Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Friday, October 27, 2006

நாளை உலகம் நமது கையிலா??

'நாளை உலகை ஆள வேண்டும், உழைக்கும் கரங்களே' அப்படின்னு எம்ஜிஆர் பாடி ஆடனது ஞாபகம் இருக்கா உங்களுக்கு, அது நடந்தேறும் காலம் நெருங்கிவிட்டதுன்னு சொல்லுவேன் இப்போ! போன வாரம் இந்த வியாபார உலகில் நடந்த ஒரு மிகப்பெரிய தன்னுடமையாக்கல்(Acquisition) என்னான்னு தெரியுமா, அதான் நம் நாட்ல இருக்கிற டாட்டா ஸ்டீல் கம்பெனி இங்கிலாந்து மற்றும் டச்சுக் கம்பெனியன கோரஸ்(Corus)என்ற இரும்புஆலை கம்பெனியை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்ல வாங்கி தன்னுடமையாக்கிக்கிட்டது தான்! இதுல என்னா விஷேஷம்னு கேட்கிறீங்களா, இனிவரும் நாட்களில் நம்ம குப்பனும் சுப்பனும் உலகத்திலே பீறுநடைப் போடும் பெரிய பெரிய கம்பெனிகளை வாங்கிப்போட்டு பெரியாளாகப் போறாங்கங்கிறது தான், அது எப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம் வாங்க!

நீங்க வெறும் சாஃப்ட்வேர் எழுதியோ, இல்லா கூலிக்கு மாரடிச்சு மாசம் ஒன்னாம் தேதி ஆனா சம்பளம் வாங்கி பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்திர ஆசாமியா இருந்தீங்கன்ன்னா ஒரு மண்ணும் புரியாது. கொஞ்சம் வியாபரம், பங்கு சந்தைன்னு அலைஞ்சு திரிஞ்சிருந்தாலோ, இல்லை கடை கண்ணின்னு வியாபரம் செய்ற குடும்ப சூழ்நிலையிலே இருந்து வந்திருந்தாலோ, இல்லை உண்மையிலே திராவிடம், இந்து, பிராமணன், அப்படின்னு வெட்டி சண்டை தமிழ்மணத்திலே போடாமா, அப்புறம் ஆரஞ்சு ஜீஸ் எப்படி குடிக்கலாமுன்னு நகைச்சுவைப் பண்ணிக்கிட்டு திரியாம இப்படி சீரியஸா இந்த பிஸினஸ் விஷயங்கள்ல ஆர்வம் இருந்து தெரிஞ்சுக்கிறவங்களா இருந்தா இந்த Mergers and Acquisitions (M&A) பத்தி தெரிஞ்சிருக்கிற வாய்ப்புண்டு!

இந்த 'M&A' ங்கிறது நம்ம வெத்திலை பாக்கு கடை நடத்தி வர்றவங்களுக்குக்கூட தெரிஞ்ச ஒன்னு தான், அதாவது, 'அந்த மூணாவது கடை ஒன்னு வருது அதை எப்படியாவது வாங்கி போட்டுட்டா இன்னும் கொஞ்சம் பெரிசா வியாபரம் பண்ணலாமுன்னு' நம்மூர் சின்ன வியாபாரிங்கள்ல இருந்து பெரிய பெரிய கார்ப்ரேட் வரை சிந்திக்கிற மற்றும் செய்யக்கூடிய விஷயம் தான்! என்ன நம்மூரு வெத்திலைப்பாக்கு கடைவியாபரி மொத்தமா காசை சேர்த்து, இல்லை அங்கே இங்கே கடனை வாங்கி அந்த வர்ற கடையை வாங்கிப் போட்டுடுவாரு, ஆனா கார்ப்ரேட் உலகத்தில அதுவே 'Share Purchase'ன்ன்னு ஒன்னு போகும் இல்லை 'Asset Purchase'ன்னு போகும்! இங்கேயும் கம்பெனிங்க சொந்த காசு போட்டும் வாங்கும், இல்லை இதுக்குன்னு கடன் கொடுக்கிற பேங்க்குங்க உண்டு, அங்கிருந்தும் வாங்கும். சிலசமயம் அந்த பேங்குங்களே எல்லா வேலையும் செஞ்சு கொடுத்து இந்த தன்மயமாக்குதலை நடத்தி வைக்கும், அவங்க தான் இடை தரகர் வேலை பார்ப்பாங்க, அதனாலே அவங்களை 'intermediaries', 'business brokers', இல்லை 'investment bankers' ன்னு அழைப்பாங்க! இந்த M&A யோட நோக்கம் என்னான்னா, முதல்ல 'Economies of scale', அதாவது இணைக்கப்பட்ட கம்பெனிகள் பிரம்மாண்டமா செயல்படும் போது அவசியமில்லா, இல்லை டூப்ளிகேட்டா இருக்கக்கூடிய சில துறைகளை வெட்டி, கம்பெனி உற்பத்தி செலவுகளை குறைச்சி அதிகம் லாபம் ஈட்டுவது, சந்தையிலே தன்னுடய பொருட்களின் விற்பனை சதவீதத்தை பெருக்க, வரி வட்டிகளை குறைக்க, புதுசான இடங்கள்ல பொருளை வித்து அங்க தன்னுடய சந்தையை பிடிக்க, தன்னிடம் இல்லாத வாங்கப்படும் கம்பெனிகளின் வேறு திறன்களால் அதிகம் லாபம் ஈட்ட, அப்பறம் 'Vertical Integration' ன்னு சொல்லிட்டு இந்த கருப்பொருள்ல இருந்து உற்பத்தி, விற்பனை, சந்தைக்கு எடுத்து செல்லல் என்று அனைத்து துறைகளையும் உள்ளடக்குவது, மொத்தத்திலே 'Supply Chain Management'ன்னு சொல்லக்கூடிய அத்தனை துறைகளிலும், வாங்கும் கம்பெனியால் உள்ளடக்கி தனிபெரும் நிறுவனமாக திகழ்ந்து பெரும் லாபம் ஈட்டுவது தான்!

சரி இதிலே என்ன விஷேஷமுன்னு கேட்கிறீங்களா, இந்த மாதிரி கம்பனிங்களை வாங்கி தன்னுடமையாக்கி ஒரு பெரிய நிறுவனமாகிறது எல்லாம் கொஞ்ச காலத்துக்கு முன்னால நம்ம நாட்ல நினைச்சுப் பார்க்க முடியாது ஒன்னு. ரொம்ப காலமா வழி வழியா பெரிய வியாபர கம்பெனிகள் தலைமுறை தலைமுறையா குடும்பங்கம்பெனிகளா தான் இருந்து வந்தது, அதுவும் நமக்கு ஆரம்பத்திலே இருந்து தெரிஞ்ச டாட்டா, பிர்லா குடும்பங்கள் கட்டி காத்த பெரும் நிறுவனங்கள் தான்! அப்புறம் சாதரண மக்களுக்கும் பங்கு சந்தைன்னா என்னான்னு வழி காமிச்சு பெரி முதலாளியா உருவான திருபாய் அம்பானி ஆரம்பிச்ச அந்த மிகப்பெரிய ரிலெயன்ஸ் நிறுவனம் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா நம்ம ஊர்ல இந்த மாதிரி பெரிசா வாங்கி ராஜ்யம் அமைக்கிறதுங்கிறது அவ்வளவா நடக்காத ஒன்னு, எல்லாமே இந்த ஊரு பக்கம் தான், அதாவது, இந்த பெரிய பெரிய M&A எல்லாம் அமெரிக்கா, ஐரோப்பிய நடுகள்ல இருக்கிற கம்பெனிகள்குள்ள நடக்கிற விஷயம் மட்டுமா இருந்த ஒன்னு! எப்பவாச்சும், நம்ம நாட்டுக்குள்ளேயே கம்பெனிகளை வாங்கி பெரிய வியாபர சாம்ராஜ்யம் அமையணும்னு, அங்கொன்னும் இங்கொன்னுமா நடந்துக்கிட்டிருந்துச்சு, ஆனா இப்ப நம்ம நாட்டை விட்டுட்டு உலகத்திலே இருக்கிற பெரிய பெரிய கம்பெனியை வளைச்சிபோட்டு நம்மலும் இன்னைக்கு பெரிய ஆளா வந்துக்கிட்டிருக்கோங்கறதுதான் அங்க விஷேஷமே!

இந்த Multi-National கம்பனிங்கங்கிறது உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒன்னு, இதுவரைக்கும் நம்ம ஆளுங்க போய் அங்க உட்கார்ந்துக்கிட்டு நமக்கு படிஅளந்தா போதும்னுட்டு இருந்தோம், ஆனா இப்ப நம்ம அவங்க ஆளுங்களுக்கு படி அளக்கப்போறோம்! எப்படின்னு கேளுங்க! இந்த அயல் நாட்டு கம்பெனியை வாங்குறதுங்கிறது அவ்வளவு சுலபமான காரியம் இல்ல முன்னே எல்லாம், அதுவும் 1990க்கு முன்னே, ஏன்னா அந்நிய நாட்டு செலவானி அதுக்கு நமக்குத் தேவை. அது நம்மகிட்ட இல்ல, நம்ம கஜானா காலியாயிடுச்சின்னு, 90ல சந்திரசேகரு பிரதமாரா இருந்தப்ப நம்ம நாட்டு தங்கத்தை கொண்டி அடகு வச்ச கதை உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது, ஆனா அதுக்கப்பறம் நரசிம்மராவு ஆட்சிக்கு வந்து நம்மலோட இப்பைய பிரதமர் நிதி அமைச்சரா இருந்தப்ப போட்டு வச்ச பாதை தான், இப்ப நம்ம நாட்ல அன்னிய செலவானி பொங்கி வழியுது! இப்ப கம்ப்யூட்டர் யுகம் வந்துட்டோன, சின்ன பசங்க நீங்க எல்லாம், இங்க வந்து போற நீங்க, சுலுவா நம்ம ஊர்ல எங்க வேணும்னாலும் மாத்தி, பச்சை டாலர் நோட்டை பச்சக்குன்னு பாக்கெட்ல சொருவிட்டு சும்மா ஜாலியா ஃபைளைட் புடிச்சு, இங்க வந்து கொண்டு வந்த காசை டேபிள் டான்ஸ், லேப் டான்ஸுன்னு வேட்டு விட்டுக்கிட்டு இருக்கீங்க! ஆனா அந்த 90ல பறந்து வந்த எங்களை கேளுங்க, இதை கொண்டு வர்றதுக்குள்ள நாங்க பட்ட சிரமம் என்னான்னு எங்களுக்குத் தெரியும்! அதுக்கு முன்னே அமெரிக்கா படிக்க வந்த நம்ம அண்ணமாருங்க வெறும் பத்து டாலர் எடுத்து வர்ற பட்ட பாடு இருக்கே, அப்படி கையிலே எந்த காசும் இல்லாம இங்க வந்து முன்னேறினவங்க கதை கேட்டுப்பாருங்க தெரியும்!

எதுக்கு சொல்றேன்னா, அப்ப இந்த கம்பெனிங்களும் அன்னியசெலவானியை தண்ணி மாதிரி இஷ்டம் போல போட்டு கரைச்சிட முடியாது அதுக்கு அப்ப இருந்த Foreign Exchange Regulation Act (FERA)சட்டம் அப்படி, நம்ம நாடல இருந்து அவ்வளவு சீக்கிரம் இந்த அன்னியச்செலவானியை(Foreign Exchange), அதான் நம்ம ரூவாயை டாலரை மாத்தி எதுவும் வாங்கிட முடியாது! 90ல ஆரம்பிச்ச இந்த மாற்றம், நம்ம சிதம்பரம், மன்மோகன், மிஸ்ரா மாதிரி ஆளுங்களால கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தோம், அந்நியச்செலவானியும் பெருகுச்சு ( இந்த அந்நியச்செலவானி பெருகிறது எப்படின்னு தெரிஞ்சுக்குனும்னா, கொஞ்சம் ஏற்றுமதி, இறக்குமதி சாமாச்சாரங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கினும், அதை பத்தி பதிவுகளை பொங்குதமிழில் படிக்குனும்னா நம்ம தமிழ் சசி எழுதுறதை அப்ப அப்ப பாருங்க) , இந்த சட்டத்தை ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னே Foreign Exchange Management Act (FEMA)வா மாத்தி இன்னும் சுலுவாக்கிட்டாங்க இப்ப, அதான் காசு இருந்த நம்ம கம்பெனிங்க எல்லாம் உலக கம்பெனிங்களை வாங்கி போட்டுடலாம்!

இப்ப அப்படி தான் சுமார் இந்த வருஷத்திலே இது வரைக்கும் 115 Acquisitions நடந்திருக்கு அதுவும் மொத்தம் 18 பில்லியன் டாலர்கள் மதிப்புல, அதே மாதிரி 8 பில்லியன் டாலர்கள் நம்ம நாட்க்கு முதலீடு செய்ய வந்திருக்கு! இந்த தன்னுடமையாக்கல்(Acquisition)இந்த வருஷம் 130க்கு மேலே போகும்னு சொல்றாங்க, அது என்னான்னு தெரிஞ்சுக்கும்னா இதோ சுட்டி. ஆக இனி வரும் நாட்கள்ல இது மாதிரி பெரிய பெரிய கம்பெனிகளை வளைச்சிப்போட்டு எல்லாம் நம்ம கையிலே வர வாய்ப்பிருக்கு! அதுக்கு இங்கே அமெரிக்கா, இங்கிலாந்தில் எதிர்ப்புகள் இருந்தாலும், காலத்தின் கட்டாயம்னு விட்டுத்தான் போகுனும்னும், அதுனால எல்லா நாடுகளுமே வளர்ச்சி அடையும்னு இங்க இருக்கிற பெரிய பெரிய பொருளாதார நிபுணர்கள் எல்லாம் சொல்றாங்க. முதல்ல கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பனிகள் தான் வாங்கி போட்டுக்கிட்டிருந்தாங்க, அதுன்னு இல்லாம இப்ப மத்த துறைகளில் உள்ள தொழில் நிறுவனங்களும் இந்த Acquisitionsல இறங்கிடுச்சிங்க.

அதுவும் இந்தியாவும் சைனாவும் இது மாதிரி போட்டி போட்டு கம்பெனிகளை வாங்கி தள்ள ஆரம்பிச்சிட்டாங்க! கொஞ்ச நாளைக்கு முன்னே சைனா நாட்டுக்காரன், அமெரிக்க எண்ணை கம்பனியான 'Unocal' என்கிற கம்பெனியை வாங்க வந்து, அது அரசியல் காரணங்களால முறியடிக்கப்பட்டது! இருந்தாலும் இது எத்தனை நாளைக்கு தடுக்க முடியும்னு தெரியாது! இதுக்கு என்ன காரணம்னா, இது போன்ற பெரிய கம்பெனிகள் அதாவது சக்தி (Energy), இரும்பு(Steel) போன்ற துறைகளில் கை ஒங்கி இருந்தா அது தன் வல்லரசு தன்மையை நிலை நிறுத்த வழின்னு உலக அரசியல் முட்டுகட்டைகள் நிறைய இருக்கு! ( இரும்பு உற்பத்தின்னு பார்த்த்கீங்கன்னா, உலக உற்பத்தியிலே 30% நம்ம கையிலே இருக்குத் தெரியுமா, நம்ம மித்தல் ஸ்டீல், டாட்டா ஸ்டீல் இரண்டும் சேர்ந்தே இது, ஆக எப்ப வேணும்னாலும் உலகத்தை மிரட்ட இது போதாதான்னு ஒரு கேள்வி எழத்தான் செய்யுது) ஆனா பொருளாதார வல்லமை முன்பு இது எல்லாம் எடுபடாது! அதுவும் இந்த அசுரத்தனமான இந்த பொருளாதார வளர்ச்சி முன்னே ஒன்னும் நிக்காது!

ஆனா வாங்கி போடறது பெருசில்ல, அதை சரியா ஆளுமை செஞ்சு இன்னும் பெரிய நிலைமைக்கு வரணும்ங்கிறது பெரிய குதிரைக்கொம்பு தான்! அதுவும் பல நாடுகளில் வியாபிச்சிருக்கிற இந்த ராஜாங்கத்துக்கு, அந்த அந்த நாட்டு கலாச்சாரம், அரசியில் ஆளுமை, அந்த நாடுகளில் வியாபாரம் செய்யும் திறமை எல்லாம் நம்ம நிறைய வளர்த்துக்கணும், அதே மாதிரி நம்ம அரசியல் வாதிங்களும் முழு கண்ணையும் திறக்கணும், நம்ம எப்படி உலகை ஆளா நாலா பக்கமும் படை எடுக்க துடிக்கிறமோ, அதே மாதிரி வெளி நாட்டு முதலீடுகளையும் வரவேற்கணும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியாவை வாங்கி பெரிசா ஆக்க முட்டு கட்டை போடக்கூடாது, அதே மாதிரி வால்-மார்ட் மாதிரி பெரிய ராட்சத தொழில் நிறுவனங்கள் இந்தியாவில தொழில் செய்ய அனுமதிக்கணும், அப்ப தான் நம்ம நாலா பக்கமும் போயி உலகை ஆளமுடியும்! சும்மா பம்மாத்து அரசியல் செஞ்சுக்கிட்டு முட்டுக்கட்டை போடாம இருந்தா போதும், நான் சும்மானாலும் விளையாட்டுக்கு சொல்லிக்கிட்டிருக்கிற மாதிரி ''Microsoft', 'General Motors', 'GE' எல்லாத்தையும் வளைச்சு போட்டுடுவோம், என்ன நான் சொல்லுறது?'ங்கிர பேச்சு உண்மையாகி 'நாளைய உலகம் நமது கையில்'ன்னு ஆகப்போகும் நாட்கள் அதிக தூரமில்லை!

Monday, March 27, 2006

சென்னை வந்தது ஜப்பான் - உதயமாகும் புதிய இந்தியா!

நான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தேன், 'உதயமாகும் புதிய இந்தியா- நாளை நமதே' என்று. இந்த பதிவிலே நான் நமது அசுர வளர்ச்சியின் தாக்கத்தை உலகம் எப்படி ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதிலும் 'Deming Prize' பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன், அதன் சுட்டியையும் உங்களுக்கு சொல்லி இருந்தேன். ஆனால் இந்த வார ஆனந்த விகடனில் 'சென்னை வந்தது ஜப்பான்' என்ற தலைப்பில் வந்த கட்டுரையை படித்தீர்களா?. படிக்காதவர்களுக்கு இதோ அந்த பிரசுரம்.

சேரனின் வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் ஒரு மான்ட்டேஜ். அந்த காட்சியில் நம் நாடு முன்னேறிய நாடாக உருவெடுத்திருக்கும். வெள்ளைக்காரர்கள் எல்லாம் நம்மூர் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வார்கள். நம் நாட்டு மக்கள் எல்லாம் துபாய் ஷேக் போல குகு படகுக் கார்களில் பவனி வருவார்கள். சேரனின் இந்தக் கனவு எந்த அளவுக்கு மெய்ப்படும், எவ்வளவு சீக்கிரம் மெய்ப்படும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால், சேரனின் கனவோடு மிகப் பொருந்திப் போகக்கூடிய காட்சி ஒன்றைக் கடந்த வாரம் சென்னை லூகாஸ் டி.வி.எஸ். தொழிற்சாலையில் பார்க்க முடிந்தது.

டொயோட்டோ கார் கம்பெனியில் ஆரம்பித்து ஜெ.டி.பி. கார்ப்பரேஷன், ரினாய் கார்ப்பரேஷன்... என ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோ மொபைல் கம்பெனிகளின் முதலாளிகள், உயர் அதிகாரிகள் என இருபத்தைந்து பேர் சென்னை, பாடியில் இருக்கும் லூகாஸ் டி.வி.எஸ். தொழிற்சாலைக்கு வந்திருந்தார்கள். அவர்களை அங்கே இழுத்து வந்தது எது தெரியுமா? தரம்!

திரைப்படத் துறைக்கு எப்படி ஆஸ்கர் விருதோ, அப்படித்தான் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் துறைக்கு டெமிங் விருது (Deming Prize). இப்படிப்பட்ட மிகப் பெரிய விருதை ஜெயித்திருக்கும் லூகாஸ் டி.வி.எஸ். தயாரிக்கும் ஸ்டார்ட்டர் மோட்டார், டைனமோ, ஹெட் லாம்ப் ஆகிய உதிரிபாகங் களைத் தாங்கி ஓடாத காரோ, மோட்டார் சைக்கிளோ உலகத்திலேயே இல்லை என்கிற அளவுக்கு, உலகெங்கும் இந்த கம்பெனியின் தயாரிப்புகள் செல்கின்றன. இதுதான் ஜப்பானியர் களை இந்த கம்பெனி நோக்கி இழுத்ததா?

திரைப்படத் துறைக்கு எப்படி ஆஸ்கர் விருதோ, அப்படித்தான் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் துறைக்கு லூகாஸ் டி.வி.எஸ். கம்பெனியிடம் ஜப்பானியர்கள் பாடம் படிக்க வருகிறார்கள் என்றால், இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா? இதற்கும் மேல் வலுவான காரணம் வேண்டும் அல்லவா?

இந்தக் கேள்வியை, அந்த ஜப்பானியக் குழுவுக்குத் தலைமையேற்று வந்திருந்த ததாஷி ஒனிஷியிடம் கேட்டோம்.

சென்ட்ரல் ஜப்பான் பகுதியில் இருக்கும் டொயோட்டா குரூப் கம்பெனிகக்கும், அவற்றைச் சார்ந்த கம்பெனிகக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் கம்பெனிகள் அனைத்துக்கும் தரக்கட்டுப் பாடு என்பதுதான் தாரக மந்திரம். தரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் தொழிற் சாலைகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி... அதைத் தேடிச் சென்று பார்வையிடுவது மட்டுமல்ல, அதனிடமிருந்து பாடங்கள் படிப்பதும் எங்கள் வழக்கம். அந்த வகையில்தான் லூகாஸ் டி.வி.எஸ்.ஸுக்கு வந்திருக்கிறோம் என்றார் ததாஷி ஒனிஷி.

சரி, அப்படி என்ன அதிசயம் நடக்கிறது டி.வி.எஸ்.லூகாஸில்?

டோக்கியோவில் உள்ள ஆஸ்மோ கம்பெனியைச் சேர்ந்த சுட்டூமூ சுசுகி இதற்குப் பதில் சொன்னார். இன்று காலையில் லூகாஸ் டி.வி.எஸ். தொழிற் சாலையின் அனைத்துப் பிரிவுகக்கும் சென்று, இங்கே தயாரிக்கப்படும் பொருள்களைப் பார்த்தோம். பொருள் கள் மட்டுமல்ல, அவை இங்கே தயாராகும் முறைகூட உலகத் தரத்தோடு இருப்பதைக் கண்டோம்.

இங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் எவருமே ஏதோ தொழிற்சாலைக்கு வந்தோம், அன்றைய வேலையை முடித்தோம், கிளம்பினோம் என்றில் லாமல், மனித உயிர்களோடு சம்பந்தப் பட்ட வாகனங்கக்கான உதிரிபாகங் களைத் தயாரிக்கிறோம் என்கிற உணர்வோடு, தங்கள் வேலையை பயபக்தியோடு செய்கிறார்கள். இத்தகைய தொரு தொழில் பக்தியை நாங்கள் வேறு எங்கும் கண்டதில்லை!

சுட்டூமூ சுசுகியைக் கவர்ந்த வேறு ஒரு அம்சமும் இந்த கம்பெனியில் இருக்கிறது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில்கூடத் தொழிலாளர்கள் இங்கே வந்து தாங்கள் வேலை செய்யும் மெஷின்களை சர்வீஸ் செய்கிறார்கள். உற்பத்தியாகும் பொருளின் தரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் இயந்திரம் பழுதடைந்திருந்தால், அதைத் தாங்களே கண்டுபிடித்துச் சரி செய் கிறார்கள். தரக்குறைவான ஒரு பொருளைத் தான் தயாரிப்பது கம்பெனிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் தனக்கே கேவலம் என்று ஒவ்வொரு தொழிலாளியும் இங்கே கருதுகிறார். இதுதான் இந்த கம்பெனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து! என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார் சுட்டூமூ சுசுகி.

இங்கே இருக்கும் தொழிலாளர்களின் வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது இங்கே இருக்கும் பயிற்சிக்கூடம். தான் சம்பந்தப்பட்ட துறை யில்தான் என்றில்லை, ஆர்வம் இருந்தால் மற்ற துறைகளைப் பற்றியும் இங்கே ஒரு தொழிலாளி யால் பயிற்சி பெற முடியும். கம்ப்யூட்டர், லேட்டஸ்ட் உபகரணங்கள், பயிற்சித் திட்டம், பயிற்சியாளர்கள் என எதற்கும் இங்கே பஞ்சம் இல்லை. தேவை ஏற்பட்டால் வெளிநாடுகக்கு அனுப்பிக்கூட தொழிலாளர்கக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் தொடர்ந்து சாதிக்கக் களம் அமைத்துக் கொடுத்தவர் இந்த கம்பெனியின் மேலாண் இயக்குநர் டி.கே.பாலாஜி. அவர் சொன்ன கருத்துக்களில் மறைந்திருக்கிறது இந்த கம்பெனியின் வெற்றி ரகசியம்.

ஜீரோ டிபெக்ட் & அதாவது, நூறு டைனமோவை விற்பனை செய்தால் அதில் ஒன்றுகூடப் பழுதானதாக இருந்துவிடக்கூடாது என்று நாம் சொல்கிறோம். ஆனால், ஜப்பானியர் களோ ஜீரோ டிபெக்ட்டையும் தாண்டி மேலே சென்றுவிட்டார்கள். அது எப்படி என்கிறீர்களா? நோயில்லாமல் இருப்பதே பூரண ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமாகாது இல்லையா? அதே மாதிரி குறையில்லாமல் இருந்தால் மட்டும் போதாது... நாம் தயாரிக்கும் பொருள்கள் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். அதுவும் முக்கியம்!

தரம்பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் காலம் போவது தெரியாமல் அந்த சப்ஜெக்டில் மூழ்கிவிடுகிறார் பாலாஜி. லூகாஸ்&டி.வி.எஸ். கம்பெனியின் மகத்தான வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

இதெ இதெத்தான் நான் சொல்ல வந்தேன் என் 'உதயமாகும் புதிய இந்தியாவிலே'

நாளை நமதே! ஜெய் ஹிந்த்!!

Friday, March 03, 2006

உதயமாகும் புதிய இந்தியா- நாளை நமதே!

வந்தாலும் வந்தாரு புஷ் இந்தியாவுக்கு, இங்கிருக்கிற பத்திரிக்கை, புத்தகமெல்லாம் இந்திய புகழ் பாடாத குறையா, அதை பத்தி தான் எழுதி தள்ளிகிட்டு இருக்காங்க! ஆசியாவின் அடுத்த பவர் ஹவுஸ் அப்புடின்னு ஒரே புகழாரம். ஏன் திடீர்னு இந்த பாசம், கவனிப்புன்னு யாரும் தெரிஞ்சுக்கிட்டீங்களா? அப்படி என்னதான் ஆச்சு, சுவிட்சர்லாந்தில உள்ள டெவோஸ் ('Davos') ல நடந்த வேர்ல்ட் எக்னாமிக் ஃபாரத்தில பேசப்படுற ஒரு ஸ்டார் யாருன்னா, இந்திய துணை கண்டம் தான். கவனிச்சீங்களா, இந்த ஒரு இரண்டு மாசமா அத்தனை உலகத் தலைவர்களும் இந்தியாவில டேரா அடிச்சிக்கிட்டு இருக்காங்க, புஷ்ஷ விடுங்க,

போன ரெண்டு வாரம் முன்ன பிரஞ்சு அதிபர் வந்து ஏதோ ஏதோ கை எழுத்து போட்டுட்டு போனாரு, அதுக்கு முன்ன சமீபத்தில முடி சூட்டின சவுதி அரசர் வந்திட்டு போனாரு. அது மாதிரி இப்ப புஷ்ஷு போனதுக்கப்பறம், ஆஸ்திரேலிய பிரதமர் வரப்போறாரு! அப்படி என்னதான் ஆச்சு. திடீர்னு எல்லாருக்கும் நம்ம மேல கவனம் திரும்ப, நம்மல பத்தி நல்லா தெரியுமா இவங்களுக்கு நம்ம எப்படி பட்ட தேசமுன்னு, இல்ல நமக்குத்தான் தெரியுமா, இவங்ககிட்ட இருந்து என்ன எதிர் பார்க்கிறோமுன்னு! ஒரு பார்வை பார்க்கலாமா?

முதல்ல இந்த 15 வருஷ கால கட்டத்தில நம்முடய அசுர வளர்ச்சி, அத எப்படி சொல்றதுன்னா, Gross Domestic Product(GDP), ஜிடிபி,ஜிடிபின்னு ஒன்னு சொல்வாங்களே அதை கேள்விபட்டிருக்கீங்களா! அதாவது ஒரு நாட்டின் முதலீடுகள், ஏற்றுமதிகள், தனிமனிதர்களின் செலவீனம், புறவு அரசாங்கத்தின் செலவீனம் இது எல்லாத்தையும் கூட்டிகழிச்சு ஒரு சதவீதத்தை சொல்றது. இதை பொருளாதார நிபுணர்கள் எழுதறதை பார்த்திருப்பீங்க, இது இப்ப நம்ம கிட்டதட்ட 8 சதவீதம் அடைஞ்சிட்டோம். தொடர்ந்து மென்மேலும் வளர நிரைய வாய்ப்புகள் இருக்கு. இத வெறுமன சொன்ன உங்களுக்கு புரியாது, மத்த நாடுகளோட ஒப்பிட்டு பார்த்தா நாம எப்படின்னு புரியும். உதாரணத்துக்கு, சைனா 9.9%, ஹாங்காங் 7.6%, மலேசியா 5.2% , அமெரிக்கா 3.1%, ஆஸ்திரேலியா 2.6%, ஜப்பான் 4.2%, பிரான்ஸ் 1.2%, கனடா 2.8%, இப்படின்னு பட்டியல் போட்டு பொருளாதார வளர்ச்சியை குறிப்பாங்க. இப்படி வருஷா வருஷம் இது ஏத்ததில இருந்தா, அப்படியே உயர்ந்துகிட்டு போனாலும் , நிலையா அதிகபடியான சதவீதத்தில இருந்தாலும், ஒரு நாடு வளர்ச்சி அடையுதுன்னு சொல்வாங்க, அப்படி அதிகமா நம்ம சைனாவுக்கு நிகர வளரருதுனாலதான் நம்ம மேல ஒரு கண்ணு!
எல்லாம் நம்ம கிட்ட கை கோக்க ஆசை படறாங்க. இதை பத்தி ஆராஞ்சி சில பேரு அடுத்த 50 வருஷத்தில நம்ம எப்படி இருப்போம்னு ஜோசியம் சொல்றாங்க, அதாவது, இன்னும் பத்து வருஷத்தில நம்ம பொருளாதாரம் இத்தாலிய நாட்ட விட பெரிசாயுடுமுன்னு, அப்புறம் இன்னும் 15 வருஷத்தில பிரிட்டன் நாட்டை தூக்கி சாப்பிட்டுவிடுமோன்னு. 2040ல நம்ம தான் பொருளாதாரத்தில வளர்ந்த மிகப்பெரிய நாடு. இன்னய தேதிக்கு அமெரிக்கா தான் அந்த அந்தஸ்த்தில இருக்கு தெரியுமா? பிறகு 2050ல ஜப்பானை விட அஞ்சு மடங்காகிவிடுமுன்னும், நம்மலோட சம்பாத்தியம், அதாவது 'Per Capita Income'னு சொல்றது 35 மடங்கு அதிகரிச்சுடும்னு ஜோஸ்யம் சொல்லியாச்சு. இதெல்லாம் உண்மையாகுமான்னெல்லாம் தெரியாது. ஆனா, இன்றைய காலகட்ட வளர்ச்சி, அவங்க ஏற்கனவே யோசிச்சி வச்சிருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாயிருக்கு. அதனால இந்த ஹேஸ்யம் எல்லாம் சாத்தியமேன்னு சொல்றாங்க!

இதுக்கு சில நிகழ்கால சாத்தியங்களை கொஞ்சம் பாருங்க, இந்தியவில உள்ள சில கம்பெனிகளின் அசுர வளர்ச்சி அவர்களின் நிகர லாபமே இதுக்கு அத்தாட்சி, வரிசையா ஒவ்வொரு வருஷமும், 15,20 25 சதவீதம் லாபத்தை உயர்த்தி இருக்கிறதை வச்சு கண்டுக்கலாம், இல்ல பங்கு சந்தையின் அபார வளர்ச்சி, அதாவது அத்தனை நாடுகளும் போட்டி போட்டிக்கிட்டு முதலீடு செஞ்சு, அதிகப்படி லாபம் வந்து அதனோட பங்குகளின் வளர்ச்சியை 'பாம்பே ஸ்டாக் எக்சேஞ் sensex' 10000த்துக்கு மேல போயிருப்பதை எல்லாம் பார்த்திருப்பீங்க. இன்னொரு உதாரணம், நம்ம டாடா குருப்பை எடுத்துக்கங்க, அவெங்க செய்யாத தொழில் இல்ல, காருலருந்து, சாப்ட்வேர் வரைக்கும், அவங்க வளர்ச்சி, 1700 கோடியிலிருந்து 2400 கோடி வரை உயர்ந்திருப்பது. பிறகு ஆட்டோ பார்ட்ஸ் செய்யக்கூடிய சின்ன சின்ன கம்பெனிகளின் சம்பாத்தியம் 400 கோடியிலிருந்து, 1000 கோடி வரை வளர்ச்சி அடைஞ்சிருக்கு. அடுத்த சில ஆண்டுகள்ல பெரிய அமெரிக்கவின் கார் கம்பெனி ஜென்ரல் மோட்டார்ஸ், ஒரு 100 கோடிக்கு ஆட்டோ உபரி பாகங்களை இந்தியாவிலருந்து இறக்குமதி செய்ய போறாங்க!

ஆனா அதே சமயத்தில நம்மலோட அடுத்த பக்கத்தை பார்த்தீங்கன்னா ஒரே சோகம். அது தான் நமது ஏழ்மையும், சுகாதார சீர்கேடும். இன்னைக்கு உலகத்தில இருக்கிற ஏழ்மையான நாடான நைஜீரியா மாதிரி மூணு நாடு நம்ம நாட்டுக்குள்ள இருக்குன்னா நம்பமுடியாமா உங்களுக்கு, ஆனா, அதான் உண்மை. சிதிலமடஞ்ச நம்ம ஏர்போர்ட்டுகள், நெரிசல்மிகுந்த சாலைகள், நகரின் மையப்பகுதி சேரிகள்னு தான் வெளிச்சம் போட்டு காட்டமுடியம். முதல்ல சொன்ன மாதிரி, 300 சிலிக்கான்வேளிகள் இருந்தாலும் 3 நைஜீரியாக்களும் கொண்ட நாடு தான் நம்நாடு! 30 கோடிக்கு மேல தினப்படி வருமானம் ஒரு டாலருக்கு கீழேன்னா ஆச்சிரியமில்ல, இங்க, அமெரிக்காவில, கிட்டதிட்ட ஒரு டாலருக்கு ஈடான காசு நாணயங்களை தூக்க சிரமப்பட்டு, அது வேணாமின்னு அங்க அங்க வச்சிருக்கிற தர்ம உண்டியல்ல போட்டுட்டு போற நம் ஊர்லருந்து இடம்பெயர்ந்த நம்மூரு மக்கள், அவங்க போடற அந்த தர்மகாசுகள் தான், இந்தியாவில எத்தனையோ பேரோட தினப்படி வருமானம் இன்னமும்னு எத்தனை பேருக்கு தெரியும்? உலக ஏழைகள்ல 40 சதவீதம் நம்ம நாட்ல இருக்கிறது எத்தனை பேருக்கு தெரியும். உலகத்தில நம்ம தான் இரண்டாவது இடம், HIV கிரிமியோட அலையிற மக்கள் தொகையிலன்னு எத்தனை பேருக்கு தெரியும்? இப்படி நாம சோகமயமான பக்கத்தை கொண்டிருந்தாலும், நம் எதிர்நோக்கி இருக்கும் வருங்காலம் ரொம்ப புதுசு! எப்படின்னு கேளுங்க!

நம்ம வளர்ச்சியை சைனாவோட ஒப்பிடறப்ப, நம்முடோது திட்டமிட்டு செயல்படுபவை அல்ல, ஒரே குழப்பம், கட்டுபாடு இன்றி ஏனோ தானோன்னு வளரும் ஒன்னு. சைனாவை போல திட்டமிட்டோ, இல்ல சீரமைப்போடவோ ஒன்னும் செய்றதில்லை. 'புதுசா ஏர்போர்ட்டு வேணும்னாலும், இல்ல எட்டு வழிதடம் கொண்ட ரோடு வேணுமின்னாலும், இல்ல பூத்து குழுங்கும் தொழிற்பூங்கா வேணுமின்னாலும், இதே ஒரு சில மாசங்கள்ல தயார்' அப்படின்னு எதுவும் வந்திடறதில்லை. இதெல்லாம் தான் வெளிநாட்டு மூலதனங்கள் எதிர்பார்க்கும் ஒன்னு. இம் என்றவுடன் உண்டாவதில்லை இந்த வசதிகள் . நம் அரசாங்கமும், சைனாவை போன்ற அடக்குமுறை சர்வாதிகார அரசாங்கம் ஒன்னும் இல்லை. நினைத்த மாத்திரத்தில் ஒரு பீகிங் போலவோ, இல்லை ஷாங்காய் போலவோ உருவாக்கிட முடியறதில்லை. ஏன்னா நம்முடையது, மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஜனநாயக அரசு, அதுக்கு முட்டுகட்டை போட நிறைய அமைப்புகள் உண்டு. முக்கியமா கம்னியூஸ்ட் கட்சி, யூனியன் இதுவே போதும். ஜனநாயகத்தால் பயனடைவோர் குறிப்பிட்ட யூனியன் சங்கத்தினர், முதலாளிகள், ஜாதிகள், பணக்கார வர்க்கங்கள், இவைகளே, ஜனநாயகத்தின் அடிமட்ட குடிமகன் என்றும் ஜனநாயகத்தால் பயனடைந்தான் என்று சரித்திரமே கிடையாது! ஆக சைனாவை போல, இந்த ஜனநாயக அரசாங்கம் அத்தகைய உரிமை பெற்றதில்லை, நிமிடத்தில் வசதி படைத்திட! ஆனால் இந்த வெளிநாட்டு மூலதனங்களின் தேவைகளை பூர்த்தி செய்திட, நமக்கே தெரியாமல் நம்மிடையே வளர்ந்து வரும் வியாபார தந்திரம் படைத்த விற்பண்ணர்கள், சீக்கிரம் பணம் பார்க்க துடிப்பவர்கள் 'Entrepreneurs' தான் முக்கிய காரணம். அதனால் தான் இந்த வளர்ச்சி! கோல்கேட் பற்பசை தயாரித்த 'Procter & Gambel' நிறுவன பழைய தலைவர்'குருசரன்தாஸ்' சொன்ன மாதிரி 'அரசாங்கம் இரவில் தூங்கும் பொழுது, பொருளாதாரம் வளர்கிறது'

ஆக இப்படி வழி நடத்தும் இந்த புதிய விற்பண்ணர்கள் தான் இந்த இமாலய வளர்ச்சிக்கு காரணம். இன்னொன்னு தெரியமா, வளர்ந்து வரும் நம் இந்திய கம்பெனிகள் சைனாவினுடய கம்பெனிகளை விட நிர்வாக திறமை பெற்று முன்னனியில் இருப்பதை. உலக சந்தையில் அதிஉன்னதமான கம்பெனிகளின் வரிசையில் இடம் பெற்ற நம் 'Infosys', 'Ranbaxy', 'Reliance' போன்ற தனியார் கம்பெனிகளின் வளர்ச்சி, உலக முதலீட்டாளர்களிடம் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு, அந்த சைனாவின் கம்பெனிகளோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது. இன்னொன்னு தெரியுமா, ஒவ்வொரு வருஷமும் ஜப்பான்ங்காரன் கொடுக்கும் உலகில் சிறந்த கம்பெனிக்கான பரிசு, 'Deming Prize', சிறப்பாக நடத்தப்பட்ட கம்பெனிகள்ல, இந்தியாவில இருக்கிற கம்பெனிகளுக்கு சமீபமா தொடர்ந்து கொடுத்திருக்கிறான், தெரியமா? அதில நம்ம 'சுந்தரம் கிலைட்டான்ன்னுக்கும்' கிடச்சிருக்கு, வேணும்னா இதோ சுட்டி அது மாதிரி இந்த விற்பண்ணர்கள் மட்டுமில்ல இந்த வளர்ச்சிக்கு காரணம், உங்களை, என்னை மாதிரி ஆளுங்களும் காரணம். எப்படி?

நமக்கு நாமே ராஜா, வீடு வேணும்னா, இந்தோ லோனை போட்டு உடனே கட்டிமுடிச்சிடுறோம், காருல போவனும்னு ஆசை பட்டா இதோ ரெடி, காருக்கு பணம் கடங்கொடுக்க ரெடி, வாங்கி ஓட்டியாச்சு, இதை ஒருத்தர் ரெண்டு பேருல்ல ஒட்டு மொத்தமா எல்லாரும் பண்ண இறங்கிட்டா, இதைத்தான் தனிமனித செலவீனம்னு சொல்றது. இப்படி செலவீன சதவீதத்தில நம்ம இப்ப 67%, சைனா 42%. கிட்ட திட்ட அமெரிக்காவுக்கு பக்கத்தில நெருங்கிட்டோம், அவங்களோடது 70%. 'Credit Card'தொழில் வளர்ச்சி இதுனால 35% வருஷத்துக்கு முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அப்புறம் செல்போன், இப்படி சொல்லிக்கிட்டே போலாம். இப்ப புரியுதா, நம்ம GDPயின் வளர்ச்சி என்னான்னு. ஏற்கனவே சொன்ன மாதிரி 'GDP' சதவீதம் கூட்டி கழிக்க இந்த தனிமனித செலவீனம் ஒரு அங்கமாகிறது.

இது வெறும் கணக்கு போட்டு சொல்லும் மந்திர வளர்ச்சி இல்ல, உண்மையாவே, வளரதுடிக்கும் நம்மவர்கள் எத்தனையோ பேரு இந்தியாவை விட்டு உலகம் முழுக்க வியாபிக்க, பொருளாதார படைஎடுப்பு நடத்த துடிக்கிறாங்க. ஏன் நம்மளுடய கனவு தொழிற்சாலை, சினிமா தொழிற்சாலை, ஹிந்தி, தமிழ், தெலுங்குன்னு, எல்லாரும் உலகம் முற்றிலும் இருக்கும் 50 கோடி ரசிகர்களை குறிவச்சு கதை எழுதி படம் பண்ணி வெளியில விடுறாங்க. இதில நம்ம தமிழ் திரையுலகம், ஹிந்திபடவுலகம் மாதிரி இன்னும் எழுச்சி பெறலன்னு தான் சொல்வேன். ஏன்னா, இப்ப வர ஹிந்தி படங்கள் பெரும்பான்மையா குறி வைக்கிறது வெளி நாட்ல இருக்கும் இந்தியர்கள் தான். அப்படி வளரும் பொழுது, அடுத்த நாட்டவனையும் ரசிகர் கும்பல்ல சேர்க்கும் காலம் அதிக தூரமில்லை, அப்புறம் பாருங்க எப்படி அசுரத்தனமான வளர்ச்சின்னு! எத்தனையோ ஏற்ற தாழ்வுகள், அரசாங்க சிக்கல்கள், கையாலாகத்தனம், மற்றும் இரைச்சலான ஜனநாயகம் என்று இருந்தாலும், தனிபட்ட மக்கள் விழித்தெழ ஆரம்பிச்சாட்டங்க, ஆக அவங்க எல்லாரும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியில தனி தனி ராஜாவாயாச்சு, ஆக நம்மகிட்ட இருந்த விலங்கை உடச்சிக்கிட்டு எல்லாரும் வெளியே வர துவங்கியாச்சு!

நம்ம நேரு சொன்ன மாதிரி 'இது போன்ற தருணம் சரித்திரத்தில எப்பவாவது அரிதா தான் வரும், அப்படி வரும் பொழுது, நம் அடிமைத்தனம் விலகி, பழமையை உடைத்து, புதுமை காண வெளிவா' அவரு சொன்னது நள்ளிரவில் சுதந்திர இந்தியா பிறந்தபொழுது, அதே மாதிரி, இப்போ பிறப்பது அதே போன்ற புதிய இந்தியா, ஒரு தனித்துவமான சமூகம் அமைக்க, புரட்சி கொண்டு, வண்ணங்களோடு வெளிப்படையான,துடிப்பான, எல்லாவற்றிக்கும் மேலாக புதிய மாற்றங்களை ஏற்று உதயமாகும் புது இந்தியாவை உருவாக்க , வா வெளி வா! புரட்சி படைப்போம்! நாளை நமதே!