Monday, February 27, 2006

வல்லவனுக்கு வல்லவன்

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய பயணத்தை ஒட்டி, இப்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கும் சர்ச்சைகளில் ஒன்னு, இந்த நியூக்ளியர் டீலை பத்தினது. இது என்னான்னு அதிகமா நம்ம வெகுஜன மக்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. நானும் தொடர்ந்து இது பத்தி இரண்டு மூணு இடுகைகள் படிச்சி பின்னோட்டமும் போட்டேன், இந்த ஃபீல்ட்ல வேலை செஞ்ச ஆளுங்கிற முறையில கொஞ்சம், இந்த டீல்ல இருக்கிற சில சூட்சமங்களை எடுத்து விட்டிருக்கேன் கீழே படிங்க!

திடீர்னு என்னடா இந்த நியூக்ளியர் மோகம் எப்படி வந்ததுன்னா, அதுக்கு காரணம் இருக்கு! நான் ஏற்கனவே எழுதின 'வேண்டும் ஒரு புதிய ஷக்தி' பதிவு படிச்சிங்கன்னா உங்களுக்கு தெரியும். உலகத்தோட ஒட்டு மொத்த பொருளாதாரமே, பூமியிலருந்து கிடைக்கிற இந்த கச்சா எண்ணய்ய கொண்டு தான். அது அதிகமா கிடைக்கும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் திறதன்மை ஆட்டங்கண்டதாலேயும், மேற்கொண்டு இஸ்லாமிய நாடுகள்ல உண்டான தீவிரவாத தன்மையும் ஒரு காரணம். அதனால வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள், ஏற்கனவே இந்த நியூக்ளியர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தாலும், சில பெரிய அணு உலை விபத்துக்கள் மற்றும் அதவிட மலிவா கிடைக்கும் கச்சா எண்ணைய் கிடைச்சதாலே, அதில அவ்வளவு கவனம் செலுத்தில. இன்னொன்னு, அதற்கு உண்டான முதலீடு ரொம்ப ஜாஸ்தி. அடுத்தது, கச்சா எண்ணைய் மற்றும் எரிவாயு பேன்றவற்றில் எந்த வில்லங்கமும் இல்லை. ஏன்னா எரிஞ்சு தீர்ந்திடும். ஆனா நியூக்ளியர் அப்படி இல்ல, எரிஞ்சோனதான் அதோட வேலையே, 'நியூக்ளியர் பாம்' செஞ்சுப்புடலாம்ங்கிறதுனால, எல்லா நாடுகள்யும் போய் சுலபமா மூலதனம் போட்டுத் தொடங்கிடமுடியாது. அதுக்கு தடை உண்டு, அப்புறம் எல்லாருமே கைய முறுக்கிக்கிட்டு 'டேய் டூய்'ன்னு 'எங்கிட்ட நியூக்ளியர் பாம் இருக்குன்னு' உதார் விட்டுக்கிட்டு இருப்பாங்க எல்லாரும். ஆகையால், இதற்கு பெரும்பாலும் முதலீடு செய்வது அந்தந்த அரசாங்கங்களே! நம்ம நாட்டிலேயும் இந்த நிறுவனம் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் நிறுவனம்.

இந்தியாவில இந்த நியூக்ளியர் வளர்ச்சிக்கு உறுதுணையா இருந்தவர் 'ஹோமி பாபா'. ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னே அவரு வடிவமைச்ச திட்டம் தான் மூணு அடுக்கு திட்டம். அந்த திட்டம் என்னான்னு சொல்றதுக்கு முன்னே, இந்த நியூக்ளியர் மின்னனு ஆலை எப்படி செயல்படும்னு சொல்றேன். அதாவது யுரேனியங்கிற ஒரு வஸ்துவை, அதன் அணுக்களை பிளந்தா, வெளிப்படக்கூடிய வெப்ப சக்திய உபயோகிச்சு தண்ணிய கொதிக்க வச்சு, அதிலருந்து வர நீராவியை பெரிய டர்பைன்கள சுழல செஞ்சு அதோட மின்சாரம் உற்பத்தி பண்ற ஜெனேரட்டரை இணைச்சு சுழல செஞ்சு மின்சாரம் உற்பத்தி பண்றது தான் இந்த நியூக்ளியர் பிளான்ட்டோட வேலை. நம்ம மெட்ராஸ் பக்கத்தில இருக்கிற கல்பாக்கம் யாரும் போயிருந்தா அங்க அந்த அணு உலை டூம்மை நீங்க பார்க்கலாம். அப்ப்டி எரிச்ச யுரேனியத்திலருந்து வெளிவரும் புளுட்டோனியம்ங்கிற இன்னொரு வஸ்துதான் பாம் செய்யக்கூடிய பொருள். நான் முன்ன சொன்னமாதிரி எரிச்சு முடிஞ்சு தான் வில்லங்கமே! ஆனா, நான் சொன்ன மாதிரி அவ்வளவு ஈசியா இந்த யுரேனியத்தை பிளந்திட முடியாது. இயற்கையா கிடைச்ச யுரேனியத்தை கொஞ்சம் போல அணுபிளக்க கூடிய பலமான யுரேனியமா மாத்தனும். அதுக்கு பேரு ஆங்கிலத்தில 'Enriched Uranium'. இப்படி பலமான யுரேனியமா மாத்த உண்டான தொழில்நுட்பம் அவ்வளவு ஈசியா கிடைச்சிடாது. ஏன்னா, இந்த பலமான யுரேனியத்தை வச்சு பாம்மு பண்ணிபுடலாம். அதனால, இந்த தொழில்நுட்பம் தெரிந்த நாடுகள் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் எல்லாம் ஒன்னுக்கூடி வளராத நாடுகளை தங்க பார்வையில வச்சுக்கினும்னு ஒரு மசோதா கொண்டு வந்தாங்க, அது தான் 'NPT'ன்னு படிச்சிருப்பீங்க, அந்த விவரத்துகெல்லாம் நான் போகலை இப்ப! அதில கையப்பம் இட்டா உங்களுக்கு அந்த தொழில்நுட்பம் உண்டு. நாம அதில கை எழுத்து போட்டா அவங்களுக்கு அடிமை, அதனால,

நம்ம பாபா என்ன பண்ணுனார்னா, இந்த பலமான யுரேனியம் இல்லாம அணுமின்நிலையம் கட்டமுடியாதான்னு யோசிச்சப்ப, கனடா நாட்டுக்காரங்கட்ட இயற்கையான யுரேனியத்தை உபயோகிச்சு கட்டன அணு ஆலை தெரியவந்து, அவங்களோட ஒப்பந்தம் போட்டு, ராஜஸ்த்தான்ல ஒரு அணுமின்நிலையம் கட்டினாங்க, அவங்க துணையோட. அதுக்கு முன்ன இந்த பலமான யுரேனியத்தை உபயோகிச்சு கட்டின அணுமின்நிலையம் தாரப்பூர்ல, அமரிக்காவின் தொழில்நுட்பத்தில கட்டினது. அதுக்குள்ள 1974 ல நம்ம அணுகுண்டு வெடிக்க போயி, கனடா, அமெரிக்கா, எல்லாரும் அம்போன்னு நம்பல விட்டுட்டு ஓடிட்டாங்க. அப்புறம் இங்க , அங்க கையேந்தி இந்த மின்நிலையத்தை ஓட்டினோம். அப்படி தொடர்ந்து ஓட்டுனும்னா, International Atomic Energy Agency (IAEA)ங்கிற நிறுவனத்தின் மேற்பார்வையில இந்த அணு ஆலைகள் எல்லாம் கண்கானிக்கப்பட்டு ஓட்டப்படனும். பிறகு முட்டி மோதி நம்மலா தொழில்நுட்ப வளர்ச்சியை பெருக்கி, நிறையா அணு உலைகளை கட்டிட்டோம். அந்த அணு உலை எல்லாம் 'IAEA'கீழே கண்காணிப்பில இல்ல.

அப்புறம் பாபாவின் மூணு அடுக்கு திட்டத்தில முதல இயற்கையான் யுரேனியத்தை உபயோகிக்கிறது, இரண்டாவது கட்டமா, அது வெந்த உலையிலயிருந்து கிடைக்கும் புளுட்டோனியத்தையும் யுரேனியத்தையும் கலந்து 'Fast Breeder Reactor'ன்னு இன்னொரு மாதிரி அணு உலை கட்டறது. பிறகு மூணாவதா, நம்ம நாட்ல அளவுக்கு அதிகமா 'தோரியம்'னு ஒரு வஸ்து கிடைக்கிது, அது அப்படியே 'decay' ஆனா 'U233, அதாவது யுரேனியமாயிடும், பிறகு அதை அணு உலையில உபயோகிக்கலாமும்னு மூணாவது கட்ட திட்டம். இந்த தோரியத்தில செஞ்சது தான் 'லாந்தர்', அதாவது பெட்ரோமாஸ் லைட்டுன்னு கேள்விபட்டிருக்கிங்களா, அதில வெள்ளையா ஒன்னு, பம்பு பண்ணோன்ன சும்மா 'பளிச்'னு எரியும் பாருங்க, அதை செஞ்சிக்கிட்டு இருந்தாங்க முன்னெல்லாம், இந்த தோரியத்தோட அருமை தெரியற வரைக்கும். நம்ம கேரளா, திருநெல்வேலி, கன்னியாக்குமரி கடற்கரை மணல்ல இருந்து எடுக்கபடுவது. நம்ம நாட்ல உலகத்தில இருக்கிற ரிசர்வ்ல்ல முப்பது சதவீதம் இருக்கு, தெரியமா? இதெல்லாம் தெரிஞ்சு திட்டம் போட்டு, ஆராய்ச்சி பண்ணி இப்ப நம்ம இதை உபயேகிக்க முதலிடத்தில இருக்கிறோம். வேணும்னா இந்த ரிப்போர்ட்ட படிச்சு பாருங்க, சுட்டி இதோ. இதல்லாம் தெரிஞ்சு வராரு அய்யா இப்ப அமெரிக்கா நம்மகிட்ட, டீல் பண்ண! என்னான்னு விவரம் கேளுங்க சொல்றேன்.

1999ல திருப்பி அணுகுண்டு வெடிச்சோன, நமக்கு 'சூப்பர் கம்ப்யூட்டர்லருந்து எந்த தொழில்நுட்பமும் கிடைக்காது போ'ன்னு துரத்திவிட்டவரு, இப்ப என்ன சொல்றாருன்னா, நான் உனக்கு உதவுரேன், உன்னுடய ஆக்க பூர்வமான அணு உபயோகத்துக்குன்னு! ஆனா சில கண்டிஷன், அத நீ கேட்டகணும் அப்படின்னு. அங்க தான் வில்லங்கமே! போன ஜீலையில நம்ம பிரதமர் வாஷிங்க்டன் வந்தப்ப ஒரு அக்ரிமென்ட்ல கை எழுத்து போட்டுட்டு போனார். அதாவது நம்ம கிட்ட இருக்கிற நியூக்ளியர் சொத்தை ரெண்டா பிரிக்கிறது. அதாவது ஆக்கபூர்வமா மின்சாரம் தயாரிக்கிற வசதிகள், இன்னொன்னு மிலிட்ரிக்கு தேவையான பாம் செய்யக்கூடிய வசதிகள். அப்படி ஆக்கபூர்வமா மின்சாரம் தயாரிக்கிற வசதிகளை உலகநாடுகள் நிறுவனம் IAEA மூலமா கண்காணிக்கப்படும். அப்படி என் கண்கானிப்பில இருந்தின்னா, நீ கேட்கிற தொழில்நுட்பமெல்லாம் நான் தரேன்னு. அப்படி பிரிக்கிறதல தான் இப்ப வில்லங்கமே. நம்ம நியூக்ளியர் விஞ்ஞானிங்க என்ன சொல்றாங்கன்னா, அமெரிக்கா போட்டு கொடுத்த லிஸ்ட் படி எல்லா வசிதியும் சேர்க்க கூடாது, நம்ம 'Fast breeder reactor', நம்ம முயற்சில கண்டுபிடிச்ச வசதியை முக்கியமா சேர்க்க கூடாது, ஏன்னா அவங்க கண்காணிப்புல நாம இருந்தோமுன்னா, நம்ம மூணு அடுக்கு திட்டத்துக்கு அமெரிக்கா இடையூரு விளைவிக்கும். அப்புறம் நம்ம தனி சக்தியா வளர்றது அம்பேல்ன்னு!

வாஸ்த்தவமான பேச்சு! இப்ப நம்ம வளர்ந்து வரது அவங்களுக்கு கொஞ்சம் காய்ச்சலாதான் இருக்கு. ஏற்கனவே, பொழுதென்னைக்கும், இந்தியா, சைனான்னு தான் பேச்சே! ஏன்னா நம்ம பொருளாதார வளர்ச்சி அவங்களை அசர வைக்கிது. இன்னொன்னு தெரியுமா, நம்ம உலகத்தில சொத்து வாங்குனும்னா, இவங்களை கேட்டுத்தான் வாங்கனுமா? இது எப்படி? இப்ப தற்சமயம் இந்தியா சிரியா நாட்ல இருந்து 'Oil and Gas' சொத்து வாங்க போனப்ப ஒரே கூச்சல் போட்டு, ரகளை வுட்டுடாங்க இந்த அமெரிக்காவினர்! அதே மாதிரி ஏகப்பட்ட மிரட்டல். நான் சொன்னமாதிரி கை எழுத்து போடலைன்னா, அப்புறம் நடக்கிறதே வேறே, நம்ம உறவு அவ்வளவு நல்லா இருக்காதுன்னு ஏகபட்ட பூச்சு காமிச்சிகிட்டு இருக்காங்க!

இன்னொன்னு என்னா தெரியுமா, சமீபமா, அமெரிக்கா செனட்ல ஒரு பில்லு பாஸ் பண்ணுனாங்க, அது என்னான்னா, அமெரிக்காவை காப்பதே-கல்வி, ஆராய்ச்சி (Education and Research), அப்புறம் சக்தி (Energy), பிறவு நிதி(Finance), இந்த மூணுலேயும் அமெரிக்காவை காப்பதே! அதாவது, அதுக்கு பேரு 'PACE' (Protest America's Competitive Edge)ன்னு. இப்ப சொல்லுங்க, இதே மாதிரி நம்மலும் ஒரு பில்லு பாஸ் பண்ணுவோம், நம்முடய விருப்பு வெறுப்புகளை பாதுகாக்க! எதுக்காக சொல்றேன்னா, அவங்களை எதிர்த்து வாய்ஸ் கொடுத்த வாஜ்பாய்ய, மறுத்து அறிக்கை விட வச்சுருக்காரு அமெரிக்க தூதர் மில்ஃபோர்ட், அப்புறம் மகாராணி கண்ட்லேசா, என்னா மிரட்டு மிரட்டுறாங்க தெரியுமா, ஆக குரல் கொடு, நாமும் வல்லமை படைத்த சக்தின்னு.

வல்லவனுக்கு வல்லவன்!

Sunday, February 26, 2006

பாம்பே ட்ரீம்ஸ்


நேற்று மாலை 'Bombay Dreams' என்னும் ம்யூசிக்கல்ஸ் ('Musicals')நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்புக்கிட்டியது. இது ஒரு இசை நாடகம். இந்த ம்யூசிக்கல்ஸ் என்ற இசை நாடக வடிவம் மேற்கு நாகரீக கலை நிகழ்ச்சிகளில் மிகவும் பிரசித்து பெற்றது. நம்மிடம் இக்கலை வேகமாக அழிந்துவிட்டது. அதாவது 'தெருக்கூத்து' என்ற கலை தெரியுமா? நமது வம்சா வழியினர் மிகவும் சிறப்பாக கொண்டாடிய கலை அது. அந்த காலத்தில, எல்லா 'Mythical stories'யும் இந்த இசை,பாட்டு, வசன நடையிலே மேடை எதுவுமில்லாமல், தெருக்களிலே ஆடி பாடி காட்டி, மக்களை களிப்புற செய்வார்கள். பிறகு சினிமான்னு ஒரு பெரிய மீடியம் வந்தவுடனே, இந்த கலை நின்னு போச்சு, இதில கூத்து கட்டினவங்க, வசன நடை நாடகங்கள்லேயும், சினிமாவிலேயும் நடிக்க போயி, இது அப்படியே அழிஞ்சு போச்சு!. ஆனா, இதன் இசை, பாட்டு,வசன வடிவ நாடகங்கள் இங்கே சக்கை போடு போடுது!.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள்ல, இதுக்குன்னு ரொம்ப பேர் போன இடங்கள் உண்டு. அதாவது லண்டன்ல 'வெஸ்ட் என்ட்'(West End) தியோட்டர்ஸ், பிறகு நியூயார்க்ல, 'ப்ராட்வே'(Broadway) தியோட்டர்ஸ் ன்னு, இந்த ம்யூசிக்கல்ஸ் நிகழ்ச்சி நடக்கக்கூடிய அரங்கங்கள் நிறைய உண்டு. யாரும் நியூயார்க் போனால், அங்க உள்ள 'டைம் ஸ்கொயர்' (Time Square) என்ற இடம், ஒவ்வொரு புத்தாண்டுக்கும் அந்த 'கிரிஸ்டல்'பந்து கீழே இறக்கும் நிகழ்ச்சி எப்படி பார்க்க வேண்டிய ஒன்னோ, அது மாதிரி அங்க இருக்கிற ஏதாவது ஒரு தியோட்டர்ல இந்த ம்யூசிக்கல்ஸ் புரோகிராம் தவறாம பார்க்கிறதும் முக்கியமான ஒரு அம்சம். நான் இந்த வருஷம் 2006 புது வருஷப் பிறப்புக்கு போனப்ப, இந்த தியோட்டர் போறது விட்டு போயிடுச்சு! அப்படி அங்கெல்லாம் ஆடிட்டு, இப்ப தான் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிக்கு வந்திருக்கு, இந்த 'பாம்பே ட்ரீம்ஸ்'.

இந்த இசை நாடக்தோட சிறப்பம்சம் என்னான்னா, இதற்கு இசை அமைச்சு கொடுத்தது நம்ம ஏ ஆர் ரஹமான். போன வாரம் கூட அவரு இங்க இருக்கும் ஸ்டேன் ஃபோர்ட் பல்கலைகழக கலை நிகழ்ச்சி ஒன்னுக்கு வந்துட்டு போனார். அதபத்தி நம்ம சக ப்ளாக்கர் பாரதி ஒரு பதிவு போட்டிருக்காரு, போய் படிச்சு பாருங்க! விவரம் தெரியும்! இப்ப எல்லாம் இந்த அமெரிக்காகாரங்க ரொம்ப சீரியஸா நம்ம திரைப்படங்கள், பாட்டுக்கள் மேலே அதிகம் ஆர்வம் காட்ட ஆரம்பிச்சிருக்காங்க. மொத்தமா இந்தியாவிலருந்து வர, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் அனைத்தும் 'BollyWood Masala'ன்னு கொண்டாட ஆரம்பிச்சாட்டாங்க. அதற்கு காரணம், நம்ம ஏ ஆர் ரஹமான் மாதிரி ஆளுங்க தான். வித்தியாசமான இசை, கிழக்கும் மேற்கும் சந்திக்கிற மாதிரி அவரு போடற ட்யூன்கள் எல்லாமே மிக பிரசித்தம் இங்கே! அப்படி வந்த இசையை ரசிச்சு தான், இந்த ம்யூசிக்கல்ஸ் இசை நாடகம் போட்டு மிகவும் பிரபல்யமான 'ஆன்ரூ லாய்ட் வெப்பர்' (Andrew Lloyd Webber) ன்னு ஒருத்தர் இந்த பாம்பே ட்ரீம்ஸ் ம்யூசிக்கல்ஸ்சை தயாரிச்சார். அவரு தயாரிச்ச இன்னொரு இசை நாடகம் 'The Phantom of the Opera' போன இரண்டு மாசத்துக்கு முன்னே, நியூயார்க்ல போட்ட முதல் நாளே 15 மில்லியன் டாலருக்கு டிக்கெட் வித்து போச்சு!

இந்த இசை நாடக்தை கூட சேர்ந்து தயாரிச்சவரு, நம்ம 'சேகர் கபூரு', பூலாந்தேவியை பத்தி சினிமா எடுத்தாருல்ல அவருதான்!(இந்த பூலான் தேவி கதை பத்தி எழுத கை நம நமங்கிது, அப்புறம் ஒருவாட்டி எழுதுறேன்!) நம்ம ஊரு ஸ்ரீதேவியை வச்சு அழகா 'Mr India' ன்னு இன்னொரு ஹிந்தி படமும் எடுத்தவரு. அவரும் இந்த 'Hollywood' சர்க்யூட்ல ரொம்ப பிரசித்தமானவரு!. இங்கிலாந்து ராணி, 'எலிசபத்', சின்ன வயசிலே எப்படி சோரம் போனாங்கன்னு, ஒரு கான்ட்ரவர்சியல் கதையை இங்கே படமா எடுத்தவரு! அந்த படத்துக்கு ரொம்ப ஒன்னும் ஆஸ்கார் அவார்ட் எல்லாம் கிடைக்கிலனாலும், அதன் நாயகிக்கு ஏதோ ஒன்னு கிடைச்சிச்சுன்னு நினைக்கிறேன்! ஆக அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தாயாரிச்ச இந்த ம்யூசிக்கல்ஸ் கதை, நம்ம Bollywood மசாலாவே தான்!

பம்பாய் சேரி பகுதியில்ல வசிக்கும் ஒரு இளைஞன், ட்யூரிஸ்ட் கைடா வேலை பார்ப்பான், சினிமாவிலும் நடிக்க ஆசைபடுவான். அப்ப சேரி பகுதியை ஒரு டாக்குமென்ட்ரி படம் எடுக்க வரும் கதாநாயகி, அவனை துணைக்கு கூப்பிட்டு போவா, அப்படியே 'Miss India pagent' நிகழ்ச்சிக்கு போயி ஆர்ப்பாட்டம் பண்றப்ப, அந்த நிகழ்ச்சி வந்த பிரபல நடிகை ஒருத்திக்கு பிடிச்சி போக, அவளோட சினிமா படத்தில நடிச்சு பெரியாளவான். பிறகு தனக்கு வாழ்வு கொடுத்த சினிமாவா, இல்ல தன்னை அறிமுக படுத்தின அந்த கதநாயிகி கூட உண்டான காதலா, இல்ல தன்ன வளர்த்த சேரி ஜன்ங்களான்னு அல்லாடிகிட்டு இருப்பான். வழக்கம் போல வில்லத்தனமான கதாநாயிகியின் மணவாளன், அப்புறம் அந்த மணவாளனின் சூழ்ச்சி தெரிந்து கடைசியில அவனை வெற்றி கொண்டு, கதாநாயகியை கைப்பிடிப்பது. பக்கா நம்மூரு மசாலா கதை. ஆனா அதை அழகா, இந்த ஊருக்கு தகுந்த மாதிரி நம்ம ரஹமானின் பழய படங்கள் ம்யூசிக்கை பிளன்ட் பண்ணி அழகா ஒரு இரண்டு மணி நேரம் இசை நாடகம் பார்க்க அருமையா இருந்தது. இதனுடய ஹைலெட்டே, நம்ம முதல்வன் படத்தில வந்த சகலக்கா பேபி பாட்டு, அந்த வீடியோ கிளிப் வேணும்னா கொஞ்சம் பாருங்க, அசத்தல்!

இப்ப கொஞ்சம் கொஞ்சமா நம்ம திரைப்படங்கள் மேலே, இசை மேலே, இவங்க கவனம் திரும்ப ஆரம்பிச்சிருக்கு. நம்ம நாரயண் சொன்னது போல நம்ம படங்களுக்கு முதலீடு செய்ய முனைப்பா இருக்காங்க. நம்மலோட திரைப்பட தொழில்நுட்பமும், இவங்களுக்கு நிகரா நிக்கிறதாலே கொஞ்சம் எட்டி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் நேத்து இந்த அமெரிக்க மக்களோட சேர்ந்து பார்த்தவரைக்கும், அவங்க ரசிப்பு தன்மை நம்ம ம்யூசிக்கல்ஸ், நடனங்கள் எல்லாத்து மேலேயும் இருக்கத்தான் செய்ய்யுது. இந்த இசை நாடகத்துக்கு நடனம் அமைச்சு கொடுத்தது நம்ம ஹிந்தி நடன இயக்குனர் 'ஃப்ரா கான்' தான். அத்தனையும் நம்ம சினிமாக்கள்ல வர ஸ்டைல்தான்.

இன்னொரு கதையும் படிச்சேன், சேகர் கபூர் அமெரிக்கா வந்துறங்கினப்ப, அந்த 'Immigration' ஆளுங்க நோக அடிச்சிட்டாங்களாம், பார்க்க ஆப்கானிஸ்தான் டெரரிஸ்ட் மாதிரி இருந்தேன்னும், நான் தான் பேமஸ் 'Hollywood' பட டைரக்டர் எல்லாம் சொல்லிபார்த்தும், இந்த எலிசபத் படத்தையும் சொல்லி பார்த்தும், அந்த immigration ஆபிசர் அதெல்லாம் தெரியாதுன்னுட்டாராம். கடைசியில நம்ம 'bollywood' படங்களை பத்தி சொல்லினோன, 'ஓ அப்படியா, என் மனைவி, பிள்ளைங்கெல்லாம், அந்த படங்களை விரும்பி பார்ப்பாங்க, ஷாருக்கானை தெரியும்ன்னாராம், அப்பதான் சேகர் கபூரு சொன்னாராம், இனிமே நான் அதிகம் இயக்க போவது, இனி 'Bollywood' படங்களைத்தான்னு. இப்படி 'Immigration' ல நம்ம கமலும் மாட்டிக்கிட்டு முழிச்சாருன்னு கேள்விப்பட்டேன். அதனால இனி வரும் நாட்கள்ல, அந்த பிரச்சனையே இருக்காது, ஈசியா ஏர்போர்ட்ல இருந்து இவங்கெல்லாம் வந்திடலாம், அமெரிக்கா வந்தா, ஏன்னா, தினம் இவங்க படங்களை பார்த்து அதிகம் பரிச்சியமாயிடுவாங்களே! இது எப்படி இருக்கு!

Saturday, February 25, 2006

தேன் கிண்ணம்

நிறைய தமிழ் பாடல்கள் பதிவில போட்டு, இசையின் ஆனந்ததை எல்லோரும் கொண்டாடிகிட்டு இருக்கிறப்ப, நானும் சில பாடல்களை கேட்டேன். இனிமையான இசை, காதில் தேனருவி பாய்வது போன்ற உணர்வு. அதுவும் இளையராஜா, ஏ ஆர் ரஹமான் பாடல்கள்னா கேட்க வேணாம். அப்ப்டி சில பாடல்களை கேட்டப்ப, சில பாடல்கள் நடுவில் வரும் குழுமியர் பாடும் பாடல்கள் இசை சொருகல்கள், மெயின் பாட்டுக்கு ஒரு தனி மகத்துவத்தயே கொடுக்கும். சில சமயம் அந்த பாடல்களே கேட்க சிறப்பா இருக்கும். இதை நீங்க எத்தனை பேரு கவனிச்சிருப்பீங்கன்னு எனக்கு தெரியாது. பாடல்கள் கேட்டு பார்க்கிறப்ப, இதை கருத்தில வச்சு, கேட்டு பாருங்க, நான் சொல்வது உங்களுக்கு புரியும். உதாரணத்துக்கு சில இளையராஜா, ஏஆர் ரஹமான் இசையமச்ச நான்கு பாடல்களை கீழே கேட்டு பாருங்க. பிறகு நீங்களே சொல்லுங்க இந்த இடை சொருகல் பாடல்கள்ல யாரு ராஜான்னு? ஒரு விவாதத்தை உங்க முன்னே வைக்கிறேன்!

முதல் பாடல், 'பாம்பே' திரைப்படத்தில வந்த 'கண்ணாளனே' என்ற பாட்ல வர அந்த முதல் பாகத்தில், கல்யாண மணப்பெண் தோழியர்கள் பாடும் பாடல். மெயின் பாட்டே கல்யாணமணப்பெண்ணின் தோழி பாடறது தான். இது அந்த தோழிக்கு தோழியர்கள் பாடுவது.

இரண்டாவது பாட்டும் ஏஆர் ரஹமான் இசை அமைச்ச பாடல், எனக்கு ஹிந்தி பட பேரு தான் ஞாபகம் இருக்கு, 'தில்சே'ன்னு. ஏன்னா நான் பார்த்தது ஹிந்தில தான். தமிழ் பட பேரு தெரியல, ஆனா ஹிந்தி, தமிழ் இரண்டுலயும் இந்த இடை சொருகல் பாட்டு மலையாளப் பாட்டு.

மூணாவதா, இளையராஜா இசை அமைச்சு, பாரதிராஜா எடுத்த படம். 'காதல் ஓவியம்' படத்தில இருந்து.இப்ப தான் சிவாவும், சுந்தரும், இந்த படத்திலருந்து பாட்டு போட்டு நம்மல எல்லாம் மகிழ்ச்சி கடல்ல ஆழ்த்தினாங்க. அந்த ப்டத்தில வர 'வெள்ளி சலங்கைகள்' பாட்டுல வர இடை சொருகல், கேளுங்க!

நாலாவதா, இளையராஜா, இசை அமைச்ச தேவர்மகன் படத்திலருந்து வர 'மாசுற பொண்ணே வருக'ங்கிற பாட்டு. இது ஒரு இடை சொருகல் இல்ல, மெயின் பாட்டே, ஆனா, படத்தில 'background Score'க்கு பதில இளையராஜா, அருமையா சின்ன பாட்டை போட்டிருப்பார். ஏற்கனவே சிவா இந்த பாட்டை போட்டு, இளையராஜான்கிற இசை ஜீனியஸ் புகழ் பாடினார். எனக்கும் ஒரு மறக்க முடியாத பாட்டு. இந்த பாட்டு படமாக்கிருந்த் விதமும் சூப்பர். இன்னொரு விஷயம் இந்த படத்தோட டைரக்டர் யாருன்னு தெரியுமா?, 'பரதன்', பல மலையாள படங்களை டைரக்ட் பண்ணினவர். என்னுடய பொறியியல் கல்லூரி நாட்கள்ல இவர் இயக்கின பல் மலையாள படங்களை பைத்தியமா திரும்ப திரும்ப பார்த்துகிட்டு இருப்பேன். அப்பேர்பட்ட சிறந்த இயக்குநர். அவரை வச்சு 'தேவர் மகனை' கமல் இயக்கிருந்ததில ஒரு ஆச்சிரியமில்லை தான்.

ஆக இந்த இடை சொருகல் வித்தையில யாரு ராஜான்னு, உங்க வியூகத்துக்கே விட்டுடறேன். பதில சொல்லுங்க!

கடைசில ஒரு டெயில பீஸ், இங்க ஒரு படத்தை சொருகுறேன், இந்தம்மா யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க!. ஸ்ரீதர் கண்டு பிடிச்ச ஹீரோயின், இந்த ஹீரோயினை கொண்டு வந்ததுக்கு பெரிய கதையே இருக்கு. ஏற்கனவே ஃபீல்ட்ல இருந்த இன்னொரு ஹீரோயின் பண்ண அட்டகாசம் தாங்கமுடியாம, இவங்கள கதாநாயிகியா போட்டு படம் எடுத்தாரு ஸ்ரீதரு. அந்த படத்தில நாகேஷ் கூட அந்த நடிகை மாதிரி சச்சு நடிக்க, காமடி ஏக ரகளையா இருக்கும். கண்டுபிடிங்க யாரு இந்த அம்மா?, பிறகு எது அந்த படம்னு? பிறகு அந்த அட்டகாசம் பண்ண நடிகையும் யாருன்னு, சரியா!

இன்றய தேன்கிண்ணம் இனிதே நிறைவுற்றது!

Friday, February 24, 2006

உன்னால் முடியும் தம்பி! - ப்ளாக்கர்களின் சாம்ராஜ்யம்

நானும் இந்த பதிவுகள் போட ஆரம்பிச்சு சரியா ஒரு ஆறு மாசமாச்சு, சும்மா விளையாட்டா, தமிழ்ல எப்படி எழுதுறது, அப்புறம் யுனிகோடு பற்றி எல்லாம் படிச்சிட்டு,பிறகு இ-கலப்பை என்ற தமிழ் எழுத்துருவி கருவியை உபயோகிக்கவும் கத்துகிட்டாச்சு. பிறகென்ன அப்பப்ப, பதிவுகள் எழுதி ஆசை தீர பார்த்துட்டு, அதற்கு வரும் பின்னோட்டங்களை பார்த்ததும், நட்பா நம்மக்கிட்ட பேச நிறைய தமிழ் நண்பர்கள் கிடைச்சிட்டாங்களேன்னு, மேலும் நமக்கு ஒரு ஆர்வத்தை கொடுத்துச்சு. ஏற்கனவே இந்த Web Logging, Blogging பத்தி தெரிஞ்சிருந்தாலும், எப்பயாவது தான் எந்த ப்ளாக்கர் postingயாவது படிக்கிறது. ஆனா, இந்த ப்ளாக்கர்களின் பலம் என்னான்னு தெரியுமா உங்களுக்கு? வெறுமனே உப்பு பொறாத விஷயங்களை கதைக்கிறத விட்டுட்டு நம்ம பலம் என்னான்னு தெரிஞ்சுக்கங்க! அனுமார் தன் பலம் என்னான்னு ராமர் சொல்லித்தான் தெரிய வந்துச்சான். அது மாதிரி நம்மகிட்ட இருக்கிற இந்த அசுரபலம் என்னான்னு தெரிஞ்சுக்கிட்டு, அதை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தினா, யாரை வேணாலும் கவுக்குலாம், பிரச்சனைகளை எப்படி தீர்ககலாம்ங்கிறதை தான் நான் இப்ப சொல்ல போறேன். ஆமா, இது நம்ம சாம்ராஜ்யம், 'உன்னால் முடியும் தம்பி!'

இந்த Web Logging, Blogging என்கிற சமாச்சாரம் இணையத்தில ஒரு மூணு நாலு வருஷமாவே இருக்கு, அதுவும், இனையத்தை அதிகமா எல்லா விஷயங்களுக்கும் உபயோகிக்கிற இந்த அமெரிக்காவில , ப்ளாக்கர்கள், எவ்வளவு பெரிய கார்ப்ரேட் சாம்ராஜ்யங்களை கவுத்துருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? பெரிய பெரிய கார்ப்ரேட் ஊழல்களால சரிஞ்ச, 'ENRON', 'WORLDCOM' போன்ற கம்பெனிகள், தொடர்ந்து எதிர்ப்புகளை சந்திச்சு வரும் 'Wal-Mart', 'McDonald' போன்ற கம்பெனிகள், இவை அனைத்தும் சந்திச்ச, மற்றும் சந்திக்கிற எதிரிகள் யாரு தெரியுமா. நீங்களும், நானும் தான்! ஆமா நம்மை போன்ற ப்ளாக்கர்கள்! ஆச்சரியமா இருக்கா, இந்த இணயத்தில நடமாடிக்கிட்டு இருக்கிற 'சமூக ஊடகம்' தான், அதாவது, ஆங்கிலத்தில சொல்லனும்னா, 'Social Media' across the Internet-such as Online discusssion, groups, e-mailing lists and blogs. இவர்கள் புதுசா உருவாக்கப்பட்ட 'ப்ராண்டு(Brand) கொலைக்காரர்கள்'. இவர்களாலே, இந்த மாதிரி கம்பெனிகளை வழி நடத்தும் மேலாளர்களுக்கு நித்தமும் கண்டந்தான். ஏன்னா இந்த 'Brand Assassins' கண்ணுக்கு தெரியாத எதிரிங்க! அவங்க தொடுக்கும் அம்புகள், சில சமயம், இந்த பொருளாதாரச் சந்தையில நடக்கிற அக்கிரமங்களை தோலுறித்து காட்ட உதவும், சில சமயம் அதுவே கொஞ்சம் நியாயமில்லாமவும் போயிடறதுண்டு. இந்த எதிரிகளை சமாளிக்கிறது கார்ப்ரேட் சாம்ராஜயத்துக்கு ஒரு பெரும் சவாலா இருக்குது.

முன்னமெல்லாம், எந்த ஒரு பெரிய சமூக எதிர்ப்புகள், சுற்றுபுற சூழ்நிலை மாசுபடுவதாலோ, இல்ல வேற எந்த ஒரு காரணத்துக்காக போரடக்கூடிய அமைப்புகள், NGO சங்கங்கள் எல்லாத்தையும் ரொம்ப சுலபாமா சமாளிச்சிடுவாங்க இந்த பெரிய கார்ப்ரேட் சாம்ராஜ்யங்கள். ஏன் 'போபால் விஷவாயு'விபத்தை எதிர்த்து போரடின சங்கங்கள், குஜராத்ல நர்மதா நதி அணைத்திட்ட எதிர்ப்பு நடத்திய குழுமங்கள் மாதிரி கண்ணுக்குத் தெரிஞ்ச இந்த சக்திங்களை அடக்க, ஒடுக்க அவங்களுக்கு எல்லா வழியும் தெரியும். அதுமாதிரி தாக்கம் கொடுக்கும் அத்தனை எதிர்ப்புகளை களைய, கம்பெனிகள், 'சமுதாய பொறுப்புகளை' எடுத்துகொண்டோம்னு சொல்லிக்கிட்டு காசு குடுத்து சரிகட்டியோ, இல்ல அந்த எதிர்ப்பு தெரிவிக்கும் குழுமினர்கள்ல ஒருத்தரை எடுத்து அனைத்துக் கொண்டு போய்விடுவதுண்டு. சில சமயம் இது பொதுமக்களுக்கு நல்லதை விளைவிக்கும். சில சமயம், காசு வாங்கிக்கிட்டு அடங்கி போய்விடுவதும் உண்டு.

ஆனா இப்ப ஏற்பட்டிருக்கும் இந்த 'ப்ளாக்கர் குழமம்'(Blogosphere') அப்படிப்பட்டதில்ல. இந்த குழமம், ஏதோ நாலு பேரா சேர்ந்து உருவாக்கி இருக்கிற அமைப்பில்ல. இந்த குழமத்தில்ல, தங்களை இணைச்சிக்கிட்டவங்க, ஒரு ஏமாற்றபட்ட, கோபநிலையில் உள்ள ஒரு வாடிக்கையாளரா இருக்கலாம், பாதிக்கப்பட்ட ஒரு தொழிலாளியா இருக்கலாம், ஏன் அவங்க அவதூறு சொல்லும் கம்பெனிங்களுக்கோ, இல்ல அமைப்புக்கோ சம்பந்தமே இல்லாதவங்களா இருக்கலாம். ஆனா, அவங்க இந்த ப்ளாக்கில் தங்கள் ஆய்தத்தை எடுத்து விட்டாங்கன்னு கம்பெனி, அமைப்புகள் எல்லாம் அம்பேல்! என்ன அவங்களுக்கு வேண்டியது, தவறு நடக்கும் விஷயங்களை பத்தின செய்தி, அவ்வளவுதான், அதுதான், இந்த 'knoweledge based Economy'ல, அவங்க கிட்ட கிடைச்ச ஆயுதம்! தண்டாயுதம்!

இப்படி ப்ளாக்கர்களால கவுந்து போன கம்பெனிங்க இங்க அமரிக்காவில ஜாஸ்தி. அதனால இந்த ப்ளாக்கர் பலத்துக்கு மதிப்பு கொடுத்து கம்பெனிகள் செயல்படுதுங்க. அது மாதிரி 'Corporate Reputation'ஐ கணிக்க, இணையத்தில இருக்கிற ப்ளாக்கர்கள் போடற செய்திகளை வச்சி கணிக்க, இங்க நிறைய 'Consultancy' கம்பனிங்க இருக்கு. அவங்க கிட்ட இருக்கிற 'Blog Sniffing Software'ஐ வச்சு சரியா onlineல என்ன நடக்குதுங்கிறதை கணிக்க முடியும். அது மாதிரி, சைக்கிள் பூட்டு செஞ்ச கம்பனிய நார் நார கிழிச்சிட்டாங்க. அவங்க செஞ்ச புது பூட்டை எவ்வளவு ஈசியா கொண்டை ஊசி வச்சி திறந்திடலாமுன்னு வீடியோ படம் விளக்கி ப்ளாக் போட்டே, அந்த பூட்டின் தரத்தை அந்த கம்பெனியை உயர்த்த வச்சிட்டாங்க!. அந்த கம்பெனி இப்ப நிதம் ஒரு 40-50 ப்ளாக்கை செக் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம் , அவங்க உற்பத்தி செய்ற பொருள் குறை நிறைகளை கண்டெறிய!

எதுக்கு நான் இதை எழுதுனேனா, நம்ம பலம் என்னான்னு நமக்கு இன்னும் தெரியல. சும்மா வெட்டியா கதை பேசி, சில சமயம் பைசா புரோஜனம் இல்லாத விஷயங்களை எழுதி நேரம் போக்கிகிட்டு இருக்கோம். நான் என்னையும் சேர்த்து தான் சொல்றேன். அதுனால, இனி வரும் நாட்கள்ல நம்மால எதுவும் பண்ணமுடியும், சில பல நல்ல காரியங்களுக்கு, ஆக்கப் பூர்வமாண பணிகளுக்குங்கிற நம்பிக்கை இருக்கு! அதான்,

'உன்னால் முடியும் தம்பி!' இது நம் சாம்ராஜ்யம்!

Thursday, February 23, 2006

வேண்டும் இனி ஒரு புதிய ஷக்தி!

சென்ற பிப்ரவரி, 21ம் தேதி, திங்கள் கிழமை, குடியரசு தலைவர் தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது, அந்நாள், அமெரிக்க அதிபர், புதியதொரு முழக்கமிட்டார். அது 'வேண்டும் இனி ஒரு புதிய ஷக்தி!' அது என்னான்னு பெரும்பாலான நம்ம தமிழ்ஜனங்களுக்கு தெரியுமா? அப்ப அப்ப சினிமா, வெட்டியா பொழுது போக்கும் மத்த சமாச்சரங்களை படித்து நாட்போக்கும் என் இன மக்களே, இதெயும் கொஞ்சம் படிங்க!

இது வரைக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார ஷக்தியில பெரும் பங்கு வாய்க்கிறது, அது செலவிடும் எரிபொருள் தான். அதாவது கச்சா எண்ணையிலருந்து வர பெட்ரோலிய பதார்த்தங்கள்.
அமெரிக்கா உபயோகிக்கும் இந்த வஸ்து, 75 சதவீதம், இது அத்தனையும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள்ல இருந்து வர்து தான். ஆனா அந்த நாடுகள்ல மாறி வரும் அரசியல் நிலை, மற்றும் தீவிரவாதங்கள் சூழந்த அந்த பகுதி, அமெரிக்காவை பெரும் பகை நாடா நினப்பத்தால, தடங்கல் இல்லாமல் இனி தொடர்ந்து, இந்த எரிபொருள் ஷக்தி கிடைக்குமாங்கிறது இனி சந்தேகம் தான். அவங்கலை நம்பி இனி வாழமுடியாது, மேற்கொண்டு இந்த கச்சா எண்ணையை அதிகம் நம்பி, அந்த கிழக்கு ஆசிய நாடுகள் அரசியல் பிளாக்மெயில்லருந்து தப்பணும், அதே சமயத்தில அவங்க வாழும் ஆடம்பர வாழ்க்கை நிலையில தடுமாற்றம் உண்டாகம இருக்க, வேற வழிவகுக்கும், இந்த நிலையை மாற்ற என்ன வழின்னு யோசிச்சப்பதான் இந்த முழக்கம்!

அதாவது மாற்று ஷக்தி என்னென்ன உண்டோ, அதில இனி நம்ம ஷக்தி எல்லாம் செலவழிச்சு, புதிய ஷக்திகளை கண்டுபிடிக்க வழி செய்வது! இதற்காக அமெரிக்க அரசாங்கம் இன்னும் 22 சதவீதம் அதிகம் செலவழிக்க முனைப்பா இருக்கு. ஏற்கனவே அது 10 பில்லியன் டாலர்களை 2001லிருந்து செலவழிச்சிக்கிட்டு இருக்கு. மேற்கொண்டு, உலக மாசு கட்டுப்பாடு கொண்ட, இப்பொழுது கிடைக்கும் எண்ணைய் எரிபொருளுக்கு சமமா இருக்கக்குடிய, ஷக்தியை கண்டுபிடிக்க உண்டான ஆராய்ச்சியை முடிக்கிவுட்டுடிச்சு.

ஏற்கனவே இந்த 'Global warm' ங்கால, என்ன ஆயிகிட்டு இருக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா? சமீபத்தில 'Greenland' என்கிற தேசத்தில உள்ள பனிக்கட்டிகள் (glacier) எல்லாம் அளவுக்கு அதிகமா உருகுதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க! இந்த நிலை தொடர்ந்தா, கடல் மட்டம் இன்னும் 100 வருஷத்தில ஒரு 7 மீட்டர் உயர்ந்து, கடல்மட்டத்துக்கு தாழ்வா இருக்குற நகரங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடும் தெரியுங்களா. இதுல்ல எந்த ஊர் எல்லாம் உள்ள போகப்போவுதுன்னு தெரியுமா? ஹாலந்து நாட்ல உள்ள ரொட்டர்டாம்லிருந்து, நியூஆர்லென்ஸ், லண்டன், பங்களாதேஷ் கடலோர பகுதிகள், ஏன் நம்ம சென்னையும் கடலுக்குள்ள போயிடும் போங்க!(இவங்க எல்லாம் ஏன் தான் இந்த மாதிரி விஷயங்கள்ல எல்லாம் கவலைப் படறாங்களோ! நம்ல பாருங்க குஷ்புக்கும், சுஹாசினிக்கும் வெளக்கமாத்த காமிக்கவே நேரம் சரியா போவுது, இதில கழுதை, இதப்பத்தி என்னத்த யோசிக்கிறது!)

அதனால என்னென்ன வழிமுறைகள்ல அவங்க மாற்று ஷக்தி தேட முனைஞ்சிருக்காங்க தெரியுமா?

மாற்று வழி - வீடுகள் மற்றும் வியாபரத்துக்கு!
சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பத்திலயும், சுத்தமான, பாதுகாப்பான அணுஷக்தியிலயும், சூரிய ஒளியில் கிடைக்கும் ஷக்தியும், மற்றும் காற்றாலைகள் இருந்து வரக்கூடிய ஷக்தியிலயும் துரித ஆராய்ச்சி பண்ணி அதிலருந்து வெளிப்படும் ஷக்தியை கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கும் ஷக்திக்கு மாற்றாக கொண்டு வருவது. இதுக்காக அவெங்க செலவழிக்க போவது கொஞ்சம் நஞ்சமில்ல, பல பில்லியன் டாலர்கள்!

மாற்று வழி - வாகனங்களுக்கு!
இங்க இனி ஒடப்போகும் கார்கள், வாகனங்கள் எல்லாம் இப்ப உபயோகத்தில இருக்கிற பெட்ரோல், டீசல் விட்டுட்டு "Cellulosic Ethanol" ங்கிற ஒரு புது எரிபொருள்ல ஓட்ட வைக்க போறாங்க.
அப்புறம் பெட்ரோல்யும், அதிகம் உழைக்ககூடிய பேட்டரியலயும் மற்றும் ஹைட்ரஜன்லயும் ஓடப்போற "Hybrid" கார் வரப்போகுது! இதற்காகவும் பல கோடி டாலர்கள் செலவிட தயாரகிட்டாங்க( ஏற்கனவே "Hybrid" காருங்க இங்க நிறைய ஓடிகிட்டு இருக்கு, அந்த மாதிரி காரு வாங்கினா, வரிகள் எல்லாம் கம்மிபண்னி, மக்களை அரசாங்கம் இந்த மாதிரி காருங்களை உபயோகிக்க ஊக்கவிக்கிறாங்க!)

ஆக அடுத்த 20 வருஷத்தில, அதாவது 2025ல இந்த 75 சதவீத எண்ணய் இறக்குமதிய சுத்தமா நிறுத்தி, மாற்றிய ஷக்திகள்ல வாழ்க்கையை அமைக்கப்போறாங்க. பார்த்தீங்களா, எப்படி தொலைநோக்குப் பார்வையோட திட்டமிட்டு வேலைசெய்றாங்கன்னு. இந்த பிரகடனத்தை வாசிச்ச புஷ்ஷை டிவியில பார்க்க எவ்வளவு நல்லா இருந்திச்சு தெரியுங்களா! நம்ம அரசியல் தலைவர்கள் நம்ம நாட்டு பிரச்சினைகளை வழி வச்சி ஏன் இப்படி தொலைநோக்கு பார்வையில மக்களை வழி நடத்த மாட்டேங்கிறாங்க?

தமிழக மக்களே, இதோ, மறுபடியும் எலெக்ஷன் வருது, 'போடுங்கம்மா ஓட்டு இரட்டை எலையை பாத்து, இல்ல உதயசூரியனைப்பாத்து, இல்ல மாங்காயோ, தேங்காயோ, புளியங்காயோ பாத்து போடுங்கம்மா ஓட்டு! யாரு நல்ல பாட்டு பாடறன்னும் பாத்து ஓட்டு போடுங்க!

Wednesday, February 22, 2006

எனை ஆண்ட அரிதாரம்- பத்தாம் பகுதி

எல்லோரும் சின்ன புள்ளயிலேருந்து வளர்ந்து பெருகிறது தங்களோட பெற்றோர்களின் அரவணைப்பிலே, அவங்க கண்காணிப்பிலே, பிறகு பதின்ம வயதிலே, படிக்கனும்னு வெளியில வந்துட்டா ஹாஸ்டல் வாழ்க்கை தான். இந்த ஹாஸ்டல் வாழ்க்கை எவ்வளவு கத்துக்கொடுக்கும் தெரியுங்களா. அப்படித்தான் எனக்கும். ஏன்னா எல்லாமே நம்மலே தனித்து செய்ய பழகிக்கனும். அப்பதான் அந்த மெச்சூரிட்டிங்கிறது வெளியில வரப்பார்க்கும். உலகம்னா என்னன்னு தெரிய ஆரம்பிக்கும். இதுல நல்ல வழிகள்லயும் போகலாம், தப்பாவும் ஆயிக்கிலாம். எல்லாமே நம்முடய கட்டுபாட்டுக்குள்ள இருக்குனும். 'களவும் கற்றுமற' அப்படின்னு பழமொழிக்கு தகுந்தமாதிரி, எல்லாத்தையும் டேஸ்ட் பண்ணிட்டு நல்லது, கெட்டதுகளை நமக்கு நாமே ரெகுலேட் பண்ண வழிவகுக்க தோதுவா இருக்க வக்கிறது இந்த ஹாஸ்டல், ஊரை விட்டு தள்ளி இருக்கிறது. சின்ன குழந்தைக்கு தீ தொட்டா சுடும்னு எத்தனை தடவை சொல்லி பாத்தாலும் கேட்காது, ஆனா, ஒரு முறை தீப்பட்டு ரணமான, தெரிஞ்சுடும் அது என்னான்னு, அப்படித்தான், எல்லாத்தையும் செஞ்சுப்பார்க்க மனசு ஆலாப்பறக்கும், ஆனா, சரி எது, தவறெதுன்னு சீர்கோல் தூக்கிப்பார்த்தாச்சுன்னா, அப்புறம் தடம் நம்மதுதான். யாரும் ஒன்னும் சொல்ல தேவையில்லை.

ஏன் இதை சொல்றேன்னா, இஞ்சினியரிங் காலேஜ் படிக்கிறப்ப, என்னோட திக்ஃப்ரண்ட், ஜெயக்குமார், ஒரு டேஸ்காலர், அவன்கூட இருந்து பழகிறதுக்கும், மத்த ஹாஸ்டல் ஃப்ரண்டுகளுக்கும் நிறைய வித்யாசம் பார்த்திருக்கேன், அதுவும் அவன்கிட்ட எப்பவும் அதீதமா குழந்த தனம் ஒட்டிக்கிட்டு இருக்கும். நாங்க முதல், இரண்டாவது வருஷம் படிக்கிறப்ப மத்தியானம் எப்பவும் கிளாஸ் கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு கிளம்பிடுவோம். அதுவும் அந்த இங்கிலீஷ் லெக்ஷர் கிளாஸ் போரு. இல்ல, மத்தியானங்கள்ல எதாச்சும் ப்ராக்டிகல்ஸ் இருக்கும், அதை கட்டு வுட்டுறுவோம். நேரா டவுண்ஹால் தான், மலையாளம், இல்ல தமிழ் படங்கள் எதிலாச்சுலேயும் போயி உட்கார்ந்துடுவோம். அப்ப எனக்கு விருப்பமான நடிகைகள்ல 'ஸ்ரீப்ரியா' நடிச்ச படங்கள் நிறைய வந்த நேரம். ஆனா ஜெயக்குமாருக்கு ஸ்ரீப்ரியாவை சுத்தமா பிடிக்காது. அவன் போக சொல்லும் படங்கள் வேற, இதுனால நாங்க ரொம்ப நேரம் வெளியிலேயே சண்டைபோட்டுக்கிட்டு கடைசியில எதையாவது பார்க்கலாமுன்னு ஒத்து போயி பாதி படம் ஓடினோன போயி உட்கார்ந்து பார்த்த படங்கள் நிறைய.

இதை நான் ஏன் சொல்றேன்னா, பொதுவா நம்ம மக்களுக்கு அதிகமா பிடிக்கக் கூடிய ஹீரோயினிகள் எப்படின்னா, கொஞ்சம் பூசானப்பல இருக்கணும். தமிழ்பட ஹீரோயினிகள் ஜாதகத்தை எடுத்துப் பாருங்க. இது என் காலம்னு இல்லைங்கே, எங்க அப்பன், பாட்டன், பூட்டன் காலத்திலருந்து அப்படித்தான். ஆமா, அந்த காலத்தில வந்த எல்லா நடிகைகளுமே கொஞ்சம் பூசாலாத்தான் இருப்பாங்க. டி.ஆர். ராஜகுமாரியை எடுத்துக்கங்க. அப்பறம் வந்த பத்மினி, சாவித்திரியெல்லாம் எப்படி? அதுக்காக சன்னமா வர நடிகைங்க புகழ் பெறலன்னு சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனா, வைஜெயந்திமாலா, சரோஜாதேவி கொஞ்சம் ஒய்யராமன நடிகைங்க, அவங்க காலத்தில அப்ப அவங்க மெல்லிசுதான்.
இது மாதிரி இரண்டு தரப்பட்ட நடிகைகள் அறிமுகபடுத்தப்பட்டாலும், அதாவது ஜெயலலிதா, நிர்மலா ஜோடி, அப்புறம் பிரமீளா, மஞ்சுளா அப்படின்னு ஒரே காலக்கட்டத்தில அறிமுகமான நடிகைகள்ல அதிக மெளசு யாருக்குன்னு பார்த்தீங்கன்னா கொஞ்சம் பூசானப்பல இருக்கிற நடிகைங்களுக்குத்தான். ஏன்னா அதுதான் நம்மாளுங்களுக்கு உண்டான டேஸ்ட். அப்படித்தான் ஒன்னா அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீப்ரியா, சுஜாதாவில்ல, நமக்கு புடிச்சது ஸ்ரீப்ரியா தான், பிறகு சரிதா, அப்படின்னு. ஏன் கொஞ்சக்காலம் நம்பர் ஒன்னுல்ல இருக்கிறது அத்தனையும் இந்த மாதிரி பூசணிக்காய்ங்க தான். குஷ்பு, நக்மா, அப்படின்னு தொடர்ந்து, ஏன் இப்ப ஜோதிகா, நமீதா வரை அப்படித்தானே! அப்ப அப்ப கிளாஸிக்கல் பியூட்டிங்களும் வர்ரதுண்டு, காஞ்சனா, வாணீஸ்ரீ,ஸ்ரீதேவி,ரேவதி, சிம்ரன் எல்லாம். ஆனா என்னதான் இவங்க வளைய வந்தாலும், நமக்கு சன்னமா இருக்கிற ஹீரோயின் எல்லாம் புடிக்கிறதில்ல போங்க. இதுனாலத்தான் எனக்கும் அவனுக்கும் சண்டையே போங்க!

இன்னொரு காரணமும் உண்டு நமக்கு ஸ்ரீப்ரியாவை புடிச்சிப் போக, ஏன்னா, ரஜினி ஆரம்பக் காலத்தில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சப்ப, அவருக்கு அதிகமான படங்கள்ல ஹீரோயினியா நடிச்சது இந்தம்மாத்தான். அதனாலேயே எனக்கு ரொம்ப பிடிக்கும். கிளாமர் குயினா மட்டுமில்லமா, நல்லா நடிக்கக்கூடிய நடிகையும் கூட. அப்ப தமிழ் சினிமாவில எம்ஜிஆர், சிவாஜிங்கிற சகாப்தம் கொஞ்சம் கொஞ்சமா முடிஞ்ச நேரம், புதுசு புதுசா நல்ல திறமைமிக்க டைரக்டர்கள் சத்தம் போடாம உள்ள நுழைஞ்சு நல்ல நல்ல படங்களா கொடுத்துக்கிட்டிருந்த நேரம்.

அப்பத்தான் 'ருத்ரையா'ன்னு ஒரு டைரக்டர் எடுத்த படம் 'அவள் அப்படித்தான்' அதில கமல், ரஜனி, ஸ்ரீப்ரியா மூணுப்பேருமே சும்மா கலக்கலா நடிச்சிருப்பாங்க. ஸ்ரீப்ரியா, ஆண்களால பாதிக்கப்பட்டதால, அவங்க எல்லாரையும் வெறுக்கிற கேரக்டர், சில பல நல்ல ஆண்களும் இருக்காங்கன்னு, கமல் அதற்கு அடையாளமா இருந்து காதலிச்சு, கடைசியில ஸ்ரீப்ரியா ஏத்துக்காதல வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவார்.
ஆனா, ரஜனி, "நான் என்ன சொல்றேன் மச்சான்" ன்னு டையலாக் வுட்டுகிட்டு, கிளிங்களுக்கு ரூட்டு போடற வில்லத்தனமான ரோல், வெளியில விபூதிப்பட்டை எல்லாம் போட்டுகிட்டு சாமியார் மாதிரி வேஷம் கட்டுவார். ஸ்ரீப்ரியா, ரஜனிக்கு கீழே வேலை செய்வார். அப்ப ரெண்டுபேரும் ஒரு பார்டிக்கு போறப்ப, ரஜனி ஸ்ரீப்ரியாக்கிட்ட தப்பா நடக்க முயன்று அரை ஒன்னு வாங்கிட்டு அந்தக் காட்சி முடிஞ்சுடும். அடுத்த நாள் அவங்க அபீஸ்ல சந்திச்சிக்கிறப்ப அவரு, மொதநாள் நடந்தது விஷயத்துக்கு எந்த ரியாக்ஷனும் காட்டம, அவரு ஒரு வசனம் பேசுவாரு பாருங்க, கிளாஸ்! "ஒரு ஆம்பளை, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்" இது எதார்த்தின் உச்சம். இது மாதிரி நடந்த நிஜ சம்பங்களை நான் வாழ்க்கையில சிலர் சொல்லக்கேட்டுருக்கேன். சரின்னு, துணிஞ்சு போற பொண்ணுங்களுக்கு ஒன்னுமில்லை, ஆனா, உண்மையிலே இதை எதிர்க்கும் பொண்கள், இப்படி சராசரி வில்லன்ங்களை சர்வசாதரணமா எதிர்நோக்கும் நிதர்சன உண்மை வாழ்க்கையின் எதார்த்தம். அப்ப நான் ஆர்வமா புது உத்வேகத்தோட வந்த இது போன்ற சினிமாக்களை ஒரு வெறியா பார்த்துட்டு, அதனை ஆராய்வதுதான் வேலையா இருந்திச்சு போங்க!

இந்த மாதிரி காலக்கட்டங்கள்ள, வேலை இல்லா திண்டாட்டத்தை வச்சு 'நிழல்கள்'ன்னு ஒரு படம் வந்தது, பாரதிராஜா டைரக்ஷன்ல. அதே மாதிரி பாலசந்தரும் அதே தீமை வச்சு 'வறுமையின் நிறம் சிவப்பு'ன்னு ஒரு படம் எடுத்தார். இந்த இரண்டு படத்தில நிழல்கள் அவ்வளவா வெற்றி பெறல, ஏன்னா, அதிகம் பாப்புலர் இல்லாத புதுமுகம் ரவி, ராஜசேகர், சந்திரசேகர்ன்னு நடிச்சிருந்தாங்க. கமல், ஸ்ரீதேவி, ப்ரதாப்போத்தன்னு, பாப்புலர் ஆளுங்களோட எஸ்வீ சேகர், தீபன்னு சில புதுமுகங்கள் நடிச்ச வறுமையின் நிறம் சிகப்பு'க்கு கிடைத்த வெற்றி, 'நிழல்களு'க்கு கிடைக்கில ஆனா படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை எல்லாம் கலக்கலா இருந்தது. இந்த படம் பற்றி பிறகொரு பதிவில நிறைய எழுதுறேன். அதில நடிச்ச நடிகர் ராஜசேகர், ராபர்ட்-ராஜசேகர்னு இரட்டையர்களா, கேமிரா மேன்களா இருந்து எடுத்த படம் தான் ஒருதலை ராகம். அப்ப என்கூட இருந்த முருகவேள், நம்மல சும்மா ஏத்திவுட்டு, ஏண்டா ராஜசேகர் எல்லாம் நடிக்கறப்ப, நீ ஏன் போய் நடிக்கக்கூடாதுன்னு. .அப்ப ஒரு வேகம் வந்து டிரெயின் புடிச்சு, மெட்ராஸ் வந்தப்பத்தான், பிரசாத் ஸ்டுடியோவில 'டிக் டிக் டிக்' படத்துக்கு ஒரு பாட்டு ரெக்கார்டிங் பண்ணப்பத்தான், நான் நேரில, லதாவை பார்த்தேன். அப்ப அவங்க 'லதாரஜனிகாந்த்'தா ஆகத நேரம். அவங்க பாடின "நேற்று இந்த நேரம்" பாட்டு ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இளையராஜா, அந்த காலத்தில அவர் போடற வொய்ட் அண்ட் வொய்ட் பேண்ட் ஷர்ட்ல சும்மா தூள்னு கம்போஸிங் பண்ணிக்கிட்டு இருந்தார்.
பாரதிராஜா, ஜனகராஜ், கங்கை அமரன் எல்லாம் அன்னைக்கு அப்ப அந்த ரெக்கார்டிங் டைம்ல அங்க இருந்தாங்கன்னு நினைக்கிறேன். அந்த படத்தோட பூஜையும் அன்னைக்குன்னு தான் நினைக்கிறேன். அப்ப நம்முலும் நடிக்க சான்ஸ் கேட்டு, பாரதிராஜாக்கிட்டயே கேட்கலாம்னு போனப்ப, அவருக்கூடய இருந்த அஸிஸ்டென்ட்ங்க நம்மல நெருங்க விடலை. அவங்க சொன்னதெல்லாம், நீங்க போயி, பாரதிராஜா ஆபிஸ்ல, அதாவது எல்டாம்ஸ் ரோட்ல அப்ப இருந்ததன்னு நினக்கிறேன், அவரு தம்பி சிகாமணியை பார்த்து கேளுங்க, அப்படின்னுட்டாங்க. அப்படியே எடுத்து வச்சிருந்த என் போட்டாவெல்லாம் எடுத்துக்கிட்டு பிறகு நடையைக்கட்டிட்டேன்.

அந்தக்காலத்தில இந்த கோடம்பாக்கம் ஸ்டுடியோக்கள் உள்ளே எந்த கெடுபிடியும் இல்லாம நம்ம நுழைவதுங்கிறது சர்வசாதரணம். ஏவிஎம், விஜயாவாஹினி, பிரசாத், வீனஸ், பரணீ அப்படின்னு எதிலவேணும்னாலும் ஈசியா நுழைந்துவிடுவேன். அது எப்படின்னு விவரமா அடுத்த பதிவில சொல்றேன்.

Monday, February 20, 2006

தேடினேன் வந்தது-கூகுளின் அசூர வளர்ச்சி!

கணனியை பயன்படுத்துறவங்க எல்லாரும் கூகுளை பயன் படுத்தாம இருக்கமாட்டங்க. எதை நீங்க இணயத்தில தேடனும்னு உட்கார்ந்தாலும், எல்லாரும் முதல்ல போற இடம் கூகுள் தான். அந்த கம்பனி எங்க ஆரம்பிச்சது தெரியுமா? காரு கேரேஜ்லதான். அதை ஆரம்பிச்சது இரண்டு இளைஞர்கள், 'லேரி பேஜ்' மற்றும் 'செர்கி பிரின்'. அவங்க பிஎச்டி படிக்கிறப்ப, அவங்க ஆராஞ்சு கண்டுபிடிச்ச 'தேடுபொறி' தான் இந்த கூகுளுக்கே மூலதனம். அவங்க படிச்சது கலிபோர்னியால இருக்கிற ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம். அதுக்கப்பறம் வாய்மூலமா சொல்லப்பட்ட இந்த கூகுள் எல்லாரும் விரும்பி எந்த விஷயத்தையும் இணையத்தில தேட இலகுவா உண்டாக்கப்பட்ட கருவி.


இந்த கம்பனியோட சாராம்சம், விளம்பரங்கள் இருந்து வர வருமானம் தான். இன்னைக்கு அசூரத்தனமா வளர்ந்து 100 பில்லியன் டாலர்களை தொட்டு விட்டது. அதனுடய பங்கு இன்னைக்கு $475 வரைக்கும் உச்சாணியிலே போயுடுச்சி. வெறும் சாதாரணமா அதன் பங்கு, $85 ஆரம்பிச்சது IPO மூலியமா!இவ்வளவு அசுரத்தனமா வளர்ச்சி அடைஞ்ச இந்த கம்பனி, இது கொடுக்கிற அத்தனை வசதிகளும் நம் போன்ற சாதரண மக்களுக்கு இலவசமா கொடுக்குது. அதாவது சொற்பதங்களை வச்சு, எந்த ஒரு விஷயத்தை தேடிறதுல இருந்து, ஜிமெயில், மேப், அப்புறம் எங்க ப்ளாக் சைட் Analytics, ஒலியும் ஒளியும் பிம்பங்கள் சேகரிப்புன்னு எத்தனையோ! இதனுடய பரம தொழில் முறை எதிரிங்க 'yahoo' மற்றும் 'Microsoft' எப்பவேனாலும் இவங்களால ஆபத்து வர வாய்ப்பு உண்டு. ஆனா எதையும் பத்தி கவலைப்படாமா தொழில்நுட்ப முன்னேற்றத்தில கவனம் செலுத்தி புது புது வசதிகளை நம் போன்று இணையத்தை உபயோகபடுத்திறவங்களுக்கு செய்து கொடுத்துக்கிட்டே இருக்கு. இன்னும் நிறைய இலவசமா வசதிகளை செய்ய முனைப்புடன் இருக்காங்க, அது மாதிரி ஒரு 100 வசதிகள் அவங்க லிஸ்ட்ல இருக்கு, அதில ஒன்னு 'space Elevator', அதாவது பூமியிலருந்து நிலவுக்கு சாமான்களை எடுத்த செல்லும் வாகனம்!

இவ்வளவு பெரிய வளர்ச்சியை ஏழாண்டுகளுக்குள்ள அடைஞ்சிருக்கு. இதனுடய இந்த அசூரத்தனமான வளர்ச்சியை எந்த மீடியா கம்பனிங்களும் இது வரை காணல. எல்லாம் அந்த 30 வயசு தாண்டின இந்த இரு இளைஞர்களால. இருந்தும் கம்பனிக்கு பெரிசு ஒன்னு வேணும்னு, ஏன்னா என்னதான் புத்திசாலித்தனம் இருந்தாலும், அனுபவரீதியா வழி நடத்த ஒருத்தர் வேணும்னு, 'எரிக் ஸ்க்மிட்'னு 51 வயசுகாரர், 'Sun Micro System'த்தில வேலை செஞ்சவரு இந்த கம்பனி CEO வாக்கி ஆளுமை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதில விஷேஷம் என்னான்னா, இந்த இரு இளைஞர்களும் எந்த பெரிய 'Business School' போயி படிக்கல்ல, ஆனா அவங்க படிச்ச பள்ளி படிப்பு, வியாபர உத்திகளை சின்ன புள்ளையிலருந்தே அவங்க கிட்ட வளர்ந்த 'Entrepreneurship' திறன் தான் இந்த இமாலய வளர்ச்சிக்கு பெரும் உதவினது.

இந்த குழந்தைத்தனமான ஆர்வம் தான், இவங்களோட இந்த வளர்ச்சிக்கு காரணம், இந்த பேஜ், மிச்சிகன் மாகாணத்தில் பிறந்தவர் இவரது தந்தை கணனி பேராசிரியர், தாயும் ஒரு கணனி ஆசிரியர். சிறு வயசிலே சிறு ரேடியா மற்றும் எலக்ட்ரானிக் உபகரண்களை கொண்டு விளையாட்டு களில் நாட்டம் செலுத்தியவர். இசையிலும் மிகுந்த ஆர்வமுடையவர், அஞ்சலி, அஞ்சலி பாட்டுக்குள் வரும் செக்ஸாபோன் தான் இவர் விரும்பி வாசிக்கும் இசைக்கருவி. ஆனால் பிரின், பிறப்பால் ஒரு ரஷ்யர், 1970களில் அமெரிக்காவிற்கு அவரது பெற்றோர்கள் குடி புகுந்தனர். சிறுவயதில் சர்க்கஸ் பள்ளியில் பயின்றவர். அதாவது சர்க்கஸ் தொடங்கும் போதோ முடியும் போதோ கடசியில நெட்கட்டி, பார் விளையாடுவாங்களே , அந்த விளையட்டு. அதை கற்றுக்கொண்டவர். பாருங்க சின்ன வயசில எப்படி விநோதமான பொழுது போக்குகள்ல எல்லாம் ஈடுபடறாங்கன்னு. நமக்கு சர்வமும் சினிமான்னு தான் பொழுது போகும்!

ஆக இந்த கூகுளின் அசகாய வளர்ச்சிக்கு பெரும் பங்கு இந்த இரட்டையர்கள் தான். இந்த கூகுள்ங்கிற பேர் வந்த மூலக்காரணம் தெரியுமா. அதாவது அவங்க கண்டு பிடிச்ச அந்த 'தேடுதல்' திறனுக்கு பேர் சூட்டினது முதல்ல 'Googol'. அதாவது, இந்த ஆங்கில பதம் குறிப்பது கணிதத்தில் வர நம்பர், அதாவது ஒன்றுக்கு பிறகு நூறு பூஜ்யங்களை கொண்ட நம்பர், ஆனால், அது சற்றே திரிந்து 'Google' ஆயுடுச்சி! இன்னொன்னு, இவங்க வியாபார உத்தியே தனி, அதாவது விளம்பரதாரர்கள்கிட்ட இருந்து தான் வருமானமே. ஆனா ஜாஸ்தி காசு கொடுத்தா, நம்ம விளம்பரம் அந்த 'தேடுதல்' பக்கத்தில முன்ன வரணும்ன்கிற கட்டாயம் கிடையாது. ஜனங்க எவ்வளவுக்கெவ்வளவு அதிகமா, உங்க விளம்பரங்களின் சுட்டியை தொட்டு, உங்க பக்கத்துக்கு வாரோங்களோ அதுக்கு தகுந்த மாதிரி காசு கொடுக்கணும், அதாவது நம் போன்ற மக்கள் எவ்வளவு விரும்பி அந்த விளம்பரத்துக்கு போறோம்ங்கிறதுதான் இங்கே முக்கியம். இதனால் விளம்பரதாரருக்கும் மகிழ்ச்சி, நம்மை போன்ற உபயோகாதாரருக்கும் மகிழ்ச்சி, கூகுளுக்கும் அதிக வருமானம். இது போன்ற புத்திசாலித்தனமான உத்திகள் நிறைய பின்பற்றரதுனால தான், இந்த அசகாய வளர்ச்சி! இவங்களோட இந்த புத்திசாலித்தனமான உத்திகள்ல சில சர்ச்சைக்குறியதுக்கூட, அதில முக்கியமா ஜிமெயில் வரும் மடல்களை ஸ்கேன் செஞ்சு, அதில வர பதங்களுக்கு ஏத்த மாதிரி விளம்பர சுட்டிகளை இணக்கிறது. இது ஒரு நல்ல வியாபார உத்திதான், ஆனா, ப்ரைவசிக்கு வேட்டு வைக்கறதால இதற்கு நிறைய எதிர்ப்பு!

இப்ப ஆங்கில மொழிய விட்டு உலகத்தில இருக்கிற அத்தனை மொழி தேடல் பொறிகளை ஆக்கிரமிக்க மும்மரமா இருக்காங்க இந்த கூகுள் நிறுவனத்தினர். அதானால, சீனா, இந்திய மொழிகள்லயும் மெதுவா நுழைஞ்சு ஆதிக்கம் படைக்க தயாராகிட்டாங்க! ஆக எதை தேடினாலும் இனி வந்து விடும். அதானல தான் இந்த பதிவே 'தேடினேன் வந்தது'

எனக்கு என்னமோ இந்த கூகுள் வளர்ச்சியை பத்தி எழுதனும்னு தோணுச்சி, ஏன்னா நம்மவங்கிட்ட இருக்கும் அசாத்திய திறமையில நம்மலால மென்பொருள் எழுத்தாளாரா உலகம் வியக்க நிக்க முடிஞ்சதே தவிர, இது போன்ற ஒரு தனித்துவமா பெரிய கம்பனி உருவாக்கி சாதனை படைக்க முடியல நம் ஊர் இளைஞர்களாலே! கொஞ்சமா கொஞ்சமா சராசரி வேலைகளை நம்மல மாதிரி நாட்டுக்கு அனுப்பி, நம்மக்கிட்ட இருக்குக்கூடிய இந்த மக்கள் கூட்டம்ங்கிற விலை மதிக்க முடியாத சொத்துக்களை கம்மியான விலையிலே உபயோகம் பண்ண சரியா தெரிஞ்சு வச்சிருக்காங்க இந்த அமெரிக்காவினர். அதனால தான் இங்கிருக்கிற அமெரிக்கர்கள், INNOVATION பத்தி எப்பவும் சிந்தனையோட இருக்கிறதால, அவங்காளால உலகை ஜெயிக்க முடியுது. இதை பத்தி அநேகமா நேரம் கிடைக்கிறப்ப பிறகு நிறைய எழுதலாமுன்னு இருக்கேன்.

Saturday, February 18, 2006

எனை ஆண்ட அரிதாரம்- ஒன்பதாம் பகுதி

பொதுவா சினிமா, நாடகங்கள்ல எல்லாருக்குமே ஒரு ஈடுபாடு இருக்கும். ஆனா சிலபேருக்குத்தான், அதீத ஆர்வம் ஏற்பட்டு, அதில ஈடுபடனும்னு தோணும். அதிகமா எல்லாரும் விரும்பவது நடிக்கத்தான், அதற்குப்பறம் பாடுவதுல்ல ஆர்வம் வெளிப்படும். பிறகு தான் கதை எழுதறது, வசனம் எழுதறது எல்லாம். அப்படித்தான் நான் ரொம்ப சின்ன வயசிலிருந்தே, நடிக்க ஆர்வம் வந்தது, ஏன்னா, என்னுடய ஸ்கூல் நாடகங்கள் எல்லாம் என்னுடய அமல்ராஜ் வாத்தியார் எழுதறதுதான், அதில நடிக்க முடியுமே தவிர, நாங்களா கதை எல்லாம் எழுத முடியாது, பிறகு, இஞ்சினியரிங் காலேஜ் வந்தோன, நானே பெரும்பாலும் கதை எழுதி,இயக்கி,நடிச்சது தான். பெரும்பாலும் அந்த காலங்கள்ல வந்த சினிமாக்கள், அதாவது 70 கடைசியில், 80களுன் தொடக்கத்தில், எல்லாம் பார்த்திங்கன்னா, பெரும்பாலும், பாக்யராஜ், டி.ராஜேந்தர், மாதிரி ஆளுங்க அவங்களே கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி நடிப்பாங்க.அதுக்கு முன்ன எல்லாம் கதை ஒருத்தரதா இருக்கும், அதை திரைப்படமா செய்யறப்ப, திரைக்கதை இன்னொருத்தங்க எழுதுவாங்க!. பாலசந்தர், தன் படங்களுக்கு, கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி இயக்குவார். ஆனால், பாரதிராஜா, கதை எதுவும் எழுதமாட்டார், அவருடய முதல் படம் 'பதினாறு வயதினிலே' தவிர, மற்ற படங்கள் அத்தனைக்கும் திரைக்கதை தான் அவருடயது, கதை வேறொருத்தருதா இருக்கும். திரைக்கதை எழுதறது ஒரு தனிக்கலை. சில நல்ல கதைகள், நாவலா படிக்கிறப்ப, ரொம்ப நல்லா இருக்கும். ஆனா அதை படமா எடுக்கிறப்ப குட்டிச்சுவராக்கிருவாங்க, மிகப்பெரிய உதாரணங்க,'ப்ரியா', 'கரையெல்லாம் சென்பகப்பூ', சுஜாதாவோட கதை படிச்சவங்களுக்கு அது ரொம்ப நல்லாத்தெரியும். ஏன்னா, கதை எழுத்துல வரதுங்கிறது வேறே, சினிமாவா திரைக்கதை அமக்கிறதுங்கிறது வேறே! அதே மாதிரி நாவல்ல இருந்ததை விட, சிறப்பா சினிமா படங்கள் வந்த கதையும் இருக்கு. அதுல நம்ம மகேந்திரன் கெட்டிக்காரரு!

எப்பொழுதுமே திரைக்கதை அமக்கிறதோ, நாடகசீன்களை தொகுக்கிறதோ, கதையின் sequence லருந்து வேற மாதிரி அமைக்கனும். சினிமா திரைக்கதை அமைக்கிறதும், நாடகத்திரைக்கதை அமைக்கிறதும் வேற வேற ஸ்டைல்.
சினிமால விஷ்வலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வசனங்களை கம்மிப்பண்ணி கதையை தொகுக்கணும், ஆனா, நாடகங்களுக்கு வசனம் உயிர் மூச்சு. அதுனால, பாலசந்தர், அவர் ஆரம்பக்கட்டத்தில எடுத்த 'நீர்க்குமிழி', 'எதிர்நீச்சல்', 'பாமாவிஜயம்', 'இரு கோடுகள்', 'நூற்றுக்குநூறு' எல்லாம் வசனங்கள், உணர்ச்சிபிழம்புகளா வெளிகொண்டு வந்து, அந்த சினிமாக்கள் எல்லாமே நாடகத்தன்மையை ஒட்டி இருக்கும். ஆனா அதே பாலசந்தர், இரண்டாவது கட்டமா எடுத்த படங்கள், 'அபூர்வ ராகங்கள்', 'மூன்றுமுடிச்சு', 'அவள் ஒரு தொடர்கதை', 'அரங்கேற்றம்', 'நூல்வேலி', 'அவர்கள்', 'தப்புத்தாளங்கள்', 'நிழல் நிஜமாகிறது' இந்த படங்கலள் எல்லாம் வித்தியாசமான் கதை கருவைக் கொண்டு, வசனங்களை கம்மிப்பண்ணி, கதைகளை பலமுடிச்சுடுன் கொண்டுபோயி, கடைசியில விடைகளை ரசிகர்முன்ன கேள்விக்குறியா வைச்சு படம் எடுத்தது அவருடய தனி முத்திரை! அவரோட இருந்த அனந்தும், இதற்கு காரணம் என்பேன். அப்பயும் அவரு காட்சிகளை விஷ்வலா அதிகம் எடுத்திருக்கமாட்டார். நான் சொல்லறது 'Cinemotography' பத்தி இல்ல காட்சி அமைப்புகளை, ஏன்னா அவருடய அப்பத்த கேமராமேன், 'லோகநாதன்' கருப்பு வெள்ளையில எடுத்த நிறைய காட்சிகள் கண்ணுக்கு விருந்தா இருக்கும்.அப்ப நிறையப்பேர், 'ஈஸ்ட்மேன்' கலர்ல படம் எடுக்கத்தொடங்கனப்ப, அவர் தொடர்ந்து கருப்புவெள்ளயில எடுத்து வந்தார். இருந்தும் அத்தனையும் கிளாசிக்கல்லா இருக்கும். பிறகு அவரும் கலருக்கு மாறுனது காலத்தின் கட்டாயம். அந்த காலக்கட்டங்கள் எடுத்த நிறைய 'Classic Movies' எல்லாம் 'Black and White' தான். ஏன் பாரதிராஜா எடுத்த 'பதினாறு வயதினிலே'க் கூட கொஞ்சம் டெக்னிகலா தரம் தாழ்ந்த ஆர்வோ கலர் பிலிம்ல எடுத்தது தான். ஏன்னா கலர் பிலிம் தொழில்நுட்பத்தின் ஆரம்பக்கட்டம் , விலை ஜாஸ்த்தி!

பாரதிராஜா திரைக்கதை அமைக்கிறதுல கில்லாடி. அவர் ஆரம்பக்கட்ட சமயங்கள்ல எடுத்த நிறையப்படங்கள் கதை 'ஆர் செல்வராஜ்'ஜோடது. பாரதிராஜாப் படங்கள் முழுசா கிராமத்து வாசனை வீசக்காராணமே நம்ம செல்வராஜ்தான். ஆனா அவரா தனியாப் போயி படம் டைரக்ட் பண்ண ஆரம்பிச்சு ஏனோ சரியா சோடைப்போகல்ல. அவரு எடுத்த 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படம் எத்தன பேரு பார்த்திருப்பீங்கன்னு எனக்கு த்தெரியாது. அதில வர ஓரம் போ, ஓரம் போ, ருக்குமணி வண்டி வருது' ங்கிற பாட்டு ரொம்ப பேமஸ். அந்த பாட்லக் கூட சூசகமா நான் பாரதிராஜாவை முந்திக்காட்டுவேன்னு சொல்லியிருப்பாரு. வேணும்னா கேட்டுப்பாருங்க! .அப்புறம் தான் பாக்யராஜ் கதை வசனத்தில, அவரையே கதாநாயகனா போட்டு 'புதிய வார்ப்புகள்' படம் எடுத்தார். அவரும் தனியா போயி சுவரில்லா சித்திரங்களை ஆரம்பிச்சோன, மணிவண்ணனை வச்சு கதை வசனம் எழுதச் சொல்லி நிழல்கள் எடுத்தாரு. அப்புறம் 'வேதம் புதிது' கண்ணன் அப்படின்னு நிறையப்பேரு அவருக்கு கதை வசனம் எழுதி கொடுத்து, படம் எடுத்தாரு. ஆனா அவருக்கு ஆரம்பத்தில அமைஞ்ச செல்வராஜ், பாக்யராஜ் கூட்டணி மாதிரி சரியா பிறகு அமையலன்னு தான் நான் சொல்லுவேன். பிறகு கொஞ்சக்காலம் போயி, திரும்ப ரெண்டு பேரும் சிவாஜியை வச்சி எடுத்த 'முதல் மரியாதையில்ல திரும்ப கூட்டு சேர்ந்தாங்க. ஆக அவரு எல்லா படங்களுக்கும் அமைச்ச அந்த வித்யாசமான திரைக்கதை 'Sequence' தான் அந்த படங்களுக்கு உண்டான வெற்றி. அவரு கையாண்ட அத்தனை திரைக்கதை டெக்னிக் களையும் நாங்க அந்த காலத்தில அக்கு வேற ஆணி வேற அலசி அது என்னான்னு அவங்க கூட சேர்ந்து படம் எடுக்கலேனாலும், நல்லாவே தெரிஞ்சு வச்சிருந்தோம். சில படங்கள்ல அவங்க அகஸ்மாத்தா எடுத்த frameங்களை கதை தொகுப்புல அது எப்படி 'coincide' ஆயி இருந்திச்சுன்னு நாங்க அவருக்கு லெட்டர் எல்லாம் எழுதி இருக்கோம். எங்களோட ரசனையை, ஆராய்ச்சியை பாராட்டி அவர் எழுதிய கடிதங்கள் எங்ககிட்ட உண்டு.
உதாரணத்துக்கு 'டிக் டிக் டிக்' ஒரு படத்தில வில்லன் தன் செக்ரக்டரியை, தான் ரகசியமா கடத்தர உண்மை எல்லாம் வெளியாளுக்கு சொல்லிட்டான்னு தெரிஞ்சோன அவளை தன்னுடய ரூம்லயே துப்பாக்கியில்ல சுட்டு கொண்ணுடுவான். அப்ப அவள் சரிஞ்சு கீழே விழும் போது அந்த ரத்தம் அந்த அறை தடுப்பு கிளாஸ்லருந்து வழியறதை ஒரு ரெண்டு செகண்ட் அப்படியே அந்த சீனை 'freeze' பண்ணீ சூட் பண்ணிருந்திருப்பாங்க, அந்த 'hairline crack' மாதிரி அந்த கிளாஸ்ல ரத்தம் வழிய ஆரம்பிச்ச எடத்தில focusedஆ இருக்கும். அது ஒரு டைக்டோரியல் டச் மாதிரி. அவன் இருக்கக் கூடிய சேம்பர் அப்படி 'toughned bullet proof' கிளாஸ்ல செஞ்ச்துங்கிறது அந்த சீன் சூசகமா விளக்கும். இது மாதிரி அவருடய படங்களை எத்தனையோவாட்டி பார்த்து, ஒவ்வொரு சீனா அலசுறது தான் எங்க வேலையா இருந்திச்சு.

ஆனா பாக்யராஜ், டி.ராஜேந்தர் படம் எடுக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க கதைகளை ஒவ்வொரு சீனா வசனம் எழுதி, திரைக்கதையும் எழுதி, அப்புறம் சீனை செதுக்கி, அப்புறம் படம் எடுப்பாங்கண்ணு கேள்விபட்டுருக்கேன். இந்த மாதிரி எடுத்தவங்களுக்கு படத்தை எப்படி பார்க்கிறமோ அப்படியே அந்த sequenceல தான் எடுக்கத் தெரியும்னு கேள்விப்பட்டிருக்கேன். பிறகு 'editing' சீர் செஞ்சு கதை sequence ஐ கொண்டு வந்திட முடியும்னாலும், அவங்க அப்படி எடுத்தா தான் படததை முடிக்க முடியும்னு கேள்விபட்டிருக்கேன். அது மாதிரி தான் பாக்யராஜ் பீக்ல இருந்த நேரத்தில ஒன் லைன் கதை தான் ஆரம்பித்துல. அதுக்கு தினத்தந்தில எல்லாம் பெரிய விளம்பரம் கொடுத்து பட பூஜை எல்லாம் போட்ட பிறகு தான் கதை டிஸ்கஷனுக்கு உட்காந்தாங்கெல்லாம் கேள்விபட்டிருக்கேன். அப்ப அவரு பேருக்கு மார்கெட்டு. எல்லாரும் பணத்தை வச்சுக்கிட்டு அவரு பின்னாடி அலைஞ்ச காலம் அது. ஏன் ஏவிஎம் மாதிரி பெரிய நிறுவனங்களே அப்படி பணம் கொட்டி படம் எடுத்தாங்க! அப்படி ஒரு ஒன்லைன் ஸ்டோரியில பெரிய விளம்பரம் கொடுத்து வந்து, பிறகு பெரிய வெற்றியை கண்ட படம் தான் 'முந்தானை முடிச்சு'

இவ்வளவு விவரமா ஏன் உங்களுக்கு திரைக்கதை அமைக்கிறத சொல்றேன்னா, இந்த மாதிரி நாங்க போட்ட நாடகங்கள்ல சினிமாத்தனதை காண்பிச்சோம், இருட்ல ஒத்தை தீபத்தை கொளுத்தியோ, பிறகு எரியும் தீச்சட்டியை கொண்டோ , ஏதாவது ஒரு பிரம்மாண்டம் இருக்கும். நம்ம நாடகக் காவலர், தற்போது மறைந்த ஆர் எஸ் மனோகருடய சரித்திர நாடகங்களை போல பிரம்மாண்டமா இல்லையினாலும், ஏன்னா அது 'professional'ஆ பணம் செலவழிச்சு கமர்சியலா செய்ற விஷயம், பார்க்கிறவங்களுக்கு புதுமையா நாடகம் போட்டு பேர் வாங்கினோம். அப்பதான், வெறுமன கதை எழுதிக்கொண்டு வந்த என்னுடய கிளாஸ்மேட், முருகவேள் நாடகத்துக்கு திரைக்கதை அமைச்சி எங்க குரூப்பே ஆ..ன்னு ஆச்சிரியப்பட்டு எல்லாரும் ஆர்வத்தோட வேலை செஞ்சு நல்ல நாடகமா அரங்கேற்றனதோடமில்லாம, 'கோமல் சுவாமிநாதன்' மாதிரி நாடக ஜாம்பவன்களும் எங்களை புகழ்ந்து பாராட்டின மாதிரி நாடகங்கள் போட்டதுண்டு. கோமல் சுவாமிநாதனை எத்தனை பேத்துக்கு தெரிஞ்சுருக்கும்னு எனக்குத்தெரியாது. ஆனா அவருடய நாடகந்தான் பின்னாடி, பாலசந்தர் எடுத்த 'தண்ணீர் தண்ணீர்'ங்கிற படமா வந்து ஊரையே கலக்குச்சு! அதுல நடிக்கறதுக்கு முன்னாடித்தான் நம்ம 'ராதாரவி' அவர்கள் சென்னை லாக்காலேஜ்ல படிக்கிறப்ப கோயம்புத்தூர் வந்து எங்க நாடகத்தோட போட்டி போட்டு, கடைசியில அவங்களுக்கு பரிசு தரலைன்னு ஜ்ட்ஜ் எல்லாத்தையும் கண்டமேனிக்கு திட்டிட்டு போனார். அப்ப அவங்க நாடகத்தோட போட்டி போட்டு நிறைய பரிசுகளை வாங்கி இருக்கோம்.

இந்த சேகர் கதை பாதியிலேயே நிக்குது. அவரு டிக்கட் கொடுத்து விக்க சொல்ல எங்க காலேஜ் பசங்க வந்து அவர் நடிச்ச காட்சிகள் எல்லாத்திலேயும் ஓன்னு கத்தி ரகளை வுட்டு, ரவுசு விட்டு, பாவம் அவர் நொந்து போயி இடையில நான் நடிச்சுகிட்டு இருக்கிறப்ப வேதனை பட்டார். பிரகு ரொம்பவும் கடிந்துக்கிட்டார். அதனாலத்தான் நம்மல நாசரோட போட்டியில கவுத்துட்டாரு, அவரு ஜட்ஜா இருந்தப்பன்னு நான் நினைச்சிகிட்டு இருந்தேன். அப்புறம் ஒரு நாள் அவரை சந்திச்சப்ப, அவரே வருத்தபட்டார் எனக்கு பரிசு கிடைக்காததை பத்தி. இப்படி போயிகிட்ட இருந்தப்பத்தான், மெட்ராஸ் போயி சான்ஸ் தேடுனப்பத்தான் நம்ம தலைவரு மனைவி, 'ஜில்லு'வை பார்த்தேன். யாரு 'ஜில்லு'ன்னு கேட்கிறீங்களா, அதான் 'லதா ரஜினிகாந்த்' ரஜினி ரசிகர்கள் எத்தனை பேருக்குத் தெரியும் அவரு தன் மனைவியை அழைக்கும் பெயர் 'ஜில்லு'ன்னு. அவங்களை சந்திச்சதை அடுத்த பதிவில பார்போமா!

Tuesday, February 14, 2006

காதல் சந்யாசியே, நீ வாழ்க! நீடூடி வாழ்க!

இன்னைக்கு என்னமோ காதலர் தினமுன்னு உலகமே அல்லோகல படுது, அது என்னாதான்னு கொஞ்சம் கேட்டப்ப, இதை பத்தி, ஏழெட்டு கதை சொலறாங்க. நம்ம பண்டிகைங்க மாதிரி, நரகாசுரனை கொண்ணு தீபாவாளி கொண்டாடுன மாதிரி, என்ன கதைன்னு பார்த்தப்ப, இது சிறப்பான ஐரோப்பிய நாகரீகத்திலிருந்த வந்த ஒன்னு, இந்த கொண்டாட்டம் எப்படின்னா, ஏதோ சந்நியாசியப்பத்தி சொல்றாங்க, அந்த காலத்தில ரோம ராஜியத்தில கண்ணாலம் கட்டாத ஆண்பிள்ளைங்க கண்ணாலம் ஆன ஆம்பளங்களை விட வழுவா ராணுவத்துக்கு உழைப்பாங்கன்னு அந்த கால ராஜா யாரும் கண்ணலாம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லிட்டாராம், அப்ப கல்யாணம் பண்ணி வைக்கிற பூசாரி, யாருக்கும் தெரியாம கண்ணலாம் பண்ணி வச்சாராம், புறவு இது தெரிஞ்சு, ராஜா, அந்த சந்நாசியை கொன்னுட்டாராம், அவரு நினைவா கொண்டாடுறதா சொல்றாங்க! சில பேரு சொல்றாங்க அவரை ஜெயில்ல போட்டு இருந்தப்ப, அந்த ஜெயிலர் பொண்ணு மனசில இடம் புடிச்சாராம், அப்ப அந்தம்மாவுக்கு,ரோசாப்பூ எல்லாம் கொடுத்து 'என்றும் உன்னுடய வேலன்டைன்' ('From your Valentine') கடுதாசி கொடுத்து தன் அன்பை வெளிப் படுத்தினாராம்.அவரு அப்படி ஆசையா எழுதி தெரிவிச்ச அன்பை, இப்ப அடையாளமா எல்லாரும் தத்தம் காதலர்களுக்கு வாழ்த்து சொல்லி தெரிவிக்கிற நாளா கொண்டாடுறாங்களாம்! அப்புறம் இதெல்லாம் விவரம் தெரிஞ்சு அவரை கொண்ணுட்டங்கன்னு சொல்றாங்க. கதை எப்படியோ, இந்த சந்நாசி மேல ஒரு பரிதாபம், பச்சாதாபத்தோட, கதாநாயகனா உருவகப்படுத்தி பார்க்க போயி, ரொம்ப முக்கியமா, காதிலின் சின்னமா அவரை நினச்சதால, இந்த சந்நாசிக்கு பேரும் புகழும் வந்திச்சாம். அப்புறம் இந்த காதலர் தினத்துக்கு அடையாளமா இறக்கைகள் கொண்ட குழந்தை 'ஈரோஸ்', அதாவது காதல் தேவதை 'வீனஸ்' பையனைத்தான் காதல் கடவுளா கை எடுத்து கும்புடுறாங்களாம்! நம்ம தமிழ் காதல் கடவுள் முருகனை கும்பிடற மாதிரி!

ஆக இந்த கதை எல்லாம் முன்ன எனக்கு ஒரு மண்ணும் தெரியாது போங்க! இந்த காதல்னா என்னன்னு சின்ன வயசில, ஒன்னும் அறியா பருவங்கள்ல நடந்த நிகழ்ச்சிங்க தான் ஞாபகம் வருது.

அப்ப நான் மூணாவதோ, நாலாவதோ படிச்சிக்கிட்டு இருந்த நேரம், என்னுடய தூரத்து சொந்தத்து அக்கா ஒன்னு, திடீர்னு அவங்க அண்ணனோட நண்பனை காதலிச்சு, ஒரே அமர்க்களமாயி, கடைசியில நீயும் வேணா உன் உறவும் வேணான்னு போயிட்டாங்க. நான் கொஞ்சம் அந்த அக்கவோட பாசமா இருப்பேன், தினம் சாய்ந்திரம் அவங்களோடத்தான் வெளையாடுவேன். திடீர்னு அவங்க காணாம போனோன்ன, என்னா ஏதுன்னு புரியாத வயசு, அந்த அக்கா இனி நம்மலோட இருக்க மாட்டாங்க, அவ்வளவுதான்னு சொன்னோன்ன சுருங்கிப் போன நாட்கள் எத்தனையோ! அப்ப அந்த காதலின் பலம் என்னான்னு தெரியல. அது மாதிரி அந்த அக்காவோட தோழி ரொம்ப நல்லவங்களா எங்க சொந்தக்கரங்களுக்கு தெரிஞ்சவங்க, அந்த அக்கா காதலுக்கு உதவனதால எதிரியா எல்லாரும் பாவிக்க ஆரம்பிச்சோன, நமக்கும் ஒன்னும் தெரியாம, எல்லாரும் வெறுக்கறாங்கன்னு அந்த அக்காவோட தோழி வீட்டை கடக்கிறப்ப இனம் புரியா வெறுப்பு நமக்கு வரும் அந்த விவரம் தெரியா வயசில. அப்பவும் தெரியல காதல்னா என்னான்னு!

அப்புறம், கொஞ்சம் பெரியவன் ஆனோன்ன, ஏழாவதோ, எட்டாவதோ படிக்கிறப்ப, எங்க தெரு கடைசி வீட்ல இருந்த அக்காவுக்கு, எங்க அண்ணமாருங்களும் அவங்க தோஸ்த்துங்களும் சேர்ந்து காதல் கடுதாசி நம்ம மூலமா கொடுத்துவிட்டப்பையும், புதிய வார்ப்புகள்ல வர காஜா ஷரிப்பு மாதிரி 'டுர்ர்ர்'னு பஸ் ஓட்டிட்டு போயி கொடுக்கத்தான் தெரிஞ்சுச்சு. அந்த காதல் என்னான்னு ஒரு மண்ணும் தெரியல, ஆனா இது விவரமான சங்கதி ஏதோ ஒன்னுன்னு அவங்க காட்டிக்கிற உற்சாகத்திலருந்து தெரிய வந்திச்சு. அந்த அக்காவை பார்க்கறச்ச, மத்த அக்காங்களை விட இந்த அக்கா மேல என்னமோ ஒரு புதுவிதமான ஈர்ப்பு இருந்தென்னமோ உண்மை தான்! அப்பையும் காதல்னா என்னான்னு தெரியல்லை!

பிறகு என் நண்பன் தங்கையை கிண்டல் பண்ண பசங்களை அடிக்க போயி, அந்த பொண்ணு நம்ம மேல ஏதோ அந்யோன்ய சினேகமா நம்ம கிட்ட இருந்தப்ப நம்ம மனசு அல்லாடும், அடிக்கடி பார்த்துக்கனும், பேசனும்னு தோணும், ஆனா அது just ஒரு கவர்ச்சி, அதுக்கு மேல எதுவும் பண்ணத்தோணல, அவங்க வீட்டுக்கு போயி ஏதோ விளையாடி,அதுக்கூட இருந்து பொழுது போக்க தோணுச்சே தவிர வேறே எதுவும் தோணல, காதல்னு என்னான்னு தோணல!

கொஞ்சம் நாளுக்கப்பறம், அந்த வாலிபம் வரத்தொடங்கனப்ப, ஆயிரத்து எட்டு முறை எங்க பெரியம்மா வீட்டு தெரு முகனை அடிக்கடி தேவையில்லாம கடக்கத்தோணும், ஏனா, அந்த கடைசி வீட்டு கமலி பார்க்காதா நம்மலை, சைட் விட்டு பேச மனசு அல்லாடும். அவ பக்கத்து வீட்டுல இருக்கிற என் ஃப்ரண்டு வள்ளியப்பன் எப்பவும் அந்த கமலியோட பேசிகிட்டு நிக்கிறதை பார்த்து மனசு பொறாமப்படும், ஆனா அவனா கமலியோட பேச ஏற்பாடு பண்ணி கொடுத்த சந்தர்ப்பங்களையும் தவற விட்டு விட்டு, மனசு அல்லாடும், அந்த கமலியும் அப்ப கடக்கிறப்ப நம்மல வெறுப்பேத்த ஏக்கத்தோட பார்க்குமே தவிர, கிடச்ச சந்தர்ப்பங்கள்ல தானா பேச முன்வந்ததில்லை. இது போன்ற காதல் ரசாயன மாற்றம் ஏற்பட்டப்பையும், காதல்னா என்னான்னு தோணல. ஏதோ இன கவர்ச்சி உணர்வுகள் வந்ததோட் சரி. காதல்னா என்னான்னு தெரியலை!

அப்புறம் காலேஜ் போயி, ஸ்டடி லீவுக்கு ஊருக்கு வரப்பெல்லாம் தெரு பசங்களோட சேர்ந்து தெரு மொகனயில நின்னு போற வர பொண்ணுங்களை சைட் அடிக்கிறப்ப, கூட இருந்த ஒருத்தன் எப்பவும் எட்டே முக்காலுக்கு கடக்கும் ஆட்டோவை குறிவச்சி, அதில வந்த கான்வென்ட் பொண்ணை டாவடிச்சு, அப்புறம் சினிமா, பூங்கான்னு சுத்தி எங்களுக்கு விஷயம் தெரிஞ்சப்பையும், என்னடா, நம்ம கூட இருந்து இவ்வளவு விவரமா சிக்னல் கொடுத்து, கரக்டா அந்த பொண்ணு மனசில இடம் புடிச்சு காதிலிச்சப்ப பொறாமையா இருந்திச்சு. பிறகு அந்த பொண்ணு அப்பங்காரன் அவனை போலீஸ்ல கொண்டி வச்சோன, வாதாடி அவனை மீட்டு, துவண்டு கடைசியல நொந்து போயி ஒன்னுமே வேணான்னு பைத்தியக்காரன் மாதிரி இருந்த அவனை தேத்தி ஏதோ திரும்பி வாழ வச்சப்பையும், இந்த காதல் என்ன கருமாந்திரமோ, ஆளை இப்படி ஆக்குதேன்னு கரிசன படத்தான் முடிஞ்சது. அப்பவும் காதல்னா என்னான்னு தெரியல்ல!


ஆனா வந்ததே நமக்குன்னு காதல், அதென்னமோ சரியான காலகட்டத்தில வரனும்னு, இஞ்சினியரிங் படிச்சு முடிச்சு, வேலை, பொறுப்புகள்னு ஏத்துக்கிட்டோன, எனக்குன்னு ஏங்கின பொண்ணை பார்க்க, பேச, நானும் ஏங்கின நேரங்கள்ல, தெரிஞ்சதே காதல்னா என்னவென்று. அந்த காதல் உணர்வுகள் அப்பொழுதும் மட்டுமில்லை, எப்பொழுதும் தான்! இதெற்கென்று கொண்டாட்டம்னு ஒன்னு உண்டுன்னு தெரிஞ்சாலும் சரி, தெரியாவிட்டாலும்சரி என்னிடத்தில் எப்பவும் இருப்பது என் காதல். அவளை கண்ட நாள் மட்டும் அல்ல, மணம் கொண்ட நாள் மட்டும் அல்ல, என்னுடன் வாழ்ந்த நாட்களில் மட்டுமல்ல, இனி வரப்போகும் எல்லா நாட்களிலும் உண்டு என் காதல்!

ஆக உண்மையில் எதுதான் காதல் என்று அலைபாயும் அன்பர்களே, தத்வார்த்த உண்மை இது தான்!

இதுதான் காதல் என்று, அறுதியிட்டுச் சொல்ல முடியாததுதான் காதல். உலகம் ஏகமனத்துடன் ஒப்புக் கொள்ளும் பொதுவான விளக்கத்தை யாரும் காதலுக்குச் சொல்லவில்லை. என்றாலும் காதலை அவரவர் சொந்த உணர்வும் அனுபவமும் சார்ந்தது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

இக் காதலர் தினம் கொண்டாடத்தில் இந்த பதிவை பதிக்க காரணமாயிருந்த காதல் சந்யாசியே, நீ வாழ்க! நீடூடி வாழ்க!

Monday, February 13, 2006

ஒளியும் ஓலியும்- ஒரு கலவை

இந்த Re-Mix, Re-Mixன்னு என்னமோ சொல்றாங்கள்ள, அது எப்படின்னு பார்க்கலாமுன்னு, இணையத்தை புரட்டினப்ப, ஒரு அருமையான வீடியோ மிக்ஸ் ஒன்னு கிடைச்சுது, அது என்ன பாட்டு ஒலியில தான் பண்ணனுமா என்ன,ஒளி ஒலியும்லயும் பண்ணலாம். இந்த கலவை எல்லாம் சன் டிவில ஏதோ ஒரு நிகழ்ச்சில்ல போடுவாங்கல்ல, அது மாதிரி, கீழே இருக்கிற வீடியோ மிக்ஸ்சை பாருங்க! கற்பனைக்கு வானமே எல்லை! 'பட்டிகாடா பட்டணமா'ல்ல நம்ம டிஎம்எஸ் வெளுத்து வாங்கின 'அடி என்னாடி ராக்கம்மா' பாட்டுக்கு நம்ம சிவாஜி, முதல்வரம்மா மட்டுமில்ல, அனத்திந்திய நடிகர் நடிகைகள், பங்கரா பாடகர்கள் அனைவரும் பாடி ஆடி நடிச்சிருக்காங்க பாருங்க, பார்க்க ஆனந்தம்மா இருக்கு! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்!!

Sunday, February 12, 2006

எனை ஆண்ட அரிதாரம்- எட்டாம் பகுதி

நடிப்புன்னு இறங்கனோன கால்லூரி நாடகங்கள் மட்டும் இல்லாம வெளியில கமர்சியலா நாடகம் போடறவங்க குரூப்லயும் நடிக்க ஆரம்பிச்சேன். எப்படி இவங்களோட தொடர்பு ஏற்பட்டுச்சினா, இந்த பரபரப்பா இருக்கிற எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள், கவிதை எழுதுறவங்கன்னு எல்லாரையும் கல்லூரி நாடக விழா எதாவது ஒன்னுக்கு தலைமை தாங்க அழச்சிகிட்டு வருவோம். அப்படித்தான் விமலா ரமணி, உஷா சுப்ரமணியம், ராஜேஷ், புஷ்பா தங்கதுரை, கவிஞர் புவியரசு, சுகி சிவம், அப்படின்னு நிறைய பிரபல்யங்களை கூட்டிகிட்டு வருவோம். அப்படி ஒரு தடவை கே.பாக்யராஜை எங்க காலேஜுக்கு கூட்டிகிட்டு வந்தப்ப எனக்கு சினிமால நடிக்க எங்க காலேஜ் பிரின்ஸ்பலே ரெக்மண்ட் பண்ணுனாருன்னா பாத்துக்கங்களே, நம்ம எப்படி இந்த 'field'ல வளைய வந்திருப்போமுன்னு. ஏன் புகழ் பெற்ற டைரக்டர் மற்றும் நடிகர் மணிவண்ணன்,அப்ப அவரு சினிமாவுக்கு வராத நேரம், எங்க சீனியர் ஆறுமுகத்துக்கு பக்கா தோஸ்த்து, அடிக்கடி எங்க ஹாஸ்டல்ல மெஸ்ல வந்து சீனியரோட சேர்ந்து சாப்பிட்டு போவாரு. பிறகு அவரு சினிமால்ல நுழைஞ்சோன, நான் சான்ஸ் கேட்டு அவருகிட்ட அலைஞ்சதை அடுத்த பதிவுகள்ள விவரமா எழுதறேன்.

பிறகு மன்மதலீலை நடிச்சவர், கமலஹாசன் பாவமன்னிப்பு ஒருத்தருக்கிட்ட கேட்பாரு தெரியுங்களா, அவருதான். அவர் பேரு எனக்கு சரியா ஞாபகம் வரமாட்டங்கிது, தெரிஞ்சா யாரவது சொல்லுங்க! அப்ப கோவை மெட்டல்ஸ்ல அவரு ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தாருன்னு நினெக்கிறேன். அவரு அதுக்கப்பறம் ஏனோ நிறைய படங்கள் நடிக்கல்ல, அவரு அந்த படத்தில சொல்ற ஒரு டைலாக் அப்ப ரொம்ப பேமஸ், 'ஆமாண்டி இப்ப சொல்றேன், நம்ம வேஷ்டி, நம்ம அன்ட்ராயர் எடுத்துட்டு வா, போ!' அவரையும் நாடகப் போட்டிக்கு ஜட்ஜா கூப்பிடுட்டு வந்திருக்கோம். பக்கத்தில போட்டாவும் போட்டு இருக்கேன், அவரோட சீனுங்களையும் கொஞ்சம் பாருங்களேன். இப்ப கொஞ்சம் off track ல போயி இந்த மன்மதலீலை படம் பத்தி கொஞ்சம் பேசுவோமா?

இந்த படம் 1976ல வந்ததுன்னு நினைக்கிறேன்!, அப்ப நான் ஹை-ஸ்கூலு படிச்சிக்கிட்டு இருந்த நேரம், கிருக்கா சினிமாவையே தான் சுத்தி, சுத்தி! அப்ப எங்க தெருவில இருக்கறவங்களுக்கு நான் தான் பிலிம்நியூஸ் ஆனந்தன் மாதிரி! பொம்மை, பேசும்படம் பத்திரிக்கை எல்லாம் படிச்சிட்டு சினிமா பத்தின விஷயங்களை நிறைய தெரிஞ்சு வச்சிருப்பேன். இப்ப இந்த பத்திரிக்கை எல்லாம் வருதான்னு தெரியாது, ஆனா அப்பவே கலர்புல்லா, நல்லா படிக்க ஜாலியா இருக்கும். நிறைய பொம்மை பார்க்கலாம். ஆனா விலை கொஞ்சம் அதிகம். இதை படிக்க பக்கத்தில இருக்கிற சிகை அலங்கார கடைக்கு போவேன். முடி வெட்டறது என்னமோ இரண்டு மாசத்துக்கு ஒரு வாட்டின்னாலும், டெய்லி போய் சும்மா உட்கார்ந்து படிச்சிட்டு வருவேன். அப்ப சலூன் ஆளுங்கெல்லாம் நமக்கு தோஸ்த்து. அப்ப மலேசியா வாசுதேவன் குரல்ல சும்மா பாடி வெளுத்து வாங்குவேன், அவரு பாடன சிதம்பரம் ஜெயரமான் குரல்ல 'ஆனந்த தேன் சிந்து தாலாட்டுதே! அலை பாயுதே!' அப்படின்னு ஆரம்பிகிற பாடல், மணிப்பூர் மாமியார் ங்கிற படத்தில வற்ரது. படம் ரிலீஸே ஆகல்லை, ஆனா பாட்டெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டு. அதைப் பாடி அந்த சலூன்ல இருந்த பெரிசுங்களை எல்லாம் குஷிப்படுத்துவேன். அவங்களும் நம்ம அடிக்கடி வந்து போறதை கண்டுக்க மாட்டங்க, அப்படித்தான் சினிமா செய்திகள், புதுப்படங்கள் பூஜை போடற்துன்னு ஏகப்பட்டதை தெரிஞ்சு வச்சிகிட்டு இருப்பேன். அப்புறம் நம்ம தெருவில வந்து படம் வர ஒரு ஆறு மாசமுன்னமே இதை அங்க இருந்த சிமென்ட் சுவுத்தில சாக்பீஸ்ல விலாவாரியா நடிகர், நடிகை, வசனகர்த்தா, டைரக்டர் முதக்கொண்டு எழுதி வைப்பேன். இந்த எழுத்துக்கும் ரசிகர் கூட்டம் உண்டு. அதில்லயும் தெருவில இருந்த ஒரு மாமி சினிமா பைத்தியம், ஆதனால நம்ம மேல கொஞ்ச்ம் வாஞசை! விவரம் கேட்டு தெரிஞ்சுக்கும். நாங்க ரெண்டு பேரும் மணிகணக்கா சினிமா கதை அடிச்சிக்கிட்டு இருப்போம். மாமா சாய்ந்திரம் ஆபிஸ்ல இருந்து வந்து துரத்திற வர, இந்த கதைக்கிறது தான். மாமா அதிகமா ஒன்னும் நம்மல திட்டமாட்டார். ஏன்னா கொஞ்சம் நல்லா நான் படிப்பேன் வேறே! சரி அவங்க பசங்களுக்கும் படிப்பில நான் ஒத்தாசையா இருக்கிறதாலே விட்டுவிடுவார்.

இந்தப் படம் நான் ரொம்ப ரசிச்ச படங்கள்ல ஒன்னு, கமலஹாசனுக்கு ஜோடி அப்ப கிளப் டான்ஸ் ஆடற 'ஆலம்' னு ஒரு நடிகை, ஹீரோயின். அப்புறம் புதுசா இதுல ஏகப்பட்ட நடிகைங்க, ஜெயப்ரதால்லாம் நடிச்சு பேமஸ் ஆகறதுக்கு முன்னால இந்த படத்தில நடிச்சி தான் அப்புறம் 'நினைத்தாலே இனிக்கும்','47 நாட்கள்'னு பிறகு வந்த படத்தில நடிச்சதெல்லாம். இன்னொரு முக்கியமான அம்னி ஒய் விஜயா, ராங் நம்பர் ஒய் விஜயா ஆனாங்க! இப்ப நம்ம எஸ் ஜே சூர்யாவெல்லாம் செக்ஸ் படம் எடுத்து ஊரை கெடுக்கிறாருன்னு சும்மா சால்ஜாப்பு சொல்லிக்கிட்டு இருக்கோம். அப்பவே பாலசந்தர் இந்த மாதிரி கிளு கிளுப்பான படம் கொடுத்தவரு! அவரை பத்தி அப்புறமா அதிகமா இன்னொரு பதிவில பேசலாம். சரி விட்ட இடத்துக்கு போவோமா?

அப்படி பிரபலங்களை கூப்பிட்டு வந்து கொளரவிக்கும் போது, இந்த கோவை வானொலி நாடக நடிகர் சேகரையும் ஒரு ஃபங்க்ஷனுக்கு கூப்பிட்டுட்டு வந்தோம். அப்படி கூப்பிட்டு வந்தப்ப நம்ம நடிப்பை எல்லாம் பாத்து, அவரு ஒரு கமர்ஷியலா நாடகம் போட்டப்ப எனக்கு ஒரு ரோல் கொடுத்தார்.
அவரு ஒரு பேங்க் மேனேஜர், ஸைட்ல டிராமாவெல்லாம் போட்டு நடிச்சுக்கிட்டு இருந்தாரு. அப்படி நடிச்ச நாடகத்தில நமக்கு ஒரு வில்லன் ரோல். அதில ரஜினியோட அந்த கால பரட்டை, காளி அப்புறம் கதாநாயகனா நடிச்ச 'பைரவி'யோட தாக்கம் நம்ம கிட்ட நிறையவே இருந்ததால, அப்படியே நடிச்சு ரொம்ப கைத்தட்டல் எல்லாம் வாங்கின காலம். நம்ம அந்த நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் என் காலேஜ்ல.

அந்த நாடகம் அப்ப உள்ள ஸ்டைல், பக்கம் பக்கமா அவங்க வசனம் வச்சிகிட்டாங்க. எனக்கு பண்ணை மைனர் ரோலு, நம்மக்கூட வற்ர மாதிரி இன்னொரு கேரக்டர்ல, சீனிவாசன்னு பக்கா காமடியன். கமர்சியல் நாடகங்கள்ல நடிச்சி பேர் வாங்கினவர், என்ன எப்பவும் கொஞ்சம் மப்புலதான் இருப்பாரு. நாங்க இரண்டு பேரும் வற்ர சீனுங்க ரொம்ப கலக்கலா இருக்கும். அந்த நாடக டைரக்டர் லஷ்மி மில்ஸ்ல வேலை பாத்தவரு.நம்ம வானொலி நடிகருக்கு ஹீரோ ரோலு, அந்த டைரக்டரும் ஒரு பெரிய சப்போர்டிங் ரோல் எடுத்து கோயில் பூசாரி ரோலுன்னு நினைக்கிறேன். அப்பதான் முதன் முதலா நான் ஸ்திரி பார்ட்ல பொண்களோட நடிச்சது. அந்த நாடகத்து ஹீரோயின் கோவையில அப்ப பிரபலமா இருந்தது. கோவை சரளா எல்லாம் சினிமால்ல நடிக்க முன்னாடி, அப்பவே அந்த ஹீரோயினுக்கு தோஸ்த்து, எங்க டிராமா ரிகர்சல்ல பார்த்திருக்கேன். நம்மை வில்லானா போட்டது இல்லாம, இரெண்டு டிக்கட்டு கட்டை தூக்கி கொடுத்துட்டாரு அந்த சேகரு. நானும் எங்க பசங்க காலை கையை புடிச்சு ஒரு 40% கும்பல் அந்த நாடகத்துக்கு எங்க காலேஜ் கும்பலுதான். அதில அவரு பண்ண எக்னாமிக்ஸ் அவருக்கே எமனாவும்னு தெரியுமா என்ன அவருக்கு? அது என்னான்னு அடுத்த பதிவுல பார்க்கலாமா?

Saturday, February 11, 2006

ரங் தே பசந்தியும், ஆயுத எழுத்தும்...

தொடர்ந்து பால்ய பார்வை பார்த்து வந்த நான் இனி இந்நாட்களில் என்னை பாதிக்கும் விஷ்யங்கள் சிலவற்றையும் இதே இடுகையில், அந்த பால்ய நாட்களில் இருந்த அதே உத்வேகத்துடன், எப்படி என்னை பாதித்ததோ அப்படியே பாதிப்பதால் இதே தளத்தில் பதிக்கலாம் என்று இன்று இதை பதிக்கிறேன்!

நேத்து ரங் தே பசந்தி என்ற ஹிந்தி படம் பார்த்தேன். படம் பார்த்திட்டு, ஏண்டா இப்படி தமிழ் படங்கள் வரமாட்டங்கிதுன்னு ஒரு ஆதங்கம் வந்திச்சு, யோசிச்சு பார்த்தப்ப, நம்ம மணி எடுத்த ஆயுத எழுத்தின் கத கருவும், இந்த படக்கருவும் கிட்டத்திட்ட ஒரே மாதிரி இருந்திச்சு. அதனால தான் என்னமோ, அதில நடிச்ச மாதவனும், சித்தார்த்தும் இந்த ஹிந்தி படத்தில நடிச்சிருக்காங்க!
அப்புறம் இந்த ஹிந்தி படத்தில நடிக்கிறதுக்கு நம்ம சூர்யாவையும் அப்ரோச் பண்ணாங்கன்னு கேள்விப் பட்டேன், அவரு நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்கும், ஆனா எந்த கேரக்டருக்கு செலக்ட் பண்ணிருப்பாங்கன்னு தெரியல. இந்த படத்தில அந்தக்கால ஆராதனா அழகி ஷர்மிளா டாகூர், (ரூப் தேரா மஸ்தானான்னு பாட்டு கேட்ருக்கிங்களா, சரியா போச்சு, நீங்க சுத்த தமிழுன்னு, சிவாகாமியின் செல்வன் படம் ஒன்னு வந்தது ஞாபகம் இருக்கா, நம்ம சிவாஜி வாணிஸ்ரீயயை அதே மாதிரி பாடி டாவுவுட்டு புள்ளையை குடுத்துட்டு போய் சேர்ந்துடுவாரு புண்ணியவான், பிறவு பைலட்டா வந்து நம்ம வாத்தியாரு உரிமைக்குரலை ரூட்டு போடுவாரே, ஆங்.. அதே கதைதான் ஹிந்தில இந்த அம்ணி நடிச்சது) அவங்க பொண்ணு, சோஹா அலிகான், நடிச்சிருக்கு, ஓ.. பெருவாரியான தமிழ் ஜனம், நீங்க படம் பார்த்திருக்க மாட்டீங்கள்ள!


கதை இதுதான், 1930கள்ல நடந்த இந்திய சுதந்திர போரட்டத்தில ஈடுபட்ட இளைஞர்களையும், இந்தக்கால இளைஞர்களையும் ஒரு சமமா யோசிச்சு பார்த்து, அவங்க போரடற நோக்கங்களை ஒரு மாறுபட்ட சிந்தனையோட அணுகினா அது எப்படி இருக்கும்ங்கிறதான். அப்ப இந்திய சுதந்திர போராட்டத்துக்காக, வெள்ளையர்களை எதிர்த்து போராடின, ஜாலியினவாலாபாக்ல படுகொலை செய்த ஜென்ரல் டயரை எதிர்த்து போரடின இளைஞர்கள் கூட்டத்தை, இன்னைக்கு ராணுவ தளவாட ஊழல், மற்றும் அதிகார துஷ்பிரயோகம், செஞ்சு மக்களை அழிக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுகிற இளைஞர்களோடு ஒப்பிட்டு நாடு அந்த கால சுதந்திர புரட்சி செஞ்ச மாதிரி இந்த இளைஞர்கள் புரட்சி படைக்கிற மாதிரி ஒரு புது மாதிரியா கதை சொல்லி இருக்காங்க!

இதில விஷேஷம் என்னான்னா, நம்ம ஏ ஆர் ரஹமான் சும்ம பட்டையை கிளப்பி இருக்கிறாரு. முன்னாடி எல்லாம் கூட்டத்துக்கு பாட்டு கட்டுனவரு இப்பெல்லாம் கிளாஸ் கும்பலுக்கு மெட்டு போடறாரு. அத்தனை பாட்டும் தேன், அதுவும் அவரும், லதா மங்கேஷ்கருக்கும் பாடியிருக்கிற 'லுக்கா சுப்பி'ன்னு ஒரு பாட்டு, கேட்டுப்பாருங்க, கிளாஸ்! அதாவது தாயும், மகனும் ஓடி ஒளிஞ்சு விளையாடி பாட்டு படிச்சிகிட்டா எப்படி இருக்கும்.அவரு பாடன வந்தேமாதரம் பாட்டுத்தான் திரும்ப ஞாபகம் வருது, இதுவும் தேன்! மத்த பாட்டுகள் பஞ்சாபி பிளன்ட், தளிர் மெகந்தின்னு ஒரு பங்கரா பாட்டு பாடகர், டில்லி பக்கம் இருக்கிற நம்ம தமிழ் ஆளுங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும், இவரைப் பத்தி, பாப், பங்கராவையும் கலந்து அடிக்கிற ஆளு, அவரும் ஒரு பாட்டு பாடி அச்த்தி இருக்கிறாரு.

ஆயுத எழுத்துலயும், மூணு இளைஞர்களை வெவ்வேற கோணத்தில எடுத்திட்டுப்போயி, கடைசியில அவங்களை ஒரே நேர்கோட்டுக்கு கொண்டு வந்து, பிரச்சினையின் நடுமையத்தில சுழல விட்டுருப்பாரு நம்ம மணி. நல்ல ட்ரீட்மெண்ட், அந்த திரைக்கதை அமச்ச உத்தியத்தான், இந்த ஹிந்திப்பட் டைரக்டரும் கையாண்டு கடந்த, நிகழ் கால கட்டங்களை ஒன்னா கொண்டு வச்சு, பிரச்சினையை சொல்லப் பார்த்திருக்கார். கதை கருவோட நோக்கம் ரெண்டுக்கும் ஓன்னுத்தான். படம் பார்த்திட்டு வெளியில வரப்ப ஒரு சரியான தாக்கம் இருந்திச்சு. மொத்தத்தில இந்த மாதிரி படங்கள் அதிகம் தமிழ்ல்லயும், ஹிந்தில்லையும் வரதில்லை. எப்பாவாது அத்தி பூத்தமாதிரி. ஹிந்திப்படம்னு ஒதுக்கிடாம போய் பாருங்க, நல்லா இருக்கு.

இந்தப்படத்தை பத்தி எழுதலாம்னு இணையத்த பீராஞ்ச்ப்ப, நிறைய தகவல் கிடச்சுது, உலகம் சுருங்கி வர்து நல்லாவே தெரியுது. ஆக இனம், மொழி, மத்த எந்த எல்லைகளும் இல்லாம எல்லாமும் எல்லாருகிட்டயும் நெருங்குது. இந்த படத்தில வேலை செஞ்ச பாதி பேரு தமிழர்ங்கன்னா ஆச்சிரியமா இல்ல! டெக்னிக்கல்லா இது மாதிரி படங்களை விமர்சனம் பண்ணி நிறை பதிவுகள் தளத்தில கிடச்சுது, அதனால நான் நிறைய பேசல, சும்மா, வாய்வழி விமரிசனம் செய்ய ஆளுக்கிடைக்காம இதை படம் பாத்துட்டு ஒரு தாக்கம் வந்து உந்துதலால எழுதிப்போட்டேன். இதையே, என்னுடய பால்ய பருவ்ம்னு எடுத்துக்கிட்டா, ஒரு வாரம் பேசி தீர்த்துருபோம், அக்கு வேற ஆணி வேற கழட்டி போட்டு இருப்போம், விவாதிக்க, என் தனபாலோ, இல்ல மனோகரனோ,ஷாஜகானோ, குமரோ என்கூட இப்ப இல்லை. எல்லாம் பால்ய சினேகதங்கே!. இப்ப யாரு இருக்கா, சினேகம்னு சொல்ல உங்களை விட்டா!

Wednesday, February 08, 2006

தினமலரில் எனை ஆண்ட அரிதாரம்

எனக்கு இப்பொழுது தான் செய்தி கிடைத்தது, நான் எழுதி வரும் எனை ஆண்ட அரிதாரத் தொடரைப் பற்றி தினமலரில் எழுதி இருப்பது! செய்தி கொடுத்த நண்பருக்கும், தினமலருக்கும், அரிதார தொடரை தொடர்ந்து வந்து பார்வையிடும் தமிழ் மண நண்பர்களுக்கும் என் நன்றி!! விவரம் கீழே காணுக! தினமலர் தளம் சென்று பார்வையிட, இதோ அந்த தொடர்பு

காதல் கண்டேன்! மணம் கொண்டேன்!

என்னுடய பல பால்ய அனுபவன்களை சொல்லி வந்துகிட்டு இருக்கிறேன் என்னுடய பதிவுகள்ள, ஆனா எனது வாழ்க்கையில நடந்த முக்கியமானது,எனது காதல், அதன் பிறகு கொண்ட திருமணம். அதை பற்றி விரிவா இனி வர பதிவுகள்ள எழுதலாமுன்னு இருக்கேன். ஆனா இன்று என்னுடய திருமண நாள், அதை நினத்து, என் அன்பு மனைவிக்காக நான் பதிந்த பதிவை உங்களுக்காக இங்கே பகிர்ந்துக்கிறேன்!

அன்பே என் அன்பே! நீ குறிஞ்சி மலர் போன்றவள், எந்த மலருக்கும் இல்லாத ஒரு பெருமை இப்பூவுக்குண்டே! பன்னிரெண்டு வருடஙகளுக்கு ஒரு முறை தான் பூப்பது போல், அதிசய மலர் தன்மை கொண்டவளே, எனக்கு கிடைக்கப் பெற்றவளே! இது போன்ற தலைவி ஒருவனுக்கு கிடைப்பது ஒரு பெரும் பாக்கியம். அப்பாக்கியத்தை எனக்களித்தவளே! நான் என்றுமில்லா ஆனந்தம் இன்று கொள்கிறேனே,ஏன் தெரியுமா, இன்றைய தினத்தில தான், பதினெட்டு வருடங்களுக்கு முன் உன்னை நான் கிடைக்கப் பெற்றேன்! இந்த அரிய தினத்தை என்னால் மறக்க இயலுமோ! இந்த மகிழ்ச்சியான இந்த தருணத்திலே, நீ எனக்கு கிடைத்த கனவுகளிலே மிதக்கின்றேன். முதல் அறிமுகம் இன்றும் மனதில் பசுமையாக காட்சி அளிக்கிறதே. அந்த கள்ளம் கபடமில்லா குழந்தைப் போன்ற உன் முகம், என்னிடம் பேசும் சில நிமிடங்களில் உன்னிடம் நான் கண்ட ஆனந்தம், ஆகா, அதை என்னால் ஒரு வரியால் அடக்கி விட முடியாது என்னவளே! அதற்கு எனக்கு இந்த யுகம் போதாது.

தொடர்ந்து நீ ஏற்படுத்தி கொள்ளும் அந்த அழகான சந்தர்ப்பங்கள், என்னிடம் பேச விழைவதற்கு, மிக அழகானவை, அந்த காதல் கொண்ட நாட்கள் நினத்தாலே தித்திப்பானதே! என்னை மறந்த நாட்கள் பலவாயிற்றே! காதல் தெரிவித்த பின் உன்னோடு இருந்த காலங்கள் சில மணி நேரங்கள், அதன் பின் என பணி நிமித்தம் உன்னை பிரிந்த பொழுது, எத்தனை கலக்கம் தெரியுமா, தூங்கமல் சென்ற இரவைத்தான் அழைக்க வேண்டும் சாட்சி சொல்ல!


பிரிந்தும் இருந்ததே இன்பம், என் சொல்வேன், அதிகமில்லை இருவரும் ஒன்றாய் கழித்த தருணங்கள், ஆயினும் என்னால் உன் நினைவினை அசை போட முடிந்ததே! உன் முகத்தினை மனத்திரையில் எத்தனை வடிவில் கொண்டு சென்றேன் ஒவ்வொரு மணித்துளிகளிலும் உனை நினைக்கும் பொழுது! பிறகு கடிதம் இட்டுக்கொண்டோம், தாயகம் பிரிந்த வடக்கே சென்ற பொழுதும், என் தினம் பிறப்பது தெற்கு நோக்கிதான். கதிரவனை நான் கிழக்கில் கண்டு தொழுததில்லை நித்தம், அன்றைய தினங்களில்! இப்பொழுதும் அப்படித்தான். உனைப்பிரிந்து எங்கு சென்றாலும், நீ இருக்கும் திசையில் தான் என் கதிரவன் தினம் உதிப்பான். இப்பொழுது கூட, ஏன் இன்றுகூட வடக்கில் தான் உதித்துள்ளான், எனென்றால் நீ இருப்பது வடக்கு துருவம் அருகிலல்லவா?

ஓடோடி வந்து, உனைக்காணும் நாள் தான் எனக்கு இனிய நாள், இருவரும் ஏக்கப் பார்வைக் கொண்டு நேரம் விரைவதை ஏசிப்போம், இருவரும் ஒன்றாய் இருக்கும் தருணங்கள் சுருங்குவது, அண்டசராசரமே அழிவது போன்ற ஒரு பிரம்மை! பிறகு உன் விழி நான் கண்டு என் விழியும் நீருக்குள் சுருங்குவது நாம் மட்டுமே அறிந்த உணர்வு. எப்படியோ நம் விடயம் உன் வீட்டில் தெரிந்து, நீ செய்த சத்தியத்தை காப்பாற்ற, ஒரு மடல் விடுத்தாய், அனைத்தையும் மறந்து போக சொல்லி. மறக்க முடியுமா நம் காதல், இல்லை பிரிக்கக் கூடியதா நம் பந்தம். ஆனால் காலத்தின் கட்டாயத்திற்காக ஒதுங்கினோம், அப்படி பிரிந்த நாட்களும் தொடர்பின்றி போனதே ஒழிய, நினைவின்றி போகவில்லை, இனி உன்னை எப்போது காண்பேன் என ஏங்கி தவித்த நாட்கள் அதிகம். இன்றும் நினக்கும் பொழுது அது போன்ற ஒரு நிலை என்றும் நமக்கு வரக்கூடாதென்பதே என்னுடய சித்தம் என்றுமிருக்கும்.

இப்படி போன நாட்களிலே வந்தான் ஒருவன், இழந்த சொர்க்கத்தை மீட்டு கொடுக்க! நான் கண்ட பணி பேணும் அந்த நல்லான், காதல், பிரிவுகளை கண்டுணர்ந்த அந்த நண்பன், வழி தடமிட்டான் நாம் இருவரும் இணைய. நீயும் கல்லூரி முடித்து துணிந்த நின்ற நேரம். இடர்கள் அனைத்தும் தகர்த்து விடும் தன்னம்பிக்கையும், இணைந்தே வாழ்வது என்ற வைராக்கியமும் உன்னிடம் நிறைந்த நேரம், மீண்டும் தொடர்புட்டு என்னை அடைந்தே தீருவது என்று உன் வீட்டாரிடம் தர்க்கம் கொண்டாய். நானும் பெரியவர்கள் ஆசி என்றும் வேண்டுமென்று நம் காதலுக்கு மரியாதை செலுத்த முன் வந்தேன். இரு வீட்டாரின் சம்மதம் பெற்று, இந்நாளிலே ப்தினெட்டு ஆண்டுகளுக்கு முன் மணமேடை புகுந்தோம். அந்த இனிய நாள் வாழ்வில் மறக்க இயலா ஒன்று.

இன்றும் ஈருடல் ஓருயிராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம், எத்தனையோ சிறு பல தவறு செய்தாலும், உன் அன்பு என்றும் மாறாமல் என்றென்றும் என் மீது காதல் வயப்பட்டு இருக்கிறாய், நீ கிடைப்பதற்கரிய ஒரு குறிஞ்சு மலர். எனக்கே எனக்காக உருவாகியவள், நான் என்றும் என்றும் கொடுத்து வைக்கப்பட்டவன் உன் போன்ற அரிய மனைவி அமைய. இதில் ஒரு பொருத்தம் கண்டாயா, உலகம் கொண்டாடும் காதலர் தினம் நாம் கூடிய தினத்திற்கு மிக அருகாமையில்! இது போன்ற மகிழ்ச்சிமிக்க திருமண நினைவு நாள் தொடர்ந்து வந்து நம் வாழ்வை மென்மேலும் சிறக்க வைக்க வேண்டும் என்பதே என் அவா..


இதோ நீ என்னிடம் விரும்பி பாடச் சொல்லும் பாட்டு உனக்காக!

Tuesday, February 07, 2006

எனை ஆண்ட அரிதாரம்- ஏழாம் பகுதி

இந்த தொடர் எழுத ஆரம்பிச்சு, ஒவ்வொரு தொடர்லயும் ஒரு முடிச்சை போட்டுட்டு, அதை அவுக்காம, தொடர்ந்து எழுதிக்கிட்டு இருந்தா அது படிக்கிறவங்களுக்கு ஒரு சுவாரசியத்தை கொடுக்கும்,
எப்பதான் போட்ட முடிச்சு அவுப்பாருன்னுங்கிற எதிர்பார்ப்பு இருந்துகிட்டே இருக்கும. ஆனா சொல்லாமலே நீடிச்சுக்கிட்டு போனா, அது கடைசியில போராடிக்கிமுன்னு எனக்கு நல்லவே தெரியும். அதனால, மூணாவது தொடர்ல, நான் நம்ம நடிகர் நாசரோட போட்டி போட்டேன்னு எழுதி இருந்தேன், அது எப்படின்னு கேட்கலையே நீங்க!

இஞ்சினியரிங் காலேஜ்ல முத வருஷம் ஒரு மாதிரியா முடிஞ்சது, முத செமஸ்டர்ல, ஏனாதானோன்னு பரீட்சை எழுதி கம்மியா எல்லா சப்ஜக்ட்லேயும் மார்க் வாங்கின சோகம், அதான் மாஸ் கட் அடிச்சிட்டு படிக்கிறேன் பேர்வழின்னு ராதிரி பூரா சீட்டாட்ட கச்சேரி நடித்திட்டு, லீவு இருந்த மூணு மாசத்தில இரண்டரை மாசத்தை சினிமா, சீட்டு, அப்படின்னு போக்கிட்டு, கடைசி இரண்டு வாரத்தில படிச்சி பரீட்சை எழுதனும்னா எப்படி, வர்ர மார்க்குதான வரும். இஞ்சினியரிங் காலேஜ் வரதுக்கு முன்னாடி அதிக மதிப்பெண்களோட எஸ்.எஸ்.எல்.சி, பிடிசியில எல்லாம் மார்க்கு வாங்கி பெருமையா இருந்த ஆளு இப்படி காலேஜ் அடி எடுத்து வச்சதும், ஊத்துக்கிச்சினா வருத்தம் இல்லாமலா இருக்கும். ஆக இரண்டாம் செம்ஸ்டர்ல, ரொம்ப உத்வேகமா படிச்சி, இழந்த பெருமையை மீட்ட மாதிரி நல்ல மார்க்குகள் வாங்கியாச்சு. ஆனாலும், இடையே கிடச்ச நல்ல நடிகன், நாடகம் நல்ல போடக்கூடியவன்ங்கிற பேரு அப்ப ரொம்ப பெருமையா இருந்தது. ஆக இந்த படிப்பு பாடங்களை விட, இந்த நடிப்பு, நாடகம் மேல ஈர்ப்பு அதிகமா இருந்தது. அதுக்கு காரணம் நான் பார்த்த சினிமாக்கள் தான். அதிலயும் மூணாவது செமஸ்டர் ஒரு சோகமா ஆரம்பிச்சு படிப்புகள் அந்த காலகட்டத்தில இறங்குமுகமா இருந்த நேரம். ஏன்னா, இரண்டாவது வருஷம் நமக்கு ஹாஸ்டல் தரவில்லை. எங்க செட்ல, இரண்டாம் வருஷ ஸ்டூடன்ஸ்க்கு இருந்த அறைகளுக்கு அதிகமா ஆட்கள் இருந்த தாலே, அப்ப இருந்த ஹாஸ்டல் வார்டன் எப்படிடா ஒரு பதினஞ்சு பேத்துக்கு ஹாஸ்டல் இல்லன்னு சொல்றதுன்னு முழிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்ப உதவ வந்தாரைய்யா அந்த ஹாஸ்டல் அக்கொளடென்ட். சில பல சின்ன ஷேஷ்டைகள் முத வருஷத்தில நாங்க செஞ்சதை காரணம் காட்டி எங்களுக்கு இல்லைன்னுட்டாங்கே! என்னா அதிகமா ஒன்னும் தப்பு பண்ணல. செமஸ்டர் ஸ்டடி லீவுக்கு வூட்டுக்கு போறதுக்கு முன்னாடி எங்க மெஸ் ரிஜிஸ்டர்லை, ஹாஸ்டல்ல தங்காத நாட்களை குறிச்சுட்டு போகணும், சும்மா நாட்களை மட்டும் குறிச்ச பத்தாதுன்னு, அதற்கு காரணம் எழுத சொல்வாங்கே அந்த ரிஜிஸ்டர்ல. அதான் தெரியும்ல அவஅவென் வீட்டுக்குத்தான் போவான் ஸ்டடி லீவுன்னா, இதுக்கு காரணம் எதுக்கு? அப்ப தான் நம்ம கோணபுத்தி நம்மல கிறுக்கப் பண்ண வச்சுச்சு. அந்த காரணத்துக்கு, ஐயா ரொம்ப விவரமா, பாம்பேக்கு போறதாவும், அதுவும் வெறுமன பாம்பே போனா பத்தாதா, பாம்பேக்கு பொண்ணு பாக்க போறாதா எழுதி வச்சுப்புட்டு வந்து புட்டேன். இது போதாதா, அடுத்த வருஷம் ஹாஸ்டல் இல்லன்னு சொல்லி கழிச்சிகட்ட. நானாவது பரவாயில்ல, சில பேரை வெளியில தள்ளனும்னு, நல்ல இருக்கக்கூடிய சில சாமியார் பசங்களையும்ல சேர்த்து வெளில தள்ளுனாங்கே!

வெளியில சிங்காநல்லூர் போற ரோட்டு பக்கத்தில இருந்த சின்ன குடியிருப்பகள்ல அவுட் ஹவுஸ் மாதிரி கட்டி வச்சு ரூம் கொடுப்பாங்க, கல்லூரிகள் அதிகம் நிறைந்த அந்த பகுதியில கொஞ்சம் பேச்சலர்ங்க நிறைய பேரு ரூம் எடுத்து தங்கி படிப்பாங்க. பக்கத்தில மெடிக்கல், பாலிடெக்னிக், ஆர்ட்ஸ் காலேஜ், அப்புறம் டெலிபோன் எக்ஸேஞ், சித்ரா (SITRA)ன்னு வேலை பார்க்கிற இளைஞர்கள் கும்பலும் நிறைய உண்டு. அப்படி தான் நமக்கு ஒரு வீட்ல அவுட் ஹாவுஸ்ல ரூம் கிடைச்சிச்சு. கூடவே சோத்தையும் போட்டாங்க அந்த வீட்ல, அதாங்க கொளவ்ரதையா பேயிங் கஸ்ட்ன்னு சொல்வாங்களே, அந்த மாதிரி. அது மணவாடு வீடு, நம்மலும் கொஞ்சம் தெலுங்கு மாட்லாடிப்போம் அப்ப. அதுனால அந்த வீட்டுக்காரம்மாவுக்கு நம்ம மேல அதிகமா கரிசனம். பத்தாதுக்கு வீட்ல ஒரு வயசு பொண்ணு ஒன்னு வேறே இருந்தது. ஏதாவது பத்திகிட்டு எரியறதுக்கு முன்ன காலி பண்ணிட்டு ஒடுனும்டா சாமின்னு, அடுத்த செமஸ்டர்ல, நமக்கு ப்ரண்ட்லியா இருந்த கெமிஸ்ட்ரி புரெபெசர் வார்டனா வந்தோன, கெஞ்சிக் கூத்தாடி ரூம் கேட்டு வாங்கி ஹாஸ்டலுக்கு ஒடிட்டேன். அப்ப கொஞ்சம் விவரம், படிச்சு முடிக்குமுன்னே காதல், கத்திரிக்கான்னு இறங்கிக்கல்ல. அப்படி இருந்தும் சில சமயங்கள்ல ராத்திரிக்கு சில நேரங்கள்ல பக்கத்தில இருந்த அக்கா மெஸ்க்கு போவோம். அந்த மெஸ்ல இருந்த அக்கா திடிர்ன்னு ஒரு நாள் எங்க கூட வந்திக்கிட்டு இருந்த தோஸ்த்து ஒருத்தனை சும்மானுலும் பலி சொல்லி என்னை அங்க பார்க்கிறான், இங்க பார்க்கிறான்னு அதையும் அப்புறம் போறதை நிறுத்திக்கிட்டோம். ஹாஸ்டல் கிடைக்கிலையேங்கிற கவலையில படிப்பு மூணாவது செமஸ்டர்ல கொஞ்சம் மந்தம் தான். ஆனா எந்த பாடத்திலையும் பெயிலாகல கடைசி வர, அது தான் யாரு செஞ்ச புண்ணியமோ!

இப்படி நாடகங்களே கதின்னு, அதே சிந்தனையோட நல்லதா ஒரு நாடகம் போட்டேம், பேரு "முகாரி ராகங்கள்"ன்னு வச்சோம். அது அப்ப வந்த பசிங்கிற படத்தோட தழுவல் மாதிரி. குடிசையில குமரி வாழ்க்கை எப்படி சீப்படுதுங்கிறதை அழகா, அப்ப துரைன்னு ஒரு டைரக்டர் இருந்தாரு, அவரு எடுத்தது. அவர் நல்ல படங்கள் கொடுத்தவரு.
சுமித்திரா, முதன் முதல்ல நடிச்ச "அவளும் பெண்தானே" ங்கிற படம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கோ தெரியல, எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அப்புறம் டி.ராஜேந்தர் மியூசிக் போட்டு, அவர் எடுத்த 'கிளிஞ்சல்கள்' மறக்க முடுயுமா? அப்ப மைக் நடிகர் மோகன் பிரபலமா இருந்த நேரம், பயணங்கள் முடிவதில்லை பிச்சிகிட்டு ஒடி மோகனும் பூர்ணிமா ஜெயராம் ஜோடி ரொம்ப ராசின்னு அவங்களை போட்டு, அப்பதான் ஒருதலைராகம் படத்துக்கப்பறம் ரொம்ப பேமஸ்ஸா இருந்த டி.ராஜேந்தரை மியூசிக் போட சொல்லி எல்லா பாட்டும் செம ஹிட்டு. அப்ப இந்த பசி படத்தில ஷோபாவும், கூட புதுசா நடிச்ச சத்யாங்கிற பொண்ணு, சும்மா மெட்ராஸ் பாஸையில நடிச்சு வெளுத்து வாங்கி இருந்தாங்க, அப்புறம் அந்த பொண்ணுக்கு பசி சத்யான்ன்னே பேரு வந்தது. இரண்டு பேரும் குப்பை பேப்பர் பொறுக்கி ஜீவனம் நடத்துவாங்க, அப்ப ஷோபா எப்படி சீரழியுதுன்னு நல்லா எடுத்த இருந்தாரு அந்த டைரக்டர் துரை. அதை பேஸ் பண்ணி ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியோட குடும்பம் எப்படி அவன் பொறுப்பா நடக்காதைதால சீரழியுதுன்னு சொல்லிருந்தோம். அவன் பொண்டாட்டி ஒரு பெரிய செல்வந்தன் வீட்ல வேலை செய்வாள், அவ பொண்ணும் கூட போய் ஒத்தாசையா வேலை செஞ்சுகிட்டு இருக்கிறப்ப, அந்த வீட்டு பையன் அவளை கெடுத்து சீரழிச்சு கடைசியில பொண்டாட்டி டிபியில கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில ஏழைங்கள எப்படி உதாசீன படுத்தி, கடைசில அவ செத்துப்போயி, இவன் சோகமா எல்லாரையும் இழந்து கடைசியில எழைங்க வாழ்க்கையில அவங்க பாடுறது முகாரி ராகங்கள்ன்னு முடிச்சு இருப்போம். கதை என்னமோ சினிமாத்தனமாதான் இருந்தது, ஆனா நாடக ஸ்கீரின் பிளே, அதை அசத்தலா குடிசை, சேரி இதை எல்லாம் ரொம்ப தத்ரூபமா காட்சி அமைத்து interlude மியூசிக் எல்லாம் பிரமாதபடுத்தி, எல்லாரும் அசந்த்திர மாதிரி இந்தநாடகத்தை போட்டோம்.

அப்ப PSG இஞ்சினிரியங் காலேஜ்ல நாடக செகரட்ரியா இருந்தவன் எனக்கு ரொம்ப தோஸ்த்துன்கிறதுனால, எங்க காலேஜையும் அந்த inter college டிராமடிக் காம்பிட்டிஷன்ல கலந்துக்க ரொம்ப வற்புறுத்துனான். அப்ப ஏதோ சில காரணங்களால நாங்க எங்கேயும் வெளில போயி நாடகம் போடவேனான்னு இருந்தோம், அதுவும் இந்த நாடகம் எங்க காலேஜ்ல இன்னமும் ஸ்டேஜ் ஏத்தம இருந்தோம். அவனும் ரொம்ப நச்சரிச்சதாலே ஒத்துக்கிட்டு இந்த புது நாடகத்தை அரங்கேற்றலாமுன்னு இருந்தோம். அப்ப PSG காலேஜ்லயும் Revolving stage ஒன்னை புதுசா செட்டப் பண்ணி வச்சு இருந்தாங்க. எங்க நாடகத்துக்கு இந்த ஸ்டேஜ் ரொம்ப கை கொடுத்தது, அதுவும் அந்த குடிசை செட்டிங் எல்லாம் அசத்தல half stage arrangementல எங்களுக்கு ரொம்ப சூட்டா ஆகிப்போச்சு. இந்த ஸ்டேஜை இவ்வளவு எக்ஸ்லன்ட்டா யாரும் யூஸ் பண்லனன்னு அவுங்க காலேஜ்ஜே எங்களுக்கு சர்டிபிக்கேட் கொடுத்துச்சு. ஏன் Hindu பேப்பர்ல எங்களை பாராட்டி தள்ளிட்டாங்க. அப்பதான் அந்த செக்ரட்ரி பையன் ஒரு ரகளை பண்ணிட்டான். அவன் மெட்ராஸ்ங்கிறதுன்னால அவன் செல்வாக்கை பயன் படுத்தி, சென்னை திரைப்பட் கல்லூரியையும் அதில participate பண்ண வச்சுட்டான். அந்த திரைப்படக் கல்லூரி குருப்ல தான் நாசரும் வந்து நடிச்சாரு. அவங்க புதுமையா வசனமில்லாம, ஆடல் பாடல்கள்ல நயனம் காட்டி அழகா ஒரு கதை சொல்லி ஆடியன்ஸ்கிட்ட அப்பளாஸ் வாங்கிட்டு, சிறந்த நடிகருக்கான கோப்பையையும் வாங்கிட்டு நாசர் போயிட்டாரு. அந்த நாடகம் போடுவரை ஆணித்தரமா எல்லாரும் எதிர்பார்த்து என்னுடய நடிப்புகாக நான் சிறந்த நடிகன் பரிசு வாங்கவதை தான். அதனால கடைசியில நாங்க நொந்து போயிடக்கூடாதுங்கிறதுக்காக, சிறப்பு பரிசா என்னுடய நடிப்பை பாராட்டி எனக்கு கடைசியில ஒரு கோப்பையும் கொடுத்தாங்க. அப்ப நாங்க எல்லாரும் அந்த காலேஜ் நாடக செக்ரெட்ரியை புடிச்சு சண்டை போட்டு ஒரு ரகளையே பண்ணிட்டோம். அதெப்படி நடிப்பு, நாடகத்தை professionalஆ கத்துக்கிறவங்களோட, நாங்க அமெச்சூரிஸ்ட், எப்படி நீங்க அந்த நாடகத்தை போட்டில எடுத்துக்கிடலாம்ன்னு எல்லாம் சத்தம் போட்டு எங்க நாடக குரூப்பே சண்டைக்கு போயிடுச்சு, அப்புறம் நான் தான் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்தேன்.

இந்த நாடகம் போட்டப்பத்தான் ஒன்னு ரெண்டு Lesson படிச்சுகிட்டோம். என்னதான் எக்ஸ்லன்ட் நாடகமா இருந்தாலும், நம்ம நாடகம் போட்டிகளின் கடைசி நாள்ல வர்மாதிரி பாத்துக்கிறது, அப்பதான் ஜட்ஜ்ங்க கடைசியில எடுக்கிற முடிவுகள்ல நல்லா impact பண்ண முடியும், ரெண்டாவது பப்ளிசிட்டி, ப்ரமோஷன் எல்லாம் நல்லா செஞ்சு, மக்களிடையே எதிர்பார்ப்பு உண்டு பண்றது, மூணாவது முதல் ஸ்டேஜ்ஜிங் நம்ம காலேஜ்ல நடத்தி, நாடக sequence, நடுவில் வரும் இடர்பாடுகளை சமாளிக்கிறதை அனுபவ பூர்வமா தெரிஞ்சுக்கிட்டு, வெளி காலேஜ்க்கு கொண்டு செல்வதுன்னு. இந்த lesson learned பிற்காலத்தில வெற்றியை நிலை நாட்ட நிறைய கை கொடுத்தது.

இதில இன்னொரு வில்லங்கமும் இருந்தது, அந்த காம்பிட்டிஷன்ல ஜட்ஜ் ஆக இருந்தவர்ல ஒருத்தர் கோவை வானொலி நிலையத்தில போடற நாடகங்கள்ல நடிச்சிக்கிட்டு இருந்த சேகர்னு ஒருத்தர். அவரு நம்மல பழி தீக்க தீர்ப்பை மாத்தி சொல்லிட்டாருன்னு பல நாளா நினைச்சிக்கிட்டு இருந்தேன். அதெப்படி அந்த வானொலி நாடக நடிகருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம், அவரு எதுக்கு என்னை பழி தீக்கணும்னு நீங்க எல்லாம் கேட்கிறது எனக்கு தெரியுது. ஆனா இருக்கே சம்பந்தம். அது என்னான்னு அடுத்த பகுதியில்லா பர்க்கலாமா..!

Monday, February 06, 2006

வணக்கம் வந்தனம் வந்துவிடும் என் அரிதார தொடர்

தமிழ்மண நண்பர்களே!, நண்பிகளே! நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! சென்றய ஆண்டு கடைசியில் உங்களை எல்லாம் விட்டுட்டு போனேன். இரண்டு மாதங்களுக்குப்பிறகு, மீண்டும் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். இதோ ஆரம்பித்து விடும் விட்டுப்போன என் அரிதாரத் தொடர்.

இப்புதிய ஆண்டிலே எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள், ரொம்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்ல்லாம் ஜல்லி அடிக்க மாட்டேன். ஏதோ புது வருஷத்தில நிறய ஊர்லாம் சுத்திட்டு அப்படியே ஜாலியா இருந்ததுனால எதுவும் எழுத முடியல்ல. எழுதலேனா என்ன, எங்க பதிவுகளுக்கு பின்னேட்டம் போட்டாதான் குறஞ்சு போயிடுவீங்களோன்னு நீங்க எல்லாம் கேட்கறது எனக்குப் புரியுது. என்ன பண்றது சோம்பேறிதனமுனு சொல்லி தப்பிக்கமுடியாது, இல்ல வேலைப்பளுன்னும் சொல்ல முடியாது. இதுக்கெல்லாம் காரணம் சொல்லிகிட்டு இருக்கமுடியுங்களா? சொல்லுங்க. என்னமோ எழுத தோணல்ல, அதான். அதான் வந்துட்டேன்ல, தொடர்ந்து நம்ம பதிவு வரும். எல்லாரும் வரணும், வந்து நம்ம பால்ய பருவ நிகழ்வுகளை படிச்சி பின்னேட்டம் போடுணும்

வணக்கம், வந்தனம், வந்துவிடும் எனை ஆண்ட அரிதார தொடர்.