Friday, October 28, 2005

குலதெய்வமும், அம்மாமண்டபமும்

நமக்கு சாமி கும்படுதறல இப்ப அவ்வளவா ஈடுபாடு இல்லனாலும், சின்ன வயசிலே கோயில்களுக்கு போயிட்டு வர்ரது ரொம்ப பிடிக்கும், திருவிழா கால சந்தோஷங்கள் இருக்கே அதுவே தனி. அப்புறம் வளர்ந்து கொஞ்சம் பெரியவனாதும், குலதெய்வம் கோயுல் போயி சாமி கும்புட்டுட்டு பரீட்சை எழுத போடான்னு, அம்மா சொல்றதுனால, இந்த அம்மா மண்டப படித்துறையில இருக்கற ஆல மரத்தடி புள்ளையார் கோவில் (கோவில்னா பெரிய மண்டபம், சுத்து பிரகாரம், சாமி கோபுரம், கலசம், அர்ச்சணை சீட்டு வாங்கற மாடம் எல்லாம் இருக்குன்னு நினைச்சுக்காதீங்க, சின்ன புள்ளையார் சிலை, அத சுத்தி எழுப்புன வீடு அப்புறம் கோபுரம், கோபுரத்தை கொஞ்சம் நுனிக்காலை வச்சி எழும்பி நின்னா தொட்டுடாலாம், அவ்வுளவுதான்.) போறது வழக்கம்.

பிடிச்ச சாமிங்கள்ள முதல்ல நம்ம பருப்புக் காரத்தெரு மாரியம்மன் கோவில் பத்தி சொல்லிடறேன். இந்தக்கோவில் நம்ம தமிழ் நாட்டுக்கே உண்டான இலக்கணப்படி ரோட்டு நடுவிலே அம்மன் வீடு கொண்ட கோயில். சக்தி வாய்ந்த அம்மன். பாலக்கரையில பஸ் புடிக்க பின்னாடி 3-4 கிமீ தூரத்தில் இருக்கற சங்கிலியாண்ட புரத்திலருந்து, எடத்தெரு அப்புறம் மல்லிகைபுரம்னு, எல்லோரும் அந்த கோவில தாண்டித்தான் போகணும். அப்படி போறப்ப போனா போவதுன்னு எல்லாரும் கண்ணத்தில போட்டுக்கிட்டு, விபூதி, குங்குமம் வாங்கிட்டு போவாங்க. முக்காவாசி பேருக்கு நினச்சது பலிக்கும்னு கேட்டுருக்கிறேன். எனக்கும் ஒன்னு ரெண்டு பேப்பர் பரீட்சையில ஈசியா வந்துருக்கு!

இந்த சித்தரை வந்திட்டா கொண்டாட்டம் தான், ஏன்னா, பள்ளிக்கூடம் கோடை லீவு விட்டுடுவாங்க, அப்புறம் மாரியங்கோவில் திருவிழா, கரகம், ஆட்டம், கச்சேரின்னு ஒரு பத்து நாளைக்கு கலக்கல இருக்கும். அதுவும் சாமி கரகம், ஆட்டகரகம்னு ரெண்டு குருப்பா கூட்டம் பின்னாடி அலையும். ஆரம்பத்தில் நான் ஒழுங்கா அம்மா சொன்ன போச்சை கேட்டுக்கிட்டு, சாமி கரகம் வரப்ப வீட்டல இருந்து கும்பிட்டு விபூதி குங்குமம் வாங்கிட்டு பயபக்தியா(வெறும் பயம் தான், சாமி கரகம் எடுத்திட்டுவரவரு பயங்கரமா மீசை வச்சிகிட்டு, கையில முக்கையில எழும்பிச்சை பழம் சொறுகின அருவாள தூக்கிகிட்டு, தலையில கலசம் வச்சிகிட்டு, மாலையெல்லாம் போட்டுகிட்டு, நெஞ்சு நிறைய சந்தனத்தை பூசிக்கிட்டு, வெறும் வேட்டியை கோமாணமா மடிச்சி கட்டி, என்னமோ மதுரவீரஞ்சாமிமாதிரி இருப்பாரு) இருப்பேன். எல்லாரும் அந்த சாமி கரகம் எடுத்துட்டு வந்தவர் காலை கழுவி கும்பிட்டு குங்குமம், விபூதி வாங்கிக்குவாங்க. எனக்கும் சாமி வச்சுவுடும்.

ஆனா கொஞ்ச நாள் ஆனோன, அதாவது வளர்ந்தவுடன் நம்ம சுத்துறது ஆட்ட கரகத்தோட தான். அப்ப அந்த மேக்கப்பு, ஜிகினா பாவடை, இதோட ஆட்டம் போடற குட்டிகள பாக்கறப்ப என்னமோ நம்ம உள்ளம் கவர்ந்த நடிகையே நேரில வந்த மாதிரி. இதுங்க பின்னாடி நம்ம வாழக்க கடை சேகரு, வெங்காய கடை ரத்தினம் அப்படின்னு தெருவுல இதுக்குன்னு அலையற பேமஸான கும்பலுங்க உண்டு. நானும் ரொம்ப நேரம் ராத்திரி பூர இந்த கரக கும்பலோடேயே அலைவேன். ஆட்டகரகம் ஒரு திசையில போயி கோவில் பக்கம் திரும்பும். சாமி கரகம் இன்னொரு டைரக்ஷ்ன்ல போயி கடைசில விடியங்காத்தால கோவில் பக்கம் வரப்ப ஒன்னுக்கொன்னு எதிர்த்தாப்பல வந்துக்கும். இதுல நன்கொடை கொடுத்தவங்கள்ள சில பேரு என் வீட்டு முன்னாடி ஆட்டகரகம் ஆடலன்னு சண்டை வேற போட்டுக்குவாங்கே.

தினம் ஏதாவது கோவில் பக்கத்திலே சாய்ந்திரத்தில அம்மன் சிலைங்க அலங்காரம் விதம் விதமா இருக்கும். நல்லா போக்கஸ் லைட் எல்லாம் போட்டு, சந்தனம், மாலை ஜோடனைகள் பிரமாதமா இருக்கும். அப்புறம் ஒரு நாள் பாட்டுக் கச்சேரி வப்பாங்க. முதல்ல நம்ம வின்சென்ட் தான் பாடிகிட்டு இருந்தார். வெறும் ஆர்மோனியம் தபேலா வச்சிக்கிட்டு நம்ம சீர்காழி கோவிந்தராஜன் பாட்டைத் தான் பாடுவார். சும்மா உச்சமா "சாட்டை கையில் கொண்டு ஓடுது பாரு, ஆடுது பாரு, அப்படி இப்படி தாவுது பாரு" அப்படின்னு பாடுவாரு (இது எந்த படம்னு தெரியல, ஆன பாட்டும் பாட்ற தொணியும், ராகமும், சவுண்டும் இப்பவும் என் கண்ணுலயும், மனசு முன்னாடி இருந்துகிட்டு இருக்கு) அப்புறம், ஜிபிடர், 7 நோட்ஸ், அது இதுன்னு மியூசி குருப்புங்க எல்லாரும் வந்து, அப்ப புதுச வந்திருந்த் எலக்டிரிக் அக்கார்டியன், அப்புறம் கிட்டார், டிரம்ஸ் எல்லாம் வாசுச்சி, எல்ஆர் ஈஸ்வரி, டிஎம்ஸ் பாட்டு எல்லாம் பாடி கச்சேரி கலக்கலா இருக்கும். அதென்னமோ சாமி பாட்டு மூணு பாட்டு பாடிட்டு தான் சினிமா பாட்டுங்களே ஆரம்பிப்பாங்க, அப்புறம் கடைசியிலே, அடி என்னாடி ராக்கம்மா பாட்டு பாடி முடிப்பாங்க!

மாசம் தவறாம ஒவ்வொரு கார்த்திகைக்கும்(நான் புறந்தது கார்த்திகை நட்சரத்தினாலயம், என் போரில இருந்த குமார்னாலயும்) வயலூர் முருகன் கோவிலுக்கு, எங்க ஞாயினா கூட்டிட்டு போயிடுவாரு. காலங்காத்தால 5 மணிக்கெல்லாம் எழுப்பி கூட்டிட்டு போவாரு. சீக்கிரம் போனதானே கும்பல் இருக்காது. எந்திரிக்கிறது கஷ்டம் தான், என்ன பண்றது. அப்புறம் கோவில் போயிட்டு வர்ரப்ப ஏதாவது ஓட்டலுக்கு கூட்டிட்டு போவாரே, முறுவலா ரவா தோசை சாப்பிடலாமே, அதுதான் அப்ப எனக்கு அட்டாரக்சன். அப்புறம் அப்பப்ப சமயபுரம் கூட்டிட்டு போவார். காலையிலே அந்த இதமான குளிர் காத்தில பஸ்ல போற சுகமே அலாதிதான். அதன்னமோ மெயினா முருகன பார்க்கிறதல ஒன்னு கஷ்டம் இருக்காது, மத்தபடி கோயில்ல சுத்துபட்ட சாமிங்கள சுத்துறதுதான் கஷ்டம். ஈஸ்வரன்லருந்து, பிள்ளையார், அம்மன், அப்புறம் கையை சுடுக்கிவிட்டு ஒரு சாமி (சாமி பேரு என்னன்னு தெரியல, தூங்கிகிட்டு இருக்குமா அதை நம்ம எழுப்பிவுட்டு, அதாங்க கை சுடுக்கிவிட்டு, சாமி கும்புட்டுட்டு வரணுமா, இந்த சாமியை எழுப்புறதுல கொஞ்சம் ஆர்வம் நமக்கு, எதித்தாப்பல இன்னொரு அம்மன் சாமி கூட இருக்கும்) இப்படி எல்லாரையும் சுத்திட்டு கடைசியில நவக்கிரகம். இந்த நவக்கிரகம் சுத்திரது இருக்கே அதுவுங் ஒம்போது சுத்து, அது கொஞ்சம் பெரிய வேலை. எல்லாம் முடிச்சிட்டு அவ்வளவு தான்னு வெளிய வந்தா, ஆத்து பக்கத்தில மதுரவீரஞ்சாமி, வேல் கம்பிங்கள்ள சிவப்பு துணி சுத்தி வச்சிருப்பாங்க. இந்த கோயில்ல தான் தமிழ் பூசாரி இருப்பார், மத்த சாமிங்கக்கிட்டே எல்லாம் ஐயருங்க தான் இருப்பாங்க.

இப்படி போயிட்டுருந்தப்ப, எங்க வீட்ல குலதெய்வம் கும்பிட எப்பவும் எங்க அம்மா பங்காளிங்க ஒருத்தரு வீட்டுக்கு கூட்டிட்டு போவாங்க அவங்க வீட்ல தான் ஒரு ஓலப்பெட்டியில குலதெய்வம் சாமி இருக்குன்னுட்டு சொல்லி எல்லாரும் கும்புடுவாங்க. (இந்த குலதெய்வம் ஒரு தனிக் கதை, ஏதொ எங்க பாட்டியோட அம்மா கனவுல, ஜக்கம்மான்னு ஒரு பொண்ணு வந்து, கர்நாடகத்தில ஏதோ கஷ்டத்தில அது மாட்டி செத்து போயி அது ஓலப்பெட்டில காவிரில வந்ததாவும், அதை நினைச்சு கும்பிட்டா குடும்பம் கஷ்டம் நீங்கும்னு சொன்னுச்சா. அதே மாதிரி அவங்களும் அந்த காவிரி அம்மா மண்டப கரையில இருக்கிற ஆலமரத்தடி படித்துறை பக்கத்தில் பார்த்தப்ப ஒரு ஓலப்பெட்டி ஒதுங்கி நின்னதாகவும், அதையே எடுத்து வந்து வீட்ல வச்சு கும்படறதாவும் கதை) ஆனா கொஞ்ச நாள்ல, அந்த பங்காளிங்க இந்த குலதெய்வ சாமியை சரியா வச்சு கும்படலன்னு (அதாங்க வழக்கமா வர பங்காளிங்க சண்டை தான்), எல்லாரும் அந்த ஆலமரபடித்துறையிலயே போயி குலதெய்வம் சாமி கும்பிட தொடங்கிட்டாங்க. நானும் அப்பப்ப குலதெய்வம் சாமி கும்பிட அந்த அம்மாமண்டபம் பக்கத்தில இருக்கிற ஆலமரத்தடி படித்துறைக்கு போயிட்டு வருவேன்.

பெரிசா சாமி கும்பிடனும்னு போகலனாலும், அந்த படித்துறையில காவிரி ஆத்துக் கரையில இதமா வர காத்தை அனுபவிக்க ரொம்ப பிடிக்கும். அங்க உட்கார்ந்து இருக்கிற அரை ஒரு மணி நேரம் மனசு லேசாயிடும். வேற எந்த நினப்புமே வராது, அது என்னமோ தியானம் மாதிரி காலம் கழிஞ்சு போயிடும். எவ்வளவு தான் பெரிய பெரிய கோவில்களுக்கு போனாலும், இது தான் எனக்கு கோவிலுக்கு போன திருப்தி. சாமி, பூஜை, புனஸ்காரம்னு அலையறதவிட இது போன்ற அமைதியான இயற்கை சூழ்ந்த இந்த மாதிரி இடத்தில கொஞ்ச நேரம் இருந்துட்டு வரதே ஒரு அலாதி தான்!

Thursday, October 27, 2005

நான் கொண்டாடிய தீபாவளிகள்

தீபாவளி வந்துட்டுதுன்னா மனசெல்லாம் ஒரு மத்தப்பு மாதிரி ஆயிடும். புது சட்டை போடலாம் வெடி வெடிக்கலாம், முறுக்கு, சோமாசா, உருண்டை, அதிர்சம் திங்கலாம், புதுசா ரிலீஸான எம்ஜியார் படத்துக்கு போகலாமுன்னு அந்த வரப்போற தருணங்களை நினச்சு ஏங்கினது அந்தக்காலம். சின்ன வயசுலே ஊசி பட்டாஸ் தான் வெடிச்சு தள்ளுவேன். சங்கு சக்கரம், புஸ்வானம், கம்பி மத்தாப்பு, அப்புறம் அந்த பாம்பு. இதுதான் நம்ம பட்டாஸ்ங்க. அதுவும் காலயிலே ஊசிப்பட்டசு வெடிச்சுட்டு, சாய்ங்காலம் தான் மத்ததை எல்லாம் கொளுத்தறது. எப்பவும் பட்டாஸ் எல்லாம் ஒரு பையில போட்டு வச்சிருப்பேன். தீபாவளிக்கு வாங்கற்துல பாதி தான் வெடிக்க முடியும், மீதியை எடுத்து பத்திரமா மேல தூக்கி வச்சுருவாங்க எங்க அம்மா, ஏன்ன கார்த்திகை தீபத்துக்கு வெடிக்குனுமில்ல. இந்த ஊசி பட்டாஸ்ல பாதி தான் வெடிக்கும், மீதி எல்லாம் புஸ் புஸ் தான். சமயத்தில்லே என்னடா வெடிக்கிலேயேன்னு போய் எடுத்து பாத்துட்டு கை, காலை கொளுத்திக்கிட்டுருந்திருக்கிறேன்.

கொஞ்சம் வளர்ந்த்தோன்ன நானே பட்டாஸ் வாங்க போவேன். லக்ஷ்மி வெடி, சர வெடி, அனுகுண்டுன்னு ஒரே டபால், டபாலுன்னு வெடிக்கறதை வாங்கிட்டு வரதுல தான் இஷ்டம். அப்புறம் இந்த துப்பாக்கி கதை சொல்ல மறந்து போய்டுச்சு, துப்பாக்கி சுடுதறதுன்னா பொட்டு கேப்பை வச்சி தான், இந்த ரோல் கேப் பட் பட்ன்னு சீக்கிரம் வெடிச்சி முடிஞ்சிடுமே. அதான். அப்பெல்லாம் பிரபாத் தியேட்டர்லருந்து காந்தி மார்க்கட் வரைக்கும் ரெண்டு பக்கமும் ஒரே பட்டாஸ் கடைங்காதான் போட்டிருப்பாங்க. இரும்புக் கடைங்க எல்லாம் கொஞ்ச நாளைக்கு பட்டாஸ் கடைங்களா மாறி இருக்கும். நான் நடந்தே போயி கடையிலே எங்க ஞாயினா கிட்ட பைசா வாங்கிகிட்டு பட்டாஸ் எல்லாம் வாங்கிட்டு வ்ருவேன். என்ன மிஞ்சி போன அஞ்சு ரூவா கொடுப்பார், அதெல்ல தான் தீபாவளிக்கான மொத்த பட்டாஸும் வாங்கிட்டு வரணும். அப்ப சிங்கம் மார்க், குயில் மார்க் பட்டாஸ் தான் பேமஸு, மத்ததெல்லாம் அவ்வுளவு நல்லா வெடிக்காது. சில சமயத்திலே நமத்து போயிருக்கும். ஆனா அஞ்சு ரூவாக்கி அள்ளிட்டு போனும்னா, இந்த நமத்து போனதை எடுத்துட்டு போயி ஏமாந்த தீபாவளிங்க நெறய உண்டு.

சமயத்திலே லைசன்ஸ் கிடைச்சிடுச்சினா, எங்க பெரியப்பாவும் பட்டாஸ் கடை போடுவார். நானும் போய் உட்கார்ந்து யாவாரம் எல்லாம் பண்ணி இருக்கேன். அதுவும் தீபாவளிக்கு மொதநாள் சாய்ந்திரத்திலருந்து அடுத்த நாள் விடியக் காலம்பற வரைதான் எல்லா பட்டாஸும் வித்து தீரும். நம்ம கடையில சாய்ந்திரம் போயி உட்கார்ந்துட்டு ராத்திரி 12 மணிக்கு பட்டாஸெல்லாம் எடுத்து போட்டுக்கிட்டு வீடு போய் சேர்ந்துடுவேன். ஏன்னா சீக்கிரம் தூங்கி சீக்கிரம் முழிச்சாதானே காலையில பட்டாஸுவுடமுடியும். காலங்காத்தலே 5 மணிக்கே எழுப்பி விட்டுருவாங்க. தலைக்கு எண்ணை வச்சு குளிச்சு புது டிரெஸ் போட்டுட்டு போயி வெடி வெடிக்கறதுலே இருக்கிற் ஆனந்தம் வேறே எதுலயும் இருக்காது.

இதுல இன்னெரு சோகம் என்னான்ன, நான் தீபாவளிக்கு அடுத்த நாள் வர்ர அம்மாவாசைதான். என்னான்னு கேட்கிறிங்களா, தீபாவளி அடுத்த நாள் எல்லாரும் நோம்பு எடுக்கிற நாளு. அதுனால நோம்பு யாவரத்துக்கு உதவியா இருக்க தீபாவளின்னக்கு என்னை கடைக்குக் கூட்டிட்டு போயிடுவாங்க. ஊர்ல என்ன ஒத்த வயசில உள்ளவனெல்லாம் பட்டாஸுவுட்டுகிட்டு ரொம்ப ஜாலியா இருப்பாங்க, நம்மலாலே முடியலையேன்னு வருத்தமா இருக்கும். அதுக்காகவே தீபாவளின்னைக்கே அம்மாவாசையும் வரணுமுனு சாமிக்கிட்ட வேண்டிக்குவேன். அது எப்பவும் தீபாவளிக்கு அடுத்த நாள் தான் வந்து தீரும், எப்பாவாச்சும் ஒருவாட்டி தீபாவளின்னக்கே வந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏன்னா தீபாவளின்னக்கு கடைக்கு போகவேனமே, அது தான். ம் .. கொஞ்ச நாளைக்கப்பறம் இப்பெல்லாம் தீபாவளி இன்னக்கான்னு கேட்டு தெரிஞ்சுக்கிறதோட சரி.

Friday, October 21, 2005

சேட்டையும் வாலுத்தனமும் என் முதல் மூலதனம்

நம்ம எல்லாருமே சின்ன பிள்ளையிலே சேட்டை வாலுத்தனம் பண்ணிகிட்டு இருந்துருப்போம், அதுவும் ஒரு சில வயசுவரைக்கும். அதிலயும் இது ரொம்ப பேருக்கு ஜாஸ்தியாவே இருக்கும், அந்த மாதிரி தான் எனக்கும். ஒரு இடத்தில்லே நிக்கமாட்டேன். தெருவில விளயாடப் போன ஊரு வம்பயே இழுத்துக்கிட்டு வருவேன். என்னை விட சின்ன பிள்ளங்கண்னா, அவங்களை எதாவது வம்புகிழுத்து அடிச்சிட்டு வந்தவிடுவது, இல்ல கீழ தள்ளிவிட்டு வந்துவிடுவது, துணிகாய வச்சிருந்தாலோ, இல்ல வடகம் காயவச்சிருந்தாலோ இழுத்து போட்டுவிடுவது, சின்ன குழந்தங்களை மண்ணில புதச்சிவிட்டுட்டு வந்து விடுவது, மரம் ஏறி கீழேவிழுவது, அந்த வயசுக்கு உண்டான அத்தனை குறும்புத் தனங்களையும் பண்ணிகிட்டுத் தான் இருந்தேன். அதுனாலேயே எல்லாரும் என்னை அறுந்த வாலு, குரங்குன்னு திட்டிக்கிட்டு இருப்பாங்க. தெருவுகாரங்கன்னு இல்லாம, சொந்தக் காரங்க வீட்டுக்குப்போனாலும் இந்த கதைதான். அதல வேடிக்கை என்னான்னா, நான் எங்க மாமா வீட்டுக்குப்போறப்பல்லாம், எனக்கும் எங்கத் தாத்தாவுக்கும் தான் எப்போதுமே போர்களம், அவரு வச்சிருந்த அத்தனை சாமனையும் இழுத்துப் போட்டு உடச்சிடுவேன். அப்பறம் என்ன அடி உதை வாங்க வேண்டியதுதான். விடாம நானும் ஏதாவது கோட்டி பண்ணிகிட்டே தான் இருப்பேன். என் தாத்தாவும் "எங்கேயோ மரத்தில இருக்க வேண்டியது, என் மவ வயத்தில வந்து பொறங்திருக்குன்னு" பொலம்பிக் கிட்டே தான் இருப்பார். இதில இன்னும் வேடிக்கை என்னான, தீபாவளி வந்தா தன் மகங்களுக்கு பொறந்த பேரன்களுக்குன்னு வாங்கி வச்சிருக்கிற வெடி, பட்டாஸ்ங்களை எடுத்து வெடிச்சிடுவேன், அப்பறம் அவர் அய்யோ பொய்யோன்னு கத்திகிட்டு எங்க அம்மா, சித்திங்ககிட்ட கம்ப்ளைன் பண்ணுவார், அவர்களும் எனக்கு சப்போர்ட்டா, ஏன் மக வயித்து பேரன், பேத்தி எடுத்து வெடிச்சாதான் என்ன குறஞ்சுபோகும், எப்பவுமே மூத்த மகன் பேரனுக்குத்தான் கொடுக்குனுமோ? என்று கேட்டு அவரை அடக்கி விடுவார்கள். அப்பறம் நமுக்கும் கொஞ்சம் அடி உதை விழும், கண்டுக்காமே போயிடுவேன். பிறகு ஒரு நாள் சாயுங்காலம் எங்க மாமா வீட்டுக்கு எங்க அம்மாவோட போயிருந்தப்ப, மாட்டுக்குப் போடற வக்கபோற ஒரு ரூம்ல கட்டிப் போட்டு வச்சிருந்தாங்க (அப்ப மாட்டுத் தொழுவமல்லாம் வீட்டுக்குள்ளயே இருக்கும், எங்க தாத்தா இருந்த வரை அதெல்லாம் கவனிச்சிக்கிட்டு இருந்தார், அப்புறம் எல்லாம் போயேபோச்சு, எல்லாரும் வேலைத் தேடி பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பு, துப்பாக்கித் தொழிற்சாலை, சிம்சன் மீட்டர் கம்பனின்னு ஒன்னு போயிட்டாங்க, இல்ல, கடை கண்ணின்னு வச்சு பொழக்க ஆரம்பிச்சாட்டாங்க, யாரும் இந்த தோட்டம், துரவு, மாடு இதல்லாம் வச்சு பொழச்சதெல்லாம் போச்சு, இந்த கிராமத்துலருந்து குடிபெயர்ந்து, நகர வாழ்க்கை ஆரம்பிச்சோன, அதாவது 40, 50 கிளில், டவுண்களில் வாழ்க்கை அமச்சிகிட்டவங்கள்ள, அந்த பழசுங்கதான் அதெ அப்படியே மெயிட்டன் பண்ணிகிட்டு இருந்துச்சுங்க) கொஞ்ச தூரம் தள்ளி எங்க அத்தை ஸ்டவுல சோறு வடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அப்பத்தான் நம்ம குறும்பு புத்தி ஒன்னு வேலை செஞ்சிச்சு, பக்கத்தில இருந்த விளக்குமாத்துலருந்து குச்சியை உருவி, அப்படியே ஸ்டவ்வுள காமிச்சு பத்த வச்சு, கொளுத்தி பக்கத்தில இருந்த வக்கப்போருல போட்டுட்டேன். அப்பறம் என்ன, வக்கப்போறு பத்திக்கிட்டு எரிய ஆரம்பிச்சுடுச்சு, நல்லவேளை, வீடே பத்தி எரியறத்துக்கு முன்னே தண்ணியை ஊத்தி அணைச்சிட்டாங்க. அப்பறம் நமக்கு நல்ல பூசைதான். இப்படியே நம்ம வாழ்க்கை போயிட்டுருந்து, ஸ்கூலயேயும் இதே குறும்புத்தனம் தான். ஆன என்ன ஒரு கன்சோலேசன்ன நமக்கு கொஞ்சம் படிப்பு வரும், மத்தவங்க எல்லாம் சுமார் ரகம், என் வயசுல்ல உல்ல என் சொந்தகாரப்பயங்களோட நம்ம கொஞ்சம் உசத்தி தான். அதுக்காக நம்ம பண்ற குறும்பெல்லாம் கண்டுக்காம விட்டற முடியுமா என்ன, அதனால நான் வாங்கத அடி கொஞ்ச நஞ்சமில்ல.

ஆமா சின்ன பிள்ளைகள் குறும்பு பன்றது இயல்புதானே இதல என்ன விஷேசங்கிறிங்களா, அதான், இந்த மாதிரி சூப்பர் ஆக்டிவா சின்ன புள்ளகல்ல இருந்தவங்க இந்த ஒரு விஷேச குணத்தினால நல்ல படியா வாழ்க்கையிலே முன்னேறி இருந்திருக்காங்க, இல்ல ஒன்னுமில்லாம வெறும்பயலாவும் போயிருக்காங்க, ஆணா 90 சதவீதம் மேல நல்ல நிலமைக்கு வந்தவங்காதான் உண்டு, இதல்ல எனக்கு தெரிஞ்ச எக்ஸாம்பிள் நிறைய இருக்கு, ஏன் நானே ஒரு நல்ல உதாரணம். இப்படி குறும்பு பண்ற குழந்தைங்களை ஏண்டா இவங்க இப்படி இருக்குது, நமக்கு கஷ்டாமே இருக்கென்னு நினக்காதீங்க, இதல்ல முக்கியமா அவங்களை கையிட் பண்ணி அவங்க கிட்ட இருக்கிற இந்த குறும்பு தனங்களை பாஸிட்டுவாக்கி, கொண்டு வந்தோமுன்னா, அவங்க பிரிலியன்டா நல்ல முறையில வாழ்க்கையில வெற்றி காண வாய்ப்பு இருக்கு. இந்த ஒரு கேரக்டர்ஸோட இருக்கிற தனித்துவமே தனி. இப்படி குறும்பா சேட்டை பண்ணி திரிஞ்ச என்னை, எப்பவுமே திட்டி தீத்த என் தெரு அக்காங்க, நான் வளர்ந்து, என்னுடய அடலசன்ட் வயசுலே என்னப் பார்த்து ஆச்சிரியப்பட்டதும் உண்டு. அதபத்தி விரிவா அப்பறம் சொல்றேன். இப்பவும், இந்த வயசலேயும் இத நெனச்சி பார்க்கும் பொழுது, நாம எப்படி இருந்தோம், நம்ம இப்படி ஆயிட்டோமுனுதான் தோணுது.

Wednesday, October 19, 2005

தெருவோர சிலுவக்கல்லு ஜோசியம்

அந்த காலத்திலே உலக இரட்சகர் மாணவர் மத்தியப் பள்ளியிலே படிக்கும் பொழுது, ஸ்கூல் வுட்டு வந்தவிடன் விளையாட்டிலே வெகுநேரம் காலம் கழிந்துவிடும், படிப்புனு பாத்தா, கொஞ்ச நேரம் புத்தகம் தூக்கறதுதான். அதவும் ஆத்துப் பாலத்திலே விளையாடிட்டு இருந்தா நேரம் எப்படி போவுதுனு தெரியாது. அந்த காலத்திலே பாலக்கரை போலீஸ் ஸ்டேசன் பின்னாடி இருந்த காலி மனையிலே ஆறுமுக குதிரை லாயம் தான் இருக்கும், அப்பறம் அத்க்கு பக்கத்திலே ஐயருங்க அக்ரஹாரம் இருந்தது. அப்பதான் அந்த அக்ரஹாரத்தையும், குதிரை லாயத்தையும் காலி பண்ணிட்டு ரத்னா லாட்ஜு கட்டவதற்காக, ஆத்து மணலை கொண்டு வந்து கொட்டி வச்சிருந்தாங்க. அந்த மணல்ல வீடுகட்டி விளயாடுவது ஒரு ஜாலி. அதெலயும் அந்த பககத்து வீட்டு சின்ன புள்ளய கழுத்து வரைக்கும் புதச்சி வச்சிட்டு அத அப்படியே விட்டு ஓடி வந்து அப்பறம் அந்த அக்கா புள்ளய தூக்கிட்டு வந்து கத்திட்டு போனதும், நான் எங்க அம்மாகிட்ட உதை வாங்கினதும் அது ஒரு தனிக்கதை. என்னடா, இவண் இப்படியே இருந்தா தரிசா போயிடுவானு என்னை சாயுங்காலம் வீட்டுல இருக்கவுடாமா இருக்க ஏற்பாடு பண்ணதுதான் சரசக்கா வீட்டு டுயூசன். அந்த சரசக்கா யாருங்கிறிங்களா, அவங்கதான் எங்க வசந்தாக்காவோட டீச்சர் டெரயினிங் எடுத்தவங்க, எங்க வீட்டல எங்களுக்கு இன்னெரு அக்கா மாதிரி. ஆனா டூயுசன்னு அவங்ககிட்ட போயிட்டா, படிக்கலனே, மயிரமட்டும் வுட்டுட்டு, உடம்புல்ல மத்த எல்லா எடத்தலேயும் எங்கவேணாலும் அடி விழும். அதுவும் எனக்கு விழுந்த அடி உங்க வீட்டு என் வீட்டு அடி இல்ல, அது என்ன அடின்னு சொல்ல முடியாது. அவங்களோட ஹஸ்பண்டும் சேர்ந்துக்குவாங்க. அவருக்கிட்ட அடி வாங்கறது அது ஒரு தனி அழகு. ஆகமொத்தம், அவங்க வீட்டுக்கு டூயூசன் போறதுனா, ஐயாவுக்கு சிம்ம சொப்பணம். அதுவும் எங்க ஞாயினா சைக்கிள்ல என்ன பின்னாடி உட்கார வச்சு ஓட்டிக்கிட்டு டுயூசனுக்கு கூட்டிட்டு போனாருனா, சைக்கிள்ல இருந்து கீழ குதிச்சு ஓடிடுவேன். அப்பறம் என்ன ஓடி கட்டி கூட்டிட்டுப் போயி விடுவாரு. சாயுங்காலம் ஸ்கூல்லருந்து வந்த வுடன கடைக்கு கூட்டிட்டு போறவரை ஜாலியாதான் இருக்கும். அங்கருந்து வரகநேரி சுப்பரமணி கோவில் வர வந்து, அதுக்கு பக்கத்திலே இருக்கற கிளப்புக்கடையிலே ரவா தோசை வாங்கி சாப்படற வர ந்ம்ம மூடு நல்லாத்தான் இருக்கும். சாப்பிட்டுடு, சரசக்கா வீட்டு சந்து முகனை திரும்பும் போது நம்ம அடி மனசல எழும்புற பயம் இருக்கே, அதுமாதிரி ஒரு உடம்பல உருவாகிற ஒரு ராசாயண கலவையை இதுவர அனுபவிச்சத்தில்ல. அதாவது, ஒவ்வொரு உணர்ச்சிக்கும் உண்டாகிற பாடி கெமிஸ்டிரி ஒரு யுனிக் எக்ஸ்பீரியன்ஸ்தான். அப்ப அந்தத் தெரு முகனையிலெ இருந்த சிலுவைக் கல்ல நான் பார்த்த நாள் முதல் எனக்குனு உண்டான ஒரு நம்பிக்கை தான் இந்த சிலுவக்கல்லு ஜோசியம். எப்படின்னு கேளுங்க சொல்லுறேன்.

ஆமா கொஞ்ச நாள் இந்த சைக்கிள்ள ட்யூசன் போறது போயி, அடி வாங்கறதுலேருந்து தப்பிக்க வேற வழியே இல்லனு ஆனதுக்கப்பறம், நானே டுயூசன் போக ஆரம்பிச்சட்டேன். அப்படி வீட்டிலே இருந்து டுயூசன் போகும் போதெல்லாம், அந்த தெருமுகனை சிலுவையை தொட்டு நெஞ்சிலே சிலுவை போட்டிட்டு, இன்னய பொழுது அடி வாங்கம போகனும்டா சாமின்னு வேண்டிட்டு போவேன். அப்படி போனாலும் சில நேரம் அடி வாங்குவேன், சில நேரம் நல்ல நேரமா போயிடும். இதை ஒரு வழக்கமா வச்சிக்கிட்டு இருந்தேன். ஒரு நாள், அந்த சிலுவையை தொட்டுக் கும்புட்ட்டு, இன்னக்கு டீச்சர் வீட்டல இருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டு சிலுவையை போட்டுக்கிட்டேன், என்ன ஆச்சிரியம் பாருங்க அன்னக்கி, அக்கா வீட்டல இல்ல, வீடு பூட்டி இருந்தது. ஆகையால், இன்று டியூசன் இல்லை. எவ்வளவு சந்தோசம் பாருங்க!. அப்பலே இருந்து, இந்த சிலுவை ஜோசியத்தை நம்ப ஆரம்பிச்சேன். அதுக்காக, நான் நினைச்சப்பல்லாம், சரசக்க்கா வீடு புட்டி வச்சிட முடியுமா? அதனாலே இந்த ஜோசியத்தை அடிக்கடி நினச்சிக்கிறதுல்ல. ஆக எனக்குள்ளேயே ஒரு ஜோசியக்காரன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அத கவனமா உபயோகிச்சு, எனக்குனு ஒரு ஆனந்தத்த உண்டாக்கிட்டேன். இது ஒரு அருமையான அனுபவம். சின்ன வயசில்ல இது போல உருவாகிற அனுபவங்களே ஒரு அலாதி தான்.

Monday, October 10, 2005

ஜிகர்தண்டா, டீ, போண்டா, வடை

என்னடா இது இவண் சரியான தீனிபண்டாரமா இருக்கிறேனு நினைக்கிறீங்கதானே! அதுதான் உண்மை. இது எல்லாம் கிடைக்கும் தான் நான் கடைக்கு போவவே அரம்பிச்சேன். ஏன்னா வீட்டுல்லா மிஞ்சிபோன காலைல சுட்ட இட்லி, எப்பவாச்சும் முறுக்கு, தீவாளி சமயத்திலன அப்பங்கே சுட்ட பலகாரம் கிடைக்கும், மிஞ்சிபோன ஒரு வாரமோ, இல்ல இரண்டு வாரத்துக்கோ வரும். ஆன இது போல நினச்சப்பல்லாம் டீ, வடை, போண்டான்னு வாங்கி தின்னமுடியுமா? அதுக்குதான் கடைக்குபோன எல்லாம் கிடைக்கும். என்னான்னா, கடைல வேலை செய்யரவங்களுக்கு அப்ப அப்ப வாங்கி தந்ததான், அவனவன் ஒழுங்கா வேலை பாப்பான். அப்ப எல்லாருக்கும் வாங்கிக் கொடுக்குறப்ப எங்க ஞாயினா எனக்கும், பாவம் சின்னபுள்ளயாச்சேன்னு வாங்கி தருவார். நமக்கு என்ன உத்தியோகமுனு கேட்கலையே! என்னா ஓடும் புள்ள வேலைதான். நாலு பர்லாங்கு தூரத்திலே(அப்பல்லாம் இந்த அமெரிக்கன் யூனிட் சிஸ்டம் தான் நம்ம கிட்ட புழங்குகிறது, சொல்ல போன அதோட கரக்ட் யூனிட் கன்வர்சன, இங்க சேன்ட அனிட்டா, பர்க்ல டெர்பி, குதிரை ரேஸ்ல குதிரை ஓடுற தூரத்தை பார்த்தப்ப தான் தெரிஞ்சிகிட்ட்து, அடடா, நாம அந்த காலத்தில யூஸ் பண்ணது ஆச்சேன்னு, இன்னும் அதை அமெரிக்காகாரன் விடாம யூஸ் பன்ணுறானேனு ஆச்சிரியம், அதே மாதிரி நம்ம ஊர்ல இருக்கிற மேலபுலிவர், கீழபுலிவர் ரோடும், இந்த அமெரிக்காவிலே கூப்பிடற East boulevard, West Bulevard Roads தான்) இருக்குற பாய் கடைக்கு போயி ரேக் டிம்மிக் கட்டை வாங்கி வர வேலதான். அதுக்கு மேல டீ, காபி, வடை, போண்டா வாங்கி வர்றதுதான். பூ, மாலங்களுக்கு தண்ணி ஊத்துற்து, போர வர கிராக்கிங்களை(சின்ன புள்ளயிலருந்து யூஸ் பண்ணறேன், ஏன் கஸ்டமர்களை இப்பிடி கூப்புடாறங்ககிறது இன்னும் தெரியலே!, திருச்சி பக்கம் இதுதான் வ்ழக்கம்) கூப்புட்டு யாவரம் பண்ணணும். ஏதோ போனமா, டீ, வடை, போண்டா வாங்கி சாப்பிடுட்டு வந்து சேர்ந்தமான்னு இல்லாம நமக்கு, சினிமா கலை ஆர்வத்தை வளர்த்துதது இந்த பூக்கடை தான். அதனால, சின்னப்புள்ளலே, சினிமாவல நடிக்கனுமுனுட்டு மெட்ராஸ் போயிட்டு வந்த கதையை கேட்டிங்கின்னா, ஒரே கூத்தா இருக்கும். அந்த கதையை அப்புறமா சொல்றேன்.