Thursday, December 08, 2005

எனை ஆண்ட அரிதாரம்- நான்காம் பகுதி

தனி ஆவர்த்தனமா நடிப்புதிறமையை வெளிப்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் கிடைச்சாலும், சிறந்த நாடகங்கள் எழுதி, இயக்கி அதை பெரிய வெற்றிகரமா செஞ்சு காமிக்கிறதல நமக்கு அதிக ஆர்வம் இருந்துச்சு. இப்படித்தான், கதை எழுதுனுங்கிறதல ஆர்வம் இருந்ததுனால சின்ன சின்ன கதைகள் கல்லூரி மேகஸின்களுக்காக எழுதி பப்ளிஸ் பண்ணினேன். அப்பதான் என்னுடய இஞ்சினியரிங் முதல் வருஷச கடைசியில நடந்த நாடகப்போட்டிக்கு, ஒரு நாடகம் எழுதுனேன். நாடகம் பேரு 'நிறைவேறா ஆசைகள்'. நாடகத்துக்கு ஸ்கிர்ப்ட் ரெடி, ஆனா நடிகர்களை தேடனுமே. அப்பத்தான், அந்த முதல்ல நடந்தப் போட்டில்ல சிவாஜி வசனம் பேசனவங்களை எல்லாம் செலக்ட் பண்ணினேன். ரொம்ப வீரதீரமா பேசன கணேசக்கு ஹீரோயின் கேரக்டர். அப்பறம் நம்ம கதிரேசன், முருகவேல், மனோகர், கவந்தப்பாடி, அப்படின்னு எல்லாரையும் புடிச்சுப்போட்டேன். முதல்ல நடிக்க கும்பல் சேர்க்கறது ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. எவனும் நடிக்க வரமாட்டேனுட்டானுங்க, ஏன்னா சீனியர்ங்க கத்தி மேடையை விட்டு இறக்கி விட்டுட்டதால, திரும்ப ஏற பயம். பொறவு அவெங்களை கெஞ்சி, கூத்தாடி சேர்க்க வேண்டியதா போச்சு. ரொம்ப கஷ்டப்பட்டு குருப்பு சேர்த்தாச்சு. முத வருஷம் பாருங்க, இந்த நாடக குருப்பு சேர்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு, ஆனா, கடைசியில பார்க்கணுமே, பூர காலேஜ்யயும் மூக்கல கை வக்க வச்சுட்டோம்.

கதை என்னன்னு கேட்டீங்கன்னா, சும்மா ஜிகினா கதை தான். ஹீரோ எப்படி வாழ்க்கையில சீக்கிரமா முன்னுக்கு வரதுன்னு யோசிக்கிறப்ப, அவனுக்கு ரெண்டு வழி தோணுது, ஒன்னு சினிமா, இல்ல அரசியல், அவன் சினிமாவை நாடி, தன்னுடய ப்ரண்டு ஒருத்தனோட மெட்ராஸ் புறப்பட்டு வரான், சினிமா சான்ஸ் தேடி. அவனுக்கு ஏற்கனவே ஒரு காதலி ஊர்ல இருக்கா. மெட்ராஸ் பாஸை பேசி காமடி சீனு வக்கனுமுன்னு, அவங்க ரிக்ஷாக்காரனோட சந்திக்கிறமாதிரி எல்லாம் காட்சி வச்சாச்சு. யாருடா மெட்ராஸ்காரன் பாஸை பேசி நடிக்கிறதுன்னு பார்த்தப்ப, என் குளோஸ் தோஸ்த்து மனோகரன், அதான் மெட்ராஸ் B பார்ட்டி, மாட்னான், சும்மா பிரமாதாமா காமடி பண்ணி அசத்திப்புட்டான். பிறகு சினிமா சான்ஸ் கேட்டு டைரக்டர்ஸ் எல்லாம் சந்திச்சு, நடிச்சுக்காட்டி, சான்ஸ் புடிக்கிற மாதிரி எல்லாம் காட்சிகள், ஏன்னா, சும்மா காதலன், காதலியோட வாஞ்சையா பேசற மாதிரி எல்லாம் சீன் வச்சு, அப்பதானே ஹீரோக்கு வசனம் நிறையா பேச சந்தர்ப்பம் வரும், அப்புறம் கதையில ஒரு டுவிஸ்ட் வரனும்னு, டைரக்டர் நடிக்க சான்ஸ் கூட வந்த நண்பனுக்கு கொடுக்கிறாரு. அதனால ஹீரோ ரொம்ப ஒடிஞ்சு போயிடுவாரு. அந்த நேரத்தில ஹீரோயினும் ஹீரோவைத் தேடி மெட்ராஸ் வந்துடுவா. பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க சான்ஸ் தேடுவாங்க, அப்ப ஹீரோயினுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அவளும் நடிச்சு பெரிய நடிகை ஆயிடுவா. தன்னுடய நண்பனும் பெரிய ஹீரோவா சினிமால நடிப்பான் ஆனா நம்ம நாடக ஹீரோவுக்குத்தான் சான்ஸ் கிடைக்காம அல்லாடிக்கிடிட்டு இருப்பான். அப்பத்தான் தன் காதலியும், தன் நண்பனும் ஒரு சினிமா படத்தில ஹீரோ, ஹீரோயின் ரோல்ல நடிக்கறப்ப, அவங்க நெருங்கி நடிக்கறத பார்த்து வீணா நம்ம ஹீரோ சந்தேகப்படுவாரு, ஆனா நண்பனும், காதலியும் உண்மையாத்தான் இருப்பாங்க, நம்ம ஹீரோவுக்கு ஒழுங்கா சான்ஸ் கிடைக்கிலேயேன்னு உண்மையிலேயே வருத்தப்படுவாங்க, அவன் தான் சான்ஸ் தேடி மெட்ராஸ் வந்தான், ஆனா விதி நம்மல நடிகன் நடிகையாக்கிடுச்சேன்னு நொந்து பேசிக்கிட்டு இருப்பாங்க. சினிமாவல வர ஒரு காதல் காட்சிக்காக, அவங்க ரெண்டு பேரும் காதல் ரசம் சொட்ட பேசிக்கிட்டு ரிகர்சல் பண்ணிக்கிட்டு இருக்கிறதை நம்ம ஹீரோ பாத்து வீணா சந்தேகப்பட்டு ஹீரோயினிய கத்தியில குத்தி கொன்னுடுவாரு. பிறகு நண்பன் நடந்ததை விரிவா சொல்லி ஹீரோவோட தவற உணர்த்துறது, அப்புறம் தான் செஞ்சதை நினச்சு ஹீரா வருந்தி அழ, உருக்கமா வசனத்தோட காட்சி அமைப்புகள் வச்சி சும்மா ஜோரா கதை சொல்லியாச்சு.

இதுல விசேஷம் என்னான்னா, இந்த நாடகத்தில நிறைய சிறப்பு அம்சங்கள் இருந்தது தான். முதல்ல, ஹீரோயின் ரோல்ல நடிச்ச நம்ம கணேசனைப் பத்தி இங்க சொல்லி ஆகாணும். நான் படிச்சப்ப எங்க காலேஜ் கோ-எட் எல்லாம் கிடையாது. அதனால பொட்டப்புள்ள எல்லாம் இல்லாதனால, பெண் வேஷம் போட பசங்களைத்தான் புடிச்சாகணும். பொதுவா ஒரு பயலும் இந்த ஸ்தீரி பார்ட் போட வரமாட்டான். ஆனா நம்ம கணேசன், கொஞ்சம் பெண் கேரக்டருக்கு தகுந்த மாதிரி நாணி கோணி பேசறதல பெரிய ஆளு. மேற்கொண்டு, இந்த ஸ்கூல படிச்சுட்டு காலேஜ்ல நுழையறப்ப, பெரும்பாலும் ஆம்பளை பசங்க நிறையப் பேருக்கு அந்த பெண் குணங்கள் அந்த விடலைப் பருவத்தில நிறைய இருக்கும். ஏன்னா அது இன்னும் நல்லா மீசை முளச்சி முற்றிலும் ஆண்மை நிலை அடையாத பருவம், அந்த அரும்பு மீசை மட்டும் பெரிய ஆம்பிளயாக் காட்டாது. சில பசங்களுக்கு அந்த குரல் வலைக்கூட உடையாம பெண்கள் குரல் வரும், சினிமாலக்கூட சின்ன பசங்க பாட்டை பின்னனிப்பாடகித்தான் பாடுவாங்க, பாடகர் பாட மாட்டாரு. அதிலயும் நிறையா அக்கா, தங்கச்சி கும்பலுங்கள்ள சுத்தி வளர்ந்து, புதுசா ஹாஸ்டலுக்கு வந்து ஆம்பளத்தனம் கத்துக்கிற வரை, அந்த பெண் நலினம் இருந்துக்கிட்டே இருக்கும். இந்த மீசை ஒதுக்கிவுடறது, டவுசரை விட்டுட்டு கைலி கட்டி அலைய ஆசைப்படறது, அப்புறம் வாயில சிகரட்டை வச்சி புகை விட்டு பார்க்கறதுன்னு, இதெல்லாம் அந்த பெண்மை போன்ற சூழ்நிலயில இருந்து உடச்சி ஆம்பளயாக்க முயற்சி பண்ணக்கூடிய வழிமுறை தான். ஒரு வேளை அம்மாங்கிற பெண் துணை நெருக்கத்தில சின்ன புள்ளயிலருந்து வளர்ந்து வருவதாலேயோ என்னவோ! அப்பாங்களோட நெருக்கம் கம்மிதான், அது பொண் குழந்தையாவோ இல்ல ஆண் குழந்தயாவோ இருக்கட்டும். அப்படி கொஞ்சம் அதீதமா நம்ம கணேசனுக்கு அப்ப இருந்துல ஒண்ணும் ஆச்சிரியமில்ல, ஆக எங்களுக்கு எங்க கனவுக்கன்னி கிடைச்சிட்டா! உண்மையிலதான், அவன் எங்களோட ரிகர்சல் எடுக்கிறப்ப, ஹீரோயின் வசனம் பேசறப்ப கொஞ்சம் கவர்ச்சியா, பொட்டப்புள்ள இல்லங்கிற குறை தெரியாமத்தான் இருந்தது. ஆனா டிராமா அன்னக்கி பார்க்கனுமே, மேக்கப் போட்டு புடவையைக்கட்டி ஸ்டேஜ்க்கு வெளிய டிரெஸ்ஸிங் ரூம்ல உட்கார்ந்திருக்கிறப்ப அவனை சுத்தி மொச்ச பசங்களை, வெளிய அனுப்பி வக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு போங்க! அப்படி என்னமோ கவிதாவே நேர்ல வந்த மாதிரி இருந்துச்சு போங்க, கவிதாவா!, அதாங்க நம்ம ஹீரோயினி பேரு.

இதுல இன்னும் ஒன்னு சொல்ல வுட்டு போச்சு, அதான் இந்த புடவை ஜாக்கெட்டு வாங்க நான் பட்ட பாடு தான். பொட்ட புள்ளங்க படிக்காத காலேஜ், நான் எங்க போயி வாங்குவேன், எனக்கு ஏது மல்லிகா, ஆட்டோகிராப் சேரன் மாதிரி. மருந்துக்கு பொம்பளங்கன்னு காலேஜ்ல இருந்தது, அப்ப எனக்கு தெரிங்சு, எங்க எலக்ட்ரானிக்ஸ் ஹேமா மேடம், அப்புறம் நம்ம கெமிஸ்ட்ரில அப்ப புதுசா வந்திருந்த அமிர்தம்ங்கிற லெக்சரரு. இதை வுட்ட அப்புறம் ஃப்ஸிக்ஸ் லேப்ல உட்கார்ர ஒரு மேடம். இதெல்ல ஹேமா மேடம்கிட்ட போகமுடியாது, ஏன்னா, நாளைக்கு அந்த ப்ரான்ச்சுதான் எடுத்து படிக்கனும், அப்புறம் ஸெஸ்னல் மார்க்கு ஊத்திக்கவா, அம்மாடி, நான் போகமாட்டேன்னு, நானும் போகல்ல, என் கூட ஒட்டுன தோஸ்த்து மனோகரனும் போல, ஏன்னா அவனும் அதே ப்ரான்ச்சு. அப்புறம் அமிர்தங்கிட்ட ஏற்கனவே வாங்கிகட்டி கிட்டேன், ஏன்னா, அது நம்மல வாஞ்சையா பாக்குதேன்னு, ரொம்ப சுதந்திரம் எடுத்துக்கிட்டு ஒரு நாள் பேனா மூடியா அது நோட்ல நின்னு எழுதறப்ப பின்னாடி சொருவுறேன் பேர்வழின்னு, எதயோ செய்ய போயி, அது நம்ம தான் படாத இடத்தில பட வக்க இப்படி பண்றான்னு போட்டு கொடுத்து, அடுத்த வருஷம் நமக்கு ஹாஸ்டல் இல்லமா பண்ண பொம்பளை, அதுகிட்ட எப்படி கேட்கிறது. பிறவு அந்த ஃபிஸிக்ஸ் மேடம், அத என்னமோ நம்ம கணேசன் ரிஜக்ட் பண்ணிட்டான், எனக்கு கிழவி டிரஸ்ஸெல்லாம் வாங்கி கொடுத்த போட்டுட்டு நடிக்க மாட்டேன்னு ஒரே அடம். நான் எங்கத்த போறது சொல்லுங்க. அப்பதான் நமக்கு கை கொடுத்தா ஆபத்து பாண்டவி, அது யாருன்னு கேட்கிறீங்களா, வேற யாருமில்ல அப்ப எங்க காலேஜ் அட்மினிஸ்ட்ரேஸன்ல வேல செஞ்ச பாலசுப்ரமணியம், அப்ப அப்ப ஸ்கிட்டு, ஓரங்க நாடகம் பசங்க நடிக்கிறத பாக்க சும்மா சிகிரட் புடிக்க கீழ வரப்ப அந்த போட்டி நடக்கற ஹாலுக்கு வந்து வேடிக்க பார்க்கிற ஆளு. நம்ம செஞ்ச மிமிக்கிரி எல்லாம் புடிச்சுப் போயி சும்மா பாராட்டிட்டுப் போவாரு, அப்ப அவரு பொண்ணு காலேஜ் முடிச்சுட்டு எங்க ஆபிஸ்ல டைப்பிஸ்ட்டா வேலை பாத்துச்சு. அது தான் எங்க ஆபத்து பாண்டவி, இது கொஞ்சம் பெரியக் கதை, கேளுங்க!

நாங்க சாய்ந்திரத்தில அப்படியே வாக்கிங் போயிட்டு காலேஜ் பின்னாடி சிங்கநல்லுர் ரோட்ல இருக்கிற டீக்கடைக்குப் போயி மரவள்ளி கிழங்கு சிப்ஸ், டீ அடிக்கிறது வழக்கம். அப்ப பக்கத்தில இருந்த ஸ்டோர்ஸ்ல தான் நம்ம பாலசுப்ரமனியம் குடி இருந்தாரு. அவருக்கு மூணுப்பொண்ணுங்க, அதில பெரிசும், அது கடைசி தங்கச்சியும், பசங்க எங்களை ஜொல்லு வுட வெளியில வந்து நிக்குங்க. அப்பறம் என்ன, காலேஜ் பசங்க ஹாஸ்டலருந்து வந்து கும்பலா டீ சாப்பிட்டுட்டு போற இடம், இதுங்க ரெண்டும் நின்னு வேடிக்கைப் பாத்தா, சொல்லுங்க நாங்க ஜொல்லு வுடறமா, இல்ல அதுங்க வுடுதுங்களா (இப்ப ஆண் பெண் இரு பாலருக்கும் இந்த பாலுணர்வுகள் இருக்கிறதை, எல்லாரும் பதிவுப்போட்டு என்னமோ, இல்லாத விஷயம் மாதிரி இந்த ஊடகத்தில மாட்லாடிக்கிட்டு இருக்காங்க, முக்கியமா, நம்ம உஷா ராமசந்திரன் வலையப் பாருங்க!) அப்படி போயி வந்தப்ப சைட் அடிச்ச அந்தப் பொண்ணுதான் நம்ம காலேஜ் ஆபிஸிக்கு புதுசா வந்தது. எப்படி போயி அதுக்கிட்ட ஜாக்கெட், சேலை எல்லாம் கேட்கிறது. நம்ம கணேசனோ போட்டா அந்த புள்ளயொடத தான் போட்டுக்குவேன்னு அடம் புடிக்கிறான். என்ன பண்ணறது. துணிஞ்சு நம்ம பாலா சாரு கால்ல விழுந்தாச்சு, அவரும், அதுக்கென்ன தம்பி, நாளக்கு வீட்டுக்கு வாங்களேன்னு சொல்லிட்டாரு. அப்புறம் என்னா, போயி பாத்துப் பேசி வாங்கிட்டு வந்து கணேசனுக்கு போட்டு நடிச்ச கதை இன்னம் சொல்லனுமா என்ன?

இப்படி கஷ்டப்பட்டு போட்ட டிராமா எப்படி வரவேற்பு நம்ம சீனியர் அண்ணங்க கிட்ட கிடைக்க போதுன்னு ஒரே பரிதவிப்பு. அப்பதான் டிராமாவுக்கு ஒரு சினி எஃப்க்ட் கொடுக்க ஆர்க் லைட்ஸ், ஸ்ட்ரோப் லைட்ஸ், இதெல்லாம் ரொம்ப எஃப்க்டிவ்வா யூஸ் பண்ணினோம். அதில்லயும் நம்ம ஜெயக்குமார், ரொம்ப நல்ல பேக்ஸ்டேஜ்,லைட்ஸ் எல்லாம் டைரக்ட் பண்ணி பிரம்மாண்டம்மா என்னமோ ஷங்கர் படம் மாதிரி பண்ணவச்சிட்டான். அதப்பாத்துட்டு நம்ம எழுத்தாளர் உஷா சுப்ரமணியம் குமுதத்தில் 'சி ஐ டி மாணவர்கள் ஆகாயத்தில் ரயில் விட்டார்கள்' ன்னு எல்லாம் விமர்சனம் எழுதி பிச்சுப்புட்டாங்க, அதை அடுத்த பதிவில எப்படின்னு பார்க்கலாமா?

4 comments:

said...

உம்..படிக்கும் போதே டீச்சரையே அதிலும் முதல் வருடத்திலேயே டாவு விட்டீர்களா?பேஷ் பேஷ் விளைந்த கட்டை தான்;)இதில் ஹீரோ பேசும் வசனம் எதுவும் எடுத்து விடலையா?நாசரோடு உங்கள் போட்டி என்னவானது?

said...

//இந்த நாடக குருப்பு சேர்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு//

"தாவு" அர்த்தம் எந்த அகராதியில் பார்க்கலாம்?

said...

ஆமாங்க கொஞ்சம் விளஞ்சதுதான்!

பொறுங்க நாசர் போட்டி அடுத்த பதிவில வரும்

//"தாவு" அர்த்தம் எந்த அகராதியில் பார்க்கலாம்?//
எல்லாம் நம்ம சொல்லு தமிழ் அகராதி தான்:-)

said...

//வாக்கிங் போயிட்டு காலேஜ் பின்னாடி சிங்கநல்லுர் ரோட்ல இருக்கிற டீக்கடைக்குப் போயி மரவள்ளி கிழங்கு சிப்ஸ், டீ அடிக்கிறது வழக்கம். //

இந்த வரிகள் பல பேரின் கல்லூரி நினைவுகளை தூன்டிவிட்டிருக்கும்.

நல்ல பதிவு!!