Thursday, March 23, 2006

இலவு காத்தக் கிளி - சொல்லத்தான் நினைக்கிறேன்

அந்த காலத்தில, சின்ன வயசில நான் குமுதம், ஆனந்த விகடன் படிக்க ஆரம்பிச்சது அஞ்சாவதோ, இல்ல ஆறாவதோ படிக்கும் போதுன்னு நினக்கிறேன். அப்ப கதைகள், கட்டுரைகள் படிக்க அவ்வளவு ஆர்வம் இருக்காது. இந்த ஆறு வித்தியாசங்கள், அப்புறம் கார்ட்டூன் படங்கள் பார்க்கிறதுலதான் ஒரு ஆர்வம்ன்னு வச்சுக்கங்க. எங்க வீட்ல யாரும், அந்த பத்திரிக்கைகள் எல்லாம் படிக்க மாட்டாங்க. இதில ஒரு Irony, என்னான்னா, எங்க அம்மா, அவங்க சின்ன வயசிலே கதைகள் நிறைய படிப்பாங்களாம், அதில வர கேரக்டர்கள் பேர் எல்லாத்தையும் எங்க பெரியம்மா வீட்டு பிள்ளைங்களுக்கு வைப்பாங்கலாம், அப்பவே, இன்பசேகரன்ங்கிற பேரு வச்சவங்க, நான் சொல்றது 1950 களில்ல. அப்புறம் அவங்க கல்யாணத்துக்குப்பறம் அதில என்னமோ ஆர்வம் குறைஞ்சு போச்சு, பொருளாதார கட்டுப்பாடும்னும் நினைக்கிறன். ஆக இந்த மாதிரி புத்தகங்கள் படிக்கும்னும்னா, நான் எங்க பெரியம்மா வீட்டுக்க்குத்தான் போகணும். ஏன்னா, அங்க தான் வாங்கி படிப்பாங்க. நானும் சும்மா புத்தகத்தை எடுத்து புரட்டி பொம்மை பார்த்து ரசிப்பேன்!

அந்த புத்தகங்கள் வழக்கமா வாங்கி படிக்கிற பழக்கம் எங்க பெரியம்மா வீட்ல, எங்க அண்ணன் அக்காங்களுக்கு இருந்திச்சு. ஆனா,நான் புத்தகத்தை தூக்கினா, எங்க பெரியப்பா சத்தம் போடுவாரு, 'சின்ன புள்ள இதை எல்லாம் படிச்சு கெட்டு போகக்கூடாது'ன்னு என்னை எடுத்து பார்க்கவே விடமாட்டார். அதனால அவரு இல்லாதப்ப அவருக்குத் தெரியாம புரட்டினாத்தான் உண்டு. எதுக்கு சொல்றேன்னா, இப்பவும் ஊரு விட்டு ஊரு மாத்தி, தேசம் விட்டு தேசம் போயிம் அந்த பழக்கம் இன்னும் இருக்கு. அதுக் கிடைக்காத இடங்கள்ல இணையத்தில படிச்சிக்கிற வேண்டியது தான். ஆனா, என்ன இருந்தாலும், அந்த வார வாரம் வியாழக்கிழமையேலே வெளிவரும் புத்தகத்தை வாங்கி கடைசி பக்கம் வரை விடாம படிச்சி முடிக்கிறதுங்கிறதுல இருக்கிற அந்த திரில்லே தனி!!

இந்த புத்தகங்கள்லால நமக்கு சில பயன்களும் உண்டு, எப்படின்னு கேளுங்க, சின்ன வயசிலே, காசு கிடைக்காதப்ப, ஏதேனும் சினிமா போகணும்னா, இந்த பழைய குமுதம், ஆனந்த விகடன் பத்திரிக்கைகளை யாருக்கும் தெரியாம எடுத்துட்டுப் போயி, பழையப் புத்தக கடைக்காரங்கிட்ட போட்டுட்டு, பைசா வாங்கி, நிறைய சினிமா பார்த்த அனுபவங்கள் உண்டு. அப்பறம் கொஞ்சம் வளர்ந்தோன்ன, குமுதம், ஆனந்த விகடன் வாங்கி படிக்கிறதில்லாம, அதே மாதிரி வெளி வந்த வாரப் பத்திரிக்கைகள், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தாய், அப்படின்னு எல்லாத்தையும் படிக்கிறது. ஆனா,சில சமயங்கள்ல எல்லாத்தையுமே ரெகுலரா வாங்கிறதில்லை.

மற்ற எல்லா பத்திரிக்கைகள் எல்லாத்துக்கும் மூலம் இந்த குமுதமும், ஆனந்த விகடனும் தான். அதில கதை எழுதி பிரபலமான எழுத்தாளர்கள், பிறகு தாங்களாகவே தொடங்கின பத்திரிக்கைகள் தான் இவைகள். அதில சாவி எழுதிய 'வாஷிங்கடனில் திருமணம்', மணியன் எழுதும் பயணக்கட்டுரைகள் எல்லாமே ஆரம்பம் ஆனது குமுதம், ஆனந்த விகடன்ல தான். அப்பறம், திமுக வை பத்திரிக்கை மீடியத்தில வளர்க்கும்னு ஆரம்பிச்சது தான் குங்கும். வலம்புரி ஜான், அதிமுக ஆதரவு பத்திரிக்கையா, தனியா ஆரம்பிச்சது தான் தாய்.
இது எல்லாம், நான் சொல்ற எழுபதுகள்ல தொடங்கியது, அதுக்கப்புறம் எத்தனையோ வந்து போயிடுச்சு, சிலது கை மாறி இப்ப இதயம் பேசுகிறது, 'சரவணா ஸ்டோர்ஸ்'ஸா வந்திக்கிட்டு இருக்குனு கேள்விபடுறேன். அதே மாதிரி இந்த பத்திரிக்கைகள் தாக்கம், படத்தில வசனம் எழுதும் வரை இருந்திச்சு. பாக்யராஜ், பாரதிராஜாவோட 'புதியவார்ப்புகள்' படத்தில, வசனம் எழுதினப்ப, காஜாஷரிப் பேசற ஒரு வசனம் ரொம்ப பேமஸ். 'எங்கக்கா அவங்க இதயத்தை கொடுத்துட்டு, உங்கக்கிட்ட இருந்து குங்குமம் வாங்கிட்டு வரச் சொன்னாங்கன்னு' சிம்பாலிக்கா, இந்த வாரப்பத்திரிக்கை பரிமாறல்களை வச்சி காதல் காட்சியை டெவலப் பண்ணியிருப்பாரு!

அந்த காலத்தில, காலேஜ் படிச்சப்ப, என்னால எல்லா புத்தகங்களையுமே வாங்க முடியாது, அதுனால, எங்க வீட்டுக்கு பக்கத்தில இருந்த வெத்தில பாக்குக் கடையில போயி ஓசியில புத்தகத்தை எடுத்து ஒரு இரண்டு மணி நேரத்தில எல்லாத்தையுமே படிச்சு முடிச்சுடுவேன். அந்த கடையில பெரும்பாலான நேரங்கள்ல, அந்த கடைக்காரர், தன் சின்ன புள்ளைங்களை யாவாரம் பாக்க வச்சிட்டு எங்கயாவது போயிடுவார். அதுங்களும், நான் என்னமோ வாங்கத்தான் புரட்டி பார்த்திக்கிட்டு இருக்கேன்னு, கம்முன்னு இருக்குங்க. சில சமயம் விளைஞ்ச பெரிய புள்ளங்க வந்து கடையில உட்கார்ந்திருந்தா, 'இந்தா சும்மா காசுக் குடுக்காம படிக்காத, வையுங்க'ன்னு அதட்டும், நானும்,'இரு புள்ள, வாங்கலாமா, வேணாமான்னு பார்க்கிறேன்னு' சொல்லியே பாதி படிச்சு முடிச்சுட்டு, அந்த கையித்தில திரும்ப தொங்கப் போட்டுட்டு நடையை கட்டிடுவேன். இப்படி கயித்தல கட்டி தொங்க போட்ட புத்தகத்தை ஓசியில படிச்சே ஒரு தொடர் கதையை முடிச்சிட்டேன். அந்த தொடர் கதை தான், மணியன் எழுதிய 'இலவு காத்தக் கிளி'. இதை நீங்க எத்தனைப்பேரு படிச்சிருப்பீங்களோ எனக்குத் தெரியாது. ஆனா, இந்த கதையை படமா எடுத்து ரொம்ப நல்லா ஒடின படம் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' பெரும்பாலானோர் இந்த படத்தை பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

பொதுவா மணியனோட சிறப்பு என்னான்னா, பயணக்கட்டுரைகள் எழுதுவதுதான். அந்தகாலத்தில அவரு வெளிநாடெல்லாம் சுத்திட்டு வந்தோன, அந்த அந்த இடங்களின் அருமை பெருமைகளை அழகா எழுதுறதிலே மணியன் மன்னன். அந்த தொடர்கள் வாசிக்க நல்லாவும் இருக்கும். சில நேரங்கள்ல நல்ல தொடர்கதைகளும் எழுதுவாரு. அப்படி வந்ததுதான் இந்த கதை. இது கல்யாணமாத மூணு அக்கா தங்கச்சிக்களை பற்றியது. அவங்க வீட்டுக்கு குடிவர்ற கதாநாயன் மேலே மூணு அக்கா தங்கச்சிங்களும் காதல் கொள்வாங்க, ஆனா யாரும் தங்க காதலை நேரடியா வெளியே சொல்லமாட்டாங்க. தக்கத்தருணம் வரும்போது தங்கள் காதால் தெரிய வந்து, அது நிறைவேறும்னு காத்துக்கிட்டு இருப்பாங்க. அதே மாதிரி ஹீரோவும், அந்த அக்கா தங்கச்சிங்கள்ல கடைசி தங்கச்சியை காதிலிப்பார், அவரும் தன் மனிசில இருக்கிறதை வெளியே சொல்ல மாட்டார். அந்த கடைசி தங்கச்சியும் அவரு மேலே தீராத காதலா இருப்பா. கடைசியில அக்காங்க ரெண்டுப்பேரும் ஹீரோ தன்னை காதலிக்கலங்கிறதை தெரிஞ்சுகிட்டு அவருக்கும் தன் கடைசி தங்கச்சி மேலே தான் காதல்ங்கிறதை தெரிஞ்சு ஒதுங்கிடுவாங்க, ஆனா சந்தர்ப்பவசத்தால கடைசி தங்கச்சியும் வில்லங்கிட்ட தன்னை இழந்த தாலே, அதுவும் தன் தோழிய காப்பாத்த போயி, அவனையே கல்யாணம் பண்ண வேண்டியதா போயிடும். கடசியில நம்ம ஹீரோவுக்கு யாருமே கிடைக்கமாட்டங்க. பழம் தானா மரத்திலிருந்து விழும்னு காத்துக்கிட்டு மரத்தில உட்கார்ந்திருக்கிற கிளி மாதிரி தான் நம்ம ஹீரோ, தானா கிடைச்சிடும்னு நம்பிக்கையில காதலை சொல்லாம மனசில வச்சி கடைசியில ஒன்னும் கிடைக்காம் போறது தான், இந்த 'இலவு காத்தக் கிளி'யின் கதை. ரொம்ப சுவாரசியமான தொடர் கதை. ஒவ்வொரு வாரமும், மணியனும் கதையின் தொடர் முடிவிலே முடிச்சு போட்டு நம்மல அடுத்த வாரத்துக்காக காக்க வச்சு படாத பாடு பட வச்சுடுவாரு. அப்படி படிச்ச இந்த கதை என்னால இன்னும் மறக்க முடியாத ஒரு தொடர்.

இதை படமாவும் நம்ம பாலசந்தர், நல்லா எடுத்திருந்தார். சிவக்குமார் தான் படத்தில ஹீரோ. அந்த மூணு சகோதரிகளா நடிச்சவங்கள்ல விதுபாலா, ஜெயசித்ரா, அப்புறம் மூணாவது யாருன்னு தெரியல. அந்த கடைசி தங்கச்சி ரோல் பண்ணுனது ஜெயசித்ரா. நல்ல நடிகை, அப்ப ஜெயசங்கரோட நிறைய நடிச்சி ஆக்ஷன் பட ஹீரோயினியா இருந்தாலும், இந்த படத்தில சும்மா அசத்தி இருப்பாங்க. அந்த வில்லனா நடிச்சது நம்ம கமலஹாசன். இந்தப் படம் தான் கமலுக்கு முதல் முதலா சின்ன வயசில நடிச்சதுக்கப்புறம் வாலிப வயசில நடிச்ச முதப்படம். தமிழுக்கு வரதுக்கு முன்னாடி அவரு நடிச்சதெல்லாம் மலையாள படங்கள், அதுவும் 'ராஸ லீலா' அப்படின்னு பலான படங்கள், செம்மீன் ஷீலாக்கூட ரொம்ப நெருக்கமா மலையாளப் படங்கள்ல நடிச்சுகிட்டு இருந்த நேரம். எல்லா ஹீரோவும் என்ட்ரி ஆவறது வில்லனாதாங்கிற தமிழ் பட இலக்கணப்படி, அவர் அறிமுகம் வில்லனாதான் இந்த படத்தில. அவரு தனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க எல்லாரையும் லிஸ்ட் போட்டு ஒருத்தர் ஒரூத்தரா கெடுக்கிறது அவரு வேலை. மெச்சூர்ட்டி இல்லனாலும், நல்லாவே செஞ்சிருந்தார். கமலஹாசனும், ஜெயசித்ராவும் சந்திச்சிக்கிருப்ப எப்பவும் மோதல் தான், அப்ப கமலும் சொல்லுவாரு, 'நீயும் என் லிஸ்ட்ல கடைசியில இருக்கேன்னு', அதே மாதிரி முடிச்சுக்காட்டுவார். அப்படி அவங்க சந்திச்சு மோதிகிட்டு பாடற பாட்டு ரொம்ப பேமஸ் அப்ப, கேட்டுப்பாருங்களேன்! அந்த படம், அப்ப வாலிப முறுக்கு இருந்தா இப்படித்தான் இருக்கணும்னு அப்ப வாலிபர்களா இருந்த எல்லோருக்குமே ஆசையை வர வச்ச கேரக்டர். அந்த நெகட்டிவ் கேரக்டர், ரொம்ப பாஸிட்டிவா காட்டியிருப்பாரு பாலசந்தரு. பிறகு கடைசியில ஜெயசித்ராவோட கல்யாணம் பண்ணிக்கிட்டு, சிவகுமாரை அம்போன்னு தனியா நிக்கவச்சுருவாங்க!

'சொல்லத்தான் நினக்கிறேன் சொல்லத்தான் துடிக்கிறேன், சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்னு' எம் எஸ் வி பாடியிருந்த பாட்டு ரொம்ப மெலடி, கேசட் கிடைச்சா, வாங்கிப் போட்டுபாருங்க.

0 comments: