Monday, June 12, 2006

உஷ்ணமாகும் உலகம் - எப்படி குளிர்விக்கலாம்?

இங்கே அமெரிக்காவிலே ஒரு படம் 'AN INCONVENIENT TRUTH' முக்கியமான சில தியோட்டர்கள்ல ஓடிக்கிட்டிருக்கு! என்னா படம் இது அப்படின்னு கேட்கிறீங்களா, அதான் தலைப்பிலே சொன்னேன்னே அதை பத்தி தான் இந்த படம் எடுத்து சொல்லுது! அதாவது படத்தோட கதாநாயகன் 'Al Gore' ன்னு! இவரை பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க, இவரு அமெரிக்காவிலே ஜார்ஜ் புஷ் முதோ தடவையா போட்டியிட்டு ஜெயிச்சாருல்ல, அந்த போட்டியிலே ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து நின்னு தோத்துப்போனவரு! அதுக்கு முன்னே அமெரிக்காவின் இணை குடியரசுத் தலைவரா இருந்தவரு! தோத்துப்போயி நம் ஊரு அரசியல்வாதிங்க மாதிரி கொடி புடிச்சு தர்ணா, மறியல், பாத யாத்திரை அப்படின்னெல்லாம் போகாம அவரு முன்னே ஆராய்ச்சி செய்துக்கிட்டிருந்த உலக உஷ்ணமாதலை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய போய்ட்டாரு! அப்படி அவரு ஆராய்ச்சி செய்த உண்மைகளை உலகத்திலே எல்லா முக்கிய நாடுகளுக்கும் சென்று பகிர்ந்துக்கிட்டு, இன்னெக்கு உலகத்தோட தட்பவெப்ப நிலை அதிகமாயிகிட்டே போகுது, அதால, சில பாகங்கள்ல வர இருக்கும் இயற்கை சீற்றம், வறட்சி, தொடர்ச்சியாக வரக்கூடிய நோய்கள், அதனால மனித குலத்துக்கு ஏற்படும் அழிவுகளை பத்தி விலாவாரியா விளக்கி, இது எல்லாத்துக்கும் காரணம் நாம தான், இந்த வளர்ந்த புது உலகிலே நம்ம செஞ்ச வினையே நமக்கு எமனா வரப்போகுதுன்னு எடுத்து சொல்லி, அதை களையவும் , இந்த உலக உஷ்ணத்திலே இருக்கிற அரசியல் தன்மைகளையும் சொல்லி, ஒவ்வொரு நாட்டு குடிமகனும் என்ன செஞ்சா இந்த உலகத்தை குளிர்விக்கலாம்னு சொல்லி வர்றாரு! அப்படி அவரு எடுத்து சொன்ன அந்த உண்மைகளை அவர் மூலமே பேச வச்சு, எல்லாரும் சரியா புரிஞ்சிக்கிற மாதிரி வந்த சினிமா படம் தான் அது! நம்ம ஊர்ல வந்திருச்சான்னான்னு தெரியாது, அப்படி வந்தா கண்டிப்பா போய் பாருங்க! இதே அதோட டிரையிலர் கொஞ்சம் ஓட்டிப்பாருங்க!



உலக உஷ்ணத்தை தான் குளோபல் வார்மிங் ('Global Warming')ன்னு சொல்றது! இதை பத்தி தெக்கிட்டான் ஏற்கனவே கொஞ்சம் சொல்லி இருந்தாரு அவரு பதிவான '*குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா?' விலே. ஆனா உலகம் சூடாவறதும் குளிர்ந்துவிடுவதும் பல வருஷங்களா தொன்று தொட்டு நடக்கும் ஒரு நிகழ்ச்சி, இதிலே என்னா இருக்கு, இதெல்லாம் சும்மா வெட்டிக்கதைன்னு சொல்லி ஒதுக்கிற சில கும்பலுங்க உண்டு. அதுக்கு பதிலு சரியா சொல்லுறாரு அந்த 'Al Gore'! சரி இது எப்படி உஷ்ணமாகுதுன்னு தெரியாதவங்களுக்கு, எப்படின்னு கீழே பார்ப்போம்!

உலகப்பந்தை சுற்றி ஒரு வளையம் போல இருப்பது தான் காற்றுவெளி மண்டலம், அதாவது 'atmoshphere'ன்னு ஆங்கிலத்திலே சொல்லுவாங்க. இதிலே கொஞ்சம் போல இருக்கிர கரிஅமில வாயுவாலதான் நமக்கு ராத்திரியிலேயும் கொஞ்சம் வெப்பமா, மிதமா இருக்க வைக்குது. இந்த கரிஅமிலவாயு அதிகமாகிறதும் குறையிறதும் ஒரு நிகழ்ச்சி, ஆனா சராசரி அளவு இப்ப சில வருஷங்களா அதிகமாயிட்டு வருது! அது பூமியின் கடந்த பனிவயதின் போது 180 ppm (இந்த ppm ங்க்றது ஒரு அளவு) அதுவே கொஞ்சம் பனிபாறைகள் உருகி கடல் கலந்து, நம்ம வளர்ந்த உலகமாகுமுன் 280 ppm ஆகி போச்சு. இந்த 280 ppm அளவு நாம் சுகமா இருக்க, அதாவது அதிக வெப்பமும் இல்லாம, குளிரும் இல்லாம மிதமா இருக்க செய்ய, ஆனா நம்ம தொழிற்புரட்சி செஞ்சு, அதை 381 ppm க்கு உயர்த்திட்டோம்! அப்படி உயர்த்தினது உயர்ந்துக்கிட்டே தான் இருக்கேவொழிய குறைய மாட்டேங்கிது, அதுனால இந்த ஒரு 20 வருஷமா, இது வரை பார்க்காத வெய்யிலு மண்டையை பொளக்குது இப்ப! அதுவும் போன வருஷம் ஆந்திராவிலே ராமகுண்டத்திலே 50oC மேலே, இதுக்கெல்லாம் காரணம் இந்த கரிஅமில மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் தான்!

இதிலே ரொம்ப கஷ்டமான ஒன்னு என்னான்னா, துருவப்பிரதேஷத்திலே இருக்கிற ஐஸ்ங்க எல்லாம் கரையறது தான். அதாவது ஆர்டிக், அண்டார்டிக்ல இருக்கும் பனிபாறைகள் உருகுவது தான். இதுனால புண்ணியம் என்னான்னா, சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பலவற்றை திருப்பி அனுப்பிச்சிடும் இந்த பனிபாறைகள், ஆனா கடல் தண்ணி அப்படியே கிரகிச்சு, உஷ்ணமாக்கிடும் அது தான் காரணம்! இந்த கரி அமில வாய்வுகளால் சூழப்பட்ட அந்த காற்று மண்டலம், அளவா கரிஅமில வாய்வு இருந்தா, நான் மேலே சொன்ன மாதிரி சூரியக்கதிர்களை திருப்பி அனுப்பிச்சிடும், ஜாஸ்தியான, அந்த ஒளிக்கதிர்களால பூமியின் பரப்பிலே அடக்கி உஷ்ணம் தான். இப்ப தெரியுதா எப்படி பூமி உஷ்ணமாகுதுன்னு!

நீங்க எல்லாம் படிச்சிருப்பீங்க, இந்த கரிஅமில வாயுவை நம்மை சுவாசத்திலே வெளிவிடுறோம் அதை தாவரங்கள் சுவாசிக்கதுன்னு, அப்புறம் என்னா அது சுவாசிச்சா எல்லாம் குறஞ்சிடாதான்னு! எல்லாம் சரிதான், வெறும் மனுஷன் விட்டா பரவாயில்லையே, நாம போட்டு எரிச்சு வெளியிடுறோமே, அதான் நமது வாகனங்கள், தொழிற்சாலைகள், மற்றும் வெளியேறும் கழிவு வாய்கள் தான் இந்த கரிஅமில வாயு காற்று மண்டலத்திலே கூடக் காரணம்! அது அதிகமாக அதிகமாக நமக்கு கண்டம் தான்! ஏன்னா எல்லாத்தையும் தாவரங்கள் உபயோகப் படுத்துவதில்லை!

இதுவரைக்கும் கண்டுபிடிச்ச கோள்கள் நட்சத்திரங்கள்ல நமக்கு கிடைச்சிருக்கும் வரப்பிரசாதமான இந்த காற்று மண்டலம் எந்த கோள்லயும் இல்லை! அது இருந்தா தான் எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழ முடியும்! ஆனா நாம அது என்னான்னு தெரியாம பாழ் பண்ணிக்கிட்டிருக்கோம்!

சரி இந்த உஷ்ணம் கோடையிலே தானே, அதுபாட்டுக்கு கழுதை வந்திட்டு போது, நான் ஏசி ரூம்ல உட்கார்ந்து காலம் தள்ளிட்டு போறேன்னு நீங்க சொன்னீங்கன்னா, உங்களுக்கு விவரம் பத்தலைன்னு அர்த்தம். இந்த உலக உஷ்ணம் எமகாதது! அது எப்படின்னு கேளுங்க! பூமியை இரண்டா பொளந்தீங்கன்னா, அதாவது பூமத்திய ரேகைக்கு வடக்காலதான் நிறைய நிலப்பரப்பு, தெக்காலே எல்லாம் வெறும் தண்ணி தான்! அதுனாலே தெக்கிலேருந்து வடக்கா உஷ்ண காத்து, அதாவது சூரியகதிர்ல கிரகிச்ச சூட்டை கடல் தண்ணி மேலால எடுத்துட்டு போய் வடக்கு துருவத்துப் பக்கம் போய் அங்கே குளிர்ந்து திரும்பி தெக்காலே வந்து சேர்ந்திடும்! இது தான் பருவங்கள் ஏற்படக்காரணம். பூகோளம் படிச்சி, தெரிஞ்சிருந்தீங்கண்ணா இது உங்களுக்குப்புரியம். நம்ம பூமத்திய ரேகையிலேருந்து வடக்காலே கொஞ்சம் தள்ளி இருக்கிறதாலே இந்த பருவ வெப்பம் சரியா வர்றதாலே தான், புயல், மழை எல்லாம். அது உலகத்திலே வெவ்வேறு பாகத்திலே அந்த மாதிரி பருவப்புயல் வரும், அமெரிக்காவிலே கல்ஃப்ன்னு சொல்ற கரீபியன் தீவுகள்ல இந்த புயல் உருவாகும், நம்ம ஊரு மாதிரியே! அதுவே வடக்கால ஆர்டிக் பக்கமோ, இல்ல தெக்கால அண்டார்டிக் பக்கமே குளிர்ந்த பகுதிங்கிறதாலே அங்கே இந்த புயல், மண்ணாங்கட்டி எதுவும் கிடையாது( அய், துளிசி இருக்கிற நியுசிலாந்து பக்கம் எல்லாம் புயல் எதுவும் கிடையாது, அவங்களுக்கு ஜாலி தான்!)

நான் சொன்ன இந்த காற்று மண்டல அழுத்தங்கள் அப்புறம் கடல் நீர் அழுத்தங்கள் எல்லாம் இதன் அடிப்படையிலே வர்றது தான், எப்பவும் வெதர் சானல் பாத்திட்டு வெள்ளை மேகங்களை மேப்க்கு மேலே ஒட்டி காமிப்பாங்களே, எளவு ஒன்னும் புரியாதில்லை! அது தான் இது, அதுக்கு ஆங்கிலத்திலே பேரு 'Current', கடல்ன்னா, 'sea current', காற்று மண்டலத்துக்கு 'air Current'. இதெல்லாம் உலக உஷ்ணம் ஒரே சீரா இருந்தா சரி, இந்த வெப்பம் அதிகமாயிகிட்டு இருக்கிறதாலே, இந்த அழுத்தங்கள் எல்லாம் தாறுமாறாகி, அதுனால வர்றது தான் அடிக்கடி இந்த புயல் வெள்ளம், மழை எல்லாம். போன வருஷம் அடிச்ச புயல், மழை பாம்பேயிலே 37 இன்ச்சுக்கு ஒரே நாள்ல மழை, அதே மாதிரி கேத்ரீனாங்கிற புயலாலே அமெரிக்காவே ஆட்டம் கண்டுடிச்சு! (இந்த புயலுக்கு எல்லாம் அழகா பொமபள பேரு வைப்பாங்க, ஏன் தெரியுமா அந்த காலத்திலே கப்பல்களை பெண்பால் கொண்டு அழைப்பாங்களாம், அதனால கடல் வர்ற புயலுக்கும் பொம்பளங்க பேரு! அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஆம்பள பேரும் வைக்க ஆரம்பிச்சாட்டாங்க, நம்ம ஊர்லயும் இப்படி வச்சா ஜாலியா இருக்கும் இல்ல, 'கிழக்கே வங்கத்தில் குடி கொண்ட செல்வியின் சீற்றம் குறைந்தது'ன்னு ரேடியோல கேட்டா எப்படி இருக்கும்னு நினைச்சுப்பாருங்க! அப்புறம் பலவீனமான புயல், பலம் பொருந்திய புயலா மாறி, அதாவது அதை வகையா பிரிக்க category வச்சிருக்காங்க, கேட்டகிரி-1 ன்னா பலவீனம், கேட்டகிரி-5ன்னா பலம்!) அது தான் இப்ப எல்லாரும் இந்த குளோபல் வார்மிங் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க! (பிறகு, ஒரு குவிஸ், ஹரிக்கேன், சைக்குளோன், டைஃப்பூன், டோர்னோடோ, இது எல்லாம் என்னான்னு சரியா பதில் பின்னோட்டம் போடறவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் காத்திருக்கு!)

இந்த தாறுமாறான அழுத்தங்கள்லால் வெறும் புயல்,மழை மட்டுமில்லை, உலகத்தின் சிலபாகங்கள்ல சொல்ல முடியா வறட்சி. ஒரு 200 வருஷத்துக்கு முன்னே இருந்த ஒரு பெரிய ஏரி, இந்த சூடான் நாட்டுக்கும் சேட்ங்கிற நாட்டுக்கும் இடையே உள்ள அந்த ஏரி இப்ப சுத்தமா காஞ்சி வெறும் களிமண்ணு கபாளங்களா இருக்கு! ஏன் நம்ம ஊர்லயே சில ஏரிகள், ஆறுகள், அந்த மாதிரி தான் ஆகி போச்சு. நம்ம சின்ன வயசிலே நீச்சலடிச்ச ஏரி, இப்ப கிரிகெட்டு மைதானமாகிப்போச்சு! இதுக்கெல்லாம் காரணம் நான் முன்ன சொன்ன கரி அமிலவாயு! இந்த மாதிரி வெப்பமான இந்த புயல் வறட்சி மட்டுமில்லை, ஏகப்பட்ட தொடர் நோய்கள், மலேரியா மாதிரி நோய்கள் வந்து எல்லாரும் சாக வேண்டியது தான்! இப்படி அந்த சினிமாவிலே நிறைய இடங்கள் ஒரு நூறு வருஷத்துக்கு முன்னேயும் , இப்பவும் உள்ள நிலமையையும் அழகா படம் புடிச்சி காட்றாங்க!

சரி இதுக்கு காரணம் என்னா? எல்லாம் நாம சுகமா வாழ கத்துக் கிட்டதாலே தான்! அதுவாது எல்லாமே மிஷனை நம்பி போயிட்டதாலே! அடிபைப்பு, ஆத்தங்கரையிலே துணி துவைக்கிறது அப்படின்னு அந்தகாலத்திலே நாம் கையிலே செஞ்ச காரியம் எல்லாம் இப்ப மெஷின்னு போய், அதுக்காக தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்றேன்னு, இந்த பூமியிலே கிடைச்ச கச்சா எண்ணெய், எரிவாயுவை கண்டமேனிக்கு எரிச்சு, கழிவு வெளியேற்றம் செஞ்சதாலே வந்த வினை தான். அதுவும் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள்,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவைகளால்! பத்தாததுக்கு இப்ப வளர்ந்து வரும் நம் இந்தியா, சைனா போன்ற நாடுகள் கண்ணா பின்னாவென்று எரிக்கும் சக்திகளால், நிலமை இன்னும் மோசமாகி, அடுத்த 50 வருஷத்திலே மொத்த தடபவெப்ப நிலையிலே 1oCலருந்து 2oC வரை ஏத்திவிட வாய்ப்பு இருக்கு! அப்புறம் தெரியும் நம்ம டப்பா எப்படி டான்ஸ் ஆடும்னு!

சரி இப்படி போய்கிட்டு இருக்கேன்னு சொல்லி உலக நாடுகள், ஐநா சபை சார்பா, எல்லாம் ஒன்னா சேர்ந்து. 1997ல், ஜப்பானில் உள்ள க்யோட்டாங்கிற இடத்திலே ஒன்னாக்கூடி ஒரு ஒப்பந்தம் போட்டாங்க, அதுக்கு பேரு 'Kyoto Accord'ன்னு. அந்த ஒப்பந்தப்படி 165 நாடுகள் கை எழுத்துப்போட்டு, இனி இந்த கரிஅமிலம் மற்றும் கிரீன்ஹவுஸ் கேஸ் எல்லாம் கம்மி பண்ணுவோம், அதாவது பிப்ரவரி 16, 2005லருந்து தொடக்கம். அப்படி கம்மி பண்ணாத நாடுங்க, கம்மி பண்ண நாடுங்கக்கிட்ட கப்பம் கட்டி அதை அவங்க கணக்கிலே ஏத்தி மொத்த கழிவு உலகத்திலே கம்மி ஆகிறமாதிரி பார்த்துக்கிட்டாங்க. இதுக்கு பேரு 'கிரிடிட்ஸ்' இதை ஆமோதித்து சட்டம் இயற்றினாங்க எல்லா நாட்டிலேயும், அதாவது 163 நாடுகள்ல, ஆனா அமெரிக்கா, உலக நாட்டாமை, நான் ஒன்னும் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க ஏன்னா, வளர்ந்து வரும் இந்தியா, சைனா, எங்களவிட கழிவை அதிகமா வெளியேத்தறப்ப, அவங்களுக்கு நீங்க சலுகை கொடுத்த தாலே இதை நாங்க ஒத்துக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க! என்னா சலுகைன்னா, இந்தியா, சைனாவுக்கு இது 2012க்கு மேலே தான் அமுலுக்கு வரும், ஏன்னா உலகளவில் பெரிய வளர்ச்சி அடைந்து ஒரு குறிப்பிடற கழிவு வெளியாக, இந்நாட்டிற்கு சில காலம் பிடிக்கும்ங்கிறதாலே இந்த சலுகை! அதையே காரணம் சொல்லி அமுல்படுத்தாத இன்னொரு நாடு ஆஸ்திரேலியா! இதிலெ கூத்து என்னான்னா, உலக கரிஅமில,கிரீன்ஹவுஸ் வாய்க்கள் கழிவு செய்வதில் அமெரிக்கா முன்னனி, அதாவது 30 சதவீதம், இந்த கரிமிலவாய்வை வெளிவிடுவது அவங்க தான், நாம வெறும் 0.7 சதவீதம் தான், இந்த கூத்தை எங்க போய் சொல்றது?

இந்த கழிவு வெளிப்படும் கட்டுபாட்டை கொண்டு வந்தால், அமெரிக்காவின் பல தொழில்கள் நசுக்கப்படும்னு பயந்து இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, இந்த குளோபல் வார்மிங் எல்லாம் ஒரு ஹம்பக்னு சொல்லித்திரியற கும்பல் ஒன்னு இங்கே இருக்கு! அதுக்கு பின்னாலே உள்ள விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள்னு ஏகப்பட்ட ஊழல் கொண்ட ஒரு பெரிய மாஃபியா இங்கே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு. ஒரு தடவை நம்ம நாரயண் இந்த சிரியானா படத்தை பத்தி விமரிசனம் எழுதறப்ப, இப்ப நம்ம இந்தியாவிலே இந்த அமெரிக்க கார்ப்புரேட் நிறுவனங்கள் பண்ணும் ஊழல், அதாவது நம்ம நாட்டு பாலிசிகளை அவங்களுக்கு சாதகமா கொண்டு வர்றதுக்கு செய்யப்படும் லாபி போன்ற லஞ்சங்கள், நம்ம வழிவழியா கொண்டாடுற ஊழலை விட கொடுமையானது என்ற ஒரு காலமனிஸ்ட் எழுதின லிங்க் கொடுத்திருந்தாரு, வேணும்னா போய் பாருங்க அதை! இதோ சுட்டி! அதே போன்ற அரசியலில் சிலரின் லாபத்திற்காக, உண்மைகளை மாற்றி சொல்வதும், புரம்பாக பேசி திரிவதும் அமெரிக்க அரசியலில் சகஜம்! இதை தான் 'Al Gore' அந்த படத்தில் தோலுறித்து காண்பிக்கிறார்! இதற்காக ஒரு விழிப்புணர்வை கொண்டு வர இந்த பப்ளிக் ப்ராபகண்டாவை கையிலெடுத்து, இந்த சினிமாவை வெளி இட்டிருக்கிறார் (இதற்கு நேர் எதிரா, மைக்கல் கிரட்டன்ங்கிற ஒரு ஆளு இதெல்லாம் ஹம்பக்க்னு சொல்லிகிட்டு ஒரு நாவல், 'State of Fear'ன்னு எழுதி இருக்கிறார், எத்தனை பேரு படிச்சிருக்கீங்களோ எனக்குத் தெரியாது! இவரு சைன்ஸ்பிக்ஷன் படம் எடுக்கிர ஆளு, 'ஜுராஸிக் பார்க்'னு ஒரு படம் வந்திச்சில்ல, அது இவரு எழுதுனது தான்!)

ஆக இது போன்று இந்த உலக உஷ்ணமாவதின் பேரழிவை அழகாக படம் பிடித்து காட்டுகின்றனர். அது சரி, இதுக்கெல்லாம் காரணம் தொழிற்சாலை கூடங்கள், நமக்கு என்ன வந்திருக்கு, நாம என்ன செய்ய முடியும்னு 'ஆம்ஜனதா', ம்.. பொதுமக்களாகிய நீங்கள் கேட்பது புரிகிறது! முதல்ல அமெரிக்க வாழ்க்கை முறையை விடுத்து நம்ம ஊர் வாழ்க்கை முறை வாழ்ந்தாலே போதும், இதன் அழிவினை தடுத்துவிடலாம்! எப்படின்னா, வீட்ல, நீங்க வெளியே போகும் போது , லோக்கலா, நாடு முழுக்க, ஏன் உலகமுழுக்க, உங்களாலான உதவி பண்ணலாம்! எப்படின்னா,

வீட்ல சரியான பல்பு உபயோகிக்கிறதிலருந்து, உபயோகப்படாத நேரங்கள்ல எல்லா எலெக்ட்ரிக் அப்ளையன்ஸையும் பிளக்லருந்து எடுத்து வைக்கிறதிலருந்து, சரியா எல்லா பில்டர்ங்களையும் அது நேரம் வர்றப்ப மாத்திரதிலருந்து, இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்! இதெல்லாம் செய்யுங்கன்னு, அமெரிக்க வாழ் மக்களுக்கு சொல்லி கொடுக்குது இந்த படத்திலே, அதை விவரமா படிச்சி தெரிஞ்சுக்கணும்னா, இதோ சுட்டி!

இது அமெரிக்காவுக்கு மட்டுமில்ல, நமக்கும் தான். இன்னும் 25,30 வருஷத்திலே, நம்ம வெளியேற்றும் கழிவு உலகத்தின் கழிவில் 70 சதவீதமாகிடும், ஏன்னா, இப்ப அந்த வேகத்திலே போய்கிட்டிருக்கோம்! அதுக்காக வளர்ச்சியே வேணாமுன்னு இல்லை, ஆனா விவேகமா, கட்டுபடுத்தும் வழிமுறைகளை கையாண்டு வந்தால் கண்டிப்பா கழிவு குறைய வாய்ப்பு உண்டு! அதுவும் இந்த க்யோட்டோ ஒப்பந்தம், நம்மலை 2012 வரைக்கும் ஒன்னும் பண்ணிக்காது! ஆக தொழில் வளர்ச்சி, எங்கெயோ போய்கிட்டிருக்கு! ஆக சக்திகளுக்கான வேறு வழிமுறைகளை கையாண்டால் உண்டு, அதாவது நான் கன்வென்ஷனல் எனர்ஜின்னு சொல்ற மற்ற வழிமுறைகள்! இதெல்லாம் செஞ்சா உண்டு, இல்லை அக்னி நட்சத்திரம் நம்மை பதம் பார்த்துடும்! முக்கியமா அமெரிக்காவை பார்த்து வாழ கத்துக்காம இருந்தா சரி!

இந்த படம் பார்த்துட்டு, சில உண்மைகள் நிறைய விளங்கினதாலே, ஏற்கனவே நியூஸ்ல படிச்சி அப்ப அப்ப தெரிஞ்சிக்கிட்டாலும், சும்மா தாக்கம் வந்து இந்த பதிவு போட்டேன்! நம்மலும் இப்படி படிப்பினை தரக்கூடிய படங்கள் ஏன் எடுக்கிறதில்லை! சும்மா காதல், அம்மா, தங்கச்சி அப்படின்னு திருப்பி திருப்பி உறவுகளையே சொல்லி எடுத்து படம் எடுத்துக்கிட்டிருக்கோம்! நான் ஏற்கனவே சொன்னமாதிரி வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அழகா கையாள தெரிஞ்ச நமக்கு, இன்னும் நம்மல நாமே தாண்ட முடியாம உலக ரீச்சுக்கு ஏன் போகல, இதை பத்தி அடுத்த பதிவிலே விவரமா பார்க்கலாம்!

Sunday, June 11, 2006

என் இனிய தமிழ் மண மக்களே!


நான் உங்கள் வெளிகண்ட நாதர் பேசுகிறேன்! பத்தோடு ஒன்றாக இல்லாமல் முத்தோடு முத்தாய் பதிவிட நட்சத்திர அழைப்பு விடுத்தனர் நம் தமிழ்மண நிர்வாகத்தினர்! இதோ இனி வரும் இந்த ஒரு வாரமும் உங்களோடு அதிகமாக உறவாட போகிறேன். தமிழ்மண வானில் நட்சத்திரமாய் ஜொளிக்க அளித்த வாய்ப்பு! நான் ஓடி ஆடிய பாலத்திற்கும் மண்ணுக்கும், ஆட்ட பாட்டங்களுக்கும், கற்றது கல்லாதது என ஆயிரம் விடயம் பேச உங்களை அழைத்து செல்ல போகிறேன். இதோ என் இனிய ப்ளாக்கரும், இ-கலப்பையும் எனக்கு உதவ, இசைமடுத்து செவி சாய்க்க ராஜாவின் பாடல்கள் சிலவற்றை துணைக்கழைத்து, சினிமாவே முக்கிய அங்கமாக வாழ்ந்து களித்த நாட்கள் கொஞ்சத்தினை திருப்பி புரட்டி, உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்! வாருங்கள் ஆட்டம் காணலாம்!
(இதன் பின்னே வரும் இசை நாதத்தையும், என் முகவுரையையும் கேட்க மறந்து விடாதீர்கள், ஆதாலால் உங்கள் ஒலி பெருக்கியை குறைத்தோ, இல்லை பூட்டியோ வைத்திருந்திருந்தால், அதிகபடுத்தியோ, இல்லை திறந்தோ கேளுங்கள்!)

என்ன ரொம்ப பாரதிராஜா பில்டப் கொடுத்து ஓப்பனிங் ஆரம்பிச்சிட்டேனா! வேறே வழியில்லை, தமிழ் மண முகப்பிலே ஒரு வாரம் நம்ம ஐயிட்டத்தைதான் நீங்க முதல்ல பார்த்தாகணும்! ஒகே மேலே போவோம். இந்த எழுத்துங்கிறதுலே சின்ன புள்ளையிலேயிருந்தே கொஞ்சம் ஆர்வம். அதுவும் பள்ளி நாடகள்ல எதையாவது கிறுக்கி, கதை கவிதை அப்படின்னு எழுதுவேன். சில சமயம் புஸ்த்தகத்திலே வர படத்தை பார்த்து படம் கூட வரஞ்சுக்கிட்டு இருப்பேன்! ஆனா எழுத்திலே ஆர்வமா இருக்க காரணமானது இலக்கியமெல்லாம் படிச்சின்னு சொல்ல மாட்டேன். எல்லாரையும் போல படிச்ச ஆனந்த விகடன், குமுதம் பத்திரிக்கைகள் தான்! இதை பத்தி ஒரு தடவை'இலவுகாத்தக்கிளி' கதை கதச்சப்ப சொல்லி இருந்தேன்!

அதுவும் தமிழ்ல கட்டுரைகள் பத்தாவது, பதினொன்னாம் கிளாஸ் படிச்சப்ப வருமே அந்த தமிழ் இரண்டாம் பேப்பர், அதிலே ஆர்வத்தோட எழுதினது தான் அப்ப ஆரம்பம்! பிறகு நடிக்கரதுல ஆர்வம் வந்ததாலே, நானே நாடகம், கதைகள் எழுத ஆரம்பிச்சேன்! அதுவும் இஞ்சினியரிங் காலேஜ் போய் சேர்ந்தேன்னோ, அப்ப நாலு பக்கம் எழுதின சிறுகதையை பார்த்த என் ரூம்மேட்டு உனக்கு நல்லாவே எழுத வருதுன்னு உசுப்பு ஏத்த அப்ப ஆரம்பிச்சது இந்த எழுத்து! அதிகமா நாடக வசனங்கள் அப்படியே வந்து விழும், அது நான் பார்த்த் சினிமாக்களின் தாக்கம்ன்னு நினைக்கிறேன். அது தான் சில நல்ல நாடகங்கள் கொடுக்க எனக்கு வழி வகுத்துச்சு. தமிழ் கவிதைகள் அவ்வளவா எழுத மாட்டேன், ஆனா எப்பவுமே கூட்டத்தை அசத்துனும்னு எனோட தமிழ் மன்ற செயலர் ராமனாதன், என்னை தெம்மாங்கு கவிதைகள் எழுத சொன்னதலே, அதை கொஞ்சம் எழுதுவேன். அதிலேயும் எழுத்துகள் அவ்வளவு உக்கிரம் இருக்காது, ஆனா அதை அழகா எதுகை மோனையா மேடையிலே பாடி காட்டினா, எப்பவுமே ஒன்ஸ் மோர் போங்க! இப்படி தான் ஆரம்பிச்சது நம்ம எழுத்து!

பிறகு இஞ்சினியரிங் முடிச்சு வடக்கே வேலைக்கு போனோன்ன தமிழே மறந்து போச்சு. நாடகம், கூத்து, பாட்டுன்னு திரிஞ்ச நான் பொண்டாட்டி புள்ளை, வேலைன்னு ஐக்கியமாயிட்டேன். பிறகு வந்தது இணையம், அதில முரசு அஞ்சல் முறையிலே தமிழ் தட்டெழுத்து எழுதி பார்த்ததோட போச்சு. இப்ப தான் இந்த யுனிக்கோடு, இகலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம்னு வந்தோன்ன நம்ம பழைய ஆர்வம் திரும்ப தூக்கிக்கிச்சு! இடைப்பட்ட காலத்திலே ஆங்கிலத்திலே, படிச்சு, செம்மை பண்ணிக்கிட்ட சில அறிவு விஷயங்கள் அதிகமா தமிழ்ல பார்க்கமுடியலேயேங்கிற ஆதங்கம் இருந்துச்சு. அதையும் அழகா, புரிபடும் மாதிரி சொல்லி தமிழ்ல கட்டுரைகள் போட முயற்சி பண்ணி, அதுவும் சொல்லு தமிழ்ல சொல்லி வந்த என் பதிவுகள் நிறைய வரவேற்பு இருந்த தாலே அதையே இன்னும் நிறைய பயன்படக்கூடிய விஷயங்கள் நிறைய எழுதனும்னு தோணுச்சு!

ஆரம்பத்திலே ப்ளாக்கர் என்னமோ ஆரம்பச்சது சும்மா நம்ம பால்ய பருவ நினைவுகள் எவ்வளவோ குறும்புடன் கழிந்ததை பதிவு பண்ணலாமுன்னு!. அதுவும் அந்த காலத்திலே என்னை பாதித்த பல விஷயங்களை எழுதலாமுன்னு ஆரம்பிச்சது. பிறகு பால்யம் மட்டுமில்ல என்னை எது எது பாதிக்கிதோ, ஆர்வமுடன் விஷயம் சொல்ல முடியுதோ, அதையும் தொடர்ந்து எழுதுவோமின்னு, இதோ எழுத ஆரம்பிச்சு சரியா ஒரு வருஷம் கூட ஆகல்லை, ஆனா நூறு பதிவுகள் வரை போட்டாச்சு ! அதிலேயும் சும்மா வெறுமன வெட்டியா அதிகம் பேசமா, நல்லபடியா நல்ல கருத்துக்கள் கொண்ட சப்ஜெக்ட்கள், விஞ்ஞான விஷயங்கள் அப்படின்னு தொடர்ந்து எழுதிக்கிட்டு வர்றேன். அதனால நட்சத்திர வாரத்துக்குன்னு தனியா ஒன்னும் அதிகம் உழைக்கப் போறதில்லை!

சும்மா இது ஒரு போக்கஸ் லைட் நம்ம மேல விழுந்த வாரம். நாடகங்கள்ல கும்பலா வசனம் பேசிக்கிட்டே நிறைய காட்சிகள் நகரும், சில சமயம், அது கிளைமாக்ஸாக்கூட இருக்கலாம், திடீர்னு போக்கஸ் லைட்டு மட்டும் விழுந்து உணர்ச்சியா வசனம் பேசி நடிக்கனும், ஏன்னா சீன்னு முக்கியமா எல்லாரையும் கவர்ந்து, சில திருப்பங்களையோ, இல்ல அதிர்ச்சிகளையோ கதையின் போக்கினை மாத்த அந்த காரெக்டர் மேலே போக்கஸ் விழும்!
அது மாதிரி கும்பல கோய்ந்தா போட்ட ஆளை, திடீர்னு போக்கஸ் போட்டு காமிச்சிட்டாங்க, என்னாலே முடிஞ்ச மட்டும் நல்ல கட்டுரைகள், விஷயங்கள், அனுபவங்கள், சில பயண அனுபவங்கள் எல்லாம் எழுதி போட்டு விடுகிறேன். ஆக தொடர்ந்து இந்த வாரம் வந்து படிச்சு, ரொம்ப அந்நியோனியமாக பின்னோட்டம் போட்டு கதை அடிக்கலாம் வாங்க!

ஆக வாய்ப்புக் கொடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் நன்றி! தொடர்ந்து இந்த வாரம் நம்ம கூட வந்து எல்லாரும் சேர்ந்த கூட்டு நட்சத்திர கேலக்கஸி வாரமாக்குவோம், வாருங்கள் என் அன்பு தமிழ்மண மக்களே!

Saturday, June 10, 2006

Water-பிராமண விதவைகள்!!

இங்கே அமெரிக்காவிலே, இப்போ போடு போடுன்னு போட்டுக்கிட்டிருக்கிற ஒரு படம் 'வோட்டர்', அதாவது 'Water'. நான் தினம் வாக்கிங் போறப்ப தொடர்ந்து ஒரு மாசமா, ஒரு மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டரை கடந்து போறப்ப, அடிக்கடி கண்ணுல படற போஸ்டர், இந்த தீபா மேத்தாவின் வோட்டர்! அட என்னடா நம்ம ஊரு ஹிந்திப் படம் இந்த ஊர்ல இவ்வளவு சக்கைப் போடு போடுதேன்னு ஆச்சிரியமா பார்த்துக்கிட்டு போவேன். ஒரு இரண்டு மாசம் முன்னமே இதை பார்த்துருந்தாலும், இதை பத்தி என்னமோ பதிவு போட மறந்து போச்சு, நேத்து வாக்கிங் போறப்ப பார்த்த போஸ்டரை பார்த்துட்டு , சரி நாளைக்கு பதிவெழுத சப்ஜெக்ட் கிடச்சிருச்சின்னு யோசிச்சுக்கிட்டே வந்தேன், அதான் இப்ப இந்த பதிவு!

இந்த படம் தீபா மேத்தாவோட 'நிலம், நீர், நெருப்பு'ன்னு 'Triology' series'ல வந்த மூணாவதுப் படம். நீங்க எத்தனை பேரு இந்த மூணு படத்தை பார்த்திருப்பீங்கன்னு எனக்கு தெரியாது. நான் மூணையும் பார்த்திருக்கேன். முதல்ல வந்த படம் நெருப்பு, அதான் 'Fire', இது இந்திய குடும்பங்கள்ல நடக்கும் லெஸ்பியன் கதை!(இதை வச்சி விவேக் காமெடி எல்லாம் பண்ணியிருக்கார்!) இந்த 'gay','lesbian' எல்லாம் நம்ம ஊரிலே புடிபடாத ஒன்னு! இதெப் பத்தி பேசினாலே உவ்வேம்பாங்க! ஏன்னா ஒரு 'social stigma', சமூகம் ஏத்துக்காத ஒன்னு! ஆனா வெளியிலே தான் அப்படி, நம்ம நாட்ல நிறையவே நடக்கிற ஒன்னு தான். இதுக்குன்னு வந்து கூடுற கும்பல மெரினா பீச்சிலே பார்த்தவங்க, பத்ரி மாதிரி ஆளுங்க, நிழலுகம் மாதிரி, இதை பத்தியும் நிறைய கதை எழுதலாம்! நான் மெட்ராஸ்ல தங்கியிருந்த 80 களில் இதபத்தி என்னோட மேன்ஸன்ல தங்கியிருந்த ரூம் மேட் தினம் ஒரு கதை சொல்வான்! அதுவும் கண்ணகி சிலை, எம்ஜிஆர், அண்ணா சமாதி பக்கம் அதிகமா நடக்கிற கூத்து! இதுக்கு வந்து உட்கார்ந்திருக்கிற, ஆளுபிடிக்க வரும் கும்பலை என் ரூம் மேட் கரெக்டா இனம் கண்டு சொல்லிடுவான், இது அந்த மாதிரி, நமக்கு மண்ணு, ஒரு எளவும் புரியாது, ஏதோ கும்பல்ல வர்ற ஒரு ஆள்ன்னு நினைக்கிறதோட சரி! எப்படிடா, இவன் மட்டும்னு சட்டுன்னு சொல்லிடறானேன்னு பார்த்தப்ப, ரொம்ப காலம் கழிச்சி விளங்குச்சு, அண்ணாத்தே அந்த கதை தான்னு! சரி இதை எதுக்கு சொல்றேன்னா, இது ஒன்னும் நம்ம ஊர்ல நடக்காத ஒன்னுல்லை, ஆனா இங்கே அமெரிக்காவில் வாழும் இந்திய குடும்பங்கள்ல, இந்த மாதிரி போய்ட்டா, குய்யோ முய்யோன்னு கத்துறவங்களுக்குன்னே ஒரு ஆதரவு அமைப்பு இருக்கு!அது சரி பொம்பளைங்குள்ள, நம்மூர் வீடுகள்ல இந்த லெஸ்பியன் கூத்து நடக்குது நல்லான்னு அடிச்சு சொன்னப் படம்! இதை எதிர்த்து சிவசேனா ஆளுங்க எக்கசக்கமா கத்தி போஸ்டரை கிழிச்சு ஆர்பாட்டம் எல்லாம் பண்ணாங்க, இந்த படம் வந்தப்ப பாம்பேயில்ல!

அடுத்து வந்த படம் பூமி, 'The Earth' அப்படின்னு, இது 'Ice Candy Man'ன்னு வந்த நாவல், அதாவது இந்திய பாகிஸ்தான் பிரிவனையின் போது நடந்த ஒரு கதை! ஒரு பார்ஸி குடும்பத்திலே வளரும் சின்ன பொண்ணின் தோழி, அந்த வீட்டு வேலைக்காரி, இந்து பெண், அப்ப ஐஸ் குச்சி விக்கும் ஒரு தள்ளு வண்டி வியாபாரி அவங்களோட நண்பர், அப்புறம் சைக்கிள்ல செண்ட், அத்தர் விக்கிற இன்னொரு ஆளும் அவங்களுக்கு தோஸ்த்து. ஐஸ் விக்கிறவன் வேலைக்காரியை காதலிப்பான், ஆனா அவ அத்தர் விக்கிறவனை காதலிப்பா, இந்த பிரிவினையின் போது எப்படி, இந்து முஸ்லீம் இனக்கலவரத்தாலே பலி ஆகிறான்னு சொல்லி வந்தப்படம், அவ்வளவா எந்த 'Controversy'யும் இல்லாம வந்து போன படம். இதுக்கு நம்ம ரஹமான் தான் ம்யூசிக். எல்லாம் பாட்டும் இந்த படத்திலே சூப்பர்!

அப்பறம் இந்த 'Triology'ல கடைசியா வந்த படம் தான் இந்த 'வோட்டர்'. இது 1938ல ஆங்கிலேய ஆட்சி நடக்கிறப்ப நடந்ததா வந்த கதை! அதுவும் விதவைகளை பத்தி. இந்தப் படம் ஒரு நாலு வருஷத்துக்கு முன்னே காசி பக்கம் எடுக்கிறதா வந்தாங்க, அப்ப இது இந்துக்களுக்கு எதிரா பிரச்சாரம் பண்ற படம்னு சொல்லி ஒரே அடிதடி, இந்த படத்திலே அப்ப, நம்ம அழகி படத்திலே நடிச்ச நந்திதா தாஸ்ஸும், சபனா ஆஸ்மியும் நடிக்கிரதா இருந்திச்சு. இதுக்குன்னு நந்திதாஸ் மொட்டை கிட்டை எல்லாம் போட்டுகிட்டு ரெடியா இருந்தப்ப தான் இந்த கூத்து எல்லாம்! அப்புறம் அதை அப்படியே ட்ராப் பண்ணிட்டு தீபா மேத்தா கனடா போய்ட்டாங்க! திரும்ப இந்த மொத்த படமும் இலங்கையிலே வச்சு எடுத்து வெளி வந்தது. இதில நடிச்சது நம்ம பூலான் தேவியா (இந்த பூலான் தேவி கதை நிறைய பேரு படிக்கில, நான் பதிவு போட்டு, வேணும்னா ஒரு எட்டு அப்படி கிளிக்கி போய் பார்த்துட்டு வந்துடுங்க!) நடிச்சிச்சே சீமா பிஸ்வாஸ், அப்புறம் கனடா அழகி லிஸா ரே நடிச்சு இப்ப வந்திருக்கு!

படக்கதை இது தான், அந்த காலத்திலே புருஷன் செத்துப்போனா இந்த விதவைக்கோலம் போட்டு மொட்டை அடிச்சி, வெள்ளை சேலை கட்டி, பக்கத்திலே இருக்கிற ஆசிரமத்திலே கொண்டி விட்டுடு வாங்கலாம். அப்படி ஆசிரமத்திலே கொண்டி விட்டா, சாகறவரைக்கும் ஆசிரமே கதின்னு இருக்கு வேண்டியது தான். இதிலே இன்னொரு கொடுமை என்னான்னா, ஆசிரமத்தை ஒட்டறத்துக்காக, பணம் வேண்டி, அங்க வர்ற இளம் விதவைகளை, அப்ப இருந்த ஜமீந்தார்களுக்கிட்ட அனுப்பி விபச்சாரம் பண்ணி, அதில் வரும் வருமானத்தை வச்சி ஆசிரமம் நடத்தறதா கதை வரும்! அதுவும் படத்திலே சின்ன வயசிலே கிழவனுக்கு கட்டி கொடுத்த ஒரு 10 வயசு பொண்ணு, அந்த கிழவன் செத்தோன, கைவளையல், எல்லாம் உடச்சி, மொட்டை அடிச்சி, வெள்ளை சேலைக்கட்டி, தனக்கு என்னா நடக்குதுன்னு தெரியாத பருவத்திலே அந்த மாதிரி கொண்டி ஆசிரமத்திலே விட்டுட்டு, அந்த பொண்ணையும் விபச்சாரத்திலே ஈடுபடுத்தி கடைசிலே காப்பாத்தி காந்தி ஆசிரமத்திலே கொண்டி விடறமாதிரி கதை! படம் எடுத்த விதமமென்னமோ ரொம்ப நல்லாதான் இருக்கு! படத்தின் சில காட்சிகள் உண்மையிலேயே, நடந்த அந்த சம்பங்களை பார்க்கும் போது கொடுமையா இருக்கு! ஆனா கடைசியிலே அது இன்னும் வழக்கிலே இருக்குன்னு சொல்லி கடைசியிலே டைட்டில் கார்டுல விளாவாரியா விளக்கிறது தான் இன்னும் புரியலை! அப்படி இன்னும் நடக்குதான்னு விவரம் தெரிஞ்சவங்க மேற் கொண்டு சொன்னா நல்லா இருக்கும்!

அவங்க சொல்ற கணக்குப்படி, 2001 கணக்கெடுப்படி, இன்னும் இந்தியாவிலே மூணரை கோடிக்கு மேலே விதவைகள் இருக்காங்க! அநேகம் பேரு, பொருளாதார, சமூக கலாச்சார பிடியில், இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னே வகுப்பட்ட மனு சாஸ்த்திரப்படி இன்னும் அதே நிலைமையிலே இருக்காங்கன்னு சொல்லி, பெரிய டைட்டில் கார்டு போட்டு சொல்றாங்க, அதுவும் இன்னும் இது அந்தணர் குலத்திலே அதிகம்னு சொல்லுது இந்தப்படம்! இது என்னா உண்மையான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க! எனக்கு தெரிஞ்சு, சின்ன வயசிலே அங்கொண்ணும், இங்கொன்னுமா, சில ஐயர் வீடுகள்ல பார்த்திருக்கேன் சில பாட்டிமார்களை, மொட்டை அடிச்சி, ராமமோ, விபூதியோ பூசிக்கிட்டு, அதுவும் வெள்ளை சேலை எல்லாம் கட்டி பார்த்ததில்லை. அப்புறம் சினிமாவிலே காமடி பண்ற அந்த மாதிரி மாமிகளை பார்த்திருக்கிறேன். ஆனா இது என்னடான்னா இவ்வளவு பெரிய 'statistical data'வோட சொல்றாங்க இந்த படத்திலே! அதுவும் பிராமிண விதவைகள் தான் இப்படி கஷ்டபடறாங்கண்னு சொல்றாங்களே, அது எப்படி?

மற்ற சாதி சனங்கள்ல இது அதிகம் இல்லையே ஏன்? நம்ம படிக்கல்லையா, இல்ல பார்க்கலையா, இந்த விதவைக்கோலம் போடும் பெரும்பாலான அம்மாக்களுக்கு இடலி யாவாரம் பண்ணி பொழப்பை நடத்தி குடும்பத்தை பெரிசா கொண்டு வந்ததா சொல்றாங்களே. சேரன் கூட ஆனந்த விகடன்ல டூரிங் டாக்கிஸ்னு எழுதனப்ப, அவங்க பாட்டியை பத்தி சொல்றப்ப பெருமையா, சின்ன வயசிலே விதவையானலும், எல்லாத்தையும் வீரங்கொண்டு சமாளிச்சு, சமூகத்திலே தன் தாய் தந்தையரை முன்னேற்றி தன் குடும்பம் பெரிசா வந்ததுன்னு சொல்லி இருக்கிறாரே! ஏன் நானே என் விதவையான அத்தையின் வாழ்க்கையை பார்த்திருக்கிறேன். இந்த சமுதாயத்திலே நீச்சல் போட்டு வந்ததை! அதெப்படி இந்த படத்திலே காமிக்கிற மாதிரி விதவை கொடுமைகள் இன்னும் இருக்குன்னு சொல்றாங்க! அது தான் புரியல்லை?

அதுவும் எல்லாத்திலேயும் முன்னேற்றமா இருக்கும் இந்த பிராமண குலத்தில், இந்த விதவை விஷயத்திலே இப்படி பின்னோக்கி இருந்தாங்க, இப்ப இல்லேன்னாலும் அந்த காலத்திலே எப்படி இப்படி கொடுமை படுத்தினாங்க மனுசாஸ்த்திரம், ஆட்சாரம்னு சொல்லி, அது தான் புரியல்லை? பரவலா அப்ப இருந்த சதி ஏறுதல் அதிகம் மத்த இந்து குலங்களில் இருந்த ஒன்ன்னா? பிராமண குலத்தில் இந்த விதவைக்கோலம் பூளுவது எப்படி தொடர்ந்து இருந்து வந்தது. காந்தி சொன்ன விதவை மறுவாழ்வு புரட்சிகள் எல்லாம் என்னாச்சு? அதான் தெரியல்லை.

அதுவும் இந்த படம் பெரிசா அந்த 'exploited destitute women' பத்தி எடுத்ததா சொல்லி வரும் படங்கள் அவ்வளவா நல்ல இமேஜை கொடுக்கிறதில்லையே! ஆனா இந்த மாதிரி படம் இங்கே தொடர்ந்து ஒடுவது எனக்கு ரொம்ப ஆச்சிரியப்பட வச்ச ஒன்னு! நம்ம ஊர்ல வந்திருச்சான்னா இன்னும் எனக்கு தெரியாது! எக்னாமிக் பவர், பொருளதார வளர்ச்சியிலே பீறு நடை போட்டு வருது இந்தியா அப்படின்னு பெருமை பேசி வரும் இந்நாட்களில், அந்த கால சத்தியஜித் ரே படங்கள் மாதிரி ஏழ்மையை படம் புடிச்சி காட்டி வந்த மாதிரி, இந்த மூட நம்பிக்கை, பழக்க வழக்கங்களை படம் புடிச்சி இப்படி புரெஜக்ட் பண்றதலே யாருக்கு என்னா லாபமுன்னு தெரியல்லை!

Friday, June 09, 2006

கணக்கு பார்த்து வருவதா காதல்?

ரொம்ப நாளா இந்த ஊர்லயும், ஏன் நம்ம ஊர்லயும் அதிகமா பேசப்படும் ஒன்னு இந்த டேட்டிங்! அதென்னா டேட்டிங் அப்படின்னு கொஞ்சம் ஆராயத்தோணுச்சு. நமக்கு பருவம் வந்த காலகட்டத்திலே, ஏன் ஆதி தொட்டு சொல்வது, 'கண்டதும் காதல்'ங்கிற கதை தான்! அதுவும் சினிமால கொஞ்சம் மேலே போய் காணமல் காணுவதும் காதல்னு புது புது கான்செப்ட்ல காதல் பத்தி சொல்லி கொடுத்துருக்காங்க. அப்படி இருக்கிறப்ப இப்ப என்னாது இது 'டேட்டிங்'ன்னு ஒன்னு புதுசா இந்த மேலை நாட்டு மக்கள் கத்து கொடுத்த, இல்ல ஜஸ்ட் போட்டு கொடுத்த கான்சப்ட் வச்சக்கிட்டு நம்ம ஊரு சின்னசிறுசுங்க அலையது, அது என்னா உண்மையிலே, அதென்ன வெறும் சின்ன சிறுசுங்களுக்கு மட்டுமா, இல்ல முத்திப்போன பெருசுகளுக்கும் உண்டா, எல்லாத்துக்கும் மேலே நம்ம கலாச்சர பாணிக்கு ஒத்து வரக்கூடிய ஒன்னான்னு யாருக்கும் தெரியுமா? மொத்தத்திலே என்னா இதுன்னு பீராஞ்சப்ப சில உண்மைகள் விளங்கிச்சு! ஆக நாம் கொண்டாடும் காதலுக்கு இது முற்றிலும் எதிரான ஒரு கான்செப்ட், நம்ம ஊரு கலாச்சார கண்ணோட்டத்தோட பார்த்தா, ஆனா சில நல்ல உண்மைகளும் தெளிவாகும், இதோட முழு அர்த்தம் புரிஞ்சு, ஐடியலா அதன் சாராம்சம் படி நடந்தா, வெற்றிகரமான வாழ்க்கை அமைத்துக் கொள்ளவும் வழிவகுக்கும்! ஆக அதப்பத்தி கொஞ்சம் பார்ப்போமேன்னு தான் இந்த பதிவு!

(ஒன்னு சொல்லிக்கிறேன், ஏற்கனெவே, நான் ஒரு பதிவில பதில் சொன்ன மாதிரி, திருடுனாதான் திருட்ட பத்தி பேசமுடியும்னு அரத்துறவங்களுக்கு, இது எதுவும் என் அனுபவ முறையில் வந்த கண்ணேட்டமில்லை, படிச்சு, அறிஞ்சு, சில உண்மை மூளைக்கு என்னா எப்படின்னு பட்டதாலே வந்த கண்ணோட்டங்கள் தான்! நமக்கும் இந்த டேட்டிங் எல்லாம் எட்டு காத தூரம்..ஹி,ஹி.., அப்பறம் வீட்ல யாரு அடி வாங்கிறது, அதுனாலே இந்த டிஸ்கிலெய்மர்!)

மொத்தத்திலே இந்த டேட்டிங்க்கு என்னா விளக்கம் கொடுக்கிறாங்கன்னா, இந்த ஆங்கிலத்திலே சொல்லுவாங்களே 'Courtship'ன்னு அதோட அங்கம்கிறாங்க, அதாவது இதை தமிழில், இந்த 'Courtship'ஐ சொல்லனுமுன்னா, 'திருமணத்தை முன்னிட்டு காதலாடுதல்'னு சொல்லலாம். அதாவது திருமணம் செய்ய போற ஒரு ஆணும் பெண்ணும், அதற்கு முன் சந்தித்து கொள்வது, அது நேருக்கு நேராக முக்காவாசி நேரம் அமையும், இல்ல, நம்ம சினிமாவிலே வர கதைகள் படி, இன்டெர்நெட்டில் சந்தித்து காதலாடுவது, இதை நம் கதிர் படம் எடுத்தாரு 'காதலர் தினம்'ன்னு, அப்படி காதலாடுவதுக்கு வர்ச்சுவல் டேட்டிங் ('virtual dating')ன்னு பேராம்! அப்புறம் போனிலே கடலை போட்டு காதலாடுவது, இதைக்கூட வச்சு முரளி நடிச்ச படம் ஓன்னு வந்திச்சே, தெரிஞ்சவங்க ஞாபகமிருந்தா சொல்லுங்க!, அப்புறம் கடுதாசி போட்டே காதாலாடுவது, அகத்தியன் செஞ்ச 'காதல்கோட்டை' சினிமா மாதிரி, அப்புறம் கவிதை, பாட்டு எழுதி காதாலாடுவது, இது மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு! அப்புறம் வெறும் பரிசுப்பொருட்களா கொடுத்து மனதை கவ்ர்ந்து காதலாடுவது, ஆக இதெல்லாம் வேறு வேறு வழி முறைகள்!

அப்படி பார்க்கிறப்ப, இந்த டேட்டிங் என்பது, இந்த மேற்கத்திய கலாச்சாரத்திலே, தனக்கு பொருந்தி வரக்கூடிய பார்ட்னர்களை நேரில் சந்திச்சு, பேசி, பழகி, பல விஷயங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுக்கிறதுங்கிறாங்க! இந்த டேட்டிங்கோட நோக்கம் என்னான்னா, சந்திக்கிற ஆண் பெண் இருவரும் பரஸ்பரம் அறிந்து கொண்டு மேற்கொண்டு உறவுகளை துவக்கலாமா அப்படின்னு யோசிச்சு முடி வெடுக்க தான். ஆனா இதோட மொத்த அர்த்தமும், ஆளை தேத்தி செக்ஸ் வச்சக்கத்தான்னு ஒரு தப்பான அபிப்பராயம் எல்லா மக்கள் கிட்டயும் இருக்கு! குறிப்பா நம்மூரு மக்கள்கிட்ட, சின்னசிறுசங்கள் அந்த நோக்கம் தான் மேலிட்டிருக்கு. மேற்கொண்டு பெரியவர்களும், சின்னசிருசுங்க டேட்டிங்னு போன இந்த மாதிரி போயி வாயிவயிறுமா வந்து தொலைஞ்சிடதான்னு ஒரு தப்பு அபிப்ராயம் வச்சி இருக்காங்க. ஆனா இதன் முக்கிய அம்சம் என்னான்னா, அதுவும் இந்த டேட்டிங் மீட்டிங்ல அவங்க பேச தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்குன்னு சொல்றாங்க!

அதாவது, இரண்டு பேரும் பேசி பழகி தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் என்னானா: ஒருத்தர் ஒருத்தர் குணாதிசியங்கள், நேர்மை, நாணயம் (Character and integrity) போன்றவை, மற்றும் விருப்பு, வெறுப்புகள்(Interests) , பழக்க வழக்கங்கள்(Habits) ! எல்லா விஷயங்களிலும், அது சினிமாவிலிருந்து, கடவுள், ஆன்மீகம், சொந்தம், பந்தம், படிப்பு, அப்படின்னு எல்லாத்திலேயும் தம் தம் மனப்போக்கு (Attitudes), அப்புறம் எது எதுல்ல அவங்க முக்கியத்துவம் (Priority) கொடுக்க ஆசைப்படுவாங்கன்னு! அதுவுமில்லாம அனைத்து கொள்கை மற்றும் செயல்பாடுகளில் தாங்கள் கொண்ட மனமுதிர்ச்சி (Maturity), பிறகு எதில் எல்லாம்,அதுவும் சிலபல வாய்ப்புகள் வரும் பட்சத்தில் எதில் முன்னுரிமை (Preferences) கொடுப்போம் என்பதிலிருந்து, சாமி பூதம் பத்தியும், அரசியல் கண்ணோட்டம், எதிர்பார்ப்புகள், லட்சியங்கள், கடமைகள், குடும்ப சுமை, தாம் வழி வந்த பாரம்பரியம், வழிமுறைகள், தம் தம் வயசுக்குண்டான இடைவெளி, அதனால் ஒருவருக்கொருவர் முதிர்ச்சியின் பலனாய் பரஸ்பரம் விட்டு கொடுக்கக்கூடிய தன்மைகளை அறிந்து கொள்வது, அப்புறம் எப்படி முன்னேற வழி அமைத்துக்கொள்வது, மென்மேலும் வளர்ச்சி அடையும் வழிகளில் ஈடுபட உண்டாகும் திட்டங்களை பேசி ஒத்துக்கொள்வது, ஏன் நிதிநிலை சீர்படுத்திக்கொள்வது, ஒருத்தொருகொருத்தர் எப்படி கருத்து வெளிப்படுத்துகொள்ள முற்படவேண்டும் எல்லாம் தெரிந்து கொள்வது. கடைசியா எப்படி செக்ஸ் வச்சிக்கலாம், என்னென்ன ஆசை, காமக்கலை அறுபத்து நாலுல என்ன தெரியும் தெரியாதுன்னு பேசி தெரிஞ்சுக்கிட்டு, கல்யாணம், கச்சேரின்னு கொண்டாடிட்டு, ஏன் எப்ப புள்ள பெத்துக்கலாம்னு திட்டம் போடற வரைக்கும் பேசி தெரிந்து கொள்ள தான் இந்த டேட்டிங். ஆனா, நான் கடைசியா சொன்ன காமக்கலை அதிகம் பேசி, கணக்கு பண்ணி காரியம் முடிக்க தான் டேட்டிங்னு ரொம்ப பேரு நினைச்சிக்கிட்டிருக்காங்க!

ஆக நான் மேலே சொன்ன அத்த்னை விஷயத்தையும் ஆராஞ்சு, ஒத்து வந்தா மேற்கொண்டு உறவுக்கு வழி கொடுப்பது இல்லையேல் 'low compatibility'ன்னு சொல்லி ஒருத்தொருக்கொருத்தர் டாட்டா காட்டிட்டு பிரிஞ்சு போயிடுறது. நம்ம மெளலி ஒரு படம் எடுத்தாரே, சுத்தரவரைக்கும் இரண்டு பேரும் சுத்திட்டு,ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு, அப்புறம் ஒருத்தொருக்கொருத்தர் கர்சீப் மாத்திக்கிட்டு பிரிஞ்சு போவாங்கல்ல, அந்த மாதிரி கதையாயிடுமாம்! அதுவே ஒத்து வந்தா கல்யாணம் குழந்தைன்னு ஆனப்புறமும், டேட்டிங் போய், ஒருத்தொருக்கொருத்தர் அந்நியோயமா இருக்கிறது இன்னும் நல்லதுன்னு சொல்றாங்க! (ஹலோ, நான் சொல்றது கல்யாணம் கட்டிக்கிட்ட புருஷன் பொண்டாட்டிங்க இரண்டு பேரும் கல்யாணத்துக்கப்பறமும் டேட்டிங் போறதை, தேத்தின பார்ட்டிங்களோட இல்லை-:))ஆக டேட்டிங்கிறது சின்னசிறுசுங்களுக்கு மட்டுமில்ல, பெருசுங்களுக்கும் உண்டுன்னு இப்ப புரிஞ்சுதா! ஆக, இந்த டேட்டிங்கிற பதம் எதை குறிக்கிதுன்னா, இரண்டு பேருக்கான உறவுமுறைகள் ஒருத்தொருக்கொருத்தர் ஒரு தேதியில் சந்திப்பதே! அதுவும் 'ஒருவனுக்கு ஒருத்தி'ங்கிற நம்மூரு கான்செப்டை வழுவாக்கிற மாதிரி ஒரு நிகழ்ச்சி, ஆனா நம்மலை மாதிரி ஆணித்தரமா சொல்லி அடிக்காம! ஆங்கில விளக்கம் அப்படிதான் இருக்கு,'These terms can imply different degrees of commitment and monogamy, but with some ambiguity'

ஆனா இது நம்ம ஊருக்கு ஒத்து வராத ஒரு பணால் விஷயம்! நம்ம கலாச்சாரத்துக்கு, இந்த கல்யாணத்துக்கு முன்னே சுத்திர இந்த 'Courtship'ங்கிற விஷயம் எல்லாம் நடக்காத காரியம் (இப்ப அது கொஞ்சம் மாறிக்கிட்டு வந்தாலும்), ஏன்னா, அப்பன் ஆத்தா பாத்து வைக்கிற பையன் புள்ளையை கட்டிக்கிட்டு, arranged marriages ங்கிற கான்செப்ட்ல வர்ற உறவுமுறைகளை ஏற்படுத்திக்கிட்டு, நான் முன்னே சொன்ன அத்தனை விஷயங்களையும் கல்யாணத்துக்கப்பறம் 'explore' செஞ்சு பாத்து, அதில சில சமயம் ஒத்து போய், பெரும்பாலும் ஒத்து போகம, காம்பரமைஸ் பண்ணி வாழ்ந்துக்கிட்டோ, இல்லே, உனக்கு வேணா, எனக்கு வேணான்னு, அறுத்து விட்டுக்கிட்டு போற கதை தான் ஜாஸ்தி. சில சமயம் விளைஞ்சதுங்க, காதல்ங்கிற வலையிலே விழுந்து நான் சொன்ன அத்தனை 'compatibility'கள் எதையும் காதலிக்கறப்ப 'explore'பண்ணாம , 'உணர்ச்சி குளிகைகளின் உச்சம்', 'கணக்கு பார்த்து வருவதா காதல்'னு சொல்லி திரிஞ்சுக்கிட்டு கடைசியிலே கல்யாணம் பண்ணி, மறுபடியும் காம்பரமைஸ் இல்லை, வெட்டிக்கிட்டு போற ஒன்னு தான் ஜாஸ்தி நடக்கிறது!

ஆனா அதுவே இந்த டேடிங்கிற கான்செப்ட், இப்ப நம்ம ஊர்ல கொஞ்சம் கொஞ்சமா வேறே நோக்கத்திலே போறதும் சரியில்லை! சரி இதெல்லாம் சரி, இவ்வளவு பார்த்து பேசி அடுக்கி, எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணிக்கிற மேலை நாட்டு கலாச்சாரத்திலே, அப்ப ஏன் பெரும்பாலும் கல்யாணங்கள் வெற்றியாவதில்லை, அங்கேயும் இந்த டைவர்ஸ் ரேட், நம்மலை விட அதிகமா இருக்கே,ஏன், அப்படின்னு நீங்க கேட்கிறது புரியது. என்ன தான் 'compatibility match'ன்னு பார்த்து தெரிஞ்சு, அறிஞ்சாலும், கடைசியிலே அது 'workout' ஆகிறதில்லை! பிறகு நம்ம பண்ணிக்கிற காம்பரமைஸ் அவங்க பண்ணிக்கிறதில்லை, அது தான் காரணம்! மேற்கொண்டு ஒருத்தொருக்கொருத்தர் சாகும் வரை துணையா இருப்போம், நமக்கு நாமேன்னு இருந்துக்கிறதில்லை, இன்னிக்கு நீ, நாளைக்கு யாரோன்னு தான்! நான் எல்லாரையும் சொல்லல, பெரும்பாலும் அந்த மனோபாவத்தோட நடக்கிறதாலே, அதை இந்த சமூகம் ஒத்துக்கிறதாலே, அடுத்தடுத்து துணை தேட போய்டுறாங்க! திருப்பி டேட்டிங், துணை தேடுவது தேர்ந்தெடுப்பதுன்னு போறதாலே கமர்சியலா டேட்டிங் சர்வீஸஸ் எக்கச்சக்கமா இங்கே தோன்றி, காசு சம்பாரிக்கிறதுல்ல குறியா இருக்காங்க, அதை பார்க்கம் பொழுது இந்த டேட்டிங்கின் அடிப்படை நோக்கம் எதுக்குன்னு இருந்ததோ, அது மாறி வேற விளக்கத்து போயிடுது! ஆனா, இது நமக்கு இது முற்றிலும் ஒத்து வராத ஒன்னு!

ஆனாலும், நாம் கொள்ளும் காதல், இது போன்று கணக்கு வழக்குகளை முன்னின்று அமையாமல், 'வாழ்வோ, சாவோ, ஒருத்தொருக்கொருத்தர் துணையாக இருப்போம், எவ்வளவு கஷ்டம் வந்தாலும்'னு, சொல்லிக் கொண்டு வாழும் காதல்களே கடைசியில் ஜெயிக்கின்றன! ஆக கணக்கு பார்த்து வருவதில்லை காதல், நீங்க என்னா சொல்றீங்க?

Wednesday, June 07, 2006

சம்பல் ராணியின் காதலர் தின படுகொலை!

என்ன ராஜா ராணி கதை சொல்லப்போறேன்னு நினக்கிறீங்களா? ஒருவிதத்திலே அவங்க ராஜா ராணி தான்! அதாவது ஆங்கிலத்திலே சட்டத்திக்கு புறம்பா செயல் படுபவர்களை 'outlaw persons'ன்னு சொல்வாங்க, இன்னும் ரொம்ப கலோக்கியலா போயி 'Bandit'ம்பாங்க! அப்படி பட்ட 'Bandit Queen', 'Bandit King' தான் இவங்க! ராஜாவானவரு நம்ம தெக்காலே சத்தியமங்கலம் காட்டிலே ஆட்சி புரிஞ்சவரு, ராணியம்மா வடக்காலே, சம்பல் நதிக்கு பக்கத்திலே மத்திய பிரதேசத்துக்கும் உத்திரப்பிரதேசத்துக்கும் இடையே உள்ள பகுதிகளில் வாழ்ந்து ஆட்சி புரிஞ்சி, கடைசியிலே டெல்லி போய் பார்லிமெண்ட்லேயும் எம்பியா ஆனவங்க. யாரை சொல்றேன்னு இன்னும் தெரியல்லையா, அதான் நம்ம சந்தனகடத்தல் வீரப்பனையும், சம்பல் கொள்ளைக்காரி பூலான் தேவியும் தான் அவங்க!. இவெங்க ரெண்டு பேருமே, நம்ம எல்லாம் உதாரணம் காட்டி பேசுவோமே, ராபின் ஹுட், அவரு ஸ்டைல்ல கொள்ளை அடிச்சிட்டு, அதான் பணக்காரன்கிட்ட கொள்ளை அடிச்சி ஏழைக்கு தர்மம் பண்ணவங்க!

இவெங்க ரெண்டு பேரும் பிரசித்தம் எல்லாருக்கும் தெரியும், அதிலேயும் சினிமா புடிச்சு காமிச்சாங்க வீரப்பன் கதையை 'கேப்டன் பிரபாகரன்'னு தமிழ்ல. அப்படியே சுயசரிதையா வரல்லேனாலும் கொஞ்சம் தழுவி வந்தது. அதே மாதிரி வடக்கிலே, ஹிந்தியில்லே வந்த படம் தான் 'Bandit Queen', அதாவது 'பேண்டிட் குவின்'. பொதுவா வீரப்பன் கதை நல்லா தெரிஞ்ச அளவுக்கு, பூலான் தேவி கதை உங்க எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்குமான்னு எனக்கு தெரியலை. ஆனா இந்த படம் பார்த்தவங்களுக்கு கதை நல்லா தெரிஞ்சிருக்கும், மத்தவங்களுக்கு, பூலாந்தேவி கொடுமையான கொள்ளக்காரிங்கிற அளவோட தான் தெரிஞ்சிருக்கும்!

இதிலே விஷேஷம் என்னான்னா, இரண்டுபேருமே யாருமில்லாத காட்டு பகுதிகளில் இருந்து ராஜ்யம் செஞ்சவங்க, அதிலேயும் வீரப்பன் இருந்தது நம்ம சத்தியமங்கலத்துக்கு பக்கத்திலே இருந்த அடர்த்தியான காட்டுப்பகுதி, ஆனா பூலான் தேவி அப்படி இல்லே, சுத்துப்பட்ட இடம் காடுகளான பள்ளத்தாக்கா இருந்தாலும் அடர்த்தியான காடுகள் நிறைந்த இடமில்லை. ஆனா எல்லாமே கிரமங்கள் அதிகம் அடங்கிய ரொம்ப ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒதுக்குப்புறங்கள். இரண்டு பேருமே காளியை தெய்வமா கொண்டாடினவங்க, அதே மாதிரி, பேரை கேட்ட மாத்திரத்திலே அழுதபுள்ளை வாயமூடும்ங்கிற இமேஜை கொண்டவங்க, அவ்வளவு பயங்கரமானவங்க. அப்பறம் அடிக்கிற கொள்ளையிலே ஏழைபாளைங்களுக்கு உதவி செஞ்சு அவங்க மதிப்பும், அன்பும் ஆசியம் பெற்றிருந்தாலும், இவங்க பொது சட்ட விரோதிகளா இருந்து, சமூக இறப்புன்னு ('Civil death') சொல்லக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவங்க! இருந்தாலும் சட்டத்தின் பிடியில் அவ்வளவு சுலபமா சிக்கல, ஏன்னா, அவங்களை காப்பத்தினது சுத்துப்பட்ட கிராம மக்கள்!
ஆனா வாழ்க்கையிலே நிறைய துன்பத்தை அனுபவச்சவங்க, அதிலேயும் பூலான் தேவி கதை ரொம்பவும் வருத்தப்பட வைக்கக்கூடியது! அவங்க செஞ்ச படுகொலையும் பேசபட்ட ஒன்னு, என்னான்னு பார்ப்போமா!

இந்த பூலான் தேவி பொறந்தது 'கெளவ்ரா கா புருவா'ங்கிற ஒரு கிராமம், யமுனை நதிக்கரையிலே மீன்பிடிக்கும் கீழ்சாதியான மல்லாங்கிற சமூகத்தை சேர்ந்த ஒரு மீனவ குடும்பத்தில்! அந்தம்மா சந்தித்தது எல்லாம் ஏழ்மை, அடி, திட்டு, கற்பழிப்பு, பெண்ணியத்துக்கே இல்லாத களங்கம் இது தான்! பூர்வீகம்னு பார்த்தா அவெங்க ஏழைப்பட்ட ஜென்மம் இல்லெ, பதினெஞ்சு ஏக்கர் நிலம் இருந்தாலும் அத்தனையும் புடுங்கிட்டு அம்போன்னு நடுத்தெருவிலே விட்டது அந்தம்மா பெரியப்பா பிகாரி! அந்தம்மா அப்பாரு ஒரு வாயில்லா பூச்சி! அம்மாகாரி தையிரிமா பொம்பளை புள்ளங்களை ஆம்பிளை மாதிரி வளர்த்தாங்க! அதனால சின்ன வயசிலே சாதி கொடுமை, அநியாயம் எதா இருந்தாலும் துடுக்கா பேசி, சாதுர்யமா வளர்ந்து திரிஞ்ச பொண்ணு! அதுவும் பத்து வயசிலே துணிமணி ஏதுமில்லாம தைரியமா, யாருக்கும் கவலைப்படமா, பெண்பிள்ளைங்கிர கூச்சிமில்லாம, திறந்தமேனியா குளிச்சப் பொண்ணு!

அப்படி துடுக்கா இருந்த வேளையிலே, ஒரு நாள், அவங்க பெரியப்பா செத்து போய், அவரு பெரிய மகன், மாயாதின் திடீர்னு அவங்க வீட்டு பக்கத்திலே இருந்த வேப்ப மரத்தை வெட்டி சாட்சி எடுத்துட்டு போனதை எதிர்த்து, அவரு அந்த மரங்கொண்டு போன வண்டியிலே பூட்டின மாட்டு மூக்கனாங்கயிரை மடக்கி புடிச்சி, கேள்விகேட்டு சண்டை போட்டு கேவலபடுத்தினதை மனசில வச்சி, பூலான் தேவியை பதினோரு வயசிலேயே கட்டி கொடுத்துட்டாரு, ஒரு தூரத்து கிரமாத்து வயோதிகனுக்கு! அந்த சின்ன வயசிலே குடும்பம் என்னா பண்ணனும்னு தெரியாமா! அப்ப ஆரம்பிச்சித்து பலாத்காரம் பிறகு வந்த நாட்களுக்கு ஆரம்பமா! 'அந்தாளுகிட்ட இருந்த பாம்பை பார்த்து பயந்தவ'ன்னு தன் கணவர் குறியை பத்தி சொன்னதா சுயசரிதையிலே ஒரு குறிப்பு வரும்! அப்ப துரத்திவிட்டோ, இல்லை தானா ஒடி வந்தோ தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தப்ப, வாங்கிய திட்டு, அவமானத்துக்கு எந்த அர்த்தமும் புரியலை அந்த சின்னப்பொண்ணுக்கு அப்ப!

அப்பறம் துடுக்கா பேசி, அடங்காபிடாரி பேரு எடுத்தாச்சு. எல்லாமே இந்த சாதி கொடுமைகளால வந்தது. அந்த கிராமங்கள் இருந்த உயர்ந்த ஜாதி தாக்கூர் என்கிற இனத்தாலே இழைக்கப்பட்ட கொடுமைகளை துடுக்கா தட்டி கேட்டதாலே இந்த பட்டமும் வேதையனையும். ஒன்னுக்கு பத்தா தண்டனை வழங்கிட்டாங்க அப்ப அந்த உயர்சாதி தாக்கூர் ஆளுங்களும் ஊரு பெருசுங்களும் சேர்ந்து! அப்படி இருந்தப்பதான், அந்த கிராமபஞ்சாயத்து தலைவர் பையனால, ஒரு நாள் தன் தாய் தகப்பன் முன்னிலையில் கற்பழிக்கபட்டார்! அதை எதிர்த்து பக்கத்து கிராம தலைவரை கூப்பிட்டுட்டு போய் அந்த பஞ்சயாத்து தலைவர் வீட்ல போட்ட ரகளையாள, பிறகு பஞ்சாயத்துக்கூடி திரும்பவும் பூலான் தேவியை ஒரு கிழவனுக்கு கண்ணாலம் கட்டி கொடுக்க தீர்மானிச்சாங்க! இனி என் வாழ்க்கையை தீர்மானிச்சிக்க எனக்கு தெரியும்னு அவங்க பஞ்சாயத்தை போங்கடா நீங்களும் ஒங்க பஞ்சாயத்துன்னும் வந்ததாலே, ஊரு பெருசுங்கெல்லாம் ஒன்னாக்கூடி திருட்டுப்பட்டம் கட்டி போலீஸ்ல புடிச்சி கொடுத்துட்டாங்க, அங்கேயும் அடி மிரட்டல், கற்பழிப்பு! சரியான ஆதாரமில்லாம வெளியிலே விட்டுட்டாங்க போலீஸ்!

போலீஸ்ல புடிச்சிட்டு போய் ஜெயிலுக்குப்பெயிட்டு வந்தா என்ன இருக்கும் ஊர்ல மரியாதை, அதுவும் பொட்டப்புள்ளயாயிட்டா கேட்கவேணாம். நாயவிட கேவலமா நடத்தினாங்க! ஊர்ல இருக்கிற கிணத்து தண்ணியை குடிக்கக்கூட காசு கொடுக்க வேண்டிய நிலமை, ஏன்னா, அவங்க மொண்டு குடிச்சா கிணத்து தண்ணி அசுத்தமாயிடும்னு ஊர் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிச்சு! அப்படி போய்கிட்டிருந்தப்ப தான் ஒரு திருப்பு முனை வந்திச்சு! அதாவது காளியின் அவதாரம் எடுத்தது! அதை இப்படி அந்தம்மா சொல்லுது தன் சுய சரிதையிலே!

என் தந்தையோட வேலை செஞ்சப்ப, செஞ்ச வேலைக்கு சரியா கூலி கொடுக்கல்ல ஒரு ஆளு, அதுவும் பெரியப்ப மகன் மாயாதீன் சொல்லி, அப்பதான் நான் சுத்தியளை தூக்கி, ஆக்ரோஷமா 'தேவடியா பய நாயே, காசு கொடுக்கல, உன்னை கண்டதுண்டமா வெட்டி பொலி போட்டுடுவேன்'னு கத்தி என காளி ரூபத்தை காமிச்சோன காசு கொடுத்தான் அந்தாளு! அடுத்த நாளு, பெரியப்பா மகன் வீட்ல போயி, என்கிட்ட துப்பாக்கி இருக்கு சுட்டு தள்ளிடுவேன்னு ஆம்பிளையா வீரமா போய் பேசின அந்த நொடியிலேருந்து 'நான் நிம்மதியா மூச்சிவிட ஆரம்பிச்சேன், தலையை நிமிர்த்தி கிராமத்திலே நடைப்போட்டு வந்தேன். எப்பெல்லாம் எனக்கு தோணுதோ, அப்பெல்லாம் பயமில்லாம ஆத்துக்கு குளிக்கப்போவேன்! அப்பதான் என்னோட பெற்றோர்கள் கிட்ட சொன்னேன், என்னையை இன்னையோட தலை முழுகிடுங்கன்னு!

திரும்பவும் கற்பழிக்க வந்த உயர்ஜாதி தாக்கூர் ஒருத்தனை எதிர்த்து மரக்கட்டையாலே அடிச்சு துரத்தினோன எனக்கு ஒரு புது சக்தி வந்துச்சு, எல்லா கொடுமைகளுக்கும் எதிர்த்து குரல் கொடுக்க! ஊரிலே இருக்கிற அத்தனை பேரையும் உங்களுக்கு இந்த மாதிரி அக்கா தங்கச்சி, அம்மாக்களை எனக்கு ஆளான கொடுமைகளை ஆளாக்க விடுவீங்களான்னு கேட்டு போராடினப்ப வந்தது எல்லா தைரியமும்! இதெல்லாம் பார்த்துட்டு எனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சுன்னு என் வீட்ல எல்லாரும் நம்ப ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா நான் எனக்குள்ளேயே ஒரு காளி ரூபம் எடுத்துக்கொண்டிருந்தேன்'

அப்ப தான் ஒரு நாள் நிஜமா ஒரு கொள்ளைக்கூட்டம் கிராமத்திலே வந்து கொள்ளை அடிச்சிட்டு பூலான் தேவியையும் சிறைபிடித்து சென்றது! அந்த கொள்ளைக்கூட்ட தலைவன் பாபு கஜ்ஜர்சிங் என்பவன் உயர்ஜாதியை சேர்ந்த தாக்கூர் இனத்தை சேர்ந்தவன், அவனுக்கு டெபுடியா இருந்த விக்ரம் என்பவன் பூலான் தேவியின் இனத்தை சேர்ந்தவன். அந்த கொள்ளைக்கூட்ட தலைவன் தொடர்ந்து தன் இச்சையை பூலான் தேவியிடம் தனித்துக்கொண்டான், ஆனால் விக்ரமோ அவனிடம் சண்டையிட்டான், உனக்கு அவளை மிகவும் பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள் என்று! உனக்கு என்ன அவள் மேல் அப்படி அக்கறை என்ற கேட்ட கஜ்ஜருக்கு, அவள் என் இனத்தை சேர்ந்தவள் என்பதால் என்றுகூறி, ஒரு நாள் அவனை சுட்டு கொன்று விடுகிறான். அவனை சுட்டு கொன்றதும் கொள்ளைகூட்டத்தினருக்கு பிடித்திருந்தது, ஏனென்றால் கஜ்ஜரால் கிராமத்து மக்களிடமிருந்து எந்த உதவியும் இல்லாததால், அவனின் செய்கைகள் அனைத்தும் பிடிக்காததால், விக்ரமை தன் தலைவனாக்கி கொண்டார்கள்!

அதறகு பின்னர், பூலான் தேவிக்கு துணையாக,ஆறுதலாக இருந்தவன் விக்ரம். பிறகு அவளின் காதலனாக மாறினான். பிறகு விக்ரமே பூலானை திருமணம் செய்து கொண்டான். அப்பொழுது தான் பூலான் தேவி முழுமையாக ஒரு ஆடவனின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கப் பெற்றாள்! அவளுக்கு துப்பாக்கி பிடித்து சுடுவதிலிருந்து, அனைத்து கொள்ளைக் கலைகளையும், கொள்ளை கூட்டத்தை வழிநடத்தும் தலைமை பொறுப்புகளயும் கற்று கொடுத்தான்.

எப்பொழுதுமே கொள்ளையர்களிடம் உள்ள கொள்கை என்னவென்றல் கொள்ளை அடிக்கும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கினை கடவுள், கோவில் மற்றும் சாதுகளுக்கு கொடுத்து விடுவதுண்டு. அவர்களுக்கு எப்பொழுதுமே கடவுள் மேல் அவ்வளவு நம்பிக்கை! அப்படி ஒரு விபூதி சாமியாரை பார்த்த பொழுது தான், அவர் கூறினார், உனக்கு காளியே துணையாக வந்துள்ளாள், அவளை காப்பது உன் கடமை என்று! அன்றிலிருந்து பூலானுக்கு கொள்ளைக்கூட்டத்தின் தலைவிக்கான அந்தஸ்த்து கிடைத்தது!

பிறகு ஒருமுறை தன்னை சிறுவயதில் திருமணம் செய்து, மானபங்கபடுத்தி, மாட்டுச்சாண அறையில் அடைத்தவனை அவர்கள் பிடித்து மரத்தில் கட்டி அடித்து சித்ரவதை செய்தனர். அவனை நிர்வாணமாக கிராமத்துக்குள் நடக்கவிட்டு, சாவின் விளிம்புக்கு அழைத்து சென்றனர். இது தான் இனி வயதான கபோதிகள் இளம் பெண்களை மணந்து கொடுமை செய்பவர்களுக்கு கொடுக்க போகும் தண்டணை, இல்லை என்றால் என் போன்ற பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாம் கிடைக்காது என்று கூறி, இது போன்று அநியாமாக பெண்களுக்கு கொடுமை இழைப்பவர்களை கொள்ளைக்காரி என்கிற போர்வையில் அடித்து கொன்று தன் நீதியை நிலை நாட்டினாள்!

இப்படி சென்ற பொழுது வழிப்பறி கொள்ளையை கற்று கொடுத்த தனது குருவான உயர்ஜாதி தாக்கூர் இனத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவனை போலீஸிலிருந்து விடுவித்தான் விக்ரம், பிறகு அவனையே தலைவனாக கொண்டான். ஆனால் அவனுக்கு பூலான் மீது சிறுது கண்! ஆதாலாலே இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு அவன் கீழ்ஜாதியான மல்லா இனத்தினரை கொடுமைபடுத்தியதால், கொள்ளைக்கூட்டத்தில் இருந்த அந்த மல்லா இனத்தினர், விக்கரமை விட பூலான் பின் அணி வகுத்தனர்! இதனாலேயே கொள்ளைக்கூட்டம் இரண்டு பிரிவாகப்பிரிந்தது! இப்படி சென்ற பொழுது ஒரு நாள் விக்ரமை ஸ்ரீராம் பின்னாலிருந்து சுட்டுவிட பூலானும் விக்ரமும் நேபாளாம் ஓடி விடுகின்றனர். விக்கிரம் சிகிச்சை பெற்று திரும்பியபின், ஒருமுறை சண்டையின் போது பூலான் அவனை ஸ்ரீராமை தூங்கும் பொழுது கொல்லும் படி சொல்கிறாள். ஆனால் பின்னாலிருந்தோ, தூங்கும்போதோ கொல்வது கோழை என மறுத்து விடுகிறான் விக்ரம். ஆனால் விக்ரமை அதே போல் பின்னால் இருந்து சுட்டு கொன்று விடுகின்றனர் ஸ்ரீராம் தாக்கூர் ஆட்கள். பிறகு பூலானை சிறைப்பிடித்து அவளை கிராமத்துக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு தான் நடக்கிறது கொடுமையிலும் கொடுமை!

பூலானை நிர்வாணமாக படகிலே ஏற்றி கரையினிலே இறக்கிவிட்டு கிராமத்தின் மத்திய பகுதிக்கு அழைத்து வருகின்றனர். எல்லார் முன்னிலையிலும் ஸ்ரீராம், இவளின் காதலன் விக்ரமை கொன்றுவிட்டேன் எனக்கூக்குரலிடுகிறான்! பிறகு இவளுக்கும் தண்டனை தரவேண்டுமா என்று கேட்டு, அவனை போன்ற அவன் தாக்கூர் இன ஆண்களை ஒவ்வொருவராக சென்று அவளை மானபங்க படுத்த சொல்கிறான். அதில் முதல் கற்பழிப்பு அவனுடயது! பிறகு அவளை அடித்து கொடுமைபடுத்தி, நிர்வாணமாக அனைவர் முன்னிலையிலும் ஊர்வலம் நடத்துகிறான். இந்த கொடுமை மூன்று வாரங்களாக தொடர்ந்து நடை பெறுகிறது! கடைசியில் நாயை விடக்கேவலமாக அவளை இழுத்து வீதியில் இட்டு தனக்கு கிணற்றிலிருந்து நீரை இரைத்து வரும்படி கூறுகிறான் அந்த ஸ்ரீராம்! அதற்கு மறுத்த பூலானை, உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு போர்வையையும் உருவி உதைத்து நிர்வாணமாக வீதி வலம் வரவைக்கிறான்! இது தான் அந்த கொடுமையிலும் கொடுமை! அந்த வேளையிலும் அவள் வேண்டியது துர்க்கையையும் காளியையும் தான் தனக்கு தன்னம்பிக்கையை தர! இவ்வளவும் நடந்த இடம் தான் பிகாமி என்ற அந்த கிராமம்!

பிறகு ஒரு வயோதிக பிரமணரால் காப்பற்றப்பட்டு, பிகாமியை விட்டு வெளியேறி காடுகளில் சுற்றி கடைசியில் ஆடுமேய்க்கும் பெண்ணால் சிகிச்சை அளிக்கப்படுகிறாள். அனைத்து ரணமும் ஆறிவிடும், ஆனால் ஸ்ரீராம் தாக்கூர் இழைத்த அந்த கொடுமையின் ரணம், பழிதீர்க்கும் வரை மாறாது என்ற வீராப்புடன் இன்னொரு கொள்ளையர் கூட்டத்தில் சேர்கிறாள் பூலான் தேவி! அப்பொழுது வந்து சேர்ந்த கூட்டாளி தான் மான்சிங்! அவனே அவளுக்கு லெப்டினட் போல துணையாக வைத்து அனைத்து கொள்ளைகளையும் புரிகிறாள். அவன் கொடுத்த சிவப்பு துணியைத்தான் நெற்றியில் எப்பொழுதும் கட்டிக் கொண்டிருந்தாள் பூலான் தேவி! அந்த சிவப்பு நிறத்தை தான் பழிக்கு பழி வாங்கும் சின்னமாக கருதினாள் பூலான் தேவி!

எங்கு பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ, பெண் உரிமைகள் நசுக்கப்படுகிறதோ, கற்பழிப்பு நடக்கிறதோ, வற்புறுத்தி கருக்கலைக்கப்படுகிறதோ, இல்லை பெண்களை தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்களோ, அங்கெல்லாம் முடிசூடா ராணியாக அவதாரம் எடுத்து கொடுமைகளை தட்டி கேட்டு, முக்கியமாக கொடுமை செய்யும் தாக்கூர் இன மக்களை தேடி பிடித்து காளிக்கு ரத்த பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவ்வாறு செய்வதை பெண்களுக்கும் தனக்கும் இழைத்த அநீதிக்கு உண்டான தர்மம் என்க் கருதினாள் பூலான் தேவி!

இப்படி கிராமம் கிராமமாக பூலான் தேவி என்றாலே பயத்திலே அலறி கொண்டிருந்த பொழுது தான், அவளுக்கு கொடுமை இழைத்த ஸ்ரீராமும் அவனது சகோதரன் லாலா ராமும் பிகாமி கிராமத்தில் ஒளிந்திருப்பதை கேள்விபட்டு தேடி வந்தாள், 1981, பிப்ரவரி 14, காதலர் தினப்படுகொலைக்கு! அவளின் ஆட்கள் மொத்த கிராமத்தையும் அடித்து நொறுக்கிய பொழுது எந்த கிணத்திற்கருகில் நிர்வாணமாக தான் கற்பழிக்கப்பட்டு சின்னா பின்னாமாக்க பட்டு தண்ணீர் எடுக்க சென்றாளோ அங்கே நின்று கொண்டிருக்கிறாள்! எங்கு தேடியும் ஸ்ரீராமும் லாலா ராமும் கிடைக்காததால் இளவயது தாக்கூர் ஆண்கள் முப்பது பேரை வரிசையாக நிறுத்தி துப்பாக்கி முனையிலே மிரட்டியும் அவர்கள் ஸ்ரீராம் லாலா ராம் மறைந்திருந்த இடத்தை சொல்ல மறைத்ததால், அவர்களும் தங்கள் அறியாமை தெரிவித்து அழுதபோதும், கடைசியில், வெடி குண்டுகள் முழங்க, முப்பது இளைஞர்களில் 22 பேரின் உடல் மண்ணில் சரிகிறது! இதுவே அந்த வரலாறு புகழ் பெற்ற பிகாமி படுகொலை!

இந்த வரலாற்று படுகொலையால் நாடே கொந்தளித்து! கீழினப்பெண்ணால் மேலின ஆணகள் கொல்லப்பட்டது யாரும் நினைத்து பார்க்காத ஒன்று! பிறகு தான் பூலான் தேவி, நாடு தேடும் முதல் குற்றவாளியாக கருதப்பட்டாள்!

காடுகளில் ஓடி மறைந்து, பிறகு மத்தியபிரதேச அரசுடன் சமாதான பேச்சு நடத்தி குற்றங்களை மன்னித்து விடுதலை செய்ய போராடி, கடைசியில் சரணைடந்து, பதினோரு வருடம் சிறை இருந்து, அரசியலில் புகுந்து எம்பியாகி, கடைசியில் 2001ல் ஜுலை 25ல் பழிக்கு பழி என சரியாக பொட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிழந்தார்!

கடைசியில் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்து ஸ்ரீராமை பழி தீர்க்கமுடியாமல் போய், ஒரு மாபெரும் படுகொலையை செய்து சரணடையும் நேரத்தில், அவளுக்கு லாலா ராமிடருந்து கடைசியாக வந்த செய்தின் படி, லாலாராம் ஸ்ரீராமை கொன்றுவிட்டதாக, அதுவும் ஒரு பெண்ணுக்காக, என்பதை நினக்கும் போது மனிதனுக்கு மனிதன் இழைக்கும் மிகப் பெரியக் கொடுமை, வஞ்சம் தீர்க்கும் நெஞ்சம் கொள்வது என்பதே!

Monday, June 05, 2006

சினிமெட்டோகிராபியும் நம் ஒளிப்பதிவாளர்களும்!

நான் போன வாரம் ஃபனா(Fanna) என்ற ஒரு ஹிந்திப்படம் பார்த்தேன். அதன் ஒளிப்பதிவை பார்த்து அதிசியத்துப்போனேன், கடந்த சில நாட்களுக்கு முன் நான் பார்த்த கிங்காங் என்ற ஆங்கிலப்படத்துக்கான ஒளிப்பதிவும், இந்த படத்திறகான ஒளிப்பதிவும் என் கண்முன்னே மாறி மாறி வந்து செல்வது போன்ற ஒரு கற்பனை. உண்மையில் பார்த்தால் நம்மவர்களின் கைவண்ணம், தொழில்நுட்பத்தை கையாளும் விதம் பிரமிக்க வைக்கிறது! இந்த ஹிந்தித் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நம்ம ஊர் கே ரவிசந்திரன் தான்! இவரை பற்றி தெரியாதவர்களுக்கு, இவரின் சமீபத்திய ஹிந்திப்படங்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை! இவர் ஒளிப்பதிவு செய்து வந்த ஹிந்திப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். அமிதாப் பச்சனும், கண் தெரியாமல் நடித்த ராணி முகர்ஜியும் நடித்து வந்த பிளாக் (Black) எத்தனைப்பேர் பார்த்தீர்களோ எனக்குத் தெரியாது, அதே போல் அவர் ராணி முகர்ஜியை மிகவும் அழகாக எடுத்த 'பெஹெலி' என்ற படமும், அப்படியே கண்ணில் ஒத்திக் கொள்ளலாம்!

இவர் நம்மூரில் வந்த நம் மணியின் 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து' மற்றும் ஷங்கரின் பாய்ஸ் படத்திற்கும் ஒளிப்பதிவாளாராக பணியாற்றி உள்ளார். இன்றைக்கு மிகபிரபலபாமாக இருக்கும் அனைத்தும் முன்னனி நடிகைகளும், முக்கியமாக ராணி முகர்ஜியும், ப்ரீத்தி ஜிந்தாவும் இவர் தன்னை படம்பிடித்தால் தான் தாங்கள் திரையில் அழகாக இருக்கிறோம் எனக் கூறுகின்றனர்! அப்படி என்ன படம் பிடித்துவிட்டார் என கேட்பவர்களுக்கு, நாம் இத்தனை சினிமா பார்க்கிறோம், ஆனால் அத்தனை படங்களுக் கண்ணுக்கு குளிமையாக இதமாகவும், காதல் காட்சிகளை இரசம் சொட்ட படம் பிடித்து காண்பிக்கும் இந்த கலையானது ஆங்கிலத்தில் சினிமெட்டோகிராபி என்றழைக்கப்படும் இத்தொழில் நுட்பம் பற்றி எத்தனைப் பேருக்கு தெரியும்? அதைத் தான் என்னெவென்று கொஞ்சம் உள்ளே போய் பார்ப்போமா?

இந்த சினிமெட்டோகிராபி என்னும் ஒளிப்பதிவு செய்யும் தொழில் நுட்பம் நமக்கு என்னவென்று அரசல் புரசலாக புரிய வைத்தது பாலு மகேந்திராவும், அசோக்குமாரும் தான்! அதற்கு முன் நிறைய கேமிரா மேதைகள் தமிழ் சினிமாவில் இருந்துள்ளனர். ஏன், நம் கேமிரா மேதை கர்ணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த காலத்தில் நான் சின்னப்பிள்ளையாக இருந்த பொழுது வந்த சில ஜேம்ஸ்பாண்டு படங்களை இயக்கி ஒளிப்பதிவு செய்தவர் தான் இவர். அந்த காலத்தில வந்த, கங்கா, கெளபாய் குள்ளன், நான்கு சுவர்கள் போன்ற படங்கள் புகழ் பெற்றவை. இவரது கேமிரா கோணங்களும், அதிரடி சண்டைக்காட்சிகளும், குதிரை விரட்டு, துப்பாக்கி சண்டை போன்ற காட்சிகளின் கோணங்கள், அந்த கால ஹாலிவுட் படங்களுக்கு இணையாகப் பேசப்படுவதுண்டு! அப்படியே கொஞ்சம் செக்ஸ் காட்சிகளும் தூக்கலாக இருக்கும். அப்படி வந்த படம் ஒன்று 'எங்கப்பாட்டன் சொத்து' அதில் நடித்த நடிகை ராஜ்மல்லிகா, இப்பொழுது நடிக்கும் நடிகை மீனாவின் தாயார்! ஆற்றில் குளித்த காட்சிகள் மிகப்பிரபலம், அதற்காகவே இப்படங்கள் எல்லாம் நூறு நாட்கள் ஓடியவை!

ஆனால், கேமிரா, படப்பிடிப்பு என்பதை மூக்கில் கைவைத்துக்கொண்டு பார்க்க துவங்கியது, பாலுமகேந்திராவின் படங்கள் வந்தப்பிறகு தான்! அவர் அதிகமாக எடுத்து காண்பித்த ஊட்டியை நீங்கள் நேரில் போய் பார்த்தாலும் அவ்வளவு அழகாக இருக்காது! அந்தக் கால அழியாதக் கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, முள்ளும் மலரும் மற்றும் அசோக்குமாரின் உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக்கிள்ளாதே போன்ற படங்களில் வந்த ஊட்டியை தேடிபிடிக்க நான் பல நாள் ஊட்டி சென்றதுண்டு. அதுவும் கருத்த மேகங்களும், மலைச்சாரல்களும், வானவில் பிம்பங்களும், நீர் நிலை ஏரி, தோப்பு துரவுகள் என கண்ணைப்பறிக்கும் காட்சிகளை ரசித்ததுண்டு. ஆனால் இந்த அத்தனையும் தொழில்நுட்பமும், ஒளிப்பதிவாளரின் உழைப்பும் எவ்வளவு என்பதை என்றாவது அறிய முற்பட்டிருக்கீற்களா?

இந்த சினிமெட்டோகிராபி என்பது கேமிராவினுள் சினிமாவிற்காக பிம்பத்தை சரியான ஒளிக் கலவையில் பதிவு செய்யும் தொழில்நுட்பம்! அது நிழல் படங்களாக இருந்தாலும் சரி இல்லை ஓடும் படங்களாக இருந்தாலும் சரி! அதை சரியாக சொல்ல வேண்டுமென்றால், படைப்பாளிகள் தங்களின் கலை நுணுக்கத்தையும், தொடரும் நிகழ்ச்சிகளையும் அழகுப்பட பதிவு செய்வதே சினிமெட்டோகிராபி ஆகும்! இதன் ஆரம்பம் ஃபிலிம் என்ற படச்சுருள் தான், சரியான படச்சுருளை தேர்வு செய்வதிலிருந்து ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரின் வேலை ஆரம்பமாகிறது. இந்த படச்சுருள்களின் அளவு 8மிமீ, 16மிமீ, 35மிமீ, 65மிமீ என பல உண்டு. அதில் பெரும்பாலும் உபயோகப்படுவது 35மிமீ படச்சுருள்கள் தான்! பிறகு ஒளியின் வேகம் இரண்டாவது அளவு, அதாவது ஒளி எந்த வேகத்திலே அந்த படச்சுருளில் இரசாயாண மாற்றத்தை உண்டு பண்ணுகிறதோ அதை கொண்டு படப்பதிவு செய்வதே! அதன் அளவு ISO 50(மிக கம்மியான ஒளியின் வேகம்) லிருந்து 800(மிக அதிவேக ஒளிப்பதிவு) வரை உண்டு! அடுத்து வண்ணக்கலவையின் வெளிப்பாடு, நிறங்களின் பதிமம்! இது குறைந்த அளவிலும், அதிக அளவிலும் (Low Staturation, High Staturation), மற்றும் வண்ண ஏற்ற இறக்க வேறுபாடு (Contrast)களின் செயல்பாடு! இது படச்சுருளை ஒளியின் அளவை புகுத்தி பதிவாக்குது, அதாவது எக்ஸ்போஸர் என்றழைப்பது, அதிகம் திறந்தால் வெள்ளை, இழுத்து மூடி, ஒளி இல்லையேல் கறுப்பு, இது தான் இதன் சூட்சமம்! முதலில் இந்த ஃபிலிம் ரோல் ஸ்டாக் என்பதை தேர்வு செய்வதே மிக முக்கியமான வேலை. ஆனால் நான் கூறிய அனைத்தும், இந்த டிஜிட்டல் சினிமாவில் கேமிராவின் கைவண்ணம் தான், வேறொன்றுமில்லை, ஆனால் படச்சுருள் கொண்டு செய்யப்படும் ஒளிப்பதிவில், இவை அத்தனையும் ரசயானமாற்றத்தில் ஒளி ஊடுறுகையால் சரியாக நிகழவேண்டும், அதற்கு முக்கியமாக அதை கையாண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர் சினிமெட்டோகிராபர் என்கிற ஒளிப்பதிவாளரே!

இதற்கடுத்தது, இதை லேபில் செய்யப்படும் ஃபிலிம் ப்ராஸசிங் என்ற வேலை, சரியான மிதமான தட்பவெப்ப நிலையிலே, பதிவு செய்யப்பட்ட படச்சுருளை இரசாயணத் திரவங்களில் முக்கி அதன் இரசயாண மாற்றங்களை கவனமாக கண்காணித்து நெகட்டிவ் என்ற பதிவான பிம்பச் சுருளை டெவெலெப் செய்து உருவாக்குவதே, இதிலும் சினிமெட்டோகிராபரின் கைவண்னம் நிறைய உண்டு!

அடுத்து ஃபில்ட்டர்கள் என்றழைக்கப்படும் வண்ணத்தடுப்புகளை அளவாக உபயோகித்து எடுக்கப்படும் காட்சிகள். இது போன்ற காட்சிகள் பல அந்த காலத்தில் பார்த்து 'பில்டர் போட்டு எடுத்துருக்காண்டா' என்று சிலாகித்த நேரங்கள் நிறைய உண்டு! பாலுமகேந்திராவின் அக்காலப்படங்களை இது போன்ற வண்ண தனிமங்கள் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் நிறைய பார்த்திருப்போம். விடியங்காலையில் நடக்கும் நிகழ்சிகளையோ, இருண்ட மேகத்துடன் பனி விழும் மழை காட்சிகள் என இப்படி நிறைய. சில நல்ல வெயில் நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தில் ஒரு விதமான மூடு வர வேண்டுமென இது போன்ற பில்டர்கள் போட்டு எடுப்பதுண்டு. சில ராத்திரி நேரக்காட்சிகள், 'நிலாக்காயுது, நேரம் நல்ல நேரம்' போன்ற கயித்து கட்டில் காட்சிகள் எடுக்க இந்த ஃபில்டர்களின் உத்தி ரொம்ப பிரசித்தம்!

அடுத்து லென்ஸ் எனப்படுபவை ஒளிப்பதிவாளருக்கு முக்கியம். எப்படி பட்ட தூரக்காட்சிகளோ, இல்லை அருகில் நடக்கும் காட்சிகளை பிடிக்க சரியான் லென்ஸ்களை உப்யோகிப்பது! இந்த கேமிரா என்பது நம் கண் என்ன செய்யுமோ அதை செய்யும்! தூரத்தில் உள்ள பொருட்களையும் அருகில் உள்ள பொருட்களையும் எவ்வாறு அளவாக பார்க்கமுடிகிறதோ அதை இந்த கேமிராக்களும் செய்து படப்பதிவு செய்யும். ஆனால் இந்த தன்மையை நமது ஒளிப்பதிவாளர்கள் மாற்றலாம். அதற்காக அவர்கள் உபயோகப்படுத்தும் லென்ஸ்கள், டெலிபோட்டோ லென்ஸ், நார்மல் லென்ஸ், மற்றும் வைட் ஆங்கிள் லென்ஸ், Zoom லென்ஸ் என பல வகைகள் உள்ளன! இவை அனைத்தும் ஒளிக்கதிர்களை குவியவைக்கும் அளவை மாற்றக்கூடியவை. இந்த ஒளிகுவியும் தூரத்தை ஆங்கிலத்தில் 'focula length' என்பார்கள். நார்மல் லென்ஸ் என்பது உதாரணமாக கேமிராவுக்குள் எடுக்கப்படும் பிம்பத்தின் அளவு என்ன தெரிகிறதோ, அதே தான் படமாக வெளிவரும், ஆனால் டெலிபோட்டோ லென்ஸ் என்பது அந்த குவியும் தூரத்தை ('focula length') அதிகபடுத்தவது, அதனால் மிக தூரத்தில் உள்ள பொருட்களும் சிறப்பாக பதிவாகும், ஆனால் வைட் ஆங்கிள் லென்ஸில் இந்த குவியும் தூரம் மிகக்குறைவாக இருக்கும். ஆக இதை கொண்டு படம் எடுக்கும் அளவு, காட்சி அமைப்பு போன்றவற்றிற்கு தகுந்தால் போல் மாற்றி எடுக்க ஏதுவாக இருக்கும்! சிலசமயம் கதாநாயகி கீழிருந்து மேலே காண்பிக்கவும், கன்ஃபைட் காஞ்சனா போல காலை தூக்கி சண்டை போடும் காட்சிகளையும் இந்த வைட் ஆங்கிள் கேமிராவில் எடுத்து ரசிகர்களை உச்சத்துக்கும் கொண்டு செல்வார்கள்!

சில சமயம் தூரத்தில் உள்ளவர்களை பளிச்சென்றும், அருகில் உள்ளவர்களை மங்கியும், அதே போல் அருகில் உள்ளவர்களை பளிச்சென்றும் தூரத்தில் உள்ளவர்களை மங்கியும் உணர்ச்சியுடன் கூடிய வசனங்களை ஒளிப்பதிவு செய்த காட்சிகளை நீங்கள் நிறைய சினிமாவில் பார்த்திருக்கலாம். இந்த வித்தையை ஆங்கிலத்தில் 'Depth of field and focus' என்பார்கள். இதன் மூலம் background, mid-ground and foreground என்பது எவ்வளவு அளவாக போக்கஸ் செய்யவேண்டும் என்கிற வித்தை தான்! அதாவது கேமிராவின் கண்திறப்பை (iris aperture) குறுக்கி அதிக தூரத்தில் உள்ளப் பொருளை போக்கஸ் செய்வது 'டீப் போக்கஸ்'(Deep focus)என்பது, அதையே கேமிராவின் கண்ணை பெரிதாக திறந்து அருகில் உள்ள பொரூளை போக்கஸ் செய்வது 'ஷேலோ போக்கஸ்'(Shallow focus) இந்த வித்தை வைத்து அமைக்கப்பட்ட காட்சிகள் பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களில் நீங்கள் அதிகம் பார்க்கலாம். இப்பொழுது எடுக்கப்படும் இந்த 'ஷேலோ போக்கஸ்' பட்ங்களுக்கு ஆரம்பமே அந்த கால நிவாஸ் எடுத்த காட்சிகள் தான்! ( இந்த பொம்மை போட்டாவை பாருங்கள், மேலே உள்ளது 'Shallow focus', கீழே உள்ளது 'Deep focus')

அடுத்து முக்கியமான ஒன்னு ஆஸ்பெக்ட் ரேஸ்யு ('Aspect Ratio') என்பது. இதை வச்சுதான் சினிமாஸ்கோப்பு, 70MM எல்லாம் வருவது. பொதுவாக ஒரு படம் என்றால் அதன் அகல உயரத்திற்குண்டான அளவு தான் ஆஸ்பெக்ட் ரேஸ்யு என்பது. டெலிவிஷனில் தெரிவது 1.33:1, அதுவே இப்பொழுது வரும் சினிமாவிற்கான அளவு 1.85:1, ஆனால் பழைய 35MM படங்களுக்கு உண்டான அளவு 1.37:1 தான்! பிறகு வந்த ராஜாராஜ சோழன் படம் சினிமாஸ்கோப்பு படம், அதன் அளவு 2.66:1, அதாவது முதலில் வந்த அகலத்தை இரண்டுமடங்காக்கி காண்பிப்பது. ஆனால் தொழில்நுட்பம் வளர வளர, இந்த அகல உயர விகிதாச்சாரம் மாறி இப்பொழுது 1.85:1ல் வந்து நிற்கிறது இதெற்கென தனியாக உள்ள 'anamorphic lens' களை உபயோகித்து வைட் ஸ்கிரீன் படங்களின் உயரத்தை அதிகபடுத்தி காட்டலாம்

அடுத்து லைட்டிங் என்பது, இதை சரியான முறையிலே அமைத்து காட்சிகளை எடுப்பது மிகவும் முக்கியம். இந்த லைட்டிங் சரியாக செட் ஆகாமல் மூட் அவ்ட் ஆகி படம் பிடிக்காமல் பேக்கப் என்ற அதிக தடவை பாலு மகேந்திரா கூறியதாக நிறைய கதைகள் படித்ததுண்டு. ஆனால் அது உண்மையே! மிகவும் விஷவாலாக காட்சிகளை சொல்ல, வசனங்களின்றி, இந்த லைட்டிங் முக்கியம். நமது மகேந்திரனின் படங்களுக்கு மிகவும் கைகொடுத்தவர் அசோக் குமார். அதே போல பாராதிராஜாவுக்கு, நிவாஸ்ஸும், கண்ணனும் நல்ல ஒளிப்பதிவை செய்து அருமையான விஷவல்களை அவர்கள் படங்களில் அள்ளிக் கொடுத்தனர்! மேற்கொண்டு மணிரத்தினத்தின் இருட்டு படங்களை சில சமயம் பார்க்கும் போது நம்மை ஏதோ செய்ய வைத்ததும் உண்மை, ஆக ஒரு படத்தின் ஒளிப்பதிவின் வெற்றி லைட்டிங், பேக்ரவுண்டு போன்றவற்றின் தன்மைகளே!

அடுத்தது கேமிரா மூவ்மெண்ட் என்பது, அதாவது படம் பார்க்கும் நாம் எந்த வகையிலிருந்து காட்சிகளை பார்க்க வேண்டும் என்பதை நகர்த்தி படம் பிடிப்பதே! நீங்களும் நிறையப்பேர் டிராலி ஷாட், கிரேன் ஷாட் என்றெல்லாம் கேள்விபட்டிருப்பீர்கள், அனைத்தும் இந்த கேமிரா நகர்வுகளே! பெரும்பாலான இயக்குனர்கள், கதை சொல்லுபவர்கள், கேமிரா வழியே கதை சொல்வதையும் பார்த்திருப்பீர்கள் சில சமயம் படங்களில், கற்பனைக்கு
"சார் காலையில பீச்சிலே ஓடி வரா சார் கதாநாயகி, அலை கரையில புரண்டு வர்றதை ஒரு லாங்ஷாட்ல எடுக்கிறோம், பிறகு கீழ்வானத்திலே இருந்து வர சூரியனை ஒரு குளோஸ் போக்கஸ் சார் அப்புறம் கதாநாயகி அப்படி தலையை சிலுப்பி ஓட ஆரம்பிக்கிறதை ஒரு கிரேன் ஷாட்ல காமிச்சு, குளோஸப்பல சூம் பண்ணி, இதான் சார் ஓப்பினிங்"

இந்த மாதிரி காட்சிகளை கேமிரா மூவ்மெண்ட்ல எந்தெந்த வகையிலே எடுக்க முடியுமோ அப்படியெல்லாம் நகர்த்தி எடுப்பது! எல்லாமே கொஞ்சம் உத்து கவனிச்சீங்கன்னா, நம்ம தலையை திருப்பி பார்த்தா எப்படி உருவங்கள் நகருமோ, அதே மாதிரி நகர்வுகள், மேலே இருந்து, கீழே ரயிலிங்ல அப்படி சுத்தி வந்து பிடிக்கிறது, இப்படி எத்தனையோ அசைவுகள் மூலமா படம் பிடிக்கிறது!

அதே மாதிரி கேமராவை கையிலே தூக்கிக்கிட்டு, தோள்ல கட்டிக்கிட்டு, சைக்கிள்ல வச்சிக்கிட்டு ஓடிவரும் காட்சிகள் அப்படின்னு ஒளிப்பதிவாளர் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை! அப்படி படம் எடுக்கிற சிறந்த ஒளிப்பதிவாளர்கள் எல்லாம் நம்ம தமிழ் படவுலகிலருந்து போய் ஹிந்தி பட உலகிலே பேரு வாங்கினவங்க, திரு, ராஜிவ் மேனேன், பிசி ஸ்ரீராம், கேவி ஆனந்த், சந்தோஷ் சிவம் அப்படின்னு நிறைய பேரை சொல்லிக்கிட்டே போகலாம்!

இதென்னிலே ஸ்பெஷல் எபெக்ட்ஸ்ன்னுட்டு கேமிராவிலேயே பண்றது அது தனி, அதை 'In-camera effect'ன்னு சொல்வாங்க! அப்புறம் வெளிச்சத்திலே வித்தை, பிறகு இருக்கவே இருக்கு கிராபிக்ஸ், டிஜிட்டல் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் இது எல்லாம்! இதை பத்தி சொல்லுனும்னா நான் ஒரு தனி பதிவு போட்டாகணும்!

ஆக இதையெல்லாம் இயக்கி, படங்களின் பிம்பத்தின் அத்தனை தன்மைகளை, லைட்டிங், லென்ஸ், வண்ணக்கலவை, எக்ஸ்போஸர், பில்டர், பிலிம் செலக்ஷன் என்று அனத்தையும் கையாண்டு அழகான படங்களை உருவாக்கி கொடுக்கிறவங்க தான் இந்த ஒளிப்பதிவாளர்கள். அவர்கள் கையாளும் இந்த தொழில்நுட்பமே இந்த சினிமெட்டோகிராபி. அதில் நம்மவர்களின் வல்லமை இந்த வளர்ந்த நாடுகளின் தயாரிக்கும் படங்களுக்கு சமமாக இருப்பதில் மகிழ்ச்சியே. ஆனால், நமக்கு பின்னால் தொழில் கற்ற இந்த ஹாங்காங்கிலிருந்து வரும் ஜாக்கி சான் போன்றோர்கள் இப்பொழுது இந்த ஹாலிவுட்டை ஆளும் பொழுது, நம்மவரின் திறமை எப்பொழுது இங்கே ஆளுமை செய்யபோகிறது?

Wednesday, May 31, 2006

நாடு திரும்பும் நாட்டியப் பேரொளி!

இது கொஞ்சம் பெருசங்களுக்காக போடப்படும் பதிவு, அதாவது அந்தக் காலத்திலே கனவுக் கன்னியா இருந்த நமது நாட்டியப் பேரொளி பத்மினி இவ்வளவு காலம், கணவன் மறைந்தும் அமெரிக்காவிலே இருந்துவிட்டு, அவர் தமிழ்நாடு திரும்புகிறார் அடுத்த மாதம்!அவர் நாடு திரும்புவதை ஒட்டி நியூ ஜெர்சியில் இருக்கும் நம் தமிழர்கள் அவருக்கு மிகப்பெரிய வழியனுப்பு விழா ஒன்றை நடத்துக்கிறார்கள் வரும் ஜீன் 3ம் தேதி! அதைப்பற்றி விவரம் அறிய வேண்டுமென்றால் இதோ சுட்டி! இன்றும் நம் நினைவை விட்டு நீங்காத அவர் நடித்தப்படங்கள் பல! யார் மறக்க முடியும் அந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' போன்ற அவர் நடித்த உணர்ச்சி மிகுந்த அந்த பாடல்கள் மற்றும் நாட்டியங்களை! அவர் வழியனுப்பு விழாவில் என்னால் கலந்துக் கொள்ள முடியாததால் அவருக்காக இந்தப் பதிவு அற்பணம! கொஞ்சம் வரலாற்றை பின் நோக்கி பார்க்கும் பொழுது 'லலிதா, பத்மனி, ராகினி என்ற திருவாங்கூர் சகோதரிகள் நடனத்தால் நம் பெருசுகளையும், பிறகு நம்மவரையும் கவர்ந்த அவர்களை கொஞ்சம் நினைவுக்கூர்வோமா?

தமிழக ரசிகர்களை தங்கள் நடனத்தால் கவர்ந்த "திருவாங்கூர் சகோதரிகள்" லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் பின்னர் நடிப்பிலும் முத்திரை பதித்தனர்.

திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932லும், பத்மினி 1934லும், ராகினி 1938லும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன்பிள்ளை. தாயார் பெயர் சரசுவதி அம்மாள்.

நடனப் பயிற்சி

மூன்று சகோதரிகளில் முதலில் பத்மினிதான் நடனப் பயிற்சி பெற்றார். பிறகு லலிதாவுக்கும் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நடன ஆசிரியரிடம் முறைப்படி நடனம் பயின்றனர்.

சில ஆண்டுகள் கழித்து, ராகினியும் நடனப் பயிற்சி பெற்றார்.

கல்பனா

40களில், இந்தியாவிலேயே நடனத்தில் புகழ் பெற்று விளங்கியவர் உதயசங்கர். இவர் சிதார் மேதை ரவிசங்கரின் சகோதரர்.

ரவிசங்கர் சென்னை வந்திருந்தபோது, பத்மினியும், ராகினியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முழுக்க முழுக்க நடனங்கள் கொண்ட "கல்பனா" என்ற இந்தி திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோவில் ரவிசங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு லலிதாபத்மினிக்கு ரவிசங்கர் வாய்ப்பளித்தார்.

"கல்பனா" மூலமாக லலிதாவும், பத்மினியும் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்கள்.

வேதாள உலகம்

இந்த சமயத்தில், காரைக்குடியில் ஏவி.எம். ஸ்டூடியோ இயங்கி வந்தது. "நாம் இருவர்" என்ற மெகாஹிட் படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, "வேதாள உலகம்" என்ற படத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் தயாரித்து வந்தார். இது இசை நாட்டியத் திரைப்படம்.

"இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?" என்று லலிதா பத்மினியிடம் ஏவி.எம். கேட்டார்.

"நடனம் மட்டும் ஆடுகிறோம். நடிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை" என்று சகோதரிகள் கூறினார்கள்.

இதற்கு ஏவி.எம். சம்மதித்து, பவளக்கொடி இசை நாட்டிய நாடகம், பாம்பாட்டி நடனம் முதலியவற்றில் லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார்.

1948 ஆகஸ்டு மாதம் வெளியான "வேதாள உலக"த்தின் சிறப்பு அம்சமாக, லலிதா பத்மினியின் நடனங்கள் அமைந்தன. நடனங்களை வழுவூர் ராமையாப்பிள்ளை அருமையாக அமைத்திருந்தார்.

வேதாள உலகத்தைத் தொடர்ந்து, தங்கள் படத்தில் லலிதா பத்மினியின் நடனம் இடம் பெறவேண்டும் என்று ஒவ்வொரு பட அதிபரும் விரும்பினர்.

லலிதா பத்மினி நடனம் இடம் பெறாத படமே அநேகமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓடாத படங்களையும் ஓட வைக்க, லலிதா பத்மினி நடனங்கள் உதவின.

அந்தக் காலக் கட்டத்தில் பத்மினியை விட லலிதாதான் கவர்ச்சிகரமாக இருப்பார். நடன நாடகங்களில், லலிதா பெண்ணாக ஆட, பத்மினி ஆண் வேடத்தில் (மீசையோடு) ஆடுவார். இதனால், இந்த நடன சீசனில், லலிதாவின் கையே ஓங்கியிருந்தது.


பிரசன்னா

1950ல் பட்சிராஜா ஸ்டூடியோவினர் "பிரசன்னா" என்ற மலையாளப்படத்தைத் தயாரித்தனர். இதில், முதன் முதலாக வேடம் தாங்கி லலிதாவும், பத்மினியும் நடித்தனர். லலிதா கதாநாயகி. டி.எஸ்.பாலையா கதாநாயகன். பத்மினி சிறிய வேடம் ஒன்றில் நடித்தார்.

லலிதா கேரள உடையில் கவர்ச்சிகரமாகத் தோன்றி நடித்தார். படம், கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் சக்கை போடு போட்டது.

ஏழைபடும்பாடு

இதன்பிறகு, தமிழ்ப்படங்களிலும் லலிதா பத்மினி சகோதரிகள் நடிக்கத் தொடங்கினர். பட்சிராஜா ஸ்டூடியோவில், கே.ராம் நாத் டைரக்ஷனில் உருவான "ஏழைபடும்பாடு" (1950) படம்தான் இவர்கள் நடித்த முதல் படம்.

பிரதான குணச்சித்திர வேடத்தில் வி.நாகையா நடித்தார். இளைஞனாக நடித்த வி.கோபாலகிருஷ்ணனின் காதலைப் பெறப் போட்டி போடும் பெண்களாக லலிதாவும், பத்மினியும் நடித்தனர். இந்தப் படத்தில், பத்மினியை விட லலிதாவின் நடிப்புதான் சிறப்பாக இருந்தது.

படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், நடனங்களும் தொடர்ந்தன. அதில், ராகினியும் பங்கு கொண்டார்.

காஞ்சனா

லலிதா பத்மினி இருவரும் அற்புதமாக நடித்த படம் "காஞ்சனா." (1952)

இந்தப் படத்தையும் பட்சிராஜா ஸ்டூடியோதான் தயாரித்தது. டைரக்ஷன்: ஸ்ரீராமுலு நாயுடு.

பிரபல பெண் எழுத்தாளர் லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) "காஞ்சனையின் கனவு" என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கதைதான், "காஞ்சனா" என்ற பெயரில் படமாகியது.

கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி, இளம் ஜமீன்தார். அவருக்கும் தாசி குலத்தில் பிறந்த பானுவுக்கும் (பத்மினி) காதல் ஏற்படுகிறது. மனைவி என்ற அந்தஸ்தை தரமுடியாவிட்டாலும், மனைவி போலவே அவளிடம் பாசத்தைப் பொழிகிறார், ராமசாமி.

"எவ்வளவு காலம் பிரமச்சாரியாக இருப்பாய்? ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்" என்று ராமசாமியிடம் தாயார் வற்புறுத்துகிறார். தன் தோட்டத்தில் வேலை செய்யும் ஏழையின் மகளான காஞ்சனாவை (லலிதா) மணந்து கொள்கிறார், ராமசாமி.

காஞ்சனா, பானு இருவரிடமும் சம அன்பு செலுத்துகிறார், ராமசாமி. இதனால் ஏற்படும் சிக்கல்களை படம் சித்தரித்தது.

படத்தின் இறுதியில் பத்மினி இறந்து விடுவார். அவருக்காக லலிதாவும் கண்ணீர் சிந்துவார்.

பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, லலிதா, பத்மினி, கே.ஆர்.ராமசாமி மூவரும் அற்புதமாக நடித்திருந்தனர்.

என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனத்திலும் உருவான மணமகள் (1951) படத்திலும் லலிதாவும், பத்மினியும் சேர்ந்து நடித்தனர். சூப்பர்ஹிட் படம் இது.

இதற்கிடையே லலிதாவும், பத்மினியும் தனித்தனியாகவும் நடிக்கலானார்கள்.

1951ல் வெளிவந்த "ஓர் இரவு" படத்தின் கதாநாயகியாக லலிதா நடித்தார்.


சிவாஜிகணேசனுடன் முதல் படம்

1952ல், "பராசக்தி" தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். தயாரித்த "பணம்" என்ற படத்திலும் சிவாஜிகணேசன் நடித்து வந்தார். இந்தப்படத்தின் கதாநாயகி பத்மினி.

சிவாஜியும், பத்மினியும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட போது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

"பப்பிம்மா! நான் நாடக நடிகனாக இருந்தபோது, உங்கள் படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, மணமகள் படத்தில் உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது. அப்போதெல்லாம், எதிர்காலத்தில் உங்களுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை" என்றார், சிவாஜி.

பத்மினி, சிரித்துக்கொண்டே, "கணேஷ்! இப்போது தமிழ்ப்பட உலகில் இளம் கதாநாயகர்களே அநேகமாக இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும் `பராசக்தி' படம் பற்றி, இப்போதே பரபரப்பாக பேசுகிறார்கள். நீங்கள் எதிர்காலத்தில் மிகவும் புகழ் பெறுவீர்கள்" என்று கூறினார்.

"பராசக்தி" வெளிவந்த சில நாட்களுக்குப்பின் "பணம்" வெளியாகியது. பராசக்தியைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சிவாஜி பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக, நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.
1954ம் ஆண்டில் சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் இணைந்து நடித்தனர்.

பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பான "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" நகைச்சுவைப் படம். இதில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் ராகினி நடித்தார். அவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன்.

இப்படத்தில் "வெண்ணிலாவும் வானும் போல..." என்ற பாரதிதாசன் பாடலை எம்.எல். வசந்தகுமாரி அருமையாக பாடினார். ராகினி பாடுவது போல அந்த பாடல் காட்சி படத்தில் இடம் பெற்றது.

தூக்குத்தூக்கி

1954ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான "தூக்குத்தூக்கி"யில் சிவாஜியுடன் லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் நடித்தனர்.

"கொலையும் செய்வாள் பத்தினி" என்ற தத்துவத்தை உள்ளடக்கிய கதை. இதில் கணவனுக்கு (சிவாஜி) துரோகம் செய்யும் மனைவியாக லலிதா நடித்தார். இறுதியில் சிவாஜியை மணக்கும் ராஜகுமாரி பத்மினி.


இந்தப் படத்தில், "குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்" என்ற பாடலுக்கு சிவாஜி, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் ஆடும்போது, ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரையே குலுங்கச் செய்துவிடும்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "இல்லறஜோதி"யில் சிவாஜியும், பத்மினியும் நடித்தனர். இதில் சிவாஜி சலீமாகவும், பத்மினி அனார்கலியாகவும் நடித்த ஓரங்க நாடகம் பிரமாதமாக அமைந்தது.

எதிர்பாராதது

1954 கடைசியில் வெளியான சரவண பவானிட்டி தயாரிப்பான "எதிர்பாராதது", சிவாஜி, பத்மினி இருவரின் திறமைக்கும் சவாலாக அமைந்த படம்.

இப்படத்தின் கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதியிருந்தார்.

இதில் சிவாஜியும், பத்மினியும் காதலர்கள். ஆனால் விபத்து காரணமாக சிவாஜி அடையாளம் தெரியாத இடத்தில் சிக்கிக் கொள்ள, பத்மினிக்குத் திருமணம் நடந்து விடுகிறது. அவர் திரும்பி வரும்போது, பத்மினி சித்தி ஸ்தானத்தில் இருக்கிறார்.

உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த கதை. கதையின் `கிளைமாக்ஸ்' எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் மனம் திக் திக் என்று அடித்துக்கொள்ள, நமது பண்பாட்டிற்கு ஏற்றபடியே கதை முடிகிறது. இறுதிக் கட்டத்தில் "சிற்பி செதுக்காத பொற்சிலையே" என்ற பாடலை சிவாஜி பாடிக்கொண்டிருக்க, கொட்டும் மழையில் பத்மினி ஓடி வருவார். அவரை கட்டித்தழுவ சிவாஜி முயலும் போது, பத்மினி அவரை அடித்து நொறுக்குவார். மெய் சிலிர்க்கச் செய்யும் கட்டம் அது.

சிவாஜிகணேசன் பலதரப்பட்ட படங்களில் நடித்து, நடிப்பின் இமயமாக உயர்ந்து கொண்டே போனார். இதனால் அவர் பானுமதி, சாவித்திரி, வைஜயந்திமாலா போன்ற நடிகைகளுடனும் நடிக்க நேரிட்டது.

இதேபோல், பத்மினியின் புகழும் உயர்ந்து கொண்டே போயிற்று. அதனால் எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன் ஆகியோருடனும் சில படங்களில் இணைந்து நடித்தார். எனினும் சிவாஜி பத்மினி ஜோடிக்கே ரசிகர்களின் பெரும் வரவேற்பு கிடைத்தது.

மங்கையர் திலகம்

1955 ஆகஸ்டில் வெளிவந்த "மங்கையர் திலகம்" பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும்

இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார்.

பல படங்களில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. சிவாஜியின் அண்ணியாக பத்மினி நடிப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா? என்று, பட உலகத்தினர் சந்தேகப்பட்டனர். ஆனால் கதையின் வலிமை, சிவாஜி பத்மினியின் நடிப்பு, வலம்புரி சோமநாதனின் வசனம், எல்.வி. பிரசாத்தின் டைரக்ஷன் ஆகியவற்றால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது.

ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் "மங்கையர் திலகம்."

தேவதாஸ்

லலிதா நடித்த படங்களில் சிறந்தவை "தேவதாஸ்", "கணவனே கண்கண்ட தெய்வம்" ஆகியவையாகும்.

"தேவதாஸ்" படத்தில், ஏ.நாகேஸ்வரராவும், சாவித்திரியும் அற்புதமாக நடித்தனர். அத்தகைய படத்தில் தாசி சந்திரமுகி வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்து பெயர் பெற்றார், லலிதா.

"கணவனே கண்கண்ட தெய்வம்" படத்தில், ஜெமினிகணேசனை காதலித்து தோல்வி அடையும் நாக தேவதை வேடத்தை கச்சிதமாக செய்திருந்தார். மயக்க மருந்து குடித்ததால், "உன்னைக் கண் தேடுதே..." என்று விக்கலுடன் அவர் பாடிய பாடல் மிகப்பிரபலம்.

"எனக்கு விரைவில் திருமணம் நடைபெறப்போகிறது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன்" என்று நடிகை பத்மினி 1961 ஏப்ரலில் அறிவித்தார்.
திரை உலக ராணிகள்

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் மூன்று மகாராணிகளாகத் திகழ்ந்தனர்.

பத்மினி, நடனக்கலையில் தேர்ந்தவராக இருந்ததால், நடனங்கள் இடம் பெற்ற படங்களில் அவர் கொடி உயரமாகப் பறந்தது.

பத்மினியை விட பானுமதி சுமார் 10 வயது மூத்தவர். எனவே நாளடைவில் பானுமதி குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததும், "நெம்பர்1" இடத்துக்கு பத்மினி உயர்ந்தார்.

பத்மினி, திருமணத்துக்கு முன்னதாக சிவாஜிகணேசனுடன் நடித்த படங்களில் பாக்யவதி (1957), புதையல் (1957), உத்தமபுத்திரன் (1958), தங்கப் பதுமை (1959), தெய்வப்பிறவி (1960), புனர் ஜென்மம் (1961) ஆகியவை முக்கியமானவை.

"புதையல்" படத்தில், சிவாஜி பத்மினி காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

தங்கப்பதுமை

கண்ணகி கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் "தங்கப்பதுமை." ஜூபிடர் சோமு தயாரிப்பில், அரு.ராமநாதன் கதை வசனத்தில் உருவான இந்தப் படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.

இதில், பத்மினியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. "ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே, ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே" என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் குரலில் சிவாஜி பாடுவது படத்தின் சிறப்பு அம்சம். சிவாஜிகணேசன் கண் குருடாக்கப்பட்டதை அறிந்ததும் பத்மினி "ஆ" என்று அலறித் துடித்தக்காட்சி, "உங்கள் கண்கள் எங்கே அத்தான்?" என்று அழுகையுடன் கேட்டபோது காட்டிய முகபாவம், பத்மினியை நடிப்பின் சிகரத்துக்குக் கொண்டு போயின.

பத்மினியின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று "தங்கப்பதுமை."

சிவாஜியும், பத்மினியும் போட்டி போட்டு நடித்த படங்களில் ஒன்று "தெய்வப்பிறவி." இது ஏவி.எம். தயாரித்த படம். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம். கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன்.

காதலித்து மணந்த பத்மினி மீது சிவாஜி சந்தேகப்படுவார். அதைத்தொடர்ந்து, கணவன் மனைவி இடையே நடைபெறும் உணர்ச்சிப் போராட்டத்தை பத்மினி, சிவாஜி இருவருமே நன்கு சித்தரித்தனர்.

சிவாஜியின் மகத்தான படமான "வீரபாண்டிய கட்ட பொம்ம"னில் பத்மினி நடித்த போதிலும், அவருக்கு ஜோடி ஜெமினிகணேசன்.

வஞ்சிக்கோட்டை வாலிபன்

பத்மினியும், ஜெமினிகணேசனும் இணைந்து நடித்த படங்களில் "வஞ்சிக்கோட்டை வாலிபன்", "மீண்ட சொர்க்கம்" ஆகியவை முக்கியமானவை.

வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜெமினியின் பிரமாண்டமான படம். இதில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் பங்கு கொண்ட "போட்டி நடனம்", கண்ணுக்கும், செவிக்கும் அரிய விருந்தாகும். இந்தியப் படங்களில் இடம் பெற்ற மிகச்சிறந்த நடனக் காட்சி எது என்று கேட்டால், "வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி வைஜயந்திமாலா போட்டி நடனக்காட்சி" என்று தயங்காமல் கூறலாம்.

படம் வெளிவந்து 47 ஆண்டுகள் ஆகியும், இப்போது பார்த்தாலும், இன்று படமாக்கப்பட்டது போல இந்த நடனக்காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.

"மீண்ட சொர்க்கம்" ஸ்ரீதர் டைரக்ஷனில் உருவான படம். கதை அம்சத்தில் உள்ள குறை காரணமாக, இப்படம் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், பத்மினியின் நடனங்களும், நடிப்பும் சிறப்பாக இருந்தன.

மதுரை வீரன்

எம்.ஜி.ஆருடன் பத்மினி நடித்த படங்களில் "மதுரை வீரன்" முக்கியமானது. அதில், பானுமதியும் எம்.ஜி.ஆரின் மற்றொரு ஜோடியாக இடம் பெற்றிருந்தார்.

இந்தப்படம் "சூப்பர்ஹிட்."

ராஜபக்தி

1960ல் வெளியான "ராஜபக்தி" என்ற படத்தில் சிவாஜிகணேசனுடன் பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா ஆகிய மும்மணிகள் நடித்தனர்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சிவாஜிக்கு ஜோடி இந்த மூவரில் எவரும் அல்ல; பண்டரிபாய்தான் சிவாஜிக்கு ஜோடி! பத்மினிக்கு ஜோடி டி.எஸ்.பாலையா!

இந்திப் படங்கள்

இந்த சமயத்தில் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய "ஜிஸ்தேஷ் மே கங்கா பஹ்தி ஹை" (இந்த தேசத்தில் கங்கை ஓடுகிறது), "மேராநாம் ஜோக்கர்" ஆகிய இந்திப்படங்களில் பத்மினி நடித்தார்.

இந்தப் படங்களில் பத்மினி கவர்ச்சிகரமாக நடித்தது, ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை எழுப்பியது. "தமிழில் அற்புதமான குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் பத்மினி, இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கலாமா?" என்று பலர் கேள்வி எழுப்பினர்.

திருமண ஏற்பாடு

1961 ஏப்ரலில் பத்மினிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், மாப்பிள்ளை சினிமா உலகைச் சேர்ந்தவர் அல்ல என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டன.

பத்மினியை நிருபர்கள் முற்றுகையிட்டு, கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

"எனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பது உண்மை. அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் முடிவான பிறகு, திருமணம் பற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்கிறேன்" என்று பத்மினி கூறினார்.

"திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா?" என்று கேட்டதற்கு, "நடிக்க மாட்டேன்" என்று பத்மினி பதில் அளித்தார்.


திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று பத்மினி அறிவித்து இருந்தபோதிலும், நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணத்துக்குப்பின் சில சிறந்த படங்களில் அவர் நடித்தார். "தில்லானா மோகனாம்பாள்" ஒரு திரைக்காவியமாக அமைந்தது.
திருமணத்துக்குப்பின், மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க லண்டன் செல்ல விரும்பினார், டாக்டர் ராமச்சந்திரன்.

திருமணம் நடப்பதற்கு முன்பே இதுபற்றி பத்மினியிடமும், அவர் குடும்பத்தாரிடமும் ராமச்சந்திரன் பேசியிருந்தார். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தனர்.

லண்டனில் பத்மினி

அதன்படி 1961ம் ஆண்டு பிற்பகுதியில் ராமச்சந்திரனும், பத்மினியும் லண்டன் சென்றார்கள். உயர் மருத்துவக் கல்வி பயில, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் ராமச்சந்திரன் சேர்ந்தார். இருவரும் ஒரு பங்களாவில் வசித்தனர்.
படிப்பு முடிந்ததும், ராமச்சந்திரனும், பத்மினியும் அமெரிக்காவில் குடியேறினார்கள். அங்கு நிஜெர்சி நகரில் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி தொடங்கினார்.

ஆண் குழந்தை

இதற்கிடையே, பத்மினி ராமச்சந்திரன் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையனுக்கு பிரேம் ஆனந்த் என்று பெயர் சூட்டினார்கள்.

ஒரு முறை பத்மினி தன் கணவருடன் சென்னை வந்திருந்த போது, அவர்களை பட அதிபர்கள் சந்தித்து பத்மினி மீண்டும் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

சில கேரக்டர்களை பத்மினியால்தான் சிறப்பாக நடிக்க முடியும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

பத்மினி மீண்டும் நடிப்பதற்கு ராமச்சந்திரன் சம்மதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பத்மினி தமிழ் சினிமா உலகில் மறுபிரவேசம் செய்தார்.

தில்லானா மோகனாம்பாள்

பத்மினி மீண்டும் படங்களில் நடிக்க முன்வந்ததை பட அதிபர்களும், ரசிகர்களும் வரவேற்றனர். சில அருமையான படங்களில் பத்மினி நடித்தார்.

குறிப்பாக, ஏ.பி.நாகராஜன் டைரக்ஷனில் சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் (1968) ஒரு திரைக்காவியமாக அமைந்தது. பத்மினியின் திரை உலக வாழ்க்கையில், அவருடைய மிகச்சிறந்த 10 படங்களை தேர்ந்தெடுத்தால், அதில் "தில்லானா மோகனாம்பாள்" நிச்சயம் இடம் பெறும்.

நாதசுர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜிகணேசனும், நாட்டிய தாரகை தில்லானா மோகனாம்பாளாக பத்மினியும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தனர்.

1967ல் வெளிவந்த "இருமலர்கள்" ஒரு காதல் காவியம். இதில் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.

திருலோக்சந்தர் டைரக்ஷனில், ஆரூர்தாஸ் வசனத்தில், எம்.எஸ்.விசுவ நாதன் இசையில் வெளிவந்த இப்படம், முக்கோணக் காதல் கதையை புதிய கோணத்தில் விவரித்தது.

வியட்னாம்வீடு (1970) படத்திலும், சிவாஜி பத்மினி நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.

"தேனும் பாலும்" படத்தில் சிவாஜி கணேசனுடன் பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "சித்தி"யிலும் பத்மினியின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

"திருவருட்செல்வர்", "பேசும் தெய்வம்", "குலமா குணமா" முதலிய படங்களிலும் பத்மினி நடித்தார்.

சிவாஜியுடன் அதிக படங்கள்

தமிழ்க் கதாநாயகர்களில் சிவாஜி கணேசனுடன்தான் பத்மினி அதிக படங்களில் நடித்துள்ளார். அவர்கள் ஜோடியாக நடித்த படங்கள் 59. எம்.ஜி.ஆருடன் 12 படங்களிலும், ஜெமினிகணேசனுடன் 12 படங்களிலும் இணைந்து நடித்தார்.

எம்.ஜி.ஆர் மஞ்சுளா நடித்த "ரிக்ஷாக்காரன்" படத்தில் பத்மினி குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

இதன்பின் பத்மினி அமெரிக்கா திரும்பினார். கணவர் ராமச்சந்திரன் ஆஸ்பத்திரியை கவனித்துக்கொள்ள, பத்மினி ஒரு நாட்டியப்பள்ளி தொடங்கினார்.

நடிகை பத்மினியின் கணவர் டாக்டர் ராமச்சந்திரன், மாரடைப்பால் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 50. (பத்மினி வயது 47).
அமெரிக்காவில் உள்ள நிஜெர்சி நகரில், டாக்டர் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி (கிளினிக்) நடத்தி வந்தார்.

சொந்த வீடு

திருமணத்துக்குப்பின் பத்மினி "தில்லானா மோகனாம்பாள்", "வியட்னாம்வீடு", "இருமலர்கள்" உள்பட சில படங்களில் நடித்தபோதிலும், பின்னர் அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றார். கணவருடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். நடனப்பள்ளி ஒன்றைத் தொடங்கி, சிறுமிகளுக்கு நடனப் பயிற்சி அளித்தார்.


பூவே பூச்சூடவா

கேரளாவின் புகழ் பெற்ற டைரக்டரான பாசில், 1985ல் "பூவே பூச்சூடவா" என்ற படத்தை தமிழில் தயாரித்தார். இதன் கதாநாயகியாக நதியா அறிமுகம் ஆனார்.

நதியாவின் பாட்டி வேடத்தில் பத்மினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பாசில் நினைத்தார். தன் விருப்பத்தை பத்மினிக்குத் தெரிவித்தார்.

கணவர் இறந்தபின் படத்தில் நடிக்க பத்மினி விரும்பவில்லை. எனினும் குடும்ப நண்பரான பாசில் வேண்டுகோளை தட்ட முடியவில்லை. எனவே, சென்னைக்கு வந்து, "பூவே பூச்சூடவா" படத்தில் நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் அதுதான்.

"இன்னும் சில வருடங்களில் நான் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவேன். என்னுடயை எஞ்சிய காலத்தை இந்த மண்ணில் கழிப்பேன்" என்று ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தபடியே இப்போது தமிழ் நாடு திரும்புகிறார்!

நன்றி: மாலை மலர்

Tuesday, May 30, 2006

மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழில் வளர வேண்டுமா?

நம் நாட்டில் எல்லா சேவைகளும் மலிவாக கிடைப்பதால், இந்த 'outsourcing' என்று சொல்கிறார்கிளே, அந்த தொழில்துறையில் நமது அசூர வளர்ச்சி, வெறும் கம்ப்யூட்டர் துறை என்றில்லாமல், எல்லா துறைகளிலும் பீறு நடைப் போட்டு வருகிறது. அப்படி முன்னேறிவரும் தொழில்துறையில் 'மெடிக்கல் டூரிஸம்' என்ற தொழிலானது, அதாவது மருத்து உல்லாசப் பிராயணத் தொழில் என்பது மிகவும் முன்னேறிவரும் ஒரு தொழில் துறை. ஆனால் இந்த தொழில்முறை வளர்ச்சி மிகுந்த சர்ச்சைக்குறிய ஒன்றாக இருக்கிறது நமது மருத்துவர்களிடையே! ஏனென்றால், நம் நாட்டு மக்களுக்கு பொது மருத்துவம் மூலம் சரியான சிகிச்சை முறைகள் கிடைக்காமல் இருக்கும் பச்சத்தில், இந்த மெடிக்கல் டூரிஸத்தை வளர்க்க அரசாங்கம் அளித்து வரும் ஆதரவுக்கு பெரிய போர் கொடி தூக்க ஆரம்பித்துள்ளார்கள்! ஆக இந்த மெடிக்கல் டூரிஸம்னா என்னா, அதில் உள்ள சர்ச்சைகள் என்னா இப்போ நடந்துக்கிட்டிருக்கு அப்படின்னு பார்ப்போமா கொஞ்சம்!

உல்லாசப் பிராயாணம்னா, நாலு இடங்களை சுத்தி காமிக்க இந்த வெளிநாட்டு டூரிஸ்ட்டுகளை கவர பிரயத்தனம் செஞ்சு ஏகப்பட்ட செலவளிச்சு, அதில வர வருமானத்தை பெருக்க நமது இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு அரசும் பலமுயற்சிகள் எடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே! ஆனா இந்த மருத்தவ உல்லாசம்ங்கிறது இப்ப கொஞ்சம் கொஞ்சமா சூடுபிடிக்குது!. அந்த காலத்திலேருந்து இந்த கேரளாவில் மிகவும் பாப்புலரா இருப்பது இந்த ஆயுர்வைத்திய மூலகை மருந்து மற்றும் மசாஜ் என்பது! அப்ப அப்ப நம்ம நடிகர் நடிகைங்களும் அந்த பக்கம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு ரொம்ப பளிச்னு உடம்பை தேத்திக்கிட்டு வருவாங்க! சமீபத்திலே அந்த மாதிரி சினேகா ஏதோ மலையாள மசாஜ் எடுக்க போய்ட்டு வந்ததாக் கேள்வி. விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க! அப்புறம் ரஜனிகாந்தும் இமயமலைக்கு வருஷத்துக்கொரு தடவை போய் வரமாதிரி, இந்த மலையாள மண்ணுக்கு போய்ட்டு வருவாரு இந்த மசாஜ் எல்லாம் எடுத்து தேத்திக்க! நான் சொல்லும் இந்த மருத்துவ உல்லாசங்கிறது இது இல்லை!

இந்த மெடிக்கல் டூரிஸம்னா, நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்வதற்காக வெளி நாடுகளுக்கு பிராயாணம் செய்து தங்கள் நோய்களை தீர்க்க செல்வது, இதை ஆங்கிலத்தில் 'elective medical procedures' என்றழைப்பார்கள்! ஏன் அவங்க நாட்ல இல்லாத வசதிகளா, நம்ம நாட்டுக்கு ஏன் வரணும், அப்படி என்ன நம்மக்கிட்ட இருக்கு, நம்ம என்ன அவங்களைவிட மருத்துவ வசதிகள் என்ன அப்படி இருக்குன்னு நீங்க கேட்கிறது புரியது! எல்லாத்துக்கும் காரணம் மலிவான சிகிச்சை முறைகள் தான்! அதாவது அவங்க நாட்டில செஞ்சுக்கிற மருத்துவ செலவுகள்ல பத்தில ஒரு பங்கு தான், நம்ம நாட்ல செஞ்சுக்கிட்டா! அதுவும் அமெரிக்காவில் மருத்துவ காப்பு என்பதும், அது இல்லாவிட்டால் சிகிச்சைக்குண்டான செலவுகள் ஏராளம்! காப்பு எடுத்தாலுமே, அந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் இதுபோன்ற செலவுகள் கம்மியாக இருக்கும் நாடுகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பார்கள். மேற்கொண்டு கனடா மாதிரி நாடுகள்ல அவங்க செஞ்சுக்கப்போற ஆப்ப்ரேஷன், மருத்துவத்துக்காக பல மாதங்கள் காத்துகிடக்கணும்! அது மிட்டுமில்ல, இங்கிலாந்து போன்ற நாடுகள்ல அவங்க நாட்டின் அரசாங்க மருத்து சேவைகளுக்கு காத்து கிடக்கணும், இல்லை பிரைவேட் மருத்துவர்கள் கிட்ட போகணும், அதற்குண்டான வசதிகள் இல்லாம போய்விடுவதால்! சில சமயம் பங்களாதேஷ் மாதிரி நாடுகள்ல நமது நாட்டில கிடைக்கிற அத்தனை மருத்துவமும் கிடைப்பதில்லை, அதனாலே நம் போன்ற மலிவான மருத்துவ வசதிகள் கிடைக்கும் நாடுகளுக்கு சென்று வருகின்றனர்!

இந்த மெடிக்கல் டூரிஸம் என்பது மிகவும் பழமையான ஒன்று! அந்த காலத்தில் ஐரோப்பாவில், கிரேக்க நாட்டுக்கு, அதன் புனித தன்மை கருதி, யாத்திரிகர்களும், நோயாளிகளும் மத்திய தரைக்கடல் நாடுகள்லிருந்து சென்றதாக வரலாறு கூறுகிறது! 18ம் நூற்றாண்டில் செல்வந்த சீமான்கள் ஜெர்மனியிலிருந்து எகிப்தில் உள்ள நைல் நதி வரை சென்று வந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஆனால் இப்போதைய இந்த செலவு குறைந்த விமான மார்க்கம், கண்டம் விட்டு கண்டம் செல்ல ஏதுவாய் இருப்பதால் செல்வந்தர்களன்றி தேவைப்படும் நோயாளிகள் நாடு விட்டு நாடு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்கின்றனர்! ஆக இந்த மருத்துவ உல்லாச பிராயணத் தொழில் க்யூபா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா என்று அனைத்து நாடுகளும் வளர்ந்து வருகிறது! தெற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் 'மெடிக்கல் சபாரி விஸிட்' என்று இந்த உல்லாசத் தொழில் வளர்ச்சி, மூக்கு சீரமைப்பு, பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற மருத்துவத்தை முடித்துவிட்டு அப்படியே சிங்கம் யானை கொண்ட காடுகளையும் பார்த்துவிட்டு வர வழி செய்கிறது! எப்படி நம்ம ஊர் நடிகைகள் மூக்கு, இடுப்பை சரி செய்ய வெளி நாடுகள் சென்று சுற்றி பார்த்து விட்டு வருவதைப்போல!

ஆனால் இந்தியா மெடிக்கல் டூரிஸம் என்பதையும் தாண்டி மெடிக்கல் அவுட்சோர்ஸிங் என்ற வளர்ச்சிக்கு வந்துவிட்டது, அதுவும் அதிக சுமையாகிப்போன மேற்கு மருத்துவ வசதி தேவைக்கு துணையாக! எப்படி என்றால் நமது நாட்டின் மருத்துவ சட்டம் இது போன்ற வெளிநாட்டு நோயாளிகளை கவனிக்க அனுமதி அளிப்பதுமில்லாமல் அதற்கு நிதி சலுகைகளயும் 'export earnings' என்கிற முறையில் அளிக்கிறது! இந்த மெடிக்கல் டூரிஸம் என்ற தொழில் துறையானது ஆண்டிற்கு 100 கோடி டாலர்களை வருமானமாக ஈட்டி தருகிறது. இதன் வருமானம் இனி வரும் ஆண்டுகளில் 200 கோடி டாலர்களுக்கு மேல் வருமானம் தரக்கூடிய ஒன்று, அதுவும் வருடத்திற்கு 30 சதவீத வளர்ச்சி! நமது கல்வித்துறையானது வெறும் கம்புயூட்டர் இஞ்னியர்களையும், புரோகிரமர்களையும் மட்டும் ஆண்டுக்கு உற்பத்தி செய்வோதோடு நின்றுவிடாமல், 20,000 த்திலிருந்து 30,000 டாக்டர்களையும் நர்ஸ்களையும் உற்பத்தி செய்கிறது. எனவே இந்த அசுர வளர்ச்சி!

இந்த மருத்துவத்துறையில் நமது அப்பல்லோ மருத்துவமனை ஆண்டொண்டிற்கு 60000 வெளிநாட்டு நோயாளிகளுக்கு சிக்கைச்சை அளித்து வருகிறது! ஏற்கனவே இந்த மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ப்ஷன் எனும் சேவையை அமெரிக்க காப்பு நிறுவனங்களுக்கு செய்து வருவதுடன், பல அமெரிக்க மருத்துவமனைகளுடனும், மருந்து கம்பெனிகளுடனும் ஆய்வு முறை மருத்துவமும் செய்து வருகிறது! 1990ம் ஆண்டு ஏற்பட்ட தாராளமயமாக்கத்தின் பயனாக, புது புது மருத்துவ கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, இன்று இந்தியா முழுவதும் 37 மருத்துவ மனைகளும் 7000 படுக்கையுடன் கூடிய வசதியோடு இயங்கி வருகிறது! அது மட்டுமின்றி வெளி நாடுகளான் குவைத், நைஜீரியா, இலங்கை போன்ற நாடுகளிலும் பங்குதாரர்களுடன் பெரிய மருத்துவமனைகள் நடத்தி வருகிறது! மேலை நாடுகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு பேக்கேஜ் டீல் என்ற வகையில் விமான டிக்கட்டு முதல் கொண்டு தங்க இடம், மருத்துவசிகிச்சை, பிறகு சிகிச்சைக்குபின் உல்லாசம் ('Post operative Vocation') என அனைத்து சாரங்களும் அடங்கிய முழு செலவீன தொகையிலே இந்தியா வந்து சிகிச்சை பெற்று போக வழி செய்கிறது! காசு உள்ளவர்களுக்குத்தான் இங்கே மருத்துவம் என்ற விமரிசனங்களிலிருந்து மீள்வதற்காக சில இலவச சிகிச்சை அளித்து வருகிறது!

ஆனால், இந்த மருத்தவ உல்லாசத் தொழிலின் திடீர் வளர்ச்சிக்கு சில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்! சமீபத்தில் பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னலில், டாக்டர் சமிரான் நந்தி, மற்றும் டாக்டர் அமித் சென்குப்தா போன்றோர், இந்த மருத்தவ உல்லாசத் தொழிலின் திடீர் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதி உள்ளனர். அதாவது இந்திய அரசாங்கம் இந்திய குடிமகன்களின் ஆரோக்கியத்தை விடுத்து வெளிநாட்டவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் சட்டதிட்டங்களை எதிர்க்க வேண்டும் எனக்கூறி உள்ளனர்! நம் குடிமகன்களில் வருடத்திற்கு 600000த்து மேல் குஷ்டரோக வியாதியாலும், 50 லட்சம் அதிகமானோர் வயிற்றுபோக்கு வியாதியாலும் மரணம் தழுவும் பொழுது, வெளிநாட்டவருக்கு அளிக்கும் சிகிச்சையும், அதற்கு பின் அவர்களை சுற்றி காண்பிக்கும் தாஜ்மஹால் போன்ற வியாபார திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அரசாங்க சட்டத்திட்டங்கள் தேவையில்லை என எதிர்த்து வருகின்றனர்! பொது மக்களின் மருத்துவ செலவீனங்களுக்கு வழி செய்யாத மருத்துவ சட்டதிட்டங்கள், தனிபட்ட மருத்துவத்திற்கு ஆதரவளிக்கும் திட்டங்களின் போக்கினை எதிர்த்து அந்த அறிக்கையில் குரல் கொடுத்துள்ளனர்! மேற்கொண்டு இந்த மருத்தவ உல்லாசத் தொழில் வளர்ச்சிக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு சலுகை முறையில் அளிக்கும் இடங்களும், மற்ற சட்ட சலுகைகளும், பொது மருத்துவ வசதிகளுக்கு வழி வகுக்காததால், இந்த தொழிலில் வளர்ச்சியை எதிர்ப்பதாகக் கூறி உள்ளார்கள்! மேலும் அவ்வறிக்கையில், உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி இந்தியாவில் வெறும் 4 டாக்டர்கள் மட்டுமே ஒவ்வொரு 10000 மக்களுக்கும் இருக்கின்றனர், ஆனால் வளர்ந்த நாடுகளான பிரிட்டன் போன்ற நாடுகளில் 18 டாக்டர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். மேற்கொண்டு, கிராமப்புற சுகாதார மருத்துவமனைகளின் நிலைமையும், ஏழை மக்களுக்கு கிடக்காத மருத்துவ சிகிச்சைகளும், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலைகள் அதிகம் எனக்கூறி , அரசாங்க சுகாதார சட்ட திட்டங்கள் மக்கள் நலனுக்கு சார்ந்தாக இல்லை என கடுமையாக சாடி உள்ளார்!

ஆனால், இந்த எதிர்ப்பு, இந்திய மருத்தவர்களிடையே பிளவினை உண்டுபண்ணி இருப்பது என்னவோ உண்மை! இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழிலை ஆதரிக்கும் மருத்தவர்கள், இது நமக்கு உலக நாடுகளிலிருந்து கிடைத்திருக்கும் அங்கீகாரமே, இந்தியா போன்ற நாடுகளின் வளர்ந்த சுகாதார வசதிகளின் நிலை உலகத்தரத்துக்கு இணையாக இருப்பது நமக்கு பெருமையே! இத்தொழிலை நாம் முழுமனதுடன் ஆதரவுக் கொடுத்து வளர்க்க வேண்டுமெனக்கூறுகின்றனர்! டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் இதய சிகிச்சை மருத்துவமனையின் டாக்டர் நரேஷ் ட்ரெகான் கூறுகிறார், நாம் இத்தொழிலை, இங்கு வசிக்கும் மக்களின் சிகிச்சைக்கு பங்கம் விளைவிக்காமல் வெளிநாட்டவருக்கு சிகிச்சை செய்வதில் தவறில்லை என்றும், இது நாம் விண்வெளி பயணம் போவது போன்றது, இங்கு பஞ்சம், பட்டினி, இதனை ஏன் செய்கிறீர்கள் என கேட்கின்றனர், இருந்தும் நாம் ராக்கெட் விடுவதில்லையா, அது போன்று தான் இத்தொழிலும் என்கிறார்!

இது போன்ற எதிர்மறை சர்ச்சைகள் இருந்தாலும், இந்த தொழில் முன்னேற்றம் நமக்கு முன்னேற்றம் தரக்கூடியதே! அதிகமான மருத்துவர்கள் தங்கள் திறமைகளையும் அனுபவங்களையும் பெற்று அதை இந்திய மக்களுக்கு வழங்க வாய்ப்பிருக்கிறது! இந்திய சுகாதர நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழிலின் மூலம் வரும் வருமானம் சுகாதர வசதிகளையும், கிராமப்புற சேவைகளயும் அதிகம் உருவாக்கி கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் டாகடர் நந்தி, இத்தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் பொது சுகாதரத்திற்கு செலவிடப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்றும், இந்தியாவில் பணம் இருப்பவர்கள் தனியாரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டு விடுவார்கள், அவதிப்படுவது ஏழைபாளைகளே என கருத்துத் தெரிவிக்கிறார்.

ஆக இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழில் வளர வேண்டுமா என்பதை விஷயம் தெரிந்த அன்பர்கள் தங்கள் கருத்துக்களை பின்னோட்டமாகக் கூறுங்கள்!