அடைஞ்ச முன்னேற்றம் தான்! இந்த ஊர்ல இருக்கும் அத்தனை வளங்களும் நம்மக்கிட்டையும் இருக்கு, ஆனா அதை நாம முறைப்படி ஒழுங்கா உபயோகிச்சு அபிவிருத்தி வழிகள்ல ஈடுபடுகிறோமான்னா, அதான் இல்லை!

நம்ம நாட்ல நல்ல பல திட்டங்கள் போடுறோம், அதை எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதை பொறுத்து இருக்கு! சுனிதா நாரயன்னு ஒரு அம்மனி, உங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியுமோ! 'Center for Sceince and Environment'ங்கிற நிறுவனத்தின் இயக்குநர், அவங்க இந்த நீர் சேகரிப்பு திட்டங்களை சரியாக செயல் படுத்தி வருவதற்காக போன வருஷம் சுவீடன் நாட்ல 'water Prize' வாங்கினவங்க! அவங்க சொல்றாங்க, நாம கொஞ்சம் கொஞ்சமா அமெரிக்கா மாதிரி ஆயிக்கிட்டிருக்கோம்,ஃபாஸ்ட் புட்ன்னு அது இதுன்னு போயிக்கிட்டிருக்கோம், வழி வழியா நம் உண்டு களித்த தானிய வகை உணவுகளை விட்டுட்டு பர்கர், பிஸான்னு இறங்கி இறச்சி சாப்பிட ஆரம்பிச்சிட்டோம். ஏற்கனவே மனுஷங்களுக்கு உணவாகும் தானிய வகைகளை விளைவிக்க தண்ணீர் விரயம் செஞ்சுக்கிட்டிருக்கோம், இப்ப இந்த அமெரிக்கா மாதிரி உணவு வகைகளை சாப்பிட தொடங்கி, அதுக்கு தேவையான ஆடு மாடுகளுக்கு தேவையான தானியங்களுக்கும் தண்ணி இரச்சு ஊத்தி விரயம் பண்ணி தண்ணி பஞ்சத்தை இன்னும் அதிகம் தான் ஆக்க போகிறோமுன்னு!

அது மாதிரி அலுவாலியான்னு நம்ம பிளானிங் கமிஷன் சேர்மென், அவருக்கு இருக்கு ஆதங்கம் தண்ணிக்கு விலை கொடுக்காத வரை, இந்த கஷ்டம் தீர போறதில்லைன்னு! ஆனா இதுக்கு மணி அடிக்க எந்த அரசியல் வதியும் வரப்போறதில்லை, ஆனா தண்ணிக்கு விலை கொடுக்காம விரயமா விவசாயிகள் விவசாயம் செய்யும் வரை ஒன்னும் பண்ண முடியாது!

அடுத்த நீர்பாசனத்திட்டம், நீர் தேக்க திட்டங்கள், இது எல்லாம் அரசியல் புகுந்து விளையாடி குட்டிச்சுவராக்கிக்கிட்டு இருக்கு! பெரிய பெரிய அணைத் திட்டங்கள் அம்பேல்! அதுனால வரக்கூடிய விளைவுகள் ஒருபக்கம் இருந்தாலும், அதுக்கு இடம் பெயரும் ஏழைபாளைகள் அநீதின்னு இன்னொரு பக்கமிருந்தாலும் (எல்லாமே அரசியல், ஏமாற்று வேலை தான்!), இந்த அணைத்திட்டங்கள், நீர் விநியோகம் மனித வளர்ச்சிக்கு ரொம்பவும் முக்கியமானது,ஆனா எல்லாத்திலேயும் அரசியல், போராட்டம், இதுக்கு விளம்பரம் தேடும் கூட்டமுன்னு இருக்கிற வரை அடிப்படை ஏழைகள் தண்ணீரால கஷ்டப்பட வேண்டியதுதான்!

விவசாய திட்டங்கள், பாலிஸி எல்லாம் புது கண்ணோட்டத்திலே நாம அனுகி வளர்ந்தா உண்டு, இல்லை இந்த தண்ணிப்பிரச்சனை ஒரு பூதகரமான ஒன்னா வரப்போறதில்லை எந்த சந்தேகமும் இல்லை. அடுத்து நமக்கு நாமே தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை உண்டாக்கி, அதற்கான முயற்சியிலே ஈடுபடணும்! கொஞ்ச நாள் முன்னே சென்னையிலே கட்டிட பில்டிங் எல்லாம், நீர் சேகரிப்பு ('Water Harvesting facility') வசதி இல்லாம கட்டிட அனுமதி இல்லேன்னு வந்த சட்ட திட்டம் நல்லது தான்! இல்லேன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன், பக்கத்திலே இருக்கிற காஞ்சிபுரத்திலேருந்து சுத்துப்பட்டு ஊர்ங்க பக்கத்திலே இருக்கிற விவசாயிங்க விவசாயத்தை விட்டுட்டு, விவசாயத்திலே காசு சம்பாரிச்சதை விட தங்களோட கிணத்திலே தண்ணீயை இறைச்சு லாரியிலே அனுப்பி சென்னையிலே விநியோகம் பண்ணி காச சம்பாரிச்சதுதான் அதிகம்! அப்புறம் அவங்க கிணறு வறண்டு எலியை புடிச்சு தான் திங்க வேண்டியிருக்கும்!

எதுக்கு இவ்வளவு பெரிய பதிவுன்னு கேட்கிறீங்களா, போன தடவை ஊருக்கு போயிருந்தப்ப லாரியிலே, ஆட்டோவிலே பின்னாடி எழுதி இருந்த வாசகம் என்னை ரொம்ப கவர்ந்தது, அதான் 'மழை நீர் சேகரிப்போம்'ன்னு, சரி இந்த தண்ணீர் பிரச்சனை என்னதான்னு ஆராயப்போக, கடைசியிலே இதுல இவ்வளவு வில்லங்கம் இருக்கிறது தெரிஞ்சது, சரி இனிமே தண்ணியை தண்ணியா செலவு பண்ணாதீங்க, வர்றட்டா...!

16 comments:

said...

Woth post.

We, Rajinifans, still stick on the possibilities of Interlinking project. However, Rajni knows the difficulties to implement the same and at the same time he needs to initiate the project at any cost by brining amicable solution to satisfy the different states and let the beneficiary go to our next generation.

We, Rajinifans do not like to have any political gain by supporting the project and we are very well known that Water Problem in India exists for the last 4 centuries.

It's obvious that the present Central Governement doesn't have any interest to discuss about the project hence the TASK FORCE was called back.

It's upto the people to decide whether to proceed or not.

said...

வெளிகண்டநாதரே

ரொம்ப சரிங்க நீங்க சொல்றது.

said...

நல்ல பயனுள்ள, மனத்துக்குள் நீர்க்கசிவு போல் இறங்கவேண்டிய ஒரு பதிவு.

said...

நாதரே,

அசத்தலான பதிவுங்க. நானும் அடிக்கடி இந்த நீர் வளம் விசயமா தொட்டுப்போவேன். அதில் அவ்வளவு ஆழம் இல்லை, நீங்க போட்டுத் தாக்கி அதனை தனிப்பதிவாக இங்கு கொணர்ந்து அருமையாக கொடுத்துள்ளீர்கள்.

//அவங்க சொல்றாங்க, நாம கொஞ்சம் கொஞ்சமா அமெரிக்கா மாதிரி ஆயிக்கிட்டிருக்கோம்,ஃபாஸ்ட் புட்ன்னு அது இதுன்னு போயிக்கிட்டிருக்கோம், வழி வழியா நம் உண்டு களித்த தானிய வகை உணவுகளை விட்டுட்டு பர்கர், பிஸான்னு இறங்கி இறச்சி சாப்பிட ஆரம்பிச்சிட்டோம். //

மேலே சொன்னது முற்றிலும் நடக்கிறது. அது ஒரு ஆபத்தான பாதைதான். ஆனால், அதனை அடையும் வேகம் மிக விரைவாக முடிக்கி விடப்பட்டுள்ளது. :-(

பிறகு தனியாகவே, பச்சை காய்கறிகளையும், தானிய வகைகளையும் எப்பொழுதும் போலவே அதிகமாக உட் கொள்வதற்கும், இந்த இறைச்சியை முதல் முன் உணவாக உட் கொள்வதற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி இறைச்சி மயமாவதால் எத்துனை நிலப் பரப்பில் உள்ள வனங்கள் அழிக்கப் பட்டு, மேய்ச்சல் நிலங்களாக மாற்றப் படுகிறது என்றதொரு ஒரு சிறு ஆராய்ச்சி இட்டு யாராவது ஒரு கட்டுரை இங்கு கொணரலாமே...

மீண்டும் தங்களின் கட்டுரைக்கு ஒரு நன்றி!

said...

வருகை தந்த ரஜினி ரசிகர்கள் இணைய குழுமத்திற்கு நன்றி, வணக்கம்! நீங்கள் சொல்வது சரி தான், இப்போதைய அரசாங்கத்துக்கு ஆர்வமில்லை என்றாலும், சாத்தியக்கூறுகள் ஆதரவா இல்லை என்பதே உண்மை! இந்த பிரச்சனையின் ஆழம் வேறெங்கோ இருக்கும் பொழுது, இந்த மாதிரி ஒரு எட்டாத திட்டம் பத்தி ரஜினியே இப்பே பேசறதில்லைன்னு கேள்விப்பட்டேன்! இது மாதிரியான திட்டங்களைவிட, நீர் சேகரிப்பு, gentically modified seeds உபயோகபடுத்தி கம்மியா தண்ணி செலவு பண்ணி சாகுபடி பண்ற பல திட்டங்களை பத்தி படிச்ச ரஜினி ரசிகர்கள் ஏன் எடுத்து சொல்லக்கூடாது! சிக்கன முறையில் நீர்பாசன முறைகள், அதன் பயன்கள், இப்படின்னு எத்தனையோ விதங்களை படிப்பறிவில்லாத நமது விவசாயிகளுக்கு எடுத்து சொல்ல ஏன் ரஜினி ரசிகர்கள் முன் வந்த இதை ஒரு இயக்கமா செயல்படுத்தக் கூடாது? றஜினிங்கிற மிகப்பெரிய மந்திரச் சொல்லை வச்சு, ரஜினி ரசிகர்கள் எத்தனையோ செய்யலாம், நேரம் வர்றப்ப அதை பத்தி எழுதறேன்!

said...

வாங்க பெருசு! வருகைக்கு நன்றி!

said...

என்ன தருமி சார், நம்ம பதிவு பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு!

said...

வாங்க தெக்கி, இதை பத்தி சும்மா ஆராய்லாமேன்னு படிச்சப்ப கிடைச்ச விஷயங்கள் தான், இத்துறையிலே இருக்கிறவங்க இன்னும் நிறைய எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்! அதை இது போன்ற பொது மேடைகளில் சொல்ல முதல்ல ஆர்வம் வேண்டும், அதுக்கு காது கொடுக்க ஆளும் வேணும், என்ன பண்றது, நம்ம எல்லாத்துக்கும் அதை உணர்ந்து செயல்பட நேரமெடுக்குமோ என்னமோ!

said...

நல்ல பதிவு.

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

நன்றி

said...

வெளிகண்ட நாதர் இப்பத்தான் படிச்சேன். சினிமாவில் துவங்கி, சினிமா பாணியிலேயே விளக்கியிருக்கிறீங்க... தண்ணீரைப் போல் நீளமாக ஓடுகிறது. நல்ல தகவல்கள் சென்னையில் தாயமார்களிடம் தண்ணீரைப் பற்றி பேசினால் கண்ணீர்தான் மிஞ்சும். அவ்வளவு கஷ்டங்கள். இதனை நேரில் பார்த்தால்கூட புரிந்துக் கொள்ள முடியாது. அதனை கூட இருந்து அனுபவித்தால்தான் இந்த தண்ணீருக்கான கஷ்டத்தை உணர முடியும். இனிமேலோவது நம் அரசுகள் விழிக்குமா?

said...

வாங்க சிவபாலன்! நடுவிலே எங்க ஆளே காணோம்!

said...

சந்திப்பு, சினிமா பானியிலே ஜனரஞ்சகமா சொன்னவாவுது மக்களுக்கு புரிபடாதா இவ்வளவுப் பெரிய பிரச்சனைன்னு தான் அதை சீரியஸா சொல்லாமா கேளிக்கையா சொன்னேன்!

said...

மிக நல்ல பதிவு. உலக வெப்பமாதலோடு சேர்ந்து இந்தத் தண்ணீர்ப் பிரச்சனை பெரும்பாடாக இருக்கப் போகிறது.

வைசா

said...

வெ.நா,
மிகவும் அருமையான, அறிவுபூர்வமான பதிவு. நான் அறிந்திராத பல சுவையான தகவல்களை உங்களின் பதிவு மூலம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. தமிழ்மணத்தில் உங்களைப் போன்ற ஒரு சிலராவது இப்படியான அறிவுபூர்வமான பதிவுகளை எழுதுவது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. நீங்கள் இது போன்ற பல ஆக்கங்களை இன்னும் தர வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

said...

//ஏன் ரஜினி ரசிகர்கள் முன் வந்த இதை ஒரு இயக்கமா செயல்படுத்தக் கூடாது? றஜினிங்கிற மிகப்பெரிய மந்திரச் சொல்லை வச்சு, ரஜினி ரசிகர்கள் எத்தனையோ செய்யலாம், நேரம் வர்றப்ப அதை பத்தி எழுதறேன்!
//

Sure. We will try our level best. Looking forward to get your suggestions. Thanks

said...

உங்க பழைய பதிவெல்லாம் படிச்சிட்டிருக்கேன்.. பல சினிமா, திரையிசைப் பதிவுகளுக்கிடையே இந்தப் பதிவு வித்தியாசமானதாவும் பயனுள்ளதாகவும் இருக்கு. நீங்க சொல்ற மாதிரி.. நிறைய விசயமிருக்கு போலிருக்கு.. நமக்கு தான் புத்தியில் உறைக்கமாட்டேங்குது :-(