Tuesday, May 30, 2006

மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழில் வளர வேண்டுமா?

நம் நாட்டில் எல்லா சேவைகளும் மலிவாக கிடைப்பதால், இந்த 'outsourcing' என்று சொல்கிறார்கிளே, அந்த தொழில்துறையில் நமது அசூர வளர்ச்சி, வெறும் கம்ப்யூட்டர் துறை என்றில்லாமல், எல்லா துறைகளிலும் பீறு நடைப் போட்டு வருகிறது. அப்படி முன்னேறிவரும் தொழில்துறையில் 'மெடிக்கல் டூரிஸம்' என்ற தொழிலானது, அதாவது மருத்து உல்லாசப் பிராயணத் தொழில் என்பது மிகவும் முன்னேறிவரும் ஒரு தொழில் துறை. ஆனால் இந்த தொழில்முறை வளர்ச்சி மிகுந்த சர்ச்சைக்குறிய ஒன்றாக இருக்கிறது நமது மருத்துவர்களிடையே! ஏனென்றால், நம் நாட்டு மக்களுக்கு பொது மருத்துவம் மூலம் சரியான சிகிச்சை முறைகள் கிடைக்காமல் இருக்கும் பச்சத்தில், இந்த மெடிக்கல் டூரிஸத்தை வளர்க்க அரசாங்கம் அளித்து வரும் ஆதரவுக்கு பெரிய போர் கொடி தூக்க ஆரம்பித்துள்ளார்கள்! ஆக இந்த மெடிக்கல் டூரிஸம்னா என்னா, அதில் உள்ள சர்ச்சைகள் என்னா இப்போ நடந்துக்கிட்டிருக்கு அப்படின்னு பார்ப்போமா கொஞ்சம்!

உல்லாசப் பிராயாணம்னா, நாலு இடங்களை சுத்தி காமிக்க இந்த வெளிநாட்டு டூரிஸ்ட்டுகளை கவர பிரயத்தனம் செஞ்சு ஏகப்பட்ட செலவளிச்சு, அதில வர வருமானத்தை பெருக்க நமது இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு அரசும் பலமுயற்சிகள் எடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே! ஆனா இந்த மருத்தவ உல்லாசம்ங்கிறது இப்ப கொஞ்சம் கொஞ்சமா சூடுபிடிக்குது!. அந்த காலத்திலேருந்து இந்த கேரளாவில் மிகவும் பாப்புலரா இருப்பது இந்த ஆயுர்வைத்திய மூலகை மருந்து மற்றும் மசாஜ் என்பது! அப்ப அப்ப நம்ம நடிகர் நடிகைங்களும் அந்த பக்கம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு ரொம்ப பளிச்னு உடம்பை தேத்திக்கிட்டு வருவாங்க! சமீபத்திலே அந்த மாதிரி சினேகா ஏதோ மலையாள மசாஜ் எடுக்க போய்ட்டு வந்ததாக் கேள்வி. விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க! அப்புறம் ரஜனிகாந்தும் இமயமலைக்கு வருஷத்துக்கொரு தடவை போய் வரமாதிரி, இந்த மலையாள மண்ணுக்கு போய்ட்டு வருவாரு இந்த மசாஜ் எல்லாம் எடுத்து தேத்திக்க! நான் சொல்லும் இந்த மருத்துவ உல்லாசங்கிறது இது இல்லை!

இந்த மெடிக்கல் டூரிஸம்னா, நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்வதற்காக வெளி நாடுகளுக்கு பிராயாணம் செய்து தங்கள் நோய்களை தீர்க்க செல்வது, இதை ஆங்கிலத்தில் 'elective medical procedures' என்றழைப்பார்கள்! ஏன் அவங்க நாட்ல இல்லாத வசதிகளா, நம்ம நாட்டுக்கு ஏன் வரணும், அப்படி என்ன நம்மக்கிட்ட இருக்கு, நம்ம என்ன அவங்களைவிட மருத்துவ வசதிகள் என்ன அப்படி இருக்குன்னு நீங்க கேட்கிறது புரியது! எல்லாத்துக்கும் காரணம் மலிவான சிகிச்சை முறைகள் தான்! அதாவது அவங்க நாட்டில செஞ்சுக்கிற மருத்துவ செலவுகள்ல பத்தில ஒரு பங்கு தான், நம்ம நாட்ல செஞ்சுக்கிட்டா! அதுவும் அமெரிக்காவில் மருத்துவ காப்பு என்பதும், அது இல்லாவிட்டால் சிகிச்சைக்குண்டான செலவுகள் ஏராளம்! காப்பு எடுத்தாலுமே, அந்த இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் இதுபோன்ற செலவுகள் கம்மியாக இருக்கும் நாடுகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பார்கள். மேற்கொண்டு கனடா மாதிரி நாடுகள்ல அவங்க செஞ்சுக்கப்போற ஆப்ப்ரேஷன், மருத்துவத்துக்காக பல மாதங்கள் காத்துகிடக்கணும்! அது மிட்டுமில்ல, இங்கிலாந்து போன்ற நாடுகள்ல அவங்க நாட்டின் அரசாங்க மருத்து சேவைகளுக்கு காத்து கிடக்கணும், இல்லை பிரைவேட் மருத்துவர்கள் கிட்ட போகணும், அதற்குண்டான வசதிகள் இல்லாம போய்விடுவதால்! சில சமயம் பங்களாதேஷ் மாதிரி நாடுகள்ல நமது நாட்டில கிடைக்கிற அத்தனை மருத்துவமும் கிடைப்பதில்லை, அதனாலே நம் போன்ற மலிவான மருத்துவ வசதிகள் கிடைக்கும் நாடுகளுக்கு சென்று வருகின்றனர்!

இந்த மெடிக்கல் டூரிஸம் என்பது மிகவும் பழமையான ஒன்று! அந்த காலத்தில் ஐரோப்பாவில், கிரேக்க நாட்டுக்கு, அதன் புனித தன்மை கருதி, யாத்திரிகர்களும், நோயாளிகளும் மத்திய தரைக்கடல் நாடுகள்லிருந்து சென்றதாக வரலாறு கூறுகிறது! 18ம் நூற்றாண்டில் செல்வந்த சீமான்கள் ஜெர்மனியிலிருந்து எகிப்தில் உள்ள நைல் நதி வரை சென்று வந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஆனால் இப்போதைய இந்த செலவு குறைந்த விமான மார்க்கம், கண்டம் விட்டு கண்டம் செல்ல ஏதுவாய் இருப்பதால் செல்வந்தர்களன்றி தேவைப்படும் நோயாளிகள் நாடு விட்டு நாடு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்கின்றனர்! ஆக இந்த மருத்துவ உல்லாச பிராயணத் தொழில் க்யூபா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா என்று அனைத்து நாடுகளும் வளர்ந்து வருகிறது! தெற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் 'மெடிக்கல் சபாரி விஸிட்' என்று இந்த உல்லாசத் தொழில் வளர்ச்சி, மூக்கு சீரமைப்பு, பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற மருத்துவத்தை முடித்துவிட்டு அப்படியே சிங்கம் யானை கொண்ட காடுகளையும் பார்த்துவிட்டு வர வழி செய்கிறது! எப்படி நம்ம ஊர் நடிகைகள் மூக்கு, இடுப்பை சரி செய்ய வெளி நாடுகள் சென்று சுற்றி பார்த்து விட்டு வருவதைப்போல!

ஆனால் இந்தியா மெடிக்கல் டூரிஸம் என்பதையும் தாண்டி மெடிக்கல் அவுட்சோர்ஸிங் என்ற வளர்ச்சிக்கு வந்துவிட்டது, அதுவும் அதிக சுமையாகிப்போன மேற்கு மருத்துவ வசதி தேவைக்கு துணையாக! எப்படி என்றால் நமது நாட்டின் மருத்துவ சட்டம் இது போன்ற வெளிநாட்டு நோயாளிகளை கவனிக்க அனுமதி அளிப்பதுமில்லாமல் அதற்கு நிதி சலுகைகளயும் 'export earnings' என்கிற முறையில் அளிக்கிறது! இந்த மெடிக்கல் டூரிஸம் என்ற தொழில் துறையானது ஆண்டிற்கு 100 கோடி டாலர்களை வருமானமாக ஈட்டி தருகிறது. இதன் வருமானம் இனி வரும் ஆண்டுகளில் 200 கோடி டாலர்களுக்கு மேல் வருமானம் தரக்கூடிய ஒன்று, அதுவும் வருடத்திற்கு 30 சதவீத வளர்ச்சி! நமது கல்வித்துறையானது வெறும் கம்புயூட்டர் இஞ்னியர்களையும், புரோகிரமர்களையும் மட்டும் ஆண்டுக்கு உற்பத்தி செய்வோதோடு நின்றுவிடாமல், 20,000 த்திலிருந்து 30,000 டாக்டர்களையும் நர்ஸ்களையும் உற்பத்தி செய்கிறது. எனவே இந்த அசுர வளர்ச்சி!

இந்த மருத்துவத்துறையில் நமது அப்பல்லோ மருத்துவமனை ஆண்டொண்டிற்கு 60000 வெளிநாட்டு நோயாளிகளுக்கு சிக்கைச்சை அளித்து வருகிறது! ஏற்கனவே இந்த மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ப்ஷன் எனும் சேவையை அமெரிக்க காப்பு நிறுவனங்களுக்கு செய்து வருவதுடன், பல அமெரிக்க மருத்துவமனைகளுடனும், மருந்து கம்பெனிகளுடனும் ஆய்வு முறை மருத்துவமும் செய்து வருகிறது! 1990ம் ஆண்டு ஏற்பட்ட தாராளமயமாக்கத்தின் பயனாக, புது புது மருத்துவ கருவிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, இன்று இந்தியா முழுவதும் 37 மருத்துவ மனைகளும் 7000 படுக்கையுடன் கூடிய வசதியோடு இயங்கி வருகிறது! அது மட்டுமின்றி வெளி நாடுகளான் குவைத், நைஜீரியா, இலங்கை போன்ற நாடுகளிலும் பங்குதாரர்களுடன் பெரிய மருத்துவமனைகள் நடத்தி வருகிறது! மேலை நாடுகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு பேக்கேஜ் டீல் என்ற வகையில் விமான டிக்கட்டு முதல் கொண்டு தங்க இடம், மருத்துவசிகிச்சை, பிறகு சிகிச்சைக்குபின் உல்லாசம் ('Post operative Vocation') என அனைத்து சாரங்களும் அடங்கிய முழு செலவீன தொகையிலே இந்தியா வந்து சிகிச்சை பெற்று போக வழி செய்கிறது! காசு உள்ளவர்களுக்குத்தான் இங்கே மருத்துவம் என்ற விமரிசனங்களிலிருந்து மீள்வதற்காக சில இலவச சிகிச்சை அளித்து வருகிறது!

ஆனால், இந்த மருத்தவ உல்லாசத் தொழிலின் திடீர் வளர்ச்சிக்கு சில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்! சமீபத்தில் பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னலில், டாக்டர் சமிரான் நந்தி, மற்றும் டாக்டர் அமித் சென்குப்தா போன்றோர், இந்த மருத்தவ உல்லாசத் தொழிலின் திடீர் வளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதி உள்ளனர். அதாவது இந்திய அரசாங்கம் இந்திய குடிமகன்களின் ஆரோக்கியத்தை விடுத்து வெளிநாட்டவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் சட்டதிட்டங்களை எதிர்க்க வேண்டும் எனக்கூறி உள்ளனர்! நம் குடிமகன்களில் வருடத்திற்கு 600000த்து மேல் குஷ்டரோக வியாதியாலும், 50 லட்சம் அதிகமானோர் வயிற்றுபோக்கு வியாதியாலும் மரணம் தழுவும் பொழுது, வெளிநாட்டவருக்கு அளிக்கும் சிகிச்சையும், அதற்கு பின் அவர்களை சுற்றி காண்பிக்கும் தாஜ்மஹால் போன்ற வியாபார திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அரசாங்க சட்டத்திட்டங்கள் தேவையில்லை என எதிர்த்து வருகின்றனர்! பொது மக்களின் மருத்துவ செலவீனங்களுக்கு வழி செய்யாத மருத்துவ சட்டதிட்டங்கள், தனிபட்ட மருத்துவத்திற்கு ஆதரவளிக்கும் திட்டங்களின் போக்கினை எதிர்த்து அந்த அறிக்கையில் குரல் கொடுத்துள்ளனர்! மேற்கொண்டு இந்த மருத்தவ உல்லாசத் தொழில் வளர்ச்சிக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு சலுகை முறையில் அளிக்கும் இடங்களும், மற்ற சட்ட சலுகைகளும், பொது மருத்துவ வசதிகளுக்கு வழி வகுக்காததால், இந்த தொழிலில் வளர்ச்சியை எதிர்ப்பதாகக் கூறி உள்ளார்கள்! மேலும் அவ்வறிக்கையில், உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி இந்தியாவில் வெறும் 4 டாக்டர்கள் மட்டுமே ஒவ்வொரு 10000 மக்களுக்கும் இருக்கின்றனர், ஆனால் வளர்ந்த நாடுகளான பிரிட்டன் போன்ற நாடுகளில் 18 டாக்டர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். மேற்கொண்டு, கிராமப்புற சுகாதார மருத்துவமனைகளின் நிலைமையும், ஏழை மக்களுக்கு கிடக்காத மருத்துவ சிகிச்சைகளும், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலைகள் அதிகம் எனக்கூறி , அரசாங்க சுகாதார சட்ட திட்டங்கள் மக்கள் நலனுக்கு சார்ந்தாக இல்லை என கடுமையாக சாடி உள்ளார்!

ஆனால், இந்த எதிர்ப்பு, இந்திய மருத்தவர்களிடையே பிளவினை உண்டுபண்ணி இருப்பது என்னவோ உண்மை! இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழிலை ஆதரிக்கும் மருத்தவர்கள், இது நமக்கு உலக நாடுகளிலிருந்து கிடைத்திருக்கும் அங்கீகாரமே, இந்தியா போன்ற நாடுகளின் வளர்ந்த சுகாதார வசதிகளின் நிலை உலகத்தரத்துக்கு இணையாக இருப்பது நமக்கு பெருமையே! இத்தொழிலை நாம் முழுமனதுடன் ஆதரவுக் கொடுத்து வளர்க்க வேண்டுமெனக்கூறுகின்றனர்! டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் இதய சிகிச்சை மருத்துவமனையின் டாக்டர் நரேஷ் ட்ரெகான் கூறுகிறார், நாம் இத்தொழிலை, இங்கு வசிக்கும் மக்களின் சிகிச்சைக்கு பங்கம் விளைவிக்காமல் வெளிநாட்டவருக்கு சிகிச்சை செய்வதில் தவறில்லை என்றும், இது நாம் விண்வெளி பயணம் போவது போன்றது, இங்கு பஞ்சம், பட்டினி, இதனை ஏன் செய்கிறீர்கள் என கேட்கின்றனர், இருந்தும் நாம் ராக்கெட் விடுவதில்லையா, அது போன்று தான் இத்தொழிலும் என்கிறார்!

இது போன்ற எதிர்மறை சர்ச்சைகள் இருந்தாலும், இந்த தொழில் முன்னேற்றம் நமக்கு முன்னேற்றம் தரக்கூடியதே! அதிகமான மருத்துவர்கள் தங்கள் திறமைகளையும் அனுபவங்களையும் பெற்று அதை இந்திய மக்களுக்கு வழங்க வாய்ப்பிருக்கிறது! இந்திய சுகாதர நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழிலின் மூலம் வரும் வருமானம் சுகாதர வசதிகளையும், கிராமப்புற சேவைகளயும் அதிகம் உருவாக்கி கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் டாகடர் நந்தி, இத்தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் பொது சுகாதரத்திற்கு செலவிடப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்றும், இந்தியாவில் பணம் இருப்பவர்கள் தனியாரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டு விடுவார்கள், அவதிப்படுவது ஏழைபாளைகளே என கருத்துத் தெரிவிக்கிறார்.

ஆக இந்த மருத்துவ உல்லாசப் பிரயாணத் தொழில் வளர வேண்டுமா என்பதை விஷயம் தெரிந்த அன்பர்கள் தங்கள் கருத்துக்களை பின்னோட்டமாகக் கூறுங்கள்!

10 comments:

said...

அபிராமம், உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி!

said...

சார்,

உபயோகமான பதிவு.

தொலைநோக்கோடு பார்ததால் நிச்சயம் வரவேற்கபடவேண்டி ஓன்று.

இதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செயயுமாறு கட்டாயபடுத்தபடவேண்டும்.

said...

இது போல இந்தியா வரும் பலரை நான் சந்தித்து இருக்கிறேன், அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்கள் உடன் வரும் மற்றவர்களுக்கும் நல்ல வசதிகள் செய்து தர வேண்டும். வெளிநாட்டு பயணிகளுக்கு பாதுகாப்பு குடுக்க வேண்டும். இது ரொம்ப முக்கியம். போன வருஷம் மட்டும் 4 பேர் இந்த மாதிரி வந்தவங்க வழிப்பறி செய்யப்பட்டிருக்காங்க. இதெல்லாம் தடுக்கப் படணும். இது ஒரு நல்ல தொடக்கம் தான்.
பிரசன்னா

said...

சிவபாலன்,
//இதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செயயுமாறு கட்டாயபடுத்தபடவேண்டும்// நம்ம அரசாங்கம் இதை எல்லாம் செஞ்சாதான் பரவாயில்லையே, செய்வாங்கன்னு நினைக்கிறீங்களா?

said...

சார்

அரசாங்கம் இதை செய்யவேண்டும் என்பதே என் அவா.

ஆனால் இதை (இலவச மருத்துவம்) தனியார் மருத்தவமனை உரிமையாளர்கள் செய்ய முன் வரவேண்டும்.

Medical Tourism த்தில் Insurance போன்ற பிரச்சனைகள் எவ்வாறு கையாளப்படுகிறது என தெரியவில்லை.

said...

முதலில் சிலவற்றை நாம் புரிந்துகொள்ள வேன்டும் ... இங்கு வரும் நோயாளிகளில் இரண்டு வகை உண்டு... ஒன்று உயிர் காக்கும் Heart Surgery போன்றவை செய்து கொள்ளும், அந்த நாட்டில் (உதாரணம் பங்களாதேசம்) அந்த வசதி இல்லாததல் இந்தியா வருபவர்கள் ....இரண்டு கொழுப்பெடுத்துபோய் Plastic செய்து கொள்ளும் , அந்த நாட்டில் அந்த வசதி இருந்தும் (உதாரணம் அமெரிக்கா) இங்கு செலவு கம்மி என்பதால் இந்தியா வருபவர்கள்

இவர்கள் இரண்டு சாரரையும் ஒரே அளவுகோள் வைத்து பார்ப்பது தவறு

said...

பிரசன்னா, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! அதாவது வெளிநாட்டவருக்கு தக்க பாதுகாப்பு அளித்து, இந்த மருத்த உல்லாசத் தொழிலை மேலும் நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால் டாக்டர் நந்தியின் கருத்தான, அடிப்படை சுகாதார வசதிகள் நம் சாதாரண குடிமகனுக்கு கிடைக்காத பட்சத்தில், இந்திய மருத்துவ சட்ட திட்டங்கள் இது போன்ற உல்லாச் தொழிலுக்கு ஆதரவு அளிப்பதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா என்பதே விவதாம்!

said...

அப்படி இல்லை டாக்டர் புருனோ அவர்களே! அமெரிக்காவிலிருந்தும் உயிர்காக்கும் நோய் நொடிகளை தீர்த்துக் கொள்ள மலிவு வைத்தியம் இந்தியாவில் கிடைப்பதால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலிருந்தும் நோயாளிகள் வருகிறார்கள். இதற்கு பெரிய அட்டவனை ஒன்றை 'Time' மேகஸின் போன வாரம் வெளியிட்டிருந்தது. அதில் 'Heart Bypass' சிகிச்சை பெறுவதற்கு அமெரிக்க காப்பு உரினை பெற்றவர்களுக்கு $54,741 லிருந்து $79,071 வரை செலவாகிரது! அதுவே அக்காப்புரிமை இல்லாதவருக்கு $122,424 லிருந்து $176,835 வரை செலவாகிறது! இதே சிகிச்சை இந்தியாவில் வெறும் $9500 தான்! தாய்லாந்து நாட்டில் $10,500 வரை தான்! சிங்கப்பூரிலே இந்த் சிகிச்சை $13,000. அதனால் தான் இந்த தொழிலுக்கு இப்பொழுது ஏகப்பட்ட டிமாண்டு நம் நாட்டில்! மேற்கொண்டு நம் மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மருத்துவர்களின் திறமை மேலை நாடுகளின் மருத்துவரின் திறமைக்கு சமமாக கருதப்படுகிறது. மருத்துவமனை வசதிகள் எல்லாம் அந்நாட்டிற்கு இணையாக இருப்பதாகவும் அதனை ஆதரிக்கும் அமெரிக்க காப்பு நிறுவனங்களும் நிறைய இங்கே!

ஆதலால் உயிர்காக்கும் மருத்துவசிகிச்சைகளுக்காக இந்தியா பறந்து வருபவர்கள் அநேகம் இப்பொழுது! இப்பொழுது அதிகம் அவர்கள் அனுப்பும் கேஸ்கள் மிகவும் காம்பிளிகேட் இல்லாத ஒன்றாக இருந்தாலும், வியாபரதனமை அதிகம் கொண்ட சில காப்புரிமை கழகங்கள் மிக குறைந்த காப்புரிமை சந்தாக்கள் கொண்ட திட்டத்தின் கீழ், 'Prefferred service providers' என்று நம் இந்திய நாட்டின் தனியார் மருத்துவ மணைகளை சிபாரிசு செய்கின்றன!

நீங்கள் கூறுவது போல பல் வைத்தியம், பிளாஸ்டிக் காஸ்மட்டிக் சர்ஜரிகளுக்கு வருபவர்கள் வேண்டுமானால் சொல்லலாம், ஆனாலும் கொழுப்பெடுத்து வருவதில்லை! அப்படி வந்தாலும், லாபகரமாக இல்லாத பட்சத்தில் அவர்கள் வரப்போதில்லை!

said...

மெடிகல் டூரிஸம் அதிகரிப்பது வரவேற்கத்தக்கதே. நம் திறமை உலக அளவில் அங்கீகரிக்கப் பட்டிருப்பதின் அடையாளம்தான். ஆனால் அதை அரசு கையாளும் முறைகள்தான் சீர்படுத்தப் பட வேண்டும் . தனியார் மருத்துவமனைகளின் சேவையை மேம்படுத்த மானியங்களும் வசதிகளும் தருவதை விடுத்து அரசு பொது மருத்துவமனைகளில் சிலவர்றைத் தேர்ந்தெடுத்து, அதை மேம்படுத்த வேண்டும். தனியார் முதலீடுகளின் தரத்தை பெருக்க பெருக்க அரசு வருமானம் ஓரளவுக்கு மேல் அதிகரிக்காது.
முன்பு கம்ப்யூட்டர் எஞ்சினீயர் என்றாலே வெளிநாடு சென்றால்தான் முன்னேற முடியும் என்ற நிலை மாறி இந்தியாவிலேயே தங்கவும், வெளிநாடு சென்றவர்கள் திரும்பி வரவும் ஏதுவாக எத்தனை IT parks வந்துவிட்டது. அதுபோல் மேலை நாடுகளை நோக்கி படையெடுக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் வாய்ப்பு மெடிகல் டூரிஸத்தால் வரலாம். பொது நல நோக்கோடு கொஞ்சம் சீரமைக்கப் பட வேண்டும்.

said...

தாணு, நல்ல திறமை வாய்ந்த டாக்டர்கள் வெளி நாடு செல்வதை தடுக்க இந்த மெடிக்கல் டூரிஸம் உதவினாலும் நம் பொது சுகாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு எப்படி உதவ போகிறது என்பது சில டாக்டர்களின் கேள்வி, இதுக்கு உங்க பதில் என்னா?