Friday, December 01, 2006

Lady Boy God Father-வரலாறு காண்போமா??

"ஆடத் தெரியலைன்னா ஆடிக்காட்டலாம், பாடத் தெரியலைன்னா பாடிக்காட்டலாம் ஒரு வேலையை செய்யத் தெரியலைன்னா செஞ்சு காட்டலாம். ஆனா, ஆம்பிளையான்னு கேட்டா? அதான்..." என்று கனிகாவை கற்பழித்துவிட்டு திரும்பும்போது, அந்த வார்த்தையை முடிக்காமல் அங்க அசைவுகளால் நடந்த காரியத்தை விளக்கும்போது பாரபட்சம் பாரமல் ரசிகர்களிடமிருந்து பறக்கிறது 'பிளையிங் கிஸ்.' இடதும் வலதுமாக விழிகளை அசைத்து அபிநயம் பிடிப்பது, கைதேர்ந்த பரத நாட்டிய கலைஞர் போல் நடந்துவரும் தோரணை, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி 'வணக்கம்' சொல்லும் பாவனை என அஜித்தின் புதிய பரிமாணம் புல்லரிக்க வைக்கிறது. இப்படி இந்த வரலாறு திரைப்படத்துக்கு எங்கேயோ எழுதின விமர்சனத்தை படிச்சிட்டு, சரி அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கிறதுக்கு நேத்து கேசட்டை வாங்கிப் போட்டு இந்த படத்தை பார்த்தேன்! மேற்கொண்டு ரஜினியும், இந்த மாதிரி படத்தை லேட்டாக்காம சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க, ரொம்ப அருமையா இருக்கு அப்படின்னு நடிச்ச அஜீத்துக்கு, அப்பறம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு பாராட்டு தெரிவிச்சாருன்னும் எங்கேயோ படிச்சதிலிருந்து சரி இந்த படத்திலே என்னதான் இருக்குன்னு பார்க்க சரியான ஆவலை தூண்டினது என்னமோ வாஸ்த்தவம் தான்! ஆனா, பார்த்த பின்னாடில்ல தெரிஞ்சது கதை எப்படி கந்தல்ன்னு!

அதான், இந்தப்படத்தோட முக்கியாம்சமாக இருக்கக்கூடிய தீம் ஒன்னை எப்படி சராசரி சினிமா லாஜிக்கோட எடுத்து ஒரு தப்பான மெஸேஜை மக்களுக்கு சொல்லுதுங்கிறதை பத்தி கொஞ்சம் விரிவா பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு! அதாவது, சின்ன வயசிலேருந்து பெண்ணின் இயல்புடன் வளர்க்கப்பட்ட இளைஞனின் செக்ஸ்வல் கண்ணோட்டம், திடீர்ன்னு நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியாலே மாறி எப்படி ஒரு சராசரி ஆண்மகனின் மனக்குமறலாக மாறி எந்த பெண்ணால பாதிக்கப்பட்டானோ அதே பெண்ணை கற்பழிச்சு பழி தீத்துக்கிட்டது சரின்னு சினிமாத்தனமான லாஜிக்கை மக்களுக்கு கொடுத்து எப்படி கெடுத்துருக்காங்கன்னு பார்க்கலாம் வாங்க! அதுவும், சமீபத்திலே தமிழ் மணத்திலே அதிகமா பேசப்பட்டுக்கிட்டு இருக்கிற பெண்ணடிமை பற்றியும், பெண்களை ஏன் இப்படி பாவிக்குது நம்ம சமூகம் அப்படின்னு காட்டஞ்சாட்டமா, "பாட்டன், முப்பாட்டன் சேர்த்துவைத்த மானம் மரியாதை மற்றும் இன்னபிற குல சொத்துக்களெல்லாம் பெண்ணின் தொடையிடுக்கில் பொத்தி பொத்தி காப்பாற்றி வருவதாக இச்சமுதாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது"ன்னு, மறுமொழி, பின்னோட்டம், பதிவுகள்னு பட்டையை கிளப்பிக்கிட்டிருக்கும் தமிழ்ஜனங்களே இந்த மாதிரி படங்கள் எப்படி சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்குதுங்கிற உண்மையை கொஞ்சம் ஆராஞ்சு இல்லை யோசிச்சி, அதை பத்தி என்னான்னு பார்ப்போம், வாங்க!

சர்வ ஜாக்கிரதையா இந்த மூன்றாம் இனத்தவரோட எதிர்ப்பு வரக்கூடும்னு, அவங்களை காமிக்காமா, ஆனா அதன் பிரதிபலிப்பா, நாட்டியகாரி மகனை நாட்டியம் கத்துக் கொடுத்ததாலே, அப்படி இப்படி பெண்மை கலந்த ஆண்மகனா ஆயிட்டாங்கிற லாஜிக்கு சினிமாவுக்கு வேணா ஒத்து போகலாம், ஆனா உண்மையிலே இந்த மாதிரி மூன்றாம் இனத்தவர் எப்படி உருவாகிறார்கள் என்பதை பத்தி நீங்க தெரிஞ்சிக்குனும்னா, இணையத்திலே இந்த "TransGender" பத்தி நிறைய விஷயங்கள் இருக்கு! அதுவும் நம்மூர்ல கூப்பிடுகிற அரவாணிகள், திருநங்கைகள், மற்றும் வடக்கே கூப்பிடும் "hijra", "kothi" பற்றிய கதைகள் மிகவும் சுவராசியமானவை! பத்திரிக்கைகளில் நீங்க படிச்ச கூவகத் திருவிழா போன்று! அதே சமயத்தில் மிகவும் பரிதாபமானது அவர்களது வாழ்க்கை! (வேணும்னா, இந்த வீடியோ கிளிப்பை, Harsh Beauty, கொஞ்சம் பாருங்க!) சமூகத்திலே இன்றைக்கு அவங்களுக்குன்னு சரியான அந்தஸ்த்தோ இல்லை மனிதநேயமோ இன்னும் சரியா கிடைக்கில்லை! ஆரம்பத்திலேருந்து அவங்களை கீழ்தரமா தான் நடத்தி வந்திருக்காங்க! ஆனா கொஞ்சம் அந்த இனத்தின் சரித்திரம் படிச்சீங்கன்னா, பெரிய பெரிய ரோம சாம்ராஜயத்தையே முக்காவாசி கவிழ்த்து ஆளுமை செய்யக்கூடிய வித்தை கற்றவர்களாகவும், ஏன் முகலாய சாம்ராஜ்யத்திலே அவங்களுக்குன்னு ஒரு தனி இடம் இருந்திருக்கு!

அப்பறம் நம்ம புராண இதிகாசங்கள்ளேயும் அவங்களுக்கு தனி இடம் பெற்றவர்களாகவும் இருந்திருக்காஙக! ஆனா அவங்களை எந்த பக்கம் சேர்க்கிறதுன்னு, அதாவது ஆண்பாலிலா, இல்லை பெண்பாலிலாங்கிறது அந்த ராமர் காலத்திலேருந்து(ராமர் காட்டுக்கு போகும் போது ஆண்கள், பெண்கள் வீட்டுக்கு போங்கண்ணு சொன்னப்ப, இவங்க எதிலே சேத்தின்னு தெரியாமா, நின்ன இடத்திலே பதினாலு வருஷம் அப்படியே நின்னு கழிச்சாங்களாம்) இருந்து வந்த ஒன்னு! அப்படி பட்ட போராட்டத்திலே இன்னைக்கும் நின்னு ஜெயிச்சிக்கிட்டிருக்கிற கம்லா ஜான், சபனம் மெளஸி பத்தி தமிழ் நாட்டு ஜனங்களான உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கிற வாய்ப்பில்லை! இவெங்கெல்லாம் வட இந்திய மாநிலங்கள்ல எம்பி ஆகவும், மேயராகவும் இருக்காங்க! அதே மாதிரி, வடக்கே இவங்கே கிட்ட ஒரு அதீத சக்தி இருக்குன்னு நல்ல காரியங்கள், இல்லை நல்ல நிகழ்ச்சிகள், அதாவது குழந்தை பிறக்கும் போது இல்லை கல்யாணம் காட்சின்னு நடக்கிறப்ப, அவங்களுக்கு தர்மம் பண்ணுவதை உத்தமமா நினைப்பார்கள்!

சரி நான் சொல்ல வந்த சங்கதி என்னான்னா, இது போன்ற திரைப்படங்களின் ஆளுமை எப்படி நம் இளஞர் கூட்டத்தை தடுமாற செய்து, நம் கொண்டுள்ள பிற்போக்கான சமுதாய எண்ணங்களை மாற்ற வழி செய்ய முடியாமல் போகிறது என்பதை பற்றிய ஒரு ஆராய்ச்சி தான்! சமூகத்துக்கு பெண்களின் மீது எப்படிப்பட்ட கண்ணோட்டம் இருக்கிறதுங்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னு தான்! ஆனா, சிறு வயசிலேருந்தே ஆண்மகன் எப்படி வளர்க்கபட்டு வருகிறான் என்றும், அவர்களுக்கு இந்த பாலியல் சம்பந்தமான மனப்போக்கு மற்றும் பிறப்புச்சுகாதாரத்தின் மீதான மாறுபட்ட கண்ணேட்டமும், வேறு மாதிரியான நடைமுறை ஒழுக்கங்களும் (The Formation of Sexual and Reproductive Health Behaviour Among young Men) எப்படி அவர்களை சீரழிக்கிறதுன்னு, இந்த "HIV/AIDS" தடுப்புன்னு பேசிக்கிட்டு "World AIDS Day" கொண்டாடிக் கிட்டிருக்கிற இவ்வேளையிலே அதைப் பத்தி என்னா பார்ப்போம் வாங்க!

பொதுவா வாலிப வயது இல்லை பதின்ம வயதுன்னு சொல்ற அந்த பருவத்திலே, ஒவ்வொரு ஆண்மகனின் பாலியல் மற்றும் பிறப்புச்சுகாதாரத்தின் மீது கொண்டிருக்கும் கண்ணோட்டங்கள், மனநிலை, அதன் ஈடுபாடு, இது எல்லாத்துக்கும் காரணமாக அமைவது என்னான்னு பார்த்தீங்கன்னா, சக்தியுள்ள வலிமையான, போட்டியினை சந்தித்து வெற்றி கொள்ளும் ஆண்பிள்ளைத்தனமா இருக்குணும்ங்கிர தாக்கம், அதாவது 'ஆம்பளையா ஜெயிச்சுக்காட்டுன்னு', சொல்லுகிற இந்த சமூக உருவாக்கமும் அதன் தாக்கங்களும் தான்!(Socialisation Process and Societal Pressure) அதன் விளைவாய் 'கல்லைத் திண்ண்ணாலும் கரையிற வயசுன்னு', 'இந்த வயசிலே நமக்கு எந்த நோயும் பாதிக்காது'ன்னு, ஒரு குருட்டு தைரியத்திலே அவர்கள் தேடிப்போகும் தவறானப் பாதை, சீக்கிரமே ஆம்பள்ளைன்னு நிரூபிச்சிக் காட்டணும்ங்கிற ஒரு வெறி! அது எங்க கொண்டி விடுதுனா, ஆபத்தான பாலியல் நடத்தை(Risky Sexual Behaviour), பருவ வயது வருமுன்னே அடையத்துடிக்கும் பாலியல் இன்பம், பலருடன் உறவு வைத்து கொள்ளும் கோட்பாடு, இது எல்லாமே! இதனால் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை பாழ்படுவது வெகு சுலபம்! நாளைக்கு இந்த உலகை ஆளப்போகிற பாதி இளைஞர் கூட்டம் நம் நாட்ல தான் இருக்காங்க,'Vibrant Young Generation'! அவங்களை இந்த மாதிரி சூழ்நிலைகளிலே அவர்களை மாற்றி நல்வழி கொண்டுவரணும் பாடுபடும் பல AIDS/HIV கட்டுப்பாடு இயக்கங்கள், எப்படி இந்த இளைஞர் கூட்டத்துக்கு சரியான பாலியல் பாடம், பாதுகாப்பான உடலறவு, சரியான பாலியல் பற்றிய மனநிலை, கண்ணேட்டங்களை கற்பித்தல், இளம் வயதிலே பாலியல் உறவு வைத்துக் கொள்வதை தாமதமாக்குதல், பல பேருடன் உறவு வைத்து கொள்வதை எப்படி குறைத்து கொள்வது, பாலியல் தாக்கங்களை மாற்றுவழியில் போக்கி கொள்வது, ஆணுறை உபயோகிப்பது, முக்கியமாக பெண்களின் நுண்ணிய உணர்வுகளை மதித்து, அவர்களுக்குரிய மரியதையை எப்படி செலுத்த வேண்டுமென்பது வரை அவர்களை தயார்படுத்தி நல்வழியில் எடுத்து சென்று இந்த பாலியல் மற்றும் பிறப்புச்சுகாதாரம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு முறைகளை சரியாக வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கொள்ள வேண்டுமென்பது வரை முயன்று கொண்டிருக்கின்றன. ஆனா, நான் மேலே சொன்ன "ஆம்பளைன்னு காட்ட...." டயலாக் பேசி, அதுக்கு 'பிளையிங் கிஸ்' கொடுத்து ரசிக்க வைக்கும் தப்பான கூட்டம் வளர்க்கத் துடிக்கும் இந்த மாதிரி சினிமாக்களை எடுக்கும் மகாபாவிகளை என்ன செய்யனும் சொல்லுங்க!

ஆம்பள்ளையா இருக்குனும்னா இந்த இந்த மாதிரி இருக்கணும்னு ஒரு இலக்கணம் தெரிய அதிகம் வயசு எடுத்துக்கிறதில்லை நாமே! அஞ்சு வயசுக்கப்பறம் உடை, நடை, பேச்சு, ஆடை இது எல்லாத்திலேயும் வித்தியாசம் காண ஆரம்பிச்சுடுவோம்! அஞ்சு வயசுக்கு முன்னே பொம்பளைபுள்ளைங்க போடர ஃபிராக்கு போட்டு, மையி, பொட்டு வச்சு ஆண் பெண் பேதமில்லாம பார்க்கும் அழகு பொசுக்குன்னு மாறி போயிடும்! நீ ஆம்பளைச் சிங்கம்டா ன்னு சொல்லி சொல்லியே சின்ன வயசிலேருந்து துடிப்பா, உறுதியா, எதையும் ஆக்கிரமிக்கும் தன்மையோட வலிமையா வரணும்னு சொல்லி இலக்கணம் வகுத்துடுவாங்க! பொண்ணுன்னா, கீழ்படிஞ்சு, வீட்டோட, பணிவோட, தங்குதக்காணு குதிக்காம, வாழ்க்கையிலே முதலில் தென்படுகிற ஆண்மக்களான தந்தை அண்ணன் மற்றும் கணவணுக்கு அடங்கி போகும் தன்மைகளோட அச்சம், நாணம், மடம், பயிர்ப்புன்னு சொல்லி இலக்கணம் வகுத்து விட்டு விடும் நம்ம சமூகம். இந்த இலக்கணத்திலே எது மாறுனாலும், நீ உன்னோட ஆசைகள் அதிதமா இருந்து ஒத்து போகலைன்னா நீ தேடி போக வேண்டியது மூணாவது இனத்தை நோக்கி!

அது மாதிரி 12 வயசுக்கு மேலே போனா உனது பாலியல் பங்கு என்னான்னு தெரிய ஆரம்பிக்கும்! அதுவும் யாரும் பக்கத்திலே வந்து சொல்லி கொடுக்கிறதில்லை, எட்டி நின்னு சுத்தி நடக்கிரதை வேடிக்கை பார்த்து! அப்ப தான் சமூகம் வடித்த கட்டுப்பாடு,அமைப்பு, இது இப்படித்தான்னு சொல்லி சொல்லி மனசுலே ஆழமா பதிஞ்சு போயி, அப்புறம் பெரியாரு வந்து சொல்லியும் ஒன்னும் சுகப்படமா போயிடும்! அப்புறம் பொண்களை தெய்வமாவும் மதிக்க சொல்லும், அதே சமயத்திலே கொலையும் செய்வாள் பத்தினின்னும் சொல்லும்! அது மாதிரி ஆண்பிள்ளையை கட்டிப்போடும் வசியம் அவங்கக்கிட்ட இருக்கிறதாலே, அதை அடக்கி கட்டுப்பாட்டுக்குள்ள வச்சி ஆளணும்னு சொல்லும்! ஆக அவங்களை பத்தி தெளிவான கருத்துகளை உருவாக்காம மாறு பட்ட கண்ணோட்டத்தை(Conflict attitude)உருவாக்கி கொடுத்திடும்! அப்பறம் ஆண்பிள்ளை என்ன செய்வான்! இதில்லாம நீ ஜெயிச்சுக்காட்ட்ணும்னு சொன்ன ஆம்பள்ளைத்தனம் தலை எடுத்தோன, எதிர்பால் கூட்டதை எப்படி அடக்கி ஆளணம்னு யோசிக்க ஆரம்பிச்சு பெண்பிள்ளை சிநேகம் கடைசியிலே கருமமே கண்ணாயினார்ங்கிற ரேஞ்சுக்குத்தான் வளர்க்க பார்க்கும்! பெரும்பாலும் உண்மையான சிநேகம் வர சான்ஸ் ரொம்ப கம்மி! அப்பறம் பாலியல் வித்தையை நண்பர்கள் கிட்டதான் பேசிக் கத்துக்கணும், இல்லை சரோஜாதேவி புத்தகமே துணை! அதிகம் போன உன்னதை விட என்னுது பெரிசுன்னு போட்டி போட்டு, அப்பறம் நடை, உடை, பாவனை, பாடி-பில்டிங், பேச்சுத்திறமை, அப்படின்னு ஆரம்பிச்சு, கடைசியிலே பாலியல் கலையின் உச்சம்னா "Penetrative power" தான் தோண வைக்கும்!

இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம் எப்படி நம்ம இளைஞர் கூட்டம் சீரழிஞ்சு போகுதுன்னு, அதெல்லம் மாத்தி, நான் மேலே சொன்ன மாதிரி பாடுபட்டுக் கொண்டிருக்கும் பல இயக்கங்கள் இளைஞர்களை நல் வழியில் கொண்டு வந்து அவர்களின் பாலியல் மனநிலை, கட்டுப்பாடு ஒழுக்க நிலைகளை மாற்றி நோய்யில்லா வாழ்க்கையோட இந்த வளரும் நம் இளைஞர் சக்தியை கொண்டு வரணும்னு நினைக்கிற வேளையிலே இந்த மாதிரி ஒரு திரைப்படம் தமிழ் சமுதாயத்துக்கு தேவையான்னு யோசிச்சுப் பாருங்க, இது வெறும் 'பிளையிங் கிஸ்', விசில்களோடு தியோட்டரில் முடிந்து விடுவதில்லை, அதையும் மீறி சில தவறுகள் நிகழ்த்தவும் வழி வகுக்கும்! அதுக்குத்தான் இந்த பதிவு!

(மேலே சொன்ன அத்தனை தாக்கங்களோடு தான் நானும் என் இளமைப்பருவத்தை கழித்தேன், அதில் நல்ல வேளையாக தவறான வழிக்கு போகவில்லை, இருந்தாலும் என்னுடய சில மனநிலைப்பாடுகள் சில சமயங்களில் பெண்ணினத்தினை சரியான முறைகளில் அணுகாமல் போனாலும் வயது முதிர்ச்சி அந்த பக்குவத்தை எனக்கு கொடுத்தது!)

இதை எழுத தூண்டிய பதிவு "பெண் ஏன் அடிமையானாள்?"

17 comments:

said...

தெளிவான விமர்சனத்தோட கூடிய தெளிவான எழுத்துக்கள்.

அருமையா இருக்கு.

அஜித்தின் முந்தைய படங்களின் நடிப்பை விட இந்த படத்தில் நல்லா இருக்குன்னு சொல்லலாமே ஒழிய கதையமைப்பு ஆரோக்கியமானதுன்னு சொல்ல முடியாது.

தெளிவான பார்வை.

said...

வாங்க தம்பி, வருகைக்கு நன்றி! அஜீத் நடிப்புக்காக இப்படி தான் கதை அமைச்சு எடுக்கணுமா என்ன?

said...

சிறந்த பதிவை படித்த மன திருப்தி...நன்றி...

said...

வெ.நா,
அருமையான கட்டுரை. வழமையாக நீண்ட பதிவுகளை நான் ஒரே தடவையில் வாசித்து முடிப்பதில்லை. ஆனால் உங்களின் எழுத்துப் பாணியும் நீங்கள் சொல்லிய விதமும் மிகவும் ஆவலுடன் பொறுமையாக இருந்து முழுப் பதிவையும் படிக்க வைத்து விட்டது. நிற்க.

இனிப் பதிவு பற்றி:

/* இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம் எப்படி நம்ம இளைஞர் கூட்டம் சீரழிஞ்சு போகுதுன்னு, அதெல்லம் மாத்தி, நான் மேலே சொன்ன மாதிரி பாடுபட்டுக் கொண்டிருக்கும் பல இயக்கங்கள் இளைஞர்களை நல் வழியில் கொண்டு வந்து அவர்களின் பாலியல் மனநிலை, கட்டுப்பாடு ஒழுக்க நிலைகளை மாற்றி நோய்யில்லா வாழ்க்கையோட இந்த வளரும் நம் இளைஞர் சக்தியை கொண்டு வரணும்னு நினைக்கிற வேளையிலே இந்த மாதிரி ஒரு திரைப்படம் தமிழ் சமுதாயத்துக்கு தேவையான்னு யோசிச்சுப் பாருங்க, இது வெறும் 'பிளையிங் கிஸ்', விசில்களோடு தியோட்டரில் முடிந்து விடுவதில்லை, அதையும் மீறி சில தவறுகள் நிகழ்த்தவும் வழி வகுக்கும்! அதுக்குத்தான் இந்த பதிவு! */

உண்மை. கட்டாயம் எம்மவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

/* மேலே சொன்ன அத்தனை தாக்கங்களோடு தான் நானும் என் இளமைப்பருவத்தை கழித்தேன், அதில் நல்ல வேளையாக தவறான வழிக்கு போகவில்லை, */

நல்ல வேளை. நான் சின்ன வயதிலேயே இங்கு வந்து [21 வருடங்களுக்கு முன்னர்] குடியேறியதால் பெண்களுடனும் சகஜமாக பழகும் பக்குவத்தைப் பெற்றேன். அதனால் இப்படியான தாக்கங்கள் இல்லை என்றே சொல்லலாம். வாழும் சூழலைப் பொறுத்தே இப்படியான தாக்கங்கள் ஒருவரைப் பாதிக்கும் என நினைக்கிறேன்.

said...

தெளிவான கருத்துக்கள்..சிந்தனை..கொண்ட விமர்சன பதிவு..

ரொம்ப நல்லா இருக்கு வெளிகண்ட நாதரே..

said...

என் பதிவுக்கு முதன் முறையாக வருகை தந்தமைக்கு ரொம்ப நன்றிங்க நாதரே

said...

நன்றி செந்தழல் ரவி!

said...

வாங்க வெற்றி உண்மையிலே கோஞ்சம் இப்பெல்லாம் பதிவு நீளூளூது! அடக்கியே வாசிக்கணும், இருந்தாலும் நீங்க படிச்சிட்டீங்க!

சிறு வயதிலே நல்ல சூழ்நிலைகள்ல வளர்ந்து ஆண் பெண் பேதமில்லாம தொடர்ந்து பழகி வரும் பெரும் பான்மையான ஆண்களுக்கு பெண்களை மதிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள், அவர்களும் எந்த ஒரு ஈர்ப்பும் தவறான பாதைக்கு செலுத்தாது!

said...

வருகைக்கு நன்றி கார்த்திகேயன்!

said...

பாலன்...

என்ன சொல்லி என்ன செய்ய..

சிலபேருக்கு எல்லாத்தையும் விட பணமே பிரதானமா இருக்குது.

சினிமாவையே தனது கலாச்சார அடையாளமாக இன்றைக்கு ஏற்றுக் கொண்டுவிட்ட தமிழ்ச் சமுதாயத்தில், அந்தச் சினிமாவிற்குள் வருபவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறார்களா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது. எத்தனை டிவி சேனல்கள், எத்தனை பத்திரிகைகள், அத்தனையிலும் சினிமா... ஆட்சியில் சினிமா, அரசியலில் சினிமா, கல்விக்குள்ளும் சினிமா... சேரன் போன்ற சில இயக்குநர்கள் அவ்வப்போது சில அபூர்வப் படங்களைத் தருகிறார்கள். மற்றபடி... நீங்கள் ஒன்று கவனித்தீர்களா... ஒரு சில எச்சம் சொச்சம் செண்டிமெண்டுகளைத் தவிர.. தமிழ்க் கலாச்சாரம் பரிமாண வளர்ச்சி அடைவது தெரிகிறதா.. இந்தப் பரிணாமம் எங்கு கொண்டு விடும் என்றுதான் தெரியவில்லை.

மக்கள் ஒரு வகையான மயக்கத்தில் இருக்கிறார்கள்.. அந்த மயக்கம் இருக்கும் வரையில், அண்ணாத்துரை ஆரம்பித்து வைத்த சினிமாக் கலாச்சாரம், பிற்பாடு கருணாநிதி, எம்ஜஆர், ஜெயலலிதா தற்போது விஜயகாந்த்.. வருங்காலத்தில், இன்ன பிற துக்கடாக்கள்... எல்லோருமே நாற்காலிக் கனவுகளுடன்..

சிந்திக்க விடாமல் இருக்க இப்போது வீட்டுக்கு வீடு டிவி வேறு கொடுக்கப் போகிறார்கள்.

முதலில் கூட்டுக் குடும்பம் ஒழிந்தது... தற்போது விவாகரத்து என்னும் சுதந்திரம் பேயாடுகிறது.. பிற்பாடு திருமணமாகமல் Going Steady என்ற வகையான உறவுகள் வரக் கூடும். அடுத்த தலைமுறையினைப் பற்றி கவலைப்பட யாரும் இருக்கப் போவதில்லை... தேய்ந்து வரும் சில நாடுகளின் மக்கள்தொகை இதற்கு முன்னுதாராணமாக இருக்கிறது.

said...

அருமையான பதிவு...ரொம்ப தெளிவா எழுதியிருக்கீங்க...

இந்த மாதிரி விஷயங்கள நம்ம வளைப்பதிவாளர்கள் எழுதறதும், ஆர்வம் காட்றதும் என்ன போல தொண்டு நிறுவணங்கள வேலை செய்யறவுங்களுக்கு மன நிறைவா இருக்கு...

பாராட்டுக்கள்..நன்றி..

said...

உதயகுமார்,
பெண் ஏன் அடிமையானாளுக்கு, திரைப்படமும் ஒரு காரணங்கிறீங்க.. ஆனா, இது போன்ற திரைப்படங்களை நிறுத்துவதோ, விசில்களை ஒழிப்பதோ நம் கையில் இல்லையே...

இது போன்ற, ஏன் இன்னும் காட்டமான விமர்சனங்களை முன்வைக்கலாம் அவ்வளவு தான்..

மற்றபடி படம் இன்னும் பார்க்கலை. கதை கேட்ட போதே பிடிக்கலை. உங்க விமர்சனம் இன்னும் தெளிவா தியேட்டர் பக்கம் போய்டாதேன்னு சொல்லுது :))

said...

தவறு சினிமாவில் இல்லை. சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பதையும் மீறி எமது வாழ்வின் ஒரு அங்கம் என்று நாம் நினைக்கும் போது ஆரம்பிக்கிறது பிரச்சினை.

said...

//முதலில் கூட்டுக் குடும்பம் ஒழிந்தது... தற்போது விவாகரத்து என்னும் சுதந்திரம் பேயாடுகிறது.. பிற்பாடு திருமணமாகமல் Going Steady என்ற வகையான உறவுகள் வரக் கூடும். அடுத்த தலைமுறையினைப் பற்றி கவலைப்பட யாரும் இருக்கப் போவதில்லை... தேய்ந்து வரும் சில நாடுகளின் மக்கள்தொகை இதற்கு முன்னுதாராணமாக இருக்கிறது.//

மக்கள் தொகையே பலவீனமா இருந்த நமக்கு இது பலகீனமாயிடக் கூடாதுங்கிற ஆதங்கத்திலே போட்ட பதிவு தான்!

said...

வருகைக்கு நன்றி மங்கை!

said...

//தவறு சினிமாவில் இல்லை. சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பதையும் மீறி எமது வாழ்வின் ஒரு அங்கம் என்று நாம் நினைக்கும் போது ஆரம்பிக்கிறது பிரச்சினை.// சரியா சொன்னீங்க ஆதிபகவன்!

said...

பொன்ஸ், திரைப்படமும் ஒரு காரணம், என்ன பண்ணமுடியும் விமரிச்சு காட்டமா எழுதறதை விடன்னு சொல்லிட்டீங்க! அதுக்கும் மேல சமுதாய கட்டமைப்புகள் எப்படி ஒரு குழப்பமான எண்ணங்களை பெண்கள் மீது தோற்றுவிக்கதுங்கிறது தான் நான் சொல்ல வந்தது, இதை மாத்த என்னென்ன வழி முறைகளை சமுதாய திருத்தம் செய்யும் ஆர்வலர்கள் கடைபிடிக்கணும்ங்கிறதை, சில வெளிநாட்டு ஆளுங்க நம்ம நாட்ல இதை ஆராய்ச்சி செஞ்சு வழி முறைகளை சொல்லிக்கிட்டிருக்காங்க, நம்ம வெறும் காகிதப் புலிகளா தான் இருந்துக்கிட்டிருக்கோம்!