Sunday, March 05, 2006

ஆஸ்கர் இரவு - நாம் ஏன் இல்லை!

இன்று டிவியில் உட்கார்ந்து முழுசுமா ஆஸ்கர் பரிசு விழா நிகழ்ச்சியை பார்த்தேன். இது பற்றி அதிகம் தெரியாத அந்த நாட்களிலே இதை பற்றி பத்திரிக்கைகள் பேச கேள்விபட்டிருக்கிறேன். இந்த பரிசனை பெற பழைய தமிழ் படங்கள் சிலவும் போட்டியிட்டன எனவும், அதிலும் கமல் நடித்த 'நாயகன்', மற்றும் 'ஹேராம்' படங்கள் எல்லாம் அப்போது போட்டி இட்டன என்று தெரியும். ஆனால் இவைகள் எவையுமே பரிசு சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்று பிறகு தெரிந்தது. கமலஹாசன் அடிக்கடி பேட்டிகளில் எப்படியும் நாம் ஆஸ்கார் பரிசு வாங்கிவிட வேண்டும் என்று கூறி கொண்டிருப்பார். எத்தனையோ அவருடய படங்கள் நமக்கு பிடித்து, எப்படியும் பரிசு வாங்கிவிடும் என்று நம்பிக்கையிருந்தாலும் கடைசியில் எதுவும் தேறுவதில்லை, ஆக கமல் அதைப்பற்றி விரக்தியாக பிறகு பேட்டி கொடுத்ததையும் படித்திருக்கிறேன். ஆக இது என்ன என்று தெரிந்து கொள்ள ஆசை அப்பொழுதிருந்தே, மேற்கொண்டு நான் இப்பக்கம் வந்த பின் அதில அதிகம் ஈடுபாடு கொண்டு விவரம் தெரிஞ்சுக்க முற்பட்டேன்.

ஆஸ்கார் விருது என்பது அமெரிக்கர்களால், அவர்களின் அமெரிக்கன் மோஷன் பிக்ஸர்ஸ் அஸோஸியேசன் வருஷா வருஷம் அமெரிக்காவில், ஹாலிவுட்டில், தயாரிக்கபட்ட ஆங்கில படங்களுக்கு சிறந்த படம், டைரக்டர், நடிகர், நடிகை, மற்றும் அனைத்து சினிமா தொழில்நுட்பத்துறைகளிலும் சிறந்தவைக்கு பரிசு கொடுப்பது. அதை 'அக்கெடமி அவார்ட்' என்று கூறுவார்கள். நம்ம ஊர்ல தமிழக அரசு தமிழ் திரைப்படங்களுக்கும், இந்திய அரசு அனைத்து மொழித்திரைப்படங்களுக்கும், பரிசுகள் கொடுப்பது போலவும் மற்றும் 'ஃபில்பேர் அவார்ட்' ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வரும் படங்களுக்கு பரிசளிப்பது போல. இந்த ஆஸ்கார் விருது வருடா வருடம் தொடர்ந்து கொடுக்கப்பட்டு, இவ்வருடம் 78 வது முறையாக கொண்டாடப்படுகிறது. 1955ம் ஆண்டு வரை அது அமெரிக்காவில் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் தான் தரப்பட்டது, பிறகு 1956ம் ஆண்டிலிருந்து, வெளிநாட்டு மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து ஒருசிறந்த படத்துக்கும் , இந்த ஆஸ்கார் விருதனை வழங்கி வருகின்றனர்.

அப்படி சிறந்த வெளிநாட்டு படங்களின் பிரிவுக்குத்தான் நம் நாட்டு படங்களும் அனுப்ப படுகின்றன. அப்படி அனுப்ப பட்ட படங்களே, இந்த 'நாயகன்', 'தேவர்மகன்', 'குருதிப்புனல்', 'இந்தியன்', 'ஜீன்ஸ்' 'ஹேராம்' போன்ற படங்கள். முழுப்பட்டியலை காண, நீங்கள் விக்கிப்பீடியாவில் பார்க்கலாம். அப்படி அனுப்பினாலும், அப்படங்கள், அனைத்து தேசத்துடன் போட்டியிட வேண்டும். பிறகு அது தகுதி உள்ள படமாக இறுதி சுற்றுக்கு வரவேண்டும். அப்படி இறுதி சுற்றுக்கு வந்த படங்கள், மூன்று தான் நம் நாட்டிலிருந்து. அவை, 'மதர் இந்தியா' (1957), 'சலாம் பாம்பே' (1988), 'லகான்'(2001). ஆக நம் தமிழ் படங்கள் அதிகமாக இந்த ஆஸ்கார் விருதுக்கு போயிருந்தாலும், இறுதி சுற்றுக்கு வர தகுதி பெறவில்லை.

இந்த வெளி நாட்டு பிரிவுகளில், அதிகமாக பிரஞ்சுப்படங்கள் , 34 முறை இறுதி சுற்றுக்கு வந்து, 9 முறை பரிசு வென்றிருக்கிறது. அதே போல இத்தாலியை சேர்ந்த படங்கள், 27 முறை இறுதி சுற்றுக்கு வந்து, 10 முறை பரிசு வென்றிருக்கிறது. பிறகு ஸ்பெயின் 19 முறை இறுதி சுற்றுக்கு வந்து, 4 முறை பரிசு வென்றிருக்கிறது, அதே போல, சுவீடன் நாட்டு படங்கள் 14 முறை இறுதி சுற்றுக்கு வந்து 3 முறை பரிசு வென்றிருக்கிறது. ஆக பெரும்பாலும் ஐரோப்பிய நாட்டுப்படங்களே அதிகம் வெற்றி பெற்றிருக்கிறது. அமெரிக்கா நாடு, ஐரோப்பிய சமுதாயத்திலிருந்து வந்து குடியேறியவர்களின் நாடென்பதால், அந்த கண்டத்திலைருந்து வந்த நாடுகளே பரிசை பெற்று சென்றனவோ என்னமோ!

ஆனால், இந்த இறுதி சுற்றுக்கு வந்த இந்திய திரைப்படங்களிலே அதிகம் பேசப்பட்டது, அமீர்கான் நடித்து வெளிவந்த லகானைப்பற்றி தான். இங்கு, இந்த ஆஸ்கார் பரிசு வாங்க வேண்டுமென்றால், அதற்கென நிறைய மெனக்கிட வேண்டும். இங்கு ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்க ஜூரிகள் என்ற நடுவர்கள் குழு கொண்ட அமைப்பிடம் நிறைய மார்க்கெட்டிங் செய்ய வேண்டும், பிறகு அவர்களிடம் படத்தினை நன்று புரமோஷன் செய்து, ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி அமீர்கான் நன்கு செய்தும் கடைசியில் பரிசை தட்டி செல்ல முடியவில்லை. என்னதான், நாம் சினிமா தொழில்நுட்ப வகையில் ஹாலிவுட்டை மிஞ்சும் வகையில் படங்கள் பிடித்து வெளியிட்டாலும், இன்னும் அவர்களின் அளவுக்கு நெருங்கவில்லை போலும். அது தான் எந்த பரிசும் கிடைப்பதில்லை போல.


மேற்கொண்டு சிறந்த இந்திய திரைப்படங்களை தேர்வு செய்வதிலும் நம்மிடையே ஏகப்பட்ட குழப்பம் இருக்குறது. படங்களை தேர்வு செய்வது, 'Film Federation of India' என்ற அமைப்பு. சில வருடங்களில் எந்த படங்களையுமே அனுப்பவதில்லை. இந்த ஆண்டு 'பெகலி' என்ற ஹிந்திபடத்தை தேர்வு செய்து அனுப்பினார்கள், அது இறுதி சுற்றுக்கு வர தகுதி பெறவில்லை. இந்த படம், தன் கணவன் உருவில் வந்த பூதத்துடன் உறவாடும் கதாநாயகி, அதன் மேல் கொண்ட காதல் பற்றி. படத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி நடிக்க, ஹிந்தி நடிகர் அமோல் பலேகர் இயக்கியது. நம்மூரு 'காதல்' படத்தையும், 'அந்நியன்' படத்தையும் தேர்வு செய்து வைத்திருந்தினர். ஏனோ அப்படங்களில் ஒன்றையும் அனுப்ப வில்லை.

கமலஹாசனும், மருதநாயகத்தை எடுத்து, அதை எப்படியும் ஆஸ்கர் பரிசு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார். ஆனால் அப்படம் என்னவாச்சு என்றே தெரியவில்லை. கிணத்தில் போட்ட கல்லை போல இன்னும் அப்படியே இருக்கிறது. இப்பொழுது சில கூட்டங்களில், இல்லை பேட்டிகளிலும், கமல், சீ,சீ இந்த பழம் புளிக்கும் என ஆஸ்கர் பத்தி பேசுகிறார். கலைஞனுக்கு என்றும் அசர்வு என்பது ஏற்படக்கூடாது. கமல் மீண்டும் முயற்சி செய்து, எப்படியும் ஆஸ்கர் பரிசு வாங்க முற்பட வேண்டும். இப்போது அமெரிக்காவிலும், இந்திய படங்களின் மீது ஒரு புதிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது, அனைவரும் 'பாலிவுட் மசாலா' என்று விரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஆக நல்ல படங்கள் எடுத்து இந்த ஆஸ்கர் விருதுக்கு அனுப்பினால் மட்டும் போதாது, அதற்கென்று சில சூட்சமங்களும், மார்கெட்டிங் டெக்னிக்னிகளும் முறையாக பின்பற்றினால் பரிசு கிடைக்க வாய்ப்புண்டு.

இந்த 78ம் ஆஸ்கர் விருது, வெளிநாட்டு படங்களின் பிரிவுக்கு, தென் ஆப்பிரிக்க படம் 'TSOTSI'க்கு விருது கிடைத்துள்ளது. இந்த படம், நகரசுழலில், ஏமாற்றபட்ட, வன்முறையை கையாளும் ஒரு கோபமான வாலிபன் பற்றியது, கடைசியில் அன்பு தான் ஜெயிக்கிறது. இது போன்ற கதைகள் நம்மிடையே அதிகம், ஆனால் நாம் ஏன் பரிசனை வெல்வ முடிவதில்லை. நம் திரையினருக்குத்தான் வெளிச்சம்.

கடைசியாக, எனக்கு பிடித்த ஹீரோயின் 'Reese Witherspoon' (ரீஸி விதர்ஸ்பூன்)க்கு சிறந்த நடிகைக்கான பரிசு அவர் நடித்த 'Walk the Line' என்ற படத்துக்கு கிடைத்துள்ளது. இவருடய சிறந்த 'Chick Flick' படங்களில் மறக்க முடியாது 'Legally Blonde'. நாய்குட்டியும் கையுமாய், கோர்ட் வந்து புத்திசாலியாய் வாதாடும் அழகே தனி!. கேஸட் கிடைத்தால் பார்க்கவும்!

1 comments:

said...

வெளிகண்ட நாதர். என்னுடைய பதிவைப் பார்த்தீர்களா? உங்களை வம்புக்கு இழுத்திருக்கிறேன். :-)

http://koodal1.blogspot.com/2006/03/154.html