Wednesday, December 14, 2005

எனை ஆண்ட அரிதாரம்- ஆறாம் பகுதி

இஞ்சினியரிங் காலேஜ் போய் சேர்ந்த அனுபவம் ஒரு அலாதியானது. அப்ப நாங்க படிச்சப்ப +2 எல்லாம் கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி படிப்பு ஸ்கூல்ல, அப்புறம் பியூசி(பிரி யுனிவர்சிட்டி கோர்ஸ்) படிக்க காலேஜ் போயாகனும், அதோட பிஎஸ்ஸி, பிக்காம், பிஏ ன்னு ஆர்ட்ஸ் & ஸயின்ஸ் படிப்புத்தான். பியூசி சேரும் போது அதையும் சேர்த்து கொடுத்துடுவாங்க. அப்ப இஞ்சினியரிங் போய் படிக்கிறதெல்லாம் அவ்வளவு ஈர்ப்பு கிடையாது, ஆர்ட்ஸ், அதுவும் பிகாம் நல்ல கோர்ஸ்னு அதுல தான் போய் சேருவாங்கே பசங்க. அப்ப இருந்ததும் தமிழ்நாடு முழுக்க ஒரு ஒன்பது இஞ்சினியரிங் காலேஜ் தான். மொத்தம் எடுக்கிறது ஒரு 1000 பேரு தான், அது மாதிரி 1000 பேரு தான் ஒவ்வொரு வருஷமும் படிச்சு வெளிய வருவாங்க, இப்ப 50,000 பேரு வருஷா வருஷம் வெளியில வரதா கேள்வி படுறேன். இப்பமாதிரி 12 வருஷம் வரை ஸ்கூல்லேயே குப்பக் கொட்டவேணாம். பதினொரு வருஷம் ஸ்கூல்ல இருக்கனும். நானும் எஸ்.எஸ்.எஸ்.சி படிச்சுட்டு அடுத்ததா காலேஜ் போலாமுன்னு தான் ஒரே ஆசை. அதாவது எல்லாரும் திருச்சியில மெயின்கார்ட்கேட் போய் தான் படிக்க ஆசைப்படுவாங்க, புதிய வளனார் கலைக்கல்லூரி, அதாவது சென்ட் ஜோசப் காலேஜ் ரொம்ப பேமஸ், அதோட சேர்ந்து ஹை ஸ்கூல்லும் இருந்தது, பக்கத்தில பிஷப் ஹீபர் ஸ்கூல், நேஷனல், ஈ ஆர் ஹைஸ்கூல் எல்லாம் இருந்தது. அப்புறம் பொன்னுங்க படிக்கிற ஹோலி கிராஸ், அப்புறம் சுத்து பக்கத்தில நிறைய தியேட்டர்ஸ், போதாதா இதெல்லாம் சுத்தி ஜாலியா பொழுத போக்கிறதுக்கு. 1973ல் நடந்த கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கோ, ஸ்ட்ரைக்னா அடிதடின்னு ஆக்ஷன் ஆகிற இடம். ஆனா நம்ம எஸ்.எஸ்.எல்.சி வரை படிச்சது ஜங்ஷன் பக்கத்தில இருந்த ஆர்ஸி ஸ்கூல். மிஞ்சி போனா, அப்ப கட்டிக்கிட்டு இருந்த கலையரங்கம் தியேட்டர் பார்க்கற்தோட சரி. நான் ஸ்கூல் முடிச்ச பின்னாடிதான் அதை திறந்தாங்க. அதனாலே, அப்புறம் நமக்கு இனி மெயின்கார்ட்கேட் போயி காலேஜ் படிக்கப் போறோம்னு ஒரே ஜாலி. சென்ட் ஜோசப்ல பாரம் வாங்கி பிஎஸ்சி அட்மிசன் எல்லாம் வாங்கியாச்சு. ஆனா எங்கம்மா நீ மெயின்கார்ட்கேட் போயி படிச்சது போதும், படிச்சா வேலை உடனே கிடைக்கிற மாதிரி தொழிற்கல்விப் படின்னு அரியமங்கலத்துல இருக்கிற ஷேசஷாயி பாலிடெக்னிக்ல போய் சேர்த்து விட்டுட்டாங்க. போச்சு, மெயின்கார்ட்கேட் போயி படிக்கனும்னுங்கிற என் ஆசையில மண்ணு விழுந்து போச்சு. அதுக்கு காரணமும் உண்டு. எங்க பெரியப்பாரு புள்ளங்கெள்ளாம் அந்த மெயின்கார்ட்கேட் படிக்கப் போயி உருப்படமா போச்சுங்க, அதுனால் நானும் அப்படியாகிடுவேனு பயம். எனக்கும் அந்த ஆசை வந்ததுக்கு காரணம் உண்டு, ஏன்னா என்னுடய பால்ய சினேகதன் தனபாலு பிஷப்ஹீபர்ல படிச்சப்ப அவன் சுத்தின மாதிரி நம்மலும் சுத்தனும்னு ஆசை. ஊருப்பட்ட பசங்க இப்படி காலையில பஸ்ச புடிச்சு, படிக்க மெயின்கார்ட்கேட் பக்கம் படை எடுக்கிறப்ப, நம்ம கிழக்கால அரியமங்கலத்துக்கு மாங்கு மாங்குன்னு சைக்கிள மிதிச்சுக்கிட்டு பாலிடெக்னிக்கு போகவேண்டியிருக்கும்.

அப்படி சேர்ந்து படிச்சப்பதான், ஒரு மூணு வருஷம் படிச்ச வேலை நிச்சயம் உண்டு, பக்கத்தில திருவெறம்பூர்ல இருக்கிற பாய்லர் பிலான்ட்ல, அதாங்க BHELலன்னு படிக்க போயாச்சு. அது முதல் வருஷம் கோர்ஸ் பேரு பிடிசி (பிரி டெக்னிக்கல் கோர்ஸ்), அப்ப இந்த பியூசி மற்றும் பிடிசி ரெண்டுமே படிச்சிருந்தா இஞ்சினியரிங் காலேஜ் போய் சேர்லாம். ஏதோ மூணு வருஷம் முழுசா முடிச்சிட்டு வேலைக்கு போவோம்னு தான் சேர்ந்தேன், அப்புறம் முத வருஷம் முடிச்சோன, சரி நம்மலும் இஞ்சினியரிங் சேருவோம்னு அப்ளிகேஷன் போட்டது தான், நமக்கு கோயம்புத்தூர்ல சீட்டு கிடைச்சு சேர போகும் படி ஆயிடுச்சு, உள்ளூர்ல ஆர்.இ.சி காலேஜ் இருந்தும். பையனை எப்படி தனியா அனுப்பறதுன்னு, துணைக்கு எங்க மாமனையும் புடிச்சு சேர்த்து அனுப்பி வச்சாங்க எங்கம்மா. ராத்திரி பஸ் புடிச்சு, விடியங்காத்தல 4 மணிக்கு கோயம்புத்தூர் வந்து இறங்கியாச்சு. சும்மா சிலு சிலுன்னு காத்து, அது மாதிரி ஒரு ஊதக்காத்தை நான் அனுபவிச்சதே இல்லை. பிறகு காலையில டவுண் பஸ்சை புடிச்சு பீளமேடு வந்தாச்சு. அப்ப எங்க சொந்த காரரு ஒருத்தரு டெலிபோன் எக்சேஞ்சல வேலப் பார்த்துகிட்டு நான் படிக்கப்போற இஞ்சினிரியங் காலேஜ்ல பார்ட் டைம்ல படிச்சிகிட்டு இருந்தாரு. அவரு ரூம்ல தங்கி குளிச்சிட்டு காலையில போயி அட்மிஷன் வாங்க போனோம், அந்த குளிர்ல குளிச்சு, கிளம்பி போனதை இப்பவும் மறக்க முடியாது. ஏன் இதைல்லாம் சொல்றேன்னா, அந்த காலக்கட்டத்தில நான் ரசிச்ச விஷயங்கள் நிறைய இருக்கு. அதேப்போல என்னுடய நாடக நடிப்புகள்ள மிகுந்த தாக்கம் அந்த காலக் கட்டத்தில வந்த சில திரைப்படங்கள். அதில தான் இன்னெக்கும் நாம் கொண்டாக்கிட்டு இருக்கிற நல்ல படங்கள், பாடல்கள், இசை, டைரக்டர்கள்னு வந்த காலகட்டங்கள்.

அந்த காலக்கட்டங்கள்னு நான் சொல்றது 1978, 79 கள், அப்பதான் ரஜினிங்கிற காந்தம் கொஞ்ச கொஞ்சமா புயலாயிகிட்டு இருந்த நேரம். வில்லன்ல்ருந்து புரமோஷன் ஆயி பைரவியில ஹீரோவாயிருந்த நேரம். பாரதிராஜா, எங்க கிராமத்து படம் தான் இவனுக்கு எடுக்கத்தெரியும்னு முத்திரை குத்திருவாங்களோன்னு சிகப்பு ரோஜக்களை எடுத்து விட்ட நேரம். பிறகு அதிலேயும் கிராம உபக்கதையை தான் நல்லா காட்டிருந்தாரு, அதுலாதான் அவரு டச் இருக்கு, மத்ததெல்லாம் இங்கிலீஷ் பட காப்பி அப்படின்னு சரியா ஒத்துக்காததால திரும்ப கிராமம் போயி புதிய வார்ப்புகள் எடுத்திருந்த நேரம். பாலசந்தர் பெண்களை மையமா வச்சி வரிசையா அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல் நிஜமாகிறதுன்னு அரங்கேற்ற தொடக்கத்தை தொடர்ந்த நேரம் அப்பறம் எல்லாரும் வெளி நாடு போய் படம் பிடிக்க போட்டி போட்டு, நினைத்தாலே இனிக்கும், ப்ரியான்னு வந்திருந்த நேரம். ஸ்ரீதர் மாதிரி ஆளுங்க புதுசா ஆடிக்கிட்டு இருந்த ரஜினி கமல் ஆடுபுலி ஆட்டத்தை பார்த்துட்டு இளமை சொட்ட இளமை உஞ்சலாடுகிறதுன்னு எடுத்திட்டு, பிறகு அவர் பானிலே அழகை ஆராதிக்க போயிருந்த நேரம். இளையராஜா தான் அந்த காலக்கட்டத்தில வந்த படங்கள் அத்தனைக்கும் ம்யூசிக் போட்டு அசத்திக்கிட்டு இருந்தப்ப, சிவாஜி படங்களூம் அவரு ம்யூசிக்ல பழைய டிஎம்ஸ்ச பாடவச்சி அற்புதம்மா நான் வாழவப்பேன், தீபம், தியாகம், கவரிமான், பூந்தளிர்ன்னு பாட்டுகள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த நேரம். அப்ப வந்தாரய்யா நம்ம மகேந்திரன், அழகா விஷூவலா கதை சொல்ல. பாலு மகேந்திராவுக்கும் அவர் தானே வழிகாட்டி அழியாத கோலங்கள்னு தொடக்கத்துக்கு, ஏற்கனவே கன்னடத்தில கமல்ஹாசன வச்சி கோகிலான்னு கருப்பு வெள்ளை படம் எடுத்திருந்தாலும்.


இப்படி பார்க்கிற பொழுது அந்த காலகட்டத்தில முதல்ல நான் சொல்ல வேண்டியது மகேந்திரனுடய திரைப்படங்கள் மற்றும் மகேந்திரனும், ஏன்னா என்னுடய வாழ்க்கையில ஒரு திருப்புமுனை வரவேண்டியது அவராலே. எப்படின்னு கேட்கிறீங்களா, அதத்தானே விவரமா சொல்லப்போறேன். அவருடய படங்கள்னு பார்க்கிற பொழுது, மறக்கமுடியாத படம், முள்ளும் மலரும். பாலசந்தர் ரஜினிங்கிற ஒரு வைரத்த கண்டு பிடிச்சாருன்னா, அதை அழகா பட்டைத்தீட்டி ஜொலிக்க வச்சது நம்ம மகேந்திரன் தான். ஜானி, அடுத்த ஒரு அழுத்தமான திரைப்படம். அந்த நளினமான காதல், பாடகியா வர ஸ்ரீதேவியும், ரஜினியும் ஒருத்தொருத்தர் மயங்கற அழகு, அது போன்ற காதலை இவ்வளவு விஷுவலா இன்னும் யாரும் சொல்லலைன்னு தான் எனக்கு தோணுது. அது மாதிரி ஒரு முரட்டுத்தனமான காளியை மகேந்திரன் காமிச்ச மாதிரி யாரும் காமிக்கல்லை. எல்லாமே என் தங்கச்சி தான் அப்படின்னு இருந்த ரஜினி, கடைசில ஊரே திரண்டு வந்து சரத் பாபுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது, கையை விட்டுட்டு ஷோபா போனதும் ஒரு வெறுப்போட பார்க்கிற பார்வையும் அப்புறம் அதே தங்கச்சி திரும்பி ஓடி வந்து அண்ணன் தோள்ல சாய்ந்து தேம்பி தேம்பி அழுகிறப்ப, அப்படியே ஆதங்கமா கட்டிப்பிடிச்சு கர்வத்தோட பேசர வசனம், இன்னெக்கும் அத்தனை விஷுவலா கொடுக்க யாருமில்லம்பேன். மனிரத்தனம் மாதிரி எத்தனையோ டைரக்டர்ஸ்ங்க வந்தாலும் அப்ப என் மனசில பதிஞ்ச படங்களை விஷுவலா அள்ளி கொடுத்தவங்கள்ள முதல்ல மகேந்திரன் தான். அப்புறம் வேணுன்னா அந்த வரிசையில பாலு மகேந்த்ராவையும், பாரதிராஜாவையும் வச்சுக்கலாம்.

இதேப்போன்ற விஷுவல் ட்ரீட்ன்னு சொல்லலாம் உதிரிபூக்களை. கடைசியில ஊருக்கு முன்னாடி கெட்டவன் ஒருத்தன் இருக்கக் கூடாதுன்னு விஜயன் அந்த தண்ணியில இறங்கி குழந்தைங்களை அனாதையாக்கி உதிரியாக்கி போற காட்சி ஒரு அற்புதம் அது ஒரு ட்ரீட். இதெல்லாம் பாத்து மயங்கி எப்படியும், ஏதாவது ஒரு பாத்திரத்தில அவரு படம் எதுலயாவது ஒன்னுல்ல நடிக்கனும்னு நான் அலைஞ்சு நாட்கள் நிறைய. அதுக்காக சென்னையும், கோவைன்னு சுத்தின நாட்கள் உண்டு. அப்ப ஏற்பட்ட அனுபவங்களை அடுத்த பதிவுகள்ள சொல்றேன்.

14 comments:

said...

உதயகுமார்,
அந்தக் காலக்கட்டத்துலே வந்த அத்தனை படங்களையும் நல்லாக் கோர்த்து எழுதிட்டீங்க. பிரமாதம்!

ஆமாம், நீங்க சிஐடியா? கோபாலும் தான் 69-73லே.
எங்க அண்ணன் பிஎஸ்ஜி அது ரொம்ப நாள் முன்னாலே! 61லே முடிச்சார்.

said...

//அப்படி சேர்ந்து படிச்சப்பதான், ஒரு மூணு வருஷம் படிச்ச வேலை நிச்சயம் உண்டு, பக்கத்தில திருவெறம்பூர்ல இருக்கிற பாய்லர் பிலான்ட்ல, அதாங்க BHELலன்னு படிக்க போயாச்சு. //

எங்க ஊரையும் காலி பண்ணிட்டீங்களா நீங்க.

said...

துளசி, அந்த காலகட்டத்தில வந்த படங்கள் இன்னெக்கி அது மாதிரி எடுக்க வழிகாட்டி, எப்படி எல்லாம் அதை ரசிச்சு, சிலாகித்தோம்ங்கிறதை அடுத்த பதிவுகள்ல நீங்க பார்க்கலாம்!

ஓ.. நம்ம அண்ணனும் சிஐடி யா, மெஸ் கதை நிறய சொல்லிருப்பாரு, அவரை கண்டிப்பா நம்ம பதிவை படிக்க சொல்லுங்க, பழனி, திருமலைன்னு அவருக்கு தெரிஞ்ச ஹாஸ்டல்ல நடந்த கூத்துக்களையும், அவருக்கு தெரியாத எங்க நேரத்தில கட்டன மருதமலை ஹாஸ்டல் சம்பவங்களும் சுவாரசியமா இருக்குன்னு சொல்லுங்க!

உங்க அண்ணன் படிச்ச காலேஜ் பத்தியும் கதை உண்டு, என் நாடகம் வராதான்னு ஆவலா எதிர்பார்த்த ரசிகர் கும்பல் நிறைஞ்ச காலேஜ் உங்க அண்ணனோடது!

said...

எப்பா தாஸீ, நான் அங்க போயிருந்தா தானே காலிப் பண்ண, அதான் நடுவிலேயே கோயம்புத்தூரை பாக்க அனுப்பிச்சிட்டாங்களே! என்ன குறை அந்த பக்கம் ஆர் இ சி ல படிக்கலயேன்னு, படிச்சிருந்த ஒரு வேளை காலி பண்ணிருப்பேனோ என்னவோ, காலேஜ்க்காக இல்லனாலும், பசங்களுக்கு சப்போர்ட்டிவா இருந்த மணிசுந்தரம் பிரின்ஸ்பாலுக்காகவாது படிக்க கொடுத்து வைக்கலையேன்னு அப்ப நினைச்சுக்குவேன்!

said...

உதயகுமார்,
பழைய நினைவுகளைக் கிளப்பி விட்டுட்டீங்களே! கிட்டத்தட்ட எங்க க்ரூப் வரிசைப்படுத்திய பாணியிலேயே உங்க சினிமா லிஸ்ட்டும் இருக்கு. `ஆறு புஷ்பங்கள்’ பார்க்க ஆறுபேர் ஒரேமாதிரி புடவை கட்டிட்டுப் போன நாட்களை நேற்றுதான் அசைபோட்டுட்டு இருந்தேன்`ஏண்டி முத்தம்மா’ பாட்டு கேட்டுட்டு. தினமும் ராத்திரி 11 மணி சுமாருக்கு நீங்க சொன்ன படங்களின் பாடல்கள் சன் ம்யூசிக்கில் வரும், கேட்டுப் பாருங்க!

said...

ஆமாம் தாணு, என்னுடய லிஸ்ட்ல ஆறு புஷ்பங்கள் விட்டு போச்சு, நம்ம ரஜினி ஸ்டைலா, பீடியை வாயிலருந்து சுழட்டி, லாரி கீழே இருந்து எழுந்து அப்படி ஓரக்கண்ணால பார்க்கற காட்சி தான் என் ஞாபகத்துக்கு உடனே வருது. என்னுடய ஆறாம் பகுதிக்கு எழுத மறந்த ஆறு பஷ்பங்கள்னு தலைப்பு கொடுக்கணும்:-) வருகைக்கு ரொம்ப நன்றி!

said...

பல 'வெளி' கண்ட நாதர்,

ஏதோ சொல்ல வந்து எங்கெங்கோ போய்.... ஹி..ஹி.. எப்படியோ உம்மை மகேந்திரன் காப்பாத்திட்டார்!

said...

வெளிகண்ட நாதர்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

ம்ம்ம் மலரும் நினைவுகள்:)

said...

ராம்கி, சம்பவங்களை சில நேரம் இப்படி கோர்வையா சொல்றப்ப அப்படி ஆயிடறதுண்டு:-)

said...

மதுமிதாவிற்கு நன்றி!

said...

என்ன சார். ரொம்ப நாளா ஆளைக் காணோம். பதிவுகளும் இல்லை. பின்னூட்டங்களும் இல்லை. எப்படி இருக்கீங்க?

said...

மனசை ஏதோ பண்ணுதுங்க ஐயா! பொறுப்பில்லாத அந்த காலம் மகிழ்ச்சிதான். பொறுப்புகள் சேர சேர மகிழ்வுகள் குறைகின்றனவோ? இன்றைய தினமலரில் டாட் காம் (02-02௨006) பகுதியில் உங்கள் வலைப்பதிவினை இணைத்துள்ளனர். வாழ்த்துக்கள்!
http://www.dinamalar.com/2006feb02/flash.asp

said...

செய்தி சொன்ன நம் நண்பருக்கு நன்றி!

said...

suvarasiyamaana pathivu!!