Friday, June 16, 2006

ராஜாக்கா பாவா!

"குமாரு, ராஜாக்கா எண்ணெய்யை ஊத்தி கொளுத்திக்கிட்டு வெந்து போயி ஆஸ்பத்திரிலே கிடக்கிறாடா" ஒப்பாரியும், அழுகையுமாக என் அம்மா , நான் வீட்டில் நுழைந்த அந்த தருணத்தில், கிடந்து தலையிலும் மாரிலும் அடித்துக் கொள்ள தெருக்கூட்டம் அவளை சுற்றி நின்றது. எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை, அந்த ஒருக்கணம் அப்படியே விக்கித்து நின்றிருந்தேன்!

"அழுகாத பேபி, புள்ளை பொளச்சிக்குவா" என்று தேத்தியது கூடி நின்ற கும்பல்

"பாஸூ, நான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திர்றேன், நீ அம்மாவை பாத்துக்கடா" என்று என் தம்பியிடம் கூறிவிட்டு, செருப்பை மீண்டும் காலில் போட்டுக்கொண்டு, வெளியில் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுக்க தயாரானேன்.

"குமாரு, எங்கடா போறே, ஆஸ்பத்திரிக்கு வர்றலே, இந்தா ஆட்டோ கூட்டிட்டு வந்துட்டேன். நான் அம்மாவை ஏத்திட்டு போறேன், நீ அங்க வந்து சேர்ந்திடு" என்று சொல்லிக் கொண்டே சென்ற என் இன்பா அண்ணனுக்கு, "சரிண்ணே!" என்று கூறி சைக்கிளை எடுத்து தெரு முனைக்கு வந்தேன்!

"குமாரு, இன்பாவும் அம்மாவும் கிளம்பியாச்சா, கோயிலு முக்குலே டிராபிக்கா ஆயிடுச்சு, ஆட்டோக்காரன் நிறுத்த மாட்டேங்கிறான்!" என்று கூறியபடி வந்தான் அலெக்ஸ், என் அண்ணனின் நண்பன்.

நான் நேராக என் ராஜாக்கா வீட்டிற்கு சைக்கிளை அழுத்தினேன்!

-------


"ராஜாவுக்கு வாத்தியார் மாப்பிள்ளை பார்த்து முடிச்சாச்சு, அடுத்த தையிலே கல்யாண தேதி குறிச்சிட்டு வந்தோம்!" என் அம்மா எனக்கு தட்டில் சோறு எடுத்து வைத்துக் கொண்டே என் அப்பாவுக்கு விவரம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"எத்தனைப்பேரு, குடும்பத்திலே"

"பையன் தான் மூத்தவன், இரண்டு பொண்ணுங்க, மூத்தவளை மெட்ராஸ்ல கட்டிகுடுத்துட்டாங்களாம், சின்ன பொண்ணு நம்ம குமாரு மாதிரி, எஸ் எஸ் எல் சி படிச்சிக்கிட்டிருக்கு! அப்புறம் நாலு பசங்க"

"பெரியக்குடும்பம் தான்.. ம்..", பெரு மூச்சுடன் அன் அப்பா.

"என்னமோ, பாவம் முப்பது வயசாச்சு, சீக்கிரம் முடிங்க! உங்க அக்காவுக்கும், அண்ணனுக்கும் பெரிய பாரம் குறஞ்ச மாதிரி இருக்கும், கடைசி பொண்ணு இழுத்துக்கிட்டு ஓடி போனதிலிருந்து பாவம் மனுஷன் ரொம்பத்தான் ஆடிப்போயிட்டார். இந்த கல்யாணத்திலேயாவது கொஞ்சம் நிம்மதி வரும்!

"ஜாதகம் எல்லாம் பொருந்தி நல்லா வந்திருக்கு, ஆனா பையனுக்கு மூலம்" இது என் அம்மா.

"அதுக்கு பார்க்கமுடியுமா, எல்லாம் ஒண்ணா பொருந்தி வந்தா, முடிச்சிட வேண்டியது தானே"

-------


"வா குமாரு, இங்கே தான்.. டூப் லைட் எல்லாம் வெடிச்சி சிதறிடுச்சி, நாங்க ஒன்னுமே செய்யலையே, எங்களுக்கு அம்மா மாதிரியில்லே இருந்தாங்க" என் அக்கா கணவனின் கடைசி தம்பி!

"எத்தனை மணிக்கு, நடந்துச்சி?"

"காலையிலே எங்களுக்கெல்லாம் செஞ்சுக்குடுத்துட்டு, டிபன் எல்லாம் கட்டி, நாங்க எல்லாம் போனதுக்கப்புறம்.."

"பாவா, வீட்ல இருந்தாரா, அவருக்கு ஒன்னும் ஆகலையே!"

"ஆமா, அவரும் ஸ்கூலுக்கு கிளம்பிக்கிட்டிருந்தாரு, மாடியில்லருந்து கீழே வர்றதுக்குள்ள, எரிஞ்சிட்டாங்க...ம்ம்.." விம்மலுடன் கூடிய அழுகையோடு

"அப்ப அக்கா ஆபீஸு போகலையா"

"அவங்க, என்னமோ தெரில்ல, இரண்டு நாளு ஆபிஸுக்கு லீவு போட்டுட்டு இருந்தாங்க"

"சரி நான் ஆஸ்பத்திரி போறேன், நீங்க வர்றீங்களா?"

"நீ போ, குமாரு, நான் இதை எல்லாம் எடுத்து சுத்தம் பண்ணிட்டு வந்துடுறேன்"

-------


"ஆபிஸு க்கு போன் போட்டு வர சொன்னாரு பின்னி", ராஜாக்கா என் அம்மாவிடம்

"கல்யாணத்துக்கு இரண்டு வாரம் தானே, அதுக்குள்ளே என்ன சுத்த வேண்டியிருக்கு", என் அம்மா

"இல்லை காபி சாப்டலாமுன்னு, ப்க்கத்திலே கேண்டீன்ல தான்"

"என்னடா, சர்க்கரை கிடச்சிச்சா ரேஸன்ல", என் அம்மா

"ராஜாக்காவா, எப்ப வந்தீங்க", இது நான்

"இப்ப தான், நல்லா படிக்கிறீல்ல குமாரு, ஸ்டேட் ஸ்காலர்சிப் வாங்கற மாதிரி மார்க்கெடுக்கணும், அப்பதான் உன்னையை மேற் கொண்டு படிக்க வைப்பாங்க, இல்லேன்னா பூக்கடை தான்!"

"நல்லா படிக்கிறேங்க்கா, மார்க்கு ரிவிஷன்ல எல்லாம் நல்லா வந்திருக்கு, போர்டுல வாங்கிடுவேங்க்கா"

"குமாரு நல்லா படிக்கிறான், பின்னி! அவனை நிறைய படிக்க வைங்க!"

"இப்பவே, வெறும் கைக்கு முழம் போட வேண்டியிருக்கு, ம்.. எங்க ஆவப்போறது, அதான் எஸ் எஸ் எல் சி லே நல்ல மார்க் வாங்கினா, போஸ்ட் ஆபிஸிலே மெரிட்ல வேலை கிடச்சிடும்னு சொன்னியே, அப்படி இவன் வேலைக்கு போனா, இங்க உதவியா இருக்கும்!"

"அதெல்லாம் வேணாம் பின்னி, நல்லா படிக்கிறப் பையனை, ஸ்காலர்ஷிப்பு, அது இதுன்னு புரட்டி படிக்க வச்சிடலாம், கவலையை விடுங்க"
-------


பெரியாஸ்பத்திரியில், முழுவதுமாக திரைச்சீலை போட்டு கட்டிலில் வாழையிலையில் கிடத்தி வைத்திருந்தார்கள்

"கும்பலா நிக்காதீங்க, கொஞ்சம் ஒதுங்கி விராண்டால போய் எல்லாரும் இருங்க, ஸ்டாப் நர்ஸ் பாய்ந்தாள்

"85 பர்செண்ட்டு எரிஞ்சு போச்சுன்னு, டாக்டர் சொல்லிருக்காரு, இன்னும் நினவு வர்றல, குளுக்கோஸ், ஆக்ஸிஜன் எல்லாம் கொடுத்து வச்சிருக்காங்க..", பெரிய அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்திச்சு

"பாலு எங்கே?", இது எங்க கண்ணா மாமா

"அந்த சண்டாளனை எதுக்கு கூப்பிடுறீங்க, என் பொண்ணை கொளுத்திட்டு, கை வெந்து போச்சுன்னு நாடகமாடுறான்", இது என் பெரியம்மா

"அய்யா, இதுக்கா இவ்வளவு நாளு வச்சிருந்து கட்டி குடுத்தோம், ஒரு வீட்டு கும்பலுக்கே சோறுபோடுவாளே முகம் சுழிக்காமே எம் பொண்ணு, அவளை கட்டையிலே எரிய வச்சிட்டானுங்களே, இன்பா, இத விடக்கூடாது!"

"அந்தாளை வெட்டி பொலி போட்டாதான் என்க்கு நிம்மதி வரும், எங்க இருக்கான் அவன்", என் இன்பா அண்ணன்

"டேய் இந்த நேரத்திலே, ஆளாளுக்கு.. அவ கண்ணு முழிக்காம படுத்துக் கிடக்கா, நீ போடா கீழே, சரி நீங்க எல்லாம் அந்த மூலையிலே போய் உட்காருங்க ", இது என் மாமா

நான், மூலையில் அழுது அழுது பார்க்க கூட திராணி இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்த என் ராஜாக்கா பாவாவிடம் சென்றேன். என்னை பார்த்துட்டு, குலுங்க குலுங்க அழுது அப்படியே சரிந்தார்

"டேய் குமாரு, கீழே போய் சோடா எதாவது வாங்கியாடா"

நான் கீழே, ஆஸ்பத்திரி வளாகத்தை விட்டு வெளியில் இருக்கும் கடைக்கு சென்றேன்!

-------


"இப்ப நான் ஆயிரம் ரூவாயிக்கு எங்கப் போறது, நாளைக்கே போய் இஞ்சினியரிங் காலேஜ்ல சேரணும்னா, நான் என்ன முந்தானைலயா முடிஞ்சி வச்சிக்கிட்டுருக்கேன், அந்தாளு, எனக்கொன்னும் தெரியாதுன்னு கிடக்கிறாரு மனுஷ்சன்", இது என் அம்மா

"சரி பின்னி, இஞ்சினியரிங் சீட்டு கிடைக்கிறதுங்கிறது அவ்வளவு ஈசியில்லே, படிக்காம சுத்துற எத்தனை தருதலைய பார்த்திருக்கோம், படிக்கற புள்ளயை படிக்க வைங்க", இது என் அக்கா

"குமாரு, பொறுப்பா நல்லா படிப்பான் அத்தை, படிக்க வைங்க" இது ராஜாக்கா பாவா

"இப்ப பணத்துக்கு எங்க போவேன், நாளைக்கே கோயம்புத்தூரு போகணும்கிறானே"

"நீங்க கவலையை வுடுங்க, நான் கொண்டு பணத்தை கட்டி சேர்த்து விட்டுட்டு வர்றேன்", ராஜாக்கா பாவா

"பணத்தை எப்படியும் திருப்பி கொடுக்கறதுன்னா, ஒரு ஆறு மாசமாவது ஆயிடும்"

"அது எதுக்கு அத்தை, நல்லா படிக்கிறப் புள்ளைக்கு எவ்வளவு காசு செலவு பண்ணுனாலும் தகும்"

"குமாரு, நான் தான் ஒன்னோட அப்ளிகேஷன் பில்லப் பண்ணி கொடுக்கிறப்பயே சொன்னனே, சீட்டு கிடைச்சா நான் சேர்த்து வைக்கிறேன்னு"

'எனக்கு கல்லூரி போய் சேரும் பாக்கியம் கிடைக்குமோ' என தவித்துக் கொண்டிருந்த நான், இவர்கள் பேசுவதை கேட்டு நம்பிக்கையோடு மூலையில் நின்று கொண்டிருந்தேன்.

-------


"அய்யோ எரியுதே, வலி தாங்க முடியலயே, பின்னி, என்னை கொண்ணுட சொல்லுங்க பின்னி" ராஜாக்கா மரண வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள்.

"அய்யோ என் பொண்ணு இப்படி துடிக்கிறாளே, யாராவது எதாவது பண்ணி, அவளுக்கு வலி வராம பாத்துக்குங்களேன், டாக்டரை கூப்பிடுங்களேன்!", இது என் பெரியம்மா

"ஆ..உயிர் போகுதுதே, ம்.... ம்..."

"என் பொண்ணுக்கு கண்ணு சொருகுதே, குமாரு, போய் டாக்டரை கூப்புடய்யா"

"தள்ளுங்க, தள்ளுங்க, அந்த ஆக்ஸிஜன் சிலெண்டரை கொஞ்சம் எடுத்துட்டு வரமுடியுமா, சிலிண்டெர் தீந்து போச்சு", ஸ்டாப் நர்ஷ்

நடு ராத்திரியில், அனைவரும் இங்கொன்று, அங்கொன்று என்று சென்று விட்டதால், நானும், ராஜாக்கா பாவா மட்டும், அந்த சிலிண்டெரை தள்ளி கொண்டு வருகிறோம். அதற்குள் டாக்டர் வந்து விடுகிறார்

"ம்... நர்ஷ், பேசெண்ட்டுக்கு பல்ஸ் வர்ரமாதிரி தெரியலை, அந்த கார்டியோகிராம் கொண்டாங்க"

சிறிது நேரம், அவர்கள், இங்கும், அங்கும் மருந்துகளையும், ஊசிகள் எடுத்து வருவதிலும் அலைந்து கொண்டிருக்கின்றனர்

திடீரென்று என் அம்மா, "டேய் போய்ட்டாடா...போய்ட்டா, அவக்கதை முடிஞ்சி போச்சி, அவ்வளவு தான், ஒன்னுக்கில்லாம என் தங்கத்தை பறி கொடுத்தேனே", ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்

-------


நடுக்கூடத்தில் என் ராஜாக்காவை கிடத்தி வைத்துள்ளார்கள். சுற்றி பெண்கள் அனைவரும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றனர், வீட்டு வெளியில் பெரியவர்களும், மற்ற ஆண்களும் கூடி உள்ளனர், பாடை செய்பவர் மூங்கில்களை எடுத்து அடுக்கி கொண்டிருக்கிறார்.

வீட்டின் உள்ளே, "கட்டிக்கிட்டு வந்த ஆறு மாசத்திலே, அவ அப்பனை சாப்டுட்டான், இப்ப பாருங்க இவளை, மூலம், எடுக்க வேணாம்னு தலையால அடிச்சிக்கிட்டேன், என் பேச்சை எவளாவது கேட்டீங்களா" இது என்னுடய இன்னொரு பெரியம்மா

"அவன் அம்மாக்காரி பண்ண கொடுமை தான்"

"மாமியாகாரி, புள்ளைங்களோட ஒத்து வர்றலேன்னு, புருஷனோட தனியா போய் இருந்தா எல்லாரையும் இவ தலையிலே கட்டிட்டு, இவளும் அம்மா மாதிரி அவன் தம்பி, தங்கச்சிங்களை பாத்துக்கிட்டா"

"எப்பவும் புடுங்கல் தான், அது வேணும், இது வேணும்னு"

"அந்தாளு சரிதான், ஆனா அம்மாக்காரி சொன்னான்னு என்னமோ அன்னைக்கு அப்படி சொல்லிட்டாராம், புள்ள, மனசுக்கு தாங்கல, ஊத்திக்கிச்சு"

"நல்லா தானே நாலு நாளைக்கு முன்னே நம்ம விஜிக்கு மொட்டை அடிச்சி, காது குத்தறப்ப, புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் வந்து போனாங்க"

"இதோ பச்சபுள்ள, இப்பதான் எட்டு மாசக் கைகொழந்தை, அத விட்டுட்டு ஊத்தி கொளுத்திக்க இவளுக்கு எப்படி தான் மனசு வந்ததோ"

"பையனுக்கு என்னா மூணு வயசா"

"ஆமா, என்னா நடக்குதுன்னு தெரியலை, தோ, பாட்டியாகாரி மடியிலே உட்கார்ந்திருக்கான்"

-------வீட்டுக்கு வெளியே, "உடுங்க, எங்கக்காவை கொளுத்தினவனை கொளுத்தாம வுடறதில்லை", வேட்டியை மடக்கி கட்டிக் கொண்டு என் கடைசி அண்ணன் பாபு

"ஆமா, அந்தாளுக்கு மாப்பிள்ளைன்னு என்ன குறை வச்சோம்"

"சரி, சரி இப்ப எதுக்கு விவகாரம் பண்ணிக்கிட்டிருக்கீங்க"

"பொண்ணுக்குன்னு போட்டது எல்லாத்தையும் வாங்கி ஒரு ஜாயிண்ட் அக்கவுண்ட்ல போட்ருங்க, பையனுக்கு பதினெட்டு வயசு வர வரைக்கும், தம்பா, நீயும் அவரும் குழந்தைக்கு கார்டியன்", இது என் பெரிய அண்ணனிடம் கூறி கொண்டிருந்தனர்

"சரி மள மளன்னு ஆகிற காரியத்தை பாருங்க, ரொம்ப நேரமாச்சு, இதுக்கு மேல தாங்காது எவ்வளவு ஐஸ் வச்சாலும்"

-------


எல்லா காரியங்களும் முடிந்து,வீட்டுக்குள் முன் அறையில் நானும், என் ராஜாக்கா பாவாவும். இரண்டு இரவுகளாக கண் விழித்து ஆஸ்பத்திரியில் இருந்து, தொடர்ந்து அழுது மயங்கிய நிலையில் நாங்கள் இருவருமே! 'குமாரு, நான் ஒன்னும் உங்க அக்காவை பண்ணலடா என்கிற மாதிரி ஒரு பார்வையில்' என்னிடம் ஏதோ குற்றம் செய்தவர் மன்னிப்பு கேட்பதை போல பார்த்துக்கொண்டிருந்தார்

நானும், 'சரி விடுங்க பாவா, அக்காதான் பைத்தியக்காரத்தனமா செஞ்சுக்கிச்சு' என்று அவரிடம் சொல்லாமல் சொல்லுவதை போல நினைத்து, "பாவா, இந்த காப்பியாவது சாப்பிடுங்க, ரெண்டு நாளா நீங்க வாயே நனைக்கலே" என்றேன்

"உங்க மொத்த சொந்தமும் என்னை திட்டுது, ஏதோ நான் தான் அவளை கொளுத்தி போட்டதா"

"எனக்கு எல்லாம் தெரியும், பாவா, நீங்க குடிங்க" என்று அவரிடம் நீட்டுகிறேன். அனைவரை விட அதிகம் அவர்களுடன் உறவாடியவன் நான். சிறு வயதிலிருந்தே என் ராஜாக்காவிடம் ஒரு ஒட்டுதல். அவர்கள் திருமணம் ஆகி சென்றதும் தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு சென்று, அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் செலுத்திக் கொள்ளும் அன்பை, அந்நியோன்யத்தை அருகிலிருந்து பார்த்தவன்! எனக்குத் தெரியும் பெண்கள் அனைவருமே உணர்ச்சியின் உச்சங்கள்!

தன் சொந்தங்கள் எதை இழந்தாலும், அடுத்தவர் செய்நன்றி அறியா சுயநலவாதிகள், எதிரி போல, அவரை பார்க்கும் கூட்டத்தில், அன்பாக அவரை ஆதரித்து, ஆறுதலாக துணைக்கு பக்கத்தில் இருந்து அவரை, அந்த நிலையிலும் தேற்றுவதை பார்க்கும் பொழுது, எனக்கே மலைப்பு, நான் எப்படி என் விடலையை தொலைத்து பக்குவத்துடன் அந்த கணத்தில் நடந்து கொண்டேன்!

-------


தேன்கூடு + தமிழோவியம் (ஜூன் 2006 - வளர் சிதை மாற்றம்) போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை

24 comments:

said...

கதை மாதிரியே தெரியலையே! ஒரு தொடர் வர்ணனை கேட்பது மாதிரிதான் நான் வாசித்தேன்.

said...

உதயகுமார்,

போட்டிக்குப் போற கதையா?

வாழ்த்து(க்)கள்

said...

எல்லோரும் காதல், இனக்கவர்ச்சினு தளத்துல எழுதையில... இந்த வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கள் வெளிகண்டநாதரே..

said...

நட்சத்திரமும் போட்டிக்கு வந்தா நாங்க எல்லாம் என்ன செய்யறது?? ம்ம்ம்..

கதை நல்லா இருக்கு.. ராஜாக்கா எதுக்கு இறந்தாங்கன்னு ஒரு அழுத்தமான காரணமும் சொல்லி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.. அப்புறம் குமார் எங்கேயும் விடலைப் பருவக் குறும்புகளோட இருந்ததாத் தெரியலையே?.. ஆரம்பத்திலிருந்து நல்லா படிக்கிற நல்ல பையனாகத் தானே இருக்கான்?!!!...

said...

தருமி சார், வர்ணனை ஜாஸ்தி ஆயிடுச்சோ! சம்பங்கள் கோர்வை கதையா வர்ற மாதிரி வர்ணனைகளை வச்சி, போட்டிக்கு உண்டான கதை சொல்ல ஒரு முயற்சி!

said...

துளசி,கதை பத்தி ஒன்னும் சொல்லலியே-:(

said...

வாழ்த்துக்கள் வெளிகண்ட்,
வளர்சிதைமார்றம்னு ஏதோ ஹார்மோன் சம்பந்தப் பட்ட பதிவுகள எதிர்பார்த்தா ஹார்ட் சம்பந்தப்பட்ட கதை.

படிக்கும்போது கண்முனே காட்சிகள் விரிந்து மறகின்றன. இந்த மாதிரி கதைக்கு இப்படி ஒரு வேகம் கொஞ்சம் அதிகமோ?

அதெப்படி விடலைப் பருவம்பத்தி எழுதும்போது இப்படி ஒரு பொண்ணு தீக்குளிக்கிற சப்ஜெக்ட் தோணுச்சு?

விடலை விட்டு ரெம்பநாளாச்சுன்னு நினைக்கிறேன்.

said...

வட்டார வழக்கும், நடையும் நன்றாகவே இருந்தது. ராஜாக்கா ஏன் எரிச்சிகிட்டாங்கனு கடைசி வரை சொல்லலையே? ஏன் நாதரே.

அன்புடன்
தம்பி

said...

யாத்திரீகன், வருகைக்கு நன்றி!

said...

பொன்ஸ், ராஜாக்கா இறந்ததுக்கு காரணம், என்ன தான் அன்பா, ஆதரவா இருந்தாலும், சில சம்யங்கள்ல அம்மா பேச்சை கேட்டு எதுக்காவது கோபமா பேச, சொல்ல, அதான் பொமபளங்களுக்கு அதெல்லாம் தாங்காதே, அதான் கோபத்துக்கு காரணம்! கதை கரு அடெலசன்ஸ்ல எப்படி பக்குவமா நடந்து துயரத்திலே இருக்கிறவங்களுக்கு ஆறுதலா இருக்குனும்னு அந்த மாற்றங்களோட கூடிய மனமுதர்ச்சியை தான் நான் கருவா எடுத்துக் கொஇட்டு கதை கட்டுனதாலே, ராஜாக்கா சாவின் காரணமெல்லாம் சொல்லவில்லை!

பார்த்தீங்களா, சரியா குமார் கேரக்டரை கஸ் பண்ணிட்டீங்க, அந்த குறும்புகள்னு படிக்கிறவங்க கற்பனைக்கு விட்டுட்டதாலே, அதிகம் அழுத்தம் கொடுக்கலை! ஏதோ என்னால ஆன விளக்கம், ஆனா கதை எழுதறப்ப இதெல்லாம் யோசிக்கல்லை-:)

said...

//அதெப்படி விடலைப் பருவம்பத்தி எழுதும்போது இப்படி ஒரு பொண்ணு தீக்குளிக்கிற சப்ஜெக்ட் தோணுச்சு?// சிரில், கருதலைப்புக்கு ஒரு வித்தியாசம அர்த்தம் கொடுக்க கொஞ்சம் கனமா எடுத்துக்கிட்டேன்!

said...

தம்பி, காரணம் பொன்ஸ் குடுத்த பதிலே தான்!

said...

தப்பா புரியும்படி எழுதிட்டேனோ?
நான் சொல்ல வந்தது இரண்டு: 1. கதை போலன்றி உண்மைச் சம்பவம் போலவே இருக்கிறது.
2.incidents என்று அடிக்கிக் கொண்டு போகாமல் கதை சொன்ன விதம் நன்றாக இருந்தது என்பதே

said...

கதை நல்லாயிருக்கிறது சார்.

நன்றி.

said...

தருமி சார், உண்மை சம்பவத்தை வைத்தே புனையப் பட்ட கதை!

said...

நன்றி சிவபாலன்!

said...

போட்டியில் யாரும் தொடாத விஷயத்தைத் தொட்டு எழுதி இருக்கிங்க. வாழ்த்துகள்

said...

விறுவிறுப்பான கதை. வளர்சிதை மாற்றத்தின் தாக்கமும் அன்பான மனையியலைப் புரிதலும் சரியாக கொண்டுவரப் படவில்லை என எண்ணுகிறேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

said...

வருகை தந்த கேவிஆர் அவர்களே, நனறி!

said...

//வளர்சிதை மாற்றத்தின் தாக்கமும் அன்பான மனையியலைப் புரிதலும் சரியாக கொண்டுவரப் படவில்லை என எண்ணுகிறேன்.// ஒரு வித்தியாச கருவை கையாள எடுத்துக் கொண்ட கதை! நீங்கள் கூறியது போல செம்மை படுத்த பல வழிகள் உண்டு முயற்சிக்கிறேன்!

said...

வித்தியாசமான கதை... நன்றாக இருந்தது..வாழ்த்துக்கள்

said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

said...

அருமையான கதை பாபா. நெஞ்சம் உருகியது. உண்மையில் நடந்த நிகழ்ச்சியா இல்லை கற்பனையா?

said...

குமரன், இது உண்மை சம்பவத்தை கொண்டு புனையப்பட்ட கதை!