Thursday, December 14, 2006

ஸ்ரீவித்யா, ரஜினி, கமல்-அபூர்வ ராகங்கள்!

என்ன இவெங்களை எல்லாம் அபூர்வராகங்கள்னு சொன்னா சரியா இருக்குமில்லை! ஆமா, இந்த டைட்டிலோட எடுத்தப் படம் 76ல வந்த அபூர்வ ராகங்கள்! நான் அப்ப விடலைப் பருவத்தின் மத்திமத்திலே இருந்த நேரம்! என்னமோ தெரியிலே, அந்த காலக் கட்டங்கள்ல இருந்த மத்த விடலைங்க மாதிரி இல்லாம, கொஞ்சம் கொஞ்சமா எம்ஜிஆர், சிவாஜி மோகம் எல்லாத்தையும் விட்டுட்டு அப்ப பாலசந்தர் படங்கள் மேலே அதிகமான ஈடுபாட்டோட காலம் கழிச்ச தினங்கள் அதெல்லாம்! இப்ப சமீபத்திலே ஸ்ரீவித்யா மறைந்த செய்தியை கேட்டு, அப்பறம் அதை நெட்டுல பார்த்தோன, எனக்கே தெரியாத ஒரு சோகம்! ஒரு நல்ல நடிகை! அதுவும் அந்த காலகட்டத்திலே என்னமோ மத்த நடிகைகள் கிட்ட இல்லாத ஒரு தெய்வீக அழகு இந்தம்மாக்கிட்ட இருந்ததாலேயோ என்னமோ, எனக்கு ரொம்ப புடிச்ச நடிகை அப்ப! அதுவும் இந்த படம் என்னை ரொம்பவும் மயக்கின ஒன்னு! என்னமோ சிக்கலா உறவுமுறைகள்ல வரும் பினக்கத்தை பத்தி சொன்ன கதை! இந்த மாதிரி இப்ப வேணும்னா சகஜமா கதை பண்ணி படம் பண்ணுனா எல்லாரும் ஒத்துக்கிட்டு, ட்டீகேன்னு போய்டுவாங்க! கொஞ்சம் 30 வருஷத்துக்கு முன்னே நினைச்சிப் பாருங்க, சான்ஸே இல்லை, அது மாதிரி கதை களம் எடுத்துக்கிட்டு, அதை ரசிக்கிறப்படி சொல்ல பாலசந்தராலே மட்டும் அப்ப முடிஞ்சது! அதுக்கப்பறம் வயசானவனை காதலிச்சு கதை சொல்லி மயக்க பாரதிராஜா வந்தது வேறே கதை!

இந்தப்படம் பலருக்கு வாழ்க்கை கொடுத்த ஒன்னு! வெறும் சின்னப்பையனா, மீசை அரும்பி, அதிகமா சொல்லிக்கிற மாதிரி எதுவும் படங்கள் வராம இருந்த நேரத்திலே, இந்தப்படம் கமலுக்கு, ஒரு அல்வா மாதிரி! அப்ப கமலும் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி எதுவும் நடிக்கலை! (கமலுக்கு நடிக்கவே தெரியாது அப்ப, அவரு அழுதா மூஞ்சியை பொத்திக்கிட்டு எம்ஜிஆர் ஸ்டல்ல அழுது நடிச்சி ஒப்பேத்தினார், இப்பவும் அவரை மகா நடிகர், அப்படி இப்படின்னு சொல்லி ஆடறவங்களுக்கு, ஒரு தனி பதிவு அப்புறமா போடறேன், கமல் எப்படி தன்னுடய குறைகளை சாமார்த்தியமா மறைச்சு நடிச்சாருன்னு!) சரி நீயும் கொஞ்சம் நடின்னு பார்த்து பாலசந்தர், வன்முறை தான் எல்லாத்துக்கும்னு நம்பிக்கிட்டிருக்கிற ஒரு இளைஞனை எப்படி ஒரு மத்திம வயசுக்காரி மாத்தி நல்ல கொண்டு வர்றான்னும், அப்பறம், அதுவே அவமேலே எப்படி காதல் கொள்ள தூண்டுதுங்கிறதை சொல்லியிருப்பார். ஆனா வழக்கம் போல அவரு ஸ்டைல்ல, முடிச்சுகளான பந்தகளிடையே ஏற்படும் சிக்கலான உறவை கதை சொல்லி மக்களை ஆச்சிரிய படுத்தின அந்த டெக்னிக்கை மக்கள் அப்ப நல்லாவே ரசிச்சாங்க!

இது மாதிரி ஸ்ரீவித்யா மகள் ஜெயசுதா கமலோட அப்பாவான மேஜர் சுந்தர்ராஜன் மேலே மையல் கொண்டு கல்யாணம் பண்ணிக்க ஆசைபட, அவரோ தனக்கு மக மாதிரி வச்சுக்க ஆசைப்பட இன்னொரு சிக்கலான உறவு முறை கோணங்கள் பார்க்க சுவராசியமா இருக்கும், அதுவும் "என்னோடய அப்பா யாருக்கு மாமனாரோ.." அப்படின்னு ஆரம்பிக்கிர புதிருக்கு விடை என்னான்னு சொல்லி முடிச்சி அவிழ்த்திருப்பாரு பாலசந்தர்! இந்த பாலசந்தர் படங்கள்ல வர்ற குறும்பு பொண்ணுங்க எல்லாம் பண்ற ஷேஷ்டைகள் இதிலேயும் உண்டு, அதை ரசிக்கலாம், அதாவது ஜெயசுதா நாக்கை சுழட்டறது ஒரு மேனரிசம்! இது மாதிரி மேனரிசத்தை அவரோட பல படங்கள்ல நீங்க பார்க்கலாம், உதாரணத்துக்கு, மன்மதலீலையிலே கமலோட செக்ரெக்ட்ரிக்கு அடிக்கடி கண்ணடிக்கிற வீக்னஸ், அவள் ஒரு தொடர்கதையிலே ஜெயலட்சுமி சொல்ற அந்த "ஃபடாபட்", அப்பறம் அரங்கேற்றத்திலே வர்ற "அச்சச்சோ", இதெல்லாம் அப்பறம் அந்த மாதிரி பேசி நடிச்ச நடிகைகளுக்கு அடைமொழியானது எல்லாருக்கும் தெரிஞ்சது!

அப்புறம் பைரவி ராகத்திலேயே வந்த "அதிசய ராகம்" பாட்டு, பாட்டாலே தன் காதலை சொல்லி, ஸ்ரீவித்யாக்கிட்ட அரை வாங்கிக்கட்டிக்கிட்டு,அப்பறம் அதுலேயே போகும் மெலோடிராமா, பார்க்க சுவராசியமா இருக்கும்! பாலசந்தர் அதிகமா கலை நயம் வேணும்னு பொம்மைகள், சிலைகள் எல்லாத்தையும் ஃபோக்கஸ் பண்ணி கதை சொல்ல ஆரம்பிச்சது இந்த படத்திலேருந்து தான், கையொடிஞ்ச மேலாக்கு போடாத பொம்பளை சிலையை வச்சு அழகா கமலோட காதல் மனம் எப்படி மாறுதுன்னு சொல்லுவாரு, டைரக்டோரியல் சிம்பாலிஸம்! இதெல்லாம் தமிழ் படங்கள்ல அப்ப புதுசு, அதுவும் வெறும் கேரக்டர்களையே சுத்தி சுத்தி ஓடர கேமராக்கள், இது மாதிரி நடிகர் நடிகை இல்லாம காட்சியின் வீரியத்தை இந்த மாதிரி சில ஆப்ஜக்ட்ஸ், மற்றும் வேற மாதிரி காட்சிகளை காமிக்க ஆரம்பிச்சது இந்த கால கட்டத்திலே தான், அதுக்கு முன்னே கற்பழிப்பு சீனை காமிக்க புலி மானை துரத்திற போஸ்டரை ஃபோக்ஸ் செய்றதோட முடிஞ்சது! (இந்த மாதிரி காட்சி அமைப்புகளை பத்தி தனியாவே ஒரு பதிவு அப்பறம் போடறேன்!)

அப்புறம் இன்னொன்னு தெரியுமா பாலசந்தர், மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் வசனங்களை விட காட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்கன்னு நான் சொல்லி இருக்கேன், வித்தியாசமான கதைகளின் ஆக்கம் கொண்டதா இருந்தது இவங்க படங்கள்! ஆனா இவெங்க எல்லாத்துக்கும் சினிமாவிலே முதன் முதலா அடி எடுத்து வச்சது எம்ஜிஆர் படத்துக்கு வேலை செய்யன்னா நீங்க எல்லாரும் ஆச்சிரியப்படுவீங்க! அவரு படத்துக்கு கதை வசனம் எழுத வந்தவுங்க இவங்கே, ஆமா "அன்பே வா" படத்துக்கு வசனமமெழுதுனது பாலசந்தர்!

அடுத்தது நம்ம தலைவர் ரஜினி பத்தி சொல்லனும்! இந்த படத்திலே அறிமுகமானவர்னு உங்களுக்கெல்லாம் தெரியும்! ஆன நடிக்க வந்த கதையை பத்தி தெரிஞ்சிக்கணும்னா சரித்திரம் படிக்க இங்கே போங்க! இந்த படம் வெளியானப்ப ரஜினிக்கு ஒரு அடையாளம் எதுவும் கிடைக்கவில்லை! அந்த அடையாளத்தை கொடுத்தது மூன்று முடிச்சு! ஆனா இந்த படத்திலே அவரு எந்த வேகத்தையும் காட்டல, அமைதியா நடிச்சு, ஆனா அசத்தியிருந்தார். அவ்ருக்கு தெரிஞ்சோ தெரியாமலேயோ முதகாட்சியே பெரிய கதவை திறந்துக்கிட்டு வர்ற மாதிரி, அந்த ஆரம்பமே ஒரு நல்ல ஆரம்ப காட்சி, இது போல பெரிய ஆளான எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு காட்சின்னு நான் சொல்லுவேன்! ஆனா நான் என் ஃபிரண்ட்ஸ் பார்த்திட்டு இந்த புதுசா நடிச்சவருக்கு என்னமோ காந்த சக்தி இருக்குன்னு அந்த படத்திலேருந்தே நாங்க அவரோட ரசிகரானது என்னவோ உண்மை, அதுக்கு சாட்சி வாரி வழிச்சி சிவகுமார் மாதிரி பஃப் வச்சி சீவிக்கிட்டிருந்த நான் முடியை முன்னால அவரு ஸ்டைல்ல வச்சிக்க ஆரம்பிச்சேன், இதை பத்தி நான் எனை ஆண்ட அரிதாரத்திலேயே சொல்லி இருந்தேன்!

அவரு சரித்திரதை இங்கே படிச்சிருந்தீங்கன்னா, ஒன்னு தெரியும், நீ தமிழ் கத்துக்கிட்டு வா, உன்னை எங்கெயோ கொண்டி விடுறேன் பாலசந்தர் சொன்ன சொல்படி எங்கயோ போனது உண்மை தான்! அப்ப வந்த எந்த ஆர்டிஸ்டும் தமிழ் ஒழுங்கா கத்து பேச தெரிஞ்சா தான் வெற்றி நிச்சயம்! அது பாடுனாலும் சரி, ஆடுனாலும் சரி, அதுக்கு எவ்வளவோ பேர் உதாரணம், சாவித்திரி, சரோஜாதேவி, பி சுசீலா, எஸ் பி பாலசுப்ரமணியம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம், இவங்க எல்லாம் தாய்மொழி வேறயா இருந்தாலும் உண்மையிலே ரொம்ப ஆர்வமா சிரமம் எடுத்து கத்து ஜெயிச்சாங்க, இப்ப வர்ற ஆளுங்க மாதிரி இல்லாம! இந்த தொழில்நுட்பம், மல்டிபிள் டிராக ரெக்கார்டிங், டப்பிங்னு வந்ததிலேருந்து மொழி தெரியலேன்னாலும் பெரியாளாயிடுறாங்க! இது அதிகமா வந்தது 80துக்கப்பறம் தான், அதுவும் பாரதிராஜா கோஷ்டி ஆரம்பிச்ச வச்ச ஒன்னு! ஒரு வார்த்தை சுட்டு போட்டாலும் வர்றாத பஞ்சாபி குலாபி, ரத்தியை வச்சி படமெடுத்து வெற்றி படமாக்கி, அப்பறம் தமிழ்ன்னு ஒன்னு தேவையில்லை தமிழ் படங்கள்ல நடிக்கன்னு ஆரம்பிச்சு வச்சது இந்த கும்பலுதான், அப்படி டப்பிங் பேசி ரஜினி ஆட்டம் போட்டிருந்தா இன்னைக்கு மோகன் மாதிரி பெங்களூருக்கே போயிருப்பாரு! இதை பத்தி எஸ்பிபி ஒரு பேட்டியிலே சொல்ல கேள்வி, அதுவும் உதித் நாரயண் மாதிரி ஆளுங்க கடிச்சி துப்பி 'ப்ர்வாயில்லை'ன்னு பாட்டு படிக்க, அதையும் நம்ம ரசிச்சு, தேவுடா, அதான் இன்னைக்கு இந்த நமீதா வரை ஓடிக்கிட்டு இருக்கு! இது பத்தாதுன்னு டிவியிலே கேம்பயிரிங் பண்ற ஆளுங்க தமிழை போட்டு கொல்றது இன்னும் உச்சம்! (இதை பத்தி தனியா இன்னொரு பதிவு உண்டு!)

ஆக இந்த படம் அபூர்வமா இருந்தது என்னமோ உண்மை! ஒரு மீடியமான வெற்றி, வழக்கம் போல பி,சி செண்டர்ங்கள்ல அதிகம் ஓடலை,ஆனா எல்லோருக்கும் பேரு வாங்கி கொடுத்த ஒன்னு! அந்த படக்காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு, அப்பறம் 'A Tribute to Srividya'!

26 comments:

said...

//அப்ப பாலசந்தர் படங்கள் மேலே அதிகமான ஈடுபாட்டோட காலம் கழிச்ச தினங்கள் அதெல்லாம்!//
ஆமா. அப்போ தான் அரங்கேற்றம் போன்ற திரைப்படங்கள் வந்தது இல்லை B-)

//கமல் எப்படி தன்னுடய குறைகளை சாமார்த்தியமா மறைச்சு நடிச்சாருன்னு//
அட! அதுவும் ஒரு திறமை தானே சார்!!

//அந்த அடையாளத்தை கொடுத்தது மூன்று முடிச்சு!//
ம்ம்...என்னோட ஃபேவரைட்.

//நீ தமிழ் கத்துக்கிட்டு வா, உன்னை எங்கெயோ கொண்டி விடுறேன் பாலசந்தர் சொன்ன சொல்படி எங்கயோ போனது உண்மை தான்! //
ஆனா, கடைசி வரை தலைவர் தமிழ் கத்துக்கவே இல்லையே...:(
"மொரியா சாதகம் பன்னா வ்வராத வித்தியே கடியாது" - சந்திரமுகி

said...

//ஆமா. அப்போ தான் அரங்கேற்றம் போன்ற திரைப்படங்கள் வந்தது இல்லை B-)//குறும்புக்காரச் சீனு, கரெக்டா சொல்றீங்களே!, ஒன்னு தெரியுமா அப்ப தான் மஞ்சுளா நடிச்ச மறுபிறவியும் வந்தது, இரெண்டுமே 'A' படம் தான், ஆனா டிக்கெட்டு மறுபிறவிக்கு கிடைக்காம, அரேங்கேற்றம் படத்துக்கு கிடைச்சு ரிலீஸ் ஆனவாரமே போய் பார்த்தேன், அப்புறமா தான் மறுபிறவி பார்த்தேன்! படம் பார்க்க அரேங்கேற்றம் நல்லா இருந்தாலும் 'அந்த' காட்சிகள் மறுபிறவியிலே தான்டாப்பு! மஞ்சுளா நடிச்ச காட்சி எல்லாம் ரொம்ப ச்ஜூடு ஏத்தின ஒன்னு!

//அட! அதுவும் ஒரு திறமை தானே சார்!!//நீங்க என்னா கமல் ரசிகரா??

//ஆனா, கடைசி வரை தலைவர் தமிழ் கத்துக்கவே இல்லையே...:(
"மொரியா சாதகம் பன்னா வ்வராத வித்தியே கடியாது" - சந்திரமுகி// 'ப்ர்வாயில்லை'க்கு இது தேவலாமுன்னு தோணுது!

said...

//படம் பார்க்க அரேங்கேற்றம் நல்லா இருந்தாலும் 'அந்த' காட்சிகள் மறுபிறவியிலே தான்டாப்பு!//
'மறுபிறவி', மிட்நைட் மசாலாவில் பாடல் பார்த்திருக்கிறேன். பின் ஒரு நாள் ராஜ் வீடியோ விஷனில் VCDகள் வாங்கும் பொழுது அங்கு வேலை பார்ப்பவர், 'சார்! இந்த படம் நல்லா இருக்கும்' அப்படீன்னு இந்த படத்தோட சி.டி. கொடுத்தார். எனக்கு வாங்க இஷ்டமில்லை. என் நண்பன் வாங்கினான். ஆஹா! இவனல்லவோ நண்பன் அப்படீன்னு நினைச்சேன்.

//மஞ்சுளா நடிச்ச காட்சி எல்லாம் ரொம்ப ச்ஜூடு ஏத்தின ஒன்னு!//
அட! அதுல அம்மா வேசத்துல வேற வருவாங்க. அப்போ கூட ஒழுங்கா புடவை கட்டியிருக்க மாட்டாங்க. அந்த அளவு பாத்திரத்தில் ஒன்றி நடிச்சிருப்பாங்க.

மற்றபடி 'அரங்கேற்றம்' சிறிய வயதில், அறியாத வயதில், குடும்பத்துடன் பார்த்தேன் (நம்புங்க! ஒரு 20-25 பேர் வீட்டில் உட்கார்ந்து பார்த்தோம், கேபிளில்).

//நீங்க என்னா கமல் ரசிகரா??//
அப்படியெல்லாம் இல்லை. நான் தலைவர் ரசிகராக்கும். கமலையும் ரொம்ப பிடிக்கும்.

//'ப்ர்வாயில்லை'க்கு இது தேவலாமுன்னு தோணுது!//
ம்ஹூம்! "மொரியா சாதகம் பன்னா வ்வராத வித்தியே கடியாது"-ன்னு சொன்ன ரஜினி, கடைசி வரைக்கும் சாதகமே பன்னல. அதான் இப்படி பேசுறாரு.

said...

நன்றாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். படமும் தெளிவாக இருந்தது.

said...

வருகைக்கு நன்றி சேதுக்கரசி!

said...

நல்ல திறனாய்வாக எழுதப்பட்ட பதிவு.

'ம்ம்..ம்ம். பழைய நினப்புடா பேராண்டி'ன்னு சொல்ல வைக்கிறீங்களே..

said...

வெளி, டிரெய்லருக்கு நன்றி. நேத்து கனகு அவர்களின் சின்ன மாமி பதிவு. இன்றைக்கு உங்களுடையது. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே :-))))

சீனு, பதிவைவிட உங்க பின்னுட்டம் சூப்பர் :-) ரஜினியின் வெற்றி எனக்கு இன்று வரை புரியாத புதிர். அழகா, நிறமா, நடிப்பா வசன உச்சரிப்புக்கூட இன்றுவரை சொதப்பல். எங்க பாட்டி சொல்றாப்ல, இதெல்லாம் சுழி :-)

said...

//'ம்ம்..ம்ம். பழைய நினப்புடா பேராண்டி'ன்னு சொல்ல வைக்கிறீங்களே..//வாங்க தருமி சார்! பழசை அப்ப அப்ப ரிவைஸ் பண்ணா தானே ருசிக்கும்! இது போன்ற நினைப்பு நெறைய இருக்கு! 'ம்... நினைப்புதான் பொழப்புக் கெடுக்குதுன்னு', இதோ, வீட்டுக்காரம்மா குரலு குடுக்கிறது கேட்கிது-:)

said...

//ரஜினியின் வெற்றி எனக்கு இன்று வரை புரியாத புதிர். அழகா, நிறமா, நடிப்பா வசன உச்சரிப்புக்கூட இன்றுவரை சொதப்பல். எங்க பாட்டி சொல்றாப்ல, இதெல்லாம் சுழி :-)//உஷா, ரஜினியின் வெற்றிக்கு ஒரே காரணம் ஆம்பளைத்தனம் ஜாஸ்த்தி, கொஞ்சம் நடிக்க வந்த எல்லா நடிகர்களையும் பார்த்தீங்கன்னா, பெண்மை கலந்த தோற்றம் எல்லாருக்குமே இருக்கும், ஏன் வீரதீரமா சண்டைப்போட்ட அந்த கால எம்ஜிஆர்லருந்து இப்ப இருக்கிற எல்லா பொடி நடிகன் வரை பாருங்க, அப்படி தான், இதிலே கொஞ்சம் விலக்கமா, நான் சொன்ன இலக்கணத்தோட இருக்கிறது இப்ப வந்த விஷால் தான்! இது ஆண் பெண் இருவருக்குமே பிடித்த அம்சம், அதான் ரஜினியின் வெற்றி ரகசியம்!

said...

//கமலுக்கு நடிக்கவே தெரியாது அப்ப, அவரு அழுதா மூஞ்சியை பொத்திக்கிட்டு எம்ஜிஆர் ஸ்டல்ல அழுது நடிச்சி ஒப்பேத்தினார், இப்பவும் அவரை மகா நடிகர், அப்படி இப்படின்னு சொல்லி ஆடறவங்களுக்கு, ஒரு தனி பதிவு அப்புறமா போடறேன், கமல் எப்படி தன்னுடய குறைகளை சாமார்த்தியமா மறைச்சு நடிச்சாருன்னு//

கமல் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர். ஆரம்ப காலத்தில் அவருக்கு நடிக்க வரவில்லை என்பது உண்மை ஆனால் நாளாக நாளாக அவர் மெச்சூர் ஆனார்.

ஆபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள வேடத்தில் அவருடைய உருவத்தைமட்டும் பார்த்தோம் ஆனால் அவர் முகத்தையும் குள்ளர்கள் போல் சற்று வலித்து வைத்துக் கொள்வதை எத்தனை பேர் கவனித்தார்கள் என தெரியவில்லை . இந்த மாதிரி சின்ன சின்ன அங்க சேஷ்டைகளை செய்ய கற்றுக் கொண்டார்.

நாயகனின் அவரின் பேமஸான அழுகையை மிக செயற்கை என்பேன் அதே நேரத்தில் பேசும் படத்தில் அவர் நடிப்பு மிக நன்றாயிருந்தது.

said...

வெ.நா,
ஆகா! மிகவும் அருமையான பதிவு. பல தடவைகள் படித்து/பார்த்து/கேட்டு இரசித்தேன். குறிப்பாக ஒளிக்காட்சிகள் , உங்களின் விளக்கத்தோடு மிகவும் நன்றாக இருந்தது. கவியரசர் - மெல்லிசை மன்னர் தந்த பல அழியாத கானங்களில் இப் பாடல்களும் அடங்கும்.

படக்காட்சியில் ஒரே ஒரு சின்னக் குறை. சொன்னால் தப்பாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அதிசய ராகம் பாடல் பிறந்த கதைக்கான மெல்லிசை மன்னரின் விளக்கத்தோடு அப் பாடலும் பின்புலத்தில் ஒலிப்பதால் அவரின் சில கருத்துக்களைத் தெளிவாகக் கேட்க முடியவில்லை. விளக்கத்தையும் பாடலையும் தனியாகப் போட்டால் மெல்லிசை மன்னரின் முழுக்கருத்தையும் தெளிவாகக் கேட்கலாம் என நினைக்கிறேன். இச் சிக்கல் எனக்கு மட்டுமா அல்லது மற்றவர்களுக்குமா என எனக்குத் தெரியாது.

நன்றி.

said...

//அவரு படத்துக்கு கதை வசனம் எழுத வந்தவுங்க இவங்கே, ஆமா "அன்பே வா" படத்துக்கு வசனமமெழுதுனது பாலசந்தர்!//

ஐயா!
அது அன்பே வா இல்லை..பாலசந்தர் வசனம் எழுதியது 'தெய்வத் தாய்'.

said...

//இப்பவும் அவரை மகா நடிகர், அப்படி இப்படின்னு சொல்லி ஆடறவங்களுக்கு, ஒரு தனி பதிவு அப்புறமா போடறேன், கமல் எப்படி தன்னுடய குறைகளை சாமார்த்தியமா மறைச்சு நடிச்சாருன்னு//

சே! சே! மகா நடிகனா ? மகாநதி,சலங்கை ஒலி போன்ற படங்களிலெல்லாம் அவர் நடிச்சது ஒரு நடிப்பா ? ஏதோ ஒப்பேத்தியிருக்கார் ..இல்லையா சார் ? நீங்க ரஜினி ரசிகனா இருங்க..ஆனா ஊத்துரதுக்கு ஒரு அளவு இல்லியா?

said...

//கமல் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர். ஆரம்ப காலத்தில் அவருக்கு நடிக்க வரவில்லை என்பது உண்மை ஆனால் நாளாக நாளாக அவர் மெச்சூர் ஆனார்.//சிவா, இதை இதைத்தான் சொல்ல வந்தேன்! அதைச் சரியா சொல்லீட்டீங்க!

said...

//படக்காட்சியில் ஒரே ஒரு சின்னக் குறை. சொன்னால் தப்பாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அதிசய ராகம் பாடல் பிறந்த கதைக்கான மெல்லிசை மன்னரின் விளக்கத்தோடு அப் பாடலும் பின்புலத்தில் ஒலிப்பதால் அவரின் சில கருத்துக்களைத் தெளிவாகக் கேட்க முடியவில்லை. விளக்கத்தையும் பாடலையும் தனியாகப் போட்டால் மெல்லிசை மன்னரின் முழுக்கருத்தையும் தெளிவாகக் கேட்கலாம் என நினைக்கிறேன். இச் சிக்கல் எனக்கு மட்டுமா அல்லது மற்றவர்களுக்குமா என எனக்குத் தெரியாது.// வெற்றி, இந்த துண்டுப்படம் எடிட்டிங்ல கொஞ்சம் சொதப்பலானது என்னமோ வாஸ்த்தவம் தான், அது இனிமே வராது, உங்களை மாதிரி நிறைய ரசிகர்கள், பதிவு வாசிப்பவர்கள் என்னுடய இந்த முயற்சிக்கு ஒரு பாராட்டு இருக்கும் வரை இதை விட இன்னும் பெட்டரா செய்யனும்னு ஆசை இருக்கு,பார்க்கலாம் எப்படி வருதுன்னு, மீண்டும் நன்றி!

said...

ஜோ, தெய்வத்தாய் அன்பே வாவிற்கு அப்பறம் வந்த படமா?

//நீங்க ரஜினி ரசிகனா இருங்க..ஆனா ஊத்துரதுக்கு ஒரு அளவு இல்லியா?// நான் ரஜினி ரசிகனா இருந்ததை மறுக்கவில்லை! ஆனா கமலையும் பிடிக்கும்-:)
நீங்க தீவிர கமல் ரசிகர் தான் ஒத்துக்கிறேன், ஆனா உங்களுக்கு just ஒரு பதில் கொடுக்க முடியாது, அதுக்கு ஒரு detailed பதிவு எழுதி விளக்கினா தான் புரியும்! ஆக அதுக்கு கொஞ்சம் wait பண்ணுங்க!

said...

//ஜோ, தெய்வத்தாய் அன்பே வாவிற்கு அப்பறம் வந்த படமா?//
இல்லை..தெய்வத்தாய் தான் முதலில் வந்த படம் ('மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' பாடல் இடம் பெற்றது).. இந்த படத்திற்கு வசனம் எழுதித் தான் பாலச்சந்தர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் .அதன் பிறகு அவர் எம்.ஜி.ஆரோடு பணி புரிந்ததாக தெரியவில்லை .அன்பே வா திரிலோகசந்தர் படம் .அதற்கும் பாலசந்தருக்கும் சம்பந்தம் இல்லை.

மகேந்திரனை பொறுத்தவரை ,கல்லூரி விழாவில் அவர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் பேசியது எம்.ஜி.ஆரை கவர்ந்தது. அவர் சென்னைக்கு வந்த பிறகு எம்.ஜி.ஆர் அவரை 'பொன்னியின் செல்வன்'-க்கு திரைக்கதை எழுத பணித்தார் .ஆனால் அந்த படம் எடுக்கப்படவில்லை .எந்த எம்.ஜி.ஆர் படத்திலும் அவர் பணிபுரியவில்லை .இயக்குநர் ஆவதற்கு முன்னர் சில படங்களுக்கு வசனம் எழுதினார் .அதில் குறிப்பிடத்தக்கது 'தங்கப்பதக்கம்'.

said...

//நீங்க தீவிர கமல் ரசிகர் தான் ஒத்துக்கிறேன், ஆனா உங்களுக்கு just ஒரு பதில் கொடுக்க முடியாது, அதுக்கு ஒரு detailed பதிவு எழுதி விளக்கினா தான் புரியும்! ஆக அதுக்கு கொஞ்சம் wait பண்ணுங்க!//

தீவிரமெல்லாம் கிடையாது .தீவிர சிவாஜி ரசிகன் என்று சொல்லலாம் .கமல் ரசிகனும் கூட .எனக்கும் தான் ரஜினி பிடிக்கும்.உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் .

said...

ஜோ, மகேந்திரன் கதை எனக்குத்தெரியும் நீங்க சொன்னது சரி, ஆனா அன்பேவா டைரக்ட் பண்ணுனது ஏ சி திரிலோகச்சந்தர், கதை வசனம் எழுதினது பாலசந்தர், இல்லையா?

said...

நான் அறிந்த வரைக்கும் அன்பே வா-வுக்கும் பாலசந்தருக்கும் சம்பந்தம் இல்லை .ஆனால் ஒன்று உறுதியாக தெரியும் .பாலசந்தர் திரையுலகில் நுழைந்தது 'தெய்வத்தாய்' படத்தின் வசன கர்த்தாவாக.

said...

//தீவிரமெல்லாம் கிடையாது .தீவிர சிவாஜி ரசிகன் என்று சொல்லலாம் .கமல் ரசிகனும் கூட .எனக்கும் தான் ரஜினி பிடிக்கும்.உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் .//கண்டிப்பாக, விரைவில்!

said...

//நான் அறிந்த வரைக்கும் அன்பே வா-வுக்கும் பாலசந்தருக்கும் சம்பந்தம் இல்லை .ஆனால் ஒன்று உறுதியாக தெரியும் .பாலசந்தர் திரையுலகில் நுழைந்தது 'தெய்வத்தாய்' படத்தின் வசன கர்த்தாவாக.//ஒகே, நான் சொல்ல வந்தது, பாலசந்தர் தமிழ் படம் எடுக்க உள்ளே நுழைஞ்ச கருத்தை!

said...

வெளிகண்ட நாதர்,
இவன் சொல்லுறத பார்த்தா தெய்வத்தாய் ரீலீஸான போது தியேட்டர்ல பாத்திருப்பான் போல-ன்னு நினைக்காத்தீங்க .உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆகும் போது கூட நான் பிறந்திருக்கவில்லை ..ஹி..ஹி.

said...

//உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆகும் போது கூட நான் பிறந்திருக்கவில்லை ..ஹி..ஹி.//ஓ.. அப்படியா, தெய்வத்தாய், அன்பே வா வந்தப்ப நான் கூட சின்ன பையனா தா ஒன்னங்கிளாஸ், இரண்டாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்திருப்பேன்னு நினைக்கிறேன், ஆனா உலகம் சுற்றும் வாலிபன் வந்தப்ப ஏகப்பட்ட விவரம் தெரியும்! ஆனா அதனாலென்னா, விஷயம் தெரிஞ்சிக்க இப்ப என்னா சாதனமா இல்லை! ஆனா அந்த காலத்திலே அந்த படங்கள் வந்தப்ப, எங்களால் உணரப்பட்டதை நான் சொல்ல முடியும், உதாரணத்துக்கு இந்த கமலேட எபிசோடே எடுத்துக்கங்களே, நான் சொல்ல வரும் விஷயங்கள் வெறும் கேள்வி ஞானத்தாலே வந்தது இல்லே, அப்ப நாங்க அனுபவிச்சது! சொல்ல கேள்விப்பட்டிருக்கிங்களா?? அதுவும் அப்ப கமல் பருவ வயசிலே பண்ணிக்கிட்டே அத்தனை சேட்டைகளையும் நாங்க காப்பி பண்ணி கூத்தடிச்சுக்கிட்டு இருந்தோங்கிறதையும் இங்கே சொல்லிக்க விரும்புறேன்!

said...

கச்சேரி நன்றாக நடக்கும்போது சுருதிபேதம் வரக்கூடாதென்று தூரத்திலிருந்து இரசித்துக் கொண்டிருக்கிறோம். கலக்குங்க !
இதிலே மூன்று பதிவுகளை கட்டியம் கூறியிருக்கிறீர்கள், காத்திருக்கிறோம்.

said...

//கச்சேரி நன்றாக நடக்கும்போது சுருதிபேதம் வரக்கூடாதென்று தூரத்திலிருந்து இரசித்துக் கொண்டிருக்கிறோம்.// ஓகோ, நீங்க பால்கனி கோஷ்டியா?

//இதிலே மூன்று பதிவுகளை கட்டியம் கூறியிருக்கிறீர்கள், காத்திருக்கிறோம்.// சும்மா சொன்னேன், இதிலே இவ்வளவு எதிர்பார்ப்புன்னா, இந்தோ ஆரம்பிச்சிட்டேன்!