Saturday, July 08, 2006

ஜஸ்பர் காடுகளில் கோடை விடுமுறை இம்முறை!

என்னடா ரொம்ப நாள் ஆளை காணோம்னு தேடிக்கிட்டு இருந்திருப்பீங்க! போன வாரம் ஒரே வேலைப்பளு! அதற்கப்பறம் விடுமுறைன்னு சொல்லி நடுவில கண்டம் சுத்திப் பார்க்க கிளம்பியாச்சு! அதான் வட அமெரிக்காவை தான் சொல்றேன்! நான் சின்னப்பிள்ளையா இருந்தப்பவே இந்த சரித்திர, பூகோளம் பாடம் படிக்கிறப்ப எனக்கு ரொம்ப புடிச்ச கண்டங்களோட மேப்புகள்ல இந்த அமெரிக்கா கண்டம் என்னை அதிகமா ஈர்த்ததுண்டு. அதுவும் அந்த வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்கள் ஒன்னுக்கொன்னு ஒட்டிக்கிட்டு அழகா இருக்கும் பார்க்க. அதிலே இருக்கிற அத்தனை இடங்களும் எனக்கு அத்துப்படி, அழகா, நாடுகளையும், பெரிய ஊர்களையும் குறிச்சிடுவேன் சரியா! எப்பவும், இந்த பூளோக பரிட்சையிலே கடைசியா மேப்பு கொடுத்து இடத்தை, நாடுகளை குறிக்க சொல்றப்ப, அதை சரியா குறிச்சு, அப்படியே பத்து மார்க்கும் வாங்கினவன். அதுவும் அந்த காலத்திலே, எஸ் எஸ் எல் சியிலே இந்த சரித்திர, பூகோளப் பாடத்திலே 98 மார்க்கு வாங்கினவன். இப்ப அந்த கண்டத்திலே இருந்துக்கிட்டு எல்லா இடங்களையும் சுத்திக்கிட்டு இருக்கேன், கேட்கவா வேணும், எல்லாத்தையும் விளாவாரியா போய் பார்த்துட்டு வந்தாச்சு!

வட அமெரிக்காவில கிழக்குப்பகுதிகள் எப்படி புரட்சிகரமா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்குதோ அதே மாதிரி மேற்கு பகுதிகள் இந்த கற்பாறைகள் நிறந்த மலைத்தொடர்கள் ரொம்ப பிரசித்துப் பெற்றது! நம்ம இந்தியாவிலே எப்படி மலைத்தொடர்கள் ரொம்ப முக்கியமான ஒன்னோ அது மாதிரி இங்கேயும்! நம்மல்ல நிறைய பேரு அந்த மாதிரி குன்றுகள், மலைத்தொடர்கள் நிறைந்த பகுதியிலே இருந்து வந்திருப்போம். அதுவும் இந்தியாவின் தெற்கு மாகாணங்கள்ல இருக்கிற கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் எவ்வளவு பேமஸோ, அதே மாதிரி மத்தியிலே இருக்கிற விந்திய சாத்பூரா மலைத்தொடர்கள், அப்புறம் வடக்கிலே இருக்கிற இமயமலைத் தொடர்கள் போல, இந்த அமெரிக்க கண்டத்திலே இந்த ராக்கி மவுண்டன் ரேஞ்சஸ்ன்னு, வட அமெரிக்காவின் தெக்காலெ இருக்கிற 'சாண்டியகோ' அதுக்கு கீழே இருக்கிற மெக்ஸிகோவிலருந்து ஆரம்பிக்கிற இந்த கருங்கல் மலைத்தொடர் வடக்கே அலாஸ்கா வரை வியாபித்துருக்கக் கூடிய ஒரு மலைத்தொடர்! அதுள்ள முக்கியமா இந்த கனடியன் ராக்கீஸ்னு சொல்லக்கூடிய மலைத்தொடர்கள் நீங்க எல்லாரும் பார்க்க வேண்டிய ஒரு இடம். இந்த ஊர்பக்கம் எங்கயாவது, அதாவது அமெரிக்காவிலேயோ, இல்ல கனடாவிலேயோ எங்க இருந்தாலும், ஒர் எட்டு இந்த பக்கம் வந்து பார்த்துட்டு போங்க! முக்கியமா கனடால இருக்கிற ஆல்பர்ட்டா என்கிற மாகாணத்திலே இருக்கிற இந்த மலைத்தொடர்கள் பார்க்க வேண்டிய ஒன்னு!

அதாவது கனடாவில் இருக்கும் இந்த மேற்கு பகுதி மாகாணங்கள்லான ஆல்பர்ட்டா, பிரிட்டீஸ் கொலம்பியா எல்லைகள்ல ஒட்டி இருக்குக் கூடிய மலைத்தொடர்கள், கனடியன் ராக்கீஸ்ன்னு ரொம்ப பிரசித்து பெற்றது. அதாவது இந்த மலைத்தொடர்கள் வடக்கில் ஆர்டிக் பகுதியின் அருகில் இருப்பதால, வருஷத்திலே ஒன்பது மாசமும் பனிமழை தான். அதனாலே இப்படி பனி விழுந்து ஆயரக்கணக்கான வருஷமா உறைஞ்சு போன பனி மலைகள் அப்படியே அழுத்ததாலே இருந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்து அப்படியே முழுசுமா மலைத்தொடர், பள்ளத்தாக்குகள் எல்லாம் வியாபித்து இருக்கும். இப்படி நகரும் பனிபடலங்களுக்கு 'கிளேசியர்ஸ்னு' ('glaceiers') ஆங்கிலத்திலே பேரு! இந்த நகரும் பனிப்பாறைகள் பத்தி நான் ஏற்கனவே பதிவுப் போட்டுருக்கேன், முடிஞ்சா அந்த பதிவு, 'ஆர்டிக் துருவ மிதக்கும் பனி பாறைகள் - A Titanic Journey!!' போய் படிச்சுப் பாருங்க! அது கடல்ல மிதக்கும் 'iceberg', பனிப்பாறைகள் பத்தி! ஆனா நான் சொல்றது மலைகள்ல இருந்து நகர்ந்து வரும் இந்த பனிபாறைகள்! அது நிறைய இந்த பகுதிகள்ல பார்க்கலாம்!

நீங்க முதல்ல வர்ற வேண்டிய இடம் 'கால்கரி'. அப்படி வரணும் நினைக்கிறவங்க எனக்கோ இல்ல கால்கரி சிவாவையோ தொடர்பு கொள்ளுங்க! வேணும்னா ஒரு பதிவர் மாநாடும் போட்டுட்டு அப்புறம் ஜாலியா நீங்க இந்த கனடியன் ராக்கீஸ்ங்கீற மலைக்காடுகள்ல சுத்தி பார்க்க போகலாம்! இந்த கால்கரிங்கிறது நம்ம நாட்ல இருக்கிற காஷ்மீர் பள்ளத்தாக்குப் போல! சுத்தி நீங்க பனி படர்ந்த மலைகள்ல பார்க்கலாம்! 'வெள்ளி பனி மலை மீதுலாவுவோம்'னு பாரதியார் பாட்டு பாடிக்கிட்டு அழகா நீங்க போய் வரலாம்! இங்கிருந்து ஆரம்பிச்சா பக்கத்திலே பேன்ஃப் ('Banff') அப்படின்னு ஒரு இடம்! இதை சுத்தி இருக்கக் கூடிய காடுகளை பேன்ஃப் நேஷனல் பார்க்குன்னு சொல்வாங்க! அது போலே கொஞ்சம் வடக்கால போனீங்கன்ன ஜஸ்பர்னு ஒரு இடம்! அதை சுத்தி இருக்கக்கூடிய காடுகள் தான் ஜஸ்பர் நேஷனல் பார்க்! இதை சுத்தி அழகான கற்பாறைகளால் சூழப்பட்ட அழகிய மலைகள், அதன் மீது படர்ந்து இருக்கும் பனி படலங்கள், பிறகு அழகிய பள்ளத்தாக்குகள், அதறகு அருகிலே விரைந்து ஓடி வரும் நதிகள், நீர் நிலைகள், ஏரிகள், ஊசியிலைக்காடுகள், பிறகு மலைசரிவுகள், அதற்க்கிடையில் ஓடி வரும் நீர்வீழ்ச்சிகள் அப்படின்னு கண்ணையும் மனசையும் பரிக்கக்கூடிய அழகிய இயற்கை வனங்கள்! வந்தா உங்களையே மறந்து போய்டுவீங்க!

பனிநிலம்னு ஒரு பகுதி ஜஸ்பர் போகும் வழியில் உள்ளது. இதற்கென பிரத்தியோகமான பெரிய வண்டிகள்ல நீங்க போய் அந்த 'ice Field', அதாங்க அந்த பனிநிலத்தை பார்க்கலாம்! இந்த பனிநிலம் பல வருடங்களா குளிர்காலத்திலே விழும் பனி மழையின் காராணமா, இந்த பனி சறுகுகள் அப்படியே நாள்பட நாள்பட கெட்டியாகி அப்படியே ஒரு பெரிய படர் போல இருக்கும், அப்பறம் அதுவே இறுகி போயி அப்படியே பனிபடிகங்கள் போலாகிவிடும்! இந்த கற்பாறைகளில் இருக்கும் இந்த பனிபடர்கள்,நீங்க போட்டவிலே பார்க்கிறது பல நூறு வருஷங்களுக்கு முன்னே, ஏன் பல ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னே விழுந்த பனி மழை துகள்கள், அப்படியே கெட்டியாகி கொட்டிக்கிடக்கது! அப்படி படிகம் படிகமா ஒன்னுக்கு மேலே ஒன்னா இருப்பதால, அடியில் இருக்கும் படிகங்கள் அழுத்தத்தின் காரணமா கொஞ்சம் கொஞ்சமா இருக்கும் இடத்தை விட்டு நழுவி கீழே ஆத்து தண்ணி ஒடுவது போல மலைச்சரிவுகளில் கீழே நோக்கி நகர்கின்றன! அப்படி நகரும் பனிகளின் மூலமா அப்படியே நிலத்திலே படர்ந்து ஒரு பனிநிலமாகி போகுது. இந்த மலைக்கு மேலே இருக்கும் பனிபடர்நிலங்களுக்கு பேரு கொலம்பியா ஐஸ்ஃபீல்ட்('Columbia IceField'), அப்படியே மலைச்சரிவுகளில் படர்ந்திருக்கும் பனிநகர்வுகளுக்கு பேரு ஆத்தெபெஸ்கா கிளேசியர்('athabasca galcier')அப்பறம் அதிலிருந்து கீழே உருகி படர்ந்து வந்த ஐஸ் கால்விரல்களுக்கு பேரு 'Toe', அங்கிருந்து உருகி நீரா ஒடி கடைசியிலே அது ஏரியை வந்தடையுது! இப்படி வியாபித்து இருக்கும் ஐஸ்ங்க உருகுவதும், பிறகு குளிர்காலத்திலே பனியாவதும் தொன்று தொட்டு நடப்பது! ஆனா இப்ப உலக உஷ்ணமாவாதாலே இந்த பெரிய பனி கிளேசியர் எல்லாம் இருந்த இடம் தெரியாமா பின்னோக்கி(Retreat) ஒடி விட்டன! ஆக இது தான் இந்த கிளேசியர்னு சொல்லக்கூடிய பனிபடர், நகர்வுகளின் கதை! போய் பார்த்தீங்கன்னா , அப்படியே ஜில்லுன்னு இருக்கும்!

அப்புறம் நம்ம ஊருங்க மாதிரி மலைச்சரிவுகள், நீர்வீழ்ச்சிகள், பாயந்து வரும் நதிகள், பூந்தோட்டங்கள், ஊசியிலைக்காடுகள் எல்லாம் நீங்க பார்க்கலாம். நீங்க இந்தியாவிலே வடக்கே ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு, காஷ்மீர், வடமேற்கு உத்திரபிரதேச மலைக்காடுகள்னு எல்லா இடங்களுக்கும் வடக்கே ரஜினிகாந்து போறமாதிரி, இந்த இமயமலை அடிவாரம் போய் வந்திருந்தீங்கன்னா இதெல்லாம் உங்களுக்கு பரிட்சியமான ஒன்னா இருக்கும். என்னா ஐஸ் அதிகம் பார்க்கனும்னா, அங்கெல்லாம் கொஞ்சம் உச்சிக்கு போகணும், இங்க அப்படி இல்ல, கீழே நிலங்களிலேயே பார்க்கலாம்! இன்னென்னு பார்க்க கிடைக்காதது இங்கே என்னான்னா, மலைச்சரிவுகள், நதி ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் அருகே சிறு மலை இடுக்குகள் நடுவே தபம் பண்ணிக்கிட்டு இருக்கக்கூடிய சடா முனிவர்களும், தடுக்கி விழுந்தா கிடைக்ககூடிய சின்ன சின்ன கோவில்கள், காளிமாதா, தேவின்னு மலைக்கோவில்கள் இங்க இல்லே! நம்ம ஆளுங்க அந்த காலத்திலே வந்திருந்தா இந்த மாதிரி ஏதாவது கோயில் கொடின்னு மலை இடுக்குகளில் இல்லே உச்சிகளில் கட்டி பிரசாதம் கொடுத்திக்கிட்டிருப்பாங்க! அது கொஞ்சம் இங்க விட்டுப்போச்சு! மற்றபடி எல்லாம் நம்ம இமயமலை அடிவாரத்தில் கிடைக்கக்கூடிய காட்சிகளே! அதிகம் தூரம் போகலேன்னா ஊட்டி, கொடைக்கானல் மாதிரி தான்! ஆனா எல்லாத்தைவிட கற்பாறகளான மலைகள் அதன் சரிவுகளில் படர்ந்த பனி படலங்கள் பார்க்க இரண்டு கண்ணு போதாது இங்கே!

6 comments:

said...

சார்,

அருமையான பதிவு.

நம்ம சிகாகோவில் இருந்து இந்த மலை தொடர் எதாவது பக்கத்தில் இருந்தா சொல்லுங்க.. முடிந்தால் பார்த்துவிடுவோம்.

அப்படியே நீங்க எடுத்த போட்டோகள் அதாவது பகிர்ந்து கொள்ளக்கூடிய போட்டோக்கள் எதாவது இருந்தா அதை ஒரு Yahoo IDயில் கொடுத்திட்டிங்கனா எல்லாரும் பார்த்திக்குவோம்.

விடியோ இருந்தாலும் போடுங்க பார்ப்போம்.

மிக்க நன்றி.

said...

உதயகுமார்.
அருமையான பதிவு. அங்கத்து க்ளேஸியர்கள் போரடிச்சா இங்கேயும் வந்து ( இன்னொருக்கா) பாருங்க:-)))

said...

வாங்க சிவபாலன், சிகாகோவிலே இருந்து பக்கம் தானே கால்கரி, ஒரு நடை வந்துட்டு போகங்களேன்!
எல்லா போட்டோக்களையும் இன்னமும் கேமிராவிலேருந்து இறக்கல்லை, பதிவுக்காக ஒன்னு ரெண்டு எடுத்தேன். கண்டிப்பா போடுறேன்!

said...

இன்னொரு தடவை வரணும் துளசி! பார்த்துட்டு போன உங்க ஃபிரான்ஸ் ஜோசப் கிளேசியரை விட இது பெரிசு, ஒரு எட்டு வாங்களேன்!

said...

நாதர், இந்த மலைப் பகுதிகள் என்றைக்குமே அலுப்பு தந்ததில்லை. தெற்கே அமெரிக்க எல்லையில் இருக்கும் வாட்டர்டன் பார்க் மிக அருமை. நம் சபரிமலை, ஊட்டி போல இருக்கும். ஆனால் இந்த மக்கள் சுற்றுமுற சூழ்நிலையை என்ன அக்கறையோடு பாதுகாக்கிறார். அந்த அத்து வான காட்டிற்குள் ஆங்காங்கே கழிவறைகள், பார்-பே-க்யூ பிட்டுகள் என வசதிகள் செய்து சுற்று சூழல் கெடாமல் இருக்க வழிசெய்கிறார்கள்

வலைப்பதிவாளார்களே கால்கரிக்கு வாருங்கள் இயற்கையை நேசிங்கள். தென்னிந்திய உணவிற்கு நாங்கள் இருக்கிறோம்

said...

வெளிகண்ட நாதர்,
அருமையன தகவல்கள். நீங்கள் குறிப்பிடும் இடங்களுக்கு நான் இதுவரை செல்லவில்லை. தங்களின் பதிவைப் பார்த்ததும் போக வேண்டும் போலுள்ளது. மீண்டும் தகவலுக்கு நன்றிகள்.