Wednesday, November 09, 2005

வா...ராஜா..வா..

வாரத்தில மத்த நாளு எப்படியோ தெரியாது, ஆனா இந்த ஞாயித்துக் கிழமை வந்தாலே ஒரு ஆனந்தம் தான். ஏன்னா கடைக்குப் போலாம் விரும்பனதை சாப்பிடலாம், சாய்ந்திரமானா கடையை கட்டிட்டு சினிமா போகலாம். ஆரம்பத்தில சாயந்திரம் 4 மணிக்கே நானும் கடையில வேலை செய்யற பையனும் போயி க்யூல போயி நின்னுடுவோம். நாங்க டிக்கெட்டு எடுத்து ரெடியா இருக்க எங்க ஞாயினா மெதுவா கடையை அடச்சிட்டு வந்து சேர சரியா இருக்கும். பெரும்பாலும் எம்ஜிஆர் படம் போகத்தான் பிடிக்கும். பெற்றால் தான் பிள்ளையா, எங்க வீட்டு பிள்ளை, ரகசிய போலீஸ் 115, ஒளி விளக்கு, குடியிருந்த கோயில், சங்கே முழங்கு, அப்படின்னு அந்த காலக்கட்டங்கள்ல பர்த்த படங்கள் இன்னும் மனசுல பசுமையா இருக்கு. இந்த எம்ஜிஆர் படங்களை புதுசா ரிலீஸாயி 100 நாட்கள் வரை ஒடும் பருவத்துக்குள்ள பாத்து முடிச்சிடுவேன் ஆன சிவாஜி படங்கள் அப்படி இல்ல, அது இரண்டாம் முறையா கொட்டகைக்கு வந்து போறப்பத்தான் பார்ப்பேன் பெரும்பாலும். இது என்னுடய பத்து வயசு பருவம் வரை தான். அதுக்கப்பறம் வளர்ந்து பெரியவனானே கதையே வேறே.

அப்ப திருச்சியில ஜீபிடர், பேலஸ் தியேட்டர்ல எம்ஜிஆர் படம் ஓடுனாதான் அந்த படத்துக்கே பெருமை. அது மாதிரி சிவாஜி படம் பிராபாத் தியேட்டர்ல ஓடுனாதான் அதுக்கு பெருமை. இது மாதிரி தமிழ் நாடு பூரா அந்த அந்த ஊர்ல ஒரு சில குறிப்பிட்ட தியோட்டர்ல ஓடுனா தான் அந்த எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு பெருமை, உதாரணமா, தஞ்சாவூர்லயும், சென்னையிலயும் சாந்தி தியோட்டர். அப்படி ஓடாட்டி, அந்த காலத்தில எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்களுக்கு இது ஒரு மானப்பிரச்சினை மாதிரி. என்னடா தலைவரு படத்தை சொத்த தியோட்டர்ல போட்டுட்டாங்கன்னு. அதுவும் அந்த மரக்கடை ராமகிருஷ்ணா தியோட்டர் இருக்கே, அதுல போட்டா யாருக்கும் (எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்களுக்கு)பிடிக்காது. ஏன்னா அதுல ரெண்டு பெரிய தூணூ இருக்கும். அப்பிடியும் சங்கே முழங்கு அங்கத்தான் 100 நாள் ஓடிச்சு. அப்புறம் அப்ப ராஜா தியோட்டர் தான் உள்ளதுலேயே பெரிய தியேட்டர். அந்த காலத்திலேயே மல்டிபிலக்ஸ் மாதிரி பெரியக்கடை வீதியில ராக்ஸி வெலிங்கடன் தியேட்டர்ங்க. ஒன்னுல்ல டிக்கட் கிடைக்கலனா இன்னொன்னுல போயி படம் பார்க்கிறது உறுதி. என்னா ஒரு தியோட்டர்ல படம் சொத்தையா இருக்கணும், அப்பத்தான் முடுயும். எல்லா தியோட்டர்லயும் போயி படம் பாத்திருக்கிறேன் இப்ப மாதிரி இல்ல, எந்த தியேட்டர்ல எந்த படம் வரணும்னு ஒரு நியதி இருந்தது. உறையூர்ல இருக்கிற அருணா, ஜங்ஷன்ல இருக்கிற பிளாசா, இங்க இங்கிலீஸ் படம் தான், அது மாதிரி மெயின்கார்ட்கேட்ல இருந்த கெயிட்டி தியோட்டர்ல ஹிந்தி படம்னு. இது மாதிரி சிட்டி சென்ட்ர்ல ஓடனப்ப பாக்காத படத்தை தென்னூர்ல பத்மாமணில ஓடறப்ப போயி பார்க்கலாம், அது மாதிரி முருகன் டாக்கீஸ், பாலாஜி எல்லாம். இப்ப நான் சொல்ற இந்த தியோட்டர்ங்கள்ளாம் இருக்கான்னு எனக்கு தெரியாது.

அப்ப மூணாவது படிச்சிகிட்டு இருந்திருப்பேன்னு நினக்கிறேன். ஏபி நாகராஜன் புராணப்படங்கள் எடுத்து வரிசையா வந்த நேரம். வா ராஜா வா ன்னு ஒரு படம் அதில மாஸ்டர் பிராபாகர்னு ஒரு பையன் நடிச்சிருந்தான். சும்மா துறு துறுன்னு ரொம்ப நல்லா ஆக்ட் பண்ணிருந்தான். அதெ பாத்துட்டுத் தான் நமக்கும் கொஞ்சம் நடிக்கிறதுல ஆர்வம் வந்திச்சு. (என்னோட நடிப்புத் திறமை, அதுல்ல இன்ஞ்சினிரியங் படிக்கிறப்ப கோலோச்சின கதை எல்லாம் இனி வரும் பதிவுகள்ள நீங்க பாக்கலாம்) அதே மாதிரி மாஸ்டர் சேகர் நடிச்ச குடியிருந்த கோயில், ராஜா படம் எல்லாம் நம்ம நடிப்பார்வத்தை மேலும் மேலும் தூண்டி விட்டுச்சு. அந்த நேரத்தில பள்ளிக்கூடத்தில ஏசுநாதர் நாடகம்லாம் போட்டப்ப ஏதோ ஒரு ரோலு கொடுத்தங்க. சத்தமா நல்லா பேசி நடிச்சேன். எங்க நாடக வாத்தியார் அமல்ராஜிம் நல்லா ஊக்கம் கொடுத்து நடிக்க வச்சார். அடுத்தடுத்த வந்த ஆண்டு விழா நாடகங்கள்ள பெரிய ரோல்லெல்லாம் பண்ணி சிவாஜி பாடின "யாருக்காக இது யாருக்காக" பாட்டெல்லாம் உணர்ச்சியோட பாடி கை தட்டல் வாங்கியாச்சு. பரிசும் வாங்கியாச்சு. வேறன்னா, நான் சினிமாவில நடிக்கத் தயார். மெட்ராஸ் கோடம்பாக்கம் புறப்பாட்டாச்சு, எப்படின்னு கேளுங்க.

எங்க கடைக்கு அண்ணாத்தே, அண்ணாத்தேன்ன்னு ஒருத்தர் அடிக்கடி வருவார். கம்பளீ, தார்ப்பாய்ன்னு கமிஷனுக்கு வியாபாரம் பண்றவரு. இவரு எங்க பெரியப்பாவுக்கு நெருங்கின நண்பர். கடைக்கு வந்து காபி டீ எல்லாம் சாப்பிட்டுட்டு போவார். இவருக்கு பூர்வீகம் மெட்ராஸ்க்கு பக்கத்தில தாம்பரம். சும்மானாலும் எனக்கு மெட்ராஸ்ல சினிமால அந்த டைரக்டர தெரியும், இவரை தெரியும்னு அளந்து உட்டுக்கிட்டு இருப்பார். நானும், எங்க ஞாயினாவும் சினிமா பைத்தியங்க. எங்க அம்மா கொஞ்சம் உஷாரான ஆளு, இந்த அண்ணாத்தையை பத்தி தெரியும், அதனால வீட்டு பக்கம் இவரை அண்ட உடமாட்டாங்க. இவரு கடைக்கு அடிக்கடி வந்து போவாரு. நம்ம நடிப்பு சமாச்சாரமல்லாம் இவருக்கும் தெரியும். இப்படி போயிட்டிருந்தப்ப தான், ஒரு கோடை விடுமுறையில, நான் உங்க பையனை மெட்ராஸ் கூட்டிட்டுப் போயி சினிமால சேர்த்துவுடறேன்னு, எங்க அம்மாவுக்கு தெரியாம என்னை தயார் பண்ணி (தயார்ன்னா, புது சட்டை துணி மணி எல்லாம் வாங்கி, நடிக்கப்போறோமே பளிச்சுன்னு போவேன்னா, அதான்) பணமெல்லாம் எங்க ஞாயினா கிட்ட இருந்து வாங்கிகிட்டு ஒரு நாள் ட்ரையின்ல ஏத்தி கூட்டிட்டு போயி தாம்பரத்துக்கு பக்கத்தில இருக்கிற தான் அண்ணன் வீட்ல விட்டுட்டு அவரு கம்பளி யாவாரம் பண்ண போயிட்டாரு.

நம்ம அவரு அண்ண வீட்டில ஒரு அக்கா, என்னவுட ரெண்டு வயசு மூத்த அவங்க தம்பி பாஸ்கர், அப்புறம் தங்கை, அவங்க அம்மா எல்லாம் இருந்தாங்க. நல்லா கவனிச்சிகிட்டாங்க. அப்பப்ப பக்கத்தில இருக்கிற டூரிங் டாக்கிஸ்க்கு கூட்டிக்கிட்டு போவாங்க. அதுவும் நைட் ஷோ, ரெண்டு படம் போடுவாங்க. ரெனடு நாளைக்கு ஒரு முறை கூட்டிட்டு போவாங்க. இப்படியே ஒரு 10 நாளு போச்சு. என்னடா சினிமாவில சேர்த்துவிடறென்னு கூட்டி வந்து இப்படி விட்டுட்டு போயிட்டாரேன்னு வருத்தம் எனக்கு. சரி பையன் சோர்வா இருக்கிறானே, அந்த பாஸ்கரு என்ன எலெக்ட்ரிக் டிரெயின்ல கூட்டிட்டு போயி மொளண்ட் ரோட் (அண்ணா சாலை) சுத்தி காமிச்சுட்டு, அப்ப குளோப் தியோட்டர்னு நினக்கிறேன் (அதான் பின்னாடி அலங்காரானது) அதில ஒளிவிளக்கு சினிமா காமிச்சுட்ட்டு கூட்டி வந்துடுச்சு. அது கொஞ்சம் ருசியான அனுபவம். இப்படி ஒரு வாரம் போச்சிது. அண்ணாத்தெ திரும்பி வந்தாரு. என்னை சினிமால சேர்த்துவுடறேன்னு கூட்டி வந்துட்டு அம்போன்னு விட்டுட்டு போயிட்டீங்களேன்னு அழுதேன். ஆச்சு, அடுத்த நாளு சூட்டிங்க் பாக்க ஸ்டியோவுக்கு கூட்டிட்டுப் போனாரு அண்ணாத்தெ.

முதல்ல பிரவேஷம் விஜய வாகினி ஸ்டியோ, அப்ப சொந்தம்னு ஒரு படம் சூட்டிங், கேஆர் விஜயா, முத்துராமன், சுருளிராஜன் நடிச்சாங்க, ஏசி திருலோகசந்தர் டைரக்டர். பார்க்க திரில்லா இருந்தது. அப்புறம் அதே ஸ்டியோவிலயா, இல்ல ஏவிம்லயான்னு தெரியல, ஜெயலலிதாவோட ஒரு பாட்டு ரெக்கார்டிங். அந்த படம் எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா பாட்டு வந்து "பரமசிவன் கழுத்துலிருந்து பாம்பு கேட்டது, கருடா சொளக்கியமா" ன்னு நினக்கிறேன். ஆஹா ஸ்டியோ பாத்தாச்சு, சூட்டிங், ரெக்கார்டிங் பாத்தாச்சு, வேறென்ன வேணும், இனி ஊரபாக்க கிளம்புன்னு அண்ணாத்தெ நம்மல தனியாளா திருச்சி போற ரயில்ல ஏத்தி அனுப்பிச்சிட்டார். நமக்கும் இந்த டுபாக்கூருக்கிட்ட இருந்த அவ்வளவு தான் வாழ்நாள் வேஷ்டா போயிடும்னு அப்பவே பரி தவிப்பு. ஏன்னா ஸ்கூல்லு திறந்து ஒரு வாரம் ஆகுது நாம இங்க வெட்டியா உட்கார்ந்துக்கிட்டு இருக்கோமேன்னு கவலை. ஆனா வீட்டுக்கு திரும்புனா இருக்கு பெரிய ருத்ர தாண்டவம் எங்க அம்மவோடதுங்கற கவலையும், என்னாடா சினிமா ஆசையில வந்து ஒன்னும் ஆகாம வெரும்பயலா திரும்புறோமேன்னு இன்னொரு ஆதங்கம் சேர்ந்து ரயில்ல திரும்பி வந்த பிராயாணம் இருக்கே, இப்ப நினச்சாலும் நடுங்குது போங்க!

வீட்டுக்கு வந்ததும் தரும அடி விழும்னு நினச்சேன், ஆனா பாருங்க புள்ள நம்மல விட்டுட்டு தனியா போயி ஒழுங்கா திரும்ப வந்து சேர்ந்துச்சேன்னு சந்தோஷத்தில எங்க அம்மா ஒன்னும் சொல்லிக்கல்ல, ஆனா போயிருந்த ஒரு மாசமும், பாவம் எங்க ஞாயினா தான் தினம் எங்க் அம்மா கிட்ட வாங்கி கட்டிகிக்கிட்டு இருந்தார். ஆக நம்ம சினிமா இப்படி வா.. ராஜா.. வா.. ன்னு கூப்ட கதை வேடிக்கையா இல்ல!

12 comments:

said...

அட தப்பிச்சுட்டீங்களா ;-)

ஹீம்... வித்யாசமா, சுவாரஸ்யமான அனுபவமா இருக்கு..

உங்க அந்த இரயில் பயணத்தை நினைச்சா :-)

said...

ஆமாமாம். இப்படி அமெரிக்காவுலே குந்திக்கிட்டுக் குப்பை கொட்டணுமுன்னு விதிச்சிருக்குதே. அப்புறம் எப்படி சினிமா நடிகனா ஆவுறது?

said...

யாத்திரீகன், ஆமா தப்பிச்சாச்சு,
வருகை தந்தமைக்கு நன்றி

துளசி, சரியா சொன்னீங்க, விதி யாரைவுட்டது?

பல்லவி, அதெப்படி, நம்ம கதைக்கு நாமதானே கதாநாயகன்!

said...

சினிமாவில் ஜொலித்திருந்தால், எங்களை மாதிரி ஆளுங்களோட பின்னூட்டம் வாசித்திருக்க முடியுமா?
//குந்திகிட்டு குப்பை கொட்ட// முடியுமான்னு துளசி கேட்டாங்களே, அப்படி என்ன வேலைதான் பார்க்கிறீங்க?!!!

said...

//குந்திகிட்டு குப்பை கொட்ட முடியுமான்னு துளசி கேட்டாங்களே, அப்படி என்ன வேலைதான் பார்க்கிறீங்க?!!! //

தாணு,

துளசிஅக்கா, நாம் எல்லோரும் கணிணியில் தேவைஇல்லாத கோப்புகளை அழித்து ரீசைக்கிள் பின்னில் போடுவதைச் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
:-)

said...

தாணு, பாலராஜன்கீதா, வருகை தந்தமைக்கு நன்றி

said...

பாபா, (அதாவது, பாலக்கரை பாலன்!)

சிவாஜி படங்கள் அப்படி இல்ல, அது இரண்டாம் முறையா கொட்டகைக்கு வந்து போறப்பத்தான் பார்ப்பேன்//
- அட போங்கய்யா, டேஸ்ட் இல்லாத ஆளு. (அப்படித்தான் எம்.ஜி.ஆர். விசிறிகளை அன்னையிலிருந்து நான் சொல்றது!)

அந்த படம் எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா பாட்டு வந்து "பரமசிவன் கழுத்துலிருந்து பாம்பு கேட்டது, கருடா சொளக்கியமா..? //
- சூர்ய காந்தி ...? முத்டு ராமன் & ஜெயலலிதா..?

said...

'முத்து ராமன்'
ஹி..ஹி...ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு!

said...

ஆஹா, வெளிகண்டநாதரின் பூர்வாசிரம பெயர் உதயகுமாரா? எல்லாம் படிச்சிக்கிட்டு இருக்கேன். மொதல் பதிவுலேயே பின்னூட்டம் இடலாம்ன்னு பார்த்தப்ப பெட்டி தெறக்க மறுத்துடுச்சு.

said...

வெளிகண்ட நாதர், உதயகுமார்...இரண்டுமே நல்லா இல்லை....//பாபா, (அதாவது, பாலக்கரை பாலன்!)//இது தான் நல்லா இருக்கு...இல்லீங்களா பாபா?

தருமி ஐயா, உதயகுமார் சொன்னது சின்ன வயசில அப்படின்னு...//இந்த எம்ஜிஆர் படங்களை புதுசா ரிலீஸாயி 100 நாட்கள் வரை ஒடும் பருவத்துக்குள்ள பாத்து முடிச்சிடுவேன் ஆன சிவாஜி படங்கள் அப்படி இல்ல, அது இரண்டாம் முறையா கொட்டகைக்கு வந்து போறப்பத்தான் பார்ப்பேன் பெரும்பாலும். இது என்னுடய பத்து வயசு பருவம் வரை தான். அதுக்கப்பறம் வளர்ந்து பெரியவனானே கதையே வேறே.// பெரியவனான உடனே நம்ம கட்சிக்கு வந்துட்டார்...

said...

தருமி அவர்களே, முதலில் இந்த பாலக்கரை பாலனோட பார்வையை பார்வையிட்டதிற்கு நன்றி.

குமரனுக்கும் என் நன்றி

பரவாயில்லை, இந்த பாபா பேருக் கூட நல்லா தான் இருக்கு. சின்ன வயசுல குமரன் சொன்ன மாதிரி எம்ஜிஆர் படங்கள் ரொம்ப பிடிக்கும். இடைப்பட்ட பருவத்திலே சிவாஜியின் நடிப்பு பரிமாணங்கள் மீது ஈடுபாடு கொண்டு என் நடிப்பு திறமையை கூர்மையாக்க அவர் பக்கம் சாய்ந்ததுண்டு. ஆனா என்னோட விடலை முடிஞ்சு, வாலிபம் ஆரம்பிச்சப்ப ரஜினின்னு ஒரு புயல் வந்தது பாருங்க, எல்லாமே அப்புறம் அதன் திசை தான்.

said...

உஷா, வருகைக்கு நன்றி, பூர்வாசிரம பேரை கஷ்டபட்டு கண்டுபிடிச்சீட்டீங்க!