Friday, October 28, 2005

குலதெய்வமும், அம்மாமண்டபமும்

நமக்கு சாமி கும்படுதறல இப்ப அவ்வளவா ஈடுபாடு இல்லனாலும், சின்ன வயசிலே கோயில்களுக்கு போயிட்டு வர்ரது ரொம்ப பிடிக்கும், திருவிழா கால சந்தோஷங்கள் இருக்கே அதுவே தனி. அப்புறம் வளர்ந்து கொஞ்சம் பெரியவனாதும், குலதெய்வம் கோயுல் போயி சாமி கும்புட்டுட்டு பரீட்சை எழுத போடான்னு, அம்மா சொல்றதுனால, இந்த அம்மா மண்டப படித்துறையில இருக்கற ஆல மரத்தடி புள்ளையார் கோவில் (கோவில்னா பெரிய மண்டபம், சுத்து பிரகாரம், சாமி கோபுரம், கலசம், அர்ச்சணை சீட்டு வாங்கற மாடம் எல்லாம் இருக்குன்னு நினைச்சுக்காதீங்க, சின்ன புள்ளையார் சிலை, அத சுத்தி எழுப்புன வீடு அப்புறம் கோபுரம், கோபுரத்தை கொஞ்சம் நுனிக்காலை வச்சி எழும்பி நின்னா தொட்டுடாலாம், அவ்வுளவுதான்.) போறது வழக்கம்.

பிடிச்ச சாமிங்கள்ள முதல்ல நம்ம பருப்புக் காரத்தெரு மாரியம்மன் கோவில் பத்தி சொல்லிடறேன். இந்தக்கோவில் நம்ம தமிழ் நாட்டுக்கே உண்டான இலக்கணப்படி ரோட்டு நடுவிலே அம்மன் வீடு கொண்ட கோயில். சக்தி வாய்ந்த அம்மன். பாலக்கரையில பஸ் புடிக்க பின்னாடி 3-4 கிமீ தூரத்தில் இருக்கற சங்கிலியாண்ட புரத்திலருந்து, எடத்தெரு அப்புறம் மல்லிகைபுரம்னு, எல்லோரும் அந்த கோவில தாண்டித்தான் போகணும். அப்படி போறப்ப போனா போவதுன்னு எல்லாரும் கண்ணத்தில போட்டுக்கிட்டு, விபூதி, குங்குமம் வாங்கிட்டு போவாங்க. முக்காவாசி பேருக்கு நினச்சது பலிக்கும்னு கேட்டுருக்கிறேன். எனக்கும் ஒன்னு ரெண்டு பேப்பர் பரீட்சையில ஈசியா வந்துருக்கு!

இந்த சித்தரை வந்திட்டா கொண்டாட்டம் தான், ஏன்னா, பள்ளிக்கூடம் கோடை லீவு விட்டுடுவாங்க, அப்புறம் மாரியங்கோவில் திருவிழா, கரகம், ஆட்டம், கச்சேரின்னு ஒரு பத்து நாளைக்கு கலக்கல இருக்கும். அதுவும் சாமி கரகம், ஆட்டகரகம்னு ரெண்டு குருப்பா கூட்டம் பின்னாடி அலையும். ஆரம்பத்தில் நான் ஒழுங்கா அம்மா சொன்ன போச்சை கேட்டுக்கிட்டு, சாமி கரகம் வரப்ப வீட்டல இருந்து கும்பிட்டு விபூதி குங்குமம் வாங்கிட்டு பயபக்தியா(வெறும் பயம் தான், சாமி கரகம் எடுத்திட்டுவரவரு பயங்கரமா மீசை வச்சிகிட்டு, கையில முக்கையில எழும்பிச்சை பழம் சொறுகின அருவாள தூக்கிகிட்டு, தலையில கலசம் வச்சிகிட்டு, மாலையெல்லாம் போட்டுகிட்டு, நெஞ்சு நிறைய சந்தனத்தை பூசிக்கிட்டு, வெறும் வேட்டியை கோமாணமா மடிச்சி கட்டி, என்னமோ மதுரவீரஞ்சாமிமாதிரி இருப்பாரு) இருப்பேன். எல்லாரும் அந்த சாமி கரகம் எடுத்துட்டு வந்தவர் காலை கழுவி கும்பிட்டு குங்குமம், விபூதி வாங்கிக்குவாங்க. எனக்கும் சாமி வச்சுவுடும்.

ஆனா கொஞ்ச நாள் ஆனோன, அதாவது வளர்ந்தவுடன் நம்ம சுத்துறது ஆட்ட கரகத்தோட தான். அப்ப அந்த மேக்கப்பு, ஜிகினா பாவடை, இதோட ஆட்டம் போடற குட்டிகள பாக்கறப்ப என்னமோ நம்ம உள்ளம் கவர்ந்த நடிகையே நேரில வந்த மாதிரி. இதுங்க பின்னாடி நம்ம வாழக்க கடை சேகரு, வெங்காய கடை ரத்தினம் அப்படின்னு தெருவுல இதுக்குன்னு அலையற பேமஸான கும்பலுங்க உண்டு. நானும் ரொம்ப நேரம் ராத்திரி பூர இந்த கரக கும்பலோடேயே அலைவேன். ஆட்டகரகம் ஒரு திசையில போயி கோவில் பக்கம் திரும்பும். சாமி கரகம் இன்னொரு டைரக்ஷ்ன்ல போயி கடைசில விடியங்காத்தால கோவில் பக்கம் வரப்ப ஒன்னுக்கொன்னு எதிர்த்தாப்பல வந்துக்கும். இதுல நன்கொடை கொடுத்தவங்கள்ள சில பேரு என் வீட்டு முன்னாடி ஆட்டகரகம் ஆடலன்னு சண்டை வேற போட்டுக்குவாங்கே.

தினம் ஏதாவது கோவில் பக்கத்திலே சாய்ந்திரத்தில அம்மன் சிலைங்க அலங்காரம் விதம் விதமா இருக்கும். நல்லா போக்கஸ் லைட் எல்லாம் போட்டு, சந்தனம், மாலை ஜோடனைகள் பிரமாதமா இருக்கும். அப்புறம் ஒரு நாள் பாட்டுக் கச்சேரி வப்பாங்க. முதல்ல நம்ம வின்சென்ட் தான் பாடிகிட்டு இருந்தார். வெறும் ஆர்மோனியம் தபேலா வச்சிக்கிட்டு நம்ம சீர்காழி கோவிந்தராஜன் பாட்டைத் தான் பாடுவார். சும்மா உச்சமா "சாட்டை கையில் கொண்டு ஓடுது பாரு, ஆடுது பாரு, அப்படி இப்படி தாவுது பாரு" அப்படின்னு பாடுவாரு (இது எந்த படம்னு தெரியல, ஆன பாட்டும் பாட்ற தொணியும், ராகமும், சவுண்டும் இப்பவும் என் கண்ணுலயும், மனசு முன்னாடி இருந்துகிட்டு இருக்கு) அப்புறம், ஜிபிடர், 7 நோட்ஸ், அது இதுன்னு மியூசி குருப்புங்க எல்லாரும் வந்து, அப்ப புதுச வந்திருந்த் எலக்டிரிக் அக்கார்டியன், அப்புறம் கிட்டார், டிரம்ஸ் எல்லாம் வாசுச்சி, எல்ஆர் ஈஸ்வரி, டிஎம்ஸ் பாட்டு எல்லாம் பாடி கச்சேரி கலக்கலா இருக்கும். அதென்னமோ சாமி பாட்டு மூணு பாட்டு பாடிட்டு தான் சினிமா பாட்டுங்களே ஆரம்பிப்பாங்க, அப்புறம் கடைசியிலே, அடி என்னாடி ராக்கம்மா பாட்டு பாடி முடிப்பாங்க!

மாசம் தவறாம ஒவ்வொரு கார்த்திகைக்கும்(நான் புறந்தது கார்த்திகை நட்சரத்தினாலயம், என் போரில இருந்த குமார்னாலயும்) வயலூர் முருகன் கோவிலுக்கு, எங்க ஞாயினா கூட்டிட்டு போயிடுவாரு. காலங்காத்தால 5 மணிக்கெல்லாம் எழுப்பி கூட்டிட்டு போவாரு. சீக்கிரம் போனதானே கும்பல் இருக்காது. எந்திரிக்கிறது கஷ்டம் தான், என்ன பண்றது. அப்புறம் கோவில் போயிட்டு வர்ரப்ப ஏதாவது ஓட்டலுக்கு கூட்டிட்டு போவாரே, முறுவலா ரவா தோசை சாப்பிடலாமே, அதுதான் அப்ப எனக்கு அட்டாரக்சன். அப்புறம் அப்பப்ப சமயபுரம் கூட்டிட்டு போவார். காலையிலே அந்த இதமான குளிர் காத்தில பஸ்ல போற சுகமே அலாதிதான். அதன்னமோ மெயினா முருகன பார்க்கிறதல ஒன்னு கஷ்டம் இருக்காது, மத்தபடி கோயில்ல சுத்துபட்ட சாமிங்கள சுத்துறதுதான் கஷ்டம். ஈஸ்வரன்லருந்து, பிள்ளையார், அம்மன், அப்புறம் கையை சுடுக்கிவிட்டு ஒரு சாமி (சாமி பேரு என்னன்னு தெரியல, தூங்கிகிட்டு இருக்குமா அதை நம்ம எழுப்பிவுட்டு, அதாங்க கை சுடுக்கிவிட்டு, சாமி கும்புட்டுட்டு வரணுமா, இந்த சாமியை எழுப்புறதுல கொஞ்சம் ஆர்வம் நமக்கு, எதித்தாப்பல இன்னொரு அம்மன் சாமி கூட இருக்கும்) இப்படி எல்லாரையும் சுத்திட்டு கடைசியில நவக்கிரகம். இந்த நவக்கிரகம் சுத்திரது இருக்கே அதுவுங் ஒம்போது சுத்து, அது கொஞ்சம் பெரிய வேலை. எல்லாம் முடிச்சிட்டு அவ்வளவு தான்னு வெளிய வந்தா, ஆத்து பக்கத்தில மதுரவீரஞ்சாமி, வேல் கம்பிங்கள்ள சிவப்பு துணி சுத்தி வச்சிருப்பாங்க. இந்த கோயில்ல தான் தமிழ் பூசாரி இருப்பார், மத்த சாமிங்கக்கிட்டே எல்லாம் ஐயருங்க தான் இருப்பாங்க.

இப்படி போயிட்டுருந்தப்ப, எங்க வீட்ல குலதெய்வம் கும்பிட எப்பவும் எங்க அம்மா பங்காளிங்க ஒருத்தரு வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க அவங்க வீட்ல தான் ஒரு ஓலப்பெட்டியில குலதெய்வம் சாமி இருக்குன்னுட்டு சொல்லி எல்லாரும் கும்புடுவாங்க. (இந்த குலதெய்வம் ஒரு தனிக் கதை, ஏதொ எங்க பாட்டியோட அம்மா கனவுல, ஜக்கம்மான்னு ஒரு பொண்ணு வந்து, கர்நாடகத்தில ஏதோ கஷ்டத்தில அது மாட்டி செத்து போயி அது ஓலப்பெட்டில காவிரில வந்ததாவும், அதை நினைச்சு கும்பிட்டா குடும்பம் கஷ்டம் நீங்கும்னு சொன்னுச்சா. அதே மாதிரி அவங்களும் அந்த காவிரி அம்மா மண்டப கரையில இருக்கிற ஆலமரத்தடி படித்துறை பக்கத்தில் பார்த்தப்ப ஒரு ஓலப்பெட்டி ஒதுங்கி நின்னதாகவும், அதையே எடுத்து வந்து வீட்ல வச்சு கும்படறதாவும் கதை) ஆனா கொஞ்ச நாள்ல, அந்த பங்காளிங்க இந்த குலதெய்வ சாமியை சரியா வச்சு கும்படலன்னு (அதாங்க வழக்கமா வர பங்காளிங்க சண்டை தான்), எல்லாரும் அந்த ஆலமரபடித்துறையிலயே போயி குலதெய்வம் சாமி கும்பிட தொடங்கிட்டாங்க. நானும் அப்பப்ப குலதெய்வம் சாமி கும்பிட அந்த அம்மாமண்டபம் பக்கத்தில இருக்கிற ஆலமரத்தடி படித்துறைக்கு போயிட்டு வருவேன்.

பெரிசா சாமி கும்பிடனும்னு போகலனாலும், அந்த படித்துறையில காவிரி ஆத்துக் கரையில இதமா வர காத்தை அனுபவிக்க ரொம்ப பிடிக்கும். அங்க உட்கார்ந்து இருக்கிற அரை ஒரு மணி நேரம் மனசு லேசாயிடும். வேற எந்த நினப்புமே வராது, அது என்னமோ தியானம் மாதிரி காலம் கழிஞ்சு போயிடும். எவ்வளவு தான் பெரிய பெரிய கோவில்களுக்கு போனாலும், இது தான் எனக்கு கோவிலுக்கு போன திருப்தி. சாமி, பூஜை, புனஸ்காரம்னு அலையறதவிட இது போன்ற அமைதியான இயற்கை சூழ்ந்த இந்த மாதிரி இடத்தில கொஞ்ச நேரம் இருந்துட்டு வரதே ஒரு அலாதி தான்!

7 comments:

said...

நல்ல பதிவு....

said...

வருகை தந்தமைக்கு நன்றி

said...

பல்லவி அவர்களே! வருகை தந்தமைக்கு நன்றி! சண்டிகேஷ்வரையும், தொர்கையையும் ஞாபக படுத்தியதுக்கு நன்றி

said...

நம்ம சீர்காழி கோவிந்தராஜன் பாட்டைத் தான் பாடுவார். சும்மா உச்சமா "சாட்டை கையில் கொண்டு ஓடுது பாரு, ஆடுது பாரு, அப்படி இப்படி தாவுது பாரு" அப்படின்னு பாடுவாரு (இது எந்த படம்னு தெரியல, ஆன பாட்டும் பாட்ற தொணியும், ராகமும், சவுண்டும் இப்பவும் என் கண்ணுலயும், மனசு முன்னாடி இருந்துகிட்டு இருக்கு)

திரைப்படத்தின் பெயர் காதல் ஜோதி
நடித்தவர்கள் இரவிச்சந்திரன் காஞ்சனா (நன்றி - tfmpage.com / AnyTamil.com)

said...

உதயகுமார்,

நல்ல பதிவு. நாங்களும் அந்த ஆத்தங்கரையிலே உக்காந்துக்கிட்டு இருந்தமாதிரி இருந்துச்சு.
அதுசரி,

நீங்களும் துர்காவை தொர்காவா?:-)))

said...

பாலராஜன் கீதா, பாட்டின் படத்தை தெரியப்படுத்தியமைக்கும் நமது பதிவிற்கு வந்தமக்கும் நன்றி.

said...

துளசி, சந்தரமுகியின் தாக்கம் என்று நினைக்க வேண்டாம், சில நேரங்களில் இந்த இ-கலப்பையோடு நமக்கு தமிழ் தட்டெழுதுடன் தகராறு அடிக்கும், அது தான். பால்ய பார்வையோடு ஆத்தங்கரையில் உட்கார்ந்து இருந்ததற்கு நன்றி