Tuesday, February 07, 2006

எனை ஆண்ட அரிதாரம்- ஏழாம் பகுதி

இந்த தொடர் எழுத ஆரம்பிச்சு, ஒவ்வொரு தொடர்லயும் ஒரு முடிச்சை போட்டுட்டு, அதை அவுக்காம, தொடர்ந்து எழுதிக்கிட்டு இருந்தா அது படிக்கிறவங்களுக்கு ஒரு சுவாரசியத்தை கொடுக்கும்,
எப்பதான் போட்ட முடிச்சு அவுப்பாருன்னுங்கிற எதிர்பார்ப்பு இருந்துகிட்டே இருக்கும. ஆனா சொல்லாமலே நீடிச்சுக்கிட்டு போனா, அது கடைசியில போராடிக்கிமுன்னு எனக்கு நல்லவே தெரியும். அதனால, மூணாவது தொடர்ல, நான் நம்ம நடிகர் நாசரோட போட்டி போட்டேன்னு எழுதி இருந்தேன், அது எப்படின்னு கேட்கலையே நீங்க!

இஞ்சினியரிங் காலேஜ்ல முத வருஷம் ஒரு மாதிரியா முடிஞ்சது, முத செமஸ்டர்ல, ஏனாதானோன்னு பரீட்சை எழுதி கம்மியா எல்லா சப்ஜக்ட்லேயும் மார்க் வாங்கின சோகம், அதான் மாஸ் கட் அடிச்சிட்டு படிக்கிறேன் பேர்வழின்னு ராதிரி பூரா சீட்டாட்ட கச்சேரி நடித்திட்டு, லீவு இருந்த மூணு மாசத்தில இரண்டரை மாசத்தை சினிமா, சீட்டு, அப்படின்னு போக்கிட்டு, கடைசி இரண்டு வாரத்தில படிச்சி பரீட்சை எழுதனும்னா எப்படி, வர்ர மார்க்குதான வரும். இஞ்சினியரிங் காலேஜ் வரதுக்கு முன்னாடி அதிக மதிப்பெண்களோட எஸ்.எஸ்.எல்.சி, பிடிசியில எல்லாம் மார்க்கு வாங்கி பெருமையா இருந்த ஆளு இப்படி காலேஜ் அடி எடுத்து வச்சதும், ஊத்துக்கிச்சினா வருத்தம் இல்லாமலா இருக்கும். ஆக இரண்டாம் செம்ஸ்டர்ல, ரொம்ப உத்வேகமா படிச்சி, இழந்த பெருமையை மீட்ட மாதிரி நல்ல மார்க்குகள் வாங்கியாச்சு. ஆனாலும், இடையே கிடச்ச நல்ல நடிகன், நாடகம் நல்ல போடக்கூடியவன்ங்கிற பேரு அப்ப ரொம்ப பெருமையா இருந்தது. ஆக இந்த படிப்பு பாடங்களை விட, இந்த நடிப்பு, நாடகம் மேல ஈர்ப்பு அதிகமா இருந்தது. அதுக்கு காரணம் நான் பார்த்த சினிமாக்கள் தான். அதிலயும் மூணாவது செமஸ்டர் ஒரு சோகமா ஆரம்பிச்சு படிப்புகள் அந்த காலகட்டத்தில இறங்குமுகமா இருந்த நேரம். ஏன்னா, இரண்டாவது வருஷம் நமக்கு ஹாஸ்டல் தரவில்லை. எங்க செட்ல, இரண்டாம் வருஷ ஸ்டூடன்ஸ்க்கு இருந்த அறைகளுக்கு அதிகமா ஆட்கள் இருந்த தாலே, அப்ப இருந்த ஹாஸ்டல் வார்டன் எப்படிடா ஒரு பதினஞ்சு பேத்துக்கு ஹாஸ்டல் இல்லன்னு சொல்றதுன்னு முழிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்ப உதவ வந்தாரைய்யா அந்த ஹாஸ்டல் அக்கொளடென்ட். சில பல சின்ன ஷேஷ்டைகள் முத வருஷத்தில நாங்க செஞ்சதை காரணம் காட்டி எங்களுக்கு இல்லைன்னுட்டாங்கே! என்னா அதிகமா ஒன்னும் தப்பு பண்ணல. செமஸ்டர் ஸ்டடி லீவுக்கு வூட்டுக்கு போறதுக்கு முன்னாடி எங்க மெஸ் ரிஜிஸ்டர்லை, ஹாஸ்டல்ல தங்காத நாட்களை குறிச்சுட்டு போகணும், சும்மா நாட்களை மட்டும் குறிச்ச பத்தாதுன்னு, அதற்கு காரணம் எழுத சொல்வாங்கே அந்த ரிஜிஸ்டர்ல. அதான் தெரியும்ல அவஅவென் வீட்டுக்குத்தான் போவான் ஸ்டடி லீவுன்னா, இதுக்கு காரணம் எதுக்கு? அப்ப தான் நம்ம கோணபுத்தி நம்மல கிறுக்கப் பண்ண வச்சுச்சு. அந்த காரணத்துக்கு, ஐயா ரொம்ப விவரமா, பாம்பேக்கு போறதாவும், அதுவும் வெறுமன பாம்பே போனா பத்தாதா, பாம்பேக்கு பொண்ணு பாக்க போறாதா எழுதி வச்சுப்புட்டு வந்து புட்டேன். இது போதாதா, அடுத்த வருஷம் ஹாஸ்டல் இல்லன்னு சொல்லி கழிச்சிகட்ட. நானாவது பரவாயில்ல, சில பேரை வெளியில தள்ளனும்னு, நல்ல இருக்கக்கூடிய சில சாமியார் பசங்களையும்ல சேர்த்து வெளில தள்ளுனாங்கே!

வெளியில சிங்காநல்லூர் போற ரோட்டு பக்கத்தில இருந்த சின்ன குடியிருப்பகள்ல அவுட் ஹவுஸ் மாதிரி கட்டி வச்சு ரூம் கொடுப்பாங்க, கல்லூரிகள் அதிகம் நிறைந்த அந்த பகுதியில கொஞ்சம் பேச்சலர்ங்க நிறைய பேரு ரூம் எடுத்து தங்கி படிப்பாங்க. பக்கத்தில மெடிக்கல், பாலிடெக்னிக், ஆர்ட்ஸ் காலேஜ், அப்புறம் டெலிபோன் எக்ஸேஞ், சித்ரா (SITRA)ன்னு வேலை பார்க்கிற இளைஞர்கள் கும்பலும் நிறைய உண்டு. அப்படி தான் நமக்கு ஒரு வீட்ல அவுட் ஹாவுஸ்ல ரூம் கிடைச்சிச்சு. கூடவே சோத்தையும் போட்டாங்க அந்த வீட்ல, அதாங்க கொளவ்ரதையா பேயிங் கஸ்ட்ன்னு சொல்வாங்களே, அந்த மாதிரி. அது மணவாடு வீடு, நம்மலும் கொஞ்சம் தெலுங்கு மாட்லாடிப்போம் அப்ப. அதுனால அந்த வீட்டுக்காரம்மாவுக்கு நம்ம மேல அதிகமா கரிசனம். பத்தாதுக்கு வீட்ல ஒரு வயசு பொண்ணு ஒன்னு வேறே இருந்தது. ஏதாவது பத்திகிட்டு எரியறதுக்கு முன்ன காலி பண்ணிட்டு ஒடுனும்டா சாமின்னு, அடுத்த செமஸ்டர்ல, நமக்கு ப்ரண்ட்லியா இருந்த கெமிஸ்ட்ரி புரெபெசர் வார்டனா வந்தோன, கெஞ்சிக் கூத்தாடி ரூம் கேட்டு வாங்கி ஹாஸ்டலுக்கு ஒடிட்டேன். அப்ப கொஞ்சம் விவரம், படிச்சு முடிக்குமுன்னே காதல், கத்திரிக்கான்னு இறங்கிக்கல்ல. அப்படி இருந்தும் சில சமயங்கள்ல ராத்திரிக்கு சில நேரங்கள்ல பக்கத்தில இருந்த அக்கா மெஸ்க்கு போவோம். அந்த மெஸ்ல இருந்த அக்கா திடிர்ன்னு ஒரு நாள் எங்க கூட வந்திக்கிட்டு இருந்த தோஸ்த்து ஒருத்தனை சும்மானுலும் பலி சொல்லி என்னை அங்க பார்க்கிறான், இங்க பார்க்கிறான்னு அதையும் அப்புறம் போறதை நிறுத்திக்கிட்டோம். ஹாஸ்டல் கிடைக்கிலையேங்கிற கவலையில படிப்பு மூணாவது செமஸ்டர்ல கொஞ்சம் மந்தம் தான். ஆனா எந்த பாடத்திலையும் பெயிலாகல கடைசி வர, அது தான் யாரு செஞ்ச புண்ணியமோ!

இப்படி நாடகங்களே கதின்னு, அதே சிந்தனையோட நல்லதா ஒரு நாடகம் போட்டேம், பேரு "முகாரி ராகங்கள்"ன்னு வச்சோம். அது அப்ப வந்த பசிங்கிற படத்தோட தழுவல் மாதிரி. குடிசையில குமரி வாழ்க்கை எப்படி சீப்படுதுங்கிறதை அழகா, அப்ப துரைன்னு ஒரு டைரக்டர் இருந்தாரு, அவரு எடுத்தது. அவர் நல்ல படங்கள் கொடுத்தவரு.
சுமித்திரா, முதன் முதல்ல நடிச்ச "அவளும் பெண்தானே" ங்கிற படம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கோ தெரியல, எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அப்புறம் டி.ராஜேந்தர் மியூசிக் போட்டு, அவர் எடுத்த 'கிளிஞ்சல்கள்' மறக்க முடுயுமா? அப்ப மைக் நடிகர் மோகன் பிரபலமா இருந்த நேரம், பயணங்கள் முடிவதில்லை பிச்சிகிட்டு ஒடி மோகனும் பூர்ணிமா ஜெயராம் ஜோடி ரொம்ப ராசின்னு அவங்களை போட்டு, அப்பதான் ஒருதலைராகம் படத்துக்கப்பறம் ரொம்ப பேமஸ்ஸா இருந்த டி.ராஜேந்தரை மியூசிக் போட சொல்லி எல்லா பாட்டும் செம ஹிட்டு. அப்ப இந்த பசி படத்தில ஷோபாவும், கூட புதுசா நடிச்ச சத்யாங்கிற பொண்ணு, சும்மா மெட்ராஸ் பாஸையில நடிச்சு வெளுத்து வாங்கி இருந்தாங்க, அப்புறம் அந்த பொண்ணுக்கு பசி சத்யான்ன்னே பேரு வந்தது. இரண்டு பேரும் குப்பை பேப்பர் பொறுக்கி ஜீவனம் நடத்துவாங்க, அப்ப ஷோபா எப்படி சீரழியுதுன்னு நல்லா எடுத்த இருந்தாரு அந்த டைரக்டர் துரை. அதை பேஸ் பண்ணி ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியோட குடும்பம் எப்படி அவன் பொறுப்பா நடக்காதைதால சீரழியுதுன்னு சொல்லிருந்தோம். அவன் பொண்டாட்டி ஒரு பெரிய செல்வந்தன் வீட்ல வேலை செய்வாள், அவ பொண்ணும் கூட போய் ஒத்தாசையா வேலை செஞ்சுகிட்டு இருக்கிறப்ப, அந்த வீட்டு பையன் அவளை கெடுத்து சீரழிச்சு கடைசியில பொண்டாட்டி டிபியில கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில ஏழைங்கள எப்படி உதாசீன படுத்தி, கடைசில அவ செத்துப்போயி, இவன் சோகமா எல்லாரையும் இழந்து கடைசியில எழைங்க வாழ்க்கையில அவங்க பாடுறது முகாரி ராகங்கள்ன்னு முடிச்சு இருப்போம். கதை என்னமோ சினிமாத்தனமாதான் இருந்தது, ஆனா நாடக ஸ்கீரின் பிளே, அதை அசத்தலா குடிசை, சேரி இதை எல்லாம் ரொம்ப தத்ரூபமா காட்சி அமைத்து interlude மியூசிக் எல்லாம் பிரமாதபடுத்தி, எல்லாரும் அசந்த்திர மாதிரி இந்தநாடகத்தை போட்டோம்.

அப்ப PSG இஞ்சினிரியங் காலேஜ்ல நாடக செகரட்ரியா இருந்தவன் எனக்கு ரொம்ப தோஸ்த்துன்கிறதுனால, எங்க காலேஜையும் அந்த inter college டிராமடிக் காம்பிட்டிஷன்ல கலந்துக்க ரொம்ப வற்புறுத்துனான். அப்ப ஏதோ சில காரணங்களால நாங்க எங்கேயும் வெளில போயி நாடகம் போடவேனான்னு இருந்தோம், அதுவும் இந்த நாடகம் எங்க காலேஜ்ல இன்னமும் ஸ்டேஜ் ஏத்தம இருந்தோம். அவனும் ரொம்ப நச்சரிச்சதாலே ஒத்துக்கிட்டு இந்த புது நாடகத்தை அரங்கேற்றலாமுன்னு இருந்தோம். அப்ப PSG காலேஜ்லயும் Revolving stage ஒன்னை புதுசா செட்டப் பண்ணி வச்சு இருந்தாங்க. எங்க நாடகத்துக்கு இந்த ஸ்டேஜ் ரொம்ப கை கொடுத்தது, அதுவும் அந்த குடிசை செட்டிங் எல்லாம் அசத்தல half stage arrangementல எங்களுக்கு ரொம்ப சூட்டா ஆகிப்போச்சு. இந்த ஸ்டேஜை இவ்வளவு எக்ஸ்லன்ட்டா யாரும் யூஸ் பண்லனன்னு அவுங்க காலேஜ்ஜே எங்களுக்கு சர்டிபிக்கேட் கொடுத்துச்சு. ஏன் Hindu பேப்பர்ல எங்களை பாராட்டி தள்ளிட்டாங்க. அப்பதான் அந்த செக்ரட்ரி பையன் ஒரு ரகளை பண்ணிட்டான். அவன் மெட்ராஸ்ங்கிறதுன்னால அவன் செல்வாக்கை பயன் படுத்தி, சென்னை திரைப்பட் கல்லூரியையும் அதில participate பண்ண வச்சுட்டான். அந்த திரைப்படக் கல்லூரி குருப்ல தான் நாசரும் வந்து நடிச்சாரு. அவங்க புதுமையா வசனமில்லாம, ஆடல் பாடல்கள்ல நயனம் காட்டி அழகா ஒரு கதை சொல்லி ஆடியன்ஸ்கிட்ட அப்பளாஸ் வாங்கிட்டு, சிறந்த நடிகருக்கான கோப்பையையும் வாங்கிட்டு நாசர் போயிட்டாரு. அந்த நாடகம் போடுவரை ஆணித்தரமா எல்லாரும் எதிர்பார்த்து என்னுடய நடிப்புகாக நான் சிறந்த நடிகன் பரிசு வாங்கவதை தான். அதனால கடைசியில நாங்க நொந்து போயிடக்கூடாதுங்கிறதுக்காக, சிறப்பு பரிசா என்னுடய நடிப்பை பாராட்டி எனக்கு கடைசியில ஒரு கோப்பையும் கொடுத்தாங்க. அப்ப நாங்க எல்லாரும் அந்த காலேஜ் நாடக செக்ரெட்ரியை புடிச்சு சண்டை போட்டு ஒரு ரகளையே பண்ணிட்டோம். அதெப்படி நடிப்பு, நாடகத்தை professionalஆ கத்துக்கிறவங்களோட, நாங்க அமெச்சூரிஸ்ட், எப்படி நீங்க அந்த நாடகத்தை போட்டில எடுத்துக்கிடலாம்ன்னு எல்லாம் சத்தம் போட்டு எங்க நாடக குரூப்பே சண்டைக்கு போயிடுச்சு, அப்புறம் நான் தான் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.

இந்த நாடகம் போட்டப்பத்தான் ஒன்னு ரெண்டு Lesson படிச்சுகிட்டோம். என்னதான் எக்ஸ்லன்ட் நாடகமா இருந்தாலும், நம்ம நாடகம் போட்டிகளின் கடைசி நாள்ல வர்மாதிரி பாத்துக்கிறது, அப்பதான் ஜட்ஜ்ங்க கடைசியில எடுக்கிற முடிவுகள்ல நல்லா impact பண்ண முடியும், ரெண்டாவது பப்ளிசிட்டி, ப்ரமோஷன் எல்லாம் நல்லா செஞ்சு, மக்களிடையே எதிர்பார்ப்பு உண்டு பண்றது, மூணாவது முதல் ஸ்டேஜ்ஜிங் நம்ம காலேஜ்ல நடத்தி, நாடக sequence, நடுவில் வரும் இடர்பாடுகளை சமாளிக்கிறதை அனுபவ பூர்வமா தெரிஞ்சுக்கிட்டு, வெளி காலேஜ்க்கு கொண்டு செல்வதுன்னு. இந்த lesson learned பிற்காலத்தில வெற்றியை நிலை நாட்ட நிறைய கை கொடுத்தது.

இதில இன்னொரு வில்லங்கமும் இருந்தது, அந்த காம்பிட்டிஷன்ல ஜட்ஜ் ஆக இருந்தவர்ல ஒருத்தர் கோவை வானொலி நிலையத்தில போடற நாடகங்கள்ல நடிச்சிக்கிட்டு இருந்த சேகர்னு ஒருத்தர். அவரு நம்மல பழி தீக்க தீர்ப்பை மாத்தி சொல்லிட்டாருன்னு பல நாளா நினைச்சிக்கிட்டு இருந்தேன். அதெப்படி அந்த வானொலி நாடக நடிகருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், அவரு எதுக்கு என்னை பழி தீக்கணும்னு நீங்க எல்லாம் கேட்கிறது எனக்கு தெரியுது. ஆனா இருக்கே சம்பந்தம். அது என்னான்னு அடுத்த பகுதியில்லா பர்க்கலாமா..!

4 comments:

said...

இராமநாதன், நாசர் போட்டி என்னான்னு ஆவலுட்ன் கேட்டீர்களே, படிச்சீங்களா, இந்த பாகத்தை?

said...

வெளிகண்ட நாதர்,
யப்பா.. நாசர் கூடவே போட்டி போட்ட மஹாநடிகரா நீரு? வாழ்க வளர்க! இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி அநியாயம் தான் ப்ரோக்களை கூப்டது.

//எல்லா சப்ஜக்ட்லேயும் மார்க் வாங்கின சோகம், அதான் மாஸ் கட் அடிச்சிட்டு படிக்கிறேன் பேர்வழின்னு ராதிரி பூரா சீட்டாட்ட கச்சேரி நடித்திட்டு, //
எல்லா ஊர்லேயும் இதே கதைதானா?

//பாம்பேக்கு பொண்ணு பாக்க போறாதா//
வீட்டுக்கு லெட்டர் அனுப்ப மாட்டாங்களா?

// பத்தாதுக்கு வீட்ல ஒரு வயசு பொண்ணு ஒன்னு வேறே இருந்தது. ஏதாவது பத்திகிட்டு எரியறதுக்கு முன்ன காலி பண்ணிட்டு ஒடுனும்டா சாமின்னு,//
நல்ல விழிப்பாத் தான் இருந்திருக்கீங்க.

அருமையான ஸ்டைல்.

----------
சாரி, இன்னிக்குத்தான் படிக்க முடிஞ்சது. சீக்கிரம் காட்ச் அப் பண்றேன். நன்றி

said...

யப்பா! கடைசியில நம்ம பதிவை படிச்சிட்டீங்க இராமநாதன்! இது உங்களுக்கான பிரத்தியோக பதிவு, நாசர் முடிச்சை அவுக்குனும்னு போட்டது. தொடர்ந்து மத்த பாகங்களையும் படிங்க!

//எல்லா சப்ஜக்ட்லேயும் மார்க் வாங்கின சோகம், அதான் மாஸ் கட் அடிச்சிட்டு படிக்கிறேன் பேர்வழின்னு ராதிரி பூரா சீட்டாட்ட கச்சேரி நடித்திட்டு, //
எல்லா ஊர்லேயும் இதே கதைதானா?

இது எப்பவும் எங்கேயும் மாறாத கதை!

//பாம்பேக்கு பொண்ணு பாக்க போறாதா//
வீட்டுக்கு லெட்டர் அனுப்ப மாட்டாங்களா?
இல்லை, சும்மா, அது மெஸ் கணக்கு எடுக்கிறதுக்கு, ஆளுங்க இருக்கிறதுக்கு தகுந்த மாதிரி சமைக்கத்தான் அது, அதில வந்த வில்லங்கம் தான்!

said...

//அதெப்படி நடிப்பு, நாடகத்தை professionalஆ கத்துக்கிறவங்களோட, நாங்க அமெச்சூரிஸ்ட்//

சார்,


நீங்க ரகளை பன்னினது சரிதான்.

ஒரு ஜாலியான பதிவு!!