Wednesday, November 30, 2005

எனை ஆண்ட அரிதாரம்- மூன்றாம் பகுதி

ஒரே நிசப்தம்! டிங்,டிங் என்ற மணிஓசை.... மயான அமைதி..


"எதையோ எதிர் நோக்கி நிற்கும் இந்த இளம் விழிகள்! இந்த இளங்குயிலின் ஆரம்பகாலம் நோக்கி சற்று பார்ப்போமா!...."

நான் சிவாஜி கணேசன் வசனத்தையோ, இல்ல வேற எந்த நடிகனின் வசனத்தையோ பேசலை, பாரதிராஜா 'பதினாறு வயதினிலே' படத்தில பேசற அந்த ஆரம்ப காட்சியோட வசனம், பாடல்கள் தான், இதோ!...

"சோளம் விதைக்கையிலே!
சொல்லிப்புட்டு போன புள்ள!
சோளம் விளஞ்சு காத்துகிடக்கு!
சோடிக் கிளி எங்க இருக்கு....!

சொன்ன சொல்லு என்னா ஆச்சு
தங்கமே! தங்க ரத்தனமே..
நீ சொன்ன சொல்லு என்ன ஆச்சு
தங்கமே! தங்க ரத்தனமே.....

ஆத்தா.. நான் பத்தாங்கிளாஸு பாசாயிட்டேன்...
ஆத்தா... நான் பத்தாங்கிளாஸு பாசாயிட்டேன்....

ஹ...ஹா....
வா.. மயிலு.. அ...ஆ...
இதப் பார்டா, இது எப்படி இருக்கு?...

ஏன் மைலு உங்காத்தாக் கிட்ட போயி சொல்லி கில்லி போடாதே...

ஏண்ணே...

பொம்பளையா அவ, தஞ்சாவூரு தவுலு....

அட மானங்கெட்டவளே, சூடு கெட்டவளே....."

ஆக இப்படி போனது நம்ம வசனம், பிறகு, 'அந்த ஆத்தா ஆடு வளர்த்தா.. கோழி வளர்த்தா ஆனா நாயி வளக்கலேயே, என்னத்தானே வளர்த்தா..' 'ஏண்ணே.. என்னாச்சு, இல்ல இவ ஆத்தாளுக்கு தாவணிப் போட்டாலும் நல்லா தாண்டா இருக்கு, இது எப்படி இருக்கு?..', இது போன்ற வசனங்கள்.

பிறகு, கிழக்கே போகும் ரயில் படத்திலிருந்து, கவுண்டமணி வசனங்கள், 'பாஞ்சாலி, நான் உனக்கு அளவு எடுக்கவா, பாவாடை கெண்ட காலு வர வக்கணுமா, முழுசா வக்கணுமா' போன்ற வசனங்கள். இது போன்ற வசனங்கள் மிகவும் பிரபலமாயிருந்த நேரம். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, மற்றும் கிழக்கே போகும் ரயில் போன்ற படங்கள் வந்து கலக்கி கொண்டிருந்த நேரம் அது. எப்படி திரைப்படத்துறையிலே ஒரு பெரியதோரு தாக்கத்தையும், மாற்றங்களையும் அப்படங்கள், அக்காலகட்டத்தில் கொண்டு வந்ததோ, அது போன்று, கல்லூரிகளில் அவரின் பட வசனங்களை மிமிக்கிரி செய்தது ஒரு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. எல்லோருமே எதிர்பாக்காத ஒன்னு. எனக்கு முன்னாடி வசன்ம் பேசிட்டு போனவனெல்லாம், நான் முதல்லேயே சொன்ன மாதிரி, பராசக்தி, மனோகரான்னு பேசி, எல்லாரும் கத்தி ரவுசுவிட்டு ஓட வச்சவுடேன, ஆஹா.. அடுத்த கோழி வருது, அதையும் கத்தி, ரவுசுவிட்டு அனுப்போவோமுன்னு நினிச்ச என் சீனியர் கூட்டத்துக்கு, நான் பேசன அந்த வசனங்கள், மிமிக்கிரி பண்ண விதம் எல்லாம் ரொம்ப பிடிச்சு போயி ஒரே பாரட்டுக்கள்!

பிறவு, முத வருசத்தில நான் தான் ஹீரோ நம்ம காலேஜ்ல. சீனியர்ஸ் எல்லாம் ஊக்கம் கொடுத்து என்னோட காலேஜ்ல மட்டுமில்லாம, வேற காலேஜ்களுக்கும் காம்பிட்டிஷனுக்கு அனுப்புனாங்க. பலகுரல்ல பேசி சின்ன சின்னதா ஸ்கிட்டு, மிமிக்கிரி எல்லாம் பேசி, போன இடத்தில எல்லாம் எதாவது ஒரு பரிசு வாங்கிட்டு வரதுதான் வேலை நமக்கு. அப்பத்தான் எங்க காலேஜ்ல ஒரு நாடகப் போட்டி வச்சாங்க. அது ஃபர்ஸ்ட் யியர்லருந்து ஃபனைல் யியர்ஸ் ஸ்டுடன்ஸ் வர ஒவ்வொரு யியர்ஸ்ஸும் நாடகம் போடனும். அப்ப சீனியர்ஸ் என்கிட்டதான் வந்து ஃப்ர்ஸ்ட் ய்யர்ஸ்க்கு நான் தான் ரெப்ரஸன்ட் பண்ண சொல்லி நாடகம் போட சொன்னாங்க, அப்பவும் சரியான கூத்து போங்க, ஹீரோயினோட பாட்டு பாடி டான்ஸ் ஆடறதுல ஒரே போட்டி, அதாவது எனக்கு சமமா நடிச்ச கதிரேசன், அதாவது சப்போர்டிங் ஆக்டர் ரோல் பண்ணவன், எனக்கும் ரெண்டு பாட்டு வேணும்னு கேட்டு போராடி, ஒரே காமிடியா நாடகம் போட்ட கதை உண்டு.

இப்படி ஆரம்பிச்சது தான் என்னோட நடிப்பு படலம். பிறகு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து, அதுவே ஒரு நாளு நான் சிறந்த நடிகன் போட்டியில இப்ப சினிமால்ல நடிச்சிகிட்டு இருக்கிற நாசரோட போட்டி போட்டேங்கிறது இப்ப நினைச்சலும் ஒரா திகப்பா இருக்கு, அதப்பத்தி அடுத்த வர பதிவுகள்ள பார்க்கலாம் என்ன?

Wednesday, November 23, 2005

எனை ஆண்ட அரிதாரம்- இரண்டாம் பகுதி

என்னோட திறமை என்னான்னு தெரிஞ்சுக்க எனக்கு ஒன்னும் அதிகம் நேரம் எடுக்கல்லை. படிப்புன்னு பாத்தா, கொஞ்சம் நல்லா படிக்கிற ஆளுதான். இந்த சின்ன வயசில இருந்த துறுதுறுப்பு, சூட்டிகை, சேட்டை, வாலுத்தனம் எல்லாமே எனக்கு எதிலையும் ஆர்வமா, துணிச்சலா செஞ்சு பார்க்கணும்னு தோணும். சரி படிப்பைப் பொருத்தவரை ரொம்ப எக்ஸ்ட்ராடினரி இல்லானாலும், முதல் மூணு ராங்க் குள்ள வர ஆளுதான். மத்தபடி, இருக்கிற எனர்ஜிய வேற எதிலயாவது திருப்பனும்னா ஸ்போர்ட்ஸ், கேம்ஸ், விளையாட்டு, இல்ல மற்ற இயல், இசை கலைகள்ல தான் திருப்பியாகனும். ஸ்போர்ட்ஸ்னு எடுத்துக்கிட்டா, ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டேயிலே, வாயில கரெண்டியில எழும்பிச்சை பழம் வச்சிகிட்டு ஒடறதுல தான் இரெண்டாவதோ, இல்ல மூணாவதோ வருவேன். மற்றபடி ஓட்டப்பந்தயம், ரேஸ் இதல்லாம் நமக்கு எமகாதக தூரம். சாக்குமூட்டையில ஒடி ஜெயிக்கிறேன் போர்வழின்னு காலை சிராச்சிக்கிட்டது தான் ஜாஸ்தி.ங்.. இந்த பலேம் பால் நல்லா விளையாடுவேன். இது எத்தனை பேருக்கு தெரிஞ்சுரிக்கும்னு தெரியலை. அடுத்தவன் முதுகைப் பாத்து அடிச்சு விளையாடினும். அப்புறம் அடி வாங்கினவன் பாலை எடுத்து அடுத்தவனை குறி பாத்து அடிக்கணும். இதில நான் அடுத்தவனை அடிச்சதை விட நான் அடி வாங்கினதுதான் அதிகம். அப்புறம் கொஞ்சம் பெரிசானோன, கபடி விளையாட்டுல நம்ம கிங். கில்லி விஜய் மாதிரி டீம் ஹீரோ. எதிரி அணியை ஏறி அடிச்சிட்டு வரதல கில்லாடி. என்னை பிடிக்கிறதுக்கு கஷ்டபடுவாங்க, ஏன்னா நான் கொஞ்சம் பாரியான ஆளு, அதனால பிடிக்க முடியாம, தன்னை காப்பாத்திக்க அவங்க கோட்டை தாண்டி அவுட் ஆகிறது சகஜம்.

வேற விளையாட்டுகள்னு எடுத்துகிட்டா கால்பந்தாட்டத்தில கொஞ்சம் ஆர்வம் இருந்திச்சு, ஏன்னா, சின்ன பிள்ளையில திருச்சியில இந்த மதுரம் கால்பந்து டோர்னமென்ட் நடக்கும். அது கோடையில ஒரு மாசமோ, இரண்டு மாசமோ தொடர்ந்து நடக்கும். வட இந்தியாலருந்தெல்லாம் வந்து டீம்ங்க விளையாடும். இந்த கால்பந்தாட்டம் திருச்சி மாநகரிலே ஒரு பெரிய பொழுதுபோக்கு. படிச்ச கும்பல விட , வியாபாரம் செய்ற முதலாளி கும்பலுங்க ஜாஸ்தி போய் பார்க்கிற்துண்டு. திருச்சின்னு எடுத்துகிட்டா, அது ஒரு பெரிய வர்த்தக நகரம், சுத்துபக்கத்து கிராமங்கள், அரியலூர், பெரம்பலூர், துறையூர்,மணப்பாறை, நாமக்கல், முசிறி இங்கிருந்தெல்லாம் விவசாயிங்க விளஞ்ச பொருள்களை எடுத்து வந்து மொத்த கொள்முதல் யாவாரம் செய்யும் டிஸ்டிரிபூசன் சென்டர். ரீட்டைல் வியாபரம் லோக்கல் ஆளுங்க செய்றது. 60 க்கப்பறம் தான் காமராஜர் BHEL, கனரக தொழிற்சாலை, கொண்டுவந்ததுக்கப்பறம் ஒரு மாதிரி மார்டன் ஆன ஊரு. அதனால இந்த வியாபாரிங்க அதிகம் உள்ள ஊரு. அவங்க எல்லாத்துக்குமே இந்த கால்பந்தாட்ட தொடர் ஒரு பெரிய என்டர்டெயின்மென்ட். ஆக, நான் எங்க கடைக்குப் போறப்பல்லாம் இந்த மேட்சுக்கு போறதுண்டு. பார்த்து ரசிக்கிறதோட மட்டும் தான். விளயாட ஆசை இருக்கும், ஆன விளயாடறேன் பேர்வளின்னு கால் நகம் பேத்தது தான் மிச்சம். மற்றபடி கிரிக்கெட்ல்லாம் பத்தி அதிகம் தெரிஞ்சுக்கிட்டது இஞ்சினியரிங் காலேஜ் போயிதான்.

இப்படி விளையாட்ட விட்டுட்டா, அடுத்து இயல், இசை, நாடகம் தான். ஐயரு வீட்டுங்கள்ள வளர்ந்திருந்தாலும், பாட்டு பாடவோ, ஏதாவது இசைக் கருவி கத்துக்கவோ ஏற்பாடு பண்ணி இருந்திருப்பாங்க! ரொம்ப அதிகமா ஆர்வத்தோட ஆம்பளை பசங்களுக்கும் பரதநாட்டியமும் கத்துக் கொடுத்துருப்பாங்க, நம்ம கமலஹாசன் மாதிரி. நமக்கு ஏது அந்த கொடுப்பினை! அதனால தன்னிச்சையா வந்த நடிப்பு, கூத்து, பாட்டுல எல்லாம் ஆர்வத்தை வளர்த்துகிட்டேன். ஆக அதிகமா அடுத்த பொழுது போக்க நான் எடுத்துக்கிட்டது சினிமா பார்க்கிறத தான். வாரங்கள் ஞாயிறு இல்லாம வேணா கழிஞ்சிருக்கலாம், ஆனா, ஞாயித்துக்கிழமைகள்ல நான் சினிமா பார்க்கிறது தவறாது. முதல்ல சண்டை படங்கள் பார்க்கத்தன் அதிகம் பிடிக்கும். பொறவு நகைச்சுவை படங்கள், அப்புறம் தான் அழுகை படங்கள். இப்படி கழிஞ்சது சில நாட்கள், அப்புறம் என்னேட சின்னபிள்ள வா..ராஜா..வா கதை தான் உங்களுக்குத் தெரியுமே! அந்த கட்டத்தில தான், முதல்ல வெத்தயா சாம்ரம் வீசற மாதிரி தான் கேரக்டர்கள். பொறவு, கொஞ்சம் பெரிசா நாலு,அஞ்சு பக்கங்களோட ஏசு நாதர் சீடர்கள் ஒன்னு அப்புடின்னு. ஆறாவது, ஏழாவது படிக்கயில்ல தான், என்னோட நாடக வாத்தியார், அமல்ராஜ், என்னோட திறமைய கண்டுகிட்டு ஒரு லீடிங் கேரக்டருக்கு இணையான ஒரு ரோல் கொடுத்திருந்தார், அவரு எழுதிய சமூக நாடகத்துக்கு. மெயின் ரோல இன்னொரு பையனுக்கு கொடுத்திருந்தார். அப்பங்கே, அவன் அம்மை போட்டு நடிக்க முடியாம போக, பொறவு அந்த கேரக்டர நான் செய்ற மாதிரி ஆயிடுச்சி. நானும் நல்லா நடிச்சு எல்லாருகிட்ட இருந்தும் பாராட்டு வாங்கினேன்.

மிடில் ஸ்கூல்ல படிக்கிறவரை நிறைய நாடகங்கள்ல நடிச்சு, நல்ல நடிகர்னு கேடயம் எல்லாம் வாங்கினாலும், பிறகு ஹை ஸ்கூல் படிச்சப்ப அவ்வளவா ஏதும் நாடகங்கள்னு நேரம் செலவழிச்சதில்லை. ஆனா சினிமாவோட தாக்கம் இருந்தது. நடிக்கிற நடிகர்கள போல உடுப்ப மாட்டிக்கிணும், ஹேர் ஸ்டல் வச்சுக்கணும்னு. எம்ஜிஆர், சிவாஜி வச்சிக்கிட்டு வர மாதிரி நம்மலால முடி வச்சுக்க முடியாது. ஏன்னா அவுங்க ஒவ்வொரு படத்துக்கும் ஒரு டோப்பா முடி வச்சுவுகுவாங்க, நம்மகிட்ட இருக்கிற கோரமுடிய என்னத்த எழவு போட்டு சீவுனாலும் முன்னாடி தொங்கிற சுருளு முடி தான் வக்க முடியுமா, இல்ல பஃப் முடி தான் வக்க முடியுமா? ரொம்ப கஷ்ட பட்டுருக்கேன், தேங்கா எண்ணெயும் தண்ணியும் கலந்து தனியா பாட்டில வீட்ல ஒளிச்சு வச்சு, அத தடவி, பண்ணாதக் கூத்தே கிடையாது போங்க! கடைசியில நம்ம கூடசேர்ந்தவன்,'டேய், அதெல்லாம் டோப்பாடா, உனக்கு வராது' சொன்னவுட்டிதான் அத வுட்டதே. அப்ப சொந்தமா முடிவச்சு ஆடி பாடி நடிச்ச நடிகரு சிவகுமாரு தான். அதானால அந்த முன்னால அவரு எடுத்து வைக்கிற பஃப் மாதிரி நமக்கும் கொஞ்சம் வச்சா நல்லாதான் இருந்தது. இதை எல்லாம் உடச்சிட்டு பிறகு வந்தாரய்யா நம்ம பரட்டை. ஆகா, என்ன மாதிரி ஒருத்தன் வந்தாண்டான்னு கோரமுடியோட, முன்னால விழும் கற்றையோட, வைரமுத்து பாட்டு கட்ட ஒரு 20 வருஷம் ஆனாலும், அப்பவே நான் அவன் அழகு பாடி, அவன் படங்களை வெறியோட பார்க்க ஆரம்பிச்சேன். இப்பவும் அந்த காலத்தில அவரு வச்சிருந்த முன்னாடி விழும் அழகு ஸ்டல்ல தான் தலை சீவி வச்சிக்கிட்டுருக்கேன், அவரு நடுவில மாத்திகிட்டாக்கூட. வேணும்னா ரஜனி ராம்கி பிளாக்ல இருக்கிற போட்டவை பாருங்க, அந்த சிரிப்புதான்யா என்ன மயக்கிச்சு.

நான் என்னமோ அரிதாரம் பூச ஆரம்பிச்சது அஞ்சாவதோ, ஆறவதோ படிக்கிறப்பவே. ஆனா நல்ல திறமயான நடிகனா பரிமளிக்க எனக்கு வாய்ப்பளித்தது இந்த கோவை மாநகரமே! இஞ்சினியரிங் காலேஜ் சேர்ந்த முத வருஷம், இந்த ராக்கிங் எல்லாம் ஜனவரி வர நடக்கிற துண்டு. ஆகஸ்ட், செப்டம்பர்ல சேர்ந்தா, அது ஆறு மாசம் கண்டிப்பா உண்டு. அப்புறம் சீனியர்ஸ் எல்லாம் ப்ரண்ட்ஸ். எங்க பயமெல்ல்லாம் நீக்க ஃப்ர்ஸ்ட் யியருக்கு ஒரு கலை நிகிழ்ச்சி போட்டி வப்பாங்க, அதல முத வருஷ ஸ்டூன்ட்ஸ் வந்து பாட்டு பாடலாம், கவிதை வாசிக்கலாம், மிமிக்ரி பண்ணலாம், அப்புறம் வசனம் பேசி நடிச்சி காட்டலாம். ஆனா உருப்படியா யாரையும் பண்ண விட மாட்டங்க. மாட்டு கத்து கத்தி ஸ்டெஜ்ல விட்டு கீழே இறக்கி விட்டுடு வாங்க. அது எங்களுக்கு எல்லாம் தெரியாது. ஆனா இந்த கலை நிகழ்ச்சி போட்டிக்கு ஆர்வதோட பேரு கொடுத்து, அவனவன் சிவாஜி பேசன வசனத்தை, வீரபாண்டிய கட்ட பொம்மன், மனோகரா, தேசிங்குராஜா, அப்புறம் பராசக்தி, அப்படின்னு பக்கம் பக்கமா படிச்சு தயார் பண்ணிகிட்டு இருந்தானுங்க. நானும் ஸ்கூல்ல எல்லாம் இந்த வசனங்களை பேசுனவன் தான், அதுவும் 30 பக்கமானாலும் அசரமா படிச்சு உணர்ச்சி வசமால்லாம் பேசி நடிச்சவன் தான். ஆனா பாருங்க, இந்த கலைப்போட்டில இதை எல்லாம் பேச எனக்குப் பிடிக்கல்ல. வேற வசனங்கள் தயார் பண்ணி பேசுவோம்னு நினைச்சேன். அப்படி ராஜவசனம் தயார் பண்ணிட்டு போனவன் கதிய பாத்திங்கன்னா, அவன் 'என் புஜபல பராக்கிரம் பார்த்துள்ளாயா?', 'என் தோள்கள் தினவெடுக்கின்றன' அப்படில்லாம் ஆரம்பிச்சானா , அடுத்த வார்த்தை அவன் என்ன பேசுரான்னு கேட்க முடியாது. அவனை ஸ்டேஜ் வுட்டு இறக்கிட்டு தான் மறு வேலை பார்ப்பானுங்க நம்ம சீனியருங்க, அடுத்த வந்த வருஷங்கள்ள நாமும் அப்படிதான். ஏன்னா இது ஒரு மறக்க முடியாத் நிகழ்ச்சி சீனியருக்கும் சரி, ஜூனியருக்கும் சரி. அப்ப தான், நம்ம ஏறுனோம் ஸ்டேஜ். ஆரம்பிச்சேன் என்னோட வசனங்களை, பின் ட்ராப் ஸ்லென்ஸ், அரை மணி நேரம், மொத்த கூட்டமும் ரசிச்சு, கைத்தட்டலோட கேட்டுச்சு நான் பேசற வசனங்களை. மேடை விட்டு இறங்கி வர்ப்ப ஒரே உற்சாகம், கைத்தட்டல், ஊக்கமளிப்பு, பாராட்டுக்கள், எனக்கு ஒன்னும் ஓடல. நமக்கு இவ்வளோ பாராட்டுக்களா, நம்ம திறமைக்கு இத்தனை அங்கிகாரமான்னு, ஒரே ஆச்சரியம்!

என்ன அப்படி வசனம் பேசுனேன்னு கேட்கிறீங்களா, அதத்தானே விவரமா சொல்லப்போறேன் அடுத்த பதிவுல, புறவு சந்திப்போம?

Monday, November 21, 2005

எனை ஆண்ட அரிதாரம்- முதல் பகுதி

எல்லாருக்குமே ஏதாவது ஒரு அசாத்திய திறமை இருக்கும். அதை வெளிய கொண்டு வர்துக்கு நிறைய பேருக்கு சில பேரு துணையிருப்பாங்க, இந்த 7G ரெயின்போ காலனி பட ஹீரோயின் மாதிரி. சில பேருக்கு யாரும் துணையிருக்க மாட்டங்க, ஆனா தம்மை தாமே எதிலயாவது ஈடுபடுத்திக்கிட்டு, அந்த திறமைய வளர்த்துக்குவாங்க, அந்த திறமையை வச்சு மிகப் பெரிய ஆளா வருவாங்க. சில சமயம் அது ஒரு குறிப்பிட்ட சமயம் வரக்கும் அவங்க கிட்ட இருந்து ஒளி வீசும், அப்புறம் மங்கி போயிடும். வாழ்க்கையில வேற வழி தேடிக்கிட்டு போய்டுவாங்க. இதுக்கு பல உதாரணங்கள் இருக்கு. ஏன் நம்ம தருமி மாதிரி, அப்புறம் என்னோட ஃபிரண்ட் ஜெயராமன்னு, கிரிக்கெட்ல பெரிய பேட்ஸ்மேன். நாங்க காலேஜ்ல படிச்ச காலத்தில ரொம்ப நல்ல விளையாடுவான். அப்ப கோயம்புத்தூர்ல லீக் மேட்ச்ல எல்லாம் பூந்து விளாசுவான். எங்க காலேஜ் நட்சத்திரம். அவனை கபில்தேவ்வோட கம்பேர் பண்ணிதான் பேசுவோம். அவனை சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும். எல்லாம் இந்த கிரிக்கெட் விளயாடுற கும்பலு தான். அதே மாதிரி லான் டென்னீஸ்ஸும் நல்ல விளயாடுவான். எங்க காலேஜ்ல இருக்கிற கோர்ட்ல அவன் தான் மாணவங்கிற முறையில விளையாடிக்கிட்டு இருக்கிறது. மத்தது அவனோட விளையாடுறவங்க காலேஜ் பி ஏ டு பிரின்ஸ்பலு, அப்புறம் எங்க காலேஜ் பிரின்ஸ்பாலு பசங்க.(பிரின்ஸ்பலு மகன் யாருன்னா, ரொம்ப பேமஸ் ஆன ஆளு, அந்த காலத்திலயே ஜெயபிரதாவோட சுத்துனவங்கன்னு ஒரு பேச்சு, நீலகிரி தொகுதில எம் பி யா இருந்தவரு), அப்புறம் ரெண்டு புரபசர்ங்க. நம்மல்லாம் கபடி கும்பலுங்க, எங்கத்த டென்னிஸ் ஆடுறது போங்க!.

நான் முதல்லேயே சொன்ன மாதிரி அவன் கூட சுத்துற ஃபிரண்ட்ஸ்ங்க கும்பலு கொஞ்சம் அல்டாப் ரகம். நுனி நாக்கு இன்கிலீஸ் பேசர கும்பலு, பொதுவா அவங்க எல்லாம் மெட்ராஸ் பசங்க. நாங்க படிச்சப்ப ஹாஸ்டல்ல மாவட்ட வாரிய கும்பலுங்க உண்டு. எம் டி கே ன்னு ஒரு மக்கா கும்பலு, அதாவது மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம், அப்புறம் திருச்சி, தஞ்சாவூரு, கும்போகோணம்னு சோத்து கும்பலு, அப்புறம் ஈரோடு, சேலம், வேலூர்னு கவுண்டர் கும்பலு. அப்படி அப்படியே செட் சேர்ந்தரும், அப்புறம் அம்பேத்கார் கும்பலு. ஆன ஜெயராமுக்கு எந்த பாகுபாடு இல்லாம ஆதரவு இருக்கும். கபில்தேவ் மாதிரியேயும் மீசையும் நல்லா கரு கருன்னு வச்சுக்கிட்டு இருப்பான். நாங்கல்லாம் ஃப்ர்ஸ்ட் யியர்லருந்தே ஃபிரண்ட்ஸ். செமஸ்டர் எக்ஸாமுக்குன்னு வுட்ட லீவுல ரெண்டு மாசம் சீட்டு விளாயாடிட்டு கடைசி ஒரு மாசங்கல படிச்சு பாஸாவர கேஸ்ஸுங்க. ராத்திரி மூணு நாலு மணி வரை விளாயாடிக்கிட்டு இருப்போம், அப்புறம் தூங்கி மத்தியான சோத்துக்குத்தான் எந்திரிக்கிறது. அப்புறம் இருக்கவே இருக்கு டவுண் ஹாலு, ஏதாவது நூன் ஷோ படம் பாத்துட்டு சாய்ந்திரம் ஹாஸ்டலு திரும்பி ராத்திரி மெஸ்ல சாப்பிட்டுடு புறவு சீட்டு கச்சேரி, ராத்திரி மூணு, நாலு வரை.

அது மாதிரி நமக்கு கிரிக்கெட்ல்லாம் ஆட வராது. வேடிக்கை பார்க்கறதோட சரி. அதுவும் ஞாயித்துக் கிழமைங்கள்ள எங்க காலேஜ்க்கும் மத்த காலெஜ்க்கும் லீக் மேட்சு இருக்கும். காலையில மெஸ்ல போடற அந்த வீண போன பிரட்டும் ஜாமும் திங்க நம்க்கு பிடிக்காது. அதானால மத்தியான்ம் போடற கோழி பிரியாணிக்கு நாக்க தொங்க போட்டுகிட்டு மேட்சு பாத்து தொலைச்சுகிட்டு இருப்பேன். சமயத்தில இந்த கோழி வர லேட்டாயிடும், அப்புறம் சாப்பிட மணி ஒன்னு ஆயிடும், மெஸ் டைம் படி பன்னிரெண்டு மணிக்கு ஆரம்பிக்கணும். ஆனா ஒரு மணிக்கு தான் மெஸ்ஸையே தொறப்பானுங்க. சரியா மேட்சோட ஒரு செஸ்சன் முடிஞ்சு பிரேக்ல சாப்பிட வர சரியா இருக்கும். அப்ப கூடி நிக்கிற கும்பலு கூப்பாடும், கூத்தும் என்னமோ இந்தியா பாகிஸ்தான் மேட்சு மாதிரி தான் போங்க. நம்ம ஜெயராம் தான் எப்பவமே ராஜா, டாப் ஸ்கோரர். அந்த அசாத்திய திறமையால யூனிவர்சிட்டி வரைக்கும் ரெப்ரஷன்டேசன் பண்ணியவென். அப்ப எதிர்பாத்தது என்னான்னா ரஞ்சி வரக்கும் போய்டுவான் அப்புறம் இந்திய டீம்ல வர வரக்கும் கனவு தான்.

என்னதான் நுனி நாக்கு பேசற இங்கிலீஸ் கும்பல்ல சுத்தினாலும் ஜெயரமானுக்கு நம்மகிட்ட கொஞ்சம் வாஞ்சை தான். என்னா ஒன்னு அவன் ஊரு மெட்ராஸ் கிடையாது, இந்தோ தெக்கால இருக்கிற கோவில்பட்டி தான். அவங்க அப்பா பி டபிள்யூ ல இஞ்சினியருன்கிறதலா ஊர் ஊரா சுத்தி படிச்சிட்டு, பெரும்பாலும் தென் மாவட்டங்கள் தான், பிறவு இன்ஞ்சினியரிங் பண்ண கோயம்புத்தூர் வந்தவன். அவ்வளவா தாட்டு பூட்டுன்னு இங்கிலீஸ்லாம் பேசலனாலும் ரொம்ப ஸ்டைலா நடந்துக்கிறவன். நம்மகிட்ட ஏன் ஒட்டுனான்னா, இருக்கே நம்மகிட்டையும் திறமை, அதுதான் அந்த நடிப்பு, மிமிக்கிரி எல்லாம். அதானால அவனுக்கு சமமா காலேஜல ஒரு ஹீரோ அந்தஸ்துல பேசபட்ட ஆளு, எப்படிங்கிறீங்களா, அதப்பத்தி தானே இனி வரபோர் பதிவுகள்!

அந்த மெட்ராஸ் கும்பல்ல ரெண்டு இருந்தது. ஒன்னு நான் சொன்ன அந்த நுனி நாக்கு ஆங்கிலயேர்கள், இன்னொன்னு நம்ம சூளை கும்பலு, நமக்கு சரி சமமா கபடி விளாயாடிகிட்டு, நம்மலோடையே சுத்தினது. அதாவது மெட்ராஸ் A, அப்புறம் மெட்ராஸ் B. நம்மது மெட்ராஸ் B. திருவல்லிக்கேணி, அப்புறம் மொண்ட் ரோடு, சூளை அப்புறம் ஆழ்வார் பேட்டை இது தான் நம்மாலுங்களோட ஜாகை.(நம்ம கூட இருந்த டாக்டர் கொன்னை, அங்குராஜ்ங்கிற அழகான பேரு தான் டாக்டர் கொன்னையா மாறுச்சு, ஆழ்வார் பேட்டையில சாருஹாசன், கமல்ஹாசன் வீட்டுக்கு பின்னாடி வீடு, அப்ப கேட்டா நான் சுஹாசினி தங்கச்சியே சைட் அடிக்கிறேன்னு பீலா வுட்டுகிட்டு இருப்பான்) அந்த மெட்ராஸ் A கும்பலு கொஞ்சம் நம்மகிட்ட டக்கர் அடிக்கும், இருந்தாலும், நம்ம பலுவையும் நம்ம மெட்ராஸ் B கும்பல வச்சு காண்பிச்சு அடக்கி வச்சுருந்தோம். ஆன் ஜெயராமன் இதெல்லாம் கண்டுக்கிடமாட்டான். அவன் ரெண்டு கும்பலுங்கிட்டேயும் பதிவிசா போய்க்குவான். ஏன்னா அவன் எந்த பக்கமும் சாய வேணாம் அது அவனேட பாப்லாரிட்டியே பாதிக்கும்ங்கிறத்தினாலே.

நம்ம கொஞ்சம் நாடகம், கூத்து, ஸ்கிட்டு, மிமிக்ரி இதெல்லாம் கலக்கிக்கிட்டு இருந்த நேரம். வெறும் நடிப்புங்கிறது மட்டுமில்லாம, தமிழ் மன்றம், நாடக மன்றம், இதிலெல்லாம் ஆக்டிவா மன்ற பணிகளையும் செஞ்சுக்கிட்டு இருப்பேன். பத்திரிக்கை வக்கிறதிலருந்து, கொடி கட்டறதுலருந்து, கஸ்ட்ங்களை இன்வைட் பண்றதிலருந்து, பதிப்புகள் போடறதிலருந்து எல்லா வேலையும் செய்வேன். அது மாதிரி மத்த காலேஜ்ங்கள்ள போய் பேச்சு போட்டி , கவிதை, நாடகப்போட்டி, அப்படின்னு செஞ்சிக்கிட்டு இருந்தேன். அதனால மற்ற கல்லூரில நமக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அதுல்லயும் பெண் நண்பிகளும் உண்டு. பெண்கள் கல்லூரியில பேச்சு போட்டிக்கு போறப்ப நானும் என்னுடய சீனியர் இராமநாதனும் ரொம்பவே கலகலப்பா பேசி பெண் மாணவிகள் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்கள், அதனாலேயே நமக்கு ரோஜாக்கூட்டம் அதிகம் உண்டு. அதிலேயும், அந்தப்புரம், தடாகம், தாமரைக்குளம், ரோஜா மலர் தெளித்த திரவியக்கடல், தலை காயவைத்து நீரில் மிதக்கும் கன்னிமீன் போன்று, துடுப்பென கையை அசைக்கும் லாவகம், புரவிலே ஒடி வந்த மன்னன் கொண்டான் விழிப்பார்வை, நனைந்த தேகம், மெல்லிய வெண்மை உடையில குலுங்கிய வதனம், பொங்கி சிரித்தன கண்கள்..., இது போதும் அந்த சொல்லும் நடையில ஹாப் சாரியோட சேர்ந்து, முழு சாரிங்க கூட்டத்திலருந்து, அதாங்க டீச்சர் மேடங்க, வரும் கை தட்டல் பாருங்க, நண்பிகள் கூட்டம் ஏராளம், ஏராளம்!

இப்படி போயிட்டருந்தப்பதான் திடீர்ன்னு அவனுக்கு ஒரு ஆசை வந்தது, அதாவது அந்த வயசுலே உண்டாகிற காதல் மயக்கம் தான். அவனுக்கு தெரிஞ்ச ஒரு உறவுக்காரப் பொண்ணு நிர்மலா காலேஜ்ல படிச்சிகிட்டு இருந்துச்சு. அதெ எப்படியும் பாத்து பேசிடனும் அவனுக்கு ஒரு ஆசை. நமக்கு தான் அத்தனை காலேஜ்லேயும் நண்பர்கள், நண்பிகள் உண்டாச்சே, ஆனா அவனுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம், அதனாலே என்னை நாடினான். நீ எப்படியாவது கனெக்ஷன் கொடுத்துடு, அப்புறம் நான் பாத்துக்கிறேன்னான். சரி சும்மா தொந்திரவு பண்னிகிட்டுருக்கானே, போலாம் ஒரு நாளைக்கின்னேன். இப்படியே ஒரு ரெண்டு மாசம் போயிடுச்சு. நான் அதிகமா பூ சா கோ மகளிர் கல்லூரிக்குத்தான் போட்டிக்குன்னு போய்ருந்தேன். நிர்மலா காலேஜ்க்கு போட்டிக்குன்னு போனதில்லை. அது ஒரு சாமி காலேஜ். கோயம்புத்தூர்ல கலகல்ப்பா இருந்த பெண்கல் கல்லூரி PSG பெண்கள் கல்லூரி அப்புறம் home science காலேஜ். ஆனா அந்த கல்லூரியிலருந்து வந்து கலந்துக்கிட்ட ரெண்டு பெண்களை தெரியும். ஆனா அவ்வளவு பழக்கம் இல்லை. சரி போய் பாத்துடுவோமுன்னு காலேஜ் போயி பாத்தோம். கடைசியிலா அதுங்க என்னை அடையாளம் கண்டுகிட்டதனால, விஷயத்தை மெல்ல சொன்னோம். இவன் உறவுக்கார பொண்ணு படிக்குது உங்க காலேஜ்லே, பாத்து பேசணும்னு ஆசைபடறான்னேன். அதுங்களும் சரி நாங்க கூப்பிட்டு வரோம்னு போச்சுங்க. கடைசியில ஒல்லியா ஒரு பொண்ணை கூப்பிட்டு வந்ததுங்க. அப்புறம் நான் அவங்க ரெண்டு பேரையும் பேச சொல்லிட்டு அந்த பக்கம் நகர்ந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா அந்த பொண்ணு ஓன்னு அழுதுக்கிட்டு நின்னுது. என்னடா என்ன பண்ணுனே கேட்டப்ப, நான் ஒன்னும் பண்ணல்ல, நான் தூரத்து உறவு முறை, ஒரு தடவை ஒரு விஷேசத்தில பாத்திருக்கேன்னு தான் சொன்னேன் அதுக்கு இந்த அழுவை அழுகுதுன்னான். அதுக்குள்ள அந்த பொண்ணுங்க வந்து என்னாச்சு எதாச்சின்னு பதறி போயி, நீங்க போயிடுங்கன்னு சொன்னோன்ன தப்பிச்சோம் பொழச்சோமுன்னு ஓடி வந்துட்டோம். அப்புறம் இவன் வீட்ல எல்லாம் தெரிஞ்சு போச்சு. கடைசியில என்னான்னு பாத்தா, ஏதோ அவங்க ஊர்ல அவங்களுக்கு பகையாம், அதனால யாரு வந்து சொந்தம் கொண்டாடினாலும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கூட்டம் போட்டுட்டு இல்லான உனக்கு ஏதாவது ஆபத்து வரும்னு சொல்லி வச்சிருந்திருக்காங்க, அதுக்குத்தான் அந்த ஒப்பாரியான். நல்ல கூத்துடா, உனக்கு உதவப்போயி நான் மாட்டப்பாத்தேன்னு, அவனோட கடைசியல் சண்டை. ஆனா கடைசியில சரியானக் கூத்து ஒன்னு நடந்துச்சு தெரியும்ங்களா, என்னான்னா, கடைசியில அந்த பொண்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டான் நம்ம ஜெயராமு. படிச்சி முடிச்சு, இப்ப அவனும் பி டபிள்யூல தான் வொர்க் பண்றான். ஆனா கிரிக்கெட்ல அவனிடம் இருந்த அந்த அசாத்திய திறமை, இன்னொரு துறையில பெரிய ஆளா வரனும்ங்கிற்தெல்லாம் ஒரு கனவாவே போயிடுச்சு போங்க கடைசியில!

நான் சொல்ல வந்ததை இன்னும் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை, எல்லாருக்கிட்டேயும் ஒரு திறமை இருக்குன்னு சொன்னேன்ல்ல, அது என்னுடய உதாரணத்தில எப்படின்னு அடுத்த பதிவில பார்க்கலாமா?

Wednesday, November 16, 2005

துளசியும் பின்னே நானும்!

துளசியை நினைச்சா எப்பொழுதும் மனசு அப்படியே ஆர்பரிக்கும், பாந்தமா சொல்லுற அந்த வார்த்தைகள்ல மனசே தேன்ல கரைஞ்ச மாதிரி ஆயிடும். அதுமட்டுமல்ல எப்ப வந்து ஜாலியா ரெண்டு பேரும் கடை திறக்க போவோமுன்னு மனசு காலையில எழுந்திருச்சதிலிருந்து அல்லாடும். இப்ப யாரப்பத்தி சொல்லிகிட்டிருக்கேனா, எங்க அத்தை மகன் துளசி ராமனை பத்தி தான்.

இந்த துளசி என்னவிட இரண்டு வயசு மூத்தவன். எங்க ஞாயினாவுக்கு கூட பொறந்ததுங்க அஞ்சு அக்கா தங்கச்சிங்க. அதுல மூத்த அக்காவோட மகன் தான் இந்த துளசி. எங்க அம்மாவுக்கு எப்பவும் இந்த அக்கா தங்கச்சிங்களோட ஒரு மோதல், என்னா நாத்தி கத்தி சண்டை தான்.. (அது என்னமோ தெரில, என் வாழ்க்கையில பொறந்த வீட்டிலயும் பாத்திட்டேன், எனக்குன்னு புகுந்த வீட்லயும் பாத்திட்டேன், எப்பவும் மாறாது போல!). அதுல இந்த பெரிய அத்தை கொஞ்சம் பதுவிசா போறவங்க, அதனால இவங்க மட்டும் எங்க வீட்டுக்கு ஜாஸ்தி வ்ந்து போறது பழக்கம். அதனால துளசியும் அவனோட அக்கா ராணியும் நம்மகிட்ட கொஞ்சம் ஒட்டுதல். அதுக்காக எங்க மத்த அத்தைங்க வீட்டுக்கு போமாட்டேன்னு இல்லை, ஆனா அதிகம் போக்குவரத்து கிடையாது. ஒரு தடவை, எங்க ரெண்டாவது அத்தை, நான் சின்ன புள்ளையா இருக்கறப்ப, கெஞ்சி 'குமாரை துளசி வீட்டுக்கு மட்டும் அனுப்பி வைக்கிறீங்க, எங்க வீட்டுக்கும் அனுப்பி வைங்கன்னு சொல்லி', அவங்க வீட்ல ஒரு வாரம் இருந்துட்டு வந்தேன். அப்பதான் அவங்க மகன் ஸ்ரீதரை, சூடு கம்பில சுட்டுட்டு வந்ததில இருந்து, நீ வரவே வேணாம் எங்க வீட்டுக்குன்னுட்டாங்க. பின்னே, சும்மா இல்லாம, பக்கத்தில இருந்த ஸ்டவுல கம்பி குச்சியை காச்சி, அய் சிவப்பா, அழகா இருக்கே, இதை யாருக்குவது இழுத்தா எப்படி இருக்கும்னு டெஸ்ட் பண்ண அங்கன பக்கத்தில உட்கார்ந்த ஸ்ரீதர் மேல இழுத்தா, சும்மாவா உடுவாங்க! (இந்த நெருப்பு சமாச்சாரத்தில நமக்கு அதீத ஆர்வம், சும்மா இருக்க மாட்டேன், எதையாவது கொளுத்தி போட்டு, ஏதாவது சேட்டை பண்ணிகிட்ட இருப்பேன், வேணும்னா, சேட்டையும் வாழுத்தனமும் என் மூலதனம் பதிவை படிச்சு பாருங்க)

துளசிக்கு படிப்பு அவ்வளவா ஏறல. எங்க மாமா வேறே அவன் சின்ன புள்ளையா இருந்தப்பவே இறந்து போயிட்டாரு, அதனால பாவம் எங்க அத்தை தான் கஷ்டபட்டு பசங்க ரெண்டு பேரையும் வளர்த்தாங்க. (துளசிக்கு ஒரு அண்ணன் இருந்துச்சு, கொஞ்சம் வெகுளி, நல்லா வளர்ந்த வாலிபன், பாவம், சூது வாது ஒன்னும் தெரியாது, கிளி ஜோஸ்யம் பாத்து திரிங்சுக்கிட்டு இருந்ததுன்னு எங்க அம்மா சொல்லிருக்காங்க, என்னா ஆனிச்சுன்னு தெரியல அது நான் ரொம்ப சின்னவனா இருக்கிறப்பவே காணம போயிடுச்சு, எங்க தேடியும் இன்னய வரைக்கும் கிடைக்கல எனக்கு தெரிஞ்சு) துளசி பள்ளிகூடம் போகலைன்னு, வேலை வெட்டி கத்துகிட்டுமுனு எங்க கடைக்கு துளசியை அனுப்பி வச்சாங்க எங்க அத்தை. அவனும் நானும் ஒரு வயசு பையங்ககிறதுனால ஒருத்தருக்கொருத்தரு அன்பா பாசமா இருப்போம். அவன் கொஞ்சம் வயசுல பெரியவனங்கிறதுனால எங்கிட்ட கரிசனையா நடந்துக்குவான்.

காலையில கடை திறந்து வைக்க நாங்க ரெண்டு பேரும் தான் கிளம்பி வருவோம். வரவழியிலே வெளிகண்ட நாதர் கோவில்ல பூஜையை முடிச்சிட்டு பொங்கல் கொடுப்பாங்க, அதை வாங்கி திங்கறதுக்காக சீக்கரமே கிளம்பி வ்ந்துடுவோம். அவன் எங்க வீட்டிலருந்து தள்ளி சங்கிலியாண்டபுரம் தாண்டி குட்ஸெட் பக்கத்தில தங்கி இருந்தான். கடையில எல்லா வேலையையும் கத்துகிட்டான். பெரிய பெரிய மாலைங்க கட்டறதுலருந்து, சந்தனம் வாங்கியாரது, பூ ஏலம் கேட்டு கொள்முதல் செஞ்சுட்டு வர வரைக்கும் எல்லாத்தையும் கத்துக்கிட்டான். நான் காலையில அவன் கூட போயி கடை திறக்கிற வரை தான். அப்புறம் ஸ்கூலுக்கு போகனும்னு வந்துடுவேன். சனி ஞாயித்து கிழமைங்கள்ல முழு நேரம் அவன் கூட கடையிலவே இருப்பேன். அவன்கூட சேர்ந்து வேலையும் செய்வேன். அவன் எல்லா வேலைகளையும் கத்துகிட்டதால எங்க ஞாயினா அவனை நம்பி கல்யாணத்துக்கு ஜோடனைகள் செய்யறதை எல்லாம் விட்டுடுவாரு. அவனே கல்யாண மண்டபத்துக்கெல்லாம் போயி மணவறைகள் ஜோடிக்கிறது, அப்புறம் இந்த முதலிரவு கட்டில் ஜோடனை செய்யறதுன்னு போயி செஞ்சுட்டு வந்துடுவான், சமயத்தில நானும் அவன் கூட போயி வேலை செய்வேன்.

அப்பத்தான், ஒரு சேட்டுங்க வீட்டு கல்யாணத்துக்கு பூ அலங்காரம் செய்ய போய்ருந்தோம். அவங்க கல்யாணம் சாய்ந்தரம் நடக்கும். அதுக்கு கல்யாண மேடை அல்ங்காரம் செஞ்சுட்டு, ராத்திரி வரப்போற முதல் ராத்திரிக்கும் பூ அலங்காரம் செய்யனும். அந்த கல்யாணம் ஒட்டல் காஞ்சனால நடந்தது. அங்கேயே ரூம் போட்டு முதலிரவும் அங்கேயே வச்சிருந்தாங்க. காலையில போயி கல்யாண அல்ங்காரம் பண்ணிட்டு, அங்கேயே தங்கிட்டோம், கல்யாணத்தையும் பாத்திட்டு, நல்லா விருந்தும் சாப்பிட்டுட்டு ராத்திரி வரப்போற முதல் இரவுக்கும் அலங்காரம் செய்யப்போனோம். துளசியும் மத்த கடை ஆளுங்களும் மும்மரமா அலங்கார வேலையில இருந்தாங்க. நமக்கு அசதி, கல்யாண சாப்பாடு வேறே அந்த முதலிரவுக்கு அலங்காரம் செஞ்ச ரூம்லேயே தூங்கி போய்ட்டேன். நான் அப்படி ஒரு ஓரமா தூங்கிட்டும், போறப்ப எழுப்பி கூப்ட்டுட்டு போவாமோனு அவங்க வேலையில மும்மரமாயிட்டாங்க. கடைசியிலே கபோதிங்க, அலங்க்காரத்தை முடிச்சிட்டு என்னை அந்த ரூம்லேயே விட்டுட்டு போய்ட்டான்ங்க. நானும் நல்லா தூங்கி, திடீர்னு பாத்தா, மாப்பிள்ளை உள்ள வ்ந்து உட்கார்ந்துகிட்டு பொண்ணுக்குகாக வெயிட் பண்ணிகிட்டு இருந்தார். அய்யயோ, சாமி தப்பிச்சோம் பொழச்சோமுன்னு துண்டை காணோம், துணியை காணோமுன்னு எழுந்திருச்சி ஓடி வ்ந்துட்டேன். இதுவே இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு எந்திரிச்சுருந்தா என்ன ஆகிருக்கும்னு யோசிச்சு பாருங்க, சிவ பூஜையில கரடி பூந்த மாதிரி, இலவச கண்காட்சி பாத்திருந்திருப்பேன், அப்புறம் சரியான தர்ம அடி வாங்கிருப்பேன் போங்க! இது ஒரு தமாஷான சம்பவம், இப்ப நினைச்சாலும் ஒரே ஜாலியா இருக்கு போங்க!

அப்புறம் ஞாயித்து கிழமையில சினிமாவுக்கு ரெண்டு பேரும் ஒன்னா போவோம். அந்த காலத்தில நாங்க நிறைய ஜெயசித்ரா படங்களா பாப்போம், சொல்லத்தான் நினைக்கிறேன், கல்யாணமாம் கல்யாணம், தேன்கிண்ணம் அப்புறம் சிவகுமாரோட நடிச்ச படங்கள் ஏகபட்டது, ஞாபகத்துக்கு ஒன்னும் வரமாட்டங்கிது.சில சமயம், துளசிக்கு நம்ம டேஸ்டு ஒத்து வரதில்லை, அவன் ஏதாவது வேற படம் போகனும்பான், நான் வேற படம் போகுணும்பேன். பிறகு நாங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து கொட்டகைக்கு போய்டுவோம். அப்படி தான் ஒரு கூத்து நடந்ததுன்னு வச்சுக்கங்க. அப்ப மறுபிறவி, அரங்கேற்றம் னு ரெண்டு படம் புதுசா ரிலீஸ் ஆயி இருந்துச்சு. அந்த மறுபிறவி படத்தில முத்துராமன்,மஞ்சுளா நடிச்சிருந்தாங்க. அதுக்கு பெரிசா 'A' எல்லாம் போட்டு போஸ்டர் ஒட்டி இருந்தாங்க. அந்த சின்ன வயசுல A,B ல்லாம் யாருக்கு என்ன எழவு தெரியும். ஆனா துளசிக்கு யாரோ சொல்லிட்டாங்க அது ஒரு மாதிரி படம் வயசுல பெரியவங்க பார்க்க கூடியது, சின்ன பசங்களெல்லாம் பாக்க கூடாதுன்னு. ஆனா அப்ப அவனுக்கு ஒரு 15 வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அவன் எங்கிட்ட வந்து, 'குமார் நீ சின்ன பையன், இந்த படம்லாம் பாக்க கூடாது, அதுனால பக்கத்தில இருக்கிற தியோட்டர்ல ஓடுற அரங்கேற்றம் படம் போயி பாருன்னு' சரி இவனும் இப்படி சொல்றானேன்னு, நான் அரங்கேற்றம் படம் பார்க்க டிக்கெட் எடுத்தாச்சு(அப்ப கொஞ்சம் ஆளு நான் வாட்ட சாட்டமா இருப்பேன்) படமும் பாத்தாச்சு, ஆனா பாத்துக்கங்க அதுவும் கடைசியில 'A' படம். அப்ப என்னமோ அரங்கேற்றம் பட போஸ்டர்ல 'A' எல்லாம் பெரிசா போடல.பாத்தீங்கன்னா, அரங்கேற்றத்தில பிரமீளாவோட காட்சிகள், மஞ்சுளா நடிச்ச மறுபிறவி காட்சியை விட தூக்கலா இருந்துச்சு போங்க! அது தான் அங்க விஷேசம். இப்படி தமாஷா என் துளசியோட கழிஞ்ச நாட்கள் எத்தனையோ!

Monday, November 14, 2005

இது ஒரு பொன்காலைப் பொழுது

ஒரு நாள் போறதை எடுத்துக்கிட்ட இளங்காலை, காலை, நடுப்பகல், மதியம், சாயுங்காலம், இரவு, நடுநிசி இப்படின்னு கூறு போட்டு பாத்துடலாம். வருஷங்களுக்கு பருவம் இருக்கிற மாதிரி இந்த நாட்களுக்கும் பருவம் இருக்கு. அதில எனக்கு சின்ன வயசில மிகவும் பிடிச்ச பருவம், இந்த இளங்காலை பொழுது. நிறைய இனிக்கும் அனுபவங்கள், அதை தான் உங்களோட பகிர்ந்த்துக்கிறதுக்காக இந்த பதிவு.

முதல்ல சொல்னும்னா நான் காலையில லவுடு ஸ்பீக்கர்ல கேக்கற அந்த சாமி பாட்டுங்க பாடும் அந்த காலை பொழுது தான் ஞாபகம் வருது, அதுவும் மார்கழி மாசமுன்னா, சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு போறவங்களை எழுப்பிவுடறதுக்கு பக்கத்தில இருக்கிற கோவில்ல பாட்டை போட்டிடுவாங்க. ஜேசுதாஸ், எல் ஆர் ஈஸ்வரி பாடின சாமி பாட்டுங்க அமிர்தம். நான் எஸ் எஸ் எல் சி படிக்கும் பொழுது, காலையில சீக்கிரமா 4 மணிக்கெல்லாம் எந்திரிச்சுடுவேன். எங்க வீட்டுக்குள்ள இருக்கிற வெளி முற்றத்தில பல்லு விளக்கிக்கிட்டே அத கொஞ்ச நேரம் கேட்டுட்டுத்தான் படிக்கவே ஆரம்பிக்கிறது. காலையில எந்திரிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான், ஆனாலும், எந்திரிச்சு கேட்கிறப்ப அந்த சாமி பாட்டுங்கள்ள இருக்கிற அமுதான இசை ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும் பாருங்க அதுல ஒரு உத்வேகம் வந்து படிப்பு பொங்கிடும். இது ஒரு ஆனந்த பொன்காலைப் பொழுது

அப்புறம் ரொம்ப சின்னவனா இருந்தப்ப, பெரும்பாலும் நான் எங்க பெரியப்ப வீட்ல தான் காலம் கழிப்பேன். அதுவும் நிறைய நாட்கள் அங்கேயே ராத்திரி தங்கி தூங்கியும் போயிடறதுண்டு. என்ன எங்க வீடும் எங்க பெரியம்மா வீடும் அடுத்த அடுத்த சந்துதான். எங்க தாத்தவுக்கு ஒம்போது பொட்டை புள்ளங்க, அதல எங்க அம்மாவும், அவுங்க ரெண்டாவது அக்காவும் ரொம்ப ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா கண்ணாலம் கட்டணதுலருந்து பக்கத்து பக்கத்துல இருந்துக்கிட்டாங்க. நான் எங்க வீட்டுக்கு ஒரே பிள்ளை அப்போ இருந்தாலும் பெரியம்மா வீட்ல தான் ஜாகை. ராத்திரில மொட்டை மாடில எங்க பெரிம்மா வீட்ல் அண்ணன், அக்காங்களோட படுத்து தூங்குவோம். நிழல்கள்ல வர்ற ராஜசேகர் மாதிரி ராத்திரி மொட்டை மாடில படுத்துகிட்டு நட்சத்திரம் எண்ணுறதுல நிறைய இரவுகள் கழிஞ்சிருக்கு. அது மாதிரி விடிஞ்சும் விடியாம இருக்கிற அந்த இளங்காலை பொழுதிலே போர்வையை இழுத்து போத்திட்டு படுக்கிறதுல இருக்கிற சுகம் வேற எதுலையும் இல்ல போங்க. அதுவும் பக்கத்தில ஒரு பெரிய அரச மரம். அதுல வர அந்த இளங்காலை காத்து இருக்கு பாருங்க, சொர்க்கம். சமயத்தில ஒங்காரம சத்தம் போட்டுகிட்டு கொய்ங் கொய்ங்ன்னு அடிக்கிற அந்த ஆடி மாசக் காத்து, இப்ப ஏசி ரூம்ல படுத்து தூங்கினாலும் அந்த சுகம் நிச்சயம் இல்லை. காலங்காத்தால எங்க பெரியப்பா, என்னை எழுப்பி விட்டு பக்கத்தில இருக்கிற பவானி ஹோட்டல்ல காபி வாங்கிட்டு வர சொல்லு வாரு. நான் தான் இருக்கிறதுலேயே எல்லாரையும் விட சின்னவன் அதனால கரிசனமா எங்கிட்ட காசை கொடுத்து காப்பி வாங்கி வர சொல்லு வாரு. அதுக்குன்னு கிளி மூக்கு வச்ச கூஜா இருக்கும், அதை எடுத்துகிட்டு அந்த பவானி ஹோட்டல் போயி காபி வாங்க போவேன். கல்லால காசை கொடுத்துட்டு டோக்கன் வாங்கிட்டு, உள்ளே அந்த பக்கம் ஒரு மாடக்குழி மாதிரி இருக்கிற இடத்தில காப்பி போடறவருக்கிட்ட டோக்கன் கொடுத்து காப்பி வாங்கிட்டு வருவேன். ஆஹா என்ன ஒரு வாசனை, ஐயர் ஓட்டல் காபி, பில்டர் காபி என்ன ஒரு அரோமா! அதே அங்கேயே கிளி மூக்கு வாயிலருந்து நம்ம வாயில கொஞ்சம் ஊத்திக்குவேன். பெரும்பாலும் சாமர்த்தியமா சூடு தெரியாமா வாயில ஊத்திக்குவேன். சமயத்தில நாக்கு பொத்து போறதும் உண்டு. அப்புறம் பவ்வியமா காபியை கொண்டு எங்க பெரியப்பாவுக்கு கொடுப்பேன். அவரும் குடிச்சுட்டு, பாவம் சின்ன புள்ளயாச்சேன்னு எனக்கும் கொஞ்சம் ஊத்திக் கொடுப்பார். இப்படி போன காலை பொழுதுகள் ரொம்ப.

பிறகு இந்த என் சி சி க்காக எழுந்து போற காலைகள் ரொம்ப பிடிக்கும். காலையில எழுந்திருச்சி பள பளன்னு பெல்ட் பக்கள்ஸ் அப்புறம் ஷு எல்லாம் பாலீஸ் போட்டுகிட்டு, யூனிஃபார்ம் எல்லாம் கஞ்சி போட்டு இஸ்திரி போட்டு அழகா போட்டுட்டு போற ஜோறு இருக்கே இந்த சேரன்லாம் எந்த மூலை நம்ம கிட்ட. ஆனா என்ன ஒன்னு, சேரனுக்கு கிடச்ச கோபிகா சேச்சி மாதிரி ஆளு ஒன்னும் தேரலை. அதுவும் அந்த காலை பொழுதுல அவசரமா அவசரமா கிளம்பி போறதை பாக்கணுமே, இல்லேனா, லேட்டா போயி யாரு பத்து ரவுண்டு அடிக்கிறது. எங்க அம்மா தான் ஆத்து ஆத்து போவாங்க, பாவம் புள்ள ஒன்னும் காபி தண்ணி குடிக்காமா இப்படி அரக்க பறக்க ஓடுதேன்னு. ஐயாவுக்கு தான் என் சி சி ல கொடுக்கிற பிரேக்பாஸ்ட் இருக்கே. சமயத்தில நல்லா இட்லி, வடை, ஜிலேபின்னு விருந்தே இருக்கும். அத்தனை காலயிலேயும் அவசரமா சைக்கிளை மிதிச்சுகிட்டு போறதும் அந்த சில்லுங்கிற் காத்தும் அது ஒரு ஆனந்தம். சைக்கிள்ல போறப்ப கோலம் போடுறதுங்களை ஜொல்லு விட்டுக்கிட்டே அந்த என் சி சி போற காலை ரொம்ப பிடிச்சமானது. அதுவும் அந்த ஐயர் அக்ரஹாரம் தாண்டறப்ப மனசு நம்ம கிட்ட இருந்ததுல்லை.

இன்னெரு முக்கியமான காலையை சொல்ல மறந்தாச்சு. அதாங்க ரெண்டுகிட்டான் வயசுல ஜொல்லு வுட்டுகிட்டு திரிஞ்சது. அது ஒரு மாதிரி விடலை பருவம். எங்க வீட்ல இன்னொரு முக்கியமான பிடிக்காத விஷயம், இந்த காலையில தண்ணி எடுத்து ஊத்துறது தான். அப்ப எங்க வீட்ல ஒரு பெரிய தண்ணி தொட்டி இருந்தது. ஒரு 50 குடம் தண்ணி பிடிக்கும். காலயில தெருவுக்கு வெளியில இருக்கிற குழாயில தண்ணிபிடிச்சு ஊத்துறது நம்ம வேலைங்க. கஷ்டமான வேலை. அதுவும் வீட்ல எல்லாரும் தூங்கிறப்ப நம்ம காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எந்திருச்சி தண்ணி ஊத்தணும். முதல்ல கடுப்பாதான் எடுத்து ஊத்திக்கிட்டு இருந்தேன். அப்பதான் பக்கத்துட்டு வீட்ல இருந்த கமலிங்கற பொண்ணு நம்மோலட சேர்ந்து தண்ணி எடுத்து ஊத்தும். கொஞ்ச நேரம் அவுங்க அம்மாவும் அதுவும் சேர்ந்து ஊத்துவாங்க. அப்புறம் அதை மட்டும் தனியா விட்டுட்டு எடுத்த ஊத்த சொல்லூவாங்க. நானும் தனியாதான் தண்ணி எடுத்து ஊத்துவேன். அப்ப பெரும்பாலும் அந்த விடியங்காத்தால நாங்க ரெண்டு பேரும் தான் தண்ணி எடுப்போம். அப்பதான் நம்ம முதல் முதல்ல கடலை போட ஆரம்பிச்சது. காதல் கத்திரிக்காய்ன்னு ஒரு மண்ணும் அறியாத வயசு. சும்மா ஒரு கவர்ச்சி அந்த பொண்ணோட பேசறது. அதுக்காக அந்த காலப்பொழுதுல எழுந்திறக்கிறது ஒரு திரில். ஏன்னா குழாயடிக்கு போலாமே, அந்த பொண்ணோட டாவு வுடலாமேன்னு. என்ன பேசுவோம், ஏது போசுவோன்னும் ஒன்னும் தெரியாது. ஆனா மணிகணக்கா பேசிக்கிட்டே அது ஒரு குடம் நான் ஒரு குடம்னு தண்ணி பிடிச்சுகிட்டே கடலை போடுவோம். ஆனா இந்த பொண்ணுங்கெல்லாம் கொஞ்சம் விவரமானதுங்க. என்னாதான் அதுங்களுக்கு கவர்ச்சியோட பசங்களோட பேசி காலம் கடத்துனாலும், கடைசில அம்மா அப்பா சொல்ற ஆளுங்களை ஒழுங்கா கண்ணாலம் கட்டிக்கிட்டு காணாம போயிடுவாங்க. அது மாதிரி தான் நம்ம கமலியும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிகிட்டு காணாம போயிடுச்சு. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு தான் நமக்கே தெரிய வந்தது. அப்ப நம்மலும் சும்மா அந்த பொண்ணோட பேசறது ஒரு திரில்லுங்கறதோட நிறுத்திக்கிட்டோம். அடுத்த படி எடுத்து வைக்கில்லை. இப்படி சுகமா கழிஞ்ச காலை பொழுதுகளும் நிறைய உண்டு.

இப்படி நிறைய காலை பொழுதுகள் உண்டு. காலயில பூக்கள் கொள்முதல் செய்ய ஸ்ரீரங்கம் போகின்ற காலை பொழுதுகள், சைக்கிள்ல போகும் போது கொஞ்ச நேரம் அம்மா மண்டபத்தில உட்கார்ந்து போற காலைகள், ஒவ்வொரு சுதந்திர தினத்திலயும் காலங்காத்தால எழுந்து பெரிய பரேட் கிரவுண்டுக்கு ஒரு நாலு மைலு நடந்து போயி கொடியேத்தி இனிப்பு சாப்பிட்ட காலைகள், சமயபுரம், வயலூர் கோவிலுக்கு புறபட்டு போகும் அந்த இனிய காலை பொழுதுகள், நல்ல வயசு பருவத்தில தேகப்பயீற்சிக்காக செங்குளம் காலனிக்கு பேரலல் பார் போகும் காலை பொழுதுகள், இப்படின்னு எவ்வளவோ காலை பொழுது அத்தனையும் ஒரு பொன்காலை பொழுது தான் இப்ப நினைச்சு பாக்கும் போது!

Wednesday, November 09, 2005

வா...ராஜா..வா..

வாரத்தில மத்த நாளு எப்படியோ தெரியாது, ஆனா இந்த ஞாயித்துக் கிழமை வந்தாலே ஒரு ஆனந்தம் தான். ஏன்னா கடைக்குப் போலாம் விரும்பனதை சாப்பிடலாம், சாய்ந்திரமானா கடையை கட்டிட்டு சினிமா போகலாம். ஆரம்பத்தில சாயந்திரம் 4 மணிக்கே நானும் கடையில வேலை செய்யற பையனும் போயி க்யூல போயி நின்னுடுவோம். நாங்க டிக்கெட்டு எடுத்து ரெடியா இருக்க எங்க ஞாயினா மெதுவா கடையை அடச்சிட்டு வந்து சேர சரியா இருக்கும். பெரும்பாலும் எம்ஜிஆர் படம் போகத்தான் பிடிக்கும். பெற்றால் தான் பிள்ளையா, எங்க வீட்டு பிள்ளை, ரகசிய போலீஸ் 115, ஒளி விளக்கு, குடியிருந்த கோயில், சங்கே முழங்கு, அப்படின்னு அந்த காலக்கட்டங்கள்ல பர்த்த படங்கள் இன்னும் மனசுல பசுமையா இருக்கு. இந்த எம்ஜிஆர் படங்களை புதுசா ரிலீஸாயி 100 நாட்கள் வரை ஒடும் பருவத்துக்குள்ள பாத்து முடிச்சிடுவேன் ஆன சிவாஜி படங்கள் அப்படி இல்ல, அது இரண்டாம் முறையா கொட்டகைக்கு வந்து போறப்பத்தான் பார்ப்பேன் பெரும்பாலும். இது என்னுடய பத்து வயசு பருவம் வரை தான். அதுக்கப்பறம் வளர்ந்து பெரியவனானே கதையே வேறே.

அப்ப திருச்சியில ஜீபிடர், பேலஸ் தியேட்டர்ல எம்ஜிஆர் படம் ஓடுனாதான் அந்த படத்துக்கே பெருமை. அது மாதிரி சிவாஜி படம் பிராபாத் தியேட்டர்ல ஓடுனாதான் அதுக்கு பெருமை. இது மாதிரி தமிழ் நாடு பூரா அந்த அந்த ஊர்ல ஒரு சில குறிப்பிட்ட தியோட்டர்ல ஓடுனா தான் அந்த எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு பெருமை, உதாரணமா, தஞ்சாவூர்லயும், சென்னையிலயும் சாந்தி தியோட்டர். அப்படி ஓடாட்டி, அந்த காலத்தில எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்களுக்கு இது ஒரு மானப்பிரச்சினை மாதிரி. என்னடா தலைவரு படத்தை சொத்த தியோட்டர்ல போட்டுட்டாங்கன்னு. அதுவும் அந்த மரக்கடை ராமகிருஷ்ணா தியோட்டர் இருக்கே, அதுல போட்டா யாருக்கும் (எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்களுக்கு)பிடிக்காது. ஏன்னா அதுல ரெண்டு பெரிய தூணூ இருக்கும். அப்பிடியும் சங்கே முழங்கு அங்கத்தான் 100 நாள் ஓடிச்சு. அப்புறம் அப்ப ராஜா தியோட்டர் தான் உள்ளதுலேயே பெரிய தியேட்டர். அந்த காலத்திலேயே மல்டிபிலக்ஸ் மாதிரி பெரியக்கடை வீதியில ராக்ஸி வெலிங்கடன் தியேட்டர்ங்க. ஒன்னுல்ல டிக்கட் கிடைக்கலனா இன்னொன்னுல போயி படம் பார்க்கிறது உறுதி. என்னா ஒரு தியோட்டர்ல படம் சொத்தையா இருக்கணும், அப்பத்தான் முடுயும். எல்லா தியோட்டர்லயும் போயி படம் பாத்திருக்கிறேன் இப்ப மாதிரி இல்ல, எந்த தியேட்டர்ல எந்த படம் வரணும்னு ஒரு நியதி இருந்தது. உறையூர்ல இருக்கிற அருணா, ஜங்ஷன்ல இருக்கிற பிளாசா, இங்க இங்கிலீஸ் படம் தான், அது மாதிரி மெயின்கார்ட்கேட்ல இருந்த கெயிட்டி தியோட்டர்ல ஹிந்தி படம்னு. இது மாதிரி சிட்டி சென்ட்ர்ல ஓடனப்ப பாக்காத படத்தை தென்னூர்ல பத்மாமணில ஓடறப்ப போயி பார்க்கலாம், அது மாதிரி முருகன் டாக்கீஸ், பாலாஜி எல்லாம். இப்ப நான் சொல்ற இந்த தியோட்டர்ங்கள்ளாம் இருக்கான்னு எனக்கு தெரியாது.

அப்ப மூணாவது படிச்சிகிட்டு இருந்திருப்பேன்னு நினக்கிறேன். ஏபி நாகராஜன் புராணப்படங்கள் எடுத்து வரிசையா வந்த நேரம். வா ராஜா வா ன்னு ஒரு படம் அதில மாஸ்டர் பிராபாகர்னு ஒரு பையன் நடிச்சிருந்தான். சும்மா துறு துறுன்னு ரொம்ப நல்லா ஆக்ட் பண்ணிருந்தான். அதெ பாத்துட்டுத் தான் நமக்கும் கொஞ்சம் நடிக்கிறதுல ஆர்வம் வந்திச்சு. (என்னோட நடிப்புத் திறமை, அதுல்ல இன்ஞ்சினிரியங் படிக்கிறப்ப கோலோச்சின கதை எல்லாம் இனி வரும் பதிவுகள்ள நீங்க பாக்கலாம்) அதே மாதிரி மாஸ்டர் சேகர் நடிச்ச குடியிருந்த கோயில், ராஜா படம் எல்லாம் நம்ம நடிப்பார்வத்தை மேலும் மேலும் தூண்டி விட்டுச்சு. அந்த நேரத்தில பள்ளிக்கூடத்தில ஏசுநாதர் நாடகம்லாம் போட்டப்ப ஏதோ ஒரு ரோலு கொடுத்தங்க. சத்தமா நல்லா பேசி நடிச்சேன். எங்க நாடக வாத்தியார் அமல்ராஜிம் நல்லா ஊக்கம் கொடுத்து நடிக்க வச்சார். அடுத்தடுத்த வந்த ஆண்டு விழா நாடகங்கள்ள பெரிய ரோல்லெல்லாம் பண்ணி சிவாஜி பாடின "யாருக்காக இது யாருக்காக" பாட்டெல்லாம் உணர்ச்சியோட பாடி கை தட்டல் வாங்கியாச்சு. பரிசும் வாங்கியாச்சு. வேறன்னா, நான் சினிமாவில நடிக்கத் தயார். மெட்ராஸ் கோடம்பாக்கம் புறப்பாட்டாச்சு, எப்படின்னு கேளுங்க.

எங்க கடைக்கு அண்ணாத்தே, அண்ணாத்தேன்ன்னு ஒருத்தர் அடிக்கடி வருவார். கம்பளீ, தார்ப்பாய்ன்னு கமிஷனுக்கு வியாபாரம் பண்றவரு. இவரு எங்க பெரியப்பாவுக்கு நெருங்கின நண்பர். கடைக்கு வந்து காபி டீ எல்லாம் சாப்பிட்டுட்டு போவார். இவருக்கு பூர்வீகம் மெட்ராஸ்க்கு பக்கத்தில தாம்பரம். சும்மானாலும் எனக்கு மெட்ராஸ்ல சினிமால அந்த டைரக்டர தெரியும், இவரை தெரியும்னு அளந்து உட்டுக்கிட்டு இருப்பார். நானும், எங்க ஞாயினாவும் சினிமா பைத்தியங்க. எங்க அம்மா கொஞ்சம் உஷாரான ஆளு, இந்த அண்ணாத்தையை பத்தி தெரியும், அதனால வீட்டு பக்கம் இவரை அண்ட உடமாட்டாங்க. இவரு கடைக்கு அடிக்கடி வந்து போவாரு. நம்ம நடிப்பு சமாச்சாரமல்லாம் இவருக்கும் தெரியும். இப்படி போயிட்டிருந்தப்ப தான், ஒரு கோடை விடுமுறையில, நான் உங்க பையனை மெட்ராஸ் கூட்டிட்டுப் போயி சினிமால சேர்த்துவுடறேன்னு, எங்க அம்மாவுக்கு தெரியாம என்னை தயார் பண்ணி (தயார்ன்னா, புது சட்டை துணி மணி எல்லாம் வாங்கி, நடிக்கப்போறோமே பளிச்சுன்னு போவேன்னா, அதான்) பணமெல்லாம் எங்க ஞாயினா கிட்ட இருந்து வாங்கிகிட்டு ஒரு நாள் ட்ரையின்ல ஏத்தி கூட்டிட்டு போயி தாம்பரத்துக்கு பக்கத்தில இருக்கிற தான் அண்ணன் வீட்ல விட்டுட்டு அவரு கம்பளி யாவாரம் பண்ண போயிட்டாரு.

நம்ம அவரு அண்ண வீட்டில ஒரு அக்கா, என்னவுட ரெண்டு வயசு மூத்த அவங்க தம்பி பாஸ்கர், அப்புறம் தங்கை, அவங்க அம்மா எல்லாம் இருந்தாங்க. நல்லா கவனிச்சிகிட்டாங்க. அப்பப்ப பக்கத்தில இருக்கிற டூரிங் டாக்கிஸ்க்கு கூட்டிக்கிட்டு போவாங்க. அதுவும் நைட் ஷோ, ரெண்டு படம் போடுவாங்க. ரெனடு நாளைக்கு ஒரு முறை கூட்டிட்டு போவாங்க. இப்படியே ஒரு 10 நாளு போச்சு. என்னடா சினிமாவில சேர்த்துவிடறென்னு கூட்டி வந்து இப்படி விட்டுட்டு போயிட்டாரேன்னு வருத்தம் எனக்கு. சரி பையன் சோர்வா இருக்கிறானே, அந்த பாஸ்கரு என்ன எலெக்ட்ரிக் டிரெயின்ல கூட்டிட்டு போயி மொளண்ட் ரோட் (அண்ணா சாலை) சுத்தி காமிச்சுட்டு, அப்ப குளோப் தியோட்டர்னு நினக்கிறேன் (அதான் பின்னாடி அலங்காரானது) அதில ஒளிவிளக்கு சினிமா காமிச்சுட்ட்டு கூட்டி வந்துடுச்சு. அது கொஞ்சம் ருசியான அனுபவம். இப்படி ஒரு வாரம் போச்சிது. அண்ணாத்தெ திரும்பி வந்தாரு. என்னை சினிமால சேர்த்துவுடறேன்னு கூட்டி வந்துட்டு அம்போன்னு விட்டுட்டு போயிட்டீங்களேன்னு அழுதேன். ஆச்சு, அடுத்த நாளு சூட்டிங்க் பாக்க ஸ்டியோவுக்கு கூட்டிட்டுப் போனாரு அண்ணாத்தெ.

முதல்ல பிரவேஷம் விஜய வாகினி ஸ்டியோ, அப்ப சொந்தம்னு ஒரு படம் சூட்டிங், கேஆர் விஜயா, முத்துராமன், சுருளிராஜன் நடிச்சாங்க, ஏசி திருலோகசந்தர் டைரக்டர். பார்க்க திரில்லா இருந்தது. அப்புறம் அதே ஸ்டியோவிலயா, இல்ல ஏவிம்லயான்னு தெரியல, ஜெயலலிதாவோட ஒரு பாட்டு ரெக்கார்டிங். அந்த படம் எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா பாட்டு வந்து "பரமசிவன் கழுத்துலிருந்து பாம்பு கேட்டது, கருடா சொளக்கியமா" ன்னு நினக்கிறேன். ஆஹா ஸ்டியோ பாத்தாச்சு, சூட்டிங், ரெக்கார்டிங் பாத்தாச்சு, வேறென்ன வேணும், இனி ஊரபாக்க கிளம்புன்னு அண்ணாத்தெ நம்மல தனியாளா திருச்சி போற ரயில்ல ஏத்தி அனுப்பிச்சிட்டார். நமக்கும் இந்த டுபாக்கூருக்கிட்ட இருந்த அவ்வளவு தான் வாழ்நாள் வேஷ்டா போயிடும்னு அப்பவே பரி தவிப்பு. ஏன்னா ஸ்கூல்லு திறந்து ஒரு வாரம் ஆகுது நாம இங்க வெட்டியா உட்கார்ந்துக்கிட்டு இருக்கோமேன்னு கவலை. ஆனா வீட்டுக்கு திரும்புனா இருக்கு பெரிய ருத்ர தாண்டவம் எங்க அம்மவோடதுங்கற கவலையும், என்னாடா சினிமா ஆசையில வந்து ஒன்னும் ஆகாம வெரும்பயலா திரும்புறோமேன்னு இன்னொரு ஆதங்கம் சேர்ந்து ரயில்ல திரும்பி வந்த பிராயாணம் இருக்கே, இப்ப நினச்சாலும் நடுங்குது போங்க!

வீட்டுக்கு வந்ததும் தரும அடி விழும்னு நினச்சேன், ஆனா பாருங்க புள்ள நம்மல விட்டுட்டு தனியா போயி ஒழுங்கா திரும்ப வந்து சேர்ந்துச்சேன்னு சந்தோஷத்தில எங்க அம்மா ஒன்னும் சொல்லிக்கல்ல, ஆனா போயிருந்த ஒரு மாசமும், பாவம் எங்க ஞாயினா தான் தினம் எங்க் அம்மா கிட்ட வாங்கி கட்டிகிக்கிட்டு இருந்தார். ஆக நம்ம சினிமா இப்படி வா.. ராஜா.. வா.. ன்னு கூப்ட கதை வேடிக்கையா இல்ல!

Sunday, November 06, 2005

மலர்களே நாதஸ்வரங்கள்

என்னடா இவண் இவ்வளவு கவித்துமா தலப்பு வச்சுட்டு என்ன எழுதிருக்கப்போறானு பார்க்கறீங்களா. அதாங்க பூக்களோட என்னுடய சிறு வயது அனுபவங்கள் இருக்கே அது ஒரு தனி கதை. கூடிய மட்டும் இந்த பதிவிலே சொல்ல முடிஞ்சதெல்லாம் சொல்லிடறேன், அந்த சின்ன வயசிலே எனது பூக்கடை அனுபவங்கள் இருக்கே, அது சுகமான ஒன்னு. முதல்ல சும்மா வேடிக்கை பார்த்துட்டு, விஷேசமா தீனி பண்டங்கள் வாங்கி தின்னத்தான் எங்க பூக்கடைக்குப் போவேன். திருச்சி காந்தி மார்க்கெட்ல மேற்கு வாசல் நுழைவுல உள்ள ஒரு 30-40 கடைங்கள்ல எங்க கடையும் ஒன்னு. காலையில கடையை திறந்து வச்சு, பிறகு மொத்த கொள்முதல் செய்யற இடத்திலருந்து பூக்களை வாங்கி வந்து அதை மாலை, கதம்பம், மற்ற பூக்கள் சரம் கட்டி விற்பனை பண்ணனும். எப்பவுமே புதுசா வாங்கி வர பூக்களோட வாழ்க்கை ஒரு நாள் தான். அன்னென்னக்கி வாங்கற சரக்கை அன்னென்னக்கெ வித்து தீத்துடனும். இல்லேனா அதை அடுத்த நாளு குப்பையில கொட்ட வேண்டியது தான். பழய பூமாலைகள் சில நேரம் அடுத்த நாள் மதியம் வரை வச்சுருந்து வித்திடாலாம், அதுக்கு மேல தங்குனா அவ்வளவுதான். அதனால தான் இதுக்கெல்லாம், பெரிசபுள் குட்ஸ்னு வருமான வரிக் கிடையாது, ஆனா ரொம்ப ரிஸ்க்கான தொழில்.

பூக்கள்னு எடுத்துக்கிட்டா, ஒவ்வொன்னுக்கும் ஒரு குணம், மணம் உண்டு. இதுங்கள்ள ராஜா ரோஜாதான். செடியிலருந்து கீழே இறங்கினாலும் இதை சுத்திற தேனீக்களோட கும்பல் குறைவதில்லை. சில சமயங்கள்ல தேன் பருக அது பூக்களோட முட்டி மோதறப்ப நம்மல கொட்டற்தும் உண்டு. இந்த ரோஜா மாலைகள் எப்பவுமே விலை அதிகம். அதே நிறம் கொண்ட அரளிப்பூ மாலைங்க விலை குறைவு. சமயத்தில அரளி மாலங்களை ரோஜா மாலன்னு விக்கிரதுண்டு. ஏன்னா நிறம் கண்டு ஏமாந்துடலாம். வெறும் ரோஜாக்களையே வச்சு மாலை சுத்திட முடியாது, அதனால அதோட கூட சேர்ர பூ சம்பங்கி, இதை லில்லிப்பூன்னும் சொல்லுவாங்க, அவ்வளவு மணம் கிடையாது, ஆனா மாலையில ரோஜாவுக்கு நிகரா நிக்கும். செவ்வந்தியும் மாலையோட சேரும், ஆனா இந்தப்பூ வருஷம் பூரா கிடைக்காது. அதனால கேந்திப்பூ வச்சு மாலையை சுத்திடுவாங்க. இந்தப்பூவைத்தான் செந்ததூரப்பூவேன்னு ஸ்ரீதேவி 16 வயதினிலேல்ல அழகு பாடுனிச்சு. ஆனா இதை எந்த அம்மன் கோயில்லயும் பூஜைக்கு ஏத்துக்கிறதில்லை. பிறகு வாடாமல்லி, இந்தப்பூ 20 நாளானுலும் காஞ்சு போகாது. அதானலதான் இந்தப்பேரே. இன்னொரு முக்கியமானப்பூ மல்லிகை. இது ஒரு கோடைக்கால மலர். குண்டுமல்லி, மதுரமல்லி அப்படின்னு நிறைய வகைகள் உண்டு. இதுக்கு மயங்காத பெண்கள் கிடையாது. கண்ணதாசன் "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ" ன்னு எழுதுனான், சும்மா எதுகை மோனையா பாட்டு இருக்குட்டும்னுட்டு, ஆனா உண்மையில மயங்குறது பெண்கள் தான், மல்லிகையை எடுத்து முடிக்காத கூந்தல் கூந்தலே இல்லை, அந்த அளவுக்கு இது பிரசித்தம். இதேட கூட ஒட்டிக்கிட்டுப்போற இன்னெருப்பூ கனகாம்பரம். வாசமில்லா மலரிது, ஆனா வச்சா வசந்தம் வந்துவிடும். இன்னொருப்பூ முல்லைப்பூ, அதே மாதிரி ஜாதிப்பூ இதுங்களோட வாசம் எட்டு மைல் தூரம் அடிக்கும்.(என்னதான் பூக்களோட சினேகமா இருந்திருந்தாலும், அதை பொண்ணுங்க தலையில வச்சு அப்புறம் வர கூந்தலுடன் சேர்ந்து வரும் வாசனையே தனி தான், இதை கோயம்புத்தூர்ல படிச்சப்ப இந்த பூ வாசனைக்காக, அவினாசியிலருந்து பாப்பநாயக்கன் பாளையம் வரை சும்மானாலும் பஸ்ல போயிட்டு வரதுண்டு ) மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ஜாதி இந்த எல்லா பூக்களுமே மிகவும் மென்மையானவை, ரொம்ப பதவிசா எடுத்து நாத்துல கட்டணும். இதுங்க கிட்ட ரொம்ப வீரம் காட்டக்கூடாது, இல்ல காம்பு ஒடிஞ்சிடும்.

இந்த பூக்கள் கூட்டத்தோட ரொம்ப நெருக்கமா ஒரு பத்து வருஷம் தொட்டு, தூக்கி படுக்க வச்சு அன்பா பழகி இருக்கேன். அப்புறம் வாசனை திரவியங்கள். சந்தனம், புனுகு, அத்தர், பன்னீர், அப்படின்னு. இதையெல்லாம் பல நூறு வருஷங்களுக்கு முன்னால ராஜாக்கள் மட்டுமில்லாம் பிரஜைகளும் உபயோகித்து, குளித்துக் கொண்டாடிருக்காங்க. ஆனா இப்ப சாமி சிலைங்களை குளிப்பாட்டத்தான் உபயோகபடுது. அந்தக்காலத்தில நல்ல சந்தனம் கிடைக்கிறது கஷ்டம். சந்தனங்கிறது வெறும் மரக்கட்டை சந்தனம் தான், அதை வாங்க் சந்துக்கடை பக்கம் போகவேண்டிருக்கும். அப்பெல்லாம் சந்தனக்கட்டைங்கள கடத்தி கொண்டு வந்து விக்கிறதுக்குன்னு ஒரு கும்பல் இருக்கும் (ஒரு வேளை அப்பவே வீரப்பன் கும்பல் ஆப்ரேட் பண்ணிக்கிட்டு இருந்ததோ என்னமோ). அதை கடையில வச்சிருக்கமாட்டோம். தனியா வேற இடத்தில வச்சிருப்போம். கடையிலேயே புனுகு பூனையும் வளப்போம். அதுக்கு தினம் குடல் கறி வாங்கி வந்து போட வேண்டி இருக்கும். பூனையிலருந்து புனுகு எடுக்கிறது ஒரு தனிக்கலை.

பூக்கடையில நல்லா வியாபரம் ஆகணும்னா, நாலு கல்யாணம் வரணும் இல்லைணா நாலு எழவு விழும்னு. அப்புறம் வியாபரமே ஆகாத சில தமிழ் மாதங்கள் உண்டு, ஆடி மாசம் முக்கியமா. அப்புறம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, ஜனவரி புது வருஷ பிறப்பு, அப்புறம் பொங்கல், இந்த நேரங்கள் தான் உட்கார்ந்து நிமிர நேரம் இருக்காது. ஆயுதபூஜை வியாபரம் முடிச்சிட்டு அடுத்த நாள் விடியக்காத்தால வீட்டுக்கு வரும் போது முனியாண்டியிலேயோ இல்ல ஆறுமுகம் ஹோட்டல்ல வாங்கி சாப்பிடற பிரியாணி ரொம்ப பிடிக்கும்.

நான் முதல்ல சொன்ன மாதிரி காலயிலே கடையை திறந்து வக்க 6 மணிக்கெல்லாம் போகணும். அப்புறம் பூக்களை சந்தையிலருந்து கொள்முதல் செஞ்சு கடையில கொண்டு வந்து போடனும். அதுக்குன்னு வாங்கி வர ஆளுங்க இருப்பாங்க. சில சமயம் நானும் போயி வாங்கி வர வேண்டி இருக்கும். இதை விட பூக்கள் மலிவா இருக்கும்னு சில நேரங்கள்ல ஸ்ரீரங்கம் போயி வாங்கி வருவேன். பிறகு 8 மணிக்கு வீட்டுக்குப் போயி குளிச்சு சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடம் போயிடுவேன். இப்படி போயிட்டுருந்தப்பத்தான் ஒரு சுவையான் சம்பவம் நடந்துச்சு.

அப்பெல்லாம் பண்டமாற்று முறைதான். வாரத்துக்கு இரண்டு நாளக்கு அதாவது செவ்வாய், மற்றும் வெள்ளி சில ஹோட்டல்ங்களுக்கு நாங்க பூ மாலைக்கொடுத்துடுவோம், அவங்க அப்பப்ப காபி, டிபன் அப்படின்னு எங்களுக்கு கொடுத்து கழிச்சிடுவாங்க. இதுக்கு ஹோட்டல் காரங்களே கணக்கு வச்சுருப்பாங்க. பொதுவா எங்க ஞாயினா சீட்டு எழுதி கொடுத்தனுப்புவாரு, "வரும் சின்ன பையன் வசம் இரண்டு தோசையும், ஒரு காப்பியும் கொடுத்து அனுப்பவும்" னு நானே சில நேரம் அப்படி வாங்கி வந்திருக்கிறேன். எங்க ஞாயினாவும் சாப்பிட்டுட்டு, எனக்கும் சாப்பிட கொடுப்பார். ஆனா ரெகுலாரா வாங்கி சாப்பிட மாட்டார், எப்பவாது இது மாதிரி வாங்கி சாப்பிடுவாரு. இப்படி போயிட்டுருந்தப்ப தான், நான் காலையில கடை திறக்க போகும் போது, எங்க கடையில ஷ்ரீப்புன்னு ஒருத்தர் வேலை பார்த்துட்டுருந்தார். என்னவிட ஒரு ஏழெட்டு வயசு கூட இருக்கும். சின்னவனாலும் நான் முதலாளியாச்சே. ஒரு சீட்டுல எங்க ஞாயினா எழுதி கொடுக்கிற மாதிரியே எழுதி அவென்கிட்ட கொடுத்து, தோசை, குஸ்கா குருமா எல்லாம் வாங்கி தினமும் சாப்பிட்டுகிட்டுருந்தேன். அவனும் எனக்கு தினம் வாங்கி கொடுத்துக்கிட்டுருந்தான். ஒரு நாளு எங்க ஞாயினாவே எழுதி கொடுத்தப்பனுச்சப்ப, அந்த ஹோட்டல்காரங்க சொல்லிட்டாங்க, ஏற்கனவே உங்க கணக்குல நீங்க கொடுத்த பூவுக்கு அதிகமாவே வங்கி சாப்பிட்டுட்டீங்க அதனால காசு கொடுத்த தான் மேற்கொண்டு தரமுடியும்னுட்டாங்க. என்னடா நம்ம எப்ப இவ்வளவு வாங்கி சாப்பிட்டோமுனு அலசி பாத்தப்பதான் நம்ம சாப்பிட்ட கதை அம்பலமாச்சு. அப்புறம் வீட்டுக்கு வந்து விழுந்தது பாருங்க பூசை. இப்ப நினைச்சாலும் தாமாஷா இருக்கும் போங்க

ஆரம்பத்தில சின்னவனா இருந்தப்ப வெறும் ஞாயித்துக் கிழமைகள் தான் கடைக்குப் போவேன். ஏன்ன சாய்ந்திரம் ஒரு 4-5 மணிக்கெல்லாம் கடையை அடைச்சிட்டு ஏதாவது ஒரு சினிமாவுக்கு போயிடலாம். பொதுவா எங்க ஞாயினாவோட கடையில வேலை செஞ்ச்கிட்டுருந்த இன்னொரு பெரியவரோட சேர்ந்து, எம்ஜிஆர் படத்துக்குப்போயிடுவோம். படம் பாத்திட்டு வீட்டுக்கு திரும்பும் போது மனசெல்லாம் பயம் தான். ஏன்னா அம்மாகிட்ட அடி விழுமே. எங்க ஞாயினாவுக்கும் எங்க அம்மாகிட்ட பாட்டு விழும், பையனை சினிமா கூட்டிடுப்போயி கெடுக்கிறீங்கன்னு. அப்புறம் தூங்கி எழுந்தா போயே போச்சு. முழுநாளும் கடைஅடைப்புன்னு பாத்தா வருஷத்தில ரெண்டே நாள் தான். ஒன்னு ஆடும் பல்லக்கு, இன்னொன்னு சந்தனக்கூடு. ஒன்னு இந்துக்கள் கொண்டாடுகிறது. இன்னொன்னு முஸ்லீமுங்க கொண்டாடுகிறது. ஏன்னா இந்த பூக்கடை சமுதாயம் இந்த இரண்டு பேரையும் கொண்டது. எவ்வளவு அன்பா ஒருத்தருக்கு ஒருத்தர் இணைஞ்சு அழகா வாழ்ந்தாங்க. மதக்கலவரம்னா என்னான்னு தெரியாது அந்தக்காலத்திலே. வளர்ந்து பெரியவனாதும் தான் மண்டைக்காடு, கோயம்புத்தூர் கலவரம்னு தெரியவந்தது. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து அனைவரும் நாலுகாசு சம்பாரிக்கணும்னு, எல்லாரும் நல்லாருக்கணும்னு நினச்சு வாழ்ந்தாங்க. அதெல்லாம் இப்ப நினக்கும் போது நாம வாழ்ந்ததும் ஒரு பொற்காலம்தான்னு தோணுது.