Monday, March 13, 2006

நாலு எழுத நாளாகிபோச்சு!

சும்மா நானும் இந்த நாலை பத்தி கிண்டலடிச்சிக்கிட்டு இருந்தேன், என்ன எல்லாரும் நாலு நாலா நாள் பூரா எதாவது எழுதிகிட்டிருக்காங்களேன்னு. அப்பத்தான் குமரன் நம்மல இந்த ஆட்டத்துக்கு இழுத்துவிட்டுட்டு இப்ப லீவு போட்டுட்டு ஊர் சுத்தப்போறாரு. அதுக்குள்ள போடலாமுன்னு தான் இந்த நாலு சமாச்சாரத்தை எழுத ஆரம்பிக்கலாமுன்னு யோசிச்சப்ப, நமக்கும் பிடிச்ச நிறைய நாலுங்க இருக்குன்னு தெரியவந்துச்சு.

சின்ன புள்ளயா இருந்தப்ப புடிச்ச நாலு:

எங்க பூக்கடையில மூலையில உட்கார்ந்து மத்தியானம் கேரியர்ல வர்ற சாப்பாட்டை நல்ல தலவாழை இலைப்போட்டு சாப்பிட பிடிக்கும். கூட அண்ணாமராட்ட கடையிலருந்து வாங்கி வந்த கோலா உருண்டையோட சேர்த்து சாப்பிட பிடிக்கும்.

நானும், என் பால்ய சினேகிதன் தனபாலும் ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் சாய்ந்திரம் அப்படியே காலாற நடந்து மெயின்கார்டுகேட்டுக்கோ, இல்ல ஜங்ஷனுக்கோ போயி, ராத்திரி ஜங்ஷன் பக்கத்தில, எம்பளாயிமென்ட் ஆபிஸ் பக்கத்தில இருந்த டிரைவின்ல (கவிதாவோ, இல்ல ரத்னாவோ பேரு) சாப்பிட்டுட்டு, மெயின்கார்டுகேட்டாண்ட இருந்த பத்மாவில்ல சாப்பிட்டுட்டு, பிறகு ராத்திரி ஆட்டம் சினிமாவுக்கு போறது ரொம்ப பிடிச்ச ஒன்னு

எங்க வெளிகண்ட நாதர் கோவிலுக்கு போற உய்யகொண்டான் ஆத்துபாலத்தில பட்டம் விடுறதும், இல்ல எங்க வீட்டு மொட்ட மாடியில பட்டம் விடுறதும், அதுக்காக, மாஞ்சா போடுறேன்பேர் வழின்னு, இருக்கிற பாட்டில உடைச்சி தூள்பண்ணி, அப்புறம் ஊமத்தை இலை, மஞ்சக்கலர் வேணும்னு செந்தூரத்தை கலந்து டொயின் நூல்ல போட்டு பட்டம் விட்டு, அறுந்த பட்டத்தை எடுத்துக்கிறேன்னு, பக்கத்து வீட்டு ஓட்டு மேலே ஒடி அதை உடைச்சி, அந்த வீட்டு அம்மாட்சிக்கிட்ட தினம் பாட்டு வாங்கிறது பிடிச்ச ஒன்னு.

எங்க தெருவில இருந்த வீடுகள்ல உள்ள திண்ணையில(இப்ப திண்னை வச்ச வீடுங்களை பட்ணத்தில பார்க்க முடியறதில்லை), தெரு பசங்களோட ஓடி விளையாடி தெருவையே உண்டு இல்லைன்னு ஆக்கிட்டு, அப்புறம் நிதம் எங்கள வஞ்ச அந்த பெரிய வீட்டு அக்கா, எங்களை ஒன்னும் செய்ய முடியாம கடைசியில எங்க கூட சேர்ந்து விளையாடி, 'இவ்வளவு பெரிய தடிமாடு, சின்னபிள்ளங்களோட என்ன விளையாட்டுன்னு அவங்க அம்மா திட்டியும் எங்களோட விளையாடி, கொட்டம் போட்ட அந்த தருணங்கள் பிடிச்ச ஒன்னு(அப்புறம் இரண்டு வருஷத்தில அது கல்யாணமாயி போனோன உண்டான சோகம் அது தனிக்கதை!)

இஞ்சினியரிங் காலேஜ் கோயம்புத்தூர்ல படிச்சப்ப பிடிச்ச நாலு:

தினம் சாய்ந்திரம் ஹாஸ்டலுக்கு பின்னாடி வழியா ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி போயிட்டு, வழியில பாட்டிக்கடையில சிகரெட் வாங்கிட்டு, அப்புறம் ரோட்டு கடை பேக்ரிக்கு போயி மரவள்ளிக்கிழங்கு சிப்சும், டீயும் சாப்பிட்டுட்டு ராத்திரி இருட்டி நேரா மெஸ்ல வந்து திரும்ப கொட்டிக்கிட்டு ரூம் திரும்பறது பிடிச்ச ஒன்னு!

காலங்காத்தால எழுந்து அந்த சிலு சிலு காத்தில கிரவுண்டுக்கு போயி ஒரு பத்து ரவுண்டும்,அப்புறம் அரைமணி நேரம் பேரலல் பாரும் செஞ்சிட்டு நேரா மெஸ்ல வந்து சூடா காப்பி குடிச்சிட்டு அரட்டை அடிக்கிறது பிடிச்ச ஒன்னு. அதே மாதிரி செம்ஸ்டர் எக்ஸாமுக்கு பயபக்தியா பரீட்சைக்கு முதன் நாள் பின்னாடி காலனில இருந்த பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வர்றது பிடிச்ச ஒன்னு (கொஞ்சம் பிகர்ங்கல பார்த்துட்டு வந்து உட்கார்ந்து படிச்சா நல்லா ஏறும், ரொம்ப மங்களகரமா இருக்கும்!)

குளிர்காலத்தில மூணுமாசத்துக்கொரு தடவை ஊட்டி போயிட்டு, மத்தியானம் ஜின்னு அடிச்சிட்டு நல்லா கறியும் கோழியும் சாப்பிட்டுட்டு பிறகு நடந்தே தொட்டபேட்டா மலை மேல ஏறி, போதை இறங்கி திரும்ப கீழே இறங்கி நடந்து வந்து பஸ்ஸ பிடிச்சு கோயம்புத்தூரு வந்து சேருறது பிடிச்ச ஒன்னு.

வாரம் வாரம் சனிக்கிழமை போடற ஓப்பன் ஏர் தியோட்டர்ல படம் பார்க்க, அடிச்சிபுடிச்சிக்கிட்டு சோத்த சீக்கிரமே எட்டு மணிக்கெல்லாம் மெஸ்ல தின்னுட்டு அப்புறம் மைதானத்தில போயி உட்கார்ந்து, பொட்டி வரலேன்னோ, இல்ல புரெஜெக்டர் ரிப்பேர்னு தேவுடு காத்துட்டு, அந்த கேப்பில சின்ன ஸ்கிட்டு போட்டு தெரு கூத்து மாதிரி மொத்த கும்பலும் எங்கள சுத்த, அப்புறம் எங்கள கேட்டு திரும்ப படம் ஆரம்பிக்கிற கூத்து எனக்கு பிடிச்ச ஒன்னு.

நாம் மெட்ராஸ்ல குப்ப கொட்டனப்ப பிடிச்ச நாலு:

கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்ல யிருந்து ராத்திரி ஷோவுக்கு படம் பார்க்க மெளண்ட் ரோடு போயிட்டு, அப்புறம் படம் பாத்துட்டு பஸ்கிடைக்காம, ராத்திரில புகாரில பிரியாணி சாப்பிட்டுட்டு லாரி புடிச்சு காலேஜ் வந்து சேர்றது பிடிச்ச ஒன்னு.

திருவல்லிக்கேணியில தங்கியிருந்தப்ப, தினம் ராத்திரி சாப்பாடு முடிச்சிட்டு, அப்படியே காலாற பைகிராஃப்ட்ஸ் ரோட்ல நடந்து போயி கண்ணகி சிலை தாண்டி, மெரினா பீச்சில போய் உட்கார்ந்துட்டு கடலையே வெறிச்சு பார்த்துட்டு ஒரு ஒரு மணி நேரம் உட்கார்ந்துருந்திட்டு வந்தது பிடிச்ச ஒன்னு.

வாரம் வாரம் ஞாயித்துக்கிழமை, நான் தங்கியிருந்த மேன்ஷன் கீழே, அதாவது ரத்னா கபே பக்கத்தில, இருந்த அங்குராசுக்கடை பிரியாணியை காலையில பத்து மணிக்கு சாப்பிட குருப்பா நாங்க தங்கியிருந்த ரூம் மேட்டுங்களோட சேர்ந்து போயி சாப்பிட்டுட்டு வர்றது பிடிச்ச ஒன்னு.

கிண்டி காலேஜ்ல ஞாயித்துக்கிழமைங்கள்ல காலையில மெஸ்க்கு லேட்டா போயி, காலை மெனு, ரவா தோசையை நம்க்குன்னு ஸ்பெஷலா போட்டு சுகமா சாப்பிட்டுட்டு வர்ற்து பிடிச்ச ஒன்னு ( மெஸ் குக், பாய் எல்லாரும் பக்கா தோஸ்து, நம்மல ஸ்பெஷலாக கவனிப்பாங்க!)

நான் டெல்லியில தங்கியிருந்தப்ப பிடிச்ச நாலு:

அப்ப அப்ப அசோகா ரோட்ல இருக்கிற ஆந்திரா பவன் போயி திவ்வயமா மத்தியான சாப்பாடு சாப்பிட்டு வர்றது பிடிச்ச ஒன்னு. (என் சக தர்ம பத்தினிக்கும் பிடிச்ச ஒன்னு, ஆந்திரா பவன் சாப்பாடுன்னா, நாக்க தொங்க போட்டுட்டு அலையறவங்க!)

வாரம் தவறாம ஏதாவது ஒரு மல்டிபிளக்ஸ்க்கு போயி படம் பார்த்துட்டு (குடும்பதோட தான்) பிறகு நல்ல நார்த் இண்டியன் காணா (சாப்பாடு) சாப்பிட்டு வீட்டுக்கு வந்து சேர்றது பிடிச்ச ஒன்னு!

அப்ப அப்ப காரை எடுத்துக்கிட்டு இமயமலை அடிவாரம் போயிட்டு வர்றது ரொம்ப பிடிச்ச ஒன்னு, அதுவும் ஹிமாச்சல், ஹுமாயுன், கர்வால் மலைத்தொடர்கள், அக்சர்தாம், அப்படின்னு பத்து நாள் தங்கி வர்றது பிடிச்ச ஒன்னு. (நம்ம ரஜினி மாதிரி தான் அடிக்கடி இமயமலை அடிவாரம் போய்டறது, தியானத்துக்குன்னு இல்லனாலும், சிலு சிலு காத்து, இயற்கை சூழ்நிலை, மனசு நம்மக்கிட்ட இருக்காது போங்க!)

மோட்டர் பைக் இருந்த வரைக்கும் நாங்க மூணு பேரும் (நான், என் மனைவி, மகள்) அதில டில்லியையே சுத்தி வலம் வந்தது, அது 100 கிமீ னாலும் அசராம போய் வந்ததது பிடிச்ச ஒன்னு.

இப்படி நாலு நாலா நாலு இடங்கள்ல என் பிடிச்ச அனுபவத்தை எழுதிட்டேன். மேற்கொண்டு சினிமா, பாட்டுக்கள், பிடிச்சவங்க, போகவேண்டிய இடங்கள்,சாப்பாடு அயிட்டம் அப்படின்னு எல்லாத்திலேயும் வெறும் நாலோட முடிஞ்சிறதில்ல நம்மளுது. அதனால அதை பத்தி விரிவா எழுதல.

பிறகு வெறும் இந்த நாலு பேரை மட்டும் அழைச்சி இந்த சங்கிலி தொடர்ச்சி போட மனசில்லை. ஏன்னா, தமிழ் மணம்னு வந்திட்டா எல்லாரும் நமக்கு சினேகிதம். ஆக எல்லாருமே இந்த பிடிச்ச நாலுங்களை எழுதி போடுங்க, படிக்க ஆவலா இருக்கு!

8 comments:

said...

அடடடா....வாழ்க்கையை என்னமா அனுபவிச்சிருக்கறீர். கொஞ்சம் புகையுதேப்பா...

said...

அனுபவங்கள் பலவிதம்! இன்னும் எத்தனையே இருக்கு!

said...

"இன்னும் எத்தனையே இருக்கு!"//
- எனக்குத்தெரியுமே அதில நிறைய வெளிய சொல்ல முடியாதுன்னு...!

said...

நீங்க போட்டு குடுத்திருவீங்க போலருக்கே!

said...

கோவையில எந்த காலேஜுல சார் படிச்சீங்க? நீங்க சொல்ற வர்ணனையெல்லாம் பாத்தா சி.ஐ.டி. மாதிரி இருக்கே? நான் சி.ஐ.டி.யில தான் எம்.ஈ. படிச்சேன்.

அது என்ன மெட்ராஸுல மட்டும் குப்பை கொட்டியிருக்கீங்க? மத்த எடத்துல எல்லாம் என்னத்தைக் கொட்டுனீங்க?

இப்ப இருக்கிற ஊரைப் பத்தி மூச்சு விடலியே? அங்க எழுதுற மாதிரி நாலு விஷயம் இல்லையா என்ன? :-)

said...

முதல்ல கையை கொடுங்க குமரன், நீங்க நம்ம காலேஜ் போங்க, ரொம்ப நெருங்கிட்டோம்.

மெட்ராஸ்ல கொஞ்சம் ஜாஸ்த்தி!

இப்ப இருக்கிற ஊரை அப்புறமா எழுதுறேன். என் வொய்ப் படிச்சிட்டு, ஒரு நூறு ஐயிட்டம் போட்டு பெரிய லிஸ்டே சொன்னாங்க, பிடிச்சதுன்னு, ரெண்டு பெருக்கும் தான், அதை தனியா இன்னொரு பதிவு போடறேன்

said...

சி.ஐ.டி. ஆளுங்க எக்கச்சக்கமா இருக்கீங்க போல? கோபாலும் சி.ஐ.டி. தான், ஆனா அந்தக்காலம்!

said...

பார்த்தீங்களா கூட்டம் சேர்த்தாச்சு, கோபாலும் நம்ம கட்சி தான். இனி நாங்க மெஜாரிட்டி!