ஒரு நாள் போறதை எடுத்துக்கிட்ட இளங்காலை, காலை, நடுப்பகல், மதியம், சாயுங்காலம், இரவு, நடுநிசி இப்படின்னு கூறு போட்டு பாத்துடலாம். வருஷங்களுக்கு பருவம் இருக்கிற மாதிரி இந்த நாட்களுக்கும் பருவம் இருக்கு. அதில எனக்கு சின்ன வயசில மிகவும் பிடிச்ச பருவம், இந்த இளங்காலை பொழுது. நிறைய இனிக்கும் அனுபவங்கள், அதை தான் உங்களோட பகிர்ந்த்துக்கிறதுக்காக இந்த பதிவு.
முதல்ல சொல்னும்னா நான் காலையில லவுடு ஸ்பீக்கர்ல கேக்கற அந்த சாமி பாட்டுங்க பாடும் அந்த காலை பொழுது தான் ஞாபகம் வருது, அதுவும் மார்கழி மாசமுன்னா, சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு போறவங்களை எழுப்பிவுடறதுக்கு பக்கத்தில இருக்கிற கோவில்ல பாட்டை போட்டிடுவாங்க. ஜேசுதாஸ், எல் ஆர் ஈஸ்வரி பாடின சாமி பாட்டுங்க அமிர்தம். நான் எஸ் எஸ் எல் சி படிக்கும் பொழுது, காலையில சீக்கிரமா 4 மணிக்கெல்லாம் எந்திரிச்சுடுவேன். எங்க வீட்டுக்குள்ள இருக்கிற வெளி முற்றத்தில பல்லு விளக்கிக்கிட்டே அத கொஞ்ச நேரம் கேட்டுட்டுத்தான் படிக்கவே ஆரம்பிக்கிறது. காலையில எந்திரிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான், ஆனாலும், எந்திரிச்சு கேட்கிறப்ப அந்த சாமி பாட்டுங்கள்ள இருக்கிற அமுதான இசை ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும் பாருங்க அதுல ஒரு உத்வேகம் வந்து படிப்பு பொங்கிடும். இது ஒரு ஆனந்த பொன்காலைப் பொழுது
அப்புறம் ரொம்ப சின்னவனா இருந்தப்ப, பெரும்பாலும் நான் எங்க பெரியப்ப வீட்ல தான் காலம் கழிப்பேன். அதுவும் நிறைய நாட்கள் அங்கேயே ராத்திரி தங்கி தூங்கியும் போயிடறதுண்டு. என்ன எங்க வீடும் எங்க பெரியம்மா வீடும் அடுத்த அடுத்த சந்துதான். எங்க தாத்தவுக்கு ஒம்போது பொட்டை புள்ளங்க, அதல எங்க அம்மாவும், அவுங்க ரெண்டாவது அக்காவும் ரொம்ப ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா கண்ணாலம் கட்டணதுலருந்து பக்கத்து பக்கத்துல இருந்துக்கிட்டாங்க. நான் எங்க வீட்டுக்கு ஒரே பிள்ளை அப்போ இருந்தாலும் பெரியம்மா வீட்ல தான் ஜாகை. ராத்திரில மொட்டை மாடில எங்க பெரிம்மா வீட்ல் அண்ணன், அக்காங்களோட படுத்து தூங்குவோம். நிழல்கள்ல வர்ற ராஜசேகர் மாதிரி ராத்திரி மொட்டை மாடில படுத்துகிட்டு நட்சத்திரம் எண்ணுறதுல நிறைய இரவுகள் கழிஞ்சிருக்கு. அது மாதிரி விடிஞ்சும் விடியாம இருக்கிற அந்த இளங்காலை பொழுதிலே போர்வையை இழுத்து போத்திட்டு படுக்கிறதுல இருக்கிற சுகம் வேற எதுலையும் இல்ல போங்க. அதுவும் பக்கத்தில ஒரு பெரிய அரச மரம். அதுல வர அந்த இளங்காலை காத்து இருக்கு பாருங்க, சொர்க்கம். சமயத்தில ஒங்காரம சத்தம் போட்டுகிட்டு கொய்ங் கொய்ங்ன்னு அடிக்கிற அந்த ஆடி மாசக் காத்து, இப்ப ஏசி ரூம்ல படுத்து தூங்கினாலும் அந்த சுகம் நிச்சயம் இல்லை. காலங்காத்தால எங்க பெரியப்பா, என்னை எழுப்பி விட்டு பக்கத்தில இருக்கிற பவானி ஹோட்டல்ல காபி வாங்கிட்டு வர சொல்லு வாரு. நான் தான் இருக்கிறதுலேயே எல்லாரையும் விட சின்னவன் அதனால கரிசனமா எங்கிட்ட காசை கொடுத்து காப்பி வாங்கி வர சொல்லு வாரு. அதுக்குன்னு கிளி மூக்கு வச்ச கூஜா இருக்கும், அதை எடுத்துகிட்டு அந்த பவானி ஹோட்டல் போயி காபி வாங்க போவேன். கல்லால காசை கொடுத்துட்டு டோக்கன் வாங்கிட்டு, உள்ளே அந்த பக்கம் ஒரு மாடக்குழி மாதிரி இருக்கிற இடத்தில காப்பி போடறவருக்கிட்ட டோக்கன் கொடுத்து காப்பி வாங்கிட்டு வருவேன். ஆஹா என்ன ஒரு வாசனை, ஐயர் ஓட்டல் காபி, பில்டர் காபி என்ன ஒரு அரோமா! அதே அங்கேயே கிளி மூக்கு வாயிலருந்து நம்ம வாயில கொஞ்சம் ஊத்திக்குவேன். பெரும்பாலும் சாமர்த்தியமா சூடு தெரியாமா வாயில ஊத்திக்குவேன். சமயத்தில நாக்கு பொத்து போறதும் உண்டு. அப்புறம் பவ்வியமா காபியை கொண்டு எங்க பெரியப்பாவுக்கு கொடுப்பேன். அவரும் குடிச்சுட்டு, பாவம் சின்ன புள்ளயாச்சேன்னு எனக்கும் கொஞ்சம் ஊத்திக் கொடுப்பார். இப்படி போன காலை பொழுதுகள் ரொம்ப.
பிறகு இந்த என் சி சி க்காக எழுந்து போற காலைகள் ரொம்ப பிடிக்கும். காலையில எழுந்திருச்சி பள பளன்னு பெல்ட் பக்கள்ஸ் அப்புறம் ஷு எல்லாம் பாலீஸ் போட்டுகிட்டு, யூனிஃபார்ம் எல்லாம் கஞ்சி போட்டு இஸ்திரி போட்டு அழகா போட்டுட்டு போற ஜோறு இருக்கே இந்த சேரன்லாம் எந்த மூலை நம்ம கிட்ட. ஆனா என்ன ஒன்னு, சேரனுக்கு கிடச்ச கோபிகா சேச்சி மாதிரி ஆளு ஒன்னும் தேரலை. அதுவும் அந்த காலை பொழுதுல அவசரமா அவசரமா கிளம்பி போறதை பாக்கணுமே, இல்லேனா, லேட்டா போயி யாரு பத்து ரவுண்டு அடிக்கிறது. எங்க அம்மா தான் ஆத்து ஆத்து போவாங்க, பாவம் புள்ள ஒன்னும் காபி தண்ணி குடிக்காமா இப்படி அரக்க பறக்க ஓடுதேன்னு. ஐயாவுக்கு தான் என் சி சி ல கொடுக்கிற பிரேக்பாஸ்ட் இருக்கே. சமயத்தில நல்லா இட்லி, வடை, ஜிலேபின்னு விருந்தே இருக்கும். அத்தனை காலயிலேயும் அவசரமா சைக்கிளை மிதிச்சுகிட்டு போறதும் அந்த சில்லுங்கிற் காத்தும் அது ஒரு ஆனந்தம். சைக்கிள்ல போறப்ப கோலம் போடுறதுங்களை ஜொல்லு விட்டுக்கிட்டே அந்த என் சி சி போற காலை ரொம்ப பிடிச்சமானது. அதுவும் அந்த ஐயர் அக்ரஹாரம் தாண்டறப்ப மனசு நம்ம கிட்ட இருந்ததுல்லை.
இன்னெரு முக்கியமான காலையை சொல்ல மறந்தாச்சு. அதாங்க ரெண்டுகிட்டான் வயசுல ஜொல்லு வுட்டுகிட்டு திரிஞ்சது. அது ஒரு மாதிரி விடலை பருவம். எங்க வீட்ல இன்னொரு முக்கியமான பிடிக்காத விஷயம், இந்த காலையில தண்ணி எடுத்து ஊத்துறது தான். அப்ப எங்க வீட்ல ஒரு பெரிய தண்ணி தொட்டி இருந்தது. ஒரு 50 குடம் தண்ணி பிடிக்கும். காலயில தெருவுக்கு வெளியில இருக்கிற குழாயில தண்ணிபிடிச்சு ஊத்துறது நம்ம வேலைங்க. கஷ்டமான வேலை. அதுவும் வீட்ல எல்லாரும் தூங்கிறப்ப நம்ம காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எந்திருச்சி தண்ணி ஊத்தணும். முதல்ல கடுப்பாதான் எடுத்து ஊத்திக்கிட்டு இருந்தேன். அப்பதான் பக்கத்துட்டு வீட்ல இருந்த கமலிங்கற பொண்ணு நம்மோலட சேர்ந்து தண்ணி எடுத்து ஊத்தும். கொஞ்ச நேரம் அவுங்க அம்மாவும் அதுவும் சேர்ந்து ஊத்துவாங்க. அப்புறம் அதை மட்டும் தனியா விட்டுட்டு எடுத்த ஊத்த சொல்லூவாங்க. நானும் தனியாதான் தண்ணி எடுத்து ஊத்துவேன். அப்ப பெரும்பாலும் அந்த விடியங்காத்தால நாங்க ரெண்டு பேரும் தான் தண்ணி எடுப்போம். அப்பதான் நம்ம முதல் முதல்ல கடலை போட ஆரம்பிச்சது. காதல் கத்திரிக்காய்ன்னு ஒரு மண்ணும் அறியாத வயசு. சும்மா ஒரு கவர்ச்சி அந்த பொண்ணோட பேசறது. அதுக்காக அந்த காலப்பொழுதுல எழுந்திறக்கிறது ஒரு திரில். ஏன்னா குழாயடிக்கு போலாமே, அந்த பொண்ணோட டாவு வுடலாமேன்னு. என்ன பேசுவோம், ஏது போசுவோன்னும் ஒன்னும் தெரியாது. ஆனா மணிகணக்கா பேசிக்கிட்டே அது ஒரு குடம் நான் ஒரு குடம்னு தண்ணி பிடிச்சுகிட்டே கடலை போடுவோம். ஆனா இந்த பொண்ணுங்கெல்லாம் கொஞ்சம் விவரமானதுங்க. என்னாதான் அதுங்களுக்கு கவர்ச்சியோட பசங்களோட பேசி காலம் கடத்துனாலும், கடைசில அம்மா அப்பா சொல்ற ஆளுங்களை ஒழுங்கா கண்ணாலம் கட்டிக்கிட்டு காணாம போயிடுவாங்க. அது மாதிரி தான் நம்ம கமலியும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிகிட்டு காணாம போயிடுச்சு. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு தான் நமக்கே தெரிய வந்தது. அப்ப நம்மலும் சும்மா அந்த பொண்ணோட பேசறது ஒரு திரில்லுங்கறதோட நிறுத்திக்கிட்டோம். அடுத்த படி எடுத்து வைக்கில்லை. இப்படி சுகமா கழிஞ்ச காலை பொழுதுகளும் நிறைய உண்டு.
இப்படி நிறைய காலை பொழுதுகள் உண்டு. காலயில பூக்கள் கொள்முதல் செய்ய ஸ்ரீரங்கம் போகின்ற காலை பொழுதுகள், சைக்கிள்ல போகும் போது கொஞ்ச நேரம் அம்மா மண்டபத்தில உட்கார்ந்து போற காலைகள், ஒவ்வொரு சுதந்திர தினத்திலயும் காலங்காத்தால எழுந்து பெரிய பரேட் கிரவுண்டுக்கு ஒரு நாலு மைலு நடந்து போயி கொடியேத்தி இனிப்பு சாப்பிட்ட காலைகள், சமயபுரம், வயலூர் கோவிலுக்கு புறபட்டு போகும் அந்த இனிய காலை பொழுதுகள், நல்ல வயசு பருவத்தில தேகப்பயீற்சிக்காக செங்குளம் காலனிக்கு பேரலல் பார் போகும் காலை பொழுதுகள், இப்படின்னு எவ்வளவோ காலை பொழுது அத்தனையும் ஒரு பொன்காலை பொழுது தான் இப்ப நினைச்சு பாக்கும் போது!
Monday, November 14, 2005
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
பல்லவி, காக்கா கதையெல்லாம் நம்மகிட்ட கிடையாதுங்க. கூட என்ன ஐஸ்வர்யாராய் இருக்க வால் நட்சரத்த பாத்து வரம் கேட்க!
வாஸ்தவமான உண்மை, என் சி சி ல சேர்ந்ததுக்கு காரணம் தீனிபண்டத்துக்கு!
பரவாயில்ல ஆனந்த பவன் ரேஞ்சுக்கு நம்ம பதிவு திருப்தின்னா ரொம்ப சந்தோஷம், நன்றி!
பாலக்கரையா?., அந்த நெரிசல்லயும் இத்தனைய அனுபவிச்சு இருக்கிங்க?., நம்ம சென்டர் தில்லை நகர் பக்கம். வீடு த கிரேட் கே.கே.நகர் பக்கம்.
அதிகாலையில் எழுந்து படிக்கிற சாக்கில் உட்கார்ந்து கொண்டு எதிர் வீட்டுப் பெண் போடும் கோலத்தினை(!) ரசித்த அனுபவம் எனக்கும் உண்டு. அந்த நேரத்தில் ஹிட்டாக கோலத்திற்கு தக்கதாக இருக்கும் பாடலை டேப் ரெக்கார்டரில் திறந்து வால்யூம் கொஞ்சம் அதிகம் சேர்த்து வைத்து விட்டு நல்ல பிள்ளைபோல் அமர்ந்திருப்பேன்.
பழைய நினைவுகள் என்றால் பாலக்கரையாக இருந்தாலும் குளக்கரையாக இருந்தாலும் என்றைக்குமே இனிமையான நினைவுகள்தாங்க.
அப்படிபோடு, நம்ம பக்கம் வந்ததுக்கு ரொம்ப நன்றி. பாலக்கரை நெரிசல் தான் ஆன அங்க அடிக்காத கூத்தே இல்லங்கலாம். தொடர்ந்து வாங்க, உய்யங்கொண்டான் ஆத்து பால கதை நிறைய வச்சிருக்கேன்!
மூர்த்தி, சரியா சொன்னீங்க போங்க! இந்த பாட்டு போட்டு வால்யூம்லா ஏத்தி டாவு வுட்ட கதை நிறைய இருக்கு, அடுத்த பதிவுகள் தான் பார்க்க போறீங்களே!
பாபா...தலைப்பைப் பார்த்தவுடன் கவிப்பேரரசு(???)வுக்கு எதிரா நீங்களும் கவிதைதான் எழுதியிருக்கீங்களோன்னு நினைச்சுகிட்டு வந்து பார்த்தா ஏமாத்திட்டீங்க...அதனால என்ன? பதிவுல மலரும் நினைவுகள் நல்லா சொல்லத் தெரிஞ்சிருக்கு. ரசித்துப் படித்தேன். இனி தொடர்ந்து வந்து படிக்கவேண்டியதுதான்.
குமரன், கவிபேரரசுக்கு எதிராவா, அவரு எங்க, நான் எங்க? என் காலைப் பொழுதை ரசித்ததற்கு ரொம்ப நன்றி!
மிக அருமைங்க.. உண்மையாகவே சேரன் தோற்றுப்போய்விடுவார், மக்களை பின்னோக்கி கொண்டு செல்லும் கலையில்.
விவேகநாதன் கா.
அன்பு விவேக், என் இனிய காலைப் பொழுதை ரசித்ததிற்கு மிக்க நன்றி! கடந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது நம் எல்லோருக்குள்ளும் நிறைய சேரன்கள் இருக்கிறார்கள்!
Post a Comment