Thursday, March 16, 2006

ஹோலி ரே... ஹோலி.....

இந்த ஹோலிப் பண்டிகை மறக்க முடியாத ஒன்னு. நான் வட இந்தியாவில டெல்லி, உ.பி., ராஜஸ்த்தான்னு கழிச்ச காலகட்டங்கள்ல இந்த பண்டிகை எனக்கு மறக்க முடியாத ஒன்னு. வட இந்தியா வர வரை, இந்த 'மஞ்ச குளிச்சு, அள்ளி முடிச்சு, மெட்டி ஒலிக்க மெல்ல சிரிச்சுன்னு' இளையராஜா போட்ட பாட்டை பதினாறு வயதினிலே படம் பார்த்து தான் இந்த மஞ்சத்தண்ணி அடிச்சிக்கிறதை பத்தி தெரியும். அதுவும், தமிழ்நாட்டில எல்லா கிரமங்கள்ளயும் இப்படி மஞ்சத்தண்ணி அடிச்சி, ஊத்தி விளையாடி கொண்டாடுவாங்களான்னு தெரியாது. இது இந்த பாரதிராஜா ஊரு பக்கமா, தேனீ, பெரியகுளம் பக்கம் கொண்டாடுவாங்கன்னு கேள்விப் பட்டேன். யாரும் அவங்க அவங்க கிராமத்தில இதை கொண்டாடியிருந்தா பின்னோட்டத்தில விலாவாரியா எழுதுங்க. அப்புறம் எங்க திருச்சி பக்கத்தில சமயபுரம் மாரியாத்தாவுக்கு, மஞ்சக்குடம் எடுக்கிறதோட சரி. இப்படி அடிச்சி விளையாண்டுகிறது கிடையாது. ஆனா வட இந்தியாவில இது ஒரு முக்கியமான பண்டிகை. எப்படின்னு கேளுங்க!

வட இந்தியாவில நல்லா குளிரு ஆரம்பிக்கிறது சரியா ஜனவரி மாச நடுவில, அதாவது நம்ம போகிப் பண்டிகை கொண்டாடுறப்ப, இங்க லோடின்னு, பழயன கழிதலும், புதியன புகுதலும் மாதிரி, எல்லா பழய சாமானை போட்டு கொளுத்தி, ராத்திரியில ஆடி பாடி, குளிரை வரவழைப்பாங்க. அதே மாதிரி இந்த ஹோலி முடிஞ்சா, குளிர் முடிஞ்சுதுன்னு அர்த்தம், வசந்தம் ஆரம்பம்னு காலம் குறிக்கவும் இந்த பண்டிகையை குறிப்பிடறதுண்டு. ஆனா, இந்த பண்டிகை கொண்டாடுறத்துக்குண்டான கதை என்னான்னா, இரணியன்ங்கிற ராஜா, எல்லாரும் தன்னை கடவுளா நினைச்சு கொண்டாடனும்னு ஆசைப்பட்டப்ப, அவருடய மகன், விஷ்னு பக்த பிரகலாதா, அவரோட ஆணையை ஏற்காததால, அவனை தண்டிக்க வேண்டி, தன் சகோதரி ஹோலிகாவை அனுகுகிறார். அந்தம்மாவை நெருப்பெல்லாம் சுட்டு எரிக்கமுடியாதுன்கிறதால, சின்ன பையனா இருந்த பிரகலாதனை, தன் மடியில வச்சுகிட்டு நெருப்பில இறங்கிடறாங்க, ஆனா, பிரகலாதன் தொடர்ந்து விஷ்ணுவின் மேல் செய்த தவத்தின் காரணமா அந்த தீ சிதையிலருந்து எரியாம தப்பிடறார், ஆனா, ஒன்னும் செய்யமுடியாத நெருப்பு, இந்த ஹோலிக்கா அம்மாவை சாம்பலாக்கிடுது. இந்த தீய சக்திகள் ஒழியறதை காரணம் வச்சு, ஹோலிகாக்கள் நெருப்புல எரிஞ்சு சாம்பலாயிரதை முதல் நாள் ராத்திரி தீ மூட்டி கொளுத்தி கொண்டாடிட்டு அடுத்த நாள் எல்லாரும் கலரு தண்ணி அடிச்சி கொண்டாடுவதே இந்த ஹோலி.

இந்த ஹோலி கலரு ஊத்தி விளையாடறதுல்ல எந்த வரம்புகளும் கிடையாது, யாரு வேணாலும், யாரு மேலே வேணாலும் கலர் தண்ணியை ஊத்தலாம். வெள்ளையும் சொள்ளையுமா போனீங்கன்னா, அன்னைக்கு அம்புட்டுத்தான். திரும்ப வர்றப்ப, ஆளே அடையாளம் தெரியாம வருவீங்க. இதில குழந்தங்க விரும்பி, பிச்சுக்காரி, தண்ணி பீச்சி அடிக்கிற பம்பு வச்சுக்கிட்டு அடிச்சு விளையாடுங்க. அதில சோகம் என்னன்னா, வெறும் கலர் குங்குமத்தில கரைச்ச தண்ணி அடிச்சா கரை எல்லாம் போயிடும். சமயத்தில டை கலரை மிக்ஸ் பண்ணி அடிச்சா அந்த கலர் போக கிட்ட தட்ட ஒரு மாசம் ஆகும் பாருங்க. இன்னொன்னு வயசு பசங்க, வயசு பொண்ணுங்களை கலர் அடிச்சி பண்ற அநியாயம் அது வேறெ கதை. ஈவ் டீசிங் கேஸ் எக்கசக்கமா பிடிபடும். இருந்தாலும் கலர் அடிச்சு பயங்கரமா கொண்டாடுவாங்க. அதுவும் குடும்பங்கள்ல, தெரிஞ்சவங்கள்ல கொஞ்சம் ஜாஸ்தியாவே சுதந்திரம் எடுத்துக்கிட்டு, கலர் பூசி விளையாடுவாங்க. அப்புறம் மக்கள் புல்லா ஏத்திக்கிட்டு அடிக்கிற லூட்டி சொல்லி மாளாது.

ஆரம்பத்தில, நமக்கு ஹோலி நாள்னா வீட்டிலேயே சிறைதான். வெளியில எங்கேயும் போறதில்ல. அப்புறம் வருஷங்கள் ஆக ஆக எல்லோருடனும் பழகனோன்ன, ஹோலி சேர்ந்து விளையாடுவது ஒரு ஆனந்த கூத்துன்னு வச்சுக்கங்க. நீங்க போகலேனாலும், உங்க வீட்டுக் கதவை தட்டி, கலர் குங்குமத்தை வச்சிட்டு, 'ஹோலி முபாரக்'ன்னு சொல்லிட்டு போவாங்க. அதுக்கு பொம்பளங்க,ஆம்பளங்கன்னு கோஷ்டி கோஷ்டியா வீடு வீடா போயி வாழ்த்து சொல்றது, அப்புறம் கலர் பூசி கட்டி பிடிச்சிக்கிறது ஒரு ஜாலி. அதே மாதிரி முத நாளே ஆபிஸ்கள்லயும் கலர் பூசி, மிட்டாய் கொடுத்து கொண்டாடுவது வழக்கம், ஏன்னா, ஹோலி நாளு, ஆபிஸ்ங்க எல்லாம் லீவு. இது ஏன் நம்ம தமிழ் நாட்டில அவ்வளவு பாப்புலரா இல்லன்னு தெரியல்ல. ஏன்னா, தசாவதார புராணம் எல்லா பக்கமும் ஒன்னு. எப்படி நம்ம கொண்டாடாம விட்டுட்டோம், காரணம் தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க.

இன்னொன்னு, நீங்க கொஞ்சம் நகரத்தை விட்டுட்டு உள்ள இருக்கிற கிராமங்களுக்கு போனீங்கன்னா, இதை விட கூத்து அதிகம் இருக்கும்.நான் அப்படி தான் உ.பி.யில இருந்தப்ப, ஹோலி அப்ப, தப்பி தவறி டில்லி கில்லி வந்தா மதியத்துக்கு மேலே பஸ் கிடைக்காது ஊரு போய் சேர, அப்புறம் உங்க காரு, வண்டின்னு எது இருந்தாலும், சரியா நீங்க வீடு போய் சேர்ந்தா அது உங்க அதிர்ஷ்டம். மதியத்துக்குள்ள போகவேண்டிய இடங்களுக்கு போய் சேர்ந்திடணும். அதுவும் அந்த மாதிரி பஸ்ங்கல்ல அந்த ஹோலி சமயத்தில போகற அனுபவம் தனி, ஏன்னா, மொத்த பஸ்ஸும் தண்ணியில மெதக்கும். டிரைவரும் நல்ல மப்புல இருப்பாரு. பஸ்ல சீட்டு கிடைச்சு உட்கார்ந்தா உங்க அதிர்ஷ்டம், இல்ல மூணு, நாலு மணி நேரம் பஸ்ஸுக்குள்ள புதைஞ்சு வரணும். யாருக்கும் இந்த அனுபவம் இருந்தா எழுதுங்க! அதுவும் குண்டும் குழியுமான ரோடுகள்ல, நான் போனது 80களின் கடைசி, இப்ப எப்படின்னு தெரியல.

அதே மாதிரி ராஜஸ்தான்லயும், இந்த ஹோலி பண்டிகை ரொம்ப சிறப்பா கொண்டாடுவாங்க, கிராமங்கள்ள, அங்கங்க ஹோலிக்கான்னு அந்த முத நாள் தீ கொளுத்தி சுத்தி நின்னு ஆடிப்பாடுறது கண் கொள்ளாக் காட்சி, அதுவும், அந்த ராஜஸ்தானி ஸ்டைல்ல, உண்டான நடனங்கள், சரிகை கண்ணாடி களான டிரஸ் போட்டுகிட்டு, தம்பூரா வாசிசுக்கிட்டு ஆடும் நடனங்கள், ஓ.. கிளாஸிக், எப்பவாது, இது போன்று ராஜஸ்த்தான் போகும் வாய்ப்பு கிடைத்தா, தவற விட்றாதிங்க. அந்த பாலைவன காட்டிலே, அழகு நிலா மேட்டிலே, கும்மென்று கருத்து கிடக்கும் இருட்டினிலே, ராஜ்புத்ர மாந்தரும், வீரர்களும், சின்ன குழந்தைகளும், மண் பறக்க, ஆடும் நடனங்கள், அப்பா, கிராமத்து மண் வாசனைன்னு சொல்வாங்களே, அப்படியே இருக்கும். இன்னொன்னு, ஹிந்தி பேசற Heartlandல ராஜஸ்த்தான் மாநிலம் தான் முழுக்க முழுக்க இந்துக்களால் கொண்ட ராஜ்ஜியம்.

இங்க தான் அந்த ஹோலிகா எரியும் கொள்ளையிலிருந்து இளைஞர் வெளிய வர்றது, சரியான முகூர்த்த நேரத்தில, நடுநிசி 2 மணிக்கு அந்த கிராமத்து புரோகிதர் தீ வச்சு கொளுத்தி, அந்த பிரகலாத கதை மாதிரி இளைஞர் சுத்தி வர்றதை எல்லாம் பார்க்கமுடியும். இங்கே, பாரதிராஜா படம் மாதிரி ஒரு ஐதீகம் இருக்கு, அதாவது, எந்தெந்த வாலிபர்ங்க கல்யாணம் பண்ணீக்கனும் ஆசைப்படறோங்களோ, அதை அந்த எரியும் தீ முன்னே வேண்டிக்கிட்டு திரும்பி பார்க்காம வீட்டுக்கு ஒடிடணும். அப்படி வீட்டுக்கு ஓடும் வரை அந்த கொள்ளி கட்டு எரிஞ்சு முடியாம இருந்தா அவனுக்கு அந்த வருஷமே கல்யாணமாயிடும்.அதே மாதிரி கல்யாணமான பொண்கள், தன் கணவன்மார்கள் தீர்க்காயிசா ரொம்ப நாள் இருக்கணும்னு அந்த தீக்கொள்ளி முன்ன வேண்டிக்குவாங்க, அப்படி வேண்டிக்கிட்டா புருஷனுக்கு ஆயிசு கெட்டின்னு ஒரு ஐதீகம்.( நம்ம வீடுங்கள்ல நம்ல கொள்ளிகட்டுல இறக்கிவிடாம இருந்தா சரி!)

இந்த ஹோலிகளும் ஹிந்தி திரைப்படங்கள்ல ஒரு தனி இடம் பிடிச்சி வச்சிருக்கு. ரொம்ப பேமஸ் ஆன ஹோலி சாங்ஸ் எல்லாம் இருக்கு. அதெல்ல முக்கியாமா ஷோலே படத்தில நம்ம மாமி ஹேமாமாலினி பாடி ஆடின ஹோலிப்பாட்டு ரொம்ப பிரசித்தம். இப்படி வண்ணக்கலவைகளின் வர்ணம் பூசி, வாழ்த்து தெரிவிப்பதே இந்த ஹோலியின் மெயின் ஹைலைட்! ஆகையால் இது வந்திட்டாலே இப்படி 'ஹோலி.. ரே..ஹோலி' கூப்பாடு போட்டு கொண்டாடுறது வட இந்தியாவில இருக்கிற நம்ம தமிழர்களுக்கு பரிச்சயமான ஒன்னு!

8 comments:

said...

எங்க ஊர்ப் பக்கமும் மஞ்சத் தண்ணி வழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் ஈரோடில் மாரியம்மன் பண்டிகையில் கம்பம் புடுங்குற அன்னைக்கு இதே ஸ்டைலில் மஞ்சத் தண்ணி அடிக்கிறது நடக்கும். பஸ் நிப்பாட்டிடுவாங்க, வெளியே போக முடியாது. ஊரே கொண்டாடும் விசேஷம் இது. ஆனால் பெண்கள் மீது ஊத்தக்கூடாதுன்னு இப்போ சமீபமா ரூல் போட்டிருக்காங்க.
ஆனால் எங்க பாடு பாருங்க, அன்னைக்குத்தான் ஏதாச்சும் அவசர கேஸ் மாட்டிடும். ஒருத்தர் கார்லே போய் மத்தவங்க டூவீலர்லே போக நேர்ந்தால் மஞ்சள் குளியல்தான். பெண்கள் மேல் ஊற்றமாட்டாங்க என்பதால் நாந்தான் டூ வீலர்லே மாட்டுவேன். ஆனாலும் அந்தக் கும்பலுக்கு நடுவே டாக்டர் ஸ்டிக்கர் ஒட்ன வண்டியிலே பந்தாவா ( சீரியஸ் முக பாவனையுடன்) போறது ஒரு கிளுகிளுதான். இதோ இந்த வருஷம் கால் நட்டியாச்சு!

said...

நல்ல பதிவு. நேற்று இங்கு (மும்பை) மதியம்வரை ஒரே கூத்துதான். முதல்நாள் இரவு 'தண்ணி' பார்ட்டிதான். ஆனாலும் என்னால் இரசிக்கமுடியவில்லை.

பூம்புகாரில் வசந்தோற்சவம் கொண்டாடப் படுவதாக சிலம்பு சொல்லும். அந்த ஆட்டமும் பாட்டமும் ஏன் தொடரவில்லை என்று தெரியவில்லை.

said...

மஞ்சாத்தண்ணி டாக்டரம்மா மேலே ஊத்த மாட்டாங்கங்கிற தெம்பு ஜாஸ்தி தான் உங்களுக்கு! இந்த டாக்டர் ஸ்டிக்கர் மாதிரி இஞ்சினியர் ஸ்டிக்கர் அவ்வளவு எடுபடலேயே ஏன்??

said...

மணியன், எனக்கும் ஆரம்பத்தில இப்படி பிடிக்காம போச்சு, அப்புறம் ஜாலியாதான் இருந்திச்சு, பூம்புகாஎ வச்ந்தோற்சவம் பத்தி பதிவு போடுங்களேன்!

said...

பாங்க் (bang) அடிச்ச கதையை எடிட் செய்த வெ. நா வை வன்மையாய் கண்டிக்கிறேன் :-)

said...

சின்ன வயசில 70களின் கடைசியில புது தில்லியில கொஞ்ச நாள் இருந்தப்ப ஹோலி பார்த்திருக்கேன்.
சின்ன சின்ன பலூன்ல தண்ணி ரொப்பி முடிச்சுப் போட்டு மத்த பிள்ளைங்க மேல தூக்கி எறிவாங்க.
பலூன் வெடித்து தண்ணி சிதறும். இந்த ஊர் பனி பந்து விளையாட்டு மாதிரி. ஹோலிக்கு கொஞ்ச நாள் முன்னாடியே இந்த விளையாட்டு
ஆரம்பிச்சிட்டது நினைவுக்கு வருது.

அன்புடன்
சாம்

said...

உஷா, இப்படி போட்டு கொடுத்திட்டீங்க:-) பாங்க் போட்டு ஊரே மிதக்கிறப்ப, என் பண்றது??

said...

வரவுக்கு நன்றி சாம்! இந்த பலூன் விளையாட்டு இன்னும் இருக்கு, கலரு தண்ணி கலந்தோ, சும்மோவோ தெருவில போனா எங்கிருந்து வரும்னு தெரியாது போங்க!