நானும் அந்த படத்தை பார்த்து, அதை எல்லாம் ரசிச்சு, கண்ணும் குளமாச்சு, பிறகு அந்த படத்தில வந்த நிறைய சம்பங்களும் என் வாழ்க்கைக்கும், எனக்கும் பரிச்சயங்கிறது தெரிஞ்சாலும், அதல 'out of focus', அதாவது மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத, இல்ல ஒட்டாத,சில காட்சிகள், கேரக்டர் பத்தி கொஞ்சம் எழுதலாமேன்னு தான் இந்த பதிவு!

முதல்ல நான் சொல்ல வரது அந்த பிரிண்டிங் பிரஸ்ல முத்தையாவோட வேலை செய்ற இளவரசு பத்தி. ரொம்ப இயல்பா, அருமையா நடிச்சுருப்பாரு. அதாவது முதாலாளிக்கு கஷ்டம்ங்கிறப்ப கூட ஒத்தாசையா போஸ்டர் ஒட்ட போறதும், பிறகு, பிரிஞ்ச குடும்பத்தை ஒன்னு சேர்க்க உண்டான பேச்சு வார்த்தை துவக்கி வைக்கிறதும், இது மாதிரி நான் என் நிஜவாழ்க்கையில சந்திச்ச ஆளுங்க உண்டு!. சின்ன வயசிலே, அவங்க கூட வேலைசெஞ்சு, சினேகமா இருந்து, ரொம்பகாலம் விசுவாசமான் வேலை ஆட்களா எங்க கடையில வேலை பார்த்தவங்க நினைப்பு அதிகம் வந்திச்சு, இதை பார்த்தோன! அதிலயும் சில சமயம் அதராவா பேசியும், அதட்டி பேசியும், குதர்க்கமா பேசியும், அந்த அன்பான முதலாளி, தொழிலாளி உறவை, நான் என் நிஜ வாழ்க்கையில கண்டதை எந்த சினிமாவிலயும் நான் பாத்ததில்ல. முக்கியமா, 'ஏண்ணே, அடுத்தவன் பாஷையை கத்துக்க இம்புட்டு செலவளிக்கணுமா, அதுக்காக இப்படி கஷ்டபடுனுமா' ன்னு வர வசனங்கள். பிறகு முதலாளி முத்தையா, அவங்க குறையை சொல்லிகாமிச்சு கடிந்து கொள்வது, அதாவது 'உனக்கு ஒன்னும் கேக்காதப்பயே இப்படி, எல்லாம் கேட்டுச்சுனா' ன்னு அவர் காது கேளாதை இவர் சொல்லி காமிப்பதும், பிறகு அவர் 'அண்ணே, உங்களுக்கும் மெசினு வைக்கணும், அப்பதான் கேட்கும் போல' என்று குத்தி காமிக்கும் காட்சிகள், இது பேன்று ஏராளம். இது போன்ற சம்பவங்களை அனுபவத்தில் உணர்ந்தவன் என்பதால், என்னை தாக்கம் செய்தது, இது போன்ற காட்சிகள், கேரெக்டர்கள்!
அடுத்தது, அந்த வட்டி பணம் வாங்க வரும் நபர், அவர் தன் முதாலளியிடம் படும் கஷ்டங்கள், வட்டி வாங்கமல் செல்வதால், காலையில் கடை திறந்தோன வந்து முதல் ஆளா நிற்பதும், பிறகு முத்தையாவிடம் பாட்டு வாங்குவதும், பிறகு கரிசனத்தோட, 'எப்பவும் வட்டியை கட்றீங்க, எப்ப முதுலை அடைப்பீங்க, இப்படி மேலும் மேலும் கடன் வாங்கினான்னு' கேட்கும் காட்சிகளும், என் தந்தையாரிடம், இப்படி அக்கரை எடுத்துக்கூறிய புண்ணியவான்களை நான் என் வாழ்க்கையில் பலரை சந்தித்துருக்கிறேன்! திரையில் இது போன்ற காட்சியை பார்த்த பொழுது, என்னை நானே ஆசுவாசுபடுத்த முயற்சித்தேன், அவ்வளவு தாக்கம்!
பிறகு அந்த பட்டாஸுக்கடைக்காரர், முத்தையா கொடுத்த லிஸ்ட்டுக்கு விலை போட்டு கொடுத்துவிட்டு, பிறகு சாய்ந்திரம் வந்து வாங்குகிறேன் என்றவுடன் பொறுமுவதை, வெகு இயல்பாய் நடித்து கொடுத்திருப்பார்.

பிறகு சேரன் ஊர் திரும்பி வந்தவுடன், அவர் அம்மா கோபித்து கொண்டு கதவை சாத்தும் பொழுது, ஜன்னல் வழியாக, அவரை மன்னிக்க சொல்லும் ஊர்கிழவிகள், வாஞ்சியுடன், செய்த தப்பை மன்னிக்க சொல்லி வாதாடும் காட்சி, யதார்த்தின் உச்சம்!. இது போன்ற நிகழ்ச்சிகள் அனைவருக்குமே நடந்த ஒன்றாகவே இருக்கும்!
பிறகு சேரன் காரை ஒட்டிச்செல்லும் டிரவைர், அவர் வாஞ்சையாக ஆறுதல் கூறி, சேரனுடன் தந்தையின் பெருமை பேசும் காட்சிகள், வெகு சாதரணம் தான், ஆனால் நிஜ வாழ்க்கையில், இது போன்று கட்டங்களில், இது போன்ற கேரக்டர்களை சந்தித்தவர்கள் நம்மில் அனேகம் பேர்!
4 comments:
//அதல 'out of focus', அதாவது மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாத, இல்ல ஒட்டாத,சில காட்சிகள், கேரக்டர் பத்தி கொஞ்சம் எழுதலாமேன்னு தான் இந்த பதிவு!//
அப்படீண்ணு சொல்லிட்டு ,ரொம்ப ஒட்டிப் போன காட்சிகளைப் பத்தி எழுதியிருக்கீங்க..கதையோட ஒட்டல்லையுண்ணு சொல்ல வர்றீங்களா? சினிமா கதை என்பது சம்பவங்களின் கோர்வையாக இருக்கணும் .அதைவிட்டு 'out of focus' பண்ணாம நூல் பிடிச்சு கதை மட்டும் எடுக்கணும்னா ,பாட்டி,காகம்,நரி,வடை வச்சு ஒரு படம் எடுக்கலாம்.
ஜோ, மன்னிக்க தாமதமாக பதில் தொடுக்க! நான் சொல்ல வந்த 'out of focus' கொஞ்சம் கதயின் கிளை சம்பங்கள், அதை அழகாக எடுத்திருந்தார் சேரன் என்பதே! ஒட்டாதது என்பதின் அர்த்தம் அது இல்லாமலும் சொல்லவந்ததை சொல்லலாம் என்பதே, ஆனால் அக்காட்சிகளின் தாக்கமே என் விமரிசனம் , நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள், அவ்வளவே! anyhow, வீடு (பதிவு)தேடி வந்ததிற்கு நன்றி
வெளிகண்ட நாதர் சார். நீங்க சொன்ன அவுட் ஆஃப் போகஸ் விஷயங்கள் எல்லாம் என்னையும் கவர்ந்தது. நன்றாய் எழுதியிருக்கிறீர்கள்.
ஆனால் ஒன்றில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. நீங்கள் சொல்லும் காதல் அரும்பும் காட்சி எனக்கென்னவோ கொஞ்சம் செயற்கையாப் பட்டது.
எனக்கு அந்த பொண்ணு நடிச்சிருந்தது ரொம்ப கேசுவலா இருந்த மாதிரி இருந்திச்சு, அதான் எழுதினேன்!
Post a Comment