Saturday, December 15, 2007

வாங்கோண்ணா.. வாங்கோண்ணா..!

வணக்கம் என் இனிய தமிழ் மக்களே! இதோ புத்தாண்டு வர தயாராகிவிட்டது! இந்த புது வருஷத்துக்கு நீங்க எங்கேயும் போகப்பேறீங்களா, இல்லை வீட்டிலே உட்கார்ந்து டிவி பார்த்துட்டு பொழுதை கழிக்க போறீங்களா! நமக்கு கொஞ்சம் வெளியூரு பயணம் இருக்கு, அதனாலே உங்களை பார்க்க முடியுமோ என்னமோன்னு தான் இப்ப இந்த பதிவு! அதாவது அந்த காலத்து ராஜா பாட்டுக்கு இருந்த மொவுஸ்ஸே வேறே! அதாவது அவரு ம்யூசிக் போட ஆரம்பிச்ச முத ரொண்டொரு வருசத்திலே வந்த பத்ரகாளிங்கிற படம் நீங்க எத்தனை பேரு பார்த்திருப்பீங்கன்னு எனக்குத் தெரியாது! அப்ப என்ன தான் நல்ல இனிமையான பாடல்களை அப்ப கொடுத்தாலும் அவரு டப்பாங்குத்து பாட்டு தான் போடத் தெரியும்னு சொல்லிக்கிட்டிருந்த காலம் அது! அதை ஊர்ஜிதம் பண்ற மாதிரி இந்த மாதிரி பாடல்கள் வந்துக்கிட்டு இருந்தது! ஏன்னா, அவரு தன்னை இண்டெஸ்ட்ரியுலே ஸ்டெடி பண்ணிக்கிறத்துக்கு இந்த மாதிரி பாட்டுக்கள் தேவை படத்தான் செஞ்சுச்சு, அதானாலே அவரும் இப்படி பாட்டு போட்டுக்கிட்டே இருந்தாரு!

ஆனா ஒரு Irony பாருங்க, இந்த படத்திலே அவரு போட்ட அத்தனை பாடல்களும் அருமையா இருந்து படம் நல்லா ஓடினாலும், இந்த படம் ஓடினதுக்கு பப்ளிசிட்டி என்னமோ இந்த படத்திலே நடிச்சிருந்த நடிகை ராணிச்சந்திரா, படம் பாதி எடுத்துக்கிட்டிருந்தப்பவே தூக்கு போட்டு செத்து போனதாலே, அந்தம்மாவுக்கு ஏற்பட்ட அனுதாப அலையாலே படம் என்னமோ ஓடிச்சின்னு சொல்லி மொத்த கிரடிட்டையும் ராஜாக்கிட்டே இருந்து புடிங்கிட்டாங்க! அந்த அம்மாவும் கொஞ்சம் நல்லா தான் நடிச்சிருந்தது! இல்லேன்னு சொல்றதிக்கில்லை!

ரொம்ப நாளளக்கப்பறம் அந்த படம் பார்க்க ஒரு சான்ஸ் கிடைச்சிது, அதான் அப்ப பட்டி தொட்டி எல்லாம் கிளப்பிக்கிட்டிருந்த வாங்கோண்ணா.. வாங்கோண்ணா.. பாட்டு கொஞ்ச்ம் நீங்க எல்லாம் ரிவைஸ் பண்ணிக்கிறதுக்காக இதோ அந்த பாட்டு!

சரி உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!, நம்ம மற்ற கிருத்தவ நண்பர்களுக்கு மெரி கிறிஸ்துமஸ்! வர்ட்டா!

Tuesday, December 04, 2007

வேட்டையாடு வேலைத்தேடு!

இப்ப தான் போன வாரம் டிசம்பர் மாச குளிர் ஆரம்பிச்சோன நம்ம கால்கரி மன்றத்திலே விழா நடத்தி முடிச்சோம், நம்ம ஊரு பக்கம் நடக்கிற டிசம்பர் சங்கீத விழா மாதிரின்னு வச்சுக்கங்க! அப்ப போட்ட ஒரு காமடி குறு நாடகம்! இதோ உங்கள் பார்வைக்கு கீழே! இந்த நாடகம் போடறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு! முக்கியமா நடிச்ச எல்லாருமே ஒன்னயிருந்து ரிகர்சல் பார்த்ததா சரித்திரமில்லை, கடைசி நாளு வரை எல்லாரும் ஏதாவது டைல்லாக்கஒ மறந்து சொதப்பிக்கிட்டே இருந்தோம். கடைசியிலே நாடகம் போட்ட அன்னைக்கு இந்த மைக்குங்ககளும் சரியா எடுக்காம சவுண்டு சிஸ்டம் எல்லாம் சொதப்பி ஏதோ போட்டு முடிச்சோம்! முக்கியமா என்னை சொல்லனும், ஒவ்வொர்ய் ரிகர்சல்லையும் டைலாக்கே வுட்டுட்டு வுட்டுட்டு சொதப்பிக்கிட்டே இருந்தேன். ஆனா நாடகம் போட்ட அன்னைக்கு எல்லாரும் சொன்னங்க, நான் கிளப்பிட்டேன்னு! நமக்கு இந்த மேடை கூட்டம்னு இருந்தா தான் களை கட்டும். என்னமோ போங்க! பதிவு போட நேரம் கிடைக்கலை,ஆனா டிராமாவை மட்டும் ஏத்திட்டியான்னு நீங்க எல்லாம் சத்தம் போடறது கேட்குது. கவலை படாதீங்க தொடர்ந்து மாசம் ஒன்னாவது எதையாவது எழுதி போடணும், இல்லை இந்த கூகுள் காரங்களுக்கும் சந்தேகம் வந்து என்னடா இவன் ப்ளாக் சைட் அப்படியே டார்மெண்டா இருக்கே, இது ஸ்பேம்மா இருக்குன்னு ப்திவு எழுதவுடாம பண்ணிட்டாங்க. அவங்க கையிலெ கால்லவுழுந்து கெஞ்சி கூத்தாடி நம்ம சைட்டை தொறக்க சொல்லி இந்த பதிவை போடறேன். ஆக தொடர்ந்து நீ எழுதுனா தான் உன்னை ஆட்டத்துக்கு சேத்துக்குவேன்னு சொல்லிட்டாங்க! அதனால அய்யா இனி உங்க கழுத்து அறுபட போகுது, சரி நம்ம நாடகத்தை பார்த்துட்டு எப்படின்னு சொல்லுங்க!

நம்ம தமிழ் நாட்டைவுட்டுட்டு வந்து கனடாவுல்ல இந்த மாதிரி நம்ம ஆளுங்க கூத்தடிச்சுக்கிறது சுகமா தான் இருக்கு! எனக்கும் 23 வருஷத்தக்கப்பறம் இந்த மாதிரி சின்ன தா மேடை ஏறுகிற வாய்ப்பு கிடைச்சது என்ன தான் சீரியலா எனை ஆண்ட் அரிதாரம்னு அந்த கால கதையை எழுதியிருந்தாலும், இவ்வளவு நாளைக்கப்பறம் அரிதாரம் பூசி (எங்க பூசினேன், சும்மா தொப்பியை மாட்டிக்கிட்டா அரிதாரம் பூசினது மாதிரி ஆயிடுமா?) நடிச்சதை நீங்க பார்க்க வேணாமா? சும்மா நாடகம் அந்த காலத்திலே நடிச்சேன், ஸ்டியோவிலே எல்லாரையும் பார்த்தேன் அந்த சர்க்கியூட்லேயே சுத்தினேன் எத்தனை பதிவு எழுதி போரடிச்சேன். இப்ப போட்ட இந்த "வேட்டையாடு வேலைத்தேடு" குறுநாடகத்தை பார்த்துட்டு உங்க கமென்ட்டை எழுதுங்க, வர்ட்டா!

Wednesday, October 31, 2007

ரஜினி (க்கு) பைத்தியம் புடிச்ச கதை தெரியுமா?

வணக்கம் என் இனிய இணைய தமிழ் மக்களே! என்னடா இவன் பதிவே போடாம, இவ்வளவு நாள் என்ன பண்ணிக்கிட்டிருந்தான்னு தானே கேள்வி கேட்கிறீங்க? ஆமா இந்த சபாட்டிக்கல், சபாட்டிக்கல்னு ஒரு வார்த்தை இங்கிலீஷ்ல இருக்கு, கேள்விபட்டிருக்கீங்களா, அதாவது தற்கால விடுமுறை, அதிலே போய்ட்டேன், நடுவுலே என்னோடய பழைய பதிவுக்கு வந்த பின்னுரை எல்லாத்துக்கும் கூட பதில் போடாம அப்படியே பப்ளிஸ் பண்ணிட்டு சும்மா இருந்த்துட்டேன். இதுக்கு முக்காவாசி காரணம் திடீர்னு வந்த வேலைப்பளு, அப்பறம் கூடவே ஒட்டிக்கிட்ட சோம்பேறித்தனம்! எல்லாம் ஒன்னா சேர்ந்துக்கிட்டு இந்த தமிழ் மணம் பக்கம் வரவுடாம பண்ணிடுச்சு! இதோ பண்டிகை தேதி எல்லாம் வருதே, ஒரு நடை வந்து உங்களை பார்த்துட்டு போலாமுன்னு தான் இந்த பதிவு எழுத உட்கார்ந்தேன், அதுவும் இந்த 'ஹாலோவின் டே' க்காக வீட்டுக்கு வர்ற போற பசங்களுக்கு மிட்டாய் கொடுக்கறப்ப, சரி போரடிக்ககம இருக்கிறதுக்கு ஒரு பதிவு எழுதலாமுன்னு தோனுச்சு, அதான் உட்கார்ந்திட்டேன்! சரி என்ன எழுதலாமுன்னு யோசிச்சப்ப, ரஜினி நடிச்ச தர்மயுத்தம் படத்தோட பாட்டு ஒன்னு பார்த்தப்ப தான், அப்ப ரஜினிக்கு புடிச்ச பைத்தியக்கார கதை பத்தி கொஞ்சம் எழுதலாமுன்னு தோணுச்சு! ரஜினி ரசிகர்கள் அடிக்க வர்றதுக்குள்ளே கதையை சொல்லி முடிச்சிடுறேன்!

அதாவது 70களின் கடைசி மற்றும் 80 களின் துவக்கம், ரஜினி நடிக்க வந்து ஒரு தன்னை ஹீரோவா எஸ்டாபிளிஷ் பண்ணின பிறகு, கொஞ்சம் புகழின் உச்சத்திலே இருந்த நேரம்! எப்பவும் பிரபல்யத்துக்கு பின்னாடி சுத்தி திரியம் பத்திரிக்கைகாரங்க தொல்லை ரஜினிக்கு விதி விலக்கல்ல! அப்ப ரஜினி எல்லாத்தையுமே போல்டா சொல்லி வந்தாரு, அதாவது பஸ் கண்டக்கடரா இருந்தப்ப அவரு பண்ணின சிலுமிஷம், அதாவது, தண்ணியடிக்கிறது, அப்பறம் 'அம்முவாகிய நான்' கதையை எல்லாம் சொல்லி 'நான் சிகப்பு மனிதன்'னு ரொம்ப வெளிப்படையா பேட்டி எல்லாம் கொடுத்து பத்திரிக்கைங்களுக்கு நல்ல தீனி போட்டிருந்த நேரம்! அது மட்டுமில்லாம, இப்பயும் நான் அப்படி இப்படி தான்னு சொல்லிக்கிட்டிருந்த நேரம்! இந்த மாதிரி ஓப்பனா பேசினது, நம்ம பத்திரிக்கை கும்பலுங்க அவரை வேவு பார்க்க எப்பவும் பப்பராசித்தனமா சுத்த ஆரம்பிச்சிங்காங்க! அங்க தான் சனியன் புடிச்சிது!

முதல்ல அவருக்கு உண்டான தனிமை போச்சு, அப்பறம் கண்ணா பின்னான்னு நம்மல பத்தி எழுதறங்கன்னு, ரொம்ப கடுப்பாகி, ஸ்டியோவிலேயே பத்திரிக்கையாளரை போட்டு அடிச்சி ராசாபாசாம ஆயிடுச்சி! அந்த நேரத்திலே தான் விடாம தொடர்ந்து ராத்திரி பகல்னு பார்க்காம நடிச்சது, இந்த மஞ்ச பத்திரிக்கை சமாச்சாரம் இது எல்லாம் போட்டு தாக்க, ரஜினிக்கு மண்ண்டை குழம்பி போச்சு! இது நடந்து முப்பது வருஷம் ஆச்சி! உங்கள்ல எத்தனை போருக்கு இந்த கதை தெரியும்னு எனக்கு தெரியாது! அப்ப தொடர்ந்து அவரோட படங்களை பூஜித்து வந்த ஆட்கள்ல நானும் ஒருத்தன்! அது மாதிரி ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பின்னனி கதை உண்டு! அப்படி வந்த கதையிலே தான் இந்த தர்மயுத்தம் படம் வந்தப்ப, வந்த கதை தான் 'ரஜினிக்கு புடிச்ச பைத்தியம்'!

ஆனா இதுல ஒரு ஒத்துமை பார்த்திங்களா, அப்ப சூப்பர் ஸ்டாரா இருந்த எம் கே டி பாகவதருக்கும் இதே மாதிரி ஒரு நிலமை ஏற்பட்டது, அதாவது பாகவதரு உச்சத்திலே இருந்த நேரம், அவருக்கிட்ட மயங்கி கிடந்து பெண்டுங்க எக்க சக்கம். அப்ப பாகவதரும் கொஞ்சம் ஷோக்கு பேர்வழி, அப்படி இப்படின்னு இருந்துட்டாரு, அதை எப்படியோ தெரிஞ்சு கதை பண்ணின பத்திரிக்கைகாரர் லஷ்மிகாந்தனை முடிச்சிட்டு, அந்த கொலை வழக்கிலே உள்ள போயி வெளியிலே வந்தவரு அப்பறம் எந்திரிக்கவே முடியிலே! பாகவதரு கதையை படிச்சிங்கன்னா ஒரே சோகம் தான்! (நான் சின்ன புள்ளையா இருந்தப்ப, எங்க கடையிலே இருந்த பெரிசு, இந்த பாகவதர் நம்ம ஸ்ரீரங்கத்திலே அவரை தேடி வந்த மாமிங்களைம், அப்ப அவருக்கிருந்த மவுசு பத்தியும் நிறைய சொல்ல கேட்டிருக்கேன்), பெரிசுங்க யாரவது ரொம்ப விவரமா இந்த பாகவதர் பதிவுக்கதையை போட்டா நல்லா இருக்கும்!

ஆனா ரஜினிக்கு பாகவதர் மாதிரி சோகமான கட்டம் ஒன்னும் வர்றல! ஆனா மனுஷன் டிப்பரஸாயி பைத்தியம் புடிச்ச நிலைமைக்கு போயிட்டாரு. அவரோட குரு நாதர் பாலசந்தர் எல்லாம் ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்து அவரு குணமாயி வந்தது ரெண்டாம் ஜென்மம் எடுத்து வந்த மாதிரி! அந்த காலகட்டத்திலே வந்த இந்த படம் தான் தர்மயுத்தம், அதனுடய எல்லா பாட்டுகளும் கலக்கலா இருக்கும், நம்ம ராஜா தான் ம்யூசிக்! இன்னொரு பிடிச்ச ஒன்னும் இந்த படத்திலே இருக்கும், அதாவது ஸ்ரீதேவி ரஜினிக்கு ஜோடி! நமக்கு என்னமோ ஆரம்பத்திலே இருந்து, அதாவது 16வயதினிலே, காயத்திரி, எல்லாம் இந்த வில்லத்தனமாவே ரஜினி நடிச்சிருந்த தாலே, எப்படா ஒன்னா அழகு ஜோடி போடுவாங்கன்னு எதிர்பார்த்த நேரத்திலே வந்த படம் இது, அதான் எனக்கு பிடிச்ச ஒன்னும் இருக்குன்னு சொன்னேன்!

இன்னொன்னும் இருக்கு, லதா அந்த காலத்திலே, இந்த கஷ்டமான காலகட்டத்துக்கு பிறகு உதவியா, ரொம்ப அன்பா, வாஞ்சையா இருந்ததாலேயே பிறந்தது அவங்க காதல்! ஆக ரஜினிக்கு பைத்தியம் புடிச்சி தெளிஞ்ச காலகட்டத்தை, இந்த படத்தோட பாட்டை பார்க்கிறப்ப எல்லாம் எனக்கு ஞாபகம் வரும், அதான் உங்களேட இந்த பதிவெழுதி பகிர்ந்துக்கிட்டேன். வெறுமனெ பதிவு போட்ட போதுமா, பாட்டில்லாமலா, அந்த பாட்டை பார்த்து கொஞ்சம் ரசிங்களேன்!

அப்பறம் தொடர்ந்து ரெகுலரா எழுத முடியும்னு நம்பறேன், திடீர்னு வேலைன்னு வந்தா இந்த மாதிரி சரியா உங்களை வந்து பார்க்க முடியாது! அதனாலே இப்பவே உங்கள் அனைவருக்கும் என்னுடய அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்!

Saturday, June 02, 2007

பிறந்த நாள் காணும் ராஜா!

இன்று பிறந்த நாள் காணும் நம் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்! இதோ மீள் பதிவாக அவரைப் பற்றி நான் முன்பு எழுதிய பதிவு!


நேத்து இளையராஜா பாட்டுக்கச்சேரி கேசட் ஒன்னு கிடைச்சது, போட்டு வீடியோ பார்த்தப்ப, ஒரே மலைப்பு! அவரு ஆரம்பத்திலே வந்தப்ப, போட்ட பாடல்கள்ல இருந்த குதுகூலம் மாதிரி, இன்னைக்கும் மேடையிலே ஏறி ஒரே பாடலுக்கு பல ராகங்களை பாடி காட்டறப்ப அதே குதுகூலம் அவரிடம் தென்பட்டது. நம்முடைய இளவயது ஞாபகங்கள், நிகழ்ச்சிகள் எப்படி மனசிலே மறக்க முடியாம இருக்கோ, அதே மாதிரி இந்த ராஜாவோட அந்த காலப் பாடல்கள் கேட்ட மாத்திரத்திலே அதோட ஒட்டி நிகழ்ந்த நிகழ்வுகளை மனக்கண் முன்னே அப்படியே சட்டுன்னு கொண்டு வந்து நிறுத்தும்! அவருடய பாடல்கள்ல அப்படி ஒரு தாக்கம் இருந்தது.

அதாவது 74 இல்லை 75ன்னு நினைக்கிறேன், இளையராஜா அறிமுகமாகி, முதப்படமான அன்னக்கிளி பாட்டுகள் வந்து பட்டையை கிளப்பிக்கிட்டிருந்த நேரம் அது! அதுவரை ஒரு மூணு, நாளு வருஷம் இந்தி பாடல்கள் தமிழ் நாடு முழுக்க சக்கை போடு போட்டுக்கிட்டிருந்த நேரம், எம் எஸ்வி அண்ணே, மெல்லிசையை கொஞ்ச மறந்துருந்த நேரம், அதே ஸ்டைலுல, ஒரே மாதிரி ஸ்டிரியோ டைப்பிலே பாட்டு போட்டுக்கிட்டு, பின்னாடி டாங்கோ பீட்டுலயே எல்லா தமிழ் பாட்டுகளும் வந்து போரடிச்சிக்கிட்டிருந்த நேரம்(அப்புறம் இளையராஜா பாட்டை கேட்டு கொஞ்சம் துள்ளலோட நிறைய ம்யூசிக் போட்டாரு எம் எஸ் வி அண்ணே, பிறகு வந்த நினைத்தாலே இனிக்கும், சிம்லா ஸ்பெஷல் மாதிரி சில படங்களுக்கு, சும்மா நச்சின்னு அடிச்சி பட்டையை கிளப்புனாறு, அது வேறே விஷயம், சம்போ.. சிவசம்போ!), கொஞ்சம் இனிமையா ஹிந்தி பாடல்கள், பாபி, கபி கபி, ரோட்டி கபடா ஒவுர் மக்கான், ஷோலே, டான், அமர் அக்பர் ஆண்டோனி, அப்படின்னு ஆக்ஷன் பட்ங்களும் காதல் படங்களுமா வந்து படங்களும் தாக்கத்தை உண்டு பண்ணுச்சி, பாடல்களும் தான். அதுக்கு முன்னே, ஒரு பத்து வருஷ முன்னே தான் ஹிந்தியே இந்த பக்கம் மூச்சுக் காட்டக் கூடாதுன்னு ரொம்ப ஆக்ரோஷமா தினா, முனா, கானா ஆளுங்க போட்ட சத்தம் கொஞ்சம் ஓஞ்ச நேரத்திலே, சத்தம் போடமா இப்படி ஹிந்திப் பாடல்கள் தமிழ் நாட்டு மக்கள்கள் கிட்டே வந்து சந்து பாடிகிட்டு இருந்த நேரம்! அப்படியே உட்டுருந்த, இப்பவும் தமிழ்நாட்ல பாதி தியேட்டருக்கு மேலே ஹிந்தி படம் தான் ஓடிக்கிட்டிருக்கும், பெங்களூர், ஹைதராபாத் மாதிரி, ஆனா, அதை அப்படி வராம தடுத்து தனிமனுஷனா தன்னுடய இசையாலே எல்லாத்தையும் வடக்கு பக்கம் ஓட வச்சது அப்ப நம்ம ராஜா தான்!

நான் ஏற்கனவே எனை ஆண்ட அரிதாரம்-ஆறாம் பகுதியிலே எழுதின மாதிரி, அந்த காலகட்டங்கள், அதாவது, அந்த காலக்கட்டங்கள்னு நான் சொல்றது 1978, 79 கள், அப்பதான் ரஜினிங்கிற காந்தம் கொஞ்ச கொஞ்சமா புயலாயிகிட்டு இருந்த நேரம். வில்லன்லருந்து புரமோஷன் ஆயி பைரவியில ஹீரோவாயிருந்த நேரம். பாரதிராஜா, எங்க கிராமத்து படம் தான் இவனுக்கு எடுக்கத்தெரியும்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயந்து சிகப்பு ரோஜக்களை எடுத்து விட்டருந்த நேரம். பிறகு அதிலேயும் கிராம உபக்கதையை தான் நல்லா காட்டிருந்தாரு, அதுலாதான் அவரு டச் இருக்கு, மத்ததெல்லாம் இங்கிலீஷ் பட காப்பி அப்படின்னு சரியா ஒத்துக்காததால திரும்ப கிராமம் போயி புதிய வார்ப்புகள் எடுத்திருந்த நேரம். பாலசந்தர் பெண்களை மையமா வச்சி வரிசையா அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல் நிஜமாகிறதுன்னு அரங்கேற்ற தொடக்கத்தை தொடர்ந்த நேரம் அப்பறம் எல்லாரும் வெளி நாடு போய் படம் பிடிக்க போட்டி போட்டு, நினைத்தாலே இனிக்கும், ப்ரியான்னு வந்திருந்த நேரம். ஸ்ரீதர் மாதிரி ஆளுங்க புதுசா ஆடிக்கிட்டு இருந்த ரஜினி கமல் ஆடுபுலி ஆட்டத்தை பார்த்துட்டு இளமை சொட்ட இளமை உஞ்சலாடுகிறதுன்னு எடுத்திட்டு, பிறகு அவர் பானியிலே அழகை ஆராதிக்க போயிருந்த நேரம். இளையராஜா தான் அந்த காலக்கட்டத்தில வந்த படங்கள் அத்தனைக்கும் ம்யூசிக் போட்டு அசத்திக்கிட்டு இருந்தப்ப, சிவாஜி படங்களூம் அவரு ம்யூசிக்ல பழைய டிஎம்ஸ்ச பாடவச்சி அற்புதம்மா நான் வாழவப்பேன், தீபம், தியாகம், கவரிமான், பூந்தளிர்ன்னு பாட்டுகள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த நேரம் அது!

இந்த காலகட்டங்கள்ல அவரு அமைச்ச ராகங்கள் தாளங்கள் அப்படியே ஒரு சுகம் கேட்கறதுக்கு, அதிலேயும் சில ம்யீசிக்கல் இன்ஸ்ட்ருமெண்டு இந்த மாதிரி காட்சிகளுக்குத்தான்னு சட்டமா இருந்த நேரம் அப்ப, ஆனா ராஜாதான் அதை வேறே மாதிரி கையாண்டு அதிலே ராகம் காட்டி கிராமங்கள்ன்னா, நகர வாழ்க்கை வாழ்ந்தவங்களுக்கு, அந்த பேக்ரவுண்டு ம்யூசிக்ல பச்சை வரப்பு, புல்வெளி, நீர் நிலை, ஓடைகளை பார்த்தா தான் கிராமமா தோணும், அதாவது அந்த இசை சப்தம் ஆட்டோமேட்டிக்கா காதிலே ரீங்காரமிடும்!

முக்கியமா நான் சொல்ல வேண்டிய இன்ஸ்ட்ரூமெண்ட், ஷெனாய், இது வடக்கத்திய வாத்தியம், ஆனா தமிழ் பாடல்கள்ல ஒரு புது வடிவம் கொடுத்து, அதை திரையிலே வரவைக்கும் பொழுது ஸ்லோமேஷன்ல காமிச்சு, நம்மலை கிளு கிளுப்பாக்கி விட்டதுல பெரும் பங்கு இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும் உண்டு. அதே மாதிரி காதலை எப்படி இந்த வாத்தியத்தாலே இசைமைச்சு சொன்னாரோ, அப்படி காமிடி பண்ணவும், கிண்டல் பண்ணவும் இந்த வாத்தியத்தை அதிகம் உபயோகிச்சிருப்பாரு, நம்ம ராஜா! மத்த எல்லா இசையமைப்பாளர்களும் சோகத்துக்குன்னு அங்கொன்னு, இங்கொன்னுன்னு உபயோகிப்பாங்க, ஆனா அந்த சோகத்தையும் அழகா சொல்ல இந்த ஷெனாய் தான் உபயோகிச்சாரு நம்ம ராஜா எல்லா படங்கள்லயும்! கொஞ்சம் உத்து கவனிச்சி பார்த்தீங்கன்னா தெரியும், அதுவும் 16 வயதினிலே, ரோசாப்பூ ரவிக்கைக்காரி மாதிரி படங்களை கொஞ்சம் மனசை செலுத்தி பாருங்கப் புரியும், இந்த ஷெனாயோட மகிமை!

அடுத்து, புல்லாங்குழல், இதை வச்சி அவரு பண்ணாத அட்டகாசமே இல்லை,அத்தனை ராகத்தையும் கொண்டு வந்தாரு! கிராமத்து சப்த சங்கதி இப்படிதான்னு சொன்னது புல்லாங்குழல் தான்! ஆக புது புது மெலேடி பாட்டுகளுக்கு அவருடைய தனி முத்திரையை குத்தினாரு. கண்ட கருமாந்திரங்க நடிச்சிருந்தாலும், இவரு பாட்டுக்குன்னே அதிக நாட்கள் ஓடிய படங்கள் எத்தனையோ! ஏன் நம்ம ராமராஜன் ஒரு வெற்றி ஹீரோவா வலம் வந்ததுக்கு முக்காவாசி காரணம் இளையராஜா தான், அதே மாதிரி என்ன மந்திரம் பண்ணுவாரோ தெரியாது, ராஜ்கிரண் படத்துக்குன்னு தனி அம்சமா இவரு ம்யூசிக்கு வரும்!

அது மட்டுமில்லை அத்தனை ராகங்களும் அவருடய பாட்டிலே பேஸ் பண்ணி இருக்கும், இது பத்தி நிறைய இசை விற்பண்ணர்கள் நிறைய எழுதி இருக்காங்க, வேணும்னா இணயத்திலே தேடி படிச்சி பாருங்க! ஏன் சிந்து பைரவி படத்திலே 'மரி மரி நின்னே' பாட்டை 'பாடறியேன் படிப்பறியேனா'க்கி எப்படி கர்நாடகத்தையும் நம்ம தெம்மாங்கோட கலந்தடிச்சாரு! அப்புறம் அவருக்கே உண்டானக் குரல், ஆரமபத்திலே வெறும் டைட்டில் சாங்ன்னு ஆரம்பச்சி(இவரு டைட்டில் சாங் பாடுனா, படம் நூறு நாள்ங்கிற ஹோஸ்யம் சினிமாக்காரங்க மத்தியிலே உண்டு, அதை அருமையா பாடி காட்டியிருப்பாரு ஆண்பாவம் படத்திலே!), பின்னே சோகம் மட்டும் பாடி, அப்பறம் காதல், ஜனனின்னு பக்தி பரவசப்படுத்தி, மற்றும் வாடி எங்கப்பங்கிழங்கேன்னு ரவுசு பண்ணி, நிலாவை கையிலே புடிச்சியும் ஓடத்து மேலே பாத்தும், இருக்கிற அனைத்து காட்சிக்கும் பாடி, இன்னைக்கு அவருடய தனிப்பாடல்களை கேட்டுக்கிட்டே இருக்கலாம், அத்தனையும் தேன்!

இப்படி தனி மனிதனா ஒன்மேன் ஷோ நடத்தின இந்த கச்சேரியை கேசட்ல பார்க்க நேர்ந்து, அதிலே எப்படி எல்லாம் ட்யூன் போடுவாருன்னு விவரமா சொல்லி, அதுவும் அவசரம் அவசரமா அப்ப அவரு போட்ட ட்யூன்ங்கள் எல்லாம் அந்த காலத்திலே சூப்பர் டூப்பர் ஹிட், அந்த வீடியோ கிளிப்பை பாருங்க, உங்களுக்கே தெரியும்!அபஸ்வரம் ராம்ஜி கேட்ட கேள்விக்கு, 'எப்படி வேறு மாதிரி ஒரே பாட்டுக்கு ட்யூன் போடுவீங்கன்னு' கேட்டப்ப, அதை வேற வேற ட்யூன்ல அசத்திக்காட்டி, கடைசியிலே இந்த காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி அவரு புள்ள யுவன் ஷங்கர் ராஜா அவரு இசை அமைச்ச ஒரு பழைய பாடலுக்கு இப்ப ட்யூன் போட்டா எப்படின்னு பாடிக்காட்டி, ஒரே வேடிக்கை தான் போங்க! என்ன இருந்தாலும் ராஜாவின் ராஜாங்கம் இன்னைக்கும் நடந்துக்கிட்டு இருக்கு, வெறும் சினிமான்னு இல்லாம தேவாரம், திருவாசகம்னு நிறைய தமிழை பாட்டாலே தமிழர்களுக்கு சொல்லி காமிக்கிறாரு! அவரு ராஜாப் பாட்டை தான் போங்க, இருந்தாலும் இப்ப என்னமோ பெரியர் படத்துக்கு ம்யூசிக் போட மறுத்துட்டாருன்னு ஒரே அரசியல் சாக்கடையா இருந்துக்கிட்டிருக்கு! நம்ம நல்ல இசைகளை ரசிக்கிறதோட சரி, போட்டா கேட்கிறதோட சரி, இந்த படத்துக்கு ஏன் போடலை, அந்த படத்துக்கு ம்யூசிக் ஏன் போடலைங்கிற விஷயங்கள்ல அவ்வளவு ஆர்வமில்லை, இதோ நான் ரசிச்ச அந்த விடியோ கிளிப்புகளை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

Wednesday, April 04, 2007

புதிய வார்ப்புகள்- கிராமத்து யதார்த்தமும், காதல்காட்சிகளின் ஆளுமையும்!

புதிய வார்ப்புகள்- இந்த படத்தை பத்தி சின்னதா பாரதிராஜாவின் ஐந்து நட்சத்திரங்கள்னு நான் ஏற்கனவே பதிவு எழுதியிருந்தாலும், சமீபத்திலே இந்த படத்தை இன்னொருவாட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது! ஆஹா இப்ப எதார்த்தம்னு சேரன் எடுத்த தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் னு இப்ப சிலாகிச்சு சொல்லிக்கிட்டிருக்கோம், ஆனா அந்த காலத்திலே, அதாவது ஒரு 25 வருஷத்துக்கு முன்னேயே இவங்களுக்கு வழிகாட்டியா அழகா படம் புடிச்ச பாரதிராஜாவை இன்னொரு தடவை என்னால திரும்ப நினைச்சு சிலிர்க்காம இருக்க முடியிலே, அதானல இந்த படத்தி ஒரு பாட்காஸ்ட் போட்டேன்! அங்கு அதை ரிலீஸ் ஆக்கிட்டு, இப்ப தான் பதிவு எழுத வந்தேன். அதாவது படத்தை A,B சென்டர்ல முதல்ல ரிலீஸ் பண்ணிட்டு, C சென்டர், அதான் பதிவு போட இப்ப தான் வந்தேன்!

சரி படம் பத்தி சொல்லலாம்! இந்த படம் இப்ப இருக்கிற இளசுங்களுக்கு ரொம்ப பழையப்படம்! ஆனா அந்த காலத்திலே தமிழ் சினிமாவை புரட்டி போட்ட படம். இதனுடய அழகு என்னான்னா இந்த படத்து பாரதிராஜா அமைச்ச திரைக்கதை! அப்பறம் தன்னுடய கோஷ்டியிலே இருந்த பாக்யராஜ்க்கு இதிலே பெரிய லிஃப்ட் கொடுத்த படம், அதாவது பாரதிராஜா 'ஹீரோவா யாரபோட்டு நான் படமெடுத்தாலும் ஒடும்னு' நிரூபிச்ச படம். அப்பறம் வழக்கம் போல பாரதிராஜாவுக்கு கை கொடுத்தது நம்ம ராஜாவோட ம்யூசிக்! அதுவும் சண்முகப்ரியா ராகத்திலே போட்ட பாட்டு, கீழே வீடியோ கிளிப் பாருங்க, சும்மா கலக்கலா இருக்கும்! இந்த பாட்டை தம்பி கங்கை அமரன் எழுதி கொடுத்து ம்யூசிக் போட்டிருந்தாலும், அதுக்கு நல்ல கனவு காட்சியா ரத்தியை ரொம்ப அழகா காமிச்சிருப்பாங்க! இந்த பாட்டை பாடினது அப்ப ராஜா, சும்மா அழகான பாடல்கலை அள்ளி தந்து பாட வச்ச ஜென்ஸி பாடினது, கூட வசந்தா ன்னு இன்னொரு அம்மாவும் பாடி இருப்பாங்க!


இந்த பாட்கஸ்டல சீன் பை சீன் நல்லா பேசி காமிச்சிருக்கேன் அதை போட்டுக் கேளுங்க! அதுவும் பாக்யராஜ் பாரதிராஜா கோஷ்டியிலே சேர்ந்த கதை, கிராமத்து காட்சிகளின் யதார்த்தம், அப்பறம் எப்படி காதல் காட்சிகள்ல அவரின் ஆளுமை இருந்ததுன்னு இரண்டு பகுதியா பாட்காஸ்ட் போட்டிருக்கேன்! இந்த ஈஸ்டர் லீவுக்கு சும்மா கீழே தரவிறக்கம் பண்ணி மெதுவா கேளுங்க! அப்படி டைம் இல்லேன்னா பாட்டை வீடியோல பாருங்க! ஒரு சாம்பிளுக்கு இந்த வசனம் எப்ப எங்க வ்ரும்னு சொல்லுங்க, தெரியலைன்னா பாட்காஸ்ட் கேளூங்க!

"நேரம் ஆக ஆக இருட்டிக்கொண்டே வந்தது!
கானகத்தின் நடுவே நின்றிருந்த அந்த கன்னிப்பெண்ணை தென்றல் தாலாட்ட ஆரம்பித்தது!
ஜில்லென்ற பருவக்காற்று அவள் பருவத்தின் வனப்புகளை தொட்டு எழுப்ப ஆரம்பத்ததும் அவளுடய கண்கள் சற்றே சொருக தொடங்கன!
ஆஹா என்ன அற்புதமான காட்சி, அவள் மேலாடை சற்றே......."

புதிய வார்ப்புகள்-பாரதிராஜாவின் கிராமத்து யதார்த்தம்!


தரவிறக்கம் செய்து கொள்ள இதோ

புதிய வார்ப்புகள்-பாரதிராஜா கையாண்ட காதல் காட்சிகளின் ஆளுமை!தரவிறக்கம் செய்து கொள்ள இதோ

பாடலை பார்க்க,கேட்க இதோ!

Friday, March 23, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (மூன்றாம் பகுதி)

இந்த கல்யாணி நம்மலை விட மாட்டேங்கிது! சிலபேருக்கு கல்யாணின்னதும் பீர் ஞாபகம் தான் வரும்! அது நல்ல ப்ராண்ட் இல்லை! அப்ப இந்த கல்யாணி பீர் அடிக்க 5 கிமீனாலும் நடந்து போய் அடிச்சுட்டு வந்த காலங்களை மறக்க முடியலை, ம்.. அதெல்லாம் அறியா பருவம்! திரும்பி வருமா! சரி இந்த ராகங்கள் கதைக்கு வருவோம்! நோய் தீர்க்கும் குணாதிசியங்களை முதல் பகுதியிலே சொல்லிட்டேன். இருந்தாலும் இந்த ராகத்திலே அமைந்த திரைப்பட பாடல்கள் எக்கசக்கமா ஆகிபோனதாலே இந்த மூணாவது பகுதி வரைக்கும் வந்திடுச்சி! பரவாயில்லை இதோட கல்யாணிக்கு மங்களம் பாடியாச்சு. இனி இந்த ராகத்திலே வராது, வேற ராகத்துக்கு வண்டி போயிடும். சரி போன வாரம் ஒரு கேள்வி கேட்டேன் இல்லை, அதுக்கு பதிலு யாருமே பின்னோட்டத்தில போடலை! அப்ப நிறைய பேருக்கு இந்த சங்கீதம் ஞானமில்லையா, இல்லை அதை பத்தி என்னத்தை சொல்றதுன்னு விட்டுட்டீங்களா, இருந்தாலும் நானே சொல்றேன்!

நான் போனவாரம் கேட்ட கேள்வி சுருதி பேதத்திற்கும், கிரக பேதத்திற்கும் உள்ள வித்யாசம் என்ன என்பது. இந்த சொற்றொடர் சங்கீத கச்சேரிகள், திரைப்பட இசை அமைப்பாளர்கள் பேசிக்கிற ஒன்னு தான்! சில திறமைகள், கலை ஆர்வம் என்பது நமக்குள்ள தானாக பிறப்பதில்லை, அதை சின்ன வயசிலே கத்துக்ககூடிய சூழ்நிலை இல்லேன்னாலும், வளர்ந்து மனமுதிர்ச்சி அடைந்த பின், இன்னைக்கு இருக்கும் இந்த இணைய தொழில்நுட்பத்திலே அதை பத்தி என்னான்னு தெரிஞ்சிக்க செலவழிச்சாலே போதும் கத்துக்கிடலாம்! என்னா அதுக்குன்னு கொஞ்சம் காலவிரயம் செஞ்சா போதும்! நம்ம ஏன் அதை அப்படி செய்றதில்லைன்னு தெரியல்லை! ம்.. அதை விடுங்க, நம்ம அடிக்கும் தாரை தப்பட்டையைக் கூட அதன் சூட்சமங்கள் தெரிஞ்சிக்கவோமான்னா அதுவும் கிடையாது!அப்பறம் விடை எப்படி சொல்றது! சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்!

சுருதி என்பது சுவரங்களின் அடிப்பட்டை சப்தம், அதாவது நம்ம சொல்ற ஒவ்வொரு அடிப்படை சுவரத்தின் சப்த எழுப்பலை சுருதி என்பது! அப்படி அடிப்படையாக கொண்ட அந்த சப்த நாதங்களிலிருந்து பிறக்கும் இந்த சுவரங்களால் அமைக்கப்படும் ராகங்களை பாடி கொண்டிருக்கும் பொழுது, சுவரம் மாற்றாமல், சப்த அலைகளை மாற்றி வேறு ராகத்தின் சாயலை கொண்டு வருவதே சுருதி பேதம்! கிரக பேதம் என்பது பாடிக்கொண்டிருக்கும் ராகத்தையோ, இசைத்துக்கொண்டிருக்கும் ராகத்தையோ தொடர்ச்சியாக சுவரம் மாற்றி அடுத்த ராகத்தினை இசைத்து காட்டியோ செய்வது கிரக பேதம்!

இப்ப ஒரு வீடியோ கிளிப், இது சங்கராபரணம் என்ற தெலுங்கு படத்தில் வந்த ஒருகாட்சி, முதல்லை இதை பாருங்க!என்ன பார்த்தாச்சா, பாட்டு முடிஞ்சு தெலுங்கு டைலாக் உங்களுக்கு புரியலைன்னா இதோ கீழே:

சாஸ்திரிகாரு:... சாரதா, நீ பாடின ராகம் என்ன அதில வந்த சுவரம் என்னா? சுத்தமான ஹிந்தோல ராகத்திலே ரிஷபம் எதுக்கு வந்தது? சொல்லு ஹிந்தோலத்துக்கு ஆரோகணம் என்னா?..

சாரதா:..சகமதநிச

சாஸ்திரிகாரு:..அவரோகணம்..

சாரதா:..சநிதமகச

சாஸ்திரிகாரு:..அப்பறம் ரிஷபமமெதுக்கு வந்துச்சு, சுவரசங்கரம் செய்றதுக்கு புத்தி இல்லையா?

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..பரவாயில்லை, அது ஒன்னுமில்லை, புருஷபம் வந்த மாதிரி!!

சாஸ்திரிகாரு:.. என்னது புருஷபமா ரிஷபமா?

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..ரிஷபமே அது ரிஷபமே எதோ குழப்பமாயிட்டேன், அதான்னே ரிஷபம் எப்படி ஹிந்தோலத்தில வரும், அது..சாருகேசியிலே வரும்..

சாஸ்திரிகாரு:.. சாரு?

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..இல்லைங்க சாருகேசியிலை எப்படி வரும், காபி அது காபி ராகத்திலே வரும்!

சாஸ்திரிகாரு:.. நீ எந்திருச்சி வெளியிலே போ.. எந்திரி! ரிஷப பத்தின வார்த்தை என்னான்னு தெரியாம சங்கீதத்தை குறித்து பேசறதுக்கு என்ன யோக்கிதை இருக்கு! தெரிஞ்சா தெரிஞ்ச மாதிரி இருக்கணும் இல்லைன்னா வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்து இருக்கணும்..

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..அதில்லைங்க...

சாஸ்திரிகாரு:..ம்...

மாப்பிள்ளை அம்மா:.. சம்பந்தம் பத்தி அப்பறம் சொல்லி அனுப்புறோம்.. (பையனைக் கூட்டிக்கொண்டு வெளியே செல்கிறார்..)

சாஸ்திரிகாரு:..அவசரம் ஏதுமில்லை..

ஆக மொத்த தெலுங்கு படம் கிளிப் போட்டாலும் டைலாக்கை தமிழ்லை உங்களுக்கு சொல்லியாச்சு!

இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி, சாரதா செஞ்சது சுவரபேதமா, கிரகபேதமா சொல்லுங்க பார்க்கலாம்?

ஒன்னும் புரியல்லைன்னா, பேசமா இந்த கல்யாணியின் நோய் தீர்க்கும் ராகங்கள் மூணாவது பகுதி பாட்காஸ்ட்டை கேளுங்க!தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (இரண்டாம் பகுதி)

Sunday, March 18, 2007

தமிழ் சினிமாவின் தலைசிறந்த பத்து வசனங்கள்!

எத்தனையோ படம் பார்க்கிறோம், ஆனா அத்தனை படங்கள்லயும் பேசும் எல்லா வசனங்களும் நம்ம மனசிலே நிக்கறதில்லை! ஆனா பாருங்க சில வசனங்கள் காலத்தால் அழியாத வசனங்களா நம்ம மனசிலே நிலைச்சு நிக்கும். அப்படிப் பட்ட தலைசிறந்த பத்து வசனங்கள் என்னான்னு பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு.

10) "மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி" - இது பி எஸ் வீரப்பா பேசி நடிச்ச வசனம், மகாதேவி என்ற படத்தில்! மகாதேவியாக சாவித்திரி நடித்து, இந்த படம் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்தப்படம். இது ஒரு டிரேட் மார்க் வசனம். இந்த வசனம் பத்தி நினைக்கிறப்ப பிஎஸ் வீரப்பா உடனே நினைவில் வந்து நிறபது என்னவோ உணமை தான்!

9)"சபாஷ் சரியான போட்டி" - மறுபடியும் பிஎஸ் வீரப்பா பேசி நடிச்ச வசனம், வஞ்சிக்கோட்டை வாலிபன் என்ர படத்தில்! அந்த கால டான்ஸிங் சென்ஷேஷன்ஸ்னு சொல்லி புகழப்பட்ட வைஜெயந்தி மாலாவும், பத்மினியும் பரதநாட்டிய போட்டி நடனம் ஆடி கலக்குவாங்க! அப்ப பிஎஸ் வீரப்பா இந்த வசனத்தை சொல்லி உசுப்பேத்துவார். இந்த வசனம் நம்மகிட்ட நிலைச்ச ஒன்னு. இப்பயும் இரண்டு பெண்கள் எதாவது ஒரு விஷயத்திலே சண்டை போட்டு வாக்குவாதம் பண்ணிகிட்டு இருக்கிறப்ப, நம்ம எல்லாரும் இந்த வசனத்தை பிரயோகிச்சு உசுப்பேத்தி விடறது வழக்கம்! அதாவது ஆண்கள் விசலடிச்சு கொண்டாடும் இந்த தருணத்தில் உபயோகிக்கும் வசனம், எத்தனை காலமானாலும் மறக்க மாட்டாங்க!

8) "நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே!" - இது திருவிளையாடல் படத்தில் ஏபி என் நகாரஜன் பேசி நடிச்ச வசனம்! அதாவது மொழிப்புலமையிலே வரும் சண்டையிலே பரமசிவனுடன் சண்டை போடும் நக்கீரனாக நடிச்சி அசத்தி இருப்பார். இந்த வசனம் தான் 'நக்கீரன்'னு பத்திரிக்கை எல்லாம் பின்னாடி ஆரம்பிக்க ஏதுகோல இருந்தது! இது ஒரு மறக்க முடியாத வசனம்!

7)"நீ முந்திண்டா நோக்கு, நா முந்திண்டா நேக்கு" - இது 'வியட்நாம் வீடு' என்ற படத்திலே ப்ரிஸ்டிஜ் பத்மனாபனா நடிச்ச சிவாஜி கணேசன் பேசற வசனம்! அதாவது தன்னுடய பதவிகாலம் முடிஞ்சு ரிடெயர்மெண்ட் காலத்திலே தன்னை ஒதுக்கி வச்ச பிள்ளைகளை நினைச்சு, தனது மனைவியாக நடிச்ச பத்மினியிடம் பேசும் வசனம்! இந்த காட்சியை பார்த்து கண்ணை கசக்கும் பெண்களின்கூட்டம் அதிகமாக தியேட்டரில் அலை மோதியது ஒரு சரித்தரம்!

6)"பரட்டை பத்தவச்சிட்டியே பரட்டை"- இது நான் அடிக்கடி சிலாகிக்கும் பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' யிலே வர்ற ஒரு வசனம்! தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட படம்! மக்கள் எதை வேணும்னாலும் மறந்திருக்கிலாம், ஆனா இந்த கவுண்டமனி பேசிற இந்த டைலாக்கை மக்கள் மறக்க மாட்டாங்க. இந்த படத்திலே இன்னொரு முக்கியமான டைலாக, கமல் பேசற "ஆத்தா ஆடு வளத்துச்சு, கோழி வளத்துச்சு, ஆனா நாயி வளக்கல்ல, என்னத்தானே வளத்துச்சு" ன்னு உருக்கமா பேசும் இந்த டைலாக் பாப்புலரா இருந்தாலும், "இது எப்படி இருக்கு"ன்னு வசனம் பேசின நம்ம தலைவர் ரஜினி இழுத்த கூட்டம் தான் அப்ப அதிகம்! இருந்தாலும் கவுண்டமணிங்கிற நகைச்சுவை சகாப்தம், செந்தில் கூட சேர்ந்து ஜோடி போட்ட இந்த மறக்கமுடியாத தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜோடிகள்ல ஒருத்தரை அடையாளம் காட்டி கொடுத்த இந்த வசனம் மக்கள் மனதை விட்ட அகலாத ஒன்னு!

5)"நீங்க நல்லவரா கெட்டவரா" - இது நாயகன் படத்திலே கடைசி காட்சியிலே கமலோட பேரன் அவருகிட்ட கேட்கும் கேள்வி! இது படத்திலே சின்னபையன் பெரியவர் நாயக்கரை பார்த்து கேட்டாலும் கடைசியிலே மக்கள் முன்னே தத்வார்த்த்மா, டைரக்டர் வைக்கும் கேள்வி! இந்த இரண்டு ஷேட்ஸ்லயும் வர்றக் கூடிய வில்லன் கலந்த கதநாயகன் ஆரம்பத்தை மணி தொடங்கி வச்சது இந்த படத்திலே தான்! அது இப்ப வந்த குரு படம் வரை தொடருது! ஆக இந்த வசனமும் மறக்க முடியாத ஒன்னு!

4) "கடவுளே.. கடவுளே" - இது மறக்க முடியாத ரஜினியின் நகைச்சுவை உணர்வான நடிப்பினை வெளிபடுத்திய படம், 'அண்ணாமலை'! இதுல ரஜினி குஷ்புவை பார்க்ககூடாத கோலத்திலே பார்த்திட்டு அதை பாம்பை பார்த்து நடுங்கும் கோலத்தோட இணைச்சு அடிக்கும் இந்த காமடி டைலாக் சும்மா கிளாஸ்!

3) "மன்னிப்பு, தமிழ்ல எனக்குப் புடிக்காத வார்த்தை!" - இது நம்ம விஜயகாந்து ரமணாவிலே ஊழல் பண்ணும் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகளை சுளுக்க எடுக்க பேசி நடிச்ச வசனம், மறக்க முடியாத ஒன்னு! அவரு கண்ணு சிவக்க பக்கம் பக்கமா அறிவுரை வசனம் பேசி நடிச்ச பல படங்கள் இருந்தாலும் இந்த ஒரு சிம்பிள் வசனம் அனைவரையும் கவர்ந்த ஒன்னு! இதை மக்கள் அடிக்கடி பொதுவிலே தான் பேசும் போது சேர்த்துக்கிட்டு பேசன ஒன்னு! அவ்வளவு பாப்புலர்!

2) "மாப்பு..வச்சிட்டான்யா ஆப்பு" - இது காமடி டைலாக்ல ஒரு சிகரம்! அதாவது அப்ப வந்த அபூர்வ சகோதரர்கள்ல ஜனகராஜ் பேசிற ஒன் லைன் டைலாக், 'சார் நீங்க எங்கயோ போய்ட்டீங்க' அப்படின்னு சொல்லும் அந்த ஒன் லைன் டைலாக்ல தியேட்டரே அதிரும். அப்படி தியேட்டரை அதிரவச்ச இந்த டைலாக்கை, வடிவேலு பேசி நடிச்ச சந்திரமுகியை, யாரும் மறக்க முடியாது!

1) "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" - இது பஞ்ச் டைலாக்குகளின் சிகரம். அதாவது ரஜினி பாட்ஷாவிலே பேசி நடிச்ச இந்த பஞ்ச் டைலாக் தான் அடுத்தடுத்து வந்த படங்களில் வரும் பஞ்ச் டைலாக்குகளுக்கு எல்லாம் தாய் பஞ்ச் டைலாக்! அதாவது இது "Mother of all panch Dailogue"! இந்த வசனத்தோட வீரியம் எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு ரஜினி படத்திலே பேசி நடிச்சப்பக் கூட நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு! ஆனா இதன் மந்திர சக்தி அப்படியே எல்லாரையும் கட்டி போட வச்சது! இதை வச்சு, சோகம், காமடி அப்படின்னு ஏகப்பட்ட வர்சன்ஸ் மக்கள் மத்தியிலே வந்து பிரயோகம் பட்டது! ஆக இது மறக்கவே முடியாத ஏன் மறக்கக் கூடாத, ஏன் எத்தனை காலம் மறினாலும் மக்கள் மனதில் நினைத்து நிற்க கூடிய ஒரு தலைசிறந்த வசனம்!

Saturday, March 17, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (இரண்டாம் பகுதி)

ராகங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் இத்தொடரில் மறுபடியும் கல்யாணிராகத்தை பத்தி தொடர்ச்சியா வெளியிட்ட இந்த பாட்காஸ்ட்டை நீங்கள் அனைவரும் கேட்க வேண்டுமெனெ தான் இந்த பதிவு! இந்த பாட்காஸ்ட்டை கண்டிப்பா கேளுங்க! வெறுமன சினிமா பாட்டை மட்டும் கேட்காம, இந்த கல்யாணி ராகத்திலே அமைந்த அந்த தியாகராய்யர் கீர்த்தனை பாட்டு, அதை நம்ம கொத்ஸ்ஸும் கரெக்ட் பண்ணுனாரில்லே, அதையும் நீங்க கேட்கலாம்!

அப்பறம் இந்த கர்நாடக சங்கீதங்கள் நீங்கள் கேட்காவிட்டாலும, அந்த சர்ககிள்ல இரண்டு பதம், அடிக்கடி பேசிக்கிற ஒன்னு, அதாவது கிரகபேதம், சுருதிபேதம் ன்னு! அது உங்கள்ல எத்தனை பேருக்கு அது என்னான்னு விளக்கமா தெரியும்ங்கிறதை நீங்க வேணும்னா உங்க பின்னோட்டம் போட்டு சொல்லுங்களேன் பார்க்கலாம்! இல்லேன்னா, அதை பத்தி அடுத்த பதிவுல விளக்கமா எழுதிறேன்!

இந்த சுருதி பேதம்ங்கிற டைட்டிலோட தான் ரஜினியோட எண்ட்ரி அபூர்வராகங்கள்ல வரும், அதாவது அதை பேக்ரவுண்டல சொல்ற குரல் இப்படி சொல்லும், 'தாளமும் ராகமும் இணையபோகிறதே என்ற சந்தோஷம் அவனுக்கு, ஆனால் அது நடக்க வேண்டுமே'ன்னு சொல்லிட்டு இந்த 'சுருதி பேதம்' ங்கிற டைட்டில் வரும்! அதாவது கதையின் போக்கிற்கு வந்த சுருதிபேதம்! சும்மா வெட்டியா ஆன்னு வாய பொளந்துட்டு ஆடுற உருவங்களை மட்டும் வெறுமன சினிமா பார்த்து பொழுதை போக்கிறதை விட இப்படி எதாவது விஷ்ய ஞானம் ஏதும் தெரிஞ்சிக்கலாமில்லை! அப்ப சினிமாவை வெட்டியான பொழுது போக்குன்னு யாரும் சொல்ல மாட்டங்கல்ல, இதுன்னு இல்லை, எவ்வளவோ விஷயங்களை கத்துக்கினும்னா கத்திகிடலாம், என்ன புரிஞ்சதுதா! சரி இப்ப பாட்காஸ்ட்டை கேளுங்க!தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!


தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)

Sunday, March 11, 2007

மீண்டும் கோகிலா- இடுப்பை கிள்ளும் கமல்!

ரொம்ப நாளா இந்த ராகங்களின் பின்னே போய்ட்டதாலே மத்த எழுத நினைச்ச பதிவுகள் அப்படியே தங்கி போச்சு! அதிலே போன வாரம் பார்த்த ஓங்கி நடித்தவனை அடக்கி ஆண்டவரின் படம் பத்தி எழுதனும்னு நினைச்சேன், எதுன்னு தெரிஞ்சா மறுமொழி போடுங்க பார்க்கலாம், என்னோட கிசுகிசு பாணி சிலேடை உங்களுக்குப் புரியுதான்னு பார்ப்போம்! அப்படி எழுதனும்னு தோணுனதிலே முதல்ல இந்த மீண்டும் கோகிலா பத்தி கொஞ்சம் பார்ப்போம்! இந்த படம் ஆரம்பிச்சப்ப ஏகப்பட்ட அமர்க்களத்தோட இதிலே நம்ம ஜெமினி மாமா பொண்ணு ரேகா நடிக்கறதா இருந்தது. அப்ப கமலுக்கு வாணியோட கல்யாணமாயிருந்த நேரம்! அப்ப ரேகாவுக்கு கமலு மேலே கொஞ்சம் கிக்கு தான்! எங்க ஆம்புடையான் கையை வுட்டு போயிடுவானோன்னு வாணி மூக்கு சிந்துனதாலே, அந்த ஐடியா அப்படியே ட்ராப் ஆயி கடைசியிலே இந்த படத்துக்கு ரேகா பண்ண வேண்டிய ரோலை, அப்ப நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அப்ப வயசுக்கு மீறின வளர்ச்சியோட பார்க்க லட்சணமா இருந்த தீபாவும் ஏற்கனவே பாப்புலரா இருந்த கமல் ஸ்ரீதேவி ஜோடி அமர்க்களமா நடிச்சு 80களில் வெளி வந்தப்படம்.

மொத்தமா இது அக்ரஹாரத்து கதை,

'ஸ்ரீதேவி மாமி சமத்தா ஆக்கி போட்டுண்டு நல்ல வளைய வர்ற மாமி போங்கோ, அசித்திருப்பா. சட்டம் படிச்ச நம்மண்ணா கமலுக்கு சபலம் கொஞ்சூண்டு ஜாஸ்தி போங்கோ! அதினால குடும்பத்திலே வந்த குழப்பத்தை வச்சுண்டு ஒரே ஏக ரகளையா படம் போயிண்டிருக்கும் போங்கோ, நான் என்ன சொல்றது படம் கிடைச்சா வாங்கி போட்டு கொஞ்சம் பார்கிறேளா, நா சொல்றது உங்களு புரியும்! ஐயராத்து கதை சொல்றப்ப அவா மாதிரி பேசறது சகஜம் தானேண்ணா!

ஓகே வந்த விஷயத்துக்கு வருவோம். அப்ப நம்ம ராஜாவின் ஆரம்ப கால பருவம். ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம், புதுமைன்னு கொடுத்துண்டிருந்தார்,..ச்சீ பழக்க தோஷம், விடமாட்டேங்கிது! அப்படி இந்த படத்திலே போட்ட ஒரு அருமையான பாட்டு 'சின்னஞ்சிறு வயதில்' என்கிற பாட்டு. இதிலே அப்ப வித்தியாசக்குரல் வேணும்னு எஸ் பி சைலஜாவை வச்சு பாடவச்சார், கூட நம்ம தேன் மதுரகுரலுக்கு சொந்தக்காரான ஜேசுதாஸ் அவர்கள்,கேட்கணுமா, பின்னி எடுத்திருப்பாங்க. அதோட வீடியோ கிளிப்ஸ் இன்னக்கு உங்கள் சாய்ஸ்! கீழே பாருங்க!

இதிலே ரொம்ப முக்கியமான சமாச்சாரம் கமல் அடிக்கடி ஸ்ரீதேவி மாமி இடுப்பை கிள்றது தான்! அது தான் படத்தோட ஹைலைட். அந்த காலத்திலே நான் ரசிச்ச ஸ்ரீதேவி, பாவம் இடுப்பை வச்சுண்டு, நம்ம கமலண்ணாட்ட படதா பாடு பட்டிண்டிருப்பார்! எத்தனையோ கமல் ஸ்ரீதேவி ஜோடி போட்டு படங்கள் வந்திருந்தாலும், ஒரு சில படங்கள் மனசை விட்டு அகல்வதில்லை, அப்படி தான் இந்த படமும். அப்பறம் மூன்றாம் பிறை, ஆனா அந்த படத்தை பத்தி சொல்னும்னா, பதிவுக்கு 'பொன்மேனி உருகுதே' காத்துக்கிட்டிருக்கு! அது வேற விஷயம்!

இது ஒருவிதத்திலே கமலோட சொந்தபடம் மாதிரி, ஹாசன் பிரதர்ஸ் கதை இலாகா, கதை பண்ணியிருப்பாங்க! அப்பறம் உடைகள் 'வாணி கமலஹாசன்'ன்னு போட்டு வரும், இந்தம்மா அப்ப ஏபிஎன் எடுத்த 'மேல்நாட்டு மருமகள்'ல கமலோட ஜோடி போட்டு அப்பறம் கல்யானம் கட்டிண்டா! அப்பறம் சரிகாவை கமல் ஆராஞ்சதாலே விட்டுட்டு போயிட்டா, ஆனா பாருங்க, அவரு விட்டு போன டிப்பார்ட்மெண்ட், இந்த காஸ்ட்யூம்ஸ் தான், அப்பறம் கமல் சொந்த படங்களுக்கு சரிகா கமலஹாசன்னு போட்டு வரும், இப்ப யாரு அதை கவனிக்கிறாங்க, கெளதமியா??

இந்த பாட்டுல ஒரு வித்தியாச சங்கீத சப்தம், பாக்கு உரல்ல இடிக்கிறதை, காரி துப்புறமாதிரி வர்ற சப்தத்தை எல்லாம் கலவை செஞ்சு கேட்க சுகமா ஒரு ராகம் நம்ம ராஜா போட்டிருப்பார். கேட்டுக்கிட்டே இருக்கலாம். இது மாதிரி பாடல்கள் சுத்தமா நம்ம மறந்துட்டுமோன்னு படுது எனக்கு, நீங்க என்ன நினனைககிறேள்? அப்படி எதுவும் நினைக்கிலேன்னா நீங்க பொண்ணு பார்த்த படலத்தை ஞாபகபடுத்திண்டு சந்தோஷமாயிருங்கோ! சரி இப்ப ஒலியும் ஒலியும் பாருங்கோ! நான் சித்த போயிட்டு வந்துடுறேன்!

Saturday, March 10, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)

கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு. கல்யாணி என்றாலே மங்களம் என்று பொருள். எந்த ஒரு மங்களகரமான நிகழ்விற்கும் இந்த கல்யாணி தான் துணை நிற்பது. ஆகையால் கல்யாணி ராகத்தினை இசைத்திட்டால், திருமண சம்பந்தங்கள் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்! இந்த ராகத்தினால் உண்டாகும் பயன்களை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எல்லாம் நமக்கு தெரிவிக்கின்றன். பயம் என்பது எத்தனை ரூபமெடுத்தாலும், அது ஏழ்மையின் பயமானாலும் சரி, காதலின் பயமானாலும் சரி, இல்லை பெரிய சக்திகளின் பயமானாலும் சரி, அல்லது ஆரோக்கிய வாழ்வற்ற பயமானாலும் சரி, ஏன் மரணபயமானாலும் சரி, இந்த ராகத்தில் அமைந்த இசையை கேட்டால் அத்தனை பயங்களும் நம்மை விட்டு அகன்றோடிவிடும் என்ற பெரிய நம்பிக்கையுண்டு!

இந்த ராகத்தினை பற்றி பேசும் பொழுது இதற்குப்பின்னே நடந்த சில சம்பங்கள் உடனடியாக மனைதில் விளையும்! அதாவது தியாகராஜய்யர், தஞ்சை அரசனின் புகழ்பாட மறுத்து கடவுள் துதியாக 'நிதி சால சுகம்மா ரமணி சந்நிதி சேவ சுகம்மா' என்ற கீர்த்தனையை இந்த கல்யாணி ராகத்திலே பாடிய சரித்திரமுண்டு! இந்த ராகத்திலே எழும் பாவம் உணர்ச்சி பூர்வமாக பாடப்படும் அத்தனை பாடல்களும், கீர்த்தனைகளும் ஒரு அழகான சப்த வடிவத்தை கொடுக்கும்! அதற்கும் மேலே இந்த ராகம் ஒரு பரிபூரண இல்லை சம்பூரண ராகம். ஆக ஏழு ஸ்வரங்களும் கைகோர்த்து ஜதியாடும்! இந்த ராகம் ஆர்ப்பாட்டமாகவும் இசைந்து கொடுக்கும், அதே சமயத்தில் அமைதியாகவும் ஸ்வரம் பாடும்.

இந்த கல்யாணி ராகத்தினால் தேவி துதிபாடிய சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனையான, 'ஹிமத்ரிஸ்தே பகிமம்' என்பது அனைத்து சக்தியைய்ம் அன்னையிடமிருந்து பெற வழிகோணியதாம். அதே போல் இந்த ராகத்திலே, முத்து சாமி தீட்சதர் அவர்கள் படைத்த சொர்க்க ராக கீர்த்தனையான 'கமலாம்பாள் நவவர்ணம்' என்ற கீர்த்தனையை கொண்டு, கிரங்களின் இடமாற்றத்தால் உண்டாகும் துர்பாக்கியத்தை அகற்றி நல்வழிபிறக்க உதவ வழிசெய்யும் என்ற நம்பிக்கையுண்டு!

இப்படி பல குண நலன்களை கொண்ட இந்த ராகத்தால் அமைந்த சினிமா பாடல்கள் அநேகம். அதில் முக்கியமாக, காலத்தால் அழியாத பாடல்களை சொல்ல வேண்டுமென்றால் அம்பிகாபதி என்ற படத்தில் டிஎம்ஸ் பாடிய, 'சிந்தனை செய் மனமே' என்ற பாடலும், கேவி மகாதேவன் இசை அமைத்த "மன்னவன் வந்தானடி" என்ற திருவருட்செல்வர் படத்திலே வந்த பாடலையும் குறிப்பிட வேண்டும். அது மட்டுமல்ல இளையராஜா இந்த ராகத்திலே ஏகப்பட்ட பாடல்களை அள்ளி வழங்கி இருக்கிறார். இதை ஹிந்துஸ்தானி ராகத்தில் 'யமன்' என்றழைப்பார்கள், அதிலே அமைக்கப்பட்ட சில பழைய ஹிந்திபாடல்கள் மற்றும் பல பாடல்களை இந்த பாட்காஸ்ட்டில் கேளுங்கள்!

இதன் முதல் பாகமாக இந்த பாட்காஸ்ட்டை கேளுங்கள்!The Healing Raagaas! - Kalyani (Part-1)

தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

Saturday, March 03, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

தொடர்ந்து இந்த ராகங்கள் குணப்படுத்தும் விஷேஷத்தை பார்க்கும் பொழூது, இந்த தடவை எடுத்துக்கிட்ட ராகம் ஷண்முகப்ரியா! இந்த ஷண்முகப்ரியா ராகம் கேட்பவர்களையும் பாடுபவர்களையும் அறிவுபூர்வமாக இணைக்கக்கூடிய ராகம்! அது மட்டுமில்லாமல், மனதிலே ஒரு தையரியத்தை உண்டாக்கி, உடல் முழுக்க ஒரு புதுவித சக்தியை ஏற்படுத்தக்கூடிய ராகம.


இந்த ராகம் இசை அமைப்பாளர்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு, அதிலே நிறைய பாடல்களை இசை அமைப்பாளர்கள் போட்டு இருக்காங்க! அதிலே எனக்கு ரொம்ப புடிச்சது, மீண்டும், பாரதிராஜா படமான 'புதியவார்ப்புகள்' படத்திலே வரும் ஒரு பாட்டு, இந்த படம் இப்ப பார்த்தப்பக்கூட, நான அந்த காலத்திலே எப்படி சிலாகிச்சு ரசிச்சேன்னோ, அதே ரசனையோட இதை இப்ப பார்த்தேன். என்னுடய ரசிப்பு தன்மை இன்னும் இருக்கா, இல்ல அது ராஜாக்களோடமேஜிக்கான்னு தெரியல்லை, இருந்தாலும் அதை பத்தி அப்பறமா எழுதுறேன்!

அப்பறம் இந்த ராகம் மைத்தியலாஜிக்கலா பார்த்தீங்கங்கன்னா, சிவண்டிக்கு சொந்தமான ராகம், அதாவது அவருடய் நெற்றிகண்ணிலிருந்து பிறந்த ராகம்னு சொல்வாங்க!

இந்த ராகத்திலே அமந்த மற்றொரு பாடல் இடம் பெற்ற பாரதிராஜா படம் 'வேதம் புதிது'! அதில் வரும் கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாட்டு. இந்த வேதம் புதிது படம் 87ல வந்தப்ப இதை ரொம்பவே கொண்டாடினாங்க, ஏன்னா, இதில வரும் ஷார்ப்பான வசங்கள், அதாவது பாலு உங்க பேரு அதுக்குப்பின்னாடி இருக்கும் தேவங்கிற பேற பத்து வருஷம் படிச்சு பட்டம் வாங்கினீங்களான்னு ஒரு சின்ன பிராமணப் பையன் கேட்கிற மாதிரி எல்லாம் வரும். அதாவது வழக்கமா வர்ற பாரதிராஜா படக்கதை ட்விஸ்ட் மாதிரி, தேவர் வீட்டு பையன் பிராமணப்பொண்ணை காதிலிக்கற மாதிரியும், அப்பறம் அவஙக இரண்டு பேரும் இறந்து போயி, அவன் காதலி தோப்பனாரும் செத்து போயி, அனாதையான பிராமணப்பையனை தேவர் எடுத்து வளர்த்து, இந்த சாதியங்கிறதை ஒழிக்கிற மாதிரி கதை போகும், அப்ப இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்திச்சு!


அது மாதிரி இந்த ராகத்திலே வந்த ஏகப்பட்ட பாடல்கள் இருக்கு, தெரிஞ்சுக்கணும்னா, கீழே பாட்காஸ்ட்டை கேளுங்க!தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

இந்த பாட்காஸ்ட்டை கேட்கும் போதே, நான் எழுதின இரண்டு பழைய பதிவுகளை குறிப்பிட்டிருப்பேன். அதன் வீடியோ பதிவிற்கான சுட்டி!

ஷ்ணமுகப்ரியா ராகத்தில் வந்த பாடலின் ஒரு பதிவு!

அதே ராகத்தில் வந்த இன்னொரு பாடலின் பதிவு!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

Tuesday, February 27, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

இசை என்பதென்ன? இந்த கேள்விக்கான பதில் வெகுச்சுலபம்! அதாவது சிறு சிறு சப்தங்களின் தொகுப்பு, சீராக சம அளவில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மாறி மாறி வரும் சபத அலைகளே இசை என்பது. இப்படி விவரிப்பது சுலபம். இதை பற்றி இளையராஜா குறிப்பிடும் பொழுது, 'அனைத்து சப்தங்களுமே எனக்கு ஒரு சங்கீதம் தான்' எனறு சொல்லி இருந்தார். வேண்டுமென்றால் சில டம்ளர்களில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதுவும் வெவ்வோறு அளவுகளில், அதை ஒரு கரண்டியை கொண்டு அப்படியே லேசாக தட்டிச் செல்லுங்கள், ஒருவித திம் திம் என்ற ஓசை எழும்பும், அது கேட்பதிற்கு ஒரு திரில்லாக இருக்கும். இதன் கோட்பாட்டிலே அமைந்த ஒரு இசைக்கருவி தான் ஜலதரங்கம்!

அடுத்து தமிழில் இருக்கும் பழமொழியான 'சிறுதுளி பெரு வெள்ளம்' என்பதைப் போல, இசைக்கு அடிப்படையான சிறு துளியை நாம் இசை குறிப்பீடு, அதாவது ஆங்கிலத்தில் 'நோட்' (Note) என்பது.

இப்படி சிறு துளியாய் இருக்கும் இசைகுறிப்பீடுகள் அனைத்தும் ஒன்றொன்றாய் சேர்ந்து பலவாறு சபதங்களை சிறு சிறு இடைவெளியில் சீராக வெளிப்படும் பொழுது உண்டாவதே காதுக்கு இனிமையான கீதம்! அது தீட்சதர் கீர்த்தனை என்றாலும் சரி, பீத்தோவன் என்ற ஜெர்மனிய இசையமைப்பாளிரின் சிம்பொனியாக இருந்தாலும் சரி, இல்லை நமது இளையராஜாவின் ராகங்களானாலும் சரி, இல்லை ஏ ஆர் ரஹமானின் இன்னிசை அளப்பரையாக இருந்தாலும் சரி! ஏன் நம் ரோட்டிலே ஆடிப்பாடித்திரியும் இசை அமைக்கும் தெருப்பையன்களின் (Back street boys) எழுப்பும் இசைஒலியானாலும் சரி! இப்படி தொடர்ந்து வரும் அலை வரிசைகளில் எழும்பும் சப்த நாதங்களே இசையாகும்! இப்படி
தொடர் அலைவரிசையில் வராத சப்தங்களும் இசையாகுமா என நீங்கள் கேட்டால், அதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் சொல்லலாம், அதாவது பழங்காலம் தொற்று தொடர் அலை வரிசை குறியீட்டால் உண்டாக்கி எழுப்பும் சப்தமே சங்கீதம், ஆனால் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அப்படி தொடர் வரிசை அலை இல்லாமலும் சபதம் எழுப்பி சங்கீதம் உண்டு பண்ணலாம்! முதலில் தொடர் அலைவரிசையில் உருவாகும் சங்கீதம் பற்றி பார்ப்போம்!

நீங்கள் கீபோர்ட் என்ற கருவியிலே சப்தத்தை எழுப்பி இசை அமைக்க முயன்றிருந்தால் நீங்கள் சுலபமாக இந்த இசைக்குறியீட்டை புரிந்து கொள்ள முடியும்! உதாரணத்திற்கு இதோ அருகில் உள்ள கீ போர்ட் படத்தை பாருங்கள் இதில் உள்ள ஓவ்வொரு பொறியினை நீங்கள் அழுத்தும் பொழுது அதில் உருவாகும் சப்தம் ஒரு அலைவரிசைக்குள் இருக்கும். அதை நீங்கள் அழுத்தி கொண்டிருக்கும் நேரத்தை பொருத்து, அதில் எழும் சப்தங்களின் அளவே நான் மேலே கூறியது போல ஒரு துளி சப்தத்தை உருவாக்கும். அப்படி தொடர்ந்து அழுத்தப்படும் பல பொறிகளின் கால அளவில் உண்டாகும் சப்த அலையே நமக்கு சங்கீதமாக பிறக்கிறது! இப்படி, இது 48 பொறிகளை (keys) கொண்ட ஒரு கீபோர்டின் ஒரு பகுதி இது போன்ற 12 பொறிகளை கொண்டு நான்கு செட்டுகள் கொண்டது!


இந்த 12 பொறிகளை கொண்ட இந்த இசை குறிகளின் அளவை ஆங்கிலத்தில் octave என்று அழைப்பார்கள்! அதாவது கொஞ்சம் அகல சப்த அலைவரிகளின் விஸ்தார அளவு (bandwidth). அதாவது இந்த விஸ்தார அளவு என்பது சப்த அலைவரிசை தொகுப்புகளடங்கிய 12 இடைவெளிகளை கொண்டது, அந்த இடைவெளியானது, எந்த ஒரு இரண்டு அலைவரிசையின் மடக்கை (logarithm) விகிதாச்சாரமும் சமமாக இருக்கும்படி அமைந்திருக்கும், அந்த சப்த அலைவரிசைகள் பக்கத்து பக்கத்து இடைவெளில் அமைந்திருக்கும் பட்சத்தில்!

சரி கர்நாடக சங்கீதமும் மேற்கத்திய சங்கீதமும் இந்த அலைவரிசையின் அளவுகோல்களுக்குள் அமைந்து விடும் ஒற்றுமை உண்டா என்றால், ஆம் என்பதே பதில்! அதாவது கர்நாடக சங்கீதத்தின் குறியீடு அளவு விகிதாச்சார அடிப்படையில் அமைவது, உதராணமாக 'சரிகமபதிநி' என்பதில் 'ப' என்ற குறியீட்டின் அளவு மத்த அளவீட்டில் இரண்டுக்கு மூன்று (2:3) என்ற சதவீதத்தில் பிரிந்திருக்கக் கூடியது! ஆனால் மேற்கத்திய சங்கீதத்தின் குறியீடுகள் மடக்கு(logarithmic) விகிதாச்சார அடிப்படையில் பிரிந்திருக்கும் சிறு குறியீட்டின் அளவினை ஒத்து இருக்கக் கூடியது!

ஆக இந்த அடிப்படையில் பிரிக்கப்பட்ட சப்த அளவான octave கொண்டே உலகில் உள்ள அத்தனை சங்கீதங்களும் உருப்பெறுகிறது! இப்படி இந்த சப்த சங்கதிகள் இன்று நேற்று தோன்றியதல்ல, பழங்காலம் தொட்டே உருவாகி வந்த ஒன்று! சப்த அளவீடுகளான இந்த 12 குறியீட்டின் மூலம் எல்லா சங்கீதங்களும் அமைந்து விடும்! இந்த மேற்கத்திய மற்றும் கர்நாடக இசைக்குறியீடுகளுக்கு உண்டான ஒற்றுமை என்னவென்றால், கர்நாடக சங்கீதத்தில் வரும் அடிப்படை குறியீடு, இந்த ஐந்தாவது குறியான 'ப' வை குறிப்பது பஞ்சமம் என்று, அதே போல மேற்கத்திய இசையின் ஐந்தாவது அடிப்படை குறியீடு ஒத்திருப்பது. இதை நீங்கள் கீழ்கண்ட சங்கீத பொறிகளின் அட்டவனையில் காணலாம்!இன்னொன்றையும் கவனியுங்கள், இந்த கர்நாடக குறிகள் மேற்கத்திய குறியீடுகளிலிருந்து வேறுவிதமாக உருவகப்படுத்தி உள்ளது. ஏனென்றால் நம் கர்நாடக் சங்கீதத்திற்கு ஏழு குறீடுகள் அடங்கிய கால இடைவெளியில் பிறக்கும் சப்த ஸ்வரங்கள் உண்டு, அதாவது அதை இசை அளவீடு (scale) என்று கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலே கொண்டு அமையும் மற்றொரு அளவீடு (scale) 'மேளகர்த்தா ராகம்' என்பது! இப்பொழுது இசை அளவீடு மற்றும் மேளகர்த்தா என்ன வென்று பார்ப்போம்!

மேளகர்த்தா என்பது ஏழு இசை குறிகளை கொண்ட ஸ்வரங்களில் அமைந்த அடிப்படை ராகம். இதை தாய் ராகம் என்பார்கள். இதை 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெங்கடேஸ்வர தீட்சதர் வரிசைப்படுத்தி 72 மேளகர்த்தாக்களை உருவாக்கினார் அதை 'சதுரந்தி ப்ரக்ஸிக்கா' என அழைப்பதுண்டு! அதாவது ஒவ்வொரு மேளகர்த்தாவுக்கும் அடிப்படை இசைக்குறியீடு 'ச' வும் வேண்டும் 'ப' வும் வேண்டும், 'ச' வும் 'ப' வும் ஒரே ஒரு வகை உண்டு! மேலே உள்ள அட்டவனையை பாருங்கள், ஆனால் 'ரி', 'க', 'ம', 'த', 'நி' இவை எல்லாம் அதிலிருந்த சற்று உருமாறி, சப்த அலைவரிசையை கூட்டி குறைத்து மூன்று மற்றொரு அடிப்படை சப்த குறிகளை உருவாக்கி வைத்திருக்கிறது! பிறகு இந்த 'ம' இரண்டு வெவ்வேறு வகைகளாக பிரிந்து இருக்கிறது. ஆக ஏழு குறிகளின் அளவீட்டில் ஒரு 'ச', ஒரு 'ப' மீதம் நான்கு குறியீட்டில் மூன்று வகைகள் என நீங்கள் பெருக்கினால் 4x3x3=36 வகைகள் பிறக்கிறது!

பிறகு 'ம' வில் இரண்டு வகை இருப்பதால் இது 36x2=72 ஆக, மொத்தம் 72 அடிப்படை ராகங்கள் பிறக்க வழி ஏற்படுத்தி கொண்டுள்ளது இந்த 'மேளகர்த்தா' என்பது. இப்படி அமைந்த அடிப்படை தாய் ராகங்களின் கலவையிலே நீங்கள் ஆயிரக்கணக்கான ராகங்கள் பிறக்க வழி செய்யலாம். அப்படி பிறக்கும் ராகங்கள் குழந்தை ராகங்களாகும், அதை 'ஜன்ய ராகம்' என்பார்கள்! ஆக இப்படி தான் அத்தனை பாட்டுகளும் இப்படி ஏதேனும் ஒரு அடிப்படை ராகத்திலே அமைந்து பிறக்கின்றன!

மேற்கத்திய இசையிலே இருக்கும் இசை குறியீடுகள் போல் ஒவ்வொரு ராகத்திலிருக்கும் இந்த இசை அளவுகள் ஏறு முகமாகவும், இறங்குமுகமாகவும் பாடுவதை தான் ஆரோகணம் (ascending order), அவரோகணம் (descending order) என்று குறிப்பிடுவார்கள்

இப்படி இசை அளிவீடுகளின் சூட்சமத்தில் அமைந்த அற்புதத்தை தான் நமது கண்ணதாசன் 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்' என்று எளிமையாக எழுதி பாமரனுக்கும் புரியவைத்தார்! நம் கர்நாடக சங்கீதத்தில், இந்த வெறும் கணக்கீட்டால் அமையும் குறீடுகளால் (Musical structure) மட்டும் ராகங்கள் உருவாவதில்லை, அதை உணர்ச்சியுடன் பாடுவதால் கிடைக்கும் 'பாவமும்' அதை தொடரும் இந்த இசைக்குறி அளவீடுமே ராகத்தை உருவாக்குகின்றன! ஆகையால் தான் பாலசுப்ரமணியம் பாடிய சங்கராபரண பாடலை நாம் பாவமின்றி பாடினால் அது சங்கராபரணமாவதில்லை! அப்படி பாவத்துடன் இசை குறிகளின் அலங்கார ஆலாபனையும் சேர்வதை 'கமகம்' என்பார்கள், அப்படி சேர்ந்தால் தான் அதன் அதன் ராகங்களின் வெளிப்பாடு உங்களுக்கு கிடைக்கும்!

ஆக இப்படி அமைக்கப்பட்டு வெளி வந்த ராகங்களில் ஒன்று தான் 'ரதிப்பதிப்ரியா' என்ற ஒரு ராகம். இந்த ராகம் மேலே சொன்ன மேளகர்த்தா வரிசையில் வரும் 22ம் ராகம், இதில் பிறந்த குழந்தை, அதாவது 'ஜன்ய ராகம்' கரகரப்ரியா. இதற்கு உண்டான ஆரோகண வரிசை 'ச ரி2 க2 ப நி2 ச', அவரோகண வரிசை 'ச, நி2 ப க2 ரி2 ச' என்பது!

இந்த ராகம் சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு தேவையான மனோபலம், சக்தியையும், ஊக்கத்தையும் தருகிறது. திருமணமாகி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இந்த ராகத்தில் அமைந்த பாடலை கேட்டு உங்கள் வாழ்க்கையை நகர்த்துங்கள், அப்பொழுது தெரியும் தாம்பத்தியம் எவ்வளவு இன்பகரமானது என்று! அதே போல் இது உங்களிடம் உள்ள ஏழ்மையை விரட்டிவிடும். இதன் சுவரங்களின் பிரயோகம் தரும் அதிர்வுகள் உங்கள் உள்ளத்தில் அசுத்தமான நினைவுகளால் உண்டாகும் கசப்பான உணர்வுகளை அகற்றிவிடும்! இது ஒரு அபூர்வ ராகம் இதில் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே!

'ஜகஜனனி சுகுவானி கல்யானி' என்ற தண்டபாணி தேசிகர் எழுதியப் பாடல் இந்த ராகத்தில் மிகவும் பிரசித்தாமான ஒன்று! அது போல் எந்த ராகம் எடுத்தாலும் அதுக்கு உதாரணமாய் பாடி வைத்த பலப்பாடல்கள், நமது பழைய தமிழ் சூப்பர் ஸ்டார் எம் கே டி தியாகராஜ பாகவதருடயது. அப்படி அவர் பாடிய ஒரு பாடல் 'சிவகவி' என்ற படத்திலே வந்த 'மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாழ்வாய்' என்றப் பாடல். கீழே உள்ள பாட்காஸ்ட்டை கேட்க தவறாதீர்கள்! அதே போல் நம் இளையராஜா இசை அமைத்த 'சிந்து பைரவி'யில் வந்த 'ஆனந்த நடனமாடினாள்' என்ற பாடலும் இந்த ராகத்தில் அமைந்த ஒன்று!

உங்களுக்கு தெரிந்த இந்த ராகத்தில் அமைந்த மற்ற பாடல்களை நீங்கள் உங்கள் பின்னோட்டத்தில் குறிப்பிடலாமே! இதோ, இப்பொழுது பாட்காஸ்ட்டை கேளுங்கள்!தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

Thursday, February 22, 2007

கமலுக்கு கை கொடுத்த பரதம்!

ரொம்ப நாளாவே இந்த நடிப்பை பத்தி நான் எழுதி வர்ற பதிவுகள்ல எனக்கேத் தெரியாம அப்ப அப்ப கமலை கிரிட்டிஸைஸ் பண்ணி எழுதினேன், அதனாலே நம்ம ஜோவிலிருந்து கொத்தனார் வரை காட்டஞ்சாட்டமா பின்னோட்டம் போட்டு என்னா ஏது இப்படி சொல்றீங்களேன்னு கேட்டதுக்கு பதில் பதிவு போடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அது அப்படியே தள்ளிப் போயிடுச்சி! அதுக்குத்தான் இந்த பதிவு!

கமல் வந்து ஒரு ச்சைல்ட் ஆக்டர், அதாவது சின்னபுள்ளேயிலிருந்தே நடிக்க வந்தவர். ஜெமினி மாமாவோட 'களத்தூர் கண்ணம்மா'ன்னு ஆரம்பிச்சி எம்ஜிஆரோட ஆனந்த ஜோதியிலே 'ஆர் எஸ் எஸ்' மாதிரி 'ஒரு தாய் மக்கள் நாம் என்போம்'னு ஆடிப்பாடி நடிக்க ஆரம்பிச்சவரு! பொதுவா பார்த்தீங்கன்னா இந்த ச்சைல்ட் ஆர்டிஸ்ட்ங்க வளர்ந்தபின்னாடி, பெரிய ஆளா வர ரொம்ப சிரமப்படுவாங்க, அப்படி கஷ்டபட்டு வந்தாலும் சரியா சோபிக்க மாட்டாங்க! உதாரணத்துக்கு நீங்க நெறைய பேத்தை எடுத்துக்கிடலாம். சின்ன புள்ளையிலே கொடிகட்டி பறந்த 'குட்டி பத்மினி' பத்தி உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரிஞ்சிருக்குமோ எனக்குத்தெரியாது, டிவியிலே எஸ் வீ சேகர் டிராமா 'வண்ணக் கோலங்கள்' பார்த்திருந்தீங்கன்னா, அதுல அம்மணி தான் ஹீரோயின்! அந்த அம்மா சின்ன புள்ளையா நடிச்சப்ப இருந்த பாப்புலாரிட்டி அவ்வளோ, வெறும் பத்மினின்னு பேரை வச்சுக்கிட்டு நம்ம பப்பிம்மா பத்மினிக்கே சவாலா, பேரிலதான், இருந்ததாலே இந்த 'குட்டி'ங்கிற அடை மொழி வந்துச்சு! அப்படி சின்னபுள்ளையிலே போடு போடுன்னு போட்ட பொண்ணு! ஆனா வளர்ந்து நிலைக்கிலே!

அது மாதிரி அவங்க அண்ணன், மாஸ்டர் பிரபாகர், அந்த காலத்திலே பிஸியா இருந்த ச்சைல்ட் ஆக்டர், வா ராஜா வா, இரு கோடுகள், அப்படின்னு எக்கசக்கப்படம் அப்ப வந்த எல்லா படத்திலேயும் கதைக்கே சம்பந்தமில்லாம சின்னபுள்ளைக்கூட்டத்திலே காமிக்கனும்னாலும், இல்லை சின்னப்புள்ளையிலே நடந்த ப்ளாஸ்பேக் சொல்லனும்னாலும் இவரு இல்லாம படமில்லைன்னு இருந்த காலம்! இவரு தான் எனக்கு 'ரோல்மாடல்' அப்ப, எனக்கும் நடிப்புன்னு வந்தப்ப, பூனை புலியை பார்த்து சூடுபோட்ட கதையா நானும் அலைஞ்சேன்! அந்த சோகக்கதையை நான் ஏற்கனவே எழுதின 'வா...ராஜா..வா..' பதிவிலே வேணும்னா போய் படிங்க! ஆனா பார்த்தீங்கன்னா இவரு வளர்ந்து பெரியவனாயி, என்ன கர்ணம் போட்டும் சினிமாவிலே தலை காட்ட முடியிலே! அதாவது எஸ்டாபிளிஸ்ட் ஆக்டரா ஆகமுடியிலே, அங்கொண்ணு இங்கொண்ணுன்னு நடிச்சிட்டு போயி சேர்ந்திட்டாரு!

அதே மாதிரி இன்னொரு எஸ்டாபிளிஷ்ட் ச்சைல்ட் ஆர்டிஸ்ட், மாஸ்டர் சேகர், எம்ஜிஆர் படத்திலே 'ஒளிவிளக்கு', சிவாஜி படத்திலே 'ராஜா' எல்லாம் நான் இவரை இன்னொரு தடவை பார்க்கணும்னு போய் அவருக்காக ஒரு முறை பார்த்த அனுபவம் உண்டு, அதாவது பொதுவா எம்ஜிஆர் படம் குறைஞ்சது மூணு தடவை பார்த்துடுவேன், ஆக அந்த கணக்கிலே இவரு கணக்கு ஒரு தடவை! ஆனாப் பாருங்க இவரும் பெரிய ஆளாயி ஒன்னும் சுகப்படலே! இவரு வயசுக்கு வந்து ஒரு பலானப்படம் வந்துச்சு 'மஞ்சள்முகமே வருக'ன்னு அதிலே தான் இப்ப அம்மாவா கலக்கிட்டு இருக்கிற 'சத்யகலா' அப்படியே ஏகப்பட்ட கவர்ச்சியோட நடிச்சு எங்களை சூடேத்தின அம்முணி! இதை ஏன் சொல்றேன்னா, இவங்க எல்லாம் 'எஞ்சோட்டு' பசங்க! அதுக்கப்பறம் இவரும் பெரிய ஆளா வந்து சுகப்படல!

ஏன் கொஞ்சகாலத்துக்கு முன்னே கலக்கிகிட்டு இருந்த காஜாஷரீப்பும், இப்ப விடலை முடிஞ்சு வாலிபம் வந்து ஒன்னும் சுகப்பட்ட மாதிரி தெரியலை! அப்படி சின்னவயசிலேருந்து நடிக்க வந்து வாலிபம் வந்து நடிக்க ஆரம்பிச்சு உருப்பட்டதிலே நம்ம கமலும்,ஸ்ரீதேவியும் தான்!அப்பறம் இப்ப வெற்றி பெற்றது 'ஷாலினி', ஏனோ அந்த அம்மாவும் தொடந்து நடிக்கல! ஆனா கமலு தன்னை நிரூபிச்சு நல்ல நடிகன்னு காமிக்கறதுக்குள்ள படாத பாடு பட்டுட்டாரு! அதைத்தான் நான் அப்ப சொல்ல வந்தேன்! அதாவது அவரும் வயசுக்கு வந்து நடிக்க ஆரம்பிச்சோன, முதல்ல பாலசந்தர், அவரை 'சொல்லத்தான் நினைக்கிறேன்'ல வில்லனா போட்டு அறிமுகப்படுத்தினாரு! அதுக்கு முன்னே அவரு மலையாளப்படத்திலே நம்ம ஷகீலா ரேஞ்சுக்கு அப்ப நடிச்சு ஒரு படம் வெளி வந்தது, அது 'ராஸலீலா'ன்னு! ரொம்ப ஞ்சூடேத்திரப்படம், பிரத்யோக காலைகாட்சிப்படம், பிட்டுப்படமாதிரி! அப்ப அது மாதிரி தான் நடிச்சிக்கிட்டு இருந்தாரு! பாவம் என்ட்ரீ கிடைக்காம கஷ்டபட்டுக்கிட்டு இருந்த நேரம், அப்ப!

அப்ப தான் சினிமாவிலே டான்ஸ் மாஸ்டர் வேலை செஞ்சுக்கிட்டு, அப்பறம் ஆர் சி சக்தியோட சுத்திக்கிட்டிருந்தப்ப தான் பாலசந்தர் ஒரு பிரேக் கொடுத்தாரு! வேணும்னா அந்த கால 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'அரங்கேற்றம்' படமெல்லாம் பாருங்க, ஆளு ஒல்லிப்பிச்சான் மாதிரி சரியான ஐயர்வூட்டு தயிர் சாதம் பையன் மாதிரி தான் இருப்பாரு! அப்ப தான் 'தண்டால், வெயிட்லிஃப்டிங்,அப்படின்னு தேகப்பயிற்சி செஞ்சு உடம்பை தேத்திக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா ஆளாகிக்கிட்டிருந்த நேரம். அவரை ஷேப் பண்ணைதிலே பெரும் பங்கு பாலசந்தரோடது! நீங்க இந்த வித்தியாசத்தை அபூர்வராகங்களுக்கும், அவள் ஒரு தொடர்கதைக்கும் இடையே பார்க்கலாம்!

ஆக இந்த இடைப்பட்ட நேரத்திலே சில மற்றவர்கள் படத்திலேயும் நடிச்சாரு, அழக்கூடத்தெரியாதுன்னு நான் சொன்னேன்ல, வேணும்னா தமிழ்ல எடுத்த ஹிந்திப்படமான 'மதர் இண்டியா', பேரு என்னான்னு தெரியலை, அதுல அவரு அழுது நடிக்கறதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு! அப்பறம் தேத்தின உடம்பை காமிச்சு அசத்திக்கிட்டு இருப்பாரு படத்துக்கு படம், இந்த சல்மான்கான் மாதிரி! கோகிலா, மரோச்சரித்திரா, மன்மதலீலை, அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்! ஏன்னா நடிப்புக்குறை ஏதும் இருந்தா அதை மறைக்கிறதுக்கு!

அப்பறம் அவருக்கு கிடைச்ச 'லவ்வர் பாய்' இமேஜ், அதிலே அவரு நல்லாவே கேப்டலைஸ் பண்ணினாரு! அதானாலேயே ஜொமினி மாமாவுக்கு, 'காதல் மன்னன்' பட்டம் கொடுத்திட்டாதினாலே இவருக்கு 'காதல் இளவரசன்' பட்டம் கொடுத்தாங்க! அப்ப இவருகிட்ட நடிச்ச எல்லா ஹீரோயினுக்கும் முத்தம் கொடுக்கலேன்னா தூக்கம் வராது! அப்ப தான் வயசுக்கு மீறுன வளர்ச்சியோட வந்த தீபாவை வச்சு நம்ம பாபிப்பட ஸ்டைல்ல ஒரு நீச்சல் டிரெஸ்ல ஒரு படம் வந்துது, முதன்முதல்ல கமல் அதுலே பாட ஆரம்பிச்சாரு, படம் பேரு தெரியலை, தெரிஞ்சவங்க பின்னோட்டம் போடுங்க! இப்படி நடிப்புல வெரைட்டின்னு ஒன்னும் காமிக்கல்லை அப்ப! உடம்பை காமிச்சும், காதல் பண்ணியும் ஒப்பேத்தினாரு! ஆனா அப்ப அவரு கொஞ்சம் எங்களுக்கெல்லாம் ரோல்மாடல் தான் ரொமான்ஸ் பண்ணறதுக்கு! என்னோட தேகப்பயிற்சி, பேரலல் பார், வெயிட்லிஃப்டிங் இப்படின்னு ஒரே தீவிரமா உடம்பை வச்சு பொண்ணுங்களை மயக்க முடியும்னு அடி போடவும் காரணமா இருந்தவரு! (அப்படி ஏதும் காரியம் ஆகலைங்கிறது வேறே விஷயம்!)

ஆனா அப்ப அவருகிட்ட புடிக்காத ஒன்னு என்னான்னா இந்த பரத நாட்டியத்தை எக்ஸ்போஸ் பண்ணுனது தான்! பொட்டபுள்ளைங்களுக்கு வேணும்னா, 'ஆகா என்னா அழகா, அம்சமா அபிநயம் புடிக்கிறாரு கமலு'ன்னு ஓ போட வச்சாலும், எனக்கென்னமோ நிழல் நிஜமாகிறதுலஒரு சீன்ல ஆடி காமிச்சது கடுப்பாதான் இருந்தது, இதை இந்தியிலே 'திகாவத்'ன்னு சொல்லுவாங்க! அதாவது தமிழ்ல'பீத்திக்கறது'ன்னு சொல்றது! அப்படி தான் எனக்கு தோணுச்சு! பொட்டபுள்ளைக்கு கத்துகுடுக்கறதை இவரும் கத்துக்கிட்டு ஆடுறாரு, இதிலெ என்னா இருக்குன்னு! ஒரு வேளை இது என்னோட ஆற்றாமையாக் கூட இருக்கலாம்! ஏன்னா தேகப்பயிற்சி பண்ணி உடம்பை தேத்திறதிலே எந்த சிரமம் இல்லை, அவரை காப்பி அடிச்சு, ஆனா பரதம் ஆடனும்னா, எங்கப்போறது?

இந்த மாதிரி பரதம் ஆடி வியக்க வைக்கிறதை அவரு 'சொல்லத்தான் நினைக்கிறேன்'லேயே செய்ய ஆரம்பிச்சிட்டாரு! அதாவது வராத நடிப்பை மறைக்க கைகொடுத்தது இந்த பரதம், ஆக மக்கள் தனித்துமா அடையாளம் கண்டு கொள்ள இது அவருக்கு உதவுச்சு!

ஆனா பார்த்தீங்கன்னா, பிறகு கொஞ்சம் கொஞ்சமா நடிப்பிலேமெச்சூரிட்டி வர ஆரம்பிச்சு, இந்த பரத்தை நல்ல நடிப்பா காட்டி அதை எக்ஸ்ட்ரீம் எக்ஸ்ப்ளாய்ட்டேஷன் பண்ணி வெளி வந்தப்படம் 'சலங்கை ஒலி'! சொல்லக்கூடாது சும்மா அசத்தியிருப்பாரு! அதுக்காக 'நிழல் நிஜமாகிறது' நல்லா இல்லேன்னு சொல்லலை, அது கேபியோட இன்னொரு மாஸ்டர் பீஸ், அதைப் பத்தி அப்பறமா எழுதுறேன்!

நீங்க இந்த வித்தியாசத்தை இந்த வீடியோ கிளிப்புலே பார்க்கிலாம்! ஆக எனக்கும் கமல்பிடிக்கும் தான்! ஆனா வெரைட்டி காட்றேன்னு கஷ்டபட்டு கெட்டப்பை மாத்தி, உழைச்சு நல்லா தான் நிறைய படங்கள்ல நடிக்கிறாரு! இருந்தாலும் நடிப்பிலே தன்னை வருத்திக்காமே வெரைட்டி காட்ட முடியாதாங்கிறது தான் என் ஆதங்கம்! இதோ பக்கத்திலே மலையாளத்திலே நடிச்சிக்கிட்டிருக்கிற மோகன்லால் படங்கள் நீங்கள் எத்தனை பேரு பார்ப்பீங்களோ எனக்குத் தெரியாது! அவரு மீசைக்கூட ஒதுக்கி உட்டுகிறது கிடையாது, ஆனா படத்துக்கு படம் அவ்வளவு வெரைட்டி நீங்கப் பார்க்கலாம்! அதைத் தான் நான் சொல்ல வந்தேன்! மற்றபடி எனக்கும் கமலை நல்லாவே புடிக்கும், அவர் நடிச்ச எத்தனையோ படங்களை அப்படியே சிலாகிச்சு ரசிச்சு சோறு தண்ணி இல்லாம, அப்ப அதை பத்தியே நினைச்சு மருகி காலேஜ் ஹாஸ்டல் காலம் தள்ளின காலங்களும் உண்டு! ஆக ஜோ, இலவசக் கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், ஏன் நம்ம கால்கிரி சிவாக்கூட கேட்டிருந்திரு, 'உங்களுக்கும் கமலுக்கும் முன் ஜென்ம பகையான்னு' உங்க எல்லாத்துக்கும் இந்த பதிவு என் பதில்! இப்ப வீடியோ கிளிப்பு பாருங்க!

Tuesday, February 20, 2007

மனைவியினால் பெற்ற பயன்!

இந்த வாரம் ஆனந்த விகடன்ல சுஜாதா எழுதிய 'கற்றதும் பெற்றதும்' தொடர்ல படிச்ச ஒன்னு நமக்கு ரொம்ப ஒத்துப்போன ஒன்னு! அதாவது, மனைவி வந்தபின் அடையும் முக்கிய பயன் என்னான்னு! முதல்ல அதில வந்ததை கீழே படிங்க!


சில வாரங்களுக்கு முன், ஒரு புது மணத் தம்பதியரைப் பற்றி எழுதியிருந்தது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அவர்களை மறுபடி ஒரு ‘கெட் டு கெத’ரில் சந்தித்தேன். நண்பர் ஒருவரின் குட்டிக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா.

‘‘உங்ககிட்டருந்து எப்ப நற்செய்தி?’’ என்றேன்.

‘‘என்ன சார்... கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆச்சு!’’ என்றான்.

‘‘இன்னும் மூணு வருஷத்துக்கு இல்லை சார்!’’ என்றாள் அவன் மனைவி.

‘‘சரி, எப்படிப் போயிட்டிருக்கு லைஃப்?’’

‘‘ஃபர்ஸ்ட் க்ளாஸ்! கல்யாணம் ஆனதிலிருந்து, என் முதுகில இருந்த அரிப்பெல்லாம் போயிடுச்சு சுஜாதா சார்!’’ என்றான்.

நான் அவன் மனைவியை வியப்பாகப் பார்க்க, ‘‘தினம் ராத்திரியானா இவருக்கு முதுகு சொரிஞ்சு விடணும்’’ என்றாள்.

‘‘என்ன சார் பண்றது... முதுகில் ஒரு ஏரியா இருக்கு. இன்னொருத்தர் உதவி யில்லாம தொடவே முடியாது! விசிறிக் கட்டை, பால்பாயின்ட் பேனான்னு என்ன என்னவோ வச்சு ட்ரை பண்ணாலும் அணுகவே முடியாது. மனைவிதான் சரி!’’ என்றான்

நான் யோசித்துப் பார்த்ததில், அவன் சொல்வதில் உண்மை இருப்பது புரிந்தது.

‘‘சுவத்தில் வச்சுத் தேச்சுக்கலாமே?’’

‘‘ம்ஹ¨ம்! அதுல ஒரு ‘கான்கே விட்டி’ இருக்கு. சில பேர் இதுக் குன்னே கல்யாணம் பண்ணிக்கிறாங்க தெரியுமா?’’

‘‘சேச்சே! டூ மச்!’’

‘‘ஆமா சார்! இவர் இதுக்காகத்தான் முக்கியமா என்னைக் கல்யாணம் செய்துட்டிருக்கார். அதுக்கும்...’’ என்று அவள் அவனைப் பார்க்க,

‘‘வெந்தயக் குழம்புக்கும்’’ என்றான் அவசரமாக. ‘‘அதுக்கு நன்றிக் கடனா என்னவெல்லாம் செய்யறேன்... சொல்லும்மா சார்ட்ட...’’

‘‘ஒண்ணும் பண்றதில்லை. 24 மணி நேரமும் கிரிக்கெட் பார்த்துண்டிருக்கார். எல்லாம் பழைய மேட்ச்!’’

‘‘ஏய்... உள்பாவாடையை ஒட்டப் பிழியணும்னா என்னைத்தான் கூப்பிடுவா!’’

‘‘வாஷிங்மெஷின்ல ஸ்பின் டிரை யர் வேலை செய்யலை. அதனால..!’’

‘‘அப்புறம், சாக்கடை குத்த?’’

‘‘சாக்கடை அடைச்சுண்டா முனிசி பாலிட்டியையா கூப்பிடறது?’’

‘‘ஒரு முதுகு சொரிய எத்தனைப் பாடு பார்த்தீங்களா? ஆனா சார்... இட்ஸ் ஆல் வொர்த் இட்! நடு முதுகுல சொரியறது இருக்கு பாருங்கோ... சொர்க்கம்! பாதாம் பர்பி, மதுரை மணியுடைய ரஞ்சனிக்கப்புறம் இதுலதான்...’’

அதிர்ஷ்டக்காரர்கள்!


மத்தவங்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது, நமக்கு இது முற்றிலும் ஒத்து போன ஒன்னு! உங்க அனுபவம் எப்படி??

Sunday, February 18, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

இசை என்பது எல்லாத்தையும் தீர்த்துவைக்கும் ஒரு நிவாரணி! எப்பவாது மனசு சஞ்சலத்தோட இருக்கிறப்பவும், இல்லை மகிழ்ச்சியிலே குதுகுலிக்கிறப்பவும், அந்த வேளைகளில் கிடைக்கும் இசை, பாடல்களை கேட்டுப்பாருங்க, அதைவிட ஒரு பெரிய ஆறுதல் எதுவும் இருக்க முடியாது. அது மாதிரி எத்தனை காலமானாலும் பழைய பாடல்களை கேட்கும் பொழுது அந்த பாடல்கள் புதுசா வந்த காலகட்டத்திலே நமக்கு நடந்த பல நிகழ்ச்சிகள் நம் மனசிலே அசை போடும்! ஆகா நாம் வாழ்ந்த அந்த காலங்கள் பொற்காலங்கள்னு தோணும். என்னதான் பழைய போட்டாக்களை நாம் பார்த்து நினைவு கூர்ந்தாலும், நம்மலுடய பிம்பங்களே பிரதிபலித்தாலும், அவ்வளவா நினைவுகளை அசைபோட முடியாது.

ஆனா பாடல்கள், அந்த காலத்திலே காற்றிலே கீதமா வந்த பாடல்கள், அதை கேட்டு அப்போழுது நடந்த சம்பங்களை நினைச்சு சுலபமா கோர்வையாக்கி நினைவு கொள்ள முடியும்! அப்படி இருக்கும் இந்த இசைக்கும் அதனுடன் கூடிய ராகங்களுக்கு நோய் தீர்க்கும் குணம் உண்டுன்னு நான் படிச்சப்ப, அது ஆச்சிரியமில்லை, உண்மைன்னு தான் தோணுச்சு! அதுக்காக ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு இன்னன்ன ராகங்கள் இன்னன்ன நோய்களை குணப்படுத்தும்னு போட்டிருந்தாங்க, சரி அதை பத்தி ஆராய்ச்சி பண்ணி பதிவு கம் பாட்காஸ்ட் போடலாமேங்கிற எண்ணத்திலே வந்த முயற்சி தான் இது!

அதுக்காக கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கிட்டு, ராகங்களின் தொடர்புடைய பாடல்களை தேடி கண்டுபிடிச்சு, அதையும் அந்த பாடல்களின் பின்னனி, அப்பறம் எனக்கு நினைவுக்கு வந்த சம்பங்களை வச்சு இதை ஒரு அழகான பாட்காஸ் போடுவோமேன்னு தான்!

முதல்ல நான் எடுத்துக்கிற ராகம் 'பிலஹரி' என்ற ராகம். இந்த ராகத்துக்கும் காதலுக்கும் தொடர்புண்டுன்னு சொல்றாங்க! அதாவது 'நாஜீவதாரா' என்ற தியாகராஜ் கீர்த்தனை ரொம்பவும் பிரசித்து பெற்ற ஒன்று, இந்த ராகத்திலே அமைந்த ஒன்னு! அதாவது அந்த அந்த காலத்திலே வயித்து வலியால துடிச்சவனுக்கு மருந்தா இந்த ராகத்திலே பாடி குணப்படுத்தினதா சொல்றாங்க! ஆக இந்த 'பிலஹரி' ராகத்திலே பாடி கடவுளை கூப்பிட்டு 'ஏ கோபாலா, கருணைகாட்டு, வயத்து வலிதீர்த்து, என்றும் உன் புகழ் பாட அருள் பாலிப்பாயா'ன்னு பாடி இந்த ராகத்திலே குணப்படுத்துவாங்களாம்!

அப்படி பட்ட இந்த ராகத்திலே வந்த சில சினிமா பாடல்களை நம்ம எல்லாம் இனகொள்ள வேண்டுமென்ற முயற்சியில் இதோ! கொஞ்சும் சலங்கையிலே வரும் 'ஒருமையுடன் நினது திருமலரடி' என்ற பாடல் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய பாடல் அப்பொழுது பிரசித்து பெற்ற ஒன்று, அதற்கு பின் கல்யாணப்பரிசு திரைப்படத்தில் வந்த 'உன்னை கண்டு நான் ஆட என்னை கண்டு நீ ஆட' என்ற பாடல் சுகமாகவும் சோகமாவும் ஒலித்த ஒன்று! A M ராஜா இசையிலே ஸ்ரீதர் இயக்கத்திலே வந்தப்படம்! இந்த படத்திலே தங்கவேலு காமடியும் ரொம்பவும் பாப்புலர்! பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்த அகத்தியர் படத்திலே வரும் 'தலைவா தவப்புதல்வா வருகவே' என்ற பாடல், பிறகு இந்த ராகத்திலே நம்ம இளையராஜா 'உன்னால் முடியும் தம்பி என்ற படத்திலே இசை அமைச்ச 'நீ ஒன்று தானா என் சங்கதீம்' என்ற பாடல்!

இது மட்டுமில்லாது ஹிந்தியில் வந்த ஆராதனா என்ற படத்தில் வரும் 'கோரா காஹஸ்' என்ற மற்றொரு அருமையான பாடல்!

இதோ இதனுடய தொகுப்பாக இந்த பாட்காஸ்ட்டை கேட்டு மகிழுங்கள்! இனி இது ஒவ்வொரு பாட்காஸ்ட்டா தொடர்ந்து வரும்! கேட்பதற்கு எப்படி இருந்ததுன்னும், மேற்கோண்டு என்னென்ன முன்னேற்றங்களை செஞ்சா நல்லா இருக்கும்னு உங்க பின்னோட்டங்களை போடுங்க!


தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

Friday, February 16, 2007

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே - நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!

'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம் போங்க! அதாவது எம்ஜிஆர் மக்கள் மனதிலே இடம் பெற்ற நடிகர், அதற்காக அவர் ஆரம்ப காலத்திலேருந்து வகுத்த இலக்கணங்கள் ரீல் லைஃப்க்கு மட்டுமில்லை, ரியல் லைஃப்க்கும் சேர்த்து தான். இதுல்ல ஒரு சோகம் என்னான்னா அவருடய இளமை காலங்கள் தான், அதாவது அவருடய பிறந்த தேதி குறித்து நிறைய சர்ச்சைகள் இருக்கு. அதாவது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலே இலங்கைக்கு பொழைக்க இடம் பெயர்ந்த தம்பதிகள் கோபால மேனன், மற்றும் சத்தியபாமா ஈன்றெடுத்த இரண்டாவது புத்திரன் தான் இந்த எம்ஜிஆர். அதாவது அந்த காலத்திலே அப்பா பேரை இனிஷியலா போடோற மாதிரி ஊரு பேரையும் போட்டுக்கிறது வழக்கம். அந்த காலத்திலே நிறைய பிரபலங்கள் பேரை பார்த்தாலே தெரியும், கரெக்டா ஊரு பேரு முன்னாடி நிக்கும்! உதாரணத்துக்கு, குன்னக்குடி வைத்தியநாதன், செம்மாங்குடி சீனிவாச அய்யர், லால்குடி சீனிவாசன், திண்டிவனம் ராமமூர்த்தி, அப்படின்னுட்டு போகும்! அந்த பழக்கம் ரொம்ப நாளாவே இருந்தது, அப்பறம் 60,70க்கு அப்பறம் இந்த ஊரு பேரை முன்னாடி போட்டுக்கிற பழக்கம் நம்மக்கிட்ட இருந்து போயிடுச்சு! இப்பயும் என்னோட ஒரு ஃபிரண்டு, டிஜி மோகன்னு, முதல்ல ஏதோ அவங்க அப்பா பேரு தான் இரண்டு எழுத்திலே வருதுன்னு நான் ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தா, அந்த முதல் எழுத்து 'டி'(T) குறிக்கிறது திருச்சியை! அப்படி எம்ஜிஆர் பேரு மருதூர் கோபல மேனன் ராமசந்திரன்! அவரு பொறந்தது இலங்கையிலே கண்டியிலே! முன்னாடி இருக்கிற ஊரு பேரு மருதூர்ங்கிறது கேரளாவிலே இருக்கிற ஊரு, அவருடய மூதாதையர்கள் வசித்தது, அந்த காலத்திலே!

ஆக அந்த காலத்திலே தேயிலை தோட்டத்திலே வேலைப் பார்க்க போனவங்க இவரு குடும்பம்! (எனக்கு இந்த இலைங்கைக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் சரித்திரம் கொஞ்ச தெரிஞ்சிக்க ஆசைப்படுகிறேன், அதுவும் தேயிலை, காப்பித்தோட்டங்களுக்கு! எங்காயவது இணையத்திலே எழுதி இருந்த சங்கதி இருந்தா, தெரிஞ்சவங்க சொல்லுங்க!) அதாவது அந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி இல்லாத நேரத்திலே பொறந்த இவரை வளர்க்க படாத பாடு பட்டுட்டாங்களாம்! அப்ப எல்லாம் குழந்தைங்க சரியா பொழைச்சு ஒரு பத்து வயசுவரை வந்தா உண்டு, இல்லை பொசுக்குன்னு ஆயுள் முடிஞ்சிடும். இதை நான் என்னோட வாழ்க்கையிலும் பார்த்திருக்கேன்! இந்த 50,60 கள்ல கூட குழந்தைகளை பேணி காப்பதுங்கிறது குதிரைக் கொம்பு தான். எங்க வீட்டிலேயே எனக்கு மூத்தவங்க இரண்டு பேரு தங்கலை, நான் தான் மூணாவது! அதனால என்னையை மத்தவங்களுக்கு தானம் கொடுத்து, அப்பறம் பிச்சையா கேட்டு வாங்கி வளர்த்தாங்கண்ணு சொல்வாங்க! அதுக்காகவே அந்த குழந்தைகளுக்கு மூக்கன், பிச்சை ன்னு பேரு வக்கிறது வழக்கம், ஆனா நம்ம பெரியம்மா வூட்டு அக்காமாருங்க கொஞ்சம் படிச்சவங்க, அதெல்லாம் வேணாமுன்னு கொஞ்சம் ஸ்டைலா நம்ம பேரை வச்சதா கேள்வி! இதை எதுக்கு சொல்றேன்னா எம்ஜிஆரோட உண்மையான வயது யாருக்கும் சரியா தெரியாது! அஃபிஷியல் ரெக்கார்டு எல்லாத்திலேயும் 1917ன்னு போட்டிருந்தாலும், அவரு ஒரு ஆறு ஏழு வருஷத்துக்கு முன்ன பொறந்தவருன்னு சொல்றாங்க!

எம்ஜிஆர் பொறந்த இரண்டு வருஷத்திலே அவரு அப்பா இறந்ததாலே, அவருடய விதவைத்தாயார், தன் மக்களை கூட்டிக்கிட்டு தமிழ்நாடு வந்து கும்போகோணத்திலே வந்து குடியேறினாங்க! அப்பறம் குழந்தை நடிகனா இருந்து படிப்படியா முன்னேறி, தன்னிகரில்லா நடிகர்னு ஒரு முப்பது ஆண்டுகள் தலைசிறந்த நடிகனா ஆட்சி புரிந்து, கடைசி பத்து வருஷம் தமிழக முதல்வரா இருந்து போய் சேர்ந்தாரு! ஆனா அவரு விட்டு போனது எத்தனையோ! கண்ணதாசன் அவருக்குன்னு எழுதனமாதிரி, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் என் பேச்சிருக்கும்னு' இன்னைக்கும் அவரு பேரின் ம்ந்திரசக்தி எப்படிங்கிறதை சமீபத்தில திருப்பி ரீலீஸ் பண்ணின 'நாடோடி மன்னன்' படம் பதினாலு வாரங்கள் தொடர்ந்து ஓடினதே சாட்சி! அவ்ர் யானை மாதிரி, இருந்தாலும் ஆயிரம் பொண், இறந்தாலும் ஆயிரம் பொண், ஆயிரத்தில் ஒருவன்!

சரி உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ராமதாஸ், ஜஸ்டின் அப்படின்னு. அவரோட சண்டை காட்சிகள் எப்பவுமே பிரமாதமா இருக்கும்! அதாவது இப்பவும் படங்கள் வருது, அதிலே எதிரியை தாக்கறேன்னு ரத்தகளோபரமா இருக்கு, வன்முறைகளை தூண்டிவிடுகிற மாதிரி தான் வருது! அதாவது ஒருத்தன் எதிரின்னா அடிச்சி காலிப்பண்ணு, அப்படிங்கிற ரீதியிலே, பயங்கர ஆயுதங்களோட ஒரே ராசாபாசமா இருக்குது! ஆனா எம்ஜிஆர் படங்கள் எல்லாமே பாருங்க! அப்படி ராசாபாசம் எதுவும் தெரியாது! சண்டைங்கிறது ஆபத்தான வேளைகளில் தன்னை தற்காத்து கொள்ள வைத்திருக்கும் இன்னொரு கலை மாதிரி இருக்கும். அதிலே சண்டை போட அவரு எடுத்து வைக்கும் ஸ்டெப்பு, ஸ்டைல், ஆக்ஷன் எல்லாமே பார்க்க சந்தோஷமா இருக்கும். அதாவது குதுகூலமா சின்ன பசங்க கண்ணை மூடாம, பெரியவங்களும், சின்னவங்களும் சேர்ந்து பார்த்து மகிழ்ச்சியா பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும்! அது தான் அவருடய படங்களுக்கு கிடைச்ச வெற்றி!

அப்படிதான் இந்த படத்திலே முதல்ல ஆர்எஸ் மனோகரோட போடற சண்டையிலே, எம்ஜிஆரை லதா துப்பாக்கியாலே சுட்டு தப்பிக்க வச்சிட்டு, அதுக்கப்பறம் மேஜையிலே பலம் யாரு காட்டறதுன்னு வைக்கும் ஸ்டெப்புகள், அப்பறம் கைநெகத்திலே கண்ணத்தை கிழிச்சு இரண்டு கட்டைவிரலை வச்சிக்கிட்டு சண்டை போட்டுக் காமிக்கும் லாவகமே தனி! அப்ப எல்லாம் இந்த மாதிரி புதுசா ஸ்டைலா சண்டை போட அவருக்கிட்ட புது ஆளுங்க வருவாங்க, அதிலே ஜஸ்டின் ஒருத்தரு, அப்பறம் மொட்டத்தலை ஷெட்டின்னு ஒரு நடிகர்! இதோ இப்ப இந்த இரண்டு கிளிப்பு, ஒன்னு மனோகரோட, இன்னொன்னு ஜஸ்டினோட! அப்பறம் எதிரியை அடிச்சி போட்டுட்டு ஓடறதுங்கிறது அவருடய வழக்கமே கிடையாது! அடிபட்டவன் திருந்தனும், அதுக்கு அடிச்சிட்டு அவனுக்கே தண்ணி எல்லாம் கொடுத்து சிகிச்சை பண்ணுவாரு!

அப்பறம் எதிரி பக்கம் நியாம் இருந்தா, அதுக்கு துணை போவாரு! இதிலேயும் அப்படிதான் அரைகுறையா ஆட சொல்லி வற்புறுத்தன ஜஸ்டினை அடிச்சிட்டு, அப்பறம் அவரு பக்கத்து நியாத்தை தெரிஞ்சு பணத்தை கொடுத்துட்டு சந்திரகலாவை மீட்டு காதலிப்பார்! இது மாதிரி ஆபத்துகள், ஆக்ஸிடண்டான கட்டங்கள்ல கதாநாயகியை காப்பாத்தி, கடைசியிலே அவங்களையே காதலிச்சி கல்யாணம் பண்ணி அவங்களுக்கு கலங்கம் எதும் வரமா பார்த்துக்கிற எம்ஜியார் ஃபார்முலாவை தான் கமலு தேவர் மகன்லேயும் செஞ்சு காமிச்சிருப்பாரு, ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிப்பற! ஆக இன்னைக்கு எந்த நடிகர்களா இருந்தாலும் சரி, அன்னைக்கு சில நல்ல வழி என்ற எம்ஜிஆர் போட்டு கொடுத்த ஃபார்முலாக்களை விட்டு அகன்றதே இல்லை!

அது மாதிரி காதல் கொள்வதில் அவருக்கு உண்டான பிரத்யோகமான ட்ரேட் மார்க்குகள் உண்டு! இந்த படத்திலே சந்திரகலாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கு ஆசீர்வாதம் வாங்குகிற காட்சிகள் அமைப்பு சமுதாயத்தின் எல்லா மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும்! இந்த படத்திலே கல்யாணம் முடிச்சு ஜேசுதாஸ் வாயஸ்ல ஒரு அருமையான பாட்டுக்கு ஹாங்காங் சுத்தி போட்ல ஆடிப்பாடி காட்சிகள், அப்பறம் இந்த வெளி நாடு போன அங்கே அப்ப அதியமா இருந்த டால்ஃபின் மீன் காட்சிகள், டிஸ்னிலேன்டு, எக்ஸ்போ 70, இது எல்லாம் அப்படியே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி படம் புடிச்சு கொண்டு வந்தாங்க! இப்ப இந்த மாதிரி பொருட்காட்சி, தீம் பார்க்குல புடிச்சா அவ்வளவு சுவராசியம் இல்லை,ஏன்னா அந்த காலத்திலே ஜனங்க ஊரை விட்டு வெளியே போகலை, இது மாதிரி படக்காட்சிகளை 'பே'ன்னு விழிபிதுங்க பார்த்தாங்க, ஆனா இப்ப சும்மா நாலு கோடு எழுதப்போறேன்னு உலகத்தை சுத்தி வர்றவங்களுக்கு இதெல்லாம் ஒரு ஆச்சிரியமே இல்லை! முக்காவாசி பேரு பார்த்திருப்பாங்க! மேற்கொண்டு மக்கள் கையிலே காசு பொறள ஆரம்பிச்சிருச்சி, அவங்களே போய் பக்கத்திலே சிங்கப்பூரு, மலேசியா, ஹாங்காங்குன்னு பார்த்துட்டு இந்த அதிசியங்களை பார்த்துட்டு வந்துடறாங்க! அதனாலே தான் இப்ப வெளிநாட்டுல போயி படம் புடிச்ச நம்மூருல் இருக்கிற நெருக்கடியான ரோட்டை காமிக்கிற மாதிரி, 'நியூயார்க் நகரிலே'ன்னு தெருத்தெருவை காமிக்கிறாங்க!

அப்பறம் இன்னொன்னு நம்ம மக்கள் திலகத்துக்கு எப்பவுமே புதுசா புதுசா, இளசா ஹீரோயின்கள் வேணும்! நம்ம ஊரு பத்தலைன்னு, வெளியிலே தாய்லேந்துல படம் புடிக்க வந்து அந்தவூரு பொண்ணை போட்டு கனவு காண வச்சு ஒரு துள்ளலா பாட்டு ஒன்னயும் பாடவச்சி தூள் கிளப்பி இருப்பாரு நம்ம தலைவரு! கடைசியிலே அந்தம்மாவை தங்கச்சியாக்கிட்டு போயிடுவாரு! எம்ஜிஆருக்கிட்ட இருந்த ஒரே கெட்ட பழக்கம், அவரு படத்திலே வர நாயகிகளை தான் கனவு கான சொல்லுவாரு! அதுல ஜிகினா டிரெஸு போட்டுக்கிட்டு ஆடி மயக்கியிருப்பாரு! இந்த ஃபார்முலாவுக்கு ஒரு காரணம் இருக்கு, அடுத்த பதிவிலே சொல்றேன், இப்ப பாட்டை பாருங்க, என்னாமா ஆட்டம் போடும் அந்த பச்சைக்கிளி!

Monday, February 12, 2007

தூரத்தில் நான் கண்ட உன் முகம் - நிழல்கள் Podcast தொடர்ச்சி!

என்னுடய இணைய ஒலிபரப்பில் நிழல்கள் படத்திற்கு நான் அளித்த பாட்காஸ்ட்டின் தொடர்ச்சியாக ஒரு முக்கியமான பாடல், அந்த படத்தில் இடம் பெறாத ஒன்று, ஆனால் மனசை அப்படியே அள்ளியப் பாடல்! ஜானகி அம்மா பாடி அதுக்கு அவங்க நேஷனல் அவார்ட் வாங்கினாங்க, அதுவும் தமிழ்ல பாடினதுக்கில்ல, தெலுங்கிலே பாடினதுக்காக! அதை பற்றிய இந்த ஒலிப்பரப்பு நீங்கள் கேட்டு மகிழ இதோ இங்கே!இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்னா படத்திலே இருந்திருக்கணும், அதாவாது வீணை கத்துக்கிறேன்னு போயி அதுக்குள்ள சாருஹாசன் செத்துப்போனன்ன, யாருக்காக ராஜசேகர் அடி வாங்கினாரோ,
அவரே இவருக்கிட்ட மயங்கி காதல் கொண்டு இந்த பாடலை பாடுவதா இருக்கும்! ஆனா இந்த பாடல் படத்திலே இடம் பெறலை! ஆனா படம் வந்த இரண்டு மூனு நாளுக்குள்ள நாங்க ஓடிப்போயி பார்த்ததாலே, அந்த காதல் சீக்குவன்ஸ் எல்லாம் படத்திலே இருந்தது, அப்பறம் படம் சரியா போகலைன்னு கட் பண்ணி தூக்கி எறிஞ்சிட்டாங்க, இருந்தாலும் இந்த பாட்டு நான் எப்ப கேட்டாலும் என்னை மறந்துடுவேன்! அதுவும் அந்த காலங்களில் இரவு நேரத்தில் தனியா டேப்பிலே இதைக் கேட்கிற சுகம் தனி, அதே மாதிரி ஜானியிலே வர 'காற்றில் எந்தன் தீபம்', இன்னைக்கும் அந்த சுகராத்திரிகளை நினைச்சு அசைப்போடுறதுண்டு!

தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

இப்பாடலின் தெலுங்கு கீதம் இதோ!

பச்சைக்கிளி முத்துச்சரம்-நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!

என்ன புதுசா கெளதம் எடுக்கிற படத்தலைப்பை வச்சு ஒரு பதிவு போட்டுருக்கேன்னு பார்க்கிறீங்களா! அதான் இது ரொம்ப நாளா எழுதுனும்னு நினைச்ச பதிவு, பல பாகங்கள்ல வரும்! அதாவது நான் சின்ன வயசிலே ரசிச்சு, ரசிகனா இருந்த எங்கள் தலைவர் எம்ஜியார் பத்தி இது வரை சொல்லவே இல்லியே, என்னோட அரிதாரத் தொடர்ல அப்படியே கொஞ்சம் தொட்டு வச்சேன், நான் அவரோட ரசிகர்னு, ஆனா அதிகமா எழுதலை அதான்! இந்த தலைப்பிலே வரும் பாடல், அப்ப ரொம்ப பாப்புலர், 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே நம்ம தலைவர் தாய்லாந்து நடிகையோட ஆடிப்பாடி வரும் கனவுப்பாடல்! இந்த படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்! இந்தப்படம் 70களின் தொடக்கத்திலே வந்த ஒன்னு, எனக்கு தெரிஞ்சு இந்த படம் அப்பே எவ்வளவோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த ஒன்னு, என்ன பார்க்கிறீங்க, அப்ப எனக்கு தெரிஞ்சு இந்த படம் திருச்சி பேலஸ் தியோட்டர்ல வெளி வந்து, அந்த தியேட்டர்ல வேலை செஞ்ச, எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு, இந்த படம் ஓடின அத்தனை நாடகளிலேயும் ப்ளாக்ல டிக்கட்டு வித்தே தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்த கதை உண்டு! அப்படி பல சாதனைகளை முறியடிச்ச படம்.


இந்த படம் வந்தப்ப தான் எம்ஜியார் அரசியல்ல சூடுபிடிக்க ஆரம்பிச்சிருந்த நேரம்! இந்த படம் வந்தா நம்ம கட்சி அம்பேல்ன்னு பயத்து நடுங்கின கலைஞரு இந்த படத்தோட நெகடிவ்களை லேபிலேயே கிழிச்சு போட்டு படம் வெளிவரவிடாம தடுக்க பார்க்கிறாருன்னு அப்போ ஒரு வதந்தியே சுத்தி வந்தது. அதைக்கூட நம்ம மணி இருவர் படத்திலே அப்படி இப்படின்னு காமிச்சு கடைசியிலே, ஒரு நடிகனோட புது படம் வெளியாவதை பாத்து பயப்படும் நிலமையிலே நம்ம கட்சியில்லேன்னு சொல்ற மாதிரி ஒரு டைலாக் வச்சு, கலைஞரை நல்லவரா காட்டி இருப்பாரு, ஏன்னா இருவர் படம் வந்தப்ப திமுக ஆட்சியிலே இருந்த நேரம்! ஆனா இது வதந்தியா, இல்லை உண்மையான்னு எனக்கு தெரியாது, ஆனா 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வர்றதுக்கு முன்னே நல்லொதொரு பப்ளிசிட்டி, இதுகூட எம்ஜியாரின் மார்க்கெட்டிங் சாதுர்யம் தான்!

இந்த மாதிரி அந்த காலத்திலே, சின்ன வயசிலே என்னை அறியாமலே அவர் பால் ஈர்க்கப்பட்டு ரசிகனா இருந்தேன், ஆனா இப்ப அவருடய படங்களை திருப்பி பார்க்கும்போது, அதுக்கு நிஜமாவே நல்ல காரணங்கள் இருந்ததா எனக்குப்படுது! அது எப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு, வழக்கம்போல வீடியோ கிளிப்புகளோட! இப்ப சமீபத்திலே இந்த படம் பார்த்தப்ப ஒரு ஸ்ட்ரைக்கு!

அப்ப எல்லாம் தியோட்டர்கள் படம் பாக்க போன, ஒரு ஆம்பியன்ஸ்(ambience) இருக்கும் பாருங்க, அது என்னமோ இப்ப வீடியோவிலே வீட்டுக்கூடத்திலே பார்க்கிறப்ப கிடைக்காத ஒன்னு, ஏன் மல்டிபிளக்ஸ்ன்னு, பாப்கார்ன்னு, கோக்ன்னு எடுத்துட்டு போய் சீட்டிலே மாட்டிக்கிட்டு என்னமோ சொகுசா படம் பார்த்தாலும் அந்த காலத்துல தியோட்டர்ல படம் பார்த்த சொகுசே தனி தான்! அதாவது ஆறரை மணி ஷோவுக்கு நாலுக்கே போய் க்யூவிலே நின்னு(இந்த க்யூங்கிறது, கதவை திறந்தப்பறம் தான், அதுக்கு முன்னே நீங்க பலசாலியா இருந்து, டிக்கெட்டு சந்துக்குள்ள போகனும், கொஞ்சம் நோஞ்சான்னாலும், நீங்க எம்ஜியார் படம் பார்க்க அட்லீஸ்ட் ஒரு 50 நாளு வெயிட் பண்ணனும், எம்ஜியார் ஸ்டண்ட் மாதிரி தலை மேலே எல்லாம் நடக்க பழகி இருக்கனும்) , அடிதடின்னு கதவை திறந்து டிக்கெட் வாங்க, ஒரு ஆளு போற மாதிரி இருக்கும் சந்துலே போயி, அப்பறம் டிக்கெட் கவுண்டருக்கு வந்து மஞ்சளோ, பச்சையோ, ரோஸ் கலரா ஒரு டிக்கெட்டை கிழிச்சி வாங்கி, தியோட்டர்குள்ள போயி பின்னாடி சீட்டு புடிக்க ஓடி, தூணுகீணு மறைக்காத இடத்திலே உட்கார்ந்து ஆரம்ப நியூஸ் ரீலு, இல்லை இல்லை, அந்த விளம்பர சிலேடுங்கள்லருந்து பார்த்தாதான் திருப்தி, அதுவும் சரியா பேலஸ் தியேட்டர்ல, படம் போடறதுக்கு முன்னே 'திரைப்படம் ஓடும் பொழுது லாகிரிவஸ்துகள் எதுவும் உபயோகிக்க கூடாது'ன்னு ஒரு சிலைடு போட்டப்பறம் தான் படமே, நாங்க அங்க, இங்கே வெளியே நின்னுகிட்டு இருந்தாலும், அந்த சிலைடை பார்த்தோன்ன, டேய் படம் போடப்போறாண்டான்னு அடிச்சு புடிச்சு போய் உட்கார்ந்து பார்த்த காலம் இருக்கே அது பொற்காலம்! ச்சே..இப்பயும் சத்தம் போடமா, அலுங்காம குலுங்காம இந்த மல்டிபிளக்ஸ்ல போயி படம் பார்க்கறதிலே எந்த சுவாரசியமும் இல்லை போங்க! அதே மாதிரி சினிமா கொட்டகையில் விற்கும் கள்ளமிட்டாய், தேங்கா பர்ஃபி, முறுக்கு எல்லாம் நம்ம உட்கார்ந்த இடத்துக்கு கொண்டாந்து வித்து, அதை வாங்கி சாப்பிடும் இன்பமே தனி தான்! இதெல்லாம் இல்லாத ஒர் ஆம்பியன்ஸ்ல பார்த்த எம்ஜியார் படம் படமேயில்லை!

அப்பறம் படம் ஆரம்பிக்கிறப்ப போடற லோகோ இருக்கே, அதுக்கு பிகிலு தூள் பறக்கும் பாருங்க, எம்ஜியாரே நேரில வந்த மாதிரி! இந்த லோகோவை வச்சு அந்த காலத்திலே கரெக்டா இது இன்னார் கம்பெனின்னு கரெக்டா கண்டுபிடிச்சிடுவோம்! அதாவது எவிஎம், ஜெமினி, சுஜாதா புரெடெக்ஷன்ஸ், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்!அது மாதிரி எம்ஜியார் பிக்ஸசர்ஸ் லோகோ காலத்தின் கட்டாயத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை இந்த வீடியோ கிளிப்புல நீங்க பார்க்கலாம், முதல்ல அந்த உதயசூரியன் பேக்ட்ராப்ல வர்றது அப்படியே மாறி இருக்கும்!அதாவது எம்ஜியார் சொந்தமா எடுத்த படங்கள் மொத்தமே மூணு தான், 'நாடோடி மன்னன்', 'அடிமைப்பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்'. ஆனா இந்த மூணுமே வந்தது வெவ்வேற காலகட்டங்கள்ல, அதான் இந்த லோகோவிலே ஒரு ஆணும் பெண்ணும் கொடியை பிடிச்சிக்கிட்டு இருப்பாங்க, முந்தய இரண்டு படங்களையும் திமுக கொடி பறக்கும், மூணாவதா வந்த 'உலகம் சுற்றும் வாலிபன்'ல அதிமுக கொடியிலே அண்ணா படத்தோட பறக்கும்! அதாவது அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தியதை லோகாவிலேயே கண்டுணரலாம்!

அப்பறம் வழக்கமா சீர்காழி கோவிந்தராஜன் பாட்டோட, 'வெற்றியை நாளை சரித்திரம் வெல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்'ன்னு டைட்டில் கார்டு ஆரம்பிக்கும் பாருங்க! பாட்டை கேட்கிறப்பவே நமக்கு ஒரு வேகம் பிறக்கும்! அது எம்ஜியாருக்கு மட்டுமே பிரத்தியோகமான ஒன்னு! இந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே அந்த காலத்திலேயே விஞ்ஞானம், மின்னல் சக்தி, ஜப்பான்ல இருக்கிற 'க்யோட்டோ' என்ற இடம் அப்படின்னு போகும்! (இந்த க்யோட்டாங்கிற இடத்தை பத்தின விஷயம் என்னான்னு உங்களுக்கு ஒரு க்விஸ், கரெக்டா பின்னோட்டத்திலே எழுதுங்க பார்க்கலாம்!) அதுவும் நாட்டின் தலைவர்களின் போட்டேவோட, விஞ்ஞானத்தை கையிலே எடுத்து அது அழிவுப் பாதைக்கு உபயோகப் படுத்தக் கூடாது, ஆக்கப் பணிகளுக்கு தான் உபயோகப் படுத்தனும்னு உபதேசத்தோட படம் ஆரம்பமாகும்! அப்பறம் எம்ஜியார் ஒரு விஞ்ஞானி(அவரு மட்டுமில்லை, அசோகன் , அப்பறம் மத்த விஞ்ஞானிங்க எல்லாம் ஒர் ஸ்ட்ரேஞ்சா தாடி வச்சிருப்பாங்க, நம்ம துபாய் ஷேக்குங்க மாதிரி, பார்க்க தமாஷா இருக்கும், விஞ்ஞானிக்கு எவ்வளவு சிம்பளா கெட்டப்பு பாருங்க, இப்ப கெட்டப்ப மாத்திக்கவே ரொம்ப கஷ்டபடறாங்க சில நடிகர்கள்!)

மின்னலின் சக்தியை ஒரு தோட்டக்குள்ள அடக்கி வச்சி, அந்த சக்தியை எப்படி கட்டுபடுத்திட்டேன்னு சுட்டு காமிச்சு காடுகளை எரிச்சு காமிடி பண்ணி இருப்பாரு! முதல்ல காமடியா தான் தெரிஞ்சுது, அப்பறம் சீரியசா இணையத்திலே தேடினா, ஆமா அப்படி ஒரு முயற்சி செஞ்சிருக்காங்கன்னும், அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லைன்னும் தெரியவருது! ஆனா அந்த இடி, மின்னல்லருந்து வரும் மின்சாரத்தின் அளவை கையாள நமக்கு எவ்வளவு பெரிய மின்தடை(Insulation) வேணும் தெரியுமா? சொன்னா ஆச்சிரியப்படுவீங்க , இப்ப இருக்கும் பீங்கான் போன்ற பொருட்களின் தடிமன் ஏழு கிமீ இருந்தா தான் அதை கையாள முடியும், 'Insulation'ஐ விடுங்க, அதை கையாள தேவையான மின்கடத்துவான்(Conductor), அதை விட அதிகம். ஆனா படத்திலே எம்ஜியார் சொல்லுவாரு ஒரு சின்ன சதவீதத்தை தான் சேமிச்சேன், அதுக்கே என்ன பலம் பாருங்கன்னு, லதாவை வுட்டு சுட்டு காமிப்பாரு! இதோ வீடியோ கிளிப்பு பாருங்க! ஆனா இந்த மின்னல்லிருந்து சேமிக்கும் சக்தி பத்தி படிக்கனும்னா இதோ சுட்டி!

அப்புறம் அண்ணன் எம்ஜியார் விஞ்ஞானி, தம்பி துப்பறியும் போலீஸ் அதிகாரி, இதுல எம்ஜியாருக்கு மூணு ஜோடி, மஞ்சுளா, லதா, சந்திரகலா! இளமையா எல்லா பாடல்களுக்கும் துள்ளலோட நம்ம எம்எஸ்வி ம்யூசிக் போட்டிருப்பார்! அந்த காலத்திலே முழுக்க முழுக்க வெளி நாடு போய் படம் புடிச்சிட்டு வந்தாங்க! எம்ஜியாரு சுத்தினது என்னவோ சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான்னு தான், ஆனா அதையே உலகத்தை சுத்தி வந்த வாலிபன்னு காமிச்சாரு, மக்களும் அப்ப இவ்வளவு தான் உலகம்னு நினைச்சு, அது எல்லாத்திலேயும் போயி சுத்திட்டு வந்து படமெடுத்திருக்காருன்னு நம்பினாங்க!

முதல்ல அண்ணன் எம்ஜியாருக்கு மஞ்சுளா ஃபியான்ஸி, அவங்களை கூட்டிக்கிட்டு முதல்ல நம்ம தலைவர் போற இடம் ஹாங்காங்!அதாவது இந்த பாட்ல வர்ற கிளிப்பு பாருங்க, விக்டோரியா பீக்லருந்து ட்ராம்ல வர்ற மாதிரி! இதை நான் 92ல முதமுதல்ல போயி ஏறி பார்த்தப்ப நிஜமாலுமே இந்த படம் ஞாபகம் தான் வந்துச்சு, இங்கேருந்து சுத்துபட்டு கிராமம் எல்லாம் தெரியுதுன்னு சொல்றமாதிரி எல்லா தீவுகளும் தெரியும்! அது மாதிரி 'கோவலூன்' சொல்ற தீபகற்ப பூமி நல்லா தெரியும்! அப்படி ட்ராம்ல ஏறி மஞ்சுளா ஆன்ட்டியோட ஹனிமூன் ட்ரிப்பு போற மாதிரி போயி, அப்பறம் இந்த பக்கம் ஹிமாச்சல் வந்து 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்'ன்னு கொண்டாட்டம் போட்டா நமக்கு அப்படி கொண்டாட்டம் போடனும்னு தோணுமா தோணாதா?


இந்த படம் தான் பின்னாடி எல்லாரும் வெளிநாடு போய் படம் புடிக்க பாலபாடம் சொல்லி கொடுத்தது!நம்ம எம்ஜியாரு ஸ்டைல்ல தான் அப்புறம் போன ரஜினியும் செஞ்சாரு! அதுமட்டுமில்லை எல்லா பாடல் காட்சிகளும், படமாக்கப்பட்ட விதமும் மனசை அப்படியே அள்ளூம்! மூணு கதாநாயகி, எல்லாமே காதல் பாடல்கள்னு போய்ட்டா கொள்கைப்பாடல்களுக்கு என்ன பண்றது, அதுக்குத்தான் 'சிரித்து வாழவேண்டும்' பாட்டு! இன்னும் இதை பத்தி நிறைய சொல்ல வேண்டியிருக்கு! எழுதுனா பதிவு நீளமாயிடும், அடுத்த பதிவுல, அவரு போட்ட சண்டை காட்சி, அப்பறம் எம்ஜியார் பண்ணின ரொமான்ஸ் எல்லாம் விலாவாரியா, இப்ப வர்றட்டா?

Wednesday, February 07, 2007

கண்ணே! கலைமானே!

வருடங்கள் இருபது உருண்டோடி விட்டது! ஆனால் இன்றும் அன்றைய நினைவுகள் மனதை விட்டு அகலவில்லை! வாழ்ந்த கழித்த நாட்களை எண்ணுவதா, அல்ல வாழப்போகும் நாட்களை எண்ணி ஏங்கி கழித்த நாட்களை நினைவு காணுவதா இன்று என மனதுக்குள் ஒரு இனிமையான போரட்டம்! ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சுவையுண்டு! சற்றே அதை நினைத்து மருகுகையில் அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது மனம்! அப்படி நினைக்கையிலே எத்தனை சந்தோஷ தருணங்கள் அவை, அதை இன்று தொலைத்துவிட்டு சராசரியாக நாட்களை கழிப்பது ஏன் என மனம் இருகுகிறது! ஆனால் அந்த சந்தோஷ தருணங்களை எண்ணிப்பார்க்கிறேன் இப்போது! அதற்கு ஒரு காரணம் உண்டு!இன்று திருமண நாள் காணும் நாம் இத்தருணம், நினைக்க விரும்புவது இது போன்ற அன்புடன் என்றும் வாழ!இதோ உனக்காக ஒரு கவிதை மடல் வைரமுத்துவிடம் கடன் வாங்கி அக்கால நினைவினை அசைப்போட!

அது ஒரு காலம் கண்ணே! கார்காலம்!
நனைந்து கொண்டே நடக்கிறோம்!

ஒரு மரம் அப்போது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது!
இருந்தும் அந்த ஒழுகுங் குடையின் கீழ் ஒதுங்கினோம்!

அந்த மரம் தான் எழுதி வைத்திருந்த பூக்கள் என்னும்
வரவேற்பு கவிதையின் சில எழுத்துக்களை நம் மீது வாசித்தது!

இலைகள் தண்ணீர் காசுகளை சேமித்து
வைத்து நமக்காக செழவழித்தன!

சில நீர்த்திவலைகள் உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடி பாதையில் ஓடிக் கொண்டிருந்தன!

அந்தி மழைக்கு நன்றி!
ஈரசுவாசம் நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது!
ஆயினும்-நான் என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்!

நம் இருவரிடையே இருந்த இடைவெளியில் நாகரிகம்
நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது!
எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால் வார்த்தைகள் ஊர்வலம் பாதையெங்கும்
மெளனம் பசை தடவி விட்டிருந்தது!

உன்முகப்பூவில் பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு உன் நெற்றியில்
நீர்த்துளிகள் பட்டுத்தெரித்தன!

உனக்கு பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை எடுத்து நீட்டினேன்
அதில் உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்!
நான் கேட்டேன், "இந்த கைக்குட்டை உலராமல் இருக்க ஓர் உத்தி சொல்லக்கூடாதா?"
நீ சிரித்தாய்!

அப்போது மழை
என் இருதயத்துக்குள் பெய்தது
அது ஒரு காலம் கண்ணே!

கார்காலம்!

இதோ நீ விரும்பும் பாடலின் ஒளித்துண்டு!

Sunday, February 04, 2007

வலைப்பதிவாளர்களின் வலைவிரிப்பு!

நேத்து கால்கரியிலே நடந்த தமிழர்களின் தைத் திங்கள் திருவிழா பற்றியும், அதில் வலைப்பதிவாளர்களுக்கு கிடைத்த மரியாதை, அங்கிகாரத்தை பற்றியும் அழகா நான் எழுதும் முன்னர் கால்கரி சிவா, 'வலைப் பதிவாளர்களுக்கு மரியாதை' என்று எழுதி உங்களுக்கு எல்லாத்தையும் தெரிவிச்சிட்டார்! அவரு வெறும் படம் மட்டும் போட்டுட்டு சொல்ல விட்டதை, கொஞ்சம் சொல்லுவேமேன்னு தான். அதாவது எங்க இரண்டு பேரையும், வலைப்பதிவாளர்கள்னு தெரிஞ்ச உடனேயே, இங்கே உள்ள என் இனிய தமிழ் மக்கள், அதைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய ஆர்வம் காட்ட தொடங்கினார்கள்! சரி அதனாலே எல்லாருக்கும் அதை பத்தி கொஞ்சம் எடுத்த சொல்லுவோமேன்னு தான் நேற்று என்னுடய மேடைப் பிரசங்கம்.

இந்த தமிழ் வலைப்பதிவுகள், வலைப்பூக்கள்னு ஆரம்பிச்சு, அதை அழகா தெரிஞ்சக்க வழி செஞ்ச காசி போன்றோரின் உதவியாலேயே, என்னால் இந்த மேடைப் பிரசங்கத்தை வழங்க முடிந்தது, ஆகையால், வயதில் சிறியவர்களாக இருப்பினும் அவர்களை வணங்கி எனக்கு இதன் விவரங்களை அறிய வைத்த அவருக்கும், தமிழ் மணக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!

ஆக இந்த பிரசங்கத்தின் வீடியோ படத்துண்டினை வழங்குவதில மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!அடுத்து என்ன தான் சொல்லி பிரசங்கம் செய்தாலும் அதனை பயற்சி பெற கொஞ்சம் காலம் எடுத்து கொள்ளக் கூடும்! அதன் படி இந்த தமிழ் எழுதும் கருவி, தமிழ் எழுத்துருக்கள் பார்ப்பது எப்படி, மின்னஞ்சல் எழுதுவது எப்படி என்றெல்லாம் கேள்வியோடு நேற்று என்னிடம் வினாக்களை தொடுத்த மக்களுக்கு பயன்படும் வண்ணம், அதன் செய்முறை விளக்கத்தத ஒரு செய்தி படமாக தொகுத்து கொடுத்தால் என்னவென்று தோன்றியது. அதன் விளைவாக, இதோ இந்த பக்கத்திலே இருக்கும் வீடியோ பட துண்டுகள் அந்த செய் முறை விளக்கதை கூறுகிறது. இதன் மூலம் அவர்கள் இந்த இனிய தமிழை கணனியிலே கற்று, அதை கருவேற்றி அவர்களும் சிறந்த வலைப்பதிவாலர்களாகி நமது கூட்டத்திற்கு பலம் சேர்ப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்!

இந்த முதல் வீடியோ துண்டுப்படம், தமிழ் எழுத தேவையான இகலப்பை என்ற உதவி மென்பொருள் தரவிறக்கம், அதன் பயன்பாடு, அதை எப்படி தமிழில் கணனியில் எழுத உபயோகிக்க வேண்டுமென்பதை கூறுகிறது! இதன் மூலம் எப்படி தமிழை கணனியில் எழுதக்கூடுமென்பதை நீங்கள் அறியலாம்! இந்த படத்தை அகண்ட திரையில் கணனியிலே காண இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்! window Media Player, Real Player, VLC player என எந்த மென்பொருளையும் உபயோகிக்கலாம்!

தமிழில் வலைப்பதிவு, எழுதுவது-செய்முறை விளக்கப்படம் - முதல் பகுதி

இந்த வீடியோ துண்டுப்படம், எப்படி தமிழ் எழுத்துக்களை இணைய உலாவியில், அதாவது, Browser, உதாரணம், Internet explorer, எப்படி தமிழ் எழுத்துருக்களை பார்க்கவேண்டுமென்ற ஒரு விளக்கப்படம்! அதாவது நாம் அன்றாடம் எழுதும் மின்னஞ்சல், அதாவது e-mail, போன்றவற்றில் தமிழை எப்படி பார்ப்பது,அதை எப்படி எழுதுவது என்ற ஒரு விளக்கப்படம்!இந்த படத்தை அகண்ட திரையில் கணனியிலே காண இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்! window Media Player, Real Player, VLC player என எந்த மென்பொருளையும் உபயோகிக்கலாம்!

தமிழில் வலைப்பதிவு, எழுதுவது-செய்முறை விளக்கப்படம் - இரண்டாம் பகுதி


இந்த வீடியோ துண்டுப்படம், வலைப்பதிவு திரட்டிகள், அதிலும் தமிழ்மணம், அதன் சேவைகள், மற்றும் கில்லியின் பரிந்துரைகள் என்று அவர்களுக்கு வசதியாக எங்கு சென்று, எப்படி நல்ல தமிழ் படிக்க வேண்டும், என்பதை பற்றிய ஒரு விளக்கப்படம்! இந்த விவரங்கள் எல்லாம் நம்மில் இருக்கும் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் தெரியும், ஆனாலும் நம்மையன்றி நேற்று கூட்டத்திற்கு வந்திருந்த தமிழர்களை போல் பல பேர் உலகமெங்கும் இதில் ஆர்வம் கொண்டு இருக்கின்றனர்! நம்மில் பலர் இதைப் பற்றி ஆர்வமாக சொல்லியும் அவர்களுக்கு கொடுத்திருப்போம். இருந்தாலும், இன்றைய இணையமும், தொழில்நுட்பமும் செய்து கொடுத்த அநேக வசதிகளில் இருக்கும் பல செளகரியங்களிருந்து இது போன்ற விளக்கப்படம் ஒன்றை செய்து காண்பித்தால் நன்றாக இருக்கும் என கருத்தில் கொண்டும், என்னை நேற்று அனுகிய பல தமிழ் கூறும் நண்பர்களின் ஆர்வத்திற்கு உதவும் வகையில் இது என்னுடய ஒரு சிறிய முயற்சி! இதே செய்தி விளக்க படங்களை தமிழில் கணனியை கொண்டு உறவாட வேண்டும் எனக் கருதும் நம் தமிழ் அன்பு நெஞ்சங்களுக்கு இந்த பதிவினை நீங்களும் சுட்டி காட்டலாம்! இந்த படத்தை அகண்ட திரையில் கணனியிலே காண இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்! window Media Player, Real Player, VLC player என எந்த மென்பொருளையும் உபயோகிக்கலாம்!

தமிழில் வலைப்பதிவு, எழுதுவது-செய்முறை விளக்கப்படம் - மூன்றாம் பகுதி

Friday, February 02, 2007

மரத்துக்கு தாலி கட்டிய ஐஸ்வர்யா!

அந்த பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கு, எப்படி கட்றது? அந்த பையனுக்கு மூலம், அது தெரியாம கண்ணாலம் கட்டி இப்ப அப்பனை தூக்கிடுச்சு! இப்படி புலம்பும் மக்களை நிறைய பார்த்திருப்பீங்க! அது மாதிரி ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வா தோஷம் இருக்குன்னு மரத்து தாலி கட்டின கதை தெரியுமா உங்களுக்கு! அப்படி மரத்துக்கு தாலி கட்டினதை எதிர்த்து அவரு மேலே கேஸு போட்டு கோர்ட்டுக்கு இழுத்தடிக்கும் காம்டி காட்சி இப்ப நடந்தேறியிருக்கு!

நம்ம கனவு கன்னி ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே இரண்டு பேரை காதலிச்சு, அம்போன்னு வுட்டுட்டு மூணாவதா அமிதா பச்சன் மகன் அபிஷேக் பச்சனை அமுக்கி இப்ப கல்யாணம் வரை வந்தாச்சு, ஆனாலும் ஒரு சிக்கல் என்னான்னா, அம்மாவுக்கு செவ்வா தோஷமா, அதை போக்கணும்னா, அவங்க முதல்ல வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் அபிஷேக்கை கல்யாணம் பண்ணின அந்த தோஷம் போயிடுமா, அதனாலே தான் சமீபத்திலே, வாராணாசியிலே போய் அரச மரத்துக்கு தாலி கட்டி தோஷம் கழிச்சிட்டு அப்பறமா பெங்களூர் வந்து வாழை மரத்து தாலி கட்டி தோஷம் கழிச்சாங்களாம்!

பீகார் மாநிலத்திலே இருக்கும் 'ஸ்ருதி சிங்'னு ஒரு அம்மணி ஐஸ் மேலேயும் அமிதாப் மேலேயும் ஒரு பொது வழக்கு ஒன்னு போட்டு வச்சிருக்காம், அதாவது ஐஸ்வர்யாக்கு எல்லா ஐஸ்வர்யமும் இருந்தும் செவ்வா கிரகத்து அனுகூலம் ஜாஸ்தி இருக்கிறதாலே அது அவங்களை கட்டிக்கப் போற புருஷனுக்கு ஆகாதுன்னும், இது மாதிரி தோஷம் நீங்கணும்னா, மரத்தையோ இல்லை சாமி சிலையையோ, இல்லை எதாவது ஒரு மிருகத்தையோ முதல்ல கல்யாணம் பண்ணி, அப்பறமா தான் கட்ட போற ஆடவன் கைபிடிச்சா அந்த தோஷம் எல்லாம் நீங்குங்கிற ஐதீகம் வடக்குல அதுவும் இந்த பீகார், உபி மாகாணத்திலே ரொம்பவே பார்த்து செய்வாங்களாம்! ஏன் நம்ம ஊர்லேயும் இது உண்டு என்னா, எனக்கு தெரிஞ்சு 48 வெள்ளிக்கிழமை செவ்வா புள்ளையாரு கோவிலுக்கு விளக்கு போடு , எல்லாம் சரியாயிடுங்கிற கதை வரைக்கும் தான் கேட்டிருக்கேன், இந்த அரசமரம், வாழை மர சங்கதி பாரதிராஜா பட ஐதீக சங்கதி மாதிரி இருக்கு!

இதுக்கு தான் அமிதாப் குடும்பம் சகிதமா காசி போயி இருந்திருக்காங்க, மொத்திலே தோஷம் கழிக்க! அந்த கேஸ் போட்ட அம்முணி என்னா சொல்லிருக்குன்னா, இது தீண்டாமையை உருவாக்குது! அப்பறம் மக்களிடையே இந்த மூட நம்பிக்கை மேற்கொண்டு வழுப்பெற, இந்த மாதிரி புகழ் பெற்ற நட்சத்திரங்களே முன்மாதிரியா இருக்கக்கூடாதுன்னு சொல்லியும், அப்பறம் பீகார்ல பாட்னாவிலே இருக்கக்கூடிய ஷிட்லா கோயில், ஃபாட்வாங்கிற ஊர்ல இருக்கிற பைகதிபூர் கோவில் பிறகு தியோகர்ங்கிற ஊர்ல இருக்கிற சிவா கோவில், இங்கெல்லாம் இந்த செவ்வா தோஷ கல்யாணம் நடத்துறதை தடை செய்யனும்னு இந்த அம்முணி கேஸ் போட்டிருக்கு!

அது சரி இப்ப நம்ம ஊர்ங்கள்ல இந்த செவ்வா தோஷக் கதை எப்படி இருக்கு? நான் ஊரை விட்டு வந்து ஒரு முப்பது வருஷமாச்சு, இது மாதிரி செவ்வா தோஷத்தாலே கன்னி கழியாம பொண்ணுங்க இன்னும் அவஸ்தை படறாங்களான்னு கொஞ்சம் நம்ம ஊர்ல இருக்கவங்க சொல்லுங்க! அதுவும் இந்த கம்ப்யூட்டர் யுகத்திலே இது எல்லாம் தேவையான்னு தோணுது, இருந்தாலும் ஜோதிடத்திலே நம்பிக்கை வைக்கும் வலைப்பதிவர்கள் நம்ம கிட்ட அதிகம், ஏற்கனவே எனக்கு புது கிரகம் புடிச்சப்பவே வந்து கலாச்சுட்டு போனவங்க இருக்காங்க, இந்த விஷயத்தையும் கொஞ்சம் பீராஞ்சி தான் சொல்லுங்களேன் எப்படின்னு!