Wednesday, February 08, 2006

காதல் கண்டேன்! மணம் கொண்டேன்!

என்னுடய பல பால்ய அனுபவன்களை சொல்லி வந்துகிட்டு இருக்கிறேன் என்னுடய பதிவுகள்ள, ஆனா எனது வாழ்க்கையில நடந்த முக்கியமானது,எனது காதல், அதன் பிறகு கொண்ட திருமணம். அதை பற்றி விரிவா இனி வர பதிவுகள்ள எழுதலாமுன்னு இருக்கேன். ஆனா இன்று என்னுடய திருமண நாள், அதை நினத்து, என் அன்பு மனைவிக்காக நான் பதிந்த பதிவை உங்களுக்காக இங்கே பகிர்ந்துக்கிறேன்!

அன்பே என் அன்பே! நீ குறிஞ்சி மலர் போன்றவள், எந்த மலருக்கும் இல்லாத ஒரு பெருமை இப்பூவுக்குண்டே! பன்னிரெண்டு வருடஙகளுக்கு ஒரு முறை தான் பூப்பது போல், அதிசய மலர் தன்மை கொண்டவளே, எனக்கு கிடைக்கப் பெற்றவளே! இது போன்ற தலைவி ஒருவனுக்கு கிடைப்பது ஒரு பெரும் பாக்கியம். அப்பாக்கியத்தை எனக்களித்தவளே! நான் என்றுமில்லா ஆனந்தம் இன்று கொள்கிறேனே,ஏன் தெரியுமா, இன்றைய தினத்தில தான், பதினெட்டு வருடங்களுக்கு முன் உன்னை நான் கிடைக்கப் பெற்றேன்! இந்த அரிய தினத்தை என்னால் மறக்க இயலுமோ! இந்த மகிழ்ச்சியான இந்த தருணத்திலே, நீ எனக்கு கிடைத்த கனவுகளிலே மிதக்கின்றேன். முதல் அறிமுகம் இன்றும் மனதில் பசுமையாக காட்சி அளிக்கிறதே. அந்த கள்ளம் கபடமில்லா குழந்தைப் போன்ற உன் முகம், என்னிடம் பேசும் சில நிமிடங்களில் உன்னிடம் நான் கண்ட ஆனந்தம், ஆகா, அதை என்னால் ஒரு வரியால் அடக்கி விட முடியாது என்னவளே! அதற்கு எனக்கு இந்த யுகம் போதாது.





தொடர்ந்து நீ ஏற்படுத்தி கொள்ளும் அந்த அழகான சந்தர்ப்பங்கள், என்னிடம் பேச விழைவதற்கு, மிக அழகானவை, அந்த காதல் கொண்ட நாட்கள் நினத்தாலே தித்திப்பானதே! என்னை மறந்த நாட்கள் பலவாயிற்றே! காதல் தெரிவித்த பின் உன்னோடு இருந்த காலங்கள் சில மணி நேரங்கள், அதன் பின் என பணி நிமித்தம் உன்னை பிரிந்த பொழுது, எத்தனை கலக்கம் தெரியுமா, தூங்கமல் சென்ற இரவைத்தான் அழைக்க வேண்டும் சாட்சி சொல்ல!


பிரிந்தும் இருந்ததே இன்பம், என் சொல்வேன், அதிகமில்லை இருவரும் ஒன்றாய் கழித்த தருணங்கள், ஆயினும் என்னால் உன் நினைவினை அசை போட முடிந்ததே! உன் முகத்தினை மனத்திரையில் எத்தனை வடிவில் கொண்டு சென்றேன் ஒவ்வொரு மணித்துளிகளிலும் உனை நினைக்கும் பொழுது! பிறகு கடிதம் இட்டுக்கொண்டோம், தாயகம் பிரிந்த வடக்கே சென்ற பொழுதும், என் தினம் பிறப்பது தெற்கு நோக்கிதான். கதிரவனை நான் கிழக்கில் கண்டு தொழுததில்லை நித்தம், அன்றைய தினங்களில்! இப்பொழுதும் அப்படித்தான். உனைப்பிரிந்து எங்கு சென்றாலும், நீ இருக்கும் திசையில் தான் என் கதிரவன் தினம் உதிப்பான். இப்பொழுது கூட, ஏன் இன்றுகூட வடக்கில் தான் உதித்துள்ளான், எனென்றால் நீ இருப்பது வடக்கு துருவம் அருகிலல்லவா?

ஓடோடி வந்து, உனைக்காணும் நாள் தான் எனக்கு இனிய நாள், இருவரும் ஏக்கப் பார்வைக் கொண்டு நேரம் விரைவதை ஏசிப்போம், இருவரும் ஒன்றாய் இருக்கும் தருணங்கள் சுருங்குவது, அண்டசராசரமே அழிவது போன்ற ஒரு பிரம்மை! பிறகு உன் விழி நான் கண்டு என் விழியும் நீருக்குள் சுருங்குவது நாம் மட்டுமே அறிந்த உணர்வு. எப்படியோ நம் விடயம் உன் வீட்டில் தெரிந்து, நீ செய்த சத்தியத்தை காப்பாற்ற, ஒரு மடல் விடுத்தாய், அனைத்தையும் மறந்து போக சொல்லி. மறக்க முடியுமா நம் காதல், இல்லை பிரிக்கக் கூடியதா நம் பந்தம். ஆனால் காலத்தின் கட்டாயத்திற்காக ஒதுங்கினோம், அப்படி பிரிந்த நாட்களும் தொடர்பின்றி போனதே ஒழிய, நினைவின்றி போகவில்லை, இனி உன்னை எப்போது காண்பேன் என ஏங்கி தவித்த நாட்கள் அதிகம். இன்றும் நினக்கும் பொழுது அது போன்ற ஒரு நிலை என்றும் நமக்கு வரக்கூடாதென்பதே என்னுடய சித்தம் என்றுமிருக்கும்.

இப்படி போன நாட்களிலே வந்தான் ஒருவன், இழந்த சொர்க்கத்தை மீட்டு கொடுக்க! நான் கண்ட பணி பேணும் அந்த நல்லான், காதல், பிரிவுகளை கண்டுணர்ந்த அந்த நண்பன், வழி தடமிட்டான் நாம் இருவரும் இணைய. நீயும் கல்லூரி முடித்து துணிந்த நின்ற நேரம். இடர்கள் அனைத்தும் தகர்த்து விடும் தன்னம்பிக்கையும், இணைந்தே வாழ்வது என்ற வைராக்கியமும் உன்னிடம் நிறைந்த நேரம், மீண்டும் தொடர்புட்டு என்னை அடைந்தே தீருவது என்று உன் வீட்டாரிடம் தர்க்கம் கொண்டாய். நானும் பெரியவர்கள் ஆசி என்றும் வேண்டுமென்று நம் காதலுக்கு மரியாதை செலுத்த முன் வந்தேன். இரு வீட்டாரின் சம்மதம் பெற்று, இந்நாளிலே ப்தினெட்டு ஆண்டுகளுக்கு முன் மணமேடை புகுந்தோம். அந்த இனிய நாள் வாழ்வில் மறக்க இயலா ஒன்று.

இன்றும் ஈருடல் ஓருயிராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம், எத்தனையோ சிறு பல தவறு செய்தாலும், உன் அன்பு என்றும் மாறாமல் என்றென்றும் என் மீது காதல் வயப்பட்டு இருக்கிறாய், நீ கிடைப்பதற்கரிய ஒரு குறிஞ்சு மலர். எனக்கே எனக்காக உருவாகியவள், நான் என்றும் என்றும் கொடுத்து வைக்கப்பட்டவன் உன் போன்ற அரிய மனைவி அமைய. இதில் ஒரு பொருத்தம் கண்டாயா, உலகம் கொண்டாடும் காதலர் தினம் நாம் கூடிய தினத்திற்கு மிக அருகாமையில்! இது போன்ற மகிழ்ச்சிமிக்க திருமண நினைவு நாள் தொடர்ந்து வந்து நம் வாழ்வை மென்மேலும் சிறக்க வைக்க வேண்டும் என்பதே என் அவா..


இதோ நீ என்னிடம் விரும்பி பாடச் சொல்லும் பாட்டு உனக்காக!

6 comments:

said...

நாதரே, மேலே உள்ளத வாசிக்கல...எதுக்கு உங்க பிரைவசிக்குள் நுழையணும்னுதான்..!

மண நாள் வாழ்த்துக்கள். வாழ்க காலமெல்லாம் இதே அன்புடன்...

பாட்டு கேட்டேன்.

said...

பிடித்தவளுக்கு பிடித்தது உங்களுக்கும் பிடித்துள்ளதா, தருமி!

said...

உதயகுமார்,
ஜெயிச்ச ஒவ்வொரு காதலுக்குப் பின்னும், ஒரு சரித்திரம் இருக்கும். உங்களுடையது எனது பின்பக்கத்தின் பளீரொளியைத் தூசி தட்டுகிறது.

கவிதை மனம் உடையவர்களுக்கு காதல் என்றுமே, பசுமையானதுதான்
திருமண நாளுக்கு வாழ்த்துக்கள்!!!!

said...

சரியா சொன்னீங்க தாணு, ஒவ்வொரு ஜெயிச்ச காதலுக்குப் பின்னேயும் ஒரு சரித்திரம் இருக்குமுன்னு, உங்க பின்பக்கத்தை தூசி தட்டி போட்டுங்க அடுத்த பதிவை!

said...

வாழ்த்துக்கள் நாதரே!
வளமோடு நலமும்!
களம் கண்டு !
இளம் சந்ததிக்கு என்றும் !
ஓர் எடுத்து கட்டாய்!

said...

வாழ்த்து சொன்ன செயகுமாருக்கு நன்றி! காதல் செய்வீர், ஆனா தாணு சொன்ன மாதிரி கா.மு,கா.பி காலக்கட்டங்களை எதிர் கொண்டு வெற்றி கொள்ளுங்கள் என் இளம் சந்ததியரே!