Monday, December 04, 2006

உதிரிப்பூக்கள்-மகேந்திரனின் மகுடம்!

இந்தப்படத்தை பத்தி ஏற்கனவே நம்ம பிரகாஷ் அவரோட ஒரு பதிவிலே எழுதி இருந்தார்! அதை எத்தனைப் பேரு படிச்சிங்கிளோ எனக்குத் தெரியாது! அதை கொஞ்சம் கடன் வாங்கி இப்ப நான் எழுதப்போற இந்த பதிவிலே உபயோகப் படுத்த போகிறேன். அதாவது எண்பதுகளின் துவக்கம், எங்கள் இளமை எல்லாம் நல்ல சினிமாக்களில் கழிந்த காலக்கட்டம்! அதுவும் மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜான்னு, நடிகர்கள் கோலச்சிய காலகட்டத்திலேருந்து, இயக்குநர்களை பத்தி சிலாகிச்சி ரசிகர் கூட்டங்கள் பெரிசா பேசிக்கிட்டிருந்த நேரம்! இந்தப் படம் வந்தப்ப நான் இஞ்சினியரிங் முதலாம் ஆண்டின் முடிவை முடிச்சிருந்த நேரம்! அப்படியே இந்தப் படத்தை ஒரு பத்து தடவைக்கு மேலே கோயம்புத்தூரு, திருச்சி, தஞ்சாவூருன்னு எங்கெல்லாம் அப்ப போனேன்னோ அங்கெல்லாம் தியேட்டரில்ல பார்த்துருக்கேன்! அப்படி என்னை கட்டிப் போட்ட படம், நேத்து திரும்ப பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிது! அதை பார்த்திலிருந்து அப்படியே நான் என்னமோ ஒரு இருபத்தஞ்சு வருஷம் பின்னாடி போய்ட்டது என்னவோ உண்மை தான்! அதான் உங்களுக்கு சொன்னப் புரியாதுன்னு அதிலேருந்து கொஞ்சம் வீடியோ கிளிப்போட இந்த படம் இன்னைக்கானப் பதிவு!

அதுக்கு முன்னே கொஞ்சம் பிரகாஷ் எழுதினதை அப்படியே ஒட்டி இருக்கேன் இங்கே! அந்த பக்கத்துக்கு லிங்க்கு கொடுத்திருக்கலாம், ஆனா டெம்போ போயிடுமே, அதான், கீழே படிச்சிட்டு படத்தைப் பாருங்க!

மீண்டும் மீண்டும் பார்க்க சலிக்காத படங்களின் பட்டியலில் உதிரிப்பூக்களுக்கு இடம் உண்டு. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், போன்ற நடிகர்கள் ஒளிவட்டத்தில் இருந்து விலகத் துவங்கிய எழுபதுகளின் இறுதியிலிருந்து, எண்பதுகளின் துவக்கம் வரையிலான காலகட்டத்தை, தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம். கதாநாயகனை மையப்படுத்தி, அதீதமான உணர்ச்சிக் குவியலாக இருந்த திரைப்படங்களை, மீட்டுக் கொண்டு வந்த படைப்பாளிகள் அனைவரும், அந்த காலகட்டத்தில் அறிமுகமானவர்கள் தான். பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மகேந்திரனின் உதிரிப்பூக்கள், பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே ஆகிய மூன்று முக்கியமான படைப்புக்கள் அப்போதுதான் வெளிவந்து, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி அமைக்க முற்பட்டன. ஆனால், அந்த முயற்சி முழுதாக வெற்றி பெறவில்லை!

இயல்பான கிராமம் அது. ஊர்ப் பெரிய மனிதர் சுந்தரவடிவேலு ( விஜயன் ) அத்தனை நல்லவரில்லை. அவரது தம்பியே ( பூபதி ) அண்ணனுக்கு எதிரானவன். சுந்தரவடிவேலுவின் மனைவி, அஸ்வினி, அமைதியே உருவானவர், கணவன் செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கத் திராணியில்லாதவர். அவருடைய உலகம், தன் குழந்தைகள் ( அஞ்சு, ஹாஜா ஷெரீ·ப் ) தங்கை செம்பகம், அப்பா ( சாருஹாசன்) ஆகியோருடம் முடிந்து விடுகின்றது. அஸ்வினி நோய்வாய்ப்பட்டு இறந்து விட, மைத்துனியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் சுந்தரவடிவேலு. மாமனார் மறுத்துவிட, வேறொருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கிடையில் சுந்தரவடிவேலு நடத்தி வரும் பள்ளியின் ஆசிரியர் செம்பகம் மீது காதல் வசப்பட, சாருஹாசன், மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். திருமணத்துக்குப் பின்பு, அக்காவின் குழந்தைகளை தன்னுடனே வைத்துக் கொள்ள அனுமதி வேண்டி, திருமணத்துக்கு முந்தைய தினம், சுந்தர வடிவேலுவைப் பார்க்க வரும் போது, சுந்தரவடிவேலு, அவளை மானபங்கப்படுத்தி விடுகிறார். பொறுத்த வரை போதும், கொதித்து எழுந்த ஊர்மக்கள், துரத்தி வந்து, தற்கொலை செய்து கொள்ள வைத்து விடுகின்றனர.

வசனங்களுக்குப் பெயர் போன மகேந்திரன் ( ரிஷிமூலம், தங்கப்பதக்கம், வாழ்ந்து காட்டுகிறேன்.....) தன்னுடைய இரண்டாவது படத்திலே, வசனங்களுக்குப் பதில் காட்சியமைப்புக்களை நம்பியது முதல் ஆச்சர்யம். படத்தின் மொத்த வசனங்களையும் , இரண்டு A 4 காகிதத்தில் எழுதி விடலாம். அந்த ஊரில் டாக்டராக வரும் சரத்பாபுக்கும் அஸ்வினிக்கும் முன்பே பழக்கம் உண்டு என்று தெரிந்து கொண்ட சுந்தரவடிவேலு, டாக்டர் மீது காட்டும் வெறுப்பும், அதன் தொடர்ச்சியாக வரும் கைகலப்புக் காட்சியும், முதல் தரமானவை. சுந்தர.வடிவேலு மாதிரியான கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட அஸ்வினிக்கு, குழந்தைகள் தான் எல்லாம் என்பதை, ஒரே பாடலின் மூலமாக சொல்ல முடிகிற மகேந்திரனின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜாவின் இசையும், அஷோக்குமாரின் ஒளிப்பதிவும், மகேந்திரனின் கற்பனையும் ஒன்றாக சேர்ந்த அபூர்வமான கலவை அது.

பொதுவாக, திரைப்படங்களில் வில்லன்கள் திருந்தும் காட்சிகளை, எத்தனைக்கு எத்தனை சீரியஸாக எடுத்தாலும் சிரிப்பைத்தான் வரவழைக்கும். இதிலும் சுந்தரவடிவேலு, இறுதிக் காட்சியில் திருந்துகிறார். ஊர்மக்கள் அனைவரும், அவரை, கடற்கரைக்குக் தள்ளிக் கொண்டு வந்து, " குதித்து செத்துப் போ " என்று மிரட்டும் போது, அவரது முகபாவமே, அவரது மனமாற்றத்தைச் சொல்கிறது. ஊர் மக்கள் அனைவரையும், அமைதியாகத் திரும்பிப்பார்க்கிறார். அவர் ஏதோ நீளமான வசனம் பேசப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் " நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க... உங்க எல்லாரையும் நான் என்னைப் போல மாத்திட்டேன்..நான் செஞ்சதுலேயே பெரிய தப்பு அது தான் " என்று சொல்லும் காட்சி, மகேந்திரனின் கூர்மைக்கு உதாரணம்.

சாகும் தருவாயில், அங்கே வரும் தன் குழந்தைகளை, அணைத்து முத்தமிட்டு, " ஒழுங்கா படிக்கணும் , நல்ல பிள்ளைங்களா இருக்கணும், அப்பா குளிக்கப் போறேன் " என்று சொல்லி விட்டு கடலில் இறங்கிறார். ஆனால், அவர் கடலில் மூழ்குவதை காமிரா காண்பிப்பதில்லை, மாறாக, அங்கே கூடியிருக்கும் மக்களைத்தான், அவர்களது முகபாவங்களைத்தான் பார்க்கிறோம். குழந்தைகள் இருவரும், கடலில் குளிக்கப் போன அப்பா வருவாரா என்று காத்துக் கொண்டிருக்கும் போது படம் நிறைவடைகிறது.

அதிரடியான இசை இல்லாமல், ஆர்பாட்டமான காட்சிகள் இல்லாமல், இயல்பான ஒளியில், யதார்த்தமான நடிப்பில், மகேந்திரன் உருவாக்கிய இப்படம், பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் பற்றி பேசுவதைக் காட்டிலும், விவரித்து எழுதுவதைக் காட்டிலும், படத்தை நேரடியாகப் பார்ப்பதுதான் முழுமையான அனுபவத்தைத் தரும்!

முழுப்படமில்லைனாலும், ஆரம்ப டைட்டில் சாங், எனக்கு பிடிச்ச ஒன்னு, அப்பறம் அழகிய கண்ணே பாட்டும், அந்த வில்லன் திருந்தும் கடைசி காட்சியும் பருங்களேன்!


நன்றி: "Icarus Prakash"

கூகுளாண்டவர் சேவை கிடைக்கவில்லை என்பதால், வீடியோ கிளிப்பை கண்டு மகிழ இந்த,"உதிரிப்பூக்கள்" பதிவுப் பற்றி ஓர் அறிவிப்பு!" பதிவுக்கு செல்லுங்கள்

9 comments:

said...

சார்

நல்ல பதிவு!

சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்!

நன்றி

said...

//சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்!// சுவாரசியமா எழுதினது நானில்லை, பிரகாஷ் தான்!

said...

சிவா! வீடியோ கிளிப்பு பார்த்துட்டு எப்படின்னு சொல்லுங்க!

said...

இதுல விஜயன் நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும்..ஏனோ அவருக்கு நியாமா கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கலைன்னு தான் நான் நினைக்குறேன்...நான் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்...

said...

//நான் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்...//சரி இப்ப வீடியோ கிளிப்ல பார்த்தீங்களா? எப்படி இருந்தது?

said...

நன்றாக இருக்கிறது வீடியோ. மிக்க நன்றி!!!

நான் விவரம் அறியா வயதில் பார்த்தப் படம். அப்புறம் டீவியில்தான் மீண்டும் மீண்டும் பார்த்து பிரமித்து இருக்கின்றேன்.

விஜயனின் அமிரிக்கையான நடிப்பும்,, அஸ்வினியின் அமைதியான நடிப்பும், அஞ்சுவின் கள்ளமில்லா சிரிப்பும் என்னைக் கொள்ளைக் கொண்ட காட்சிகள்.

அவரின் அடுத்தப் படமான பூட்டாதப் பூட்டுக்கள், மெட்டி எல்லாமே மிக யதார்த்தமாக இருக்கும்.

இயன்றால் அவரது சமீபப் படமான 'சாசனம்' க்ளிப்பிங்க்ஸ் வெளியிடுங்களேன். பார்க்க விரும்பி இன்னும் கிடைக்கவில்லை.

said...

//அவரது சமீபப் படமான 'சாசனம்' க்ளிப்பிங்க்ஸ் வெளியிடுங்களேன்.//வருகைக்கு நன்றி! கண்டிப்பாக வெளியிடுகிறேன்!

said...

புதுமைப்பித்தனின் சிற்றன்னை நாவலை மூலக்கதையாகக் கொண்டது

said...

பிரபா வீடியோ கிளிப்பு பார்க்கலைன்னா, இந்த பதிவுக்கு போங்க!