Wednesday, May 31, 2006

நாடு திரும்பும் நாட்டியப் பேரொளி!

இது கொஞ்சம் பெருசங்களுக்காக போடப்படும் பதிவு, அதாவது அந்தக் காலத்திலே கனவுக் கன்னியா இருந்த நமது நாட்டியப் பேரொளி பத்மினி இவ்வளவு காலம், கணவன் மறைந்தும் அமெரிக்காவிலே இருந்துவிட்டு, அவர் தமிழ்நாடு திரும்புகிறார் அடுத்த மாதம்!அவர் நாடு திரும்புவதை ஒட்டி நியூ ஜெர்சியில் இருக்கும் நம் தமிழர்கள் அவருக்கு மிகப்பெரிய வழியனுப்பு விழா ஒன்றை நடத்துக்கிறார்கள் வரும் ஜீன் 3ம் தேதி! அதைப்பற்றி விவரம் அறிய வேண்டுமென்றால் இதோ சுட்டி! இன்றும் நம் நினைவை விட்டு நீங்காத அவர் நடித்தப்படங்கள் பல! யார் மறக்க முடியும் அந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' போன்ற அவர் நடித்த உணர்ச்சி மிகுந்த அந்த பாடல்கள் மற்றும் நாட்டியங்களை! அவர் வழியனுப்பு விழாவில் என்னால் கலந்துக் கொள்ள முடியாததால் அவருக்காக இந்தப் பதிவு அற்பணம! கொஞ்சம் வரலாற்றை பின் நோக்கி பார்க்கும் பொழுது 'லலிதா, பத்மனி, ராகினி என்ற திருவாங்கூர் சகோதரிகள் நடனத்தால் நம் பெருசுகளையும், பிறகு நம்மவரையும் கவர்ந்த அவர்களை கொஞ்சம் நினைவுக்கூர்வோமா?

தமிழக ரசிகர்களை தங்கள் நடனத்தால் கவர்ந்த "திருவாங்கூர் சகோதரிகள்" லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் பின்னர் நடிப்பிலும் முத்திரை பதித்தனர்.

திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932லும், பத்மினி 1934லும், ராகினி 1938லும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன்பிள்ளை. தாயார் பெயர் சரசுவதி அம்மாள்.

நடனப் பயிற்சி

மூன்று சகோதரிகளில் முதலில் பத்மினிதான் நடனப் பயிற்சி பெற்றார். பிறகு லலிதாவுக்கும் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நடன ஆசிரியரிடம் முறைப்படி நடனம் பயின்றனர்.

சில ஆண்டுகள் கழித்து, ராகினியும் நடனப் பயிற்சி பெற்றார்.

கல்பனா

40களில், இந்தியாவிலேயே நடனத்தில் புகழ் பெற்று விளங்கியவர் உதயசங்கர். இவர் சிதார் மேதை ரவிசங்கரின் சகோதரர்.

ரவிசங்கர் சென்னை வந்திருந்தபோது, பத்மினியும், ராகினியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முழுக்க முழுக்க நடனங்கள் கொண்ட "கல்பனா" என்ற இந்தி திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோவில் ரவிசங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு லலிதாபத்மினிக்கு ரவிசங்கர் வாய்ப்பளித்தார்.

"கல்பனா" மூலமாக லலிதாவும், பத்மினியும் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்கள்.

வேதாள உலகம்

இந்த சமயத்தில், காரைக்குடியில் ஏவி.எம். ஸ்டூடியோ இயங்கி வந்தது. "நாம் இருவர்" என்ற மெகாஹிட் படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, "வேதாள உலகம்" என்ற படத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் தயாரித்து வந்தார். இது இசை நாட்டியத் திரைப்படம்.

"இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?" என்று லலிதா பத்மினியிடம் ஏவி.எம். கேட்டார்.

"நடனம் மட்டும் ஆடுகிறோம். நடிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை" என்று சகோதரிகள் கூறினார்கள்.

இதற்கு ஏவி.எம். சம்மதித்து, பவளக்கொடி இசை நாட்டிய நாடகம், பாம்பாட்டி நடனம் முதலியவற்றில் லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார்.

1948 ஆகஸ்டு மாதம் வெளியான "வேதாள உலக"த்தின் சிறப்பு அம்சமாக, லலிதா பத்மினியின் நடனங்கள் அமைந்தன. நடனங்களை வழுவூர் ராமையாப்பிள்ளை அருமையாக அமைத்திருந்தார்.

வேதாள உலகத்தைத் தொடர்ந்து, தங்கள் படத்தில் லலிதா பத்மினியின் நடனம் இடம் பெறவேண்டும் என்று ஒவ்வொரு பட அதிபரும் விரும்பினர்.

லலிதா பத்மினி நடனம் இடம் பெறாத படமே அநேகமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓடாத படங்களையும் ஓட வைக்க, லலிதா பத்மினி நடனங்கள் உதவின.

அந்தக் காலக் கட்டத்தில் பத்மினியை விட லலிதாதான் கவர்ச்சிகரமாக இருப்பார். நடன நாடகங்களில், லலிதா பெண்ணாக ஆட, பத்மினி ஆண் வேடத்தில் (மீசையோடு) ஆடுவார். இதனால், இந்த நடன சீசனில், லலிதாவின் கையே ஓங்கியிருந்தது.


பிரசன்னா

1950ல் பட்சிராஜா ஸ்டூடியோவினர் "பிரசன்னா" என்ற மலையாளப்படத்தைத் தயாரித்தனர். இதில், முதன் முதலாக வேடம் தாங்கி லலிதாவும், பத்மினியும் நடித்தனர். லலிதா கதாநாயகி. டி.எஸ்.பாலையா கதாநாயகன். பத்மினி சிறிய வேடம் ஒன்றில் நடித்தார்.

லலிதா கேரள உடையில் கவர்ச்சிகரமாகத் தோன்றி நடித்தார். படம், கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் சக்கை போடு போட்டது.

ஏழைபடும்பாடு

இதன்பிறகு, தமிழ்ப்படங்களிலும் லலிதா பத்மினி சகோதரிகள் நடிக்கத் தொடங்கினர். பட்சிராஜா ஸ்டூடியோவில், கே.ராம் நாத் டைரக்ஷனில் உருவான "ஏழைபடும்பாடு" (1950) படம்தான் இவர்கள் நடித்த முதல் படம்.

பிரதான குணச்சித்திர வேடத்தில் வி.நாகையா நடித்தார். இளைஞனாக நடித்த வி.கோபாலகிருஷ்ணனின் காதலைப் பெறப் போட்டி போடும் பெண்களாக லலிதாவும், பத்மினியும் நடித்தனர். இந்தப் படத்தில், பத்மினியை விட லலிதாவின் நடிப்புதான் சிறப்பாக இருந்தது.

படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், நடனங்களும் தொடர்ந்தன. அதில், ராகினியும் பங்கு கொண்டார்.

காஞ்சனா

லலிதா பத்மினி இருவரும் அற்புதமாக நடித்த படம் "காஞ்சனா." (1952)

இந்தப் படத்தையும் பட்சிராஜா ஸ்டூடியோதான் தயாரித்தது. டைரக்ஷன்: ஸ்ரீராமுலு நாயுடு.

பிரபல பெண் எழுத்தாளர் லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) "காஞ்சனையின் கனவு" என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கதைதான், "காஞ்சனா" என்ற பெயரில் படமாகியது.

கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி, இளம் ஜமீன்தார். அவருக்கும் தாசி குலத்தில் பிறந்த பானுவுக்கும் (பத்மினி) காதல் ஏற்படுகிறது. மனைவி என்ற அந்தஸ்தை தரமுடியாவிட்டாலும், மனைவி போலவே அவளிடம் பாசத்தைப் பொழிகிறார், ராமசாமி.

"எவ்வளவு காலம் பிரமச்சாரியாக இருப்பாய்? ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்" என்று ராமசாமியிடம் தாயார் வற்புறுத்துகிறார். தன் தோட்டத்தில் வேலை செய்யும் ஏழையின் மகளான காஞ்சனாவை (லலிதா) மணந்து கொள்கிறார், ராமசாமி.

காஞ்சனா, பானு இருவரிடமும் சம அன்பு செலுத்துகிறார், ராமசாமி. இதனால் ஏற்படும் சிக்கல்களை படம் சித்தரித்தது.

படத்தின் இறுதியில் பத்மினி இறந்து விடுவார். அவருக்காக லலிதாவும் கண்ணீர் சிந்துவார்.

பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, லலிதா, பத்மினி, கே.ஆர்.ராமசாமி மூவரும் அற்புதமாக நடித்திருந்தனர்.

என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனிலும், கலைஞர் மு.கருணாநிதி வசனத்திலும் உருவான மணமகள் (1951) படத்திலும் லலிதாவும், பத்மினியும் சேர்ந்து நடித்தனர். சூப்பர்ஹிட் படம் இது.

இதற்கிடையே லலிதாவும், பத்மினியும் தனித்தனியாகவும் நடிக்கலானார்கள்.

1951ல் வெளிவந்த "ஓர் இரவு" படத்தின் கதாநாயகியாக லலிதா நடித்தார்.


சிவாஜிகணேசனுடன் முதல் படம்

1952ல், "பராசக்தி" தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். தயாரித்த "பணம்" என்ற படத்திலும் சிவாஜிகணேசன் நடித்து வந்தார். இந்தப்படத்தின் கதாநாயகி பத்மினி.

சிவாஜியும், பத்மினியும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட போது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

"பப்பிம்மா! நான் நாடக நடிகனாக இருந்தபோது, உங்கள் படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, மணமகள் படத்தில் உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது. அப்போதெல்லாம், எதிர்காலத்தில் உங்களுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை" என்றார், சிவாஜி.

பத்மினி, சிரித்துக்கொண்டே, "கணேஷ்! இப்போது தமிழ்ப்பட உலகில் இளம் கதாநாயகர்களே அநேகமாக இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும் `பராசக்தி' படம் பற்றி, இப்போதே பரபரப்பாக பேசுகிறார்கள். நீங்கள் எதிர்காலத்தில் மிகவும் புகழ் பெறுவீர்கள்" என்று கூறினார்.

"பராசக்தி" வெளிவந்த சில நாட்களுக்குப்பின் "பணம்" வெளியாகியது. பராசக்தியைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சிவாஜி பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக, நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.
1954ம் ஆண்டில் சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் இணைந்து நடித்தனர்.

பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பான "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" நகைச்சுவைப் படம். இதில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் ராகினி நடித்தார். அவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன்.

இப்படத்தில் "வெண்ணிலாவும் வானும் போல..." என்ற பாரதிதாசன் பாடலை எம்.எல். வசந்தகுமாரி அருமையாக பாடினார். ராகினி பாடுவது போல அந்த பாடல் காட்சி படத்தில் இடம் பெற்றது.

தூக்குத்தூக்கி

1954ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான "தூக்குத்தூக்கி"யில் சிவாஜியுடன் லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் நடித்தனர்.

"கொலையும் செய்வாள் பத்தினி" என்ற தத்துவத்தை உள்ளடக்கிய கதை. இதில் கணவனுக்கு (சிவாஜி) துரோகம் செய்யும் மனைவியாக லலிதா நடித்தார். இறுதியில் சிவாஜியை மணக்கும் ராஜகுமாரி பத்மினி.


இந்தப் படத்தில், "குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்" என்ற பாடலுக்கு சிவாஜி, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் ஆடும்போது, ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரையே குலுங்கச் செய்துவிடும்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "இல்லறஜோதி"யில் சிவாஜியும், பத்மினியும் நடித்தனர். இதில் சிவாஜி சலீமாகவும், பத்மினி அனார்கலியாகவும் நடித்த ஓரங்க நாடகம் பிரமாதமாக அமைந்தது.

எதிர்பாராதது

1954 கடைசியில் வெளியான சரவண பவானிட்டி தயாரிப்பான "எதிர்பாராதது", சிவாஜி, பத்மினி இருவரின் திறமைக்கும் சவாலாக அமைந்த படம்.

இப்படத்தின் கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதியிருந்தார்.

இதில் சிவாஜியும், பத்மினியும் காதலர்கள். ஆனால் விபத்து காரணமாக சிவாஜி அடையாளம் தெரியாத இடத்தில் சிக்கிக் கொள்ள, பத்மினிக்குத் திருமணம் நடந்து விடுகிறது. அவர் திரும்பி வரும்போது, பத்மினி சித்தி ஸ்தானத்தில் இருக்கிறார்.

உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த கதை. கதையின் `கிளைமாக்ஸ்' எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் மனம் திக் திக் என்று அடித்துக்கொள்ள, நமது பண்பாட்டிற்கு ஏற்றபடியே கதை முடிகிறது. இறுதிக் கட்டத்தில் "சிற்பி செதுக்காத பொற்சிலையே" என்ற பாடலை சிவாஜி பாடிக்கொண்டிருக்க, கொட்டும் மழையில் பத்மினி ஓடி வருவார். அவரை கட்டித்தழுவ சிவாஜி முயலும் போது, பத்மினி அவரை அடித்து நொறுக்குவார். மெய் சிலிர்க்கச் செய்யும் கட்டம் அது.

சிவாஜிகணேசன் பலதரப்பட்ட படங்களில் நடித்து, நடிப்பின் இமயமாக உயர்ந்து கொண்டே போனார். இதனால் அவர் பானுமதி, சாவித்திரி, வைஜயந்திமாலா போன்ற நடிகைகளுடனும் நடிக்க நேரிட்டது.

இதேபோல், பத்மினியின் புகழும் உயர்ந்து கொண்டே போயிற்று. அதனால் எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன் ஆகியோருடனும் சில படங்களில் இணைந்து நடித்தார். எனினும் சிவாஜி பத்மினி ஜோடிக்கே ரசிகர்களின் பெரும் வரவேற்பு கிடைத்தது.

மங்கையர் திலகம்

1955 ஆகஸ்டில் வெளிவந்த "மங்கையர் திலகம்" பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும்

இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார்.

பல படங்களில் சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. சிவாஜியின் அண்ணியாக பத்மினி நடிப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா? என்று, பட உலகத்தினர் சந்தேகப்பட்டனர். ஆனால் கதையின் வலிமை, சிவாஜி பத்மினியின் நடிப்பு, வலம்புரி சோமநாதனின் வசனம், எல்.வி. பிரசாத்தின் டைரக்ஷன் ஆகியவற்றால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது.

ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் "மங்கையர் திலகம்."

தேவதாஸ்

லலிதா நடித்த படங்களில் சிறந்தவை "தேவதாஸ்", "கணவனே கண்கண்ட தெய்வம்" ஆகியவையாகும்.

"தேவதாஸ்" படத்தில், ஏ.நாகேஸ்வரராவும், சாவித்திரியும் அற்புதமாக நடித்தனர். அத்தகைய படத்தில் தாசி சந்திரமுகி வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்து பெயர் பெற்றார், லலிதா.

"கணவனே கண்கண்ட தெய்வம்" படத்தில், ஜெமினிகணேசனை காதலித்து தோல்வி அடையும் நாக தேவதை வேடத்தை கச்சிதமாக செய்திருந்தார். மயக்க மருந்து குடித்ததால், "உன்னைக் கண் தேடுதே..." என்று விக்கலுடன் அவர் பாடிய பாடல் மிகப்பிரபலம்.

"எனக்கு விரைவில் திருமணம் நடைபெறப்போகிறது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன்" என்று நடிகை பத்மினி 1961 ஏப்ரலில் அறிவித்தார்.
திரை உலக ராணிகள்

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் மூன்று மகாராணிகளாகத் திகழ்ந்தனர்.

பத்மினி, நடனக்கலையில் தேர்ந்தவராக இருந்ததால், நடனங்கள் இடம் பெற்ற படங்களில் அவர் கொடி உயரமாகப் பறந்தது.

பத்மினியை விட பானுமதி சுமார் 10 வயது மூத்தவர். எனவே நாளடைவில் பானுமதி குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததும், "நெம்பர்1" இடத்துக்கு பத்மினி உயர்ந்தார்.

பத்மினி, திருமணத்துக்கு முன்னதாக சிவாஜிகணேசனுடன் நடித்த படங்களில் பாக்யவதி (1957), புதையல் (1957), உத்தமபுத்திரன் (1958), தங்கப் பதுமை (1959), தெய்வப்பிறவி (1960), புனர் ஜென்மம் (1961) ஆகியவை முக்கியமானவை.

"புதையல்" படத்தில், சிவாஜி பத்மினி காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

தங்கப்பதுமை

கண்ணகி கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் "தங்கப்பதுமை." ஜூபிடர் சோமு தயாரிப்பில், அரு.ராமநாதன் கதை வசனத்தில் உருவான இந்தப் படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.

இதில், பத்மினியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. "ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே, ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே" என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் குரலில் சிவாஜி பாடுவது படத்தின் சிறப்பு அம்சம். சிவாஜிகணேசன் கண் குருடாக்கப்பட்டதை அறிந்ததும் பத்மினி "ஆ" என்று அலறித் துடித்தக்காட்சி, "உங்கள் கண்கள் எங்கே அத்தான்?" என்று அழுகையுடன் கேட்டபோது காட்டிய முகபாவம், பத்மினியை நடிப்பின் சிகரத்துக்குக் கொண்டு போயின.

பத்மினியின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று "தங்கப்பதுமை."

சிவாஜியும், பத்மினியும் போட்டி போட்டு நடித்த படங்களில் ஒன்று "தெய்வப்பிறவி." இது ஏவி.எம். தயாரித்த படம். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம். கிருஷ்ணன் பஞ்சு டைரக்ஷன்.

காதலித்து மணந்த பத்மினி மீது சிவாஜி சந்தேகப்படுவார். அதைத்தொடர்ந்து, கணவன் மனைவி இடையே நடைபெறும் உணர்ச்சிப் போராட்டத்தை பத்மினி, சிவாஜி இருவருமே நன்கு சித்தரித்தனர்.

சிவாஜியின் மகத்தான படமான "வீரபாண்டிய கட்ட பொம்ம"னில் பத்மினி நடித்த போதிலும், அவருக்கு ஜோடி ஜெமினிகணேசன்.

வஞ்சிக்கோட்டை வாலிபன்

பத்மினியும், ஜெமினிகணேசனும் இணைந்து நடித்த படங்களில் "வஞ்சிக்கோட்டை வாலிபன்", "மீண்ட சொர்க்கம்" ஆகியவை முக்கியமானவை.

வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜெமினியின் பிரமாண்டமான படம். இதில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் பங்கு கொண்ட "போட்டி நடனம்", கண்ணுக்கும், செவிக்கும் அரிய விருந்தாகும். இந்தியப் படங்களில் இடம் பெற்ற மிகச்சிறந்த நடனக் காட்சி எது என்று கேட்டால், "வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி வைஜயந்திமாலா போட்டி நடனக்காட்சி" என்று தயங்காமல் கூறலாம்.

படம் வெளிவந்து 47 ஆண்டுகள் ஆகியும், இப்போது பார்த்தாலும், இன்று படமாக்கப்பட்டது போல இந்த நடனக்காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.

"மீண்ட சொர்க்கம்" ஸ்ரீதர் டைரக்ஷனில் உருவான படம். கதை அம்சத்தில் உள்ள குறை காரணமாக, இப்படம் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், பத்மினியின் நடனங்களும், நடிப்பும் சிறப்பாக இருந்தன.

மதுரை வீரன்

எம்.ஜி.ஆருடன் பத்மினி நடித்த படங்களில் "மதுரை வீரன்" முக்கியமானது. அதில், பானுமதியும் எம்.ஜி.ஆரின் மற்றொரு ஜோடியாக இடம் பெற்றிருந்தார்.

இந்தப்படம் "சூப்பர்ஹிட்."

ராஜபக்தி

1960ல் வெளியான "ராஜபக்தி" என்ற படத்தில் சிவாஜிகணேசனுடன் பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா ஆகிய மும்மணிகள் நடித்தனர்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், சிவாஜிக்கு ஜோடி இந்த மூவரில் எவரும் அல்ல; பண்டரிபாய்தான் சிவாஜிக்கு ஜோடி! பத்மினிக்கு ஜோடி டி.எஸ்.பாலையா!

இந்திப் படங்கள்

இந்த சமயத்தில் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய "ஜிஸ்தேஷ் மே கங்கா பஹ்தி ஹை" (இந்த தேசத்தில் கங்கை ஓடுகிறது), "மேராநாம் ஜோக்கர்" ஆகிய இந்திப்படங்களில் பத்மினி நடித்தார்.

இந்தப் படங்களில் பத்மினி கவர்ச்சிகரமாக நடித்தது, ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை எழுப்பியது. "தமிழில் அற்புதமான குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் பத்மினி, இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கலாமா?" என்று பலர் கேள்வி எழுப்பினர்.

திருமண ஏற்பாடு

1961 ஏப்ரலில் பத்மினிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், மாப்பிள்ளை சினிமா உலகைச் சேர்ந்தவர் அல்ல என்றும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டன.

பத்மினியை நிருபர்கள் முற்றுகையிட்டு, கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

"எனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பது உண்மை. அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் முடிவான பிறகு, திருமணம் பற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்கிறேன்" என்று பத்மினி கூறினார்.

"திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா?" என்று கேட்டதற்கு, "நடிக்க மாட்டேன்" என்று பத்மினி பதில் அளித்தார்.


திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று பத்மினி அறிவித்து இருந்தபோதிலும், நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணத்துக்குப்பின் சில சிறந்த படங்களில் அவர் நடித்தார். "தில்லானா மோகனாம்பாள்" ஒரு திரைக்காவியமாக அமைந்தது.
திருமணத்துக்குப்பின், மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க லண்டன் செல்ல விரும்பினார், டாக்டர் ராமச்சந்திரன்.

திருமணம் நடப்பதற்கு முன்பே இதுபற்றி பத்மினியிடமும், அவர் குடும்பத்தாரிடமும் ராமச்சந்திரன் பேசியிருந்தார். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தனர்.

லண்டனில் பத்மினி

அதன்படி 1961ம் ஆண்டு பிற்பகுதியில் ராமச்சந்திரனும், பத்மினியும் லண்டன் சென்றார்கள். உயர் மருத்துவக் கல்வி பயில, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் ராமச்சந்திரன் சேர்ந்தார். இருவரும் ஒரு பங்களாவில் வசித்தனர்.
படிப்பு முடிந்ததும், ராமச்சந்திரனும், பத்மினியும் அமெரிக்காவில் குடியேறினார்கள். அங்கு நிஜெர்சி நகரில் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி தொடங்கினார்.

ஆண் குழந்தை

இதற்கிடையே, பத்மினி ராமச்சந்திரன் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையனுக்கு பிரேம் ஆனந்த் என்று பெயர் சூட்டினார்கள்.

ஒரு முறை பத்மினி தன் கணவருடன் சென்னை வந்திருந்த போது, அவர்களை பட அதிபர்கள் சந்தித்து பத்மினி மீண்டும் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

சில கேரக்டர்களை பத்மினியால்தான் சிறப்பாக நடிக்க முடியும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

பத்மினி மீண்டும் நடிப்பதற்கு ராமச்சந்திரன் சம்மதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பத்மினி தமிழ் சினிமா உலகில் மறுபிரவேசம் செய்தார்.

தில்லானா மோகனாம்பாள்

பத்மினி மீண்டும் படங்களில் நடிக்க முன்வந்ததை பட அதிபர்களும், ரசிகர்களும் வரவேற்றனர். சில அருமையான படங்களில் பத்மினி நடித்தார்.

குறிப்பாக, ஏ.பி.நாகராஜன் டைரக்ஷனில் சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் (1968) ஒரு திரைக்காவியமாக அமைந்தது. பத்மினியின் திரை உலக வாழ்க்கையில், அவருடைய மிகச்சிறந்த 10 படங்களை தேர்ந்தெடுத்தால், அதில் "தில்லானா மோகனாம்பாள்" நிச்சயம் இடம் பெறும்.

நாதசுர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜிகணேசனும், நாட்டிய தாரகை தில்லானா மோகனாம்பாளாக பத்மினியும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தனர்.

1967ல் வெளிவந்த "இருமலர்கள்" ஒரு காதல் காவியம். இதில் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.

திருலோக்சந்தர் டைரக்ஷனில், ஆரூர்தாஸ் வசனத்தில், எம்.எஸ்.விசுவ நாதன் இசையில் வெளிவந்த இப்படம், முக்கோணக் காதல் கதையை புதிய கோணத்தில் விவரித்தது.

வியட்னாம்வீடு (1970) படத்திலும், சிவாஜி பத்மினி நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.

"தேனும் பாலும்" படத்தில் சிவாஜி கணேசனுடன் பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் "சித்தி"யிலும் பத்மினியின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

"திருவருட்செல்வர்", "பேசும் தெய்வம்", "குலமா குணமா" முதலிய படங்களிலும் பத்மினி நடித்தார்.

சிவாஜியுடன் அதிக படங்கள்

தமிழ்க் கதாநாயகர்களில் சிவாஜி கணேசனுடன்தான் பத்மினி அதிக படங்களில் நடித்துள்ளார். அவர்கள் ஜோடியாக நடித்த படங்கள் 59. எம்.ஜி.ஆருடன் 12 படங்களிலும், ஜெமினிகணேசனுடன் 12 படங்களிலும் இணைந்து நடித்தார்.

எம்.ஜி.ஆர் மஞ்சுளா நடித்த "ரிக்ஷாக்காரன்" படத்தில் பத்மினி குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

இதன்பின் பத்மினி அமெரிக்கா திரும்பினார். கணவர் ராமச்சந்திரன் ஆஸ்பத்திரியை கவனித்துக்கொள்ள, பத்மினி ஒரு நாட்டியப்பள்ளி தொடங்கினார்.

நடிகை பத்மினியின் கணவர் டாக்டர் ராமச்சந்திரன், மாரடைப்பால் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 50. (பத்மினி வயது 47).
அமெரிக்காவில் உள்ள நிஜெர்சி நகரில், டாக்டர் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி (கிளினிக்) நடத்தி வந்தார்.

சொந்த வீடு

திருமணத்துக்குப்பின் பத்மினி "தில்லானா மோகனாம்பாள்", "வியட்னாம்வீடு", "இருமலர்கள்" உள்பட சில படங்களில் நடித்தபோதிலும், பின்னர் அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்றார். கணவருடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். நடனப்பள்ளி ஒன்றைத் தொடங்கி, சிறுமிகளுக்கு நடனப் பயிற்சி அளித்தார்.


பூவே பூச்சூடவா

கேரளாவின் புகழ் பெற்ற டைரக்டரான பாசில், 1985ல் "பூவே பூச்சூடவா" என்ற படத்தை தமிழில் தயாரித்தார். இதன் கதாநாயகியாக நதியா அறிமுகம் ஆனார்.

நதியாவின் பாட்டி வேடத்தில் பத்மினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று பாசில் நினைத்தார். தன் விருப்பத்தை பத்மினிக்குத் தெரிவித்தார்.

கணவர் இறந்தபின் படத்தில் நடிக்க பத்மினி விரும்பவில்லை. எனினும் குடும்ப நண்பரான பாசில் வேண்டுகோளை தட்ட முடியவில்லை. எனவே, சென்னைக்கு வந்து, "பூவே பூச்சூடவா" படத்தில் நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் அதுதான்.

"இன்னும் சில வருடங்களில் நான் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவேன். என்னுடயை எஞ்சிய காலத்தை இந்த மண்ணில் கழிப்பேன்" என்று ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தபடியே இப்போது தமிழ் நாடு திரும்புகிறார்!

நன்றி: மாலை மலர்

29 comments:

said...

ஆகா
அற்புதமான சமர்ப்பணம்.
நாட்டியப் பேரொளி பற்றி பல விஷயங்கள் அங்கங்கு கேள்வியுற்றிருந்தாலும் ஒரே இடத்தில் படித்ததால் இன்னும் பலவற்றைத் தெரிந்து கொண்டேன்.

அவருக்கு வரவேற்புகள்

said...

சிவாஜி பத்மினியை காதலித்ததாகவும் சிவாஜி வேறு சாதி என்பதால் பத்மினி மறுத்துவிட்டதாகவும் உள்ள செய்தி ?

said...

வருகைக்கு நன்றி பிரதீப் அவர்களே! உங்களோடு சேர்ந்து நானும் வரவேற்கிறேன்!

said...

ஹலோ செந்தழல் ரவி, இப்ப எதுக்குங்க அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கிசு கிசுக்களை எழுத சொல்றீங்க! ஒருத்தர் போய் சேர்ந்திட்டார். இந்தம்மா பேரன் பேத்தி எடுத்து ஊரு திரும்புறாங்க, நல்ல படியா வாழ்த்தி அனுப்புவோமே!

said...

வெளிகண்ட நாதர்,
நாட்டியத்தாரகை திருமதி.பத்மினி இராமச்சந்திரன் பற்றிய அருமையான பல தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள். இவர் தமிழ்த்திரையுலகிற்கு ஆற்றிய சேவை அளப்பரியது. கவியரசர் கண்ணதாசனின் "நலம் தானா உடலும் உள்ளமும் நலந்தானா" என்ற பாடலுக்கு நடிகர்திலகமும் , திருமதி. பத்மினியும் நடித்த நடிப்பை இன்றும் பல தடவைகள் பார்த்து மகிழ்வேன். திருமதி.பத்மினி அவர்களின் தாய்மண் நோக்கிய பயணத்திற்கு என் வாழ்த்துக்கள்.

said...

இந்தப் படங்கள் லிஸ்ட்டுலே பலதை இன்னும் பார்க்காமத் தவறவிட்டிருக்கேன்.(-:

அப்புறம் இந்த மூணுபேர் படம் ஒண்ணு நம்ம அக்கா வீட்டுலே முந்தி பார்த்த நினைவு.

said...

// சிவாஜி பத்மினியை காதலித்ததாகவும் சிவாஜி வேறு சாதி என்பதால் பத்மினி மறுத்துவிட்டதாகவும் உள்ள செய்தி ?//
செந்தழல் ரவி இது என்ன புது கதையாக இருக்கு நடிகர் திலகம் அப்படிப் பட்டவர் அல்லவே

said...

//ஹலோ செந்தழல் ரவி, இப்ப எதுக்குங்க அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கிசு கிசுக்களை எழுத சொல்றீங்க! //

இந்த ரவிக்கு சாதி பற்றி பேசுவதே வேலையாப் போச்சு.

said...

மிகவும் அருமையான, நெகிழவைக்கும் செய்திகள் அடங்கிய புதுமையான பதிவு!

நா.தி. உ. நா. பேரொளிக்கு வாழ்த்துகள்!

said...

SK அய்யா,
என்னய்யா குழப்புறீங்கள்?
தயவு செய்து நா.தி. உ. நா. என்றால் என்னவென்று விளக்கம் சொல்ல முடியுமா அய்யா? அறியாவிட்டால் தலையே வெடிச்சுவிடும் போல இருக்கு!

நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

said...

வெற்றி,
//கவியரசர் கண்ணதாசனின் "நலம் தானா உடலும் உள்ளமும் நலந்தானா" என்ற பாடலுக்கு நடிகர்திலகமும் , திருமதி. பத்மினியும் நடித்த நடிப்பை இன்றும் பல தடவைகள் பார்த்து மகிழ்வேன்.// கல்யாணத்திற்கு பிறகு நடித்து வெற்றி பெற்ற படம் இந்த 'தில்லானா மோகனாம்பாள்' என்றால் நம்பமுடிகிறதா, எவ்வளவு அழகு அப்படத்தில்!

said...

துளசி, இப்பவும் ஒன்னு கொறஞ்சு போகலியே, எல்லாம் விசிடி, இல்ல கேசட் எடுத்து பார்த்தீட்டீங்கன்னா போச்சு!

said...

சீணு,
//இந்த ரவிக்கு சாதி பற்றி பேசுவதே வேலையாப் போச்சு.// போனாப் போகுது விடுட்டுங்க!

said...

எஸ்கே, //நா.தி. உ. நா. பேரொளிக்கு வாழ்த்துகள்! // நாடு திரும்பும் உங்கள் நாட்டிய பேரொளிக்கு வாழ்த்துக்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா???

said...

வெற்றி, என்னால் முடிந்த விளக்கத்தை போன பின்னூட்டத்தில் பாருங்கள்!

said...

சார்,

ஒரு கலக்கல் பதிவு!!

நன்றி

said...

அந்தக் காலத்துல, வைஜயந்திமாலா, பத்மினி இரண்டு பேரும் திரை உலகிலும், பரத நாட்டிய் மேடைகளிலும், புகழ் பெற்றவர்களாக இருந்தனர்.

வை.மாலா இந்திய நாட்டியப் பேரொளி எனவும், பத்மினி உலக நாட்டியப் பேரொளியெனவும் அழைக்கப் பட்டனர்.

அதைத்தான் சுருக்கமாக,
"நாடு திரும்பும் உலக நாட்டியப் பேரொளி பத்மினிக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டேன்.

குழப்பம் தீர்ந்ததா?!


:))))

said...

அந்தக் காலத்துல, வைஜயந்திமாலா, பத்மினி இரண்டு பேரும் திரை உலகிலும், பரத நாட்டிய் மேடைகளிலும், புகழ் பெற்றவர்களாக இருந்தனர்.

வை.மாலா இந்திய நாட்டியப் பேரொளி எனவும், பத்மினி உலக நாட்டியப் பேரொளியெனவும் அழைக்கப் பட்டனர்.

அதைத்தான் சுருக்கமாக,
"நாடு திரும்பும் உலக நாட்டியப் பேரொளி பத்மினிக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டேன்.

குழப்பம் தீர்ந்ததா?!


:))))

said...

என் குழப்பத்தைத் தெளிவாக்கிய வெளிகண்ட நாதர், SK அய்யா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வெளிகண்ட நாதர்,
திருவருட்செல்வர் படத்தில் கவியரசர் கண்ணதாசனின் கவியாக்கத்தில் திரைஇசைத்திலகம் மகாதேவன் இசையில் வந்த "மன்னவன் வந்தானடி..." என்ற பாடல் காட்சியைப் பார்த்தீர்களா?
பரதத்தின் பல பாவங்களை(அசைவுகள்) [பாவங்கள் என்று சொல்வது சரிதானே?] முகத்திலும் உடல் அசைவுகளிலும் வெளிக்காட்டுவார். ஓர் அற்புதமான பரதக்கலைஞர், நடிகர்.

said...

//குழப்பம் தீர்ந்ததா?!//
தீர்ந்துச்சுல்ல...தீர்ந்துச்சுல்ல...தீர்ந்துச்சுல்ல...

said...

வெளிகண்ட நாதரே,
இன்னிக்கி தான் உங்க பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான காலத்தால் அழியாத பத்மினியின் வரலாறை எழுதியிருக்கிறீர்கள். நாட்டியம் என்றாலே பத்மினி என்னும் அளவிற்கு புகழ் பெற்ற நாட்டிய பேரொளி சொந்த மண்ணிற்கு திரும்புவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

உமக்கும் ஒரு நன்றி.
இனி தொடர்ந்து வருவேன்.

மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz

said...

வெ. நா, ரவி சொன்னது ஒருவகையில் சரியே. அ. முத்துலிங்கம் அவர்களின் பத்மினியின் பிரபலபேட்டி ஆனந்தவிகடனில் வந்ததே, அதில் கடைசி கேள்வி இதுதான். திண்ணையில் வெட்டாமல் முழு பேட்டியையும் போட்டிருந்தார்கள். தேடிப்பாருங்கள் கிடைக்கும்.

said...

இது கொஞ்சம் பெருசுங்களுக்காக போடப்படும் பதிவு, //
ஆகவே என் வாழ்த்துக்களும் நன்றியும் உங்களுக்கு.

said...

வெற்றி,
//பரதத்தின் பல பாவங்களை(அசைவுகள்) [பாவங்கள் என்று சொல்வது சரிதானே?]// பாவங்கள் சரியே! இந்த சிருங்காரம் - தேவதாசிகளும் பரதநாட்டியமும்! பதிவு படிச்சுப் பாருங்க, விளங்கும்!

said...

அது சரி, நீங்களே குழப்பிங்கங்க, அப்பறம் தீர்ந்துச்சுல்ல...தீர்ந்துச்சுல்ல...தீர்ந்துச்சுல்ல... பாட்டு படிங்க!

said...

வருகை தந்த துபாய் ராஜாவுக்கு நன்றிகள்!

said...

உஷா, திண்ணையில் பேட்டியை படித்தேன். சிவாஜி பத்மினி திருமண செய்தி வேண்டு மென்பவர்களுக்கு படிக்க திண்ணைச் சுட்டி!

said...

தருமி சார், இது பெருசுங்களுக்காகவே போடப்பட்ட பதிவு! உங்கள் உள்ளம் குளிர்விப்பதே அடியேனின் பாக்கியம்!

said...

அட சே என்னங்கண்ணா தப்புடப்பாவா நாடுதிரும்பும் நாட்டுப்போராளின்னு ரீட் பண்ணிட்டேண்ணா. பதிவ முழுசா முழுங்கன அப்புறம் கன்ப்யூசன் மிஞ்சிபோயி டைட்டில வாசிச்சேண்ணா. எழவுண்ணா. ஆயிரம்பேரு தெனம் வேர்க்கு முடிஞ்சி இண்டியா திரும்புராண்ணா. அத பத்தியும் ஒரு பதிவு போடுங்கண்ணா