Tuesday, December 19, 2006

ஹலோ, மைடியர் ராங் நம்பர்!

என்ன மன்மதலீலை படத்திலே வர்ற இந்த டைட்டில்ல போட்டிருக்கிற பாட்டை உங்களுக்குத் தெரியுமா? தெரியலைன்னா கவலைப்படாதீங்க! உங்களுக்கு ஒரு விஷேஷ வீடியோ கிளிப் கீழே காத்துக்கிட்டுருக்கு, அப்பறமா பார்த்துக்கலாம்! சரி இப்ப இது எதுக்கு இந்த பாட்டு கச்சேரி எல்லாம்னு கேட்கிறீங்களா! காரணம் இருக்கு. நேத்து மன்மதலீலை படம் பார்த்தேன், இந்த படம் வந்து சரியா முப்பது வருஷமாச்சின்னு நினைக்கிறேன். ஆனா இந்த மாதிரி பழையப்படங்களை பார்க்கிறப்ப சில காட்சிகள், வசனங்கள், பாட்டுகள் எல்லாம் அந்தந்த காலத்துக்குத்தான் பொருந்தி வரும் அதாவது, அந்த படங்கள் வந்த காலகட்டத்துக்கு தான் பொருந்தி வரும்! இரண்டு நாளைக்கு முன்னே பாமா விஜயம்னு ஒரு படம் பார்த்தேன்(சரி, இந்த படத்தை பத்தி சில முக்கிய விஷயங்கள் இருக்கு, அப்பறமா ஒரு பதிவு எழுதுறேன்) அதிலேயும் சில வசனங்கள் இருந்தது, ஆனா அது இந்த காலத்துக்கு பொருந்தி வராது, அது மாதிரி இந்த ராங் நம்பர் கதையை பத்தி சொல்லியாகணும், அதாவது இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, இந்த முப்பது ஆண்டுகள்ல நம்மலை எங்க கொண்டி விட்டிருக்குங்கிறதை கொஞ்சம் பார்க்கலாமா?

இந்த மன்மதலீலை படம் வந்தப்ப, இந்த ராங் நம்பரை வச்சு பாட்டு கதை வந்தது எல்லாம் நடைமுறையில இருந்ததை வச்சு தான், அதாவது முப்பது வருஷத்துக்கு முன்னே டெலிபோன் பத்து வாட்டி ஒரு நாளைக்கு பேசினீங்கன்னா, அதிலே அஞ்சு வாட்டி ராங் நம்பர் விழுக சான்ஸ் இருக்கு, ஏன்னா அப்ப நமக்கு கிடைச்ச டெலிபோன் சேவை அப்படி! முதல்ல இந்த டெலிபோன்ங்கிறது பெரிய விஷயம் அப்ப! முதல்ல இந்த வசதி எல்லார்கிட்டேயும் கிடையாது. இன்னைக்கு நம்ம சொல்றோமே மத்திய வர்க்கம்னு, அவங்ககிட்ட எல்லாம் இப்ப இது 'take it for granted'. அதுவும் சும்மா இப்ப இந்த தெரு முகனையிலே பழம் வெத்திலை பாக்கு வாங்க போய்ட்டு, அங்கிருந்துக்கிட்டு ரஸ்தாலி வாங்கறதா, இல்லா பூவம்பழம் வாங்கிறதான்னு ஆயிரத்துட்டு தடவை செல்லை அமுக்கி வீட்டுக்கு பேசிக்கிட்டு வெட்டியா இருக்கிற மாதிரி இல்லை அப்ப, ஏன்னா இந்த டெலிபோன் வச்சுக்கிறதுங்கிறது நினைச்சுக்கூட பார்க்க முடியாத ஒன்னு, அப்படி இருந்தாலும், அது வேலை செய்யாது, அப்படி செஞ்சாலும் அது ராங் நம்பரை கூப்பிடத்தான் உபயோகப்படும். ஆக இந்த பாட்டு எழுதி இப்படி ராங் நம்பரை கணக்குப்போடும் கதை அப்ப இந்த மன்மதலீலை படத்திலே வந்தது ஒன்னு ஆச்சிரியமில்லை!

ஏன் இதை சொல்ல வர்றேன்னா இந்த 'telecom sector' வளர்ச்சி பத்தி சும்மா ஒரு செய்தி ஒன்னை இப்ப சமீபத்திலே படிச்சப்ப, இந்த படத்திலே வந்த பாட்டை பார்த்துட்டு நினைச்சு பார்த்தப்ப பெரிய மலைப்பா இருந்திச்சு! இன்னைக்கு நீங்க நான் எல்லாம் இப்படி இணையத்திலே வெட்டி கதை அடிச்சி, பிளாக் எழுதி தள்ளிக்கிட்டிருக்கும்ல, இதுக்கு அடிப்படை தொழில் வளர்ச்சி எதுன்னா, இந்த தொடர்பு சாதனம்னு சொல்லுவேன், ஆமா இந்த ராங் நம்பர் நமக்கு ரைட் நம்பர் ஆனதாலே தான். இதன் வளர்ச்சி வரலாற்று பின்னனி பத்தி உங்களுக்கு தெரியலைன்னா, நான் போடற சினிமா கிளிப்பு மட்டும் பார்க்காதீங்க, இதையும் கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுக்கங்க! ஏன்னா இந்த ராங் நம்பர் விளையாட்டு நானும் சின்னபிள்ளையிலே நிறைய ஆடியிருக்கிறேன்! அதாவது என் ஃபிரண்டு ஒருத்தன் அப்ப எஸ் எஸ் எல் சி முடிச்சிட்டு ஒரு லாரி புக்கிங் ஆபிஸிலே வேலைசெஞ்சப்ப, இந்த சாய்ந்திர நேரத்திலே பொழுது போவலைன்னு அந்த புக்கிங் ஆபிஸிலே உட்கார்ந்து டெலிபோன் சுத்தி ராங் நம்பர்ல மாட்ற மாமிங்ககிட்ட கடலை போட்டுக்கிட்டு பொழுது போக்குவோம், இப்ப முன்னபின்ன தெரியாத மாமிங்ககிட்ட 'ச்சேட்டிங்' நீங்க பண்ணி காலம் கழிக்கிறீங்கள்ள, அதை நாங்க ஒரு முப்பது வருஷ த்துக்கு முன்னேயே பண்ணிருக்கோம் இந்த ராங் நம்பர் ரூட்ல! சரி இப்ப எதுக்கு அந்த கதை, நான் சொல்ல வந்த விஷயத்தை கீழே படிக்கலாம் வாங்க!

இந்த தொலை தொடர்பு சாதனம் நமக்கு 1850ம் ஆண்டே, பிரிட்டிஸ்காரான் அப்பவே பாம்பேயிலிருந்து மெட்ராஸுக்கு, ஊட்டியிலிருந்து பெங்களூருக்குன்னு லைன் போட்டு ஆரம்பிச்சி வச்சிட்டு போய்ட்டான். அதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பெருகி இன்னைக்கு 17 கோடி தொலைபேசியாடுச்சி, அதாவது அதிலே 12 கோடி மொபைல் ஃபோன்னுங்க, மிச்சம் 5 கோடி தரை வழி தொடர்பு கொண்ட தொலைபேசிங்க. அதாவாது இந்த மொபைல் தொலைபேசி பெருக்கத்திலே நம்ம நாடு, சைனா(40 கோடி), அமெரிக்கா(17 கோடி), ரஷ்யா(13 கோடி)போன்ற நாடுகளுக்கு இணையாக இந்த தொலைப்பேசி பெருக்கத்திலே வளர்ந்துக்கிட்டு இருக்கோம்! இன்னும் இதோட அசுர வளர்ச்சி தொடர்ந்துக்கிட்டிருக்கு, ஆனா சராசரியா இந்த வசதி அநேக மக்களுக்கும் சென்றடஞ்சதான்னா அதான் இல்லை. அதாவது நம்ம இந்த தொலைப்பேசி பெருக்கத்திலே உலகத்திலேயே ஏழாவது இடத்திலே இருக்கோம், ஆனா மக்கள் தொகையிலே சராசரியா பார்த்தா, ஒரு நூறு பேருக்கு இது நாலு பேருக்கிட்ட தான் இன்னைக்கு இருக்கு! அதுவே அமெரிக்காவை எடுத்துக்கிட்டா நூத்துக்கு 68 பேருக்கிட்ட டெலிபோன் வசதி இருக்கு! சைனாவிலே நூரு பேருக்கு 15 பேருக்கிட்ட டெலிபோன் வசதி இருக்கு, ஆக நாம் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு! அது மாதிரி இன்னும் 20 ஆண்டுகள்ல இன்னைக்கு அமெரிக்காவிலே இருக்கும் அளவுக்கு தொலை தொடர்பு (network size) வளரனும்னா அது 23 சதவீத மடங்கு இன்னைக்கு நம் நாட்டில் இருக்கும் அளவைப் போன்று அதிகரித்தால் தான் உண்டு, அது மாதிரி இன்னைக்கு ஜப்பானில் இருக்கும் அளவைப் போல எட்டிப் பிடிக்கணும்னா, நாம் இன்னும் 17 சதவீத வளர்ச்சி அடைஞ்சாதான் உண்டு! இந்த கணக்கு நம் நாட்டின் இருக்கும் ஜனத்தொகை 20 வருஷம் கழிச்சி இன்னைக்கு இருக்கும் 100 கோடி அளவிலே இருந்தால் தான் நான் மேலே சொன்ன வளர்ச்சி சதவீதமா இருக்கும், இல்லைன்னா அதுவும் எகிறுடும்!

ஆனா இந்த 30 வருஷத்திலே பார்த்தீங்கன்னா, இந்த தொலை தொடர்பு தொழில் நுட்பம் வளர்ச்சி பிரமிக்க வைக்க கூடியது தான். நான் சொல்லும் அந்த ராங் நம்பர் காலத்திலே, அதாவது 30 இல்லை 40 வருஷத்துக்கு முன்னே, முக்கியமான பெரிய நகரங்கள்ல தான், அதுவும் சென்னை போன்ற பெரும் நகரங்கள்ல தான் தானியங்கி தொலை தொடர்பு நிலையம் உண்டு, அதாவது ஆட்டோமேட்டிக் எக்ஸேஞ்சின்னு! இந்த டெலிபோன் எக்ஸேஞ்சு மற்ற சிறு ஊர்கள்ல மேனுவல்(Manual) எக்ஸேஞ்சு, அதாவது கனெக்ஷ்ன் கொடுக்க ஆளு இருப்பாங்க இந்த தொலை தொடர்பு நிலையத்திலே! நீங்க எந்த நம்பருக்கு போன் பேசனுமோ, அதை சொன்னா, எக்ஸேஞ்சில இருக்கிற அம்மா டெலிபோன் ஜாக்குல மாத்தி உங்க நம்பருக்கும் அந்த நம்பருக்கும் தொடர்பு கொடுப்பாங்க, அப்பறம் நீங்க பேசலாம். ஆனா ஆட்டோமேட்டிக் எக்ஸேஞ்சிலே நீங்க நம்பரை சுலட்டி அதுவா தொடர்பாகி நீங்க பேசலாம்! அது மாதிரி அந்த காலத்தில தொலைதூர தொடர்புக்கு நீங்க 'ட்ரெங்கால்'(Trunk call) புக் பண்ணனும், அப்பறம் டெலிபோன் எக்ஸேஞ்சிலே அவங்க உங்களை கூப்பிட்டு கனெக்ஷன் கொடுத்தா நீங்க பேசலாம்! இது நான் சொல்றது திருச்சியிலிருந்து சென்னைக்கு தொலைபேசி பேச! அதுவும் நீங்க இன்னைக்கு சாய்ந்திரம் புக் பண்ணினிங்கனா நாளைக்கு காலையிலே உங்களுக்கு லைன்னு கிடைக்கும்.ஆக அப்ப இது தொலைபேசி இல்லை, தொல்லைபேசி!

இந்த தொலைதொடர்பு தொழில்நுட்பம்னு பார்த்தீங்கன்னா, இந்த எக்ஸேன்சு எல்லாம் அந்த காலத்திலே இயங்கினது க்ராஸ்பார் எக்சேஞ்சுன்னு (Crossbar exchange), அதாவது இதெல்லாம் எலெக்ட்ரோ மெக்கானிக்கல் எக்ஸேஞ்சுங்க! இது அப்பறம் எலக்ட்ரானிக் எக்ஸேஞ்சா மாறுச்சு! அப்பறம் வந்தது தான் டிஜிட்டல் எக்ஸேஞ்சு! இந்த தொழில்நுட்பத்தை மிகவும் விலை கொடுத்து அயல்நாட்டிலருந்து இறக்குமதி பண்ணுனா தான் உண்டு! அவ்வளவு வசதி நம்ம நாடல இல்லை, மேற்கொண்டு இந்த டெலிபோன் துறை அரசாங்கத்திடம் தான் இருந்தது! அப்ப தான் அமெரிக்கவிலே படிச்சி நிறைய தொழில்நுட்ப ஆராய்ச்சி எல்லாம் தன் பேரில் வச்சிருந்த 'சாம் பிட்ரோடா'(Sam Pitroda)என்பவரை ராஜீவ் காந்தி நம்ம நாட்டுக்கு கூட்டிட்டு வந்து இந்த தொழில்நுட்பத்தை நம்ம நாட்டுக்கு தேவைக்கு ஏற்ப வடிவமைச்சி மலிவான முறையிலே இந்த டெலிபோன் எக்ஸேஞ்சு உருவாக்க 'C-DOT' ங்கிற ஒரு நிறுவனத்தை உருவாக்கினாங்க! அவங்க கண்டுபிடிச்ச தொழில்நுட்பம் தான் இன்னைக்கு பட்டித்தொட்டி எல்லாம் 'PCO'ன்னு பார்க்கிறீங்களே அந்த பொது தொலைபேசி பூத் வர காரணமாச்சு, சாதாரண மனிதனுக்கும் மலிவா தொலை தொடர்பு சாதனம் கிடைக்க வழி செஞ்ச்சு! இவங்க கண்டுபிடிச்ச அந்த டிஜிட்டல் எக்ஸேஞ்சு தொழில்நுட்பம் தான் இன்னைக்கு பறந்து கிடக்கும் இந்த தொலை தொடர்பு வளர்ச்சிக்கு முக்கிய காரணம்! இந்த 'C-DOT' நிறுவனத்துக்கு எக்கசக்கமான தானியங்கும் அதிகாரம் கொடுத்திருந்தாங்க! இது ஒரு அரசு நிறுவனமா இருந்தாலும் எல்லா முடிவுகளையும் அவங்களே எடுக்கும் அதிக அதிகாரத்துடன் செயல்பட்டு, அந்த காலகட்டத்திலே, அதாவது 80களின் ஆரம்பத்திலே, இந்த நிறுவனம் ஆராய்ந்து வடிவைத்த தொலை தொடர்பு தொழில்நுட்பம் தான் இன்னக்கு வளர்ந்து நிற்கும் இந்த தொலை தொடர்புக்கு முன்னோடி! அந்த காலகட்டத்திலே பொறியியல் படித்து முடித்து வெளிவந்த என்னைப் போன்றோர் ராப்பகலா உழைச்சி உருவாக்கின தொழில்நுட்பம்னு சொல்றதிலே ரொம்ப பெருமைபடுகிறேன்! ஆனா அதுக்கப்பறம் அந்த நிறுவனம் மேற்கொண்டு வளரமா சில அரசியல் சாக்கடைங்க தடுத்திடுச்சி!

பிறகு 90களின் பிற்பகுதியில் வந்த மொபைல் ஃபோன் வளர்ச்சி, ஃபைபர் ஆப்டிக் என்ற ஒளி கடத்துவான் மூலம் தொலை தொடர்பு வளர்ச்சி, கணனி மற்றும் இணைய தொழில்நுட்ப வளர்ச்சி அப்படின்னு இன்னைக்கு தொலை தொடர்பு வசதிகளின் பயனை நம்ம எல்லாம் அனுபவச்சிக்கிட்டிருக்கோம்! ஆனாலும் இந்த வளர்ச்சி, நான் மேலே சொன்ன மாதிரி அடி மட்ட மக்கள் எல்லார்கிட்டையும் சென்றடய வில்லை, இந்த 'டிஜிட்டல் டிவைட்'ன்னு சொல்றாங்கள்ள, அது இன்னும் இருக்கு! ஆனாலும் அரசாங்கத்தின் இந்த தொலை தொடர்பு கொள்கை, மற்றும் சட்ட திட்டங்கள், அப்பறம் இந்த தொழில் துறை முன்னேற்றம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் மலிவான சேவையில் மக்களை சென்றடய நிறைய செய்றதா சொல்றாங்க! இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, சமமான போட்டிகளுடன் கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவையுடன் இது மேலும் வளர்ந்து, இந்த செய்தி தொடர்பு பயன் அடிமட்ட மக்களை சென்றடயவும் பாகுபாடற்ற வணிகநிலை உருவாகவும் ஒரு தனிமக்குழு (TRAI) கண்காணிப்பில் செயல்பட்டு வருவதும், அதன் மூலமாய் இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை இருப்பதால் இந்த டிஜிட்டல் ஏற்றதாழ்வு மறைய வாய்ப்பு உள்ளது.

அப்பாடி, மன்மதலீலை படம் பார்த்துட்டு வெறுமன வீடியோ கிளிப்பு போடக்கூடாதா, அதுக்கு இவ்வளவு பெரிய பதிவான்னு நீங்க அரட்றது கேட்குது! சரி நம்ம சினிமாவுக்கு போவோம், இந்த மன்மதலீலை ஒரு குஜாலானப்படம், படத்துக்குன்னு ஒரு தனிப்பதிவு கட்டாயம் உண்டு! அதுவும் இந்த படம் எடுத்ததே நான் கமலை பார்த்து தான்னு பாலசந்தர் அப்ப சொல்லி அது பெரிய சர்ச்சை ஆனது பத்தி எல்லாம் அப்புறம் எழுதுறேன்! இந்த கிளிப்பிலே வரும் ஒய் விஜயாவோட அப்ப ஏகப்பட்ட புது பொண்ணுங்களை வச்சி எடுத்து வந்த படம் இது! அதுக்குள்ள இந்த படம் வீடியோ கிடைச்சா போட்டு பார்த்துடுங்க, அப்பதான் அடுத்த பதிவுல நான் சொல்றது சுவாரசியமா இருக்கும், இப்ப இந்த துண்டைப் பாருங்க!

9 comments:

said...

thanks 4 the VDO

said...

வருகைக்கு நன்றி யாரோ!

said...

நான் இந்தப் படம் பார்த்ததில்லை.. பாட்டிலேயே அவர் முகபாவங்கள்.... தூள்! நன்றி

said...

நாதர், சும்மா ஒரு வீடியோ போட இந்திய டெலிகம்யூனிகேஷன் கதையை போட்டு கலக்கிட்டீங்க

said...

//பாட்டிலேயே அவர் முகபாவங்கள்.... தூள்!//பாடல்னு இல்லை, நிறைய சீன்கள்ல அவரோட ஷேஷ்டைகள் இன்னும் தத்ரூபமா இருக்கும், கேசட் கிடைச்சா வாங்கி பாருங்க! அடுத்த பதிவு படிக்கையிலே உதவியா இருக்கும்!

said...

//சும்மா ஒரு வீடியோ போட இந்திய டெலிகம்யூனிகேஷன் கதையை போட்டு கலக்கிட்டீங்க// வீடியோவுக்காக கதையா இல்லை கதைக்காக வீடியோவான்னு தெரியல்லையே சிவா, ஆனா இந்த படம் பார்த்து இந்த பாட்டை பார்த்து வெறுமன பாட்டை பத்தி எழுதாம உபயோகமா கொஞ்சம் மத்த சங்கதியை எழுதுவோமுன்னு தான்!

said...

வெ.நா,
நல்ல பல அருமையான தகவல்களுக்கும் , கவியரசர் - மெல்லிசை மன்னர் ஆகியோரின் கூட்டு முயற்சியில் வந்த பாடலையும் ஒளி வடிவில் தந்தமைக்கு மிக்க நன்றி.
இப் பாடலைப் பல முறை கேட்டு இரசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்களின் புண்ணியத்தில் பார்த்தும் இரசித்தேன். அதற்காக ஒரு விசேட நன்றி.

said...

வாங்க வெற்றி, இன்னும் நிறைய இருக்கு இந்த மன்மதலீலை! விரைவில்!

said...

//,

நீங்க C-DOT ஆ? எந்த ஆண்டு?
Millers Road? //1985, Hotel Akbar, Chanakkyapuri!