Thursday, September 28, 2006

தமிழ் கடவுளும் ஒளவைப்பாட்டியும்!

தமிழ்ல வலைப்பதிவுப் போட்டு அதை அகில உலக வெளியீடு செஞ்சு, அப்புறம் தமிழ்மணம் என்கிற வலைத்திரட்டி மேடையைக் கொண்டு நம் தமிழ் மக்களை அடைய செய்யும் வரை, ஏதோ மிகப்பெரிய பொறுப்பு நம் தலையிலே விடிஞ்ச மாதிரி இவ்வளவு நாளும் இருந்துச்சு! ஆனா தமிழ் மணத்திலே தமிழ் மணம் கமழ பாட்டோ, இல்லை வசனங்களையோ கேட்க முடியலையேங்கிற ஒரு ஆதங்கம் இருந்துச்சு, ரொம்பநாளா! இதோ இப்ப அது நிறைவேற போகுது! என்ன பீடிகை போடறேன்னு பார்க்கிறீங்களா! ஒன்னுமில்லை, நேத்து திருவிளையாடல் படம் பார்க்க நேர்ந்தது, அதிலே எத்தனையோ மனதை கவர்ந்த காட்சிகள் இருந்தாலும், முக்கியமா அந்த தருமிப் படலம், யாரு மறக்க முடியும்! வீடியோ அவ்வளவா பொதுமக்களை அடையாத காலக் கட்டத்திலே, இந்த படத்தோட வசனங்கள் தமிழ்நாட்டின் அத்தனை மூலை முடுக்கெல்லாம் ஒலிச்ச ஒன்னு! நான் சின்ன வயசிலே இந்த வசனத்தை கேட்கவே ஸ்பீக்கர் கட்டின கொடிக்கம்பத்திலே தவமா நின்னு கிடந்து கேட்டு ரசிச்ச நாட்கள் எத்தனையோ! அப்படிப்பட்ட சுந்திர தமிழ் வசனங்களை, இப்ப வரும் படங்கள்ல, அதுவும் இந்த கால ஜெனரேஷனுக்கு கிடைக்க சுத்தமா சான்ஸே இல்லை! தமிழுக்கு மேலே சுத்தமா ஆங்கிலம் கலந்து வரப்பாடல்களும் வசனங்களும் தான் அதிகமா போச்சு! ஆனா மொழியின் ஆளுமையை தெரிஞ்சுக்கணும்னா அந்த மொழியின் தூய்மை தெரிஞ்சா தான் அதை தெரிஞ்சுக்க வழி உண்டு. இப்ப வர்ற நண்டு சிண்டுகளுக்கு தகுந்த மாதிரி பாட்டுகளை அந்த காலத்திலே அழகுப்பட எழுதின வாலி மாதிரி ஆளுங்க இப்ப இங்கிலீஷை கலந்தடிச்ச்ச தான் உண்டு வாழ்க்கை, இல்லேன்னு எகிறி தூக்கி அடிச்சிடுவாங்க! 'சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு! அடிக்குது பாரு இவ ஸ்டைலு' ன்னு எழுதலேன்னா தூக்கி ஓரகட்டிடுவாங்க!

இந்த திருவிளையாடல் மாதிரி படங்கள் எடுக்க இப்ப யாருமே இல்லை தமிழ் இண்டஸ்ட்ரீலே! 70க்கப்பறமே அது நின்னுப்போச்சு! அப்பறம் சாமி படம் எடுக்கிறேன்னு, மந்திரம் மாந்தீரிகம்,மாரியாத்தான்னு படங்கள் இராமநாரயணன் மாதிரி ஆளுங்க 80களின் மத்தியிலே எடுக்க ஆரம்பிச்சாங்க! ஆனா அந்த காலத்திலே வந்த மறக்க முடியாத காவியங்கள் மாதிரி ஒன்னும் வந்த மாதிரி தெரியலை! அதுவும் ஏபி நாகராஜன் மாதிரி ஆளுங்க தெள்ள தெளிவா தமிழ் வசனங்களை எழுதி, பாட்டு எழுதி மயக்க வைக்க இப்ப யாருமில்லையேங்கிறப்ப ரொம்ப வருத்தமா இருக்கு! நான் ஸ்கூலு படிச்ச காலத்திலே இயல், இசை, நாடகம்ன்னா இந்த படங்களின் வசனங்கள், பாடல்கள் தான் முன் மாதிரி எடுத்து, பாடியோ, நடிச்சோ நம்முடய கலைத்திறமையை வெளிப்படுத்துவோம். இப்ப நிலைமை எப்படின்னு தெரியல! ஒரு வேளை பிரபு தேவா மாதிரி கோணக்க மாணக்க பேகி பேன்ட் போட்டுக்கிட்டு ஆடி திரிவாங்களோ என்னமோ, தெரியலை. நான் தமிழ் நாட்டை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன், அதனாலே அதன் நிலைமை எனக்குத்தெரியாது! விவரம் தெரிஞ்சவங்களோ, இல்ல இப்பய இளையதலைமுறைங்க எப்படின்னு பின்னோட்டம் போடுங்க!

இங்க இன்னும் ஒன்னும் சொல்லிக்க விரும்புகிறேன், இந்த மொழின்னு ஒன்னு இருக்கே, அதிலே உயர்ந்தது தாய் மொழி தான்! அதன் அருமை பெருமை அது நம்ம பக்கத்திலே இருக்கிறப்ப தெரியறதில்லை! நானும் அப்படி தான்! அந்த காலத்திலே இங்கிலீஷ் மோகம் வந்து, அதிலே பேசி அசத்துணுமேன்னு சொந்த மொழியை விட்டு தொலைச்சாச்சு! அதுவும் அந்த மொழியின் நெளிவு சுளிவுகளை தெரிஞ்சுககிற வரைதான்! அதுவே பொளங்க ஆரம்பிச்சு, அதன் தாய் மொழிக்காரனோடேயே விவரமா பேசி காரியம் பண்ண ஆரம்பிச்சனோன்ன, அப்பறம் அதை பத்தி நினைச்சு பார்க்கிறப்ப, அட இந்த எளவுக்குதான் அந்த பாடு பட்டமோன்னு தோணும்! அதுவும் நம்ம பசங்ககிட்ட எக்கு தப்பா, எதாவது பேச போக, 'இதோ பார்டா பீட்டரு! அப்படின்னு வாங்கி கட்டி, அப்பறம் அதோட அவசியத்தை தெரியறப்ப நொந்து போயி தப்பும் தவறுமா பேசி , எப்படியோ சரி கட்டி, நாப்பது வயசுக்கப்பறம் அந்த மொழியோட பென்ச்மார்க் டெஸ்ட்ல எட்டுக்கு எட்டு வாங்கி, அதை ஒரு பெரிய குவாலிபிக்கேஷன்னு காமிச்சு, அவன்களோடேயே உறவாடி, அது என்னா இன்னொரு பாஷை, அது தெரிஞ்சவங்கிட்ட பேசி, அவன் ஊர்ல குப்பகொட்டனும்னு ஆனதுக்கப்பறம், விட்டு தொலைச்ச தாய் மொழியை பார்த்து இப்ப மனம் ஏங்குது, என்ன சொல்ல!

அந்த காலத்திலே தமிழ் பாடங்களின் செய்யுள், இலக்கியம்ன்னு தெரிஞ்சக்க ஆரம்பிச்சப்ப நம்ம எல்லை எல்லாம் கோனார் உரைநடை வரை தான்! அதுக்கு மேலே அதன் செரிய கருத்துகள், ஆழமான சிந்தனைகள் எல்லாம் அந்த செய்யுள் பாடங்கள்ல, பொறுப்பா நம்ம எத்தனை பேரு கத்துக்க ஆசைப்பட்டிருப்போம்! ஏன் இரண்டு வரி திருக்குறள்ல இருக்கிற மேன்மையை அறிவுக்கு எட்டும்படி போட்டுக்கிட்டமான்னா, அதுவும் கிடையாது! அதனால தான், அப்ப அப்ப அரசாங்கம் பஸ்ல எழுதி வச்சும், இப்ப திரைப்படங்களுக்கு தமிழ் பேர் வச்சா சலுகைன்னு சொல்லியும், அதன் அருமை பெருமையை உணர்த்தினா தான் உண்டு! அந்த காலத்திலே இந்த மாதிரி தெள்ளிய தமிழ் வசனம் பேசி, பாடி மகிழ்வித்தவர்கள் எல்லாம் நம்மல விட்டு கொஞ்சம் கொஞ்சமா போய்ட்டாங்க! இப்ப யாரு இருக்கா இந்த மாதிரி படம் எடுத்து மகிழ்விக்க, தமிழை நல்லா சொல்லி, அதை ஜனரஞ்சகமாயும் காட்டி வெற்றி யும் கொள்ள! ம்... அந்த ஆதங்கம் இருக்கத்தான் செய்யுது!

இருந்தாலும் தமிழ்மணத்திலே அப்ப அப்ப நம்ம குமரன், கோ.ராகவன் மாதிரி ஆளுங்க, தமிழின் ஆழத்தையும் ஆளுமையையும் சொல்லி புரியவைக்க பார்க்கிறப்ப பெருமையா இருக்கு! சில பேரு சொல்லுவாங்க, என்ன ரொம்ப ஆத்திகமா இருக்கு அவங்க பதிவெல்லாம், என்ன பண்றது நம் மொழியின் மேன்மையை அந்த காலத்திலே அதிகமா ஆத்திகம் வழியிலே தானே சொல்லி வச்சிருந்தங்க நம்ம பெரியவங்க! இந்த கால விஞ்ஞான செரிவுகள் இல்லாத தாலே அஞ்ஞானத்திலே தான் மொழியை வளர்க்க முடிஞ்சது! நாம ஏன் நம் மொழி வளர்ச்சியை விஞ்ஞான் செரிவுகளோட உயர்த்த முற்படக்கூடாது! நமக்கு பின்ன வரும் தலைமுறைங்களுக்கு உதவியா இருக்குமுல்ல! சரி இப்ப அதுக்கு என்ன பண்ணறது! ரொம்ப பேசனா ஞானவெட்டியான் பெரியவரை பொட்டிகட்டி அனுப்பிச்ச மாதிரி நம்மளையும் அனுப்பிச்சிடுவாங்க! விஷயத்துக்கு வர்றேன், நான் ரசிச்ச அந்த தமிழ் மணம் கமழும் அந்த ஒளவைப்பாட்டியின் 'ஞானப்பழத்தை பிழிந்து' பாட்டு( கே பி சுந்தரம்பாளின் கணீர் குரலுக்கு ஈடா இப்ப யாரு இருக்கா, கேட்டா நம்ம வயசுப்பசுங்க சொல்லுவாங்க, 'ஏன் இல்ல நம்ம மன்மத ராசா மன்மத ராசா புகழ் மாலதி இல்லை'யாம்பாங்க, ஏன் வம்பு!), தமிழ்கடவுள் வசனங்களை உங்களுக்கு தேன்கிண்ண விருந்து படைப்பதில் பெரும் மகிழ்ச்சிக் கொள்கிறேன்!

17 comments:

said...

ஆமாம்.
உண்மை. உண்மை. முக்காலும் உண்மை.

said...

உதயகுமார்,
என்னைக் கேட்டால், விஞ்ஞானத் தமிழை எழுதுபவர்களே ரொம்பக் குறைவு. அதில் உங்க விஞ்ஞானப் பதிவுகள் குறிப்பிடத் தகுந்தவை.

சமீப காலமா நீங்களும் விஞ்ஞானத்தை ஒதுக்கி வச்சிட்டு அரிதாரத்தில் ரொம்ப ஆழமா இறங்கிட்டீங்களோன்னு தோணுது.. தொப்புள் கொடி சேகரிப்பு பத்திய உங்க பதிவு இன்னும் என் மனசிலயே நிக்குது..அது போன்ற பதிவுகளை மீண்டும் தொடங்குங்களேன்..

said...

வணக்கம் வெளிகண்ட நாதர். மிக நல்ல பதிவு. தமிழ் மொழியில் இல்லாதது இல்லை. வாழ்க்கையை வாழக் கருத்துகள் அனைத்தும் தமிழில் கொட்டிக் கிடக்கின்றன. தமிழ்க் கடை விரித்திரிக்கிறது. ஆனாலும் கொள்வாரின்றி கடையாகக் கிடக்கிறது. முடிந்த வரையில் அதை எடுத்துச் சொல்ல வேண்டியது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வகையில் நமக்குக் கடமையாகிறது. அதே நேரத்தில் வன்முறையும் நேர்மையின்மையும் தவறான வழிமுறைகளும் நமக்குத் துணைவரலாகாது. ஆகையால் நாகரீகமாகவும் நேர்மையாகவும் முடிந்தவரையில் கருத்துச் சொல்லவும் வேண்டும்.

உங்கள் ஆதங்கமும் நியாயமானதே...நிலமை மாறுமா என்று தெரியவில்லை. கொஞ்சமேனும் மாற வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஏ.பி.நாகராஜன் படங்களில் ஆன்மீகப் படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் தமிழை முன்னிறுத்தியே இருக்கும். இதோ திருவிளையாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் படத்தால் அன்றோ "கொங்குதேர் வாழ்க்கை" என்ற சங்கப் பாடல் இன்னமும் புகழ் பெற்று ஓங்குகிறது. கந்தன் கருணையை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை தமிழ்ப் பாடல்கள். "அரியது கேட்கின்" "முருகனே செந்தில் முதல்வனே" போன்ற ஔவை மற்றும் நக்கீரரின் பாடல்கள் பிழைத்தன. திருவருட்செல்வரை எடுத்துக் கொள்ளுங்கள். "பண்ணின் நேர் மொழியாள்", "மாசில் வீணையும்", "காதலாகிக் கசிந்து", "சதுரம் மறை தான் துதி செய்து", "அப்பன் நீ" போன்ற தேவாரப் பண்களும் "உலகெலாம் உணர்ந்து" என்ற பெரிய புராணக் காப்புச் செய்யுளும் கிடைத்தன. திருமால் பெருமையை எடுத்துக் கொள்ளுங்கள். "வாரணமாயிரம் சூழ வலம் செய்து", "மார்கழித் திங்கள்", "பச்சைமாமலை போல் மேனி" போன்ற அருமையான பழந்தமிழ்ப் பாக்களும் சுவைக்கச் சுவைக்கச் சுவை குன்றாமல் கிடைத்தன. அத்தோடு கவியரசரும் தன்னுடைய திறமையால் இனிய பல தமிழ்க்கவிகளைக் கொடுத்தார். அந்தப் படங்கள் வந்த காலத்தில் என் தந்தையே படித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் இன்றைக்கும் ரசிக்க முடிகிறது.

said...

வெளிகண்ட நாதர்,
மிகவும் அருமையான பதிவு. உங்களின் கருத்துக்களோடு நான் முழுமையாக உடன்படுகிறேன்.

said...

வாங்க ஞான வெட்டியான் ஐயா, உங்களை கேட்காம உங்க பேரை உப்யோகிச்சதுக்கு மன்னிக்கவும்! சில பல அரிய கருத்துக்குள் உங்கள் பதிவில பார்த்து தமிழ் மொழியின் மேன்மையை பார்க்க அப்ப அப்ப பெருமையா இருக்கும்! அதைத் தான் சொல்ல வந்தேன், வேறே ஒன்னுமில்லை!

said...

பொன்ஸ், நீங்க சொல்றது வாஸ்தவதான், நானே ஒரு பதிவிலே சொல்லி இருந்தேன், இனி அதிகமா சினிமா கதை பேசமாட்டேன்னு! ஆனாலும் அதிலே தான் நம்ம ஆர்வம் இழுக்குது! ஏன்னா, சின்ன வயசிலேயிருந்து அது மேலே தீராத மோகம், அதான், மற்றபடி ஒன்னுமில்லை! விஞ்ஞான பதிவுகள் எழுத நிறைய டைம் செலவளிக்க வேண்டி இருக்கும்! அதுவும் இப்ப நான் ரொம்பவே பிஸியா இருக்கிறதாலே அதிகமா டைம் செலவழிச்சு எழுத முடியறதில்லை! இருந்தாலும் இனி எழுத தொடங்குறேன்! நானும் நிறைய எழுத வேண்டியது எவ்வளவோ பாக்கி இருக்கு!

said...

வாங்க ராகவன்! உங்கள் பதிவிகள் தமிழின் மேன்மையை எடுத்து சொல்வதில் ஒரு தனி அலாதி தன்மை இருக்கும்! அதிகமா நம்ம யாரும் அப்படி எழுத முற்படலயேன்னு, ஏன் நம்மலே எழுதறதில்லையேன்னு ஆதங்கம் எனக்குள்ள எப்பவும் இருந்துக்கிட்டிருக்கும்! இப்ப நாலாயிர திவ்விய பிரபந்தம், ஆழ்வார் பாடலகள் எல்லாம் படிச்சு அத்ன் பொருள், மொழி அழகை தெரிஞ்சுக்கனும்னு என்க்கு ரொம்பவே ஆசைகள்! அதுவும் நான் அதிகமா எழுதும் விஞ்ஞான பதிவுகளோட ஒட்டி அதனையும் கலந்து கொடுத்து, அதில வரும் கருத்துக்கள் எப்படி இப்போதைய சில விஞ்ஞான கருத்துகளோடு ஒத்து போகுதுன்னு எழுதனும்னு ஆசை தான், ஆனா அதுக்காக படிக்கணும்னு இருக்கு! இப்படி ஆயிரம் கதை நம்ம தமிழ் இலக்கிய கதைகளுக்குள்ள பொதஞ்சு கிடக்கு, ஆனா அதை நம்ம சட்டப் பண்றோமன்னு கேட்டா அதான் இல்லை! ம்.. மத்த வெட்டிக்கதை பேசி பொழுதை கழிக்கிறோம்!

அதே மாதிரி உங்க தகப்பனார் காலத்து படங்கள், பாடல்களை நீங்க ரசிக்கிற மாதிரி நம்ம காலத்து விஷயங்கள், நம்ம புள்ளை மார்கள் அப்படி ரசிச்சு சுவைக்க முடியுமாங்கிறது ஒரு கேள்விக்குறி தான்!

said...

வாங்க வெற்றி என்ன ஆளை ரொம்ப நாளா காணோம்?

said...

சார்

நல்ல பதிவு

நன்றி

said...

தமிழின்பால் காதலால்தானே தமிழ்மணம் பக்கம் வந்தோம். ஜி.ராகவனும் குமரனும் நிச்சயமாக நற்பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஞானவெட்டியான் அவர்களின் பதிவுகள் காலப்பெட்டகத்தில் வைத்துக் காப்பாற்ற வேண்டியவை. திரு இராம்.கி ஐயா அவர்களின் பதிவால் பல தமிழ் சொற்களின் ஆதியையும் பயனையும் அறிகிறோம். காசி, மயூரன், வெங்கட் மற்றும் உங்களைப் போன்றோரின் பதிவுகள் மூலம் விஞ்ஞானத்தையும் தெரிந்து கொள்கிறோம். தமிழறிய இந்த இணையத்தின் பங்கு முக்கியமானதே.

திரு A P நாகராஜனின் படங்கள் எல்லாமே தமிழின் நேர்த்தியான வசனங்களுக்கு பெயரெடுத்தவை. சமூகப் படங்களான வா ராஜா வா, திருப்பதி டு கன்யாகுமரி முதலிய படங்களையும் சொல்லலாம். அவரது ஆன்மிகத்தினால் குழப்பம் இல்லை; இன்றைய அரைகுறை ஆன்மீகவாதிகளால் தான் தவறான புரிதல்களும் மனகசப்புக்களும்.

said...

அன்பு வெளிகண்டநாதர்,
ஒரே ஊரைச் சார்ந்த உங்களுக்கு உரிமையில்லை என மறுப்பேனா?
எழுதியதில் தவறில்லையே!!

said...

உதயகுமார் ஐயா. உங்கள் மனத்தில் உள்ள ஆதங்கத்தை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பொன்ஸ் சொன்னதை முழுமையாக நான் வழிமொழிகிறேன். விரைவில் உங்கள் அறிவியல் கட்டுரைகளைத் தொடங்குங்கள். இராம.கி. ஐயாவையும் உங்களையும் பார்த்துத் தான் 'தமிழ் அறிவியல்' என்ற வலைப்பூவினைத் தொடங்கினேன். ஆனால் நீங்கள் சொன்னது போல் அறிவியல் கட்டுரைகள் எழுத கொஞ்சம் முன்வேலை செய்ய வேண்டியிருப்பதால் இன்னும் எதுவுமே அந்த வலைப்பூவில் எழுதவில்லை. விரைவில் எழுதவேண்டும்.

said...

சிவ பாலன் நீங்க நிறைய பதிவுகள் போடுறீங்க போல இருக்கு! என்னால தான் படிக்க முடியறதில்லை, நேரம் கிடைக்கிறப்ப படிக்கிறேன்!

said...

மணியன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, தமிழ் மீது உள்ள காதலால் தான் தமிழ் மணத்திலே ஐக்கியப் படுத்திக்கிட்டு இருக்கோம்! ஆனா அரிதில் பெரும்பாலோர் அதுக்கு உண்டான் மரியாதையை கொடுக்கலங்கிறதை நினைக்கிறப்ப கவலையா தான் இருக்கு!

said...

ஞான வெட்டியான் ஐயா, ரொம்ப ச்ந்தோஷம்!

said...

வாங்க குமரன் ரொம்ப நாளா நானும் உங்க பதிவுகளுக்கு வரமுடியறதில்லை, உங்க பதிவறிக்கை மெயிலும் நின்னுப்போச்சு, பஜகோவிந்தம் படிச்சு கோவிந்தா போட்டு எவ்வளவு நாளாச்சு, சீக்கிரமே வர்றேன்!

'தமிழ் அறிவியல்' வலைப்பூ நான் இன்னும் பார்க்கலையே, இதோ பார்த்துடுறேன்!

said...

வைசா, மிக்க மகிழ்ச்சி, செரிய முயற்சிக்கு அழைத்தமைக்கு! தொடர்ந்து ஆற்றுவோம் அப்பணி, பாட்டுக்கொரு புலவன் அழைப்பு எனக்கருதி!