Wednesday, December 14, 2005

எனை ஆண்ட அரிதாரம்- ஆறாம் பகுதி

இஞ்சினியரிங் காலேஜ் போய் சேர்ந்த அனுபவம் ஒரு அலாதியானது. அப்ப நாங்க படிச்சப்ப +2 எல்லாம் கிடையாது. எஸ்.எஸ்.எல்.சி படிப்பு ஸ்கூல்ல, அப்புறம் பியூசி(பிரி யுனிவர்சிட்டி கோர்ஸ்) படிக்க காலேஜ் போயாகனும், அதோட பிஎஸ்ஸி, பிக்காம், பிஏ ன்னு ஆர்ட்ஸ் & ஸயின்ஸ் படிப்புத்தான். பியூசி சேரும் போது அதையும் சேர்த்து கொடுத்துடுவாங்க. அப்ப இஞ்சினியரிங் போய் படிக்கிறதெல்லாம் அவ்வளவு ஈர்ப்பு கிடையாது, ஆர்ட்ஸ், அதுவும் பிகாம் நல்ல கோர்ஸ்னு அதுல தான் போய் சேருவாங்கே பசங்க. அப்ப இருந்ததும் தமிழ்நாடு முழுக்க ஒரு ஒன்பது இஞ்சினியரிங் காலேஜ் தான். மொத்தம் எடுக்கிறது ஒரு 1000 பேரு தான், அது மாதிரி 1000 பேரு தான் ஒவ்வொரு வருஷமும் படிச்சு வெளிய வருவாங்க, இப்ப 50,000 பேரு வருஷா வருஷம் வெளியில வரதா கேள்வி படுறேன். இப்பமாதிரி 12 வருஷம் வரை ஸ்கூல்லேயே குப்பக் கொட்டவேணாம். பதினொரு வருஷம் ஸ்கூல்ல இருக்கனும். நானும் எஸ்.எஸ்.எஸ்.சி படிச்சுட்டு அடுத்ததா காலேஜ் போலாமுன்னு தான் ஒரே ஆசை. அதாவது எல்லாரும் திருச்சியில மெயின்கார்ட்கேட் போய் தான் படிக்க ஆசைப்படுவாங்க, புதிய வளனார் கலைக்கல்லூரி, அதாவது சென்ட் ஜோசப் காலேஜ் ரொம்ப பேமஸ், அதோட சேர்ந்து ஹை ஸ்கூல்லும் இருந்தது, பக்கத்தில பிஷப் ஹீபர் ஸ்கூல், நேஷனல், ஈ ஆர் ஹைஸ்கூல் எல்லாம் இருந்தது. அப்புறம் பொன்னுங்க படிக்கிற ஹோலி கிராஸ், அப்புறம் சுத்து பக்கத்தில நிறைய தியேட்டர்ஸ், போதாதா இதெல்லாம் சுத்தி ஜாலியா பொழுத போக்கிறதுக்கு. 1973ல் நடந்த கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கோ, ஸ்ட்ரைக்னா அடிதடின்னு ஆக்ஷன் ஆகிற இடம். ஆனா நம்ம எஸ்.எஸ்.எல்.சி வரை படிச்சது ஜங்ஷன் பக்கத்தில இருந்த ஆர்ஸி ஸ்கூல். மிஞ்சி போனா, அப்ப கட்டிக்கிட்டு இருந்த கலையரங்கம் தியேட்டர் பார்க்கற்தோட சரி. நான் ஸ்கூல் முடிச்ச பின்னாடிதான் அதை திறந்தாங்க. அதனாலே, அப்புறம் நமக்கு இனி மெயின்கார்ட்கேட் போயி காலேஜ் படிக்கப் போறோம்னு ஒரே ஜாலி. சென்ட் ஜோசப்ல பாரம் வாங்கி பிஎஸ்சி அட்மிசன் எல்லாம் வாங்கியாச்சு. ஆனா எங்கம்மா நீ மெயின்கார்ட்கேட் போயி படிச்சது போதும், படிச்சா வேலை உடனே கிடைக்கிற மாதிரி தொழிற்கல்விப் படின்னு அரியமங்கலத்துல இருக்கிற ஷேசஷாயி பாலிடெக்னிக்ல போய் சேர்த்து விட்டுட்டாங்க. போச்சு, மெயின்கார்ட்கேட் போயி படிக்கனும்னுங்கிற என் ஆசையில மண்ணு விழுந்து போச்சு. அதுக்கு காரணமும் உண்டு. எங்க பெரியப்பாரு புள்ளங்கெள்ளாம் அந்த மெயின்கார்ட்கேட் படிக்கப் போயி உருப்படமா போச்சுங்க, அதுனால் நானும் அப்படியாகிடுவேனு பயம். எனக்கும் அந்த ஆசை வந்ததுக்கு காரணம் உண்டு, ஏன்னா என்னுடய பால்ய சினேகதன் தனபாலு பிஷப்ஹீபர்ல படிச்சப்ப அவன் சுத்தின மாதிரி நம்மலும் சுத்தனும்னு ஆசை. ஊருப்பட்ட பசங்க இப்படி காலையில பஸ்ச புடிச்சு, படிக்க மெயின்கார்ட்கேட் பக்கம் படை எடுக்கிறப்ப, நம்ம கிழக்கால அரியமங்கலத்துக்கு மாங்கு மாங்குன்னு சைக்கிள மிதிச்சுக்கிட்டு பாலிடெக்னிக்கு போகவேண்டியிருக்கும்.

அப்படி சேர்ந்து படிச்சப்பதான், ஒரு மூணு வருஷம் படிச்ச வேலை நிச்சயம் உண்டு, பக்கத்தில திருவெறம்பூர்ல இருக்கிற பாய்லர் பிலான்ட்ல, அதாங்க BHELலன்னு படிக்க போயாச்சு. அது முதல் வருஷம் கோர்ஸ் பேரு பிடிசி (பிரி டெக்னிக்கல் கோர்ஸ்), அப்ப இந்த பியூசி மற்றும் பிடிசி ரெண்டுமே படிச்சிருந்தா இஞ்சினியரிங் காலேஜ் போய் சேர்லாம். ஏதோ மூணு வருஷம் முழுசா முடிச்சிட்டு வேலைக்கு போவோம்னு தான் சேர்ந்தேன், அப்புறம் முத வருஷம் முடிச்சோன, சரி நம்மலும் இஞ்சினியரிங் சேருவோம்னு அப்ளிகேஷன் போட்டது தான், நமக்கு கோயம்புத்தூர்ல சீட்டு கிடைச்சு சேர போகும் படி ஆயிடுச்சு, உள்ளூர்ல ஆர்.இ.சி காலேஜ் இருந்தும். பையனை எப்படி தனியா அனுப்பறதுன்னு, துணைக்கு எங்க மாமனையும் புடிச்சு சேர்த்து அனுப்பி வச்சாங்க எங்கம்மா. ராத்திரி பஸ் புடிச்சு, விடியங்காத்தல 4 மணிக்கு கோயம்புத்தூர் வந்து இறங்கியாச்சு. சும்மா சிலு சிலுன்னு காத்து, அது மாதிரி ஒரு ஊதக்காத்தை நான் அனுபவிச்சதே இல்லை. பிறகு காலையில டவுண் பஸ்சை புடிச்சு பீளமேடு வந்தாச்சு. அப்ப எங்க சொந்த காரரு ஒருத்தரு டெலிபோன் எக்சேஞ்சல வேலப் பார்த்துகிட்டு நான் படிக்கப்போற இஞ்சினிரியங் காலேஜ்ல பார்ட் டைம்ல படிச்சிகிட்டு இருந்தாரு. அவரு ரூம்ல தங்கி குளிச்சிட்டு காலையில போயி அட்மிஷன் வாங்க போனோம், அந்த குளிர்ல குளிச்சு, கிளம்பி போனதை இப்பவும் மறக்க முடியாது. ஏன் இதைல்லாம் சொல்றேன்னா, அந்த காலக்கட்டத்தில நான் ரசிச்ச விஷயங்கள் நிறைய இருக்கு. அதேப்போல என்னுடய நாடக நடிப்புகள்ள மிகுந்த தாக்கம் அந்த காலக் கட்டத்தில வந்த சில திரைப்படங்கள். அதில தான் இன்னெக்கும் நாம் கொண்டாக்கிட்டு இருக்கிற நல்ல படங்கள், பாடல்கள், இசை, டைரக்டர்கள்னு வந்த காலகட்டங்கள்.

அந்த காலக்கட்டங்கள்னு நான் சொல்றது 1978, 79 கள், அப்பதான் ரஜினிங்கிற காந்தம் கொஞ்ச கொஞ்சமா புயலாயிகிட்டு இருந்த நேரம். வில்லன்ல்ருந்து புரமோஷன் ஆயி பைரவியில ஹீரோவாயிருந்த நேரம். பாரதிராஜா, எங்க கிராமத்து படம் தான் இவனுக்கு எடுக்கத்தெரியும்னு முத்திரை குத்திருவாங்களோன்னு சிகப்பு ரோஜக்களை எடுத்து விட்ட நேரம். பிறகு அதிலேயும் கிராம உபக்கதையை தான் நல்லா காட்டிருந்தாரு, அதுலாதான் அவரு டச் இருக்கு, மத்ததெல்லாம் இங்கிலீஷ் பட காப்பி அப்படின்னு சரியா ஒத்துக்காததால திரும்ப கிராமம் போயி புதிய வார்ப்புகள் எடுத்திருந்த நேரம். பாலசந்தர் பெண்களை மையமா வச்சி வரிசையா அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல் நிஜமாகிறதுன்னு அரங்கேற்ற தொடக்கத்தை தொடர்ந்த நேரம் அப்பறம் எல்லாரும் வெளி நாடு போய் படம் பிடிக்க போட்டி போட்டு, நினைத்தாலே இனிக்கும், ப்ரியான்னு வந்திருந்த நேரம். ஸ்ரீதர் மாதிரி ஆளுங்க புதுசா ஆடிக்கிட்டு இருந்த ரஜினி கமல் ஆடுபுலி ஆட்டத்தை பார்த்துட்டு இளமை சொட்ட இளமை உஞ்சலாடுகிறதுன்னு எடுத்திட்டு, பிறகு அவர் பானிலே அழகை ஆராதிக்க போயிருந்த நேரம். இளையராஜா தான் அந்த காலக்கட்டத்தில வந்த படங்கள் அத்தனைக்கும் ம்யூசிக் போட்டு அசத்திக்கிட்டு இருந்தப்ப, சிவாஜி படங்களூம் அவரு ம்யூசிக்ல பழைய டிஎம்ஸ்ச பாடவச்சி அற்புதம்மா நான் வாழவப்பேன், தீபம், தியாகம், கவரிமான், பூந்தளிர்ன்னு பாட்டுகள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த நேரம். அப்ப வந்தாரய்யா நம்ம மகேந்திரன், அழகா விஷூவலா கதை சொல்ல. பாலு மகேந்திராவுக்கும் அவர் தானே வழிகாட்டி அழியாத கோலங்கள்னு தொடக்கத்துக்கு, ஏற்கனவே கன்னடத்தில கமல்ஹாசன வச்சி கோகிலான்னு கருப்பு வெள்ளை படம் எடுத்திருந்தாலும்.


இப்படி பார்க்கிற பொழுது அந்த காலகட்டத்தில முதல்ல நான் சொல்ல வேண்டியது மகேந்திரனுடய திரைப்படங்கள் மற்றும் மகேந்திரனும், ஏன்னா என்னுடய வாழ்க்கையில ஒரு திருப்புமுனை வரவேண்டியது அவராலே. எப்படின்னு கேட்கிறீங்களா, அதத்தானே விவரமா சொல்லப்போறேன். அவருடய படங்கள்னு பார்க்கிற பொழுது, மறக்கமுடியாத படம், முள்ளும் மலரும். பாலசந்தர் ரஜினிங்கிற ஒரு வைரத்த கண்டு பிடிச்சாருன்னா, அதை அழகா பட்டைத்தீட்டி ஜொலிக்க வச்சது நம்ம மகேந்திரன் தான். ஜானி, அடுத்த ஒரு அழுத்தமான திரைப்படம். அந்த நளினமான காதல், பாடகியா வர ஸ்ரீதேவியும், ரஜினியும் ஒருத்தொருத்தர் மயங்கற அழகு, அது போன்ற காதலை இவ்வளவு விஷுவலா இன்னும் யாரும் சொல்லலைன்னு தான் எனக்கு தோணுது. அது மாதிரி ஒரு முரட்டுத்தனமான காளியை மகேந்திரன் காமிச்ச மாதிரி யாரும் காமிக்கல்லை. எல்லாமே என் தங்கச்சி தான் அப்படின்னு இருந்த ரஜினி, கடைசில ஊரே திரண்டு வந்து சரத் பாபுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது, கையை விட்டுட்டு ஷோபா போனதும் ஒரு வெறுப்போட பார்க்கிற பார்வையும் அப்புறம் அதே தங்கச்சி திரும்பி ஓடி வந்து அண்ணன் தோள்ல சாய்ந்து தேம்பி தேம்பி அழுகிறப்ப, அப்படியே ஆதங்கமா கட்டிப்பிடிச்சு கர்வத்தோட பேசர வசனம், இன்னெக்கும் அத்தனை விஷுவலா கொடுக்க யாருமில்லம்பேன். மனிரத்தனம் மாதிரி எத்தனையோ டைரக்டர்ஸ்ங்க வந்தாலும் அப்ப என் மனசில பதிஞ்ச படங்களை விஷுவலா அள்ளி கொடுத்தவங்கள்ள முதல்ல மகேந்திரன் தான். அப்புறம் வேணுன்னா அந்த வரிசையில பாலு மகேந்த்ராவையும், பாரதிராஜாவையும் வச்சுக்கலாம்.

இதேப்போன்ற விஷுவல் ட்ரீட்ன்னு சொல்லலாம் உதிரிபூக்களை. கடைசியில ஊருக்கு முன்னாடி கெட்டவன் ஒருத்தன் இருக்கக் கூடாதுன்னு விஜயன் அந்த தண்ணியில இறங்கி குழந்தைங்களை அனாதையாக்கி உதிரியாக்கி போற காட்சி ஒரு அற்புதம் அது ஒரு ட்ரீட். இதெல்லாம் பாத்து மயங்கி எப்படியும், ஏதாவது ஒரு பாத்திரத்தில அவரு படம் எதுலயாவது ஒன்னுல்ல நடிக்கனும்னு நான் அலைஞ்சு நாட்கள் நிறைய. அதுக்காக சென்னையும், கோவைன்னு சுத்தின நாட்கள் உண்டு. அப்ப ஏற்பட்ட அனுபவங்களை அடுத்த பதிவுகள்ள சொல்றேன்.

Sunday, December 11, 2005

எனை ஆண்ட அரிதாரம்- ஐந்தாம் பகுதி

நாடகம் போடறது ஒரு கூட்டு முயற்சி. இதில எனக்கு அதிகமா உதவனது என்னுடய குளோஸ் பிரண்டு மனோகர், அப்புறம் ஜெயக்குமார், பிறகு வந்த வருடங்கள்ள திருவேங்கடம். இதுல ஜெயக்குமார், நானும் முத வருஷத்திலருங்தே தோஸ்த்து. அதாவது மத்தியானம் சோத்தை தின்னுட்டு பெரும்பாலும் பஸ் புடிச்சு டவுண் ஹால்லு போயி, சினிமா பார்க்க நாங்க ரெண்டு பேரும் போயிடுவோம்.முக்காவாசி படங்கள் மலையாளப் படங்கள், அதில்லயும் ஜெயபாரதி நடிச்ச படங்கள் அதிகம். 'இதோ இவிட வர', அப்புறம் பரதன் இயக்கிய நிறைய படங்கள். சாம்ப்ளுக்கு ஒரு போஸ்டர் பாருங்க இங்கே, படம் பேரு ரதிநிர்வேதம்னு நினைக்கிறேன், அதில வர ஒரு பாட்டு இப்பவும் மனசுல இருக்கு, 'குஞ்சு மனசில் சஞ்சரமென்னும் சாயம் பூட்டி' அப்படின்னு தொடங்கற பாட்டு, இது அந்த படத்தோட போஸ்டர் தான்னு நினைக்கிறேன். இந்த படத்தில விடல பையன் எப்படி காமம் கொண்டு தன்னைவிட மூத்த பக்கத்து வீட்டு பெண்ணை அடைய முயற்சிக்கிறான்ங்கிறது ரொம்ப அழகா படத்தை பரதன் பண்ணியிருப்பாரு தெரியுமா? அப்புறம் ப்ரதாப் போத்தன் நடிச்ச 'தகர' ன்னு ஒரு படம், அதுக்கூட அப்புறம் தமிழ்ல கவுண்டமணி, ரோஜாரமணி பையன் நடிச்சு வந்துச்சுன்னு நினைக்கிறேன். அப்ப வந்த மலையாள படங்கள், கொஞ்சம் கிக்காவும் இருக்கும், கதைகளும் நல்லா இருக்கும். கேரளாவில்ல வர அத்தனை படமும் கோயம்புத்தூருக்கு வரும். விரும்பி அத்தனை படங்களையும் பார்க்கிறதுண்டு. அப்பதான் சீமா நடிச்சு வந்த 'அவளோட ராவுகள்' படம் தமிழ்நாடு முழுக்க பிச்சிக்கிட்டு போச்சு. அப்ப நம்மக்கு சீமாவை புடிக்கும், எது புடிக்குதோ இல்லையோ, அந்த உதடு புடிக்கும், அதோட அழகு ஒரு தனி அழகு தான்.

இப்படி ஜாலியா போயிட்டுருந்தப்ப தான் அந்த முதவருஷ நாடகம் போட்டோம். நாடகம்னு பாத்தா, எந்த பிரமாதமம் இல்ல, ஆனா கதை சொன்ன விதம், விறு விறுப்பு இது தான் மக்களை கட்டி போடவச்சுச்சு. அப்பெல்லாம் சீன்களுக்கு இடையில அடுத்த சீன் ஆரம்பிக்கிற வரை சபா நாடகங்கள்னா ஆர்மோனியம் வாசிப்பாங்க, ஏன்னா, சீன் செட்டிங் செஞ்சாவனுமே, அதுக்கு டைம் எடுக்கும். நாங்க என்ன பண்ணுனோம், இன்ட்ர்லுயூட் மியூசிக்குன்னு, பாடல்கள் வரது, அப்புறம் தீம் மியூசிக்னு ரெக்கார்டிங் பண்ணி அதப்போடுவோம். பின்னாடி வருடங்களில் தத்ரூபமாக sound effect வரணும்னு, நடு ஜாமத்தில ஹைவேஸ்ல போயி லாரிங்க ஒடிறப்ப தூரத்தில வர அந்த ரோட்ல டயர் உராயம் போது வெளிப்படும் சப்தம், பிறகு ஆறு மணிக்கு அந்த ஆகாஸ வாணில வர அந்த ஆரம்ப மியூசிக்னு, நிறைய கஷ்டபட்டுருக்கோம். எங்க ஹாஸ்டல்ல தனியா மியூசிக் பிளே பண்ற ரூம் இருக்கு, அப்புறம் அங்கிருந்து பி.ஏ. சிஸ்டத்தில காலேஜ் முழுக்க பிராட்காஸ்ட் பண்ணுவாங்க. நாங்க ரெக்கார்ட் ரூம்மு சாவியை வாங்கி வச்சுக்கிட்டு ராத்திரியிலே போயி ரெக்கார்ட் பண்ணுவோம். அப்ப டேப் ரெக்கார்டர் புதுசா வந்த நேரம். இப்ப மாதிரி டேப், சிடி எல்லாம் கிடயாது. எல்லாம் எல் பி ரெக்கார்ட்ஸ், கிராமபோன் தான். அதனால நிறைய ராத்திரிகள் இந்த ரெக்கார்டிங்ல கழிஞ்சிருக்கு. ராஜப்பார்வையில வர தீம் மியூசிக், அப்புறம் ஹிந்தி பட மியூசிக்னு எல்லாம் ரிக்கார்ட் பண்ணுவோம். அந்த தீம் மியூசிக்கதான் கேட்டு பாருங்களேன். பார்த்து பார்த்து சீன்களுக்கு தகுந்த மாதிரி Background music ரெக்கார்ட் பண்ணி வச்சுக்குவோம், அத sequence சா ரெக்கார்ட் பண்ணி எடுத்துக்குவோம். மனோகரன் அதில்ல கில்லாடி, எல்லா சீன்களுக்கும் தகுந்த மாதிரி, சோகமா இருக்கட்டும், சிரிப்பா இருக்கட்டும், காதல் காட்சிகளா இருக்கட்டும், பாட்டுகளை கரெக்கடா கண்டுபிடிச்சு, அதெல்ல இருந்த interludes ஐ, கரெக்டா எடுத்த ரெக்கார்ட் பண்ற தில கில்லாடி. அது மேடையில சீன்களை ரொம்ப effect வா காண்பிக்கும். அது போலதான் நாடகம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலேயே திரைப்படங்கள்ல வர title sequence ஐ போல அழகா நாடக ஆரம்ப sequenceல, வெறும் ஆர்க் லைட்ஸ் வச்சே நடிப்பவர்கள் பேரு, கதை, வசன்ம், டைரக்ஷன்னு கலர் ஜிகினா காட்டி இந்த் மியூசிக் interlude ட போட்டு காண்பிச்சோன, நாடகத்தோட டெம்போவையே அது தூக்கி நிறுத்திடும். எங்க சீனியர்ஸ்ம் என்னடா புதுசா இருக்கேன்னு ரொம்ப ஆர்வமா பார்த்தாங்க. அது தான் எங்க வெற்றி. இது மாதிரி நாடகத்தையே சினிமாத்தனமா காட்டினோம். அப்புறம் எங்க கடைசி வருஷம் வரை இந்த கூட்டணி விலகவே இல்லை. அடுத்த அடுத்த வருஷங்கள்ல வேற வேற ஆளுங்க கதை வசனம் எழுத ஆரம்பிச்சோம். ஆனா அதே உழைப்பு, ஆகையால நாடகங்களை வெளிக் காலேஜ்க்கு எடுத்துட்டு போனாலும் நல்ல மரியாதை, ஊக்கம், பாராட்டுக்கள். அப்ப எங்க காலேஜ் நாடகங்களுக்கு ஒரு தனிக்கூட்டமே இருந்தது. ஒவ்வொரு காலேஜ் நாடக செக்ரட்ரியும் அவங்க காலேஜ்ல நடக்கிற ஏதாவது போட்டியுல கட்டாயப்படுத்தி, எங்களை கலந்துக்க சொல்வாங்க. அதே மாதிரி சிஐடி நாடகம்னா அவங்க காலேஜ்ல போஸ்டர்லாம் அடிச்சி சும்மாவே எங்களுக்கு பப்ளிசிட்டி.

இப்படி போயிட்டுருந்தப்ப நடந்த காதல் கதையைக் கேளுங்க. எங்க கூட படிச்ச சினேகதன் நடராஜன்னு, ரொம்ப காலம் முன்னமே டெல்லியில போயி அவன் அப்பா, அம்மா செட்டிலாயிட்டாங்க. இஞ்சினியரிங் படிக்க எங்க காலேஜ்ல வந்து சேர்ந்தான். கொஞ்சம் கொஞ்சந்தான் தமிழ் பேசுவான், சின்ன குழந்தங்க மழலை பேசற மாதிரி. ஆனா ஆங்கிலம் நல்லா பேசுவான். சரி இன்கிலீஷ்ல announce பண்ண கொள்ள வைக்க, அப்புறம் பேக்ஸ்டேஜ் டைரக்ஷன் பண்ண வச்சிருந்தோம். இப்படி வெளிக்காலேஜ்ங்கள்ள நாடகம் போட்டப்ப, ஒரு தடவை women's ploytechnicல நாடகம் போட போனோம், அப்ப இவனையும் கூட்டிட்டு போயிருந்தோம்.அப்ப அந்த காலேஜ் dramatic secretary ஒருத்தி எங்கள விழுந்து விழுந்து கவனிச்சிக்கிட்டா. நாடகமும் நல்லா வந்துச்சு, பெண்கள் மத்தியில நல்ல வரவேற்பு, அந்த பிரின்ஸ்பல் மேடம், ரொம்பத்தான் இழஞ்சு, நல்லா நடிச்சீங்க தம்பின்னுட்டு போச்சு. அப்புறம் அது முடிஞ்சு, ஒரு இரண்டு மாசம் கழிச்சு, நம்ம நடராஜன் நம்ம திருவேங்கடத்துக்கிட்ட வந்து , மச்சி உன் வாட்டர் பாட்ல குடுறா, நானும், கீழ இருக்கிற பசங்களும் (நம்ம அம்பேத்கார் கோஷ்டி) ஊட்டி போறோம், போயிட்டு வந்து தரேன்னான். என்னாட, மவனே நீ அந்த பசங்களோட எல்லாம் சுத்தமாட்டியே, நிஜமாவா போறே அப்படின்னு கேட்டுட்டு அவனும் கொடுத்து அனுப்பிச்சிட்டான். அப்புறம் ஒரு நாலு அஞ்சு மாசம் ஓடி இருக்கும். ஒரு நாளு அவன் ரூம்ல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கிறப்ப, அவன் என்னமோ எடுக்கிறேன்னு பெட்டிய தொறந்தப்ப, ஒரு அழுக்கு சட்டை அப்படியே பெட்டியில கிடந்துச்சு, என்னா மாமே துணி துவைக்க மாட்டியா, அப்படியே போட்டு வச்சுக்கிறீயே, என்னா விஷயம், அப்படின்னப்போ, பட்னு பொட்டிய மூடிட்டான். என்னடா, ரவுசு வுட்ற, பொட்டிய காமிடன்னு பாத்தப்ப, கதை கந்தலா இருந்துச்சி. அந்த சட்டையில குங்குமக் கரை ஒட்டிக்கிட்டு இருந்தது. என்னாடா கதைன்னு கேட்டப்ப தான் நம்ம நடராஜன் கொஞ்ச கொஞ்சமா எடுத்து விட்டான். 'ஆமாண்டா, அந்த செக்ரட்ரி மேல லவ்வு மாமே, அடிக்கடி நாங்க பாதுக்கிறோம். அன்னக்கி உன்கிட்ட தண்ணி பாட்டில்லு வாங்கிட்டு போனதுக்கூட நாங்க ரெண்டு பேரு ஊட்டி போவதான்னு, அப்படி போயிருந்தப்ப அது என் மேல தோள்பட்டையில சாய்ஞ்சு முகம் வச்சிகிட்டு இருந்துச்சு, அதான் இந்த குங்குமக்கரை, அத ஞாபகமா அப்படியே வச்சிருக்கேன்னு போட்டான்யா, ஒரு போடு! என்ன மாயம் பண்ணான்னு தெரில்ல அந்த பொண்ணு இவன் பின்னாடி அலஞ்சிகிட்டு இருந்தா. அப்புறம் பாத்தீங்கன்னா, அந்த சட்டையை அவன் நாங்க காலேஜ் வுட்டு படிச்சு முடிச்சு வர வரைக்கும் போடவே இல்லை, அப்படியே தான் பொட்டிக்குள்ளேயே வச்சிருந்தான். அப்புறம் அந்த டாவு continue பண்ணான்னான்னு நம்க்குத் தெரியாது. சும்மா எங்க நாடக கும்பலோட சுத்தன பயலுக்கு பாருடா மச்சத்தைன்னு அவனை காலேஜ்ல இருந்த வரைக்கும் சத்தாச்சுகிட்டுத்தான் இருந்தோம்.

இப்படி போயிகிட்டு இருந்தப்ப, அடுத்த வருஷத்துக்கான நாடகப்போட்டி வந்தப்ப, நம்ம முருகவேள் நல்ல ஒரு கதை எழுதி கொண்டு வந்தான். அதை ரொம்ப பிரமாதமா செய்யலாமுன்னு, ரொம்ப கஷ்டப் பட்டு செஞ்சு ரொம்ப நல்லாவே அரங்கேற்றினோம். அத ஜி சி டி யில நடந்த cofleuenceங்கிற அனத்து காலேஜ் நாடகப் போட்டில்ல போட்டு சிறந்த நாடகம்னு பரிசை தட்டிடு வந்தோம். அப்ப எங்க கூட சேர்ந்து போட்ட சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் கடைசியில ரகளை பண்ணி ஜட்ஜ்ங்களை எல்லாம் திட்டி ஒரே அமர்க்களமா போயிடுச்சு. அப்படி திட்டின அந்த சட்டக்கல்லூரி மாணவன் பிற்காலத்தில தமிழ் சினிமா துறையில ஒரு பெரிய நடிகராக வலம் வந்தார், 'தண்ணீர் தண்ணீர்'ங்கிற படத்தில அறிமுகமானாரு. இப்ப உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன் அப்படி தெரியலேன்னா யாருன்னு அடுத்த பதிவில சொல்றேன்!

Thursday, December 08, 2005

எனை ஆண்ட அரிதாரம்- நான்காம் பகுதி

தனி ஆவர்த்தனமா நடிப்புதிறமையை வெளிப்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் கிடைச்சாலும், சிறந்த நாடகங்கள் எழுதி, இயக்கி அதை பெரிய வெற்றிகரமா செஞ்சு காமிக்கிறதல நமக்கு அதிக ஆர்வம் இருந்துச்சு. இப்படித்தான், கதை எழுதுனுங்கிறதல ஆர்வம் இருந்ததுனால சின்ன சின்ன கதைகள் கல்லூரி மேகஸின்களுக்காக எழுதி பப்ளிஸ் பண்ணினேன். அப்பதான் என்னுடய இஞ்சினியரிங் முதல் வருஷச கடைசியில நடந்த நாடகப்போட்டிக்கு, ஒரு நாடகம் எழுதுனேன். நாடகம் பேரு 'நிறைவேறா ஆசைகள்'. நாடகத்துக்கு ஸ்கிர்ப்ட் ரெடி, ஆனா நடிகர்களை தேடனுமே. அப்பத்தான், அந்த முதல்ல நடந்தப் போட்டில்ல சிவாஜி வசனம் பேசனவங்களை எல்லாம் செலக்ட் பண்ணினேன். ரொம்ப வீரதீரமா பேசன கணேசக்கு ஹீரோயின் கேரக்டர். அப்பறம் நம்ம கதிரேசன், முருகவேல், மனோகர், கவந்தப்பாடி, அப்படின்னு எல்லாரையும் புடிச்சுப்போட்டேன். முதல்ல நடிக்க கும்பல் சேர்க்கறது ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. எவனும் நடிக்க வரமாட்டேனுட்டானுங்க, ஏன்னா சீனியர்ங்க கத்தி மேடையை விட்டு இறக்கி விட்டுட்டதால, திரும்ப ஏற பயம். பொறவு அவெங்களை கெஞ்சி, கூத்தாடி சேர்க்க வேண்டியதா போச்சு. ரொம்ப கஷ்டப்பட்டு குருப்பு சேர்த்தாச்சு. முத வருஷம் பாருங்க, இந்த நாடக குருப்பு சேர்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு, ஆனா, கடைசியில பார்க்கணுமே, பூர காலேஜ்யயும் மூக்கல கை வக்க வச்சுட்டோம்.

கதை என்னன்னு கேட்டீங்கன்னா, சும்மா ஜிகினா கதை தான். ஹீரோ எப்படி வாழ்க்கையில சீக்கிரமா முன்னுக்கு வரதுன்னு யோசிக்கிறப்ப, அவனுக்கு ரெண்டு வழி தோணுது, ஒன்னு சினிமா, இல்ல அரசியல், அவன் சினிமாவை நாடி, தன்னுடய ப்ரண்டு ஒருத்தனோட மெட்ராஸ் புறப்பட்டு வரான், சினிமா சான்ஸ் தேடி. அவனுக்கு ஏற்கனவே ஒரு காதலி ஊர்ல இருக்கா. மெட்ராஸ் பாஸை பேசி காமடி சீனு வக்கனுமுன்னு, அவங்க ரிக்ஷாக்காரனோட சந்திக்கிறமாதிரி எல்லாம் காட்சி வச்சாச்சு. யாருடா மெட்ராஸ்காரன் பாஸை பேசி நடிக்கிறதுன்னு பார்த்தப்ப, என் குளோஸ் தோஸ்த்து மனோகரன், அதான் மெட்ராஸ் B பார்ட்டி, மாட்னான், சும்மா பிரமாதாமா காமடி பண்ணி அசத்திப்புட்டான். பிறகு சினிமா சான்ஸ் கேட்டு டைரக்டர்ஸ் எல்லாம் சந்திச்சு, நடிச்சுக்காட்டி, சான்ஸ் புடிக்கிற மாதிரி எல்லாம் காட்சிகள், ஏன்னா, சும்மா காதலன், காதலியோட வாஞ்சையா பேசற மாதிரி எல்லாம் சீன் வச்சு, அப்பதானே ஹீரோக்கு வசனம் நிறையா பேச சந்தர்ப்பம் வரும், அப்புறம் கதையில ஒரு டுவிஸ்ட் வரனும்னு, டைரக்டர் நடிக்க சான்ஸ் கூட வந்த நண்பனுக்கு கொடுக்கிறாரு. அதனால ஹீரோ ரொம்ப ஒடிஞ்சு போயிடுவாரு. அந்த நேரத்தில ஹீரோயினும் ஹீரோவைத் தேடி மெட்ராஸ் வந்துடுவா. பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க சான்ஸ் தேடுவாங்க, அப்ப ஹீரோயினுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அவளும் நடிச்சு பெரிய நடிகை ஆயிடுவா. தன்னுடய நண்பனும் பெரிய ஹீரோவா சினிமால நடிப்பான் ஆனா நம்ம நாடக ஹீரோவுக்குத்தான் சான்ஸ் கிடைக்காம அல்லாடிக்கிடிட்டு இருப்பான். அப்பத்தான் தன் காதலியும், தன் நண்பனும் ஒரு சினிமா படத்தில ஹீரோ, ஹீரோயின் ரோல்ல நடிக்கறப்ப, அவங்க நெருங்கி நடிக்கறத பார்த்து வீணா நம்ம ஹீரோ சந்தேகப்படுவாரு, ஆனா நண்பனும், காதலியும் உண்மையாத்தான் இருப்பாங்க, நம்ம ஹீரோவுக்கு ஒழுங்கா சான்ஸ் கிடைக்கிலேயேன்னு உண்மையிலேயே வருத்தப்படுவாங்க, அவன் தான் சான்ஸ் தேடி மெட்ராஸ் வந்தான், ஆனா விதி நம்மல நடிகன் நடிகையாக்கிடுச்சேன்னு நொந்து பேசிக்கிட்டு இருப்பாங்க. சினிமாவல வர ஒரு காதல் காட்சிக்காக, அவங்க ரெண்டு பேரும் காதல் ரசம் சொட்ட பேசிக்கிட்டு ரிகர்சல் பண்ணிக்கிட்டு இருக்கிறதை நம்ம ஹீரோ பாத்து வீணா சந்தேகப்பட்டு ஹீரோயினிய கத்தியில குத்தி கொன்னுடுவாரு. பிறகு நண்பன் நடந்ததை விரிவா சொல்லி ஹீரோவோட தவற உணர்த்துறது, அப்புறம் தான் செஞ்சதை நினச்சு ஹீரா வருந்தி அழ, உருக்கமா வசனத்தோட காட்சி அமைப்புகள் வச்சி சும்மா ஜோரா கதை சொல்லியாச்சு.

இதுல விசேஷம் என்னான்னா, இந்த நாடகத்தில நிறைய சிறப்பு அம்சங்கள் இருந்தது தான். முதல்ல, ஹீரோயின் ரோல்ல நடிச்ச நம்ம கணேசனைப் பத்தி இங்க சொல்லி ஆகாணும். நான் படிச்சப்ப எங்க காலேஜ் கோ-எட் எல்லாம் கிடையாது. அதனால பொட்டப்புள்ள எல்லாம் இல்லாதனால, பெண் வேஷம் போட பசங்களைத்தான் புடிச்சாகணும். பொதுவா ஒரு பயலும் இந்த ஸ்தீரி பார்ட் போட வரமாட்டான். ஆனா நம்ம கணேசன், கொஞ்சம் பெண் கேரக்டருக்கு தகுந்த மாதிரி நாணி கோணி பேசறதல பெரிய ஆளு. மேற்கொண்டு, இந்த ஸ்கூல படிச்சுட்டு காலேஜ்ல நுழையறப்ப, பெரும்பாலும் ஆம்பளை பசங்க நிறையப் பேருக்கு அந்த பெண் குணங்கள் அந்த விடலைப் பருவத்தில நிறைய இருக்கும். ஏன்னா அது இன்னும் நல்லா மீசை முளச்சி முற்றிலும் ஆண்மை நிலை அடையாத பருவம், அந்த அரும்பு மீசை மட்டும் பெரிய ஆம்பிளயாக் காட்டாது. சில பசங்களுக்கு அந்த குரல் வலைக்கூட உடையாம பெண்கள் குரல் வரும், சினிமாலக்கூட சின்ன பசங்க பாட்டை பின்னனிப்பாடகித்தான் பாடுவாங்க, பாடகர் பாட மாட்டாரு. அதிலயும் நிறையா அக்கா, தங்கச்சி கும்பலுங்கள்ள சுத்தி வளர்ந்து, புதுசா ஹாஸ்டலுக்கு வந்து ஆம்பளத்தனம் கத்துக்கிற வரை, அந்த பெண் நலினம் இருந்துக்கிட்டே இருக்கும். இந்த மீசை ஒதுக்கிவுடறது, டவுசரை விட்டுட்டு கைலி கட்டி அலைய ஆசைப்படறது, அப்புறம் வாயில சிகரட்டை வச்சி புகை விட்டு பார்க்கறதுன்னு, இதெல்லாம் அந்த பெண்மை போன்ற சூழ்நிலயில இருந்து உடச்சி ஆம்பளயாக்க முயற்சி பண்ணக்கூடிய வழிமுறை தான். ஒரு வேளை அம்மாங்கிற பெண் துணை நெருக்கத்தில சின்ன புள்ளயிலருந்து வளர்ந்து வருவதாலேயோ என்னவோ! அப்பாங்களோட நெருக்கம் கம்மிதான், அது பொண் குழந்தையாவோ இல்ல ஆண் குழந்தயாவோ இருக்கட்டும். அப்படி கொஞ்சம் அதீதமா நம்ம கணேசனுக்கு அப்ப இருந்துல ஒண்ணும் ஆச்சிரியமில்ல, ஆக எங்களுக்கு எங்க கனவுக்கன்னி கிடைச்சிட்டா! உண்மையிலதான், அவன் எங்களோட ரிகர்சல் எடுக்கிறப்ப, ஹீரோயின் வசனம் பேசறப்ப கொஞ்சம் கவர்ச்சியா, பொட்டப்புள்ள இல்லங்கிற குறை தெரியாமத்தான் இருந்தது. ஆனா டிராமா அன்னக்கி பார்க்கனுமே, மேக்கப் போட்டு புடவையைக்கட்டி ஸ்டேஜ்க்கு வெளிய டிரெஸ்ஸிங் ரூம்ல உட்கார்ந்திருக்கிறப்ப அவனை சுத்தி மொச்ச பசங்களை, வெளிய அனுப்பி வக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சு போங்க! அப்படி என்னமோ கவிதாவே நேர்ல வந்த மாதிரி இருந்துச்சு போங்க, கவிதாவா!, அதாங்க நம்ம ஹீரோயினி பேரு.

இதுல இன்னும் ஒன்னு சொல்ல வுட்டு போச்சு, அதான் இந்த புடவை ஜாக்கெட்டு வாங்க நான் பட்ட பாடு தான். பொட்ட புள்ளங்க படிக்காத காலேஜ், நான் எங்க போயி வாங்குவேன், எனக்கு ஏது மல்லிகா, ஆட்டோகிராப் சேரன் மாதிரி. மருந்துக்கு பொம்பளங்கன்னு காலேஜ்ல இருந்தது, அப்ப எனக்கு தெரிங்சு, எங்க எலக்ட்ரானிக்ஸ் ஹேமா மேடம், அப்புறம் நம்ம கெமிஸ்ட்ரில அப்ப புதுசா வந்திருந்த அமிர்தம்ங்கிற லெக்சரரு. இதை வுட்ட அப்புறம் ஃப்ஸிக்ஸ் லேப்ல உட்கார்ர ஒரு மேடம். இதெல்ல ஹேமா மேடம்கிட்ட போகமுடியாது, ஏன்னா, நாளைக்கு அந்த ப்ரான்ச்சுதான் எடுத்து படிக்கனும், அப்புறம் ஸெஸ்னல் மார்க்கு ஊத்திக்கவா, அம்மாடி, நான் போகமாட்டேன்னு, நானும் போகல்ல, என் கூட ஒட்டுன தோஸ்த்து மனோகரனும் போல, ஏன்னா அவனும் அதே ப்ரான்ச்சு. அப்புறம் அமிர்தங்கிட்ட ஏற்கனவே வாங்கிகட்டி கிட்டேன், ஏன்னா, அது நம்மல வாஞ்சையா பாக்குதேன்னு, ரொம்ப சுதந்திரம் எடுத்துக்கிட்டு ஒரு நாள் பேனா மூடியா அது நோட்ல நின்னு எழுதறப்ப பின்னாடி சொருவுறேன் பேர்வழின்னு, எதயோ செய்ய போயி, அது நம்ம தான் படாத இடத்தில பட வக்க இப்படி பண்றான்னு போட்டு கொடுத்து, அடுத்த வருஷம் நமக்கு ஹாஸ்டல் இல்லமா பண்ண பொம்பளை, அதுகிட்ட எப்படி கேட்கிறது. பிறவு அந்த ஃபிஸிக்ஸ் மேடம், அத என்னமோ நம்ம கணேசன் ரிஜக்ட் பண்ணிட்டான், எனக்கு கிழவி டிரஸ்ஸெல்லாம் வாங்கி கொடுத்த போட்டுட்டு நடிக்க மாட்டேன்னு ஒரே அடம். நான் எங்கத்த போறது சொல்லுங்க. அப்பதான் நமக்கு கை கொடுத்தா ஆபத்து பாண்டவி, அது யாருன்னு கேட்கிறீங்களா, வேற யாருமில்ல அப்ப எங்க காலேஜ் அட்மினிஸ்ட்ரேஸன்ல வேல செஞ்ச பாலசுப்ரமணியம், அப்ப அப்ப ஸ்கிட்டு, ஓரங்க நாடகம் பசங்க நடிக்கிறத பாக்க சும்மா சிகிரட் புடிக்க கீழ வரப்ப அந்த போட்டி நடக்கற ஹாலுக்கு வந்து வேடிக்க பார்க்கிற ஆளு. நம்ம செஞ்ச மிமிக்கிரி எல்லாம் புடிச்சுப் போயி சும்மா பாராட்டிட்டுப் போவாரு, அப்ப அவரு பொண்ணு காலேஜ் முடிச்சுட்டு எங்க ஆபிஸ்ல டைப்பிஸ்ட்டா வேலை பாத்துச்சு. அது தான் எங்க ஆபத்து பாண்டவி, இது கொஞ்சம் பெரியக் கதை, கேளுங்க!

நாங்க சாய்ந்திரத்தில அப்படியே வாக்கிங் போயிட்டு காலேஜ் பின்னாடி சிங்கநல்லுர் ரோட்ல இருக்கிற டீக்கடைக்குப் போயி மரவள்ளி கிழங்கு சிப்ஸ், டீ அடிக்கிறது வழக்கம். அப்ப பக்கத்தில இருந்த ஸ்டோர்ஸ்ல தான் நம்ம பாலசுப்ரமனியம் குடி இருந்தாரு. அவருக்கு மூணுப்பொண்ணுங்க, அதில பெரிசும், அது கடைசி தங்கச்சியும், பசங்க எங்களை ஜொல்லு வுட வெளியில வந்து நிக்குங்க. அப்பறம் என்ன, காலேஜ் பசங்க ஹாஸ்டலருந்து வந்து கும்பலா டீ சாப்பிட்டுட்டு போற இடம், இதுங்க ரெண்டும் நின்னு வேடிக்கைப் பாத்தா, சொல்லுங்க நாங்க ஜொல்லு வுடறமா, இல்ல அதுங்க வுடுதுங்களா (இப்ப ஆண் பெண் இரு பாலருக்கும் இந்த பாலுணர்வுகள் இருக்கிறதை, எல்லாரும் பதிவுப்போட்டு என்னமோ, இல்லாத விஷயம் மாதிரி இந்த ஊடகத்தில மாட்லாடிக்கிட்டு இருக்காங்க, முக்கியமா, நம்ம உஷா ராமசந்திரன் வலையப் பாருங்க!) அப்படி போயி வந்தப்ப சைட் அடிச்ச அந்தப் பொண்ணுதான் நம்ம காலேஜ் ஆபிஸிக்கு புதுசா வந்தது. எப்படி போயி அதுக்கிட்ட ஜாக்கெட், சேலை எல்லாம் கேட்கிறது. நம்ம கணேசனோ போட்டா அந்த புள்ளயொடத தான் போட்டுக்குவேன்னு அடம் புடிக்கிறான். என்ன பண்ணறது. துணிஞ்சு நம்ம பாலா சாரு கால்ல விழுந்தாச்சு, அவரும், அதுக்கென்ன தம்பி, நாளக்கு வீட்டுக்கு வாங்களேன்னு சொல்லிட்டாரு. அப்புறம் என்னா, போயி பாத்துப் பேசி வாங்கிட்டு வந்து கணேசனுக்கு போட்டு நடிச்ச கதை இன்னம் சொல்லனுமா என்ன?

இப்படி கஷ்டப்பட்டு போட்ட டிராமா எப்படி வரவேற்பு நம்ம சீனியர் அண்ணங்க கிட்ட கிடைக்க போதுன்னு ஒரே பரிதவிப்பு. அப்பதான் டிராமாவுக்கு ஒரு சினி எஃப்க்ட் கொடுக்க ஆர்க் லைட்ஸ், ஸ்ட்ரோப் லைட்ஸ், இதெல்லாம் ரொம்ப எஃப்க்டிவ்வா யூஸ் பண்ணினோம். அதில்லயும் நம்ம ஜெயக்குமார், ரொம்ப நல்ல பேக்ஸ்டேஜ்,லைட்ஸ் எல்லாம் டைரக்ட் பண்ணி பிரம்மாண்டம்மா என்னமோ ஷங்கர் படம் மாதிரி பண்ணவச்சிட்டான். அதப்பாத்துட்டு நம்ம எழுத்தாளர் உஷா சுப்ரமணியம் குமுதத்தில் 'சி ஐ டி மாணவர்கள் ஆகாயத்தில் ரயில் விட்டார்கள்' ன்னு எல்லாம் விமர்சனம் எழுதி பிச்சுப்புட்டாங்க, அதை அடுத்த பதிவில எப்படின்னு பார்க்கலாமா?