Saturday, June 17, 2006

பாரதிராஜாவின் முதல் ஜந்து நட்சத்திரங்கள்!

நான் எழுதனும்னு நினைச்ச இந்த பாரதிராஜாவின் ஐந்து நட்சத்திரங்களை, எனை ஆண்ட அரிதார சிறப்பு பகுதியிலே அதிகமா சொல்ல முடியாம போயிடுச்சு, வேறே ஒலி கலப்பு பண்ணி புதுசா குடுக்கலாமுன்னு நேரம் செலவழிச்சதாலே முழுசும் எழுத முடியல்லை, அதான்! இப்ப விஷயத்துக்கு வர்றேன்! முத அஞ்சு படங்கள் எல்லோரையும் கவுத்து போட்டது, ஒவ்வொன்னும் பத்தியும் நினச்சு பார்க்கும் போது, அப்படியே நான் ஒரு பதினைஞ்சு வருஷம் கம்மியான மாதிரி! அதாவது நான் வாலிபத்தின் தொடக்கத்தில இருந்த நேரம்! பாரதிராஜாவும் எங்களுக்கே வேண்டிய காதல் கதைகளை தமிழ் நாட்டு மணம் கமிழ சொல்லி, அங்கங்க ஐதீகம், கிராமபஞ்சாயத்து, அப்படின்னு சொல்லி வந்த படங்கள். என்னா ஒரு குறைன்னா, நம்ம பிரகாஷ் சொன்ன மாதிரி கிராமத்து தேவதைகள் எல்லாருமே பவுடர் பூசின சுந்திரிகள்! அதான் கதாநாயகிகளை மட்டும் கொஞ்சம் இயற்கையா காமிச்சிருந்தாருன்னா நல்லா இருக்கும்! ஆனா அப்படி காமிச்சா கதைக்கு நல்லா இருக்கலாம், யாரு அவங்களை பார்க்கிறது-:) சரி அந்த ஐந்து படங்களையும் பார்ப்போம்!

16 வயதினிலே: நான் எற்கனவே சொன்ன மாதிரி, இது முதப்படம், கிராம மணம் கமிழ வந்தப்படம். அப்ப கமல்,ரஜினி எல்லாம் லீட் ஆக்டருங்க கிடையாது, சட்டையை வேட்டியை கழட்டிப்போட்டுட்டு கோமணத்தோட நடிக்க யாரும் முன் வராத காலம்! அதுவும் வாய் நிறைய பொகையிலையே மென்னுக்கிட்டு! ஸ்ரீதேவியை பத்தி நிறைய சொல்லிட்டேன், இந்தபடம் வந்தப்ப நான் எஸ் எஸ் எல் சி படிச்சி முடிச்சி ஷேஷஷாயி இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்த நேரம்! மலேசியா வாசுதேவன் குரல் எனக்கு கப்புன்னு புடிச்சிருந்தது, அது வரைக்கும் இந்த உச்சாயிலேயே பாடி அலுப்பு அடைய வச்சிருந்த டிஎம்ஸ் க்கு சமமா பளீர்னு பாடிய பாடகர், புதுசா வந்திருந்த நேரம்! எனக்கு அவரை குரலை கேட்டமாத்திரத்திலே புடிச்சிப்போச்சு!
இந்த படத்திலே பாக்யராஜ் நடிச்சிருக்காரு உங்களுக்கு எல்லாம் தெரியுமா? ஸ்ரீதேவிக்கு ஒரு தடவை மேலுக்கு சரியில்லைன்னு கமல் ஒரு வைத்தியரை கூட்டிட்டு வருவாரு தெரியுமா, அவரு தான்! தலையிலே சாக்கை போட்டுக்கிட்டு ஸ்ரீதேவிக்கு வைத்தியம் பண்ண வருவாரு! அதுல கமலஹாசனை என்ன புரியதோ, எழவோ, கேனப்பயலேன்னு திட்டு வாரு! அடையளம் கண்டு கொள்ள முடிஞ்சதா உங்களாலே!

கிழக்கே போகும் ரயில்: இது நான் இஞ்சினியரிங் போய் சேர்ந்த வருஷம் வந்த படம்! பாரதிராஜாவோட முதப்படத்தின் வெற்றியாலே அதே கோஷ்டி, பன்னாரி அம்மன் மூவிஸ், புதுசா நடிக்க வந்த சுதாகர், ராதிகா ஜோடி! இந்த படம் மெட்ராஸ்ல ஒரு வருஷத்துக்கு மேலே ஓடுனச்சு! இந்த படத்திலே அதிகமா பேசப்பட்டது இரண்டு ஒன்னு கவுண்டமணி, இன்னொன்னு அந்த ஐதீகம்! நான் கவுண்டமணி வசனத்தை மிமிக்கிரி பண்ணி பேசனதை தான் எழுதி இருந்தேன்னா! ஒன்னு தெரியுமா படத்திலே நடிச்ச நடிகைகளை விட சுதாகர் ரொம்ப அழகு! ஒரு மாதிரி தமிழை கடிச்சி கடிச்சி பேசின ராதிகவா இப்ப சித்தியிலே இந்த போடு போடுதுன்னு ஆச்சிரியப்பட்டது உண்டு! ஒரு நடிகையின் பரிணாம வளர்ச்சி எப்படிங்கிறதுக்கு ராதிகா ஒரு நல்ல உதாரணம்! அதே மாதிரி கட்டையா, எதோ எம் ஆர் ராதா பொண்ணுன்னுங்கிற தகுதியோட நுழைஞ்சுது தான் அந்த படத்தில! எனக்கு ராதிகாவை விட சிம்பு அம்மாவை புடிச்சிருந்து அந்த படத்திலே! ஒரு முறை டில்லியிலே மோனலிஷா ன்னு ஒரு பட ஷீட்டிங்ல பார்த்திருக்கேன், பெருத்த யானை மாதிரிய இருந்திச்சு, சிம்பு மோர் குடுக்க குடிச்சிக்கிட்டு தனியா தூரத்திலே உட்கார்ந்து இருந்த உஷாவை அப்ப கடலை போட்டுட்டு வந்தேன்! நான் சின்ன வயசிலே ரசிச்ச அம்முனி இல்லை! இந்த படத்திலேயும் பாக்கியராஜ் நடிச்சிருக்காரு! அவரு ஒரு ஜோக்கும் அடிப்பாரு, ஒரு தடவை ஆத்திலே குளிக்கிறப்ப, ஒருத்தர் கூப்பிடுவாரு சினிமா பாக்க வர்றியா, இவரு சினிமா பார்த்த அனுபவத்தை சொல்லுவாரு! அது மட்டுமில்லை இந்த படத்துக்கு அவர் வசன உதவிகர்த்தா! இந்த படப்பாடல்கள் எனக்கு ரொம்ப புடிச்ச ஒன்னு, இதில வர்ற ஜெயச்சந்திரனோட 'மாஞ்சோலை கிளிதானோ' பாட்டு கிளாஸ்!

சிகப்பு ரோஜாக்கள்: இரண்டு படம் கிராமத்து வச்சு கதை எடுத்தோன, அவருக்கு கிராமத்து கதை தான் எடுக்கத் தெரியும், அது தான் வெற்றி படங்களா கொடுப்பாருன்னு சொன்னேன்ன இந்த கதையை எடுத்ததா எல்லாரும் சொல்வாங்க! ஆனா இது பாரதிராஜாவின் இன்னொரு கதை, 16 வயதினிலேக்கு அப்புறம் இது அவருடய கதை! இதுக்கு வசனம் பாக்யராஜ். பாக்யராஜை முன்னமே இரண்டு படத்தில நடிச்சிருந்தாலும் அவரை நடிகரா கண்டு கொண்டது இந்தப்படம் தான். ஏன்னா வடிவுக்கரசியொட கமல் ரெஸ்டாரெண்ட் வரும் போது அதை பார்த்த தாலே, ஒன்னுக்கு போற இடத்திலே இவரை எத்தி கொள்ளூவாரு, அது ஒரு முக்கியமான கேரெக்டர், அதனால மக்கள் இவரை இனம் கண்டுக்கிட்டாங்க! இதிலே கடைசியிலே ஸ்ரீதேவியை சுடுகாட்ல துரத்திக்கிட்டு வர்ற சீன்னு ரொம்ப பிரமாதம், அப்ப ராஜா ரீரெக்காடிங்களை அசத்தி இருப்பாரு! இந்த படம் வந்தப்ப நாங்க முதல் செமஸ்டருக்கு பரீச்சைக்கு படிக்கிறோம் பேர்வழின்னு ராத்திரி முழுக்க சீட்டு விளையாடி கழிச்ச பொழுதுகள் ஞாபகம் வருது! இந்த படத்துக்கு அப்ப கோயம்புத்தூர்ல கர்னாடிக் தியோட்டருக்கு கும்பலா போய் பார்த்த அனுபவம் தனி! இப்பவும் கமலஹாசன் பாடின பாட்டை கேட்டா எனக்கு அந்த ஹாஸ்டல்ல கழிச்ச நாட்கள் தான் ஞாபகம் வருது!

புதிய வார்ப்புகள்: இந்த படம் ஒரு கிளாஸ்! பாரதிராஜா கல்லு, மண்ணை நடிக்கவச்சாலும் படம் ஓடும்னு பேரு வாங்கிகொடுத்தப்படம்! இதில பாரதிராஜாவுக்கே உரித்தான அந்த 'R' லாஜிக்ல ரத்தி அப்படினு பேரு வச்சு புது அரிமுகம் ஆனது! அந்தம்மா முழுப்பேரு ரத்தி அக்னிஹோத்திரி! இந்த அக்னி எல்லாம் தமிழ்நாட்டுக்கு சரிப்பட்டு வர்றாதுன்னு சுருக்கி ரத்தி ஆக்கினாரு! பாக்யராஜ்ஜும் கதாநாயகனா நடிச்சு வந்தது! இதிலெ ரொம்ப ஹைலைட் கவுண்டமணியும் சீனிவாசனும்! சீனிவாசன் பெரிய பண்ணை, கிராமத்துல இருக்கிற பொண்ணுங்களை தேத்துறது தான் ஜோலி! அவரு புள்ளளயா ஜனகராஜ், இவரை நான் பாரதிராஜ, அவரு பட பாட்டு ரெக்கார்டிங்ல பார்த்திருக்கேன்! அப்புறம் இன்னொருத்தரு சந்திரசேகர், 'மாமா, மாமா, சாணியை மிதிச்சுட்டேன்னு' நொண்டி நொண்டி வசனம் பேசிட்டு வருவாரு! அப்புறம், எல்லா பாரதி ராஜா படத்துக்கும் உண்டான அந்த பொண்ணு எடுக்க வர்றவங்களை போட்டு குடுத்து கலைச்சு ஓடவைக்கிற டெக்னிக் நல்ல டெக்னிக்! கே கே செளந்தர் இதிலே நாயணம் வாசிக்கவரா வந்து நல்லா நடிச்சிருப்பாரு! அப்புறம் அந்த கிராமத்துக்கே உண்டான கேலி, நக்கலா பேசறதை நல்லா எடுத்திருப்பாங்க. ஒரு தடவை உண்டியல் குழுக்கிட்டு வர்ற கும்பல், பாக்யராஜ்ஜை, சமூக சேவகி வீட்ல பார்த்தோன, 'அய்யா சாப்பிட்டீங்களா, சாப்பிட்ருப்பீங்க, ம்..வடபாயசத்தோட சாப்பிட்டுருப்பீங்கன்னு அங்க உஷாவை பார்த்து கண்ணு சிமிட்டி கிண்டலா சொல்லிட்டு போற வசனத்தை நான் மிமிக்கிரி பண்ணி அந்த சீன்களை சொல்லி மோனோ ஆக்டிங் பண்ணற்தை ரசிச்ச மக்கள் நிறைய உண்டு! அப்புறம் கவுண்டமணியோட 'கனெக்ஷன் கொடுத்திருவோம்'ங்கிற வசனமும் ரொம்ப பேமஸ்! அப்பறம் இந்த படத்திலே ஒரு கூத்துப்பாட்டு இருக்கு, 'வாயிலே வந்தப்படி, வாயில்ல வந்தபடி, நான் படிக்கப்போறேன் பாட்டு'ன்னு, அது செம் ரகளையா இருக்கும், அதுலே கூத்து பாட்டுகள் வர வசனங்கள், பாட்டுகளோட நக்கல வர்ற்து நல்லா இருக்கும், சாம்பிளுக்கு, 'அண்ணே அண்ணே', 'என்னடா முக்காபடி வெண்ணே', 'அக்காவை கட்டிக்கிட்டா தப்பில்ல', அதுக்கு இன்னொரு கூத்தாடுறவரு, 'கட்டிக்கிட்டா தாண்டா தப்பு, வச்சிக்கிட்டா' அப்படின்னு முடியும் பாட்டு! இந்த பாட்டை தேடி பார்த்தேன், கிடைக்கல, யாருக்கிட்டயாவது இருந்தா மயில்ல அனுப்பி வைங்க!

நிறம் மாறத பூக்கள்: இது முத நாலு படத்தில நடிச்ச வெற்றி புது முகங்களை போட்டு எடுத்தது! விஜயன், ரத்தி, சுதாகர், ராதிகா நடிச்சது! அவ்வளவா மிகப்பெரிய வெற்றி இல்லை, ஆனா சுமாரும் இல்லை, பாலுமகேந்திரா மாதிரி அழகா நிவாஸ் ஊட்டியை காமிச்சப்படம். இதில ஹைலைட் பாரதிராஜா வோட கணீர் குரல் விஜயனுக்கு டப்பிங்! காதல்ல பிரியும் ஜோடி, அப்படி காதலியே எண்ணிக்கொண்டிருக்கும் ஒருவனால, ஏதோ சந்தர்ப்பத்திலே பிரிஞ்சவங்களை சேர்த்து வைக்கிறது! பாரதிராஜாங்கிற பெரிய மேஜிக் மாதிரி கதை சொல்ல பாலுமகேந்திராவும், மகேந்திரனும் வந்திட்டாங்க இந்தப்படம் வந்தப்பெல்லாம். இருந்தாலும் இது மறக்க முடியாத ஒரு படம். இதுலெ ஜென்சி பாடின பாட்டு அப்படியே கேட்டுகிட்டே இருக்கலாம்! ராதிகா கிட்ட அப்படி ஒன்னும் முன்னேற்றம் இருந்திடலை, ரத்தியும் சுமார். ஆனா ஒரு காமக்கிழவி இதில சூப்பரா நடிச்சிருக்கும்! வயசான கிழவங்க தான் காமம் பிடிச்சு நிறைய வர்ற மாதிரி இருக்கும், ஆனா இதிலே புதுசா இப்படி! நாங்களும் பிரான்ச் எடுத்து சீரியஸா படிக்கனுமே காலேஜ்ல படிக்க ஆரம்பிச்சிருந்த நேரம்! ஆனாலும் இந்தப்பட ராஜா பாட்டுக்களை சத்தமா ஹாஸ்டல் முழுக்க போட்டுகிட்டு கூத்தடிச்ச நாட்கள் அதிகம்!

இப்படி பாரதிராஜா படங்கள் அந்த நேரத்திலே அதிகம் தாக்கத்தோட இருந்த ஒன்னு, அதற்கப்புறமும் கல்லுக்குள் ஈரம் படத்தில அவரு நடிச்சு வந்தாலும் பெரிசா ஓடலை,அவருக்கூட இருந்த பாக்யராஜ், செல்வராஜ் எல்லாம் தனியா போய் படம் எடுக்க ஆரம்பிச்சதாலே, கொஞ்சம் தொய்வு! அதுக்குள்ள மணிவண்ணன் அவருக்கூட சேர்ந்து நிழல்கள் எடுக்க ஆரம்பிச்சு, அலைகள் ஓய்வதில்லையிலே உச்சத்திலே போனாங்க! அதல்லாம் வெற்றி படங்களா இருந்தாலும் என் மனசை பாதிக்கலை! கொஞ்சம் வளர்ந்திட்டேனோ என்னவோ! அவரு தொடர்ந்து சாகசங்கள் செஞ்சாலும் இந்த அஞ்சு முத நட்சத்திரங்கள் என்னால மறக்க முடியாத ஒன்னு, நீங்களும் அந்த காலகட்டத்தை கடந்து வந்தவங்கன்னா உங்க நினைவுகளை அசை போடுங்க! இல்லை இன்னெக்கு வழி வழியா சேரன் வரை வந்த நல்ல டைரக்டர்கள் செயின் ஆரம்பிச்சது பாரதிராஜாவிலிருந்து தான்! அப்படி இடைப்பட்ட காலத்தில உங்களுக்கு புடிச்ச டைரக்டருங்க சொல்லியிருந்திருப்பாங்க பாரதிராஜா பத்தி, ஆக பாட்டையும் என பேச்சையும் இந்த பதிவிலே கேளுங்க!

மேலே நான் எம்பெட் பண்ணின பாட்டுகள் உங்களுக்கு சரியா கேட்க முடியவில்லை என்றால் கீழே உள்ள சுட்டியை கிளிக்கு கேட்கவும் , இதை வெளிகண்ட நாதர் தொகுத்த வழங்கிய தேன்கிண்ணம் மாதிரி வச்சுக்கங்க.
இதை குணா படத்தில வர பாட்டு ஸ்டைல் படிங்க
"மறக்காம எல்லா பாட்டையும் கேட்கணும், ம்.. அப்புறம் எல்லா பாட்டுக்கும் உங்க கருத்த எழுதனும்,ம்.. சொத்தை ஜொள்ளைன்னு போட்டுக்கணும், ம்.. அதையும் போட்டுக்கனுமா??? -:)))"

16 வயதினிலே

கிழக்கே போகும் ரயில்

சிகப்பு ரோஜாக்கள்

புதிய வார்ப்புகள்

நிறம் மாறாத பூக்கள்

17 comments:

said...

உதயகுமார்,
நல்ல அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. நீங்க சொன்ன வசனங்கள் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை.

அதுலேயும் சில படங்கள் நான் பார்க்கலை. போன முறைதான் நிழல்கள் ( பொன்மாலைப்பொழுது) பாட்டுக்காக வாங்கி வந்தேன்.

said...

சார்

நல்ல பதிவு.

அருமையா சொல்லியிருக்கீர்கள்.

என்னை பொருத்தவரையில் 16 வயதினிலே தான் பாரதிராஜாவின்
"Master Piece"

மிக்க நன்றி!

said...

வணக்கம் வெளிகண்ட நாதர்!

அது என்ன திரைப்படம் பற்றி எழுதும் போது மட்டும் உங்கள் எழுத்துல ஒரு துள்ளல் தென்படுது! கனவுலகத்தில் நுழைய ஆசைப்பட்டதால இன்றும் திரையுலகம் மேல இருக்க காதலா? நீங்க சொல்ற படம் எல்லாம் வந்தக்காலத்துல இந்த மேதை(தன்னடக்கதோட தான் இதை சொல்கிறேன்,என்னை நானெ சொல்லிகலைனா வேற யார் சொல்வா ஹி.. ஹி.. ஹி) பிறக்கவே இல்லை இல்லைனா உங்களுக்கு போட்டியா வந்து இருப்பேன் :-))

வழக்கம் போல நல்லா இருக்கு இந்த பதிவும்!

said...

வெளிகண்ட நாதர்,
உங்களின் அனுபவங்களை ஒலி வடிவிலும், எழுத்துருவிலும் அருமையாகத் தந்துள்ளீர்கள்.

நீங்கள் குறிப்பிட்ட 5 படங்களில் ஒன்று மட்டும்தான் பார்த்தேன். நிறம் மாறாத பூக்கள் படம் சில வருடங்களின் முன் பார்த்தேன். நீங்கள் சொல்வது போல் அதில் வரும் பாடல்கள் ஜென்சி அவர்களின் குரலில் மிகவும் இனிமையாக உள்ளது. ஆயிரம் மலர்களே , இரு பறவைகள் இந்த இரு பாடல்களும் மிகவும் இனிமை.

நன்றி.

அன்புடன்
வெற்றி

said...

நல்ல அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. // உண்மை தான் துளசி, அந்த காலத்தில் அனுபவிச்சது மறக்க முடியாத ஒன்னு! இந்த அஞ்சு படத்தையும் பாருங்க நான் சொல்றது புரியும்! அந்த காலத்திலே சினமான்னு ஜாஸ்தி சுத்தினவன். இந்த பாரதிராஜா வந்த புதுசுல அவ்ரு டைரக்ஷன், படங்கள்னா பைத்தியமா அலைஞ்சவன். இன்னைக்கும் பாட்ட்டு காட்சிகள் எப்படி எடுத்தாங்க அப்படின்னு அலசி இருக்கேன்! இதை பத்தி ஒரு தடவை இந்த பாடல் காட்சிகள் எடுப்பதையும் பின்னாடி அதை எடிட் செஞ்சு எப்படி அழகா விஷுவல் தந்தாருங்கறதையும் ஜஸ்ட் எழுத்திலே இல்லே வீடியே வச்சு விளக்குறேன் பாருங்க அப்ப புரியும் உங்களுக்கு!

வழக்கம் போல முதல் ஆஜர் நீங்க, நன்றி!

said...

பிலிம் நியூஸ் ஆனந்தன்,ரோஜா முத்தையா மாதிரி அபூர்வ தகவல்கள் தருகிறீர்கள் நாதர்.சிவப்பு ரோஜாக்கள் வந்தப்ப நான் சின்ன பையன்.ஆனா அப்பவே பரபரப்பா பேசுவாங்க.பாரதிராஜா சிவப்புரோஜாக்கள் பாணியில் டிக்,டிக்,டிக் எடுத்தார்.நல்லா ஓடுச்சு.கேப்டன் மகள் கவுத்து விட்டுடுச்சு.

said...

என்னை பொருத்தவரையில் 16 வயதினிலே தான் பாரதிராஜாவின்
"Master Piece"// சிவபாலன், இது முதப்படம், ஒரு ட்ரெண்ட் செட்டர், இன்னைக்கு இருக்கிற சேரன் வரை பாரதிராஜாவின் trait தான்! அதை யாராலும் மறுக்க முடியாது!

said...

//அது என்ன திரைப்படம் பற்றி எழுதும் போது மட்டும் உங்கள் எழுத்துல ஒரு துள்ளல் தென்படுது!// வவ்வால் அது உண்மை தான்! அந்த காலத்திலே கனவுலகம் போகனும் தலைகீழா எல்லாத்தையும் புடிச்சிக்கிட்டு நின்னது என்னவோ உண்மை! ஆனா அதில நுழைஞ்சா, பெரிய ஆளாகிறவரை கவுருதை பார்க்க கூடாது! அதினால வரும் அவமானங்கள் அதிகம். அந்த காலகட்டங்கள் நான் நேரில் கண்ட உண்மை. இதெல்லாம் விடுட்டு ஒரு நாள் தூரப்போயி உட்கார்ந்து யோசிச்சப்ப, நம்ம படிச்ச படிப்பு என்னா, நம்ம போவேண்டியெது எங்கெயோன்னு யோசிச்சு பட் அதை அப்படி தூர போட்டுட்டு ஓடியாந்திட்டேன். என்னோட அரிதாரம் தொடர்ந்து வந்து படிங்க, இன்னும் நான் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்கு-:)

பிறக்கவே இல்லை இல்லைனா உங்களுக்கு போட்டியா வந்து இருப்பேன் :-)) //அத்னால என்ன இப்ப வாங்க பார்த்துடுவோம்-:)

said...

வெற்றி, என்னுடய தீவிர ரசிகர் ஆயிட்டீங்க போல-:) டிவிடி கிடைச்சா எல்லா படத்தையும் பாருங்க! நான் சொன்னது புரியும்!

said...

நானும் பாரதிராஜவின் ரசிகன்.

ஆரம்பக்கால பாரதிராஜா படங்கள் பற்றிய அட்டகாசமான பதிவு. நிறம் மாறத பூக்கள் தவிர மற்ற நான்கு படங்க்ளையும் பார்த்துவிட்டேன். பாரதிராஜவின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் "முதல் மரியாதை". இந்த படத்தில் வரும் சிவாஜி கேரக்டர் எனது தந்தையைப் போன்ற ஒரு soft கிராமத்து மனிதர் கேரக்டர். இறந்துபோன என் தந்தயைப்பற்றி எண்ணும்போதெல்லாம் DVD-யில் பார்க்கும் படம். கிட்டத்தட்ட ஒரு 25 தடவைக்குமேல் பார்த்த படம்.

said...

செல்வன், அந்த 70 கடைசி, 80 களில் வந்த பெரும்பாலும் படங்களை வெறும் படங்கள் என்று பார்த்த மட்டிலே இருந்ததில்லை, அபொழுது வந்த திரைப்படங்களின் அத்தனை நியூஸையும், பட எடுத்த டெக்னிக் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டிருந்தோம்!

said...

அதை எடிட் செஞ்சு எப்படி அழகா விஷுவல் தந்தாருங்கறதையும் ஜஸ்ட் எழுத்திலே இல்லே வீடியோ வச்சு விளக்குறேன் பாருங்க...//

இப்படி நிறைய ட்ரெய்லரா உட்டா எப்படி?

said...

16, வார்ப்புகள், பூக்கள், ரயில், ரோஜாக்கள் - இது என் ranking..

said...

இப்படி நிறைய ட்ரெய்லரா உட்டா எப்படி?// தருமி சார், ட்ரெய்லர் நல்லா இருக்கும், நீங்க நம்பிக்கையோட பார்க்கலாம்!

உங்க ரேங்கிங் தான் என்னோடதும். இருந்தும், எதையும் கம்மின்னு சொல்ல முடியாது!. இது மாதிரி அவரோட அடுத்த் கட்ட அஞ்சிலே டாப் 'நிழ்ல்கள்', அப்புறம், மோசமா எடுத்து பேரை கெடுத்துக்கிட்ட படம், 'வாலிபமே வா வா', ஞாபகம் இருக்கா??

said...

podbazaar பார்த்தேன்.. இந்தப் பதிவின் ஒலிவடிவமும் அதில் இருக்கோ? சரி, "என்னை ஆண்ட அரிதாரம்" என்ற podbazaar பக்கத்தில் போய்ப் பார்த்தா உங்க குரல் பதிவு 4 இருக்கு.. Subscribe-க்கு கீழே iTunes click பண்ணிட்டா அந்த நாலுமே நம்ம iTunes-ல சேமிக்கப்படுமா? அப்புறம் உங்க புதிய podcast-கள் எது வந்தாலும் தானிறங்கியா நம்ம iTunes-இல் வந்துடுமா? நமக்கு இந்த ஐப்பாடு எல்லாம் புதுசா இருக்கா.. அதான் இந்தப் பாடா இருக்கு :-)

said...

ஆமாம், நீங்க Subscribe பண்ணிட்ட புதுசா வர எதுவும் உங்க iTunes-ல சேமிச்சிக்கலாம். அதாவது 'எனை ஆண்ட அரிதாரதம்' என்ற புரோகிராமுக்கு நீங்க Subscribe பண்ணனும்! பழசை தனி தனியா தான் தரவிறக்கனும்! அப்பறம் இந்த பதிவிலே போட்ட ஒலிப்பதிவை experimentala போட்டு Podbazaarல ஆரம்பிச்சேன், இரண்டும் ஒன்னு தான்! ஏற்கனவே நம்ம ரசிகர் ஒரு 25 பேரு Subscribe பண்ணி இருக்காங்க-:) நீங்க 26வது! வாழ்த்துக்கள்-:)

said...

ஆகா அருமை.
சூப்பர் பாடல்கள். ராஜாக்களின் சங்கமத்தில் எத்தனை இனிமை.

அவரின் ஆஸ்தான ஊரான முட்டத்தில் எடுத்த படங்கள் பற்றி ஏதாவது???