Sunday, April 09, 2006

டிஜிட்டல் சினிமா - நாளைய சினிமா!

நீங்க எல்லாம் ஆனந்த விகடன் படிக்கிறவங்களா இருந்தா, இந்த சேரன் எழுதிக்கிட்டு வர 'டூரிங் டாக்கீஸ்' தொடர் படிச்சிக்கிட்டு வருவீங்கன்னு நினைக்கிறேன். அதில சேரன் சின்ன வயசிலே அவங்க அப்பா டூரிங் டாக்கீஸ்ல ஆப்ரேட்டரா வேலை செஞ்சு எப்படி எல்லாம் கஷ்டபட்டாருன்னும் அவருக்கு அப்ப அப்ப துண்டு பிலிம் கொடுத்து சந்தோஷப்படுத்துவாருன்னும் எழுதி இருந்தார். நம்மல்லயும் நிறைய பேரு இந்த துண்டு பிலிம்மை எடுத்துட்டு வந்து சின்ன புள்ளையில பிலிம் காட்டி விளையாண்டதை மறந்திருக்கிறமாட்டீங்க. அட்லீஸ்ட் நான் மறக்கல்லை. ஆனா இனி வரும் நாட்கள்ல இந்த மாதிரி துண்டு பிலிம் எடுத்து விளையாட முடியுமான்னா, அது சந்தேகம் தான். ஏன்னு கேட்கிறீங்களா, அதான் அந்த டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பம்.

பாரதிராஜா ஒரு பேட்டியில சொல்லியிருந்தாரு, 'அப்பன் ஆத்தாளை விட்டு போனாலும் இந்த சினிமாவை விட மாட்டான் இந்த தமிழன்னு'. அது மாதிரி எங்கும் எதிலும் சினிமா தான். சினிமா படங்களை பார்த்து, அதே பொழப்புன்னு அலயற ஜனங்களுக்கு, இந்த சினிமாவுக்கு பின்னால இருக்கும் இந்த தொழில்நுட்பம் என்னா, இப்ப எங்க போய்கிட்டு இருக்குன்னு தெரியுமா? அதே மாதிரி படம் புடிக்கிறது இப்ப எவ்வளவு சுலுவு தெரியுமா? அதுவும் இப்ப காலேஜ் படிக்கிற பசங்க, தங்க கிரியேட்டிவிட்டியை காமிக்க வீடியோ, எடிட்டிங், அப்புறம் ஒளிபரப்ப இணையம்னு எவ்வளவு தொழில் நுட்ப வசதிங்க வந்திருக்கு தெரியுமா? இதெல்லாம் 1980 முன்னே நினைச்சு பார்க்கிற காரியமா? இல்லவே இல்லை. ஆனா, எதிர்காலத்தில இந்த சினிமா எடுத்து காண்பிக்கிறதுங்கிறது ஒரு குடிசை தொழில் மாதிரி வரப்போகுது! அது எப்படின்னு பார்க்கலாமா..

இந்த சினிமான்னு எடுத்துக்கிட்டீங்கன்ன்னா, இதுல நாலு ஸ்டேஜ் இருக்கு, முதல்ல ஃபில்மிங்ன்னு(Filming), அதாவது படம் புடிக்கிறது, அடுத்தது, புரெடெக்ஷன்(Production), அதாவது தயாரிப்பு, மூணாவதா டிஸ்ட்ரிபியூஸன்(Distribution), அதாவது படம் வெளியிடுதல், நாலாவது புரெஜெக்ஷன்(Exhibition), அதாவது படம் தியோட்டர்ல காட்டுறது. இப்ப இந்த நாலு ஏரியாவிலேயுமே, இந்த டிஜிட்டல்ங்கிற புதுமையான தொழில்நுட்பம் வர தொடங்கியிருக்கு. இதுக்கு உதாரணமா சொல்லுனும்னா, நம்ம போட்டோ புடிக்கிற கலையை பத்தி முதல்ல சொல்லியாகணும்.

அந்தக்காலத்தில புகைப்படம் எடுப்பது கேமிராவில ஃபில்ம் ரோல் போட்டு படம் புடிச்சு, பிறகு ப்ரிண்ட் போட்டு எடுக்கிறது, எனக்கு தெரிஞ்சு சின்ன புள்ளயில போட்டா கடைக்கு போயி நல்ல டிரஸ் போட்டு படம் எடுத்து அப்புறம் வீட்டுல மாட்டி வைக்கிற வரை தான் தெரியும். பிறகு படிச்சு முடிச்சு வேலைக்குப்போன பிறகு தான் கேமிரா எல்லாம் வாங்கி படம் எடுக்க ஆரம்பிச்சது, அதாவது நான் சொல்றது 1990க்கு அப்புறம் கணிசமா எல்லாரும் கேமிராவை தூக்கிட்டு டூர் போனா படம் புடிக்கிறது சர்வ சாதாரணமாச்சு, அதே மாதிரி ஃப்லிம் உற்பத்தியில முன்னேற்றம் கண்டு, விலையில்லாம் சரிவடைஞ்சு சாதாரண மனிதர்கள் அனைவரும், ஜப்பான்காரன் புண்ணியத்திலே ஃப்லிம் விலை மலிவா இருந்தாதாலே எடுத்து கொண்டாடினோம். அதிலயும் அதே சமமான காலத்திலே இந்த டெவலப்மெண்ட், பிரிண்டு போடற விலையும் கம்மி. ஆனதால புகைப்படம் எடுப்பதென்பது ரொம்ப சுலபமாச்சு. இப்ப ஒரு நாலு அஞ்சு வருஷமா இந்த டிஜிட்டல் கேமரா, கம்புயூட்டர், இணையம் வந்தோன, இந்த போட்டோங்கிறது எல்லாம் சகஜமாச்சு, எந்த போட்டோ கலை நிபுணரும் தேவையில்ல, அழகான வசந்தகாலத்தையோ, இல்ல மூடுபனிகளையோ, இதோ இந்த தமிழ் இனையத்தில அழகா படம் புடிச்சி போடுறாங்க. இதுக்கு இந்த தொழில்நுட்ப வளர்ச்சி தான்!

அதே மாதிரி இந்த டிஜிட்டல சினிமா வளர்ச்சி எங்கேயோ போய்கிட்டிருக்கு. இந்த டிஜிட்டல் முறையிலே படம் பிடிக்க ஃபிலிம் தேவையில்லை. அப்பறம் நம்ம ஊர்ல 'பொட்டி வந்திடுச்சு, பொட்டி வந்திடுச்சு'ன்னு கூப்பாடு போட தேவையில்லை. ஏன்ன, நான் மேலே சொன்ன நாலு ஸ்டேஜ்மே டிஜிட்டல் மயம் தான். இப்ப ஹாலிவுட்லயும் இதே டிரண்டுதான். அப்படி அதுல முழுக்க எடுத்த வந்த படம், இப்ப வெளியாச்சே 'Star Wars: Episode III-Revenge of the sith' அப்புறம் 'Sin City'. நம்ம தமிழ்ல முழு முயற்சியோட எடுத்த படம் பிசி ஸ்ரீராம் எடுத்த 'வானம் வசப்படும்', பிறகு இப்ப வந்த கமலஹாசன் படம் 'மும்பய் எக்ஸ்பிரஸ்'. இந்த படங்கள் நான் சொன்ன அந்த நாலு ஸ்டேஜ்மே டிஜிட்டல் முறையில செய்து வெளி வந்தது. ஆனா இந்த தொழில்நுட்பம் அவ்வளவா திரைப்படத்துறையாலர்களால ஏத்துக்கப்பட்லங்கிறதுதான் அங்க சங்கிதியே. ஏன்னா எல்லோருக்குமே பயம், எங்க இந்த தொழில்நுட்பம் வந்தா நம்ம வேலை போயிடுமோன்னு நிறைய பேருக்கு பயம். பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால இந்த கம்ப்யூட்டர் எல்லா துறையிலும் வர எப்படி எதிர்ப்பு இருந்துதோ அதே மாதிரி இப்ப சினிமா உலகத்தில இதுக்கு சின்னதா எதிர்ப்பு இருக்கு. ஆமா ஏன் இந்த தொழில்நுட்பத்துக்குள்ள போகணும், என்ன பயன் அப்படின்னு நீங்க கேட்கிறது தெரியுது? மேற்கொண்டு இதை அப்படியே அணைச்சுக்கிறதுல உண்டான சிக்கல்கள் என்னன்னு உனக்கு தெரியுமான்னு நீங்க கேட்கிறது புரியுது. அது என்னான்னு கீழே பார்க்கலாமா?

முதல்ல படம் புடிக்கும் சினிமா கேமராக்கள் பத்தி சொல்லியாகணும். இந்த பிலிம் போட்டு புடிக்கிற கேமராக்களுக்கும் இந்த டிஜிட்டல் முறையில எடுக்கிற கேமராக்களுக்கும் உள்ள வித்தியாசமே frame rate தான். அதாவது 24 frame ஒரு செகண்டுல ஃபிலிம் கேமரால ஓடும்,ஆனா டிஜிட்டல இது 30 frame ஒரு செகண்டுல ஒடும். டெலிவிஷன்ல படம் புடிக்க பெரும்பாலும் இந்த 30 frame rate speed தான் உபயோகிப்பாங்க. அப்புறம் ஓடும் படத்தில பிம்பங்கள் அசஞ்சு ஒடுறது இந்த frame rate கணக்காலத்தான். அதெல்லாம் எப்படின்னு தொழில் நுட்பம் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டிங்கீன்னா, இந்த சுட்டிக்கு போய் பார்க்கவும். ஆனா 'Star Wars' எல்லாம் எடுத்த மூவிக்கேமரா 'Sony'யோட 'HDCF950'ங்கிற 'High Definition Camera' அதுல frame rate ஐ எப்படி வேணாலும் செட் பண்ணிக்கலாம். அதனால இதில படம் எடுத்த துல்லியமா இருக்கும். இந்த கேமரா விலை என்ன தெரியுமா, 50 லட்ச ரூவா. நானும் ஹேண்டிகாம் வீடியோ கேமரா வச்சிருக்கேன்னு சினிமா புடிக்க போயிடாதீங்க. நம்ம வச்சு விளயாடற கேமராவுக்கும், இதுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. எப்படின்னா, தொழில்நுட்பம் தான்!

அதாவது film கேமராவுக்கும், இந்த டிஜிட்டல் கேமராவுக்கும் வித்தியாசமே படம் புடிக்கும் விதம் தான். எதிர்த்தாப்பல தெரியற பிம்பத்தை ஒளி கற்றையால film ல பதிக்கிற மாதிரி, இந்த டிஜிட்டல்ல (Charge Couple Device)CCD ன்னு ஒளிகதிர்களை எலக்ட்ரானா மாத்தக்கூடிய, ஒரு இன்ச்(அளவு கேமிராவுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்) அளவில இருக்கக்கூடிய அந்த சாதனம்தான் எல்க்ட்ரானிக்கா மாத்தி, டேப்லயோ, தகட்டிலோயோ பதியுது. அதுல சிவப்பு, பச்சை, நீலம்னு வண்ணங்களின் கலவைகளை படம் புடிக்க ஒரே சில்லு தான் இருக்கும் நாம உபயோகிக்கும் வீடியோ கேமிராவில, ஆனா, நான் சொன்ன அந்த SONY 'HDCF950'கேமராவில தனி தனி CCD சில்லு அப்புறம் 'base splitter'ன்னு வண்ணங்களை தனி தனியா பிரிச்சு பதிக்கற சமாச்சாரம், அப்புறம் அந்த பதியும் விகிதாசாரங்கள் (Ratio: 4:4:4) அளவு எல்லாம் அதிகம். நம்ம பார்க்கிற 'view finder', இது எல்லாமே உசத்தி.

இப்படி படம் புடிச்சதை வெட்டி ஒட்டுறது தான் அடுத்த வேலை அதாவது தயாரிப்பு, புரடெக்ஷன். இது பழய ஃபிலிமா இருந்த எடிட்டர் இந்த வேலையை ஒட்டி வெட்டுவாரு. ஆனா இப்ப தான் அந்த வீடியோ எடிட்டிங் மென்பொருள் வந்திருச்ச்சே அதை வச்சு கம்ப்யூட்டர்ல வெட்டி ஒட்ட வேண்டியது தான். இதுக்கு பேரு 'Non Linear Editing'னு. இதை filmல புடிச்சாலும் பண்ணலாம். அந்த பிலிம்ல உள்ளதை கம்ப்யூட்டருக்கு மாத்தி இதை பண்ணலாம். அடுத்து ரீரெக்கார்டிங், ட்ப்பிங், அப்படின்னு எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிடலாம் கம்ப்யூட்டர்ல. இதுக்கு மொத்தமா 'Post Production'ன்னு சொல்லுவாங்க. அடுத்த எல்லாம் முடிச்சு படம் வெளியாகனுமே. ம்.. அங்க தான் சிக்கலே.

நாம வழி வழியா பார்த்துக்கிட்டு இருக்கிற தியோட்டர் எல்லாம், படப்பொட்டி வந்தா தான் படம் போட்டு காட்ட முடியும். ஏன்னா எல்லாமே பிலிம் ஓட்ற புரெஜெக்டர்ங்க தான் இருக்கு எல்லா ஊரு கொட்டாய்லயும். அதனால அத டிஜிட்டல் கேமிராவில புடிச்சாலும் திருப்பி பாஸிட்டிவ்,நெகட்டிவின்னு போட்டு பிலிம்லே ஏத்தி படப்பொட்டியை எல்லா ஊருக்கும் அனுப்பிகிட்டிருக்காங்க. இதுக்கு என்னா பண்ணனும்னா எல்லா ஊரு கொட்டாய்லயும் இந்த டிஜிட்டல் புரெஜெக்டர் வச்சாகணும். இதுக்கு ஏகப்பட்ட செலவு. அதனால இத மாத்த யாரும் முன் வரதில்லை. சென்னையில அபிராமி தியேட்டர்தான் முழுசா டிஜிட்டல் புரெஜெக்ஷனோட வசதி உள்ள தியோட்டர்னு கேள்விப்பட்டேன். இப்ப கொஞ்ச கொஞ்சமா எல்லா தியேட்டர்களையும் டிஜிட்டல் புரெஜக்ஷன் வசதிகளோட மாத்திக்கிட்டு வரதா கேள்வி படுகிறேன். அதிலேயும் மெட்ராஸ்ல இருக்கிற Real Image Media ங்கிற கம்பெனி இந்த வசதிகளை செய்றதா கேள்விபட்டேன். அப்புறம் எல்லா தியேட்டர்ங்களும் இந்த புரெஜெக்ஷன் வசதி இருந்தா, இன்னைய தேதியில கனெக்டிவிட்டி இருக்கிறப்ப, டிஸ்டிரிபூஷன் சேட்டிலைட் மூலமா பூரா படத்தையும் டவுண் லோடு பண்ண முடியும். இந்த கம்ப்ளீட் சைக்கிள் தான் டிஜிட்டல் சினிமா. ஆக தொழில் நுட்பம் எங்க கொண்டு போய் விடப்போகுதுன்னு பார்த்துக்கங்க!

இதனால யாருக்கு என்ன லாபம்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது. முதல்ல இந்த சினிமா தயாரிப்பு சிக்கனமாயிடும். அதாவது 3 மணி நேரம் படம் புடிக்கணும்னா, நீங்க 18000 அடி பிலிம் தேவை படும், அதுக்கு டிஜிட்டல பத்து லட்சம் தான் ஆகும், ஆனா பிலிமில அதே footage எடுத்து டப்பால அடுக்க பல கோடியாகும். அப்புறம் படம் எடுத்தோன ரஷ் போட்டு பார்த்து திருத்திக்கவோ, ரீஷூட் பண்ணவோ முடிஞ்சுடும், ஆனா பிலிம்ல எடுக்கிறப்ப திருப்பி திரிஷாக்கிட்ட கால்ஷீட்டு கேட்டாவுணும். அதே மாதிரி நீங்க கீறல் இல்லாம் படம் பார்க்க முடியும். உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி 300 நாள் படம் ஓடினாலும் அதே புத்தம் புதுசா பார்க்க முடியும். அப்புறம் நம்ம சின்ன புள்ளயில துண்டு பிலிம் பொறுக்கன மாதிரி பொறுக்க முடியாது. தியோட்டர்ல, திடீர்னு படம் அனைஞ்சு 'டேய் படத்தபோடுன்னு' கத்த தேவையில்லை (இது அந்த கார்பன் எரிஞ்சு முடிஞ்சு, ஆப்ரேட்டர் தூங்கிட்டா, பிலிம் புரெஜக்டர்லருந்து ஒன்னும் வராது. அப்புறம் ஒரு புரெஜ்க்டரை வச்சி ஓட்டி நாலு இடைவேளை கொடுக்கத் தேவையில்லை. அப்புறம் ஒழுங்க சீரா இந்த திரைப்பட வியாபாரம் பெருகும். இது மாதிரி அடிக்கிட்டே போலாம். வேணும்னா மணிரத்தனம், ஏவிஎம் சரவணன் பேசின பேச்சை இந்த சுட்டி யிலே கேளுங்களேன்!

இது இன்னையோட ஆரம்ப வளர்ச்சி, ஆனா இதுவே இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சா நான் சொன்ன அந்த விலை மிகுந்த கேமிராக்கள் விலை கம்மியாகலாம். எவ்வளவோ பேரு சினிமா ஆசை வளர்த்துக்கிட்டு அலையறாங்களே, அந்த கிரியேட்டிவிட்டி உள்ளவங்க, புதுசு புதுசா திறமைகளை படம் புடிச்சு வெளியிடலாம். இது பெரிய தொழிற்சாலையா இருந்தாலும், இன்னய தேதிக்கு இது 'Entertainment Industry'ன்னு பெருகிகிட்டு இருக்கு. அதேமாதிரி மீடியா சேனல்களும் 'Contents'ன்னு நிகழ்ச்சிகள் தயாரிச்சா, அது நல்லா இருந்த, வியாபாரம் பண்ண நல்ல 'Scope' இருக்கு. இப்ப இந்த மீடியா 'outsourcing'ன்னு ஒரு பெரிய தொழில்வளம் நம்நாட்ல வளர வாய்ப்பிருக்கு(Non Linear Editing கோர்ஸ் படிச்சாலே போதும், அந்த editing செய்ய, அப்புறம் இங்கே அமெரிக்காவில வர நிறைய கார்ட்டூன் படங்கள் எல்லாம் நம்ம ஊர்ல தான் outsourcing) அதுவும் இல்லம, 'Hollywood' படம் நம்ம பண்ணைபுரத்தில எடுத்து இங்கே அமெரிக்காவில வெளி வந்தாலும் நீங்க ஆச்சிரியப்படவேண்டாம். அதே மாதிரி 'கருத்தம்மா' மாதிரி படம் இங்கே 'Bay area'விலருந்தோ, இல்ல நம்ம கறுப்பி மாதிரி ஆளுங்க டொரண்டோலருந்தோ எடுத்து வெளி வரக்கூடிய நாட்கள் அதிக தூரமில்லை!

13 comments:

said...

நிறைய படம் காண்பிக்கிறீங்க, அதுவும் திரிஷா படமெல்லாம். போட்டுத்தாக்குங்க.

said...

எளிமையா... நிறைய விளக்கியிருக்கீங்க... நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது...

said...

இந்தக் காமிராமேன்கள் இடுப்பில ஒரு மூவி கேமிராவைத் தூக்கிக்கிட்டே ஓடுறாங்களே அந்தக் காமிரா பற்றித் தெரிஞ்சுக்க ஒரு சுட்டி கொடுங்களேன்,ப்ளீஸ்!

said...

அருமையான தகவல்கள். நன்றி.

said...

Good blog. Keep it up.

I know this is just one ray from the sun, still lot more good blogs to come from you.

Hoping for the best.

said...

படம் போட்டு புரியவச்சாதானே எல்லாமே புரியும், மோகன் தாஸூ!

said...

யாத்ரீகன், மீனாக்ஸ், வருகைக்கு நன்றி!

said...

தருமி சார், இந்த சோனியோட web site address கொடுத்திருக்கிறேன். அதில எல்லா மாடலும் இருக்கு, பாருங்க!

said...

Thanx SivaBalan! I am sure, It'll!

said...

நல்ல எளிமையாத்தான் சொல்லி இருக்கீங்க.
இந்த ம.ம.க்கும் கொஞ்சம் புரிஞ்சது:-)

said...

புரிஞ்சிடுச்சா எல்லாம், பரவாயில்லையே!

said...

டிஜிட்டல் சினிமா பத்தி கமல் ஒருதடவை சொல்லியிருந்தார். அப்புறம் சுஜாதா ஒரு தடவை சொல்லியிருந்தார். அதனால டிஜிட்டல் சினிமாங்கற பெயர் மட்டும் தான் தெரிந்திருந்தது. இப்ப உங்க பதிவைப் படிச்சதால இன்னும் கொஞ்சம் அதிகமா இதனைப் பத்தித் தெரிஞ்சது. ரொம்ப நன்றி சார்.

said...

குமரன், இன்னும் இதில DTS சங்கதி கொஞ்சம் இருக்கு, அப்புறம் ஒரு தனி பதிவா போடுறேன்!