Monday, June 05, 2006

சினிமெட்டோகிராபியும் நம் ஒளிப்பதிவாளர்களும்!

நான் போன வாரம் ஃபனா(Fanna) என்ற ஒரு ஹிந்திப்படம் பார்த்தேன். அதன் ஒளிப்பதிவை பார்த்து அதிசியத்துப்போனேன், கடந்த சில நாட்களுக்கு முன் நான் பார்த்த கிங்காங் என்ற ஆங்கிலப்படத்துக்கான ஒளிப்பதிவும், இந்த படத்திறகான ஒளிப்பதிவும் என் கண்முன்னே மாறி மாறி வந்து செல்வது போன்ற ஒரு கற்பனை. உண்மையில் பார்த்தால் நம்மவர்களின் கைவண்ணம், தொழில்நுட்பத்தை கையாளும் விதம் பிரமிக்க வைக்கிறது! இந்த ஹிந்தித் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நம்ம ஊர் கே ரவிசந்திரன் தான்! இவரை பற்றி தெரியாதவர்களுக்கு, இவரின் சமீபத்திய ஹிந்திப்படங்கள் மிகவும் பிரசித்திப் பெற்றவை! இவர் ஒளிப்பதிவு செய்து வந்த ஹிந்திப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். அமிதாப் பச்சனும், கண் தெரியாமல் நடித்த ராணி முகர்ஜியும் நடித்து வந்த பிளாக் (Black) எத்தனைப்பேர் பார்த்தீர்களோ எனக்குத் தெரியாது, அதே போல் அவர் ராணி முகர்ஜியை மிகவும் அழகாக எடுத்த 'பெஹெலி' என்ற படமும், அப்படியே கண்ணில் ஒத்திக் கொள்ளலாம்!

இவர் நம்மூரில் வந்த நம் மணியின் 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஆய்த எழுத்து' மற்றும் ஷங்கரின் பாய்ஸ் படத்திற்கும் ஒளிப்பதிவாளாராக பணியாற்றி உள்ளார். இன்றைக்கு மிகபிரபலபாமாக இருக்கும் அனைத்தும் முன்னனி நடிகைகளும், முக்கியமாக ராணி முகர்ஜியும், ப்ரீத்தி ஜிந்தாவும் இவர் தன்னை படம்பிடித்தால் தான் தாங்கள் திரையில் அழகாக இருக்கிறோம் எனக் கூறுகின்றனர்! அப்படி என்ன படம் பிடித்துவிட்டார் என கேட்பவர்களுக்கு, நாம் இத்தனை சினிமா பார்க்கிறோம், ஆனால் அத்தனை படங்களுக் கண்ணுக்கு குளிமையாக இதமாகவும், காதல் காட்சிகளை இரசம் சொட்ட படம் பிடித்து காண்பிக்கும் இந்த கலையானது ஆங்கிலத்தில் சினிமெட்டோகிராபி என்றழைக்கப்படும் இத்தொழில் நுட்பம் பற்றி எத்தனைப் பேருக்கு தெரியும்? அதைத் தான் என்னெவென்று கொஞ்சம் உள்ளே போய் பார்ப்போமா?

இந்த சினிமெட்டோகிராபி என்னும் ஒளிப்பதிவு செய்யும் தொழில் நுட்பம் நமக்கு என்னவென்று அரசல் புரசலாக புரிய வைத்தது பாலு மகேந்திராவும், அசோக்குமாரும் தான்! அதற்கு முன் நிறைய கேமிரா மேதைகள் தமிழ் சினிமாவில் இருந்துள்ளனர். ஏன், நம் கேமிரா மேதை கர்ணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த காலத்தில் நான் சின்னப்பிள்ளையாக இருந்த பொழுது வந்த சில ஜேம்ஸ்பாண்டு படங்களை இயக்கி ஒளிப்பதிவு செய்தவர் தான் இவர். அந்த காலத்தில வந்த, கங்கா, கெளபாய் குள்ளன், நான்கு சுவர்கள் போன்ற படங்கள் புகழ் பெற்றவை. இவரது கேமிரா கோணங்களும், அதிரடி சண்டைக்காட்சிகளும், குதிரை விரட்டு, துப்பாக்கி சண்டை போன்ற காட்சிகளின் கோணங்கள், அந்த கால ஹாலிவுட் படங்களுக்கு இணையாகப் பேசப்படுவதுண்டு! அப்படியே கொஞ்சம் செக்ஸ் காட்சிகளும் தூக்கலாக இருக்கும். அப்படி வந்த படம் ஒன்று 'எங்கப்பாட்டன் சொத்து' அதில் நடித்த நடிகை ராஜ்மல்லிகா, இப்பொழுது நடிக்கும் நடிகை மீனாவின் தாயார்! ஆற்றில் குளித்த காட்சிகள் மிகப்பிரபலம், அதற்காகவே இப்படங்கள் எல்லாம் நூறு நாட்கள் ஓடியவை!

ஆனால், கேமிரா, படப்பிடிப்பு என்பதை மூக்கில் கைவைத்துக்கொண்டு பார்க்க துவங்கியது, பாலுமகேந்திராவின் படங்கள் வந்தப்பிறகு தான்! அவர் அதிகமாக எடுத்து காண்பித்த ஊட்டியை நீங்கள் நேரில் போய் பார்த்தாலும் அவ்வளவு அழகாக இருக்காது! அந்தக் கால அழியாதக் கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, முள்ளும் மலரும் மற்றும் அசோக்குமாரின் உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக்கிள்ளாதே போன்ற படங்களில் வந்த ஊட்டியை தேடிபிடிக்க நான் பல நாள் ஊட்டி சென்றதுண்டு. அதுவும் கருத்த மேகங்களும், மலைச்சாரல்களும், வானவில் பிம்பங்களும், நீர் நிலை ஏரி, தோப்பு துரவுகள் என கண்ணைப்பறிக்கும் காட்சிகளை ரசித்ததுண்டு. ஆனால் இந்த அத்தனையும் தொழில்நுட்பமும், ஒளிப்பதிவாளரின் உழைப்பும் எவ்வளவு என்பதை என்றாவது அறிய முற்பட்டிருக்கீற்களா?

இந்த சினிமெட்டோகிராபி என்பது கேமிராவினுள் சினிமாவிற்காக பிம்பத்தை சரியான ஒளிக் கலவையில் பதிவு செய்யும் தொழில்நுட்பம்! அது நிழல் படங்களாக இருந்தாலும் சரி இல்லை ஓடும் படங்களாக இருந்தாலும் சரி! அதை சரியாக சொல்ல வேண்டுமென்றால், படைப்பாளிகள் தங்களின் கலை நுணுக்கத்தையும், தொடரும் நிகழ்ச்சிகளையும் அழகுப்பட பதிவு செய்வதே சினிமெட்டோகிராபி ஆகும்! இதன் ஆரம்பம் ஃபிலிம் என்ற படச்சுருள் தான், சரியான படச்சுருளை தேர்வு செய்வதிலிருந்து ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரின் வேலை ஆரம்பமாகிறது. இந்த படச்சுருள்களின் அளவு 8மிமீ, 16மிமீ, 35மிமீ, 65மிமீ என பல உண்டு. அதில் பெரும்பாலும் உபயோகப்படுவது 35மிமீ படச்சுருள்கள் தான்! பிறகு ஒளியின் வேகம் இரண்டாவது அளவு, அதாவது ஒளி எந்த வேகத்திலே அந்த படச்சுருளில் இரசாயாண மாற்றத்தை உண்டு பண்ணுகிறதோ அதை கொண்டு படப்பதிவு செய்வதே! அதன் அளவு ISO 50(மிக கம்மியான ஒளியின் வேகம்) லிருந்து 800(மிக அதிவேக ஒளிப்பதிவு) வரை உண்டு! அடுத்து வண்ணக்கலவையின் வெளிப்பாடு, நிறங்களின் பதிமம்! இது குறைந்த அளவிலும், அதிக அளவிலும் (Low Staturation, High Staturation), மற்றும் வண்ண ஏற்ற இறக்க வேறுபாடு (Contrast)களின் செயல்பாடு! இது படச்சுருளை ஒளியின் அளவை புகுத்தி பதிவாக்குது, அதாவது எக்ஸ்போஸர் என்றழைப்பது, அதிகம் திறந்தால் வெள்ளை, இழுத்து மூடி, ஒளி இல்லையேல் கறுப்பு, இது தான் இதன் சூட்சமம்! முதலில் இந்த ஃபிலிம் ரோல் ஸ்டாக் என்பதை தேர்வு செய்வதே மிக முக்கியமான வேலை. ஆனால் நான் கூறிய அனைத்தும், இந்த டிஜிட்டல் சினிமாவில் கேமிராவின் கைவண்ணம் தான், வேறொன்றுமில்லை, ஆனால் படச்சுருள் கொண்டு செய்யப்படும் ஒளிப்பதிவில், இவை அத்தனையும் ரசயானமாற்றத்தில் ஒளி ஊடுறுகையால் சரியாக நிகழவேண்டும், அதற்கு முக்கியமாக அதை கையாண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர் சினிமெட்டோகிராபர் என்கிற ஒளிப்பதிவாளரே!

இதற்கடுத்தது, இதை லேபில் செய்யப்படும் ஃபிலிம் ப்ராஸசிங் என்ற வேலை, சரியான மிதமான தட்பவெப்ப நிலையிலே, பதிவு செய்யப்பட்ட படச்சுருளை இரசாயணத் திரவங்களில் முக்கி அதன் இரசயாண மாற்றங்களை கவனமாக கண்காணித்து நெகட்டிவ் என்ற பதிவான பிம்பச் சுருளை டெவெலெப் செய்து உருவாக்குவதே, இதிலும் சினிமெட்டோகிராபரின் கைவண்னம் நிறைய உண்டு!

அடுத்து ஃபில்ட்டர்கள் என்றழைக்கப்படும் வண்ணத்தடுப்புகளை அளவாக உபயோகித்து எடுக்கப்படும் காட்சிகள். இது போன்ற காட்சிகள் பல அந்த காலத்தில் பார்த்து 'பில்டர் போட்டு எடுத்துருக்காண்டா' என்று சிலாகித்த நேரங்கள் நிறைய உண்டு! பாலுமகேந்திராவின் அக்காலப்படங்களை இது போன்ற வண்ண தனிமங்கள் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் நிறைய பார்த்திருப்போம். விடியங்காலையில் நடக்கும் நிகழ்சிகளையோ, இருண்ட மேகத்துடன் பனி விழும் மழை காட்சிகள் என இப்படி நிறைய. சில நல்ல வெயில் நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தில் ஒரு விதமான மூடு வர வேண்டுமென இது போன்ற பில்டர்கள் போட்டு எடுப்பதுண்டு. சில ராத்திரி நேரக்காட்சிகள், 'நிலாக்காயுது, நேரம் நல்ல நேரம்' போன்ற கயித்து கட்டில் காட்சிகள் எடுக்க இந்த ஃபில்டர்களின் உத்தி ரொம்ப பிரசித்தம்!

அடுத்து லென்ஸ் எனப்படுபவை ஒளிப்பதிவாளருக்கு முக்கியம். எப்படி பட்ட தூரக்காட்சிகளோ, இல்லை அருகில் நடக்கும் காட்சிகளை பிடிக்க சரியான் லென்ஸ்களை உப்யோகிப்பது! இந்த கேமிரா என்பது நம் கண் என்ன செய்யுமோ அதை செய்யும்! தூரத்தில் உள்ள பொருட்களையும் அருகில் உள்ள பொருட்களையும் எவ்வாறு அளவாக பார்க்கமுடிகிறதோ அதை இந்த கேமிராக்களும் செய்து படப்பதிவு செய்யும். ஆனால் இந்த தன்மையை நமது ஒளிப்பதிவாளர்கள் மாற்றலாம். அதற்காக அவர்கள் உபயோகப்படுத்தும் லென்ஸ்கள், டெலிபோட்டோ லென்ஸ், நார்மல் லென்ஸ், மற்றும் வைட் ஆங்கிள் லென்ஸ், Zoom லென்ஸ் என பல வகைகள் உள்ளன! இவை அனைத்தும் ஒளிக்கதிர்களை குவியவைக்கும் அளவை மாற்றக்கூடியவை. இந்த ஒளிகுவியும் தூரத்தை ஆங்கிலத்தில் 'focula length' என்பார்கள். நார்மல் லென்ஸ் என்பது உதாரணமாக கேமிராவுக்குள் எடுக்கப்படும் பிம்பத்தின் அளவு என்ன தெரிகிறதோ, அதே தான் படமாக வெளிவரும், ஆனால் டெலிபோட்டோ லென்ஸ் என்பது அந்த குவியும் தூரத்தை ('focula length') அதிகபடுத்தவது, அதனால் மிக தூரத்தில் உள்ள பொருட்களும் சிறப்பாக பதிவாகும், ஆனால் வைட் ஆங்கிள் லென்ஸில் இந்த குவியும் தூரம் மிகக்குறைவாக இருக்கும். ஆக இதை கொண்டு படம் எடுக்கும் அளவு, காட்சி அமைப்பு போன்றவற்றிற்கு தகுந்தால் போல் மாற்றி எடுக்க ஏதுவாக இருக்கும்! சிலசமயம் கதாநாயகி கீழிருந்து மேலே காண்பிக்கவும், கன்ஃபைட் காஞ்சனா போல காலை தூக்கி சண்டை போடும் காட்சிகளையும் இந்த வைட் ஆங்கிள் கேமிராவில் எடுத்து ரசிகர்களை உச்சத்துக்கும் கொண்டு செல்வார்கள்!

சில சமயம் தூரத்தில் உள்ளவர்களை பளிச்சென்றும், அருகில் உள்ளவர்களை மங்கியும், அதே போல் அருகில் உள்ளவர்களை பளிச்சென்றும் தூரத்தில் உள்ளவர்களை மங்கியும் உணர்ச்சியுடன் கூடிய வசனங்களை ஒளிப்பதிவு செய்த காட்சிகளை நீங்கள் நிறைய சினிமாவில் பார்த்திருக்கலாம். இந்த வித்தையை ஆங்கிலத்தில் 'Depth of field and focus' என்பார்கள். இதன் மூலம் background, mid-ground and foreground என்பது எவ்வளவு அளவாக போக்கஸ் செய்யவேண்டும் என்கிற வித்தை தான்! அதாவது கேமிராவின் கண்திறப்பை (iris aperture) குறுக்கி அதிக தூரத்தில் உள்ளப் பொருளை போக்கஸ் செய்வது 'டீப் போக்கஸ்'(Deep focus)என்பது, அதையே கேமிராவின் கண்ணை பெரிதாக திறந்து அருகில் உள்ள பொரூளை போக்கஸ் செய்வது 'ஷேலோ போக்கஸ்'(Shallow focus) இந்த வித்தை வைத்து அமைக்கப்பட்ட காட்சிகள் பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களில் நீங்கள் அதிகம் பார்க்கலாம். இப்பொழுது எடுக்கப்படும் இந்த 'ஷேலோ போக்கஸ்' பட்ங்களுக்கு ஆரம்பமே அந்த கால நிவாஸ் எடுத்த காட்சிகள் தான்! ( இந்த பொம்மை போட்டாவை பாருங்கள், மேலே உள்ளது 'Shallow focus', கீழே உள்ளது 'Deep focus')

அடுத்து முக்கியமான ஒன்னு ஆஸ்பெக்ட் ரேஸ்யு ('Aspect Ratio') என்பது. இதை வச்சுதான் சினிமாஸ்கோப்பு, 70MM எல்லாம் வருவது. பொதுவாக ஒரு படம் என்றால் அதன் அகல உயரத்திற்குண்டான அளவு தான் ஆஸ்பெக்ட் ரேஸ்யு என்பது. டெலிவிஷனில் தெரிவது 1.33:1, அதுவே இப்பொழுது வரும் சினிமாவிற்கான அளவு 1.85:1, ஆனால் பழைய 35MM படங்களுக்கு உண்டான அளவு 1.37:1 தான்! பிறகு வந்த ராஜாராஜ சோழன் படம் சினிமாஸ்கோப்பு படம், அதன் அளவு 2.66:1, அதாவது முதலில் வந்த அகலத்தை இரண்டுமடங்காக்கி காண்பிப்பது. ஆனால் தொழில்நுட்பம் வளர வளர, இந்த அகல உயர விகிதாச்சாரம் மாறி இப்பொழுது 1.85:1ல் வந்து நிற்கிறது இதெற்கென தனியாக உள்ள 'anamorphic lens' களை உபயோகித்து வைட் ஸ்கிரீன் படங்களின் உயரத்தை அதிகபடுத்தி காட்டலாம்

அடுத்து லைட்டிங் என்பது, இதை சரியான முறையிலே அமைத்து காட்சிகளை எடுப்பது மிகவும் முக்கியம். இந்த லைட்டிங் சரியாக செட் ஆகாமல் மூட் அவ்ட் ஆகி படம் பிடிக்காமல் பேக்கப் என்ற அதிக தடவை பாலு மகேந்திரா கூறியதாக நிறைய கதைகள் படித்ததுண்டு. ஆனால் அது உண்மையே! மிகவும் விஷவாலாக காட்சிகளை சொல்ல, வசனங்களின்றி, இந்த லைட்டிங் முக்கியம். நமது மகேந்திரனின் படங்களுக்கு மிகவும் கைகொடுத்தவர் அசோக் குமார். அதே போல பாராதிராஜாவுக்கு, நிவாஸ்ஸும், கண்ணனும் நல்ல ஒளிப்பதிவை செய்து அருமையான விஷவல்களை அவர்கள் படங்களில் அள்ளிக் கொடுத்தனர்! மேற்கொண்டு மணிரத்தினத்தின் இருட்டு படங்களை சில சமயம் பார்க்கும் போது நம்மை ஏதோ செய்ய வைத்ததும் உண்மை, ஆக ஒரு படத்தின் ஒளிப்பதிவின் வெற்றி லைட்டிங், பேக்ரவுண்டு போன்றவற்றின் தன்மைகளே!

அடுத்தது கேமிரா மூவ்மெண்ட் என்பது, அதாவது படம் பார்க்கும் நாம் எந்த வகையிலிருந்து காட்சிகளை பார்க்க வேண்டும் என்பதை நகர்த்தி படம் பிடிப்பதே! நீங்களும் நிறையப்பேர் டிராலி ஷாட், கிரேன் ஷாட் என்றெல்லாம் கேள்விபட்டிருப்பீர்கள், அனைத்தும் இந்த கேமிரா நகர்வுகளே! பெரும்பாலான இயக்குனர்கள், கதை சொல்லுபவர்கள், கேமிரா வழியே கதை சொல்வதையும் பார்த்திருப்பீர்கள் சில சமயம் படங்களில், கற்பனைக்கு
"சார் காலையில பீச்சிலே ஓடி வரா சார் கதாநாயகி, அலை கரையில புரண்டு வர்றதை ஒரு லாங்ஷாட்ல எடுக்கிறோம், பிறகு கீழ்வானத்திலே இருந்து வர சூரியனை ஒரு குளோஸ் போக்கஸ் சார் அப்புறம் கதாநாயகி அப்படி தலையை சிலுப்பி ஓட ஆரம்பிக்கிறதை ஒரு கிரேன் ஷாட்ல காமிச்சு, குளோஸப்பல சூம் பண்ணி, இதான் சார் ஓப்பினிங்"

இந்த மாதிரி காட்சிகளை கேமிரா மூவ்மெண்ட்ல எந்தெந்த வகையிலே எடுக்க முடியுமோ அப்படியெல்லாம் நகர்த்தி எடுப்பது! எல்லாமே கொஞ்சம் உத்து கவனிச்சீங்கன்னா, நம்ம தலையை திருப்பி பார்த்தா எப்படி உருவங்கள் நகருமோ, அதே மாதிரி நகர்வுகள், மேலே இருந்து, கீழே ரயிலிங்ல அப்படி சுத்தி வந்து பிடிக்கிறது, இப்படி எத்தனையோ அசைவுகள் மூலமா படம் பிடிக்கிறது!

அதே மாதிரி கேமராவை கையிலே தூக்கிக்கிட்டு, தோள்ல கட்டிக்கிட்டு, சைக்கிள்ல வச்சிக்கிட்டு ஓடிவரும் காட்சிகள் அப்படின்னு ஒளிப்பதிவாளர் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை! அப்படி படம் எடுக்கிற சிறந்த ஒளிப்பதிவாளர்கள் எல்லாம் நம்ம தமிழ் படவுலகிலருந்து போய் ஹிந்தி பட உலகிலே பேரு வாங்கினவங்க, திரு, ராஜிவ் மேனேன், பிசி ஸ்ரீராம், கேவி ஆனந்த், சந்தோஷ் சிவம் அப்படின்னு நிறைய பேரை சொல்லிக்கிட்டே போகலாம்!

இதென்னிலே ஸ்பெஷல் எபெக்ட்ஸ்ன்னுட்டு கேமிராவிலேயே பண்றது அது தனி, அதை 'In-camera effect'ன்னு சொல்வாங்க! அப்புறம் வெளிச்சத்திலே வித்தை, பிறகு இருக்கவே இருக்கு கிராபிக்ஸ், டிஜிட்டல் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் இது எல்லாம்! இதை பத்தி சொல்லுனும்னா நான் ஒரு தனி பதிவு போட்டாகணும்!

ஆக இதையெல்லாம் இயக்கி, படங்களின் பிம்பத்தின் அத்தனை தன்மைகளை, லைட்டிங், லென்ஸ், வண்ணக்கலவை, எக்ஸ்போஸர், பில்டர், பிலிம் செலக்ஷன் என்று அனத்தையும் கையாண்டு அழகான படங்களை உருவாக்கி கொடுக்கிறவங்க தான் இந்த ஒளிப்பதிவாளர்கள். அவர்கள் கையாளும் இந்த தொழில்நுட்பமே இந்த சினிமெட்டோகிராபி. அதில் நம்மவர்களின் வல்லமை இந்த வளர்ந்த நாடுகளின் தயாரிக்கும் படங்களுக்கு சமமாக இருப்பதில் மகிழ்ச்சியே. ஆனால், நமக்கு பின்னால் தொழில் கற்ற இந்த ஹாங்காங்கிலிருந்து வரும் ஜாக்கி சான் போன்றோர்கள் இப்பொழுது இந்த ஹாலிவுட்டை ஆளும் பொழுது, நம்மவரின் திறமை எப்பொழுது இங்கே ஆளுமை செய்யபோகிறது?

34 comments:

said...

நல்லா சொல்லியிருக்கீங்க, படிக்க நல்லாயிருந்தது.

said...

நல்லா சொல்லியிருக்கீங்க, படிக்க நல்லாயிருந்தது.

said...

சூப்பர்ர்ர்ர்ர்ர்....

said...

ஆமாங்க. டெக்கினிக்கல் சைடுலே பார்த்தீங்கன்னா உலகத்தரம் நமக்கு இருக்கு.

ஆனா, தேவையில்லாம நடிகர், நடிகைகளைத் தலையிலே தூக்கிவச்சுக்கிட்டு அழிஞ்சுபோகுதுங்க சினிமா உலகம்.

நல்ல பதிவுங்க. பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

said...

வருகைக்கு நன்றி நெல்லை சிவா!

said...

பிரகாஷ், உங்க சப்ஜெக்ட் எப்படி சூப்பரா இல்லாம இருக்கும்!

said...

ஆமாம் துளசி, நீங்க இந்த ஒற்றுமையை பார்க்கலாம். நான் ஆரம்பத்திலே சொன்ன அந்தி ஹிந்திபடத்தையும், கிங்காங் இங்கிலீஷ் படத்தையும் இதுக்காக இன்னொரு தடவை பாருங்க, புரியும் உங்களுக்கு!

said...

அருமை ஐயா அருமை !!!
நல்லா எழுதி இருக்கீங்க...

said...

புதுப்பேட்டையில அரவிந்த்கிருஷ்ணா'வோட angle எல்லாம் கவனிச்சீங்களா..

சில இடங்கள் ரொம்பவும் சூப்பர்..

said...

எக்கச்சக்க தகவல்களை எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள், நன்றி!

said...

ஃபனா சீக்கிரம் பார்க்கணும்ன்னு துடிப்பா இருக்கு. அடிக்கடி ஒளிப்பதிவு, புகைப்படங்கள் பற்றிய பதிவுகள் போடுங்க.

said...

வருகைக்கு நன்றி பரணீ!

said...

சார்,

மீன்டும் ஒரு அருமையான பதிவு!!

படித்து தெரிந்துகொள்ள விசயம் உள்ள ஒரு பதிவு.

மிக்க நன்றி!!

said...

//இந்த ஹாங்காங்கிலிருந்து வரும் ஜாக்கி சான் போன்றோர்கள் இப்பொழுது இந்த ஹாலிவுட்டை ஆளும் பொழுது, நம்மவரின் திறமை எப்பொழுது இங்கே ஆளுமை செய்யபோகிறது?//

ஏன் அங்கே போனால்தான் வெற்றியா? நமக்கு ஏன் இந்த ஹாலிவுட், ஆஸ்கார் என்ற ஒரு பெரும் பித்து? புரியவில்லை.

said...

'கடுகு'ப் பதிவில் எக்கச்சக்க 'காரம்'!

பழைய நாடக, சினிமா தொடர்புகளால் கிடைத்த அனுபவமா இவைகள். அந்த 'உலகத்துக்கு' ரொம்ப ரெடியா உங்களையே ஆக்கிக் கொண்டிருந்தீர்களோ?

ஆனாலும் ரொம்ப மோசங்க நீங்க...கர்ணன் படம் எல்லாம் சொல்லிட்டு ஜம்புவை விட்டுட்டால் எப்படி? :-)

said...

அருமையான பதிவு.நிறைய தொழில்நுட்ப விடயங்களை இலகுவாக எழுதியுள்ளீர்கள்.
நன்றி!

said...

புதுப்பேட்டை படம் இன்னும் பார்க்கலையே ராசா!

said...

வருகைக்கு மிக்க நன்றி சுதர்சன் அவர்களே!

said...

ஃபனா படம் போய் பாருங்க கேவிஆர், அப்படியே கண்ணுல ஒத்திக்களாம்! கிடைச்ச மட்டும் இந்த புகைப்படங்கள் பதிவும் போடுறேன்!

said...

ஸ்ரீநிதி, நீங்க சொன்ன அத்தனை ஒளிப்பதிவாளர்களும் அந்த காலக் கட்டத்திலே ரொம்ப புகழ் பெற்றவங்க. அதிலேயும் பாலசந்தரோட ஆஸ்தான கேமிராமேன் பி எஸ் லோகநாத் எடுத்த அத்தனை கருப்பு வெள்ளை படங்கள்லயும் கேமிரா கோணங்கள் பிரமிக்க வைக்கும், ஏன் வெளிப்புற காட்சிகள் அருமையா இருக்கும். ஆனா விஷவல் டேஸ்ட் என்னமோ கொண்டு கொண்டு வந்தது பாலு மகெந்திராவும் அசோக்குமாரும் தான்! அதே மாதிரி நம்ம ஊரு மூர்த்தி, ஹிந்தி சினிமாவிலே அந்த காலத்திலே ஆட்சி செஞ்சது எனக்கு அந்த கல்லூரி நாள் காலகட்டங்களேயே தெரியும். அவர்களுக்காக வேணும்னா இன்னெரு பதிவே போடுறேன் போதுமா!

said...

வழக்கம் போல தவறாம வந்துட்டீங்க சிவாபாலன், நன்றி!

said...

//ஏன் அங்கே போனால்தான் வெற்றியா? நமக்கு ஏன் இந்த ஹாலிவுட், ஆஸ்கார் என்ற ஒரு பெரும் பித்து? புரியவில்லை.//
அய்யா கொத்தனாரே! பித்து இல்லையா! அது ஒரு பென்ச் மார்க்! அவ்வளவே! தொழில்நுட்ப வளர்ச்சியாலே அதை கையாண்டு பிரமிப்பூட்டுறவங்க இந்த ஹாலிவுட் காரங்க, அப்படி அவங்க கொண்டு வந்த, கையாண்ட நுட்பத்தை நம்மலும் அசராமா கையாண்டு நிகரா நிக்கறோமில்ல, அதுக்கு தான் இந்த பெஞ் மார்க்கிங்! அதுவுமில்லாம, வெறும் மனதிருப்திக்கில்லையா, ஹாலிவுட்டை புடிச்சா, உலகையே புடிச்சமாதிரி, பிஸனஸ் ஆங்கில்ல பாருங்க! இந்த மோஸன் பிக்சர்ஸ்ல தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் இங்கே தான் இருக்கு! என்னதான் கமலஹாசன் இந்த பழம் புளிக்கும்னு சொன்னாலும், தொழில்நுட்பம் தேடி இங்கே தான் வருகிறார்! நம்ம திறமைக்கு உலக அங்கீகாரத்துக்கு ஒரு சொட்டு, இவெங்களோட மோதுறது! அதைத்தான் ஜாக்கிசான் மாதிரி ஆளுங்க இவெங்களை குரோச்சிங் டைகர்னு பயமுறுத்தறப்பை, நம்மலும் ஏதாவது செஞ்சு முன்ன வரக்கூடாதாங்கிற ஆதங்கம் தான், பித்துன்னா, இவனோட சரிக்கு சமமா நான் புத்திசாலின்னு சொல்லி சாப்ட்வேர் எழுத எதுக்கு கழுதை ஏழுகடல் தாண்டி வரணும், வேட்டியை மடிச்சிக்கட்டி, முந்திரி தோட்டத்திலேயே சுத்த வேண்டியதுதானே!

said...

தருமி, பழைய அனுபவம் தான்!

ஓ, ஆமா கர்ணன் படத்திலே ஜம்புவை விட்டுட்டேன், அதே மாதிரி ஜக்கம்மான்னு ஒரு படம் வந்ததுன்னு நினைக்கிறேன். அப்புறம், இந்த பொம்பளை ஜேம்ஸ்பாண்டு படங்கள், கன்ஃபைட் காஞ்சனா, ரிவால்வார் ரீட்டா, சாட்டை ராணி, இதெல்லாம் அந்த காலத்திலே பார்த்ததுண்டா? ஏன் கேட்கிறேன்னா, கர்ணன் பட நாயகி ராஜ்கோகிலா மாதிரி ஆளுங்க நடிச்ச படங்கள் இது எல்லாம் தெலுங்கு, கன்னடம் இறக்குமதி!

said...

மலைநாடான், மஞ்சுளா, வருகைக்கு நன்றி!

said...

உங்கள் பதிவுகள் பல பயனாக இருக்கிறன.

said...

Good post. i could learn the techniques. Ramki, thanks for forwarding the link

said...

சினிமாவை ரசிக்க மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவெண்டும் என்று ஒரு முறை பாலுமஹேந்திரா சொன்னது, நீங்கள் இங்கே சொன்னவற்றையெல்லாம்(technical aspects)வைத்துத் தான் என்பது அப்போது யாருக்கும் புரியாமல் போய்விட்டது...

பி.கு: color renditionக்கு polarizer filterம் + Neutral Density filterம் உபயோகப் படுத்தப்படும்

அருமையான பதிவு.

said...

நீங்க பிலிம் இன்ஸ்டிட்யூட் ஸ்டூடண்டா? இவ்வளவு விவரமா எழுதியிருக்கீங்களே!

said...

//இவனோட சரிக்கு சமமா நான் புத்திசாலின்னு சொல்லி சாப்ட்வேர் எழுத எதுக்கு கழுதை ஏழுகடல் தாண்டி வரணும், வேட்டியை மடிச்சிக்கட்டி, முந்திரி தோட்டத்திலேயே சுத்த வேண்டியதுதானே!//

வெ.க.நாதரே,

ரொம்ப கோவமாயிட்டீங்க போல இருக்கு. எனக்கு சம்பளம் குடுக்கறான் இங்க வந்தேன். நான் இங்க வந்துதான் புத்திசாலின்னு நிரூபணம் பண்ணனுமா என்ன? இந்த வேலை பிடிக்காம போச்சுனா அடுத்தது வேணா ஒரு முந்திரித் தோட்ட குத்தகை எடுத்துப் பார்க்கறேன். அந்த விஷய ஞானம் கிடையாது. தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்க ஒரு பார்ட்னர்ஷிப் போடலாம். :)

நான் கேட்டதுக்கும் நீங்க கோவமா பண்ணற கம்பேரிசனுக்கும் சம்பந்தம் இல்லையே. இங்க என்னை மாதிரி சாப்ட்வேர் எழுத ஆளில்லை. அதிக சம்பளம் குடுத்து வான்னு கூப்பிடறான். அந்த மாதிரி சினிமா துறை கலைஞர்களை கூப்பிட்டா நல்லதுதான். அதுக்காக அவன் கூப்பிடாம இருந்தா நமக்கு திறமை இல்லையேன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை வேண்டாமேன்னு சொன்னேன்.

நீங்கள் சொல்லும் பிஸினஸ் லாஜிக், தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் ஒத்துக்கறேன். ஆனா இவன் கூப்பிடலை நமக்கு ஆஸ்கர் விருது கிடைக்கலைன்னு ரொம்ப ஆதங்கப்படறதுதான் ஏன்னு புரியலை. ஆஸ்கர் கிடைக்கலைனாலும் ஒரு நாயகன், ஒரு கன்னத்தில் முத்தமிட்டால், ஒரு அன்பே சிவம் இதெல்லாம் நல்ல படம்தான். நாம இந்த மாதிரி முயற்சிகளுக்கு எப்படி வரவேற்பு குடுக்கறோம்ன்னு பாருங்க. அதான் நான் சொல்ல வந்தது.

இந்த பதிவின் ஒட்டத்தை மாத்த விரும்பலை. வேணும்னா இதுக்கு ஒரு தனிப்பதிவு போட்டு பேசலாம். ஓக்கேவா?

said...

வருகைக்கு நன்றி பெயரிலி!

said...

பாலமுருகனுக்கும் அவருக்கு லிங்க் கொடுத்த ராம்கிக்கும் நன்றி

said...

காஞ்சி பிலிம்ஸ், உங்க பில்டர் டிப்ஸ்க்கு நன்றி! உங்களுக்கு விஷயம் தெரிஞ்சா, இந்த லைட்டிங் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்!

said...

//நீங்க பிலிம் இன்ஸ்டிட்யூட் ஸ்டூடண்டா?// தாணு, ஒரு காலத்திலே அங்க சேர்ந்து படிக்கணும்னு ரொம்ப ஆசை! அப்ப இந்த மாதிரி டெக்னிக்னிகல் ஃபீல்ட் ஆர்வம் இல்லாம, நடிப்புக்காக சேரணும்னு நினைச்சேன், ஆனா இஞ்சினியர்ங்கிற கெளரவம் தடுத்திடுச்சி! வேறே ஓன்னுமில்லை, இது எல்லாம் இப்ப கேள்வி ஞானம் தான்! ஆனா இந்த சினிமா எடுக்கும் முறைகளை ஆர்வமா அந்த காலத்திலே ஆராஞ்சதுண்டு!

said...

கொத்தனாரே, கோபம் எதுவுமில்லை! ஆனா நீங்க எல்லாரும் சம்பளம், பணம் கொடுக்கிறான்னு வந்தேன்னு சொல்லி காமிக்கிறது பேஷனா போச்சு, பணம் சம்பாரிக்க நம்ம ஊர்லயே ஆயிரம் வழி இருக்கு, இருந்தாலும் திரைகடல் ஓடி திரவியம் தேட வந்தாலும், புத்திசாலின்னு நம்மல காமிச்சிக்க தோணும். அப்படி புத்திசாலித்தனம் இல்லேன்னா, இந்த ஊர்ல குப்பையும் கொட்ட முடியாது! சரி பெருசா ஒன்னும் செய்யலை நான், எல்லோரையும் மாதிரி கோடு தான் எழுதுறேன்னு சொன்னாலும் உங்களுக்குள்ள ஏதாச்சும் திறமை, புத்திசாலித்தனம் மறைஞ்சிருக்கும், அதை மறந்திருந்தாதீங்க!

அப்புறம் முயற்சிங்கிறதை எப்பவும் விடக்கூடாது, என்ன ஆஸ்கர் அப்படின்னு போய்ட்டா அதிலே என்ன இருக்கு, சேலஞ்ச்ன்னு எடுத்துக்கிட்டு செஞ்சு முட்டி மோதி வரணும்!

//ஆஸ்கர் கிடைக்கலைனாலும் ஒரு நாயகன், ஒரு கன்னத்தில் முத்தமிட்டால், ஒரு அன்பே சிவம் இதெல்லாம் நல்ல படம்தான். நாம இந்த மாதிரி முயற்சிகளுக்கு எப்படி வரவேற்பு குடுக்கறோம்ன்னு பாருங்க.// இதெக்கெல்லாம் வரவேற்பு நம்ம கொடுக்காம இல்லை, அதே நேரத்திலே, காம்ப்லெஷண்ட் ஒன்னு வந்து நம்மலை ஆளுமை செய்யக்கூடாது!

'முயற்சி திருவினையாக்கும்' நம்ம பெரியவங்க எதுக்கு சொல்லிட்டு போனாங்க!