Friday, April 21, 2006

ஆர்டிக் துருவ மிதக்கும் பனி பாறைகள் - A Titanic Journey!!

'டைட்டானிக்' இங்கிலீஷ் படம் எல்லாரும் பார்த்திருப்பீங்க! நம்ம ஊரு காதலை போல ஒரு அருமையான காதல் கதையோட பின்னோட்டத்தில 1912ம் வருஷம் இங்கிலாந்திலந்திலருந்து அமெரிக்கா வந்த கப்பல் பனி பாறையில மோதி, கப்பல் மூணா உடைஞ்சு, அந்த ஆழ்கடலில் மூழ்கிபோனதை அழகா படம்புடிச்சு வந்த ஒரு ஹாலிவுட் படம்! ஞாபகமிருக்கா! அந்த படத்தோட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை காப்பி அடிச்சு நம்ம ஷங்கர் இந்தியன் படத்தில அந்த அண்ணா சாலை டிராபிக் ஜாம் எடுத்திருந்தாருல்ல. டைட்டானிக் படத்தில எந்த காட்சின்னு தானே கேட்கிறீங்க! அதான் முதன் முதல்ல பயணிகள் எல்லாம் கப்பல்ல ஏறும் காட்சிகள், அந்த கிராஃபிக்ஸ் கலக்கலோட எடுத்தது தான். அதுக்குன்னு உபயோகிச்ச கம்பூட்டர் தொழில்நுட்பத்தை நம்ம கணனி தொழில்நுட்ப வல்லுநர்கள்கிட்ட கேட்டீங்கன்னா அப்படியே உருகி அந்த 'VAX' கம்ப்யூட்டரை பத்தி நிறைய சொல்வாங்க! நான் கேட்டுறுக்கேன். இப்ப அந்த கதை எதுக்கு, இந்த மிதக்கும் பனிப்பாறைகள்(Iceberg)பத்தியும், அது எங்க, எப்படி கடல் பயணத்துக்கு பயங்கரத்தை விளைவிக்கும்ங்கிறதை பத்தி கொஞ்சம் பார்ப்போமா!

மொத்தமா உலகம்னு எடுத்துக்கிட்டிங்கன்னா, எத்தனை கண்டம் இருக்கு தெரியுமா, எல்லாரும் தப்பா அஞ்சு தான் இருக்கும்பாங்க, அது ஆசியா, ஆஸ்திரேலையா, ஐரோப்பியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு. ஆனா நம்ம கதை கேட்ட மாதிரி, ஏழு கண்டம் ஏழுகடல்னு மொத்தம் ஏழு இருக்கு! வட துருவத்தில இருக்கிற ஆர்டிக் கண்டமும், தென் துருவத்திலே இருக்கிற அண்டார்ட்டிக்கா கண்டமும் தான் அந்த மிச்சம் இரண்டு! அதில ஆர்டிக் கண்டம் நீராலும் அண்டார்ட்டிக்கா கண்டம் நிலத்தாலும் உருவாக்கப்பட்டது தெரியுமா! மனுசன் உலகம் பூரா போயி குடியேறி, வாழ்ந்தது, வாழ்ந்துகிட்டு இருக்கிறது இந்த அஞ்சு கண்டத்திலே, ஆனா அந்த துருவக் கண்டங்கள் மனிதன் போய் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளது. ஏன்னா அந்த ரெண்டுமே கடுங்குளிர் பிரதேசம். எப்பவும் தட்பவெப்பநிலை -50oC மேலே! ஆனா அதிலேயும் மனுசன் போய் போடற ஆட்டம் இப்ப இருக்கே அது தனி! ஏன்னு கேளுங்க!

ஆர்டிக் துருவம் மொத்தமுமே கனடா நாட்ல இருக்குது. ஆனா இந்த அண்டார்ட்ட்டிக்கா இருக்கே அதுல தனி நாடுகள்னு எதுவும் இல்லை. ஆனா உலகத்திலே இருக்கிற அத்தனை வளர்ந்த நாடுகளும் அங்க அங்க இடம் பிடிச்சு, இது என்னுதுன்னு உன்னுதுன்னு எல்லை கோடு போட்டு வச்சிருக்காங்க தெரியுமா உங்களுக்கு! ஏன் நம்ம இந்தியா கூட அங்க ஒரு பகுதியை பிடிச்சு நிலத்தடி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கு! அது மாதிரி பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான்னு அத்தனை வளர்ந்து நாடுகளும் அங்க இடம் போட்டு வச்சிருக்கு. அமெரிக்கா சரியா துருவத்தின் மையத்திலே இடம் பிடிச்சி வச்சிருக்கு, அங்கே கரக்டா பூமத்திய ரேகையின் ( Longitudinal and Latitudinal Crossing) 0o ல அவெங்க கொடி நட்டு வச்சிருக்காங்கன்னா பார்த்துக்கங்க. அதாவது தென் துருவம மையத்தில்!
(இங்க குளிர்காலத்தில, காத்தும், புயலும் வந்தா சீதோஷணம் -80oC லருந்து -90oC வரை போயிடும், இந்த டெம்ரேட்சர்ல மனுஷன் எவ்வளவு நேரம் தாக்குபிடிப்பான்னு தெரியுமா, சரியா நாலு நிமிஷம், அவ்வளவு தான் மண்டையை போட்டுறுவான்!) இது அத்தனைக்கு காரணம், அத்தனை கனிமவளமங்கள் நிறைந்த கண்டம் அது! உலகத்திலே மத்த பகுதியிலே இருக்கிற கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அளவில(கண்டுபிடிக்கபட்ட வரையில்!) நாலு பங்கு அதிக வளங்கள் கொண்டது இந்த அண்டார்ட்டிக்கா, அதான் பிரச்சனையே! அதனால தான் எல்லா நாடுகளும் நான் நீன்னு அடிதடி போட்டுகிட்டிருக்காங்க!. என்னா ஒரு சிரமம், அவ்வளவு குளிரையும் தாங்கி அந்த கனிம வளங்களை எடுக்கிறத்துக்கான தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் வரலை, வந்தா இனி அண்டார்ட்டிக்காவுலயம் போர், படைன்னு செய்தி வரக்கூடிய நாள் அதிக தூரமில்லை! இன்னொரு விஷயம் தெரியமா, இந்த அண்டார்டிக்காவிலேயிருந்து பிச்சிக்கிட்டு வந்த தேசங்கள்ல ஒன்னு தான் நம்ம இந்தியா ( நம்மூருல லெமூரியா கண்ட கதை, முன்தோன்றிய மூத்தகுடின்னு கதைவிட்டுட்டு திரிவாங்கல்ல, அத நிஜமா என்னான்னு தெரிஞ்சுக்கணுன்னா கொஞ்சம் சயிண்டிபிக்கா, இந்த நிலம் நீர் பரப்போட உருவாக்கம்(Evolution) பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே எப்படி தோன்றிச்சின்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டீங்கன்னா, இணையத்திலே நிறைய தகவல் நிலையங்கள் இருக்கு போய், வேணும்னா பாருங்க!)

சரி நம்ம தலைப்பில எடுத்துக்கிட்ட பனிபாறைகளை பத்தி பேசுவோம் இனி, இந்த பனிபாறைகள் அதிகம் மிதக்கும் இடம் இந்த வடதுருவ ஆர்டிக் கண்ட பகுதி! முதல்ல இந்த பனிபாறைன்னா என்னா, எங்கிருந்து வந்துச்சு, அது எடை, வயசு என்னான்னு பார்ப்போமா! இந்த பனிபாறைகள் அதிகமா இருப்பது இந்த வட அட்லாண்டிக் சமுத்திரத்தில! இது அனைத்தும் உருவாவது நகரும் பனிமலைகள்(Glaciers)லாள, கிரீன்லேண்ட்ன்னு ஒரு நாடு இருக்கு பாருங்க, அதாவது வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் அந்த பனிமலைகள் மிகுந்த நாட்ல இருந்து இந்த நகரும் பனிமலைகள் அப்படியே கடல்ல விழுந்து சின்ன சின்ன பனிபாறைகளா(Iceberg) நகர்ந்து கொண்டிருக்கிருக்கின்றன! இந்த மாதிரி நகரும் மலைகள் ஒரு 100க்கும் மேலே அங்க இருக்கு, சில பனிபாறைகள் கனடா நாட்டின் வடக்கு பகுதியான சிறு சிறு தீவுகள் அடங்கிய பகுதிகள்லருந்தும் விழும் நகரும் பனிமலைகளாகும். இப்படி மிதக்கும் பனிபாறைகள் அந்த பகுதியில சின்னதும் பெருசுமா சுமார் ஒரு 40000 மிதந்துகிட்டு இருக்கு. இது அந்த குளிர்காலத்தில இருந்து வசந்தகாலம் வரும்போது கொஞ்ச கொஞ்சமா அந்த சமுத்திர அலையால தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும். சில பனிபாறையோட அளவு 13 சதுரமைல் பரப்பளவுக்கு இருக்கும், அதாவது அதில ஒரு பெரிய நகரத்தையே நிர்மானிக்கலாம்! இந்த பனிபாறைகள் உருகி நீராவதுக்கு ஒரு வருஷம் பிடிக்கும், அதாவது இதோட வயசு, ஒரு வருஷத்திலே இருந்து ஒன்னரை வருஷம் வரை! ஆனா இந்த பனிபாறைகள் உருவாக காரணமா இருக்கும் அந்த நகரும் பனிமலைகள்(Glaciers) உண்டாக்கபட்ட பனிகட்டிகள் 15000 வருஷத்துக்கும் மேலேன்னா நம்ப முடியுமா உங்களுக்கு!

சரி இதோட கடல்ல நகரும் வேகம் என்னான்னு தெரியுமா, சுமார் 0.7km/h, அதாவது கிட்டதிட்ட ஒரு கி.மீ. ஒரு மணி நேரத்துக்கு! சில சமயம் அடிக்கும் காத்து மற்றும் கடல் அலைகளா இது மணிக்கு 3.6 கி.மீ வேகத்திலக் கூட இது மிதந்துக்கிட்டே நகரும். இது ஏன் மிதக்குது அப்படின்னா, இந்த பனிபாறைகள் அடர்த்தி (density) இருக்கே அது உப்புகடல் தண்ணியை விட கம்மி, அதாவது பனிபாறை அடர்த்தி கிட்ட திட்ட 900 kg per cubic meter இருக்கும், ஆனா கடல் தண்ணி அடர்த்தி 1025 kg per cubic meter இருக்கும். அதனால இந்த மொத்த பாறையில எட்டுல ஏழுபங்கு தண்ணிக்கு கீழேயும் மீதி ஒரு பங்கு தண்ணிக்கு மேலயும் இருக்கும். அதைத்தான் ஆங்கிலத்தில "tip of the iceberg" ன்னு சொல்வாங்க!
இந்த மாதிரி மிதக்கிற பனிபாறைகள் வடக்கிலருந்து தெற்கா ஒரு 4000 கி.மீ வரை நகர்ந்து போகும், அதாவது கனடா நாட்டில் 'Baffin Bay'ங்கிற இடத்தில இருந்து St. John's ங்கிற ஊருக்கு தெக்காலே ஒரு 800 கி.மீ நகர்ந்து போகுது. இதை சிலசமயம் கிழக்காலே அயர்லேந்து பக்குமும் தெக்காலே கரிபியன் தீவுகள்ல பெர்முடா பக்கமும் பார்க்கலாம்!

சரி இப்படி கடல்ல வந்து விழுற பனிபாறைகள், சனியன் விழுந்தது, அதுகிடக்கு, அதில என்ன இவவளவு வந்து கிடக்குங்கிறீங்களா! ஆமா இப்ப நீங்க ஆகாய மார்க்கமா எங்க வேணும்னாலும் போயிடுறீங்க. ஒரு 100 வருஷம் முன்னாடி நினைச்சு பாருங்க. எல்லாமே கடல் மார்க்கம் தான். அப்படி கப்பல் பிரயாணம் போறவங்க இந்த மிதக்கும் பனிபாறைகள்ல மோதி கப்பல் மூழ்கி செத்தது நிறைய! ஏன் இப்பக்கூட, இந்த தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் இதோட விளைவுகள் பயங்கரம் எப்படின்னு கேட்கிறீங்களா?

இந்த சின்னதும் பெரிசுமா மிதக்கும் இந்த பனிபாறைகள் அவ்வளவு ஈஸியா இந்த ரடார் ஸ்கிரீனுக்கு சிக்காது. அதுனால ஓட்டிக்கிட்டு போற கப்பலை திடீர்னு நிறுத்தமுடியாது! இதில நம்ம சினிமா பார்த்த டைட்டானிக் கப்பல் மட்டுமில்ல, அந்த பகுதியில, இந்த மாதிரி பனிபாறைகள்ல மோதி முழுகுன கப்பல்கள் ஏராளம்! 1841லேயே 'William Brown'ங்கிற கப்பல் இந்த பனிபாறையிலே மோதி ஒரு 64 பேரு செத்து போனாங்க, ஆனா டைட்டானிக்கல இறந்தவங்க 1500 பேரு! 1909ல 'Geisha'ங்கிற இன்னொரு கப்பலு கேரம்போட்ல நாலு சுவத்தில அடிச்சு சிவப்பு காய் போயி குழியில விழும் பாருங்க, அது மாதிரி வழிநெடுக இருந்த ஒவ்வொரு பனிபாறையிலயும் மோதி கடைசியில மூழ்கி கடலுக்கு கீழே போச்சு, நல்ல வேளையா அதுல பயணம் செஞ்சவங்க தப்பிச்சோம் பொழச்சோமுன்னு St. John's ங்கிற ஊருக்குவந்து சேர்ந்தாங்க! இப்படி சொல்லிக்கிட்டே போகலாம், இது மாதிரி ஒரு 240 Collisions (பனிபாறை மோதல்கள்). இதை கனடா நாட்ல இருக்கிற 'The Institute of Ocean Technology (IOT)' ங்கிற நிறுவனம் செய்திகளை சேகரிச்சு வச்சிருக்கு. அதுமட்டுமில்லம, இந்த பனிமலை மோதல்கள், ஆழ்கடல் கொந்தளிப்புகள் எல்லாத்துக்கும் கப்பல்கள், நடுகடலில் மிதக்கும் எண்ணெய் மேடைகள் (Oil Platforms and Rigs) எல்லாம் எப்படி ஈடு கொடுத்து தாக்குபிடிக்கணும், அதுக்கு தகுந்தமாதிரி இந்த கப்பல் மற்றும் மேடைகள் கட்டுமான தொழில்நுட்பத்துக்கு உதவ ஆராய்ச்சிகளும் செஞ்சுக்கிட்டு இருக்கு!

இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு, இந்த ஆர்டிக் பகுதியும் அன்டார்ட்டிக்கா மாதிரி கனிம வளங்கள் நிறைந்த பகுதி! எண்ணெய் வளமும் அதிகம். ஆனா கடுமையான குளிர் மற்றும் இந்த பனி பாறைகள் மோதல்கள்லாள ஆபத்துகளும் இருப்பதால அதை எப்படி பாதுகாப்பாக அந்த வளங்களை எடுக்கலாமுன்னு இப்போ முனைப்பா இருக்காங்க, அது ஓன்னு. இன்னொன்னு, இந்த 'வடக்கு ஆர்டிக் கடல்வழி தடம்'. அதாவது ஐரோப்பாவிலருந்து ஆசியா போகவும், வட அமெரிக்க கிழக்கு பகுதியிலருந்து மேற்கு பகுதி செல்லவும் இந்த கடல் மார்க்கம் ரொம்ப வசதி ஏற்கனவே அமெரிக்க கிழக்கு பகுதியிலருந்து மேற்கு பகுதி செல்ல பனமா கால்வாய் இருக்குல்ல, (இது எப்படி வந்தது என்னான்னு யாருக்கும் விருப்பம் இருந்தா சொல்லுங்க, இன்னொரு தனி பதிவு இந்த பனமா கால்வாய் பத்தி எழுதுறேன்!) அது மாதிரி இந்த வடக்கு பனமா கால்வாய் திட்டம் ரொம்ப நாளா இருக்கு. இந்த மார்க்கமா ஒரு 300 வருஷத்துக்கு முன்னமே கடல்வழி பயணம் போறேன்னு பனிகடல்ல சொருகி செத்த கதைகள் நிறைய இருக்கு! மாறி வரும் தட்ப வெப்ப நிலையால, ஆர்டிக் பனி உருகி, இப்போ அத்தடங்கள், பிராயாணம் செல்ல ஏதுவா இருக்கு! ஆக அந்த மார்க்க பிரயாணத்துக்காகவும் தான், இந்த IOT நிறுவனம் அனைத்து ஆராய்ச்சிகள்லயும், இந்த பனிபாறைகள் பற்றி செஞ்சுக்கிட்டு இருக்காங்க!

எவ்வளவு திரில்லாங்கா இருக்கில்ல! இந்த பனிபாறைகளை பார்க்க, இப்போ சுற்றுலா மாதிரி அழைத்து செல்லவும் நிறைய நிறுவனங்கள் இருக்கு. அதுக்கு நீங்க மொதல்ல கனடா போகனும், அதுவும் St. John's ங்கிற ஊருக்கு போன நீங்க போய் இதை அப்படியே பார்க்கலாம்! இந்த மிதக்கும் பனிபாறைகளை பார்க்கலாம். எத்தனை நாள்தான் நீங்க கந்தக பூமியிலேயே இருப்பீங்க, போய் துருவப் பிரதேசம் பார்த்துட்டு வாங்க!

11 comments:

said...

ஜாதி சண்டைகளுக்கு நடுவில் ஒரு அருமையான பதிவு. தொடரட்டும் உங்களின் பணி.

பனிப்பாறைகள் ஆரியமா? திராவிடமா? வடக்கில் இருந்து வருவதால் ஆரியம் தான்... இப்படி யாரும் ஆரம்பிக்காமல் இருந்தால் சரி ;-)

said...

என்ன ஞானதேவன் சார்....யாரும் சண்டை ஆரம்பிக்கலேனாலும் கூட நீங்களே....தூபம் போட்டு ஆரம்பிக்க வைச்சிடுவீங்க போலே!!!!

வெளிகண்ட நாதர்
மிகவும் அருமையான அறிவியல் தகவல்களை தந்திருக்கிறார். தொடர்ந்து எதிர்பார்க்கின்றேன்.

said...

நல்லதொரு பதிவு. நன்றி.

said...

ஞானதேவன், நாகு வருகைக்கு நன்றி! பனிபாறைகளிலும் ஆரியம், திராவிடமா?

said...

Very good Blog. keep up good work.

Amidst of your regular / busy schedule, you are giving us a nice & clean blogs. Very informative also.


// இன்னொரு தனி பதிவு இந்த பனமா கால்வாய் பத்தி எழுதுறேன்!) //

Can you please write about this.

said...

Thanks Sivabalan,
I will write about Panama Canal project some time!

said...

எனது பார்வையில் பனாமா கால்வாய்

said...

பரணீ, உங்களின் பனாமா கால்வாய் பதிப்பு நன்றாக இருந்தது. நான் இந்த project ன் கட்டாயம், அது முடிக்க மக்கள் பட்ட கஷ்டம், இதை பத்தி எழுதலாமுன்னு இருந்தேன். Yours is a preamble to it! Thanks!

said...

உதயகுமார்,
ஆர்டிக் பத்திச் சொன்னப்ப ந்ம்மளையும் கொஞ்சம் கண்டுக்கிட்டதுக்கு தேங்க்ஸ்.
நம்மூர் ம்யூஸியத்துலே 'கோண்டுவானா லேண்ட், எப்படி ஸ்ப்ளிட் ஆச்சுன்னு ' ஒரு சுவையான
பகுதி இருக்கு.

said...

//நம்மூர் ம்யூஸியத்துலே 'கோண்டுவானா லேண்ட், எப்படி ஸ்ப்ளிட் ஆச்சுன்னு ' ஒரு சுவையான
பகுதி இருக்கு.//

உங்க ஊருல இருக்கிற அன்டார்டிக்கா சென்டர்ல பார்த்து தான் நிறைய விஷயமே விளங்குச்சு! அந்த அன்டார்டிக்கா மாதிரி கடுங்குளிர் simulation ல விரச்சி போயாச்சில்ல! 'கோண்டுவானா லேண்ட் மட்டுமில்ல, உலகத்தில மத்த பாகங்களும் எப்படி ஸ்ப்ளிட் ஆச்சுன்னு எழுதி வச்சிருக்காங்களே! அன்டார்டிக்கா பயணம் போக உங்க ஊருதானே பேஸ் ஸ்டேசன்!

said...

நிறைய சங்கதி தெரிஞ்சுக்கிட்டேன் சார். நல்ல வேளை இப்ப எல்லாம் அமெரிக்காவுக்கு வர்றதுன்னா கப்பல்ல வரணும்ன்னு கட்டாயம் இல்லை. :-)