Saturday, February 18, 2006

எனை ஆண்ட அரிதாரம்- ஒன்பதாம் பகுதி

பொதுவா சினிமா, நாடகங்கள்ல எல்லாருக்குமே ஒரு ஈடுபாடு இருக்கும். ஆனா சிலபேருக்குத்தான், அதீத ஆர்வம் ஏற்பட்டு, அதில ஈடுபடனும்னு தோணும். அதிகமா எல்லாரும் விரும்பவது நடிக்கத்தான், அதற்குப்பறம் பாடுவதுல்ல ஆர்வம் வெளிப்படும். பிறகு தான் கதை எழுதறது, வசனம் எழுதறது எல்லாம். அப்படித்தான் நான் ரொம்ப சின்ன வயசிலிருந்தே, நடிக்க ஆர்வம் வந்தது, ஏன்னா, என்னுடய ஸ்கூல் நாடகங்கள் எல்லாம் என்னுடய அமல்ராஜ் வாத்தியார் எழுதறதுதான், அதில நடிக்க முடியுமே தவிர, நாங்களா கதை எல்லாம் எழுத முடியாது, பிறகு, இஞ்சினியரிங் காலேஜ் வந்தோன, நானே பெரும்பாலும் கதை எழுதி,இயக்கி,நடிச்சது தான். பெரும்பாலும் அந்த காலங்கள்ல வந்த சினிமாக்கள், அதாவது 70 கடைசியில், 80களுன் தொடக்கத்தில், எல்லாம் பார்த்திங்கன்னா, பெரும்பாலும், பாக்யராஜ், டி.ராஜேந்தர், மாதிரி ஆளுங்க அவங்களே கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி நடிப்பாங்க.அதுக்கு முன்ன எல்லாம் கதை ஒருத்தரதா இருக்கும், அதை திரைப்படமா செய்யறப்ப, திரைக்கதை இன்னொருத்தங்க எழுதுவாங்க!. பாலசந்தர், தன் படங்களுக்கு, கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி இயக்குவார். ஆனால், பாரதிராஜா, கதை எதுவும் எழுதமாட்டார், அவருடய முதல் படம் 'பதினாறு வயதினிலே' தவிர, மற்ற படங்கள் அத்தனைக்கும் திரைக்கதை தான் அவருடயது, கதை வேறொருத்தருதா இருக்கும். திரைக்கதை எழுதறது ஒரு தனிக்கலை. சில நல்ல கதைகள், நாவலா படிக்கிறப்ப, ரொம்ப நல்லா இருக்கும். ஆனா அதை படமா எடுக்கிறப்ப குட்டிச்சுவராக்கிருவாங்க, மிகப்பெரிய உதாரணங்க,'ப்ரியா', 'கரையெல்லாம் சென்பகப்பூ', சுஜாதாவோட கதை படிச்சவங்களுக்கு அது ரொம்ப நல்லாத்தெரியும். ஏன்னா, கதை எழுத்துல வரதுங்கிறது வேறே, சினிமாவா திரைக்கதை அமக்கிறதுங்கிறது வேறே! அதே மாதிரி நாவல்ல இருந்ததை விட, சிறப்பா சினிமா படங்கள் வந்த கதையும் இருக்கு. அதுல நம்ம மகேந்திரன் கெட்டிக்காரரு!

எப்பொழுதுமே திரைக்கதை அமக்கிறதோ, நாடகசீன்களை தொகுக்கிறதோ, கதையின் sequence லருந்து வேற மாதிரி அமைக்கனும். சினிமா திரைக்கதை அமைக்கிறதும், நாடகத்திரைக்கதை அமைக்கிறதும் வேற வேற ஸ்டைல்.
சினிமால விஷ்வலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வசனங்களை கம்மிப்பண்ணி கதையை தொகுக்கணும், ஆனா, நாடகங்களுக்கு வசனம் உயிர் மூச்சு. அதுனால, பாலசந்தர், அவர் ஆரம்பக்கட்டத்தில எடுத்த 'நீர்க்குமிழி', 'எதிர்நீச்சல்', 'பாமாவிஜயம்', 'இரு கோடுகள்', 'நூற்றுக்குநூறு' எல்லாம் வசனங்கள், உணர்ச்சிபிழம்புகளா வெளிகொண்டு வந்து, அந்த சினிமாக்கள் எல்லாமே நாடகத்தன்மையை ஒட்டி இருக்கும். ஆனா அதே பாலசந்தர், இரண்டாவது கட்டமா எடுத்த படங்கள், 'அபூர்வ ராகங்கள்', 'மூன்றுமுடிச்சு', 'அவள் ஒரு தொடர்கதை', 'அரங்கேற்றம்', 'நூல்வேலி', 'அவர்கள்', 'தப்புத்தாளங்கள்', 'நிழல் நிஜமாகிறது' இந்த படங்கலள் எல்லாம் வித்தியாசமான் கதை கருவைக் கொண்டு, வசனங்களை கம்மிப்பண்ணி, கதைகளை பலமுடிச்சுடுன் கொண்டுபோயி, கடைசியில விடைகளை ரசிகர்முன்ன கேள்விக்குறியா வைச்சு படம் எடுத்தது அவருடய தனி முத்திரை! அவரோட இருந்த அனந்தும், இதற்கு காரணம் என்பேன். அப்பயும் அவரு காட்சிகளை விஷ்வலா அதிகம் எடுத்திருக்கமாட்டார். நான் சொல்லறது 'Cinemotography' பத்தி இல்ல காட்சி அமைப்புகளை, ஏன்னா அவருடய அப்பத்த கேமராமேன், 'லோகநாதன்' கருப்பு வெள்ளையில எடுத்த நிறைய காட்சிகள் கண்ணுக்கு விருந்தா இருக்கும்.அப்ப நிறையப்பேர், 'ஈஸ்ட்மேன்' கலர்ல படம் எடுக்கத்தொடங்கனப்ப, அவர் தொடர்ந்து கருப்புவெள்ளயில எடுத்து வந்தார். இருந்தும் அத்தனையும் கிளாசிக்கல்லா இருக்கும். பிறகு அவரும் கலருக்கு மாறுனது காலத்தின் கட்டாயம். அந்த காலக்கட்டங்கள் எடுத்த நிறைய 'Classic Movies' எல்லாம் 'Black and White' தான். ஏன் பாரதிராஜா எடுத்த 'பதினாறு வயதினிலே'க் கூட கொஞ்சம் டெக்னிகலா தரம் தாழ்ந்த ஆர்வோ கலர் பிலிம்ல எடுத்தது தான். ஏன்னா கலர் பிலிம் தொழில்நுட்பத்தின் ஆரம்பக்கட்டம் , விலை ஜாஸ்த்தி!

பாரதிராஜா திரைக்கதை அமைக்கிறதுல கில்லாடி. அவர் ஆரம்பக்கட்ட சமயங்கள்ல எடுத்த நிறையப்படங்கள் கதை 'ஆர் செல்வராஜ்'ஜோடது. பாரதிராஜாப் படங்கள் முழுசா கிராமத்து வாசனை வீசக்காராணமே நம்ம செல்வராஜ்தான். ஆனா அவரா தனியாப் போயி படம் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சு ஏனோ சரியா சோடைப்போகல்ல. அவரு எடுத்த 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படம் எத்தன பேரு பார்த்திருப்பீங்கன்னு எனக்கு த்தெரியாது. அதில வர ஓரம் போ, ஓரம் போ, ருக்குமணி வண்டி வருது' ங்கிற பாட்டு ரொம்ப பேமஸ். அந்த பாட்லக் கூட சூசகமா நான் பாரதிராஜாவை முந்திக்காட்டுவேன்னு சொல்லியிருப்பாரு. வேணும்னா கேட்டுப்பாருங்க! .அப்புறம் தான் பாக்யராஜ் கதை வசனத்தில, அவரையே கதாநாயகனா போட்டு 'புதிய வார்ப்புகள்' படம் எடுத்தார். அவரும் தனியா போயி சுவரில்லா சித்திரங்களை ஆரம்பிச்சோன, மணிவண்ணனை வச்சு கதை வசனம் எழுதச் சொல்லி நிழல்கள் எடுத்தாரு. அப்புறம் 'வேதம் புதிது' கண்ணன் அப்படின்னு நிறையப்பேரு அவருக்கு கதை வசனம் எழுதி கொடுத்து, படம் எடுத்தாரு. ஆனா அவருக்கு ஆரம்பத்தில அமைஞ்ச செல்வராஜ், பாக்யராஜ் கூட்டணி மாதிரி சரியா பிறகு அமையலன்னு தான் நான் சொல்லுவேன். பிறகு கொஞ்சக்காலம் போயி, திரும்ப ரெண்டு பேரும் சிவாஜியை வச்சி எடுத்த 'முதல் மரியாதையில்ல திரும்ப கூட்டு சேர்ந்தாங்க. ஆக அவரு எல்லா படங்களுக்கும் அமைச்ச அந்த வித்யாசமான திரைக்கதை 'Sequence' தான் அந்த படங்களுக்கு உண்டான வெற்றி. அவரு கையாண்ட அத்தனை திரைக்கதை டெக்னிக் களையும் நாங்க அந்த காலத்தில அக்கு வேற ஆணி வேற அலசி அது என்னான்னு அவங்க கூட சேர்ந்து படம் எடுக்கலேனாலும், நல்லாவே தெரிஞ்சு வச்சிருந்தோம். சில படங்கள்ல அவங்க அகஸ்மாத்தா எடுத்த frameங்களை கதை தொகுப்புல அது எப்படி 'coincide' ஆயி இருந்திச்சுன்னு நாங்க அவருக்கு லெட்டர் எல்லாம் எழுதி இருக்கோம். எங்களோட ரசனையை, ஆராய்ச்சியை பாராட்டி அவர் எழுதிய கடிதங்கள் எங்ககிட்ட உண்டு.
உதாரணத்துக்கு 'டிக் டிக் டிக்' ஒரு படத்தில வில்லன் தன் செக்ரக்டரியை, தான் ரகசியமா கடத்தர உண்மை எல்லாம் வெளியாளுக்கு சொல்லிட்டான்னு தெரிஞ்சோன அவளை தன்னுடய ரூம்லயே துப்பாக்கியில்ல சுட்டு கொண்ணுடுவான். அப்ப அவள் சரிஞ்சு கீழே விழும் போது அந்த ரத்தம் அந்த அறை தடுப்பு கிளாஸ்லருந்து வழியறதை ஒரு ரெண்டு செகண்ட் அப்படியே அந்த சீனை 'freeze' பண்ணீ சூட் பண்ணிருந்திருப்பாங்க, அந்த 'hairline crack' மாதிரி அந்த கிளாஸ்ல ரத்தம் வழிய ஆரம்பிச்ச எடத்தில focusedஆ இருக்கும். அது ஒரு டைக்டோரியல் டச் மாதிரி. அவன் இருக்கக் கூடிய சேம்பர் அப்படி 'toughned bullet proof' கிளாஸ்ல செஞ்ச்துங்கிறது அந்த சீன் சூசகமா விளக்கும். இது மாதிரி அவருடய படங்களை எத்தனையோவாட்டி பார்த்து, ஒவ்வொரு சீனா அலசுறது தான் எங்க வேலையா இருந்திச்சு.

ஆனா பாக்யராஜ், டி.ராஜேந்தர் படம் எடுக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க கதைகளை ஒவ்வொரு சீனா வசனம் எழுதி, திரைக்கதையும் எழுதி, அப்புறம் சீனை செதுக்கி, அப்புறம் படம் எடுப்பாங்கண்ணு கேள்விபட்டுருக்கேன். இந்த மாதிரி எடுத்தவங்களுக்கு படத்தை எப்படி பார்க்கிறமோ அப்படியே அந்த sequenceல தான் எடுக்கத் தெரியும்னு கேள்விப்பட்டிருக்கேன். பிறகு 'editing' சீர் செஞ்சு கதை sequence ஐ கொண்டு வந்திட முடியும்னாலும், அவங்க அப்படி எடுத்தா தான் படததை முடிக்க முடியும்னு கேள்விபட்டிருக்கேன். அது மாதிரி தான் பாக்யராஜ் பீக்ல இருந்த நேரத்தில ஒன் லைன் கதை தான் ஆரம்பித்துல. அதுக்கு தினத்தந்தில எல்லாம் பெரிய விளம்பரம் கொடுத்து பட பூஜை எல்லாம் போட்ட பிறகு தான் கதை டிஸ்கஷனுக்கு உட்காந்தாங்கெல்லாம் கேள்விபட்டிருக்கேன். அப்ப அவரு பேருக்கு மார்கெட்டு. எல்லாரும் பணத்தை வச்சுக்கிட்டு அவரு பின்னாடி அலைஞ்ச காலம் அது. ஏன் ஏவிஎம் மாதிரி பெரிய நிறுவனங்களே அப்படி பணம் கொட்டி படம் எடுத்தாங்க! அப்படி ஒரு ஒன்லைன் ஸ்டோரியில பெரிய விளம்பரம் கொடுத்து வந்து, பிறகு பெரிய வெற்றியை கண்ட படம் தான் 'முந்தானை முடிச்சு'

இவ்வளவு விவரமா ஏன் உங்களுக்கு திரைக்கதை அமைக்கிறத சொல்றேன்னா, இந்த மாதிரி நாங்க போட்ட நாடகங்கள்ல சினிமாத்தனதை காண்பிச்சோம், இருட்ல ஒத்தை தீபத்தை கொளுத்தியோ, பிறகு எரியும் தீச்சட்டியை கொண்டோ , ஏதாவது ஒரு பிரம்மாண்டம் இருக்கும். நம்ம நாடகக் காவலர், தற்போது மறைந்த ஆர் எஸ் மனோகருடய சரித்திர நாடகங்களை போல பிரம்மாண்டமா இல்லையினாலும், ஏன்னா அது 'professional'ஆ பணம் செலவழிச்சு கமர்சியலா செய்ற விஷயம், பார்க்கிறவங்களுக்கு புதுமையா நாடகம் போட்டு பேர் வாங்கினோம். அப்பதான், வெறுமன கதை எழுதிக்கொண்டு வந்த என்னுடய கிளாஸ்மேட், முருகவேள் நாடகத்துக்கு திரைக்கதை அமைச்சி எங்க குரூப்பே ஆ..ன்னு ஆச்சிரியப்பட்டு எல்லாரும் ஆர்வத்தோட வேலை செஞ்சு நல்ல நாடகமா அரங்கேற்றனதோடமில்லாம, 'கோமல் சுவாமிநாதன்' மாதிரி நாடக ஜாம்பவன்களும் எங்களை புகழ்ந்து பாராட்டின மாதிரி நாடகங்கள் போட்டதுண்டு. கோமல் சுவாமிநாதனை எத்தனை பேத்துக்கு தெரிஞ்சுருக்கும்னு எனக்குத்தெரியாது. ஆனா அவருடய நாடகந்தான் பின்னாடி, பாலசந்தர் எடுத்த 'தண்ணீர் தண்ணீர்'ங்கிற படமா வந்து ஊரையே கலக்குச்சு! அதுல நடிக்கறதுக்கு முன்னாடித்தான் நம்ம 'ராதாரவி' அவர்கள் சென்னை லாக்காலேஜ்ல படிக்கிறப்ப கோயம்புத்தூர் வந்து எங்க நாடகத்தோட போட்டி போட்டு, கடைசியில அவங்களுக்கு பரிசு தரலைன்னு ஜ்ட்ஜ் எல்லாத்தையும் கண்டமேனிக்கு திட்டிட்டு போனார். அப்ப அவங்க நாடகத்தோட போட்டி போட்டு நிறைய பரிசுகளை வாங்கி இருக்கோம்.

இந்த சேகர் கதை பாதியிலேயே நிக்குது. அவரு டிக்கட் கொடுத்து விக்க சொல்ல எங்க காலேஜ் பசங்க வந்து அவர் நடிச்ச காட்சிகள் எல்லாத்திலேயும் ஓன்னு கத்தி ரகளை வுட்டு, ரவுசு விட்டு, பாவம் அவர் நொந்து போயி இடையில நான் நடிச்சுகிட்டு இருக்கிறப்ப வேதனை பட்டார். பிரகு ரொம்பவும் கடிந்துக்கிட்டார். அதனாலத்தான் நம்மல நாசரோட போட்டியில கவுத்துட்டாரு, அவரு ஜட்ஜா இருந்தப்பன்னு நான் நினைச்சிகிட்டு இருந்தேன். அப்புறம் ஒரு நாள் அவரை சந்திச்சப்ப, அவரே வருத்தபட்டார் எனக்கு பரிசு கிடைக்காததை பத்தி. இப்படி போயிகிட்ட இருந்தப்பத்தான், மெட்ராஸ் போயி சான்ஸ் தேடுனப்பத்தான் நம்ம தலைவரு மனைவி, 'ஜில்லு'வை பார்த்தேன். யாரு 'ஜில்லு'ன்னு கேட்கிறீங்களா, அதான் 'லதா ரஜினிகாந்த்' ரஜினி ரசிகர்கள் எத்தனை பேருக்குத் தெரியும் அவரு தன் மனைவியை அழைக்கும் பெயர் 'ஜில்லு'ன்னு. அவங்களை சந்திச்சதை அடுத்த பதிவில பார்போமா!

0 comments: