Thursday, January 18, 2007

குருபாய் 'பிஜினஸ்'!

குரு படம் பார்த்து சரியா ஒரு வாரமாகப்போகுது, பார்த்துட்டு வந்தன்னைக்கே ஏதாவது எழுது போடலாமுன்னு இருந்தேன், ஆனா இந்த வீணாப்போன ஜலதோஷம், காய்ச்சல், மூக்கடைப்புன்னு ஆளை கீழ சாச்சு, இதோ எழுந்து உட்கார சரியா ஒரு வாரமாயிடுச்சு! அதுக்குள்ள ஏகப்பட்ட விமர்சனப்பதிவுகள் வந்து படத்தை பத்தி எல்லாரும் எழுதி கலக்கிட்டாங்க! நம்ம என்ன சொல்ல இருக்குன்னு நினைக்கிறப்ப, அடடா முக்கியமான ஒன்னை சொல்ல எல்லாரும் மறந்திட்டாங்களே, அதான் குருபாயோட பிஜினஸ் பத்தி, அதான் சொல்லலாமுன்னு இந்த பதிவு!

இந்த 'சீமை சில்க்', இல்லே 'கேலா சில்க்' பத்தி சின்ன வயசிலே பீத்திக்கிட்டு 'அவங்க பெரிய பணக்காரங்க டெர்லின் துணிதச்சு போட்டுக்குவாங்கன்னு', சொல்ல கேட்டது ஞாபகத்துக்கு வர்து! அப்ப பாலியெஸ்டர் துணியிலே சீப்பா சட்டை தச்சி போட்டுக்கிறதுங்கிறது ஒரு எம்பதுக்கப்பறமா மலுவா வந்துச்சு, அதுவரை காட்டன் சட்டைதான்! அப்படி இந்த பாலியெஸ்டர் நூழிழையில் நெய்யபட்ட சட்டை துணிமணிங்க நம்ம ஊருக்கு பொருந்தாத ஒரு உடுப்பா இருந்தாலும் அது மேலே ஒரு மோகம் இருக்கத்தான் செஞ்சுச்சு, அந்தகாலத்திலே மடிப்பு கலையாம போட்ட துணி போட்ட மாதிரி போட்டுக்கிட்டு பிகர்ங்களை மடக்கணும்னு விமல் ஷூட்டிங் ஷர்ட்டிங் துணிகளை தேடி புடிச்சு வாங்கி தச்ச காலத்தை நினைச்சா, ம்.. பெருமூச்சு நிறைய விட வேண்டிருக்கு! இதை ஏன் சொல்றேன்னா இந்த குரு படத்து கதநாயகன் 'பாலியெஸ்டர் கிங்' துணி மூட்டை எடுத்து வித்து பொழச்சு, அப்பறம் அந்த சீமைசிலுக்குங்கிற துணிக்கு உண்டான மூலப்பொருள் வந்த அந்த ஒட்டு மொத்த தொடர்புகளா இருக்கும் அத்தனை பொருட்களையும் தன் கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து, அதன் கட்சா பொருளை பூமியிலே தோண்டி எடுக்கும் தொழில் முதக்கொண்டு நம்ம ஷங்கர் மாதிரி எதையும் பிரம்மாண்டமா செய்து இன்னைக்கு உலகிலே இந்த மாதிரி இணைத்து உருவான சக்தி சாம்ராஜ்யத்திலே முப்பவதாவதா நிக்கும் ரிலெயென்ஸ் ஸ்தாபகர் திருபாய் அம்பானியின் அச்சு!

என்ன தான் நான் வர்த்தக நகரத்திலே பொறந்து வளர்ந்தாலும், நான் பார்த்தது எல்லாம், என்ன பார்க்கிறீங்க, திருச்சி மாநகரத்தை தான் சொல்றேன், சின்னதா பூக்கடை வச்சாலும் சரி, பெரிசா மளிகமண்டி வச்சு நடத்துனாலும் சரி, தான் செஞ்ச தொழிலுக்கு புள்ளைங்க வரவே வேண்டாம், நீ படிச்சு, ஏதாவது உத்யோகம் பார்த்து சம்பாதிச்சு குடும்பத்தை கரையேத்தி, பொண்டாட்டி புள்ளையோட சந்தோஷமா இருன்னு சொல்லி அதட்டி உருட்டி படிக்க வைக்கும் வியாபார சமூகம் தான் அதிகம்! அதிலேயும் அப்பன் ஆத்தாக்கிட்டே கொட்டிக்கிடக்குன்னு படிக்காம ஆட்டம் போட்டுட்டு வேறே வழியில்லாம் அப்பன் தொழிலையே செஞ்சுகிட்டு இருக்கிற நடுத்தரக்குடும்ப மக்களிடையே, ஆனா ஒன்னுமே இல்லாத கிராமத்து வாத்தியாரு வளர்ப்பு புள்ளைக்கு இந்த பிஜினஸ் செய்யணும்ங்கிர ஆர்வமும், அப்படியே வெறும் துணிமூட்டை மாத்திரம் தூக்கி வித்து சம்பாரிச்சா போதாது, பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவனும்னு கொஞ்ச படிப்பு படிச்சிருந்தாலும் அதன் சூத்திரங்கள் அறிஞ்சு அதை சாமர்த்தியமா நிறுவி இன்னைக்கு உலகிலே முத முப்பது இடத்துக்குள்ளே உள்ள அந்த "Integrated Energy Conglomerate" நிறுவன ஸ்தாபகர் பத்தி படம் எடுத்து, இன்னைக்கு முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு "Entrepreneurial spirit" உண்டாக்கும் விதமாக இந்த படத்தை எடுத்து விட்ட மணிக்கு அநேக நமஸ்காரங்கள்! இந்த படத்தையும் 'மணி மாறமாட்டாரான்னு' என்ன தான் நக்கலடிச்சாலும் இந்த மாதிரி படங்கள் வெகுஜனங்கள் கண்டு கேளிக்கைன்னு மட்டும் போயிடாம அதன் கருத்து, 'எந்த பிஜினஸ்ஸையும் எடுத்து செஞ்சு பிரம்மாண்டக்கி சக்தியுள்ள நாளை இந்தியாவிற்கு இது போன்ற பல குருக்கள் வளர வழி வகுக்கும் விதமாக இருக்கும்' என்பதில் எந்த ஐயமுமில்லை!

இதை நான் ஏன் சொல்றேன்னா, நான் இந்த தொழில் துறையிலே இருந்து பார்த்தவங்கிர முறையிலே! ஆங்கிலேயர் அடிமையிலிருந்து விடுதலையாகி, இது போன்று பெருந்தொழில் நிர்மானிக்க அரசாங்கமே பார்த்து உருவாக்கின தான் ஒன்னு, இல்லை பரம்பரை பணக்கார குடும்பங்கள் தொழில் அபிருத்தி பண்ணனும் அதுவும், அந்த கட்டுப்பாடான 'லைசென்ஸ் ராஜ்' காலகட்டத்திலே இப்படி பிரம்மாண்ட தொழில்துறை நிறுவுவதில் ஏகபட்ட சிரமங்கள் இருக்கத்தான் செஞ்சது! அதுமட்டுமில்லை பணக்கார வர்க்கமில்லாம, ஏழை இடைநிலை குடும்பத்திலே உள்ளவன் இது போன்று கனவு கண்டு முடிக்கணும்னா அது சிம்ம சொப்பனம் தான்! அதுவுமில்லாம, துணி உற்பத்தி செய்யும் நூற்பாலை மட்டும் ஆரம்பிச்சதில்லாம , அதுக்கு உண்டான மூலப்பொருள் பாலியெஸ்டர் ஃபிலமெண்ட் (Polyester Textile Filament Fiber)மற்றும் உற்பத்தி செய்யும் ஒரு பெரிய பெட்ரோ கெமிக்கல் தொழில் தளம் உருவாக்குவது என அதன் முழு 'Value Chain' பத்தி சரியா யோசிச்சி நிர்மானிப்பதென்பது அந்த காலகட்டத்திலே பெரிய பணக்கார டாட்டாவே யோசிக்காத ஒன்னு! அப்படியே அவங்க யோசிச்சு ரிஃபைனரி கட்ட வறேன்னு 80ல அடிபோட்டு வந்தாங்க, அப்பறம் இந்த தொழில் நமக்கு வராதுன்னு ஓடி போயிட்டு அப்பறம் IOCL தானே கட்டி இன்னைக்கு பானிபட்டுங்கிற இடத்திலே அம்பானி பண்ணிகாட்டின அந்த 'Vertical integration' ஐ உருவாக்க படாத பிராயத்தனம் பண்ணிக்கிட்டிருக்காங்க! ஆனா அம்பானி பார்த்தீங்கன்னா பாதள்கங்காவிலிருந்து(இங்கே தான் அவங்களோட பெரிய பெட்ரோகெமிக்கல் காம்ப்ளெக்ஸ் இருக்கு, இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள இடம்!) ஜாம் நகர் வரைக்கும் இந்த 'Vertical integration' ங்கிற தொடர்பு சங்கிலியை பிரம்மாண்டமா,(உலகத்திலே உள்ள ரிஃபைனரியிலேயே ஜாம் நகர் ஆறாவது இடம், எண்ணை சுத்திகரிப்பு அளவில், அதாவது 590000 பேரல் எண்ணையை ஒரு நாளைக்கு சுத்திகரிப்பு செய்றாங்க!) ஜாம் ஜாமுன்னு செஞ்சு காமிச்சிட்டாங்க!

இது போன்ற பெரிய ரிஃபைனரியோ இல்ல பெட்ரோகெமிக்கல் காம்ப்ளெக்ஸ் கட்டுவதில் 80 களில் ஏகப்பட்ட சிரமம் இருந்தது! அதாவது இந்த மாதிரி பாலியெஸ்டர் அதை ஒட்டிய பல பெட்ரோகெமிக்கல் பதார்த்தங்கள் உருவாக்கும் தொழில்முறை பெரும் விலை கொடுத்து வாங்க வேண்டும் அதற்கு உண்டான சில இயந்திரங்கள், தளவாடங்கள் அப்பொழுது இந்தியாவில் சொல்லிக்கொள்ளும்படி தயாரிக்கபட வில்லை, எல்லாவற்றையும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும்! சிலசமயம் அது கிடைத்தாலும் அந்நிய நாட்டில் தயாரிப்புகளுடன் ஒத்து பார்க்கும் பொழுது தரத்தில் குறைவாக இருக்கும். ஆனால் அரசாங்கம் இந்த தொழில்துறைக்கு பாது காப்பு அளிக்க இங்கு தான் வாங்க வேண்டும் எனக்கூறும்! மேற்கொண்டு நான் "நாளை உலகம் நமது கையிலா??" என்ற பதிவில் எழுதியது போல அந்நிய செலவானி அவ்வளவு எளிதில் கிடைக்காது! அப்படியே கிடைத்து இது போன்ற பெரிய தொழில் நிறுவனங்களை நிறுவும் பொழுது அதற்கு அனுமதி கிடைத்தாலும் நம்ம தாலி அறுந்துவிடும்! (அந்த காலத்திலெ இது மாதிரி பெரிய காம்ப்ளெக்ஸ் டிசைன் செய்து உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்ததால் அந்த கஷ்டம் எனக்கு தெரியும், பப்ளிக் செக்டார் கம்பெனிகளுக்கே இந்த நிலமை என்றால் ப்ரைவேட் செக்டாருக்கு கேட்க வேணாம்)பிறகு இது போன்ற அடிப்படை தொழில் நிறுவும் பொழுது அரசாங்கம் சில அத்தியாவசியமான பொருட்கள் இறக்குமதிக்கு வரி கொஞ்சம் தாழ்த்தும், அதற்காக இந்த நரக வேதனை கொண்டு அப்ரூவல் வாங்கி இந்த தொழிற்சாலை நிறுவுவதற்குள் தாவு தீர்ந்துவீடும்!இந்த கஷ்டகாலங்களில் ரிலெயன்ஸ் பெட்ரோகெமிக்கல்ஸ் காம்பெளக்ஸ் கட்டினாலும் ரிஃபைனரி கட்டிய 90 களில் இந்த விதி முறைகள் தளர்த்தபட்டிருந்தது, ஆனால் அப்பொழுது அவர்கள் செய்த தில்லுமுல்லுகள் 'நீங்க நல்லவரா கெட்டவரா' என்று கேட்கவைத்தது!

ஒன்னுமில்லை, இந்தியாவிலே இருக்கக்கூடிய அத்தனை ரிஃபைனரி, பெட்ரோகெமிக்கல்ஸ் தொழிற்சாலைகளை கட்டி கொடுத்தது "Engineers India Ltd" (EIL)என்ற கன்சல்டண்ட் தான், இந்த மத்திய அரசாங்க நிறுவனம், அந்த 80களின் கடைசியிலே ரிலெயன்ஸ் ஜாம் நகரில் அந்த பெரிய ரிஃபைனரியை நிர்மானிக்க முயன்றபோது என்ன தரிகணத்தோம் போட்டும் EIL க்கு அந்த கட்டுமான பணி கிடைக்கவில்லை, ஏன்னா ரிலெயன்ஸ் அதை கொடுக்க மறுத்துவிட்டது. EIL அரசாங்க நிறுவனமாக இருந்ததால் அரசாங்க சட்டங்களுக்கு முரனாக எதையும் வடிவமைக்காது, ஆனால் அம்பானி குழுவினர் அரசாங்க அனுமதி ஒரு உற்பத்தி திறனுக்கு வாங்கி விட்டு ஆனால் தயாரிப்பது அதை விட இரண்டு மடங்கு! அதன்படி ரிஃபைனரி செய்து கொடுக்க EIL போன்ற அரசு நிறுவனம் தயாராக இருப்பதில்லை, அதனால் வெளியிலிருந்து வந்த Bechtel என்ற நிறுவனம் அதை செய்து கொடுத்தது! இது தான் நம்ம மாதவன் படத்தில் கண்டுக்கும் 6 நூற்பாலை அனுமதி, இருப்பதோ 12 நூற்பாலை என வரும் காட்சி! இதனால் ஏற்படும் லாபம் பிறகு உற்பத்தியாகும் இன்னொரு மடங்கு பொருளுக்கு வரி ஏய்ப்பு நடத்துவதே! இப்படி பட்ட தில்லுமுல்லுகள், அரசாங்க சட்டத்தை வளைத்தல் என பல செய்தாலும் கடைசியில் பொதுமக்களிடமிருந்து வாங்கிய பணத்துக்கு நிறைய லாபம் ஈட்டி கொடுத்து பெயர் வாங்கியது! ஆக எல்லாரும் சொல்லுவது போல குருபாய் பிஜினஸ் சாம தான் பேத தண்டம் அனைத்தையும் கடைபிடித்து முன்னுக்கு வந்த ஒன்று!

அது போல் வெறும் படிப்பு படித்து விட்டு அடுத்தவன் வியாபாரத்தை கவனித்து அதை பெருக்குவதை விட சுய தொழில் செய்து காட்டி இளைஞர்களை முன்னேற வித்திட்ட வகையில் வாழ்ந்து காமித்த குருபாய் இல்லை திருபாய் நல்லவரே! எந்த தொழிலில் இல்லை தில்லுமுல்லு, வீதியில் விக்கும் பூக்காரி கூட அசந்தால் ஒரு முழத்தை முக்கா முழமாக அளந்து கொடுத்து சம்பாதிக்கும் பொழுது இந்த வியாபார ஒழுக்க நெறியிழ்ந்தார் (Business Ethics) என கூறுவது சரியாகாது! இந்த Ethics, நெறிமுறைகள் என்று பார்க்கும் பொழுது நான்கு தத்துவங்கள் இருக்கிறது, ஒன்று மில் தத்துவம், Mill's Utilitarianism, அதாவது, எந்த ஒரு செயலும் பெரும்பான்மையோருக்கு பயனளித்தால் அந்த செயல் நன்றே! (an action is ethically correct, if it producesthe great benifit for the greatest number of people) அடுத்தது, Kant's Duty based ethics, அதாவது பெரும்பாலோரால் சரி என ஏற்று கொள்ளபட்டதை நீயும் செய்ய கடமைபட்டுள்ளாய்! (Each person has a duty to follow those courses of action that would be acceptable as universal principles for everyone to follow), மூன்றாவது Locke's rights-based ethics, அதாவது, அனைவரும் சுயமாகவும் சமத்துவத்துடனும் வாழ்வது, நோயின்மை, சுதந்திரம், ஆட்கொள்ளுதல், அவர்களின் உழைப்பு ஆகிய அனைத்தும் அவரவர் உரிமையே! ( All individuals are free and equal, and each has aright to life, health, liberty, possessions, and the products of his or her labour) நான்காவதாக, Aristotle's Virtue-based ethics, அதாவது, சந்தோசம் என்பது தன்னுடய தான் வகுக்கும் எல்லைக்குள்ளோ, கோட்பாடுகளுடனோ வந்தடைந்தால் நன்றே! எந்த ஒரு செயலுக்கும் சரியானதொரு தன்னிலை காரணமிருந்தால் அச்செயல் நன்றே! எந்த ஒரு விளிம்பிற்கும் செல்லாமல், அதாவது முற்றும் நல்லாதாகவோ, இல்லை முற்றும் தீயதாகவோ இல்லாமல் ஒரு இடைப்பட்ட தீர்வினை அடைவது மிகச்சால சிறந்தது! (Happiness is achived by developing virtues, or qualities of character, through deuction and reason. An act is good if it is in accordance with reason. This usually means a course of action that is the golden mean between extreemes of excess and deficiency. ஆக இந்த நான்கு தத்துவத்தில் எதை கடைபிடித்தாலும் முரண்பாடு உண்டு, அப்படி முரண்பாடுகள் வரும் பொழுது சாலச்சிறந்தது எது என சீர்தூக்கி அதன் படி நடந்தால் நீங்கள் ஒழுக்க நன்னெறியோடு செயல்படுவதாக அர்த்தம். அந்த வகையில் குருபாய் இல்லை திருபாய் கடைபிடித்து வாழ்ந்து கழித்த வாழ்க்கையால் அவர் நல்லவரே என்று தீர்மானமாகிறது! ஆக நம்ம மணி நமக்கு படம் பிடித்து காண்பித்த குரு நல்லவரே!

இந்த நான் மேலே சொன்ன ஒழுக்க நன்னெறிகள் (ethics) தத்துவம் பத்தி மேலும் தெரிஞ்சிக்கனும்னு ஆசை உங்களுக்கு உண்மையிலே இருந்தா, பின்னூட்டம் போடுங்க, அதை பத்தி வேரொரு சமயத்தில ஒரு தனி பதிவே போடுகிறேன்!

12 comments:

said...

Vertical integration அல்ல அது Backward Integration.முடிவுப் பொருளில் (உ.ம்: பாலிஸ்டர்) ஆரம்பித்து மூலப்பொருளுக்குச் செல்வது.

ஜாம் நகர் (RPL) 90 களில் வடிவமைக்கப்பட்டது . சூரத் ஹசீரா (RIL)க்குப்பின் வடிவமைக்கப்பட்டது.

மணி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இளைஞர்களுக்கு ரிலையன்ஸ் ஒரு பிரமாண்டம்தான். மணி ரிலயன்ஸை வைத்து பணம் (படம்) பண்ணி விட்டார் அவ்வளவே.இந்தப்படத்தைப் பார்த்துத்தான் இளைஞர்கள் மாறுவார்கள் என்பது அதிகம்:-)) நாளை இவர் இன்போசிஸ் கிச்சாவை வைத்தும் படம் பண்ணுவார்.

said...

//Vertical integration அல்ல அது Backward Integration.முடிவுப் பொருளில் (உ.ம்: பாலிஸ்டர்) ஆரம்பித்து மூலப்பொருளுக்குச் செல்வது// அதே அதே! தொழில்நுட்பத்திலே Backward Integration! ஆனால் இதை யோசனை பண்ணி முடித்து காட்டாமல் இருக்கும் பப்ளிக் செக்டார் அரசாங்க நிறுவனங்கள் அப்ப்டியே உள்ளது! ரிலெயன்ஸ்ஸ் நிறுவனம், அப்படி யோசித்த பப்ளிக் செக்டார் ஆட்களை வைத்து காரியத்தை முடித்து வியாபரத்திலெ 'Vertical and Horizontal integration' கொண்டு முன்னனியில் நிற்கிறது!

said...

//மணி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இளைஞர்களுக்கு ரிலையன்ஸ் ஒரு பிரமாண்டம்தான். மணி ரிலயன்ஸை வைத்து பணம் (படம்) பண்ணி விட்டார் அவ்வளவே.இந்தப்படத்தைப் பார்த்துத்தான் இளைஞர்கள் மாறுவார்கள் என்பது அதிகம்:-))// வெகுஜனத்தை சென்றடைய செய்தாரே, ஆடி பாடி கேளிக்கையோடு, அதற்கு ஒரு சபாஷ் போடுங்கள்!

said...

//நாளை இவர் இன்போசிஸ் கிச்சாவை வைத்தும் படம் பண்ணுவார்//அப்படி எடுத்தாலும் நல்லா எடுத்து சொல்லுவாரே மணி, எந்த ஒரு அறிவுரை, ஞானம் கேளிக்கையோட சொன்ன மக்கள் ஏன் கேட்க மாட்டாங்க!

said...

Sorry for typing in English, I watched this movie after coming to know that movie was based on Thirubhai's business life.
Please do post a blog on 4 ethics and can you please tell me who is that "contractor" character role in thirubhais bio. Is that wadia group? i dont know exactly

said...

வாங்க வினையூக்கி, ஒழுக்க நன்னெறி (ethics) தத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு இருக்கு ஆர்வத்திற்கு நன்றி, கண்டிப்பாக பதிவிடுகிறேன்! ஆமாம் அந்த கான்ட்ராக்டர் ரோல் நிஜ வாழ்க்கையில் வாடியா குடும்பத்தினர் தான்! பிறகு மாதவன் செய்த அந்த தோலுரித்து காட்டும் பத்திரிக்கையாளர் நிஜ வாழ்க்கையில் யார் என்று கண்டு பிடித்தீர்களா?

said...

எதிக்ஸ் பற்றியா வித்தியாசமான கண்ணோட்டம். அது பற்றிய உங்கள் பதிவைப் படிக்க காத்திருக்கிறேன்.

said...

//எதிக்ஸ் பற்றியா வித்தியாசமான கண்ணோட்டம். அது பற்றிய உங்கள் பதிவைப் படிக்க காத்திருக்கிறேன்.//கண்டிப்பா, விக்கியிலே எழுதிட்டா போகுது!

said...

தொழில் நன்னெறிகள் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் கல்லூரியில் படிக்கும் போது நிறைய ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இதை தந்திரம் என்றோ நல்ல திட்டம் என்றோ வியப்பதா அல்லது ஏமாற்றுவதும் பகைவனுக்கு பகைவனுக்கு பகைவன் நண்பன் என்று மாற்றி நுணுக்கமான சட்டங்களை பயன்படுத்து பாதுகாப்பாய் வெற்றி பெறுவதை குற்றமாக பார்ப்பதா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இது விவாதத்திற்குரியது. ஆனாலும் கவனமாக கையாள்வதில் வல்லவர்கள் வெல்கிறார்கள். பதிவிடுங்கள்.

said...

//இது விவாதத்திற்குரியது. ஆனாலும் கவனமாக கையாள்வதில் வல்லவர்கள் வெல்கிறார்கள்.//வாங்க பத்மா, சரியா சொன்னீங்க! இந்த எத்திக்ஸ் பத்தி நிறைய எழுதிக்கிட்டே போகலாம், அவ்வளவு வரவேற்பு இருக்குமான்னு பார்த்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு, சீக்கிரமே எழுதுகிறேன்!

said...

//மாதவன் செய்த அந்த தோலுரித்து காட்டும் பத்திரிக்கையாளர் நிஜ வாழ்க்கையில் யார் என்று கண்டு பிடித்தீர்களா?
//
தண்ணீர் விட்டா வளர்த்தோம் இந்தியன் எக்ஸ்பிரஸ் புகழ் குருமூர்த்தி தானே?!!!

said...

//மாதவன் செய்த அந்த தோலுரித்து காட்டும் பத்திரிக்கையாளர் நிஜ வாழ்க்கையில் யார் என்று கண்டு பிடித்தீர்களா?
//Gurumooorthi