Thursday, September 28, 2006

தமிழ் கடவுளும் ஒளவைப்பாட்டியும்!

தமிழ்ல வலைப்பதிவுப் போட்டு அதை அகில உலக வெளியீடு செஞ்சு, அப்புறம் தமிழ்மணம் என்கிற வலைத்திரட்டி மேடையைக் கொண்டு நம் தமிழ் மக்களை அடைய செய்யும் வரை, ஏதோ மிகப்பெரிய பொறுப்பு நம் தலையிலே விடிஞ்ச மாதிரி இவ்வளவு நாளும் இருந்துச்சு! ஆனா தமிழ் மணத்திலே தமிழ் மணம் கமழ பாட்டோ, இல்லை வசனங்களையோ கேட்க முடியலையேங்கிற ஒரு ஆதங்கம் இருந்துச்சு, ரொம்பநாளா! இதோ இப்ப அது நிறைவேற போகுது! என்ன பீடிகை போடறேன்னு பார்க்கிறீங்களா! ஒன்னுமில்லை, நேத்து திருவிளையாடல் படம் பார்க்க நேர்ந்தது, அதிலே எத்தனையோ மனதை கவர்ந்த காட்சிகள் இருந்தாலும், முக்கியமா அந்த தருமிப் படலம், யாரு மறக்க முடியும்! வீடியோ அவ்வளவா பொதுமக்களை அடையாத காலக் கட்டத்திலே, இந்த படத்தோட வசனங்கள் தமிழ்நாட்டின் அத்தனை மூலை முடுக்கெல்லாம் ஒலிச்ச ஒன்னு! நான் சின்ன வயசிலே இந்த வசனத்தை கேட்கவே ஸ்பீக்கர் கட்டின கொடிக்கம்பத்திலே தவமா நின்னு கிடந்து கேட்டு ரசிச்ச நாட்கள் எத்தனையோ! அப்படிப்பட்ட சுந்திர தமிழ் வசனங்களை, இப்ப வரும் படங்கள்ல, அதுவும் இந்த கால ஜெனரேஷனுக்கு கிடைக்க சுத்தமா சான்ஸே இல்லை! தமிழுக்கு மேலே சுத்தமா ஆங்கிலம் கலந்து வரப்பாடல்களும் வசனங்களும் தான் அதிகமா போச்சு! ஆனா மொழியின் ஆளுமையை தெரிஞ்சுக்கணும்னா அந்த மொழியின் தூய்மை தெரிஞ்சா தான் அதை தெரிஞ்சுக்க வழி உண்டு. இப்ப வர்ற நண்டு சிண்டுகளுக்கு தகுந்த மாதிரி பாட்டுகளை அந்த காலத்திலே அழகுப்பட எழுதின வாலி மாதிரி ஆளுங்க இப்ப இங்கிலீஷை கலந்தடிச்ச்ச தான் உண்டு வாழ்க்கை, இல்லேன்னு எகிறி தூக்கி அடிச்சிடுவாங்க! 'சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு! அடிக்குது பாரு இவ ஸ்டைலு' ன்னு எழுதலேன்னா தூக்கி ஓரகட்டிடுவாங்க!

இந்த திருவிளையாடல் மாதிரி படங்கள் எடுக்க இப்ப யாருமே இல்லை தமிழ் இண்டஸ்ட்ரீலே! 70க்கப்பறமே அது நின்னுப்போச்சு! அப்பறம் சாமி படம் எடுக்கிறேன்னு, மந்திரம் மாந்தீரிகம்,மாரியாத்தான்னு படங்கள் இராமநாரயணன் மாதிரி ஆளுங்க 80களின் மத்தியிலே எடுக்க ஆரம்பிச்சாங்க! ஆனா அந்த காலத்திலே வந்த மறக்க முடியாத காவியங்கள் மாதிரி ஒன்னும் வந்த மாதிரி தெரியலை! அதுவும் ஏபி நாகராஜன் மாதிரி ஆளுங்க தெள்ள தெளிவா தமிழ் வசனங்களை எழுதி, பாட்டு எழுதி மயக்க வைக்க இப்ப யாருமில்லையேங்கிறப்ப ரொம்ப வருத்தமா இருக்கு! நான் ஸ்கூலு படிச்ச காலத்திலே இயல், இசை, நாடகம்ன்னா இந்த படங்களின் வசனங்கள், பாடல்கள் தான் முன் மாதிரி எடுத்து, பாடியோ, நடிச்சோ நம்முடய கலைத்திறமையை வெளிப்படுத்துவோம். இப்ப நிலைமை எப்படின்னு தெரியல! ஒரு வேளை பிரபு தேவா மாதிரி கோணக்க மாணக்க பேகி பேன்ட் போட்டுக்கிட்டு ஆடி திரிவாங்களோ என்னமோ, தெரியலை. நான் தமிழ் நாட்டை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன், அதனாலே அதன் நிலைமை எனக்குத்தெரியாது! விவரம் தெரிஞ்சவங்களோ, இல்ல இப்பய இளையதலைமுறைங்க எப்படின்னு பின்னோட்டம் போடுங்க!

இங்க இன்னும் ஒன்னும் சொல்லிக்க விரும்புகிறேன், இந்த மொழின்னு ஒன்னு இருக்கே, அதிலே உயர்ந்தது தாய் மொழி தான்! அதன் அருமை பெருமை அது நம்ம பக்கத்திலே இருக்கிறப்ப தெரியறதில்லை! நானும் அப்படி தான்! அந்த காலத்திலே இங்கிலீஷ் மோகம் வந்து, அதிலே பேசி அசத்துணுமேன்னு சொந்த மொழியை விட்டு தொலைச்சாச்சு! அதுவும் அந்த மொழியின் நெளிவு சுளிவுகளை தெரிஞ்சுககிற வரைதான்! அதுவே பொளங்க ஆரம்பிச்சு, அதன் தாய் மொழிக்காரனோடேயே விவரமா பேசி காரியம் பண்ண ஆரம்பிச்சனோன்ன, அப்பறம் அதை பத்தி நினைச்சு பார்க்கிறப்ப, அட இந்த எளவுக்குதான் அந்த பாடு பட்டமோன்னு தோணும்! அதுவும் நம்ம பசங்ககிட்ட எக்கு தப்பா, எதாவது பேச போக, 'இதோ பார்டா பீட்டரு! அப்படின்னு வாங்கி கட்டி, அப்பறம் அதோட அவசியத்தை தெரியறப்ப நொந்து போயி தப்பும் தவறுமா பேசி , எப்படியோ சரி கட்டி, நாப்பது வயசுக்கப்பறம் அந்த மொழியோட பென்ச்மார்க் டெஸ்ட்ல எட்டுக்கு எட்டு வாங்கி, அதை ஒரு பெரிய குவாலிபிக்கேஷன்னு காமிச்சு, அவன்களோடேயே உறவாடி, அது என்னா இன்னொரு பாஷை, அது தெரிஞ்சவங்கிட்ட பேசி, அவன் ஊர்ல குப்பகொட்டனும்னு ஆனதுக்கப்பறம், விட்டு தொலைச்ச தாய் மொழியை பார்த்து இப்ப மனம் ஏங்குது, என்ன சொல்ல!

அந்த காலத்திலே தமிழ் பாடங்களின் செய்யுள், இலக்கியம்ன்னு தெரிஞ்சக்க ஆரம்பிச்சப்ப நம்ம எல்லை எல்லாம் கோனார் உரைநடை வரை தான்! அதுக்கு மேலே அதன் செரிய கருத்துகள், ஆழமான சிந்தனைகள் எல்லாம் அந்த செய்யுள் பாடங்கள்ல, பொறுப்பா நம்ம எத்தனை பேரு கத்துக்க ஆசைப்பட்டிருப்போம்! ஏன் இரண்டு வரி திருக்குறள்ல இருக்கிற மேன்மையை அறிவுக்கு எட்டும்படி போட்டுக்கிட்டமான்னா, அதுவும் கிடையாது! அதனால தான், அப்ப அப்ப அரசாங்கம் பஸ்ல எழுதி வச்சும், இப்ப திரைப்படங்களுக்கு தமிழ் பேர் வச்சா சலுகைன்னு சொல்லியும், அதன் அருமை பெருமையை உணர்த்தினா தான் உண்டு! அந்த காலத்திலே இந்த மாதிரி தெள்ளிய தமிழ் வசனம் பேசி, பாடி மகிழ்வித்தவர்கள் எல்லாம் நம்மல விட்டு கொஞ்சம் கொஞ்சமா போய்ட்டாங்க! இப்ப யாரு இருக்கா இந்த மாதிரி படம் எடுத்து மகிழ்விக்க, தமிழை நல்லா சொல்லி, அதை ஜனரஞ்சகமாயும் காட்டி வெற்றி யும் கொள்ள! ம்... அந்த ஆதங்கம் இருக்கத்தான் செய்யுது!

இருந்தாலும் தமிழ்மணத்திலே அப்ப அப்ப நம்ம குமரன், கோ.ராகவன் மாதிரி ஆளுங்க, தமிழின் ஆழத்தையும் ஆளுமையையும் சொல்லி புரியவைக்க பார்க்கிறப்ப பெருமையா இருக்கு! சில பேரு சொல்லுவாங்க, என்ன ரொம்ப ஆத்திகமா இருக்கு அவங்க பதிவெல்லாம், என்ன பண்றது நம் மொழியின் மேன்மையை அந்த காலத்திலே அதிகமா ஆத்திகம் வழியிலே தானே சொல்லி வச்சிருந்தங்க நம்ம பெரியவங்க! இந்த கால விஞ்ஞான செரிவுகள் இல்லாத தாலே அஞ்ஞானத்திலே தான் மொழியை வளர்க்க முடிஞ்சது! நாம ஏன் நம் மொழி வளர்ச்சியை விஞ்ஞான் செரிவுகளோட உயர்த்த முற்படக்கூடாது! நமக்கு பின்ன வரும் தலைமுறைங்களுக்கு உதவியா இருக்குமுல்ல! சரி இப்ப அதுக்கு என்ன பண்ணறது! ரொம்ப பேசனா ஞானவெட்டியான் பெரியவரை பொட்டிகட்டி அனுப்பிச்ச மாதிரி நம்மளையும் அனுப்பிச்சிடுவாங்க! விஷயத்துக்கு வர்றேன், நான் ரசிச்ச அந்த தமிழ் மணம் கமழும் அந்த ஒளவைப்பாட்டியின் 'ஞானப்பழத்தை பிழிந்து' பாட்டு( கே பி சுந்தரம்பாளின் கணீர் குரலுக்கு ஈடா இப்ப யாரு இருக்கா, கேட்டா நம்ம வயசுப்பசுங்க சொல்லுவாங்க, 'ஏன் இல்ல நம்ம மன்மத ராசா மன்மத ராசா புகழ் மாலதி இல்லை'யாம்பாங்க, ஏன் வம்பு!), தமிழ்கடவுள் வசனங்களை உங்களுக்கு தேன்கிண்ண விருந்து படைப்பதில் பெரும் மகிழ்ச்சிக் கொள்கிறேன்!

Tuesday, September 12, 2006

செப்டம்பர், 11, 2001 சம்பவங்கள்- அமெரிக்க சதித்திட்டம்!

நேற்று செப்டம்பர் 11, அமெரிக்காவில் நியுயார்க் மாநிலத்தில் நியுயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக் மையத்தை தகர்த்த பொழுது, இறந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்திய நாள்! உலகின் மறுபக்கமான இந்த அமெரிக்க கண்டம் என்றமட்டுமில்லாது, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த நினைவு நாளில், இந்த சம்பவங்களில் இறந்த மக்களை நினைத்து பார்த்து இரங்கல் தெரிவித்தது! இந்த கொடூர சம்பவத்தின் போது இறந்தவர்கள் வெறும் அமெரிக்க நாட்டவர் மட்டுமில்லை, மொத்தம் 115 மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் தான்! இதில் நம் இந்தியர் ஒருவரும் உண்டு, அது போல் இந்தியாவிலிருந்து வந்து அமெரிக்க குடியுரிமைப்பெற்ற நம் தமிழ் நெஞ்சங்களும் உண்டு! அவர்கள் அனைவருக்கும் முதலில் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்!

இந்த செபடம்பர் 11,2001 சம்பவம், தீவிரவாதத்தின் உச்சமாய், அல்கொய்தா தீவிரவாதிகளால் திட்டமிட்டு செயல்படுத்த பட்ட ஒன்று என்று உலகிற்கு பறை சாற்றப்பட்டது. ஆனால் இந்த மொத்த சம்பவங்களும் அமெரிக்கா சதி திட்டமிட்டு, மிகவும் சரியான முறையில் நடந்தேறிய ஒன்று என்று இப்பொழுது புதிய தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன! அதுவும் இந்த சதி திட்டத்தின் நோக்கம், எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளை ஆக்கிரமித்து, தன் ஆட்சி செலுத்தவே, இதை அமெரிக்க தொலை நோக்குத்திட்டத்துடன் செயல்படுத்தப்பட்ட ஒன்று என்றும், அது மட்டுமில்லாமல், மிகப்பெரிய காப்பு மேசடி ஊழல் செய்யவும், நிலுவையில் நிற்கும் முக்கியமான சில மோசடி வழக்குகளின் தாஸ்த்திவேஜாக்களை அழிக்கவும், அமெரிக்க அரசாங்கத்தில் செல்வாக்குடன் உள்ள ஒரு சில பேரால், இப்பொழுதைய அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள சில முக்கியமானவர்களுடன்,திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதல், நம் தமிழ் படங்களில் அரசியல்வாதிகளால் தூண்டபட்டு அப்பாவி பொது மக்களை அழிக்கும் சம்பங்கள் போல! (குறிப்பாக ஷங்கரின், இந்தியன் படத்தை ஞாபகம் படுத்திக் கொள்ளுங்கள், அதாவது வேண்டுமென்றே முதலமைச்சர் கலவரைத்தை தூண்டிவிட்டு, அப்பாவி மாணவர், மற்றும் பொது மக்களை கொல்லும் காட்சியை மனதில் கொள்ளுங்கள்!) இப்பொழுது இணையத்திலே, இன்றைய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் வலம் வந்து கொண்டிருக்கிறது! இணையத்திலேயே சஞ்சரிக்கும் என் நண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என எனக்குத்தெரியாது! ஆனால் அதை பற்றி என்ன என்று விளக்கவே இந்தப் பதிவு!

"Loose Change" என்கிற டாக்குமெண்டரி படம், இணையத்திலேயே கிடைக்கக்கூடிய வீடியோ கிளிப்புகளை கொண்டு, நடந்த ஒவ்வொரு சம்பங்களின் பின்னனனியையும் ஆராய்ந்து, அலசி, நடக்கப்பட்ட அத்தனை சம்பங்களும் சதித்திட்டத்தின் கீழ் நடக்கப்பெற்ற ஒன்று என்று கூறுகிறது இந்த திரைப்படம்! இந்த படத்தை இயக்கியவர் 'டைலன் ஏவரி'( Dylan Avery) என்ற 22 வயது நிரம்பிய ஒரு மாணவர்! இந்தப்படம் நடந்த அத்தனைச் சம்பவங்களுக்கும் ஒரு மாற்று நோக்கத்தையும், சதியின் ஆழத்தையும் திறம்பட விளக்குகிறது! அதாவது நம் நாட்டிலே அமைக்கப்படும் விசாரணை கமிஷன்ங்கள் போல், இந்த 9/11 சம்பங்களை ஆராய்ந்து உண்மையை வெளிக்கொணற இங்கும் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கமிஷன் ஆராய்ந்து கண்டறியாத சில உண்மைகளை மாற்று விளக்கத்துடன் இது விளக்குகிறது! இந்த தாக்குதல், தீவிரவாதத் தால் உண்டான ஒன்றல்ல! இந்த தாக்குதலின் நோக்கமே வேறு என்றும், அதை மிக சாமர்த்தியமாக அமெரிக்க அரசாங்கம் நடத்தி முடித்திருக்கிறது என்று எடுத்துரைக்கிறது!

முதலில் என்னவோ டைலன் ஏவரி ஒரு ஃபிக்ஸன் படம் போல இந்த செப்டம்பர் 11 சம்பவங்களை கொண்டு படம் எடுக்க தீர்மானித்தார். ஆனால் உள்ளே தோண்டி தோண்டி அராய்ச்சி செய்ய இறங்கிய போது பல உண்மைகள் புலப்பட்டன. அதாவது இந்த சம்பங்களின் உள் நோக்கம் தீவிரவாதமில்லை! இது முழுதும் அமெரிக்க அராசாங்கத்தின் சதித்திட்டமே என்று! அதாவது எந்த காரணமின்றி எண்ணைய் வளம் கொண்ட அரபு நாடுகளான ஈராக் மீதோ, மற்ற நாடுகள் மீது போர் தொடுக்க முடியாது! சரியான, வலுவான காரணமின்றி அந்நாடுகள் மீது படையெடுக்க உலக நாடுகளின் ஆதரவு வேண்டுமென்றால் தம் நாட்டு மக்கள் சிலரைக் கொன்று தான் அக்காரியத்தை நிறைவேற்ற முடியும் என்ற திட்டமிட்ட சதியால் விளைந்தது தான் இந்த செப்டம்பர் 11ல் நடந்தேறிய நிகழ்ச்சிகள்! ஆனால் தம் நாட்டினரை மற்றும் பலி கொள்ளாமல், பல உலக நாட்டு குடிமகன்களையும் கொன்று குவித்து இக்காரியத்தை நிறைவேற்றி இருக்கிறது அமெரிக்கா என்று இத்திரைப்படம் அறைகூவல் விடுக்கிறது!

இப்படம் அந்த காலகட்டத்தில் அமெரிக்கா க்யூபா மீது போர் தொடுக்க கையாண்ட ராஜதந்திர சதி திட்டங்களை விளக்கும் ஆரம்பத்தோடு தொடர்கிறது! பிறகு ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்களை ஒவ்வொன்றாக ஆராய்கிறது. முதலில் அமெரிக்க ராணுவ தலைமை பீடமான பெண்டகனை தாக்கிய விமானத்தை ஆராய்ந்து, அது உண்மையிலேயே பயணிகள் சென்ற போயிங் விமானம் தானா, இல்லை அமெரிக்கா தன் மீது ஏவிக்கொண்ட ஏவுகனைகளா என்பதை ஆராய்கிறது! அதை விஞ்ஞான பூர்வமாகவும், சிதலமைடந்த விமான பாகங்கள் அனத்தும் போயிங் விமானத்துடன் ஒன்றாத தன்மையும் விளக்குகிறது. ஆக இது திட்ட மிட்ட சதியே என்று கூறுகிறது!

இரண்டாவதாக "World Trade Center" என்கிற உலக வர்த்தக மைய கட்டிடங்கள், விமானத் தாக்குதலால் எப்படி அடுக்கிவைத்த சீட்டு கட்டுகள் கீழ் (அவர்கள் சொல்லும் உதாரணம், அடுக்கி வைத்த 'பேன் கேக்' போல என்று) விழுவது போல் விழும், அதை முறையாக வெடி வைத்து தகர்க்காவிடில் என சர்ச்சையை கிளப்பி இருக்கிறது! இடிந்து விழுந்த WTC டவர்கள் 1, 2, மற்றும் 7 (இந்த WTC கட்டிட வளாகம் பற்றி என்னுடய முந்தைய பதிவான 'World Trade Center-சமீபத்தில் பார்த்த படங்கள்!' என்ற பதிவை படிக்கவும்!) ஆகியவை முறையாக இடித்து தள்ளிய நிகழ்ச்சி போல் தான் இருக்கிறதே தவிர, தீவிரவாதிகளால் ஓட்டி சென்ற விமானம் மோதி தீப்பிடித்ததால் அவைகள், வெப்பம் தாங்காமல் விழவில்லை என கர்ஜிக்கிறது! இந்த கட்டிடம் கட்டுவதற்கான பொருட்களுக்கு சான்று வழங்கிய தரகட்டுப்பாட்டு நிறுவனங்களை அதிலும் துணைக்கழைத்து, விஞ்ஞான, பொறியல் தொழில்நுட்ப காரணங்களோடு விளக்குகிறது( நான் பெரிய எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை கட்டுமான தொழில் துறையில் இருப்பதால், இந்த அமெரிக்காவில் இருக்கும் தரக்கட்டுபாட்டு நிறுவனங்களின் நிர்ணயம், அங்கீகாரம் பற்றி தெரியும். இது மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று, கட்டுமான பொருட்கள் தயாரிப்பாளர்கள், உலக அளவில் அனைவராலும் பின்பற்றி வரப்படுவது, உதாரணத்துக்கு ASTM, ASME, API, NIST, ISA போன்றவற்றின் தரக்கட்டுபாடுகளின் நெறிமுறைகள் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த கட்டுமான பொறியல் துறையில் காலம் தள்ள முடியாது, ஆதாலால், இப்படம் எடுத்துரைக்கும் சில உண்மைகள் நம்ப மறுக்க இயலாது!)

அடுத்து யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் 93 வின் விபத்து பற்றி கூறுகிறது!(இது பற்றி ஒரு ஆங்கில படமும் வந்துள்ளது, வேண்டுமானால் அப்படம் பார்க்கவும், இச்சம்பவம் அனைத்தும் நீங்கள் அழகாக திரைப்படத்தில் பார்க்கலாம்!) அந்த விமானம் 93வால் விபத்தே நிகழவில்லை என சாதிக்கிறது! இது அமெரிக்க ராணுவத்தினரால் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி. இந்த விமான விபத்தில் சிதிலமடைந்த பாகங்கள் எதுவும் மிஞ்சவில்லை என்பது ஆச்சிர்யத்திற்குண்டான ஒன்று என கேள்வி எழுப்புகிறது! விபத்துகளை பற்றி காண்பிக்கப்பட்ட அத்தனை புகைப்படங்களும் ஜோடிக்கப்பட்டவை, விமானத்திலிருந்து, அதுவும் முப்பதாயிரம் அடிக்கு மேல் பறக்கும் பொழுது செல் போனால் பேசுவது சாத்தியமில்லை! ஆக இந்த விமானம் தாக்குதலுக்குள்ளனா போது பயணம் செய்து பயணியர் செல்போன் கொண்டு தத்தம் உறவினர்களை அழைத்து விமானம் கடத்தப்படுவதை சொன்னதாக கூறியது எல்லாம் ஜோடிக்கப் பட்ட கதை என்று கூறுகிறது! (அவர்கள் கூறுவதோ என்னவோ வாஸ்தவமே, நானும் முப்பதாயிரம் அடிக்கு மேலே பறக்கும் பொழுது என் செல் போனை நோண்டி பார்த்திருக்கிறேன், சிக்னல் இருக்கிறது என காண்பிக்கும், ஆனால் பேச முற்பட்டு தொடர்பு கொள்ள முயன்று பலமுறை தோல்வியுற்றிருக்கிறேன்!)

அடுத்து இச்சம்பவங்களால் அடிக்கப்பட்ட கொள்ளைகள், அதாவது முன்பே கூறியது போல காப்பு மோசடி ஊழல்கள் போன்றவற்றால் அடித்த கொள்ளைகள்! அதாவது இச்சம்பவம் நடைபெற சில ஆறு வாரங்களுக்கு முன்னே தான் 'Larry A. Silverstein' என்கிற ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் தொழிலதிபர் இந்த "World Trade Center" கட்டிடங்களை குத்தகைக்கு எடுத்து, இது போன்ற தீவிர வாத கட்டிட விமான தாக்குதலுக்கு எதிரான காப்புரிமை எடுத்தார். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு குத்தகை எடுத்து காப்புரிமை அதன் பேரில் எடுத்து, இச்சம்பவத்தின் மூலம் பல பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டினார் என்ற குற்றச்சாட்டுடன் திரைப்படம், இச்சம்பவத்துடன் இணைந்த அத்தனை ஊழல்களையும் காண்பிக்கிறது!

ஆக இவை அனைத்தும், சுமார் ஒன்றாரை மணி நேரம் ஓடக்கூடிய இத்திரைப்படத்தில் நீங்கள் காணலாம். இந்த டாக்குமெண்டரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விமரிசனம் செய்தும் கண்டன வெப்சைட்களும், இந்த டாக்குமெண்டரி படத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு விளக்கத்திற்கும் எதிர் விளக்க பதில்களும் சொல்லி தரநிர்ணய கட்டுபாட்டு துறையும் விளக்கி இருக்கும் பக்கங்களையும் நீங்கள் இணையத்தில் காணலாம்! ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விளக்க உண்மைகளை அமெரிக்க மற்றும் கனடா வாழ் மக்கள் நம்ம ஆரம்பித்துள்ளனர். ஆக மாறி வரும் உலக அரசியலில் நடந்து முடிந்த இந்த சம்பவங்களினால் நம் கண்ணதாசன் பாடியது போல 'யாரைத்தான் நம்புவதோ இந்த புண்ணிய பூமியிலே என புலம்பத்தான் வேண்டும்! இங்கு நடந்து முடிந்த அனைத்து சதித்திட்ட அரசியலும் நமக்கொன்றும் புதிதல்ல! நம் நாட்டில் அன்றாடம் நடப்பது தான்! படிப்பறியா நம் மக்களுக்கு இது போன்ற கண்டுபிடிப்பு விளக்கத் திரைப்படங்கள் ஒன்றும் ஆச்சிரியமில்லை! ஆனால் படித்து முன்னேறிய இந்த பக்க பூமியில், இது போன்ற விளக்க திரைப்படங்கள் பெரும் சர்ச்சையுடன் மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது! ஆனால் நான் கூறியது போல வளர்ந்த தொழில்நுடபத்தினால், சராசரி மனிதனும் திரைப்படமெடுத்து கலக்கலாம்! வார்னர் பிரதர்ஸ், யுனிவர்சல், ஏவிஎம் போன்ற பெரும் திரைப்பட நிறுவனங்கள் தேவையில்லை!

இத்திரைப்படம் எந்த திரையிலும் வெளியிடப்படவில்லை! நீங்கள் இணையத்தில் மட்டும் கண்டு களிக்கலாம்! இந்த திரைப்படம் உலக மக்களால் அதிகமாக பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. உங்களுக்காக இதோ கீழே!

Wednesday, September 06, 2006

வேட்டையாடு விளையாடு- புலன்விசாரணை (Forensic Science) சறுக்கல்கள்!

போன தடவை நான் எழுதிய World Trade Center-சமீபத்தில் பார்த்த படங்கள்! பதிவிலே பின்னோட்டமிட்ட பெத்தராயுடு, 'என்ன வேட்டையாடு விளையாடு படம் பார்த்திட்டீங்களா, அதை பத்தி ஒரு விமரிசனப் பதிவுப்போட்டு தாக்குங்கன்னு சொல்லியிருந்தாரு'! படத்தை எதாவது தியோட்டர்ல போய் பார்த்து எழுதலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்! நம்ம பாஸ்டன் பாலாவும் நிறைய விளம்பரம்லாம் கொடுத்து படம் வர்றதுக்கு முன்னடியே நம்மலை தயார் படுத்திட்டாரு, அப்புறம் படம் வந்து சூட்டோட விமரிசனமும் எழுதி, சுஜாதாவோட நைலான் கயிறு கதை எல்லாம் எழுதி நம்ம ஆர்வத்தையும் தூண்டி விட்டாரு. ஆனா வேலை அதிகம் இருந்ததாலே படத்தை தியோட்டர்ல போய் பார்க்கமா, வழக்கமா இணையம் தரும் உதவியின் பேரில் பார்ப்பது போல படம் பார்த்தாச்சு! நிறைய பேரு விமரிசனம் எழுதி போட்டுட்டாங்க! ஆனா ஒன்னு தெரியுமா, இந்த படம் மசலாவா, கமல் நடிச்சி வந்திருந்தாலும், இந்த படத்தோட முக்கியமான ஒரு சங்கதி என்னான்னா, அதான் போலீஸ்காரங்க பண்ணும் புலன் விசாரணை, அதாவது இதை இங்கிலீஷ்ல 'Forensic'ன்னு சொல்லுவாங்க! அதாவது இந்த 'Forensic Science'ங்கிறது ஒரு பெரிய விஞ்ஞானம்! ஆனா இந்த படத்திலே படு தமாஷா சில விசயங்களை சித்தரிச்சு படம் புடிச்சிருந்தாங்க! இந்த புலன்விசாரணை செஞ்சு ஆராஞ்சு கொலைகாரனை கண்டுபிடிக்கிறது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை, அதுக்குப் பின்னாடி இருக்கும் கஷ்ட நஷ்டங்களை பத்தி உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாதோ, இதோ அதைப் பத்தி கொஞ்சம் பார்ப்போமா!

இந்த படத்திலே விஷேசமானது என்னான்னா, நாய்க்கு இருக்கிற மோப்ப சக்தி மாதிரி, கமலுக்கு இருக்குமாம், அதாவது முதக்கொலையை, கீரனூர்ல கண்டுபிடிச்சிலும் சரி, அடுத்து நியூ ஜெர்சியிலே, பூட்டை உடைச்சிக்கிட்டு அடுத்தவன் வீட்டு பங்களா வளாகத்திலே போய் நோண்டி நாலு டெட் பாடியை கண்டுபிடிக்கிறதிலேயாகட்டும் சரி நாயைவிட மோப்ப சக்தி அதிகம் போங்க நம்ம கமலுக்கு! முதல்ல க்ரைம் சீன் ரெஸ்பான்ஸ் கைட்லைன்ஸ்னு ஒன்னு இருக்கு, அதை கடை பிடிச்சதா படத்திலே காட்டல, சினிமான்னா சுழுவா கொலையாளியை கண்டுபிடிக்கிற மாதிரி இல்லை நிஜத்திலே! அதுக்குன்னு சில கோட்பாடுகள் இருக்கு! அதாவது க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்'ங்கிறது ஒரு முக்கியமான தடயங்கள் சேகரிக்கும் தருணம்!

அதாவது கவனமாய், மிகவும் பொறுப்புடன் அனைத்து தடயங்களையும் சேகரித்து அதை சரியான முறையில் விசாரணைக்கு எடுத்து சென்று குற்றவாளியை கண்டு பிடித்து தண்டனை வாங்கி கொடுக்க உதவும் இந்த முதல் கட்ட புலன் விசாரணை அவ்வளவு சுலபமான காரியமில்லை, நம் தமிழ் மற்றும் ஆங்கில படங்களில் வருவது போல்! அதாவது புலன் விசாரணை செய்பவர் உடனடியாக எந்த ஒரு தீர்க்கத்திலும் குதித்து விடக்கூடாது! தெளிந்த சிந்தனையோடும், கிடைக்கும் மிகக்குறைந்த தடயங்களும், விஷயங்களையும் கொண்டு அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து பலவாறாக குற்றங்களின் தன்மையை அறிந்து அதை முறையாக, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள எந்த ஒரு சிறு விசயங்களையும் விட்டுவிடாமல் அனைத்தையும் பதிவு செய்து குற்ற பத்திரிக்கை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று! இக்குற்ற பத்திரிக்கையின் சாரத்தில் சம்பவம் நிகழ்ந்த அனைத்து விஷயங்களையும், குற்றம் நடந்து முடிந்து பின் மாறும் அமசங்களை, அதாவது எரிய்ம் விளக்கினையோ இல்லை அனைந்த விளக்கினையோ, திரைச்சீலையின் மூடபட்டிருந்த நிலையையோ, இல்லை திறந்திருந்த நிலையையோ, நகர்த்தப்பட்ட தட்டுமுட்டு சாமன்கள், மற்றும் மரச்சாம்னகள் அனைத்தையும் சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும்!

சில தடயங்கள், அதாவது காலடி தடயம், துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த அச்சுகள், என மிகச்சுலபமாக அழியக்கூடிய தடையங்களை முதலில், முக்கியமாக, பத்திரமாக சேகரிக்க வேண்டும்! அது போல இது தற்கொலையா, இல்லை தன்னை காத்துக்க் கொள்ள செய்யப்பட்ட கொலையா, இல்லை திட்டமிட்ட கொலையா என பலகோணங்களில் விவாதிக்க கூடிய அனைத்து விஷயங்கள் பொருட்கள், விவாதத்திற்கு ஆதரவாகவோ, இல்லை மறுத்து வாதிடவோ உண்டாகக்கூடிய அத்தனை தடயங்கலையும் சேகரிப்பது இந்த க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷனின் ஒரு அங்கமாகும்! அது மட்டுமின்றி பலியானவரின் தடயங்கள் மட்டுமின்றி, அதாவது அவரின் மணிபர்ஸ், அவர் வந்த வாகனம் என்றல்லாமல் கொலையாளி விட்டு சென்ற தடயங்களான அவனது முகமூடி,இல்லை அவன் அணிந்திருந்த அணிகலனகள் என ஒன்றையும் விட்டு வைக்கக்கூடாது, அனைத்தையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டும்! இந்த படத்தில் வரும் ருத்திராட்ச கொட்டை போல் நான் மேலே கூறியது! இந்த படத்தில் கமல் முதல் கொலையை கண்டு பிடிப்பது போல் கொலை நடந்த இடம் என்பது வெறும் கொலையுண்ட உடல் கிடைக்கும் இடமாக கருதாமல், கொலையாளி அங்கு நடத்திய அத்தனை செய்கைகளுக்குண்டான ஆதாரத்தையும், அவன் அங்கு வந்து குற்றம் நிகழ்த்திவிட்டு தப்பி சென்ற வழித்தடம்,வாகன ஊர்தி என அனைத்தையும் இனம் கண்டு கொள்ளுவது மிகமுக்கியம்! பொதுவாக நீங்கள் படங்களில் பார்ப்பது போல் அடிக்கடி சேகரிக்கப்படும் தடையங்களாகிய ஃபிங்கர்பிரிண்ட்ஸ், ஃபூட்பிரிண்ட்ஸ், இரத்தக்கறைகள் மட்டுமின்றி, கையில்கிடைக்கும் எந்த பொருளும் ஆதார தடையங்களாக கண்டு கொண்டு எடுத்து செல்லப்படவேண்டும்! எல்லா பொருட்களும், எந்த தடையமும் குற்றவாளியையும், பலியானவரையும் மிக அருகில் இணைக்கும்படி இருந்தால், அததனையும் திரட்டி எடுக்கப்படவேண்டும்! சில சமயம் ஷாப்பிங் லிஸ்ட் மாதிரி வெறும் ஃபிங்கர் பிரிண்ட்ஸ், இரத்தக்கறை மட்டும் ஆதார தடங்களாக சேகரிப்பதில் எந்த புண்ணியமில்லை! கொலையுண்டவரின் அருகில் கிடக்கும் ஒரு சிறு தீக்குச்சி மிக சிறந்த சாட்சியமாக வாய்ப்பிருக்கிறது சந்தேகப்படும் கொலையாளி வைத்திருக்கும் மேட்ச்பாக்ஸ்டுடன் சம்பந்தபடுத்தி முடிச்சவிழ்க்கையில்! குற்றவாளிபயன்படுத்தும் ஆயுதங்கள் சிறந்த தடையங்கள், ஆனால் அவற்றை அவர்கள் அழித்துவிட வாய்ப்புண்டு, ஆனால் தலை முடி, நகம், என சில மைக்ரோஸோக்பிக் ஆதாரங்கள் முக்கிய தடயங்களாக மாற வாய்ப்பிருக்கிறது! அவற்றை திரட்ட தடையில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சிலசமயம் கொலையுண்டவரின் உடலிலிருந்து துணிகளை அகற்றி நிர்வாணமாக எடுத்து செல்லப்படும் வேலையில் அதற்குண்டான் சரியான அணுகுமுறையை கடைப்பிடிப்பது மிக முக்கியம்!

இந்த படத்தில் வெறும் கமல் மட்டும், இல்லை அந்த நியுயார்க் போலீஸ்காரர் ஒருத்தரை கூட்டி சென்று க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷன் செய்வதாக காண்பிப்பார்கள். ஆனால் உண்மையில் இதற்கென ஒரு டீம்மே இருக்கிறது, அதாவது டீம் லீடர், போட்டோகிராபர், இல்லை போட்டொகிராபிக் லாக் ரெக்கார்டர், செக்ட்ச் போடுபவர், தடயங்களை பதிவு செய்பவர், தடயங்களை மீட்டு எடுப்பவர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் என ஒரு பெரிய டீமே இருக்கிறது. இந்த படத்தில் அதை எல்லாம் இருக்கிறமாதிரி காமித்தார்களா என்று தெரியவில்லை!

இந்த சர்ச்சு ஆப்ரேஷன் காமிப்பது படு வேடிக்கையாக இருக்கும் இந்த படத்தில். அதுவும் அமெரிக்காவில் கமலும் அந்த ஆன்டர்ஷன் என்கிற அமெரிக்க போலீஸ்காரரும் போய் பொணத்தை நோண்டி எடுப்பது படு வேடிக்கை! இந்த சர்ச் ஆப்ரேஷன் எனபது முதலில் தயார் படுத்திக் கொள்வது, அதாவது சட்டபடி தயார்படுத்திக் கொள்வது (Evaluate the current legal ramifications of crime scene searches (e.g., obtaining of search warrants) இதெல்லாம் காதுல பூசுத்திட்டு நம்ம கமல் பூட்ட உடைச்சி 'வழிபோக்கர்கள் தண்டிக்கப்படுவார்கள்' ன்னு பெரிசா கொட்டை எழுத்திலே ஆங்கிலத்திலே எழுதி வச்சதையும் காமிச்சிட்டு, கமல் பூட்டை உடச்சி உள்ளே நுழைவது படு தாமஷ்! அடுத்து ஆப்ரேஷன் ஆவறதுக்கு முன்னே சமபந்த பட்டவஙககிட்டே பேசறது, சரியான உடுப்பு, தொடர்பு சாதனங்கள், லைட்டிங், ஷெல்டர், வாகனம், மருத்தவ உதவி, பாதுகாப்பு, மற்ற சாதனங்கள் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம், இதை எல்லாம் தயார் பண்ணிட்டு ஆரம்பிக்கணும்!

அப்புறம் சர்ச் ஆப்ரேஷனை எப்படி அப்ரோச் பண்றது, சர்ச் பவுண்டரி, அதான் எல்லையை நிர்மானிக்கிறது, ஃபிஸிக்கல் எவிடன்ஸ் என்னென்னான்னு ஆராய்றது அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்! அப்புறம் போட்டோகிராபிக் டெபிக்ஷன், சீனை செக்ட்ச் போட்டு வரையறது, டீட்டையில் சர்ச் நடத்துறது, ஃபிஸிக்கல் எவிடன்ஸ் எல்லாத்தயும் ரெக்கார்ட் பண்றது, அப்புறம் ஃபனைல் சர்வே, அப்பறம் கடைசியா க்ரைம் சீன்னை ரிலீஸ் பண்றது அப்படின்னு ஏகப்பட்டது இருக்கு! நம்ம கமலுக்கு அதெல்லாம் என்னாத்தை தெரியப்போவுது, போனமா, பொணத்தை தோண்டுனமா, அதுவும் 'ராகவன் ஹன்ச்'ன்னு சும்மா டைலாக் வுட்டுக்கிட்டு பொணத்தை தோண்டி எடுக்கிறது எல்லாம், நம்ம தமிழ் நாட்டு தமிழ் மக்கள்ன்னு இல்லை, அனைத்துலக தமிழ் மக்களையும் கேனயங்கன்னு நினச்சா, நீங்களும் நானும் என்ன பண்ண முடியும்!

சரி இந்த லாஜிக் எல்லாம் பார்க்காம படம் பார்த்தோமோ, போனோமான்னு இல்லாம என்னத்தை போங்கன்னு நீங்க சொல்றது கேட்குது. இருந்தாலும் இந்த தடயவியில் விஞ்ஞானம் எப்படின்னு இன்னும் நிறைய தெரிஞ்சுக்குனும்னு ஆசைப்பட்டாலும் , செக்ஸ் கேஸ்ல விந்து எப்படி எடுத்து கற்பழிச்சவனை கண்டு புடிக்கிறாங்கன்னும் தெரிஞ்சுக்கிட ஆசைப்பட்டாலும் நிறைய தகவல் தளங்கள் இருக்கு! பார்த்து படிங்க! இல்லே, ஆகா, இயக்குநர் கெளதம் இந்த தடயவியலை கரைச்சுக்குடிச்சு, மேல்நாட்டுக்காரனைவிட அம்சமா படம் எடுத்து அசத்திட்டாருன்னு விசலடிச்சாங் குஞ்சுங்க மாதிரி சொல்லிக்கிட்டுத் திரிய வேண்டியது தான்!

Saturday, September 02, 2006

World Trade Center-சமீபத்தில் பார்த்த படங்கள்!

இந்த World Trade Center (WTC) டவர் இரண்டும், செப்டம்பர் 11, 2001ல தீவிரவாத தாக்குதலுக்குப்புறம், அந்த நிகழ்ச்சியை கருவாக் கொண்டு எடுக்கப்பட்ட இரண்டு படங்களை போன வாரம் பார்க்க எனக்கு நேர்ந்தது. ஒன்னு அதே பேருல World Trade Center ன்னு, அது இங்கிலீஷ் படம். இன்னொன்னு ஹிந்திப்படம், 'Yun Hota To Kya Hota' ன்னு பேரு. சரி உங்கள்ல எத்தனை பேரு இந்த படங்களை பார்த்திருப்பீங்கன்னு தெரியல்லை! கொஞ்சம் அதை பத்தி எழுதுவோமேன்னு தான்! பொதுவா இந்த மாதிரி உலகை குலுக்கும் சம்பங்களை பின்னனியா வச்சு நிறைய கதைகளை கொண்ட படங்கள் எடுக்கிறது சகஜம். அதுவும் நம்ம மணி இருக்காரே, இது போன்ற நிஜக் கதைகளின் பின்னோட்டத்திலே கதை எழுதி அதை சாமார்த்தியமா,அழகா திரைக்கதை பண்ணி இயக்குவதிலே மன்னர்! அவரு இன்னும் இந்த இரட்டை கோபுரம் இடிஞ்ச கதையின் பின்னோட்டத்திலே ஏன் இன்னும் கதை பண்ணமா, அதை வச்சு படம் எடுக்குலேன்னு தெரியல்லை! ஆனா இந்த இரண்டு படங்களும் அதன் பின்னனியிலே வந்த படங்கள், எப்படின்னு பார்ப்போம் வாங்க!

முதல்ல இந்த world trade center பத்தி கொஞ்சம் சொல்லி ஆகணும்! இந்த 'உலக வர்த்தக மையம்'னு ரொம்ப பிரசித்து பெற்ற வானுயர்ந்த கட்டடம். நம்ம மெட்ராஸ்ல எப்படி 'LIC கட்டடம்' அந்த காலத்திலே படத்துக்கு படம் உயர்ந்த கட்டிடம்னு எப்படி காட்டினாங்களோ ('பட்டிகாடா பட்டணமா'ங்கிற படத்திலே நம்ம சிவாஜிக்கு இதை எல்லாம் காட்டி, ஏன் சாந்தி தியேட்டரையும் காட்டி வில்லன்ங்க உதைப்பாங்களே, அப்புறம், இவரு, 'ஏண்டா எனக்கா சாந்தி தியோட்டர் காமிக்கிறே' திரும்ப இவரு உதைக்க ரொம்ப தமாஷா இருக்குமுல்ல, அதைத்தான் சொன்னேன்!, ஏன் இப்பவும் அதவுட்டா பெரிய கட்டடம்னு சொல்லிக்க எதாவது இருக்கா என்ன இப்ப நம்ம சிங்காரச் சென்னையிலே!), அது மாதிரி இது அமெரிக்காவிலே இருக்கிற நியூயார்க் என்ற மாநகரில் ரொம்ப உயர்ந்த மாடிக் கட்டிடம்ன்னு சொல்லி ஊருக்கு வர டூரிஸ்ட்டை மேலே கூட்டி போயி காப்பி வாங்கி கொடுக்குறது ரொம்ப பிரபலம், அதாவது அந்த காலத்திலே நியூயார்க்ல கட்டின உயரமான கட்டிடம் 'எம்பெயர் ஸ்டேட் பிள்டிங்'ன்னு ஒன்னு, அதுக்கப்பறம் 1970கள்ல கட்டின ஒன்னு தான் இந்த 'WTC'ன்னு சொல்லப்படும் வோர்ல்ட் டிரேட் சென்டர்! நம்ம தீவீரவாதி தம்பிமாருங்க பிளேன்ன ஓட்டிக்கிட்டு போயி இடிச்சது என்னமோ அந்த இரண்டு உயர்ந்த கோபுரம் மாதிரி இருந்த அந்த இரண்டு டவர்களை தான், ஆனா, இந்த வோர்ல்ட் ட்ரேட் சென்டர்ன்னு சொல்லக்கூடிய இந்த கட்டிடம் இருந்த பகுதியிலே உள்ள அந்த காம்பெளக்ஸிலே இருந்த பிள்டிங்குங்க, அதாவது டவருங்க, மொத்தம் ஏழு. இடிச்சது என்னமோ இரண்டு தான், ஆனா அழிஞ்சது அத்தனையும்! மிச்சம் சொச்சம் இருந்த எல்லா பிள்டிங்கையும் அப்பறம் இடிச்சு தள்ளிட்டு, இப்ப அங்கே நினைவு மண்டபமா 'Freedom Tower' ன்னு ஒரு உயர்ந்த கட்டிடம் கட்ட எல்லா ஏற்பாடுகளும் நடந்துக்கிட்டிருக்கு!

அது மாதிரி, இப்ப நியூயார்க்கு சுத்தி பார்க்க வர்றவங்க, இந்த இடிஞ்சுப் போன காலி மைதானத்தை சுத்தி பார்த்துட்டு, நினைவிடமா, ஒரு சின்ன பூவை வாங்கி அங்கே வச்சிட்டு வர்றது வழக்கம் இப்ப. நான் கூட போன தடவை போயிருந்தப்ப, அந்த இடத்தை சுத்தி பார்த்துட்டு வந்தேன்! இந்த 'Freedom Tower' கட்டி முடிக்க இன்னும் நாலு அஞ்சு வருஷமாகும், 2011ல திறக்கிறதா உத்தேசம்! ஏன் இந்த டவர்ங்களை பிளேனை வச்சு இடிச்சாங்கங்கிறது உங்களுக்கு எல்லாம் தெரியும். அதிகமா, இதை பத்தி நிறைய டிவிங்கள்ல வந்ததாலே, முதல்ல பார்த்த அந்த இங்கிலீஷ் படம், அந்த இடிச்ச கதை இல்லை, ஆனா, கட்டிடம் இடிஞ்ச அன்னிக்கு, அந்த கட்டிடத்தில தீப்பிடிச்சதாலே, அதிலே மாட்டிக்கிட்டவங்களை காப்பாத்திரேன்னு போன தீயணைப்பு படையில் இருந்த இரண்டு பேரு, அந்த இடிபாடுகளுக்கிடையே மாட்டிகிடுவாங்க, அவங்க மாட்டிக்கிட்டவங்களை எப்படி உயிரோட மீட்கிராங்ககிரதும், அது இடிபாட்டு குவியல்கள்ல அவங்க எப்படி சிக்கிக்கிட்டு மரண அவஸ்தை பட்டு மீள்றாங்க, அவங்க குடும்பாத்தாரார் எப்படி உணர்ச்சிய மயமாவாங்க, அப்புறம் அவங்க பொளச்சி வரும் வரை துடி துடிச்சு போறாங்ககிறதை அழகா ஒரு இரண்டு மணி நேரத்துக்கு படம் புடிச்சு காட்டி இருக்காங்க, போயி பாருங்க நல்லா இருக்கும்!

அடுத்து ஹிந்திப்படம், 'Yun Hota To Kya Hota'ன்னு, இதிலே நாலு கிளைக் கதைங்க! படம் ஆரம்பிக்கிறப்ப ஒன்னும் தெரியாது! அதாவது புதுசா கல்யாணம் பண்ண ஜோடி, கல்யாணம் ஆயி முதராத்திரி முடிஞ்சு(ரொம்ப சுவாரசியமா எடுத்திருக்காங்க-:)), புருஷங்காரன், வேலைக்கு போகணும்னு உடனே அமெரிக்கா புறப்பட்டு போயிடறான், பொண்டாட்டியை அப்பறம் கூட்டுக்கிறதா! ஆனா இங்கே மாமியார், நாத்தனார் தொல்லை! இன்னொன்னு ஷேர் புரோக்கர் இரண்டு பேரு, சூழ்நிலை நிர்பந்தத் தாலே, ஒரு போலீஸ்காரனை சுட்டுக் கொண்ணுட்டு, மாட்டிக்ககூடாதுன்னு அமெரிக்கா போயிடறாங்க! போறதுக்கு முன்னே, அவன் காதலி செஞ்ச துரோகம் அப்படியே வாட்டிக்கிட்டிருக்க, அதையே நினைக்கிச்சுக்கிட்டிருக்கான்! அடுத்தது, அமெரிக்காவிலே கலை நிகழ்ச்சி நடத்துறேங்கிற பேர்ல ஆளை கடத்திர ஒரு குஜாராத்தி புரோக்கர்! அவனுக்கு 20 வருஷத்துக்கு முன்னே பழக்கமான அவன் காதலி பொண்ணை அமெரிக்கா கூட்டிக்கிட்டு போக காதலி வற்புறுத்த, அந்த பொண்ணை கூட்டிக்கிட்டு போறான்! அடுத்து அமெரிக்கா யுனிவர்சிட்டியில இடம் கிடைச்சு படிக்க வசதியில்லாத இளைஞன், தன் காதலி உதவியினாலே அமெரிக்கா போக ஆயுத்தமாகிறான்! இந்த நாலு பேரும் துரதர்ஷ்டவசமா ஏற்படும் ஒரு நிகழ்ச்சிக்காக ஒன்னாக்கூடி ஒரே நேரத்திலெ எப்படி மாண்டு போறாங்ககிறது தான் கதை!

இந்த ஷேர் புரோக்கர் முன்னாடியே அமெரிக்கா போயி World Trade Centerல இருக்கிர அவனுடய நண்பன் ஆபிஸிலே இருக்கிறான். மித்த எல்லாரும் ஒரே விமானத்திலே இந்தியாவிலே இருந்து புறப்பட்டு முதல்ல பாஸ்டன் வந்து சேர்றங்க! அடுத்த நாள் எல்லாரும் லாஸ் ஏஞ்சலஸ் போகணும்! ராத்திரி பூரா ஏர்போட்டிலே காலம் கழிச்சிட்டு அடுத்த நாள் காலையிலே போற லாஸ் ஏஞ்சலஸ் பிளைட்டை புடிப்பாங்க! இதிலே அந்த புதுசா கல்யாணம் கட்டிக்கிட்ட ஜோடியில, அந்த வொய்ஃப்பு விமான போர்டிங் பாஸ்ஸை தொலைச்சிட்டு, அந்த பிளைட்டை புடிக்காம உட்டுடறாங்க! மத்தவங்க எல்லாம் அந்த பிளைட்ல போறாங்க, கடைசியிலே அந்த பிளைட் தான் செப்டம்பர் 11ல திவிரவாதிகளால கடத்தப்பட்ட பிளைட், அது World Trade Centerல போய் மோதி, அப்படி மோதறப்ப, அந்த ஷேர் புரோக்கரும் அந்த பில்டிங்கல ஒரு ஆபிஸிலே இருக்க போயி எல்லாரும் அம்பேல்! நல்ல வேளையா அந்த புதுசா கல்யாணம் பண்ணின அம்மனி அதிர்ஷ்டவசமா, அந்த பிளைட்ல போகாதததலே பொளச்சிடறாங்க, இப்படி போகுது கதை!

சர்தான், செப்டம்பர் 11 நெருங்குது இதோ, அந்த நேரத்திலே இந்த இரண்டு படங்களும் அப்ப நடந்த அந்த தாக்குதலை பின்னணியா வச்சு வந்திருக்கு! அதுவும் நம்ம ஆளுங்களும் உலகத்திலே நடக்கும் நிகழ்ச்சிகளை கொண்டு கதை களம் அமைச்சு படம் எடுத்திருக்காங்க, பரவாயில்லை, பாராட்டக்கூடிய முயற்சி. பொதுவா, நம்ம ஊரு பக்கத்திலே நடக்கும் கதை, அதுவும் மதுரை கதை மாதிரி காதல், திமிரு, எல்லாம் தாண்டி இண்டெர்நேஷனல் லெவல்ல கதை யோசிச்சு எடுத்தா, 'அட நல்லாதான் இருக்குன்னு' போட வைக்குது! பரவாயில்லை இந்த மாதிரி கதை கரு பின்னி எடுத்தா நம்ம முன்னேற்றமடைஞ்ச மாதிரி தான். ஆனா டெக்னிகலா, கதை சொல்லும் உத்தி, சம்பங்களின் தத்ரூப பின்னணி எல்லாம் வச்சு இந்த ஹோலிவுட் தரத்துக்கு படங்கள் எப்ப வரப்போகுதோ, தெரியல்லை! பொறுத்திருந்து பார்ப்போம்!