Friday, April 07, 2006

Sex and The City - Readers Discretion Advised!!

என்னடா இங்கிலீஷ் தலைப்பிலே ப்ளாக் வருதான்னு பார்க்கிறீங்களா! அதானே, தமிழ் மணத்திலே தான், தனியா இங்கிலீஷ் பதிவு திரட்டி தனியா ஒன்னு இருக்கே, இங்கே என்னா இந்த பதிவுக்கு வேலைன்னு நீங்க கேட்கிறது புரியுது. இது சுத்தமான தமிழ் பதிவு தான். தொடர்ந்து படிங்க.

'Sex And The City'ங்கிறது இங்க அமெரிக்காவில சக்கைப்போடு போட்ட ஒரு புகழ் பெற்ற சீரியல் தொடர். அனேகமா ஏதாவது ஒரு சேனல்ல, சாயந்திர வேளையில எப்பயாவது ஒரு 'Prime slot'ல ஒடிக்கிட்டே இருக்கிற ஒரு சீரியல். நம்ம ஊரு மாதிரி வருஷகணக்கா, ஒரு முன்னூறு நானூறு எபிசோட்ல தொடர்ந்து ஒடிக்கிட்டு இருக்கிற சித்தி, அண்ணாமலை, மெட்டி மாதிரி இல்லை. இது புதுசா வந்தது 1998ல, மொத்தம் 94 எபிசோட், அது ஒரு ஆறு சீசனா வந்தது, ஆனா ரிப்பீட்டா இப்பவும் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கு. அமெரிக்க வாழ் மக்களுக்கு ரொம்ப பிரசித்தி பெற்ற ஒரு தொடர். நம்மூருக்காரங்க, இங்கே வந்தும், திரும்ப திரும்ப சன்,ஜெயா, ராஜ் ன்னு நம் தமிழ் சேனலை பார்க்காம, இந்த அமெரிக்க சேனல்களை பார்த்துக்கிட்டு இருந்தா இது அவங்க கண்ணுக்கு சிக்கி இருக்கும். இது மாதிரி நிறைய சக்கை போடு போட்ட சீரியல்கள் எல்லாம் பூரண ஆயுசு மாதிரி எப்பவுமே ரிப்பீட்டு தான், முக்கியமா, 'ஃப்ரண்ட்ஸ்', 'எவரி படி லவ்ஸ் ரேமெண்ட்ஸ்', 'தெட் ஸோ ரேவன்' அப்படின்னு அடுக்கிக்கிட்டே போலாம். அது சரி அதென்னா அந்த 'Readers Discretion Advised'ன்னு ஒரு அடைமொழி தொக்கி நிக்குது தலைப்பிலேன்னு கேட்கிறீங்களா, இதோ பதில் கீழே!

இது கொஞ்சம் பலான விஷயங்களையோ, இல்ல அப்படி இப்படியான சீரியலையோ , இல்ல sex சம்பந்தமான விஷயங்களை காமிக்கிறப்பயோ, இங்க இருக்கிற டீவிங்க பார்க்கிற 'Viewers', அதாவது பார்வையாளர்களை, எச்சரிக்கிற வாசகம், அதாவது 'Viwevers Discretion is Advised'ன்னு போடுவாங்க. அதாவது இதுல வர காட்சிகள், கதைகள் எல்லாம் கொஞ்சம் 'Matured Subject', பெரியவங்களும், வயசுக்கு வந்தவங்களும் பார்க்க கூடியதுன்னு அர்த்தம். சின்ன புள்ளங்கயாரும் பக்கத்திலே இருந்தா, அப்பாலே, நகர்ந்து போயிட சொல்லீடுங்கன்னு அர்த்தம். நம்ம ஊர்ல ஷகீலா படத்துக்கு 'A' சர்டிபிகேட்டு கொடுப்பாங்க இல்ல, அதுமாதிரி. அதாவது சினிமால தணிக்கை செஞ்சு, 'வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்னு' போட்டு எடுக்கிற மாதிரி. ஏன்னா சின்ன பிள்ளைங்க கெட்டு போயிடக்கூடாது பாருங்க, அது மாதிரி. ஆனா, இப்ப நம்ம ஊரு டிவியிலே வர அத்தனை சீரியலுக்கும் இந்த அடை மொழியை போட்டாவனும் போல இருக்கு! அப்படித்தான் இருக்கு எல்லா கதை, காட்சி அமைப்புகளும். தணிக்கை கட்டுப்பாடுன்னு நம்ம ஊரு டிவி புரோகிராமுங்களுக்கு ஏதாச்சும் இருக்கான்னு தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க! (உங்க பின்னோட்டத்தை போட்டு!) டிவியில வர இது மாதிரி புரோகிராமுங்களுக்கு சுயமா இந்த அடைமொழி கொடுத்து எச்சரிக்கை விடுறங்க இங்க. நம்மூரு பக்கம் இந்த நியாயதர்மம் இருக்கான்னு தெரியல்லை!


நான் ஊருக்கு தகுந்த மாதிரி உள்ளூரு புரோகிராமு பார்க்க தொடங்கிடுவேன். மொழி எல்லாம் பெரும்பாலும் அதுங்கள்ள இருந்து கத்துக்குவேன். நான் டிவின்னு பார்க்க ஆரம்பிச்சது மெட்ராஸ் வந்தப்ப தான். அப்ப விரும்பி பார்க்கிறது இந்த புதன் வெள்ளிகிழமையில வர ஒளியும் ஒலியும் தான். பெரிசா கொட்டாய்ல போயி எம்ஜிஆர், சிவாஜி படம்னு பார்த்தது வந்தவனுக்கு பொட்டியிலே தெரியுதேன்னு வாய பொளந்துக்கிட்டு கிண்டி ஹாஸ்டல்ல பார்த்தது தான் முத அனுபவம். அப்புறம் வேலை தேடி இந்த வட இந்தியா வந்தோன, பாஷையும் புரியாம, ஒரு மண்ணும் புரியாம பார்த்த சீரியல்கள் அந்த காலத்திலே வந்த 'புனியாத்', 'நுக்கட்' அப்படின்னு ராத்திரி ஒன்பது மணிக்கு வர சீரியலுங்க, பிறகு ஞாயித்துக்கிழமைங்கள்ல காலையில வந்த ராமானந்த சாகரோட 'ராமயண்', அப்புறம் பி ஆர் சோப்ராவின் 'மகாபாரத்' இது தான். பாஷை சரியா புரியலைனாலும், காட்சிகள், சம்பங்கள் அவ்வளவு அழகா கோர்வையா இருக்கும். வச்ச கண்ணு வாங்கமா பார்ப்பேன். அந்த புராண சீரியல்கள்ல, மந்திரம் தந்திர காட்சிகள், அப்புறம் கதையை பக்கத்திலே கேட்டு, அதிலேயும் புராணக்கதை தெரிஞ்சதாலே, ஏதோ புரிபடும். சில சமயம் அந்த பேக்ரவுண்டுல கதை சொல்லுமே ஒன்னு, 'மே சமயன் கூ' அப்படின்னு, பாதி கதை, எளவு சொல்லி முடிச்சுடும், ஒரு மண்ணும் புரியாது. இதெல்லாம் ஆரம்ப காலங்கள்ல தான். அப்புறம் ஹிந்தி நல்லா தெரிஞ்சோன நான் ரசிச்ச சீரியல்கள் நிறைய உண்டு. அதுவும் கோவிந்த் நிஹாலனி தயாரிச்ச 'தமஸ்' அப்படின்னு ஒரு சீரியல். இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலே இருந்த கிராமத்தில, அப்ப நடந்த பிரிவினை கலவரத்தை பேஸ் பண்ணி வந்த சீரியல். நான் நல்லா ஹிந்தி பேச, தெரிஞ்சிக்க பழகின பின்ன, ரசிச்ச சீரியல்கள்ல ஒன்னு.


அப்புறம் இந்த சாட்டிலைட் டிவி சானல் வந்தோன முதல்ல போடு போடுன்னு வந்தது இந்த சீ(ZEE) டிவி, அப்ப ஆரம்பிச்சது சில சீர்யல்கள் நல்லா இருந்தது, 'தாரா' ன்னு நினைக்கிறேன் இந்த மேற்கத்திய சானல்களை காப்பி பண்ணி ரொம்ப அல்ட்ரா மார்டன் பொண்ணுங்களை போட்டு காமிச்சது. அப்ப வந்தது தான் நம்ம சன் டிவி, தமிழ் மாலை, ஒளிபரப்பானது முதன் முதல்ல 'பதினாறு வயதினிலே' படம் தான்! அப்புறம் தான் எல்லாம் இந்த எழவு சீர்யலுங்க! அத பத்தி அதிகம் சொல்ல வேணா, உங்களுக்கு நல்லா தெரிஞ்சுருக்கும். சரி தலைப்புக்கு வரேன்.

இந்த 'Sex and The City' சீரியல் முழுக்க முழுக்க நியுயார்க் சிட்டியில்ல, தனியா வாழ்ந்துக்கிட்டிருக்கிற, இந்த 'Single women' நாலு பேரை பத்தி தான். அவெங்க போடற கும்மாளம், சனி ஞாயித்துக்கிழமையில போற 'dating', ஸ்டைலா வாழ்ற வாழ்க்கையை பத்தி தான். அந்த நாலு பேரு, 'Carrie Bradshaw', 'Samantha Jones', 'Charlotte York', 'Miranda Hobbes' தான். அதில 'Carrie' யா நடிச்சிருக்கிறது 'Sarah Jessica Parker' ங்கிற நடிகை. ரொம்ப கேஷுவல். இதில அம்மணி நியூஸ் பேப்பர் காலமணிஸ்ட், கதை, கட்டுரை எழுதுவாங்க. அவங்க எழுதின நாவல் தான் இந்த 'Sex and The City'. மத்த மூணு பேருக்கும் தனி தனி கிளைக் கதை இருக்கும். எல்லாமே செக்ஸ், அந்தரங்க வாழ்க்கை, பாய் ஃபிரண்டு, ரிலேஷன்சிப், இத்யாதி, இத்யாதி..
சீரியல் முழுசும் செக்ஸ் மற்றும் காமடி! நல்லாவே ரசிக்கலாம். அதிலயும் ரொம்ப ரவுசு பண்ற பார்டி இந்த 'செமந்தா' தான், இந்த அம்மணி பண்ற அலும்பு தாங்க முடியாது, பயங்கற ரகளை. ஒரு எபிசோட்ல அம்மணிக்கு எசகுபிசாக வரக்கூடாது இடத்தில வெள்ளி நரை வரும், அத டை அடிக்கிறேன் பேர்வழின்னு என்னமோ பண்ண என்னமோ ஆயிடும். கடைசியில சுத்தமா மழிக்க வேண்டி இருக்கும். ஆனா பாய் ஃபிரண்டுக்கு காடு தான் புடிக்கும். அத எப்பிடி அவங்கிட்ட சொல்தறதுன்னு தவிச்சுகிட்டு இந்த அம்மணி போடற கூத்து ரொம்ப நகைச்சுவையா இருக்கும். (ஏற்கனவே தலைப்பிலேயே போட்டுட்டேன், 'Readers Discretion Advised'ன்னு, பின்னேட்டம் போட்டு இப்படி எல்லாம் எழுதலாமான்னு சண்டைக்கு வராதீங்க!).

அமெரிக்காவிலே இருக்கிறவங்க, இன்னொரு தடவை எல்லா எபிசோடும் பார்க்கணும்னா, இதோ 'TBS'ன்னு ஒரு சேனல்ல இந்த மாசத்தில இருந்து திரும்ப தொடங்குது. பார்த்து இன்புறுங்க. இந்த சீரியல் மத்த எல்லா நாடுகள்லயும் ரொம்ப பிரசித்தம். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா நாடுகள்லயும் , இது டிவிடியா வந்து வித்து தீர்ந்து போன ஒன்னு. நீங்க அங்க இருந்தீங்கன்னா, கிடைச்சா வாங்கி போட்டு பாருங்க. நம்ம ஊருல வரை சீரியல் கதைகள் (எப்படி எப்படி வக்ரமா கற்பணை பண்ண முடியுமோ, அப்படி எல்லாம் வரும் அந்த சீரியல்களுக்கு முன்னே) இந்த 'Sex and The City' எல்லாம் தூக்கி அடிச்சிடும். அதுக்கு முன்ன, இதெல்லாம் நிக்க முடியமா என்ன?
Sex and the City

கடைசியா ஒரு குவிஸ் 'TBS' web site ல போட்டு வச்சிருக்காங்க, அதில பதில் சொன்னீங்கன்னா, அந்த நாலு பொண்ணுங்க கேரக்டர்ல, உங்க கேரக்டர் எப்படி, யாரோட ஒத்து போகுதுன்னு தெரியும், சும்மா விளாயாடி பாருங்களேன், பக்கத்தில இருக்கிற படத்தை கிளிக்கவும்.

13 comments:

said...

இதை எப்ப எழுதினீங்க. விளையாடுங்க ஓய்.

said...

என்னமோ "'Sex and The City" பார்த்து மக்களே உலக நடப்ப தெரிந்து கொள்ளுங்கள் அப்படின்னு கெஞ்சறமாதிரி எழுதியிருக்கேள். சமூகம் உருப்பிடற மாதிரி ஏதாவது கிடைக்குதான்னு கொஞ்சம் பாருங்களேன். எப்படி child sexual abuse-அ குறைக்காலம், அதற்க்கு இந்த மாதிரி 'Sex and The City' போன்ற விசயங்கள் தூண்டுகோளக ஆக வாய்ப்பு இருக்கிறதான்னு ஒரு சிறு ஆய்வு கண்ணொட்டம் விடுங்களேன். ஆமா, இந்த மாதிரி Episodes பார்க்கிறதினால என்ன கிடைக்குது நமக்கு...

இதில க்விஸ் வேற என்னமோ நான் வெள்ளக்கார துரை மாதிரியும் ரெகுலர வெள்ளக்காரிய டேட் பண்றகணக்கா...காலமப்பா!

said...

வாப்பா தாஸூ, நேத்தே எழுதியாச்சே!, விளையாடி பார்த்தீரா? நீரு யாரு கேரக்டர்?

said...

தெக்கிகாட்டான் அவர்களே, நாம உலகத்தோட மறுபக்கத்துக்கு வந்துட்டோமில்லையா? என்ன ஏது நடக்கிறதுன்னு, நம்ம பார்த்ததை சொல்றதில்லை தப்பு ஒண்ணுமில்லையே. மேற்கொண்டு, இந்த subject க்கு ஏன் இவ்வளவு Inhibition தேவைன்னு தெரியல்லையே!

'Child sex abuse'க்கு வேற காரணங்கள் இருக்கு, இது தான் தூண்டுகோள்ன்னு சொல்றது அவ்வளவு சரியில்லையே. அதபத்தியும் விரிவா ஒரு 'analysis' எழுதிட்டா போச்சு!

அப்புறம் 'வெள்ளக்கார துரை' ன்னு உங்க எழுத்தில இன்னும் ஏன் அடிமைத்தனம் தொக்கி நிக்கிது. அவங்களுக்கு நிகரா பவனி வர நேரம் வந்தாச்சு, அப்புறம் உலகம் சுத்தினா, பல கலாச்சாரங்களை பத்தி தெரிஞ்சுக்கிறதுல்ல தப்பில்லையே, 'Dating' போறதும் போவததும், Individual choice. அப்புறம் இந்த டேட்டிங் பத்தி நீங்க வேற அர்த்தம் பண்ணி வச்சிக்கிட்டிருக்கீங்க. இது ஏன், என்னா, இங்கிருக்கிற societ ல, இதோட Compulsion, அப்புறம் இங்க உள்ள ஆங்கிள்ல எப்படி பார்க்கணும்னு ஒரு பதிவு தனியா போடுறேன்!

said...

உதயகுமார்,

இங்கேயும் ராத்திரி ஒம்போதரைக்குன்னு வந்து ஓடோ ஓடுன்னு ஓடுச்சுதான்.

நம்மூரு சிரியல்கள் விவகாரம் தனிங்க. குடும்பத்துலே உள்ளவங்களே எப்படி வில்லியா ஆறாங்கன்னு விலாவரியாச்
சொல்லித்தராங்கல்லே!

said...

துளசி, வெறும் வில்லத்தனமா இருந்தா தான் போதுமே, அதுக்கும் மேலே புது கற்பிலக்கணம் கத்து கொடுக்கிறாங்கிளே, அப்ப இந்த எச்சரிக்கை வாசகம் போடவேணாமா?

said...

நாதரே, நாம அடுத்தவங்களுங்கு நாம பார்த்து (நம் கண்ணொட்டத்தில) நமக்கு பிடி பட்டவரையில்தான் ஜீரணித்து அதனை இங்கு வெளிக்கொணர முடியும். அதுவே, தாங்கள் அனுபவித்து அதன் பொருட்டு தாங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டல், நானும் என் வாழ்வில் அது போன்ற தருணங்கள் வாய்க்கும் பொழுது தாங்களுக்கு ஏற்ப்பட்ட மனோவோட்டம் வந்தால், ஆஹா, இது நாதருக்கு ஏற்ப்பட்டு அது அந்த விளைவை அல்லவா ஏற்ப்படுத்தியது என்று எடுத்துக் கொள்வேன்.

அது அப்படியாக இருக்க, நான் வெள்ளக்கார துரையாக நினைத்துத்தான் தொண்ணுருகலில் ஒரு வெள்ளை பெண்மணியை மணம்முடித்து ஒரு அருமையான பையனையும் பெற்று பட்டறிவுடன் global village, the universe is mine என்று நன்றாக அனுபவித்து(under line there, I am not just writing based on my observation...so you are going to write a guide for dating different ethnic girls, huh...looking forward to hearing from your own perspective not read and seen, heard stories_in a holistic perspective of dating) வாழ்ந்து வருகிறேன், ஒரு ஆறு மாத (அல்லது இரண்டு வருடமொ) விசாவில் ஒரு நாட்டின் காலச்சார பழக்க வழக்கங்களை கரைத்து குடித்து அடுத்தவர்களுக்கு சொல்லுமளவிற்க்கு இன்னும் ஞானம் கிட்டவில்லையெனினும், இன்னும் 14 வருடங்களாக புரிந்து கொள்ள முயற்ச்சித்து வருகிறென். நீங்கள் ஏதாவது கண்டுபிடித்தால் என்னுடன் பகிர்ந்துகொள்வீர்கள் என்று நம்புகிறென்.

நகைக்க வைக்க எதையும் பயன்படுத்தலாமா...? யப்பா, நான் வல்ல இந்த விளையாட்டுக்கு, ரொம்ப வேகமா போன எங்காவது முட்டிக் கிட்டுத்தான் நிக்கனும், நான் தெரிஞ்ச்சிகிட்ட பாடம். எல்லோரும் உலகம் சுத்தித்தான் தன் சிந்தனையை வளர்த்துக் கொள்ள முடியுமா, நாதரே? அப்ப ஏரே பிளேனெ ஏராதவர்களெலாம் என்ன பன்றது...?

தவறாக நினைக்காதீர்கள், நிறையா நல்ல விசயங்களை எழுதிக் கொண்டும் உள்ளீர்கள், நீங்கள் நீங்களாகவே இருக்க எந்த சூழலிலும் முடிந்த அளவிற்க்கு இருக்க முயற்ச்சித்து பாருங்கள், வாழ்வும் வாழ்வதற்காண இன்பமும் அதிலிருப்பதை உணர்வீர்கள் my 2 cents. இல்லையென்றால், you have to check back in with a proven theory that "if you stick your finger into the fire you will hurt at the end."

Anyway, good luck with your venture and self-experimentation.

Love,
TheKa.

said...

I may not expect this kind of blog from Nanotechnology "வெளிகண்ட நாதர்".

But it is nice to read.

said...

தெக்கிகாட்டான் அவர்களே,முதல்ல நம்ம நாமே அனுபவிச்ச ஏற்பட்ட தாக்கங்களை மட்டும் பதிய வச்சு, மத்தவங்களும் அந்த சூழ்நிலையிலே வரும்போது நம்முடய தாக்கத்தை பெறனும்கிறது என்னோடக் குறிக்கோள் இல்லை என்பதை தாழ்மையோட தெரிவிச்சிக்கிறேன்.

இரண்டாவது, நீங்க சொன்ன மாதிரி நம்ம மூளைக்கு என்ன எட்டுதோ, நம்ம எப்படி ஜீரணிச்சு நம்ம கண்ணோட்டத்தில தென்படுதோ, அதை சொன்னோ போதும்னு நான் நினைக்கிறேன். நம்ம ஒன்னும் தீர்க்கதரிசி இல்லையே, எல்லாத்தையும் அனுபவச்சி மத்தவங்க கடைபிடிக்கணும், இல்ல அதே நிலை அடையினும்னு நம்ம எழுதுறதுக்கு. திருட்ட பத்தி எழுத திருடிதான் பார்க்கனுமுனு இல்லையே! ஆனா நீங்க சொல்றது வாஸ்த்தவம் தான் அனுபவபட்டு சொல்ற உண்மைகள் என்னைக்கும் முழுமையா தான் இருக்கும், பெரியவங்களே சொல்லி இருக்காங்க 'களவும் கற்று மற' ன்னு, அதன் அடிப்படையிலே நீங்க கேக்கிறது நியாயந்தான்!

ஆனா நான் இந்த 'Dating'ங்கிற subject பத்தி தப்பான அர்த்தம் எடுத்து வச்சிருக்கிற மக்களுக்கு, அதன் உண்மௌ நிலை, இந்த ஊர் கலாச்சாரத்தோட அழுத்தம், வாழ்க்கைமுறையால, அன்புங்கிறது என்னான்னு தெரியாம் வளர இந்த ஊரு குழந்தைங்க,(சேர்ந்து வாழும் பெற்றோர், கணவன் மனவியை அதிகம் பார்க்காம), குடும்பம், உறவு, பாசம் என்னும் நம்ம கலாச்சார சுழல்ல கிடைக்காத வயசு பசுங்க இந்த 'டேட்டிங்'கிற சுழல்ல எதையோ தேடி போறதை பத்தி அதிகமா விரிவா, நம்ம கலாச்சாரத்தோட கம்பேர் பண்ணி எழுதனும்னு நான் சொல்ல வந்ததை, ஆனா அதிகமா இது SEXலயோ இல்ல 'One night stand'ல யோ முடிஞ்சு போறதை விவரிச்சு, நம்ம ஊரு சின்ன புள்ளங்க இந்த 'டேட்டிங்னா' அந்த ஒன்னு தான்னு அலையறதோட நோக்கத்தை மாற்று பார்வையில பார்க்கணும்னு சொல்லத்தான் நான் அப்படி எழுதியிருந்தேன் அதை பத்தி ஒரு பதிவு போடறதா. ஆனா நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.

அதே மாதிரி H1Bல வந்து ஆறு மாசமோ, இரண்டு வருஷமோ இருந்துட்டு போக்கூடிய, காலேஜ் முடிச்சு அமெரிக்காவுக்கு பொட்டியை தூக்கிக்கிட்டு ஓடி வந்த இளசில்ல நான், பாதி வாழ்க்கை முடிச்சு, பக்குவமா பல ஊரு போயி பார்த்தவன் தான். நீங்க சொன்ன 'holistic perspective of dating' பக்கத்திலே இருந்து பார்த்தவன் தான்!

ஏரோப்பிளேன் ஏறாம ஏடாகூடாம இந்த மேற்கை பத்தி தப்பான சிந்தனையை வளர்த்துக்கிட்டு இருக்கிறவருக்குங்களுக்கு சரியான சிந்தனைகளை சொல்லலாமேன்னு தான். ஆனா என்னதான் படிப்பறிவு இருந்தாலும், ஊர் உலகம் சுத்தி வந்து கத்து கொடுக்கிறதை, உள்ள ஊரு சொல்லி கொடுக்குமா? அதே மாதிரி மாறுபட்ட சிந்தனைகள், முற்போக்கு எண்ணங்கள் எல்லாம் ஊரை தாண்டன வரக்கூடியது தான், ஆனா சின்ன வயசில ஊரு சொல்லிகொடுத்த தர்மம், நியாயம், நல்ல வழிமுறைகளை காத்தில பறக்க விடாத வரைக்கும் எல்லாமே நல்லது தான்!

இந்த சீரியலு வெறும் நகைப்புகுறிய சமாச்சாரங்களை வக்கிரமான செக்ஸ் காட்சிகளா அதிகம் காமிக்கலைன்னாலும், அடிப்படையிலே இந்த ஊருல அன்புக்கு ஏங்கும் தனித்து வாழும் பெண்களையும் புடம் போட்டு காண்பிக்கிறதே இதோட மையக்கருத்து. ஆனா நம்ம ஊரு அதுக்கு எதிர்பதமா, சரியான உறவுமுறைகளை கொச்சப்டுத்தி தாறுமாறா சொல்லி நம் சரியான கலச்சார வலிமைகளை தொய்விழக்க செய்றாங்களே, அதை தான் சொல்ல வந்தேன்!

உங்கள் நிஜ வாழ்க்கையில் அனைத்தும் கண்ட நீங்கள், நிஜமாகவே அனுபவம் கொண்டு இருப்பீர்கள், அது நல்லபடியான அனுபவத்தையே தந்திருக்கும் என நம்புகிறேன். அப்படி இலலை எனில் அதன் விளைவு, எப்படி எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென நீங்களே கூறினால் நன்றாக இருக்கும். அதிகம் நம் இளைஞர்கள் இப்பொழுது வர தொடங்கி உள்ள இப்பூமியில் உங்களின் அறிவுரைகள் ஏற்கூடியவையாகவே இருக்கும். நீண்ட பதிலுக்கு சற்றே மன்னிக்கவும்!

said...

Sivabalan, just to have blogs on varity of all subjects, which I normally get excited about... I certainly assure to make it interesting to read on..

said...

TBSல கொஞ்ச நாள் தொடர்ந்து பாத்தோம். அப்புறம் போரடிக்க ஆரம்பிச்சிருச்சு. அதனால இப்ப எல்லாம் பாக்குறது இல்லை. அப்புறம் அண்மையில K TVயும் வந்தாச்சு வீட்டுக்கு. அதனால அதுல ஏதாவது நல்ல படம் போட்டா பாக்குறோம்.

நல்ல வேளை எச்சரிக்கையைப் போட்டீங்க. :-) அதுக்கே சிவபாலன் அரண்டு போயிட்டாரு போல இருக்கே.

டேட்டிங் பத்தி சீக்கிரம் எழுதுங்க. கொஞ்சம் தெரிஞ்சுக்கறேன்.

said...

ஆமா சில எபிசோட்ஸ் போரடிச்சுடும், //டேட்டிங் பத்தி சீக்கிரம் எழுதுங்க. கொஞ்சம் தெரிஞ்சுக்கறேன்.//
எழுதுறேன், கொஞ்சம் டைம் வேணும்!

said...

//(ஏற்கனவே தலைப்பிலேயே போட்டுட்டேன், 'Readers Discretion Advised'ன்னு, பின்னேட்டம் போட்டு இப்படி எல்லாம் எழுதலாமான்னு சண்டைக்கு வராதீங்க!). //

அது சரி! 'Readers Discretion Advised' பாத்துட்டு தான் இந்த பக்கத்துக்கே வந்தேன்...