Sunday, February 26, 2006

பாம்பே ட்ரீம்ஸ்


நேற்று மாலை 'Bombay Dreams' என்னும் ம்யூசிக்கல்ஸ் ('Musicals')நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்புக்கிட்டியது. இது ஒரு இசை நாடகம். இந்த ம்யூசிக்கல்ஸ் என்ற இசை நாடக வடிவம் மேற்கு நாகரீக கலை நிகழ்ச்சிகளில் மிகவும் பிரசித்து பெற்றது. நம்மிடம் இக்கலை வேகமாக அழிந்துவிட்டது. அதாவது 'தெருக்கூத்து' என்ற கலை தெரியுமா? நமது வம்சா வழியினர் மிகவும் சிறப்பாக கொண்டாடிய கலை அது. அந்த காலத்தில, எல்லா 'Mythical stories'யும் இந்த இசை,பாட்டு, வசன நடையிலே மேடை எதுவுமில்லாமல், தெருக்களிலே ஆடி பாடி காட்டி, மக்களை களிப்புற செய்வார்கள். பிறகு சினிமான்னு ஒரு பெரிய மீடியம் வந்தவுடனே, இந்த கலை நின்னு போச்சு, இதில கூத்து கட்டினவங்க, வசன நடை நாடகங்கள்லேயும், சினிமாவிலேயும் நடிக்க போயி, இது அப்படியே அழிஞ்சு போச்சு!. ஆனா, இதன் இசை, பாட்டு,வசன வடிவ நாடகங்கள் இங்கே சக்கை போடு போடுது!.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள்ல, இதுக்குன்னு ரொம்ப பேர் போன இடங்கள் உண்டு. அதாவது லண்டன்ல 'வெஸ்ட் என்ட்'(West End) தியோட்டர்ஸ், பிறகு நியூயார்க்ல, 'ப்ராட்வே'(Broadway) தியோட்டர்ஸ் ன்னு, இந்த ம்யூசிக்கல்ஸ் நிகழ்ச்சி நடக்கக்கூடிய அரங்கங்கள் நிறைய உண்டு. யாரும் நியூயார்க் போனால், அங்க உள்ள 'டைம் ஸ்கொயர்' (Time Square) என்ற இடம், ஒவ்வொரு புத்தாண்டுக்கும் அந்த 'கிரிஸ்டல்'பந்து கீழே இறக்கும் நிகழ்ச்சி எப்படி பார்க்க வேண்டிய ஒன்னோ, அது மாதிரி அங்க இருக்கிற ஏதாவது ஒரு தியோட்டர்ல இந்த ம்யூசிக்கல்ஸ் புரோகிராம் தவறாம பார்க்கிறதும் முக்கியமான ஒரு அம்சம். நான் இந்த வருஷம் 2006 புது வருஷப் பிறப்புக்கு போனப்ப, இந்த தியோட்டர் போறது விட்டு போயிடுச்சு! அப்படி அங்கெல்லாம் ஆடிட்டு, இப்ப தான் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிக்கு வந்திருக்கு, இந்த 'பாம்பே ட்ரீம்ஸ்'.

இந்த இசை நாடக்தோட சிறப்பம்சம் என்னான்னா, இதற்கு இசை அமைச்சு கொடுத்தது நம்ம ஏ ஆர் ரஹமான். போன வாரம் கூட அவரு இங்க இருக்கும் ஸ்டேன் ஃபோர்ட் பல்கலைகழக கலை நிகழ்ச்சி ஒன்னுக்கு வந்துட்டு போனார். அதபத்தி நம்ம சக ப்ளாக்கர் பாரதி ஒரு பதிவு போட்டிருக்காரு, போய் படிச்சு பாருங்க! விவரம் தெரியும்! இப்ப எல்லாம் இந்த அமெரிக்காகாரங்க ரொம்ப சீரியஸா நம்ம திரைப்படங்கள், பாட்டுக்கள் மேலே அதிகம் ஆர்வம் காட்ட ஆரம்பிச்சிருக்காங்க. மொத்தமா இந்தியாவிலருந்து வர, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் அனைத்தும் 'BollyWood Masala'ன்னு கொண்டாட ஆரம்பிச்சாட்டாங்க. அதற்கு காரணம், நம்ம ஏ ஆர் ரஹமான் மாதிரி ஆளுங்க தான். வித்தியாசமான இசை, கிழக்கும் மேற்கும் சந்திக்கிற மாதிரி அவரு போடற ட்யூன்கள் எல்லாமே மிக பிரசித்தம் இங்கே! அப்படி வந்த இசையை ரசிச்சு தான், இந்த ம்யூசிக்கல்ஸ் இசை நாடகம் போட்டு மிகவும் பிரபல்யமான 'ஆன்ரூ லாய்ட் வெப்பர்' (Andrew Lloyd Webber) ன்னு ஒருத்தர் இந்த பாம்பே ட்ரீம்ஸ் ம்யூசிக்கல்ஸ்சை தயாரிச்சார். அவரு தயாரிச்ச இன்னொரு இசை நாடகம் 'The Phantom of the Opera' போன இரண்டு மாசத்துக்கு முன்னே, நியூயார்க்ல போட்ட முதல் நாளே 15 மில்லியன் டாலருக்கு டிக்கெட் வித்து போச்சு!

இந்த இசை நாடக்தை கூட சேர்ந்து தயாரிச்சவரு, நம்ம 'சேகர் கபூரு', பூலாந்தேவியை பத்தி சினிமா எடுத்தாருல்ல அவருதான்!(இந்த பூலான் தேவி கதை பத்தி எழுத கை நம நமங்கிது, அப்புறம் ஒருவாட்டி எழுதுறேன்!) நம்ம ஊரு ஸ்ரீதேவியை வச்சு அழகா 'Mr India' ன்னு இன்னொரு ஹிந்தி படமும் எடுத்தவரு. அவரும் இந்த 'Hollywood' சர்க்யூட்ல ரொம்ப பிரசித்தமானவரு!. இங்கிலாந்து ராணி, 'எலிசபத்', சின்ன வயசிலே எப்படி சோரம் போனாங்கன்னு, ஒரு கான்ட்ரவர்சியல் கதையை இங்கே படமா எடுத்தவரு! அந்த படத்துக்கு ரொம்ப ஒன்னும் ஆஸ்கார் அவார்ட் எல்லாம் கிடைக்கிலனாலும், அதன் நாயகிக்கு ஏதோ ஒன்னு கிடைச்சிச்சுன்னு நினைக்கிறேன்! ஆக அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தாயாரிச்ச இந்த ம்யூசிக்கல்ஸ் கதை, நம்ம Bollywood மசாலாவே தான்!

பம்பாய் சேரி பகுதியில்ல வசிக்கும் ஒரு இளைஞன், ட்யூரிஸ்ட் கைடா வேலை பார்ப்பான், சினிமாவிலும் நடிக்க ஆசைபடுவான். அப்ப சேரி பகுதியை ஒரு டாக்குமென்ட்ரி படம் எடுக்க வரும் கதாநாயகி, அவனை துணைக்கு கூப்பிட்டு போவா, அப்படியே 'Miss India pagent' நிகழ்ச்சிக்கு போயி ஆர்ப்பாட்டம் பண்றப்ப, அந்த நிகழ்ச்சி வந்த பிரபல நடிகை ஒருத்திக்கு பிடிச்சி போக, அவளோட சினிமா படத்தில நடிச்சு பெரியாளவான். பிறகு தனக்கு வாழ்வு கொடுத்த சினிமாவா, இல்ல தன்னை அறிமுக படுத்தின அந்த கதநாயிகி கூட உண்டான காதலா, இல்ல தன்ன வளர்த்த சேரி ஜன்ங்களான்னு அல்லாடிகிட்டு இருப்பான். வழக்கம் போல வில்லத்தனமான கதாநாயிகியின் மணவாளன், அப்புறம் அந்த மணவாளனின் சூழ்ச்சி தெரிந்து கடைசியில அவனை வெற்றி கொண்டு, கதாநாயகியை கைப்பிடிப்பது. பக்கா நம்மூரு மசாலா கதை. ஆனா அதை அழகா, இந்த ஊருக்கு தகுந்த மாதிரி நம்ம ரஹமானின் பழய படங்கள் ம்யூசிக்கை பிளன்ட் பண்ணி அழகா ஒரு இரண்டு மணி நேரம் இசை நாடகம் பார்க்க அருமையா இருந்தது. இதனுடய ஹைலெட்டே, நம்ம முதல்வன் படத்தில வந்த சகலக்கா பேபி பாட்டு, அந்த வீடியோ கிளிப் வேணும்னா கொஞ்சம் பாருங்க, அசத்தல்!

இப்ப கொஞ்சம் கொஞ்சமா நம்ம திரைப்படங்கள் மேலே, இசை மேலே, இவங்க கவனம் திரும்ப ஆரம்பிச்சிருக்கு. நம்ம நாரயண் சொன்னது போல நம்ம படங்களுக்கு முதலீடு செய்ய முனைப்பா இருக்காங்க. நம்மலோட திரைப்பட தொழில்நுட்பமும், இவங்களுக்கு நிகரா நிக்கிறதாலே கொஞ்சம் எட்டி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் நேத்து இந்த அமெரிக்க மக்களோட சேர்ந்து பார்த்தவரைக்கும், அவங்க ரசிப்பு தன்மை நம்ம ம்யூசிக்கல்ஸ், நடனங்கள் எல்லாத்து மேலேயும் இருக்கத்தான் செய்ய்யுது. இந்த இசை நாடகத்துக்கு நடனம் அமைச்சு கொடுத்தது நம்ம ஹிந்தி நடன இயக்குனர் 'ஃப்ரா கான்' தான். அத்தனையும் நம்ம சினிமாக்கள்ல வர ஸ்டைல்தான்.

இன்னொரு கதையும் படிச்சேன், சேகர் கபூர் அமெரிக்கா வந்துறங்கினப்ப, அந்த 'Immigration' ஆளுங்க நோக அடிச்சிட்டாங்களாம், பார்க்க ஆப்கானிஸ்தான் டெரரிஸ்ட் மாதிரி இருந்தேன்னும், நான் தான் பேமஸ் 'Hollywood' பட டைரக்டர் எல்லாம் சொல்லிபார்த்தும், இந்த எலிசபத் படத்தையும் சொல்லி பார்த்தும், அந்த immigration ஆபிசர் அதெல்லாம் தெரியாதுன்னுட்டாராம். கடைசியில நம்ம 'bollywood' படங்களை பத்தி சொல்லினோன, 'ஓ அப்படியா, என் மனைவி, பிள்ளைங்கெல்லாம், அந்த படங்களை விரும்பி பார்ப்பாங்க, ஷாருக்கானை தெரியும்ன்னாராம், அப்பதான் சேகர் கபூரு சொன்னாராம், இனிமே நான் அதிகம் இயக்க போவது, இனி 'Bollywood' படங்களைத்தான்னு. இப்படி 'Immigration' ல நம்ம கமலும் மாட்டிக்கிட்டு முழிச்சாருன்னு கேள்விப்பட்டேன். அதனால இனி வரும் நாட்கள்ல, அந்த பிரச்சனையே இருக்காது, ஈசியா ஏர்போர்ட்ல இருந்து இவங்கெல்லாம் வந்திடலாம், அமெரிக்கா வந்தா, ஏன்னா, தினம் இவங்க படங்களை பார்த்து அதிகம் பரிச்சியமாயிடுவாங்களே! இது எப்படி இருக்கு!

4 comments:

said...

vanakam thatha!
nalama? Ippathan Omni Tv la Bombay Dreams vilambaram parthen....

said...

வாம்மா சினேகிதி! உங்க ஊர்ல 'The Lord of the Rings' ம்யூசிக்கல்ஸ் ஆரம்பிச்சாச்சா? போய் பார்த்து எழுது கண்ணு, என்ன?

said...

பிறகு நமக்கும் கதை சொல்லு என்ன?

said...

ponal nithcayam kathai solluvan :-)