
கொஞ்சம் விவரமா உள்ள போகுமுன்னே, நீங்க மகாபாரதம் கதை படிச்சோ இல்ல பார்த்தோ இருந்தீங்கன்னா, அதில் காந்தாரிக்கு 100 கெளரவர்கள் எப்படி பிறந்தாங்கன்னு தெரியுமில்ல. வேணும்னா 'பாலபாரதம்'னு ஒரு படம் வந்தது, அந்த பட கேசட்டு வாங்கி பாருங்க. அதில முனிவர், காந்தாரி கருவுற்றிருந்த வயித்தில இருந்த வந்த பிண்டத்தை ஒரு 100 கூறா போட்டு, அதில மூலிகை ஓமம் எல்லாம் போட்டு முனிவர் ஒரு இரண்டு வருஷம் தபஸ்யம் பண்ணி பொறந்த குழந்தைங்க தான் கெளரவர்கள்! ஆக அந்த மகாபரத்தில விவரிக்கிற முறைகள் இருக்கே, அதே மாதிரி தான் கருவிலிருந்து பிரித்தெடுக்கும் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சி, வளர்ச்சி எல்லாம் நாம தொலைச்ச அந்த பழயகால விஞ்ஞானம்!
இந்த கருவணு ('Stem Cell') என்னான்னு ஒரு விஷேஷமான தனித்துவம் வாயந்த உயரணு, மத்த உயிரணுக்கள் போல இல்லாம, எந்த உறுப்பையும் சார்ந்தது கிடையாது. அதாவது நம்ம உடம்புல இருக்கிற மூளை, தோல், இருதயம் போன்ற உறுப்புகள்ல இருக்கிற உயரணுக்கள், அந்த அந்த உறுப்புகள் ஒழுங்காக பணிபுரிய உண்டான செயல்கள் மட்டும் செய்யக்கூடிய வகையில் அமைந்தவை. அதற்காக உண்டான ஜீனோம்கள் அமைந்த செல்கள் தான் இந்த உறுப்புகளில் இருக்கும் செல்கள். இந்த ஜீனோம் பத்தி கொஞ்சம் விவரம் வேணும்னா, நான் ஏற்கனவே போட்ட பதிவு, ஜீனோம் - Who is your Daddy? போய் கொஞ்சம் படிச்சிட்டு வாங்க!
ஆனா இந்த கருவணுக்கள் எந்த உறுப்புகளையோ, எந்த ஒரு உடம்பின் பாகங்கள் செய்யக்கூடிய செயல்களையும் சார்பற்று இருப்பது தான் இந்த ஸ்டெம் செல் என்பது. இந்த கருவணு குழந்தை தரிச்ச கருமுட்டையில் உள்ள ஒன்னு. அதாவது குழந்தை முழு வளர்ச்சி அடையறதுக்கு முன்னே கருத்தரிச்ச சினைப்பையில இருக்கிற அந்த ஜீவப்பொருள்ல உள்ள அணுதான் இந்த கருவணு, இதை ஆங்கிலத்திலே 'ஸ்டெம் செல்'('Stem Cell')ன்னு சொல்லுவாங்க! மத்த அணுக்கள் மாதிரி, தன்னை பிரதி எடுத்து, தானே பெருகும் திறன் கொண்டவை. ஆனால் இந்த ஸ்டெம் செல்கள், மற்ற செல்களாக மாறக்கூடிய தகுதிபடைத்தவை, அதாவது மனித உடம்பில் இருக்கும் 200 வகை அணுக்களில் எந்த அணுக்களாகவும் மாறக்கூடிய திறன் கொண்டவை!
1998 ம் ஆண்டு, விஞ்ஞானிகள், இந்த கருவணுவை, கருமுட்டையிலிருந்து தனியாக பிரித்தெடுத்து அதை பரிசோதனக்கூடத்திலே வைத்து வளர்ச்சியடைய செய்து, அதை எந்த விதமான அணுக்களாகவும், பழுதுப்பட்ட உறுப்புகளில், இதயமோ, நரம்பு மண்டலங்களோ, இல்லை இரப்பையில் உள்ள சுரப்பியோ ( pancreas), அதற்கு தேவையான அதன் உயிரணுக்களாக மாற்றி அதை புகுத்தி தசைகளாகவும், அந்த நன்கு இயங்கும் உறுப்புகளாக மாற்றும் சிகச்சை செய்ய வல்லமை படைத்த உயிரணு இந்த ஸ்டெம் செல் என அறிந்து கொண்டனர்! இதுவே ஆரம்பம்! மேற்கொண்டு இதை போன்ற இன்னொரு ஸ்டெம் செல், அதாவது ஸ்டெம் செல் போன்ற குணாதிசயத்தை கொண்ட உயிரணுக்கள், வளர்ந்த மனிதனின் இரத்தத்திலிருந்தும் எடுக்கலாம் என்றும், அதற்கு 'adult stem cells' என்று கூறி அதிக காலமாக மருத்துவ சிகிச்சைகளில் உபயோகத்தில் இருந்ததும் தெரிந்ததே!ஆனால் இந்த 'adult stem cells' களையும் அந்தந்த உடல் உறுப்புகளில் சார்ந்த உயிரணுக்களாக மாற்றும் திறனையும் கண்டறிந்தனர். அந்த மாற்றும் முறைக்கு 'adult stem cell plasticity' என்று பெயர்! இந்த இரண்டு வகை ஸ்டென் செல்களுக்கும் அந்த மாற்றும் திறன் இருந்தாலும், இந்த 'adult stem cells' உபயோகிப்பதில் சில வேறுபாடுகள் இருப்பதையும் கண்டறிந்தனர். மேற்கொண்டு, இந்த செல்களை கொண்டு முழுமையான சிகிச்சை மருத்துவம் ('cell-based therapies' )முழுமை அடைய இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதனை உபயோகத்தில் கொண்டுவர உலகம் எங்கிலும் விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்! ஆனால் இந்த மருத்துவ ஆராய்ச்சிக்கு நிறைய எதிர்ப்புகளும், அந்த ஆராய்ச்சின் குளறுபடிகளும், இன்றைக்கு மிகப்பெரிய செய்திகளாக வருகின்றன. நம்மள்ல எத்தனை பேருக்கு இதுள்ள ஆர்வமா, என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, அப்ப அப்ப CNN,BBCல வர்ற நியூஸை பார்க்கிறீங்களோ எனக்குத் தெரியாது. சில சமயம், நான் இதை பாதி புரிஞ்சும் புரியாமலும் கேனத்தனமா பார்த்துட்டு, அப்புறம் அது விட்டுடறதோட சரி. மேலே என்னான்னு போய் பீராஞ்சப்பதான் நிறைய விஷயமே விளங்குச்சு. நீங்களும் அப்படித்தான்னா, தெரிஞ்சக்க இஷ்டம்னா, வாங்க கீழே பார்ப்போம்!

இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியில முக்கியமா என்னான்னா, சரியா இந்த உயிரணுக்களை ('Stem Cell') எல்லாம் பிரிச்செடுத்து, அதை பரிசோதனைக்கூடத்தில வளர்த்து (culture ல வளர்த்து) அதை ஸ்டெம் செல்லுதான் நிருபிக்கிறதுக்குதுங்கிறது ஒரு பெரிய சவால்! அதுவும் ஆராய்ச்சிக்குன்னு எடுத்துக்கிறது இந்த மிருகங்களோடது தான், அதுவும் மிக்கியமா சுண்டெலியோடது! இதை ஒரு 20 வருஷமாவே பெரும்பாலும் இந்த எலியிலருந்து எடுத்து தான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தாங்க. ஆனா 1998ம் ஆண்டு,'James Thomson' ங்கிறவரு, அமெரிக்காவில உள்ள விஸ்காஸின் பல்கலைகழகத்தில், மனித கரு முட்டையிலிருந்து எடுத்து உயிரணுவை பரிசோதனைக்கூடத்தில வளர்த்து அதை தொடர்ந்து வளர்ச்சி அடைய செய்ய வச்சாரு, அதே மாதிரி 'John Gearhart' ங்கிறவரு 'Johns Hopkins' பல்கலைகழகத்திலயும் வளர்ந்த மனித கருவிலருந்து எடுத்தது 'human embryonic germ cells'ங்கிற வகையை சார்ந்த்து. இந்த ஆராய்ச்சிகளில் முக்கியமானது இந்த cell "lines" ன்னு சொல்லக் கூடிய அந்த உயிரணு தொடர்ச்சி முக்கியம், அதவாது செல்களில் பெருக்கம் வளர்ச்சி, நிறைய நாட்களுக்கு இறந்து போகாமல்! அப்பொழுது தான் அதை பற்றி மேற்கோண்டு ஆராய்ச்சி செய்து மத்த செல்களாக மாற்றம் செய்விக்கும் முறையை கண்டறிந்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கும் முறையை கண்டறியவும் தோதுவா இருக்கும். அப்புறம், நான் சொன்ன அந்த பழுதுபட்ட உடலுறுப்புகளில் இந்த 'cell-based therapies' சிகிசை செய்ய நிறைய இந்த கரு உயரணுக்கள் தேவை! அங்கதான் சிக்கலே!
ஆக இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்னான்னா, சில நோய்கள் என்ன தான் மருந்துக்கள், மாத்திரைகள் சாப்பிட்டாலும், அதை கட்டுபாடில் வைத்து கொள்ள முடிகிறதே தவிர அதை முற்றிலுமாக குணப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்ட நோய் என்னான்னா, முதல்ல சர்க்கரை நோய்(diabetes), பிறகு எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் இருதய நோய் (chronic heart disease), பக்கவாதம் இல்ல நரம்பு தளர்ச்சி (Parkinson's disease), கல்லீரல் நோய், கடைசிதருவாயில் இருக்கும் சிறுநீரக நோய், கடைசியா புற்று நோய்.இந்த நோய்களுக்கெல்லாம் இந்த ஸ்டெம் செல் கொண்டு அளிக்க போகும் சிகிச்சை முறை ('cell-based therapies')தான் துயர் தீர்க்கும் மிகப்பெரிய சிகிச்சை! (முக்கியமா மொத்த உலகமும் எதிர்பார்ப்பது இந்த சர்க்கரை நோய் தீர்க்கும், ஆக முற்றிலும் குணமாக்கும் அந்த நோய் தீர்க்கும் சிகிச்சைக்காக!) அதற்காக நடந்துவரும் ஆராய்ச்சிகள் தான் இப்பொழுது இந்த 'Stem Cell Research' என்பது! இன்றைக்கு இருக்கும் சிகிச்சை முறையிலே இந்த மாற்று உறுப்பு பொருத்துதல் ('transplantation') எப்படியொரு வெற்றி பெற்ற சிகிச்சையாக இருக்கிறதோ, இந்த மாற்று ஸ்டெம் செல்களின் முறை ஒரு பெரும் வெற்றியாக வர வாய்ப்பு இருக்கிறது! ஆனால் இன்னைய தேதிக்கு இந்த செல்களை எடுத்து பொருத்தி சிகிச்சை பண்ணினால் நமது உடம்பு ஏற்பதில்லை. ஆக அந்த ஏற்று கொள்ளும் வகையிலே இந்த உயிரணுக்களை மாற்றி அமைத்து சிகிச்சை ஏற்படுத்தி கொள்ள இன்னும் இந்த ஆராய்ச்சியிலே பலகாத தூரம் போக வேண்டி உள்ளது! ஆனாலும் அந்த சிகிச்சை முறை கனிந்து வரும் காலம் அதிக தூரமும் இல்லை!

இப்படி நடந்து வரும் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் ஏகப்பட்ட எதிர்ப்புகள் ஏனென்றால், இந்த ஸ்டெம் செல்களை வளர்ந்து வரும் கருவிலிருந்திருந்து பிரித்தெடுப்பதால், ஒரு ஜீவனை, சிசுவை கொல்ல வேண்டும். அப்படி வளரும் மனித சிசுவைக் கொன்று அதை ஆராய்ச்சியின் உபயோகத்திற்கு உட்படுத்துவது பெரிய பாவம் என்று மதத் தலைவர்கள் கோஷமிடுவதால், ஆராய்ச்சி ஒழுக்கதிற்கே ('Research Ethics') பாதகத் தன்மை விளைவிப்பதாக விஞ்ஞான சமூகத்தில் சிலர் கருதுகின்றனர்! ஆனால் இந்த ஆராய்ச்சியை ஆதிரிக்கும் சிலர், மனித குலத்துக்கே வாழ்வளிக்கக்கூடிய, குணப்படுத்த முடியாத வியாதிகளை குணபடுத்தும் சிகிச்சைகளை வழிகொடுக்கும் ஆராய்ச்சி இது என்று கூறுகின்றனர், அதுவும், நாங்கள் யார் கருகலைப்பில் ஈடுபடிகின்றனரோ அவர்களிடமிருந்து தான் அதை பெறுகிறோம், ஆக இது ஒன்றும் பாவமில்லை என்று வாதிடுகின்றனர். மேற்கொண்டு தனியார் மூலம் நிதி உதவி பெற்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இருந்த நிறுவனங்கள், இப்பொழுது அரசாங்க நிதி உதவி பெற முயற்சிப்பதால், பெரும்பான்மையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன! இப்படியாக சர்ச்சையுடன் சென்று கொண்டிருக்கும் இந்த ஆராய்ச்சியிலே சில குளறுபடிகலும், சில மோசடிகளும் நடந்தவண்ணம் இருக்கினறன.

போன மாதத்திலே தென் கொரியாவிலே, Dr. Hwang என்பவர் இந்த ஸ்டெம் செல் ஆராயச்சி பற்றி ஒரு முக்கியமான உண்மைகளை கண்டுபிடித்ததாக அவர் வெளியிட்ட கண்டுபிடிப்பில், அறிவியல் உலகம் ஒத்துக்கொள்ளும் படியான கருத்துகளும் சங்கதிகளும்(stem cell lines Data) இல்லை என்றும், அனத்தும் மோசடி என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! இதற்காக, அவர் எடுத்து கொண்ட முட்டைகள் 185 என்று வெளியிட்டார்,ஆனால் இவை 2200 மேற்கொண்டு இருக்கும் என அறியப்பட்டுள்ளது. இதற்காக அவர் முட்டை பெற்ற கர்ப்பம் தரித்த பெண்களுக்கு தலா 1400 டாலர் கொடுத்ததாகவும், இது அந்நாட்டு அவ்வாரய்ச்சியின் சட்ட திட்டத்துக்கு புறம்பானதென்றும், இதிலே அவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இரு பெண்களும் தங்கள் கருவுற்றிருந்த முட்டைகளை கொடுத்து உதவியதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது அந்நாட்டு அரசின் பல லட்ச டாலர்கள் உதவியுடனும், சரியான் ஒழுக்க கட்டுபாட்டுடனும் நடக்க வேண்டிய ஒரு ஆராய்ச்சி. ஆனால் Dr. Hwang அனைத்தையும் மீறி ஒழுக்கமின்றியும், மோசடியுடணும் நடந்த இந்த அராய்ச்சியின் விளைவு பல பாதிப்புகளை இந்த ஆராய்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. அதனால் உலகெங்கும் இந்த ஆராய்ச்சிக்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இப்படி அநேக எதிர்ப்புகளையும் தாங்கி நடந்து வரும் இந்த ஆராய்ச்சி மனித குலத்துக்கு நல்லது செய்யாவிடினும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும். இந்த ஸ்டெம் செல் எடுத்து இப்பொழுது ஆராய்ச்சியில் இருக்கும் நிலை மாறி சிகிச்சை நிலக்கு மாறினால், நிறைய உயிரணுக்கள் தேவை படும் பொழுது இது ஒரு மிகப்பெரிய வியாபாரமாக்கப்படும், அப்பொழுது ஏழ்மை நிலையில் இருக்கும் கருவுற்ற பெண்கள் தங்கள் சிசுக்களை கொன்று இந்த சிகிச்சைக்கு தேவையான கரு உயிரணுக்கள் தர முன்வந்து, இது எப்படி பட்ட பயங்கரமான நிலைக்கு வரக்கூடும் என்று கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது!