என்ன ராஜா ராணி கதை சொல்லப்போறேன்னு நினக்கிறீங்களா? ஒருவிதத்திலே அவங்க ராஜா ராணி தான்! அதாவது ஆங்கிலத்திலே சட்டத்திக்கு புறம்பா செயல் படுபவர்களை 'outlaw persons'ன்னு சொல்வாங்க, இன்னும் ரொம்ப கலோக்கியலா போயி 'Bandit'ம்பாங்க! அப்படி பட்ட 'Bandit Queen', 'Bandit King' தான் இவங்க! ராஜாவானவரு நம்ம தெக்காலே சத்தியமங்கலம் காட்டிலே ஆட்சி புரிஞ்சவரு, ராணியம்மா வடக்காலே, சம்பல் நதிக்கு பக்கத்திலே மத்திய பிரதேசத்துக்கும் உத்திரப்பிரதேசத்துக்கும் இடையே உள்ள பகுதிகளில் வாழ்ந்து ஆட்சி புரிஞ்சி, கடைசியிலே டெல்லி போய் பார்லிமெண்ட்லேயும் எம்பியா ஆனவங்க. யாரை சொல்றேன்னு இன்னும் தெரியல்லையா, அதான் நம்ம சந்தனகடத்தல் வீரப்பனையும், சம்பல் கொள்ளைக்காரி பூலான் தேவியும் தான் அவங்க!. இவெங்க ரெண்டு பேருமே, நம்ம எல்லாம் உதாரணம் காட்டி பேசுவோமே, ராபின் ஹுட், அவரு ஸ்டைல்ல கொள்ளை அடிச்சிட்டு, அதான் பணக்காரன்கிட்ட கொள்ளை அடிச்சி ஏழைக்கு தர்மம் பண்ணவங்க!
இவெங்க ரெண்டு பேரும் பிரசித்தம் எல்லாருக்கும் தெரியும், அதிலேயும் சினிமா புடிச்சு காமிச்சாங்க வீரப்பன் கதையை 'கேப்டன் பிரபாகரன்'னு தமிழ்ல. அப்படியே சுயசரிதையா வரல்லேனாலும் கொஞ்சம் தழுவி வந்தது. அதே மாதிரி வடக்கிலே, ஹிந்தியில்லே வந்த படம் தான் 'Bandit Queen', அதாவது 'பேண்டிட் குவின்'. பொதுவா வீரப்பன் கதை நல்லா தெரிஞ்ச அளவுக்கு, பூலான் தேவி கதை உங்க எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்குமான்னு எனக்கு தெரியலை. ஆனா இந்த படம் பார்த்தவங்களுக்கு கதை நல்லா தெரிஞ்சிருக்கும், மத்தவங்களுக்கு, பூலாந்தேவி கொடுமையான கொள்ளக்காரிங்கிற அளவோட தான் தெரிஞ்சிருக்கும்!
இதிலே விஷேஷம் என்னான்னா, இரண்டுபேருமே யாருமில்லாத காட்டு பகுதிகளில் இருந்து ராஜ்யம் செஞ்சவங்க, அதிலேயும் வீரப்பன் இருந்தது நம்ம சத்தியமங்கலத்துக்கு பக்கத்திலே இருந்த அடர்த்தியான காட்டுப்பகுதி, ஆனா பூலான் தேவி அப்படி இல்லே, சுத்துப்பட்ட இடம் காடுகளான பள்ளத்தாக்கா இருந்தாலும் அடர்த்தியான காடுகள் நிறைந்த இடமில்லை. ஆனா எல்லாமே கிரமங்கள் அதிகம் அடங்கிய ரொம்ப ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒதுக்குப்புறங்கள். இரண்டு பேருமே காளியை தெய்வமா கொண்டாடினவங்க, அதே மாதிரி, பேரை கேட்ட மாத்திரத்திலே அழுதபுள்ளை வாயமூடும்ங்கிற இமேஜை கொண்டவங்க, அவ்வளவு பயங்கரமானவங்க. அப்பறம் அடிக்கிற கொள்ளையிலே ஏழைபாளைங்களுக்கு உதவி செஞ்சு அவங்க மதிப்பும், அன்பும் ஆசியம் பெற்றிருந்தாலும், இவங்க பொது சட்ட விரோதிகளா இருந்து, சமூக இறப்புன்னு ('Civil death') சொல்லக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவங்க! இருந்தாலும் சட்டத்தின் பிடியில் அவ்வளவு சுலபமா சிக்கல, ஏன்னா, அவங்களை காப்பத்தினது சுத்துப்பட்ட கிராம மக்கள்!
ஆனா வாழ்க்கையிலே நிறைய துன்பத்தை அனுபவச்சவங்க, அதிலேயும் பூலான் தேவி கதை ரொம்பவும் வருத்தப்பட வைக்கக்கூடியது! அவங்க செஞ்ச படுகொலையும் பேசபட்ட ஒன்னு, என்னான்னு பார்ப்போமா!
இந்த பூலான் தேவி பொறந்தது 'கெளவ்ரா கா புருவா'ங்கிற ஒரு கிராமம், யமுனை நதிக்கரையிலே மீன்பிடிக்கும் கீழ்சாதியான மல்லாங்கிற சமூகத்தை சேர்ந்த ஒரு மீனவ குடும்பத்தில்! அந்தம்மா சந்தித்தது எல்லாம் ஏழ்மை, அடி, திட்டு, கற்பழிப்பு, பெண்ணியத்துக்கே இல்லாத களங்கம் இது தான்! பூர்வீகம்னு பார்த்தா அவெங்க ஏழைப்பட்ட ஜென்மம் இல்லெ, பதினெஞ்சு ஏக்கர் நிலம் இருந்தாலும் அத்தனையும் புடுங்கிட்டு அம்போன்னு நடுத்தெருவிலே விட்டது அந்தம்மா பெரியப்பா பிகாரி! அந்தம்மா அப்பாரு ஒரு வாயில்லா பூச்சி! அம்மாகாரி தையிரிமா பொம்பளை புள்ளங்களை ஆம்பிளை மாதிரி வளர்த்தாங்க! அதனால சின்ன வயசிலே சாதி கொடுமை, அநியாயம் எதா இருந்தாலும் துடுக்கா பேசி, சாதுர்யமா வளர்ந்து திரிஞ்ச பொண்ணு! அதுவும் பத்து வயசிலே துணிமணி ஏதுமில்லாம தைரியமா, யாருக்கும் கவலைப்படமா, பெண்பிள்ளைங்கிர கூச்சிமில்லாம, திறந்தமேனியா குளிச்சப் பொண்ணு!
அப்படி துடுக்கா இருந்த வேளையிலே, ஒரு நாள், அவங்க பெரியப்பா செத்து போய், அவரு பெரிய மகன், மாயாதின் திடீர்னு அவங்க வீட்டு பக்கத்திலே இருந்த வேப்ப மரத்தை வெட்டி சாட்சி எடுத்துட்டு போனதை எதிர்த்து, அவரு அந்த மரங்கொண்டு போன வண்டியிலே பூட்டின மாட்டு மூக்கனாங்கயிரை மடக்கி புடிச்சி, கேள்விகேட்டு சண்டை போட்டு கேவலபடுத்தினதை மனசில வச்சி, பூலான் தேவியை பதினோரு வயசிலேயே கட்டி கொடுத்துட்டாரு, ஒரு தூரத்து கிரமாத்து வயோதிகனுக்கு! அந்த சின்ன வயசிலே குடும்பம் என்னா பண்ணனும்னு தெரியாமா! அப்ப ஆரம்பிச்சித்து பலாத்காரம் பிறகு வந்த நாட்களுக்கு ஆரம்பமா! 'அந்தாளுகிட்ட இருந்த பாம்பை பார்த்து பயந்தவ'ன்னு தன் கணவர் குறியை பத்தி சொன்னதா சுயசரிதையிலே ஒரு குறிப்பு வரும்! அப்ப துரத்திவிட்டோ, இல்லை தானா ஒடி வந்தோ தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தப்ப, வாங்கிய திட்டு, அவமானத்துக்கு எந்த அர்த்தமும் புரியலை அந்த சின்னப்பொண்ணுக்கு அப்ப!
அப்பறம் துடுக்கா பேசி, அடங்காபிடாரி பேரு எடுத்தாச்சு. எல்லாமே இந்த சாதி கொடுமைகளால வந்தது. அந்த கிராமங்கள் இருந்த உயர்ந்த ஜாதி தாக்கூர் என்கிற இனத்தாலே இழைக்கப்பட்ட கொடுமைகளை துடுக்கா தட்டி கேட்டதாலே இந்த பட்டமும் வேதையனையும். ஒன்னுக்கு பத்தா தண்டனை வழங்கிட்டாங்க அப்ப அந்த உயர்சாதி தாக்கூர் ஆளுங்களும் ஊரு பெருசுங்களும் சேர்ந்து! அப்படி இருந்தப்பதான், அந்த கிராமபஞ்சாயத்து தலைவர் பையனால, ஒரு நாள் தன் தாய் தகப்பன் முன்னிலையில் கற்பழிக்கபட்டார்! அதை எதிர்த்து பக்கத்து கிராம தலைவரை கூப்பிட்டுட்டு போய் அந்த பஞ்சயாத்து தலைவர் வீட்ல போட்ட ரகளையாள, பிறகு பஞ்சாயத்துக்கூடி திரும்பவும் பூலான் தேவியை ஒரு கிழவனுக்கு கண்ணாலம் கட்டி கொடுக்க தீர்மானிச்சாங்க! இனி என் வாழ்க்கையை தீர்மானிச்சிக்க எனக்கு தெரியும்னு அவங்க பஞ்சாயத்தை போங்கடா நீங்களும் ஒங்க பஞ்சாயத்துன்னும் வந்ததாலே, ஊரு பெருசுங்கெல்லாம் ஒன்னாக்கூடி திருட்டுப்பட்டம் கட்டி போலீஸ்ல புடிச்சி கொடுத்துட்டாங்க, அங்கேயும் அடி மிரட்டல், கற்பழிப்பு! சரியான ஆதாரமில்லாம வெளியிலே விட்டுட்டாங்க போலீஸ்!
போலீஸ்ல புடிச்சிட்டு போய் ஜெயிலுக்குப்பெயிட்டு வந்தா என்ன இருக்கும் ஊர்ல மரியாதை, அதுவும் பொட்டப்புள்ளயாயிட்டா கேட்கவேணாம். நாயவிட கேவலமா நடத்தினாங்க! ஊர்ல இருக்கிற கிணத்து தண்ணியை குடிக்கக்கூட காசு கொடுக்க வேண்டிய நிலமை, ஏன்னா, அவங்க மொண்டு குடிச்சா கிணத்து தண்ணி அசுத்தமாயிடும்னு ஊர் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிச்சு! அப்படி போய்கிட்டிருந்தப்ப தான் ஒரு திருப்பு முனை வந்திச்சு! அதாவது காளியின் அவதாரம் எடுத்தது! அதை இப்படி அந்தம்மா சொல்லுது தன் சுய சரிதையிலே!
என் தந்தையோட வேலை செஞ்சப்ப, செஞ்ச வேலைக்கு சரியா கூலி கொடுக்கல்ல ஒரு ஆளு, அதுவும் பெரியப்ப மகன் மாயாதீன் சொல்லி, அப்பதான் நான் சுத்தியளை தூக்கி, ஆக்ரோஷமா 'தேவடியா பய நாயே, காசு கொடுக்கல, உன்னை கண்டதுண்டமா வெட்டி பொலி போட்டுடுவேன்'னு கத்தி என காளி ரூபத்தை காமிச்சோன காசு கொடுத்தான் அந்தாளு! அடுத்த நாளு, பெரியப்பா மகன் வீட்ல போயி, என்கிட்ட துப்பாக்கி இருக்கு சுட்டு தள்ளிடுவேன்னு ஆம்பிளையா வீரமா போய் பேசின அந்த நொடியிலேருந்து 'நான் நிம்மதியா மூச்சிவிட ஆரம்பிச்சேன், தலையை நிமிர்த்தி கிராமத்திலே நடைப்போட்டு வந்தேன். எப்பெல்லாம் எனக்கு தோணுதோ, அப்பெல்லாம் பயமில்லாம ஆத்துக்கு குளிக்கப்போவேன்! அப்பதான் என்னோட பெற்றோர்கள் கிட்ட சொன்னேன், என்னையை இன்னையோட தலை முழுகிடுங்கன்னு!
திரும்பவும் கற்பழிக்க வந்த உயர்ஜாதி தாக்கூர் ஒருத்தனை எதிர்த்து மரக்கட்டையாலே அடிச்சு துரத்தினோன எனக்கு ஒரு புது சக்தி வந்துச்சு, எல்லா கொடுமைகளுக்கும் எதிர்த்து குரல் கொடுக்க! ஊரிலே இருக்கிற அத்தனை பேரையும் உங்களுக்கு இந்த மாதிரி அக்கா தங்கச்சி, அம்மாக்களை எனக்கு ஆளான கொடுமைகளை ஆளாக்க விடுவீங்களான்னு கேட்டு போராடினப்ப வந்தது எல்லா தைரியமும்! இதெல்லாம் பார்த்துட்டு எனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சுன்னு என் வீட்ல எல்லாரும் நம்ப ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா நான் எனக்குள்ளேயே ஒரு காளி ரூபம் எடுத்துக்கொண்டிருந்தேன்'
அப்ப தான் ஒரு நாள் நிஜமா ஒரு கொள்ளைக்கூட்டம் கிராமத்திலே வந்து கொள்ளை அடிச்சிட்டு பூலான் தேவியையும் சிறைபிடித்து சென்றது! அந்த கொள்ளைக்கூட்ட தலைவன் பாபு கஜ்ஜர்சிங் என்பவன் உயர்ஜாதியை சேர்ந்த தாக்கூர் இனத்தை சேர்ந்தவன், அவனுக்கு டெபுடியா இருந்த விக்ரம் என்பவன் பூலான் தேவியின் இனத்தை சேர்ந்தவன். அந்த கொள்ளைக்கூட்ட தலைவன் தொடர்ந்து தன் இச்சையை பூலான் தேவியிடம் தனித்துக்கொண்டான், ஆனால் விக்ரமோ அவனிடம் சண்டையிட்டான், உனக்கு அவளை மிகவும் பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள் என்று! உனக்கு என்ன அவள் மேல் அப்படி அக்கறை என்ற கேட்ட கஜ்ஜருக்கு, அவள் என் இனத்தை சேர்ந்தவள் என்பதால் என்றுகூறி, ஒரு நாள் அவனை சுட்டு கொன்று விடுகிறான். அவனை சுட்டு கொன்றதும் கொள்ளைகூட்டத்தினருக்கு பிடித்திருந்தது, ஏனென்றால் கஜ்ஜரால் கிராமத்து மக்களிடமிருந்து எந்த உதவியும் இல்லாததால், அவனின் செய்கைகள் அனைத்தும் பிடிக்காததால், விக்ரமை தன் தலைவனாக்கி கொண்டார்கள்!
அதறகு பின்னர், பூலான் தேவிக்கு துணையாக,ஆறுதலாக இருந்தவன் விக்ரம். பிறகு அவளின் காதலனாக மாறினான். பிறகு விக்ரமே பூலானை திருமணம் செய்து கொண்டான். அப்பொழுது தான் பூலான் தேவி முழுமையாக ஒரு ஆடவனின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கப் பெற்றாள்! அவளுக்கு துப்பாக்கி பிடித்து சுடுவதிலிருந்து, அனைத்து கொள்ளைக் கலைகளையும், கொள்ளை கூட்டத்தை வழிநடத்தும் தலைமை பொறுப்புகளயும் கற்று கொடுத்தான்.
எப்பொழுதுமே கொள்ளையர்களிடம் உள்ள கொள்கை என்னவென்றல் கொள்ளை அடிக்கும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கினை கடவுள், கோவில் மற்றும் சாதுகளுக்கு கொடுத்து விடுவதுண்டு. அவர்களுக்கு எப்பொழுதுமே கடவுள் மேல் அவ்வளவு நம்பிக்கை! அப்படி ஒரு விபூதி சாமியாரை பார்த்த பொழுது தான், அவர் கூறினார், உனக்கு காளியே துணையாக வந்துள்ளாள், அவளை காப்பது உன் கடமை என்று! அன்றிலிருந்து பூலானுக்கு கொள்ளைக்கூட்டத்தின் தலைவிக்கான அந்தஸ்த்து கிடைத்தது!
பிறகு ஒருமுறை தன்னை சிறுவயதில் திருமணம் செய்து, மானபங்கபடுத்தி, மாட்டுச்சாண அறையில் அடைத்தவனை அவர்கள் பிடித்து மரத்தில் கட்டி அடித்து சித்ரவதை செய்தனர். அவனை நிர்வாணமாக கிராமத்துக்குள் நடக்கவிட்டு, சாவின் விளிம்புக்கு அழைத்து சென்றனர். இது தான் இனி வயதான கபோதிகள் இளம் பெண்களை மணந்து கொடுமை செய்பவர்களுக்கு கொடுக்க போகும் தண்டணை, இல்லை என்றால் என் போன்ற பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாம் கிடைக்காது என்று கூறி, இது போன்று அநியாமாக பெண்களுக்கு கொடுமை இழைப்பவர்களை கொள்ளைக்காரி என்கிற போர்வையில் அடித்து கொன்று தன் நீதியை நிலை நாட்டினாள்!
இப்படி சென்ற பொழுது வழிப்பறி கொள்ளையை கற்று கொடுத்த தனது குருவான உயர்ஜாதி தாக்கூர் இனத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவனை போலீஸிலிருந்து விடுவித்தான் விக்ரம், பிறகு அவனையே தலைவனாக கொண்டான். ஆனால் அவனுக்கு பூலான் மீது சிறுது கண்! ஆதாலாலே இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு அவன் கீழ்ஜாதியான மல்லா இனத்தினரை கொடுமைபடுத்தியதால், கொள்ளைக்கூட்டத்தில் இருந்த அந்த மல்லா இனத்தினர், விக்கரமை விட பூலான் பின் அணி வகுத்தனர்! இதனாலேயே கொள்ளைக்கூட்டம் இரண்டு பிரிவாகப்பிரிந்தது! இப்படி சென்ற பொழுது ஒரு நாள் விக்ரமை ஸ்ரீராம் பின்னாலிருந்து சுட்டுவிட பூலானும் விக்ரமும் நேபாளாம் ஓடி விடுகின்றனர். விக்கிரம் சிகிச்சை பெற்று திரும்பியபின், ஒருமுறை சண்டையின் போது பூலான் அவனை ஸ்ரீராமை தூங்கும் பொழுது கொல்லும் படி சொல்கிறாள். ஆனால் பின்னாலிருந்தோ, தூங்கும்போதோ கொல்வது கோழை என மறுத்து விடுகிறான் விக்ரம். ஆனால் விக்ரமை அதே போல் பின்னால் இருந்து சுட்டு கொன்று விடுகின்றனர் ஸ்ரீராம் தாக்கூர் ஆட்கள். பிறகு பூலானை சிறைப்பிடித்து அவளை கிராமத்துக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு தான் நடக்கிறது கொடுமையிலும் கொடுமை!
பூலானை நிர்வாணமாக படகிலே ஏற்றி கரையினிலே இறக்கிவிட்டு கிராமத்தின் மத்திய பகுதிக்கு அழைத்து வருகின்றனர். எல்லார் முன்னிலையிலும் ஸ்ரீராம், இவளின் காதலன் விக்ரமை கொன்றுவிட்டேன் எனக்கூக்குரலிடுகிறான்! பிறகு இவளுக்கும் தண்டனை தரவேண்டுமா என்று கேட்டு, அவனை போன்ற அவன் தாக்கூர் இன ஆண்களை ஒவ்வொருவராக சென்று அவளை மானபங்க படுத்த சொல்கிறான். அதில் முதல் கற்பழிப்பு அவனுடயது! பிறகு அவளை அடித்து கொடுமைபடுத்தி, நிர்வாணமாக அனைவர் முன்னிலையிலும் ஊர்வலம் நடத்துகிறான். இந்த கொடுமை மூன்று வாரங்களாக தொடர்ந்து நடை பெறுகிறது! கடைசியில் நாயை விடக்கேவலமாக அவளை இழுத்து வீதியில் இட்டு தனக்கு கிணற்றிலிருந்து நீரை இரைத்து வரும்படி கூறுகிறான் அந்த ஸ்ரீராம்! அதற்கு மறுத்த பூலானை, உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு போர்வையையும் உருவி உதைத்து நிர்வாணமாக வீதி வலம் வரவைக்கிறான்! இது தான் அந்த கொடுமையிலும் கொடுமை! அந்த வேளையிலும் அவள் வேண்டியது துர்க்கையையும் காளியையும் தான் தனக்கு தன்னம்பிக்கையை தர! இவ்வளவும் நடந்த இடம் தான் பிகாமி என்ற அந்த கிராமம்!
பிறகு ஒரு வயோதிக பிரமணரால் காப்பற்றப்பட்டு, பிகாமியை விட்டு வெளியேறி காடுகளில் சுற்றி கடைசியில் ஆடுமேய்க்கும் பெண்ணால் சிகிச்சை அளிக்கப்படுகிறாள். அனைத்து ரணமும் ஆறிவிடும், ஆனால் ஸ்ரீராம் தாக்கூர் இழைத்த அந்த கொடுமையின் ரணம், பழிதீர்க்கும் வரை மாறாது என்ற வீராப்புடன் இன்னொரு கொள்ளையர் கூட்டத்தில் சேர்கிறாள் பூலான் தேவி! அப்பொழுது வந்து சேர்ந்த கூட்டாளி தான் மான்சிங்! அவனே அவளுக்கு லெப்டினட் போல துணையாக வைத்து அனைத்து கொள்ளைகளையும் புரிகிறாள். அவன் கொடுத்த சிவப்பு துணியைத்தான் நெற்றியில் எப்பொழுதும் கட்டிக் கொண்டிருந்தாள் பூலான் தேவி! அந்த சிவப்பு நிறத்தை தான் பழிக்கு பழி வாங்கும் சின்னமாக கருதினாள் பூலான் தேவி!
எங்கு பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ, பெண் உரிமைகள் நசுக்கப்படுகிறதோ, கற்பழிப்பு நடக்கிறதோ, வற்புறுத்தி கருக்கலைக்கப்படுகிறதோ, இல்லை பெண்களை தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்களோ, அங்கெல்லாம் முடிசூடா ராணியாக அவதாரம் எடுத்து கொடுமைகளை தட்டி கேட்டு, முக்கியமாக கொடுமை செய்யும் தாக்கூர் இன மக்களை தேடி பிடித்து காளிக்கு ரத்த பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவ்வாறு செய்வதை பெண்களுக்கும் தனக்கும் இழைத்த அநீதிக்கு உண்டான தர்மம் என்க் கருதினாள் பூலான் தேவி!
இப்படி கிராமம் கிராமமாக பூலான் தேவி என்றாலே பயத்திலே அலறி கொண்டிருந்த பொழுது தான், அவளுக்கு கொடுமை இழைத்த ஸ்ரீராமும் அவனது சகோதரன் லாலா ராமும் பிகாமி கிராமத்தில் ஒளிந்திருப்பதை கேள்விபட்டு தேடி வந்தாள், 1981, பிப்ரவரி 14, காதலர் தினப்படுகொலைக்கு! அவளின் ஆட்கள் மொத்த கிராமத்தையும் அடித்து நொறுக்கிய பொழுது எந்த கிணத்திற்கருகில் நிர்வாணமாக தான் கற்பழிக்கப்பட்டு சின்னா பின்னாமாக்க பட்டு தண்ணீர் எடுக்க சென்றாளோ அங்கே நின்று கொண்டிருக்கிறாள்! எங்கு தேடியும் ஸ்ரீராமும் லாலா ராமும் கிடைக்காததால் இளவயது தாக்கூர் ஆண்கள் முப்பது பேரை வரிசையாக நிறுத்தி துப்பாக்கி முனையிலே மிரட்டியும் அவர்கள் ஸ்ரீராம் லாலா ராம் மறைந்திருந்த இடத்தை சொல்ல மறைத்ததால், அவர்களும் தங்கள் அறியாமை தெரிவித்து அழுதபோதும், கடைசியில், வெடி குண்டுகள் முழங்க, முப்பது இளைஞர்களில் 22 பேரின் உடல் மண்ணில் சரிகிறது! இதுவே அந்த வரலாறு புகழ் பெற்ற பிகாமி படுகொலை!
இந்த வரலாற்று படுகொலையால் நாடே கொந்தளித்து! கீழினப்பெண்ணால் மேலின ஆணகள் கொல்லப்பட்டது யாரும் நினைத்து பார்க்காத ஒன்று! பிறகு தான் பூலான் தேவி, நாடு தேடும் முதல் குற்றவாளியாக கருதப்பட்டாள்!
காடுகளில் ஓடி மறைந்து, பிறகு மத்தியபிரதேச அரசுடன் சமாதான பேச்சு நடத்தி குற்றங்களை மன்னித்து விடுதலை செய்ய போராடி, கடைசியில் சரணைடந்து, பதினோரு வருடம் சிறை இருந்து, அரசியலில் புகுந்து எம்பியாகி, கடைசியில் 2001ல் ஜுலை 25ல் பழிக்கு பழி என சரியாக பொட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிழந்தார்!
கடைசியில் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்து ஸ்ரீராமை பழி தீர்க்கமுடியாமல் போய், ஒரு மாபெரும் படுகொலையை செய்து சரணடையும் நேரத்தில், அவளுக்கு லாலா ராமிடருந்து கடைசியாக வந்த செய்தின் படி, லாலாராம் ஸ்ரீராமை கொன்றுவிட்டதாக, அதுவும் ஒரு பெண்ணுக்காக, என்பதை நினக்கும் போது மனிதனுக்கு மனிதன் இழைக்கும் மிகப் பெரியக் கொடுமை, வஞ்சம் தீர்க்கும் நெஞ்சம் கொள்வது என்பதே!
Wednesday, June 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
சூழநிலை தான் குற்றவாளிகளை உருவாக்குகிறது.கல்வி அறிவின்மை,மூடப்பழக்க வழக்கங்கள் இவையே வடநாட்டில் (குறிப்பாக உ.பி, பீகார்) இப்படிப்பட்ட சமூக குற்றங்கள் நடக்க காரணம்.
பூலான் தேவி சந்தித்த ஒவ்வொரு கொடுமைகளையும் படிக்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.... இன்னும் குறிப்பிட்டதொரு மக்களை அறியாமையின் பிடியிலேயே வைத்திருக்கும் சமூகத்தை என்னவென்று சொல்வது...
படம் இப்பத்தான் பார்த்தீர்களா?
பாவம்தான். இல்லையா?
ஆமாம் செல்வன், படிப்பறிவு இல்லாத எத்தனயோ கிராமங்கள்ல இன்னும் அநியாயங்கள் நிறைய நடந்துக்கிட்டு தான் இருக்கு, இந்தியா முழுக்க!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாத்ரீகன்!
துளசி, படம் பார்த்து ரொம்ப நாளாச்சு! திடீர்னு, வீரப்பன் கதை படிச்சிக்கிட்டு இருந்தப்ப, Indian Banditsனு, உடனே பூலான் தேவி ஞாபகம் வந்தது, சரின்னு ஒரு பதிவு போடலாமுன்னு போட்டது!
பொறுக்க முடியாத ஜாதி,சமூக கொடுமைகளே பூலான்தேவி பொங்கி
எழ காரணம்.
அன்புடன்,
(துபாய்)ராஜா.
http://rajasabai.blogspot.com/
வாங்க ராஜா, ஆமா ஜாதி, சமூகக் கொடுமைகள் இன்னும் இருந்துக்கிட்டுத்தானே இருக்கு!
சார்,
மிகவும் கனமான பதிவு.
மிக அருமையாக சொல்லியிருக்கீர்கள்.
நன்றி
Post a Comment