Friday, March 03, 2006

உதயமாகும் புதிய இந்தியா- நாளை நமதே!

வந்தாலும் வந்தாரு புஷ் இந்தியாவுக்கு, இங்கிருக்கிற பத்திரிக்கை, புத்தகமெல்லாம் இந்திய புகழ் பாடாத குறையா, அதை பத்தி தான் எழுதி தள்ளிகிட்டு இருக்காங்க! ஆசியாவின் அடுத்த பவர் ஹவுஸ் அப்புடின்னு ஒரே புகழாரம். ஏன் திடீர்னு இந்த பாசம், கவனிப்புன்னு யாரும் தெரிஞ்சுக்கிட்டீங்களா? அப்படி என்னதான் ஆச்சு, சுவிட்சர்லாந்தில உள்ள டெவோஸ் ('Davos') ல நடந்த வேர்ல்ட் எக்னாமிக் ஃபாரத்தில பேசப்படுற ஒரு ஸ்டார் யாருன்னா, இந்திய துணை கண்டம் தான். கவனிச்சீங்களா, இந்த ஒரு இரண்டு மாசமா அத்தனை உலகத் தலைவர்களும் இந்தியாவில டேரா அடிச்சிக்கிட்டு இருக்காங்க, புஷ்ஷ விடுங்க,

போன ரெண்டு வாரம் முன்ன பிரஞ்சு அதிபர் வந்து ஏதோ ஏதோ கை எழுத்து போட்டுட்டு போனாரு, அதுக்கு முன்ன சமீபத்தில முடி சூட்டின சவுதி அரசர் வந்திட்டு போனாரு. அது மாதிரி இப்ப புஷ்ஷு போனதுக்கப்பறம், ஆஸ்திரேலிய பிரதமர் வரப்போறாரு! அப்படி என்னதான் ஆச்சு. திடீர்னு எல்லாருக்கும் நம்ம மேல கவனம் திரும்ப, நம்மல பத்தி நல்லா தெரியுமா இவங்களுக்கு நம்ம எப்படி பட்ட தேசமுன்னு, இல்ல நமக்குத்தான் தெரியுமா, இவங்ககிட்ட இருந்து என்ன எதிர் பார்க்கிறோமுன்னு! ஒரு பார்வை பார்க்கலாமா?

முதல்ல இந்த 15 வருஷ கால கட்டத்தில நம்முடய அசுர வளர்ச்சி, அத எப்படி சொல்றதுன்னா, Gross Domestic Product(GDP), ஜிடிபி,ஜிடிபின்னு ஒன்னு சொல்வாங்களே அதை கேள்விபட்டிருக்கீங்களா! அதாவது ஒரு நாட்டின் முதலீடுகள், ஏற்றுமதிகள், தனிமனிதர்களின் செலவீனம், புறவு அரசாங்கத்தின் செலவீனம் இது எல்லாத்தையும் கூட்டிகழிச்சு ஒரு சதவீதத்தை சொல்றது. இதை பொருளாதார நிபுணர்கள் எழுதறதை பார்த்திருப்பீங்க, இது இப்ப நம்ம கிட்டதட்ட 8 சதவீதம் அடைஞ்சிட்டோம். தொடர்ந்து மென்மேலும் வளர நிரைய வாய்ப்புகள் இருக்கு. இத வெறுமன சொன்ன உங்களுக்கு புரியாது, மத்த நாடுகளோட ஒப்பிட்டு பார்த்தா நாம எப்படின்னு புரியும். உதாரணத்துக்கு, சைனா 9.9%, ஹாங்காங் 7.6%, மலேசியா 5.2% , அமெரிக்கா 3.1%, ஆஸ்திரேலியா 2.6%, ஜப்பான் 4.2%, பிரான்ஸ் 1.2%, கனடா 2.8%, இப்படின்னு பட்டியல் போட்டு பொருளாதார வளர்ச்சியை குறிப்பாங்க. இப்படி வருஷா வருஷம் இது ஏத்ததில இருந்தா, அப்படியே உயர்ந்துகிட்டு போனாலும் , நிலையா அதிகபடியான சதவீதத்தில இருந்தாலும், ஒரு நாடு வளர்ச்சி அடையுதுன்னு சொல்வாங்க, அப்படி அதிகமா நம்ம சைனாவுக்கு நிகர வளரருதுனாலதான் நம்ம மேல ஒரு கண்ணு!
எல்லாம் நம்ம கிட்ட கை கோக்க ஆசை படறாங்க. இதை பத்தி ஆராஞ்சி சில பேரு அடுத்த 50 வருஷத்தில நம்ம எப்படி இருப்போம்னு ஜோசியம் சொல்றாங்க, அதாவது, இன்னும் பத்து வருஷத்தில நம்ம பொருளாதாரம் இத்தாலிய நாட்ட விட பெரிசாயுடுமுன்னு, அப்புறம் இன்னும் 15 வருஷத்தில பிரிட்டன் நாட்டை தூக்கி சாப்பிட்டுவிடுமோன்னு. 2040ல நம்ம தான் பொருளாதாரத்தில வளர்ந்த மிகப்பெரிய நாடு. இன்னய தேதிக்கு அமெரிக்கா தான் அந்த அந்தஸ்த்தில இருக்கு தெரியுமா? பிறகு 2050ல ஜப்பானை விட அஞ்சு மடங்காகிவிடுமுன்னும், நம்மலோட சம்பாத்தியம், அதாவது 'Per Capita Income'னு சொல்றது 35 மடங்கு அதிகரிச்சுடும்னு ஜோஸ்யம் சொல்லியாச்சு. இதெல்லாம் உண்மையாகுமான்னெல்லாம் தெரியாது. ஆனா, இன்றைய காலகட்ட வளர்ச்சி, அவங்க ஏற்கனவே யோசிச்சி வச்சிருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாயிருக்கு. அதனால இந்த ஹேஸ்யம் எல்லாம் சாத்தியமேன்னு சொல்றாங்க!

இதுக்கு சில நிகழ்கால சாத்தியங்களை கொஞ்சம் பாருங்க, இந்தியவில உள்ள சில கம்பெனிகளின் அசுர வளர்ச்சி அவர்களின் நிகர லாபமே இதுக்கு அத்தாட்சி, வரிசையா ஒவ்வொரு வருஷமும், 15,20 25 சதவீதம் லாபத்தை உயர்த்தி இருக்கிறதை வச்சு கண்டுக்கலாம், இல்ல பங்கு சந்தையின் அபார வளர்ச்சி, அதாவது அத்தனை நாடுகளும் போட்டி போட்டிக்கிட்டு முதலீடு செஞ்சு, அதிகப்படி லாபம் வந்து அதனோட பங்குகளின் வளர்ச்சியை 'பாம்பே ஸ்டாக் எக்சேஞ் sensex' 10000த்துக்கு மேல போயிருப்பதை எல்லாம் பார்த்திருப்பீங்க. இன்னொரு உதாரணம், நம்ம டாடா குருப்பை எடுத்துக்கங்க, அவெங்க செய்யாத தொழில் இல்ல, காருலருந்து, சாப்ட்வேர் வரைக்கும், அவங்க வளர்ச்சி, 1700 கோடியிலிருந்து 2400 கோடி வரை உயர்ந்திருப்பது. பிறகு ஆட்டோ பார்ட்ஸ் செய்யக்கூடிய சின்ன சின்ன கம்பெனிகளின் சம்பாத்தியம் 400 கோடியிலிருந்து, 1000 கோடி வரை வளர்ச்சி அடைஞ்சிருக்கு. அடுத்த சில ஆண்டுகள்ல பெரிய அமெரிக்கவின் கார் கம்பெனி ஜென்ரல் மோட்டார்ஸ், ஒரு 100 கோடிக்கு ஆட்டோ உபரி பாகங்களை இந்தியாவிலருந்து இறக்குமதி செய்ய போறாங்க!

ஆனா அதே சமயத்தில நம்மலோட அடுத்த பக்கத்தை பார்த்தீங்கன்னா ஒரே சோகம். அது தான் நமது ஏழ்மையும், சுகாதார சீர்கேடும். இன்னைக்கு உலகத்தில இருக்கிற ஏழ்மையான நாடான நைஜீரியா மாதிரி மூணு நாடு நம்ம நாட்டுக்குள்ள இருக்குன்னா நம்பமுடியாமா உங்களுக்கு, ஆனா, அதான் உண்மை. சிதிலமடஞ்ச நம்ம ஏர்போர்ட்டுகள், நெரிசல்மிகுந்த சாலைகள், நகரின் மையப்பகுதி சேரிகள்னு தான் வெளிச்சம் போட்டு காட்டமுடியம். முதல்ல சொன்ன மாதிரி, 300 சிலிக்கான்வேளிகள் இருந்தாலும் 3 நைஜீரியாக்களும் கொண்ட நாடு தான் நம்நாடு! 30 கோடிக்கு மேல தினப்படி வருமானம் ஒரு டாலருக்கு கீழேன்னா ஆச்சிரியமில்ல, இங்க, அமெரிக்காவில, கிட்டதிட்ட ஒரு டாலருக்கு ஈடான காசு நாணயங்களை தூக்க சிரமப்பட்டு, அது வேணாமின்னு அங்க அங்க வச்சிருக்கிற தர்ம உண்டியல்ல போட்டுட்டு போற நம் ஊர்லருந்து இடம்பெயர்ந்த நம்மூரு மக்கள், அவங்க போடற அந்த தர்மகாசுகள் தான், இந்தியாவில எத்தனையோ பேரோட தினப்படி வருமானம் இன்னமும்னு எத்தனை பேருக்கு தெரியும்? உலக ஏழைகள்ல 40 சதவீதம் நம்ம நாட்ல இருக்கிறது எத்தனை பேருக்கு தெரியும். உலகத்தில நம்ம தான் இரண்டாவது இடம், HIV கிரிமியோட அலையிற மக்கள் தொகையிலன்னு எத்தனை பேருக்கு தெரியும்? இப்படி நாம சோகமயமான பக்கத்தை கொண்டிருந்தாலும், நம் எதிர்நோக்கி இருக்கும் வருங்காலம் ரொம்ப புதுசு! எப்படின்னு கேளுங்க!

நம்ம வளர்ச்சியை சைனாவோட ஒப்பிடறப்ப, நம்முடோது திட்டமிட்டு செயல்படுபவை அல்ல, ஒரே குழப்பம், கட்டுபாடு இன்றி ஏனோ தானோன்னு வளரும் ஒன்னு. சைனாவை போல திட்டமிட்டோ, இல்ல சீரமைப்போடவோ ஒன்னும் செய்றதில்லை. 'புதுசா ஏர்போர்ட்டு வேணும்னாலும், இல்ல எட்டு வழிதடம் கொண்ட ரோடு வேணுமின்னாலும், இல்ல பூத்து குழுங்கும் தொழிற்பூங்கா வேணுமின்னாலும், இதே ஒரு சில மாசங்கள்ல தயார்' அப்படின்னு எதுவும் வந்திடறதில்லை. இதெல்லாம் தான் வெளிநாட்டு மூலதனங்கள் எதிர்பார்க்கும் ஒன்னு. இம் என்றவுடன் உண்டாவதில்லை இந்த வசதிகள் . நம் அரசாங்கமும், சைனாவை போன்ற அடக்குமுறை சர்வாதிகார அரசாங்கம் ஒன்னும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் ஒரு பீகிங் போலவோ, இல்லை ஷாங்காய் போலவோ உருவாக்கிட முடியறதில்லை. ஏன்னா நம்முடையது, மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஜனநாயக அரசு, அதுக்கு முட்டுகட்டை போட நிறைய அமைப்புகள் உண்டு. முக்கியமா கம்னியூஸ்ட் கட்சி, யூனியன் இதுவே போதும். ஜனநாயகத்தால் பயனடைவோர் குறிப்பிட்ட யூனியன் சங்கத்தினர், முதலாளிகள், ஜாதிகள், பணக்கார வர்க்கங்கள், இவைகளே, ஜனநாயகத்தின் அடிமட்ட குடிமகன் என்றும் ஜனநாயகத்தால் பயனடைந்தான் என்று சரித்திரமே கிடையாது! ஆக சைனாவை போல, இந்த ஜனநாயக அரசாங்கம் அத்தகைய உரிமை பெற்றதில்லை, நிமிடத்தில் வசதி படைத்திட! ஆனால் இந்த வெளிநாட்டு மூலதனங்களின் தேவைகளை பூர்த்தி செய்திட, நமக்கே தெரியாமல் நம்மிடையே வளர்ந்து வரும் வியாபார தந்திரம் படைத்த விற்பண்ணர்கள், சீக்கிரம் பணம் பார்க்க துடிப்பவர்கள் 'Entrepreneurs' தான் முக்கிய காரணம். அதனால் தான் இந்த வளர்ச்சி! கோல்கேட் பற்பசை தயாரித்த 'Procter & Gambel' நிறுவன பழைய தலைவர்'குருசரன்தாஸ்' சொன்ன மாதிரி 'அரசாங்கம் இரவில் தூங்கும் பொழுது, பொருளாதாரம் வளர்கிறது'

ஆக இப்படி வழி நடத்தும் இந்த புதிய விற்பண்ணர்கள் தான் இந்த இமாலய வளர்ச்சிக்கு காரணம். இன்னொன்னு தெரியமா, வளர்ந்து வரும் நம் இந்திய கம்பெனிகள் சைனாவினுடய கம்பெனிகளை விட நிர்வாக திறமை பெற்று முன்னனியில் இருப்பதை. உலக சந்தையில் அதிஉன்னதமான கம்பெனிகளின் வரிசையில் இடம் பெற்ற நம் 'Infosys', 'Ranbaxy', 'Reliance' போன்ற தனியார் கம்பெனிகளின் வளர்ச்சி, உலக முதலீட்டாளர்களிடம் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு, அந்த சைனாவின் கம்பெனிகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது. இன்னொன்னு தெரியுமா, ஒவ்வொரு வருஷமும் ஜப்பான்ங்காரன் கொடுக்கும் உலகில் சிறந்த கம்பெனிக்கான பரிசு, 'Deming Prize', சிறப்பாக நடத்தப்பட்ட கம்பெனிகள்ல, இந்தியாவில இருக்கிற கம்பெனிகளுக்கு சமீபமா தொடர்ந்து கொடுத்திருக்கிறான், தெரியமா? அதில நம்ம 'சுந்தரம் கிலைட்டான்ன்னுக்கும்' கிடச்சிருக்கு, வேணும்னா இதோ சுட்டி அது மாதிரி இந்த விற்பண்ணர்கள் மட்டுமில்ல இந்த வளர்ச்சிக்கு காரணம், உங்களை, என்னை மாதிரி ஆளுங்களும் காரணம். எப்படி?

நமக்கு நாமே ராஜா, வீடு வேணும்னா, இந்தோ லோனை போட்டு உடனே கட்டிமுடிச்சிடுறோம், காருல போவனும்னு ஆசை பட்டா இதோ ரெடி, காருக்கு பணம் கடங்கொடுக்க ரெடி, வாங்கி ஓட்டியாச்சு, இதை ஒருத்தர் ரெண்டு பேருல்ல ஒட்டு மொத்தமா எல்லாரும் பண்ண இறங்கிட்டா, இதைத்தான் தனிமனித செலவீனம்னு சொல்றது. இப்படி செலவீன சதவீதத்தில நம்ம இப்ப 67%, சைனா 42%. கிட்ட திட்ட அமெரிக்காவுக்கு பக்கத்தில நெருங்கிட்டோம், அவங்களோடது 70%. 'Credit Card'தொழில் வளர்ச்சி இதுனால 35% வருஷத்துக்கு முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அப்புறம் செல்போன், இப்படி சொல்லிக்கிட்டே போலாம். இப்ப புரியுதா, நம்ம GDPயின் வளர்ச்சி என்னான்னு. ஏற்கனவே சொன்ன மாதிரி 'GDP' சதவீதம் கூட்டி கழிக்க இந்த தனிமனித செலவீனம் ஒரு அங்கமாகிறது.

இது வெறும் கணக்கு போட்டு சொல்லும் மந்திர வளர்ச்சி இல்ல, உண்மையாவே, வளரதுடிக்கும் நம்மவர்கள் எத்தனையோ பேரு இந்தியாவை விட்டு உலகம் முழுக்க வியாபிக்க, பொருளாதார படைஎடுப்பு நடத்த துடிக்கிறாங்க. ஏன் நம்மளுடய கனவு தொழிற்சாலை, சினிமா தொழிற்சாலை, ஹிந்தி, தமிழ், தெலுங்குன்னு, எல்லாரும் உலகம் முற்றிலும் இருக்கும் 50 கோடி ரசிகர்களை குறிவச்சு கதை எழுதி படம் பண்ணி வெளியில விடுறாங்க. இதில நம்ம தமிழ் திரையுலகம், ஹிந்திபடவுலகம் மாதிரி இன்னும் எழுச்சி பெறலன்னு தான் சொல்வேன். ஏன்னா, இப்ப வர ஹிந்தி படங்கள் பெரும்பான்மையா குறி வைக்கிறது வெளி நாட்ல இருக்கும் இந்தியர்கள் தான். அப்படி வளரும் பொழுது, அடுத்த நாட்டவனையும் ரசிகர் கும்பல்ல சேர்க்கும் காலம் அதிக தூரமில்லை, அப்புறம் பாருங்க எப்படி அசுரத்தனமான வளர்ச்சின்னு! எத்தனையோ ஏற்ற தாழ்வுகள், அரசாங்க சிக்கல்கள், கையாலாகத்தனம், மற்றும் இரைச்சலான ஜனநாயகம் என்று இருந்தாலும், தனிபட்ட மக்கள் விழித்தெழ ஆரம்பிச்சாட்டங்க, ஆக அவங்க எல்லாரும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியில தனி தனி ராஜாவாயாச்சு, ஆக நம்மகிட்ட இருந்த விலங்கை உடச்சிக்கிட்டு எல்லாரும் வெளியே வர துவங்கியாச்சு!

நம்ம நேரு சொன்ன மாதிரி 'இது போன்ற தருணம் சரித்திரத்தில எப்பவாவது அரிதா தான் வரும், அப்படி வரும் பொழுது, நம் அடிமைத்தனம் விலகி, பழமையை உடைத்து, புதுமை காண வெளிவா' அவரு சொன்னது நள்ளிரவில் சுதந்திர இந்தியா பிறந்தபொழுது, அதே மாதிரி, இப்போ பிறப்பது அதே போன்ற புதிய இந்தியா, ஒரு தனித்துவமான சமூகம் அமைக்க, புரட்சி கொண்டு, வண்ணங்களோடு வெளிப்படையான,துடிப்பான, எல்லாவற்றிக்கும் மேலாக புதிய மாற்றங்களை ஏற்று உதயமாகும் புது இந்தியாவை உருவாக்க , வா வெளி வா! புரட்சி படைப்போம்! நாளை நமதே!

9 comments:

said...

nice post!

said...

நன்றி பொட்'டீ' கடை!

said...

வெளிகண்ட நாதர் இந்தியாவின் இரண்டு பக்கத்தையும் கூறியிருக்கிறீர்கள் நல்லது. இந்தியாவின் வளர்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே அதுதான் தற்போதைய பிரச்சினை! இது வளர்ச்சியில்லை வீக்கம். நம் நாட்டின் ஜி.டி.பி. 8 சதவீதம்தான். இந்தியாவின் உற்பத்தி துறையில் வளர்ச்சி ஏற்பட்டள்ளதா? இந்திய மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதா? இந்திய விவசாய உற்பத்தி பெருகியுள்ளதா? என்றால் ஒன்றும் இல்லை. ஏற்கெனவே இருந்த நிலையில் இருந்து தற்போது வெகுதூரம் சென்று விட்டோம்.இன்னும் சொல்லப்போனால் இந்த வளர்ச்சியை ஜாப் லெ° குரோட் (வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி) என்று குறிப்பிடுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருக்கிறது. வேலையில் இருப்போர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அனைத்தும் தனியார்மயமாகி பெருச்சாளிகள் கொழுத்து திரிகின்றன. (அதான் ரிலையன்°, டாடா, அசிம் பிரேம்ஜி....) இன்னொன்று சென்செக்° 10000 புள்ளிகள் என்பது வெளிநாட்டில் இருந்து நம் நாட்டில் செய்யப்படும் முதலீடுகள்தான். இதுவெறும் சேர் மார்க்கெட் விளையாட்டு. இந்த 10000 புள்ளிகள் திடீரென ஒரே நாளில் காணாமல் போகும் அபயாம் உள்ளது. அது என்றைக்கு நடக்குமோ? அப்போது இந்தியா ஒரே நாளில் மகா ஏழை நாடாக மாறி விடும். இந்தியா தற்போது நிற்பது சொந்தக் காலில் அல்ல அந்நிய நாடுகளின் கட்டைக் காலில். இது குறித்து நீங்களே பல தரப்பு பொருளாதார விஷயங்களை அறிந்து விரிவாக ஒரு பதிவு போடலாம். உங்கள் பதிவில் மிக குறிப்பிடத்தக்கது 30 கோடி பேர் ஒரு டாலருக்கும் கீழ் வருமானம் உள்ளவர்கள் என்பது. எதிர்கால இந்தியாவில் இது மாற வேண்டுமானால் புரட்சி தேவை!

said...

I guess i read the same stuff in Newsweek current edition.

said...

//நம் நாட்டின் ஜி.டி.பி. 8 சதவீதம்தான். இந்தியாவின் உற்பத்தி துறையில் வளர்ச்சி ஏற்பட்டள்ளதா? இந்திய மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதா? இந்திய விவசாய உற்பத்தி பெருகியுள்ளதா?// இந்த ஜிடிபி சதவீதம் நீங்கள் கேட்ட அனத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிட படுபவை. இதற்கு 'National; and 'International' statistical formulaக்களை கொண்டு மதிப்பிடுபவை. இந்த சதவீதம் தான் உலக அளவில் அனத்து நாடுகளால் ஏற்று கொள்ள படுபவை. மேலும் நம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதை தான் 'Personal Consumption' என்ற இன்னொரு factorஆல் கணக்கிடபடுபவை. இதுவும் அந்த GDP கணக்கீட்டில் எடுத்து கொள்ள படுகிறது. இதை தான் நான் விளக்கி உள்ளேன். ஆக நீங்கள் கூறும் வாதம் ஒரு சில அரசியல் அமைப்புகள் சுய லாபத்திற்க்காக போடும் கூப்பாடு. உண்மையில் வளர்ச்சி ஏற்பட்டு கொண்டுத்தான் இருக்கிறது. ஆனால் அதன் வீச்சம் அடிமட்ட குடிமகனை வெகுவாக சென்ற அடையவில்லை, வாஸ்த்தவம் தான். ஆனால் இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் அப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. வேண்டுமானால், எப்படி இந்த தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி சிறுக சிறுக அவர்களை அடைகிறது என்பதை இன்னொரு பதிவு எழுதுகிறேன், உதாரணத்திற்கு இந்த செல்போன் வளர்ச்சி. ஆக இதை எல்லாம் செய்வது தனியார் நிறுவனங்கள். நீங்கள் கூறியது போல அவர்கள் கொளுத்த லாபம் ஈட்டினாலும், அவர்கள் எதுவுமே நியாப்படி, சட்டப்படி, செய்கிறார்கள், மேலும் அரசாங்கம் அந்த regulation, de-regulation என்ற ஒரு வரையறுப்பில் கண்கானித்தும் வருகிறது என்றால் அதை ஏன் கம்யூனிஸ்ட் பார்வையில பார்க்க வேண்டும். உங்களின் அனைத்து சந்தேகங்களையும் நான் இந்த பதிவில் தொட்டிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை போல. இன்னொன்று இந்த பங்கு சந்தை பற்றி நீங்கள் குறிப்பிட்டது. 1990லிருந்து 2000 வரை எற்பட்ட சில ஊழல் எல்லாற்றிர்கும் மூல காரணமான சட்ட ஓட்டைகளை சிறப்பாக அடைத்து விட்டனர், ஆதலால் திடீரென்று சரிவு ஏற்படும் என்றால் அது 'Market Dynamics' பொறுத்தே, எதுவும் பொறுப்பற்ற சட்டதிட்டங்களால் இருக்க முடியாது. இன்னொன்று இப்படி திடீர் சரிவுகள் அவ்வளவு ஈஸீயாக நம் நாட்டில் நடக்காது, மற்ற Asiean நாடுகளில் நடந்தது போல. மிகவும் கவனமாக கட்டுபாடுகளை சமயோதியமாக களைத்து அதை காப்பவர்கள் நாம் அதலால் உங்களின் பயம் வெறும் கனவே!

ஆக நான் சொல்ல வந்த தீம், இந்த பதிவில், இனி வரும் முன்னேற்றத்திக்கு முக்கிய காரணம் வகிக்க போகிறவர்கள் நீங்களும் நானும் தான், நம் தனிபட்ட சக்தி, ஆக நீங்கள் கொண்டுள்ள மணகண் திரையின அகற்றி வெளி வா என்பதே!

said...

Nanthan, you re right, I got excited by reading that article, I felt it would be useful to keep informed Tamil community at large to know about the development Hence this posting along with my opinion too. Thanks..

said...

நான் இந்த பதிவு எழுதுவதற்கு முன் பாரதி எழுதிய பதிவு ஒன்றில், வெளிநாட்டவர்களை முதலீடு செய்ய தூண்டும் காரணங்களை பற்றி ஜெரமி சீகல் எழுதிய கட்டுரைகளை சுட்டி இட்டிருக்கிறார். அதை படித்து மேலும் சில நிஜங்களை தெரிந்து கொள்ளுங்கள்- நாளை நமதே! சுட்டி இதோ!

இந்தியவா, சீனாவா?

said...

நல்ல பதிவு வெளிகண்ட நாதர் சார். இன்னைக்குத் தான் ந்யூஸ்வீக்கில் வந்த கட்டுரையையும் படித்தேன். உங்கள் பதிவில் அந்தக் கட்டுரையில் வந்த பல விஷயங்கள் இருக்கின்றன.

said...

இந்த பதிப்பு எனக்குகூட உழைக்கும் ஆர்வத்தையும் புது உத்வேகத்தையும் தருகிறது
நன்றி வெளிகொண்டநாதர் அவர்களே