Tuesday, July 18, 2006

வீரபாண்டி (Hollywood) கோட்டையிலே- முழங்கிய ஏ ஆர் ரஹ்மான்!

நேற்று இரவு அமெரிக்க மேற்கு கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சிலஸ் என்ற நகரில் மலைகளுக்கு நடுவே அமைந்த நாடக இசை அரங்கமான 'ஹோலிவுட் பவுள்' ('Hollywood Bowl') என்கிற அரங்கத்திலிருந்து ஒலித்த ஏ ஆர் ரஹ்மானின் "வீரபாண்டி கோட்டையிலே, மின்னலடிக்கும் வேளையிலே, ஊரும் ஆறும் தூங்கும் போது, பூவும் நிலவும் சாயும் போது, கொலுசு சத்தம் மனசை திருடியதே!" நாதம் எட்டு திக்கும் சென்று அசைந்தாடிய இரவு!

இன்றைய இரவு 'ஏ ஆர் ரஹ்மானுடன் பாலிவோட் இரவு' என்ற மிகப்பெரிய விளம்பரத்துடன் நடந்தேறிய இசைக் கச்சேரி, வளர்ந்து வரும் 'பாலிவோட்' என்கிற பொழுது போக்கு தொழிற்சாலையை ஆணித்தரமாக இம்மேலை நாடுகளில் ஊடுவற உண்டான வழிமுறையாகவே எனக்குத் தென்பட்டது! மலைகளால் சூழப்பட்ட இந்த நாடக இசை அரங்கம் மிகவும் பிரசித்து பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாயந்த ஒரு இடமாகும்! அதில் நிகழ்ச்சி நடத்திய உலகப்புகழ் பெற்ற பீட்டல்ஸ் போன்ற இசைக்குழுவினருக்கு சமமாக ஒரு இந்தியன், அதுவும் தமிழன் கச்சேரி நடத்தி அமெரிக்க மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது இன்னொரு சரித்திரமே! இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் இந்நாட்டிலே வாழும் இந்தியக் குடிமகன்களை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சியை வடிவமைக்கவில்லை, இங்கு வாழும் இந்நாட்டினரின் மக்களை கருத்தில் கொண்டு அவர்களின் விருப்பம்,டேஸ்ட், போன்றவற்றிற்கு தகுந்தாற் போல் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும், அதே ராகத்தில் அமைந்தாலும் வெளிஎழுப்பிய நாதத்தை கேட்கும் பொழுது ஒரு புதிய வடிவம் தென்பட்டது! அவர் இசை அமைத்த 'ச்சைய ச்சையாவும்', 'ஹம்ம ஹம்மா' வும் அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஆட்டம் போடச் செய்தது! கடைசியாக பாடிய அவரின் 'வந்தே மாதிரம்' பாட்டு இத்தனை தூரம் கடந்து வந்தாலும் இந்திய நாட்டின் பாசப்பிணைப்பை வெளிபடுத்தும் அரங்கினில் இருந்த அனைத்து இந்தியரின் ஒட்டு மொத்த உணர்ச்சி குவியலை காணமுடிந்தது! நிகழ்ச்சிகள் எப்படி என்று கிழே பார்ப்போம் வாருங்கள்!

நீங்கள் அமெரிக்க பயணம் மேற்கொண்டு அதுவும் லாஸ் ஏஞ்சலஸ் என்ற இந்த கனவு தொழிற்சாலையை கொண்ட இம்மாநகரத்திற்கு வரும் வாய்ப்புக்கிடைத்தால், சுற்றுலா என்ற முதல் கட்டம் இந்த 'ஹாலிவோட்' என்ற இப்பகுதியை சுற்றுவதே! அதுவும் இப்பகுதியில் நம் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் போல் அனைத்து ஸ்டுடியோ வளாகங்களும் உள்ளன! நீங்கள் சென்று வசதியாக அம்மாதிரி ஸ்டுடியோ வளாகம் சுற்றி வரவேண்டுமென்றால் இப்பகுதியில் அமைந்திருக்கும் 'யுனிவர்சல் ஸ்டுடியோஸ்' சென்று வரலாம். சமீபத்தில் வெளிவந்த 'கிங்காங்' என்ற ஆங்கிலப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருந்தாலே, இல்லை டுபுக்குவின் விமரிசனம் படிக்கும் பாக்கியம் பெற்று இருந்தாலோ உங்களுக்கு தெரிந்திருக்கும்! அப்படத்தினை தயாரித்தவர்கள் இந்த ஸ்டுடியோவினரே! அது மட்டுமல்ல நீங்கள் கேள்விபட்டிருக்கும் வார்னர் ப்ரதர்ஸ், சோனி, 20த் சென்ச்சுரி ஃபாக்ஸ், வால்ட் டிஸ்னி, ஏபிஸி போன்ற ஸ்டியோக்களின் தளங்கள் இப்பகுதியில் தான் உள்ளது. இப்பகுதியில் அமைந்திருக்கும் ஹோலிவுட் புலிவர்ட் என்ற சாலை எப்பொழுதும் மாலை நேரங்களில் கோலாகளம் பூண்டிருக்கும். இந்த சாலையில் உள்ள 'கோடாக்' என்ற கலை அரங்கத்தில் தான் வருடந்தோறும் ஆஸ்கர் பரிசளிப்பு விழா நடக்கும். மற்றபடி இச்சாலையில் இரு பாதசாரி நடைபாதையில் ஹோலிவுட் படங்களில் நடிதத பிரபலங்களின் பெயர் கொண்ட நட்சத்திரங்கள் பதிக்கப் பெற்று இருக்கும். ஆக இச்சாலையின் இரு ஓரங்களிலும் நீங்கள் ஹோலிவுட் படங்களில் பார்க்கும் அதிசியமான உருவங்கள் கொண்ட கேரக்டர்களை தாங்கள் அரிதாரம் பூசிக்கொண்டு வருவோர் போவோரை மகிழ்வுக்கும் கூட்டத்தினரை நீங்கள் இங்கு காணலாம்.
அப்படி சுறுசுறுப்பாக இருக்கும் இந்த சாலை பகுதியிலிருந்து சில கட்டிட ப்ளாக்குகள் தாண்டினால் வெளியிலிருந்து தெரியாவண்ணம் இருக்கும் இந்த நாடக இசை அரங்கம் சுற்றிலும் இயற்கையாக 'சாண்ட்ட மோனிக்கா' மலைகளால் சூழப்பட்டு சரிவாக மேலிருந்து கீழ் இருக்கும் இயற்கை சூழ்நிலையிலே அமைந்திருக்கும் இந்த அரங்கம்('amphitheater') எப்படி பாரீஸில் இருக்கும் ஈஃபிள் டவர் உலகப்பிரசித்து பெற்றதோ, அவ்வளவு பிரசித்து பெற்றது இந்த 'ஹோலிவுட் பவுள்' என்ற அரங்கம்! அதே போல இங்கிருந்து, நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கும் 'ஹோலிவுட் சைன்' ('THE HOLLYWOOD SIGN') 'மெளண்ட் லீ' என்ற மலைகளுக்கு நடுவே அமந்திருக்கும் பெரிய சைன் போர்ட் உங்களுக்கு தெரிய வரும்!

இந்த அற்புதமான இசை அரங்கிலே நம் ரஹ்மான் இசை ராஜாங்கத்தையே நடத்தி முடித்தார் நேற்றைய இரவு! தொடக்கத்தில் ஆரவாரமின்றி தொடங்கிய பம்பாய் தீம் ம்யூசிக்குடன் நிகழ்ச்சி தொடங்கி, சற்று நேரத்தில் சுருதி ஏற்றி மணியின் 'தில் சே' ('உயிரே') படத்திலிருந்து 'தில் சே ரே' பாடலுடன் பின் திரையில் சாருக்கானும், மனிஷா கெய்ரோலாவும் ஆடிய பிம்பங்களுக்கிடையில் 'பாலிவோட் நைட்' இனிமையாக தொடங்கியபின் ஆர்பரித்த கூட்டத்தினரை கண்டு சற்றே தெரிந்தது இந்த பாலிவோட் என்ற மந்திர சந்தை எவ்வளவு ஊடுறுவி இங்கே இருக்கிறது என்பது! (காட்சி முடிந்து வரும்பொழுது ஒரு ஆங்கிலப் பெண்மணி மறக்காமல் இந்த 'தில் சே ரே' பாடலை ஞாபகப்படுத்தி, என்னிடத்தில் அந்த சாருக்கானின் படத்தின் பெயரை கேட்டு குறித்துக் கொண்டு, 'நான் எல்லா சாருக்கான் படங்களையும் பார்த்துவிட்டேன், ஆனால் இந்த படத்தை பார்க்கவில்லல அதனால் இந்த படத்தின் டிவிடி வாங்கி இனி பார்க்க வேண்டும் என கூறிச்சென்ற போது தான் தெரிந்தது இந்த பாலிவோட் என்ற தாக்கம் எவ்வளவு ஊடுறுவி இங்கே இருக்கிறது என்று!) பிறகு வந்த அனைத்து பாடல்களுமே இந்த ஊருக்கு தகுந்தார் போல் கூட்டு குரலாக ஒலித்தது. அதுவும் இவ்வூரின் இசைக்கலைஞர்கள் துணையைக் கொண்டு நடத்தப்பட்ட இசை தொகுப்பு ('Orchestration') காண்பதில் எந்த ஒரு ஆச்சரியமில்லை, ஏனென்றால் இசை குறியீடுகள் ('Notes') கொண்டு சுலபமாக வாசித்து முடித்து விடமுடியும்! ஆனால் கோஷ்டி கானம் ('Choir') பாடவந்திருந்த இந்நாட்டு மக்கள் கூட்டத்தினரைக் கொண்டு 'வீரபாண்டிய கோட்டையிலே, மின்னலடிக்கும் வேளையிலே' என்று முழங்க செய்த ஏ ஆர் ரஹ்மானை மேடையில் பார்த்தப் பொழுது பெரிமிதம் அடைந்தேன்!இது மட்டுமின்றி, இவ்வூரு ம்யூசிக்கல்ஸ்(இதை பற்றி நான் எழுதிய பதிவுகள், பாம்பே ட்ரீம்ஸ், The Phantom of the Opera- திரைக்குப்பின்னே! போன்றவற்றை படிக்கவும்!) என்று அழைக்கப்படும் இசை நாடகங்களுக்கு ('Bombay Dreams' மற்றும் 'The Lord of The Rings') அவர் அமைத்த இசைப்பாடல்களை நம்மூரு பெண்மனி அனிதா(அனிஷா??, இவர் இந்த பாம்பே ட்ரீம்ஸ் என்ற இசை நாடகத்தின் நாயகி!) நாகராஜனைக் கொண்டு பாடவைத்து இந்த ஊரு 'Opera' வையும் பாடி அசத்தி விட்டார்! பிறகு ஹரிஹரன், சாதனா சர்கம், மதுஸ்ரீ, சுக்வீந்தர்சிங் என்று எல்லா பாடகர்களையும் கொண்டு பஞ்சாபி பாங்கராவிலிருந்து, நம்மூரு கொட்டு மேளம் ( ட்ரம்மர் சிவா வழக்கம் போல தனி ஆவர்த்தனமாக அடித்த கொட்டுகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு!) வரை அனைத்து இசைகளையும் முழங்க செய்து, கடைசியில் நிகழ்ச்சி முடிகையில் ஒட்டு மொத்தமாக அரங்கத்தில் இருந்த அத்தனை கூட்டமும் 'ஜனகனமன' பாடி இனிதாக முடித்தது, ரஹ்மானும் தன்னுடய பங்கிறகு 'யுவா', இல்லை ஃ (ஆய்த) எழுத்தில் பாடிய 'ஜனகனமன' என்ற பாட்டையும் பாடி முடித்தார்!

0 comments: