எல்லோரும் சின்ன புள்ளயிலேருந்து வளர்ந்து பெருகிறது தங்களோட பெற்றோர்களின் அரவணைப்பிலே, அவங்க கண்காணிப்பிலே, பிறகு பதின்ம வயதிலே, படிக்கனும்னு வெளியில வந்துட்டா ஹாஸ்டல் வாழ்க்கை தான். இந்த ஹாஸ்டல் வாழ்க்கை எவ்வளவு கத்துக்கொடுக்கும் தெரியுங்களா. அப்படித்தான் எனக்கும். ஏன்னா எல்லாமே நம்மலே தனித்து செய்ய பழகிக்கனும். அப்பதான் அந்த மெச்சூரிட்டிங்கிறது வெளியில வரப்பார்க்கும். உலகம்னா என்னன்னு தெரிய ஆரம்பிக்கும். இதுல நல்ல வழிகள்லயும் போகலாம், தப்பாவும் ஆயிக்கிலாம். எல்லாமே நம்முடய கட்டுபாட்டுக்குள்ள இருக்குனும். 'களவும் கற்றுமற' அப்படின்னு பழமொழிக்கு தகுந்தமாதிரி, எல்லாத்தையும் டேஸ்ட் பண்ணிட்டு நல்லது, கெட்டதுகளை நமக்கு நாமே ரெகுலேட் பண்ண வழிவகுக்க தோதுவா இருக்க வக்கிறது இந்த ஹாஸ்டல், ஊரை விட்டு தள்ளி இருக்கிறது. சின்ன குழந்தைக்கு தீ தொட்டா சுடும்னு எத்தனை தடவை சொல்லி பாத்தாலும் கேட்காது, ஆனா, ஒரு முறை தீப்பட்டு ரணமான, தெரிஞ்சுடும் அது என்னான்னு, அப்படித்தான், எல்லாத்தையும் செஞ்சுப்பார்க்க மனசு ஆலாப்பறக்கும், ஆனா, சரி எது, தவறெதுன்னு சீர்கோல் தூக்கிப்பார்த்தாச்சுன்னா, அப்புறம் தடம் நம்மதுதான். யாரும் ஒன்னும் சொல்ல தேவையில்லை.
ஏன் இதை சொல்றேன்னா, இஞ்சினியரிங் காலேஜ் படிக்கிறப்ப, என்னோட திக்ஃப்ரண்ட், ஜெயக்குமார், ஒரு டேஸ்காலர், அவன்கூட இருந்து பழகிறதுக்கும், மத்த ஹாஸ்டல் ஃப்ரண்டுகளுக்கும் நிறைய வித்யாசம் பார்த்திருக்கேன், அதுவும் அவன்கிட்ட எப்பவும் அதீதமா குழந்த தனம் ஒட்டிக்கிட்டு இருக்கும். நாங்க முதல், இரண்டாவது வருஷம் படிக்கிறப்ப மத்தியானம் எப்பவும் கிளாஸ் கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு கிளம்பிடுவோம். அதுவும் அந்த இங்கிலீஷ் லெக்ஷர் கிளாஸ் போரு. இல்ல, மத்தியானங்கள்ல எதாச்சும் ப்ராக்டிகல்ஸ் இருக்கும், அதை கட்டு வுட்டுறுவோம். நேரா டவுண்ஹால் தான், மலையாளம், இல்ல தமிழ் படங்கள் எதிலாச்சுலேயும் போயி உட்கார்ந்துடுவோம். அப்ப எனக்கு விருப்பமான நடிகைகள்ல 'ஸ்ரீப்ரியா' நடிச்ச படங்கள் நிறைய வந்த நேரம். ஆனா ஜெயக்குமாருக்கு ஸ்ரீப்ரியாவை சுத்தமா பிடிக்காது. அவன் போக சொல்லும் படங்கள் வேற, இதுனால நாங்க ரொம்ப நேரம் வெளியிலேயே சண்டைபோட்டுக்கிட்டு கடைசியில எதையாவது பார்க்கலாமுன்னு ஒத்து போயி பாதி படம் ஓடினோன போயி உட்கார்ந்து பார்த்த படங்கள் நிறைய.
இதை நான் ஏன் சொல்றேன்னா, பொதுவா நம்ம மக்களுக்கு அதிகமா பிடிக்கக் கூடிய ஹீரோயினிகள் எப்படின்னா, கொஞ்சம் பூசானப்பல இருக்கணும். தமிழ்பட ஹீரோயினிகள் ஜாதகத்தை எடுத்துப் பாருங்க. இது என் காலம்னு இல்லைங்கே, எங்க அப்பன், பாட்டன், பூட்டன் காலத்திலருந்து அப்படித்தான். ஆமா, அந்த காலத்தில வந்த எல்லா நடிகைகளுமே கொஞ்சம் பூசாலாத்தான் இருப்பாங்க. டி.ஆர். ராஜகுமாரியை எடுத்துக்கங்க. அப்பறம் வந்த பத்மினி, சாவித்திரியெல்லாம் எப்படி? அதுக்காக சன்னமா வர நடிகைங்க புகழ் பெறலன்னு சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனா, வைஜெயந்திமாலா, சரோஜாதேவி கொஞ்சம் ஒய்யராமன நடிகைங்க, அவங்க காலத்தில அப்ப அவங்க மெல்லிசுதான்.
இது மாதிரி இரண்டு தரப்பட்ட நடிகைகள் அறிமுகபடுத்தப்பட்டாலும், அதாவது ஜெயலலிதா, நிர்மலா ஜோடி, அப்புறம் பிரமீளா, மஞ்சுளா அப்படின்னு ஒரே காலக்கட்டத்தில அறிமுகமான நடிகைகள்ல அதிக மெளசு யாருக்குன்னு பார்த்தீங்கன்னா கொஞ்சம் பூசானப்பல இருக்கிற நடிகைங்களுக்குத்தான். ஏன்னா அதுதான் நம்மாளுங்களுக்கு உண்டான டேஸ்ட். அப்படித்தான் ஒன்னா அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீப்ரியா, சுஜாதாவில்ல, நமக்கு புடிச்சது ஸ்ரீப்ரியா தான், பிறகு சரிதா, அப்படின்னு. ஏன் கொஞ்சக்காலம் நம்பர் ஒன்னுல்ல இருக்கிறது அத்தனையும் இந்த மாதிரி பூசணிக்காய்ங்க தான். குஷ்பு, நக்மா, அப்படின்னு தொடர்ந்து, ஏன் இப்ப ஜோதிகா, நமீதா வரை அப்படித்தானே! அப்ப அப்ப கிளாஸிக்கல் பியூட்டிங்களும் வர்ரதுண்டு, காஞ்சனா, வாணீஸ்ரீ,ஸ்ரீதேவி,ரேவதி, சிம்ரன் எல்லாம். ஆனா என்னதான் இவங்க வளைய வந்தாலும், நமக்கு சன்னமா இருக்கிற ஹீரோயின் எல்லாம் புடிக்கிறதில்ல போங்க. இதுனாலத்தான் எனக்கும் அவனுக்கும் சண்டையே போங்க!
இன்னொரு காரணமும் உண்டு நமக்கு ஸ்ரீப்ரியாவை புடிச்சிப் போக, ஏன்னா, ரஜினி ஆரம்பக் காலத்தில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சப்ப, அவருக்கு அதிகமான படங்கள்ல ஹீரோயினியா நடிச்சது இந்தம்மாத்தான். அதனாலேயே எனக்கு ரொம்ப பிடிக்கும். கிளாமர் குயினா மட்டுமில்லமா, நல்லா நடிக்கக்கூடிய நடிகையும் கூட. அப்ப தமிழ் சினிமாவில எம்ஜிஆர், சிவாஜிங்கிற சகாப்தம் கொஞ்சம் கொஞ்சமா முடிஞ்ச நேரம், புதுசு புதுசா நல்ல திறமைமிக்க டைரக்டர்கள் சத்தம் போடாம உள்ள நுழைஞ்சு நல்ல நல்ல படங்களா கொடுத்துக்கிட்டிருந்த நேரம்.
அப்பத்தான் 'ருத்ரையா'ன்னு ஒரு டைரக்டர் எடுத்த படம் 'அவள் அப்படித்தான்' அதில கமல், ரஜனி, ஸ்ரீப்ரியா மூணுப்பேருமே சும்மா கலக்கலா நடிச்சிருப்பாங்க. ஸ்ரீப்ரியா, ஆண்களால பாதிக்கப்பட்டதால, அவங்க எல்லாரையும் வெறுக்கிற கேரக்டர், சில பல நல்ல ஆண்களும் இருக்காங்கன்னு, கமல் அதற்கு அடையாளமா இருந்து காதலிச்சு, கடைசியில ஸ்ரீப்ரியா ஏத்துக்காதல வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவார்.
ஆனா, ரஜனி, "நான் என்ன சொல்றேன் மச்சான்" ன்னு டையலாக் வுட்டுகிட்டு, கிளிங்களுக்கு ரூட்டு போடற வில்லத்தனமான ரோல், வெளியில விபூதிப்பட்டை எல்லாம் போட்டுகிட்டு சாமியார் மாதிரி வேஷம் கட்டுவார். ஸ்ரீப்ரியா, ரஜனிக்கு கீழே வேலை செய்வார். அப்ப ரெண்டுபேரும் ஒரு பார்டிக்கு போறப்ப, ரஜனி ஸ்ரீப்ரியாக்கிட்ட தப்பா நடக்க முயன்று அரை ஒன்னு வாங்கிட்டு அந்தக் காட்சி முடிஞ்சுடும். அடுத்த நாள் அவங்க அபீஸ்ல சந்திச்சிக்கிறப்ப அவரு, மொதநாள் நடந்தது விஷயத்துக்கு எந்த ரியாக்ஷனும் காட்டம, அவரு ஒரு வசனம் பேசுவாரு பாருங்க, கிளாஸ்! "ஒரு ஆம்பளை, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்" இது எதார்த்தின் உச்சம். இது மாதிரி நடந்த நிஜ சம்பங்களை நான் வாழ்க்கையில சிலர் சொல்லக்கேட்டுருக்கேன். சரின்னு, துணிஞ்சு போற பொண்ணுங்களுக்கு ஒன்னுமில்லை, ஆனா, உண்மையிலே இதை எதிர்க்கும் பொண்கள், இப்படி சராசரி வில்லன்ங்களை சர்வசாதரணமா எதிர்நோக்கும் நிதர்சன உண்மை வாழ்க்கையின் எதார்த்தம். அப்ப நான் ஆர்வமா புது உத்வேகத்தோட வந்த இது போன்ற சினிமாக்களை ஒரு வெறியா பார்த்துட்டு, அதனை ஆராய்வதுதான் வேலையா இருந்திச்சு போங்க!
இந்த மாதிரி காலக்கட்டங்கள்ள, வேலை இல்லா திண்டாட்டத்தை வச்சு 'நிழல்கள்'ன்னு ஒரு படம் வந்தது, பாரதிராஜா டைரக்ஷன்ல. அதே மாதிரி பாலசந்தரும் அதே தீமை வச்சு 'வறுமையின் நிறம் சிவப்பு'ன்னு ஒரு படம் எடுத்தார். இந்த இரண்டு படத்தில நிழல்கள் அவ்வளவா வெற்றி பெறல, ஏன்னா, அதிகம் பாப்புலர் இல்லாத புதுமுகம் ரவி, ராஜசேகர், சந்திரசேகர்ன்னு நடிச்சிருந்தாங்க. கமல், ஸ்ரீதேவி, ப்ரதாப்போத்தன்னு, பாப்புலர் ஆளுங்களோட எஸ்வீ சேகர், தீபன்னு சில புதுமுகங்கள் நடிச்ச வறுமையின் நிறம் சிகப்பு'க்கு கிடைத்த வெற்றி, 'நிழல்களு'க்கு கிடைக்கில ஆனா படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை எல்லாம் கலக்கலா இருந்தது. இந்த படம் பற்றி பிறகொரு பதிவில நிறைய எழுதுறேன். அதில நடிச்ச நடிகர் ராஜசேகர், ராபர்ட்-ராஜசேகர்னு இரட்டையர்களா, கேமிரா மேன்களா இருந்து எடுத்த படம் தான் ஒருதலை ராகம். அப்ப என்கூட இருந்த முருகவேள், நம்மல சும்மா ஏத்திவுட்டு, ஏண்டா ராஜசேகர் எல்லாம் நடிக்கறப்ப, நீ ஏன் போய் நடிக்கக்கூடாதுன்னு. .அப்ப ஒரு வேகம் வந்து டிரெயின் புடிச்சு, மெட்ராஸ் வந்தப்பத்தான், பிரசாத் ஸ்டுடியோவில 'டிக் டிக் டிக்' படத்துக்கு ஒரு பாட்டு ரெக்கார்டிங் பண்ணப்பத்தான், நான் நேரில, லதாவை பார்த்தேன். அப்ப அவங்க 'லதாரஜனிகாந்த்'தா ஆகத நேரம். அவங்க பாடின "நேற்று இந்த நேரம்" பாட்டு ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இளையராஜா, அந்த காலத்தில அவர் போடற வொய்ட் அண்ட் வொய்ட் பேண்ட் ஷர்ட்ல சும்மா தூள்னு கம்போஸிங் பண்ணிக்கிட்டு இருந்தார்.
பாரதிராஜா, ஜனகராஜ், கங்கை அமரன் எல்லாம் அன்னைக்கு அப்ப அந்த ரெக்கார்டிங் டைம்ல அங்க இருந்தாங்கன்னு நினைக்கிறேன். அந்த படத்தோட பூஜையும் அன்னைக்குன்னு தான் நினைக்கிறேன். அப்ப நம்முலும் நடிக்க சான்ஸ் கேட்டு, பாரதிராஜாக்கிட்டயே கேட்கலாம்னு போனப்ப, அவருக்கூடய இருந்த அஸிஸ்டென்ட்ங்க நம்மல நெருங்க விடலை. அவங்க சொன்னதெல்லாம், நீங்க போயி, பாரதிராஜா ஆபிஸ்ல, அதாவது எல்டாம்ஸ் ரோட்ல அப்ப இருந்ததன்னு நினக்கிறேன், அவரு தம்பி சிகாமணியை பார்த்து கேளுங்க, அப்படின்னுட்டாங்க. அப்படியே எடுத்து வச்சிருந்த என் போட்டாவெல்லாம் எடுத்துக்கிட்டு பிறகு நடையைக்கட்டிட்டேன்.
அந்தக்காலத்தில இந்த கோடம்பாக்கம் ஸ்டுடியோக்கள் உள்ளே எந்த கெடுபிடியும் இல்லாம நம்ம நுழைவதுங்கிறது சர்வசாதரணம். ஏவிஎம், விஜயாவாஹினி, பிரசாத், வீனஸ், பரணீ அப்படின்னு எதிலவேணும்னாலும் ஈசியா நுழைந்துவிடுவேன். அது எப்படின்னு விவரமா அடுத்த பதிவில சொல்றேன்.
Wednesday, February 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment