துளசியை நினைச்சா எப்பொழுதும் மனசு அப்படியே ஆர்பரிக்கும், பாந்தமா சொல்லுற அந்த வார்த்தைகள்ல மனசே தேன்ல கரைஞ்ச மாதிரி ஆயிடும். அதுமட்டுமல்ல எப்ப வந்து ஜாலியா ரெண்டு பேரும் கடை திறக்க போவோமுன்னு மனசு காலையில எழுந்திருச்சதிலிருந்து அல்லாடும். இப்ப யாரப்பத்தி சொல்லிகிட்டிருக்கேனா, எங்க அத்தை மகன் துளசி ராமனை பத்தி தான்.
இந்த துளசி என்னவிட இரண்டு வயசு மூத்தவன். எங்க ஞாயினாவுக்கு கூட பொறந்ததுங்க அஞ்சு அக்கா தங்கச்சிங்க. அதுல மூத்த அக்காவோட மகன் தான் இந்த துளசி. எங்க அம்மாவுக்கு எப்பவும் இந்த அக்கா தங்கச்சிங்களோட ஒரு மோதல், என்னா நாத்தி கத்தி சண்டை தான்.. (அது என்னமோ தெரில, என் வாழ்க்கையில பொறந்த வீட்டிலயும் பாத்திட்டேன், எனக்குன்னு புகுந்த வீட்லயும் பாத்திட்டேன், எப்பவும் மாறாது போல!). அதுல இந்த பெரிய அத்தை கொஞ்சம் பதுவிசா போறவங்க, அதனால இவங்க மட்டும் எங்க வீட்டுக்கு ஜாஸ்தி வ்ந்து போறது பழக்கம். அதனால துளசியும் அவனோட அக்கா ராணியும் நம்மகிட்ட கொஞ்சம் ஒட்டுதல். அதுக்காக எங்க மத்த அத்தைங்க வீட்டுக்கு போமாட்டேன்னு இல்லை, ஆனா அதிகம் போக்குவரத்து கிடையாது. ஒரு தடவை, எங்க ரெண்டாவது அத்தை, நான் சின்ன புள்ளையா இருக்கறப்ப, கெஞ்சி 'குமாரை துளசி வீட்டுக்கு மட்டும் அனுப்பி வைக்கிறீங்க, எங்க வீட்டுக்கும் அனுப்பி வைங்கன்னு சொல்லி', அவங்க வீட்ல ஒரு வாரம் இருந்துட்டு வந்தேன். அப்பதான் அவங்க மகன் ஸ்ரீதரை, சூடு கம்பில சுட்டுட்டு வந்ததில இருந்து, நீ வரவே வேணாம் எங்க வீட்டுக்குன்னுட்டாங்க. பின்னே, சும்மா இல்லாம, பக்கத்தில இருந்த ஸ்டவுல கம்பி குச்சியை காச்சி, அய் சிவப்பா, அழகா இருக்கே, இதை யாருக்குவது இழுத்தா எப்படி இருக்கும்னு டெஸ்ட் பண்ண அங்கன பக்கத்தில உட்கார்ந்த ஸ்ரீதர் மேல இழுத்தா, சும்மாவா உடுவாங்க! (இந்த நெருப்பு சமாச்சாரத்தில நமக்கு அதீத ஆர்வம், சும்மா இருக்க மாட்டேன், எதையாவது கொளுத்தி போட்டு, ஏதாவது சேட்டை பண்ணிகிட்ட இருப்பேன், வேணும்னா, சேட்டையும் வாழுத்தனமும் என் மூலதனம் பதிவை படிச்சு பாருங்க)
துளசிக்கு படிப்பு அவ்வளவா ஏறல. எங்க மாமா வேறே அவன் சின்ன புள்ளையா இருந்தப்பவே இறந்து போயிட்டாரு, அதனால பாவம் எங்க அத்தை தான் கஷ்டபட்டு பசங்க ரெண்டு பேரையும் வளர்த்தாங்க. (துளசிக்கு ஒரு அண்ணன் இருந்துச்சு, கொஞ்சம் வெகுளி, நல்லா வளர்ந்த வாலிபன், பாவம், சூது வாது ஒன்னும் தெரியாது, கிளி ஜோஸ்யம் பாத்து திரிங்சுக்கிட்டு இருந்ததுன்னு எங்க அம்மா சொல்லிருக்காங்க, என்னா ஆனிச்சுன்னு தெரியல அது நான் ரொம்ப சின்னவனா இருக்கிறப்பவே காணம போயிடுச்சு, எங்க தேடியும் இன்னய வரைக்கும் கிடைக்கல எனக்கு தெரிஞ்சு) துளசி பள்ளிகூடம் போகலைன்னு, வேலை வெட்டி கத்துகிட்டுமுனு எங்க கடைக்கு துளசியை அனுப்பி வச்சாங்க எங்க அத்தை. அவனும் நானும் ஒரு வயசு பையங்ககிறதுனால ஒருத்தருக்கொருத்தரு அன்பா பாசமா இருப்போம். அவன் கொஞ்சம் வயசுல பெரியவனங்கிறதுனால எங்கிட்ட கரிசனையா நடந்துக்குவான்.
காலையில கடை திறந்து வைக்க நாங்க ரெண்டு பேரும் தான் கிளம்பி வருவோம். வரவழியிலே வெளிகண்ட நாதர் கோவில்ல பூஜையை முடிச்சிட்டு பொங்கல் கொடுப்பாங்க, அதை வாங்கி திங்கறதுக்காக சீக்கரமே கிளம்பி வ்ந்துடுவோம். அவன் எங்க வீட்டிலருந்து தள்ளி சங்கிலியாண்டபுரம் தாண்டி குட்ஸெட் பக்கத்தில தங்கி இருந்தான். கடையில எல்லா வேலையையும் கத்துகிட்டான். பெரிய பெரிய மாலைங்க கட்டறதுலருந்து, சந்தனம் வாங்கியாரது, பூ ஏலம் கேட்டு கொள்முதல் செஞ்சுட்டு வர வரைக்கும் எல்லாத்தையும் கத்துக்கிட்டான். நான் காலையில அவன் கூட போயி கடை திறக்கிற வரை தான். அப்புறம் ஸ்கூலுக்கு போகனும்னு வந்துடுவேன். சனி ஞாயித்து கிழமைங்கள்ல முழு நேரம் அவன் கூட கடையிலவே இருப்பேன். அவன்கூட சேர்ந்து வேலையும் செய்வேன். அவன் எல்லா வேலைகளையும் கத்துகிட்டதால எங்க ஞாயினா அவனை நம்பி கல்யாணத்துக்கு ஜோடனைகள் செய்யறதை எல்லாம் விட்டுடுவாரு. அவனே கல்யாண மண்டபத்துக்கெல்லாம் போயி மணவறைகள் ஜோடிக்கிறது, அப்புறம் இந்த முதலிரவு கட்டில் ஜோடனை செய்யறதுன்னு போயி செஞ்சுட்டு வந்துடுவான், சமயத்தில நானும் அவன் கூட போயி வேலை செய்வேன்.
அப்பத்தான், ஒரு சேட்டுங்க வீட்டு கல்யாணத்துக்கு பூ அலங்காரம் செய்ய போய்ருந்தோம். அவங்க கல்யாணம் சாய்ந்தரம் நடக்கும். அதுக்கு கல்யாண மேடை அல்ங்காரம் செஞ்சுட்டு, ராத்திரி வரப்போற முதல் ராத்திரிக்கும் பூ அலங்காரம் செய்யனும். அந்த கல்யாணம் ஒட்டல் காஞ்சனால நடந்தது. அங்கேயே ரூம் போட்டு முதலிரவும் அங்கேயே வச்சிருந்தாங்க. காலையில போயி கல்யாண அல்ங்காரம் பண்ணிட்டு, அங்கேயே தங்கிட்டோம், கல்யாணத்தையும் பாத்திட்டு, நல்லா விருந்தும் சாப்பிட்டுட்டு ராத்திரி வரப்போற முதல் இரவுக்கும் அலங்காரம் செய்யப்போனோம். துளசியும் மத்த கடை ஆளுங்களும் மும்மரமா அலங்கார வேலையில இருந்தாங்க. நமக்கு அசதி, கல்யாண சாப்பாடு வேறே அந்த முதலிரவுக்கு அலங்காரம் செஞ்ச ரூம்லேயே தூங்கி போய்ட்டேன். நான் அப்படி ஒரு ஓரமா தூங்கிட்டும், போறப்ப எழுப்பி கூப்ட்டுட்டு போவாமோனு அவங்க வேலையில மும்மரமாயிட்டாங்க. கடைசியிலே கபோதிங்க, அலங்க்காரத்தை முடிச்சிட்டு என்னை அந்த ரூம்லேயே விட்டுட்டு போய்ட்டான்ங்க. நானும் நல்லா தூங்கி, திடீர்னு பாத்தா, மாப்பிள்ளை உள்ள வ்ந்து உட்கார்ந்துகிட்டு பொண்ணுக்குகாக வெயிட் பண்ணிகிட்டு இருந்தார். அய்யயோ, சாமி தப்பிச்சோம் பொழச்சோமுன்னு துண்டை காணோம், துணியை காணோமுன்னு எழுந்திருச்சி ஓடி வ்ந்துட்டேன். இதுவே இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு எந்திரிச்சுருந்தா என்ன ஆகிருக்கும்னு யோசிச்சு பாருங்க, சிவ பூஜையில கரடி பூந்த மாதிரி, இலவச கண்காட்சி பாத்திருந்திருப்பேன், அப்புறம் சரியான தர்ம அடி வாங்கிருப்பேன் போங்க! இது ஒரு தமாஷான சம்பவம், இப்ப நினைச்சாலும் ஒரே ஜாலியா இருக்கு போங்க!
அப்புறம் ஞாயித்து கிழமையில சினிமாவுக்கு ரெண்டு பேரும் ஒன்னா போவோம். அந்த காலத்தில நாங்க நிறைய ஜெயசித்ரா படங்களா பாப்போம், சொல்லத்தான் நினைக்கிறேன், கல்யாணமாம் கல்யாணம், தேன்கிண்ணம் அப்புறம் சிவகுமாரோட நடிச்ச படங்கள் ஏகபட்டது, ஞாபகத்துக்கு ஒன்னும் வரமாட்டங்கிது.சில சமயம், துளசிக்கு நம்ம டேஸ்டு ஒத்து வரதில்லை, அவன் ஏதாவது வேற படம் போகனும்பான், நான் வேற படம் போகுணும்பேன். பிறகு நாங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து கொட்டகைக்கு போய்டுவோம். அப்படி தான் ஒரு கூத்து நடந்ததுன்னு வச்சுக்கங்க. அப்ப மறுபிறவி, அரங்கேற்றம் னு ரெண்டு படம் புதுசா ரிலீஸ் ஆயி இருந்துச்சு. அந்த மறுபிறவி படத்தில முத்துராமன்,மஞ்சுளா நடிச்சிருந்தாங்க. அதுக்கு பெரிசா 'A' எல்லாம் போட்டு போஸ்டர் ஒட்டி இருந்தாங்க. அந்த சின்ன வயசுல A,B ல்லாம் யாருக்கு என்ன எழவு தெரியும். ஆனா துளசிக்கு யாரோ சொல்லிட்டாங்க அது ஒரு மாதிரி படம் வயசுல பெரியவங்க பார்க்க கூடியது, சின்ன பசங்களெல்லாம் பாக்க கூடாதுன்னு. ஆனா அப்ப அவனுக்கு ஒரு 15 வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அவன் எங்கிட்ட வந்து, 'குமார் நீ சின்ன பையன், இந்த படம்லாம் பாக்க கூடாது, அதுனால பக்கத்தில இருக்கிற தியோட்டர்ல ஓடுற அரங்கேற்றம் படம் போயி பாருன்னு' சரி இவனும் இப்படி சொல்றானேன்னு, நான் அரங்கேற்றம் படம் பார்க்க டிக்கெட் எடுத்தாச்சு(அப்ப கொஞ்சம் ஆளு நான் வாட்ட சாட்டமா இருப்பேன்) படமும் பாத்தாச்சு, ஆனா பாத்துக்கங்க அதுவும் கடைசியில 'A' படம். அப்ப என்னமோ அரங்கேற்றம் பட போஸ்டர்ல 'A' எல்லாம் பெரிசா போடல.பாத்தீங்கன்னா, அரங்கேற்றத்தில பிரமீளாவோட காட்சிகள், மஞ்சுளா நடிச்ச மறுபிறவி காட்சியை விட தூக்கலா இருந்துச்சு போங்க! அது தான் அங்க விஷேசம். இப்படி தமாஷா என் துளசியோட கழிஞ்ச நாட்கள் எத்தனையோ!
Wednesday, November 16, 2005
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
:-))))))))))))
துளசி பத்தி பதிவு போட சொன்னீங்கள்ள!
இதுதான் துளசியப் பத்திய பதிவா......ஆனா நல்லாத்தான் இருந்தது.
:) :)
பொய் தானே சொல்றீங்க. இலவசமா பாக்கவேண்டியதெல்லாம் பாத்துட்டுத் தானே அந்த அறையிலிருந்து வந்தீங்க. இங்க நல்ல புள்ளை மாதிரி நடிக்கிறீங்க.
இல்ல குமரன், நம்புங்க, நான் ஒன்னுமே பார்க்கல்ல:-(
பல்லவி, அந்த பேரு அப்படி ஆம்பிளங்கலும் வச்சுக்கலாம், பொம்பளங்கலும் வச்சுக்கலாம் ;-)
Post a Comment